week 36
*
தோற்றுப்போன
இடங்கள்
எஸ்.சங்கரநாராயணன்
தோல்வி என்பது
பயப்படும் விஷயம் அல்ல. தோல்வி இல்லாமல் எந்த வாழ்க்கையும்... இருக்கிறதா என்ன? வெற்றிகள்
மாத்திரமே நமக்கு சாத்தியம் என்று ஆக முடியாது. அத்தோடு, தொடர்ந்த வெற்றிகள் அலுப்பு
தட்டிவிடும். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தோல்வியைப் போல, உன்னை உனக்கு
அடையாளம் காட்டும் வல்லமை வெற்றிக்கு இல்லை. வெற்றி ஒரு போதை. மனதின் சலனம். தோற்பது
மனம் சலனப்பட அல்ல, சமனப்பட அது ஒரு பயிற்சி. தோல்வியில் அவநம்பிக்கைப் பட, அதைரியப்
பட ஏதும் இல்லை. வெற்றி அல்ல, தோல்வியே உனக்குப் பாடங்களை, புதிய அனுபவங்களைக் கற்றுத்தர
வல்லது.
ஒருவன் வெற்றி பெற காரணங்கள் பலவாக இருக்கலாம். வாய்ப்பு,
சூழல் என்கிற புறக் காரணிகள் உட்பட. அவன் அறியாத காரணிகள் இருக்கக் கூடும். வெற்றி
அதன் விளைவு. அதன் மூல காரணத்தை ஒருவேளை அவன் அறிந்திருக்கவே மாட்டான். சில சமயம் அவன்
நம்புகிற காரணம் அல்லாமல், வேறு ஒரு காரணத்தினால் அந்த வெற்றி சம்பவித்திருக்க, சாத்தியப்
பட்டிருக்கக் கூடும். ஆனால் தோல்வி அந்த நிகழ்வின் காரணங்களை முழுசாக உனக்குக் காட்டித்தர
வல்லது. வெற்றி பெற்றவனை விட தோல்வி யுற்றவன், அந்த நிகழ்வை நன்றாகப் புரிந்து கொள்கிறான்,
என்றே தோன்றுகிறது.
தார்க்கோவ்ஸ்கி, குரோசோவா திரைப்படங்களைப் பார்த்தபோது இங்க்மர்
பெர்க்மென் “அடாடா இதையெல்லாம் திரையில் சொல்ல முடியாது என்றல்லவா நினைத்திருந்தேன்!”
என வியந்தார். தோல்வி வியப்புகளைத் தர வல்லதாய் இருக்கிறது. நம்மால் முடியாது என்று
ஒரு செயலைச் சொல்லுமுன் அதைச் செய்து முடித்துக் காட்டுகிற நபர்கள் இருக்கிறார்கள்,
என நாம் பார்க்கிற போது ஏற்படுவது வியப்பே.
ஆமாம். பெர்க்மென்னைப் போல திரைப்படம் தர, மற்றர்களால் முடியாது.
அவரவர் பாணி அவரவர் அடையாளம், அதுதான் கலையின் விசித்திரம். வெற்றிகளை அது கணக்கில்
கொள்கிறது. தோல்வி அங்கே பேசப் படுவதே இல்லை. உண்மையில், தோல்விகள் அங்கே சகஜமாகவும்,
வெற்றிகள் அங்கே அடையாளமாகவும் ஆகிப் போகின்றன. பல தோல்விகரமான படைப்புகளை அந்தப் படைப்பாளன்
தன்னளவிலேயே அங்கிகரிக்கப் போவது இல்லை. அவை வெளியே தெரியப் போவதும் இல்லை.
கலையின் இன்னொரு சிறப்பு அம்சம், கலையின் வெற்றி என்பது மானுடத்தின்
வெற்றி. அது தனி மனித வெற்றி அல்ல. ஆக மானுடம் மேன்மையுற கலைஞர்கள், அவரவர் அறிந்த
அளவில், அவரவர் பாணியில், அது பிறர் அறியாததாக இருக்கிறது, பங்களிக்கிறார்கள். இதில்
வெற்றி தோல்வி கணக்கெடுப்பு, அதனாலான அவநம்பிக்கை உன்னை ஒடுக்கிக் கொள்ளுகிற எளிய நிலையே
அல்லவா?
கலை மாத்திரம் அல்ல. அறிவியல்? அறிவியல் கண்டுபிடிப்புகளில்
வெற்றிக் கணக்கே நமக்கு அடையாளப் படுகிறது. எத்தனையோ சோதனைகள் வெற்றிக்காகக் காத்திருக்கின்றன.
அவற்றில் எத்தனையோ தோல்விமுகம் காட்டியும் இருக்கும். விஞ்ஞானத்தைப் பொறுத்த அளவில்
என்ன சொல்கிறார்கள்? நூறு ஆய்வுகள் நடத்தி, ஆனால் நான் வேண்டிய அந்த முடிவுக்கான நிரூபணத்தை
எட்டவில்லை. இது என் தோல்வி. விஞ்ஞானத்தின் தோல்வி அல்ல. காரணம் எனக்குப் பின் இதோ
ஆய்வை மேற்கொள்ள வருகிறவன் இந்த நூறு ஆய்வுகளைச் செய்துபார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
அவன் நூற்றி ஒண்ணில் இருந்து துவங்கி விடலாம், ஆக அவனுக்கு இந்த எனது ஆய்வுகள் பயன்படுகின்றன
அல்லவா?... என்பார்கள்.
விஞ்ஞானம் என்று இல்லை. வாழ்வில் எந்த அனுபவமும் வீண் இல்லை.
வெற்றிகள் ஒரு காரியத்தின் விளைவு. தோல்விகள் அவற்றின் பாடங்கள். நான் முன்னேறுகிறேன்.
அல்லது கற்றுக் கொள்கிறேன். இந்த இடையறாப் பயணம், அதுவே வாழ்க்கை.
தோல்வியில் தோல்வியை உணராதவர் உண்டு. பெருங் கலைஞர்கள் அதை
உணர்ந்துகொண்டு விடுவார்கள். அதை அவர்கள் குறிப்பிடத் தயக்கம் காட்டுவது இல்லை. வாழ்க்கை
ஒரு பயிற்சிக் களம். தோல்விகள், வெற்றிகள் என இரு கரைகள் அதற்கு. ஒதுங்கலாம் நீங்கள்.
அப்படியே வெற்றி தோல்வி பிரக்ஞை இன்றி நீந்திப் போகவும் செய்யலாம். ஒன்றைக் கடந்து
மற்றதை அடைதல், அது ஓர் அனுபவம். அங்கே வெற்றி தோல்வி பாவனைகளுக்கு அப்பால் இருக்கிறது
வாழ்க்கை.
வாழ்க்கை வெற்றிகள் அல்ல. தோல்விகளும் அல்ல. வாழ்க்கை ஓர்
அனுபவம்.
கம்பராமாயணம் எழுதிய கம்பன், ராமன் புகழ் பாடத் தலைப்பட்டவன்,
இப்படிக் கூறுகிறான். ராமன் புகழ் பாட நான் ஆசைப்படுவது ஒரு பூனை பாற்கடலை நக்கிக்
குடித்துவிட ஆசைப்படுவது போல, என முன்னெடுப்பு தருகிறான்.
ஓசை பெற்று
உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும்
நக்குபு புக்கென
ஆசைபற்றி
அறையலுற்றேன் மற்றுஇக்
காசுஇல்
கொற்றத்து இராமன் கதைஅரோ
(•பூசை என்பது பூனை.)
சில முயற்சிகள், முயற்சி அளவிலேயே வெற்றிவாசனை கொண்டவை. தோல்வி
அங்கே பொருட்டே அல்ல. வள்ளுவர் சொல்வார்.
கான முயலெய்த
அம்பினில் யானை
பிழைத்த
வேலேந்தல் இனிது
இதில் தோல்வி என்பதன் கௌரவத்தை உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா?
நான் வணங்கி மகிழும் ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்.
Happiness is found along the path and not at the destination.
வெற்றி தோல்வி கணக்கே தேவை இல்லை. இன்பம் என்பது ஒரு லட்சியத்தின்
நிறைவு அல்ல. அந்த லட்சியத்தை நோக்கிய பயணமே இன்பம், என்கிறார் ஸ்ரீ அன்னை.
2
எழுத்து பல புதிர்களை விடுவிக்க வல்லதாய் இருக்கிறது. முதலில்
அந்த எழுத்துக்காரன் வாழ்வின் புதிர்களைக் கண்டு, அதைப் பற்றி சிந்தித்து அதன் சிக்கல்களை
ஆராய்ந்து அதை விடுவிக்க தன்னளவில் ஒரு முடிவை அதற்குத் தந்து தன் படைப்பை முன் வைக்கிறான்.
இதில் ஆச்சர்யப் படத்தக்க விஷயம் என்னவென்றால் அவன் தனது ஆழ்மனதின் குரலை அங்கே காலாவட்டத்தில்
கண்டு கொள்கிறான். மனது மிகுந்த தனித்தன்மை கொண்டது. மனதை அடைய உந்தப்படுகிற ஐம்புலன்கள்,
அவையும் மிகுந்த தனித்தன்மை கொண்டவை தானே. நான் பார்த்த விஷயத்தை நான் பார்க்கிற அளவில்
நீ பார்க்கவே முடியாது. ஒரு மரம். நான் மரத்தைப் பார்த்தபோது, நீயும் பார்க்கிறாய்.
நீ அதில் அமர்ந்திருக்கும் பறவையைப் பார்த்திருக்கக் கூடும். காட்சி ஒன்றே. மனதின்
தேர்வு வேறாக ஆகிப் போகிறது.
ஒரு பயிற்சியில் கலைஞனுக்கு தான் பார்க்கிற விஷயத்தை எப்படிப்
பார்க்க வேண்டும் என்கிற கவனம், நுண்ணுணர்வு தட்டுகிறது, எனலாம். காலந்தோறும் அதை அவன்
வளர்த்தெடுத்துக் கொள்கிறான் எனலாம். மனசின் ஓயாத அலையடிப்பு அது. உறங்காக் கடல் அது.
அதன் அலைகளை நாம் அறியமுடியா விட்டாலும். ஒரு கட்டத்தில் பிரச்னை என ஏதும் வந்தால்,
அல்லது ஒரு விளங்கா நிலை என்று வந்தால், அவனால் தன்னை சமூகத்தில் இருந்து ஒதுக்கிக்
கொண்டு, தானும் தன் மனதுமான ஒரு உள்ப் பயணத்தில் அந்தச் சூழலை ஆராயும் போது, ஆச்சர்யமான
விடைகள் அவனுக்குக் கிடைக்கின்றன. மனதிடம் பதில் இருக்கிறது எப்போதும். அதைக் கண்டுபிடிக்கத்
தெரியவேண்டும். நம் பலத்தை பலவீனத்தை அது அறிந்து வைத்திருக்கிறது. அதனோடு உரையாடினால்,
அது பேச நேரமும் மௌனமும் ஒதுக்கிக் கொடுத்தால், அது பதில் தரத் தயாராக உள்ளது.
மௌனமான உரையாடல் அது. மனம் அதை நிகழ்த்த வல்லது.
கலைஞர்கள் தங்கள் மனத்தை ஒருபோதும் மீறி இயங்க முடியாதவர்கள்
என்று தோன்றுகிறது. கலை அப்படி அவர்களைக் கனியவைத்து விடுகிறது. தன் நெஞ்சறிவது பொய்யற்க.
மனசாட்சி. இது கலையின் வெற்றி. கலை தன்னை அண்டியவர்களை மேலும் மென்மையாக்குகிறது. செழுமையாக்குகிறது.
கலைஞனுக்கு வறுமை இல்லை. ஏமாற்றங்கள் இல்லை. தோல்விகளும் கிடையாது.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, என் இதைத்தான் சொல்கிறது
கீதை.
இங்கே கூற வந்தது என்னவென்றால், ஒரு படைப்பாளி, எழுத்தாளன்
முதலில் கதையில் ஒரு மனிதனை, சம்பவத்தை வைத்து எழுத ஆரம்பிக்கிறான். காலப் போக்கில்
தன் பயிற்சியில் அவன் மனிதர்களைத் தன் எழுத்தின் மூலம் உற்றுப் பார்க்க வாய்க்கிறது
அவனுக்கு. நிறைய எழுத்தாளர்கள், இந்தப் படைப்பு தன்னைத் தானே எழுதிக் கொண்டது, என்கிறார்கள்.
சிலர், இந்தக் கதை தானே இங்கே முடிந்து விட்டது, என்கிறார்கள். மனதின் குரல் அது.
ஆகவே ஒரு படைப்பை உற்று நோக்கும்போது அதன் படைப்பாளியின்
முகம் அடையாளம் தெரியவே செய்யும். அதை அவன் மறைத்துக் கொள்ள முயலலாம். மறைத்துக் கொள்ள
முடியாது. அது ஒரு விளையாட்டு. வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான விளையாட்டு அது. சிறந்த
வாசகர்களிடம் எழுத்தாளர்கள் இதில், இந்த விளையாட்டில் தோற்றுப் போகிறார்கள். நான் தோற்க
விரும்புகிறேன். அப்படி வாசகர்களை இழக்க நான் தயார் இல்லை.
3
எழுத்தாளன் எப்போது தோற்றுப் போகிறான்?
கதை என்கிற கற்பனை ஒன்று சொல்லி, எழுத்தாளன் எழுத ஆரம்பிக்கிறான்.
அந்தப் பாதை அத்தனை சரியில்லை, என அவன் மனது திடீரென்று அந்த எழுத்துப் பாதையில் வழி
மறித்து, அவனைத் திசை திருப்பி விடும். எழுத்தாளனின் அந்த உள்க்குரல் அதுவரை அவனே அறியாததாயும்
இருக்கலாம். வியப்பான அந்தக் கணம், எழுத்தாளன் தன்னையே புதிதாய்க் காண்கிற கணம். அது
புதிய கணம் அல்ல. அவனுக்கு அது அறிமுகமாகிற அந்தக் கணம், அது புதியது. இந்த உள்க்குரலை
கேட்கவும், கவனிக்கவும் ஆரம்பிப்பது மிகச் சிறப்பான அவனது வாழ்வனுபவம் ஆகும்.
எனது முதல் நாவல், அச்சில் வந்த எனது இரண்டாவது நாவல் ‘மானுட
சங்கமம்.’ அதன் இறுதிப் பகுதியில், ஒரு ரெண்டுங் கெட்டான் பாத்திரம் அக்னி, இடம் பெறும்.
அவனை உடல்ரீதியாகப் பயன்படுத்திக் கொண்ட பிரமிளா பாத்திரம். பிரமிளாவுக்குக் கல்யாணம்.
அந்தக் கல்யாண மண்டபத்தில் முகூர்த்தம் நெருங்க நெருங்க, அந்த முட்டாள் அக்னிக்கும்
உள்ளே படபடப்பும், பொறுக்க முடியாத துயரமும், ஏமாற்றப்பட்ட ஆத்திரமும் ஏற்படும். இந்தப்
பகுதிகள் பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.
எனது ஆரம்ப கால எழுத்து அல்லவா அது? அக்னி மாப்பிள்ளையிடம்
போய் ‘அந்தப பெண் பிரமிளா, உங்களுக்கு வேண்டாம்’ என்று உடைத்து விடுவான். இதை வாசித்துவிட்டு
பதிப்பாளர் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி, ‘ஐயோ கல்யாணத்தை நிறுத்திட்டியே?’ என்றார்
என்னிடம். எத்தனை நல்ல மனிதர். ஒற்றைத்தன்மையுடன், ஒரு பாத்திரத்தை மாத்திரமே கவனங்
கொள்ளும் அந்தக் கால என் எழுத்தில் இது, அவரது பார்வை எனக்குப் புது அனுபவம். முக்கியமான
அனுபவம்.
பிற்காலத்தில் திரைப்படங்களைக் கலைக் கண்ணோட்டத்துடன் பார்க்கிற
பயிற்சியில், காட்சியில் வரும் அத்தனை பாத்திரங்களோடும், வாழ்க்கையை ஒரு படைப்பில்
காட்ட வேண்டும், எனகிற புரிதல் எனக்குக் கிடைத்தது. மனதை ஒரு ‘பெறும் நிலை’யில் வைத்திருந்தாலே
போதும். உத்தி சார்ந்த கவனம் கூட அங்கே இரண்டாம் பட்சம் தான். அந்தப் பெரு நிலை, அதை
நோக்கிய உத்திகளுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது அல்லவா?
மனித உணர்வுகளில், பிறர் உயிரைத் தன்னுயிர் போல் நேசி, என்பது
எப்பெரும் குணம். நான் ஒரு சிறுகதை எழுதினேன். அது ஆனந்த விகடனில் வேறொரு தலைப்பில்
வெளியானது. நான் வைத்த தலைப்பு ‘சாகசம்.’ ஒரு சர்க்கஸ் கோமாளியின் கதை. வீட்டின் நெருக்கடிகளில்
வீட்டைவிட்டு ஓடிப் போன ஒருவன். அலைந்து திரிந்து ஒரு சர்க்கசில் கோமாளியாக வேலையில்
அமர்கிறான். அதிக சோகம் சுமப்பவர்கள், ஏற்கனவே அவர்கள் மற்றவர் பார்வையில் கோமாளிகள்
தான், பாவம்.
ஊர் ஊராய் டேரா போடும் சர்க்கஸ். பல வருடங்கள் கழித்து அந்த
சர்க்கஸ், தனது ஊருக்குக் கிட்டத்து ஊரில் டேரா போட வருகிறது. கோமாளி பரபரப்பாகிறான்.
அவனுக்கு தன் ஊரை, அம்மா அப்பாவை யெல்லாம் பார்க்கத் துடிப்பாகிறது. அவன் தன் ஊருக்கு
வருகிறான். அம்மா அவனைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள். அவன் அம்மாவை தன் சர்க்கஸ்
பார்க்க அழைத்துப் போகிறான். அவனது கோமாளித்தனமான சேஷ்டைகளைப் பார்த்து ஊரே சிரித்துக்
குலுங்கிக் கொண்டாடுகிறது.
‘பார்’ விளையாட்டு நடக்கிறது. அது முடிந்து அதேபோல தானும்
‘பார்’ விளையாட ஆசைப்பட்டு திணறுவதாக கோமாளி நடிக்க வேண்டும். பயந்து நடுங்குகிற மாதிரி
நடிக்க கூட்டம் சிரிக்கிறது. ஒரு தாவு தாவும்போது கால் பிசகுகிற மாதிரி அவன் நடிக்க,
“ஐயோ என் பிள்ளைக்கு என்னாச்சி?” என கத்தியபடியே அம்மா அரங்கத்துக்குள் ஓடுகிறாள்,
என்று முடியும் கதை.
நன்றி கலைஞன் மாசிலாமணி.
திரைப்படங்களில் நடிகர் செந்திலை ஆகத் தகாத வார்த்தைகளால்
கவுண்டமணி வசை மாரி பொழியும் போது, செந்திலின் அம்மாவுக்கு எப்படி யிருக்கும், என்று
யோசித்தபோது விளைந்த கதை இது.
4
ஒரு பதிவில் அ.மாதவையாவின் ஒரு கதையில் அவரது மனம் விழித்த
கணத்தை எடுத்துக் காட்ட வாய்த்தது. கல்யாணத்தில் மணப்பெண்ணைப் பிடிக்காத மணமகன். அவன்
பார்வையில் என்று சொல்லி, அவளை அவலட்சணம் என்று வர்ணிக்கிறார். ஆனால் அவர் மனம், மாதவையாவின்
மனம் புறத் தோற்றத்தை வைத்து ஒருவரை வசை பாடுவதும், கேலி யாடுவதும் ஒப்பவில்லை. அடுத்த
பத்தியில் அவர் இப்படி எழுதுகிறார். “பாவம் உன் மேல் என்ன பிழை?” என்று மணமகன் மணமகளைப்
பார்த்துப் பேசுகிறான். இது மாதவையா மானசிகமாக மன்னிப்பு கேட்ட இடம் தானே அல்லவா?
எனக்கு சமீபத்தில் இப்படியோர் அனுபவம் நிகழ்ந்தது. ‘இல் அறம்’
என என் ஒரு சிறுகதை. குங்குமம் இதழில் இரு வாரங்களாக வெளியான கதை. அதில் திருமணம் வேண்டாம்
என்று தன்னில் சுருங்கிப் போன ஒருவனுக்கு வம்படியாக ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள்.
அவளை முகத்தோடு முகம் பார்க்கவே, பேசவே, பழகவே அவன் வெறுத்து ஒதுக்குகிறான், என்பது
கதை.
இதில் அவள் நிலைப்பாடு என்ன, என நான் கதையில் இப்படி எழுதிச்
செல்ல நேர்ந்தது.
“பெரிய லண்டன்
மாப்பிள்ளையா வரப் போகிறான்? அவளும் எதிர்பார்க்கவில்லை தான். அட வாரம் ஒரு வெள்ளிக்கிழமையில்
ஒரு முழம் பூ. கோவிலுக்கு அழைத்துப் போக என்ன செலவு இருக்கும்? ஒரு எஃப் எம் ரேடியோ
இருந்தால் நல்லது. விடிய விடிய அதில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தனிமை தெரியாது.
பெண் பார்க்க வந்திருந்தான் அவன். அவனை நிமிர்ந்து பார்த்தாள். பெரும் ஆர்வம் ஆசை கனவு…
அதெல்லாம் இல்லை. ஒரு அளவெடுக்கிற பார்வை. நெடு நெடுவென்று உயரமாய் இருந்தான். தொண்டை
எலும்பு துறுத்தி வெளியே தெரிந்தது. கன்னங்கள் ஒட்டி மயிர் வளராமல் கிடந்தது. முழுக்கைச்
சட்டை நாதசுரத்தை உறைபோட்டு மூடினாப் போல. நேரே அவன் கண்களைப் பார்த்தாள். வெட்கம்
எல்லாம் இல்லை. அவன் கண்ணும் அவள் கண்ணும் சந்தித்து மீண்டன. அவனிடம் சலனம் இல்லை.
சற்று சிரிப்பான் என நினைத்தாள். தான் சிரிக்க நினைத்தாள். அவன் சிரிக்காமல் அவள் சிரிப்பதாவது...
அவன் மனசில் என்ன நினைக்கிறான் தெரியவில்லை. ஒரு பெருமூச்சு வந்தது அப்பவே அவளுக்கு.
வாழ்க்கை அப்படித்தான் அமைகிறது அவளுக்கு. அவள் உப்பு விற்கப் போனால் மழை வருகிறது.
மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது - (இல் அறம்)”
மாதவையா போலவே, எனக்கும் அவளிடம் குற்றங் காண ஏதும் இல்லாது
போன நிலையில், கதையை நானே எதிர்பாராமல் அவள்பார்வையில் நகர்த்தி விட்ட சூழலில், அதன்
பின் கதாநாயகனிடம் இருந்து ஒரு சுடு சொல் வருகிறாப் போல என்னால் எழுத முடியாமல் ஆனது.
இதில் நான் நினைத்திருந்த முடிவு வேறு. அவர்கள் தண்டவாளத் தண்டுகளாக அப்படியப்படியே
ஒரு கூரை நிழலில் ஒதுங்கி யிருக்கிறார்கள், என்பது கதை. கதை என் மனசின் இயக்கத்தில்,
அவள்சார்ந்து அவன் கரிசனப் படும்படி மாறிக் கொண்டதை நானே ஓர் ஆச்சர்யத்துடன் கவனிக்க
நேர்ந்தது. எனது சமீபத்திய தொகுதியான ‘பெருவெளிக் காற்று’ நூலில் ‘இல் அறம்’ கதை இருக்கிறது.
சில கதைகள், சில பாத்திர வார்ப்புகள், நான் இந்தப் பாத்திரத்தை
எழுதிப் பார்த்தது இல்லையே, என எழுத ஆரம்பித்து, அது எனக்குக் கைவராமல் கைவிட்டது உண்டு.
மனைவியை சந்தேகப் படும் பாத்திரம் அவற்றில் ஒன்று. பாவண்ணன் போன்ற படைப்பாளிகள் அருமையாக
இப்படிப் பாத்திரங்களை வார்த்தெடுத்திருக்கிறார்கள். நான் வாசித்து வியந்திருக்கிறேன்.
எனக்கு அது கைகூடவே இல்லை.
(வண்ணதாசனுக்கும் கைகூடாது, என நினைக்கிறேன்!)
பலமுறை முயன்றும் அந்தப் பாத்திரத்தின் உள் கிரண மோதல்களை
என்னால் வடிவமைக்க முடியவில்லை. நான் ஒரு கதை எழுதினேன். ‘அடிமை’ என்று ‘சராசரி இந்தியன்’
தொகுதியில் அது இருக்கிறது. இயக்குநர் கே. பாலச்சந்தர் முன்னுரை தந்த தொகுதி. ஒரு திரைப்படக்
காட்சி போலவே கதையை நான் அமைத்திருந்தேன். மனைவியை சந்தேகப் படும் ஒரு நபர். அவள்மேல்
கொள்ளையாய்ப் பிரியம் வைத்திருக்கிற நபர் தன் வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் பெரிய
காம்பவுண்டுச் சுவர் எழுப்பி யிருக்கிறார். அதிகாலை இருள் பிரியுமுன்னே மனைவி பின்கட்டுக்குப்
போய்க் குளித்து விட வேண்டும். அப்பவும், கூட நின்றபடி யாரும் தன் மனைவியைப் பார்க்கிறார்களா,
என சுற்று முற்றும் இருளில் துழாவித் தேடுவார்.
அவள் போய் கிணற்றில் நிர் இறைக்கையில் அந்த அரையிருளில் கயிறு
அவள் காலில் சுற்றி அவளை அப்படியே வாரி கிணற்றுக்குள் எறிந்து விட்டது. தலைகுப்புற
அவள் கிணற்றில் விழுந்த ஜோரில் தலையில் அடிபட்டு இறந்து போனாள். கையில் இருந்த டார்ச்சால்
கிணற்றுக்குள் அவர் பார்த்தார். கீழே விழுந்த ஜோரில் அவள் புடைவை தூக்கிய இடுப்புவரையிலான
நிர்வாணம். யாரை உதவிக்கு அழைப்பது, அவளது இந்தக் கோலத்தில்?
இது கதை. இந்தக் கதையை அடுத்த வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
இரண்டு நாட்களாகத் திறக்கப் படாத அவர் வீடு. துர்நாற்றம் வந்து கதவை உடைத்துப் பார்க்கிறார்கள்.
அவர் உள்ளறையில் தூக்கு மாட்டி இறந்து கிடக்கிறார். யாருக்கும் காரணம் புரியவில்லை.
சரி, மாமி எங்கே? வீடு உள்ளே தாளிடப் பட்டிருக்கிறது. அவளைத் தனியே அவர் விடவே மாட்டாரே?
தேடிப் பார்க்கிறார்கள். மாமி கிணற்றுக்குள் இறந்து கிடக்கிறாள்.
மனைவியைக் கிணற்றுக்கு மேலே எடுக்க யாரையும் உதவிக்கு அழைக்க
முடியாத தன் கையாலாகாத்தனத்தின் கேவலத்தில் அவர் தன்னைத் தானே நொந்துகொண்டு தற்கொலை
செய்துகொண்டதாக யூகிக்கிறார்கள். கதை ஒரு துப்பறியும் பாணியில் நகர்த்திச் சொல்லப்
படுகிறது.
சம்பவங்களை வேறு மாதிரி, சீட்டு விளையாட்டைப் போல, மாற்றி
யடுக்கிக் கதை சொல்லி விட்டேன். என்றாலும் நடத்தையில் சந்தேகம் வகைப்பட்ட கதைகளை எழுத
முடியாது என்னால். நான் தோற்றுப் போன இடம் அது.
5
எனது ‘தொட்ட அலை தொடாத அலை’ நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச்
சங்கம் பரிசு கிடைத்தது. நான் எழுதியதில் அதிகம் மெனக்கிட்ட நாவல் என்றால் இதுதான்.
ஒரு முகூர்த்தப் பொழுதில் இதன் களம் எனக்குப் பிடிபட்டது.
ஒரு குழந்தை பிறக்கிறது. பிறக்கும் போது அது ஒரு மனித உயிர்.
மனித உயிர் மட்டுமே. பிறந்தபின் வளரும்போது தான் அதற்கு உறவுகள், மற்றபிற அம்சங்கள்
வந்து ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கின்றன. அப்பா அம்மா உட்பட. அதுவல்லாமல் அதனால் வாழ முடியாத
நிலை ஆகிவிடுகிறது. அதன் வாழ்க்கை இப்போது தன்னியல்பாக நிகழாமல் இந்தச் சூழல்களால்
நிர்ணயம் பெற ஆரம்பிக்கிறது. இந்தியாவில் பிறந்த குழந்தையும், வேற்று நாட்டில் பிறந்த
குழந்தையும் ஒன்று அல்ல, என்கிற நிலை ஏற்படுகிறது.
நான் யோசித்தேன். வாழ்க்கையின் அந்த எல்லை பிறப்பு. அங்கே
ஒரு வாழ்க்கை ஆரம்பிக்கிறது. வாழ்க்கையின் மறு எல்லை, மரணம். அங்கே அந்த வாழ்க்கை முற்றுப்
பெறுகிறது. முடிவடைகிறது. பிறக்கும் போது எந்தத் தளையும் இல்லாமல், அடையாளங்களும் இல்லாமல்
பிறக்கிறது குழந்தை. ஒரு மனிதனால் இப்படி எந்தத் தளையும் அடையாளங்களுமே இல்லாமல் செத்துப்
போக முடியுமா?
முடிய வேண்டாமா?
பிறப்பு என்பது தொடாத அலை. அது உன்னைத் தொட்டது தெரியும்.
நாம் பிறந்திருக்கிறோம். மற்ற குழந்தைகள் பிறக்கின்றன அல்லவா, அதை வைத்து அதை நாம்
அறிகிறோம். ஆனால் அது தொடாத அலை, அதை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. நம் மனதில் நம் பிறப்பு
பற்றிய பிரக்ஞை இல்லை.
மரணம் என்பது தொட்ட அலை. அது நம்மைத் தொடும். அதை நாம் முற்றாக
உணர்ந்தே தீர வேண்டும். ஆனால் அதை விளக்கிச் சொல்ல நம்மால் இயலாது. அதைச் சொல்ல நாம்
இருக்கப் போவது இல்லை.
எனது ‘தொட்ட அலை தொடாத அலை’ நாவலில் ஒரு பெரியவர் தன் மரணம்,
எந்த உறவுச் சங்கிலிகளின் அழுகையும் இலலாமல், பயமோ திகிலோ எதிர்பார்ப்போ கூட இல்லாமல்,
என் மரணம் என் அனுபவம், என்கிற அளவில் நான் அதை எதிர்கொள்வேன், என்று காத்திருக்கிறார்.
கதை விறுவிறுவென்று என் எழுத்தில் தினசரி வளர்ந்து வருகிறது.
எப்போதுமே ஒரு நாவலில் ஆரம்பப் பக்கங்கள் எழுத அதிக காலம் பிடிக்கும். கிட்டத்தட்ட
நாவலின் பாதிப் பகுதியை நாம் தாண்டி விட்டதாக நாம் உணரும் கட்டம் நாவல் அத்தனை சுறுசுறுப்பாக
தன்னை எழுதிக் கொள்ள ஆரம்பிக்கும். வார்த்தைகள் நமக்குக் கட்டுப்படும். உவமைகள் சரளப்படும்.
முடிவை நோக்கி வளர வளர அடாடா, அந்த எழுத்தாளன் தன்னை சர்வ வல்லமையுடன் உணர்வான். அது
ஒரு பெரும் அனுபவம். எழுத்தாளனின் விஸ்வரூபம் அது. அவனுக்கே அவனுக்கான அவனது விஸ்வரூப
தரிசனம் அது. நாவலின் ஒளித் தடங்கள் துலக்கமாக அவனுக்குக் கண்ணில் படும். எழுத்தாளன்
எழுதும் பாத்திரமாகவே மாறிப் போவான்.
நாவலின் உச்சகட்டம் நெருங்க நெருங்க என் உள்ப் பரபரப்பு பெரிதாகிக்
கொண்டே போனது. பெரியவரின் மரணம் நெருங்கும் தருணங்கள் அல்லவா அவை. பெரியவர் வாழ்க்கையில்
அனுபவித்து வரும் அந்த மகா தனிமை. அந்தக் காத்திருப்பு. எல்லாவற்றுக்கும் நடுவே...
அவர் ஒரு காதல் ஜோடி தனித்து அந்தக் கடற்கரைப் பாறைப் பக்கம் ஒதுங்கி... அவர்கள் காதலுக்காக
ஒதுங்கியதாக அவர் நினைக்கிறார், அவர்கள் பாறையில் இருந்து கடலில் குதித்து தற்கொலை
செய்து கொள்கிறார்கள். ஒரு மரணம் குரூரமான முறையில் அவருக்கு அறிமுகம் ஆகிறது. இரு
மரணங்கள்.
அடுத்து பெரியவரின் மரணத்தை என்னால் எழுதவே முடியவில்லை.
கண்கள் ஜுரம் கண்டாற் போல நான் தரையில் கால் பாவாத நிலையில் திரிந்தேன். அமைதியற்றிருந்தேன்.
பெரியவரின் சாவை என்னால் எழுத முடியவில்லை. நான் அந்தப் பாத்திரமாக மாறிய நிலையில்,
அது ஒருவகையில் என் சாவை நான் எழுதிக் கொள்வதாக, “கலம்பகமாக”, சரம கவியாகவோ, இருந்து
பாடிய இரங்கற்பாவாகவோ ஆகிவிடுமோ? எனக்குள் பதட்டம். அடுத்த ஒருவாரம் எழுதுவதை அப்படியே
நான் நிறுத்தி விட நேர்ந்தது. நான் மிகவும் உடல் அளவிலும் மனது அளவிலும் பலவீனப் பட்டிருந்தேன்.
பிறகு அவர் தன் அறையில் மேசையில் கவிழ்ந்து இறந்து கிடப்பதாகவும்,
அவர் அருகே தூக்க மாத்திரைக் குப்பி மூடியில்லாமல் உருண்டு கிடப்பதாகவும், அவரைத் தபால்காரன்
வந்து பார்ப்பதாகவும் எழுதவேண்டி வந்தது.
மரணம் என்பது ஒரு விசித்திர அனுபவம். வாழ்க்கை பல துன்பங்களில்
மரணம் தேவலை என்று அலுப்பு காட்டுகிறது. மரணம் என்று அதன் நெருக்கத்தில் வாழ்க்கை,
தான் எத்தனை அழகு என்று புலப்படுத்தி விடுகிறது.
மரணத்தை விட வாழ்க்கை முக்கியம்.
திருப்பூர் தமிழ்ச் சங்கத்தில் பரிசு தந்தார்கள். ஏற்புரையில்
நான் சொன்னேன். “இது என் தோல்விகரமான படைப்பு. நான் எழுதிய முடிவு அல்ல இது. நான் நினைத்த
முடிவை என்னால் எழுத முடியவில்லை. ஆனால் என் தோல்வி எனக்கு மகிழ்ச்சி யளிக்கிறது. அந்த
மகிழ்ச்சியுடன் இந்தப் பரிசை நான் ஏற்றுக் கொள்கிறேன்.”
வாழ்க்கை மரணத்துக்கு சம்பந்தம் இல்லாதது, என்று தான் தோன்றுகிறது,
இதை எழுதுகிற இந்தக் கணம்!
•
சனிதோறும்
தொடர்கிறேன்
storysankar@gmail.com
91 97899
87842 / 91 944 501 6842
No comments:
Post a Comment