31
மொழிபெயர்ப்புக் கலை -
வேற்றுமையில்
ஒற்றுமை
தமிழில் நான்
வணங்கும் மொழிபெயர்ப்பாளர் நா. தர்மராஜன். பகவான்
ரமணர் பற்றி எம்.பி. பண்டிட் ஆற்றிய உரைகளின் தமிழாக்கம் புதுவை ஞானம், எத்தனை
அழகான புத்தகம். அதை நான் பரிந்துரை செய்து உதயகண்ணன் இரண்டாம் பதிப்பு வெளியிட்டான்.
(நடு நின்ற நடுவே.)
மொழிபெயர்ப்பு சார்ந்து ம.ந.ராமசாமி காட்டும் அக்கறை வியப்பானது.
நான் இடும் பணிகளை சிரமேற்கொண்டு அத்தனை கவனமாய்ச் செய்கிறார் அவர். எனது தந்தைக்கும்
மேலான வயது அவருக்கு. அவரது அத்தனை மொழிபெயர்ப்பு நூல்களும் நான் அவருக்கு எடுத்துத்
தந்தவையே. சாமர்செட் மாமின் ‘மழைதாரை’ - தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், ‘மாற்றான்
தோட்டம்’ - ஜான் ஸ்டீன்பெக்கின் ‘முத்து’ -புக்கர் ட்டி. வாஷிங்டனின் ‘அடிமையின் மீட்சி’
- அன்டன் செகாவின் ‘மகா புல்வெளி’ - என எல்லா நூல்களும் நான் மொழிபெயர்க்க வைத்திருந்து
அவரிடம் பணியைத் தந்தவை தாம். ‘ஸ்டெப்பி’ நாவலை மகா புல்வெளி, என வெளியிட்ட போது, அட்டைப்படம்
பச்சையோ பச்சைப் புல், உள்ளே side paper பச்சை. மட்டுமல்ல, முழு நூலையுமே பச்சை வண்ண
மையில் அச்சிட்டோம். ‘அடிமையின் மீட்சி’ அவரது மொழிபெயர்ப்புக்காக ‘நல்லி - திசை எட்டும்’
விருது பெற்றது.
சாமர்செட் மாமின் THE RAIN குறுநாவலை முதலில் எடுத்தளித்தேன்.
ஆங்கிலத்தில் மழை, என்ற சொல் புன்னகை தருகிற, மனதுக்கு இதமளிக்கிற சொல் அல்ல, நமக்கு
தான் அது அப்படியான உணர்வைத் தரும். அவர்களுக்கு வெயில், அதுவே முக்கியம், என்றார்
ம.ந.ரா. மழையே மழையே போய்விடு, என்றுதான் ஆங்கிலத்தில் குழந்தைப்பாடல் இருக்கிறது.
இதை அறிந்தவர்கள் தாம் நாம் எல்லாரும். மழை வெளியே கிளம்ப, தெருவில் விளையாட சிரமப்
படுத்தும்... என்கிற கவலையை விசனத்தையே தலைப்பில் சாமர்செட் மாம் ‘ரெய்ன்’ என்கிறார்.
ம.ந.ரா. மழை என்று தமிழில் சொல்லாமல், ‘மழைதாரை’ என்று சற்று அழுத்தம் கொடுத்து மொழிபெயர்த்தது
அருமையான விஷயம்.
தற்போது நான் மொழிபெயர்த்திருக்கும் நாவல் எர்னெஸ்ட் ஹெமிங்வே
எழுதிய ‘ஓல்ட் மேன் அன் தி சீ.’ ஆங்கிலத்தில் ஒல்ட் மேன், என்றால் அது மதிப்பான விளிப்பே.
தமிழிலேயே அப்படித்தான். நிலக்கிழார் என்பார்கள். தமிழில் இதே நாவலை மொழிபெயர்த்தவர்கள்
கடலும் கிழவனும், கிழவனும் கடலும், என்று சொல்கிறார்கள். இன்றைய தளத்தில் கிழவன் என்பவன்
வலிமை குன்றிய நபர் என்றே அர்த்தம் ஆகிறது அல்லவா? அதுவும் கடலில் கப்பலின் கேப்டனையே
‘ஓல்ட் மேன்’ என ஆங்கிலத்தில் அழைப்பது வழக்கம். அதை மரியாதை த்வனியுடன் சொல்ல வேண்டிய
அவசியம் உண்டு. ஹெமிங்வே அந்த மரியாதையான பொருளில் தான் ‘ஓல்ட் மேன்’ என கடல் வளாகம்
பற்றிய கதையில் சொல்கிறார் என நான் நம்புகிறேன். நான் வைத்த தலைப்பு ‘பெரியவர் மற்றும்
கடல்.’
மொழிபெயர்க்கும் போது சில ஆங்கிலப் பதங்களுக்கு நாமே புதிய
தமிழ்ச் சொல்லாடல்களைக் கொண்டு வரலாமே என மனம் விழிக்கும். தமிழ்க் கதை எழுதுகையில்
வருவதை விட மொழிபெகயர்ப்பு சமயம் இந்த சுதாரிப்பு சந்தர்ப்பங்கள் அதிகம். சாதாரணமாக
ஒரு வேலை போல ஆங்கில வார்த்தையை எடுத்துக் கொண்டு அதற்கு தமிழ்ச்சொல் உருவாக்கலாம்,
அல்லது புனையலாம் என்று யோசிக்கும் போது வரும் சிந்தனையை விட, ஒரு படைப்பு வேலையில்
இயங்கும் போது நமக்கு அதிதமான சக்தி கிடைக்கிறது, நாம் மேலதிக வீர்யத்துடன் செயல்பட
வாய்க்கிறது. தனி அனுபவம் அது.
ஷவர், என்கிற ஆங்கிலச் சொல் வந்த ஒரு சமயம், புள்ளிக்குழாய்,
என எழுதினேன். என்லார்ஜ்மென்ட் - உருவோங்குதல். இது ஒரு நல்ல பிரயோகமாக அப்போதே புன்னகை
செய்துகொண்டேன். காரணம், இதன் எதிர்ப்பதம், டிமினிஷிங், என்ற சொல் வருகையில், உருவொடுங்குதல்,
என்கிற வார்த்தை பொருந்திக் கொள்கிறது. அதேபோல, விபத்தானவர்களைத் தூக்கிச் செல்லும்
ஸ்ட்ரெட்சர், அதை ‘நோயாளிக்கிடத்தி’ என்று குறிப்பிட்டேன். சட்டென இப்போது நினைவுக்கு
வந்த உதாரணங்கள் இவை.
குடும்பக் கட்டுப்பாடு, என்று தமிழக அரசின் திட்டங்களுக்கு,
ஊக்குவிப்பு வாசகம் என பலரும் முயற்சி செய்தபோதும் அமையவே இல்லை. வாலி ஒரு திரைப்படப்
பாடல் எழுதினார். தாலாட்டுப் பாடல். அதில் இந்த குடும்ப நல வரிகள் அவரால் கண்டுபிடிக்கப்
பட்டன. “ஒன்றோ ரெண்டோ பிள்ளை என்றால் இன்பம் கொள்ளை.”
படைப்பு மனநிலை என்கிற அனுபவமே தனி தான்.
2
க.நா.சு, தி.ஜானகிராமன் போன்ற எழுத்துலக ஜாம்பவான்களே மொழிபெயர்ப்பில்
ஆர்வம் செலுத்தி நல்ல மொழிபெயர்ப்புகள் தந்திருக்கிறார்கள். பாரதியார், புதுமைப்பித்தன்
மொழிபெயர்ப்பு செய்திருக்றிர்கள். நல்ல நூல்களை வாசிக்கும் போது இதைத் தமிழில் தர வேண்டும்,
என்கிற உந்துதல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். யாம் பெற்ற இன்பம் வையகம் பெறுக,
என்பது உயர்ந்த கோட்பாடுதான். தவிரவும் மொழிபெயர்க்கும் பயிற்சியில் நமது வாசகத்தன்மை
மேலும் தீவிரம் அடைகிறது. அது பெரிய ஆதாயம் நமக்கு.
நான் உலகச் சிறுகதைகள் நான்கு தொகுதிகள் கொண்டு வந்திருக்கிறேன்.
கனவுச்சந்தை முதல் தொகுதி. பிறகு, வேற்றூர் வானம், மேற்கு சாளரம், அயல்வெளி - ஆகிய
தொகுதிகள் வந்தன. கையில் நாலைந்து கதைகள் மொழிபெயர்த்து, இதழ்களில் வெளியாகி நூலாகாமல்
இருக்கிறது. மேலும் ஏழெட்டு கதைகள் சேர வேண்டும். சில சமயம் பத்திரிகையில் இருந்தோ
நண்பர்களோ மொழிபெயர்க்கச் சொல்லி கதைகள் தருகிறார்கள். சில நல்ல கதைகள் அவர்கள் வாசித்து
அவர்களுக்குப் பிடித்து சிபாரிசு செய்கிறார்கள். எனது வாசிப்பிலும், இணையத்தில் தேடுவதிலும்,
கைக்கு எட்டிய புத்தகங்களில் இருந்தும், வாசித்து எனக்குப் பிடித்ததைத் தேர்வு செய்கிறேன்.
யாரும் தந்தார்கள் என்றோ, சிபாரிசு செய்கிறார்கள் என்றோ, இதுவரை எனக்குப் பிடிக்காத
கதையை நான் மொழிபெயர்க்க எடுத்துக் கொண்டது இல்லை.
மொழிபெயர்க்கும் படைப்புகளில் குறைகள் கண்டால், விவரப் பிழைகள்
இருந்தால் அவற்றைச் சட்டிக்காட்ட நான் தயக்கம் காட்டுவது இல்லை.
மொழிபெயர்ப்பு நாமும் செய்யலாமே, என நம்பிக்கை வந்த கணம்,
நான் வாசித்த நல்ல கதைகளை மனதுக்குள்ளேயே தேடி, அவற்றைத் திரும்பக் கண்டெடுத்து மொழிபெயர்த்தேன்.
ஆன்டன் செகாவ், ஜாக் லண்டன் கதைகள் அப்படி வந்தவை. சிறுகதைப் பெருங்கொத்துகள், உலகச்
சிறுகதைத் தொகுப்புகள் என வாசிக்கையில் தேர்வு செய்தவை சில. மொழிபெயர்க்கலாம் என குறித்து வைத்துக்கொண்டு அதற்கான
ஓய்வில் முன்னெடுத்தவை. சில கதைகளைத் தமிழிலேயே மொழிபெயர்ப்புகளாக வாசித்து, அது திருப்தியுறாமல்,
மூலத்தைத் தேடியடைந்து, நான் திரும்ப மொழிபெயர்த்ததும் உண்டு. உதாரணங்கள் வேண்டாம்.
அதேபோல, மொழிபெயர்ப்பு என்பது ஆரம்ப காலத்தில ஒற்றுமையில்
வேற்றுமையை அடையாளங் காட்டிக் கொண்டிருந்தது. அதன் நவீனத் தன்மையில் வேற்றுமையில் ஒற்றுமை
காட்டி நிற்கிறது இப்போது, என நினைக்கிறேன். ஏனெனில் இன்று மனிதனே உலக மனிதனாகி விட்டான்.
நாட்டின் எல்லைகள் கரைந்து கொண்டிருக்கின்றன. குளோபல் எகானமி என்கிறார்கள். உலகம் உள்ளங்
கையில் என்று சுருங்கி வருகிறது. அனுபவங்கள் அவ்வளவில் விரிந்து வருகின்றன.
3
சாகித்ய அகாதெமி அளித்த பணி, என முல்க் ராஜ் ஆனந்தின் ‘மார்னிங்
ஃபேஸ்’ நாவலை நான் தமிழில் தந்தேன். அது அவரது இளமைப் பருவமே தான். தன் சொந்த வாழ்க்கை
பற்றியே ஏழு நாவல்கள் எழுத அவர் திட்டமிட்டிருந்ததகத் தெரிகிறது. அதில் ஐந்தது தான்
அவர் எழுதினார். சாகித்ய அகாதெமி பரிசு பெற்றஆங்கில நாவல் இது. அதை நான் மொழிபெயர்க்கிறேன்
என்கிற அந்த அடையாளம் எனக்கு உவப்பானதாய் இருந்தது. ஆனால் மூலத்தின் ஆங்கிலமே எனக்கு
உவப்பாய் இல்லை. நாவலில் ஒரு சாமியார் பாத்திரம் வருகிறது. அதை அவர், யுவார் எ பிராக்டிகல்
சாது, என்று உரையாடல்ப் படுத்தியபோது திகைப்பாய் இருந்தது. இதை இந்திய மொழியில் அவர்
எப்படி உணர்ந்து கொண்டிருப்பார், என யூகித்து நான் தமிழ்ப் படுத்தினேன் - நீங்கள் ஒரு
கர்மயோகி!
அதில் கண்ட ஒரு விவரப் பிழையையும் நாவலிலேயே அடிக்குறிப்பு
இட்டு நான் சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது. காரணம், அது மொழிபெயர்ப்பாளர் பிழை என்றுயாரும்
தவறாக எடுத்துக் கொண்டுவிடக் கூடாது, என்றிருந்தது. ‘விடியல் முகம்’ பெரிய நாவல். தமிழில்
அச்சில் 850 பக்கங்களுக்கு மேல் அமைந்தது. நானே அப்போது சிறுகதைகளைத் தாண்டி, பெரிய
நாவலாக எடுத்துக் கொண்டு இயங்கிப் பார்க்கலாமே என்கிற யோசனையில் இருந்தேன். ‘விடியல்
முகம்’ மொழிபெயர்த்து முடித்த ஜோரில் நல்ல ஆங்கில வாசனை தேடி நான் மீளவும் என் நினைவு
அடுக்குகளில் தேடினேன்.
எனது வாலிபப் பருவத்தில் என்னைக் கவர்ந்த சாமர்செட் மாம்
நாவல் ஒன்றைக் கையில் எடுத்தேன். மாமின் ஆங்கிலமும், அவரது நையாண்டி நடையும் எனக்கு
விருப்பமானவை. CAKES AND ALE என்ற அந்த நாவல், நான் கல்லூரி வாசிப்பை முடித்து வெளியே
வந்த ஜோரில் என்னை அயர்த்திய நாவல். சிலாட்கள் திரும்பி வீடு வரும் வரை தெருவில் எதாவது
கல்லை எத்திக் கொண்டே வருவான். அதைப்போன்ற, என்ன சீண்டலான நடை. துறுதுறுப்பான அவதானிப்புகள்.
எட்வர்ட் டிரிஃபீல்ட் என்கிற எழுத்தாளர் பற்றிய கதை. அது
தாமஸ் ஹார்டி, என்கிறார்கள். நமக்கு என்ன அதைப் பற்றி. எழுத்தாளனா விமரிசகனா, யார்
உசத்தி, என வருகிற இடத்தில், எழுத்தாளன் தான், அட எந்த விமரிசகனுக்கு ஊரில் சிலை வைக்கிறார்கள்,
என ஆரம்பிக்கிறார் அவர். ஆனால் இந்த எழுத்தாளன் விமரிசகனுக்குப் பயப்படுகிறான், என
எழுத்தாளனைச் சீண்டுகிறார். அவனது நாவல் பெஸ்ட் செல்லராகி அவன் கார் வாங்கி யிருப்பான்.
அதைத் தெருவோரம் நிறுத்தி விட்டு இறங்கி அந்தச் சந்தில் விமரிசிசகன் வீட்டுக்கு நடந்து
வருவான். ஒடுக்கமான அந்தச் சந்துக்குள் கார் நுழையாது. வந்து விமரிசகன் முன் பவ்யமாய்
நிற்கிற எழுத்தாளனிடம் அந்த விமரிசகன் அலட்சியமாக, உன் நாவல்... பிரயோசனம் இல்லியேப்பா,
என உதட்டைப் பிதுக்குவான் ... என்பார் சாமர்செட் மாம். என்ன கிண்டல்கார மனுசன்.
எட்வர்ட் டிரிஃபீல்டின் முதல் மனைவி ஓடிப்போய் விட்டாள்.
இரண்டாவது மனைவி, அவரது, எழுத்தாளரது மரணத்திற்குப் பின், அவரது வாழ்க்கை வரலாறு எழுதவேண்டும்,
என யாரிடமாவது பொறுப்பு தர விரும்புகிறாள். இங்கே மாம் கிண்டல் அடிக்கிறார். ஆனால்
அவரது சிறந்த படைப்புகள் முதல் மனைவியுடன் இருந்தபோது தந்தவை தாம், என்கிறார் மாம்.
A THING OF BEAUTY IS NOT A JOY FOREVER - என ஓரிடத்தில்,
கதையூடே கல்லெத்திய நடையில் வருகிறார் மாம். அப்போது ஆகா என்றிருந்தது. இப்போதைய நிதான
வாசிப்பில் அதை மறுக்க முடிகிறது. மாம் என்ன சொல்கிறார்? அழகான ஒரு பொருள், அதில் என்ன
விசேஷம்? ஒருமுறை அதைப் பார்க்கலாம். ரசிக்கலாம். பிறகு? வேறு அதில் நமக்கு வேலை என்ன?
ஜாய் ஃபார்-எவர், காலகாலத்துக்குமான... நிரந்தர மகிழ்ச்சி எங்கிருந்து வரும்? ஆனால்
அறிவார்த்தமான ஒரு கலைப் படைப்பு, யோசிக்க யோசிக்க அது பல அனுபவங்களை ருசிகளைக் கிளர்த்திக்
கொண்டேயிருக்கும். அது ஜாய் ஃபார்-எவர். இது? அழகுக்கு அந்த நிரந்தரத் தன்மை எப்படி
வரும் ஐயா?... என்பது சாமர்செட்மாமின் கேள்வி. அந்த வயசில் பரவசப் படுத்திய பகுதி இது.
இப்போது இந்த நிதானப்படட வாசிப்பு அனுபவத்தில் அதை மறுக்கத்
தோன்றுகிறது. எப்படி? ஒரு பொருளைப் பார்க்கிறீர்கள். அதில் அழகைப் பார்க்கிறீர்கள்.
இன்னொரு பொருளுக்குப் பார்வையைத் திருப்புகிறீர்கள். அதிலும் உள்ள அழகைக் கண்டுபிடிக்கிறீர்கள்.
இப்படி, காணும் பொருளில் எல்லாம் அழகைக் கண்டுபிடிக்க முடிந்தால், அதுதான் ஜாய் ஃபார்-எவர்.
A THING OF BEAUTY IN EVERYTHING - FINIDNG BEAUTY IS A JOY FOREVER!
கேக்ஸ் அன் ஏல் - என்றால் விமரிசகனுக்குப் பார்ட்டி வைத்து
அவனை வசியப்படுத்தி நல்ல விமரிசனங்களாக எழுத வைத்து எழுத்தாளர்கள் பரிசுகளைப் பெறுகிறார்கள்,
என்கிற கிண்டலை உள்ளடக்கிய தலைப்பு. இதைத் தமிழில், விருந்துகள் கேளிக்கைகள், என்று
வைத்திருக்கலாம். நான வைத்த தலைப்பு - முன்னணியின் பின்னணிகள்.
இப்போதும் கூட சொற்சிக்கனத்தில் ஹெமிங்வே, எகத்தாளத்தில்
சாமர்செட் என்று என்னை யாராவது சொன்னால் நான் மறுக்க ஏதுமில்லை! அந்த வயதில் என் மூளையில்
ஏறியமர்ந்தவர்கள் இவர்கள் தாம்.
எனது மொழிபெயர்பபில், நாவல்களில் நான் ஓர் ரகசிய உத்தியைக்
கைக்கொள்வேன். மொழிபெயர்ப்புகள் நாம் புரிந்துகொள்கிற அளவிலும் இருக்க வேண்டும். அதேநேரம்
அது நிகழிடங்களின் வாசனையையும் முற்றும் விட்டுவிட முடியாது. ஆகவே நான் நாவலின் பிரதான
பாத்திரங்களின் பெயர்களை தமிழ்ப்படுத்திப் பயன்படுத்துகிறேன். எட்வர்ட் டிரிஃபீல்ட்
- என்கிற நாயகனை நான் எட்வர்டு திரிஃபீல்டு என்று எழுதுகிறேன். உள்ளே வந்து போகும்
சிறுபாத்திரங்களை இப்படி தமிழ் உச்சரிப்பாக ஆக்குவது இல்லை. ஆர்னால்ட் என்றால் ஆர்னால்டு
என்று எழுதுவது இல்லை ஆர்னால்ட் தான். அது
அந்த வேற்றூர்த் தன்மையைத் தக்க வைக்கும் என எனக்கு ஒரு கணிப்பு. ஊர்ப்பெயர்களும் அவ்வண்ணமே.
A NARROW LANE என்பதை நான் ஒடுகலான குறுகலான பாதை, என்று
எழுதமாட்டேன். ஒத்தையடிப் பாதை, என்று போடுவது இன்னும் அணுக்கமாக இருக்கும். சூழலுக்கேற்ற
நல்ல வார்த்தைகள் சில சமயம் வெளியில் இருந்து கிடைக்கும். மொழிபெயர்ப்பு என்பது மாறுதலுக்கு
உட்பட்டதே. எந்த மொழிபெயர்ப்புக்கும், அதைவிடச் சிறந்த மொழிபெயர்ப்பு நாளை அமையக் கூடும்.
ஒரு வேடிக்கை போலச் சொன்னால், சில கதைகள் ஏற்கனவே மொழிபெயர்க்கப் பட்டு வந்திருந்தாலும்,
இன்னும் நன்றாக வந்திருக்கலாம், என நானே முயன்றிருக்கிறேன்!
4
மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்க்கிற அந்த ஒரு நபரோடு முடியாது
என நான் நம்புகிறேன். தமிழ் எனக்குத் தாய்மொழி. ஆங்கிலம் அப்படி அல்ல. அதன் த்வனியை
தாய்மொழியில் போல என்னால் புரிந்துகொள்ள முடியுமா, என்பதில் எனக்கு ஐயம் உண்டு. அவர்கள்
பண்பாடு, கலாச்சாரம், மொழியை அவர்கள் பயன்படுத்தும் முறையே மாறுபடுகிறது. நாம் ‘அப்டிப்
போடு’ என்றால், அவர்கள் ‘ஹியர் வி கோ’ என்கிறார்கள். வெளிப்படுத்தும் முறை வேறு மாறுபடுகிறது.
காபி சாப்பிடறீங்களா, என நாம் கேட்பதை, ஒய் கான்ட் டு ஹேவ் ய கப் ஆஃப் காஃபி வித் மி,
என்கிறார்கள். அதை அப்படியே, நீங்க ஏன் எங்கூட காப்பி சாப்பிடக் கூடாது, என்று எழுத
முடியாது. (ஒரு காலத்தில் ஜுனூன் தொலைக்காட்சித் தொடர் தமிழ் இந்த மாதிரி அமைந்தது.)
ஆங்கில மொழியை நான் புரிந்துகொண்டது சரிதானா, என நான் வேறொரு நபரிடம் சரிபார்த்துக்
கொண்டபின்பே மொழிபெயர்ப்புப் படைப்பை வெளியே அறியத்தர வேண்டும், என்பதில் எனக்குத்
தீர்மானம் உண்டு. எனது மிகப் பெரும் உதவி, டாக்டர் ஹரி விஜயலெட்சுமி. தமிழ் எம்.ஏ.,
ஆங்கில எம்.ஏ. தமிழ்த் துறைத் தலைவராக ஜிவிஜி விசாலாட்சி கல்லூரி, உடுமலைப்பேட்டையில்
பணியாற்றி விட்டு, தென்காசியில் மற்றொரு கல்லூரியில் முதல்வராகவும் இருந்து தற்போது
ஒய்வு கொள்கிறார். தற்போது ஓர் இளைஞன், கற்குவேல், எனக்கு முகநூல் மூலம் அறிமுகம் ஆகி,
அவனிடமும் முதல் வாசிப்புக்கு என நான் மொழிபெயர்ப்பைத் தருகிறேன். ஆச்சர்யகரமான கவனங்கள்
உள்ளவன்.
நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீசிய நாவல்,யோசே சரமாகோ எழுதிய
‘பார்வை தொலைத்தவர்கள்.’ நான் அதைத் தமிழில் மொழிபெயர்த்தேன். பாரதி புத்தகாலயம் சிறப்பாக
அதை வெளியிட்டது. அதன் முதல் அத்தியாயம் இப்படி அமைகிறது. சாலை நடுவே போக்குவரத்துப்
பச்சைக்காகக் காத்திருக்கிறார்கள். அங்கே ஒரு காரில் அமர்ந்திருந்தவனுக்கு திடீரென
கண் தெரியாமல் போய்விடுகிறது. காரை அவன்தான் ஓட்டி வந்தவன். சிவப்பு மாறி பச்சை வந்தபோதும்
அவனால் காரை நகர்த்த முடியவில்லை. காருக்குள் அவன் உதவிக்கு அழைக்கிறான். “ஐம் பிளைன்ட்”
என்று அவன் கத்துகிறான்.
பாரதி புத்தகாலயத்தில் திரு ராஜன் என்பவர் புத்தக வெளியீட்டில்
மேற்பார்வையாளராக இருக்கிறார். அவர் இந்த மொழிபெயர்ப்பை வாசிக்கிறார். ஆங்கிலத்திலும்
வாசிக்கிறார். “ஐம் பிளைன்ட்” என இருக்கிறதை நான் தமிழில் “நான் குருடாயிட்டேன்” எனவே
எழுதி யிருக்கிறேன். திடீரென பார்வை போனவன், நான் குருடாயிட்டேன்னு அத்தனைக்கு அவன்
முடிவெடுத்திருக்க மாட்டான் சார். எனக்குக் கண் தெரியவில்லை, என்று இருந்தால் நல்லது,
என்றார். ஐம் பிளைன்ட், என்று ஆங்கிலத்தில் இருந்தாலும், எனக்குக் கண் தெரியவில்லை,
என மொழிபெயர்ப்பதை நான் வரவேற்கிறேன். இந்த யோசனை ராஜன் தந்தது.
சரமாகோ போர்த்துக்கீசிய மொழியில் என்ன எழுதி, ஆங்கிலத்தில்
‘ஐம் பிளைன்ட்’ ஆனதோ தெரியாது. உண்மையில் அந்த ஆங்கில மொழி நடை கடுமையானது. எது கிடைத்தாலும்
தமிழில் வகைதொகை யில்லாமல் மொழிபெயர்த்துத் தள்ளும் இந்தக் காலகட்டத்தில், அதன் கடுமையான
மொழிநடையே மற்றவர்களை, விலகியிரும் பிள்ளாய்... என நகர்த்தி வைத்திருந்தது. ஒரு சவாலாக
நான் எடுத்துச் செய்த நாவல் அது. எனது உதவியாளர்கள் இருவருமே எனது செயல்வேகத்தை நுணுக்கங்களை
ரசித்துக் கை குலுக்கினார்கள்.
செயற்கரிய செய்தேன்!
இன்னொரு சம்பவ உதாரணம். ஒரு கதையை இருவர் எப்படி இரு விதமாக
வாசிக்கிறார்கள் என உணர்த்தலாம். நகரில் இப்படி பார்வையின்மை தொற்று நோயாய்ப் பரவி
எல்லாருமே குருடாகிப் போகிறார்கள். ஒரு பெண்ணைத் தவிர. கதையை அவளை வைத்து நகர்த்துகிறார்
சரமாகோ. ஒரு பத்து பேர் வரை அவளுடன் வெளியே கிளம்புகிறார்கள். நகரில் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு நேரத்தில் பார்வை இழக்கிறார்கள். தெருக்களில் வாகனம் ஓட்டி வரும்போது பார்வையிழந்தவர்கள்
வாகனங்களை அப்படியப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். தெருவெங்கும் குறுக்கும்
மறுக்குமாக வாகனங்கள் நிற்கின்றன. அந்தப் பார்வையற்றவர்களை அவள் தெருவில் அழைத்துவருகையில்
சரமாகோ, தெருவே கல்லறை போலக் கிடந்தது, என எழுதுகிறார். நான் அதை மயான அமைதி என்று
புரிந்து கொண்டேன். டாக்டர் ஹரி விஜயலெட்சுமி அந்த இடத்தை, குறுக்கு மறுக்காக வாகனங்கள்
நிறுத்திக் கிடப்பது கல்லறை நடுகற்கள் போல அவர்
காட்சிப் படுத்தி யிருக்கலாம், என்று வேறு விதமாக அதைச் சொன்னார். அவர் சொன்னதே
சரி என்று எனக்குப் பட்டது. திருத்தம் செய்துகொண்டேன்.
இதேபோல் பிற மொழிபெயர்ப்புகளிலும் நான் என் யோசனைகளைச் சொல்வது
உண்டு. அப் ஃப்ரம் ஸ்லேவரி, தலைப்பை, அடிமையின் மீட்சி, என்று சொன்னது நான்தான்.
ஹெமிங்வேயின் ‘ஓல்ட் மேன்’ நாவலில் ஒரு கட்டம். மாலையில்
பசியுடன் கிழவர். அன்று முழுதும் அவர் சாப்பிட்டிருக்க மாட்டார். அவருடன் சிநேகமான
சின்னப் பையன் அவருக்கு உணவு எடுத்து வருவான். வந்து அரை மயக்கத்தில் இருந்த அவரை உலுக்குவான்.
“சாப்பிட வாங்க தாத்தா” என்பான். ஐல் ஹேவ் ய வாஷ், என்கிறார் கிழவர். கை கழுவி விட்டு
வருகிறேன், என்றும் இதைச் சொல்லலாம். குளித்து விட்டு வருகிறேன், என்றும் இதைச் சொல்லலாம்.
எப்படி நினைத்து ஹெமிங்வே எழுதினாரோ, அது ரகசியமாகவே இருக்கிறது.
5
புத்தகக் கண்காட்சியில் விதவிதமான வாசகர்களை சந்திக்க வாய்க்கிறது.
எத்தனையோ விதமான வாசக சந்திப்புகளைச் சொல்லி யிருக்கிறேன் இந்தப் பகுதிகளில். அந்தப்
பெண்மணி போலந்தில் இருந்து தமிழ் கற்க என்று ஆர்வத்துடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
வந்து படித்துக் கொண்டிருந்தார். புத்தகக் கண்காட்சி வந்து, புனைகதைகள் வாசிக்க என்று
தேர்வு செய்து வாங்கிக் கொண்டிருந்தார். புனைகதைகளோ, சினிமாவோ ஒரு மொழியைக் கற்க ஆக
உதவி. நீங்கள் எந்த நாடு அம்மா, என்று கேட்டேன். போலந்து,என்றார். போலந்து நாட்டின்
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் யார், அறிவீர்களா, என்று கேட்டேன். நான் எதிர்பார்த்த
பெயரைத் தவிர வேறு சில பெயர்கள் அவர் சொன்னார்.
ஹென்ரிக் சியென்கிவிச், தெரியுமா... என்றுகேட்டேன். ஆகா,
என்றார். அவரது சிறுகதை ஒன்றை நான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன், என்றதும், சட்டென
என் கையைப் பற்றிக் கொண்டார். என்ன கதை, என்றுகேட்டார். THE LIGHT-HOUSE KEEPER OF
ASPIN WALL - வாசித்தது உண்டா?...
போலிஷ் மொழியில் வாசித்திருக்கிறேன். பள்ளிக் கூடத்தில் எங்கள்
பாடத்தில் வந்த கதை, என்றார். ‘உச்சிவிளக்கு’ என நான் தமிழில் மொழிபெயர்த்த கதை அது.
அது வெளியான நூலை எடுத்துக் கொடுத்தேன். ‘அருமை’ என்று சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்.
“இதை நான் எங்கள் நாட்டுக்குப் பெருமையுடன் எடுத்துச் செல்வேன்” என்று நெஞ்சோடு அவர்
அணைத்துக் கொண்டது மறக்க முடியாத அனுபவம்.
எப்பவாவது தான் இப்படி அனுபவங்கள் நமக்கு வாய்க்கிறது. ஆனால்
வாய்த்ததே நம் அதிர்ஷ்டம், என்று சொல்லத் தோன்றுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால்,
அவர் நோபல் பரிசு பெற்ற மகா எழுத்தாளர். அவரது படைப்புகள் முப்பத்தியெட்டு நாற்பது
மொழிகளில் மொழிபெயர்ப்பு கண்டிருக்கிறது. அவரே வந்திருந்தால் கூட, எனக்கு இந்த மகிழ்ச்சியான
அனுபவம் வாய்த்திருக்காது. “ம்” என்றிருப்பார் அவர் அதிக பட்சம். எத்தனை மொழிபெயர்ப்பாளர்களை
சந்தித்திருப்பார் அவர்...
எழுத்து அனுபவம், மொழிபெயர்ப்பு பேரனுவம், தூண்டப்பட்ட விளக்காய்
எரிகிற அனுபவம் அது. என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் என் படைப்பு வீர்யத்தை அதிகப் படுத்துகிறது,
என அறிந்து கொண்டேன். மொழிபெயர்ப்பினால் எனது எழுத்துநடை பாதிக்கப் படவில்லை என்றே
தோன்றுகிறது.
*
storysankar@gmail.com
91
9789987842 / 91 9445016842
No comments:
Post a Comment