part 32
பின்கதைச்
சுருக்கம்
எஸ். சங்கரநாராயணன்
வாசித்துக்
கொண்டே வரும் போது அநேகப் படைப்புகளை, புத்தகங்களைக் கண்ணோட்டிக் கடந்து போகிறோம் என்றாலும்,
சில படைப்புகளைக் கண் விரியப் பார்க்க நேர்ந்து விடுகிறது. பொற்கணங்கள் அவை. அந்த எழுத்தாளனின்
பொற்கணமாகவும் அது அமைந்து, அதை அவன் கைமாற்ற நேர்ந்திருப்பதை ஓர் உவகையுடன் உள்ளங்கையில்
ஏந்தி அழகு பார்க்க முடிகிறது நம்மால்.
நான் ‘தருணம்’ என ஒரு சிறுகதைத் திரட்டு கொண்டு வந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் சில தருணங்கள் அமைந்து விடுகின்றன. அந்தத் தருணங்களுக்கு முன், அந்தத்
தருணங்களுக்குப் பின் என நாம் நம் வாழ்க்கையையே திரும்பிப் பார்க்கிற அளவில் ஓர் ஆழமான
பாதிப்பை அத் தருணங்கள் வழங்கிச் செல்கின்றன. நிவேதிதா பதிப்பகம் வெளியிட்ட சிறுகதைத்
திரட்டு அது.
அவை தருணங்கள் சார்ந்த கதைகள். இங்கே நான் சொல்ல வருவது வேறு.
அந்தத் தருணங்களின் மூலமோ, அல்லது எழுத்தாளன் தன் பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தினாலோ,
எழுத்துப் பயிற்சியிலோ, சிந்தனை நீட்சியிலோ, சில சுய கேள்விகளையோ, அல்லது பொதுவான கேள்விகளுக்கான
பதில்களையோ திடுமெனக் கண்டடைகிறான். சில கேள்விகளைத் தானே கேட்டுக்கொண்டு அதுசார்ந்து
ஒரு யோசனைவட்டம் அடித்துக் கரையேறி வருவதாகவும் அந்த முயற்சி இருக்கலாம். அந்த எழுத்தாளன்
தனியே முயற்சி செய்யாமலேயே அவன் கதையில் நமக்குத் தற்செயலாக, வாசக அனுபவமாகக் கிடைப்பதும்
உண்டு. அப்படிப் பட்ட ‘கண்டைந்த இடங்களை’ வாசக உலகம் ஆச்சர்த்துடன் குறித்துக் கொள்கிறது.
எனது ‘தொட்ட அலை தொடாத அலை’ நாவலே இப்படியொரு சிந்தினையின்
நீட்சி தானே? பிறக்கும் போது ஒரு குழந்தை எந்த அடையாளமும் அற்று பிறக்கிறது. சாதியோ
மதமோ உறவுகளோ... எதுவும் இல்லை. என்றானால் அவனது மரணத்தை அப்படியே எந்த அடையாளமும்
அற்று விட்டுவிட வேண்டாமா?... என்று என்னில் தோன்றிய கணத்தில் ‘தொட்ட அலை தொடாத அலை’
நாவல் மெல்ல உருப் பெற்றது.
ஜெயமோகனின் ‘வாரிக்குழி’ வாசித்த அந்த நிமிடம் மனம் மொட்டவிழ்ந்தாப்
போன்றிருந்தது. மனிதனின் தேவைகளுக்கு எனப் பழக்கப்படுத்தப் பட்ட யானையைத் திரும்பக்
காட்டுக்குள் விட்டுவிடுகிறார்கள், அதன் மன ஆசுவாசத்துக்கு. அது மனிதனின் ஆணைகளுக்குக்
கட்டுப்பட்டது என அதற்கு நினைவுறுத்த, அது அதை மறக்காமல் இருக்க, அதன் கழுத்தில் மணி
கட்டப்பட்டு அனுப்பி வைக்கப் படுகிறது.ஆனால் காட்டில் தன் சுதந்திரத்தை உணர்ந்த யானை,
அந்த சுதந்திரத்தை இழக்க விரும்பாமல் அந்த மணியை எப்படியோ அறுத்து எறிந்துவிட்டு காட்டுக்குள்
பதுங்கிக் கொள்கிறது. அதன் பாகன் அதைத் தேடி வருகையில் அந்த மணி பாகனின் காலில் தட்டுகிறது.
அவனுக்கு யானையின் தற்போதைய நிலை புரிகிறது. இந்த சமயத்தில் யானையின் முன் அவன் ஆணைகள்
எடுபடாது. அவனையே அது தாக்கி விடும், என்று தெரிகிறது. அந்தக் காட்டில் யானையைத் தேடி
அவன் போகிறதும், அதை தன் வசியப்படுத்தி, மிரட்டி, அடிமைப்படுத்தி அதன் மேல் அமர்ந்து
ஊர் திரும்பவுதுமான கதை. மனிதன் மகத்தானவன், என்ற தோள்ப் பூரிப்பு தந்த கதை அது. இப்படி
உள்ளீடான மதிப்புகள் தற்செயலாகவோ, கவனமாகவோ கதையில் காணக் கிடைக்கும் போது அந்தக் கதை,
வயசுக்கு வந்த பெண் போல தனி மினுமினுப்பு காட்டுகிறது.
எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ‘தி ஓல்ட் மேன் அன் தி சீ,’ அதேபோலவே
மனிதன் மகத்தானவன், என உரத்துக் குரல் எழுப்புகிற கதை. வயதான பெரியவர் ஒருவர்தொடர்ந்து
எண்பது நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்கப் போகிறார். ஒரு மீன் கூட அவருக்குக் கிடைக்கவில்லை.
எண்பத்தியொன்றாவது நாளும் போகிறார் என்பது கதை. அன்றைக்கு அவர் தூண்டிலில் மீன் ஒன்று
சிக்குகிறது. அவரது தோணியை விடப் பெரிய மீன் அது. தூண்டிலில் அதன் கனத்தை அவர் உணர்கிறார்.
தனி ஒருவராக அவர் அதைப் பிடிக்க வேண்டும். பயம் சிறிதுமற்ற மீனாக அது இருக்கும். அது
கலவரப்பட்டால், கோபப்பட்டால் வாலால் ஒரே அடியில் படகைக் கவிழ்த்து விடும். அது திகிலடையாமல்
மெல்ல மெல்ல அதை நீரின் மேல்மட்டத்துக்கு வரவழைக்க அவர் முயல்கிறார். தொண்டையில் முள்
சிக்கிய மீன் மிக அமைதியுடன் தன் பாட்டுக்கு நீந்திப் போகிறது, படகை இழுத்துக் கொண்டு.
அதை நிறுத்த அவரால் முடியாது. மீனோடு அவரும் படகுடன் அது
போகும் வழியில் கூடவே இரண்டு நாட்கள் பயணிக்கிறார். மெல்ல மெல்ல ஆது சோர்வடைகிறது.
அதன் நீந்து வேகம் மட்டுப்படுகிறது. சிறிது சிறிதாக அதை நீர்மட்டத்துக்கு, மேலே மேலே
வரவழைக்கிறார். பிறகு அதைக் கலவரப் படுத்தி அது விஸ்வரூப தரிசனம் போல நீரில் மேலே துள்ளுகையில்
அதன் நுரையீரலுக்கு வேல் பாய்ச்சி அதைக் கொல்கிறார். இரண்டு நாட்களாக பெரும் கடலும்
அந்த மீனுமாக, அவரது நண்பனாக அவருடன் பயணித்த அந்த மீன். பயம் சிறிதுமற்ற அந்த மீனைக்
கொன்றதில் அவர் வருந்துகிறார்.
இறந்த மீனைப் படகில் பக்கவாட்டமாய்க் கட்டிக்கொண்டு அவர்
கரை நோக்கித் திரும்புகிறார். வரும் வழியில்
தண்ணீரில் சிந்திக் கொண்டே வரும் ரத்த வாசனைக்கு ஏழு சுறாக்கள் புறப்பட்டு வந்து
வந்து அந்தப் படகில் கட்டப் பட்டிருக்கிற மீனை வேட்டையாடுகின்றன. அவர் அத்தனை சுறாக்களையும்
தனியொருவனாகச் சமாளிக்க வேண்டி யிருக்கிறது. அவை ஒவ்வொன்றும் தாங்கள் அதைக் கடித்து
அள்ளியெடுத்தது போக படகின் பக்கவாட்டத்தில் இப்போது அந்தப் பெரிய மீனின் வெறும் எலும்புக்
கூடு மாத்திரமே மிச்சம் இருக்கிறது. உடல் தளர மனச் சோர்வுடன் கரை அடைகிறார் பெரியவர்.
மனிதன் வெற்றி கொள்ள முடியாதவன், என அழுத்தம் திருத்தமாகச்
சொல்லிச் செல்கிறார் ஹெமிங்வே. இதை நான் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தேன். (பெரியவர் மற்றும் கடல்.)
ஹெமிங்வேயின் இந்த, ‘மனிதனின் போராட்டம்’ மற்றும், ‘மனிதன்
மகத்தானவன்’ என்கிற அடிநாதத்தை வேறு விதமாக தன் மனசில் எதிரொலியாகக் காண்கிறார் யான்
மார்ட்டல். (கனடா.) அவரது ‘லைஃப் ஆஃப் பை’ கதை, இதே போன்றதொரு நெருக்கடியினைக் கையில்
எடுத்துக் கொண்டு, ஆனால் வேறு செய்தி சொல்கிறது. கூண்டில் புலி ஒன்றை ஏற்றிக்கொண்டு பயணிகளுடன் கிளம்பும்
கப்பல் ஒன்று விபத்தாகிறது. கப்பலில் இருந்து ஒரு படகில் தப்பித்துப் போகும் ஒரு சிறுவன்.
எதிர்பாராமல் அவனுடன் அதே படகில் வரும் அந்தப் புலி. இருவருக்குமான, நீயா நானா, போராட்டமாகக்
கதை சொல்கிறார் மார்ட்டல்.
ஹெமிங்வேக்கு மீன். இவருக்குப் புலி. அது கடலில் கூடவே பயணம்
வருகிறது. இங்கே புலி படகில் கூடவே வருகிறது. ஆனால் மார்ட்டல், அந்தப் புலி சதா சர்வ
காலமும் இவனை விழிப்புடன் இருக்க வைத்து. இவனுக்கான உயிராசையையும், போராட்டத்தையும்
தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருக்கிறதால் தான் இத்தனை காலம் தாக்கு பிடித்து, அவனால்
கடைசியில் தப்பிப் பிழைத்துக் கொள்ளவும் முடிகிறது... என்று சொல்கிறார். எந்த சவாலும்,
அதை எதிர்கொள்கிற நெருக்கடியில் மேலும் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது.
அந்தப் புலி இல்லாத அளவில் இவனுக்கு, தன்னளவிலேயே உயிர் பிழைத்துக் கொள்ளும் வாய்ப்புகள்
பற்றி அவநம்பிக்கை மேலிட்டு விடும், என்கிறார் மார்ட்டல். அது ஒரு பார்வை தான். ‘லைஃப்
ஆஃப் பை’ அருமையான திரைப்படமாக வந்துள்ளது. அநேகம் பேர் பார்த்திருக்கவும் கூடும்.
முன்பு ஓரிடத்தில் குறிப்பிட்டது போல, வைக்கம் முகம்மது பஷீரின்
‘மதிலுகள்’ ஓர் அருமையான கதை. சுதந்திரப் போராட்டத்தில்
சிறை செல்கிறார் பஷீர். தோட்ட வேலை தருகிறார்கள் அங்கே அவருக்கு. சிறைக் கதவுகளுக்குள்ளே
நாள் பூராவும். தனிமை அவரை வாட்டுகிறது. ஒரு சமயம் அவர் ஒரு ரோஜா நட்டு வளர்த்து வரும்
செடிக்குத் தண்ணீர் ஊற்றுகையில், அதை ஒட்டிய மதில் சுவருக்கு அப்பாலிருந்து கேட்கிறது
ஒரு சிரிப்புச் சத்தம். பெண் ஒருத்தியின் சிரிப்பு. மதிலுக்கு அந்தப் பக்கம் பெண்கள்
சிறை என அவர் அறிகிறார். அந்தச் சிரிப்பு அவரை சிலிர்க்க வைக்கிறது. அந்தப் பெண்ணோடு
இங்கிருந்து அவர் உரையாடுகிறார். அவளும் இந்தச் சிறைவாசத்தின் ‘வாசனையற்ற’ தனிமையை
உணர்ந்தவளாக இருக்கிறாள் போலிருக்கிறது. இருவரும் குறிப்பிட்ட நேரத்தில் அங்கே வருவதும்
ஒருவருக்கொருவர் வேடிக்கையாகவும் காதல் வயப்பட்டும் பேசிக் கொள்கிறார்கள். ஒருத்தரை
ஒருத்தர் முகமே பார்க்காத காதல். எப்படியாவது அவளை சந்தித்து விடவேண்டும் என்று அவர்
அலைபாய்கிறார். அவளுக்கும் அப்படியொரு வேகம் இருக்கிறது. ஆபாசம் விரசம் எல்லாம் கலந்து
அவர்கள் விரகதாபத்துடன் நெருக்கமாகப் பேசிக்கொள்கிறார்கள். எப்படியாவது ஒருத்தரை ஒருத்தர்
சந்தித்து விட வேண்டும், என அவர்கள் தவிக்கிறார்கள். சிறை டாக்டர் வருகிற ஒரு நாளில்
நீ டாக்டரைப் பார்க்கிற சாக்கில் வா, நான் இங்கேயிருந்து டாக்டரைப் பார்க்கிற சாக்கில்
வருகிறேன். நாம் சந்தித்துக் கொள்ளலாம்... என்கிறார் அவர். ரெண்டு பேருமே அந்த நாளை
ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். சரியாக டாக்டர் வரும் நாளுக்கு முந்தைய
மாலை அவரை விடுதலை செய்து விடுகிறார்கள். முடிகிறது கதை.
எனக்கு மிகவும் பிடித்த கதை இது. ஒரு திருப்பம். நல்ல கதைஞனாக
இது இப்படித்தான் முடியும், என யூகிப்பது கடினம் அல்ல. ஆனால் இதில், பஷீர் அறிந்திருந்தாரா
தெரியாது, இதன் மையப்புள்ளி, வேறொரு உரத்த கேள்விக்கான பதில், என்று எனக்குத் தோன்றியது.
காதல் என்பது உடல் சார்ந்ததா, மனம் சார்ந்ததா, என்கிற கால காலமான கேள்விக்கு, இந்தக்
கதை, காதல் உடலின் காம வேட்கையே, என அடித்துச் சொல்கிறது.
இதை வாசித்து ரொம்ப காலம் அசை போட்டபடி யிருந்தேன். ஹெமிங்வேக்கு
யான் மார்ட்டல் போல, நான் இந்தச் சூழலை வேறு விதமாகப் பயன்படுத்திக் கொண்டேன். ‘ஜெயில்’
என்று நான் ஒரு தொலைக்காட்சித் தொடருக்கான கதை எழுதினேன். கே. பாலச்சந்தர் சாருக்குப்
பிடித்திருந்தது. அதைச் செய்யலாம், என்று கூட ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்தார். கைகூடாமல்
போய் விட்டது.
பஷீர் கடுமையான சிறையின் உயர்ந்த தனிமைப்பட்ட மதில்களுக்குள்ளே
ஒரு மென்மையான காதல் கதையைச் சொல்லலாம், என எழுதிக் காட்டினார். அதேபோல கடுமையான இந்த
சிறைச் சூழலில், ஜெயில் வார்டனுக்கும், சிறைக் கைதி ஒருவனுக்குமான நட்பு பற்றி நான்
கதை சொன்னேன். வேறு யாராவது வந்தால் அந்தக்
கதையை திரைக்காக முயற்சி செய்யலாம்.
அந்தக் கதை பற்றி நான் கே. பாலச்சந்தர் சாரிடம் பேசியபோது,
கதையின் சரடு எல்லாம் கேட்டபடி, புன்னகையுடன் ஒரு அற்புதமான விஷயம் சொன்னார். கதை இதே
இருக்கட்டும். கதையில் ஒரு சுவாரஸ்யம், முடிச்சு நாம தனியா வெச்சிக்கலாம். அந்த ஜெயிலுக்கு
ஒரு கர்நாடக சங்கீதப் பாடகர் கொலை செய்துவிட்டு உள்ளே வருகிறார். என்ன ஆச்சி அவருக்கு,
ஏன் அப்படியொரு மனிதர் கொலைகாரராக மாறினார், என்று விட்டு விட்டு ஒரு கதை இது கூட நாம
சொல்லலாம்... என்றார். அதுதான் பாலச்சந்தர். ‘வானமே எல்லை’ படத்தில் நான்கு இள வயசுப்
பிள்ளைகள் தற்கொலை முடிவோடு ஒரு காரில் வீட்டைவிட்டு ஒடிவிடுவார்கள். அவர்களுக்குக்
கையில் காசு இல்லாமல் சாப்பாட்டுக்கே திண்டாடுவார்கள். ஆனால் அவர்கள் காரின் டிக்கியில்
கட்டுக் கட்டாய்ப் பணம் இருக்கும். அவர்கள் கூடவே காரில் அதுவும் பயணம் செய்யும், என்று
ஒரு முடிச்சு போடுவார் கே. பாலச்சந்தர். இந்த முடிச்சை திரையரங்கில் எத்தனை அருமையாக
ரசித்தார்கள்...
அவர் அந்த கர்நாடக சங்கீதப் பாடகர் பாத்திரத்தைச் சொன்னவுடன்,
நான் சொன்னேன். நம் கதாநாயகன் - ஜெயிலுக்கு வந்தவன், ஒரு மின்சார ரயில் டிரைவர் சார்.
ஜெயில் வளாகத்துக்கு அப்பால் சென்னையில் ரயில் ஓடுகிறது. அந்தச் சத்தம் கேட்கும் போதெல்லாம்
இவன் கதையை ஃப்ளாஷ் பேக்காகச் சொல்லலாம்... என்றேன் நான்.
ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியர்’ போன்ற காவியங்களே, ஹென்ரிக் இப்சன் போன்ற நாடகாசிரியர்களின்
கதைகளே இப்படி ஒரு அழுத்தமான கருத்துக் களத்துடனான ‘படுதா’வை விரித்து நம் முன் வரைந்து
காட்டுகின்றன,என்று சொல்லத் தோன்றுகிறது. கதைகளில் நாடகத்தன்மை, என இதை எடுத்துக் கொள்ளவும்
முடியும்.
கருத்து-அழுத்தக் கதைகள்.
2
ஒரு நவின நிலையில், கதையில் குறிப்புகளாக இந்த ‘தன் மதிப்பீட்டுப்
பார்வை’ பொதிந்த கதைகள் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சம்பவங்களாக, அதன் நாடகத்தன்மையைக்
குறைத்து இவை கதை விவரங்களாகக் கிடைக்கின்றன. கதைகளுக்கு இவை ஓர் ஓவியத்தன்மை தருவதாக
அமைக்கப் படுகின்றன என்று பொதுவாகக் குறிப்பிடலாம். பூமணியின் கதைகள் ரத்தக் கதுப்புகளாக
காணக் கிடைக்கின்றன. உணர்ச்சிகளின் தேன்கூட்டுத் தன்மை அதற்கு உண்டு. தன் கருத்து அடிப்படையிலான
ஆனால் அதை சாமர்த்தியமாக மறைத்த கதைகளாக பூமணி கதைகள் விளங்குகின்றன. வண்ணதாசனை வேறு
மாதிரி பார்க்கத் தோன்றுகிறது. வண்ணதாசன் தன்னை தாராளமாகவே காட்டிக்கொண்டபடி கதைகளில்
இயங்குகிறார். கருத்துகள் என தனியே அவற்றில் தேடினால் தான் ஒருவேளை அடைய முடியும்.
ரசனையின் பாற்பட்ட, அனுபவ உலகம் அது. இயற்கையான யதார்த்தமான பாத்திர நகர்வுகள். சாதாரண
விஷயங்களில் அசாதாரண அனுபவத்தைத் தர அவர் முயல்கிறார். உணர்வு உச்சம் என்று தனியே எழுச்சி
காணாமல் வெட்டிவேர் வாசனை கிளர்த்தும் கதைகள் அவை. வாசகர்கள் ஒருவேளை அந்த நதியடி மண்ணைத்
தொடாமலேயே நீந்திப் போய்விடக் கூடிய வாய்ப்புகளும் அங்கே இல்லாமல் இல்லை.
பூமணியின் கதைகள் அரசியல் பேசவே செய்கின்றன. குறைந்த பட்சம்
அரசியல் சார்ந்த குறிப்புக்களை வெகுளித்தனமான உரையாடல்களாக அவர் முன்வைப்பார். சாமானியனின்
கதைகள் என்ற அளவில் இங்கே அவற்றைக் குறிப்பிட நேர்கிறது. வண்ணதாசனின் அடையாளம் வேறு.
வண்ணதாசன் கதைகள் சமூக அமைப்பை ஒருக்காலும்
முரண்டியது இல்லை. வாழ்க்கையை அதன்போக்கில் அப்படியே ஏற்றுக்கொண்டு, அது அனுமதிக்கும்
சந்தோஷங்களில் துக்கங்களில் திளைப்பதை வாழ்வின் அனுபவங்களாகத் தருபவை அவை. பொதுக் கருத்துகளின்
எதிர்க்குரல் அங்கே எதிர்பார்க்க முடியாது. பெண்களுக்கு அங்கே புழங்கு பரப்பு சுருங்கித்
தான் இருக்கிறது. அவர்கள் அதில் முகம் வாடாமல் புன்னகை சிந்துகிறார்கள். அல்லது அந்த
துக்கத்தை தங்களுக்குள்ளேயே, நீல கண்டனைப் போல விழுங்கிக் கொள்கிறார்கள். அவளுக்கும்,
அவர்களுக்கும் சேர்த்து வண்ணதாசன் துக்கப் படுகிறதாகவே அவை அமையும்.
போர்வை - என ஒரு சிறுகதை சட்டென நினைவுக்கு வருகிறது. தன்
வீட்டுக்கு என்று அவன் புதிதாய்ப் போர்வை வாங்கி வருவான். மனைவிக்கு அதில் ரொம்ப சந்தோஷம்.
இன்றைக்கு ராத்திரி இதைப் போர்த்திக் கொண்டு அதன் கதகதப்புடன் உறங்கலாம்,. என நினைத்திருப்பாள்.
அந்த வீட்டுக்கு திடீரென்று விருந்தினர் வந்து அன்றிரவு அவர்களுடன் தங்குவார். அவருக்கு
அந்தப் புதிய போர்வையை கணவன் எடுத்துக் கொடுத்து விடுவான், என கதை முடியும்.
சமூகம் சார்ந்த விசாரணைகளை ஒருபோதும் வண்ணதாசன் நிகழ்த்தியதே
யில்லை. அவர் பாணி அது அல்ல. அது அல்லாத பாணி அவருடையது. சதா சிறகுகளைக் கோதிக்கொண்டே
யிருக்கும் வண்ணதாசனின் பாத்திரங்கள் ஒருபோதும் கிளம்பிப் பறப்பது இல்லை,என்கிற ரீதியில்
சுந்தர ராமசாமி குறிப்பிட்டதாக முன்பு வாசித்தேன். ஆ மாதவனின் சிறுகதைகள் - மொத்தத்
தொகுப்பாக இருக்கலாம்.
வண்ணதாசனின் கதைகளில் ‘நடேசக் கம்பர் மகனும் அகிலாண்டத்து
அத்தானும்’ என்கிற ஒரு சிறுகதையை நான் எனது திரட்டு ஒன்றுக்காகத் தேர்வு செய்தேன்.
(பரிவாரம் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பக வெளியீடு.) அவரைச் சந்தித்தபோது அவர் எனது இந்தத்
தேர்வில் அக மகிழ்ந்தார். அதை நான் தேர்வு செய்த காரணம் சொன்னபோது அவருக்கே ஆச்சர்யம்.
ஆனால் அவரது வழக்கமான பாணிக் கதையே இது.
டவுண் பஸ்சில் இருந்த கூட்டத்தில் அவன் மனைவி முன்வாசல் வழியே
ஏறி, பஸ்சில் முன்பக்கமாக நிற்கிறாள். அந்தக் கூட்ட நெரிசலில் பஸ்சின் பின்வாசல் பக்கமாக
அவன் ஏறி நிற்கிறான். இருந்த கசகசப்பும் பரபரப்புமான சூழலில் அடுத்த நிறுத்தத்தில்
ஒரு நாதஸ்வரக் காரரும், தவில் காரரும் ஏறுகிறார்கள். இருக்கிற ஆட்களுக்கே இடம் இல்லாத
நிலையில், தவிலையும் உள்ளே அடைக்க வேண்டி யிருக்கிறது. அவன் அந்த நாதஸ்வரக் காரரைப்
பார்த்தால், அவர் வேறு யாருமல்ல. அவனுக்கும் அவளுக்கும் கல்யாணம் நடந்த போது, அவர்கள்
கல்யாணத்தில் நாதஸ்வரம் வாசித்தவர் அவர்தான். அவனுக்கு ரொம்ப சந்தோஷமாகி விடுகிறது.
நெரிசலில் மெல்லஅவர்பக்கமாகப் போய், என்னைத் தெரியுமா, என்கிறான். அவருக்குத் தெரியவில்லை.
அவன் தனது கல்யாணத்துக்கு அவர் நாதஸ்வரம் வாசித்ததைச் சொல்கிறான். அப்படியா, எனக்கு
நினைவு இல்லை தம்பி. நல்லாருக்கீங்களா... என பிரியமாய்ப் புன்னகை செய்கிறார்.
அவனுக்கு அந்த சந்தோஷத்தை உடனே மனைவியிடம் பகிர்ந்துகொள்ள
வேண்டும் போலிருக்கிறது. பஸ்சின் பின்பகுதியில் இருந்து உன்னியும் எட்டியும் அவளைப்
பார்க்க முடிகிறதா என்று தேடுகிறான். அவளது முகம் தெரிகிறது. அந்தப் பக்கம் திரும்பி
நின்று கொண்டிருக்கிறாள். இவன் பக்கம் திரும்பவே இல்லை அவள். இரண்டு நிறுத்தங்களில்
அவர், நாயனக் காரர் இறங்கிப் போய்விடுகிறார். தனது நிறுத்தத்தில் அவனும் அவளும் கிழே
இறங்குகிறார்கள். தான் நாதஸ்வரக் காரரைப் பார்த்ததை அவன் அவளிடம் சொல்ல வருமுன் அவள்
முகம் எல்லாம் சந்தோஷமாய்ச் சொல்கிறாள். “எங்க அகிலாண்டத்து அத்தான் பஸ்சில் வந்திருந்தாரு.
எதோ வேலையா வந்திருக்காராம். சின்ன வயசில் எப்பவுமே என்னைத் தூக்கி வெச்சிட்டே திரிவாரு.
எனக்குன்னு சாப்பிட எதாவது வாங்கிட்டு வருவாரு...” என தன் கடந்த கால சந்தோஷங்களை நினைவு
ஊற ஊற பேசிக்கொண்டே வருகிறாள். அகிலாண்டத்து அத்தானானால் எனன, நடேசக் கம்பரானால் என்ன,
அவரவர் சந்தோஷம் அவரவர்க்கு இருக்கத்தானே செய்கிறது... என்று முடிக்கிறார் வண்ணதாசன்.
நான் சொன்னேன். “அருமை வண்ணதாசன். இந்தக் கதையில் முதல் முதலாக
பெண், அவளுக்கென்று ஒர் அழகான இதயம், உணர்ச்சிகள், சந்தோஷங்கள். அவளுக்கான சுதந்திரமான
முழு உலகத்தையும் நீங்கள் தானறியாமல் அங்கீகரித்துச் சொல்லி யிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்”
என்றேன்.
ஒரு சிந்தனையின் நீட்சியில், இப்படி விஷயங்களை, எழுத்தாளனே
சுய கவனத்துடன் கதைகளில் பதிவு செய்வதும் உண்டு. எனது நாலைந்து கதைகள் இப்படி அமைந்தவையே.
சமீபத்திய ‘பெருவெளிக் காற்று’ கதையிலேயே, ஆன்மிகம் என்பது லௌகிகம் தாண்டியது அல்ல.
வாழ்க்கையில் லொளகிகத்தை யாராலும் மீற முடியாது... என என் கருத்து பதிவு செய்யப்படும்
போது, இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபடும் மலர்கள்... மலர்கள் என்பவை எவை? ஒரு தாவரத்தின்
இன விருத்தி உறுப்புகள் தானே, என்று சொல்லி யிருக்கிறேன்.
ஏன் வாசிக்க வேண்டும்? வாசிப்பு என்பது என்ன? இலக்கியம் என்பது
என்ன? இலக்கியம் வாழ்க்கைக்கு, சாமானியனுக்கு என்ன செய்யும்?...என்று நானே கேள்வி கேட்டுக்
கொண்டபோது நான் ‘கிளிக்கூண்டுகள் விற்கிறவன்’ என்ற சிறுகதை எழுதினேன். ‘வடக்குவாசல்’
ஒரு தீபாவளி மலரில் சிறப்புக் கதையாக அது இடம் பெற்றது.
ஒரு ஜவுளிக்கடை குமாஸ்தா அவர். காலை ஒன்பது ஒன்பதரை மணிக்கு
கடைக்கு வந்து வரவு செலவு கணக்குகளைப் பார்க்க வேண்டும். வங்கிக்குப் போகிற வேலைகள்
என்று வெளி வேலைகளும் அவர் பார்க்க வேண்டும். இரவு ஒன்பதரை பத்து ஆனாலும், வாடிக்கையாளர்களுக்காக
பிரிததுக் காட்டப்பட்ட புடவைகள் மலைபோல் குவிந்து கிடக்கும் விற்பனை அறைக்கு வந்து
அந்தப் புடவைகளைத் திரும்ப மடித்து அடுக்கிவிட்டு பிறகு தான் வீடு திரும்ப வேண்டும்.
வீடு திரும்ப இரவு இன்ன நேரம் என்று கிடையாது. தாமதம் ஆகலாம். ஆனால் காலை திரும்ப அவர்
ஒன்பது மணிக்கு கடைக்கு வந்தாக வேண்டும். அதில் தாமதம் கூடாது.
வியாதியஸ்தரான மனைவி, முப்பது வயதாகியும் கல்யாணம் ஆகாத மகள்...
அவர் கூட இருக்கிறார்கள். காலையில் அவர்களுக்கு வேண்டியதைப் பார்த்து விட்டு வேலைக்கு
வருவார். இரவு நேரங்கழித்து வீடு திரும்புவதற்காக முதலாளி ஒரு ஓட்டை சைக்கிள் அவருக்குத்
தந்திருக்கிறார். கடைசி பஸ் போய்விட்டது, என அவர் திண்டாடாமல் இருக்க, முதலாளியின்
பெருந்தன்மை.
ஆனால் காலையில் கடைக்கு வரும் வழியில், இடைப்பட்ட ஞாயிறுபோன்ற
ஓய்வு நாட்களில் அவர் சந்தைப் பக்கம் ஒரு பழைய புஸ்தகக்கடையைப் பார்த்து வைத்திருக்கிறார்.
அதிகம் அல்லது உடனே விற்றுத் தீர்கிற மாத நாவல்கள், கிரைம் நாவல்கள், ஆபாசப் புத்தகங்களுக்கு
அடியே மூச்சுத் திணறிக் கிடக்கிற அசோகமித்திரனையும், ஜானகிராமனையும் அவர் உருவி வெளியே
எடுத்து மலிவு விலையில் வாங்குகிறார். இரவு எத்தனை நேரங் கழித்து வந்தாலும் அவர் கொஞ்ச
நேரமாவது வாசித்துவிட்டு உறங்கப் போகிறார்.
இது கதை. வாசிப்பு அவருக்கு வேறொரு உலகத்தை அடையாளங் காட்டுகிறது.
தனக்கு வாய்த்தது இது. ஆனாலும் உலகம் அவநம்பிக்கைக்கு உரியது அல்ல, என அவர் தனது அனுபவங்களை
இன்னும் விரிவு படுத்திக்கொண்டு வாழ்க்கையை நேசிக்கவும், அர்த்தப் படுத்திக் கொள்ளவும்
முயல்கிறார் என்று நான் சொல்லிப் பார்த்த கதை அது. அவரது வாழ்வின் அன்றாடத்தில் பயன்
மிக்க துளிகளாக அந்த வாசிப்பு நேரம் இருக்கிறது. அது தருகிறது அவருக்கு ஒரு நிழலான
ஆசுவாசம்.
ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தனே
இந்தக் கதையை சிலாகித்துச் சொன்னது நினைவில் இருக்கிறது. ‘மனக்குப்பை’ என்கிற என் சிறுகதைத்
தொகுப்பில் இருக்கிறது இந்தக் கதை.
சில கேள்விகளைக் கதைகளில் எழுப்புவதைப் போலவே,சில மறைமுக
பதில்களை வைப்பதும் ஒரு சிறுகதைப் பாணி தான், என்று சொல்லத் தோன்றுகிறது. அது எழுத்தாளன் அறியமலேயே
கூட கதைகளில் நிகழ்ந்தும் விடுகிறது,சில சமயங்களில்.
***
storysankar@gmail.com
91
9789987842 / 91 9445016842
No comments:
Post a Comment