Friday, March 29, 2019


part 35

நேர்த்திக்கடன்
எஸ்.சங்கரநாராயணன்

ரு படைப்பு அதன் செய் நேர்த்தியில் வாசக மனதில் இடம் பிடிக்கிறது. அது சொல்லப்பட்ட சுவாரஸ்யத்தினால் அப்படி அமையலாம். அல்லது சிக்கலான விஷயம் அது, என்றாலும் சொல்லப்பட்ட அந்த எளிமையினால்... என்று எதோ ஒரு நேர்த்தி அதற்கு அமையும் போது அந்தப் படைப்பின் ஆயுள் நீட்டிக்கப் படுகிறது. அந்த செய் நேர்த்தி என்பது எழுத்தாளனுக்கே தனி அனுபவம். எழுதும்போது கிடைக்கிற அனுபவம். பயிற்சி பெற்ற எழுத்தாளனுக்கோ அது கிட்டாமல் அவன் படைப்பை வெளியே அனுப்புவதே யில்லை. ஒரு செய் நேர்த்தி - அதுவே அதில் அவன் ஈடுபடுவதின் நியாயமாக அவனுக்குக் கிடைக்கிறது. அவனது அடையாளம் அது. தனித்தன்மை அது. எழுதி முடித்த பின் அவனுக்கு அது தனி நிறைவை அளிக்கிறது.
செயலில் நேர்த்தி என் தலைக் கடனே!
முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கதை. எழுதியவர் வண்ணநிலவன் என்று நினைவு. கிராமத்துச் சிறுமி ஒருத்தி. பள்ளிக்கூடம் போய்ப் படிக்க வேண்டும் என்று ஆசை அந்தப் பெண்ணுக்கு. குடும்பத்தில் வறுமை. படிச்சி நீ என்னா கலெக்டராவா ஆகப் போறே, ஒண்ணும் போகவேண்டாம், என்று அவளைப் படிப்பை நிப்பாட்டி விடுகிறார்கள் பெற்றோர். ஒரு சாணிக்கூடையைக் கொடுத்து தெருத் தெருவாக அலைந்து சாணி பெறக்கிட்டு வா, வரட்டி தட்டி விக்கலாம்... என்று அனுப்பி வைக்கிறார்கள்.
சிறுமிக்கு ரொம்ப வருத்தம். அவள் தலையில் சாணிக்கூடையுடன் தெருவில் போகிறாள். அவளது பள்ளிக்கூடம் பக்கம் தானாகக் கால் போகிறது. வகுப்புகளுக்கு வெளியே மைதானம். அவள் தன் வகுப்புக்கு வெளியே சன்னல் வழியே பார்க்கிறாள். உள்ளே வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
அவள் வழக்கமாக அமரும் பெஞ்சு. அதில் இப்போது வேறொரு சிறுமி உட்கார்ந்திருக்கிறாள். இவளுக்கு ஆத்திர ஆத்திரமாய் வருகிறது.
இவள் சன்னல் வழியே அந்தப் பெண்ணை ஸ் ஸ் என்று கூப்பிடுகிறாள். அந்தப் பெண் பயத்துடன் திரும்பி இவளைப் பார்க்கிறாள். அது ஏ இடம். அதுல நீ உக்காரப்டாது... என்கிறாள். அவள் திரும்பிக் கொள்கிறாள். திரும்பக் கூப்பிடுகிறாள். அப்பறம் வெளிய வருவேல்ல... என்று நாக்கைத் துருத்தி மிரட்டுகிறாள் இவள். அந்தப் பெண் பயந்து விலகி இடம் மாறி உட்கார்கிறது.
இடைவேளை நேரம். வகுப்பில் யாரும் இல்லை. படிப்பை நிறுத்திய சிறுமி வகுப்பறைக்குள் போகிறாள். அவள் வழக்கமாக அமரும் பெஞ்சு. அதில்வேறு யாரும் இனி உட்காரக் கூடாது... என்று முடிவெடுக்கிறாள். தன் கூடையில் இருந்த சாணியை எடுத்து பெஞ்சில் மெழுகி வைத்து விட்டு வெளியேறுகிறாள்... என முடிகிறது கதை.
எனது இளம் வயதில் வாசித்த கதை. ஒரு கதையை எப்படிச் சொல்ல வேண்டும், என எழுத்தாளர் எனக்கு வகுப்பெடுத்தாற் போலிருந்தது. நிறைய உள் முடிச்சுகளை யெல்லாம் இதில் இயல்பாக வைக்கிறார். முழுக்க அந்தச் சிறுமியின் ஏக்கத்தைச் சுற்றி மாத்திரமே வளைய வரும் கதை. அவர் சாணி பொறுக்கி வருவதையும் எப்படி சிறுமியின் மனவோட்டத்துடன் பயன்படுத்தியது அழகாக அமைந்திருக்கிறது.
நண்பர் ஏ.ஏ.ஹெச்.கே கோரி இலங்கையில் நடக்கிறதாக ஒரு சிறுகதை எழுதினார். அலுவலகம் ஒன்றில் வேலை பார்ககும் ஒருவன், மாலையில் வீடு திரும்பும் வழியில் பெரிய வணிக வளாகம் ஒன்றில் ஒதுங்குகிறான். பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே போய் ஒரு தேநீர் அருந்தலாம் என்கிறதாக உத்தேசம். அங்கே இவனது முதலாளி வந்திருக்கிறார். முதலாளியின் மனைவி, இரு குழந்தைகள், கூட வீட்டு ஒத்தாசை என்று ஒரு வேலைக்காரச் சின்னப் பெண். அந்தக் குழந்தைகள் அங்கே இருக்கிற ஊஞ்சல் ஒன்றில் ஹு ஹுவென்று கூச்சலிட்டபடி ஆட்டம் போடுகின்றன. வேலைக்காரச் சிறு பெண் வேடிக்கை பார்த்தபடி ஒதுங்கி நிற்கிறது. முதலாளி அந்தக் குழந்தைகளை அழைத்து, அவர்கள் எல்லாருமாக திருப்தியாகச் சாப்பிடுகிறார்கள். அந்தச் சிறுமி... அதற்குப் பசிக்கிறதா, எதுவும் வேண்டுமா, என்று முதலாளி கேட்கவே யில்லை.
எல்லாவற்றையும் இவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு தன் செலவில் அந்த வேலைக்காரச் சிறுமிக்கு சாப்பிட எதாவது வாங்கித் தரவேண்டும் போல இருக்கிறது. அதற்குள் அவனை முதலாளி பார்த்துவிடுகிறார். எங்கப்பா இந்தப் பக்கம், என்பது போல எதோ விசாரிக்கிறார். சரி. வந்ததுதான் வந்திட்டே, என்றபடி அவர் வேலைக்காரச் சிறுமியைக் காட்டுகிறார். நாங்க இப்படியே வெளியே போறோம். இவளை எங்க வீட்ல விட்டுட்டுப் போறியா? ட்டூ வீலர்லதானே வந்திருக்கே... என்கிறார். வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறான் அவன். வேலைக்காரப் பெண்ணை அவனுடன் விட்டுவிட்டு முதலாளி குடும்பத்துடன் காரில் போய் விடுகிறார். அவன் புன்னகையுடன் அந்தப் பெண்ணிடம் சாப்பிட என்ன வேண்டும், என்று கேட்கிறான். அவளுக்கு வாங்கித் தந்தாலும் அவள் அதனை அத்தனை ஈடுபாட்டுடன் சாப்பிட்டதாக அவனுக்குத் தெரியவில்லை. என்ன வேணாலும் கேளு. என்னுடன் நீ உன் இஷ்டப்படி சிரிச்சிட்டிருக்கலாம்... என்கிறான். அந்தப் பெண் சட்டென்று “ஒரு நிமிஷம் அங்க்கிள்” ... என்றுவிட்டு அந்த ஊஞ்சலை நோக்கி ஓடுகிறாள். தரையை உன்னி உன்னி வேக வேகமாக அந்த ஊஞ்சலில் முகம் மலர ஆடுகிறாள் அந்தச் சிறுமி - என முடியும் கதை.
தீர்மானங்களைத் தாண்டி வாழ்க்கையின் ஒரு சம்பவமாகவே முடிவுகள் தர முடிந்தால் அந்தக் கதை மறக்க முடியாத அளவில் மனிதல் இடம் பிடித்து விடுகிறது... என்று மேற்சொன்ன இரு உதாரணங்களும் அமைகின்றன.
ஏ.ஏ.ஹெச்.கே.கோரியைப் போல எனது இன்னொரு நெருங்கிய எழுத்தாள நண்பர் சாந்தன். இலங்கையில் ஈழப் போர் உக்கிரப் பட்ட வேளை பற்றி அவர் ஒரு குறுங்கதை தந்திருக்கிறார். சாந்தனின் அடையாளமாக அவரது குறுங்கதைகள் விளங்குகின்றன. அசோகமித்திரனுக்கு அவை மிகவும் பிடிக்கும்.
தோளில் குழந்தையுடன் ஒரு பெண் படலைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறாள். அந்த வீட்டுப் பிள்ளை அவளை விசாரிக்கிறான். யார் நீங்க. எங்கருந்து வரீங்க... என்றெல்லாம் கேட்கிறான் அவன். ஒரு ஊர் பேர் சொல்லி அந்த அகதி முகாமில் இருந்து வருகிறதாகவும், ரொம்பக் கஷ்டம், என்று உதவி கேட்டு வந்திருக்கிறதாகவும் அவள் அழுதபடி சொல்கிறாள். உள்ளேயிருந்து அவனது அம்மா பணம் எடுத்து வந்து நீட்டுகிறாள்.
அம்மாவின் அந்த இரக்க குணம் அவனை நெகிழ்த்துகிறது. “இல்ல அம்மா, அவள் பொய் சொல்கிறாள். அவள் சொல்கிற ஊரில் அகதி முகாமே இல்லை” என்கிறான். அம்மா அதற்கு பதில் சொல்கிறாள். “ஐயோ பாவம்டா அவ. பொய் சொல்லக் கூடத் தெரியாத அளவு அத்தனைக்கு வீட்டை விட்டு இறங்கிப் பழக்கம் இல்லையோ என்னமோ” என்கிறாள்.
தாய்மை என்பது அன்பு மகா சமுத்திரம், என்கிறார் சாந்தன். இரண்டு பக்க அளவில் மிகச் சிறிய கதை.
மீனாக மாறியவன் - என நான் ஒரு கதை ஆனந்த விகடனில் எழுதினேன். அது ஏனோ இப்போது முன்னே வருகிறது. சம்பவங்களை ஒருசேர ஒத்திசைவுடன் அடுக்குவது இக்காலங்களில் எனக்கு பயிற்சி அடிப்படையிலேயே வந்திருக்கிறது, என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஊரில் ஓர் பைத்தியக்காரன். காலப்போக்கில் அந்த ஊரே அவனை நேசிக்கிறது. அவனும் அந்த ஊரை நேசிக்கிறான். ஊர்க் குழந்தைகள் அவனைக் கண்டதும் உற்சாகமாய்க் கையாட்டும். அவனும் ஹிக்கிரிகிரி... என்று உடம்பைத் திருகிய ஒரு சத்தத்துடன் அதை ஏற்றுக் கொள்வான். அந்த ஊரின் ஓர் அடையாளமாகவே அவன் ஆகிப் போகிறான்.
ஊரில் புதுப் பணக்காரன் கிளம்புகிறான். அவனுக்கும் பரம்பரைப் பணக்காரனுக்கும் பணத்தினால் மோதல் வருகிறது. பரம்பரையான் எது செய்தாலும் அதை எதிர்க்கவும் முரண்டவுமே புதியவன் முனைகிறான். ஊரே அவர்களிடையே வந்த பகையில் திகைக்கிறது. சண்டைகள் ரகளைகள் அதிகமாகி விடுகின்றன. மழைக்காலத்தில் அந்தக் குளத்துக்கு நீர் வரும். புதுத் தண்ணியும் புது மீன்களும் வரும். அதைக் குத்தகைக்கு விடுவார்கள். குத்தகை எடுப்பதில் இருவருக்கும் பகை வருகிறது.
குத்தகை எடுக்க முடியாமல் தோற்றுப் போனவன் குளத்துத் தண்ணீரில் விஷத்தைக் கலந்து விடுகிறான். அதில் மீன்கள் கொத்துக் கொத்தாய் செத்து மிதக்கின்றன. அதே சமயம் அந்த ஹிக்கிரிகிரி பைத்தியத்தையும் காணவில்லை. விஷம் வைத்தவன், அந்தப் பைத்தியம் தான் இப்படி ஊரைப் பிடிக்காமல் விஷத்தைக் கலந்திருக்க வேண்டும், என கிளப்பி விடுகிறான். ஊரில் யாருமே அதை நம்பவில்லை...
ரெண்டு நாளில் அந்தக் குளத்தில் இருந்து அந்தப் பைத்தியத்தின் பிணம் ஊறி வெளியே வந்து மிதக்கிறது.
தெருவெங்கும் அடிதடி என்று ஊரே வெறிச்சிட்டுக் கிடக்கிறது. நடமாட்டம் இல்லை. வீட்டுக் கதவுகள் அடைத்துக் கிடக்கின்றன. பைத்தியத்துக்குச் சோறு போட ஆளில்லை. அவன் போய் அந்தக் குளத்துத் தண்ணீரை பசிதீர அருந்தியதில் இறந்து போகிறான் - என்பது கதை முடிவு.
விஷத்தை அவன் கலக்கவில்லை, என்று சொல்லாமல் சொல்கிறது அல்லவா, இந்த ‘மீனாக மாறியவன்’ கதை. வடிவ அமைதியுடன் முடிவு அமைந்ததாக நினைக்கிறேன்.
2
எல்லாக் கதைகளுமே ஒரு துன்பியல் சித்திரம் என்கிற அளவிலேயே மனசில் மேலெழுந்து வருகிறதோ என்னவோ? எழுத்தாளனின் அனுபூதி வெளிப்படும் தருணங்களைச் சொல்லி மேற் செல்லலாமே என்று படுகிறது. கதையின் வடிவ நேர்த்தி ஒரு அம்சம் என்றால், கதா பாத்திரங்களூடே எழுத்தாளன் இயங்கும் போது அன்பு வயப்பட்டு சில சமயம் தன் ஆத்மாவின் ஒளியையே கூட அதில் வைத்து விட முடிகிறது. அதைத் தான் அனுபூதி என்று குறிப்பிட வேண்டி யிருக்கிறது.
தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் அளவில் கூட இந்த தரிசன அம்சங்கள் நமக்குக் கிடைக்கின்றன. வத்தலகுண்டு பி.ஆர்.ராஜமய்யர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’ தமிழின் முதல் நாவல் என்கிறார்கள். முதல் இலக்கியத் தரமான நாவல் என்று அதை எடுத்துக் கொள்ளலாம். அதன் நாயகர் குப்புசாமி ஐயர். அவர் வீட்டில் திருடு போய்விடும், என ஒரு சம்பவம். திருடும் சத்தத்தில் அவர்கள் விழித்துக் கொள்வார்கள். திருடன் திருடன், என கூச்சல் கேட்டதில் பக்கத்து எதிர் வீடுகள் விழித்துக் கொள்ளும். திருடன் புறக்கடை வழியே வெளியே ஓடுவான். அவர்கள் அவனைத் தொடர்ந்து வந்தால் பிடிபட நேரும், என்ற யோசனையில் திருடன் தன் கையில் இருந்த தீப் பந்தத்தை புறக்கடையில் இருந்த வைக்கோற் போரில் வீசி விட்டு ஓடி விடுவான். குப்பென்று தீ பற்றி எரியும் வைக்கோற் போர். சனங்கள் அதை அணைப்பதில் மும்முரம் காட்டியதில் அவன் தப்பி விடுவான்.
பிற்பாடு அவன் மாட்டிக் கொள்வான். வழக்கு விசாரணை நடக்கும். கோர்ட்டில் தீர்ப்பு வருமுன் திடீரென்று நீதிபதி குப்புசாமி ஐயரிடம் “நீங்க இந்தக் குற்றவாளியிடம் எதுவும் சொல்ல விரும்புறீங்களா?” என்று கேட்பார். நாவலில் எதிர்பாராத கட்டம் அல்லவா இது? எந்த நீதிபதி இப்படிச் சொல்வார். ஆனால் ராஜமய்யர் அங்கே கதையை நிறுத்திச் சொல்கிறார்.
திருட்டு கொடுத்த குப்புசாமி ஐயர் திருடனிடம் சொல்வதாகக் கதை. “அப்பா நீ வந்தாய். நகை நடடு பண்ட பாத்திரம் அரிசி.. எது கிடைக்குதோ திருடினாய். அதைத் திருடுமுன் நான் பயன்படுத்தினேன். திருடிக்கொண்டபோது அது உனக்குப் பயன்படும். அவ்வளவில் எனக்கும் அது ஆறுதல் தந்தது. ஆனால் வைக்கோற் போர்... அதுக்கு தீ வெச்சிட்டியே? செய்யலாமா? அது உனக்கும் உபயோகப் படாமல் எனக்கும் உபயோகப் படாமல் வீணாய்ப் போச்சே?”
என்னவோர் சிந்தனை! இந்த உரையாடல் ராஜமய்யயர் மனசில் இருந்து அல்லவா எழுகிறது. மேன்மக்கள் மொழி எப்பவுமே அத்தனை தீர்க்க தரிசனமானது தான். மேலே படிக்க முடியாமல் பல மணி நேரங்கள் நான் இதில் உழன்றேன். காந்தி ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்தார் என்பதை நான் நம்புகிறேன். உயர்ந்த விஷயங்கள் திடீரென்று நமக்கு அறிமுகம் ஆகிற போது நம் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை அந்தக் கணத்தில் அந்தச் சூழலுக்குக் கிட்டுகிறது.
இப்போதும் நான் தெருவில் போகையில் எந்தத் தண்ணீர்க் குழாயில் வீணாகத் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தாலும் உடனே போய் மூடி விட்டுத் தான் போகிறேன். அதற்கு நிச்சயம் ராஜமய்யரின் மேற்சொன்ன பகுதியின் பாதிப்பே காரணம். இது அவர் பெருமை மாத்திரம் அல்ல. இது என் பெருமை.
இன்னொரு துவக்க கால புனைவு எழுத்தாளர் அ.மாதவையா. அவரது ஒரு நாவலில் இப்படி காட்சி அமைக்கிறார். ஒரு கல்யாணப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பையனுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. பெண்ணுக்குப் பையனைப் பிடித்திருக்கிறது. “நாம வெற்றிலை பாக்கு மாத்திக்கலாமே” என்கிறார்கள். கையில் வெற்றிலைத் தட்டை எடுத்து மாற்றிக் கொள்ளும் அந்தக் கணத்தில் மின்சாரம் போய் விடுகிறது.
அப்போது ஒருவர் சொல்கிறார். “பக்கத்து வீட்ல விளக்கு எரிகிறது. எதிர் வீட்ல விளக்கு எரிகிறது. ஊர் பூராவும் வெளிச்சமா இருக்கு. நல்ல சகுனம் தான். மாத்திக்கலாம் தட்டை.”
இந்தக் குரல் எழுத்தாளரின், மாதவையாவின் குரலே தானே? சகுனம் பார்ப்பது தவறு... என்று பிரச்சாரம் செய்யவில்லை அவர். விஷயத்தை மனங் கொள்ளும் விதத்தில் நாம் பார்க்கப் பழக்கப் படுத்துகிறார்.
இப்படிப்பட்ட சிந்தனை மேதைகள் நமக்கு வாய்த்த வரம்.
ஒரு சம்பவத்தை, காட்சியை அல்லது வாழ்க்கைச் சூழலை கதையில் எழுதி வருகையில் திடீரென்று எழுத்தாளன் உச்சம் தொட வாய்க்கிறது. அதுவே எழுத்தின் பெருமை. எழுத்து எழுதியவனை வளர்த்தபடியே வருகிறது. எப்பெரும் கொடை இது. அவ்வளவில் பயிற்சி பெறுவது எழுத்தின் கால காலமான தியானம் என்று சொல்லலாம்.
3
கடல்காற்று, என்கிற எனது ஒரு நாவல். அதில் அறுபது தாண்டிய வயதுக்கார ஆசிரியர் ஒருவர் இறந்து விடுவார். இறந்தவர் ஒரு சமூகத்தைப் பொறுத்த அளவில் ஒரு தனி மனிதர் அல்ல. ஒரு அப்பா. ஒரு அண்ணா. ஒரு தம்பி. ஒரு சித்தப்பா... என பல மனித அடையாளங்கள் இழந்த நிலை அது... என்பது கதை.
ராஜாமணி வாத்தியாரின் கூடப் பிறந்த பெண்கள் அந்தச் சாவுக்கு வருகிறார்கள். மூத்த சகோதரி வாழ்க்கையில் இன்னும் வசதி வாய்ப்பு என்று கரை சேராதவள். இளைய சகோதரியோ கல்கத்தாவில் இருக்கிறாள். அவள் கணவன் இறந்து விட்டாலும், அவள் பையன் நல்ல நிலைமைக்கு வந்து இப்போது அவள் காதிலும் மூக்கிலும் தங்கமும் வைரமும் ஜ்வலிக்கிறது. ஏழை அக்கா நினைப்பதாக நான் எழுதிய ஒரு வரி -
ஏழை சுமங்கலியயை விட பணக்கார விதவை கொடுத்து வைத்தவள்.
‘காலத்துளி’ என நான் ஒரு நாவல் எழுதினேன். பிற்பாடு ‘புன்னகைத் தீவுகள்’ என மறு பெயருடன் அது இரண்டாம் பதிப்பு கண்டது. அந்த நாவலில் நானே எதிர்பாராமல் வந்தமைந்த ஒரு வரி -
வாழ்க்கை சந்தோஷமாகக் கழிக்கப்பட வேண்டியது. இங்கே புழுக்களுக்குக் கூட குறைந்த பட்சம் சம்போக சுகம் அனுமதிக்கப் பட்டிருக்கிறது.
படைப்பாளனை விட படைப்பு உயர்ந்தது. ஏனெனில் படைப்பாளன் படைக்கிற அந்தக் கணத்தில் படைக்கிற அந்த மனிதனின் விஸ்வரூபம் காட்டும் பேரடையாளம். அவ்வளவில் தன்னைத் தொடர்ந்து உணர்த்திக் கொள்கிற பிரயத்தனமே எழுத்து எனலாம்.
சனி தோறும் தொடர்கிறேன்
91 9789987842 . 91 94450 16842
storysankar@gmail.com

Friday, March 22, 2019


week 34
 
இயங்கு தளங்கள்
எஸ்.சங்கரநாராயணன்
 *
ந்தப் பகுதியில் எழுத்துக்களின் பல வகைமாதிரிகளும் அவைசார்ந்து எனது கவனமும், கவனஈர்ப்பும் அதன்பின்னான எனது இயக்கமும் பற்றி நிறைய எழுதி யிருக்கிறேன். யோசிக்க யோசிக்க மேலும் கிளைகள் விரிந்து பரவுகின்றன. ஓர் எழுத்தாள நிலையில் இதை நான் பகிர்வது வாசக நிலையில் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது நம்பிக்கை. அன்றியும் நானும் மேலும் என் சிந்தனைகளைப் பரத்தி விரிக்க இது ஒரு பயிற்சி எனக்கு, என்று தோன்றுகிறது.
ஒரு படைப்பை அதன் பிரத்யேகத் தன்மையை அறிந்து பயன்படுத்தும் போது அந்தக் கலைப் படைப்பு தனி உயரம் பெறுகிறதாக உணர முடிகிறது. அதாவது சில படைப்புகளில் அதற்கேயுரிய தனித்தன்மைகள் அமைகின்றன. அவற்றை அந்த எழுத்தாளனால் கண்டுகொள்ள முடிகிறது. சட்டென நினைவு வரும் ஓர் உதாரணம், அறிவழகனின் ‘மரண அடி’ என்ற சிறுகதை.
சுடுகாட்டில் பிணத்தை எரித்துப் பிழைக்கும் பெரியவரின் கதை. வெட்டியான் என்பது குலத் தொழிலாகவே இருந்து வருகிறது. வெட்டியானின் மகன், ‘நான் இந்த வேலைக்கு வர மாட்டேன். வேறு வேலைக்குப் போவேன்’ என்று அப்பாவிடம் முரண்டு பிடிக்கிறான். ஒருநாள் அப்பாவுக்கு ரொம்ப உடம்பு முடியவில்லை. அப்போது அவனை ஒருநாள் மட்டும் பிணத்தை எரிக்கிற வேலையை அவனைச் செய்யச் சொல்கிறார். வேண்டா வெறுப்பாக அப்பாவுடன் செல்கிறான் அவன். எந்தத் தொழிலுக்கும் அதற்கேயுரிய சூட்சும அம்சங்கள் உண்டு அல்லவா? அப்பா அவனுக்கு பிணத்தை எரிக்கிற சூட்சுமத்தைக் கற்பிக்கிறார். சுடுகாட்டில் பிணத்தை சிதையில் இட்டு எரிக்கும்போது, பிணத்தின் எலும்புகள் விரிந்து அவை எழுந்து கொள்ளும். அதை அப்படியே விட்டு விட்டால் அந்த எலும்புகள் சரியாக வேகாது. அப்போது இறந்தவர் ஆத்மா சாந்தி அடையவில்லை, என்று ஊரில் பேச்சு வரும். அதனால் கவனமாக சிதையைப் பார்த்துக் கொண்டே யிருந்து, பிணம் எழுந்து கொள்ளும்போது அதை ஒரு கட்டையால் அடித்துத் திரும்ப சிதையில் போட வேண்டும். எத்தனையோ நல்ல மனிதர்கள் கூட செத்துப் போய்ப் பிணமாக வந்து சேர்வார்கள். அவர்களையும், இப்படி எழுந்து கொள்ளும் போது, அப்படி அடிக்க வேண்டியிருக்கும். அவர்களையும் அடிக்கத் தயங்கக் கூடாது. எப்படியும் அவர் எதாவது நமக்குக் கெட்ட விஷயம் செய்திருப்பார். அதை மனதில் கொண்டு வர வேண்டும். “அன்னிக்கு நீ எனக்கு இப்பிடிப் பண்ணினாய் இல்லே? அதுக்து இது. இந்தா வாங்கிக்க” என்றபடி ஓங்கி அந்த எலும்புக்கூட்டை அடிக்க வேண்டும். அப்பதான் அந்த எலும்பு நல்லா வெந்து சாம்பலாகும், என்று அப்பா சொல்லிக் கொடுக்கிறார்.
அன்றைக்கு இராத்திரி உடம்பு தேறாமல் அப்பா இறந்து விடுகிறார். அப்பாவின் பிணத்தை அவனே எரிக்க வேண்டி யிருக்கிறது. அழுதபடியே அவன், எழுந்துகொள்ளும் அப்பாவின் எலும்பைப் பார்க்கிறான். “வேற வேலைக்குப் போறேன் போறேன்னு சொன்னேன். கேட்காம என்னை இதுக்கே வர வெச்சிட்டியே” என்று சத்தமாய்க் கத்தியபடி அப்பாவின் எலும்பை ஓங்கி அடிக்கிறான்... என்று முடிகிறது கதை.
ஒரு தனித்தன்மையான களம் அமைத்து அதற்கேயான சம்பவங்களைத் தொகுத்து அததற்குத் தோதான திருப்ப அம்சத்தையும் கதையின் கடைசியில் கொண்டு வந்திருக்கிறார் அறிவழகன். முப்பத்தைந்து நாற்பது வருடங்களுக்கு முன்பு ‘இலக்கிய வீதி’ அமைப்பின் ஒரு தொகுதியில் வாசித்த கதை. இன்னும் நினைவில் இருக்கிறது. ‘இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குநரின் துவக்க காலக் குறும்படம் இதே கதையம்சத்துடன் வெளியானது. இந்தக் கதையை நான்தான் அவருக்கு சிபாரிசு செய்தேன்.
‘செம்புலப் பெயல்நீர்’ என நான் எழுதிய ஒரு சிறுகதை. டாக்டர் ஒருவன், மனைவி பிரசவத்துக்கு ஊருக்குப் போன நிலையில் சிறு பலவீனத்தில் சிவப்பு விளக்கு பெண் ஒருத்தியுடன் பழக ஆரம்பிக்கிற கதை. ஏறத்தாழ 20 பெண்களுடன் அவர்களை அதிகாரம் பணி இந்தத் தொழிலில் ராணியாக இருக்கும் ஒரு பெண். அந்த அடிமைப் பெண்களின் வாழ்க்கையே கதை. அதில் இந்த டாக்டர் நுழைகிறார். அவனோடு பழக ஆரம்பித்த பெண்ணுக்கு அவனிடம் காதல் பிறக்கிறது. தனது எஜமானி தந்த கருத்தடை மாத்திரைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவனுடன் அவள் பழகி கர்ப்பமாகிறாள். அதை மறைக்க முடியவில்லை. எஜமானிக்கு அதில் கோபம். அவனைக் கூப்பிட்டு கடுமையாய்ச் சாடுகிறாள் எஜமானி. பிறகு சொல்கிறாள். “இந்தக் குழந்தையை நீயே அபார்ஷன் பண்ணிவிடு.”
கதைக்களம் புதிதாய்க் கிடைத்த போது, அதில் இந்த ‘சென்ட்டிமென்ட்’டையும் வைக்க முடிந்தது. ஒரு டாக்டர், அவனே தன் குழந்தையை அபார்ஷன் செய்யும் சூழல். ‘இருவர் எழுதிய கவிதை’ நூல் உள்ள கதை அது.
2
இசை சார்ந்து ஒரு சிறுகதைத் திரட்டு ‘ஜுகல்பந்தி’ நான் கொண்டு வந்தேன். அன்றில் இருந்து இன்றுவரை இசை பற்றி நம் எழுத்தாளர்கள் எப்படியெப்படி யெல்லாம் எழுதிக் காட்டி யிருக்கிறார்கள் எனக் காட்டுவதே அதன் நோக்கு. இரண்டாம் தமிழுக்கு முதல் தமிழின் வணக்கம், என அடையாளம் காட்டி யிருப்பேன். அதை தில்லியில் இருந்து வடக்குவாசல் பதிப்பகம் வெளியிட்டது. தில்லி தமிழ்ச் சங்கத்தில் அந்த நூலை டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் வெளியிட்டார்கள். முதல் பிரதி சுதா ரகுநாதன் பெற்றுக் கொண்டார். இதைப் பற்றி நித்யஸ்ரீ மகாதேவன் கல்கி இதழில் மதிப்புரை தந்ததும் நினைவு வருகிறது.
ஜுகல்பந்தி கதைத் தேர்வில் சாரு நிவேதிதா கதை ஒன்றும் இடம் பெற்றது. ‘சங்கர்லால் இசைவிழா.’ பெரு நகரங்களில் இசை விழாக்கள் நடப்பது பற்றிய கதை. இது தில்லியில் நடந்த இசைவிழா. அதில் இசை ஆர்வம் மிக்க நடுத்தர சாமானியன் ஒருவன் இசை விழாவில் மாலை முதல்கச்சேரிக்குப் போவான். ஆறு முதல் ஏழரை வரை, ஒரு கச்சேரி. இளைய பாடகன் ஒருவனுக்கு வாய்ப்பு தந்திருப்பார்கள். அதை முழுசும் அவனால், இந்த ரசிகனால் கேட்க வாய்க்கும் அடுத்த ‘ஸ்லாட்’ ஏழரை முதல் ஒன்பது, ‘ப்ரைம் டைம்.’ பிரபல பாடகர் ஒருவரின் கச்சேரி. அவரது கச்சேரியை முழுசும் கேட்க அவனுக்கு ஆசை உண்டு. ஆனால் அவர் வந்து ஒரு பாடல் கூட அவனால் கேட்க முடியாது. ஊருக்கு வெளியே வெகு தொலைவில் இருக்கிற அவன் வீட்டுக்கு இப்போதே கிளம்பினால் தான் பத்தரை பதினோரு மணி வாக்கில் அவன் போய்ச் சேர முடியும். ஒரே ஒருபாடல் அவர் பாடிக் கேட்டுவிட்டு வருத்தமாய் அவன் கிளம்புவான் - இது சாருவின் கதை.
இந்தக் கதைத் தளத்தில் ஒரு வித்தியாசமான அம்சம் இருப்பதை நான் ஒரு புன்னகையோடு கவனித்தேன். அதை சாருவிடம் சொன்னேன். அவர் ஆச்சர்யப்பட்டு, “அப்படியா, நான் அதை உணரவில்லை” என்றார். அந்த ஆறு-ஏழரை ’ஸலாட் பாடும் இளைய பையன், அவன் பாட ஆரம்பிக்கும் போது, சபையில் கூட்டமே இராது. காரணம் அவன் அத்தனை பிரபலம் இல்லை. ஆனால் அவன் கச்சேரி முடிக்கிற நேரம் சபை நிரம்பி வழியும். அந்தக் கூட்டம் எல்லாம் அவனுக்கு வந்தது அல்ல. அடுத்து பாட இருக்கிற பிரபலத்துக்கு வந்த கூட்டம். அப்புறம் இடம் கிடைக்காது, என முன்கூட்டி வந்தமர்ந்த கூட்டம். அதாவது ஒரு பாடகன், அவன் பாட ஆரம்பிக்கையில் காலியான நாற்காலிகள். அவன் முடிக்கையில் இடம் ரசிகர்களால் நிரம்பி வழிகிறது... இந்த முரண் அம்சத்தை சாரு கவனிக்கவில்லை.
இதே போன்றதொரு முரண் அம்சத்தை எட்டி என்னால் தொட முடியுமா, என அப்போதிருந்து மனம் ஒரு ஓரத்தில் மினுக்கிக் கொண்டிருந்தது எனக்கு. கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்கள், இந்த விஷயத்தை என்னால் மறக்க முடியவில்லை. பிறகு ஒரு முகூர்த்தப் பொழுதில் நான் இந்தக் கதையை எபதினேன். ‘கம்பங்கொல்லை’ என்பது அந்தச் சிறுகதை. எஸ்.வி.சேகர் ஆசிரியராக இருந்த நாரதர் இதழுக்காக யோசித்த போது அமைந்தது இந்தக் கதை.
மனைவி இறந்து போன ஒருவன். வாழ்க்கை வெறுப்படிக்கிறது அவனுக்கு. அவனைத் தேடி மாமா வருகிறார். அவர் எப்ப வந்தாலும் செலவு வைத்துவிட்டுப் போகிறவர், என அவர் வந்தில் எரிச்சல் படுகிறான் அவன். அவர் அவனுக்கு ரெண்டாங் கல்யாணத்துக்கு ஒரு பெண் இருப்பதாகச் சொன்னதும், தெய்வமே, என்று பூரித்துப் போகிறான். யார் பெண், என்று தெரிந்துகொள்ள பரபரப்பாகிறான். அந்த ஊரில் கல்யாண வயசில் இருக்கிற அத்தனை பெண்ணையும் மனம் ஒரு ரவுண்டு வருகிறது. அவருடன் பேசப் பேச அவன் யூகங்கள் தகர்ந்து கொண்டே வருகின்றன. ஊரின் அழகான பெண்ணில் இருந்து ஒவ்வாரு மட்டமாக அவன் இறங்கி இறங்கி வருகிறான். அவர் கையில் இருக்கும் நல்ல வரன்களில் ஆக மோசமானதில் இருந்து அவன் தலையில் கட்ட ஒரு கணக்கு வைத்துப் பேசுகிறார். அவனைவிட வயதான விதவை ஒருத்தி. ஆளும் கருப்பு. தெத்துப்பல். அவளை முன்வைக்கிறபோது இருவருக்கும் சண்டை வந்து கட்டி உருண்டு விடுகிறார்கள்... என முடியும் கதை.
‘கம்பங்கொல்லை’ ஒரு ஜாலியான மூடில் எழுதிய கதை. ‘படகுத்துறை’ சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது அந்தக் கதை.
3
சில இயங்கு தளங்கள் அப்படி நம்மை வசிகரிக்கின்றன. அறிவழகனின் கதையை யோசித்து நான் ‘செம்புலப் பெயல்நீர்’ எழுதவில்லை. ஆனால் சாருவின் கதையில் நான் கண்ட அந்தச் சூழலில் பிரத்யேகத் தன்மை, அதைத் தொட்டு விரிந்ததே ‘கம்பங்கொல்லை’ கதையின் கரு. ஒரு கோபத்தில் தி.ஜா. போல எழுதிப் பார்த்திருக்கிறேன். ஒரு ரசனையில ஹெமிங்வே போல ஒரு சிறுகதை முயற்சி செய்திருக்கிறேன். ‘தாத்தாவின் பொய்கள்’ என்ற கதையின் முதல் சில பத்திகள் ஹெமிங்வேயின் பாணி இருக்கட்டும், என எழுதிப் பார்த்தது. சில மூத்த எழுத்தாளர்களை மறைமுகமாக விமரிசித்தும் கிண்டல் செய்தும் கதைகள் தந்ததும் உண்டு தான். அவைகளைக் கண்டு கொள்வதும் சிரமம் அல்ல. ஒரு சரித்திரக் கதையும் தந்தேன்.
சார்லி சாப்ளின் போல ஒரு கலைஞனைக் கலையுலகம் பார்த்தது இல்லை. அவரது திரைக்கதை அமைப்பு, இன்றளவும் அவரைத் தாண்டிப்போக முடியாத அளவு அத்தனை கச்சிதமானது. கதையும் காட்சி நகர்த்துதலும் அபார சுவாரஸ்யமானவை. சராசரி மக்களின் மேல் அவருக்கிருந்த கரிசனம். A MAN WITH GOLDEN HEART. திரைத்துறையில் அவரைப்போல வேறு யாருமே இல்லை.
இன்றளவும் காமெராவை வைத்து இத்தனை எளிமையாய் துல்லியமாய்க் கதை சொல்ல யாரால் முடிந்திருக்கிறது. காமெராவில் காட்டப்படும் அத்தனை பொருட்களும், அத்தனை பாத்திரங்களின் நடிப்பும் கதையை, பார்க்கிறவன் எடுத்துக் கொள்கிற அளவில் எத்தனையோ கிளைகளைப் பிரித்து விட்டு விடும். இந்நிலையில் ஒரே விஷயத்தைத் தொடர்ந்து கதையில் எப்படி நகர்த்திக் கொண்டு போவது என் சாப்ளின் அறிந்திருந்தார்.
ஒரு கை-ரிக்சாக் காரனின் கதையை அவர் இப்படிச் சொல்கிறார். மிகவும் குண்டான ஒருவன் அந்தக் கை-ரிக்சாவில் ஏறி யமர்கிறான். இழுக்க முடியாமல் இழுத்துச் செல்கிறான். போய்க்கொண்டிருக்கிறவனை முதுகில் தட்டிக் கூப்பிட்டு, முகவரியைக் காட்டுகிறார் அந்தப் பருத்த மனிதர். அந்த நேரத்தில் திரும்புவதே சிரமந்தான். அவன் அந்தச் சீட்டைப் பார்த்துவிட்டு தனக்கு அந்த இடம் தெரியாது என்று உதட்டைப் பிதுக்குகிறான். இதற்கிடையே அந்த சாலை சட்டென மேலேறுகிறது. ஏற்கனவே சிரமப்பட்டு அவரை இழுத்துச் செல்கிற அவன் இப்போது மேட்டில் அவருடன் ஏற வேண்டி யிருக்கிறது. அப்போது வழியில் ஒருவர் வருகிறார். அவரைப் பார்த்ததும் ரிக்சாவை நிறுத்துகிறார் குண்டு ஆள். மேடேறவே திணறும் அவன் வெகு பிரயத்தனப் பட்டு ரிக்சாவை நிறுத்துகிறான். அந்த நபரிடம் காகிதத்தைக் காட்டி அந்த முகவரி கேட்கிறார் குண்டு மனிதர். எனக்கு வழி சொல்லத் தெரியாது. ஆனால் இடம் தெரியும், என்கிறான் அந்த மனிதன். வா. ஏறி உட்கார்... என்கிறார் குண்டு மனிதர். அந்த மனிதன் ரிக்சாவில் ஏறி அவர் அருகில் அமர்கிறான். இப்போது இருவரையும் சேர்த்து அந்த மேட்டில் ரிக்சாவை இழுத்துப் போகிறான் அவன்...
திரைக்கான என்ன அற்புதமான காட்சி நகர்வுகள். நூறு வருடங்கள் தாண்டியும் சாப்ளின் அடைந்த உயரத்தை வேறு யாரும் இன்னும் நெருங்கவே முடியவில்லை.
THE KID - என்ற திரைப்படத்தில் அந்தச் சின்னப் பையனைக் கூட, நாயைக் கூட அத்தனை அற்புதமாய் வேலை வாங்கி யிருப்பார் அவர். அந்தப் படத்தில் ஒரு நகைச்சுவை உட்கதை. சாப்பாட்டுக்கு என்று சாப்ளினும் அந்தச் சிறுவனும் ஒரு வழி கண்டுபிடிப்பார்கள். சாப்ளின் சன்னல் கண்ணாடிகள் வாங்கி வைத்துக் கொள்வார். அவனும் பையனுமாய்த் தெருக்களில் போய் எந்த வீட்டில் வாசல் பார்க்க கண்ணாடி சன்னல்கள் இருக்கிறது என்று வேவு பார்ப்பார்கள். அதில் ஒரு வீட்டை அவர் முன்தினம் அந்தச் சிறுவனிடம் அடையாளம் காட்டுவார். அதன்படி மறுநாள் குறிப்பிட்ட நேரத்தில் அந்தச் சிறுவன் அந்த வீட்டு சன்னலில் கல் எறிந்து அந்த சன்னல்கண்ணாடியை உடைத்து விட்டு ஓடிவிடுவான். பிற்பாடு சாப்ளின் முதுகில் கண்ணாடிகளுடன் அந்தத் தெரு வழியாக வருவார். அந்த வீட்டுக்காரர் அவனை அழைத்து தனது உடைந்த சன்னல் கண்ணாடிகளை மாற்றச் சொல்லி பணம் கொடுப்பார். இது ஏற்பாடு.
அதன்படி ரெண்டு மூணு தடவை சரியாக எல்லாம் நடக்கும். அந்தப் பையன் கல் எறிவது, பிற்பாடு சாப்ளின் போய் கண்ணாடி மாற்றிவிட்டுப் பணம் பெற்றுக் கொள்வது. ஒருதடவை அந்தச் சிறுவன் கல் எறிய குறி பார்க்கிற நேரம் போலிஸ்காரன் ஒருவன் அந்தப் பக்கமாக தற்செயலாக வருவான். ஆகவே சிறுவன் அவனிடம் மாட்டிக்கொள்ளாமல் சமாளித்து போலிசைத் தவிர்க்க வேண்டி வரும். சாப்ளின் சிறுவன் இந்நேரம் கல் எறிந்திருப்பான் என்று அதே வீட்டுப் பக்கம் நம்பிக்கையுடன் போவான். அந்த வீட்டில் கண்ணாடி உடைபட்டிருக்காது. வீட்டுக்காரர் வெளியே நின்றிருப்பார். இவன் என்ன பார்க்கிறான், என்று அவருக்குத் தெரியாது. என்ன வேணும்?... என்று அவர் கேட்பார். இல்ல, உங்க வீட்ல கண்ணாடி எதும் மாத்தணுமா?.. என்று கேட்பான் சாப்ளின். தேவை யில்லை... என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே க்ளிங், என்று அவர் வாசல் சன்னல்கண்ணாடியில் ஒரு கல் வந்து விழும். தலைதெறிக்க ஓடுவான் சாப்ளின். ஒரு திருப்பத்தில் அவனோடு கூடவே சிறுவனும் சேர்ந்துகொண்டு ஓடுவான்.
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சிரிப்பு. இதே காட்சியை இப்படியே ‘சபாஷ் மீனா’ படத்தில் வைத்திருப்பாரகள் தமிழில். நான் இரண்டு படங்களையும் பார்த்திருக்கிறேன். இது நானே அறியாமல் என் மனதில் வெகு காலமாக, வருடங்களாக ஊறிக்கொண்டே கிடந்தது. இதேபோன்றதொரு இயங்கு தளத்தில் நானும் ஒரு கதை எழுதியாக வேண்டும் என்று தோன்றிக்கொண்டே யிருந்தது. பல வருடங்கள் கழித்து அந்தக் கதை எனக்கு அமைந்தது.
அண்ணன் மின்சார வாரியத்தில் வேலை பார்ப்பான். தம்பிக்கு வேலை கிடைக்காது. என்ன செய்ய என்று புரியாத தம்பி. அவனது நண்பனின் வீட்டில் மெழுகுவர்த்திகளைக் குடிசைத் தொழிலாகச் செய்து வருவதைப் பார்த்த தம்பி அதை ஒரு சைக்கிளில் எடுத்துப் போய் தெருத் தெருவாக விற்றுப் போவான். தெருவின் பலசரக்குக் கடைகளில் கூட கேட்பான். யாரும் வாங்க மாட்டார்கள். மாலை இருட்டுகிற நேரம் வரை வியாபாரம் பெரிதாக இராது. திடீரென்று அந்தத் தெருவில் மின்சாரம் போய்விடும். உடனே அதே தெருவுக்குள் ‘மெழுகுவர்த்தி’ என்று கூவிக்கொண்டே போவான் அவன். முதலில் வேண்டாம் என்று சொன்னவர்கள் வீட்டுக்கு வெளியே வந்து அவனைக் கூப்பிட்டு வாங்கிக் கொள்வார்கள். கடைக்காரன் தன் கடைக்கு வராமல் சனங்கள் அவனிடம் சரக்கு வாங்குவதை கவனித்து விட்டு அவனிடம் மிச்சம் இருக்கும் அத்தனை மெழுகுவர்த்திகளையும் கமிஷன் கழித்துக்கொண்டு அவனிடம் வாங்கிக் கொள்வான் கடைக்காரன். முழு சரக்கும் விற்றுத் தீர்ந்ததும் அவன் தெரு எல்லையில் இருந்த பி சி ஓ-வில் இருந்து அண்ணனுக்குப் பேசுவான். “அண்ணே மெயினை ஆன் பண்ணிருங்க.”
இந்தக் கதைகளை யெல்லாம் நான் சொல்லாமல் உங்களால் ஒப்பு நோக்கிக் கண்டுகொள்ள முடியுமா என்ன? அவற்றுக்கிடையே போதுமான கால இடைவெளி இருக்கிறது. என் இடையறாத தேடல் இருக்கிறது. இப்படி காத்திருப்பதும் கூட நல்ல அனுபவம் தான். இப்படி இன்னும் எத்தனை கதைமாதிரிகள் என்னுடன் இன்னும் கூடப் பயணிக்கிறதோ தெரியவில்லை. அவை ஒரு சந்தர்ப்பத்தில் வேறு கதையாக வெளியே வரும் போது தான், முன்னே இப்படியொரு கதையை நான் ரசித்ததே எனக்கு நினைவு வரும்.
இப்படியே என் கதைகளுக்கும் ரசிகர்களும், மறு கதைகளும் இருக்கிறது. நான் கவனியாத அளவு, என் கண்ணுக்கு வராமல் அவை இருக்கவும் கூடும். எழுத்து வாழ்க்கையில் தான் எத்தனை சுவாரஸ்யங்கள். நான் எழுத்தாளனாக அல்லாமல் வேறு எவ்வளவிலும் திருப்தியுற்றிருக்க மாட்டேன், என்றே நம்புகிறேன்.
storysankar@gmail.com
91 9789987842 / 91 9445016842


Friday, March 15, 2019

week 33

ஏழுவர்ண மாயவில்
எஸ்.சங்கரநாராயணன்

*
சமர்ப்பணம்
சாமர்செட் மாம்
*
‘குவிகம் இலக்கிய வாசல்’ என்கிற இந்த அமைப்பில் இந்தக் கூட்டத்தில் ‘எழுத்தாளருடன் கலந்துரையாடல்’ என்று என்னை எழுத்தாளனாக அழைத்திருக்கிறார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் எந்தக் கலைஞனுமே, தன் கலைக் கணங்களுக்கு அப்பால், அல்லது அவற்றுக்கு முன்னும் பின்னும் சாமானிய மனிதனே. அவன் கலைஞன் அல்ல. கணங்கள் அவனைக் கலைஞன் ஆக்குகிறது. ஒரு சாமானியனிடம் கலை பற்றிக் கேட்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு தொடர்ந்த பயிற்சியில் ஒரு சாமானியன் கலைஞனாக வடிவ இறுக்கம் பெறுகிறான், என்கிற பொது நம்பிக்கை வாழ்க. சாமானியனிடத்தில் இந்தக் கலைத் தெறிப்பு ஒரு திடீர்க் கிரண வீச்சு எனவே வெளிப்படுகிறது. அது எல்லாரிடமும் இருக்கிறது என்றே தோன்றுகிறது. கண்ணதாசனிடம் ஒருவர் பேச்சுவாக்கில் சொன்னாராம். “பாவம் அவர் ரொம்ப ஏழை. அவர் வேட்டியில் நெய்த நூலை விட தைத்த நூல் அதிகம்.”
கலை பற்றி அவன், கலைஞன் தொடர்ந்து சிந்தித்தபடி யிருக்கிறான். வாழ்க்கை பற்றிய பிரக்ஞையை, வாழாமல் அதற்கான பயிற்சியுடனேயே அவன் முடித்து விடுகிறானோ என்னமோ? கரையில் இருந்தபடி நீச்சல் பழகுதல் முடியுமா? இதனால் ஆய பயன் என்ன? மனைவி கடைக்கு அனுப்பினால் ஒன்றிரண்டு சாமான்கள் வாங்க மறந்து இரண்டு முறை போகிறான் அவன். சுற்றி யிருப்பவர்களின் ஆக இடைஞ்சல் இந்தக் கலைஞன். அவனை நாம் பாவம் என்றால், அவர்களின் நிலைமை?... பரிதாபம் என்று சொல்லலாம். கலைஞனின் மனைவி புண்ணியவதி.
சரி. கலைஞனுக்கு இருபத்தி நாலு மணி நேரமும் கலையை யோசிப்பதே நியதி. அதனால் கலையின் கூறுகள் பற்றி அவனுக்கு ஒரு யோசனை ஓடத்தான் செய்கிறது. ஆனால் அவை உண்மையாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவன் தன் கற்பனையிலான ஓர் உலகத்தை சிருஷ்டி செய்வது போலவே, கலை பற்றிய அவனது மதிப்பீடுகளையும் தனது கற்பனையே என நம்ப இடம் இருக்கிறது. உண்மைகள் அல்ல அவை. உண்மை போன்றவை. உண்மை போன்றவை உண்மைகள் ஆகா.
விக்கிரமாதித்தனின் ஒரு கவிதை இப்படிச் சொல்கிறது.
      இக்கரைக்கும் அக்கரைக்கும்
      அலைகிறான் ஓடக்காரன்
அமைதியாய் ஓடுகிறது நதி.
ஓடக்காரனின் அலைச்சலும் தேடலும், ஒரு காட்சியில், இட வலமானது என்றால், அவன் ஆராய்ச்சியும் தேடலும் சிறியது என்பது பொருள். நதி, அதாவது வாழ்க்கை நீள்வசமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் நதிமூலம் நதிமுடிவு யார் அறிவார்? அறிய முடியாதது அது. அதிலும் வாழ்க்கை அவரவர் அனுபவத்தில் இன்னும் இன்னுமாய்ச் சுருங்கிப் போகிறது. காற்றடைத்த பலூனைக் கையில் வைத்தபடி பிரபஞ்சத்தை அடக்கிவிட்டதாக அறைகூவல் விடுவதா?
எழுத்து என்பது சங்கு-வெள்ளம். அது மொத்த வெள்ளத்தின் கசிவு போலும் சிறு அளவே. வாழ்க்கை பரந்து பட்டதாய் இருக்கிறது. அதன் முப்பரிமாண பிரம்மாண்டம் அளவிடற் கரியது. தான் அளந்து விட்டதாய் ஒரு கலைஞன் இறுமாப்பு கொள்ள முடியாது. அப்படிக் கொக்கரிக்கிறவனை நம்பாதீர்கள். போலிகள் உண்மைகளை விட கன ஜோராய் உண்மையின் அடையாளம் பெற்றுவிட வல்லவை. சீனத் தயாரிப்புகள் போல.
அவன், கலைஞன் எதையும் அளவிட முயல்கையில், எத்தனைக்கு முயல்கிறானோ அத்தனைக்கு அவன் தன்னைப் பின்னிழுத்துக் கொள்ளவே நேர்ந்து விடுகிறது. நான் தோற்றதை உணரவே இந்த என் முயற்சி எனக்கு லபிக்கிறது. அமைதியற்ற மனம் தேடலைத் துவங்கி ஏமாற்றத்துடன் அடங்கிக் கொள்வதே அறிவான யாருக்கும் சாத்தியமா?
கற்றது எப்பவுமே போதவில்லை என்றிருக்கிறது. கைம்மண் ணளவு. கை பெரிதாய் இருந்தாலும் விடுபட்டவை அளப்பரியது. இது அவநம்பிக்கைக்குரியதா தெரியவில்லை. ஆனால் உண்மை அப்படித்தான் இருக்கிறது. அறிந்து கொண்டாப் போன்ற தோற்றம் மனதுக்கு மகிழ்ச்சி தருவதாய் இருக்கிறது. அப்படி நம்ப நமக்குப் பிடிக்கிறது. அது போதும் என அடங்கும் மனது சில கலைஞர்களுக்கு இருக்கலாம். எனக்கு இல்லை. ஒருவேளை நான் கலைஞனே இல்லையோ என்னவோ!
சமீப காலமாக எனக்கு ஒரு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. நானே எனக்கு எதிர்த்திசையில் நடந்து போகிற மாதிரி அடிக்கடி தோன்றுகிறது. இது கனவோ என்கிற குழப்பமும் எனக்கு இருந்தது. அல்லது இதுவரை குழம்பி யிருந்துவிட்டு, இப்போது தான் எனக்குத் தெளிவு பிறக்கிறதோ என்னவோ? ஆனால் என் யோசனைகள் தவிரவும் உலகம் தன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறதை நான் அறிகிறேன். இதுமாதிரி எத்தனையோ கோடி யோசனைகளை அலட்சியம் செய்து ஓடுகிறது அந்த நதி. இது கனவாக இருக்க முடியாது. உண்மையில் இந்த மயக்கத்தின் காரணம், உலகம் இந்த சமூகம் நிர்ணயித்த திசையில் அல்லாமல், அதாவது மானுடத்தின் எதிர்பார்ப்புக்கு அல்லாமல் அதுதான் எதிர்த்திசையில் போய்க் கொண்டிருக்கிறது. அதன் சீரற்ற தன்மைக்கு சீரானதொரு ஒழுங்கைத் தர மனிதன் போராடுகிறான். கலைகளின் பிறப்பிடம் அதுவே. கலைமூலம் அதுவே. அப்படியானால், அது வாழ்க்கைக்கு எப்படி நியாயம் செய்ய முடியும், என்பதே கேள்வி. அது அநியாயம் செய்வது என்பதே நியாயமான பதிலாக இருக்குமா?
அந்த எதிர்த்திசை நகர்வு என்பது இயற்கை. அது நமக்கு நல்லது அல்ல. தனி மனித அளவுகோல்கள் கூடாது. நாம் ஒரு சமுதாய மிருகம். சட்ட திட்டங்கள் நமக்கு உண்டு. விதிமுறைகள் உண்டு. ஒழுங்குகள் உண்டு. மனிதனை மானுடனாக்குதல் என்கிற செயற்பாட்டில், கூடி வாழும் பிரயத்தனத்தில் எத்தனையோ அபத்தங்களைத் தாண்டி அதை சாதிக்கிற வேகத்தில், எழுத்தாளன் சற்று குழம்பித்தான் போக வேண்டி யிருக்கிறது. சமூக நடப்புகள் உண்மையா? அதன் லட்சியங்கள் உண்மையா? இந்த இரண்டுக்குமான ஊடாட்டமே வாழ்க்கை. சதா இந்த இரு துருவங்களுக்கு இடையிலே அவன் தத்தளிக்கிறான்.
நவ கோள்களை கட்டங்களுக்குள் அடக்கும் முயற்சியே எழுத்து. முடியுமா என்ன?
தவிரவும் சமுதாயம் என்பது என்ன? கூடி வாழ்தல். சமுதாயத்தின் தூண்கள் கலைஞர்கள். அப்படி நினைத்துக் கொள்கிறார்கள் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். மேற் கூரையில்லாத தூண்கள் அவை. சமுதாய ஒழுங்குகளைக் கட்டமைப்பவன் ஒரு தனி மனிதனாக, கலைஞனாக இருக்கிறான். இதுதான் அங்கே சிக்கல். ஒருத்தன், ஆகவே இங்கே மற்ற எல்லாரையும் ஓரளவு நிர்ப்பந்திக்கிறவனாக ஆகிப் போவது தவிர்க்க முடியாதது. தத்துவங்கள்... தத்துவங்கள் என்பவை தாம் என்ன? நான் சொல்கிறேன், நீ கேள். அதுதானே? அடக்குமுறையும் அதிகாரமும் சாராத தத்துவம் ஒன்று இருக்கிறதா என்ன?
வாழ்க்கை அவரவர் பார்வை. அவரவர் அனுபவம். அது ஒருபோதும் பொது அனுபவம் என்று ஆக முடியாது. ஏனெனில், ஒரு வேடிக்கை போல, உனக்குச் சரி, மிகச் சரி என்று தோன்றுவதை, தவறு, மிகத் தவறு என்று சொல்லவும் இந்த லோகத்தில் ஆட்கள் ஜீவித்திருக்கிறார்கள். கடவுள் உண்டு, என்று ஒருவன் சொல்கிறான். மற்றவன் இல்லவே இல்லை, என்கிறான். உண்மை எது? பொய் எது? லோகம் உண்மையா பொய்யா? அது பொய் என்பது உண்மையா. பொய் அது என்பதும் பொய்யா... என்றால் அது இரண்டுமாக இருக்கிறது. எல்லாமாக இருக்கிறது. நாணயம் போன்றது அது. இரு பக்கங்கள் அதற்கு. பூவும் முகமும். சிலர் அதன் அந்தப் பக்கம் பார்க்கிறார்கள். சிலர் இந்தப் பக்கமாக அதைப் பார்க்கிறார்கள். இங்கே இரவு என்னும் போது, அங்கே அமெரிக்காவில் பகல். பூமியில் இது பகலா இரவா, என்ற கேள்விக்கு நமது பதில்கள் சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் அமையலாம். இரண்டுமே சரி. இரண்டுமே தவறு என வாதிடவும் வழி இருக்கிறது.
ஆகா தர்க்கம். தர்க்கம் வேடிக்கையானது. அது இரண்டு விதமாகவும் நம்மைக் கீறும் கத்தி போன்றது. எப்படியும் தர்க்கம் செய்யலாம். அதன் காரணம் இந்த பூமியில் நாம் புரிந்து கொள்கிற இருநிலைத் தன்மை என்று தோன்றுகிறது. கடவுள் பற்றிய ஒரு தர்க்கம் அறிந்திருக்கலாம். யாராலும் தாண்ட முடியாத ஒரு சுவரை கடவுள் கட்டுவாரா? - என்பது கேள்வி. இதற்கு எந்த பதிலும் சரியாக வராது. கட்டுவார், என்ற அடுத்த நிமிடம், அப்படி அவர் கட்டிய சுவரை அவரால் தாண்ட முடியுமா, என்று அடுத்த கேள்வி எழும். அவரால் தாண்ட முடிந்தால் அவர் கடவுள். ஆனால் அவர் யாராலும் தாண்ட முடியாத சுவரைக் கட்டியவர் ஆகார். அவரால் முடியாத காரியம் எதுவும் இல்லை, என்ற அவரது ஆகிருதி பங்கப்படும்.
ஒரு வேடிக்கையான தர்க்க உதாரணம் சொல்லி விடலாம். கணவனிடம் மனைவி குறைப் பட்டாளாம். “நான் எது சொன்னாலும் மறுத்தே பேசறீங்க?” அவன் யதார்த்தமாக “இல்லையே” என்றானாம். அவள் சொன்னாள். “பாத்தீங்களா. இப்பவும் மறுத்து தான் பேசறீங்க.”
கதவு பாதி திறந்திருக்கிறது, என்பதற்கும், கதவு பாதி சாத்தி யிருக்கிறது என்பதற்கும் காட்சி ஒன்று தானே?
ஒரு அரசனிடம் இரு ஜோசியர்கள் போயிருந்தார்கள். ஒருவன், அவர் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, “நீங்கள் இறக்கு முன் உங்கள் உறவினர்கள் எல்லாரும் இறந்து விடுவார்கள்” என்றானாம். அரசருக்குக் கோபம் வந்துவிட்டது. “யாரங்கே, இவனைச் சிறையில் அடையுங்கள்,” என்று உத்தரவிட்டாராம். அடுத்த ஜோதிடனுக்கு பயமாகி விட்டது. அவன் அரசர் ஜாதகத்தைப் பார்த்தால் முதல் ஜோதிடன் சொன்னது உண்மை, என்று அவனுக்குத் தெரிந்தது. அவன் சுதாரித்துக் கொண்டு, “அரசே, உங்கள் உறவினர்கள் எல்லாரையும் விட உங்களுக்கு ஆயுசு அதிகம்” என்று சொல்லி அரசரிடம் வெகுமதிகளும் பெற்றுத் திரும்பினான், என்று ஒரு கதை உண்டு.
ஆக ஒரு விஷயத்தை அறிதல், அதை வெளிப்படுத்தல் என இரண்டு நிலைகளிலும் எழுத்தாளனுக்கு சவால் இருக்கிறது. இதை எப்படி உள்வாங்கிக் கொள்கிறான் வாசகன், அது தனிப் பெருங் கதை. உண்மை. அது தர்க்கம் கொண்டு நிறுவப்பட முடியாதது. அவரவர் உணர்ந்தது உண்மை. ஹா ஹா, அவரவர் உணர்ந்தது அவரவர் அளவில் உண்மை. நமது சிந்தனை என்ற ஏணி கொண்டு எத்தனை உயரம் ஏறிவிட முடியும்? புரிந்தது கொஞ்சம். அதில் சொல்ல முடிந்தது அதனினும் சிறிது. அது மொழியிலும் எத்தனை பலவீனமாகி விடுகிறது சொல்லவந்த விஷயம். ஒன்றை வெளிப்படுத்தும் போதுதான் மொழியின் போதாமையை நாம் அறிய முடிகிறது. ஒரு சொல்லில் வெளிப்படும் பாவம், உணர்ச்சித் தெறிப்பு மொழியில், அது சாத்தியப்பட சாத்தியமே இல்லை.
வாழ்க்கை அதன்வழி அனுபவம், அதற்கு எல்லை இல்லை. அதை எல்லைக்குள் அடக்க, கட்டுப்படுத்த நினைக்கும் கணத்தில் அது திமிறி வெளியே ஓடி விடுகிறது. பலூனில் காற்று அடைப்பவர்களே கலைஞர்கள். பிடித்தது போக, அது ஒரு பொருட்டே அல்ல என்பது போல வெளியே இருக்கிறது வளி மண்டலம். வாழ்க்கை அப்படியாய் வெளியே நின்று நம்மை வேடிக்கை பார்க்கிறது.
சீசா பூதம் அல்ல அது. 
இலக்கியம் என்றால் என்ன? அது சாமானியன் இடத்தில் உள்ள அசாதாரணங்களைச் சொல்வது. அதேபோல அசாதாரணர்களிடத்திலான சாதாரணங்களை அடையாளங் காட்டுவது. இரண்டுமே இலக்கியம் தான், என்கிறார்கள். இன்னொரு விதத்தில் சொன்னால், சின்ன விஷயத்தை விளக்கமாகப் பேசும் சமத்காரம் இலக்கியமாகிறது. பெரிய விஷயத்தை ஆக எளிமையாய்ச் சொல்கிற கெட்டிக்காரத்தனம் இலக்கியம், என்றும் சொல்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் இயல்பாய் உள்ளதை இயல்பாய்ச் சொல்வது இலக்கியம் ஆகாது.
ஆனால் வாழ்க்கை இயல்பாய் மாத்திரமே உள்ளது. அதாவது, இலக்கியம் பொய் சொல்கிறது. இதைக் கொண்டாடுவதா?
வாழ்க்கையைக் கலையாக அடையாளப் படுத்தும் முயற்சியிலும் உலகளாவிய அளவில் நிகழ்ந்தவற்றை நாம் பார்க்கிற போது, மானுடப் பொது அறம் முன்னிறுத்தப் பட்டது. வாழ்க்கை எல்லார்க்குமானது, என எடுத்துத் தரப் பட்டது. அரசனின் கதையாக அது இருக்கலாம். செல்வந்தனின் கதையாக இருக்கலாம். ஒடுக்கப் பட்டவர்களின் கதை அங்கே இல்லை என்கிற விமரிசனம் சரியாகவும் இருக்கலாம். ஆனால் அவையும் இருந்தன அந்தக் காலத்தில், நாட்டுப்புறக் கதைகளாக, செவிவழிக் கதைகளாக அவை இருந்தன. பழமொழிகள் இருந்தன. சொலவடைகள் இருந்தன. உவமைகள் இருந்தன. ராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திர புராணம் என்று புழங்கி வந்த கதைகளிலும் எத்தனை கிளைக் கதைகள், உட் கதைகள் இருந்தன. அவை கதை சுவாரஸ்யத்திலும், செய்தியளவிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது, அப்படியானவை தான் காலங் கடந்து நம்மை வந்தடைய முடியும். உருவகக் கதைகள் இருந்தன. நான்கு எருதுகள் ஒன்றாய் மேய்கையில் சிங்கம் ஒன்று வேட்டையாட வருகிறது. அவை ஒன்றாகச் சேர்ந்து எதிர்க்கும் போது சிங்கத்தால் அவற்றை ஒன்றும் செய்ய முடியவில்லை. எருது ஒன்றைத் தனியே பிரித்து அது வேட்டையாடி விடும்... என்பது போன்ற கதைகள். வாழ்க்கை தர்மங்கள், ஒழுக்கங்களை, ஒழுக்கக் கேடுகளால் வந்த சீர்குலைவை அவை வலியுறுத்திப் பேசின.
உலகம் பூராவிலும் இப்படித்தான் இருந்தது இலக்கியம். லெ மிசரபிள்ஸ் - கதை யாரால் மறக்க முடியும்? தன் வீட்டில் தங்கி, அவரிடமே வெள்ளித் தட்டைத் திருடிப் போனவனைப் போலிஸ் பிடித்து அவரிடம் கூட்டி வரும்போது, அவர், தான் அதை அவனுக்கு அன்பளிப்பாக அளித்ததாகக் கூறி திருத்தும் பாதிரியார் கதை. ஷேக்ஸ்பியரின் ‘கிங் லீயர்’ நாடகத்தில், அரசனின் மூன்று பெண்களில், தன் மேல் மிகப் பாசம் கொண்டவள் யார், என்று அவன் யோசிப்பதாகக் கதை. அறத்தின் பால் நின்று பேசின அவை.
கதைகளின் களம் கடவுளர்களைக் கடந்து, அரசர்களைத் தாண்டி, செல்வந்தர்களின் கதை (சிலப்பதிகாரம்) மெல்ல சமானியனை நோக்கிப் பயணப் பட்டது. நமது சங்க இலக்கியங்களில் தனி மனித அடையாளங்களே இல்லாமல், தலைவன், தலைவி என்று இலக்கியம் இயங்கியது மிக வியக்கத் தக்க விஷயம் என்று சொல்ல வேண்டும். மனிதனைப் பொதுவாகப் பார்க்கும் பாங்கு, அறச் சிந்தனை மேலோங்கிய உச்ச நிலையாக இதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பாரம்பரியம் தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி காலங்கள் வரை வந்ததாக அடையாளங்கள் காட்ட முடிகிறது.
பிறகு வந்த யதார்த்த வாதம் தனி மனித ஒழுக்கங்களை மாத்திரம் அல்லாமல், ஒழுக்கக் கேடுகளை முன்வைப்பதும் இலக்கியம், என்று போக்குகள் மாற ஆரம்பித்தன. இக்கால கட்டங்களில் சமூகத்திலும் எத்தனையோ மாற்றங்கள். கிராமங்கள் இல்லை. நகர் மயமாதல் ஆரம்பம் ஆகிவிட்டது. தனி மனித அடையாளங்கள் ஊதிப் பெருக்கப் பட்டன. நரஸ்துதி காலம். வீடுகளில் திண்ணை வைத்துக் கட்டப்பட்ட காலம் விடைபெற்றுக் கொண்டது. தனித் தனி வீடுகள் மாறி அடுக்கக வாழ்க்கை. ஒரு வீட்டின் பிரச்னை அடுத்தவனின் தலையில் கட்டப்பட்டது. மேல் வீட்டில் குளியல் அறை ஒழுகினால் கீழ் விட்டுக்காரனுக்கு அவஸ்தை என்கிற காலம்.
மனிதனின் மதிப்பீடுகள் வீழ்ந்து பட்டன. சுயநலம் தலைவிரித்து ஆடுகிற காலம். அதற்குப் பல காரணங்கள். நுகர்வு கலாச்சாரம் என்று தனது பொருளை அடுத்தவர் தலையில் கட்ட கவர்ச்சியான விளம்பரங்கள். கவர்ச்சியான அதன் வடிவமைப்புகள். அதன் கவர்ச்சியான பொதிவுகள். இருள் ஆக்கிரமித்த பொழுதுகள் போய் வெளிச்சத்தின் ஆட்சிக்காலம். அது முன்னிலும் உயர்ந்த வாழ்க்கையை நமக்குத் தந்திருக்க வேண்டும்.
அறிவு கனன்று, சாதிகள் சமூகத்தின் மோசமான அம்சம் என்று அடையாளம் காணப்பட்ட அடுத்த நிமிடமே சாதிச் சங்கங்கள் துவங்கப் பட்டு விட்டன. சாதியை ஒழிப்பதான பேரிரைச்சலில் தங்கள் சாதிசார்ந்து மேலும் இறுகிப் போகிறோம் நாம். தனது பாதுகாப்பு வளையம் என்று ஒன்றை சாதியாலோ, வேறு எதோ சுயநலமான காரணத்தினாலோ உருவாக்கிக் கொண்டு, அப்படி நம்பி அடுத்தவரை சந்தேகமாகவும், எதிரியாகவும் பார்க்கும் போக்கு சமூக வாழ்க்கையில் எப்படி புகுந்து கொண்டது.
ஆன்மிகத்திலும் சாதியின் தலைவிரித்தாட்டம் புகுந்து கொள்ள முடிந்தது. அந்தந்த சாதிக்கு தனித்தனி சாமியார்கள். கீழ்த்தர நடுத்தர பணக்கார வர்க்கங்கள்... என்று வகைமாதிரிக்கு தனித் தனி சாமியார்கள். கார்ப்பரேட் சாமியார்கள். முதலாளி தொழிலாளி என்றிருந்த கம்யூனிச காலம் மாறிவிட்டது. இப்போது தொழிலாளிகளை நிரந்தரமாக வேலைக்கு வைக்கும் உத்தேசம் யாருக்கும் இல்லை. சப் கான்டிராக்ட் என்று விட்டு, அன்றன்றைய தேவைக்கு ஆள் எடுக்கிறார்கள். இந்த சப் கான்டிராக்டர், மேலிடத்துக்குத் தொழிலாளியாகவும், கீழிடத்துக்கு முதலாளிகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறான். கம்யூனிசத்துக்கு சவால் விட்டபடி. தொழிலாளிகளிடமும் முன்பு போன்ற வேலைப் பிடிப்போ அக்கறையோ இல்லை. இருக்கிறதா என்ன?
இந்த அவலங்களை யெல்லாம் பிரதிபலிக்கிற ஆவேசத்தில் எழுத்தாளன் எவ்வளவு தூரம் விலகி வந்திருக்கிறான், என்பது குறிப்பிடத் தக்கது. அந்தப் புரட்சி பாவனையால் வந்த விளைவுகள் என்ன? எழுத வேண்டாம் என்று முன்பு தவிர்க்கப் பட்ட விஷயங்கள் எல்லாம் தைரியமாகவும், கூச்ச நாச்சமின்றியும், தான் அடிமைத் தளைகளில் இருந்து விடுபட்ட தோரணையில், எல்லாம் வெட்ட வெளிச்சமாக்கப் படுகின்றன. வசைச் சொற்கள் இலக்கியத்தில் வழக்கு அடையாளம் எனப் புகுந்தன. பெண்கள் உடல்மொழிக் கவிதைகள் எழுத வந்தார்கள். செய்திகளே கூட இசைப் பின்னணியுடன், திரைப்படம் போல செய்திச் சானல்களில் வழங்கப் படுகின்றன. வக்கிரங்கள் பேயாட்டம் போடும் காலம். துரோகங்கள் சார்ந்து யாரும் அதிர்ச்சியோ ஆவேசமோ அடையாத அளவு சகஜப்பட்டு வருகின்றன. அதன் ஆக முக்கியச் சான்றுகள் என அரசியல்வாதிகள் வலம் வருகிறார்கள். லஞ்சப் புகாரில், ஊழல் வழக்குகளில் அவர்கள், வெற்றி என்கிறாப் போல இருவிரல் காட்டியபடி போலிஸ் வேனில் ஏறுகிறார்கள்.
சாக்கடைகளுக்கு வெளிச்சம் எதற்கு?
சுற்றுச் சூழல் மாசு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அதைச் சமாளிக்கிற திட்டங்களை யாரும் முன்னெடுக்கிறதாகத் தெரியவில்லை. எல்லாமே குழம்பிக் கிடக்கிறது இங்கே. ஒரு செயலை நியாயப்படுத்த ஒருவன் அதை மக்கள் முன்னால் ஒரு விதமாக முன்வைக்கும் போதே, அதை எதிர்த்து அடுத்தவன் பிரச்சாரம் செய்கிறான். எந்த நிகழ்வுமே, எந்த விஷயமுமே அதன் உண்மையான வீர்யத்துடன் மக்களிடையே வந்து சேர்வதே இல்லை. செய்திகள் குழப்பமான கருத்துகளையே பரப்புகின்றன. அப்படி அவை கவனமாகப் பார்த்துக் கொள்ளப் படுகின்றன.
முன்னொரு காலத்தில் அறம் இருந்தது. அது இலக்கியங்களில் வலியுறுத்தப் பட்டது. நியாயவான்கள் இலக்கிய அளவிலேனும் கௌரவிக்கப் பட்டார்கள். கொண்டாடப் பட்டார்கள். அதில் பத்துக்கு நாலு பேர் ஐந்து பேர் உண்மையான மனிதர்களாக இருந்தார்கள். அவர்கள் அப்படியே வாழவும் செய்தார்கள். சுற்றுச் சூழல் மாசு, நகர்மயமாதல், புவி வெப்பமயமாதல், நிலத்தடி நீர், பெட்ரோல், உணவுப்பொருட்கள் விளைச்சல் என குறைந்துகொண்டே வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டே தான் இருக்க முடிகிறது. தண்ணீரை அவரவர் தனித்தனி பாட்டில்களில் தனக்கு என பத்திரப் படுத்தி எடுத்துப் போகும் காலம். சமுதாயம் என்ற வார்த்தை அர்த்தமிழந்து போன காலம். சுயநலம் தவிர்க்க முடியாதது, என்று ஆகிவிட்ட காலம். சக மனிதன் மேல் அன்பும் பாசமும் குறைந்து போன காலம்.
எழுதி இதைச் சீர் செய்கிற அக்கறையற்ற இலக்கியம். யதார்த்தம் என்ற பெயரில் குப்பையைக் குப்பையாய்ச் சொல்வோம். இந்த எதிர்த்திசைப் பயணத்தை அறிந்திருக்கிறோமா நாம்? இனி அந்தவொரு காவிய காலம் இலக்கியத்தில் சாத்தியப் படுமா? இனி இலக்கியத்தின் எதிர்காலம் தான் என்ன?
பொது மனிதனை நோக்கி அடையாளப் படுத்தப் படாமல் இப்படி பெண் இலக்கியம், தலித் இலக்கியம் என்று உட்புகுந்ததால் அதன் பிரம்மாண்டம் சிறைப்பட்டு விட்டதா? எனில் இலக்கியம் பொது மனிதனை நோக்கி, சமுதாய மனிதனை நோக்கித் திரும்ப வரும் காலம் எப்போது? வருமா? அது சாத்தியமா?
அது தேவை இல்லையா?
அறம் வலியுறுத்தப் படாத போது, லட்சியங்கள் கேலியாடப் படுகிற போது இலக்கியத்தின் பாடுபொருள் தான் என்ன? அதல்லாது இலக்கியத்தின் பணி தான் என்ன? எழுத்தாளனுக்கு சமுதாயக் கடமைகள் என எதுவும் வேண்டாமா? இருந்தால் அது எள்ளி நகையாடப் படுமா? நுகர்வு கலாச்சார அதிகாரத்தின் அடியில் வாழ்க்கை அதன் தரம் உயர்வதான பிரமையில் கீழ் நோக்கிச் செல்வதை என்ன செய்வது? நம்மைப் பிடித்த பிசாசுகளை எப்படி விரட்டுவது? இவற்றின் முடிவு எப்படி?
மீண்டும் இயற்கையை வணங்கும் அந்த நாளுக்கு, கலாச்சாரத்தால் மனிதர்கள் ஒத்திசையும், இழைந்து பழகும் காலத்துக்குத் திரும்ப வேண்டும். இது எனது கனவு. வேர்களை நோக்கிய பயணம் இது. வேர்களற்று அந்தரத்தில் பிடுங்கி எறியப்பட்ட செடிகள் நாம். வெயிலில் வாடி உலர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.
பொய்யைச் சொல்லி உண்மையாகாதா என்று எதிர்பார்த்தது அந்தக் கால இலக்கியம். உண்மையைச் சொல்ல வந்தபோது இலக்கியம் அதன் தரத்தில் இருந்து சறுக்கலாகுமா? இலட்சிய வாதம் தாண்டி அலட்சிய வாதமா இது? அறிவில் கலப்படம் ஆபத்தானது. கவலைக்குரியது.
மார்ச் 10, 2019 அன்று ‘குவிகம் இலக்கிய வாசல்’ அளவளாவல் நிகழ்ச்சியின் எழுத்தாளராக நான் கலந்துகொண்டு வாசித்தளித்த கட்டுரை இது. எனது கதைகளைப் பற்றி நானே பேச வேண்டாம், என்றிருந்தது. நம்மைப் பற்றி நாமே என்ன பேசுவது? அது மற்றவர் வேலை அல்லவா, என்றிருந்தது. ஆகவே உரையில் என் கதைகளைப் பற்றிய குறிப்புகள் இல்லை. ‘பழமை போற்றும்’, நிகழ் காலத்தைத் தூற்றும் கட்டுரை,  என்கிற மாதிரி இது அமையாது கவனப்பட்டேன். இரண்டு மணி நேரம் போனதே தெரியாத அளவு சிறப்பாக எல்லாரும் கலந்துரையாடினார்கள் என்னோடு. உவப்பத் தலை கூடி உள்ளப் பிரிந்தோம். கட்டுரையில் விட்ட பகுதி, ரகசியப் பகுதி ஒன்று. இலக்கியத்திலும் இப்படி சாதிகள் போன்ற குழுக்கள் இருக்கின்றன என்பதே. இவர்கள் எழுத்தை அவர்கள் படிக்கவும் மாட்டார்கள். கொண்டாடப் போவதும் இல்லை. வேத்து முகம் காட்டும் போக்கு இருக்கிறது. அதுவும் நிகழ்காலத்தில் ஏற்பட்ட மாற்றம் எனப் பதிவு செய்ய நினைத்து, வேண்டாம் என தவிர்த்து விட்டேன். அது அப்படித்தான் தமிழில் இருக்கும் அல்லது இருக்கிறது.
*
storysankar@gmail.com
9789987842 / 9445016842

Friday, March 8, 2019



part 32
பின்கதைச்
சுருக்கம்
எஸ். சங்கரநாராயணன்
 *
வாசித்துக் கொண்டே வரும் போது அநேகப் படைப்புகளை, புத்தகங்களைக் கண்ணோட்டிக் கடந்து போகிறோம் என்றாலும், சில படைப்புகளைக் கண் விரியப் பார்க்க நேர்ந்து விடுகிறது. பொற்கணங்கள் அவை. அந்த எழுத்தாளனின் பொற்கணமாகவும் அது அமைந்து, அதை அவன் கைமாற்ற நேர்ந்திருப்பதை ஓர் உவகையுடன் உள்ளங்கையில் ஏந்தி அழகு பார்க்க முடிகிறது நம்மால்.
நான் ‘தருணம்’ என ஒரு சிறுகதைத் திரட்டு கொண்டு வந்திருக்கிறேன். வாழ்க்கையில் சில தருணங்கள் அமைந்து விடுகின்றன. அந்தத் தருணங்களுக்கு முன், அந்தத் தருணங்களுக்குப் பின் என நாம் நம் வாழ்க்கையையே திரும்பிப் பார்க்கிற அளவில் ஓர் ஆழமான பாதிப்பை அத் தருணங்கள் வழங்கிச் செல்கின்றன. நிவேதிதா பதிப்பகம் வெளியிட்ட சிறுகதைத் திரட்டு அது.
அவை தருணங்கள் சார்ந்த கதைகள். இங்கே நான் சொல்ல வருவது வேறு. அந்தத் தருணங்களின் மூலமோ, அல்லது எழுத்தாளன் தன் பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தினாலோ, எழுத்துப் பயிற்சியிலோ, சிந்தனை நீட்சியிலோ, சில சுய கேள்விகளையோ, அல்லது பொதுவான கேள்விகளுக்கான பதில்களையோ திடுமெனக் கண்டடைகிறான். சில கேள்விகளைத் தானே கேட்டுக்கொண்டு அதுசார்ந்து ஒரு யோசனைவட்டம் அடித்துக் கரையேறி வருவதாகவும் அந்த முயற்சி இருக்கலாம். அந்த எழுத்தாளன் தனியே முயற்சி செய்யாமலேயே அவன் கதையில் நமக்குத் தற்செயலாக, வாசக அனுபவமாகக் கிடைப்பதும் உண்டு. அப்படிப் பட்ட ‘கண்டைந்த இடங்களை’ வாசக உலகம் ஆச்சர்த்துடன் குறித்துக் கொள்கிறது.  
எனது ‘தொட்ட அலை தொடாத அலை’ நாவலே இப்படியொரு சிந்தினையின் நீட்சி தானே? பிறக்கும் போது ஒரு குழந்தை எந்த அடையாளமும் அற்று பிறக்கிறது. சாதியோ மதமோ உறவுகளோ... எதுவும் இல்லை. என்றானால் அவனது மரணத்தை அப்படியே எந்த அடையாளமும் அற்று விட்டுவிட வேண்டாமா?... என்று என்னில் தோன்றிய கணத்தில் ‘தொட்ட அலை தொடாத அலை’ நாவல் மெல்ல உருப் பெற்றது.
ஜெயமோகனின் ‘வாரிக்குழி’ வாசித்த அந்த நிமிடம் மனம் மொட்டவிழ்ந்தாப் போன்றிருந்தது. மனிதனின் தேவைகளுக்கு எனப் பழக்கப்படுத்தப் பட்ட யானையைத் திரும்பக் காட்டுக்குள் விட்டுவிடுகிறார்கள், அதன் மன ஆசுவாசத்துக்கு. அது மனிதனின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டது என அதற்கு நினைவுறுத்த, அது அதை மறக்காமல் இருக்க, அதன் கழுத்தில் மணி கட்டப்பட்டு அனுப்பி வைக்கப் படுகிறது.ஆனால் காட்டில் தன் சுதந்திரத்தை உணர்ந்த யானை, அந்த சுதந்திரத்தை இழக்க விரும்பாமல் அந்த மணியை எப்படியோ அறுத்து எறிந்துவிட்டு காட்டுக்குள் பதுங்கிக் கொள்கிறது. அதன் பாகன் அதைத் தேடி வருகையில் அந்த மணி பாகனின் காலில் தட்டுகிறது. அவனுக்கு யானையின் தற்போதைய நிலை புரிகிறது. இந்த சமயத்தில் யானையின் முன் அவன் ஆணைகள் எடுபடாது. அவனையே அது தாக்கி விடும், என்று தெரிகிறது. அந்தக் காட்டில் யானையைத் தேடி அவன் போகிறதும், அதை தன் வசியப்படுத்தி, மிரட்டி, அடிமைப்படுத்தி அதன் மேல் அமர்ந்து ஊர் திரும்பவுதுமான கதை. மனிதன் மகத்தானவன், என்ற தோள்ப் பூரிப்பு தந்த கதை அது. இப்படி உள்ளீடான மதிப்புகள் தற்செயலாகவோ, கவனமாகவோ கதையில் காணக் கிடைக்கும் போது அந்தக் கதை, வயசுக்கு வந்த பெண் போல தனி மினுமினுப்பு காட்டுகிறது.
எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ‘தி ஓல்ட் மேன் அன் தி சீ,’ அதேபோலவே மனிதன் மகத்தானவன், என உரத்துக் குரல் எழுப்புகிற கதை. வயதான பெரியவர் ஒருவர்தொடர்ந்து எண்பது நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்கப் போகிறார். ஒரு மீன் கூட அவருக்குக் கிடைக்கவில்லை. எண்பத்தியொன்றாவது நாளும் போகிறார் என்பது கதை. அன்றைக்கு அவர் தூண்டிலில் மீன் ஒன்று சிக்குகிறது. அவரது தோணியை விடப் பெரிய மீன் அது. தூண்டிலில் அதன் கனத்தை அவர் உணர்கிறார். தனி ஒருவராக அவர் அதைப் பிடிக்க வேண்டும். பயம் சிறிதுமற்ற மீனாக அது இருக்கும். அது கலவரப்பட்டால், கோபப்பட்டால் வாலால் ஒரே அடியில் படகைக் கவிழ்த்து விடும். அது திகிலடையாமல் மெல்ல மெல்ல அதை நீரின் மேல்மட்டத்துக்கு வரவழைக்க அவர் முயல்கிறார். தொண்டையில் முள் சிக்கிய மீன் மிக அமைதியுடன் தன் பாட்டுக்கு நீந்திப் போகிறது, படகை இழுத்துக் கொண்டு.
அதை நிறுத்த அவரால் முடியாது. மீனோடு அவரும் படகுடன் அது போகும் வழியில் கூடவே இரண்டு நாட்கள் பயணிக்கிறார். மெல்ல மெல்ல ஆது சோர்வடைகிறது. அதன் நீந்து வேகம் மட்டுப்படுகிறது. சிறிது சிறிதாக அதை நீர்மட்டத்துக்கு, மேலே மேலே வரவழைக்கிறார். பிறகு அதைக் கலவரப் படுத்தி அது விஸ்வரூப தரிசனம் போல நீரில் மேலே துள்ளுகையில் அதன் நுரையீரலுக்கு வேல் பாய்ச்சி அதைக் கொல்கிறார். இரண்டு நாட்களாக பெரும் கடலும் அந்த மீனுமாக, அவரது நண்பனாக அவருடன் பயணித்த அந்த மீன். பயம் சிறிதுமற்ற அந்த மீனைக் கொன்றதில் அவர் வருந்துகிறார்.
இறந்த மீனைப் படகில் பக்கவாட்டமாய்க் கட்டிக்கொண்டு அவர் கரை நோக்கித் திரும்புகிறார். வரும் வழியில்  தண்ணீரில் சிந்திக் கொண்டே வரும் ரத்த வாசனைக்கு ஏழு சுறாக்கள் புறப்பட்டு வந்து வந்து அந்தப் படகில் கட்டப் பட்டிருக்கிற மீனை வேட்டையாடுகின்றன. அவர் அத்தனை சுறாக்களையும் தனியொருவனாகச் சமாளிக்க வேண்டி யிருக்கிறது. அவை ஒவ்வொன்றும் தாங்கள் அதைக் கடித்து அள்ளியெடுத்தது போக படகின் பக்கவாட்டத்தில் இப்போது அந்தப் பெரிய மீனின் வெறும் எலும்புக் கூடு மாத்திரமே மிச்சம் இருக்கிறது. உடல் தளர மனச் சோர்வுடன் கரை அடைகிறார் பெரியவர்.
மனிதன் வெற்றி கொள்ள முடியாதவன், என அழுத்தம் திருத்தமாகச் சொல்லிச் செல்கிறார் ஹெமிங்வே. இதை நான் தமிழில் மொழிபெயர்ப்பு  செய்தேன். (பெரியவர் மற்றும் கடல்.)
ஹெமிங்வேயின் இந்த, ‘மனிதனின் போராட்டம்’ மற்றும், ‘மனிதன் மகத்தானவன்’ என்கிற அடிநாதத்தை வேறு விதமாக தன் மனசில் எதிரொலியாகக் காண்கிறார் யான் மார்ட்டல். (கனடா.) அவரது ‘லைஃப் ஆஃப் பை’ கதை, இதே போன்றதொரு நெருக்கடியினைக் கையில் எடுத்துக் கொண்டு, ஆனால் வேறு செய்தி சொல்கிறது.  கூண்டில் புலி ஒன்றை ஏற்றிக்கொண்டு பயணிகளுடன் கிளம்பும் கப்பல் ஒன்று விபத்தாகிறது. கப்பலில் இருந்து ஒரு படகில் தப்பித்துப் போகும் ஒரு சிறுவன். எதிர்பாராமல் அவனுடன் அதே படகில் வரும் அந்தப் புலி. இருவருக்குமான, நீயா நானா, போராட்டமாகக் கதை சொல்கிறார் மார்ட்டல்.
ஹெமிங்வேக்கு மீன். இவருக்குப் புலி. அது கடலில் கூடவே பயணம் வருகிறது. இங்கே புலி படகில் கூடவே வருகிறது. ஆனால் மார்ட்டல், அந்தப் புலி சதா சர்வ காலமும் இவனை விழிப்புடன் இருக்க வைத்து. இவனுக்கான உயிராசையையும், போராட்டத்தையும் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருக்கிறதால் தான் இத்தனை காலம் தாக்கு பிடித்து, அவனால் கடைசியில் தப்பிப் பிழைத்துக் கொள்ளவும் முடிகிறது... என்று சொல்கிறார். எந்த சவாலும், அதை எதிர்கொள்கிற நெருக்கடியில் மேலும் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது. அந்தப் புலி இல்லாத அளவில் இவனுக்கு, தன்னளவிலேயே உயிர் பிழைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் பற்றி அவநம்பிக்கை மேலிட்டு விடும், என்கிறார் மார்ட்டல். அது ஒரு பார்வை தான். ‘லைஃப் ஆஃப் பை’ அருமையான திரைப்படமாக வந்துள்ளது. அநேகம் பேர் பார்த்திருக்கவும் கூடும்.
முன்பு ஓரிடத்தில் குறிப்பிட்டது போல, வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதிலுகள்’ ஓர் அருமையான கதை.  சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்கிறார் பஷீர். தோட்ட வேலை தருகிறார்கள் அங்கே அவருக்கு. சிறைக் கதவுகளுக்குள்ளே நாள் பூராவும். தனிமை அவரை வாட்டுகிறது. ஒரு சமயம் அவர் ஒரு ரோஜா நட்டு வளர்த்து வரும் செடிக்குத் தண்ணீர் ஊற்றுகையில், அதை ஒட்டிய மதில் சுவருக்கு அப்பாலிருந்து கேட்கிறது ஒரு சிரிப்புச் சத்தம். பெண் ஒருத்தியின் சிரிப்பு. மதிலுக்கு அந்தப் பக்கம் பெண்கள் சிறை என அவர் அறிகிறார். அந்தச் சிரிப்பு அவரை சிலிர்க்க வைக்கிறது. அந்தப் பெண்ணோடு இங்கிருந்து அவர் உரையாடுகிறார். அவளும் இந்தச் சிறைவாசத்தின் ‘வாசனையற்ற’ தனிமையை உணர்ந்தவளாக இருக்கிறாள் போலிருக்கிறது. இருவரும் குறிப்பிட்ட நேரத்தில் அங்கே வருவதும் ஒருவருக்கொருவர் வேடிக்கையாகவும் காதல் வயப்பட்டும் பேசிக் கொள்கிறார்கள். ஒருத்தரை ஒருத்தர் முகமே பார்க்காத காதல். எப்படியாவது அவளை சந்தித்து விடவேண்டும் என்று அவர் அலைபாய்கிறார். அவளுக்கும் அப்படியொரு வேகம் இருக்கிறது. ஆபாசம் விரசம் எல்லாம் கலந்து அவர்கள் விரகதாபத்துடன் நெருக்கமாகப் பேசிக்கொள்கிறார்கள். எப்படியாவது ஒருத்தரை ஒருத்தர் சந்தித்து விட வேண்டும், என அவர்கள் தவிக்கிறார்கள். சிறை டாக்டர் வருகிற ஒரு நாளில் நீ டாக்டரைப் பார்க்கிற சாக்கில் வா, நான் இங்கேயிருந்து டாக்டரைப் பார்க்கிற சாக்கில் வருகிறேன். நாம் சந்தித்துக் கொள்ளலாம்... என்கிறார் அவர். ரெண்டு பேருமே அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். சரியாக டாக்டர் வரும் நாளுக்கு முந்தைய மாலை அவரை விடுதலை செய்து விடுகிறார்கள். முடிகிறது கதை.
எனக்கு மிகவும் பிடித்த கதை இது. ஒரு திருப்பம். நல்ல கதைஞனாக இது இப்படித்தான் முடியும், என யூகிப்பது கடினம் அல்ல. ஆனால் இதில், பஷீர் அறிந்திருந்தாரா தெரியாது, இதன் மையப்புள்ளி, வேறொரு உரத்த கேள்விக்கான பதில், என்று எனக்குத் தோன்றியது. காதல் என்பது உடல் சார்ந்ததா, மனம் சார்ந்ததா, என்கிற கால காலமான கேள்விக்கு, இந்தக் கதை, காதல் உடலின் காம வேட்கையே, என அடித்துச் சொல்கிறது.
இதை வாசித்து ரொம்ப காலம் அசை போட்டபடி யிருந்தேன். ஹெமிங்வேக்கு யான் மார்ட்டல் போல, நான் இந்தச் சூழலை வேறு விதமாகப் பயன்படுத்திக் கொண்டேன். ‘ஜெயில்’ என்று நான் ஒரு தொலைக்காட்சித் தொடருக்கான கதை எழுதினேன். கே. பாலச்சந்தர் சாருக்குப் பிடித்திருந்தது. அதைச் செய்யலாம், என்று கூட ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்தார். கைகூடாமல் போய் விட்டது.
பஷீர் கடுமையான சிறையின் உயர்ந்த தனிமைப்பட்ட மதில்களுக்குள்ளே ஒரு மென்மையான காதல் கதையைச் சொல்லலாம், என எழுதிக் காட்டினார். அதேபோல கடுமையான இந்த சிறைச் சூழலில், ஜெயில் வார்டனுக்கும், சிறைக் கைதி ஒருவனுக்குமான நட்பு பற்றி நான் கதை சொன்னேன்.  வேறு யாராவது வந்தால் அந்தக் கதையை திரைக்காக முயற்சி செய்யலாம்.
அந்தக் கதை பற்றி நான் கே. பாலச்சந்தர் சாரிடம் பேசியபோது, கதையின் சரடு எல்லாம் கேட்டபடி, புன்னகையுடன் ஒரு அற்புதமான விஷயம் சொன்னார். கதை இதே இருக்கட்டும். கதையில் ஒரு சுவாரஸ்யம், முடிச்சு நாம தனியா வெச்சிக்கலாம். அந்த ஜெயிலுக்கு ஒரு கர்நாடக சங்கீதப் பாடகர் கொலை செய்துவிட்டு உள்ளே வருகிறார். என்ன ஆச்சி அவருக்கு, ஏன் அப்படியொரு மனிதர் கொலைகாரராக மாறினார், என்று விட்டு விட்டு ஒரு கதை இது கூட நாம சொல்லலாம்... என்றார். அதுதான் பாலச்சந்தர். ‘வானமே எல்லை’ படத்தில் நான்கு இள வயசுப் பிள்ளைகள் தற்கொலை முடிவோடு ஒரு காரில் வீட்டைவிட்டு ஒடிவிடுவார்கள். அவர்களுக்குக் கையில் காசு இல்லாமல் சாப்பாட்டுக்கே திண்டாடுவார்கள். ஆனால் அவர்கள் காரின் டிக்கியில் கட்டுக் கட்டாய்ப் பணம் இருக்கும். அவர்கள் கூடவே காரில் அதுவும் பயணம் செய்யும், என்று ஒரு முடிச்சு போடுவார் கே. பாலச்சந்தர். இந்த முடிச்சை திரையரங்கில் எத்தனை அருமையாக ரசித்தார்கள்...
அவர் அந்த கர்நாடக சங்கீதப் பாடகர் பாத்திரத்தைச் சொன்னவுடன், நான் சொன்னேன். நம் கதாநாயகன் - ஜெயிலுக்கு வந்தவன், ஒரு மின்சார ரயில் டிரைவர் சார். ஜெயில் வளாகத்துக்கு அப்பால் சென்னையில் ரயில் ஓடுகிறது. அந்தச் சத்தம் கேட்கும் போதெல்லாம் இவன் கதையை ஃப்ளாஷ் பேக்காகச் சொல்லலாம்... என்றேன் நான்.
ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியர்’ போன்ற  காவியங்களே, ஹென்ரிக் இப்சன் போன்ற நாடகாசிரியர்களின் கதைகளே இப்படி ஒரு அழுத்தமான கருத்துக் களத்துடனான ‘படுதா’வை விரித்து நம் முன் வரைந்து காட்டுகின்றன,என்று சொல்லத் தோன்றுகிறது. கதைகளில் நாடகத்தன்மை, என இதை எடுத்துக் கொள்ளவும் முடியும்.
கருத்து-அழுத்தக் கதைகள்.
2
ஒரு நவின நிலையில், கதையில் குறிப்புகளாக இந்த ‘தன் மதிப்பீட்டுப் பார்வை’ பொதிந்த கதைகள் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சம்பவங்களாக, அதன் நாடகத்தன்மையைக் குறைத்து இவை கதை விவரங்களாகக் கிடைக்கின்றன. கதைகளுக்கு இவை ஓர் ஓவியத்தன்மை தருவதாக அமைக்கப் படுகின்றன என்று பொதுவாகக் குறிப்பிடலாம். பூமணியின் கதைகள் ரத்தக் கதுப்புகளாக காணக் கிடைக்கின்றன. உணர்ச்சிகளின் தேன்கூட்டுத் தன்மை அதற்கு உண்டு. தன் கருத்து அடிப்படையிலான ஆனால் அதை சாமர்த்தியமாக மறைத்த கதைகளாக பூமணி கதைகள் விளங்குகின்றன. வண்ணதாசனை வேறு மாதிரி பார்க்கத் தோன்றுகிறது. வண்ணதாசன் தன்னை தாராளமாகவே காட்டிக்கொண்டபடி கதைகளில் இயங்குகிறார். கருத்துகள் என தனியே அவற்றில் தேடினால் தான் ஒருவேளை அடைய முடியும். ரசனையின் பாற்பட்ட, அனுபவ உலகம் அது. இயற்கையான யதார்த்தமான பாத்திர நகர்வுகள். சாதாரண விஷயங்களில் அசாதாரண அனுபவத்தைத் தர அவர் முயல்கிறார். உணர்வு உச்சம் என்று தனியே எழுச்சி காணாமல் வெட்டிவேர் வாசனை கிளர்த்தும் கதைகள் அவை. வாசகர்கள் ஒருவேளை அந்த நதியடி மண்ணைத் தொடாமலேயே நீந்திப் போய்விடக் கூடிய வாய்ப்புகளும்  அங்கே இல்லாமல் இல்லை.
பூமணியின் கதைகள் அரசியல் பேசவே செய்கின்றன. குறைந்த பட்சம் அரசியல் சார்ந்த குறிப்புக்களை வெகுளித்தனமான உரையாடல்களாக அவர் முன்வைப்பார். சாமானியனின் கதைகள் என்ற அளவில் இங்கே அவற்றைக் குறிப்பிட நேர்கிறது. வண்ணதாசனின் அடையாளம் வேறு.  வண்ணதாசன் கதைகள் சமூக அமைப்பை ஒருக்காலும் முரண்டியது இல்லை. வாழ்க்கையை அதன்போக்கில் அப்படியே ஏற்றுக்கொண்டு, அது அனுமதிக்கும் சந்தோஷங்களில் துக்கங்களில் திளைப்பதை வாழ்வின் அனுபவங்களாகத் தருபவை அவை. பொதுக் கருத்துகளின் எதிர்க்குரல் அங்கே எதிர்பார்க்க முடியாது. பெண்களுக்கு அங்கே புழங்கு பரப்பு சுருங்கித் தான் இருக்கிறது. அவர்கள் அதில் முகம் வாடாமல் புன்னகை சிந்துகிறார்கள். அல்லது அந்த துக்கத்தை தங்களுக்குள்ளேயே, நீல கண்டனைப் போல விழுங்கிக் கொள்கிறார்கள். அவளுக்கும், அவர்களுக்கும் சேர்த்து வண்ணதாசன் துக்கப் படுகிறதாகவே அவை அமையும்.
போர்வை - என ஒரு சிறுகதை சட்டென நினைவுக்கு வருகிறது. தன் வீட்டுக்கு என்று அவன் புதிதாய்ப் போர்வை வாங்கி வருவான். மனைவிக்கு அதில் ரொம்ப சந்தோஷம். இன்றைக்கு ராத்திரி இதைப் போர்த்திக் கொண்டு அதன் கதகதப்புடன் உறங்கலாம்,. என நினைத்திருப்பாள். அந்த வீட்டுக்கு திடீரென்று விருந்தினர் வந்து அன்றிரவு அவர்களுடன் தங்குவார். அவருக்கு அந்தப் புதிய போர்வையை கணவன் எடுத்துக் கொடுத்து விடுவான், என கதை முடியும்.
சமூகம் சார்ந்த விசாரணைகளை ஒருபோதும் வண்ணதாசன் நிகழ்த்தியதே யில்லை. அவர் பாணி அது அல்ல. அது அல்லாத பாணி அவருடையது. சதா சிறகுகளைக் கோதிக்கொண்டே யிருக்கும் வண்ணதாசனின் பாத்திரங்கள் ஒருபோதும் கிளம்பிப் பறப்பது இல்லை,என்கிற ரீதியில் சுந்தர ராமசாமி குறிப்பிட்டதாக முன்பு வாசித்தேன். ஆ மாதவனின் சிறுகதைகள் - மொத்தத் தொகுப்பாக இருக்கலாம்.
வண்ணதாசனின் கதைகளில் ‘நடேசக் கம்பர் மகனும் அகிலாண்டத்து அத்தானும்’ என்கிற ஒரு சிறுகதையை நான் எனது திரட்டு ஒன்றுக்காகத் தேர்வு செய்தேன். (பரிவாரம் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பக வெளியீடு.) அவரைச் சந்தித்தபோது அவர் எனது இந்தத் தேர்வில் அக மகிழ்ந்தார். அதை நான் தேர்வு செய்த காரணம் சொன்னபோது அவருக்கே ஆச்சர்யம். ஆனால் அவரது வழக்கமான பாணிக் கதையே இது.
டவுண் பஸ்சில் இருந்த கூட்டத்தில் அவன் மனைவி முன்வாசல் வழியே ஏறி, பஸ்சில் முன்பக்கமாக நிற்கிறாள். அந்தக் கூட்ட நெரிசலில் பஸ்சின் பின்வாசல் பக்கமாக அவன் ஏறி நிற்கிறான். இருந்த கசகசப்பும் பரபரப்புமான சூழலில் அடுத்த நிறுத்தத்தில் ஒரு நாதஸ்வரக் காரரும், தவில் காரரும் ஏறுகிறார்கள். இருக்கிற ஆட்களுக்கே இடம் இல்லாத நிலையில், தவிலையும் உள்ளே அடைக்க வேண்டி யிருக்கிறது. அவன் அந்த நாதஸ்வரக் காரரைப் பார்த்தால், அவர் வேறு யாருமல்ல. அவனுக்கும் அவளுக்கும் கல்யாணம் நடந்த போது, அவர்கள் கல்யாணத்தில் நாதஸ்வரம் வாசித்தவர் அவர்தான். அவனுக்கு ரொம்ப சந்தோஷமாகி விடுகிறது. நெரிசலில் மெல்லஅவர்பக்கமாகப் போய், என்னைத் தெரியுமா, என்கிறான். அவருக்குத் தெரியவில்லை. அவன் தனது கல்யாணத்துக்கு அவர் நாதஸ்வரம் வாசித்ததைச் சொல்கிறான். அப்படியா, எனக்கு நினைவு இல்லை தம்பி. நல்லாருக்கீங்களா... என பிரியமாய்ப் புன்னகை செய்கிறார்.
அவனுக்கு அந்த சந்தோஷத்தை உடனே மனைவியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் போலிருக்கிறது. பஸ்சின் பின்பகுதியில் இருந்து உன்னியும் எட்டியும் அவளைப் பார்க்க முடிகிறதா என்று தேடுகிறான். அவளது முகம் தெரிகிறது. அந்தப் பக்கம் திரும்பி நின்று கொண்டிருக்கிறாள். இவன் பக்கம் திரும்பவே இல்லை அவள். இரண்டு நிறுத்தங்களில் அவர், நாயனக் காரர் இறங்கிப் போய்விடுகிறார். தனது நிறுத்தத்தில் அவனும் அவளும் கிழே இறங்குகிறார்கள். தான் நாதஸ்வரக் காரரைப் பார்த்ததை அவன் அவளிடம் சொல்ல வருமுன் அவள் முகம் எல்லாம் சந்தோஷமாய்ச் சொல்கிறாள். “எங்க அகிலாண்டத்து அத்தான் பஸ்சில் வந்திருந்தாரு. எதோ வேலையா வந்திருக்காராம். சின்ன வயசில் எப்பவுமே என்னைத் தூக்கி வெச்சிட்டே திரிவாரு. எனக்குன்னு சாப்பிட எதாவது வாங்கிட்டு வருவாரு...” என தன் கடந்த கால சந்தோஷங்களை நினைவு ஊற ஊற பேசிக்கொண்டே வருகிறாள். அகிலாண்டத்து அத்தானானால் எனன, நடேசக் கம்பரானால் என்ன, அவரவர் சந்தோஷம் அவரவர்க்கு இருக்கத்தானே செய்கிறது... என்று முடிக்கிறார் வண்ணதாசன்.
நான் சொன்னேன். “அருமை வண்ணதாசன். இந்தக் கதையில் முதல் முதலாக பெண், அவளுக்கென்று ஒர் அழகான இதயம், உணர்ச்சிகள், சந்தோஷங்கள். அவளுக்கான சுதந்திரமான முழு உலகத்தையும் நீங்கள் தானறியாமல் அங்கீகரித்துச் சொல்லி யிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்” என்றேன்.
ஒரு சிந்தனையின் நீட்சியில், இப்படி விஷயங்களை, எழுத்தாளனே சுய கவனத்துடன் கதைகளில் பதிவு செய்வதும் உண்டு. எனது நாலைந்து கதைகள் இப்படி அமைந்தவையே. சமீபத்திய ‘பெருவெளிக் காற்று’ கதையிலேயே, ஆன்மிகம் என்பது லௌகிகம் தாண்டியது அல்ல. வாழ்க்கையில் லொளகிகத்தை யாராலும் மீற முடியாது... என என் கருத்து பதிவு செய்யப்படும் போது, இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபடும் மலர்கள்... மலர்கள் என்பவை எவை? ஒரு தாவரத்தின் இன விருத்தி உறுப்புகள் தானே, என்று சொல்லி யிருக்கிறேன்.
ஏன் வாசிக்க வேண்டும்? வாசிப்பு என்பது என்ன? இலக்கியம் என்பது என்ன? இலக்கியம் வாழ்க்கைக்கு, சாமானியனுக்கு என்ன செய்யும்?...என்று நானே கேள்வி கேட்டுக் கொண்டபோது நான் ‘கிளிக்கூண்டுகள் விற்கிறவன்’ என்ற சிறுகதை எழுதினேன். ‘வடக்குவாசல்’ ஒரு தீபாவளி மலரில் சிறப்புக் கதையாக அது இடம் பெற்றது.
ஒரு ஜவுளிக்கடை குமாஸ்தா அவர். காலை ஒன்பது ஒன்பதரை மணிக்கு கடைக்கு வந்து வரவு செலவு கணக்குகளைப் பார்க்க வேண்டும். வங்கிக்குப் போகிற வேலைகள் என்று வெளி வேலைகளும் அவர் பார்க்க வேண்டும். இரவு ஒன்பதரை பத்து ஆனாலும், வாடிக்கையாளர்களுக்காக பிரிததுக் காட்டப்பட்ட புடவைகள் மலைபோல் குவிந்து கிடக்கும் விற்பனை அறைக்கு வந்து அந்தப் புடவைகளைத் திரும்ப மடித்து அடுக்கிவிட்டு பிறகு தான் வீடு திரும்ப வேண்டும். வீடு திரும்ப இரவு இன்ன நேரம் என்று கிடையாது. தாமதம் ஆகலாம். ஆனால் காலை திரும்ப அவர் ஒன்பது மணிக்கு கடைக்கு வந்தாக வேண்டும். அதில் தாமதம் கூடாது.
வியாதியஸ்தரான மனைவி, முப்பது வயதாகியும் கல்யாணம் ஆகாத மகள்... அவர் கூட இருக்கிறார்கள். காலையில் அவர்களுக்கு வேண்டியதைப் பார்த்து விட்டு வேலைக்கு வருவார். இரவு நேரங்கழித்து வீடு திரும்புவதற்காக முதலாளி ஒரு ஓட்டை சைக்கிள் அவருக்குத் தந்திருக்கிறார். கடைசி பஸ் போய்விட்டது, என அவர் திண்டாடாமல் இருக்க, முதலாளியின் பெருந்தன்மை.
ஆனால் காலையில் கடைக்கு வரும் வழியில், இடைப்பட்ட ஞாயிறுபோன்ற ஓய்வு நாட்களில் அவர் சந்தைப் பக்கம் ஒரு பழைய புஸ்தகக்கடையைப் பார்த்து வைத்திருக்கிறார். அதிகம் அல்லது உடனே விற்றுத் தீர்கிற மாத நாவல்கள், கிரைம் நாவல்கள், ஆபாசப் புத்தகங்களுக்கு அடியே மூச்சுத் திணறிக் கிடக்கிற அசோகமித்திரனையும், ஜானகிராமனையும் அவர் உருவி வெளியே எடுத்து மலிவு விலையில் வாங்குகிறார். இரவு எத்தனை நேரங் கழித்து வந்தாலும் அவர் கொஞ்ச நேரமாவது வாசித்துவிட்டு உறங்கப் போகிறார்.
இது கதை. வாசிப்பு அவருக்கு வேறொரு உலகத்தை அடையாளங் காட்டுகிறது. தனக்கு வாய்த்தது இது. ஆனாலும் உலகம் அவநம்பிக்கைக்கு உரியது அல்ல, என அவர் தனது அனுபவங்களை இன்னும் விரிவு படுத்திக்கொண்டு வாழ்க்கையை நேசிக்கவும், அர்த்தப் படுத்திக் கொள்ளவும் முயல்கிறார் என்று நான் சொல்லிப் பார்த்த கதை அது. அவரது வாழ்வின் அன்றாடத்தில் பயன் மிக்க துளிகளாக அந்த வாசிப்பு நேரம் இருக்கிறது. அது தருகிறது அவருக்கு ஒரு நிழலான ஆசுவாசம்.
ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தனே இந்தக் கதையை சிலாகித்துச் சொன்னது நினைவில் இருக்கிறது. ‘மனக்குப்பை’ என்கிற என் சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது இந்தக் கதை.
சில கேள்விகளைக் கதைகளில் எழுப்புவதைப் போலவே,சில மறைமுக பதில்களை வைப்பதும் ஒரு சிறுகதைப் பாணி தான், என்று  சொல்லத் தோன்றுகிறது. அது எழுத்தாளன் அறியமலேயே கூட கதைகளில் நிகழ்ந்தும் விடுகிறது,சில சமயங்களில்.
***
storysankar@gmail.com
91 9789987842 / 91 9445016842