Friday, March 1, 2019


31
மொழிபெயர்ப்புக் கலை -
வேற்றுமையில் ஒற்றுமை

தமிழில் நான் வணங்கும் மொழிபெயர்ப்பாளர் நா. தர்மராஜன். பகவான்  ரமணர் பற்றி எம்.பி. பண்டிட் ஆற்றிய உரைகளின் தமிழாக்கம் புதுவை ஞானம், எத்தனை அழகான புத்தகம். அதை நான் பரிந்துரை செய்து உதயகண்ணன் இரண்டாம் பதிப்பு வெளியிட்டான். (நடு நின்ற நடுவே.)
மொழிபெயர்ப்பு சார்ந்து ம.ந.ராமசாமி காட்டும் அக்கறை வியப்பானது. நான் இடும் பணிகளை சிரமேற்கொண்டு அத்தனை கவனமாய்ச் செய்கிறார் அவர். எனது தந்தைக்கும் மேலான வயது அவருக்கு. அவரது அத்தனை மொழிபெயர்ப்பு நூல்களும் நான் அவருக்கு எடுத்துத் தந்தவையே. சாமர்செட் மாமின் ‘மழைதாரை’ - தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், ‘மாற்றான் தோட்டம்’ - ஜான் ஸ்டீன்பெக்கின் ‘முத்து’ -புக்கர் ட்டி. வாஷிங்டனின் ‘அடிமையின் மீட்சி’ - அன்டன் செகாவின் ‘மகா புல்வெளி’ - என எல்லா நூல்களும் நான் மொழிபெயர்க்க வைத்திருந்து அவரிடம் பணியைத் தந்தவை தாம். ‘ஸ்டெப்பி’ நாவலை மகா புல்வெளி, என வெளியிட்ட போது, அட்டைப்படம் பச்சையோ பச்சைப் புல், உள்ளே side paper பச்சை. மட்டுமல்ல, முழு நூலையுமே பச்சை வண்ண மையில் அச்சிட்டோம். ‘அடிமையின் மீட்சி’ அவரது மொழிபெயர்ப்புக்காக ‘நல்லி - திசை எட்டும்’ விருது பெற்றது.
சாமர்செட் மாமின் THE RAIN குறுநாவலை முதலில் எடுத்தளித்தேன். ஆங்கிலத்தில் மழை, என்ற சொல் புன்னகை தருகிற, மனதுக்கு இதமளிக்கிற சொல் அல்ல, நமக்கு தான் அது அப்படியான உணர்வைத் தரும். அவர்களுக்கு வெயில், அதுவே முக்கியம், என்றார் ம.ந.ரா. மழையே மழையே போய்விடு, என்றுதான் ஆங்கிலத்தில் குழந்தைப்பாடல் இருக்கிறது. இதை அறிந்தவர்கள் தாம் நாம் எல்லாரும். மழை வெளியே கிளம்ப, தெருவில் விளையாட சிரமப் படுத்தும்... என்கிற கவலையை விசனத்தையே தலைப்பில் சாமர்செட் மாம் ‘ரெய்ன்’ என்கிறார். ம.ந.ரா. மழை என்று தமிழில் சொல்லாமல், ‘மழைதாரை’ என்று சற்று அழுத்தம் கொடுத்து மொழிபெயர்த்தது அருமையான விஷயம்.
தற்போது நான் மொழிபெயர்த்திருக்கும் நாவல் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய ‘ஓல்ட் மேன் அன் தி சீ.’ ஆங்கிலத்தில் ஒல்ட் மேன், என்றால் அது மதிப்பான விளிப்பே. தமிழிலேயே அப்படித்தான். நிலக்கிழார் என்பார்கள். தமிழில் இதே நாவலை மொழிபெயர்த்தவர்கள் கடலும் கிழவனும், கிழவனும் கடலும், என்று சொல்கிறார்கள். இன்றைய தளத்தில் கிழவன் என்பவன் வலிமை குன்றிய நபர் என்றே அர்த்தம் ஆகிறது அல்லவா? அதுவும் கடலில் கப்பலின் கேப்டனையே ‘ஓல்ட் மேன்’ என ஆங்கிலத்தில் அழைப்பது வழக்கம். அதை மரியாதை த்வனியுடன் சொல்ல வேண்டிய அவசியம் உண்டு. ஹெமிங்வே அந்த மரியாதையான பொருளில் தான் ‘ஓல்ட் மேன்’ என கடல் வளாகம் பற்றிய கதையில் சொல்கிறார் என நான் நம்புகிறேன். நான் வைத்த தலைப்பு ‘பெரியவர் மற்றும் கடல்.’
மொழிபெயர்க்கும் போது சில ஆங்கிலப் பதங்களுக்கு நாமே புதிய தமிழ்ச் சொல்லாடல்களைக் கொண்டு வரலாமே என மனம் விழிக்கும். தமிழ்க் கதை எழுதுகையில் வருவதை விட மொழிபெகயர்ப்பு சமயம் இந்த சுதாரிப்பு சந்தர்ப்பங்கள் அதிகம். சாதாரணமாக ஒரு வேலை போல ஆங்கில வார்த்தையை எடுத்துக் கொண்டு அதற்கு தமிழ்ச்சொல் உருவாக்கலாம், அல்லது புனையலாம் என்று யோசிக்கும் போது வரும் சிந்தனையை விட, ஒரு படைப்பு வேலையில் இயங்கும் போது நமக்கு அதிதமான சக்தி கிடைக்கிறது, நாம் மேலதிக வீர்யத்துடன் செயல்பட வாய்க்கிறது. தனி அனுபவம் அது.
ஷவர், என்கிற ஆங்கிலச் சொல் வந்த ஒரு சமயம், புள்ளிக்குழாய், என எழுதினேன். என்லார்ஜ்மென்ட் - உருவோங்குதல். இது ஒரு நல்ல பிரயோகமாக அப்போதே புன்னகை செய்துகொண்டேன். காரணம், இதன் எதிர்ப்பதம், டிமினிஷிங், என்ற சொல் வருகையில், உருவொடுங்குதல், என்கிற வார்த்தை பொருந்திக் கொள்கிறது. அதேபோல, விபத்தானவர்களைத் தூக்கிச் செல்லும் ஸ்ட்ரெட்சர், அதை ‘நோயாளிக்கிடத்தி’ என்று குறிப்பிட்டேன். சட்டென இப்போது நினைவுக்கு வந்த உதாரணங்கள் இவை.
குடும்பக் கட்டுப்பாடு, என்று தமிழக அரசின் திட்டங்களுக்கு, ஊக்குவிப்பு வாசகம் என பலரும் முயற்சி செய்தபோதும் அமையவே இல்லை. வாலி ஒரு திரைப்படப் பாடல் எழுதினார். தாலாட்டுப் பாடல். அதில் இந்த குடும்ப நல வரிகள் அவரால் கண்டுபிடிக்கப் பட்டன. “ஒன்றோ ரெண்டோ பிள்ளை என்றால் இன்பம் கொள்ளை.”
படைப்பு மனநிலை என்கிற அனுபவமே தனி தான்.
2
க.நா.சு, தி.ஜானகிராமன் போன்ற எழுத்துலக ஜாம்பவான்களே மொழிபெயர்ப்பில் ஆர்வம் செலுத்தி நல்ல மொழிபெயர்ப்புகள் தந்திருக்கிறார்கள். பாரதியார், புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு செய்திருக்றிர்கள். நல்ல நூல்களை வாசிக்கும் போது இதைத் தமிழில் தர வேண்டும், என்கிற உந்துதல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். யாம் பெற்ற இன்பம் வையகம் பெறுக, என்பது உயர்ந்த கோட்பாடுதான். தவிரவும் மொழிபெயர்க்கும் பயிற்சியில் நமது வாசகத்தன்மை மேலும் தீவிரம் அடைகிறது. அது பெரிய ஆதாயம் நமக்கு.
நான் உலகச் சிறுகதைகள் நான்கு தொகுதிகள் கொண்டு வந்திருக்கிறேன். கனவுச்சந்தை முதல் தொகுதி. பிறகு, வேற்றூர் வானம், மேற்கு சாளரம், அயல்வெளி - ஆகிய தொகுதிகள் வந்தன. கையில் நாலைந்து கதைகள் மொழிபெயர்த்து, இதழ்களில் வெளியாகி நூலாகாமல் இருக்கிறது. மேலும் ஏழெட்டு கதைகள் சேர வேண்டும். சில சமயம் பத்திரிகையில் இருந்தோ நண்பர்களோ மொழிபெயர்க்கச் சொல்லி கதைகள் தருகிறார்கள். சில நல்ல கதைகள் அவர்கள் வாசித்து அவர்களுக்குப் பிடித்து சிபாரிசு செய்கிறார்கள். எனது வாசிப்பிலும், இணையத்தில் தேடுவதிலும், கைக்கு எட்டிய புத்தகங்களில் இருந்தும், வாசித்து எனக்குப் பிடித்ததைத் தேர்வு செய்கிறேன். யாரும் தந்தார்கள் என்றோ, சிபாரிசு செய்கிறார்கள் என்றோ, இதுவரை எனக்குப் பிடிக்காத கதையை நான் மொழிபெயர்க்க எடுத்துக் கொண்டது இல்லை.
மொழிபெயர்க்கும் படைப்புகளில் குறைகள் கண்டால், விவரப் பிழைகள் இருந்தால் அவற்றைச் சட்டிக்காட்ட நான் தயக்கம் காட்டுவது இல்லை.
மொழிபெயர்ப்பு நாமும் செய்யலாமே, என நம்பிக்கை வந்த கணம், நான் வாசித்த நல்ல கதைகளை மனதுக்குள்ளேயே தேடி, அவற்றைத் திரும்பக் கண்டெடுத்து மொழிபெயர்த்தேன். ஆன்டன் செகாவ், ஜாக் லண்டன் கதைகள் அப்படி வந்தவை. சிறுகதைப் பெருங்கொத்துகள், உலகச் சிறுகதைத் தொகுப்புகள் என வாசிக்கையில் தேர்வு செய்தவை சில.  மொழிபெயர்க்கலாம் என குறித்து வைத்துக்கொண்டு அதற்கான ஓய்வில் முன்னெடுத்தவை. சில கதைகளைத் தமிழிலேயே மொழிபெயர்ப்புகளாக வாசித்து, அது திருப்தியுறாமல், மூலத்தைத் தேடியடைந்து, நான் திரும்ப மொழிபெயர்த்ததும் உண்டு. உதாரணங்கள் வேண்டாம்.
அதேபோல, மொழிபெயர்ப்பு என்பது ஆரம்ப காலத்தில ஒற்றுமையில் வேற்றுமையை அடையாளங் காட்டிக் கொண்டிருந்தது. அதன் நவீனத் தன்மையில் வேற்றுமையில் ஒற்றுமை காட்டி நிற்கிறது இப்போது, என நினைக்கிறேன். ஏனெனில் இன்று மனிதனே உலக மனிதனாகி விட்டான். நாட்டின் எல்லைகள் கரைந்து கொண்டிருக்கின்றன. குளோபல் எகானமி என்கிறார்கள். உலகம் உள்ளங் கையில் என்று சுருங்கி வருகிறது. அனுபவங்கள் அவ்வளவில் விரிந்து வருகின்றன.
3
சாகித்ய அகாதெமி அளித்த பணி, என முல்க் ராஜ் ஆனந்தின் ‘மார்னிங் ஃபேஸ்’ நாவலை நான் தமிழில் தந்தேன். அது அவரது இளமைப் பருவமே தான். தன் சொந்த வாழ்க்கை பற்றியே ஏழு நாவல்கள் எழுத அவர் திட்டமிட்டிருந்ததகத் தெரிகிறது. அதில் ஐந்தது தான் அவர் எழுதினார். சாகித்ய அகாதெமி பரிசு பெற்றஆங்கில நாவல் இது. அதை நான் மொழிபெயர்க்கிறேன் என்கிற அந்த அடையாளம் எனக்கு உவப்பானதாய் இருந்தது. ஆனால் மூலத்தின் ஆங்கிலமே எனக்கு உவப்பாய் இல்லை. நாவலில் ஒரு சாமியார் பாத்திரம் வருகிறது. அதை அவர், யுவார் எ பிராக்டிகல் சாது, என்று உரையாடல்ப் படுத்தியபோது திகைப்பாய் இருந்தது. இதை இந்திய மொழியில் அவர் எப்படி உணர்ந்து கொண்டிருப்பார், என யூகித்து நான் தமிழ்ப் படுத்தினேன் - நீங்கள் ஒரு கர்மயோகி!
அதில் கண்ட ஒரு விவரப் பிழையையும் நாவலிலேயே அடிக்குறிப்பு இட்டு நான் சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது. காரணம், அது மொழிபெயர்ப்பாளர் பிழை என்றுயாரும் தவறாக எடுத்துக் கொண்டுவிடக் கூடாது, என்றிருந்தது. ‘விடியல் முகம்’ பெரிய நாவல். தமிழில் அச்சில் 850 பக்கங்களுக்கு மேல் அமைந்தது. நானே அப்போது சிறுகதைகளைத் தாண்டி, பெரிய நாவலாக எடுத்துக் கொண்டு இயங்கிப் பார்க்கலாமே என்கிற யோசனையில் இருந்தேன். ‘விடியல் முகம்’ மொழிபெயர்த்து முடித்த ஜோரில் நல்ல ஆங்கில வாசனை தேடி நான் மீளவும் என் நினைவு அடுக்குகளில் தேடினேன்.
எனது வாலிபப் பருவத்தில் என்னைக் கவர்ந்த சாமர்செட் மாம் நாவல் ஒன்றைக் கையில் எடுத்தேன். மாமின் ஆங்கிலமும், அவரது நையாண்டி நடையும் எனக்கு விருப்பமானவை. CAKES AND ALE என்ற அந்த நாவல், நான் கல்லூரி வாசிப்பை முடித்து வெளியே வந்த ஜோரில் என்னை அயர்த்திய நாவல். சிலாட்கள் திரும்பி வீடு வரும் வரை தெருவில் எதாவது கல்லை எத்திக் கொண்டே வருவான். அதைப்போன்ற, என்ன சீண்டலான நடை. துறுதுறுப்பான அவதானிப்புகள்.
எட்வர்ட் டிரிஃபீல்ட் என்கிற எழுத்தாளர் பற்றிய கதை. அது தாமஸ் ஹார்டி, என்கிறார்கள். நமக்கு என்ன அதைப் பற்றி. எழுத்தாளனா விமரிசகனா, யார் உசத்தி, என வருகிற இடத்தில், எழுத்தாளன் தான், அட எந்த விமரிசகனுக்கு ஊரில் சிலை வைக்கிறார்கள், என ஆரம்பிக்கிறார் அவர். ஆனால் இந்த எழுத்தாளன் விமரிசகனுக்குப் பயப்படுகிறான், என எழுத்தாளனைச் சீண்டுகிறார். அவனது நாவல் பெஸ்ட் செல்லராகி அவன் கார் வாங்கி யிருப்பான். அதைத் தெருவோரம் நிறுத்தி விட்டு இறங்கி அந்தச் சந்தில் விமரிசிசகன் வீட்டுக்கு நடந்து வருவான். ஒடுக்கமான அந்தச் சந்துக்குள் கார் நுழையாது. வந்து விமரிசகன் முன் பவ்யமாய் நிற்கிற எழுத்தாளனிடம் அந்த விமரிசகன் அலட்சியமாக, உன் நாவல்... பிரயோசனம் இல்லியேப்பா, என உதட்டைப் பிதுக்குவான் ... என்பார் சாமர்செட் மாம். என்ன கிண்டல்கார மனுசன்.
எட்வர்ட் டிரிஃபீல்டின் முதல் மனைவி ஓடிப்போய் விட்டாள். இரண்டாவது மனைவி, அவரது, எழுத்தாளரது மரணத்திற்குப் பின், அவரது வாழ்க்கை வரலாறு எழுதவேண்டும், என யாரிடமாவது பொறுப்பு தர விரும்புகிறாள். இங்கே மாம் கிண்டல் அடிக்கிறார். ஆனால் அவரது சிறந்த படைப்புகள் முதல் மனைவியுடன் இருந்தபோது தந்தவை தாம், என்கிறார் மாம்.
A THING OF BEAUTY IS NOT A JOY FOREVER - என ஓரிடத்தில், கதையூடே கல்லெத்திய நடையில் வருகிறார் மாம். அப்போது ஆகா என்றிருந்தது. இப்போதைய நிதான வாசிப்பில் அதை மறுக்க முடிகிறது. மாம் என்ன சொல்கிறார்? அழகான ஒரு பொருள், அதில் என்ன விசேஷம்? ஒருமுறை அதைப் பார்க்கலாம். ரசிக்கலாம். பிறகு? வேறு அதில் நமக்கு வேலை என்ன? ஜாய் ஃபார்-எவர், காலகாலத்துக்குமான... நிரந்தர மகிழ்ச்சி எங்கிருந்து வரும்? ஆனால் அறிவார்த்தமான ஒரு கலைப் படைப்பு, யோசிக்க யோசிக்க அது பல அனுபவங்களை ருசிகளைக் கிளர்த்திக் கொண்டேயிருக்கும். அது ஜாய் ஃபார்-எவர். இது? அழகுக்கு அந்த நிரந்தரத் தன்மை எப்படி வரும் ஐயா?... என்பது சாமர்செட்மாமின் கேள்வி. அந்த வயசில் பரவசப் படுத்திய பகுதி இது.
இப்போது இந்த நிதானப்படட வாசிப்பு அனுபவத்தில் அதை மறுக்கத் தோன்றுகிறது. எப்படி? ஒரு பொருளைப் பார்க்கிறீர்கள். அதில் அழகைப் பார்க்கிறீர்கள். இன்னொரு பொருளுக்குப் பார்வையைத் திருப்புகிறீர்கள். அதிலும் உள்ள அழகைக் கண்டுபிடிக்கிறீர்கள். இப்படி, காணும் பொருளில் எல்லாம் அழகைக் கண்டுபிடிக்க முடிந்தால், அதுதான் ஜாய் ஃபார்-எவர். A THING OF BEAUTY IN EVERYTHING - FINIDNG BEAUTY IS A JOY FOREVER!
கேக்ஸ் அன் ஏல் - என்றால் விமரிசகனுக்குப் பார்ட்டி வைத்து அவனை வசியப்படுத்தி நல்ல விமரிசனங்களாக எழுத வைத்து எழுத்தாளர்கள் பரிசுகளைப் பெறுகிறார்கள், என்கிற கிண்டலை உள்ளடக்கிய தலைப்பு. இதைத் தமிழில், விருந்துகள் கேளிக்கைகள், என்று வைத்திருக்கலாம். நான வைத்த தலைப்பு - முன்னணியின் பின்னணிகள்.
இப்போதும் கூட சொற்சிக்கனத்தில் ஹெமிங்வே, எகத்தாளத்தில் சாமர்செட் என்று என்னை யாராவது சொன்னால் நான் மறுக்க ஏதுமில்லை! அந்த வயதில் என் மூளையில் ஏறியமர்ந்தவர்கள் இவர்கள் தாம்.
எனது மொழிபெயர்பபில், நாவல்களில் நான் ஓர் ரகசிய உத்தியைக் கைக்கொள்வேன். மொழிபெயர்ப்புகள் நாம் புரிந்துகொள்கிற அளவிலும் இருக்க வேண்டும். அதேநேரம் அது நிகழிடங்களின் வாசனையையும் முற்றும் விட்டுவிட முடியாது. ஆகவே நான் நாவலின் பிரதான பாத்திரங்களின் பெயர்களை தமிழ்ப்படுத்திப் பயன்படுத்துகிறேன். எட்வர்ட் டிரிஃபீல்ட் - என்கிற நாயகனை நான் எட்வர்டு திரிஃபீல்டு என்று எழுதுகிறேன். உள்ளே வந்து போகும் சிறுபாத்திரங்களை இப்படி தமிழ் உச்சரிப்பாக ஆக்குவது இல்லை. ஆர்னால்ட் என்றால் ஆர்னால்டு என்று எழுதுவது இல்லை  ஆர்னால்ட் தான். அது அந்த வேற்றூர்த் தன்மையைத் தக்க வைக்கும் என எனக்கு ஒரு கணிப்பு. ஊர்ப்பெயர்களும் அவ்வண்ணமே.
A NARROW LANE என்பதை நான் ஒடுகலான குறுகலான பாதை, என்று எழுதமாட்டேன். ஒத்தையடிப் பாதை, என்று போடுவது இன்னும் அணுக்கமாக இருக்கும். சூழலுக்கேற்ற நல்ல வார்த்தைகள் சில சமயம் வெளியில் இருந்து கிடைக்கும். மொழிபெயர்ப்பு என்பது மாறுதலுக்கு உட்பட்டதே. எந்த மொழிபெயர்ப்புக்கும், அதைவிடச் சிறந்த மொழிபெயர்ப்பு நாளை அமையக் கூடும். ஒரு வேடிக்கை போலச் சொன்னால், சில கதைகள் ஏற்கனவே மொழிபெயர்க்கப் பட்டு வந்திருந்தாலும், இன்னும் நன்றாக வந்திருக்கலாம், என நானே முயன்றிருக்கிறேன்!
4
மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்க்கிற அந்த ஒரு நபரோடு முடியாது என நான் நம்புகிறேன். தமிழ் எனக்குத் தாய்மொழி. ஆங்கிலம் அப்படி அல்ல. அதன் த்வனியை தாய்மொழியில் போல என்னால் புரிந்துகொள்ள முடியுமா, என்பதில் எனக்கு ஐயம் உண்டு. அவர்கள் பண்பாடு, கலாச்சாரம், மொழியை அவர்கள் பயன்படுத்தும் முறையே மாறுபடுகிறது. நாம் ‘அப்டிப் போடு’ என்றால், அவர்கள் ‘ஹியர் வி கோ’ என்கிறார்கள். வெளிப்படுத்தும் முறை வேறு மாறுபடுகிறது. காபி சாப்பிடறீங்களா, என நாம் கேட்பதை, ஒய் கான்ட் டு ஹேவ் ய கப் ஆஃப் காஃபி வித் மி, என்கிறார்கள். அதை அப்படியே, நீங்க ஏன் எங்கூட காப்பி சாப்பிடக் கூடாது, என்று எழுத முடியாது. (ஒரு காலத்தில் ஜுனூன் தொலைக்காட்சித் தொடர் தமிழ் இந்த மாதிரி அமைந்தது.) ஆங்கில மொழியை நான் புரிந்துகொண்டது சரிதானா, என நான் வேறொரு நபரிடம் சரிபார்த்துக் கொண்டபின்பே மொழிபெயர்ப்புப் படைப்பை வெளியே அறியத்தர வேண்டும், என்பதில் எனக்குத் தீர்மானம் உண்டு. எனது மிகப் பெரும் உதவி, டாக்டர் ஹரி விஜயலெட்சுமி. தமிழ் எம்.ஏ., ஆங்கில எம்.ஏ. தமிழ்த் துறைத் தலைவராக ஜிவிஜி விசாலாட்சி கல்லூரி, உடுமலைப்பேட்டையில் பணியாற்றி விட்டு, தென்காசியில் மற்றொரு கல்லூரியில் முதல்வராகவும் இருந்து தற்போது ஒய்வு கொள்கிறார். தற்போது ஓர் இளைஞன், கற்குவேல், எனக்கு முகநூல் மூலம் அறிமுகம் ஆகி, அவனிடமும் முதல் வாசிப்புக்கு என நான் மொழிபெயர்ப்பைத் தருகிறேன். ஆச்சர்யகரமான கவனங்கள் உள்ளவன்.
நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீசிய நாவல்,யோசே சரமாகோ எழுதிய ‘பார்வை தொலைத்தவர்கள்.’ நான் அதைத் தமிழில் மொழிபெயர்த்தேன். பாரதி புத்தகாலயம் சிறப்பாக அதை வெளியிட்டது. அதன் முதல் அத்தியாயம் இப்படி அமைகிறது. சாலை நடுவே போக்குவரத்துப் பச்சைக்காகக் காத்திருக்கிறார்கள். அங்கே ஒரு காரில் அமர்ந்திருந்தவனுக்கு திடீரென கண் தெரியாமல் போய்விடுகிறது. காரை அவன்தான் ஓட்டி வந்தவன். சிவப்பு மாறி பச்சை வந்தபோதும் அவனால் காரை நகர்த்த முடியவில்லை. காருக்குள் அவன் உதவிக்கு அழைக்கிறான். “ஐம் பிளைன்ட்” என்று அவன் கத்துகிறான்.
பாரதி புத்தகாலயத்தில் திரு ராஜன் என்பவர் புத்தக வெளியீட்டில் மேற்பார்வையாளராக இருக்கிறார். அவர் இந்த மொழிபெயர்ப்பை வாசிக்கிறார். ஆங்கிலத்திலும் வாசிக்கிறார். “ஐம் பிளைன்ட்” என இருக்கிறதை நான் தமிழில் “நான் குருடாயிட்டேன்” எனவே எழுதி யிருக்கிறேன். திடீரென பார்வை போனவன், நான் குருடாயிட்டேன்னு அத்தனைக்கு அவன் முடிவெடுத்திருக்க மாட்டான் சார். எனக்குக் கண் தெரியவில்லை, என்று இருந்தால் நல்லது, என்றார். ஐம் பிளைன்ட், என்று ஆங்கிலத்தில் இருந்தாலும், எனக்குக் கண் தெரியவில்லை, என மொழிபெயர்ப்பதை நான் வரவேற்கிறேன். இந்த யோசனை ராஜன் தந்தது.
சரமாகோ போர்த்துக்கீசிய மொழியில் என்ன எழுதி, ஆங்கிலத்தில் ‘ஐம் பிளைன்ட்’ ஆனதோ தெரியாது. உண்மையில் அந்த ஆங்கில மொழி நடை கடுமையானது. எது கிடைத்தாலும் தமிழில் வகைதொகை யில்லாமல் மொழிபெயர்த்துத் தள்ளும் இந்தக் காலகட்டத்தில், அதன் கடுமையான மொழிநடையே மற்றவர்களை, விலகியிரும் பிள்ளாய்... என நகர்த்தி வைத்திருந்தது. ஒரு சவாலாக நான் எடுத்துச் செய்த நாவல் அது. எனது உதவியாளர்கள் இருவருமே எனது செயல்வேகத்தை நுணுக்கங்களை ரசித்துக் கை குலுக்கினார்கள்.
செயற்கரிய செய்தேன்!
இன்னொரு சம்பவ உதாரணம். ஒரு கதையை இருவர் எப்படி இரு விதமாக வாசிக்கிறார்கள் என உணர்த்தலாம். நகரில் இப்படி பார்வையின்மை தொற்று நோயாய்ப் பரவி எல்லாருமே குருடாகிப் போகிறார்கள். ஒரு பெண்ணைத் தவிர. கதையை அவளை வைத்து நகர்த்துகிறார் சரமாகோ. ஒரு பத்து பேர் வரை அவளுடன் வெளியே கிளம்புகிறார்கள். நகரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் பார்வை இழக்கிறார்கள். தெருக்களில் வாகனம் ஓட்டி வரும்போது பார்வையிழந்தவர்கள் வாகனங்களை அப்படியப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். தெருவெங்கும் குறுக்கும் மறுக்குமாக வாகனங்கள் நிற்கின்றன. அந்தப் பார்வையற்றவர்களை அவள் தெருவில் அழைத்துவருகையில் சரமாகோ, தெருவே கல்லறை போலக் கிடந்தது, என எழுதுகிறார். நான் அதை மயான அமைதி என்று புரிந்து கொண்டேன். டாக்டர் ஹரி விஜயலெட்சுமி அந்த இடத்தை, குறுக்கு மறுக்காக வாகனங்கள் நிறுத்திக் கிடப்பது கல்லறை நடுகற்கள் போல அவர்  காட்சிப் படுத்தி யிருக்கலாம், என்று வேறு விதமாக அதைச் சொன்னார். அவர் சொன்னதே சரி என்று எனக்குப் பட்டது. திருத்தம் செய்துகொண்டேன்.
இதேபோல் பிற மொழிபெயர்ப்புகளிலும் நான் என் யோசனைகளைச் சொல்வது உண்டு. அப் ஃப்ரம் ஸ்லேவரி, தலைப்பை, அடிமையின் மீட்சி, என்று  சொன்னது நான்தான்.
ஹெமிங்வேயின் ‘ஓல்ட் மேன்’ நாவலில் ஒரு கட்டம். மாலையில் பசியுடன் கிழவர். அன்று முழுதும் அவர் சாப்பிட்டிருக்க மாட்டார். அவருடன் சிநேகமான சின்னப் பையன் அவருக்கு உணவு எடுத்து வருவான். வந்து அரை மயக்கத்தில் இருந்த அவரை உலுக்குவான். “சாப்பிட வாங்க தாத்தா” என்பான். ஐல் ஹேவ் ய வாஷ், என்கிறார் கிழவர். கை கழுவி விட்டு வருகிறேன், என்றும் இதைச் சொல்லலாம். குளித்து விட்டு வருகிறேன், என்றும் இதைச் சொல்லலாம். எப்படி நினைத்து ஹெமிங்வே எழுதினாரோ, அது ரகசியமாகவே இருக்கிறது.
5
புத்தகக் கண்காட்சியில் விதவிதமான வாசகர்களை சந்திக்க வாய்க்கிறது. எத்தனையோ விதமான வாசக சந்திப்புகளைச் சொல்லி யிருக்கிறேன் இந்தப் பகுதிகளில். அந்தப் பெண்மணி போலந்தில் இருந்து தமிழ் கற்க என்று ஆர்வத்துடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வந்து படித்துக் கொண்டிருந்தார். புத்தகக் கண்காட்சி வந்து, புனைகதைகள் வாசிக்க என்று தேர்வு செய்து வாங்கிக் கொண்டிருந்தார். புனைகதைகளோ, சினிமாவோ ஒரு மொழியைக் கற்க ஆக உதவி. நீங்கள் எந்த நாடு அம்மா, என்று கேட்டேன். போலந்து,என்றார். போலந்து நாட்டின் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் யார், அறிவீர்களா, என்று கேட்டேன். நான் எதிர்பார்த்த பெயரைத் தவிர வேறு சில பெயர்கள் அவர் சொன்னார்.
ஹென்ரிக் சியென்கிவிச், தெரியுமா... என்றுகேட்டேன். ஆகா, என்றார். அவரது சிறுகதை ஒன்றை நான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன், என்றதும், சட்டென என் கையைப் பற்றிக் கொண்டார். என்ன கதை, என்றுகேட்டார். THE LIGHT-HOUSE KEEPER OF ASPIN WALL - வாசித்தது உண்டா?...
போலிஷ் மொழியில் வாசித்திருக்கிறேன். பள்ளிக் கூடத்தில் எங்கள் பாடத்தில் வந்த கதை, என்றார். ‘உச்சிவிளக்கு’ என நான் தமிழில் மொழிபெயர்த்த கதை அது. அது வெளியான நூலை எடுத்துக் கொடுத்தேன். ‘அருமை’ என்று சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். “இதை நான் எங்கள் நாட்டுக்குப் பெருமையுடன் எடுத்துச் செல்வேன்” என்று நெஞ்சோடு அவர் அணைத்துக் கொண்டது மறக்க முடியாத அனுபவம்.
எப்பவாவது தான் இப்படி அனுபவங்கள் நமக்கு வாய்க்கிறது. ஆனால் வாய்த்ததே நம் அதிர்ஷ்டம், என்று சொல்லத் தோன்றுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் நோபல் பரிசு பெற்ற மகா எழுத்தாளர். அவரது படைப்புகள் முப்பத்தியெட்டு நாற்பது மொழிகளில் மொழிபெயர்ப்பு கண்டிருக்கிறது. அவரே வந்திருந்தால் கூட, எனக்கு இந்த மகிழ்ச்சியான அனுபவம் வாய்த்திருக்காது. “ம்” என்றிருப்பார் அவர் அதிக பட்சம். எத்தனை மொழிபெயர்ப்பாளர்களை சந்தித்திருப்பார் அவர்...
எழுத்து அனுபவம், மொழிபெயர்ப்பு பேரனுவம், தூண்டப்பட்ட விளக்காய் எரிகிற அனுபவம் அது. என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் என் படைப்பு வீர்யத்தை அதிகப் படுத்துகிறது, என அறிந்து கொண்டேன். மொழிபெயர்ப்பினால் எனது எழுத்துநடை பாதிக்கப் படவில்லை என்றே தோன்றுகிறது.
*
storysankar@gmail.com
91 9789987842 / 91 9445016842






Friday, February 22, 2019


பகுதி 30
மொழிபெயர்ப்பு எனும் படைப்புக்கலை
எஸ்.சங்கரநாராயணன்
•
2018ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘மொழியாக்க விருது’ பெறுகிறேன். 19.02.2019 அன்று காலை 09.30 அளவில்  முதல்வர் அறையில் வைத்து விருது வழங்கப் படுவதாக கைக்கு வந்திருக்கிறது அரசாணை. (இதை எழுதும் நாள் 17.02.2019) எப்படியும் இந்த ‘யானையின் வண்ணப்படம்’ தொகுப்பின் ஒரு கட்டுரையாக ‘மொழிபெயர்ப்பு’ என்ற தலைப்பில் நான் எழுத இருக்கிறது தானே?
என்னைவிட என் நண்பர்கள் இதில், எனக்கான இந்த விருது சார்ந்து அதிக உற்சாகம் அடைகிறார்கள். எனது சிறப்புகளில் மாத்திரம் அல்ல, வாழ்வின் சிக்கலான கணங்களிலும் அவர்கள் என்னுடனேயே நெருக்கமாய், கூடப் பயணிக்க விரும்புகிறார்கள். அந்த நட்புவட்டம் எனது பெருமை. மூன்று வருடங்கள் முன்னால் எனது நண்பனும் பதிப்பாளனுமான உதயகண்ணன், முதல்வர் ஜெயலலிதா அவர்கள் புதிதாய் மொழியாக்க விருதுகளை அறிவித்திருப்பதாகவும், உங்களைப் பற்றிய குறிப்புகளையும் நான் தரலாமா, என்றும் கேட்டான். நான் எதிர்பாராமல், ஒரு முன்னிரவுப் பொழுதில் இப்போது திடீரென்று இந்த விருது அறிவிப்பு - அலைபேசிச் செய்தி, வந்தடைந்தது. உதயகண்ணனுக்கு நன்றி. அவன் விண்ணப்பத்திருக்கா விட்டால் இது வந்துமிராது. எனக்கே ஒருவேளை இதுபற்றித் தெரிந்துமிராது.
இதுவரை ‘உலகச் சிறுகதைகள் தொகுதி‘ நான்கு நூல்கள் தமிழில் தந்திருக்கிறேன். முதல் தொகுதி ‘கனவுச் சந்தை.’   அதன் முதல் கதை ROUND THE BEND, மேற்கு இந்தியத் தீவுகள் எழுத்தாளர் சாமுவேல் செல்வான் எழுதியது. நான் மொழிபெயர்த்த முதல் சிறுகதை இதுதான்.
முள்னதாக 3தமிழின் ஆக மோசமான மொழிபெயர்ப்புகளை நான் வாசித்திருந்தேன். அதுபற்றி அவனிடம், உதயகண்ணனிடம் நான் கேலியாடிக் கொண்டிருந்தேன். எப்பவுமே உற்சாகம் கிளம்பி விட்டால், நான் கேலியாடுவதில் இறங்குவதுதான். நான் படித்த மோசமான மொழிபெயர்ப்பு உதாரணங்களை, நிஜ அனுபவங்களை, இங்கே தவிர்க்கிறேன். விருது பெறும் நேரம் இது. ஆனால் அதற்காக உதாரணம் சொல்லாமல் எப்படி? HE IS A POOR TRANSLATOR - என்பதை அவன் ஓர் ஏழை மொழிபெயர்ப்பாளன், என மொழிபெயர்த்ததாகச் சொல்வார்கள். எகனாமிக் சைக்கிள், என்பது பொருளாதார மிதிவண்டி. ஆன்டன் செகாவின் ஒரு சிறுகதைத் தலைப்பு, லேடி வித் ய டாக், தமிழில் யாரோ, நாயுடன் கூடிய சீமாட்டி, என மொழிபெயர்த்ததாகச் சொல்வார்கள். வேடிக்கைக்காகச் சொல்லி யிருப்பார்களாய் இருக்கும். ஐயய்ய, எனக்கே ஒருமாதிரி இருக்கிறது.
எனது ‘கடல்காற்று’ நாவலில் ஒரு பாத்திரம் வரும். தெருவில் போய்க்கொண்டே அந்த மனிதன், வீட்டு வாசலில் டிரான்சிஸ்டர் கேட்டபடி அமர்ந்திருக்கும் பெரியவரிடம் கேட்பான். “ஆர் யு ஆஸ்கிங் சாங்ஸ்?”
சின்ன வயசில் கண்ணதாசனே சொல்வாராம் - டாக்டர் கிட்ட போய் நீடில் போட்டுக்க நான் பயப்படுவேன்.
உதயகண்ணன் சிரித்தான். என்றாலும் பிறகு சொன்னான் - நீங்களும் ஆங்கிலத்தில் வாசிக்கிறவர் தானே. அதுபற்றி நிறைய என்னிடமும் நண்பர்களிடமும் பேசுகிறீர்கள், நீங்களே மொழிபெயர்ப்பு செய்யலாமே, என்று எடுத்துத் தந்தவனும் அவனே. பதிப்பாளன் உதயகண்ணன்.
‘நிஜம்’ என சிற்றிதழ் ஒன்று நான் கொண்டு வந்தபோது, சாமர்செட் மாம் எழுதிய CAKES AND ALE நாவலில் ஒரு விவாதப் பகுதியை - A THING OF BEAUTY IS NOT A JOY FOREVER, என அமையும் அது, அந்தப் பகுதியை, சுமார் இரண்டு பக்கங்கள், மொழிபெயர்த்துத் தரும்படி கோபிகிருஷ்ணனிடம் தான் வேண்டினேன். பிறகு ஜெயமோகன், தாமஸ் மன் என்கிற எழுத்தாளரின் ஒரு கதையைத் தமிழில் தந்தார். அதை வெளியிட முடியாமல் போயிற்று. பத்திரிகை நின்று போயிற்று.
அப்போது ஒரு கதை, ஜான் அப்டைக் எழுதிய ‘வால்ட்டர் பிரிக்ஸ்,’ ஜெயமோகனுக்கு அனுப்பி தமிழில் செய்கிறீர்களா, என்று கேட்டது நினைவு. அதுவும் முற்று பெறவில்லை. அந்தக் கதையைத் தேடி எடுக்க வேண்டும். நானே மொழிபெயர்க்கலாம்.
இந்நிலையில் தான் அந்த மேற்கு இந்தியத் தீவுகள் கதையை நான் வாசித்துவிட்டு தமிழில் முயற்சி செய்தேன். ‘ரவுண்ட் தி பென்ட்’ தமிழில் ‘பின்வாசல்’ ஆயிற்று. சரி. அதை ஏன் மொழிபெயர்க்கலாம் என்று கையில் எடுத்தேன் நான்? அதன் கதையமைப்பு அப்படி. வேலையில்லாமல், பக்கத்து நாட்டுக்கு ஓடிவிட்டால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம், என கள்ளத்தோணி ஏறுகிற ஒருவனின் கதை அது. அந்தக் காலகட்டத்தில் இங்கேயும், நம்மூரிலும் ஸ்ரீ லங்காவில் இருந்து அகதிகளாக பாவப்பட்ட சனங்கள் கள்ளத்தோணி மூலம் வந்திறங்கிக் கொண்டிருந்தார்கள். எங்களது தந்தியலுவலகம் வந்து, ஸ்ரீ லங்காவுக்கு ‘கால்’ போட்டு ஒரு பெண் பேசினார். அவர் வரும்போது குண்டுவீச்சு பயங்கரமாக இருந்ததாம் ஊரிலும், கடலிலும். பேசுகிற இப்போதும் அவர் உடம்பு பயத்தில் தூக்கித் தூக்கிப் போட்டது.
ஆகவே நமது தமிழ் சனங்களுக்கு இந்த மொழிபெயர்ப்புக் கதை இணக்கமானதாக நான் நம்பினேன். அகதி என்கிற இதே சூழலில் இன்னொரு கதை கூட, ‘பெரிய எழுத்து டான் க்விக்சாட் கதை’ என நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.
முதல் கதை எல்லாருக்கும் பிடித்திருந்தது. எனக்கும் அதில் பிடித்த விஷயம் ஒன்று இருந்தது. ஒரு கதையை வாசகனாக ரசனையுடன் வாசிப்பது என்பது வேறு. மொழிபெயர்ப்பு என்று மெனக்கிடும் போது, அடேயப்பா, அதற்கு மூன்று மடங்கு கவனக் குவிப்பு தேவைப் படுகிறது. வண்டியில் நாம் தனியே போவது எப்படி, கூட மனுசாளை பின்னே ஏற்றிக் கொண்டு வாகனம் ஓட்டுவதன் கவனம் எப்படி? அதேபோலத் தானோ என்னவோ. இப்போது மூல எழுத்தாளனின் ‘பிடிகள்’ மேலும் புலப்பட்டன. அநேக சந்தர்ப்பங்களில் அவனது ஆத்மாவைக் கூட நாம் அடைய முடிகிறது. எப்பெரும் பேறு இது.
கதையுடன் பொதுவாக அந்த மூல எழுத்தாளனின் வாழ்க்கைக் குறிப்பு வெளியிடுவார்கள். சில கதைகளுக்கு மூல எழுத்தாளனைப் பற்றிய குறிப்பு கிடைக்காமல் போகும். புகைப்படம் கிடைக்காது. நான் அந்த முதல் தொகுதி ‘கனவுச்சந்தை’யில், கதையை மொழிபெயர்க்க என நான் ஏன் தேர்வு செய்தேன் என்பதைச் சொல்லி, அந்தக் கதையின் நுட்பங்களாக நான் கண்டவற்றையும், குறை எதுவும் கண்டால் அதையும் சுட்டிக்காட்டி விவாதமேடையாகவே பின்குறிப்பு இட்டேன். வாசக ரசனையை அடுத்த படிக்கு சிறிது அது ஏற்றிவிட்டால் நல்லது தானே?
2
இந்தத் தொகுதியை மதிப்புரை செய்த வெங்கட் சுவாமிநாதன், பின்குறிப்புகளைப் பாராட்டினார். அதேவேளை, எனது சில தமிழ்ப் பதப் பிரயோகங்கள், தமிழுக்கே ஆனவையாக இருப்பதால், மூலத்தோடு பொருந்தவில்லை, என கருத்துரைத்தார். இதேபோல ஞானக்கூத்தனுக்கு ஓர் அபிப்பராயம் இருந்தது. விமரிசனக் கட்டுரைகளில் நான் பாராட்டும் ஒரு முயற்சி - கட்டுரைச் சொற்கள் மிகுந்த நேரடித்தன்மையுடன், எந்தக் கலைப்பூச்சும் இல்லாமல் இருப்பது நல்லது. கட்டுரையின் விஷயம் நேரடியாக வாசகனுக்கு எளிமையாய்ச் சேர வேண்டும். கட்டுரை நடையில் நகாசு வேலைகள் வேண்டாம், என்று சொல்வேன். காரணம் அது புனைவு அல்ல. ஒரு கருத்துப் பதிவு, ஒரு கருத்தைப் பற்றிய இன்னொரு கருத்து அது, என்பது கருத்து.
ஞானக்கூத்தனுக்கு மொழிபெயர்ப்பு சார்ந்தும் இதே கருத்து இருந்தது. மொழிபெயர்ப்பு எனக் கையாளும் வார்த்தைகள் அத்தனை ‘சத்தாய்’ இருக்க வேண்டியதில்லை. நேரடியாக, அகராதியில் குறிப்பிடப் படுகிற பாணியில், அதுதவிர பூடகமாய் எதுவும் சொல்லாமல், இருந்தால் மொழிபெயர்ப்பு மூலத்துக்கு அதிக நியாயம் செய்யும், என்றார் அவர்.
மொழிபெயர்ப்பு என்பது வாசகனுக்கு வழங்கப் படுகிற தண்டனையா என்ன? நோயுற்றவனின் பத்தியச் சாப்பாடா அது? ஒரு தேர்ந்த வாசகனே மொழிபெயர்ப்பு என்று தன் வாசிப்பில் அடுத்த கட்டம் வருகிறான். அவனை அதைரியப் படுத்துவதா? அவநம்பிக்கை கொள்ளச் செய்வதா?
இது புனைவு, என்ற அளவில் புனைவின் அலங்காரங்கள் கதையில் இல்லாமல் எப்படி, என்பது எனது கேள்வியாக அவர்களுக்கு அமைந்தது. அவர்கள் அவர்கள்மொழியில் செய்யும் வித்தைகளை நாம் நமது மொழியில், மொழிபெயர்ப்பில் செய்ய என்ன தடை, என எனக்கு விளங்கவில்லை. உதாரணம் ஒன்று சொல்லி விடலாம். முல்க் ராஜ் ஆனந்தின் ‘விடியல் முகம்’ நான் தமிழில் மொழிபெயர்த்தேன். சாகித்ய அகாதெமி எனக்கு அளித்த பணி அது. PREM CHAND LIVED IN A LANE - என அவர் எழுதினார். நான் பிரேம் சந்து குடி யிருந்தது ஒரு சந்து, என எழுதினேன். பகவான் ஸ்ரீ அரவிந்தர், இறைவனின் படைப்பில் ஆகச் சிறந்த படைப்பு மனிதன், என்றும், இறைவனின் சோதனைகளின் அடுத்த கட்டம் மனிதனிடமே என்றும் குறிப்பிடுவார். My body is your playground - என அவர் சொல்வதை நான் தமிழில், என் உடல் உன் விளையாட்டுத் திடல், என்று சொல்கிறேன்.
முல்க் ராஜ் ஆனந்தின் ‘விடியல் முகம்’ பல சவால்களைக் கோரியது. சுதந்திரப் போராட்ட காலகட்டத்து நாவல் அது. அந்தக் காலகட்ட விவரங்கள் தேவையாய் இருந்தன. முஸ்லிமாக மாறிய இந்துக்களின் நிலையைச் சொல்லியது அது. பஞ்சாபின் சூழல் வருகிறது அதில். ஆகவே கதையில் இந்தி, உருது, சீக்கிய மொழிக் கலப்புடன் உரையாடல்கள் இருந்தன. ஒவ்வொரு விஷயத்துக்கும் எனக்கு ‘தகவல் உதவி’ தேடிப் பெற வேண்டியிருந்தது. அந்த நாவலையே, தற்போது அச்சில் இல்லை அது, தேடிப் பெற்றேன். புதுச்சேரியில் ராஜ்ஜா தனது தாகூர் கல்லூரியில் இதைப் பிரதி கண்டு நகல் எடுத்து அனுப்பி வைத்தார். மொழிபெயர்ப்பில் ‘மேசை வேலைகள்’ தாண்டி இப்படி நிறைய வேண்டி யிருக்கிறது, என்பதைச் சொல்லவே இதைக் குறிப்பிடுகிறேன்.
இதற்கும் மேலே, நான் பயன்படுத்தும் உரையாடல்களில் வட்டார வழக்கு வேறு. சொந்தப் படைப்புகளிலேயே வட்டார வழக்கு கூடாது, என்கிற உலகம் இது. ஆங்கிலத்தில் வரும் வசைச்சொல் இடத்தில், தமிழில் வசை ஒன்றைப் போட்டால், பொங்கிவிட்டார் வெங்கட் சாமிநாதன். காதைப் பொத்திக் கொண்டாரோ என்னவோ. ஷிட், என்பார்கள் ஆங்கிலத்தில். அதை அப்படியே தமிழில் பயன்படுத்த முடியாது. சனியனே, என்பது நம் வழக்கு.
அவர்கள் மூல மொழியில் செய்துகாட்டும் சாதுர்யங்களை நீங்கள், மொழிபெயர்க்கும் மொழி இலக்கண அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியாமல், விட்டுவிடுகிறீர்கள். மொழிபெயர்ப்பு சமயங்களில் இரண்டு மொழிகளுக்கு இடையேயான போர் அது. தமிழில், ‘உங்க அப்பாவுக்கு நீ எத்தனையாவது பிள்ளை?” என்பதை ஆங்கிலத்தில் சொல்ல முடியாது. மொழிபெயர்ப்பு விடுதல்கள் தவிர்க்க முடியாதவை. அதேசமயம் நம் மொழியிலான சாத்தியங்களைச் செய்தால் என்ன என்பது எனது நிலைப்பாடு. இன்னொரு விஷயம். HAMLET WITHOUT HAMLET  - என்ற ஷேக்ஸ்பியரின் வாசகத்தை எப்படி தமிழ்ப் படுத்த முடியும்? ஹேம்லெட் ஒரு குறுநில மன்னன். அவனது சிறு நாட்டின் பெயரும் ஹேம்லெட். அவன் இறந்துவிட்டான் என்பதை ஷேக்ஸ்பியர் இப்படிச் சொல்கிறார். HAMLET WITHOUT HAMLET.  இதைத் தமிழில் சொல்ல வேண்டியிருக்கிறது. அறிஞர் அண்ணா இதை, மணமகன் இல்லாத திருமணம் போல, எனச் சொல்வதை நான் வரவேற்கிறேன். போயடிக் லைசன்ஸ்,என்பார்கள். அது அனுமதிக்கப் பட்டுவிட்டது. டிரான்சிலேட்டர்ஸ் லைசன்ஸ், தாருங்கள் என்பது வேண்டுகோள்.
ஆங்கில மது பானங்களைச் சொல்லி வரும் ஒரு கவிதையை தமிழில் நமக்குப் பரிச்சயமான மது வகைகளுடன் சொல்லும் ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை வாசித்திருக்கிறேன். நமது தேவை என்ன? வாசகனுக்கு மூலாசிரியனின் செய்தியை நழுவ விடாமல் கூறுதல், கைமாற்றுதல், அதைச் சரியாகச் செய்கிறதாகவே நாங்கள் நம்புகிறோம். அவர்கள்? அவர்கள் செய்தியைச் சரியாகச் சொல்கிற பாவனையில் சுவாரஸ்யத்தை நழுவ விடுகிறார்கள். அசுவாரஸ்யப் படுத்தி விடுகிறார்கள் அவர்கள்.
‘கதீட்ரல்’ என்கிற ஒரு சிறுகதை., ரேமண்ட் கார்வர் எழுதியது. இதை வேறு சிலரும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழில் கூட தலைப்பை ‘கதீட்ரல்’ என்றே பயன்படுத்தினார்கள். நான் ‘வேதக்கோவில்’ என வட்டாரச் சொல் பயன்படுத்தினேன். அதில் ஒரு பார்வையற்றவன் பாத்திரம் வரும். அவனுடன் அமர்ந்து வீட்டுக்காரன் டிவி பார்த்துக் கொண்டிருப்பான். டிவியில் ரோம் நகரத்து ஒரு புராதன கதீட்ரல் காண்பிப்பார்கள். பார்வையற்றவன் வேதக்கோவில் எப்படி இருக்கும், என்று ஒரு கேள்வி கேட்பான். பார்வை உள்ளவனால் பார்வை அற்றவனுக்கு அந்தக் காட்சியை விளக்க முடியாது. அவனது வார்த்தைகள் கொண்டு பார்வை அற்றவனுக்கு அந்தக் காட்சியை  விவரிக்கவே முடியாமல் போகும். இவன் சொல்லச் சொல்ல அவன், பார்வை அற்றவன் மேலும் குழப்பமான கேள்விகளைக் கேட்பான்.
எழுத்தாளர் தமிழ்மகன் கேட்ட ஒரு கேள்வி. பார்வை அற்றவன், வேதக்கோயில் எப்படி இருக்கும், என்று கேட்டவுடன் வீட்டுக்காரன் தன் காட்சிக்கு வார்த்தை வடிவம் கொடுக்க ஆரம்பித்து, அது முழுமையாக பார்வை அற்றவனுக்கு விளக்கம் தராது, என தானே புரிந்து கொள்வான். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை, என இங்கே நான் அவனது திகைப்பை எழுதி யிருந்தேன். அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடக்கும் கதை இது, இங்கே மதுரை எப்படி வந்தது?... என்று கேட்டார் தமிழ்மகன். தமிழ் மக்கள் சுலபமாக விளங்கிக் கொள்வார்கள், என்று நீங்கள் இப்படிக் குறிப்பிட்டீர்கள், என்றால் இன்னொரு கேள்வி. மூல மொழியில் இருந்து பல கதைகள் ஆங்கிலத்துக்கு வருகின்றன. ஆங்கிலத்தில் இருந்து நீங்கள் அந்தக் கதையைத் தமிழில் மொழிபெயர்க்கிற மாதிரி, உங்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் இருந்து வேற்று மொழிக்கு இதை யாராவது மொழிபெயர்த்தால், மதுரை போன்ற பிரயோகங்கள், மொழியாக்கத்தில் மேலும் குழம்பிப் போகாதா?... என்றுகேட்டார் தமிழ்மகன்.
தமிழில் இருந்து மொழிபெயர்க்கிற ஒருத்தர், மதுரை என்பது தமிழ்ச் சூழலில் வந்த வார்த்தை என்றுகூடத் தெரியாமலா அதை மொழிபெயர்க்க வந்தார்... என்று நான் திருப்பிக் கேட்டேன். அப்படி ஒருவரை மொழிபெயர்ப்பாளர் தகுதியிலேயே சேர்க்கலாமா? மூலத்தில் உள்ளதை, அதன உணர்வு மட்டத்தில் சட்டென ஒரு உணர்வு வியூகத்துக்குள் வாசகனைக் கொண்டுவர படைப்பாளன் முயல்கிறான். மொழிபெயர்ப்பாளனும் முயல்கிறான்... என்று நான் விளக்கம் அளித்தேன்.
ஒரு மொழியில் மொழிபெயர்க்கிறவன் அந்த மொழியில் பாண்டியத்தியம் இல்லாதவனாய் இருத்தல் சோகமானது. அவன் வேறு வேலை எதுவும் இருந்தால் பார்க்கலாம். வார்த்தைகளைத் தேர்வு செய்வதில் அவன் திணறக் கூடாது. திக்குவாய் போல, திக்குமொழி அறவே கூடாது.
இதை வாசிக்கையில் ரமேஷ் வைத்யா ஒரு வகையில் தன் பாதிப்பைச் சொன்னார். ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் அடியில் கனம் என நம் பழக்கத்தில் ஒன்று கிடைக்கிறது. மதுரை என்றால் எனக்கு மீனாட்சியம்மன், பாண்டி நாடு... என எத்தனையோ அடிவண்டல்கள் கிளரப்பட்டு வாசனை மேலே வருகிறது. இப்போது இந்தக் கதையை விட்டு நான் விலகி விட வில்லையா... என்பது அவரது கேள்வி. நியாயமான கேள்விதான். உவமை என்று ஒன்றைப்போல ஒன்று என்று சேர்த்துச் சொன்னாலே இந்த அவஸ்தை இருக்கவே செய்கிறது. எந்த ஒன்றும் இன்னொன்று அல்ல. எதையும் இன்னொன்றாகப் பார்க்க இயலாது. அது மற்றும் இது, என இரண்டுமே அவற்றின் தனித்தன்மை காரணமாகவே ஜீவித்திருக்கின்றன. ஒப்புமை, அல்லது பிறிதொன்றைச் சுட்டிக் கதைத்தல் சுவாரஸ்யத்துக்காக மாத்திரமே. எளிதில் அந்த சூழலை விளக்க மாத்திரமே. படைப்பாளன் சொன்ன  தோரணை, அவன் காட்டிய வியூகம், அதைத் தாண்டி நீங்கள் தான் பிடி விலகிப் போகிறீர்கள், என நான் எடுத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது.
அதற்கும், அந்த உதாரணம் பிடி விலகிப் போக வைக்கிறது, என வாதங்கள் நீளக் கூடும்!
இதே தர்ம சங்கடம் எனக்கு எனது ‘மற்றவர்கள்’ நாவலை முனைவர் மறைமலை இலக்குவனார் வாசித்தபோது நேர்ந்தது. அந்த நாவலில் வீட்டு வளாகக் கதவை ஒருவர் திறப்பார். உள்ளே யிருந்து நாய் ஒன்று பாரதியார் போல, அந்நியர் வந்து புகல் என்ன நீதி, என்று குரைத்தது - என எழுதி யிருப்பேன். ஆகா பாரதியாரை நாயோடு சேர்த்தா சொல்வது, என அவருக்குக் கோபம் வந்து விட்டது. இது எழுத்தாளனுக்கு ஏற்படும் விபத்து அல்லது சிக்கல் தான். அதைத் தவிர்க்க முடியாது.
மன்னிக்கவும் ரமேஷ் வைத்யா. மறைமலை ஐயா.
இன்னொரு கேள்வியும் முன் வைக்கப் பட்டது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு பாணி என்று அமைகிறது. மூல மொழியில் அவன் எழுதியதை, நீங்கள் தமிழிலேயே எழுதியதைப் போல வாக்கிய அமைப்புகள் தந்தால், மூல எழுத்தாளனுக்கு அது நியாயம் எப்படிச் செய்யும்? அவருக்கும் நான் பதில் சொன்னேன் - ஒரு கதையை நானும் மொழிபெயர்க்கிறேன். இன்னொரு நபரும் அதை மொழிபெயர்க்கிறார்... என்று வைத்துக் கொள்வோம். வாசித்துப் பாருங்கள். இரண்டு மொழிபெயர்ப்புகளும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது?
ஆக எல்லாருமே அவரவர் மொழியில் தான் மொழிபெயர்க்கிறோம். மூல ஆசிரியன் தன் மொழியில் நடையில் காட்டிய சுவாரஸ்யங்களைக் கட்டாயம் மொழிபெயர்ப்பாளன் தன் ரசனை அடிப்படையில், அதிகபட்சமாக தன் மொழியில் சாத்தியப்படுத்தவே முயல்வான். அவன் அடிப்படையில் மூல எழுத்தாளனின் மிகச் சிறந்த வாசகன். அதைக் கொண்டுவராமல் அந்த மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளனுக்கு திருப்தி வராது, என்றும் எடுத்துச் சொன்னேன்.
அப்புறம், மிக முக்கியமான விஷயம். மொழிபெயர்ப்பு என்பது என்ன? மூலத்தை வாசிக்க வாய்ப்பு இல்லாதவனுக்கான ‘இலுப்பைப் பூ’ சர்க்கரை. மூலம் வாசிக்க வாய்த்தவன் மொழிபெயர்ப்பைப் புறந்தள்ளி விடலாம். இது எதற்கு அவனுக்கு? இரண்டாவது விஷயம், மொழிபெயர்ப்பு நூல்களை வாசிக்கிறவன், சராசரி வாசகனுக்கு அடுத்த மேம்பட்ட நிலையில் உள்ளவன் தான். வாசிப்பு ருசியும், எதை வாசிக்க வேண்டும் என்ற தேர்வும் உள்ளவன் தான் மொழிபெயர்ப்பு படைப்புகளை வாசிக்க வருகிறான். இதையெல்லாம் கருத்தில் கொண்டே மொழிபெயர்ப்பு, அதன் நுணுக்கமான தளத்தில் மேலதிக வசதிகளுடன் இயங்கலாம், என்பது எனது கொள்கை.
இந்த மொழிபெயர்ப்புப் பயணத்தில் விமலாதித்த மாமல்லன் வேறு ஒரு கருத்தை அவசரமாகப் பதிவு செய்திருந்தார். ஆதிக்க மாமல்லன். முல்க் ராஜ் ஆனந்தின் ‘விடியல் முகம்’ என்கிற நாவலின் என் மொழிபெயர்ப்பில், முன்னீடு நான் தந்திருந்தேன். அதில் மொழிபெயர்ப்பு என்பது இருவர் ஓரணியாக ஆடும் டென்னிஸ் ஆட்டம், என்று சொல்லி யிருந்தேன்.  ஒரு மொழிபெயர்ப்பில் மூல ஆசிரியனுக்குக் குறைந்தது அல்ல மொழிபெயர்ப்பாளனின் பணி. அவர்கள் இருவருமாகவே அந்த மொழிபெயர்ப்புப் பணியில் இயங்குகிறார்கள். அது ஓர் டென்னிஸ் இரட்டையர் ஆட்டம், என்று நான் சொன்னதை விமலாதித்த மாமல்லன் கேலி செய்கிறார். “டென்னிஸ் நான்கு பேர் ஆடும் ஆட்டம் அல்லவா, மீதி இரண்டு பேர் எங்கே?” என்று எழுதி யிருந்தார். எங்கள் தரப்பில் எதிரணி ஆட்டக்காரர்கள் வாசகர்கள், இலக்கியம் என்பதே பகிர்தல் தானே... அவர்களே மற்ற இருவர் என்பது வெளிப்படை. இதில் அவர் புரிந்துகொள்ள சிரமம் என்ன, மேலடி அடிக்க அவருக்கு ஏன் அவசரம், என்று புரியவில்லை. அவருக்கு நான் அப்போது பதில் சொல்லவில்லை.தேவையும் இல்லை, என நினைத்தேன்.
3
இந்த எழுத்துப் பயணத்தில் நான் மொழிபெயர்ப்பைப் பொறுத்த அளவில் சில தெளிவுகளுக்கு வந்திருக்கிறேன். முதல் கதையில் இருந்தே, இத்தனை ஸ்பஷ்டமாக என்னால் அப்போது சொல்ல முடியா விட்டாலும், அந்தத் தெளிவு என்னிடம் இருந்ததாகத் தான் நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு என்பது குமாஸ்தா வேலை அல்ல. மொழிபெயர்ப்பு என்பது சொந்தப் படைப்புக்கு சற்றும் சளைத்தது அல்ல. ஒருவரது சுய படைப்புகளைப் போலவே, அவரது மொழிபெயர்ப்புக்கும் நோக்கும் போக்கும் உள்ளது. இருந்தாக வேண்டும்.
ஒரு காலத்தில், எனது இளம் பருவத்தில், எனது ஆறாவது ஏழாவது வகுப்புப் பருவத்திலேயே எங்கள் ஊர், ஸ்ரீவைகுண்ட நூலகத்தில் மொழிபெயர்ப்பு நூல்கள் நான் நிறைய வாசித்திருக்கிறேன். யாரும் எடுக்காமல் புதிதாய் அவை எனக்குக் கிடைத்தன. முழுசும் புரியாவிட்டாலும், அந்த என் வயதுக்கு இவை புரிய காலம் எடுக்கும் என எனக்கே தெரிந்திருந்தது. என்றாலும் வாசிப்பு ஆர்வம் எனக்குக் குறையவில்லை. புரியவில்லை என்பது பிழை அல்ல. காத்திருப்பேன். நான் கற்றுக் கொள்வேன், என்றிருந்தது. அந்த மொழிபெயர்ப்புகளை மக்கள் வெளிநாடு, அதன் வாயில் நுழையாப் பெயருடைய ஊர்கள், புது மனிதர்கள், அவர்களது, நம்மில் இருந்து வேறான பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள், நம்பிக்கைகள், அந்த ஊர் அமைப்பு எல்லாமே வாசிக்க சுவாரஸ்யம், என்று வாசித்தார்கள். பட்டிக்காட்டான் பார்த்த மிட்டாய்க் கடை. மொழிபெயர்ப்புகள் அப்படி வேறொரு உலகத்தை நமக்கு அறிமுகம் செய்தது. கடும் பனி. தெருவெங்கும் பனி கொட்டி மூடிக் கிடக்கிறது. எங்கள் ஊர்ப் பூங்காவில் பன்னீர்ப் பூ உதிர்ந்து தரையே மூடிக் கிடக்கும். அந்த நாட்டின் அந்த ஊரில், பாரப்பா, பனியே இப்படி மூடிக் கிடக்கிறது. அதெல்லாம் வாசிக்க ஆச்சர்யம்.
பிறகு முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம் என்று ருஷ்ய மொழிபெயர்ப்புகள் நிறைய வர ஆரம்பித்தன. அவை கம்யூனிச சித்தாந்தத்தை வளர்த்தெடுக்கும் பணியில் பங்காற்ற ஆரம்பித்தன. புரட்சி பேசின அவை. வர்க்கம், பூர்ஷ்வா என புது வார்த்தைகளை அவை நம் புழக்கத்துக்குக் கொண்டு வந்தன. போராடுவதே வாழ்க்கை, என்றன அவை. தொண்டர்கள் போராடட்டும், தலைவர்கள் அதன் பயனை அனுபவிக்கலாம்.
அந்த நாட்டின் கொள்கைகளைப் பரப்பவே அவை தமிழில் மொழிமாற்றம் கண்டன. அது ஒரு கால கட்டம்.
விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்தில் இப்போது வேற்று நாடுகள், அதன் செய்திகள், தத்துவப் பார்வைகள் என எல்லாமே இப்போது நமக்கு அறிமுகம் ஆகிவிட்ட நிலையில் மொழிபெயர்ப்பில் அந்த ’முந்தைய கால’ சுவாரஸ்யம் வாசகனுக்கு இப்போது இருக்க வாய்ப்பு இல்லை, என நான் நினைத்தேன்.
அப்படியானால் இன்றைய கால கட்டத்தில் மொழிபெயர்ப்பின் பணி என்ன? பங்களிப்பு என்ன?
மனிதன் எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் அவன், உணர்வு அடிப்படையில் ஒருவன்தான், என நான் நம்புகிறேன். WAR, BEER சார்ந்த கதைகளைத் தாண்டிய இன்றைய உலகில் கதைகள் மனிதனைப் பொதுமனிதனாக, ‘உலக மனிதனாக’ அடையாளம் காட்ட வேண்டும். இலக்கிய உலகின், மொழிபெயர்ப்பு உலகின் தேவை அதுவே, என நான் நினைத்தேன்.
என் கதைகளை ஆகவே நான் அப்படித்தான் மொழிபெயர்க்க எனத் தேர்வு செய்கிறேன். அன்டன் செகாவ் பொது மனிதனைத் தான் தன் கதைகளில் படைக்கிறார். ஹெமிங்வே கதைகளில் மனிதன் மகத்தானவன் என்ற குரலே பிரதானமாக ஒலிக்கிறது. நான் மொழிபெயர்க்கும் கதைகளில் என் கவனம், மனிதன் உணர்வு அடிப்படையில், தமிழனும்,வேற்று நாட்டவனும் வேறு வேறானவன் அல்ல, என்றே கூற வருகின்றது. என் மொழிபெயர்ப்பின் அடிப்படை நோக்கமாக, அடிநாதமாக, ‘உலக மனிதனே’ இருக்கிறான். தமிழ் இலக்கியத்தில் தனி மனிதனைத் தாண்டி, ஒரு சமுதாய மனிதனை வகைமாதிரியாக நாம் முன்னிறுத்துகிறோம். அப்போது தான் அதற்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்கிறது. அதேபோலவே, மொழிபெயர்ப்பில், நான் தேர்வு செய்யும் கதைகளில், ‘உலக மனிதன்’ அடையாளம் பெறுகிறான்.
GO LOVELY ROSE - ஹெச்.ஈ.பேட்ஸ் என்கிற  இங்கிலாந்து எழுத்தாளரின் கதை. ‘டேட்டிங்’ என்று பெண் காதலனுடன் கிளம்பிப் போய்விடுகிறாள். அன்றைக்கு இரவு அந்தப் பெண்ணின் அப்பா தூக்கம் வராமல் வீட்டு வாசலில் அந்த இரவு முழுசும் தவிக்கிறார். வீட்டு வாசல் தோட்டத்துப் பனியில் இங்குமங்கும் விடிய விடிய நடந்தபடி தன் பெண்ணுக்குக் காத்திருக்கிறார்... என்பது கதை. இதை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அவரது உணர்ச்சிகள் ‘எல்லா’ தந்தைக்குமானது தானே?
உலகப் பொது மனிதன், என என் மொழிபெயர்ப்புப் பாத்திரங்களை வாசிக்கையில், மேற்சொன்ன கேள்விகள், சந்தேகங்கள் என் மொழிபெயர்ப்பு வியூகம் பற்றி, எழ வாய்ப்பே இல்லை, என்று தோன்றுகிறது. நான் மொழிபெயர்க்கும் கதைகள் வெறும் சுவாரஸ்ய நகல்கள் அல்ல. அது அல்ல என் பணி. இது எனக்குத் தெரியும்.
--
பின் குறிப்பு
தமிழக முதல்வர் அறையில் தகுதியுரைப் பட்டயமும் பொன்னாடையும் ரூபாய் ஒரு லட்சம் காசோலையும் அமைந்த ‘2018ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது’ 19 02 2019 அன்று பெற்றுக் கொண்டேன்.
storysankar@gmail.com
9789987842 - 9445016842

Friday, February 15, 2019

week 29

‘சாஸ்தா பிரீதி’ முதலிய கதைகள்
(சென்ற வாரத்தின் தொடர்ச்சி)


(குசிகர் குட்டிக் கதைகள், அ.மாதவையர், பக். 184 விலை ரூ 115/- வெளியீடு 2012. வைகுந்த் பதிப்பகம், 275 ஜே ஜே பவன், கணபதிநகர், நாகர்கோவில் 629002. அலைபேசி 94420 77268)
மாதவையாவுக்கு அத்தனை பெரிய வடுவை உள்ளத்தில் கொடுத்திருக்கிறது அவர்சார்ந்த சமூகத்தின் பொது செயல்பாடுகள். தவிரவும் கல்லூரிக் காலங்களில் பெண், இளமை, அவளது திருமணம், தங்களது திருமணம், வரதட்சிணை... இப்படியே அது மூச்சும் பேச்சுமாக பரபரத்தும் இருக்கலாம் அல்லவா?
ஆனால் தொகுப்பின் ஆகச் சிறந்த கதை ‘சாஸ்தா பிரிதி.’
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை, தற்கால இலக்கியத் தலைவர் முனைவர் சு. வேங்கடராமன் (தற்போது ஓய்வு பெற்று சென்னைவாசி இவர்.) இந்தக் கதையின் தேவையை என்னிடம் சொன்னபோது, நான் சென்னை மண்ணடி பக்கம் இருந்த மறைமலை அடிகள் நூலகத்தில் பஞ்சாமிர்தம் இதழின் பழைய பிரதிகளில் இந்தக் கதையைக் கண்டுபிடித்து என் கையெழுத்தில் நகலெடுத்து அவருக்கு அனுப்பித் தந்தேன். பின்பு அதைத் திண்ணை இணைய இதழிலும், எனது ‘ஞானக்கோமாளி’ பிளாக்கிலும் வெளியிட்டு மகிழ்ந்தேன்.
இந்தக் கால கட்டத்தில் சிறுகதை என்பதன் வடிவம் பற்றி மாதவையா தனக்குள் பிடிபட்டாப் போல உணர்ந்திருக்க வேண்டும். கதை சம்பவ ஒருமையுடன் அதைநோக்கிய எடுப்பு தொடுப்பு முடிப்பு எல்லாமாய் ஜோராய் அமைகிறது. ஒரு நாவல் சுருக்கம் போன்ற பெரிய காலவெளியை இந்தக் கதைக்குள் அவர் அடைக்கவில்லை. ஆரியன்காவு என்கிற ஊர். மன்னர் கொடையில் நடக்கிற பிராமணர்களுக்கான ஊட்டுப்பிறைச் சாப்பாடு. ஆரியன்காவு கோவிலின் கடவுள் தர்ம சாஸ்தா. அவருக்கான பிரீதி நடக்கிறது. பூஜை முடிவில் பக்தர்களில் யாருக்காவது ‘சாமி’ வரும் என்று ஐதிகம். சாஸ்தா, அவர்-உருவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதும், அவர்களின் குறைகளைக் கேட்பதும் நடந்தேறும். வெகுநேரம் யாருக்குமே ‘சாமி’ வராத நிலையில் பசியுடன் இருக்கிற ஒரு பிராமணர் தன்னில் ‘சாமி’ இறங்கி விட்டதாக ஆவேசமாய் நடிக்கிறார். பிறகு அவரும் அவரது சிநேகிதரும் கை நிறைய தட்சிணையும் சிறப்பு உபசாரங்களுமாக ஊட்டுப்பிறை உணவு உண்கிறார்கள்.
ஒரேயொரு சம்பவம். அதைச் சுற்றி நிகழ்கிறது கதை.
‘சாமி’ வருவது போல நடிப்பது, என்று சொல்கிற அவர், அந்த பிராமணரைக் குவித்துக் கதை சொல்கிறார். தொகுதியின் பிற கதைகளில் போல, எல்லா பிராமணரும் மோசம் என்கிற வறட்டு வேதாந்தம் இதில் இல்லை, என்றே என் வாசிப்பில் படுகிறது. ஆனால் சொல்ல வேண்டியதைச் சொல்வேன், என்கிற உறுதி. பிராமணரில் இப்படி ஏமாற்றிப் பிழைக்கும் ஆட்கள் இருப்பதை அடையாளம் காட்டுகிறார். வெளிப்படையான விமரிசனங்கள் அற்று, ஒரு காலகட்டம், அதன் ஒரு நிகழ்வு பற்றிய பதிவு என்கிற அளவில் அவர் எழுதிச் செல்வது சிறப்பு. அதில் இருந்து வாசிக்கிறவர் தாமே தன் விமரிசனைத்தை வைத்துப் பொருத்திக் கொள்ள முடியும், என்பது இந்தக் கதையைக் கலைப்படைப்பாக மாற்றிவிடுகிறது.
தெளிவான நீரோட்டமான கதை.
இருக்கும்போது இல்லை
வாழ்ந்த காலத்தில் தன் பெற்றோரை, வீட்டு முதியவர்களை ஒழுங்காக வைத்துக் கொள்ளாமல், அவர்கள் இறந்த பிறகு சிரார்த்தம் என்ற பெயரில் அவர்களுக்கான திவசத்தை சிரத்தையாய்ச் செய்யும் பாவனை பற்றிய கதை. சிரார்த்தத்துக்கு வரும் வைதிகரோ, திவச பிராமணரோ, சிரார்த்தம் செய்கிறவர்களோ அன்று காலை சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு சிரார்த்தம் செய்ய வேண்டும். இவர்களில் யாருமே காலையில் காபியாவது சாப்பிடாமல் சிரார்த்தம் செய்ய அமர்வது இல்லை. ஒருத்தரிடம் மற்றவர் சொல்லிக்கொள்ளா விட்டாலும் அவரவர் அளவில் காலையில் காபி சாப்பிட்டுவிட்டே சிரார்த்தத்தை நடத்துகிறார்கள். வீட்டுக்காரர் தந்தைக்கு சிரார்த்தம் கொடுத்தபின் அன்றிரவும் சாப்பிடக் கூடாது. அவர் அன்றைக்கு ராத்திரி சாப்பாடு சாப்பிடுகிறார். அவர் மாத்திரமல்ல, சாஸ்திரிகளும் கூட அப்படி, என்கிறார் மாதவையா. சிரார்த்தம் நடந்த வீட்டில் கதை செல்கையில் வம்படியாக கதையை கூட ஒரு வரி என்று, வைதிகரைப் பற்றியும் சொல்கிறார், என்பது வலியத் திணித்த குற்றச் சாட்டு. இந்த அம்சம்தான் போன கதை ‘சாஸ்தா பிரீதி’யில் இல்லை என்று குறிப்பிடப் பட்டது.
கதையை முடிக்கிறார் கிண்டலாக, ஒரு கட்டுரைத் தனத்துடன் - “இவ்வாறு, அந்த ‘ஏழை வழிப்போக்கிப் பிராமணரின்’ சிரார்த்தம் எல்லோருக்கும் திருப்தியாக, நடந்தேறியது.”
இனி அவர் நெஞ்சு வேகும்
படிக்காத பெண்களின் பொருமலுக்குத் திரும்ப வருகிறார் மாதவையா. படித்த நாகரிக மோஸ்தர் பேணுகிற பெண்களை இவர்கள் வசை பாடுகிறார்கள். இதெல்லாம் நல்ல குடும்ப ஸ்திரீகளுக்கு அழகல்ல, என்கிறார்கள். கதையில் கூனப்பாட்டி வருகிறாள். குற்றங்களின் மூட்டையைச் சுமந்து திரிகிறாள் அவள். ஊர் எப்படி உருப்படும் என்று அவள் எரிச்சல் பட்டுக் கொண்டே யிருக்கிறாள். கம்பராமணயம் தொட்டு, கூன் விழுந்த பாட்டிகள் வில்லிகளாக அமைந்து விட்டார்கள் கதைகளில், என்பது துக்கம் தான்.
கதையில் ஓர் உரையாடல் - (கூனப்பாட்டி) என்ன பெருமை அந்தப் பெண்ணுக்கு! தலைமயிரை, எல்லாரையும் போல் பின்னிக் கொள்ளாமல், ஏதோ பிஸ்கோத் கட்டாம், அப்படிக் கட்டிக் கொண்டு, மயிர் ஊசியும் செருகிக் கொள்கிறாள். இப்படிப் பட்ட பெண்கள் ஒரு நாளும் குடும்பங்களில் முன்னுக்கு வந்து உருக் கூடுகிறதில்லை.
(ராஜம்) - தலையைக் கட்டிக் கொள்கிறதுக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?
ருதுவாகிற வயதில் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்காமல் அப்பா அவளைப் பள்ளிக்கு அதுவும் எல்லா சாதிமாரும் படிக்கும் ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புவதை நிந்திக்கிறார்கள். இந்தப் பெண்களின் உரையாடலைப் போலவே, அடுத்து ஆண்களின் கலந்துரையாடலைத் தருகிறார் மாதவையா. இதே விவகாரம் அவர்கள் மத்தியில் பிரஸ்தாபிக்கப் படுகிறது. (இதில் ஒரு சுயகவனமான உத்தி இருக்கிறது அல்லவா?) அந்தக் கூட்டத்தில் பல பாஷைக்காரர்களும், அரசாங்கத்தில் பல நிலையில் வேலை செய்கிறவர்களுமாக அவர்கள் அமைகிறார்கள்.
ஐரோப்பியரை நாம் மிலேச்சர்களாக மதிக்கிறோம். ஆனால் அவர்களுக்கு சலாம் போட்டு வாழ்கிறோம். இந்திய பஞ்சமர் என்றால் மட்டும் ஆசாரமும் சாஸ்திரமும் வந்து விடுகிறதா, என்று ஒருவர் கேட்கிறார். அதன் நியாயத்தைப் பாதி ஏற்றுக் கொள்கிற ஒருத்தர், ஊர் மாறட்டும், யாராவது மாற்றிக் காட்டட்டும், நானும் மாறுகிறேன், என்கிறார்.
இங்கே ராமசேஷையர் ஒரு நேரடிப் பிரசங்கமே நிகழ்த்துகிறார். “ஆனால் அவர்களைச் சீர்திருத்தி சத்துக்களாக்க வழி தேடுங்கள். எங்கள் பள்ளிக்கூடங்களில் நுழையக் கூடாது, தெருக்களில் நடக்கக் கூடாது, எங்கள் கிட்டவே வரக் கூடாது. நீங்கள் மிருகங்களிலும் கீழான சடங்கள், ஆனால் உங்களை மேம்படுத்த நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம். நம்முடைய சொந்த ஜனங்களையே, எவர் உழைப்பினால் நாம் நாகரிகமாக வாழ்கிறோமோ, அவர்களையே நாம் இப்படி நடத்தினால், பின்பு வெள்ளைக்காரன் நம்மைச் சரியாக நடத்தவில்லை என்று முறையிட நமக்கு நாவேது?”
- இவ்வளவு தன்னிலை விளக்கமாக இந்த நூலில் வேறு எங்குமே மாதவையா தன்னை அடையாளங் காட்டவே யில்லை.
சேஷையர் பறைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கூடம் நடத்துகிறார். இரவு எட்டு மணி வரை அவர் பாடம் பயிற்றுவித்து விட்டு வீடு திரும்பினால் மனைவி அவரிடம் பிராது வைக்கிறாள். ஊரெல்லாம், தங்கள் பெண் இத்தனை வயதாகியும் திருமணம் ஆகாமல் வீட்டில் இருப்பது பற்றி வம்பு பேசுகிறார்கள், என்கிறாள். வரதட்சிணை, சீர் என்று அவரால் செலவு செய்ய முடியவில்லை, என்று பேசுகிறார் சேஷையர். தன் மூத்த பெண்ணை வயதுக்கு வருமுன்பே கட்டிக் கொடுத்தது குறித்து அவருக்கு வருத்தம். இளைய மகளையாவது சாஸ்திரப்படி, வயதுக்கு வந்து நாலைந்து வருடங்கள் கழித்து கல்யாணம் செய்து கொடுக்க உத்தேசிப்பதாக சேஷையர் சொல்கிறார்.
பெண்கள் ருதுவாகுமுன்பே கல்யாணம் என்று அவர்களைப் பிணைப்பது இடைப்பட்ட காலத்தில் நுழைந்த விஷயம் தான், என வலியுறுத்தியே அடிக்கடி பேசுகிறார் மாதவையா.
இந்நிலையில் பாம்பு கடித்து சேஷையர் இறந்து போகிறார். சமூகத்தைத் திருத்தும் அவரது நடவடிக்கைகளின் பாவங்ளால் தான் இந்த மரணம் என்று ஊர் பேசுகிறது. அந்த இரண்டாவது பெண்ணுக்கு, வேறு வழியில்லாமல், ஒரு நாற்பத்தைந்து வயது வரனுக்கு இளைய பெண்ணை திருப்பதிக்குப் போய் மணம் செய்துகொடுக்க ஏற்பாடு ஆகிறது. அந்த பிராமணன் அங்கேபோய் வரதட்சிணை 800 கேட்டு முரண்டு பிடிக்கிறார். கல்யாணம் நின்று போகிறது. ஊரார் யாரும் இவர்களுக்கு ஆதரவாக ஆறுதலாகப் பேசவில்லை. அந்த மாப்பிள்ளைக்கே அவர்கள் சாதகமாகப் பேசினார்கள்.
இந்தத் தொகுதியிலேயே எத்தனை கல்யாணங்கள் இப்படி நின்று போகின்றன. பெரும் துக்கம் தான். இத்தனை செலவு செய்து ஏற்பாடுகள் செய்து நடத்தப் படுகிற கல்யாணத்தில் பேரும், மானமும், பொருட் செலவும் அத்தனையும் திகைத்துப் போகின்றன. கல்யாணம் நின்றுபோன காட்சியை வைத்தே தனிக் கதை எழுதலாம் போலிருக்கிறது.
இந்தக் கதையில், பிறகு கல்கத்தாவில் இருந்து வந்த உறவினர்களின் மேற்பார்வையில் காமு என்கிற சேஷையரின் இரண்டாவது மகள், கல்யாணம் நின்றுபோனவள், தொடர்ந்து படித்து அழகிலும் கல்வியிலும் மேன்மை பெறுகிறாள். மாதவையா எழுதுகிறார் - “இதைக் கண்ட ஊராரெல்லாம் செல்லம்மாள் குடும்பத்தை, வம்பளக்கும் விஷயம் தவிர, இதர விஷயங்களி லெல்லாம் விலக்கி வைத்தார்கள்.”
அந்த ஹோட்டலில் தீ விபத்தாமே? - ஆமாம். அரிசியைத் தவிர எல்லாம் வெந்து போச்சு - என்பார்கள். அது நினைவு வருகிறது.
காமு, கல்வியும், அழகும், சங்கீத ஞானமும் நிறைந்த பதினேழு வயதுள்ள யுவதியான பின்பு, (ஆகா, பெண்ணெனும் குருத்து பளபளவென்று இலை விடுவது எத்தனை அழகு.) கல்கத்தாவில் அவள் அத்தான் சிநேகிதன், பி.ஏ. பட்டம் பெற்று உயர்ந்ததோர் உத்தியோகத்தி லிருப்பவன், சுமார் இருபத்திரண்டு வயதுள்ள ஒரு யௌவன புருஷனுக்கு மணஞ் செய்து கொடுக்கப் பட்டாள். இதே ஊரில் கோலாகலக் கல்யாணம். கல்யாணத்துக்கு வந்த பிராமணர்கள் சாப்பிடாமல் போகிறார்கள். பறைப் பிள்ளைகளுக்கு, அவர்கள் பள்ளியில் விருந்து நடந்ததுமன்றி, வஸ்திர தானமும் செய்யப் பட்டது.
ஆரம்பம் போலவே, வீரபத்ரையர் வீட்டில் நிகழ்ந்த சம்பாஷணையுடன் கதை முடிவு பெறுகிறது. கூனப்பாட்டி, வழக்கமில்லா வழக்கம் இது, என நொடிக்க ஒருத்தி பதில் சொல்கிறாள். இப்படி இன்னும் சில கல்யாணங்கள் நடந்து விட்டால், இதுவே வழக்கமாகி விடும்.
இதைப் பார்க்காமல் ராம சேஷையர் இறந்து விட்டாரே, ஆனால் இனி அவர் நெஞ்சு வேகும், என ஒருத்தி நினைக்கிறபடி கதை முடிவு பெறுகிறது. எப்பவோ செத்துப்போன, எப்பவோ தகனம் செய்த ராம சேஷையர் நெஞ்சு வேகும், என இப்போது குறிப்பிடுவது தான் புரியவில்லை! அவர் ஆத்மா சாந்தியடையும், என்கிற மாதிரி எதையாவது சொல்லி யிருக்கலாமோ?
கதையின் தலைப்பே இப்படி இருக்கிறது.
நரி பரியான அற்புதம்
ஆனால் இக்கதைகளில் நாவல் சுருக்கம் என்பதைத் தாண்டி கதை ஒரு நல்ல நகர்வைப் பெறுகிறது. தங்கையின் கணவர் இறந்து விட்டார், என தந்தி வருகிறது. கேசவையருக்கு. தங்கைக்கு மாதா மாதம் பண உதவி செய்கிறார் அவர். மனைவி நொடித்தாலும் அவர் உதவி செய்யத் தயங்கவே இல்லை. தங்கைபையன் கல்விக்கும் அவர் பெரும் உதவி செய்கிறார். தன் பெண்ணைப் பிற்காலத்தில் அவனுக்குத் தந்து மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ளலாம், என தன் யோசனையை மனைவியிடம் சொல்லி, தங்கைக்குப் பணம் அனுப்பும் செலவுகளை மனைவி தடுக்காமல் பார்த்துக் கொள்கிறார்.
ஆனால் தங்கை இங்கேவந்து அவர்களுடனேயே தங்க நேர்கிறது. அப்போதும் மனைவியை அடங்கிப் போகும்படி அவர் சமாதானம் செய்கிறார். ஆனால் நல்ல படிப்பு வேலை என்று அமர்ந்த பையன், தன் அம்மா சொற்படி நல்ல வரதட்சிணையுடன் பணக்கார சம்மந்தம் அமைந்தபோது இவர்களைத் துறந்து தனி வீடு எடுத்துப் போகிறான். அதுநாள் வரை கேசவையர் தன் மனைவியின் முணுமுணுப்பையும் மீறி தங்கைக்குச் செய்த பெரும் உதவிகள் ஒரு கணத்தில் அலட்சியம் செய்யப் படுகின்றன. தன் பெண்ணுக்கு, சீதையைத் தேடி வந்த ஸ்ரீராமன் போல, நல்ல வரன் தேடி வரும், என மனைவியிடம் கேசவையர் பேசிப் புலம்புவதாக முடிகிறது கதை. இந்தக் கதையில் பணம் பத்தும் செய்யும் என்கிற செய்தியை விட, கதையை உணர்ச்சிபூர்வமாக நடத்திக் காட்டிய அளவில் மற்ற கதையை விட இது வேறுபடுகிறது.
இதைத்தான் முன்பு பேசியது. கல்யாணம் நின்று போன காவிய சோகம், அதையும் இப்படி ஒரு கதையில் உணர்ச்சிச் சித்திரமாக்கி மாதவையா காட்டி யிருக்கலாமே, என்று.
விவாக சம்ஸ்காரம்
அந்த இளைஞருக்கு, மாதவையாவுக்கு விவாகம், அதுசார்ந்த இளமையான பெண்ணின் பிரச்னைகள் திரும்பத் திரும்ப மனசில் அலையடித்ததாகத் தெரிகிறது.
கதை என்ற அளவில் இது சிறப்பான வடிவம் பெற்றிருப்பதாகவே கருத முடிகிறது. கதாநாயகன் சேஷுவுக்குப் பதினெட்டு வயது. படித்துக் கொண்டிருக்கிறான். தற்போது கல்யாணம் தேவையில்லை என்கிறான். அதையும் மீறி பெண் பார்க்கப் போன இடத்தில் ஓர் எட்டுவயதுப் பெண்ணை மணக்கச் சம்மதமும் தந்து வருகிறான். ஆனால் வரதட்சிணைக்கு ஆசைப்பட்டு அந்த வரனை முறித்து அவலட்சணமான வேறொரு பெண்ணுக்குத் தன் பையனை முடிக்கப் பார்க்கிறார் அப்பா. சேஷுவின் சிநேகிதன் இதுவிஷயமாக அந்த வேறொரு பெண்ணின் வீட்டுக்குக் கடிதம் எழுதுகிறான். அப்படியும் அப்பாக்கள் இருவருமாக சேஷுவுக்கு நெருக்கடி தந்து இந்தக் கல்யாணத்தை விமரிசையாக ஏற்பாடு செய்கிறார்கள்.
இப்படி சம்பவங்களை வரி வரியாக நாவல் சுருக்கம் போல எழுதி வந்த மாதவையா, சட்டென நிறுத்தி, “கலியாண ஏற்பாடுகளில் ஒன்றை மட்டும் விவரித்துக் கூறி, அதைப் போன்ற விமரிசையுடனேயே மற்றவைகளும் நடந்தன வென்று சுருக்கிக் கூறுவோம்” என முன் வருவது, சிறுகதை இலக்கணமே யாகும்.
ஊர்க்கோலத்தில் எதிரெதிர் நாற்காலிகள் போட்டு மணமகனையும், மணமகளையும் அமர்த்துகிறார்கள். மணமகளின் முகத்தைப் பார்ககிறான் சேஷு.
”தன் வாழ்க்கைத் துணையின் சாயலையும் ரூப லாவண்யத்தையும், சேஷு உற்றுப் பார்த்தான். அவள் வயதுக்கு அவள் அதிகம் தடித்தவள். அவள் அணிந்திருந்த நகைகளும், வைரங்களும், பல்லக்கைச் சுற்றிலும் தொங்க விட்டிருந்த மெழுகுவர்த்தி விளக்குகளுமாகச் சேர்ந்து அவள் நிறத்தை, மைக்கறுப்பாய்க் காட்டின. அவளுக்கு நெற்றி மிகவும் சுருங்கி இருந்தது. தடித்த மோவாயும், அகலமான வாயும், அப்பக் கன்னங்களும் உடையவள். அவள் கீழுதடு அதிகப் பருமனாயும், வாயைச் சரியாக மூடாமல் அவளது பெரிய பல்வரிசைகளைக் காட்டிச் சிறிது கீழே தொங்கிக்கொண்டு மிருந்தது.”
அவளை அவன் வெறுத்தான், என்று சொல்ல அவளை அவலட்சணம், என வர்ணிக்கிறார் மாதவையா.
அவளை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஊர்வலத்தில் இரண்டு தாசிகள் சதிர் ஆடுகிறார்கள். அவர்களில் ஒருத்தியிடம் கிளர்ச்சியுற்று மோகம் கொள்கிறான் சேஷு. அதை அந்தப் பல்லாக்கிலேயே அவளிடம், மணமகளிடம் சொல்கிறான். தங்கள் இருவரிடையே பொருத்தமே யில்லை, என்று புலம்புகிறான். அந்தப்பெண் “அப்படி யெல்லாம் பேசாதேயுங்கள்” என துக்கம் நெஞ்சடைக்கச் சொல்கிறாள்.
பிறகு மாதவையர் எழுதிச் செல்லும் வரிகள் அற்புதமானவை. இங்கே மணமகன் அல்ல, மாதவையா பேசுவதாகவே தோன்றுகிறது.
அவன் வருத்தத்துடன், “உன்மேல் குற்றமில்லை. என்னைப் போலவே உன்னையும் பலியிட் டிருக்கிறார்கள். என்னைவிட நல்லவர்கள் எத்தனையோ பெயர்கள், இவ்வளவு சீருடனும் விமரிசையுடனும் உன்னைக் கலியாணஞ் செய்து கொள்வதில் ஆசைப்பட்டுச் சந்தோஷப்படக் கூடியவர்கள், இருக்கவே இருக்கிறார்கள்...”
அவனது ஏமாற்றத்தைக் கூறவந்த மாதவையருக்கு அவள்சார்ந்த நியாயங்கள் பிடிபட்டிருப்பதும் அதை வெளிப்படுத்துவதும் சிறப்பு. அவன் தாசியை நினைத்து மதிமயங்கியபடி ஊர்வலத்தில் பல்லக்கில் வந்து கொண்டிருந்தான், என கதையை அப்படியே முடிப்பதும் நவீனகால சிறுகதை அம்சம் தான்.
காட்சிகளின் ஒரு சம்பவத்தில் கதை ஊன்றி நின்று குவிகிறது.
குகைச் சாமியார்
முன்பே குறிப்பிட்டது போல, கதைகளில் உணர்ச்சிக் கட்டங்களை நோக்கி மாதவையா நகர்ந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கிறது. இந்த ‘குகைச் சாமியார்’ சிறுகதை பக்தி பரவசம் என்கிற, அவர்பாணியில் அல்லாத, உணர்ச்சிக் களங்களை எடுத்துச் சொல்கிறது.
சாமியார் ஒருவர் ஒரு வளர்ப்புப் பெண்ணுடன் குகையில் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணை இருவர் விரும்புகிறார்கள். ஒருத்தன் பணப்பித்து கொண்டவன். ஏற்கனவே அவன் செல்வந்தன். அடுத்தவன் உழைப்பாளி. ஏழை. தனது அந்திம காலத்தை முன்பே அறிந்து கொள்ள முடிந்த சாமியார் அவளது திருமணம் பற்றிப் பேசுகிறார். அதுவரை அதிகம் பேசாத சாமியார் மடை திறந்தாப் போல உரையாற்றுகிறார்.
அவர் பூஜை செய்துவரும் ஒரு பெட்டி. அது நிறைய நகைகள் இருக்கின்றன. அந்தப் பணக்காரனுக்கு அந்தப் பெட்டியையும், அந்த ஏழை உழைப்பாளிக்கு அந்தப் பெண்ணையும தந்துவிட்டு சாமியார் சித்தி யடைகிறார்.
ஒருவேளை ஒரு திரைப்படம் போல காட்சிகளை அமைக்க அவர் ஆசைப் பட்டிருக்கலாம். விதவிதமாக எழுதிப் பார்க்கும் வேட்கை அடைந்திருக்கலாம். இந்தக் கதைக் கூட்டத்தில் அதைச் சேர்த்த காரணமே எனக்கு விளங்கவில்லை. புராண சரித்திரக் கதைகளின் வசிகர மொழி இதில் இருக்கிறது. ஆனால், அவர் எந்த அளவில் சாமியார், அவரது நியதி நியமங்கள் என்னென்ன, போன்ற உள் விவரங்கள், கதையில் இல்லையே.. சாமியார் என்று சொல்லிவிட்டால் அவர் சாமியார் ஆகி விடுவாரா என்ன?
ஆலமரத்தின் கீழே
சுருதி சுத்தமான சினிமாக் கதை இது.
ஒரு கணவன் மனைவி. அவர்களுக்கு ஒரு குழந்தை. மனைவியை சந்தேகித்த கணவன். மனதில் சந்தேகம் வந்தால் எத்தகைய பிசாசுகள் அவனில் புகுந்து ஆட்டும், என்றெல்லாம் விவரங்கள் இல்லை. அவன் சந்தேகப்படும் ஒருவன் அவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கிறான். அவனைக் கணவன் கொன்றுவிட்டு (என்ன அவசரம்? விசாரிக்கக் கூட பொறுமை இல்லாமல்.) ஜெயிலுக்குப் போகிறான். வருடங்கள் உருண்டோடுகின்றன. அந்தக் காலக் கதைகளில் வருடங்கள் அடிக்கடி உருண்டோடவே செய்கின்றன.
ஆனால் கதையின் சிறுகதைத் தன்மை தெளிவானது. கதை துவங்கும்போது ஓர் ஊரின் திருவிழா வைபவம் வர்ணிக்கப் படுகிறது. ஊர் ஒதுக்குப் பறத்தில் ஓர் ஆல மரத்தின் கீழே அந்தப் பெண். மடியில் குழந்தை ஒன்று. திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்திருக்கிறார்கள். வாண வேடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தூக்கம் வராத பிள்ளை அம்மாவைக் கதை சொல்லச் சொல்கிறான். அம்மா ‘தன்’ கதையைச் சொல்கிறாள்.
வருடங்கள் பின்னோக்கி உருண்டோடுகின்றன!
ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்த அவள்கணவன் அந்த ஆலமரத்தின் பின்னே யிருந்து, மீசையும் தாடியுமாக சாமியார் போல வெளிப் படுகிறான். அப்படி வெளிப்படுவது அவள்புருஷன் தான் என்று நமக்கெல்லாம் புரிந்து விடுகிறது. எழுத்தாளருக்குப் புரியவில்லை. அப்புறம் உணர்ச்சிமயமான இரண்டு பக்கங்கள். அத்தோடு அதன்பின் திருவிழாவே வரவில்லை கதையில். அவர்கள் மீண்டும் ஒன்று கூடியது, இதைவிட பெரிய திருவிழா என்ன இருக்கிறது?
நல்லவேளை வாசகரைப் பார்த்து அவர்கள் மாலையும் கழுத்துமாகக் கை கூப்ப, பூமாரி பொழிய, ‘வணக்கம்’ போடவில்லை.
புதியதோர் பிசாசு
குடியால் கெட்ட ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை இது. வெளிப்படையான பிரச்சாரம்.
ஆதி ஆரியரது வாழ்க்கை எவ்வாறாயினும், அவர்கள் சந்ததியாராகிய நமக்குள் மதுபான வழக்கம் இல்லாம லிருந்தது. வாந்திபேதி உபத்திரவம் உற்றார்க்கும், பிரசவித்தவர்க்கும் சாராயமானது அவசியமான மருந்தென்று, நமக்குள் சிலர் எண்ணுகிறார்கள். இது முற்றிலும் தவறென்பது, சிறந்த மேனாட்டு வைத்திய சிகாமணிகளின் அபிப்ராயம். (...) மேனாட்டுச் சன சமூகங்களுக்குள் நடக்கும் குற்றங் கோளாறுகளுக் கெல்லாம் குடிவெறியே முக்கியக் காரணம் என்று ஒப்புக்கொள்ளப் படுகிறது. அங்ஙன மிருக்க, உஷ்ண பூமியில் அவசிய மில்லாததும், தேச சம்பிரதாயத்தோடு முரணயிதும், பிடித்தால் விடாததுமான ஓர் ஈன வழக்கத்தை, நம்முள் சிலர் புதிதாய் அப்பியசிப்பது பரிதபிக்கத் தக்கதே. பள்ளு பறை என்று கீழ் ஜாதிகளாக மதிக்கப்படும் இனத்தாரைத் தவிர, மற்றெவருமே மதுபானஞ் செய்யாதிருந்த இந் நாட்டிலே, இப்பொழுது மேல் ஜாதியாரும் குடிக்கக் கற்றுக்கொள்வது விபரீதமே. கீழ் ஜாதியாரின் கெட்ட வழக்கத்தை நீக்கி அவர்களை மேம்படுத்த முடியாமல், தாம் அவ்வழக்கத்தை அனுசரித்து, கீழ் ஜாதியாக முயலுதல் ஆச்சரியமே!... என்று இன்னும் நீள்கிறது உரை.
கதையில் ஒரு பிராமணர் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிறார். அவர் குடும்பத்தில் பிள்ளைகளே அவரோடு உணவு உண்ணுவதைத் தவிர்க்கிறார்கள். அவர் தனிமைப்படுகிறார். தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார். இறுதியில் உடல் சுகவீனத்தால் படுக்கையிலேயே அசிங்கமான தன் உடல் கழிவுகளுடன் இறந்து கிடக்கிறார் - இதுமாதிரி நான் கேள்விப்பட்டதே இல்லை. தன் படுக்கையிலேயே மல ஜலம் கழிக்கிற நிலை குடியால் வருமா? அது சாகும் போது தான் வருமா? அதற்கு முன்பே அவர் உடல் இன்னும் பல கட்டங்களில் மெல்ல சீரழியும் அல்லவா?
தவிரவும் குடித்ததால் அவர் சமூகக் குற்றம் எதுவும் இழைத்தாப் போலவும் கதையில் காட்டப்பட வில்லை.
கதை இப்படி நாடகத் திரையுடன் முடிகிறது. புத்தகமும்.
இதை வாசிக்கும் மித்திரர் பலர்க்குச் சுந்தரமையர் குடும்பத்தைப் போல் யஜமானன் குடியினால் கெட்டுப் போன குடும்பங்கள் சில ஞாபகத்துக்கு வரலாம். (...) தீய வழக்கங்களுக்குப் புலிபோலஞ்சி விலகுவதே ஆண்மையாகும்.
இந்தக் கடைசி வரியை மாத்திரம் வாசிப்பவர், இதை கதை என்பாரா கட்டுரை என்பாரா?
*
தான் பார்த்த கேட்ட கதைகளை, பாத்திரங்களை மாதவையா பேசுபொருளாக்கி யிருக்கிறார். அதில் பிறன்மனை விழைதல், தாசியிடம் போதல் வழக்கங்கள் இல்லை போலிருக்கிறது! அந்த மட்டுக்கு மாதவையாவின் சொந்தச் சூழல் சிறப்பாகவே அமைந்திருந்தது என்று சொல்லத் தோன்றுகிறது.
இளமையும் வேகமும், தமிழில் புதிதான துறைகளான புனைவு வடிவங்களில் வசன நடை முயற்சிகள் எல்லாமாக அவரை இயக்கி யிருக்கின்றன. வசன காலப் புனைவு இலக்கிய உலகில் நமக்குக் கிடைத்த முன்னோடிகள், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பி.ஆர்.ராஜமையர், மாதவையா போன்றோர் மேதைகளாகவே அமைந்தது நமது நல்லூழ். எப்போதுமே உலக இலக்கியத்துக்குச் சளைக்காத, மேன்மையான நூல்கள் நம்மிடம் கால காலமாக காணக் கிடைக்கின்றன. இவர்கள் மேதைகள் மாத்திரம் அல்ல, தான் அறிந்த சமூகத்தை தான் உணர்ந்த அளவு அடுத்தகட்ட நகர்வுக்குத் தயார்ப் படுத்தத் தவறவில்லை, என்பது நம் பெருமை.
கதாநாயகனுக்கு மணப்பெண்ணைப் பிடிக்கவில்லை, என அவளை மோசமாக வர்ணித்த மாதவையா உடனே அவளைக் குறை சொல்வதை நிறுத்தி, “உன்மேல் என்ன பிழை?” என நாயகனைப் பேச வைத்ததை மதிக்கிறேன். நமது வழிகாட்டிகள் உன்னதமானவர்கள். இது நம் பெருமை. அதேபோல கதையின் உணர்ச்சிக் கட்டங்களைக் கையாள மெல்ல பயிற்சி யடைகிறார் மாதவையா என்று அறிந்துகொள்ள முடிகிறது.
அதேபோல, கதைக்குத் தலைப்பு ரீதியாய், திரௌபதியின் கனவு, ஒரு அபாயகரமான திரிசக்கர வண்டி, நரி பரியான அற்புதம் - என்பன தேர்ச்சியான கையாளலாக பாராட்டு பெறத் தக்கவை. வாழ வகையில்லாத தங்கைக்கு அவள் தன் குழந்தைகளுடன் கடைத்தேற வழி செய்கிறார் அண்ணா. பிறகு அவளது நம்பிக்கைத் துரோகத்தால் ஏமாற்றம் அடைகிறார். தங்கை என்ற நரியை அவர் பரியாக்கினார், என்கிற அற்புதம் தான் இந்தக் கதை, அல்லவா?
பிராமணர்களில் ஒருவரை கீழ் சாதி முனேற்றத்துக்காகப் பாடுபாட வைக்கிறார், என்பதும், படித்துத் தேறிய ஒரு பெண் நல் வாழ்க்கை வாழ்கிற ஓர் உதாரணம் காட்டியதும் கவனிக்கத் தக்கது.
புத்தகத்தின் 2012 பதிப்புரையில், “1870ல் பிறந்த மாதவையர் 1925ல் தமிழ்க் கல்வியின் தேவையைக் குறித்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது உயிர் நீத்தார்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழே மூச்சாய் மரணம் எய்தி யிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தை எனக்கு விழுப்புரத்தில் ஒரு நூலகத்தில் கண்டெடுத்து, சிரமம் மிகக் கொண்டு ஜெராக்ஸ் எடுத்து அனுப்பி வைத்தவர் டி.கே.சுப்ரமணியன். ஓய்வு பெற்ற காவல்துறை எழுத்தர். என்மேல் பாசமும் மதிப்பும் கொண்டவர். என் கதைகள் மூலம், முகம் அறியாமலேயே என்னுடன் நண்பனாக உணர்ந்தவர். நேரில் ஒரு வாய்ப்பில் சந்தித்தபோது தான் அவர் என்னை, என் பழைய இடங்களில் தேடிவந்து திரும்பியிருக்கிறார், என்று தெரிந்தது. இத்தகைய நண்பர்கள் பெரும் பேறு அல்லவா? டி.கே.சுப்ரமணியனால் இந்த வாசிப்பும், இந்தக் கட்டுரையும் சாத்தியம் ஆனது.
நண்பர் டிகேயெஸ் அனுப்பிய ஜெராக்ஸ் பிரதியில் கடைசிச் சிறுகதை “19. விதிவசம்” இல்லை, என அறியத் தருகிறேன். வாய்ப்பு கிடைத்தால் அவர் அந்தக் கதையைத் தேடித் தரட்டும்.
இந்தக் கதைகளைப் பற்றி எழுத்தாளர் சைலபதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, பிராமணர்கள் தங்கள் பொருள் வசதிக்கு ஆங்கிலேயர்களிடம் அடிமை உத்தியோகம் பார்த்துக் கொண்டே, புரட்சியும் பேசுவார்கள், அதுவும் தங்கள் சமூகம் பற்றி... என்று ஒரு வரி குறிப்பிட்டார். காலை பத்து மணிக்கு முன்பாக பஞ்சகச்சம் கட்டி பிராமண நியதிகளை, பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு, பத்து மணிக்கு மேல்கோட்டு அணிந்துகொண்டு உத்தியோகம் போய், ஆங்கிலத்தில் பேசி பணியாற்றுவது இரட்டைநிலையாக அவர்கள் உணர்ந்ததே இல்லை, என்பது உண்மையே.
ஆயினும் மாற்றம் என்பது எப்படியாவது ஏற்பட்டே ஆகவேண்டும். நதிமூலம் அங்கே தேவைதான் இல்லை, என்று சொல்லத் தோன்றுகிறது.
மாற்றம் தேவை என உணர்கிறவர்களிடத்தில் குற்றம் காண ஆரம்பித்தால், மாற்றம் சாத்தியமே இல்லை. கலங்கித் தெளிதல் உலக நியதி.
குசிகர் குட்டிக் கதைகள் ஆங்கிலத்தில் எட்டெட்டு கதைகளாக இரு தொகுதிகள் வந்தன. பிறகு பஞ்சாமிர்தம் இதழுக்கு என 22 கதைகள், அவர் மேலும் ஆறு கதைகள் எழுதியிருக்கலாம். அல்லது ஆங்கிலத்தில் எழுதியவற்றில் வடிகட்டி 16 கதைகளாக முன்பு அவை பிரசுரம் ஆகியிருக்கலாம். தமிழில் வந்த 22ல் 19 கதைகள் இங்கே இப்போது 2012ல் வைகுந்த் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சில கதைகளைக் குறைத்தும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் வரலாற்றுத் தேவை இது. குசிகர் கதைகளாக சமூகக் கண்ணோட்டம் என கவன ஈர்ப்பு செய்யாத கதைகளையும், உணர்ச்சிக் கட்டங்களையும் மாதயை கையாண்டிருக்கிறார். அதை அறியத் தர வேண்டும், என்ற அளவில் மற்ற கதைகளும் இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருக்கலாம். அதுவும் நியாயமே.
தமிழின் முக்கியமான தொகுதி இது. சிறந்த வரலாற்று ஆவணம் போன்றது. வைகுந்த் பதிப்பகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
•
91 9789987842 / 91 9445016842 storysankar@gmail.com