பகுதி 39 Artist/A.Selvam
இதோ இந்த
அலைகள் போல
எஸ்.சங்கரநாரயணன்
பால்யத்தில்
எனது சொல்சாமர்த்தியத்தில் நண்பர்கள் மத்தியில் புகழ் போதையுடன் அளவளாவுவது எனக்கு
இயல்பாக இருந்தது. ஒரு சக மாணவன் பந்தயம் ஒன்றில் இரண்டாம் பரிசு வாங்கினான். நான்
அவனிடம் சொன்னேன். “முதல் பரிசு வாங்கறது ஈசிடா. ரெண்டாம் பரிசுதான் திறமை.” இன்னொரு
சம்பவம் நினைவு வருகிறது. வத்றாப் என்கிற குட்டிக் கிராமத்தில் ஒன்பது பத்து பதினொன்று
வகுப்புகள் வாசித்து விட்டு மதுரைக் கல்லூரியில் (Madura College) புகுமுக வகுப்பு
சேர்ந்தவன் நான். என்றாலும் சிரமம் இல்லாமல் ‘இந்திய’ ஆங்கிலம் புரியவும் செய்யும்.
பதிலுக்கு ஆங்கிலத்திலேயே உரையாடவும் என்னால் முடியும். எங்கள் ஆங்கில வாத்தியார் ஆங்கிலப்
பாடத்தையே தமிழில் நடத்திக் கொண்டிருந்தார். பாடம் முடித்து, எனி டவ்ட்?.. என்று கேட்டார்.
நான எழுந்து கேட்டேன்.
சார் நீங்க எம்.ஏ. இங்கிலீஷ் தமிழ் மீடியமா?
எத்தனையோ நிதானப் பட்டிருக்கிறேன் இக்கால கட்டங்களில் என்பது
புரிகிறது. ஒரு கன்றுக்குட்டியின் துள்ளலே அந்தக் காலம். அதன்பிறகு இந்தப் பழக்கத்தின்
ஒரு நீட்சியாகவே எனது படைப்பு வாழ்க்கை ஆரம்பித்திருக்கக் கூடும். சிறுகதைகளிலும் இந்தத்
தெறிப்புகள், திவலைகளின் சுவடு காயாமல் காணக் கிடைத்திருப்பதாக என் ஆரம்ப காலக் கதைகள்
உணர்த்துகின்றன. “நாங்கள் நான்கு குழந்தைகள் அப்பாவுக்கு. வாசல் திண்ணையில் படுத்துக்
கொள்வோம். அப்பாவும் அம்மாவும் உள்ளே படுத்துக்கொண்டு மேலும் குழந்தைகளை வாசல் திண்ணைக்கு
அனுப்பிக் கொண்டிருந்தார்கள்” - என்கிற என் ஆரம்பகாலக் கதையொன்றின் வரியை ரமேஷ் வைத்யா,
பேச்சுவாக்கில் மேற்கோள் காட்டினான். ஆனால் இந்த வரிகளை காலம் உற்சாகமாக எதிர்கொண்டே
வந்திருக்கிறதை, எனது இந்த இயல்பு ரசிக்கப் படுவதை எப்போதுமே உணர்கிறேன். ம.வே.சிவகுமார்,
க.சீ.சிவகுமார் போன்ற நண்பர்களின் எழுத்துகளின் தளமே இந்த இடக்கரடக்காத தன்மைதான்.
ஒரு பையனை தான் காதலிப்பதாக இளம்பெண் ஒருத்தி, புதிதாகக் கல்யாணமாகி வந்த பக்கத்து
வீட்டுப் பெண்ணிடம் சொல்வாள். அதற்கு, “நானே போய் உங்க அப்பா அம்மாவிடம் பேசிச் சம்மதிக்க
வைக்கிறேன்,” என்று அந்த பக்கத்து வீட்டுக்காரி முன் வருவாள், என்று கதை சொல்லும் ம.வே.சிவகுமார்,
சில பெண்களுக்கு சுபாவமாகவே இம்மாதிரி காரியங்கள் பிடிக்கிறது, என அடுத்து ஒரு வரி
போடுகிறார். க.சீ.சிவகுமாரிடமும் அநேக வரிகளை இப்படி அடிக்கோடு இட்டுக் காட்ட முடியும்.
பல் எடுப்பான பெண்கள் போன்ற கதைகள் அவை. அதுவும் ஒரு அழகு
என்று எழுத்தில் வரவேற்பு கண்டது. அவை அந்த இளம் பருவத்தில் அணிற்பல் பாவனையை எல்லாருக்கும்
தந்ததோ என்னவோ? இளமை, அதுவே அழகுதான். எதிராளியை எத்திச் செல்லுதல் என்பது கவுண்டமணியின்
வெற்றி ரகசியம் அல்லவா? இலக்கியக் கவுண்டமணிகள் வெற்றி உலா வருகிறாப் போலாச்சு.
இந்த ரகளைகள் இப்போது அநேகமாக அடங்கி விட்டன. அப்படித்தான்
நினைக்கிறேன். அப்படியான கதைக் களமே அமையாத பட்சம் இப்படி அடுத்தாளை நக்கல் அடிக்கிற
சோலி மனதில் தட்டுவது இல்லை. இது என் வளர்ச்சி அல்லது மாற்றம் என்று வைத்துக் கொள்ளலாம்.
அந்த வயதுக்கேற்ற எழுத்து இந்த வயதுக்கு தன்னைப் போல மாறிக் கொள்கிறதோ என்னவோ, இதில்
இன்னொரு விபரமும் குறிக்க இருக்கிறது. சுஜாதா தலைமையிலான மேற்படி எழுத்தாளர் கூட்டணி
இதைப் பிடிவாதமாக தக்கவைத்துக் கொள்ள முயல்கிறது. வாசகனுக்கு இது ஒரு வாசிப்பு நிலை
மாத்திரமே. இதை அடைந்து. ரசித்துவிட்டு அவன் தன் ருசியை உயர்த்திக் கொண்டு இவர்களைத்
தாண்டிப் போகக் கூடும்..
எனக்கு இந்த ஆபத்து நிகழக் கூடாது.
ஒரு காலத்தில் தமிழ்வாணனின் நிறைய நாவல்களை வாசித்திருக்கிறேன்.
தூய தமிழ்ப்பெயர்களாக அவர் தம் பாத்திரங்களுக்கு வைப்பார். அவரது இரண்டு மகன்களுக்கும்
ரவி, லெட்சுமணன் என்றுதான் பெயர் வைத்தார்... என இப்போது ஏன் நினைவு வருகிறது தெரியவில்லை.
(இன்னும் அடங்கல போலருக்கே. அதுல பாருங்கோ... இரவி, இலெட்சுமணன் என்றல்லவா எழுதப் பட
வேண்டும். எழுதுகிறார்களோ?) எளிய துப்பறியும் கதைகள். சங்கர்லால். துணிவே துணை. நாற்காலியில்
அமர்ந்தபடி மேசையில் காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓய்வெடுத்தல். பள்ளிக்கூட வயசு
வாசகர்களுக்கு அது வாசிக்க சுலபம். அதேபோல சாண்டில்யன். ஜெகசிற்பியன்... இப்படி ஒரு
வரிசை. காலப்போக்கில் எழுத்தில் ஒரு தீவிரத்தன்மை தேட ஆரம்பித்து விடுகிறது மனசு. ஸ்ட்ராங்
டிகாஷனில் கும்பகோணம் டிகிரி காப்பி தேவைப் படும் நாக்கு. அக்கால கட்டங்களில் வேறு
எழுத்தாளர்களை நோக்கி தேர்ந்த வாசகன் நகர்ந்து விடுகிறான். என்றாலும் இன்னொரு தலைமுறை
வரும். அது வந்து ‘இந்த’ மேற்படி எழுத்தாளர்களைப் புன்னகையுடன் கையில் எடுக்கும், திளைத்து
மகிழும்... என்பது உண்மையே.
சங்கீத ரசனையிலும் இப்படி பல பாடகர்களின் பல மட்டங்களை அநேகர்
உணர்ந்திருப்பீர்கள், உயர்ந்திருப்பீர்கள்!
நான் அப்படி சிமிழுக்குள் அடங்க மாட்டேன்... என என்னை வரையறுத்துக்
கொள்ள எனக்குத் தெரிந்திருந்தது. குறைந்த பட்சம் ஒரு கதைப்பாணியில் இருந்து அடுத்த
கதைப்பாணியை மாற்றி உருவாக்கிப் பார்க்கும் தீராத விளையாட்டு அல்லது கிறுக்கு எனக்கு
உண்டு. அது கதைக் கருவாக இருக்கலாம். வடிவமாக இருக்கலாம். நடையாக, உத்தியாக இருக்கலாம்.
சர்ரியலிசக் கதைகள் கூடவும் எழுதிப் பார்த்திருக்கிறேன். உருவக பாணியில் இருண்மை காட்டிய
கதைகள் முயன்றிருக்கிறேன். இவையெல்லாம் எழுதியபின் அந்தளவு சிறப்பாக வராது போக நேரலாம்...
ஆனாலும் முயற்சி முக்கியம் என்பது எனது துணிபு. பெர்க்மென், குரோசோவா, தார்க்கோவ்ஸ்கி
போன்றவர்கள் ஒரு படம் போல இன்னொரு படம் அமையாமல் மிக கவனமாகத் தங்களைப் புதுப்பித்துக்
கொள்கிறார்கள். யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது.
புத்தக வடிவில் கதைகளை அடுக்கிப் பார்ப்பது வாழ்வில் இன்னொரு
சுவாரஸ்யம். வாசகனுக்கு ஒரு விருந்து பரிமாறல் போல, எங்கெங்கே எந்தப் பதார்த்தம் வைக்க
வேண்டும் என்கிற கவனம் போல, அந்தப் பத்து பதினைந்து கதைகளை வரிசைப் படுத்துவது ஒரு
விஷயம் தான். ஒருசேர வாசிக்கையில் வாசகன் அடையும் உணர்ச்சி அலை என்ன? புத்தகத்தை மூடி
வைக்கையில் அவன் அடைகிற உணர்வுத்தளம் என்ன... என்றெல்லாம் யோசிப்பது தனி அனுபவம். அதேபோல
ஒரு கதைக்குத் தலைப்பு வைக்க எத்தனை மெனக்கிடுகிறோமோ அதே அளவு அந்த நூலின் தலைப்புக்கும்
நான் பாடுபட விரும்புகிறேன். அந்தத் தொகுப்பில் உள்ள எந்தக் கதையின் தலைப்புமாக அல்லாமல்
புத்தகத்துக்கு, இலக்கியம் என்கிற அடையாளங் காட்டும் பொதுத்தலைப்பு தருவதாக என் முதல்
சிறுகதைத் தொகுதியில் இருந்தே நான் முயற்சி செய்தேன். ‘அட்சரேகை தீர்க்கரேகை’ - இது
என் முதல் நூல். இந்தத் தலைப்பில் தொகுப்பில் கதை எதுவும் இல்லை. இந்த ரேகைகள், பூமியின்
மேல் நாமே கற்பனையாக இட்ட கோடுகள். என்றாலும் உண்மைகளை அறிய இந்தக் கற்பனைக் கோடுகள்
நமக்கு எவ்வளவு உதவி செய்கின்றன. என் கதைகளும் இப்படியே, இவை கற்பனையே, ஆனாலும் உண்மையை
இன்னும் துலக்கி இவை காட்ட வல்லவை... என்பது தலைப்பின் உட்கிடக்கை.
இன்றுவரை நான் இந்த என் பாணியைத் தொடர முயல்கிறேன். என் அநேகத்
தொகுப்புகள் இப்படி பொதுத்தலைப்பு சார்ந்தவையே. ஒரு துண்டு ஆகாயம், சராசரி இந்தியன்,
உயிரைச் சேமித்து வைக்கிறேன்... முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டபடி புதுவெள்ளம், என்ற
நூலுக்கு உள்ளே பொருளடக்கம் என்பதற்கு பதிலாக நீர்மட்டம் என்று போட்டு கதைகளின் வரிசையைத்
தலைகீழாக அடுக்கியதைச் சொன்னேன். அதேபோல சமீபத்திய ஒரு சிறுகதைத் தொகுதிக்கு, தானும்
அதுவாகப் பாவித்து, என தலைப்பு வைத்திருந்தேன். ஒரு சுய எள்ளல். ஒரு சிறுகதைக்கு வான்கோழிகளின்
ஆகாயம், என்று தலைப்பு வைத்தேன். அதே போல இது. தானும் அதுவாகப் பாவித்து - அதில் பொருளடக்கம்
என்பதற்கு பதில், பொல்லாச் சிறகை விரித்து, என்று குறிப்பிட்டேன். இப்படி வாசகரோடு
சிறு விளையாட்டு எனக்கு எப்பவுமே உவப்பானது. தலைப்பு வைப்பதில் எனது மொழிபெயர்ப்புச்
சிறுகதைத் தொகுப்புகளுக்கும் அவ்வண்ணமே பேர் சூட்டினேன். கனவுச் சந்தை. மேற்கு சாளரம்.
வேற்றூர் வானம். கடைசியாக, அயல்வெளி.
ஒரு தொடர்ந்த சிறுகதை யெழுத்துப் பயணத்தில் சில மைல்கல்கள்
நமக்கு அடையாளப் படுகின்றன. அப்படியான கௌரவம் எத்தனை ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும்
படைப்பாளனுக்கு அளித்து விடுகிறது. அவ்வளவில் என் முதல் புத்தகம் வெளியிட்ட கலைஞன்
பதிப்பகம் பெரிய அளவில் என் எழுத்துக்கு கௌரவம் செய்திருக்கிறது. இரண்டாவதாக, (அப்ப
முதலாவதாக, என்ன? அதை அடுத்துப் பகிர்வேன்.) என் ‘இல்லாததாய் இருக்கிறது’ சிறுகதைத்
தொகுப்பை அது மலேஷியாவில் வெளியிட்டது. மலாய் பல்கலைக் கழகத்தோடு இணைந்து மலேஷிய அரசின்
விருந்தினராக என்னை அழைத்தார்கள். நான்கு நாட்கள் ராஜ மாரியாதை. அதற்கு முன்பு, கலைஞன்
திரு மாசிலாமணி தமிழின் குரலாக அடையாளப்பட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளை மொத்தத் தொகுப்பாகத்
திரட்டி தனி நூலாக்க விருப்பம் கொண்டபோது, நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் அப்படி, மொத்தத்
திரட்டு வெளிவரக் கண்டார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் அது, அந்த நிகழ்ச்சி ஒரு மைல்கல்
அல்லவா? அதில் நானும் இடம் பிடித்தது, என் வாழ்வின் ஒரு மைல்கல் என நம்புகிறேன். இரு
தொகுதிகளாக, ‘எஸ்.சங்கரநாராயணன் கதைகள்’ என்று 2000 ஆம் ஆண்டில் பெருங் கதைத்திரட்டு
வெளிவந்தது. 1994 வரையில் வெளியான எனது சிறுகதைகளைத் தொகுத்து அந்த நூல் அமைந்தது.
பிறகான கதைகள் அந்த சமயத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என்ற அளவில் அந்தப் பதிப்பாளர்களை
சிரமப்படுத்த வேண்டாமாய் இருந்தது எனக்கு. கலைஞன் திரு மாசிலாமணி தந்த முதல் கௌரவம்
இது. மொத்தக் கதைத் திரட்டு. இரண்டாவது, அவர் மகன் திரு நந்தன் தந்தது. மலேஷியாவில்
நூல் வெளியீடு.
வாழ்நாள் சாதனையாளரான அன்னம் விருது, இலக்கிய வீதி சார்பில்
கிடைத்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். அதேபோல, மொழிபெயர்ப்பாளனாக வாழ்நாள் சாதனை விருதும்
தமிழக அரசே இந்த ஆண்டு எனக்கு வழ்ங்கியதும் எப்பெரும் பேறு...
இந்நாட்களில் பத்திரிகையின் சிறப்பு எழுத்தாள அந்தஸ்தும்
தந்தார்கள். தீபாவளி பொங்கல் என சிறப்பிதழ்களுக்குக் கதைகள் கேட்டார்கள். புதுப் பத்திரிகை,
முதல் இதழில் எழுதுங்கள் என்றார்கள். தனி முத்திரைக் கதைகள் என அடையாளமும் தந்தார்கள்.
தலைப்பு தந்து கதை எழுத வாய்ப்பு தந்தார்கள். ஓவியத்துக்கு, புகைப்படத்துக்கு எழுதச்
சொன்னார்கள். ‘புதிய பார்வை’ இதழில் வாசகர்களிடம் கதைக் கரு கேட்டு அதை எழுத்தாளர்களிடம்
தந்து கதை எழுதச் சொன்னபோது எனக்கும் ஒரு கதை எழுத வாய்ப்பு தரப்பட்டது. ‘மடிப்பித்து’
என ஒரு கதை அப்படி அமைந்தது.
நானும் அப்போது தினமணி கதிர் ஆசிரியராக இருந்த (கணையாழி)
கஸ்தூரிரங்கனுமாக, எட்டு தலைப்புகள் நான் தர, சிறுகதைப் போட்டி வைத்தோம். இன்று வெள்ளி
நாளை புதன், நான் அவனில்லை அவன்தான் நான், ஒரு மயானத்தின் மரணம், நடுப்பகலில் நட்சத்திரம்...
இப்படி எட்டு தலைப்புகள். நடுப்பகலில் நட்சத்திரம், என்பதை ஒருவர் சினிமா நடிகரின்
கதையாகச் சொன்னார். நான் அவனில்லை அவன்தான் நான் - என்பதை, ஒருவர் தூரத்தில் இருந்து
அடையாளங் காட்டுவதாகவும் மற்றவர் தவறாகப் புரிந்து கொள்வதாகவும் நியாயப் படுத்தினார்.
இன்று வெள்ளி நாளை புதன், என்ற தலைப்பை ஒருவர் இன்னும் அழகாகப் பயன்படுத்தினார். புதன்கிழமை
பள்ளி ஆசிரியர் ஒருவர் இறந்து விடுகிறார். அன்று பள்ளி விடுமுறை விட்டு விடுகிறார்கள்.
சனிக்கிழமை அந்தப் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறையாய் இருந்ததை மாற்றி, புதன்கிழமைப்
பாடத்திட்டம் என்று அறிவிக்கிறார்கள்!... எப்படி யெல்லாம் சிந்திக்கிறார்கள் நம் மக்கள்!
மேற்சொன்னவை தவிர, பத்திரிகைகளில் எனக்கு முதல் வரி, கடைசி
வரி இரண்டும் தந்து கதை கேட்டார்கள். புதிய ஆத்திசூடி களைகளில், சூரரைப் போற்று, என
எழுதித் தந்தேன். ‘காட்டு மனிதர்களும் நாட்டு மிருகங்களும்’ என அது வீரப்பனின் சாயல்
கொண்ட கதை. பத்து பன்னிரெண்டு எழுத்தாளர்களாக ஆளுக்கு ஒரு வாரம் என தொடர்கதை எழுதினோம்...
நட்சத்திர கௌரவத்துடன் என்னைப் பயன்படுத்திக் கொண்ட அவர்கள் அனைவருக்கும் நன்றி. இறைத்த
கிணறு ஊறும். வாய்ப்புகள் என்னை வளர்த்தெடுத்தன என்பதில் சந்தேகம் இல்லை. எம்.எஸ்.வி.யோ,
இளையராஜாவோ இன்றைய உச்சத்தை எட்டியதற்கு முதல் காரணம் அவர்களுக்கு அமைந்த வாய்ப்புகள்.
அவற்றை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். நானும் அதில் கவனம் செலுத்தினேன்.
கதை கேட்ட மாத்திரத்தில் என்னுள் பொங்கும் உற்சாகம் வார்த்தைகளுக்கு அப்பாற் பட்டது.
2
முதல் இரண்டு தொகுதிகள் - மொத்தக் கதைகள் என வெளிவந்த நிலையில்
இதன் அடுத்த கட்டமாக எனக்கு ஒரு யோசனை வந்தது. இதுவரை உலகில் எந்த எழுத்தாளனுமே யோசிக்காத
அளவில் புதிதாய் ஒரு காரியம் செய்ய விரும்பினேன். ஜேம்ஸ் ஜாய்ஸ் தமது ஊரான டப்ளின்
நகரைச் சுற்றியே நடப்பதாக கதைகள் எழுதி ‘டப்ளினர்ஸ்’ என தொகுத்திருந்தார். அதேபோல ஷெர்வுட்
ஆன்டர்சன், ஒரே ஊர் அடையாளத்துடன் கதைகள் எழுதி ஒரே தொகுப்பில் சேர்த்திருக்கிறார்...
என்றாலும் ஒரு குறிப்பிட்ட சூழலில், அல்லது தளத்தில் இயங்குகிறாப் போல ஒரே எழுத்தாளரின்
சிறுகதைகள், தனி நூல் என அமையப் பெறவே இல்லை. இதுவரை உலக அளவில் அப்படி முயற்சிகள்
இல்லை என்பது ஆச்சர்யமே.
நான் கம்யூனிச சித்தாந்தங்கள் சார்ந்து, அதைத் தூக்கிப் பிடித்து
கதைகள் தருபவன் அல்ல. என்ற அளவில்... அரசியல் சார்ந்து நான் எழுதிய கதைகளை ஒருசேர அடையாளப்
படுத்தினால் என்ன என்பது முதல் யோசனையாய் இருந்தது எனக்கு. அப்போது இணையத்தில் ஈ-புத்தகங்கள்
வர ஆரம்பித்த காலகட்டம். நிலாச்சாரல் என்ற இணைய இதழ் நடத்தும் திருமதி நிலா என்னிடம்
முதல் ஈ-புத்தகம் கேட்டபோது அப்படியொரு முயற்சியை மேற்கொண்டேன். அரசியல் சூழ்ந்து நான்
எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘நரஸ்துதி காலம்’ என்று அளித்தேன். அவர் வெளியிட்ட புத்தகங்களிலேயே
அதிகம் விற்பனையான புத்தகம் இதுதான், என அவர் பாராட்டியபோது மகிழ்ச்சியாய் இருந்தது.
அதன்பிறகு கார்கில் போர் வந்த காலகட்டத்தில், எல்லாமே யுத்தம்
சார்ந்த கதைகளாக எழுதிச் சேர்த்த தொகுதி ‘யுத்தம்.’ மறு பதிப்பாக அது ‘இரத்த ஆறு’ எனவும்
வெளியானது. யுத்தம் சார்ந்த கதைகளின் தொகுதி, ஒரே எழுத்தாளருடையது இதுவரை வந்தது இல்லை,
தமிழிலும், உலக அளவிலும். ஓய்வு பெற்ற ஒரு ராணுவ லெப்டினன்ட் நூலை வெளியிட, இன்னொரு
ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் ஒரு ஆகஸ்டு 15 நாளில் பெற்றுக் கொண்டார். ஒருவர் போர்க்கால
நடவடிக்கைகள் பற்றி எடுத்துச் சொன்னது எல்லாருக்குமே புது அனுபவமாக இருந்தது. அடுத்த
அதிகாரி புத்தகத்துக் கதைகளைப் பற்றிப் பேசினார். திரட்டாமலேயே நிறையப் பேர் வந்து
கலந்து கொண்ட கூட்டம் அது.
ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அமையும், அதே சமயம் அந்த
வட்டத்தை நுணுகி ஆராயும் போக்குள்ள கதைகள் என இப்படிக் கதைகளைத் தொகுக்க எனக்கு ஆர்வம்
அதிகம் ஆகிவிட்டது. இதில் வாசகரோ, மற்றவரோ யூகிக்க எளிமையான தொகுதிகள், முற்றிலும்
பெண்களே முன்னால் வரக்கூடிய கதைகள், செக்ஸ் சார்ந்த கதைகள்... என நான் தேர்வு செய்ய
விரும்பவில்லை. அந்தத் தொகுப்பு சார்ந்த கற்பனையே புத்தகத்தைக் கையில் எடுக்கிற ஆர்வத்தை,
புன்னகையைத் தரும் அளவில் புதுமையாக, தனித்தன்மையுடன், யாரும் எதிர்பாராத அளவில் அமைய
வேண்டும்... என நினைத்தேன்.
பிறந்து ஆறு ஏழு மாதங்களே ஆன குழந்தைகள் பற்றிய என் சிறுகதைகளின்
தொகுப்பு அடுத்ததாக நான் திரட்டினேன். இருவர் எழுதிய கவிதை - என்பது பெயர். அந்தக்
குழந்தைகள் ஒரு வார்த்தை கூட கதைகளில் பேசாது. என்றாலும் கதைகள் பூராவும் அவற்றைச்
சுற்றி அமைந்தவை. அதேபோல முதுமையின் கூறுகளைப் பேசும், பல்வேறு கோணங்களில் முதுமையை
விளக்கும் கதைகளாக ‘இரண்டாயிரம் காலத்துப் பயிர்’ வெளியிட்டேன்.
நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம், என பஞ்ச பூதங்களைப் பற்றிய
என் கதைகள் ‘பிரபஞ்ச பூதங்கள்.’ அதே தளத்தில் லா.ச.ரா, சுஜாதா ஆகியோர் செயல் பட்டிருக்கிறார்கள்.
என்றாலும் அந்த உத்தியின் சவால் எனக்குப் பிடித்தது.
பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த அன்னையின் பால் ஈர்க்கப்பட்டு
முழுக்க ஆன்மிகம் சார்ந்த கதைகளாக ‘பெண்கொற்றக்குடை.’
இரவை மையப்படுத்தி அமைந்த எனது கதைகள், ‘காலம் விரித்த குடை.’
பிற்பாடு ‘இரவு’ என்றே ஜெயமோகன் ஒரு தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். எனது இந்த முயற்சிகளைப்
பார்த்து ஒன்றிரண்டு இதேமாதிரியான தொகுதிகளை மதுமிதா ராஜா, சந்தியா பதிப்பகத்துக்காகத்
தொகுத்தார். அதில் மரம் தொகுப்பிலும், இரவு தொகுப்பிலும் நான் பங்களித்தேன். எழுத்தாளர்களே
பாத்திரமாக அமைந்த கதைகளின் தொகுதி ‘விரல் நர்த்தனம்.’ மன நலம் பிறழ்ந்த பாத்திரங்களாக
ஒரே தொகுதியில் ‘நாணல் பைத்தியம்.’ நம்மைப் புரிந்து கொள்ளாத அவர்களைப் புரிந்து கொள்வோம்.
அதேபோல, மனிதனோடு மிருகங்களைப் பேசும் தொகுதி ‘அஃறிணை.’
எனது மூத்த மகனின் திருமண சந்தர்ப்பத்தில் கல்யாணம் சார்ந்து,
காதல் அல்லது பெண் பார்த்தல், கல்யாணம் பேசுதல், திருமண வைபவங்கள், திருமணத்துக்குப்
பின்னான மாற்றங்கள்... எனக் கதைகளை அடுக்கி ஒரு தொகுப்பு ‘கைத்தலம் பற்ற’ என்று வெளியிட்டேன்.
கல்யாணப் பரிசு திரைப்படத்தில் எழுத்தாளராக நடித்த தங்கவேலுவுக்கு சமர்ப்பணம் - இதுவே
ஒரு கல்யாணத்தின் பரிசு தானே?
முற்றிலும் அருவம் சார்ந்த கதைகளை முன்னிறுத்தி, கதையில்
எந்தப் பாத்திரத்தையும் வலியுறுத்தாமல் அருவத்தை விவரப்படுத்தும் கதைகளாக ‘இல்லாததாய்
இருக்கிறது’ வெளியானது. அதன் முன்னீடாக இப்படிக் குறிப்பிட்டிருப்பேன் - இல்லாததாய்
இருக்கிறது - வானம், தெய்வம், நிவேதனம், மன்மதன், கலை, காலம், இருள், ஆவி, திசை, வெற்றிடம்,
பூஜ்யம், எல்லை, விதி, மறுபிறவி, உயிர், சந்ததி, துறவு, சுயம், மனம், ஆத்மா, அறிவு,
மென்பொருள், கானல், கனவு, பிம்பம் . . . இவற்றுடன், இந்தக் கதைகளில் நான்!
இதே பாணியில், எனது சமீபத்திய சிறுகதைத் திரட்டு, ‘நன்றி
ஓ ஹென்றி.’ பளிச்சென்ற முடிவு கொண்ட கதைகள்!
3
எனது கதைகள் என்று இப்படித் திரட்டுவது தவிர, பொதுவாக நான்
சிறுகதைத் திரட்டுகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். எனது முதல் சிறுகதைத் திரட்டு ‘ஆகாயப்பந்தல்’
தொடங்கி ஏழெட்டு திரட்டுகள் தந்திருக்கிறேன். நான் ரசித்த கதைகளின் அணிவகுப்பு அவை.
மேற்சொன்ன எனது ‘ஒற்றைகவனக் கதைகள்,’ என்ற அளவில் சில திரட்டுகளும் கொண்டு வந்தேன்.
அவ்வகையில் முதலாவது, ஜுகல்பந்தி. அன்றுமுதல் இன்றுவரை சங்கீதம் சார்ந்து எழுத்தாளர்கள்
எப்படியெல்லாம் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள், என்கிற திரட்டு. வடக்கு வாசல்
என்கிற தில்லி இதழ் சார்பில் யதார்த்தா பெண்ணேஸ்வரன் அதை நூலாகக் கொண்டு வந்தார். தில்லி
தமிழ்ச் சங்கத்தில் நூலை அப்போதைய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் வெளியிட முதல் பிரதியை
சுதா ரகுநாதன் பெற்றார்.
முதல் பக்கத்தில் எனது அறிமுகம், இரண்டாம் தமிழுக்கு முதல்
தமிழின் வணக்கம்!
கவனம் மிக்கவர் சார்பில் சங்கீதக் கதைகளைத் தொகுத்த பின்,
உணவு பற்றிய கதைகள், எல்லாருக்குமான விஷயம் அல்லவா உணவு, இரு தொகுதிகளாக, அமிர்தம்,
எனத் தந்தேன். அதன்பின் வந்தது ‘வேலைசூழுலகு.’ வீடு போலவே அலுவலகமும் மிக முக்கியமான
அளவில் மனித வாழ்வில் பங்கு வகிப்பதை எடுத்துக் காட்டும், அலுவலகச் சூழல் கதைகள். இந்த
வரிசையில் ‘தருணம்’ என்கிற திரட்டு போன ஆண்டு வெளியானது. வாழ்வில் சில தருணங்கள் திடீரென
சம்பவித்து பெரிய பாதிப்பை நிகழ்த்தி விட்டு ஓய்ந்து விடுகின்றன. என்றாலும் அந்தத்
தருணங்களுக்கு முன், பின் என்று வாழ்க்கை அடையாளப் படும் அளவுக்கு அவை முக்கிய பாதிப்பைத்
தந்து போகின்றன... அப்படிப்பட்ட தருணங்களின் தொகுப்பான சிறுகதைகளைப் பல்வேறு எழுத்தாளர்கள்
பதிவு செய்திருப்பதை எடுத்துக் காட்டும் திரட்டு அது.
காலம் அனுமதித்தால் மேலும் திரட்டுகள் கொண்டு வருவேன். மனதில்
இரண்டு மூன்று யோசனைகள். அவற்றின் பின்புலம் பற்றி இப்போது வெளியிட வேண்டாம். ஆர்வமுள்ளவர்கள்
காத்திருப்பதை விரும்புவார்கள். அவர்களை நான் மதிக்கிறேன். வேறு யாரும் முயற்சி செய்யாத
திரட்டுகளாக அவை அமைய வேண்டும்... என்கிற அளவில் சில ரகசியங்கள் நல்லது தானே?
•
(யானையின் வண்ணப்படம் -
அடுத்த சனியோடு நிறைவு காண்கிறது.)
storysankar@gmail.com
91 9789987842 - 91
9445016842