part 35
நேர்த்திக்கடன்
எஸ்.சங்கரநாராயணன்
ஒரு படைப்பு அதன் செய் நேர்த்தியில் வாசக மனதில் இடம் பிடிக்கிறது.
அது சொல்லப்பட்ட சுவாரஸ்யத்தினால் அப்படி அமையலாம். அல்லது சிக்கலான விஷயம் அது, என்றாலும்
சொல்லப்பட்ட அந்த எளிமையினால்... என்று எதோ ஒரு நேர்த்தி அதற்கு அமையும் போது அந்தப்
படைப்பின் ஆயுள் நீட்டிக்கப் படுகிறது. அந்த செய் நேர்த்தி என்பது எழுத்தாளனுக்கே தனி
அனுபவம். எழுதும்போது கிடைக்கிற அனுபவம். பயிற்சி பெற்ற எழுத்தாளனுக்கோ அது கிட்டாமல்
அவன் படைப்பை வெளியே அனுப்புவதே யில்லை. ஒரு செய் நேர்த்தி - அதுவே அதில் அவன் ஈடுபடுவதின்
நியாயமாக அவனுக்குக் கிடைக்கிறது. அவனது அடையாளம் அது. தனித்தன்மை அது. எழுதி முடித்த
பின் அவனுக்கு அது தனி நிறைவை அளிக்கிறது.
செயலில்
நேர்த்தி என் தலைக் கடனே!
முப்பது
நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கதை. எழுதியவர் வண்ணநிலவன் என்று நினைவு. கிராமத்துச்
சிறுமி ஒருத்தி. பள்ளிக்கூடம் போய்ப் படிக்க வேண்டும் என்று ஆசை அந்தப் பெண்ணுக்கு.
குடும்பத்தில் வறுமை. படிச்சி நீ என்னா கலெக்டராவா ஆகப் போறே, ஒண்ணும் போகவேண்டாம்,
என்று அவளைப் படிப்பை நிப்பாட்டி விடுகிறார்கள் பெற்றோர். ஒரு சாணிக்கூடையைக் கொடுத்து
தெருத் தெருவாக அலைந்து சாணி பெறக்கிட்டு வா, வரட்டி தட்டி விக்கலாம்... என்று அனுப்பி
வைக்கிறார்கள்.
சிறுமிக்கு
ரொம்ப வருத்தம். அவள் தலையில் சாணிக்கூடையுடன் தெருவில் போகிறாள். அவளது பள்ளிக்கூடம்
பக்கம் தானாகக் கால் போகிறது. வகுப்புகளுக்கு வெளியே மைதானம். அவள் தன் வகுப்புக்கு
வெளியே சன்னல் வழியே பார்க்கிறாள். உள்ளே வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
அவள் வழக்கமாக
அமரும் பெஞ்சு. அதில் இப்போது வேறொரு சிறுமி உட்கார்ந்திருக்கிறாள். இவளுக்கு ஆத்திர
ஆத்திரமாய் வருகிறது.
இவள் சன்னல்
வழியே அந்தப் பெண்ணை ஸ் ஸ் என்று கூப்பிடுகிறாள். அந்தப் பெண் பயத்துடன் திரும்பி இவளைப்
பார்க்கிறாள். அது ஏ இடம். அதுல நீ உக்காரப்டாது... என்கிறாள். அவள் திரும்பிக் கொள்கிறாள்.
திரும்பக் கூப்பிடுகிறாள். அப்பறம் வெளிய வருவேல்ல... என்று நாக்கைத் துருத்தி மிரட்டுகிறாள்
இவள். அந்தப் பெண் பயந்து விலகி இடம் மாறி உட்கார்கிறது.
இடைவேளை
நேரம். வகுப்பில் யாரும் இல்லை. படிப்பை நிறுத்திய சிறுமி வகுப்பறைக்குள் போகிறாள்.
அவள் வழக்கமாக அமரும் பெஞ்சு. அதில்வேறு யாரும் இனி உட்காரக் கூடாது... என்று முடிவெடுக்கிறாள்.
தன் கூடையில் இருந்த சாணியை எடுத்து பெஞ்சில் மெழுகி வைத்து விட்டு வெளியேறுகிறாள்...
என முடிகிறது கதை.
எனது இளம்
வயதில் வாசித்த கதை. ஒரு கதையை எப்படிச் சொல்ல வேண்டும், என எழுத்தாளர் எனக்கு வகுப்பெடுத்தாற்
போலிருந்தது. நிறைய உள் முடிச்சுகளை யெல்லாம் இதில் இயல்பாக வைக்கிறார். முழுக்க அந்தச்
சிறுமியின் ஏக்கத்தைச் சுற்றி மாத்திரமே வளைய வரும் கதை. அவர் சாணி பொறுக்கி வருவதையும்
எப்படி சிறுமியின் மனவோட்டத்துடன் பயன்படுத்தியது அழகாக அமைந்திருக்கிறது.
நண்பர்
ஏ.ஏ.ஹெச்.கே கோரி இலங்கையில் நடக்கிறதாக ஒரு சிறுகதை எழுதினார். அலுவலகம் ஒன்றில் வேலை
பார்ககும் ஒருவன், மாலையில் வீடு திரும்பும் வழியில் பெரிய வணிக வளாகம் ஒன்றில் ஒதுங்குகிறான்.
பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே போய் ஒரு தேநீர் அருந்தலாம் என்கிறதாக உத்தேசம். அங்கே
இவனது முதலாளி வந்திருக்கிறார். முதலாளியின் மனைவி, இரு குழந்தைகள், கூட வீட்டு ஒத்தாசை
என்று ஒரு வேலைக்காரச் சின்னப் பெண். அந்தக் குழந்தைகள் அங்கே இருக்கிற ஊஞ்சல் ஒன்றில்
ஹு ஹுவென்று கூச்சலிட்டபடி ஆட்டம் போடுகின்றன. வேலைக்காரச் சிறு பெண் வேடிக்கை பார்த்தபடி
ஒதுங்கி நிற்கிறது. முதலாளி அந்தக் குழந்தைகளை அழைத்து, அவர்கள் எல்லாருமாக திருப்தியாகச்
சாப்பிடுகிறார்கள். அந்தச் சிறுமி... அதற்குப் பசிக்கிறதா, எதுவும் வேண்டுமா, என்று
முதலாளி கேட்கவே யில்லை.
எல்லாவற்றையும்
இவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு தன் செலவில் அந்த வேலைக்காரச் சிறுமிக்கு
சாப்பிட எதாவது வாங்கித் தரவேண்டும் போல இருக்கிறது. அதற்குள் அவனை முதலாளி பார்த்துவிடுகிறார்.
எங்கப்பா இந்தப் பக்கம், என்பது போல எதோ விசாரிக்கிறார். சரி. வந்ததுதான் வந்திட்டே,
என்றபடி அவர் வேலைக்காரச் சிறுமியைக் காட்டுகிறார். நாங்க இப்படியே வெளியே போறோம்.
இவளை எங்க வீட்ல விட்டுட்டுப் போறியா? ட்டூ வீலர்லதானே வந்திருக்கே... என்கிறார். வேறு
வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறான் அவன். வேலைக்காரப் பெண்ணை அவனுடன் விட்டுவிட்டு முதலாளி
குடும்பத்துடன் காரில் போய் விடுகிறார். அவன் புன்னகையுடன் அந்தப் பெண்ணிடம் சாப்பிட
என்ன வேண்டும், என்று கேட்கிறான். அவளுக்கு வாங்கித் தந்தாலும் அவள் அதனை அத்தனை ஈடுபாட்டுடன்
சாப்பிட்டதாக அவனுக்குத் தெரியவில்லை. என்ன வேணாலும் கேளு. என்னுடன் நீ உன் இஷ்டப்படி
சிரிச்சிட்டிருக்கலாம்... என்கிறான். அந்தப் பெண் சட்டென்று “ஒரு நிமிஷம் அங்க்கிள்”
... என்றுவிட்டு அந்த ஊஞ்சலை நோக்கி ஓடுகிறாள். தரையை உன்னி உன்னி வேக வேகமாக அந்த
ஊஞ்சலில் முகம் மலர ஆடுகிறாள் அந்தச் சிறுமி - என முடியும் கதை.
தீர்மானங்களைத்
தாண்டி வாழ்க்கையின் ஒரு சம்பவமாகவே முடிவுகள் தர முடிந்தால் அந்தக் கதை மறக்க முடியாத
அளவில் மனிதல் இடம் பிடித்து விடுகிறது... என்று மேற்சொன்ன இரு உதாரணங்களும் அமைகின்றன.
ஏ.ஏ.ஹெச்.கே.கோரியைப்
போல எனது இன்னொரு நெருங்கிய எழுத்தாள நண்பர் சாந்தன். இலங்கையில் ஈழப் போர் உக்கிரப்
பட்ட வேளை பற்றி அவர் ஒரு குறுங்கதை தந்திருக்கிறார். சாந்தனின் அடையாளமாக அவரது குறுங்கதைகள்
விளங்குகின்றன. அசோகமித்திரனுக்கு அவை மிகவும் பிடிக்கும்.
தோளில்
குழந்தையுடன் ஒரு பெண் படலைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறாள். அந்த வீட்டுப் பிள்ளை
அவளை விசாரிக்கிறான். யார் நீங்க. எங்கருந்து வரீங்க... என்றெல்லாம் கேட்கிறான் அவன்.
ஒரு ஊர் பேர் சொல்லி அந்த அகதி முகாமில் இருந்து வருகிறதாகவும், ரொம்பக் கஷ்டம், என்று
உதவி கேட்டு வந்திருக்கிறதாகவும் அவள் அழுதபடி சொல்கிறாள். உள்ளேயிருந்து அவனது அம்மா
பணம் எடுத்து வந்து நீட்டுகிறாள்.
அம்மாவின்
அந்த இரக்க குணம் அவனை நெகிழ்த்துகிறது. “இல்ல அம்மா, அவள் பொய் சொல்கிறாள். அவள் சொல்கிற
ஊரில் அகதி முகாமே இல்லை” என்கிறான். அம்மா அதற்கு பதில் சொல்கிறாள். “ஐயோ பாவம்டா
அவ. பொய் சொல்லக் கூடத் தெரியாத அளவு அத்தனைக்கு வீட்டை விட்டு இறங்கிப் பழக்கம் இல்லையோ
என்னமோ” என்கிறாள்.
தாய்மை
என்பது அன்பு மகா சமுத்திரம், என்கிறார் சாந்தன். இரண்டு பக்க அளவில் மிகச் சிறிய கதை.
மீனாக மாறியவன்
- என நான் ஒரு கதை ஆனந்த விகடனில் எழுதினேன். அது ஏனோ இப்போது முன்னே வருகிறது. சம்பவங்களை
ஒருசேர ஒத்திசைவுடன் அடுக்குவது இக்காலங்களில் எனக்கு பயிற்சி அடிப்படையிலேயே வந்திருக்கிறது,
என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஊரில் ஓர் பைத்தியக்காரன். காலப்போக்கில் அந்த ஊரே
அவனை நேசிக்கிறது. அவனும் அந்த ஊரை நேசிக்கிறான். ஊர்க் குழந்தைகள் அவனைக் கண்டதும்
உற்சாகமாய்க் கையாட்டும். அவனும் ஹிக்கிரிகிரி... என்று உடம்பைத் திருகிய ஒரு சத்தத்துடன்
அதை ஏற்றுக் கொள்வான். அந்த ஊரின் ஓர் அடையாளமாகவே அவன் ஆகிப் போகிறான்.
ஊரில் புதுப்
பணக்காரன் கிளம்புகிறான். அவனுக்கும் பரம்பரைப் பணக்காரனுக்கும் பணத்தினால் மோதல் வருகிறது.
பரம்பரையான் எது செய்தாலும் அதை எதிர்க்கவும் முரண்டவுமே புதியவன் முனைகிறான். ஊரே
அவர்களிடையே வந்த பகையில் திகைக்கிறது. சண்டைகள் ரகளைகள் அதிகமாகி விடுகின்றன. மழைக்காலத்தில்
அந்தக் குளத்துக்கு நீர் வரும். புதுத் தண்ணியும் புது மீன்களும் வரும். அதைக் குத்தகைக்கு
விடுவார்கள். குத்தகை எடுப்பதில் இருவருக்கும் பகை வருகிறது.
குத்தகை
எடுக்க முடியாமல் தோற்றுப் போனவன் குளத்துத் தண்ணீரில் விஷத்தைக் கலந்து விடுகிறான்.
அதில் மீன்கள் கொத்துக் கொத்தாய் செத்து மிதக்கின்றன. அதே சமயம் அந்த ஹிக்கிரிகிரி
பைத்தியத்தையும் காணவில்லை. விஷம் வைத்தவன், அந்தப் பைத்தியம் தான் இப்படி ஊரைப் பிடிக்காமல்
விஷத்தைக் கலந்திருக்க வேண்டும், என கிளப்பி விடுகிறான். ஊரில் யாருமே அதை நம்பவில்லை...
ரெண்டு
நாளில் அந்தக் குளத்தில் இருந்து அந்தப் பைத்தியத்தின் பிணம் ஊறி வெளியே வந்து மிதக்கிறது.
தெருவெங்கும்
அடிதடி என்று ஊரே வெறிச்சிட்டுக் கிடக்கிறது. நடமாட்டம் இல்லை. வீட்டுக் கதவுகள் அடைத்துக்
கிடக்கின்றன. பைத்தியத்துக்குச் சோறு போட ஆளில்லை. அவன் போய் அந்தக் குளத்துத் தண்ணீரை
பசிதீர அருந்தியதில் இறந்து போகிறான் - என்பது கதை முடிவு.
விஷத்தை
அவன் கலக்கவில்லை, என்று சொல்லாமல் சொல்கிறது அல்லவா, இந்த ‘மீனாக மாறியவன்’ கதை. வடிவ
அமைதியுடன் முடிவு அமைந்ததாக நினைக்கிறேன்.
2
எல்லாக்
கதைகளுமே ஒரு துன்பியல் சித்திரம் என்கிற அளவிலேயே மனசில் மேலெழுந்து வருகிறதோ என்னவோ?
எழுத்தாளனின் அனுபூதி வெளிப்படும் தருணங்களைச் சொல்லி மேற் செல்லலாமே என்று படுகிறது.
கதையின் வடிவ நேர்த்தி ஒரு அம்சம் என்றால், கதா பாத்திரங்களூடே எழுத்தாளன் இயங்கும்
போது அன்பு வயப்பட்டு சில சமயம் தன் ஆத்மாவின் ஒளியையே கூட அதில் வைத்து விட முடிகிறது.
அதைத் தான் அனுபூதி என்று குறிப்பிட வேண்டி யிருக்கிறது.
தமிழின்
முன்னோடி எழுத்தாளர்கள் அளவில் கூட இந்த தரிசன அம்சங்கள் நமக்குக் கிடைக்கின்றன. வத்தலகுண்டு
பி.ஆர்.ராஜமய்யர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’ தமிழின் முதல் நாவல் என்கிறார்கள்.
முதல் இலக்கியத் தரமான நாவல் என்று அதை எடுத்துக் கொள்ளலாம். அதன் நாயகர் குப்புசாமி
ஐயர். அவர் வீட்டில் திருடு போய்விடும், என ஒரு சம்பவம். திருடும் சத்தத்தில் அவர்கள்
விழித்துக் கொள்வார்கள். திருடன் திருடன், என கூச்சல் கேட்டதில் பக்கத்து எதிர் வீடுகள்
விழித்துக் கொள்ளும். திருடன் புறக்கடை வழியே வெளியே ஓடுவான். அவர்கள் அவனைத் தொடர்ந்து
வந்தால் பிடிபட நேரும், என்ற யோசனையில் திருடன் தன் கையில் இருந்த தீப் பந்தத்தை புறக்கடையில்
இருந்த வைக்கோற் போரில் வீசி விட்டு ஓடி விடுவான். குப்பென்று தீ பற்றி எரியும் வைக்கோற்
போர். சனங்கள் அதை அணைப்பதில் மும்முரம் காட்டியதில் அவன் தப்பி விடுவான்.
பிற்பாடு
அவன் மாட்டிக் கொள்வான். வழக்கு விசாரணை நடக்கும். கோர்ட்டில் தீர்ப்பு வருமுன் திடீரென்று
நீதிபதி குப்புசாமி ஐயரிடம் “நீங்க இந்தக் குற்றவாளியிடம் எதுவும் சொல்ல விரும்புறீங்களா?”
என்று கேட்பார். நாவலில் எதிர்பாராத கட்டம் அல்லவா இது? எந்த நீதிபதி இப்படிச் சொல்வார்.
ஆனால் ராஜமய்யர் அங்கே கதையை நிறுத்திச் சொல்கிறார்.
திருட்டு
கொடுத்த குப்புசாமி ஐயர் திருடனிடம் சொல்வதாகக் கதை. “அப்பா நீ வந்தாய். நகை நடடு பண்ட
பாத்திரம் அரிசி.. எது கிடைக்குதோ திருடினாய். அதைத் திருடுமுன் நான் பயன்படுத்தினேன்.
திருடிக்கொண்டபோது அது உனக்குப் பயன்படும். அவ்வளவில் எனக்கும் அது ஆறுதல் தந்தது.
ஆனால் வைக்கோற் போர்... அதுக்கு தீ வெச்சிட்டியே? செய்யலாமா? அது உனக்கும் உபயோகப்
படாமல் எனக்கும் உபயோகப் படாமல் வீணாய்ப் போச்சே?”
என்னவோர்
சிந்தனை! இந்த உரையாடல் ராஜமய்யயர் மனசில் இருந்து அல்லவா எழுகிறது. மேன்மக்கள் மொழி
எப்பவுமே அத்தனை தீர்க்க தரிசனமானது தான். மேலே படிக்க முடியாமல் பல மணி நேரங்கள் நான்
இதில் உழன்றேன். காந்தி ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்தார்
என்பதை நான் நம்புகிறேன். உயர்ந்த விஷயங்கள் திடீரென்று நமக்கு அறிமுகம் ஆகிற போது
நம் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை அந்தக் கணத்தில் அந்தச் சூழலுக்குக் கிட்டுகிறது.
இப்போதும்
நான் தெருவில் போகையில் எந்தத் தண்ணீர்க் குழாயில் வீணாகத் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தாலும்
உடனே போய் மூடி விட்டுத் தான் போகிறேன். அதற்கு நிச்சயம் ராஜமய்யரின் மேற்சொன்ன பகுதியின்
பாதிப்பே காரணம். இது அவர் பெருமை மாத்திரம் அல்ல. இது என் பெருமை.
இன்னொரு
துவக்க கால புனைவு எழுத்தாளர் அ.மாதவையா. அவரது ஒரு நாவலில் இப்படி காட்சி அமைக்கிறார்.
ஒரு கல்யாணப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பையனுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது.
பெண்ணுக்குப் பையனைப் பிடித்திருக்கிறது. “நாம வெற்றிலை பாக்கு மாத்திக்கலாமே” என்கிறார்கள்.
கையில் வெற்றிலைத் தட்டை எடுத்து மாற்றிக் கொள்ளும் அந்தக் கணத்தில் மின்சாரம் போய்
விடுகிறது.
அப்போது
ஒருவர் சொல்கிறார். “பக்கத்து வீட்ல விளக்கு எரிகிறது. எதிர் வீட்ல விளக்கு எரிகிறது.
ஊர் பூராவும் வெளிச்சமா இருக்கு. நல்ல சகுனம் தான். மாத்திக்கலாம் தட்டை.”
இந்தக்
குரல் எழுத்தாளரின், மாதவையாவின் குரலே தானே? சகுனம் பார்ப்பது தவறு... என்று பிரச்சாரம்
செய்யவில்லை அவர். விஷயத்தை மனங் கொள்ளும் விதத்தில் நாம் பார்க்கப் பழக்கப் படுத்துகிறார்.
இப்படிப்பட்ட
சிந்தனை மேதைகள் நமக்கு வாய்த்த வரம்.
ஒரு சம்பவத்தை,
காட்சியை அல்லது வாழ்க்கைச் சூழலை கதையில் எழுதி வருகையில் திடீரென்று எழுத்தாளன் உச்சம்
தொட வாய்க்கிறது. அதுவே எழுத்தின் பெருமை. எழுத்து எழுதியவனை வளர்த்தபடியே வருகிறது.
எப்பெரும் கொடை இது. அவ்வளவில் பயிற்சி பெறுவது எழுத்தின் கால காலமான தியானம் என்று
சொல்லலாம்.
3
கடல்காற்று,
என்கிற எனது ஒரு நாவல். அதில் அறுபது தாண்டிய வயதுக்கார ஆசிரியர் ஒருவர் இறந்து விடுவார்.
இறந்தவர் ஒரு சமூகத்தைப் பொறுத்த அளவில் ஒரு தனி மனிதர் அல்ல. ஒரு அப்பா. ஒரு அண்ணா.
ஒரு தம்பி. ஒரு சித்தப்பா... என பல மனித அடையாளங்கள் இழந்த நிலை அது... என்பது கதை.
ராஜாமணி
வாத்தியாரின் கூடப் பிறந்த பெண்கள் அந்தச் சாவுக்கு வருகிறார்கள். மூத்த சகோதரி வாழ்க்கையில்
இன்னும் வசதி வாய்ப்பு என்று கரை சேராதவள். இளைய சகோதரியோ கல்கத்தாவில் இருக்கிறாள்.
அவள் கணவன் இறந்து விட்டாலும், அவள் பையன் நல்ல நிலைமைக்கு வந்து இப்போது அவள் காதிலும்
மூக்கிலும் தங்கமும் வைரமும் ஜ்வலிக்கிறது. ஏழை அக்கா நினைப்பதாக நான் எழுதிய ஒரு வரி
-
ஏழை சுமங்கலியயை
விட பணக்கார விதவை கொடுத்து வைத்தவள்.
‘காலத்துளி’
என நான் ஒரு நாவல் எழுதினேன். பிற்பாடு ‘புன்னகைத் தீவுகள்’ என மறு பெயருடன் அது இரண்டாம்
பதிப்பு கண்டது. அந்த நாவலில் நானே எதிர்பாராமல் வந்தமைந்த ஒரு வரி -
வாழ்க்கை
சந்தோஷமாகக் கழிக்கப்பட வேண்டியது. இங்கே புழுக்களுக்குக் கூட குறைந்த பட்சம் சம்போக
சுகம் அனுமதிக்கப் பட்டிருக்கிறது.
படைப்பாளனை
விட படைப்பு உயர்ந்தது. ஏனெனில் படைப்பாளன் படைக்கிற அந்தக் கணத்தில் படைக்கிற அந்த
மனிதனின் விஸ்வரூபம் காட்டும் பேரடையாளம். அவ்வளவில் தன்னைத் தொடர்ந்து உணர்த்திக்
கொள்கிற பிரயத்தனமே எழுத்து எனலாம்.
•
சனி தோறும் தொடர்கிறேன்
91 9789987842 . 91 94450 16842
storysankar@gmail.com
No comments:
Post a Comment