week 33
ஏழுவர்ண மாயவில்
எஸ்.சங்கரநாராயணன்
*
சமர்ப்பணம்
சாமர்செட்
மாம்
*
‘குவிகம் இலக்கிய வாசல்’ என்கிற இந்த அமைப்பில் இந்தக் கூட்டத்தில்
‘எழுத்தாளருடன் கலந்துரையாடல்’ என்று என்னை எழுத்தாளனாக அழைத்திருக்கிறார்கள். இதில்
ஒரு வேடிக்கை என்னவென்றால் எந்தக் கலைஞனுமே, தன் கலைக் கணங்களுக்கு அப்பால், அல்லது
அவற்றுக்கு முன்னும் பின்னும் சாமானிய மனிதனே. அவன் கலைஞன் அல்ல. கணங்கள் அவனைக் கலைஞன்
ஆக்குகிறது. ஒரு சாமானியனிடம் கலை பற்றிக் கேட்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு தொடர்ந்த
பயிற்சியில் ஒரு சாமானியன் கலைஞனாக வடிவ இறுக்கம் பெறுகிறான், என்கிற பொது நம்பிக்கை
வாழ்க. சாமானியனிடத்தில் இந்தக் கலைத் தெறிப்பு ஒரு திடீர்க் கிரண வீச்சு எனவே வெளிப்படுகிறது.
அது எல்லாரிடமும் இருக்கிறது என்றே தோன்றுகிறது. கண்ணதாசனிடம் ஒருவர் பேச்சுவாக்கில்
சொன்னாராம். “பாவம் அவர் ரொம்ப ஏழை. அவர் வேட்டியில் நெய்த நூலை விட தைத்த நூல் அதிகம்.”
கலை பற்றி அவன், கலைஞன் தொடர்ந்து
சிந்தித்தபடி யிருக்கிறான். வாழ்க்கை பற்றிய பிரக்ஞையை, வாழாமல் அதற்கான பயிற்சியுடனேயே
அவன் முடித்து விடுகிறானோ என்னமோ? கரையில் இருந்தபடி நீச்சல் பழகுதல் முடியுமா? இதனால்
ஆய பயன் என்ன? மனைவி கடைக்கு அனுப்பினால் ஒன்றிரண்டு சாமான்கள் வாங்க மறந்து இரண்டு
முறை போகிறான் அவன். சுற்றி யிருப்பவர்களின் ஆக இடைஞ்சல் இந்தக் கலைஞன். அவனை நாம்
பாவம் என்றால், அவர்களின் நிலைமை?... பரிதாபம் என்று சொல்லலாம். கலைஞனின் மனைவி புண்ணியவதி.
சரி. கலைஞனுக்கு இருபத்தி
நாலு மணி நேரமும் கலையை யோசிப்பதே நியதி. அதனால் கலையின் கூறுகள் பற்றி அவனுக்கு ஒரு
யோசனை ஓடத்தான் செய்கிறது. ஆனால் அவை உண்மையாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவன்
தன் கற்பனையிலான ஓர் உலகத்தை சிருஷ்டி செய்வது போலவே, கலை பற்றிய அவனது மதிப்பீடுகளையும்
தனது கற்பனையே என நம்ப இடம் இருக்கிறது. உண்மைகள் அல்ல அவை. உண்மை போன்றவை. உண்மை போன்றவை
உண்மைகள் ஆகா.
விக்கிரமாதித்தனின் ஒரு கவிதை இப்படிச்
சொல்கிறது.
இக்கரைக்கும்
அக்கரைக்கும்
அலைகிறான்
ஓடக்காரன்
அமைதியாய் ஓடுகிறது நதி.
ஓடக்காரனின் அலைச்சலும் தேடலும்,
ஒரு காட்சியில், இட வலமானது என்றால், அவன் ஆராய்ச்சியும் தேடலும் சிறியது என்பது பொருள்.
நதி, அதாவது வாழ்க்கை நீள்வசமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் நதிமூலம் நதிமுடிவு யார்
அறிவார்? அறிய முடியாதது அது. அதிலும் வாழ்க்கை அவரவர் அனுபவத்தில் இன்னும் இன்னுமாய்ச்
சுருங்கிப் போகிறது. காற்றடைத்த பலூனைக் கையில் வைத்தபடி பிரபஞ்சத்தை அடக்கிவிட்டதாக
அறைகூவல் விடுவதா?
எழுத்து என்பது சங்கு-வெள்ளம்.
அது மொத்த வெள்ளத்தின் கசிவு போலும் சிறு அளவே. வாழ்க்கை பரந்து பட்டதாய் இருக்கிறது.
அதன் முப்பரிமாண பிரம்மாண்டம் அளவிடற் கரியது. தான் அளந்து விட்டதாய் ஒரு கலைஞன் இறுமாப்பு
கொள்ள முடியாது. அப்படிக் கொக்கரிக்கிறவனை நம்பாதீர்கள். போலிகள் உண்மைகளை விட கன ஜோராய்
உண்மையின் அடையாளம் பெற்றுவிட வல்லவை. சீனத் தயாரிப்புகள் போல.
அவன், கலைஞன் எதையும் அளவிட
முயல்கையில், எத்தனைக்கு முயல்கிறானோ அத்தனைக்கு அவன் தன்னைப் பின்னிழுத்துக் கொள்ளவே
நேர்ந்து விடுகிறது. நான் தோற்றதை உணரவே இந்த என் முயற்சி எனக்கு லபிக்கிறது. அமைதியற்ற
மனம் தேடலைத் துவங்கி ஏமாற்றத்துடன் அடங்கிக் கொள்வதே அறிவான யாருக்கும் சாத்தியமா?
கற்றது எப்பவுமே போதவில்லை
என்றிருக்கிறது. கைம்மண் ணளவு. கை பெரிதாய் இருந்தாலும் விடுபட்டவை அளப்பரியது. இது
அவநம்பிக்கைக்குரியதா தெரியவில்லை. ஆனால் உண்மை அப்படித்தான் இருக்கிறது. அறிந்து கொண்டாப்
போன்ற தோற்றம் மனதுக்கு மகிழ்ச்சி தருவதாய் இருக்கிறது. அப்படி நம்ப நமக்குப் பிடிக்கிறது.
அது போதும் என அடங்கும் மனது சில கலைஞர்களுக்கு இருக்கலாம். எனக்கு இல்லை. ஒருவேளை
நான் கலைஞனே இல்லையோ என்னவோ!
சமீப காலமாக எனக்கு ஒரு மயக்கம்
ஏற்பட்டிருக்கிறது. நானே எனக்கு எதிர்த்திசையில் நடந்து போகிற மாதிரி அடிக்கடி தோன்றுகிறது.
இது கனவோ என்கிற குழப்பமும் எனக்கு இருந்தது. அல்லது இதுவரை குழம்பி யிருந்துவிட்டு,
இப்போது தான் எனக்குத் தெளிவு பிறக்கிறதோ என்னவோ? ஆனால் என் யோசனைகள் தவிரவும் உலகம்
தன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறதை நான் அறிகிறேன். இதுமாதிரி எத்தனையோ கோடி
யோசனைகளை அலட்சியம் செய்து ஓடுகிறது அந்த நதி. இது கனவாக இருக்க முடியாது. உண்மையில்
இந்த மயக்கத்தின் காரணம், உலகம் இந்த சமூகம் நிர்ணயித்த திசையில் அல்லாமல், அதாவது
மானுடத்தின் எதிர்பார்ப்புக்கு அல்லாமல் அதுதான் எதிர்த்திசையில் போய்க் கொண்டிருக்கிறது.
அதன் சீரற்ற தன்மைக்கு சீரானதொரு ஒழுங்கைத் தர மனிதன் போராடுகிறான். கலைகளின் பிறப்பிடம்
அதுவே. கலைமூலம் அதுவே. அப்படியானால், அது வாழ்க்கைக்கு எப்படி நியாயம் செய்ய முடியும்,
என்பதே கேள்வி. அது அநியாயம் செய்வது என்பதே நியாயமான பதிலாக இருக்குமா?
அந்த எதிர்த்திசை நகர்வு என்பது
இயற்கை. அது நமக்கு நல்லது அல்ல. தனி மனித அளவுகோல்கள் கூடாது. நாம் ஒரு சமுதாய மிருகம்.
சட்ட திட்டங்கள் நமக்கு உண்டு. விதிமுறைகள் உண்டு. ஒழுங்குகள் உண்டு. மனிதனை மானுடனாக்குதல்
என்கிற செயற்பாட்டில், கூடி வாழும் பிரயத்தனத்தில் எத்தனையோ அபத்தங்களைத் தாண்டி அதை
சாதிக்கிற வேகத்தில், எழுத்தாளன் சற்று குழம்பித்தான் போக வேண்டி யிருக்கிறது. சமூக
நடப்புகள் உண்மையா? அதன் லட்சியங்கள் உண்மையா? இந்த இரண்டுக்குமான ஊடாட்டமே வாழ்க்கை.
சதா இந்த இரு துருவங்களுக்கு இடையிலே அவன் தத்தளிக்கிறான்.
நவ கோள்களை கட்டங்களுக்குள்
அடக்கும் முயற்சியே எழுத்து. முடியுமா என்ன?
தவிரவும் சமுதாயம் என்பது
என்ன? கூடி வாழ்தல். சமுதாயத்தின் தூண்கள் கலைஞர்கள். அப்படி நினைத்துக் கொள்கிறார்கள்
என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். மேற் கூரையில்லாத தூண்கள் அவை. சமுதாய ஒழுங்குகளைக்
கட்டமைப்பவன் ஒரு தனி மனிதனாக, கலைஞனாக இருக்கிறான். இதுதான் அங்கே சிக்கல். ஒருத்தன்,
ஆகவே இங்கே மற்ற எல்லாரையும் ஓரளவு நிர்ப்பந்திக்கிறவனாக ஆகிப் போவது தவிர்க்க முடியாதது.
தத்துவங்கள்... தத்துவங்கள் என்பவை தாம் என்ன? நான் சொல்கிறேன், நீ கேள். அதுதானே?
அடக்குமுறையும் அதிகாரமும் சாராத தத்துவம் ஒன்று இருக்கிறதா என்ன?
வாழ்க்கை அவரவர் பார்வை. அவரவர்
அனுபவம். அது ஒருபோதும் பொது அனுபவம் என்று ஆக முடியாது. ஏனெனில், ஒரு வேடிக்கை போல,
உனக்குச் சரி, மிகச் சரி என்று தோன்றுவதை, தவறு, மிகத் தவறு என்று சொல்லவும் இந்த லோகத்தில்
ஆட்கள் ஜீவித்திருக்கிறார்கள். கடவுள் உண்டு, என்று ஒருவன் சொல்கிறான். மற்றவன் இல்லவே
இல்லை, என்கிறான். உண்மை எது? பொய் எது? லோகம் உண்மையா பொய்யா? அது பொய் என்பது உண்மையா.
பொய் அது என்பதும் பொய்யா... என்றால் அது இரண்டுமாக இருக்கிறது. எல்லாமாக இருக்கிறது.
நாணயம் போன்றது அது. இரு பக்கங்கள் அதற்கு. பூவும் முகமும். சிலர் அதன் அந்தப் பக்கம்
பார்க்கிறார்கள். சிலர் இந்தப் பக்கமாக அதைப் பார்க்கிறார்கள். இங்கே இரவு என்னும்
போது, அங்கே அமெரிக்காவில் பகல். பூமியில் இது பகலா இரவா, என்ற கேள்விக்கு நமது பதில்கள்
சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் அமையலாம். இரண்டுமே சரி. இரண்டுமே தவறு என வாதிடவும்
வழி இருக்கிறது.
ஆகா தர்க்கம். தர்க்கம் வேடிக்கையானது.
அது இரண்டு விதமாகவும் நம்மைக் கீறும் கத்தி போன்றது. எப்படியும் தர்க்கம் செய்யலாம்.
அதன் காரணம் இந்த பூமியில் நாம் புரிந்து கொள்கிற இருநிலைத் தன்மை என்று தோன்றுகிறது.
கடவுள் பற்றிய ஒரு தர்க்கம் அறிந்திருக்கலாம். யாராலும் தாண்ட முடியாத ஒரு சுவரை கடவுள்
கட்டுவாரா? - என்பது கேள்வி. இதற்கு எந்த பதிலும் சரியாக வராது. கட்டுவார், என்ற அடுத்த
நிமிடம், அப்படி அவர் கட்டிய சுவரை அவரால் தாண்ட முடியுமா, என்று அடுத்த கேள்வி எழும்.
அவரால் தாண்ட முடிந்தால் அவர் கடவுள். ஆனால் அவர் யாராலும் தாண்ட முடியாத சுவரைக் கட்டியவர்
ஆகார். அவரால் முடியாத காரியம் எதுவும் இல்லை, என்ற அவரது ஆகிருதி பங்கப்படும்.
ஒரு வேடிக்கையான தர்க்க உதாரணம்
சொல்லி விடலாம். கணவனிடம் மனைவி குறைப் பட்டாளாம். “நான் எது சொன்னாலும் மறுத்தே பேசறீங்க?”
அவன் யதார்த்தமாக “இல்லையே” என்றானாம். அவள் சொன்னாள். “பாத்தீங்களா. இப்பவும் மறுத்து
தான் பேசறீங்க.”
கதவு பாதி திறந்திருக்கிறது,
என்பதற்கும், கதவு பாதி சாத்தி யிருக்கிறது என்பதற்கும் காட்சி ஒன்று தானே?
ஒரு அரசனிடம் இரு ஜோசியர்கள்
போயிருந்தார்கள். ஒருவன், அவர் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, “நீங்கள் இறக்கு முன் உங்கள்
உறவினர்கள் எல்லாரும் இறந்து விடுவார்கள்” என்றானாம். அரசருக்குக் கோபம் வந்துவிட்டது.
“யாரங்கே, இவனைச் சிறையில் அடையுங்கள்,” என்று உத்தரவிட்டாராம். அடுத்த ஜோதிடனுக்கு
பயமாகி விட்டது. அவன் அரசர் ஜாதகத்தைப் பார்த்தால் முதல் ஜோதிடன் சொன்னது உண்மை, என்று
அவனுக்குத் தெரிந்தது. அவன் சுதாரித்துக் கொண்டு, “அரசே, உங்கள் உறவினர்கள் எல்லாரையும்
விட உங்களுக்கு ஆயுசு அதிகம்” என்று சொல்லி அரசரிடம் வெகுமதிகளும் பெற்றுத் திரும்பினான்,
என்று ஒரு கதை உண்டு.
ஆக ஒரு விஷயத்தை அறிதல், அதை
வெளிப்படுத்தல் என இரண்டு நிலைகளிலும் எழுத்தாளனுக்கு சவால் இருக்கிறது. இதை எப்படி
உள்வாங்கிக் கொள்கிறான் வாசகன், அது தனிப் பெருங் கதை. உண்மை. அது தர்க்கம் கொண்டு
நிறுவப்பட முடியாதது. அவரவர் உணர்ந்தது உண்மை. ஹா ஹா, அவரவர் உணர்ந்தது அவரவர் அளவில்
உண்மை. நமது சிந்தனை என்ற ஏணி கொண்டு எத்தனை உயரம் ஏறிவிட முடியும்? புரிந்தது கொஞ்சம்.
அதில் சொல்ல முடிந்தது அதனினும் சிறிது. அது மொழியிலும் எத்தனை பலவீனமாகி விடுகிறது
சொல்லவந்த விஷயம். ஒன்றை வெளிப்படுத்தும் போதுதான் மொழியின் போதாமையை நாம் அறிய முடிகிறது.
ஒரு சொல்லில் வெளிப்படும் பாவம், உணர்ச்சித் தெறிப்பு மொழியில், அது சாத்தியப்பட சாத்தியமே
இல்லை.
வாழ்க்கை அதன்வழி அனுபவம்,
அதற்கு எல்லை இல்லை. அதை எல்லைக்குள் அடக்க, கட்டுப்படுத்த நினைக்கும் கணத்தில் அது
திமிறி வெளியே ஓடி விடுகிறது. பலூனில் காற்று அடைப்பவர்களே கலைஞர்கள். பிடித்தது போக,
அது ஒரு பொருட்டே அல்ல என்பது போல வெளியே இருக்கிறது வளி மண்டலம். வாழ்க்கை அப்படியாய்
வெளியே நின்று நம்மை வேடிக்கை பார்க்கிறது.
சீசா பூதம் அல்ல அது.
இலக்கியம் என்றால் என்ன? அது
சாமானியன் இடத்தில் உள்ள அசாதாரணங்களைச் சொல்வது. அதேபோல அசாதாரணர்களிடத்திலான சாதாரணங்களை
அடையாளங் காட்டுவது. இரண்டுமே இலக்கியம் தான், என்கிறார்கள். இன்னொரு விதத்தில் சொன்னால்,
சின்ன விஷயத்தை விளக்கமாகப் பேசும் சமத்காரம் இலக்கியமாகிறது. பெரிய விஷயத்தை ஆக எளிமையாய்ச்
சொல்கிற கெட்டிக்காரத்தனம் இலக்கியம், என்றும் சொல்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் இயல்பாய் உள்ளதை
இயல்பாய்ச் சொல்வது இலக்கியம் ஆகாது.
ஆனால் வாழ்க்கை இயல்பாய் மாத்திரமே
உள்ளது. அதாவது, இலக்கியம் பொய் சொல்கிறது. இதைக் கொண்டாடுவதா?
வாழ்க்கையைக் கலையாக அடையாளப்
படுத்தும் முயற்சியிலும் உலகளாவிய அளவில் நிகழ்ந்தவற்றை நாம் பார்க்கிற போது, மானுடப்
பொது அறம் முன்னிறுத்தப் பட்டது. வாழ்க்கை எல்லார்க்குமானது, என எடுத்துத் தரப் பட்டது.
அரசனின் கதையாக அது இருக்கலாம். செல்வந்தனின் கதையாக இருக்கலாம். ஒடுக்கப் பட்டவர்களின்
கதை அங்கே இல்லை என்கிற விமரிசனம் சரியாகவும் இருக்கலாம். ஆனால் அவையும் இருந்தன அந்தக்
காலத்தில், நாட்டுப்புறக் கதைகளாக, செவிவழிக் கதைகளாக அவை இருந்தன. பழமொழிகள் இருந்தன.
சொலவடைகள் இருந்தன. உவமைகள் இருந்தன. ராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திர புராணம் என்று
புழங்கி வந்த கதைகளிலும் எத்தனை கிளைக் கதைகள், உட் கதைகள் இருந்தன. அவை கதை சுவாரஸ்யத்திலும்,
செய்தியளவிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது, அப்படியானவை தான் காலங் கடந்து நம்மை
வந்தடைய முடியும். உருவகக் கதைகள் இருந்தன. நான்கு எருதுகள் ஒன்றாய் மேய்கையில் சிங்கம்
ஒன்று வேட்டையாட வருகிறது. அவை ஒன்றாகச் சேர்ந்து எதிர்க்கும் போது சிங்கத்தால் அவற்றை
ஒன்றும் செய்ய முடியவில்லை. எருது ஒன்றைத் தனியே பிரித்து அது வேட்டையாடி விடும்...
என்பது போன்ற கதைகள். வாழ்க்கை தர்மங்கள், ஒழுக்கங்களை, ஒழுக்கக் கேடுகளால் வந்த சீர்குலைவை
அவை வலியுறுத்திப் பேசின.
உலகம் பூராவிலும் இப்படித்தான்
இருந்தது இலக்கியம். லெ மிசரபிள்ஸ் - கதை யாரால் மறக்க முடியும்? தன் வீட்டில் தங்கி,
அவரிடமே வெள்ளித் தட்டைத் திருடிப் போனவனைப் போலிஸ் பிடித்து அவரிடம் கூட்டி வரும்போது,
அவர், தான் அதை அவனுக்கு அன்பளிப்பாக அளித்ததாகக் கூறி திருத்தும் பாதிரியார் கதை.
ஷேக்ஸ்பியரின் ‘கிங் லீயர்’ நாடகத்தில், அரசனின் மூன்று பெண்களில், தன் மேல் மிகப்
பாசம் கொண்டவள் யார், என்று அவன் யோசிப்பதாகக் கதை. அறத்தின் பால் நின்று பேசின அவை.
கதைகளின் களம் கடவுளர்களைக்
கடந்து, அரசர்களைத் தாண்டி, செல்வந்தர்களின் கதை (சிலப்பதிகாரம்) மெல்ல சமானியனை நோக்கிப்
பயணப் பட்டது. நமது சங்க இலக்கியங்களில் தனி மனித அடையாளங்களே இல்லாமல், தலைவன், தலைவி
என்று இலக்கியம் இயங்கியது மிக வியக்கத் தக்க விஷயம் என்று சொல்ல வேண்டும். மனிதனைப்
பொதுவாகப் பார்க்கும் பாங்கு, அறச் சிந்தனை மேலோங்கிய உச்ச நிலையாக இதைப் பார்க்க முடிகிறது.
இந்தப் பாரம்பரியம் தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி காலங்கள் வரை வந்ததாக அடையாளங்கள்
காட்ட முடிகிறது.
பிறகு வந்த யதார்த்த வாதம்
தனி மனித ஒழுக்கங்களை மாத்திரம் அல்லாமல், ஒழுக்கக் கேடுகளை முன்வைப்பதும் இலக்கியம்,
என்று போக்குகள் மாற ஆரம்பித்தன. இக்கால கட்டங்களில் சமூகத்திலும் எத்தனையோ மாற்றங்கள்.
கிராமங்கள் இல்லை. நகர் மயமாதல் ஆரம்பம் ஆகிவிட்டது. தனி மனித அடையாளங்கள் ஊதிப் பெருக்கப்
பட்டன. நரஸ்துதி காலம். வீடுகளில் திண்ணை வைத்துக் கட்டப்பட்ட காலம் விடைபெற்றுக் கொண்டது.
தனித் தனி வீடுகள் மாறி அடுக்கக வாழ்க்கை. ஒரு வீட்டின் பிரச்னை அடுத்தவனின் தலையில்
கட்டப்பட்டது. மேல் வீட்டில் குளியல் அறை ஒழுகினால் கீழ் விட்டுக்காரனுக்கு அவஸ்தை
என்கிற காலம்.
மனிதனின் மதிப்பீடுகள் வீழ்ந்து
பட்டன. சுயநலம் தலைவிரித்து ஆடுகிற காலம். அதற்குப் பல காரணங்கள். நுகர்வு கலாச்சாரம்
என்று தனது பொருளை அடுத்தவர் தலையில் கட்ட கவர்ச்சியான விளம்பரங்கள். கவர்ச்சியான அதன்
வடிவமைப்புகள். அதன் கவர்ச்சியான பொதிவுகள். இருள் ஆக்கிரமித்த பொழுதுகள் போய் வெளிச்சத்தின்
ஆட்சிக்காலம். அது முன்னிலும் உயர்ந்த வாழ்க்கையை நமக்குத் தந்திருக்க வேண்டும்.
அறிவு கனன்று, சாதிகள் சமூகத்தின்
மோசமான அம்சம் என்று அடையாளம் காணப்பட்ட அடுத்த நிமிடமே சாதிச் சங்கங்கள் துவங்கப்
பட்டு விட்டன. சாதியை ஒழிப்பதான பேரிரைச்சலில் தங்கள் சாதிசார்ந்து மேலும் இறுகிப்
போகிறோம் நாம். தனது பாதுகாப்பு வளையம் என்று ஒன்றை சாதியாலோ, வேறு எதோ சுயநலமான காரணத்தினாலோ
உருவாக்கிக் கொண்டு, அப்படி நம்பி அடுத்தவரை சந்தேகமாகவும், எதிரியாகவும் பார்க்கும்
போக்கு சமூக வாழ்க்கையில் எப்படி புகுந்து கொண்டது.
ஆன்மிகத்திலும் சாதியின் தலைவிரித்தாட்டம்
புகுந்து கொள்ள முடிந்தது. அந்தந்த சாதிக்கு தனித்தனி சாமியார்கள். கீழ்த்தர நடுத்தர
பணக்கார வர்க்கங்கள்... என்று வகைமாதிரிக்கு தனித் தனி சாமியார்கள். கார்ப்பரேட் சாமியார்கள்.
முதலாளி தொழிலாளி என்றிருந்த கம்யூனிச காலம் மாறிவிட்டது. இப்போது தொழிலாளிகளை நிரந்தரமாக
வேலைக்கு வைக்கும் உத்தேசம் யாருக்கும் இல்லை. சப் கான்டிராக்ட் என்று விட்டு, அன்றன்றைய
தேவைக்கு ஆள் எடுக்கிறார்கள். இந்த சப் கான்டிராக்டர், மேலிடத்துக்குத் தொழிலாளியாகவும்,
கீழிடத்துக்கு முதலாளிகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறான். கம்யூனிசத்துக்கு சவால்
விட்டபடி. தொழிலாளிகளிடமும் முன்பு போன்ற வேலைப் பிடிப்போ அக்கறையோ இல்லை. இருக்கிறதா
என்ன?
இந்த அவலங்களை யெல்லாம் பிரதிபலிக்கிற
ஆவேசத்தில் எழுத்தாளன் எவ்வளவு தூரம் விலகி வந்திருக்கிறான், என்பது குறிப்பிடத் தக்கது.
அந்தப் புரட்சி பாவனையால் வந்த விளைவுகள் என்ன? எழுத வேண்டாம் என்று முன்பு தவிர்க்கப்
பட்ட விஷயங்கள் எல்லாம் தைரியமாகவும், கூச்ச நாச்சமின்றியும், தான் அடிமைத் தளைகளில்
இருந்து விடுபட்ட தோரணையில், எல்லாம் வெட்ட வெளிச்சமாக்கப் படுகின்றன. வசைச் சொற்கள்
இலக்கியத்தில் வழக்கு அடையாளம் எனப் புகுந்தன. பெண்கள் உடல்மொழிக் கவிதைகள் எழுத வந்தார்கள்.
செய்திகளே கூட இசைப் பின்னணியுடன், திரைப்படம் போல செய்திச் சானல்களில் வழங்கப் படுகின்றன.
வக்கிரங்கள் பேயாட்டம் போடும் காலம். துரோகங்கள் சார்ந்து யாரும் அதிர்ச்சியோ ஆவேசமோ
அடையாத அளவு சகஜப்பட்டு வருகின்றன. அதன் ஆக முக்கியச் சான்றுகள் என அரசியல்வாதிகள்
வலம் வருகிறார்கள். லஞ்சப் புகாரில், ஊழல் வழக்குகளில் அவர்கள், வெற்றி என்கிறாப் போல
இருவிரல் காட்டியபடி போலிஸ் வேனில் ஏறுகிறார்கள்.
சாக்கடைகளுக்கு வெளிச்சம்
எதற்கு?
சுற்றுச் சூழல் மாசு பற்றிப்
பேசிக் கொண்டிருக்கிறோம். அதைச் சமாளிக்கிற திட்டங்களை யாரும் முன்னெடுக்கிறதாகத் தெரியவில்லை.
எல்லாமே குழம்பிக் கிடக்கிறது இங்கே. ஒரு செயலை நியாயப்படுத்த ஒருவன் அதை மக்கள் முன்னால்
ஒரு விதமாக முன்வைக்கும் போதே, அதை எதிர்த்து அடுத்தவன் பிரச்சாரம் செய்கிறான். எந்த
நிகழ்வுமே, எந்த விஷயமுமே அதன் உண்மையான வீர்யத்துடன் மக்களிடையே வந்து சேர்வதே இல்லை.
செய்திகள் குழப்பமான கருத்துகளையே பரப்புகின்றன. அப்படி அவை கவனமாகப் பார்த்துக் கொள்ளப்
படுகின்றன.
முன்னொரு காலத்தில் அறம் இருந்தது.
அது இலக்கியங்களில் வலியுறுத்தப் பட்டது. நியாயவான்கள் இலக்கிய அளவிலேனும் கௌரவிக்கப்
பட்டார்கள். கொண்டாடப் பட்டார்கள். அதில் பத்துக்கு நாலு பேர் ஐந்து பேர் உண்மையான
மனிதர்களாக இருந்தார்கள். அவர்கள் அப்படியே வாழவும் செய்தார்கள். சுற்றுச் சூழல் மாசு,
நகர்மயமாதல், புவி வெப்பமயமாதல், நிலத்தடி நீர், பெட்ரோல், உணவுப்பொருட்கள் விளைச்சல்
என குறைந்துகொண்டே வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டே தான் இருக்க முடிகிறது. தண்ணீரை
அவரவர் தனித்தனி பாட்டில்களில் தனக்கு என பத்திரப் படுத்தி எடுத்துப் போகும் காலம்.
சமுதாயம் என்ற வார்த்தை அர்த்தமிழந்து போன காலம். சுயநலம் தவிர்க்க முடியாதது, என்று
ஆகிவிட்ட காலம். சக மனிதன் மேல் அன்பும் பாசமும் குறைந்து போன காலம்.
எழுதி இதைச் சீர் செய்கிற
அக்கறையற்ற இலக்கியம். யதார்த்தம் என்ற பெயரில் குப்பையைக் குப்பையாய்ச் சொல்வோம்.
இந்த எதிர்த்திசைப் பயணத்தை அறிந்திருக்கிறோமா நாம்? இனி அந்தவொரு காவிய காலம் இலக்கியத்தில்
சாத்தியப் படுமா? இனி இலக்கியத்தின் எதிர்காலம் தான் என்ன?
பொது மனிதனை நோக்கி அடையாளப்
படுத்தப் படாமல் இப்படி பெண் இலக்கியம், தலித் இலக்கியம் என்று உட்புகுந்ததால் அதன்
பிரம்மாண்டம் சிறைப்பட்டு விட்டதா? எனில் இலக்கியம் பொது மனிதனை நோக்கி, சமுதாய மனிதனை
நோக்கித் திரும்ப வரும் காலம் எப்போது? வருமா? அது சாத்தியமா?
அது தேவை இல்லையா?
அறம் வலியுறுத்தப் படாத போது,
லட்சியங்கள் கேலியாடப் படுகிற போது இலக்கியத்தின் பாடுபொருள் தான் என்ன? அதல்லாது இலக்கியத்தின்
பணி தான் என்ன? எழுத்தாளனுக்கு சமுதாயக் கடமைகள் என எதுவும் வேண்டாமா? இருந்தால் அது
எள்ளி நகையாடப் படுமா? நுகர்வு கலாச்சார அதிகாரத்தின் அடியில் வாழ்க்கை அதன் தரம் உயர்வதான
பிரமையில் கீழ் நோக்கிச் செல்வதை என்ன செய்வது? நம்மைப் பிடித்த பிசாசுகளை எப்படி விரட்டுவது?
இவற்றின் முடிவு எப்படி?
மீண்டும் இயற்கையை வணங்கும்
அந்த நாளுக்கு, கலாச்சாரத்தால் மனிதர்கள் ஒத்திசையும், இழைந்து பழகும் காலத்துக்குத்
திரும்ப வேண்டும். இது எனது கனவு. வேர்களை நோக்கிய பயணம் இது. வேர்களற்று அந்தரத்தில்
பிடுங்கி எறியப்பட்ட செடிகள் நாம். வெயிலில் வாடி உலர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.
பொய்யைச் சொல்லி உண்மையாகாதா
என்று எதிர்பார்த்தது அந்தக் கால இலக்கியம். உண்மையைச் சொல்ல வந்தபோது இலக்கியம் அதன்
தரத்தில் இருந்து சறுக்கலாகுமா? இலட்சிய வாதம் தாண்டி அலட்சிய வாதமா இது? அறிவில் கலப்படம்
ஆபத்தானது. கவலைக்குரியது.
•
மார்ச் 10, 2019 அன்று ‘குவிகம் இலக்கிய
வாசல்’ அளவளாவல் நிகழ்ச்சியின் எழுத்தாளராக நான் கலந்துகொண்டு வாசித்தளித்த கட்டுரை
இது. எனது கதைகளைப் பற்றி நானே பேச வேண்டாம், என்றிருந்தது. நம்மைப் பற்றி நாமே என்ன
பேசுவது? அது மற்றவர் வேலை அல்லவா, என்றிருந்தது. ஆகவே உரையில் என் கதைகளைப் பற்றிய
குறிப்புகள் இல்லை. ‘பழமை போற்றும்’, நிகழ் காலத்தைத் தூற்றும் கட்டுரை, என்கிற மாதிரி இது அமையாது கவனப்பட்டேன். இரண்டு
மணி நேரம் போனதே தெரியாத அளவு சிறப்பாக எல்லாரும் கலந்துரையாடினார்கள் என்னோடு. உவப்பத்
தலை கூடி உள்ளப் பிரிந்தோம். கட்டுரையில் விட்ட பகுதி, ரகசியப் பகுதி ஒன்று. இலக்கியத்திலும்
இப்படி சாதிகள் போன்ற குழுக்கள் இருக்கின்றன என்பதே. இவர்கள் எழுத்தை அவர்கள் படிக்கவும்
மாட்டார்கள். கொண்டாடப் போவதும் இல்லை. வேத்து முகம் காட்டும் போக்கு இருக்கிறது. அதுவும்
நிகழ்காலத்தில் ஏற்பட்ட மாற்றம் எனப் பதிவு செய்ய நினைத்து, வேண்டாம் என தவிர்த்து
விட்டேன். அது அப்படித்தான் தமிழில் இருக்கும் அல்லது இருக்கிறது.
*
storysankar@gmail.com
9789987842
/ 9445016842
No comments:
Post a Comment