Friday, March 22, 2019


week 34
 
இயங்கு தளங்கள்
எஸ்.சங்கரநாராயணன்
 *
ந்தப் பகுதியில் எழுத்துக்களின் பல வகைமாதிரிகளும் அவைசார்ந்து எனது கவனமும், கவனஈர்ப்பும் அதன்பின்னான எனது இயக்கமும் பற்றி நிறைய எழுதி யிருக்கிறேன். யோசிக்க யோசிக்க மேலும் கிளைகள் விரிந்து பரவுகின்றன. ஓர் எழுத்தாள நிலையில் இதை நான் பகிர்வது வாசக நிலையில் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது நம்பிக்கை. அன்றியும் நானும் மேலும் என் சிந்தனைகளைப் பரத்தி விரிக்க இது ஒரு பயிற்சி எனக்கு, என்று தோன்றுகிறது.
ஒரு படைப்பை அதன் பிரத்யேகத் தன்மையை அறிந்து பயன்படுத்தும் போது அந்தக் கலைப் படைப்பு தனி உயரம் பெறுகிறதாக உணர முடிகிறது. அதாவது சில படைப்புகளில் அதற்கேயுரிய தனித்தன்மைகள் அமைகின்றன. அவற்றை அந்த எழுத்தாளனால் கண்டுகொள்ள முடிகிறது. சட்டென நினைவு வரும் ஓர் உதாரணம், அறிவழகனின் ‘மரண அடி’ என்ற சிறுகதை.
சுடுகாட்டில் பிணத்தை எரித்துப் பிழைக்கும் பெரியவரின் கதை. வெட்டியான் என்பது குலத் தொழிலாகவே இருந்து வருகிறது. வெட்டியானின் மகன், ‘நான் இந்த வேலைக்கு வர மாட்டேன். வேறு வேலைக்குப் போவேன்’ என்று அப்பாவிடம் முரண்டு பிடிக்கிறான். ஒருநாள் அப்பாவுக்கு ரொம்ப உடம்பு முடியவில்லை. அப்போது அவனை ஒருநாள் மட்டும் பிணத்தை எரிக்கிற வேலையை அவனைச் செய்யச் சொல்கிறார். வேண்டா வெறுப்பாக அப்பாவுடன் செல்கிறான் அவன். எந்தத் தொழிலுக்கும் அதற்கேயுரிய சூட்சும அம்சங்கள் உண்டு அல்லவா? அப்பா அவனுக்கு பிணத்தை எரிக்கிற சூட்சுமத்தைக் கற்பிக்கிறார். சுடுகாட்டில் பிணத்தை சிதையில் இட்டு எரிக்கும்போது, பிணத்தின் எலும்புகள் விரிந்து அவை எழுந்து கொள்ளும். அதை அப்படியே விட்டு விட்டால் அந்த எலும்புகள் சரியாக வேகாது. அப்போது இறந்தவர் ஆத்மா சாந்தி அடையவில்லை, என்று ஊரில் பேச்சு வரும். அதனால் கவனமாக சிதையைப் பார்த்துக் கொண்டே யிருந்து, பிணம் எழுந்து கொள்ளும்போது அதை ஒரு கட்டையால் அடித்துத் திரும்ப சிதையில் போட வேண்டும். எத்தனையோ நல்ல மனிதர்கள் கூட செத்துப் போய்ப் பிணமாக வந்து சேர்வார்கள். அவர்களையும், இப்படி எழுந்து கொள்ளும் போது, அப்படி அடிக்க வேண்டியிருக்கும். அவர்களையும் அடிக்கத் தயங்கக் கூடாது. எப்படியும் அவர் எதாவது நமக்குக் கெட்ட விஷயம் செய்திருப்பார். அதை மனதில் கொண்டு வர வேண்டும். “அன்னிக்கு நீ எனக்கு இப்பிடிப் பண்ணினாய் இல்லே? அதுக்து இது. இந்தா வாங்கிக்க” என்றபடி ஓங்கி அந்த எலும்புக்கூட்டை அடிக்க வேண்டும். அப்பதான் அந்த எலும்பு நல்லா வெந்து சாம்பலாகும், என்று அப்பா சொல்லிக் கொடுக்கிறார்.
அன்றைக்கு இராத்திரி உடம்பு தேறாமல் அப்பா இறந்து விடுகிறார். அப்பாவின் பிணத்தை அவனே எரிக்க வேண்டி யிருக்கிறது. அழுதபடியே அவன், எழுந்துகொள்ளும் அப்பாவின் எலும்பைப் பார்க்கிறான். “வேற வேலைக்குப் போறேன் போறேன்னு சொன்னேன். கேட்காம என்னை இதுக்கே வர வெச்சிட்டியே” என்று சத்தமாய்க் கத்தியபடி அப்பாவின் எலும்பை ஓங்கி அடிக்கிறான்... என்று முடிகிறது கதை.
ஒரு தனித்தன்மையான களம் அமைத்து அதற்கேயான சம்பவங்களைத் தொகுத்து அததற்குத் தோதான திருப்ப அம்சத்தையும் கதையின் கடைசியில் கொண்டு வந்திருக்கிறார் அறிவழகன். முப்பத்தைந்து நாற்பது வருடங்களுக்கு முன்பு ‘இலக்கிய வீதி’ அமைப்பின் ஒரு தொகுதியில் வாசித்த கதை. இன்னும் நினைவில் இருக்கிறது. ‘இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குநரின் துவக்க காலக் குறும்படம் இதே கதையம்சத்துடன் வெளியானது. இந்தக் கதையை நான்தான் அவருக்கு சிபாரிசு செய்தேன்.
‘செம்புலப் பெயல்நீர்’ என நான் எழுதிய ஒரு சிறுகதை. டாக்டர் ஒருவன், மனைவி பிரசவத்துக்கு ஊருக்குப் போன நிலையில் சிறு பலவீனத்தில் சிவப்பு விளக்கு பெண் ஒருத்தியுடன் பழக ஆரம்பிக்கிற கதை. ஏறத்தாழ 20 பெண்களுடன் அவர்களை அதிகாரம் பணி இந்தத் தொழிலில் ராணியாக இருக்கும் ஒரு பெண். அந்த அடிமைப் பெண்களின் வாழ்க்கையே கதை. அதில் இந்த டாக்டர் நுழைகிறார். அவனோடு பழக ஆரம்பித்த பெண்ணுக்கு அவனிடம் காதல் பிறக்கிறது. தனது எஜமானி தந்த கருத்தடை மாத்திரைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவனுடன் அவள் பழகி கர்ப்பமாகிறாள். அதை மறைக்க முடியவில்லை. எஜமானிக்கு அதில் கோபம். அவனைக் கூப்பிட்டு கடுமையாய்ச் சாடுகிறாள் எஜமானி. பிறகு சொல்கிறாள். “இந்தக் குழந்தையை நீயே அபார்ஷன் பண்ணிவிடு.”
கதைக்களம் புதிதாய்க் கிடைத்த போது, அதில் இந்த ‘சென்ட்டிமென்ட்’டையும் வைக்க முடிந்தது. ஒரு டாக்டர், அவனே தன் குழந்தையை அபார்ஷன் செய்யும் சூழல். ‘இருவர் எழுதிய கவிதை’ நூல் உள்ள கதை அது.
2
இசை சார்ந்து ஒரு சிறுகதைத் திரட்டு ‘ஜுகல்பந்தி’ நான் கொண்டு வந்தேன். அன்றில் இருந்து இன்றுவரை இசை பற்றி நம் எழுத்தாளர்கள் எப்படியெப்படி யெல்லாம் எழுதிக் காட்டி யிருக்கிறார்கள் எனக் காட்டுவதே அதன் நோக்கு. இரண்டாம் தமிழுக்கு முதல் தமிழின் வணக்கம், என அடையாளம் காட்டி யிருப்பேன். அதை தில்லியில் இருந்து வடக்குவாசல் பதிப்பகம் வெளியிட்டது. தில்லி தமிழ்ச் சங்கத்தில் அந்த நூலை டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் வெளியிட்டார்கள். முதல் பிரதி சுதா ரகுநாதன் பெற்றுக் கொண்டார். இதைப் பற்றி நித்யஸ்ரீ மகாதேவன் கல்கி இதழில் மதிப்புரை தந்ததும் நினைவு வருகிறது.
ஜுகல்பந்தி கதைத் தேர்வில் சாரு நிவேதிதா கதை ஒன்றும் இடம் பெற்றது. ‘சங்கர்லால் இசைவிழா.’ பெரு நகரங்களில் இசை விழாக்கள் நடப்பது பற்றிய கதை. இது தில்லியில் நடந்த இசைவிழா. அதில் இசை ஆர்வம் மிக்க நடுத்தர சாமானியன் ஒருவன் இசை விழாவில் மாலை முதல்கச்சேரிக்குப் போவான். ஆறு முதல் ஏழரை வரை, ஒரு கச்சேரி. இளைய பாடகன் ஒருவனுக்கு வாய்ப்பு தந்திருப்பார்கள். அதை முழுசும் அவனால், இந்த ரசிகனால் கேட்க வாய்க்கும் அடுத்த ‘ஸ்லாட்’ ஏழரை முதல் ஒன்பது, ‘ப்ரைம் டைம்.’ பிரபல பாடகர் ஒருவரின் கச்சேரி. அவரது கச்சேரியை முழுசும் கேட்க அவனுக்கு ஆசை உண்டு. ஆனால் அவர் வந்து ஒரு பாடல் கூட அவனால் கேட்க முடியாது. ஊருக்கு வெளியே வெகு தொலைவில் இருக்கிற அவன் வீட்டுக்கு இப்போதே கிளம்பினால் தான் பத்தரை பதினோரு மணி வாக்கில் அவன் போய்ச் சேர முடியும். ஒரே ஒருபாடல் அவர் பாடிக் கேட்டுவிட்டு வருத்தமாய் அவன் கிளம்புவான் - இது சாருவின் கதை.
இந்தக் கதைத் தளத்தில் ஒரு வித்தியாசமான அம்சம் இருப்பதை நான் ஒரு புன்னகையோடு கவனித்தேன். அதை சாருவிடம் சொன்னேன். அவர் ஆச்சர்யப்பட்டு, “அப்படியா, நான் அதை உணரவில்லை” என்றார். அந்த ஆறு-ஏழரை ’ஸலாட் பாடும் இளைய பையன், அவன் பாட ஆரம்பிக்கும் போது, சபையில் கூட்டமே இராது. காரணம் அவன் அத்தனை பிரபலம் இல்லை. ஆனால் அவன் கச்சேரி முடிக்கிற நேரம் சபை நிரம்பி வழியும். அந்தக் கூட்டம் எல்லாம் அவனுக்கு வந்தது அல்ல. அடுத்து பாட இருக்கிற பிரபலத்துக்கு வந்த கூட்டம். அப்புறம் இடம் கிடைக்காது, என முன்கூட்டி வந்தமர்ந்த கூட்டம். அதாவது ஒரு பாடகன், அவன் பாட ஆரம்பிக்கையில் காலியான நாற்காலிகள். அவன் முடிக்கையில் இடம் ரசிகர்களால் நிரம்பி வழிகிறது... இந்த முரண் அம்சத்தை சாரு கவனிக்கவில்லை.
இதே போன்றதொரு முரண் அம்சத்தை எட்டி என்னால் தொட முடியுமா, என அப்போதிருந்து மனம் ஒரு ஓரத்தில் மினுக்கிக் கொண்டிருந்தது எனக்கு. கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்கள், இந்த விஷயத்தை என்னால் மறக்க முடியவில்லை. பிறகு ஒரு முகூர்த்தப் பொழுதில் நான் இந்தக் கதையை எபதினேன். ‘கம்பங்கொல்லை’ என்பது அந்தச் சிறுகதை. எஸ்.வி.சேகர் ஆசிரியராக இருந்த நாரதர் இதழுக்காக யோசித்த போது அமைந்தது இந்தக் கதை.
மனைவி இறந்து போன ஒருவன். வாழ்க்கை வெறுப்படிக்கிறது அவனுக்கு. அவனைத் தேடி மாமா வருகிறார். அவர் எப்ப வந்தாலும் செலவு வைத்துவிட்டுப் போகிறவர், என அவர் வந்தில் எரிச்சல் படுகிறான் அவன். அவர் அவனுக்கு ரெண்டாங் கல்யாணத்துக்கு ஒரு பெண் இருப்பதாகச் சொன்னதும், தெய்வமே, என்று பூரித்துப் போகிறான். யார் பெண், என்று தெரிந்துகொள்ள பரபரப்பாகிறான். அந்த ஊரில் கல்யாண வயசில் இருக்கிற அத்தனை பெண்ணையும் மனம் ஒரு ரவுண்டு வருகிறது. அவருடன் பேசப் பேச அவன் யூகங்கள் தகர்ந்து கொண்டே வருகின்றன. ஊரின் அழகான பெண்ணில் இருந்து ஒவ்வாரு மட்டமாக அவன் இறங்கி இறங்கி வருகிறான். அவர் கையில் இருக்கும் நல்ல வரன்களில் ஆக மோசமானதில் இருந்து அவன் தலையில் கட்ட ஒரு கணக்கு வைத்துப் பேசுகிறார். அவனைவிட வயதான விதவை ஒருத்தி. ஆளும் கருப்பு. தெத்துப்பல். அவளை முன்வைக்கிறபோது இருவருக்கும் சண்டை வந்து கட்டி உருண்டு விடுகிறார்கள்... என முடியும் கதை.
‘கம்பங்கொல்லை’ ஒரு ஜாலியான மூடில் எழுதிய கதை. ‘படகுத்துறை’ சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது அந்தக் கதை.
3
சில இயங்கு தளங்கள் அப்படி நம்மை வசிகரிக்கின்றன. அறிவழகனின் கதையை யோசித்து நான் ‘செம்புலப் பெயல்நீர்’ எழுதவில்லை. ஆனால் சாருவின் கதையில் நான் கண்ட அந்தச் சூழலில் பிரத்யேகத் தன்மை, அதைத் தொட்டு விரிந்ததே ‘கம்பங்கொல்லை’ கதையின் கரு. ஒரு கோபத்தில் தி.ஜா. போல எழுதிப் பார்த்திருக்கிறேன். ஒரு ரசனையில ஹெமிங்வே போல ஒரு சிறுகதை முயற்சி செய்திருக்கிறேன். ‘தாத்தாவின் பொய்கள்’ என்ற கதையின் முதல் சில பத்திகள் ஹெமிங்வேயின் பாணி இருக்கட்டும், என எழுதிப் பார்த்தது. சில மூத்த எழுத்தாளர்களை மறைமுகமாக விமரிசித்தும் கிண்டல் செய்தும் கதைகள் தந்ததும் உண்டு தான். அவைகளைக் கண்டு கொள்வதும் சிரமம் அல்ல. ஒரு சரித்திரக் கதையும் தந்தேன்.
சார்லி சாப்ளின் போல ஒரு கலைஞனைக் கலையுலகம் பார்த்தது இல்லை. அவரது திரைக்கதை அமைப்பு, இன்றளவும் அவரைத் தாண்டிப்போக முடியாத அளவு அத்தனை கச்சிதமானது. கதையும் காட்சி நகர்த்துதலும் அபார சுவாரஸ்யமானவை. சராசரி மக்களின் மேல் அவருக்கிருந்த கரிசனம். A MAN WITH GOLDEN HEART. திரைத்துறையில் அவரைப்போல வேறு யாருமே இல்லை.
இன்றளவும் காமெராவை வைத்து இத்தனை எளிமையாய் துல்லியமாய்க் கதை சொல்ல யாரால் முடிந்திருக்கிறது. காமெராவில் காட்டப்படும் அத்தனை பொருட்களும், அத்தனை பாத்திரங்களின் நடிப்பும் கதையை, பார்க்கிறவன் எடுத்துக் கொள்கிற அளவில் எத்தனையோ கிளைகளைப் பிரித்து விட்டு விடும். இந்நிலையில் ஒரே விஷயத்தைத் தொடர்ந்து கதையில் எப்படி நகர்த்திக் கொண்டு போவது என் சாப்ளின் அறிந்திருந்தார்.
ஒரு கை-ரிக்சாக் காரனின் கதையை அவர் இப்படிச் சொல்கிறார். மிகவும் குண்டான ஒருவன் அந்தக் கை-ரிக்சாவில் ஏறி யமர்கிறான். இழுக்க முடியாமல் இழுத்துச் செல்கிறான். போய்க்கொண்டிருக்கிறவனை முதுகில் தட்டிக் கூப்பிட்டு, முகவரியைக் காட்டுகிறார் அந்தப் பருத்த மனிதர். அந்த நேரத்தில் திரும்புவதே சிரமந்தான். அவன் அந்தச் சீட்டைப் பார்த்துவிட்டு தனக்கு அந்த இடம் தெரியாது என்று உதட்டைப் பிதுக்குகிறான். இதற்கிடையே அந்த சாலை சட்டென மேலேறுகிறது. ஏற்கனவே சிரமப்பட்டு அவரை இழுத்துச் செல்கிற அவன் இப்போது மேட்டில் அவருடன் ஏற வேண்டி யிருக்கிறது. அப்போது வழியில் ஒருவர் வருகிறார். அவரைப் பார்த்ததும் ரிக்சாவை நிறுத்துகிறார் குண்டு ஆள். மேடேறவே திணறும் அவன் வெகு பிரயத்தனப் பட்டு ரிக்சாவை நிறுத்துகிறான். அந்த நபரிடம் காகிதத்தைக் காட்டி அந்த முகவரி கேட்கிறார் குண்டு மனிதர். எனக்கு வழி சொல்லத் தெரியாது. ஆனால் இடம் தெரியும், என்கிறான் அந்த மனிதன். வா. ஏறி உட்கார்... என்கிறார் குண்டு மனிதர். அந்த மனிதன் ரிக்சாவில் ஏறி அவர் அருகில் அமர்கிறான். இப்போது இருவரையும் சேர்த்து அந்த மேட்டில் ரிக்சாவை இழுத்துப் போகிறான் அவன்...
திரைக்கான என்ன அற்புதமான காட்சி நகர்வுகள். நூறு வருடங்கள் தாண்டியும் சாப்ளின் அடைந்த உயரத்தை வேறு யாரும் இன்னும் நெருங்கவே முடியவில்லை.
THE KID - என்ற திரைப்படத்தில் அந்தச் சின்னப் பையனைக் கூட, நாயைக் கூட அத்தனை அற்புதமாய் வேலை வாங்கி யிருப்பார் அவர். அந்தப் படத்தில் ஒரு நகைச்சுவை உட்கதை. சாப்பாட்டுக்கு என்று சாப்ளினும் அந்தச் சிறுவனும் ஒரு வழி கண்டுபிடிப்பார்கள். சாப்ளின் சன்னல் கண்ணாடிகள் வாங்கி வைத்துக் கொள்வார். அவனும் பையனுமாய்த் தெருக்களில் போய் எந்த வீட்டில் வாசல் பார்க்க கண்ணாடி சன்னல்கள் இருக்கிறது என்று வேவு பார்ப்பார்கள். அதில் ஒரு வீட்டை அவர் முன்தினம் அந்தச் சிறுவனிடம் அடையாளம் காட்டுவார். அதன்படி மறுநாள் குறிப்பிட்ட நேரத்தில் அந்தச் சிறுவன் அந்த வீட்டு சன்னலில் கல் எறிந்து அந்த சன்னல்கண்ணாடியை உடைத்து விட்டு ஓடிவிடுவான். பிற்பாடு சாப்ளின் முதுகில் கண்ணாடிகளுடன் அந்தத் தெரு வழியாக வருவார். அந்த வீட்டுக்காரர் அவனை அழைத்து தனது உடைந்த சன்னல் கண்ணாடிகளை மாற்றச் சொல்லி பணம் கொடுப்பார். இது ஏற்பாடு.
அதன்படி ரெண்டு மூணு தடவை சரியாக எல்லாம் நடக்கும். அந்தப் பையன் கல் எறிவது, பிற்பாடு சாப்ளின் போய் கண்ணாடி மாற்றிவிட்டுப் பணம் பெற்றுக் கொள்வது. ஒருதடவை அந்தச் சிறுவன் கல் எறிய குறி பார்க்கிற நேரம் போலிஸ்காரன் ஒருவன் அந்தப் பக்கமாக தற்செயலாக வருவான். ஆகவே சிறுவன் அவனிடம் மாட்டிக்கொள்ளாமல் சமாளித்து போலிசைத் தவிர்க்க வேண்டி வரும். சாப்ளின் சிறுவன் இந்நேரம் கல் எறிந்திருப்பான் என்று அதே வீட்டுப் பக்கம் நம்பிக்கையுடன் போவான். அந்த வீட்டில் கண்ணாடி உடைபட்டிருக்காது. வீட்டுக்காரர் வெளியே நின்றிருப்பார். இவன் என்ன பார்க்கிறான், என்று அவருக்குத் தெரியாது. என்ன வேணும்?... என்று அவர் கேட்பார். இல்ல, உங்க வீட்ல கண்ணாடி எதும் மாத்தணுமா?.. என்று கேட்பான் சாப்ளின். தேவை யில்லை... என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே க்ளிங், என்று அவர் வாசல் சன்னல்கண்ணாடியில் ஒரு கல் வந்து விழும். தலைதெறிக்க ஓடுவான் சாப்ளின். ஒரு திருப்பத்தில் அவனோடு கூடவே சிறுவனும் சேர்ந்துகொண்டு ஓடுவான்.
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சிரிப்பு. இதே காட்சியை இப்படியே ‘சபாஷ் மீனா’ படத்தில் வைத்திருப்பாரகள் தமிழில். நான் இரண்டு படங்களையும் பார்த்திருக்கிறேன். இது நானே அறியாமல் என் மனதில் வெகு காலமாக, வருடங்களாக ஊறிக்கொண்டே கிடந்தது. இதேபோன்றதொரு இயங்கு தளத்தில் நானும் ஒரு கதை எழுதியாக வேண்டும் என்று தோன்றிக்கொண்டே யிருந்தது. பல வருடங்கள் கழித்து அந்தக் கதை எனக்கு அமைந்தது.
அண்ணன் மின்சார வாரியத்தில் வேலை பார்ப்பான். தம்பிக்கு வேலை கிடைக்காது. என்ன செய்ய என்று புரியாத தம்பி. அவனது நண்பனின் வீட்டில் மெழுகுவர்த்திகளைக் குடிசைத் தொழிலாகச் செய்து வருவதைப் பார்த்த தம்பி அதை ஒரு சைக்கிளில் எடுத்துப் போய் தெருத் தெருவாக விற்றுப் போவான். தெருவின் பலசரக்குக் கடைகளில் கூட கேட்பான். யாரும் வாங்க மாட்டார்கள். மாலை இருட்டுகிற நேரம் வரை வியாபாரம் பெரிதாக இராது. திடீரென்று அந்தத் தெருவில் மின்சாரம் போய்விடும். உடனே அதே தெருவுக்குள் ‘மெழுகுவர்த்தி’ என்று கூவிக்கொண்டே போவான் அவன். முதலில் வேண்டாம் என்று சொன்னவர்கள் வீட்டுக்கு வெளியே வந்து அவனைக் கூப்பிட்டு வாங்கிக் கொள்வார்கள். கடைக்காரன் தன் கடைக்கு வராமல் சனங்கள் அவனிடம் சரக்கு வாங்குவதை கவனித்து விட்டு அவனிடம் மிச்சம் இருக்கும் அத்தனை மெழுகுவர்த்திகளையும் கமிஷன் கழித்துக்கொண்டு அவனிடம் வாங்கிக் கொள்வான் கடைக்காரன். முழு சரக்கும் விற்றுத் தீர்ந்ததும் அவன் தெரு எல்லையில் இருந்த பி சி ஓ-வில் இருந்து அண்ணனுக்குப் பேசுவான். “அண்ணே மெயினை ஆன் பண்ணிருங்க.”
இந்தக் கதைகளை யெல்லாம் நான் சொல்லாமல் உங்களால் ஒப்பு நோக்கிக் கண்டுகொள்ள முடியுமா என்ன? அவற்றுக்கிடையே போதுமான கால இடைவெளி இருக்கிறது. என் இடையறாத தேடல் இருக்கிறது. இப்படி காத்திருப்பதும் கூட நல்ல அனுபவம் தான். இப்படி இன்னும் எத்தனை கதைமாதிரிகள் என்னுடன் இன்னும் கூடப் பயணிக்கிறதோ தெரியவில்லை. அவை ஒரு சந்தர்ப்பத்தில் வேறு கதையாக வெளியே வரும் போது தான், முன்னே இப்படியொரு கதையை நான் ரசித்ததே எனக்கு நினைவு வரும்.
இப்படியே என் கதைகளுக்கும் ரசிகர்களும், மறு கதைகளும் இருக்கிறது. நான் கவனியாத அளவு, என் கண்ணுக்கு வராமல் அவை இருக்கவும் கூடும். எழுத்து வாழ்க்கையில் தான் எத்தனை சுவாரஸ்யங்கள். நான் எழுத்தாளனாக அல்லாமல் வேறு எவ்வளவிலும் திருப்தியுற்றிருக்க மாட்டேன், என்றே நம்புகிறேன்.
storysankar@gmail.com
91 9789987842 / 91 9445016842


No comments:

Post a Comment