Friday, December 21, 2018


21
இனி நம் முறை
எஸ். சங்கரநாராயணன்
வர்கள் இன்னும் நண்பர்களாகத் தான் இருக்கிறார்கள். என்றாலும் திடீரென்று எதோ அவர்களுக்கு ஆகிப் போகிறது. அல்லது நமக்கு திடீரென்று எதோ ஆகிவிட்டதாக அவர்கள் நினைக்கவும் செய்யலாம். பெரும்பாலும் எளிமையாய் இருந்து நாம் ஏமாந்த சந்தர்ப்பங்கள் அதிகம். எந்தக் காரணமும் இல்லாமல் நமக்கு எதிராக நாம் அறியாமல் வேலைகள் நடக்கின்றன. இதை ஊழ் என்பதா? திடுதிப்பென்று வானம் மூடி மழை கொட்டத் தொடங்கி விடுகிறது. முன்னரே எதிர்பார்த்திருந்தால் குடையாவது எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம். நம்மைச் சுற்றி நம்மைப் பற்றி வேறெதோ நடந்திருக்கிறது, என பின்னாளில் அறிகிற போது, நாம் எவ்வளவு வெள்ளந்தியாக இருந்திருக்கிறோம் என வெட்கமாய், வருத்தமாய் இருக்கிறது.
சந்திரசேகரை முட்டாளாக்கி வி.பி.சிங் பிரதமராகப் பதறி யேற்கவில்லயா? தேர்தல் வெற்றிக்குப் பின் (ஜனதாதளம்) வி.பி.சிங் தன் கட்சி சார்பில் பிரதமராக விரும்பினார். அப்போது கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் என மேலும் இருவர் போட்டியிட ஆர்வம் காட்டினர். ஒருவர் தேவிலால். மற்றவர் சந்திரசேகர். இருவரையும் எப்படிச் சமாளிப்பது, என வி.பி.சிங் ஒரு திட்டம் தீட்டினார்.
தேவிலாலுக்கு துணைப் பிரதமர் பதவி தர அவரே தேவிலாலிடம் பேரம் பேசி ஒத்துக்கொள்ள வைத்தார். சந்திரசேகரிடம் இப்படிப் பேரம் பேச முடியாது. அதனால் ஒரு இரகசிய ஏற்பாடு செய்தார் வி.பி.சிங். மூவருமாய்க் கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் தேர்தலுக்கு முன் பேசிக் கொண்டார்கள். கட்சி எம்.பி.க்கள் யாரைத் தேர்வு செய்கிறார்களோ அதன்படி கட்டுப்படலாம், என பொது முடிவு எடுத்தார்கள். பிரதமர் வேட்பாளருக்கு வி.பி.சிங்கை சந்திரசேகர் முன்மொழிய வேண்டும். சந்திரசேகரை பிரதம வேட்பாளராக வி.பி.சிங் முன்மொழிவார். பின் தேர்தல் நடக்கும்.
இந்த வலையில் சந்திரசேகர் வீழ்ந்தார். அவர் தன்னை முன்மொழிய வேறு யாரிடமும் கேட்டுக்கொள்ளவில்லை. கூட்டம் துவங்கியதும் வி.பி.சிங் தேவிலாலைத் துணைப் பிரதமராக முன்மொழிந்தார். மாற்றுக் கருத்து இல்லாமல் அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டது. இனி பிரதமருக்கான தேர்வு. சந்திரசேகர் எழுந்து வி.பி.சிங் பெயரை முன்மொழிந்தார். அதற்கும் மறுப்பு கிளம்பவில்லை. இப்போது வி.பி.சிங் சந்திரசேகர் பெயரை, போட்டி வேட்பாளராக அறிவிக்காமல் மௌனம் காத்தார். போட்டியின்றி வி.பி.சிங் தேர்வு பெற்றதாக அறிவிக்கப் பட்டது!
என்ன மோசடி நடந்தது என்றே தெரியாமல் திகைத்துப் போய்விட்டார் சந்திரசேகர். காமெரா அவரை நெருக்கத்தில், அவரது உணர்வுகளை உலகம் பூராவுக்கும் காட்டியது. அப்போது அவர் சொன்ன வார்த்தைகளை நான் என் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது. சந்திரசேகர் சொன்னார்.
“ஏமாறுவதில் என்ன கேவலம் இருக்கிறது. நான் ஒருவரை நம்பியது தவறா? ஆகவே ஏமாறுவது தப்பு இல்லை. ஆனால் ஏமாற்றுவது மோசமானது.”
காலம் அப்படி ஏமாற்றுப் பேர்வழிகளை, நம்பிக்கை துரோகிகளை அவ்வப்போது நமக்கு காட்டிக்கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் மாற மாட்டார்கள். முடிந்தால் நாம் தான் மாற வேண்டும். முடியுமா?
முன்பொரு பதிவில் கண்ணன் மகேஷ் பற்றிச் சொல்லவில்லயா, சும்மா இருந்தாலும் கிட்டவந்து குடிகார மோதல்கள்… லாரி தெருத் தண்ணியை வாரியடித்து உடையை நனைத்துவிட்டுப் போகிறது.
வெளிப்படையான வாழ்க்கை யாருக்குமே ஒத்துவராதோ என்னவோ. அப்படி அமையாதோ, என ஆதங்கப் படுவதைத் தவிர, வருத்தப்படுவதைத் தவிர வேறு போக்கு இல்லை. நாம் மாறிக் கொள்ளவும் முடியாது.
இப்படி நடந்து விட்டதைப் பின்னாளில் அறிகிற போது அந்த நிகழ்வுகளோடு அதைத் தொடரும் சந்தர்ப்பங்களில் ஒரு சுவாரஸ்ய ரகசியத்துடன் நாம் விளையாட ஆரம்பிக்கிறோம். பின் விளைவுகளின் வேடிக்கை ரசமானது. உன் கபட முகம் எனக்குத் தெரிந்து விட்டது, என நாம் சொல்லாமல் சொல்லி ஆடும் ஆடுபுலி ஆட்டம். அதில் சில சமயம் நாம் ஆடு. அது முதல் கட்டம். அவர்கள் பசுத்தோல் போர்த்திய புலி. பிறகு, அதன் அடுத்த கட்டம்… நாம் புலி. புலியாக மாறிய பசு. இப்போது நம் முறை.
இனி நம் முறை.
ஒரு பாம்புக்கு முனிவர், யாரையும் கடித்து விடாதே, அது பாவம், என்று அறிவுரை வழங்கப் போக, அது கடிக்காது என்று தெரிந்ததும் ஆளாளுக்கு அதைக் கல்லால் அடித்துச் சிரித்தார்களாம். அது உடலெங்கும் ரணகளமாக முனிவரிடம் வந்தபோது, அவர் அதனிடம், கடிக்காதே என்றுதான் சொன்னேன், சீறாதே என்று சொன்னேனா, என்று கேட்டதாக நம்மில் கதை உண்டு.
நானும் சீறி யிருக்கிறேன்!
சரித்திரக் கதைகள் என்று அவர் எதோ எழுதுகிறார். அவரை நான் கிண்டல் செய்திருக்கக் கூடாது. அது நோக்கமும் அல்ல. என் இயல்பு அது. நமது எளிமையும் முக பாவமும் சிறு அசைவுகளுமே நம்மைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அவற்றை மறைத்துப் பேசுதல் நமக்கு வழக்கமும் இல்லை. எனக்கு ஒரு தீவிரமான கருத்து உண்டு. முழுக்கவே எழுதி அதனால் வரும் வருமானத்தில் சாப்பிடுகிறவர்களை பொதுவெளியில் நான் விமரிசித்துவிட மாட்டேன். அது அவர்கள் தொழிலை பாதிக்கும் என்பது என் கருத்து. நம்மால் அப்படி நிகழ்ந்துவிடக் கூடாது, என்பதில் நான் கவனமாய்த்தான் இருக்கிறேன். இவரும் அப்படி ஒரு நபர் தான். இவரையே பாவம் என்கிறவன் நான். இவருக்குப் பத்திரிகை கொடுத்து வைத்திருந்தவன் மகான் அல்லவா?
அசோகமித்திரன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், பா.ராகவன் இப்படி முழுநேர எழுத்தாளர்கள் என்னை ஆச்சர்யப் படுத்துகிறார்கள். தமிழ்மகன், சுந்தரபுத்தன், கதிர்வேலன்... இப்படிப் பாத்திரிகையாளர்களும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், இப்ப... என்று நான் ஆரம்பிக்கையில் வேறு பத்திரிகையில் சேர்ந்து விட்டதாகச் சொல்வார்கள். ஒருமாதிரி தத்தளிப்பாகவே வாழ்கிறார்கள். எழுத்து சோறு போடுமா என்பதில் எனக்குத் தயக்கம் உண்டு. நான் இந்த பி.எஸ்.என்.எல் வேலைக்கு வந்ததே, சாப்பாட்டுப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளலாம், எழுத்து எனக்கு ஆதர்சம் என வரித்துக் கொள்ளலாம், என்கிற ஏற்பாட்டுக்குத்தான். அது ஓரளவு வெற்றிகரமாகவே தொடர்கிறது, என்றுதான் சொல்லவேண்டும். வரும் 2019 ஜுலை பணி ஓய்வும் ஆகப் போகிறது. என் முதலாளிக்கு விடுதலை.
எழுதிப் பிழைக்கிறவர்களை நான் அவர்கள் எழுத்தில் குறை கண்டு விமரிசனம் என்கிற கெடுபிடி கொண்டு பார்த்து கருத்திடுவது இல்லை, என்கிற வழக்கம் முன்பு இருந்தது. என்றாலும் பிரமைகள் எனக்கு சகிக்க வொண்ணாத விஷயம். தலைவீக்கம் அவலட்சணம் எனக்கு. நண்பர்கள் முன்னால் பாவனைகள், நடிப்புகள், போலிக் கொண்டாட்டங்கள் தேவையே இல்லை. நட்புக்கு எதிரானவையே அவை. அந்த இருவரையும் நண்பர்களாகக் கருத முடியாது. நடிப்பை நடிப்பென உரித்துக் காட்டா விட்டால் நமக்குத் தலையும் வெடித்து விடுகிறது. இந்த உலகத்தைத் திருத்துவதா நம் வேலை? இல்லை தான். குறைந்த பட்சம் அந்த நபரையாவது திருத்த முடியுமா? அது கூட அல்ல. உன் வேலையை என்னிடம் காட்டாதே, என்றாவது சொல்லாமல் எப்படி என்று தோன்றி விடுகிறது. சீண்டப்படும் போது சீற வேண்டி வந்து விடுகிறது. அதில் பல உத்திகளும் உள்ளன.
சரித்திரக் கதைஞருக்கு முன் வேறொரு சம்பவம் சொல்லி விடலாம். நாம் ஒன்றும் ஏமாளி அல்ல, ஏமாளி என்று நினைத்தால் நாம் யார் என்று அவர்கள் புரிந்துகொள்ளும் அளவில் அந்தச் சூழலைக் கையாளவும் நம்மால் ஆகும், என்கிற உதாரணம் இது.
அவர் என்னுடைய பதிப்பாளர்களில் ஒருவர். எனது எழுத்தில் மயக்கம் காட்டிய ஒரு வங்கி அதிகாரி எனக்கு வங்கிக் கடன் அளிக்க முன்வந்தார். “எனக்கு வேண்டாம். உங்கள் அன்புக்கு நன்றி. எனது பதிப்பாளருக்கு உதவி செய்யுங்கள்,” என்று சொல்லி அந்தப் பதிப்பாளருக்கு ஒரு பத்தாயிரம் வாங்கிக் கொடுத்தேன். ஐஓபி. 1995, 96 வாக்கில் நடந்திருக்கலாம் இது. கடனுக்கு நானும் பொறுப்புக்கடிதம் தந்திருந்தேன். அந்த மனுசன் பாருங்கள், முதல் மாதத் தவணையே கட்டவில்லை. முதல் மாதம் முடிந்து, கூட ஒரு மாதம் வரை பொறுமை காத்த வங்கி, அடுத்து எனது அலுவலக முகவரிக்கு, எனக்குக் கடிதம் அனுப்பினார்கள், கடன் பாக்கியைச் செலுத்துங்கள். அப்போது தான் எனக்கு இந்த மனுசன் முதல் தவணையே கட்டவில்லை என்பது தெரியும். இப்படி கடன் கட்டச் சொல்லி எனக்கே நோட்டிஸ் வருவது… புதிய அனுபவம் அது. என்னுடைய கடைசி அனுபவமும் அது தான். எதையுமே கடனாகவோ, தவணை வசதியுடனோ வாங்குவது எனக்கு அறவே பிடிக்காது. உடம்பு நடுங்கி விட்டது. சும்மா இருந்த அந்தப் பதிப்பாளரை, வாங்க, என அழைத்துப்போய் நாமதானே கடன் என்று பெரிய தொகை வாங்கிக் கொடுத்தோம். நமக்கு இது தேவையா, இந்த அவமானம்?... என்றாகி விட்டது. அவரை எப்படிப் பணத்தைக் கட்ட வைப்பது?
நான் அந்த நபரிடம் போனேன். “வங்கி மேலாளர் நம்ம மனிதர் தான். 10000 என்பது முதல்கட்ட சிறிய தொகை. இதை வாங்கின மாதிரி வாங்கிக் கொண்டு ஓரிரு மாதத்தில் முழுத் தொகையும் அடைத்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டால் 25000 என்று இதைவிடப் பெரிய தொகை அடுத்து கடன் வாங்கிக் கொள்ளலாம்” என்று பதிப்பாளர் காதில் போட்டேன். எங்கே எப்படிப் புரட்டினாரோ, மனிதன் வட்டியுடன் அந்த 10000 தொகையை அடைத்து விட்டார்.
அத்தோடு அவருக்கு வணக்கம் சொன்னது தான்.
ஔரங்கசீப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அது நினைவு வருகிறது. ஔரங்கசீப்பின் மகன் ஒருவன். அவரோடு என்னவோ முரண்பட்டு அவரது எதிரிநாட்டு மன்னனோடு போய்ச் சேர்ந்து கொண்டான். ஒருவேளை இந்த நாட்டு ரகசியங்களை யெல்லாம் அவன் எடுத்துக் கொடுத்து தன் மீது படையெடுத்து எதிரி நாட்டு மன்னனை அழைத்துவந்து என்னை வென்று தான் ஆள நினைக்கிறானோ, என ஔரங்கசீப் யோசித்தார். அவர் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். “மகனே உன் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும் நீ ஜாக்கிரதையாக அந்த மன்னன் உன்னை சந்தேகிக்காதபடி நடந்து கொண்டு அந்த நாட்டு ரகசியங்களை எனக்கு அனுப்ப வேண்டும்.” அதை ஒரு ஒற்றன் மூலம் அவனுக்குக் கொடுத்தனுப்வுது போன்ற பாவனையில் அந்த ஒற்றனை எதிரியிடம் மாட்டிக் கொள்ளச் செய்தார். மீதிக்கதை? என்ன ஆகும், உங்களுக்குத் தெரியாதா?
இவர் பத்திரிகையாளர். சரித்திரக் கதைக்கும் சமூகக் கதைக்கும் எழுதுவதில் என்ன வித்தியாசம், என அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டார்கள். “சரித்திரக் கதைகளில் மின் கம்பஙகள் வராது” என்று அவர் சொன்னபோது அவர் முகத்தில் எத்தனை அறிவுக்களை. அவர் அதை நம்பிக் கொண்டிருப்பது தான் அதில் எனக்கு ஆச்சர்யம். வட்டங்கள் உள்ளும் புறமும், என நான் எழுதிய ஒரு சிறுகதையில் அவர் வருகிறார். அம்புலிமமா கதைகளை சரித்திரக் கதைகள் எனலாமா, என்றுதான் அதைத் துவங்குவேன்.
நண்பன் ரமேஷ் வைத்யா சிரித்தபடி சொல்வான் - விஜயபுரி என்ற நாட்டை விஜயன் என்ற அரசன் ஆண்டுவந்தான், என்று எழுதுகிறார்கள். அடேய் அவங்க ஐயா ஆண்டப்போ நாட்டுக்கு வேற பெயரா இருந்தது? ஆளு சாகச் சாக நாட்டோட பெயரை மாத்திக்குவாங்க போல!
ஒருநாள் அவருடன், சரித்திரப் புகழாளருடன் அவரது பத்திரிகை அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தேன். 1990 களில் ஒரு நிகழ்வு. எங்க பத்திரிகைலல்லாம் எழுத மாட்டீங்களா சங்கரநாராயணன்? நாங்க இலக்கியப் பத்திரிகை இல்லையா, என்று தன்மையாகத் தான் கேட்டார். என் கெட்ட நேரமா என்ன தெரியவில்லை. க்ளுக். அத்துடன் அந்தச் சிரிப்பை நான் அமுக்கி விட்டேன். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இம்மாதிரி மனுசர்களுக்கு, யாராவது தங்களைக் கிண்டல் பண்ணினால் உடனே அது புரிந்து விடுகிறது. அதாவது நம்மைக் கிண்டல் செய்யப் போகிறார்கள், என அவர்கள் ஒரு தயாருடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்!
அவர் முகம் பாழடைந்து போனது. சரித்திர இருட்டு.
அவரது பத்திரிகையின் ஓர் இதழ் தயாரித்துக் கொடுத்தேன் நான். சில்வியாவின் சிறப்புச் சிறுகதை, நீலமணியின் ஒரு கவிதைநூல் அறிமுகம், புதுக்கவிதை பண்ணுவது எப்படி, என எனது கிண்டல் கட்டுரை எல்லாம் இருந்தது அதில். அவருக்கு இதழ் பிடித்திருந்தது. இதழ் தயாரிக்கும் போதுதான் இந்த உரையாடல் நடந்ததா தெரியாது. நினைவில்லை. அதன் பின்னால் அவர் வேறு பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியமர்ந்தார். முகம் சுருங்கிய அந்தக் கணத்தில் இருந்து என் கதைகளை வாசிக்காமலேயே நிராகரிக்கிறவராய் இருந்தார் அவர். பிற்காலத்தில் தானே ஒரு தனி இதழ் நடத்தினார். தற்போது அவர் உயிருடன் இல்லை. தனது சரித்திரக் கதாபாத்திரங்களோடு போய்ச் சேர்ந்திருக்கலாம் அவர்.
அவரது உதவியாசிரியர்கள் என் கதைகளை எடுத்து அவரது மேசையில் வைப்பார்கள்.  அதை மாத்திரம் அப்படியே திருப்பித் தருவார் அவர். வாசிக்க மாட்டார். “அவங்க நம்மள மதிக்க மாட்டாங்கப்பா. நாம ஏன் அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்?” என அவர் சொன்னதாக ஓர் உதவியாசிரியர் என்னிடமே சொன்னார் வருத்தத்துடன். எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை. என் கதைகள் அதைவிடப் பெரிய இதழ்களில் எல்லாம் நல்ல பெயருடன் வருகின்றன. சிறப்பு அழைப்புகள். ஒரு வருடம் எட்டு தீபாவளி மலர்களில் கதை எழுத வாய்ப்பு கிடைத்தது. அதைவிட வேறென்ன மரியாதை வேண்டும் ஓர் எழுத்தாளனுக்கு.
வேறு வேறு சந்தர்ப்பங்கள் அவரை நான் சந்திக்கும்படி அமைந்தன. என்னைப் பார்த்த ஜோரில் அவரிடம் ஒரு ஜாக்கிரதை உணர்வு, உள் பம்மல் வருவதை ரசிக்க கண் கோடி வேண்டும். நான் வலியப் போய் அவரிடம் பேசுவேன். (முன்பொரு பதிவில் ஐராவதம் பற்றிச் சொன்னேன் அல்லவா? அதைப்போல எனக்கு இன்னொரு உறவு இவர். ஐராவதம் நம்பர் 2.)
ஒருமுறை ‘படகுத்துறை’ என்கிற என் சிறுகதைத் தொகுதி பரிசு பெற்றது. (என்.சி.அனந்தாச்சாரி அறக்கட்டளை.) அந்த விழாவில் அவரையும் பேச அழைத்திருந்தார்கள். அழைப்பிதழைப் பார்த்ததுமே அவருக்கு வாட்டம் கண்டிருக்கும். உள்ளே ஆட்டம் கண்டிருக்கும். விழா அரங்கத்தில் அவரை நோக்கி நேரே வந்தேன். நான் வரும்போதே அவர் காதில் அந்த முன் சம்பவம் நிழலாடும்படி அவரையே கூர்ந்து பார்த்தபடி வந்தேன். (“எங்க பத்திரிகை இலக்கியப் பத்திரிகை இல்லியா?” க்ளுக்- என்ற சிரிப்பு.) அதன் தொடர்ச்சி போல, அவரைப் பார்த்து, “நீங்க எப்பிடி இங்க?” என்று அழுத்தமாய்க் கேட்டேன். உடல் நடுங்க தூக்கிவாரிப் போட்டது அவருக்கு. “ஏன் நாங்கல்லாம் இங்க வரப்டாதா?” என்றார் பதட்டமாய்.
அவரைப் பொறுத்தமட்டில் க்ளுக்கின் கொடுக்கை நான் கடைசிவரை உள் மடக்கவே இல்லை.
பள்ளி கல்லூரிக் காலங்களின் அதே தலைபடியாத திமிர், இம்மாதிரி சில சந்தர்ப்பங்களில் என்னிடம் மேலெழுந்து வந்ததோ என்னவோ.
இது ஒரு பெண்மூலம் எனக்கு வந்த வினை. அவரும் கதை கவிதை என எழுதுகிறவர் தான். என்மேல் மிகுந்த நட்பும் மரியாதையும் உள்ளவர் தான். ஆனால் யாரிடம் என்ன பேசக் கூடாதோ அதை சட்டெனப் பேசி விடுவார். அவரது புத்தகத்துக்கு அட்டைப்படம் டிசைன் பண்ண என்று ஒரு நண்பரிடம் அழைத்துப் போகிறேன். அந்த நண்பரும் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டவர் தான். நேரே அவரிடம் “உங்க கவிதைகள்ல விஷயமே இல்லியே?” என்று ஒருபோடு போட்டார் இந்த மகா கவி.
தற்போது கொடிகட்டிப் பறக்கும் இரு இலக்கியவாதிகள், ஒருவர் கதைஞர், ஒருவர் கவிஞர், மற்றும் பதிப்பாளர். இருவருமாக திருச்சியில் ஒரு எழுத்துப் பட்டறையில் இவரை, இந்தப் பெண்மணியை சந்தித்துப் பேசினார்கள். அந்தப் பெண்மணி கதைஞரிடம் அதிகம் பேசியது, கவிஞருக்குப் பொறுக்கவில்லை. தனியே அந்தப் பெண்ணை அழைத்து, “அவன்கூட அதிகம் பேச வேண்டாம்” என்கிறாப் போல, என்ன ஒழுக்க சிந்தனை, அறிவுரைத்திருக்கிறார். இந்தப் பெண் சும்மா இல்லாமல் என்னிடம் ஒரு தொலைபேசி அழைப்பில் இதைச் சொல்ல, நான் “இலக்கிய உலகம் பழகறதுக்கு அத்தனை நலல விஷயம் இல்லை போலிருக்கே” என்கிறதாக என் பங்குக்கு எதோ சொல்லிவிட்டேன்.
ஒரு நகைச்சுவை கேள்விபட்டது உண்டா?
ஏன்டி அவகிட்ட சொல்லாதேன்னு நான் உங்கிட்ட சொன்னதை நீ அவகிட்ட ஏன் சொன்னே?
ஐயோ அவகிட்ட சொல்லாதேன்னு நீ என்கிட்ட சொன்ன விஷயத்தை நான் அவகிட்ட சொன்னதை அவ உன்கிட்ட சொல்லிட்டாளா?
சரி சரி. அவகிட்ட சொல்லாதேன்னு நான் உங்ககிட்ட சொன்னதை நீ அவகிட்ட சென்னதைப் பத்தி அவ என்கிட்ட சொன்னதை நான் உங்கிட்ட கேட்டதா நீ அவகிட்ட சொல்லிறாதே.
அநேக சமயங்களில் பெண் விஷயங்கள் அப்படி றெக்கை கட்டுகின்றன.
அத்தோடு விஷயம் முடிந்திருக்கலாம். இந்தப் பெண் நான் சொன்னதை, அந்த மிகப் பிரபலக் கதைஞரிடம் அலைபேசி உரையாடலில் சொல்லிவிட்டது. அந்த மனுசனுக்கு கவிஞர் மேல் கோபம் வந்திருக்க வேண்டியது, அதானே அப்பா நியாயம்? ஆனால் அவர் கோபம் என்மேல் திரும்பி விட்டது. பெரும் சுற்றிதழ் ஒன்று நடத்தும் சிற்றிதழ் பாணி பததிரிகையில் அவர் மாதாமாதம், கதையா கட்டுரையா வாழ்பனுவமா என்று பிரித்தறிய முடியாத ஒரு ‘பத்தி’ எழுதிக் கொண்டிருந்தவர், அதில் நடுவே என்னை ‘நாட்டுநாய்’ என்று குறித்து, நாட்டுநாயின் இலக்கணங்களைப் புட்டுப் புட்டு வைத்து, அத்தனையும் எனக்குப் பொருத்தமாய் இருப்பதாகக் கொண்டுவந்தார். அட, தற்செயலாக நான் அதை வாசிக்க நேர்ந்தது!
ஏற்கனவே அவரது மகத்தான் ஒரு நாவலை நான் உரித்துத் தோரணம் கட்டி யிருந்தேன். அந்தக் கோபம் இத்தோடு சேர்ந்து கொண்டதா தெரியவில்லை. எழுத்தாளனுக்கு அப்படிப் பொறுமையற்ற ஆத்திரம் எப்படி வருகிறது தெரியவில்லை. எனக்கு இது தேவையே இல்லை. நான் அந்தப் பெண்ணிடம் தற்கால இலக்கியவாதிகள் பற்றி அப்படிச் சொல்லாமலாவது இருந்திருக்க வேண்டும். அது என்னைப் பார்க்க துப்பாக்கி குண்டுகளைத் திருப்பி விட்டிருக்கிறது.
அடுத்த வார ‘திண்ணை’ இணைய இதழில் என் சிறுகதை. ‘நாட்டு நாய்களும் நகரத்து நாய்களும்.’ நாய் என்று வந்துவிட்டால், நாட்டுநாய் என்ன நகரத்து நாய் என்ன, எல்லாமே நக்கிதான் குடிக்ணுமப்போவ், என்கிற எகத்தாளமான த்வனி பொதிந்த கதை. அதில் இலக்கிய உலகில் நான் கேள்விப்பட்ட பிற அக்கப்போர்கள் இரண்டு மூன்றை உள்ளடக்கி கதையாக்கி யிருந்தேன். அதன் கடைசிவரி “இதையும் திட்டி எழுதுவது உன் தீராவிதி” என முடியும்
அதை அவர் வாசித்துவிட்டு, அடுத்த தொடரில் எனது நண்பனைக் கேலிசெய்து, அந்த எழுத்தாளனைச் சுற்றி தூசும் தும்பும் பறக்கின்றன, என ஒரு கதை எழுத, நான் எனது அடுத்த கதை என் நண்பன் அப்பாவிதான், ஆனால் அயோக்கியன் அல்ல என்கிற பாணியில், கதை இரண்டு, எழுத, அதையும் வாசித்துவிட்டு, அவர் சிறிது மௌனம் காத்தார்.
என்று பார்த்தால், இந்த விஷயம் அந்தக் ‘கவிஞர்’ காதுக்கும் போய்விட்டது. கதைஞர் சொன்னாரா, அல்லது அந்தப் பெண்மணியே உளறித் தொலைத்ததா தெரியாது., பிரபல இதழில் அவர் இதைவைத்து நடுப்பக்கத்தில் கவிதை எழுதினார்.“எழுதினால மாட்டிக் கொள்ளாமல் எழுதத் தெரிய வேண்டும்…” இப்படி இருந்தது அந்தக் கவிதை. எனது மூன்றாவது கதைக்கு அவசியம் ஏற்பட்டு விட்டது இப்போது. அவர்கள் மூவரையும் முன்கொணர்கிற மாதிரி, மாதர்குழல் விளக்கு, என ஒரு கதை நான் தந்தேன். அதுவும் அந்த வளாகத்தில் வளைய வந்திருக்க வேண்டும். இப்போது சிற்றிதழில் அந்தக் கதைஞர் ஒரு சமாதானக் கொடி அசைக்கிறார். “இனி அவரவர் பாதை அவரவர்க்கு” என்கிற மாதிரி. பிறகு எனது நான்காவது கதை இந்தியா டுடேயில் வெளிவந்தது. ‘தோணியும் அந்தோணியும்.’ பெருமாள் கோவில் குருக்களின் மகனும், மீனவனின் மகனும் பள்ளியில் ஒன்றாய்ப் படித்த நண்பர்கள். மீனவப் பையன் கடலில் காணாமல் போய்விடுகிறான். இந்த குருக்களின் பையன் மீனவப் பையனின் அப்பாவிடம் துக்கம் கேட்டு மௌனமாக நிற்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் மௌனமாகப் புரிந்து கொள்கிறார்கள்... என்கிற அடிப்படைக் கருவில் அமைந்த கதை அது.
இந்த நான்கு கதைகளுமே எனது சிறுகதைத் தொகுப்பு ‘கடிகாரத்தை முந்துகிறேன்’ நூலில் வாசிக்கக் கிடைக்கும்!
தனியே வாசித்தாலும் சுவை குறையாத கதைகள் இவை. இந்தப் பின்னணியோடு வாசிக்க அதிக ருசி கிடைக்கும்.
இது தவிர, இலக்கிய உலகில் தனக்கென தனியிடம் கிடைத்து கொண்டாடப்பட்டு வருகிற ஒரு நபர். அவர் ஒரு இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருந்தார். எனக்கு அவர் எழுத்தில் ஒரு மயக்கமான மரியாதை உண்டு. அந்த இதழுக்கு ‘காமதகனம்’ என ஒரு கதை அனுப்பினேன். அண்ணியைக் குளிக்கும் போது எட்டிப் பார்த்து விடுகிறான் ஒரு பையன். எதிர்பாராமல், அவன் குளியல் அறைக் கதவில் கண் வைக்கப் போன சமயம் கதவு திறந்துவிடுகிறது. சட்டென அந்தக் கதவு அவன் முகத்தில் அறைய அவனது ‘சில்லுமூக்கு’ உடைந்து விடுகிறது.“ஐயோ” என்று பதறுகிறாள் அண்ணி. தன்னை அவன் நிர்வாணமாகப் பார்த்தது அல்ல, அவன் மூக்கு உடைந்தது தான் அவளது அப்போதைய பதட்டமாய் இருக்கிறது. தன்னையே வெறுத்து வெளியே ஓடுகிறான் அவன்.
அண்ணா அலுவலகம் முடிந்து இரவு வீடு திரும்புகிறான். தம்பியைத் தேடி வருகிறான். தெருவோர பஜனை மடத்தில் தம்பியைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்படி அழைக்கிறான். தம்பி வெட்கப்படுகிறான். பிறகு “அண்ணா நீ ஒண்ணு புரிஞ்சிக்கணும். அந்த நிமிஷம் நான் அவளை அண்ணியாப் பார்க்கல்ல. ஒரு பெண்ணாத்தான் பார்த்தேன். நான் ஆணாயிருந்தேன் அப்போது. உன் தம்பியா இல்லை…” என்று பேசிக்கொண்டே வருகிறான்.
“என் தங்கையோடு நான் தெருவில் வரும்போது யாராவது பார்த்தால் எனக்கு ஒருமாதிரி பிடித்திருக்கிறது என்பது உண்மைதான். தங்கையுடன் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா என்ன? ஆனால் ஒண்ணு நீ புரிஞ்சுக்கணும். SURVIVAL OF THE FITTEST, இது இயற்கையின் விதி. சமூகமா மனுசன் வாழ ஆரம்பித்தபோது அவன் புது விதி ஒணணு வெச்சிக்கிட்டான். SURVIVAL OF EVERYBODY. அந்த விதியை மதிக்க நாம கத்துக்கணும். மதிச்சாகணும். இல்லாட்டி என்னாகும், உன்னைவிட பலசாலிகிட்ட உன் பொக்கிஷங்களை நீ பறிகொடுக்க வேண்டி வரும்.” அண்ணா பதில் சொல்கிறான்.
இப்படிப் போகிற கதை அது.‘காமதகனம்’ என்ற என் இரண்டாவது தொகுப்பில் உள்ள கதை. இந்தக்கதை அந்தப் பத்திரிகையில் இருந்து திரும்பி வரவில்லை. வெளியாகவும் இல்லை. புத்தகம் என்று வந்தபோது நான் இரண்டாவது தடவையாக எழுதினேன். அந்த மகா எழுத்தாளர் இந்தக் கதையை நிராகரிக்கட்டும். அதைப் பற்றி என்ன? ஆனால் அடுத்த இரண்டு மாதத்தில் ஒரு பிரபல வார இதழில் அவர் ஒரு கதை எழுதினார். அதுதான் அவரது கடைசிச் சிறுகதை என்று தோன்றுகிறது. அவர் மறைந்துவிட்டார் இப்போது.
வானத்தில் ஊர்வசி போகிறாள். அவளை வழிமறித்து தன் காதலைச் சொல்கிறான் பிரம்மதேவன். என்னைப் படைத்தவன் நீதானே? நீயே என்னைப் பார்த்து மையல் கொள்ளலாகுமோ, என அவள் கேட்கிறாள். நான் பிரம்மதேவன் அல்ல, ஓர் ஆண்மகனாகத் தான் இப்போது நான் உன்னைப் பார்க்கிறேன்… என அவனது வாதங்கள் அமைகின்றன.
இதை யாரிடம் முறையிட முடியும் நான்?
பின்னாளில் நான் அவரது நடையிலேயே ஒரு கதை, ஒரு சவாலுக்காக எழுதினேன். அவரது பிரபலமான ஒரு சிறுகதையைக் கையில் எடுத்து, அதில் உள்ள அபத்தங்களை விவரித்து அதை மேலடி அடிக்கிறாப் போல என் சிறுகதை ‘பிரபஞ்ச ரகசியம்.’ புதிய பார்வை இதழில் வெளியானது. அவரது கதை போலவே பாதிக் கதை அமையும். அந்தக் கதையை இந்த எழுத்தாளரிடம் ரயிலில் ஒருவர் சொல்லிக்கொண்டே வருவார். பாதியில் நிறுத்தி, மீதிக் கதையயை நீ சொல்… என்பார். தான் எழுதியபடி அந்த எழுத்தாளர் கதை சொல்ல, “அப்படி இல்லை. அதில் இத்தனை பிழை இருக்கிறது. இதோ அதன் முடிவு” என எதிர் இருக்கைக்காரர் கதையை, தன் வாழ்க்கைக் கதையை முடிப்பதாக என் கதை.
‘பிரபஞ்ச ரகசியம்’ எழுதியதில் எனக்கு கர்வம் உண்டு.
இப்படி சில கதைளின் உற்பத்திக் களங்கள் சுவாரஸ்யமான பின்னணி கொண்டவை. இதன் இன்னொரு விதம் இருக்கிறது. அதை ஒரு பதிவில் சொன்னால் ஆயிற்று!
---
பின்குறிப்பு
பொதுவாக கதை எழுதி அதன் குறிப்பாக “இதில் வரும் சம்பவங்கள், காட்சிகள் என் கற்பனையே. யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் நிஜ வாழ்க்கையில் இருந்து கையாளப் பட்டவை அல்ல,” என்று எழுதுவார்கள். இது கட்டுரை. நிஜ வாழ்க்கை. இது புண்பட்ட நோக்கத்தில் எழுதப் பட்டது.
***
storysankar@gmail.com
91 97899 87842

Friday, December 14, 2018


part 20
தொடுவர்மம்
டைப்பு மனநிலை என்பது ஓர் அபூர்வத் திளைப்பு. ஒரு வரம்தான் அது. அதன்முன் உலகின் எதுவுமே துச்சம் தான். “கவிஞனுக்கு இல்லை வறுமை, இல்லவே இல்லை,” என்பார் க.நா.சு. லேசாய் விக்கல் எடுக்கும் ஒரு துக்கம் அந்த வரிகளில் இருப்பதாக நான் கேலியாடுவது உண்டு. என்றாலும் தான் - தன்னுலகு என்று கலைஞனின் வாழ்க்கை ஆனந்தமயம். அதில் ஏமாற்றங்கள் இல்லை.
எழுதும்போது எழுதப்பட்ட தக்கணத்தில் வாழ்க்கை அழகாக இருக்கிறது அவனுக்கு. அவனது வாழ்க்கை. ஆனால் எழுத்தில் சிக்கிய வாழ்க்கை வேறாக இருக்கலாம். அது விஷயம் அல்ல. எழுத்து எழுதுகிற சுகத்துக்காகவே எழுதப்படுகிறது, என்று சொல்லி விடலாம். துக்கத்தை அது எழுதலாம். அதை எழுதுவதில் துக்கம் இல்லை. எழுதும்போது, காகிதத்தோடு அதைப் பகிரும்போது அந்த துக்கம் கனம் குறைகிறது. அதாவது அந்த துக்கத்துக்கு எதிர்த் திசையில் அவனது நடை துவங்குகிறது. ஆனால் ஒரு நல்ல எழுத்து, எழுதி முடித்தபின்னும் எழுத்தாளனை ஆக்கிரமித்திருக்கும் சிறிது காலம்.
தொட்ட அலை தொடாத அலை, நாவலை முடித்து ஒருவார அளவில் கூட நான் அந்த ‘சாமிவந்த’ நிலையிலேயே இருந்தேன்.
நான் என்பவன் சாமானியன் தான். ஆனால் எழுதுகையில் அவன் கலைஞன். கலைஞன் சாமானியன் அல்ல. எழுதும்போது அவனில் ஒரு மேன்மை வந்தடைந்து விடுகிறது. அப்போது அவன் பயன்படுத்தும் வார்த்தைகளின் செறிவு வேறானது. ஒரு தாவரத்தின் பூத்த நிமிடம் அது. அதுவரை இருந்த தாவரம் வேறு. பூத்த தாவரம் வேறு, அல்லவா? எழுத்து ஒரு கடந்துவந்த நிலை. அல்லது கண்டடைந்த நிலை. வெந்த சோறு. பக்குவப்பட்ட நிலை அது.
எழுதித் தீருமா? எழுதுவதை நிறுத்திவிட முடியுமா?... எழுத முடியாத ஏக்கம் தான் இருக்கிறது. எழுதத் தினவு கண்டு எழுத அமர முடியாத கணங்கள் சில சமயம் அமைந்து விடுகின்றன. எழுதத் தினவு கண்ட பின், நினைவுகளின் வரிசையில் தன்னில் தானே திளைத்து பிறகு எழுத அமரும்போது, திளைத்ததில் பாதி கூட தேறாமல் போவதும் உண்டு. ஒரு வேகத்தில் எழுதிவிட்டு பிறகு திரும்ப வாசித்து நகாசு வேலை செய்வதும் உண்டு. எனினும் குறைந்தபட்ச சிந்தனைக் கோர்வை இல்லாமல் எழுத அமர முடியாது. நல்ல எழுத்து-மனநிலையில் சொற்கள் வரிசை கட்டி சேவகத்துக்கு வரும்.
சாதாரண வேளை போல் தோன்றும் ஒரு பொழுது, சட்டென தேவைப்படி அலங்கரித்துக் கொள்ளும் ஒரு கலைஞனுக்கு. ரித்விக் கடக்கின் ‘மேக தாக தாரா’ வங்காளப் படத்தில், ஒரு பாடகன். வானொலியில் பாடுவது அவனது கனவு. அது நிறைவேறி விடும். கடக் அவன் வானொலியில் பாடுவதைக் காட்ட மாட்டார். ஸ்டூடியோவில் பாடிவிட்டு அவன் தன் ஊர் திரும்புகிறான். சின்ன கிராமம் அவனது ஊர். ஊருக்கு வெளியே அவனை பஸ் இறக்கி விட்டுவிடும். பஸ்சில் இருந்து பொத்தென உற்சாகமாகக் குதித்து இறங்குவான் அவன். வீடு வரை, வயல் வரப்புகள் தோட்டங்களைத் தாண்டி நடந்து வருவான். அந்தப் பயிர்ப் பச்சைகளை ரசித்தபடி, அவற்றையெல்லாம் தன் ரசிகர் படை போலும் பாவித்து, காற்றில் அவை தலையசைக்கும்... தன்னில் கரைந்தபடி அருமையாப் பாட்டெடுத்தபடியே வீடு திரும்புவான்.
இந்த ‘மேக தாக தாரா’ தான் கே. பாலச்சந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை.’ டைட்டிலில் அதை அவர் சொன்னாரா?
ஜெயா தொலைக்காட்சியின் காலைமலரில் என்னைப் பேட்டி கண்ட பெண்மணி என்னை அப்படி சஞ்சாரம் செய்ய வைத்ததை முன்பே பதிவிட்டு விட்டேன். நம்மிடம் ஓர் எதிர்பார்ப்பு என்று வருகையில் அதற்குத் தக உயரப் பறத்தல் எப்பவுமே நமக்குப் பிடித்துப் போகிறது. பதிப்பாளர்கள் திடீரென்று தொலைபேசியில் பேசுவார்கள். எனது அடுத்த நூலுக்கு அட்டைப்படம், பின்னட்டையை என்ன மாதிரி பயன்படுத்தலாம், என்றெல்லாம் கேட்பார்கள். புத்தகத்தை அச்சுக்கு எடுத்துக் கொள்ளலாம், என வரும் கடிதங்களும் அவ்வண்ணமே பெரும் உற்சாகம் அளிக்கும்.
எஸ். சங்கரநாராயணனின் குறுநாவல்கள், என ஒரு தொகுதி நிவேதிதா பதிப்பகம் வெளியிட்டது. அட்டையில், பெரிய அளவில் மயிற்பீலி ஒன்று போட்டிருந்தார்கள். என்னிடம் காட்டினார்கள். நான் சொன்னேன். அதில், உற்றுப் பார்த்தால் வாசிக்கிற அளவில், எட்டு பாயின்டில் வெளியிடுங்கள். ‘ஒரு பறவையின் மரணம்.’
அட்டையைக் கையில் எடுத்துப் பார்க்கிறவர்களுக்கு கவனமாய்ப் பார்த்தால் ஓர் அதிர்வு கிட்டும், என்பது என் எதிர்பார்ப்பு.
‘புதுவெள்ளம்’ என என் சிறுகதைத் தொகுதி. பதிப்பாளர் அட்சரா. என் சிறுகதைத் தொகுதிகளுக்கு, தொகுப்பில் உள்ள ஒரு கதையின் தலைப்பைப் பயன்படுத்தாமல், சிறுகதை என்கிற அம்சத்தோடு பொருந்திப் போகிற பொதுத் தலைப்புகள் வைக்க நான் பிரியப்படுவேன். அநேகமாக அந்தப் பதிப்பாளர் என் நூலைப் பிரசுரத்துக்கு எடுத்துக் கொள்ளும் அந்தக் கணம் மனசில் அலையடித்து மேலே வரும் தலைப்பாக அது அமையும். அப்படி விளையாட்டு எனக்குப் பிடிக்கும். கேட்ட நேரம் அந்தக் கணத்தின் தேவைக்கு என என்னைத் தகவமைத்துக் கொள்வது. வெள்ளத்தனைய மலர் நீட்டம், நான் தாமரை.
என் முதல் சிறுகதைத் தொகுதி, ‘அட்சரேகை தீர்க்கரேகை.’ இவை கற்பனையே. ஆனால் இவற்றைக் கொண்டு நாம் உண்மையை, நம் பூமியின் அநேக விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வண்ணமே இந்தக் கதைகள், இவை என் கற்பனையே, ஆனாலும் வாழ்க்கை பற்றிய உண்மைகளை இவற்றில் அறிந்துகொள்ள முடியும், என்கிறதாக ஒரு விளக்கம் தந்து இந்தத் தலைப்பில் நூலை வெளியிட்டேன். உயிரைச் சேமித்து வைக்கிறேன், படகுத்துறை, சராசரி இந்தியன், ஒரு துண்டு ஆகாயம்... முதல், சமீபத்திய, இறந்த காலத்தின் சாம்பல், யானைகளின் கானகம் வரை அப்படியான பொதுத் தலைப்புகளே. இதே தலைப்பில் தொகுப்பில் சிறுகதை எதுவும் இல்லை.
‘புதுவெள்ளம்’ என்ற பொதுத் தலைப்பில் சிறுகதை நூல் வெளியிடுகையில் சட்டென ஒரு பொறி. அதன் பொருளடக்கத்தில் கடைசிக் கதையை முதலில் வைத்தேன். முதலில் அது இடம் பெறும் பக்கம். பிறகு கதையின் தலைப்பு. 151 (கடைசிக் கதையின் தலைப்பு.) இப்படி. அதன் கீழ் அதற்கு முந்தைய கதை. 138 (கதைத் தலைப்பு) இப்படி மாற்றி அடுக்கி, தொகுப்பின் முதல் கதையைக் கடைசியில் வைத்தேன். 006 (முதல்கதை). ஏன் அப்படி அடுக்கினேன்? புத்தகத்தின் தலைப்பு ‘புதுவெள்ளம்.’
பொருளடக்கம் என்று போடுவதற்கு பதிலாக, “நீர்மட்டம்” என்று குறிப்பிட்டேன்.
பதிப்பாளர் இதை கவனித்தாரா தெரியாது. அவர் அதைப்பற்றி ஒன்றும் கருத்துரைக்கவில்லை. வாசகர்களில் யார் கவனிக்கிறார்கள் இதை, என அறிய எனக்கு ஆர்வம் இருந்தது. பொதுவாக ஒரு கதையில் எத்தனையோ நகாசு வேலைகளையும், தத்துவங்களையும், குறியீட்டுக் குறிப்புகளையும் பொதிந்து தருகிறோம். அத்தனையும் வாசகனுக்குச் சேருமா தெரியாது. ஒருத்தருக்கு ஒரு விஷயம் பிடிபடும். இன்னொருவருக்கு வேறொரு விஷயம் தட்டுப்படும்... ஆக இப்படி விஷயங்களை வாசகர்களே கண்டுபிடித்து நம்மிடம் உரையாடக் காத்திருப்பது ரொம்ப இஷ்டமான பொழுதுபோக்கு, எல்லா எழுத்தாளனுக்கும்.
நூல் வெளியாகி கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகள் கழித்து டெல்லியில் இருந்து ஒரு அழைப்பு. தொலைபேசியில். “ஐயா, உங்க புதுவெள்ளம்...” என்று சொல்லிச் சிரிக்கிறார். சொல்லுங்க சொல்லுங்க, என நான் ஊக்கப் படுத்தினேன். “பொருளடக்கம்னு போடாமல் நீர்மட்டம்னு போட்டீங்க.” ஆமாம். சொல்லுங்க நண்பரே, என்கிறேன். “அணையில் நீர்மட்டம் பார்க்கிற ஸ்கேல் மாதிரி, கடைசிக் கதையில் இருந்து பக்க எண்களை ஆழம் குறைஞ்சிட்டே வர்றாப்போல அடுக்கிட்டீங்களே. அருமை. அருமை”. என மிகிழ்ச்சியுடன் பேசினார் அவர்.
அநேகமாக நான் காத்திருந்து எதிர்பார்த்திருந்த விஷயங்கள் என்னை தாமதித்தேனும் வந்தடைந்து விடுகின்றன.
இப்படிப் பொதிந்து வைப்பது தவிர, சில கேள்விகளை உக்கிரமாக முன் வைப்பதும் வழக்கம் தான். ஓர் அறிவுஜீவி எழுத்தாளன், பெண்ணியம் பேசுகிறவன், தன் மனைவியை அலட்சியமாக, உங்கள் அடிமைத்தனங்களை நீங்கள் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள், என்பதாகக் கிண்டல் செய்கிறதாக ஒரு கதை. ‘அதோ பூமி.’ ஆண்களுக்கு விருப்பமாக அடிமையாகிறீர்கள் நீங்கள், என்கிற அவன் எகத்தாளத்துக்கு அவள் பதில் சொல்வாள். “ஒரு டெசிமலில் இருந்து ஒன்று என ஆகப் பயணப் படுகிறீர்கள் நீங்கள், அறிவுஜீவிகள். என்றால் அந்த டெசிமலில் இருந்து பூஜ்யம் நோக்கிப் பயணப்படுவது எத்தனை மகத்தான தியாகம், உங்களால் அதை நினைத்தே பார்க்க முடியாது,” என்பாள். நீங்கள் மேற்கத்திய தாக்கத்தில் பேசுகிறீர்கள். இது நமது மரபு. பூஜ்யத்தைக் கண்டவர்கள் நாம் தான். THE SUN NEVER SETS IN THE BRITISH EMPIRE. இது உங்கள் பெருமை. ஆனால் அதைவிட முக்கியம். IT RISES IN THE EAST.
கதையை இப்படி முடிக்கிறேன்.
அவள் பேசிவிட்டுப் போன பின்பும் அந்த ‘வெற்றிடம்’ அர்த்தபூர்வமாய் இருந்தது.
எனது சமீபத்திய சிறுகதைத் தொகுதி ’பெருவெளிக்காற்று’ நூல் ஆய்வு நிகழ்ச்சி டிஸ்கவரி புக் பேலசில் நடைபெற்றது. தலைமையாக அமைந்து பேசிய இந்திரன், “சங்கரநாராயணனிடம் பழகும் போதே ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். நம்மைப் பற்றி எதாவது கதையில் நுழைச்சி விட்ருவாரோன்னு இருக்கும். ஒருமாதிரி தொடுவர்மம் அவரது எழுத்தில் இருக்கிறது” என்றார்.
எழுத்துலகில் ஜாம்பவான் ஒருவர் சமீபத்தில் இறந்து போனார். அவரது வாழ்க்கையை உள்ளது உள்ளபடி ஒரு கதையில் நான் குறிப்பிட்டிருந்தேன். அது அந்த எழுத்தாளர் என்னிடமும், பொதுவாகப் பல மேடைகளிலும் பகிர்ந்து கொள்ளும் ஒரு விஷயம்தான். என்ன, அதில் தவிர்க்க இயலாமல் அவரது ‘பரிவாரம்’ பற்றிய குறிப்பில் இன்னொரு எழுத்தாளர், சிறுபத்திரிகையாளர் பற்றி இடம்பெற வேண்டியதாயிற்று! பிரதான கதையில் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.
நான் ஏற்புரையில் பதில் சொல்ல வேண்டியதாயிற்று. “தொடுவர்மம் என்றெல்லாம் இல்லை நண்பரே. ஆனால் சில கருத்துகளுக்கு அழுத்தம் தர சில பிரயோகங்கள் கதையமைப்புப்படி நான் கையெடுக்கிறேன். உதாரணமாக...” என்று ஒரு கதை சொன்னேன்.
கல்யாணம் பண்ணிக்கொண்டு, மனைவியோடு நெருங்காமல், பணம் பணம் என்று தன் வியாபாரத்திலேயே கவனமாய் இருக்கும் கணவன். அவள் தாய்மையடைகிறாள். இதில் திகைத்துப் போகிறான் அவன். ஆனால் அவளிடம் கேட்கத் தயக்கம் அவனுக்கு. குழந்தை பிறந்து விடுகிறது. இனியும் கேட்காமல் எப்படி, என அவன் பேச ஆரம்பிக்கிறான்.
“இந்தக் குழந்தை, யாருடையது?”
“அப்டின்னா?”
“இந்தக் குழந்தைக்கு அப்பா யாரு?”
 “ஏன் நீங்கதான்.”
அவன். “துரோகி” என்று கத்துகிறான். அவளுக்குக் கோபம் வருகிறது.
“என்ன சொல்றீங்க? கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் வேறொருத்தருடன் குழந்தை பெத்துக்கிட்டதா, நீங்க துரோகம்னு குற்றம் சாட்டறீங்க, அதுக்கும் முந்தி... என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதே எனக்கு நீங்க செஞ்ச துரோகம் இல்லியா?” என்கிறாள்.
இந்தக் கதை என் அலுவலகத்தில் பல பெண்களால் படித்துப் பார்க்கப் பட்டது. அவர்கள் “கதை சரிதான். அவள் கேள்வியும் சரிதான். ஆனால் அவளது குழந்தையின் தந்தை, யார் அது? அதுபற்றி எதுவும் கதையில் இல்லையே?” என்றார்கள். நான் சொன்னேன். “அதுதான் இங்கே சிக்கல். அந்த வாழ்க்கை பற்றி, அவளது காதலன் பற்றி, நான் எழுத ஆரம்பித்தாலே, நீங்கள்... பெண்கள் உட்பட, இது தவறு அல்லவா, என்று குரல் கொடுக்க சமூக அளவில் பழக்கப் படுத்தப் பட்டு விட்டீர்கள். அதனால் தான் அந்தப் பகுதியைக் கதையில் விளக்காமல் விட்டேன். நீங்க இப்போது அவளது கோபத்தை மாத்திரம் பார்க்க முடிகிறது. அதை நியாயம் எனவும் உணர முடிகிறது...”
இந்திரன் எனது நல்ல நண்பர். அவரது முதல் மொழிபெயர்ப்புத் தொகுதி ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்.’ அன்னம் வெளியீடு. இதை வாசித்த பல ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சியில் கவிஞர் சிற்பியின் வீட்டில் அவரது நூலக அறையில் இதன் பிரதியைப் பார்த்தேன். ஆசையுடன் கையில் எடுத்து, “நான் வைத்துக் கொள்ளவா?” என்று வாங்கி வந்தேன். அதன்பிறகு, கருப்பினர் கவிதைகளில் காணப்படும் மீட்சி தேடும் குரல்களும், நமது சுதந்திரத் தேடலின் குரலும் ஒத்திசைகிற மாதிரி ஒரு கதை எழுத ஆர்வப் பட்டேன். ‘புலிக்குகை.’ புதிய பார்வை இதழில் அது எனக்குப் பெரிய பெயர் எடுத்துத் தந்தது. மகாகவி பாரதியாரை தமிழ்நாட்டில் இருந்து வெள்ளைக்காரன் கண்ணில் படாமல் புதுவை அழைத்துச் செல்வது ஒரு பெண், என்று சொல்லி, அவள் விதவை என்று விவரப்படுத்தி, அவள் கர்ப்பமாய் இருக்கிறாள், வயிற்றில் குழந்தை, எனச் சொல்லி, அவளது கணவன் சுதந்திரப் போரில் உயிர் நீத்தவன் என்பதாக அமைத்து...
“இத்தனை தியாகங்களுக்குப் பின் நீ எனக்காக இப்படி ஒரு ஆபத்தை எதிர் கொள்கிறாயே அம்மா?” என பாரதி நெகிழ்வார். “என் கணவரின் மரணம், அதன் லட்சியம் நிறைவேறவே நான் இந்த ஆபத்தைக் கைக்கொண்டேன்” என்பாள் அவள். “உன் குழந்தை... அதற்கும் இந்த ஆபத்துகள் தேவையா?” என்பார் பாரதி. “சுதந்திரத்துக்கான நம் பாடுகளை அது அறியட்டும் ஐயா. இந்த சுதந்திரம் யாருக்கு? குழந்தைக்குத் தானே?” என்பாள் அவள்.
“ஆகா பாரதமாதா...” என கை கூப்புவார் மகாகவி. “உன் மணி வயிறு. வயிறல்ல அது. புலிக்குகை. அதில் உறங்கும் உன் குழந்தை, அதுவே நம் நாட்டின் சுதந்திரம்,” என்பார்.
இதில் பாரதியாரின் கவிதைகளாக நான் பயன்படுத்தியவை இந்திரன் மொழிபெயர்த்த ஆப்பிரிக்கக் கவிதைகள் சில, அவற்றை ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ தொகுப்பில் இருந்து எடுத்துப் பயன்படுத்தி விட்டு, கதையோடு அடிக்குறிப்பும் தந்தேன். நன்றி இந்திரன். இப்படியொரு கற்பனையை உங்கள் நூல் எனக்குச் சிறகளித்தது.
‘புலிக்குகை’ சிறுகதை, பாவை சந்திரன் ஆசிரியராக இருந்த ‘புதிய பார்வை’ இதழில் வெளியாகி, அதற்கு அடுத்த வாரம் அவர் கல்கத்தா தமிழ்ச் சங்கம் போயிருந்த போது அங்கே, இந்தக் கதையை வெளியிட்டதற்காகச் சிறப்பு பாராட்டு பெற்றார்.
கொண்டாட்ட மனநிலை வந்து விட்டால், உள்ளம் துள்ளி எழுந்து ஆட்டம் போடும். என் இயல்பு அது.
‘கடிகாரத்தை முந்துகிறேன்’ என் சிறுகதைத் தொகுதி. பதிப்பாளர் தேவகி ராமலிங்கம், நிவேதிதா பதிப்பகம். “சார் பின்னட்டை... என்ன செய்யலாம்?” என்று அலைபேசியில் காத்திருக்கிறார். “என்ன புத்தகம் அம்மா? தலைப்பு என்ன சொல்லியிருக்கிறேன்?” என்று கேட்கிறேன். ”கடிகாரத்தை முந்துகிறேன்” என்கிறார். ”சரி. சிறு கவிதை, பின்னட்டைக்கு. எழுதிக் கொள்ளுங்கள்.”
ஒருகால் குட்டை
ஒருகால் நெட்டை
என்றாலும்
என்ன ஓட்டம் ஓடுது
இந்த கடிகாரம்

“சரியா இருக்காம்மா?” என்கிறேன். “அருமை சார். உங்க வேகம் ஆச்சர்யமாய் இருக்கு” என்றார் தேவகி.
இன்னொரு சந்தர்ப்பம். எழுத்தாளர் திரு சாருகேசி, என் எழுத்தின் மேல் மிகுந்த மரியாதை கொண்டவர். நான் அதுவரை அவரைச் சந்தித்தது இல்லை. என்றாலும் என்னைப் பற்றி என் கதைகளில் அறிந்து மகிழ்ந்தவர். கல்கி ஆசிரியர் ராஜேந்திரனிடம் என்னைப் பற்றி நல் வார்த்தை சொல்லி, “சங்கரநாராயணனிடம் கதை கேளுங்கள். அவர் கதை கல்கியில் வர வேண்டும்” என்று எடுத்துச் சொன்னவர்.
எனக்கு கல்கி ஆசிரியரிடம் இருந்து கடிதம். கிர்ர் என்று ராட்டினம் ஏறிய நிலை எனக்கு. அந்தக் கொண்டாட்ட மனநிலையிலேயே, முதலில் ஒரு தலைப்பு என மனசுக்குள் பரபரத்தேன். எனது அநேகக் கதைகளை நான் தலைப்பு முன்னமே வைத்து விடுவேன். அல்லது முழுக் கதையையுமே, மறந்து போகாமல் இருக்க, ஒரு குறுங் கவிதை போல தலைப்பாக்கி விடுவேன். “பிரசவ அறைக்கு வெளியே வலியுடன் ஆண்கள்’ என ஒரு தலைப்பு இப்போது உதாரணம் சொல்ல நினைவு வருகிறது.
அடுத்த அரைமணி நேரத்தில், கல்கி பத்திரிகைக்கு ஒரு கடிதம். “கதை கேட்டதற்கு மகிழ்ச்சி. ஸ்கேலாயுதம், என ஒரு கதை தருகிறேன்” என எழுதிப் போட்டேன்.
தலைப்பு தயார். ஒரு வகுப்பாசிரியர். வேலாயுதம். ரொம்ப கண்டிப்பான ஆசிரியர். அதனால் பிள்ளைகள் அவருக்கு வைத்த பட்டப்பேர் ஸ்கேலாயுதம். இதற்குமேல் கதை என்னிடம் அப்போது இல்லை.
பிறகு ஒரு மன உலாவலில் கதை தயார் செய்தேன். ஒரு விஞ்ஞான ஆசிரியர். அவர் பேய்க்கு பயப்படுகிறார்!
கண்டிப்பான ஆசிரியர் அவர். மறுநாள் தேர்வு வைத்திருக்கிறார். பசங்களுக்கு பயமாய் இருக்கிறது. அந்த கிராமத்தில் எல்லாரும் மலஜலம் கழிக்க முள்ளுக்காட்டுப் பக்கம் போய் வருவார்கள். அன்றைக்கு இரவில் வாத்தியாரை முள்ளுக்காட்டுப் பக்கம் பார்த்த ஒரு மாணவன். அவரை “ப்பே...” என பயமுறுத்தி விட அவருக்குக் காய்ச்சல் கண்டு மறுநாள் பள்ளிக்கூடம் வரவில்லை. தேர்வு நடக்கவில்லை, என்பது கதை.
கல்கி ராஜேந்திரனுக்கு அந்தக் கதை ரொம்பப் பிடித்துப் போனது. ஒருமுறை நான் ‘அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி’ நடுவராகப் போனபோது, அவர் ஸ்கேலாயுதம் கதையைச் சொல்லி, புன்னகையுடன் கைகுலுக்கி வரவேற்றார்.
ஒரு கொம்புசீவிய தருணத்தில் எகத்தாளத் தாளத்தில் மனம் தன்னைபோல கூடு கட்டி விடுவதும் உண்டு. ஒரு பத்திரிகை நண்பரின் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். பிரபலமான, (அவர் அப்படி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.) சினிமாப் பாடலாசிரியர் ஒருவர் தோள்பூரிக்க ஒரு படையுடன் நடந்து வந்தார். வழியில் அவரை நிறுத்தி எனக்கு அறிமுகம் செய்தார்கள். என்னைப் பார்த்து, கல்யாண ரிசப்ஷன் வாசலில் நிற்கும் பொம்மை போல கைகூப்பி விட்டு அதே கம்பீர நடையுடன், (அப்படி அவர் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.) என்னைத் தாண்டிப் போனார். சினிமா என்பது அவர்களை எப்படியெல்லாம் ஆட்டம் போட வைக்கிறது, என்று தோன்றியது.
அவர் நேரே போய் மணமேடை ஏறி மணமக்களை வாழ்த்துமுன், சினிமா பற்றி ஒரு சப்ஜெக்ட் தயார் செய்ய வேண்டும், என நான் எனக்குள் சவால் விட்டுக் கொண்டேன். அப்படி உருவாக்கிய கதை தான். ‘கதை திரைக்கதை வசனம் டைரக்சன்.’
என்ன கதை?
சினிமா உலகின் ஒரு பிரபலமான கற்பழிப்பு வில்லன். அவனுக்குக் கல்யாணம். இதேபோல ரிசப்ஷன். பிரமுகர்கள் வந்து அவனை ஒலிபெருக்கியில் எப்படியெல்லாம் வாழ்த்துவார்கள்?
சிறப்பாகக் கற்பழிப்பார், என வாழ்த்துவதா? சரியான நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வருவார், என்றால் இதற்கு சரியான நேரத்துக்கு வருவது அத்தனை முக்கியமா என்று தோன்றாதா? ஒரே டேக்கில் முடிப்பார், என்பதா? மேடையில் எப்படியெல்லாம் அவரைப் பாராட்டிப் பேசுகிறார்கள் என்பதே கதை.
ஒரு திரைப்படப் படப்பிடிப்பு. இவர் கற்பழிப்பு வில்லன். கதாநாயகன் வந்து இவரிடம் இருந்து கதாநாயகியைக் காப்பாற்ற வேண்டும். படப்பிடிப்பு முடிந்தது. இப்போது கதாநாயகன் அவளிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்கிறார். (மீ ட்டூ, குற்றச் சாட்டு எழும் போலிருக்கிறது.) அப்போது வில்லன் அவளைக் கதாநாயகனிடம் இருந்து காப்பாற்றுகிறார். அப்போது இருவரிடையே நட்பு மலர்ந்து, காதல் கல்யாணத்தில் முடிகிறது. இதுதான் கதை.
‘கதை திரைக்கதை வசனம் டைரக்சன்’ அவசியம் நீங்கள் வாசிக்க வேண்டும்.
இந்திரன் பயப்பட்ட தொடுவர்மம், இதில் இருக்கிறதா?
storysankar@gmail.com
91 97899 87842


Friday, December 7, 2018


PART 19

அம்பாளின் தொப்புள்கொடி
எஸ்.சங்கரநாராயணன்
ப்போது நான் போய்ச் சந்தித்தாலும் என்ன எழுதறே, என்று கேட்பார் லா.ச.ரா. இந்தப் பத்திரிகை, இன்ன கதை, என்பேன். எவ்ள குடுக்கறான்? என்று கேட்பார். எனக்கும் அவ்ளதான் குடுக்கறான், என்பார் (எனக்கு சந்தோசமா இருக்கும்). பத்திரிகைகள் தன்னிடம் கதை கேட்டுக் கேட்டுப் போடவேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர். எழுதிக் கிட்டிய பணம் தோள்ப் பூமாலை. To be in the limelight, என்பார்கள். பத்திரிகை அலுவலகங்களுக்கும் சில சமயம் போய்வந்தார். எல்லாப் பத்திரிகை ஆசிரியர்களிடமும் தேடினால் அவர் கதை கையெழுத்தில் கிடைக்கும்.
எல்லா ஆசிரியர்களுக்கும் அவர்மேல் அபிமானம் உண்டு. மரியாதை உண்டு. கட்டாயம் உண்டு. லா.ச.ரா. அஞ்சலிச் செய்தியைத் தமிழில் பரவலாய் நிறைய இதழ்கள் வெளியிட்டிருக்கின்றன. ஆனந்த விகடன் அவரை தமிழில் நனவோடை உத்தியின் தந்தை என்றுகூட எழுதியிருக்கிறது. மாலன் இந்தியா டுடேயில், தனிப் பாணியைக் கொண்டிருந்த மாமேதை, என்கிறார். மேலும் செய்திகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. (இதை எழுதிய நாள் 10.11.2007). தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி, லா.ச.ரா. குடும்பத்துக்கு ரூபாய் ரெண்டு லட்சம் நிதி என கெளரவித்து, செய்தி கிடைத்ததும் மதுரையில் இருந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அறிவிப்பு தருகிறார். எல்லாருக்கும் அவர் அருமை தெரிகிறது. ஆனால் அவரது சிக்கலான மொழிநடையை வெளியிட பத்திரிகைகள் தயங்கின. புத்தக வாசிப்பு வேறு. பத்திரிகை வாசிப்பு வேறு, என நினைத்தன. ஆபிரகாம் லிங்கன் சொல்வாரே, for the people by the people… அதேபோல ப்ராம்ணாளால் ப்ராம்ணாளுக்காக, என்கிற நிலை பத்திரிகை உலகில் மாறியிருக்கிறது.
தவிரவும் இருண்மை சார்ந்த கதைகளையும் லா.ச.ரா. எழுதினார். வார்த்தைகள் உக்கிரப்பட்டு வாழ்க்கை திடுதிப்பென்று மூர்ச்சையான கணங்களை அவர் தரிசன இருண்மை என்று ஏனோ கொண்டாடினார். நனவோடையில் ஒரு சுய இழப்பில் இது சாத்தியம், மற்றும் தவிர்க்க வொண்ணாதது போலும். வார்த்தைகளின் எதிரொலி காதடைக்க, மொத்த சப்த நிசப்தம். ஷோ முடிஞ்சு போச், என்கிறாப் போல.
மாலனே சொல்கிறார் – இந்தியா டுடே இரங்கல் உரை.
அந்த சிலிர்ப்பு நெருப்பை வாரிக் கொட்டித்து, என்பது போன்ற முரண்கள் வரும். தனக்குத் தானே போல நம்மை எதிரில் இருத்திப் பேச ஆரம்பிப்பார். திடீரென்று மெளனிப்பார். வார்த்தைகள் எல்லாமே மெளனத்தை நோக்கித்தான் ஓடுகின்றன, என்பார்…
முன்குனிந்து என்னிடம் லா.ச.ரா.
”சங்கர், என் கதை உனக்குப் புரியறதோ?” என்று கேட்டதில் அவரில் கொஞ்சம் பெருமிதம் கூட இருந்தது.
“புரியாது என்று எதிர்பார்க்க வேணாம். எந்தப் பகுதி புரியாது என நினைக்கிறீர்கள்?” என நான் கேட்டதும் ஞாபகம்.
லா.ச.ரா. விட்டுச் சென்ற சிதம்பர ரகசியம்.
வாஸ்தவத்தில் இருண்மை சார்ந்தே நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிட முடியாது. தெரிந்ததில் தெரியாதது, தெரியவில்லை என்று தெரிய வேண்டும். அதை சகஜமாக நாம் அங்கீகரிக்கவும் செய்கிறோம். எளிய உதாரணமாக, என் அலுவலகத்தில் என்னுடன் அநேக நண்பர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் பாதிப் பேரின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் அறிந்த அவர்களின் முகம், அதுபோதும், இறுதிவரை அலுவலகத்தில் நான் இன்முகத்துடன் அவர்களோடு வாழ்கிறேன்.
இருண்மையைப் பொருண்மையாய்க் கையாண்ட கதைகள் தமிழில் அரிதே. என் கண்ணில், காதில் படவில்லை. நான் ஒரு கதை முயன்று பார்த்தேன். ஒரு பொங்கல் மலருக்காகத் தந்தது. யாராவது கதை கேட்டு எழுத முனையும் போது இப்படி அதிகமாய் நாம் முனைப்புறுகிறோம். ‘ஒரு மனிதன் இன்னொரு மனிதன்’ என்ற அந்தக் கதை பற்றிய குறிப்பு வேறிடத்தில் பதிவாகியிருக்கும்.
லா.ச.ரா. காட்டும் இருண்மை, வார்த்தைத் திகைப்பு. அது தத்துவார்த்த பிரமிப்பு என்று எனக்குக் கிடைக்கவில்லை, என் அறிவு அவ்வளவுதானா? ஆனால் அசோகமித்திரன், தினமணி இரங்கல் உரையில், (’சிந்தாநதி சகாப்தம்’) கீழ்க்கண்டவாறு பிரகடனப் படுத்துகிறார்.
”தமிழ் வரையில் இந்துமத தெய்வங்களை அவர்போல் இலக்கியக் குறியீடாகப் பயன்படுத்தியவர் எவருமே இல்லை எனலாம். அதேபோல இந்தியத் தத்துவச் சொற்களையும் அவர்போலக் கையாண்டவர் தமிழில் கூற முடியாது.”
இந்துத் தத்துவங்களை விவரப்படுத்துவது அவர் நோக்கமாய் என்றுமே இருந்ததில்லை. தத்துவ மரபில் அந்தச் சரடில் சிந்தனைப் பூ தொடுக்கிறார் லா.ச.ரா. இந்தியத் தத்துவம் அல்ல, அவர் கையாண்டது, தத்துவச் சொற்கள்.
“அவருடைய ‘புத்ர’ மற்றும் ‘அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும்” என்றும் அசோகமித்திரன் மொழிகிறார். கதாபூர்வமான இலக்கிய ஆளுமை இந்த நாவல்களில் அவருக்குக் கிடைக்கவில்லை.
சுந்தர ராமசாமி ’கலைகள், கதைகள், சிறுகதைகள்’ எனக் கட்டுரை தந்தபோது லா.ச.ரா. பற்றியும் எழுதியது கவனத்தில் வருகிறது.
”லா.ச.ராமாமிருதம் வாசனைத் திரவியங்களின் நறுமணங்களைத் தமிழாக மாற்றிக் கொண்டுவந்தவர். இவருடைய கதைகளில் மரபு, பிச்சமூர்த்தியைப் போல் விடுதலை பெற்று மனிதத்தன்மையின் சாராம்சத்தை எட்டாமல், வைதிக வாழ்வின் சாயல்களில் அழுந்திக் கிடக்கிறது. நெருக்கடிகளை உருவாக்கித் தீவிர அனுபவங்களைத் தர வல்லவர் என்றாலும், இவ்வனுபவங்களின் அர்த்தம் நமக்குப் புரிவதில்லை. பதற்றங்கள் கொண்ட உணர்ச்சிப் பிழம்பான இவரது கதாபாத்திரங்கள்கூடக் குடும்பத்துக்குள் முட்டி மோதிக்கொண்டு கிடக்கிறார்களே தவிர, எந்தத் தளைகளையும் அறுப்பதில்லை. உணர்ச்சிகரமான சம்பவங்களை உச்ச ஸ்தாயியில் வெளிப்படுத்தும் திறனிலும் மொழியின் புதிய பரிமாணங்களிலும் பிணைந்து கிடக்கிறது இவரது உயிர்.” (1985 ‘மாதவன் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் முன்னுரை. கலைஞன் பதிப்பகம்).
நனவோடை உத்தி பற்றியும் ஜெயமோகன் கருத்து மாறுபடுகிறது. (நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் – ஜெயமோகன். காவ்யா வெளியீடு. பக். 164).
“லா.ச.ராமாமிர்தத்தின் நடை தமிழ்ப் படைப்பாளிகளிடையே தீவிரமான பாதிப்பைச் செலுத்தியது. மொழியைக் கச்சிதமாகவும் கூர்மையாகவும் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதைத் தன் போக்குக்கு விட்டு, அதன் தன்னிச்சையான பாய்ச்சல் கொண்டு சேர்க்கும் புதிய இடங்களை அடைவது என்பது அவருடைய பாணி. பன்னிப் பன்னிச் சொல்வது, ஒலியொழுங்கை மட்டும் நம்பிச் சொற்றொடர்களை அடுக்கியபடியே சொல்வது போன்றவை பிரதான உத்திகள். லா.ச.ராமாமிர்தத்தின் ஆரம்ப காலச் சிறுகதைகள் இவ்வகையில் மொழியின் அற்புதமான சாத்தியங்களைத் தொட்டுக்காட்டிய படைப்புகளாகும். ‘ஜனனி’. ‘இதழ்கள்’ ஆகிய இரு தொகுப்புகளிலும் தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் சில அடங்கியுள்ளன. பிற்பாடு வந்த தொகுப்புகளில் லா.ச.ரா. தன்னையே பிரதியெடுப்பது தெரியும். இருந்தாலும் ‘உத்தராயணம்’ குறிப்பிடத்தக்க தொகுப்பு. லா.ச.ரா. நாவல்களாக எதையும் எழுதவில்லை. சற்று நீண்டுவிட்ட சிறுகதைகளான ‘புத்ர’, ‘அபிதா’ இரண்டும் அவருடைய விசேஷமான இலக்கிய பாணியின் வெற்றிக்குச் சான்று கூறுபவை. பிற்பாடு அவர் பெரிதும் தன் மொழிக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருபவராகத் தோற்றம் தருகிறார். மொழியின் தன்னிச்சையான போக்கை நம்பி எழுதும் படைப்பாளிகளில் அது தவிர்க்க முடியாத விஷயம். காரணம் ஒருவரின் மனமொழியே படைப்பு மொழியாகிறது. அம் மனமொழியோ பல சமயம் ஒரே தடத்தில் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. இதை நாமே உணரலாம். நம்மையறியாது எதையாவது கூற முனையும்போது நாம் பெரும்பாலும் வழக்கமான சொற்றொடர் எதையாவதுதான் கூறுவோம். ஆகக் குறைந்த தூரமுள்ள பாதையில் நகரவே மனம் எப்போதும் முயல்கிறது. படைப்பாளி தன் மொழியை இயல்பாக நகர அனுமதிக்கவில்லையென்றால் அது புதிய இடங்களை ஏதும் சென்றடையாத இறுகிய மொழியாக அமையும். முற்றிலும் அதன் போக்கில் விட்டுவிட்டால் சில பாய்ச்சல்களுக்குப் பிறகு அப் பாய்ச்சலின் பாதையையே திரும்பத் திரும்ப பின்தொடரும். உடைப்பெடுத்து நீர் அப்பாதையில் மேலும் மேலும் பாய்ந்து கால்வாய் ஆவதுபோல, மொழிமீது கவனமும் அதற்கு விரைய வாய்ப்பளிக்கும் சிரத்தையும் படைப்பாளியிடம் இருக்க வேண்டும்.”
வார்த்தைகளால் தனக்குத்தானே சங்கிலியிட்டுக் கொண்டார் லா.ச.ரா. நனவோடை எனும் மனமொழி அவரை இருண்மைக்கே இட்டுச் சென்றிருக்கிறது.
லா.ச.ரா. சொல்லுவாராம் –
“கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து தட்டித் தட்டி கண்மூடாமல் நகாசு வேலை செய்து சிற்பத்தின் கண் திறந்து விக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்.” சரி சார். அப்படி இழைத்து இழைத்து தட்டிச் செப்பனிட்டுச் செய்வது நனவோடைக்கு சரிவருமா? ரெண்டும் வேறு தினுசில் எதிர் திசையில் சஞ்சரிக்கும் உத்திகள் ஆச்சே!
தன்னைச் சுற்றி வாசனையான வார்த்தைகளை ஊதுபத்தியாய்ப் படர விட்டபடியே உள்தவம் கொண்டவர் லா.ச.ரா. இதன் பவித்ர பாவனையில்தான் பாத்திரங்கள், முன்னோர்கள், அம்மா… என எல்லாமே தெய்வீகத்தன்மையுடன் தேவதாஸ்வரூபம் கொள்கிறார்கள். சவுக்கு விஷ்க்காய், கிலுகிலுப்பை ஜிலீராய், ஒரு கண் சிமிட்டும் பாத்திர வர்ணனை தருவதிலும் பிரியங் கொண்டவர்.
அம்மா எப்பவும் பேச மாட்டாள். மூடுசூளை, என்பார்.
தாய் வழிபாடு மேலோங்கிக் கனிந்து உள்வஜ்ரப்பட்டு பிற்பாடு அம்பாள் உபாசனை என பிற்பகுதிகளில் இயக்கங் கண்டது. அவள், என பிற்பாடு தினமணி கதிரில் எழுதிய பகுதிகள் முழுக்க அம்பாள் தரிசன யத்தனங்களே. அன்றாடங்களின் அடங்கலில் உள்விழிப்பு ஆன்மிகத்தில் காண்பது இந்திய மரபுதான்.
ஆன்மிகச் சிலிர்ப்புடன், வீட்டில் கிருஷ்ணர் சிலைக்கு அபிஷேகம், பூஜை புனஸ்காரங்கள் என்று ஒரு பாத்திரம், ‘கறந்த பால்’, அப்போது எனக்கு இந்த தெய்வ வழிபாட்டில் அசுவாரஸ்யம், இருந்தாலும் படித்து சிலிர்த்தேன். கறந்த பால் குங்குமம் இதழில் வெளியானதாக நினைவு. ஆனால் அதிலும் ஒரு அடல்ட்ரி சமாச்சாரம் முடிச்சு.
அடிக்கடி சிறுகதைத் திரட்டுகள் கொணர்வதில் விருப்பம் உள்ளவன் நான். ஆகாயப்பந்தல், பரிவாரம், யானைச்சவாரி, தற்போது முழுக்க சங்கீதம் சார்ந்த கதைகளுடன் ஜுகல்பந்தி. பரிவாரம் இதழில் லா.ச.ரா. ‘அமலி’ என்கிற கதை எழுதினார். ஜுகல்பந்தியில் அவரது பங்களிப்பு ‘ஈ ஜகமுலோ திக்கெவரம்மா.’
இதில் ’அமலி’ கடைசிக் காலத்தில் தாத்தாவும் பாட்டியும் ஒருவர்மீது ஒருவர் ஆதரவாய்ச் சாய்ந்து வாழ்கிற கதை, பிற உறவுகள் என்னவாயினும் ஒட்டாமல் போய் விடுகின்றன. புளியம்பழ ஓடுகள். அந்த வயதில் அந்த உணர்வு, என அமைந்ததில் நான் பெரும் திருப்தி கொண்ட கதை அது. எழுதிய லா.ச.ரா.வின் மனநிலைதான் அது… என மன ஓசை சொல்வது காதில் விழுகிறது.
முற்போக்கு எழுத்தாளர்கள் மத்தியில் லா.ச.ரா., ஜானகிராமன், சுந்தர ராமசாமி என்றால் இவர்களை விமர்சிக்க, இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் வைத்திருந்தார்கள். அந்தக் காலத்தில் குறியீட்டுத் தளத்தில் இயங்குகிறதாக சு.ரா.வின் கவிதை, ‘நகத்தை வெட்டியெறி, அழுக்குச் சேரும்’. இதெல்லாம் கவிதையா என்று மேடைதோறும் பேசுவார்கள். ஜானகிராமனைப் பற்றிய கோபமும் எல்லாருக்கும் தெரியும். லா.ச.ரா. ஒருமுறை ‘வியட்நாம் போரில் அத்தனை பேர் செத்தார்கள், என்ற சேதி என்னை பாதிக்கவில்லை. என் வீட்டுப் பூச்செடியில் ஒரு பூ உதிர்ந்தால் துடித்துப்போகிறது’ என்று சொன்னதாகச் சொல்லி விமர்சனத்தை முன்வைப்பார்கள்.
மனஓசையில் லா.ச.ரா. பற்றிய கட்டுரையில் இந்த விவரம் இல்லை.
ஒரு நெகிழ்ந்த மனநிலையில் கலைஞன் உணர்ச்சிப்பிழம்பாக எதையோ வெளியிடுகிறான். அதை அந்தக் கணத்தின் போக்காகக் கருத்தில் கொள்வதே நல்லது என்று தோன்றுகிறது. அதை பூதக்கண்ணாடி கொண்டு பெரிசாக்கி, காலமெல்லாம் அதையே சொல்லி அவனே மறந்துவிட்ட அந்த வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப அவனை நோக்கி, நீதானே சொன்னே, நீதானே சொன்னே, என வீச வேணாம். நான் மாட்டேன்.
’ஜுகல்பந்தி’யில் அவர் சிறுகதை நல்ல சங்கீத உக்கிரம் பெற்று, பிற்பகுதி போக்குமாறிப் போகிறது. கொழுந்தனையும் மன்னியையும் சேர்த்து, அந்த அருமையான தாய் சேய்க்கு நிகரான உறவுப் பிணைப்பைப் பொருமலுடன் தறித்துப் போடும் பெண் ஒருத்தியின் முறுக்கம்.
ரெண்டு கதைக்கும் சன்மானம் தந்துவிட்டேன்.
கடைசி காலத்தில் லா.ச.ரா. எழுத்தும் பேச்சும் அடங்கி, வாசிக்கிறதிலும், பிள்ளைகள் வாசிக்க கேட்கிறதிலும் நேரம் செலவிட்டிருக்கிறார். அன்னா கரீனினாவை மகன் சந்திரசேகர் 1500 ரூபாய் கொடுத்து வாங்கி வந்ததை அட்டை தொட்டு மகிழ்ந்திருக்கிறார். என்னிடமும் எப்பவாவது உலக இலக்கியம் என்று பேசுவார். அப்போது நான் ஹெச்.ஈ. பேட்ஸ் எழுதிய Doffadil sky, ஜான் அப்டைக் Pigeon Feathers, என்று படித்துக் கொண்டிருந்தேன். (பின்னாளில் அப்டைக்கின் ஒரு கதை – மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா? – எனத் தமிழில் மொழிபெயர்த்தேன். கணையாழியில் வந்தது. பேட்ஸின் கதை ’Go lovely rose’ – தமிழில் ‘சென்றுவா நேச மலரே’. திண்ணை இதழில் வெளியானது.)
சட்டென்று முகம் மலர்ந்து லா.ச.ரா. அப்டைக்கின் ‘Couples’ நாவலை நினைவு கூர்ந்தார். அப்டைக்கின் புதுக்கவிதையின் எழுத்துமுறைப் புதுமைகளை அப்போது சுஜாதா தமிழில் தொடர்கதைகளில் பண்ணிப் பார்த்தார்.
இலை ஒன்று என்று எழுதி, வீழ்கிறது என்பதை ஒவ்வொரு எழுத்தாகக் கீழே கீழே எழுதியிருப்பார் அப்டைக். ‘Couples’ நாவலில் ஒருவரி எனக்குப் பிடித்து அதை என் ‘பூமிக்குத் தலை சுற்றுகிறது’ குறுநாவலில் மேற்கோள் காட்டினேன்.
Sex is like money, only too much is enough.
நான் ஒரு தப்பிதம் செய்தேன். என் குழந்தைகள் பிரசன்னா, வித்யாசாகர் இருவருக்கும் உபநயன வைபவம் நிகழ்த்தியபோது சம்பிரதாய அளவில் லா.ச.ரா.வுக்குத் தபாலில் பத்திரிகை அனுப்பி வைத்தேன். பெரியவர் லா.ச.ரா. ஜம்மென்று முகூர்த்தத்தில் ஆஜரானார். அன்றைக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெடுஞ்சாண்கிடையாக விழவைத்த அதே மரியாதைக்குரிய லா.ச.ரா. எத்தனை பிரியமான அன்பான மனிதர். நல்ல சாப்பாட்டு ரசிகர். குடும்ப ரீதியான உறவுகளை வெளி மனிதர்களிடமும் தயங்காமல் பேணுகிற லா.ச.ரா.
கவிதாயினி கிருஷாங்கினி வீடு, எழுத்தாளர் ம.ந.ராமசாமி வீடு என அவரை உபசரித்தவர் அநேகம். மனித உறவுகளை இவ்வளவு எளிமையாகக் கைக்கொள்ள அவரிடம் கண்டிப்பாகப் பழகிக் கொள்ளணும். எந்த நேரத்திலும் அன்பான ஒரு ஆதுரம் அவர் பேச்சில் கிளம்பி சூழலை நனைக்கும் நண்பர்களுக்காகக் காத்திருக்கும் மனசு என்று அதைச் சொல்லலாம் அல்லவா? பழகுவதற்கு அவர் சிறு குழந்தை போல. எதைப் பற்றியும் எந்த வேகத்தோடும் பேசலாம். அவருக்குக் கோபம் வருமா? பிள்ளைகளிடம்தான் கேட்க வேண்டும்.
நனவோடை உத்தி என என் பாணி லா.ச.ரா. வடித்தெடுத்த மொழிநடைச் சிமிழுக்குள் அடங்கவில்லை. காலத்தினால்தான் நான் அவரைப் பணிந்து அவர் தோளேறி நின்று கூவிய சேவல் ஆகிறேன்.
தற்காலப் பெண்ணின் வாழ்வியல் அம்சங்களை முன்னிறுத்தி ‘நேற்று இன்றல்ல நாளை’ என நாவல் ஒன்று நான் எழுதினேன். அது பின்னாளில் அக்னி அட்சர விருது பெற்றது. விருதின் citation வருமாறு –
”சமகாலப் பெண் ஒருத்தியின் குழப்பங்களையும், குமுறல்களையும், மன உளைச்சல்களையும் இயல்பாகச் சித்தரிக்கும் நெடுங்கதை ‘நேற்று இன்றல்ல நாளை’. இரட்டைச்சுமை ஏற்க வேண்டிய இன்றைய பெண்ணின் மனதை வெளிப்படுத்தும் யதார்த்த நடை”.
இன்றைய அன்றாடத்தின் வேகத்தை வார்த்தைகளில் ஏற்றிச் சொன்ன கதை. கதையில் நடைமுறையின் உள்ளங்கைச் சூடு தட்ட வேண்டும். தவிர நனவோடை என்ற அளவில், கதையில் குறுக்குச்சுவர்களை முடிந்தளவு தவிர்த்திருக்கிறேன். ஆமாம், வாழ்வின் ஆகச்சிறு பகுதியைக் கதை நிகழ்காலமாகக் கொண்டேன். கொஞ்சமே கொஞ்சம் பாத்திரங்கள், தேவைப்படி. நாவல் களத்தில் ஒரு நவீன அம்சமாக, காலப்பின்னணியில் ஒரு மழைக்காலத்தை வரித்துக் கொண்டிருந்தேன்.
என்ன கதை? ஒருகுழந்தை பெற்றுக்கொள்ளத் தள்ளிப்போடுவதும், இரண்டாவது வேணவே வேணாம் என்கிறதுமான நகர தம்பதியர். பெண்மை மிச்சமிருக்கிற அந்தக் கதாநாயகி மனசில் சிறு சலனம், ரெண்டாவது குழந்தையை வளர்த்தால் என்ன? முதல் குழந்தையின் பதட்டம் பயம் என்றில்லாமல் இன்னும் நிதானத்துடன் அதன் தேவைகளை கவனிக்கலாம். வாழ்க்கையை ரசிக்கலாம். முதல் குழந்தை என்றேகூட அவன் பெரிதும் கவனக்குவிப்பு கொள்ளவில்லை. ரெண்டாங் குழந்தைக்கும் அவள் எதிர்பார்க்கப் போவதில்லை.
ரெண்டாங் குழந்தை நமக்கு luxury என்கிறான் கணவன். கலைத்துவிடு, என்கிறான். உனக்கு மேலதிகச்சுமை தர நான் சம்மதிக்க மாட்டேன், என்கிறான். ஏற்கெனவே வீடும் அலுவலகமுமாய் நீ அல்லாடறே? இதுக்கு மேலயும் உன்னைத் துன்புறுத்தறது நியாயம்னு எனக்குப் படல்ல, என்கிறான்.
கணவன் என்ற பீடத்தில் இருந்து அவனது வார்த்தைத் தெறிப்புகள். அவளது கருத்து அங்கே ரெண்டாம் பட்சமாகிறது. என்ன சுதந்திரம் கிடைத்து விட்டது பெண்ணுக்கு? வேலைக்குப் போக வெளியே இறங்கியதா? கைநிறைய சம்பாதிப்பதா? தன்பிள்ளையைத் தான் சுமக்க விரும்பியும் யாசக நிலையில் நிறுத்தி நிர்ப்பந்திக்கிறது சமூகம். எங்கே இருக்கிறது சுதந்திரம்? முகம் நிறைய சந்தோஷத்துடன் உண்டாகியிருப்பதைச் சொன்னவளுக்கு சாட்டையாய் பதில் தரும் அதிகார புருஷன். நல்லவன்தான். முடிவுகள் அவன் கையில் இருப்பதான மேலாண்மை.
இவனை மறுக்க நினைத்தால் குடும்ப அமைப்பில் இனி இது கணவனின் குடும்பத்தாரிடமே விசாரணைக்கு வரும். அவர்களோடு வாதமிட்டால் அடங்காப்பிடாரி பட்டம். எல்லாம் தாண்டி தன் வீடு என்று ஆறுதல் தேடினால், அவர்களின் ஒரே பதில், கல்யாணம் ஆயிட்டா இனி அதுதான் உன் வீடு.
அவள் அமிர்தவல்லி. அவன் நடராசன். ஒரு கால் தூக்கி நின்றாடும் தெய்வம். காலடியில் அசுரன். சிறு உருவாக, ஆ அது என் குழந்தை… எனப் பதறுகிறாள் அமிர்தவல்லி. இந்தச் சித்திரம் கோவிலுக்குப் போகுந்தோறும் வாசக மனசில் அதிரும் என எதிர்பார்த்தேன்.
நாவலுக்கு முன்னுரை தர லா.ச.ரா.விடம் கேட்டேன்.
முன்தலைமுறையினரிடம் பக்திபாவனை கொண்டாடும் லா.ச.ரா. உள்ளூற அதிர்ந்திருக்க வேண்டும். அவருக்கு அபார்ஷனே, ஐயய்யோ! கொலைக்குற்றம், என்கிற மென்மையான மனசு. வாழ்ந்த வளர்ந்த சூழல் அப்படி. அன்னை தெரசா சொன்னார் –
குழந்தை பெறுவதைத் தவிர்க்க முயலுங்கள். கருத்தடைச் சாதனங்கள் கூட பரவாயில்லை. பிறந்த உயிரை கருக்கலைப்பு செய்யாதீர்கள், என வேண்டிக் கொண்டது ஞாபகம் வருகிறது.
இந்த நாவலை ‘அன்னை தெரசாவுக்கு சமர்ப்பணம்’ செய்திருந்தேன்.
இந்த நாவல் கருக்கலைப்பை நியாயப்படுத்தவில்லை.
பாவனைகள் அற்றது அல்ல இன்றைய இளமை. ஆனால் மேலதிகத் தெளிவானது. அது விசாரணைகள் கொண்டது. வழிபாடு அல்ல, தேர்வு அடிப்படையில் சிந்திக்கிறது இளமை.
அமிர்தவல்லி மாமனார் மாமியாரிடம் கூட யோசனை கேட்கவில்லை. அவளும் நடராசனும் போய் ஒரு ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள்.
லா.ச.ரா.வை அதிரச் செய்திருக்கிறது இது. பெரியவாளை, அதும் குலம், சந்ததி சார்ந்த விஷயத்தில் கூட யோசனை கேட்கமாட்டாளா, என ஆதங்கப் படுகிறார். ‘தன்’ குடும்பம், தன் தேவை மற்றும் வசதி, என்று இளைய தலைமுறை தானே ஒழுங்குகள் செய்து கொள்வதை, தன் தலைக்கு தானே அட்சதை, அதிர்ந்து பார்க்கிறார்.
கதையில் கதையமைப்புக்கு ஒத்தாசையாக உள் அலட்டல்கள் –
      மழை
      மேகத்தின் கருச்சிதைவு
      வீதியெங்கும் ரத்தம்

      அமைதியாய்
      உட்கார்ந்திருந்தது பூனை
      மீசையோரம் ரத்தக்கறை
”உன் கதைல sympathy இல்லியே சங்கர்? பாத்திரத்தின்மேல் படிக்கிறவாளுக்கு sympathy வர வேணாமா?”
வேணவே வேணாம். கழிவிரக்கம் என்று பிறரை அண்டி, பூனை ஈஷல், நாங்கள், இன்றைய எழுத்தாளர்கள் தவிர்க்கிறோம். அது வாசகனின் மீதான கருத்துத் திணிப்பு. முன் தலைமுறைகளிடம் நாங்கள் ஏமாந்தது இப்படித்தான்… என்கிறேன் புன்னகையுடன். அவர் முகம் மாறியதை கவனிக்க முடிந்தது.
ஆ, அந்த நடராஜ நிந்தனை, அதுவும் உறுத்தியிருக்கலாம்.
அதைவிட ஒரு துள்ளல் உற்சாகத்துடன் கதையோட்டத்தில், “கடவுள் இருக்கிறார் இல்லை என்பதல்ல அவன் வாதம். அவரைப் பற்றி சிந்திக்கிறதே மியர் வேஸ்ட் ஆஃப் டைம். விஞ்ஞானத்தை நம்பிண்டே கோவிலைச் சுத்தறது எதுக்குன்னு அவனுக்குப் புரியவில்லை. டார்ச் வந்தாச்சி. கற்பூரம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும்” – என எழுதியிருந்த வாசகங்களில் அவர் உடம்பு துடித்ததைக் கண்டேன்.
“கேரளாலல்லாம் இன்னுங்கூட இந்த பவித்ர பாவனைல கண்டிப்பா இருக்கா, சங்கர். கர்ப்பகிரக இருட்டுக்குன்னு ஒரு விசேஷம்…”
”அதான் என்ன, சொல்லுங்கோ. நாங்களும் தெரிஞ்சிக்கலாம்ல. பாவுள்ளுக்கும் (கிராமத்து வீடுகளின் store room) கர்ப்பகிரகத்துக்கும் என்ன வித்தியாசம்?”
அவர் பதில் சொல்லவில்லை.
“ஐயா உங்கள் தலைமுறை இந்த விஷயத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? நாங்கள் எப்படிப் பார்க்கிறோம்?... என வித்தியாசப் படுத்தவே இந்தக் கதையும், உங்களிடம் முன்னுரையும் கேட்கிறேன்” என்கிறேன்.
மறக்குமுன் ஒரு விஷயம் சொல்லி விடுகிறேன். அவர் அபார்ஷன் என்ற வார்த்தையைச் சொல்ல நா கூசினார். Excavation, என்றே குறிப்பிட்டார். அருமையான சொற்பிரயோகம். வெல்டன் லா.ச.ரா.
முன்னுரை முதல் வரியில் அதிர வைக்கிறார் லா.ச.ரா. “இந்தக் கதை ஒரே வரியில் – ஒரு கரு சிதைக்கப்படுகிறது.” பின்னால் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“சங்கரநாராயணன் என் கண்ணெதிரிலேயே எழுதத் துவங்கி சீக்கிரமே முன்னணிக்கு வந்துவிட்ட இளைஞர். அவருக்கென்று ஒரு நோக்கும் நடையும் அமைந்துவிட்டன. ஆனால் எனக்கும் அவருக்கும் பரம்பரை இடைவெளி என்று ஒன்று இருக்கிறதே! நாளடைவில் அவருடைய எண்ணமும் கலையும் கனிகையில், எனக்கு வாழ்க்கையைப் பற்றித் தோன்றுவது போல அவருக்கும் தோன்றுமோ என்னமோ?
நாளைய நம்பிக்கையில்லாமல், இன்றின் மெட்டீரியலிசத்தில் முழுக்க மூழ்கிவிட்ட வாழ்க்கையின் அவலத்துக்கு இந்தக்கதை எடுத்துக்காட்டாக விளங்குகிறது.”
நிகழ்காலம் கேடுகாலம், பழங்காலம் பொற்காலம் என்ற பெரியவர்களின் அதே முத்தாய்ப்பு. நான் எதிர்பார்த்ததுதான்.
ஆனாலும் முதல்வரி, அந்தக் கிள்ளல் –
ஒரு கரு சிதைக்கப்படுகிறது. அதாவது  நான் சரியாகக் கதை சொல்லவில்லை, என்ற மறைமுகக் குத்தல்... அதில் நான் தூக்கி வீசப்பட்டதாக உள்காயம் ஏற்பட்டது எனக்கு.
‘நேற்று இன்றல்ல நாளை. நேற்றைக்கு லா.ச.ரா. இன்றைக்கு நான். நாளைக்கு நீங்கள் பேசலாம்” – இப்படி ஒரு எடுப்பு கொண்டேன் நான் என்னுரையில்.
”நிகழ்காலத் தளத்தில், ஒரு நிகழ்காலப் பிரச்னையை, நிகழ்காலப் பாத்திர வார்ப்போடு அது உரசிப் பார்க்கிறது. கடந்த காலத்தின் பல்வேறு அம்சங்களை அது சீர்தூக்கிப் பார்த்து, இப்போது நாம் நிற்கிற இடத்தை கவனப்படுத்தி, பாதையமைத்து, எதிர்காலத்துக்குப் போகிற நுழைவாயிலைக் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறது.”
முன்னுரைக்கு நன்றி லா.ச.ரா. அக்னி அட்சர விருது என மூத்த எழுத்தாளர் விருது பெற்றவர் லா.ச.ரா. இந்த நாவலுக்காக எனக்கு ஆண்டின் சிறந்த எழுத்தாளர் என்கிற அக்னி அட்சர விருது கிடைத்தது. விருதில் நேற்றைக்கு லா.ச.ரா. இன்றைக்கு நான் என ஆகிப்போனது மகிழ்ச்சியே.
நாவல் வெளியானபின் அவரிடம் நூல் தரப் போயிருந்தேன். பிறகு அதற்கு விருது கிடைத்தபோதும் அவரிடம் தொலைபேசியில் பேசிய நினைவு. பலமுறை அன்போடு அவர் அழைத்ததை, ஏனோ நான் சிரமேற் கொள்ளவில்லை.
மன ஓசையில் ‘லா.ச.ரா. ஒரு கண்ணொட்டம்’ கட்டுரை வெளியான சமயங்களில் நான் அரும்பு இதழில் பத்திகள் எழுதிக் கொண்டிருந்தேன். அதில் குறிப்பிட்டிருந்த லா.ச.ரா. பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை மனஓசையோடு கடிதம் மூலம் பகிர்ந்து கொள்ள நேர்ந்தது.
மனசை மீட்டியபடி தளர விடுவது என்பது எப்பவுமே நல்லதல்ல. மனம் எப்போதும் நல்ல விஷயங்களை அசைபோடும் என்று எந்த உத்திரவாதமும் கிடையாது. உண்மையில் மனசை அடக்கி நெறிப்படுத்தி வெற்றி குவிப்பதே சாதனை.
நாற்காலியில் உட்கார்ந்து கண்மூடியிருக்கையில், திடுதிப்பென்று மின்விசிறி அறுந்து தலைமேல் விழுகிறதாகத் தோன்றுகிறது. சில சமயம் அந்த நினைவை உதறி சமாளித்துக் கொள்கிறோம். சு.ரா.வின் ‘ஜெ.ஜெ. சில குறிப்புகள்’ நாவலில் தெருவில் போகிற எருமை மாட்டின் மேல் ஒருவன் எச்சில் துப்பிவிட்டுப் போவான், என எழுதியிருப்பார். சும்மா தெருவோடு போகிற நாய். தெருவோடு போகிற பையனுக்கு அதைப் பார்த்ததும் ஏன் கல்லால் போட்டுச் சாத்த ஆவேசம் வருகிறது?
திறந்த நிலையில் மனதின் வக்கிரங்கள்.
லா.ச.ரா.வின் கதைகளை ஒருசேர வாசிக்கையில் ஓர் அதிர்ச்சியைச் சந்தித்தேன். இது சாடிஸம் அல்லாமல், வேறு எப்படி இதை அழைப்பது?
ஒரு கதை – ரெண்டு பேர் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒருவன், வாழ்க்கை என்பது என்ன? – என்று கேட்பான். தலைமேல் ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிறி. ஜன்னல் வழியே அறைக்குள் வந்த குருவி மின்விசிறியில் அடிபட்டு மற்றவன் மடியில் விழும். பதிலாக, இதுதான், என மற்றவன் எடுத்துக் காண்பிப்பான்.
ஒரு பறவையின் ஒடிந்த சிறகாய் அவன் கையில் வெற்றிலை கெளளி, என்பார்.
பாலத்தில் இருந்து கூவம் நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறான் ஒருவன். தலையில் அடிபட்டு முகம் தலை எங்கும் ரத்தம். செஞ்ஜடாதரன், என அவரது வர்ணிப்பின் நிதானம்..
வீட்டில் கொலு வைத்திருக்கிறார்கள். கொலுப்படியில் வெண்துணி போர்த்தி பொம்மைகள் அடுக்கியிருக்கிறார்கள். ஒரு குழந்தை தவழ்ந்து போய் அந்தத் துணியை இழுக்க கொலுப்படி சரிந்து மேலே விழுந்து குழந்தை இறந்து போகிறது.
அப்பனின் ரெண்டாம் சம்சாரத்தின் குழந்தையை முதல் சம்சாரத்தின் பிள்ளை பிரியத்துடனேயே கவனித்துக் கொள்கிறது. குழந்தை தவழ்ந்து விலகிப் போகிறது. ஏதோ விளையாட்டு சுவாரஸ்யம். கவனிக்கவில்லை முதல் சம்சாரத்தின் பிள்ளை. தரைமட்டக் கிணறு ஒன்றில் தவழ்ந்து போய்க் கவிழ்ந்து விடுகிறது குழந்தை. இறந்து மிதக்கும் குழந்தையின் தலை தென்னை மரத்தில் இருந்து விழுந்த குறும்பையாகத் தெரிகிறது லா.ச.ரா.வுக்கு.
திருப்பித் திருப்பிச் சுற்றிச் சுற்றி மரணம், அதன் கோர முகங்கள். விபரீதக் கற்பனைகள் அதிதம்.
உத்தராயணம் –
கதை முடிவுப்பகுதி கூட இப்படித்தான். கதாநாயகப் பெரியவர் மொட்டைமாடி ஏறுகையில் ஏணி சரிந்து அப்படியே அடைமுள்ளில் விழுகிறார். பீஷ்மரின் அம்புப் படுக்கை, வடக்கிருந்து உயிர் நீத்தல். என் உத்தராயணம் இதுதானா?.. என நினைக்கிறார். எந்தத் தத்துவச் சரடின் உள் அழுத்தமும் இல்லாத ஒப்புவமை. ஒரு சகஜமான காட்சி மனதில் திரிந்த பாலாய்ப் போகிறது.
முன்பே சொல்லியமாதிரி, லா.ச.ரா. எனும் பாற்கடலில் அமுதும் உண்டு. நஞ்சும் உண்டு.
மன ஓசையில் என் பதில் கடிதத்தைப் படித்ததாகவும், தன்னை வந்து பார்க்கும்படியும் லா.ச.ரா. சொல்லியனுப்பி யிருந்தார். பெரியவரிடம் நேரில் பேசுவது, அன்பு முறியப் பேசியதாகக் கொண்டு விடுவாரோ என்று, தயக்கமாய் இருந்தது. நான் தவிர்த்தேன் அப்போது.
பிற்காலத்தில் நான் புதுவை ஸ்ரீ அரவிந்த அன்னையின்பால் பற்றுக் கொண்டதும், தனியே ஆன்மிகக் கதைத் தொகுதி ‘பெண்கொற்றக்குடை’ தந்ததும், ஸ்ரீ அன்னை பற்றி ஒரு இசைத்தகடு ‘நிசப்த ரீங்காரம்’ பாடல்கள் எழுதி வெளியிட்டதும், நானே எதிர்பாராத நிகழ்வுகள். லா.ச.ரா. கேள்விப்பட்டால் சந்தோஷப் பட்டிருக்கக் கூடும்.
நான் அவருக்குத் தகவல் சொல்லியிருக்க வேண்டாமா?
தமிழ்ச் சிறுகதை உலகில் கடைசி நிமிடம் வரை சில பிரமிப்புகளை, தனித்தன்மையான ஆளுமையை நிகழ்த்திச் சென்றிருக்கிறார் லா.ச.ரா. நனவோடை என்கிற ஜேம்ஸ் ஜாய்சின் மேற்கத்திய உத்தியை தமிழில் தந்ததற்கு, தமிழ்ப்படுத்தித் தந்ததற்கு இலக்கியம் அவரைக் குறித்துக் கொள்கிறது.
நன்றி ‘திண்ணை’ இணைய வார இதழ் - கட்டுரையின் பகுதி
--
பின்குறிப்பு
லா.ச.ரா. மறைந்தபோது ஒரு நினைவஞ்சலிக் கூட்டம் நான் ஒழுங்கு செய்திருந்தேன். திலகவதி, மலர்மன்னன், அசோகமித்திரன் மற்றும் லா.ச.ராவி.ன மகன் சப்தரிஷி ஆகியோர் பேசினார்கள். லா.ச.ரா. பற்றி இயக்குநர் அருண்மொழியின் ஆவணப்படமும் திரையிட்டோம். லா.ச.ரா. பற்றிய மதிப்பீடுகள் அடங்கிய நூல் ‘சந்நிதிகள் பிராகாரங்கள் வீதிகள்’ வெளியிடப் பட்டது.