Friday, November 30, 2018


part 18

சிவகுமாரும் கமலஹாசனும்
எஸ். சங்கரநாராயணன்
 ரு படைப்பு எப்படிச் சொல்லப்பட வேண்டும் என்பது பெரிய பயிற்சி. அதற்கு நிறைய வாசிக்கவும் எழுதவுமாகத் தேறிவர வேண்டியிருக்கிறது. சிறப்பாகச் சொல்லப்பட்ட அநேகப் படைப்புகளைத் தேடிப் பரிச்சயம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. பெரியோரைத் துணை கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருகாலத்தில், அதாவது எழுத வந்த புதிதில், வேறு கலை வடிவங்களை, எழுத்து தவிர, கவனிக்க வேண்டாம், அது இந்த வடிவத்துக்கு ஊறு விளைவிக்கும் என்று நினைத்திருந்தேன். அது தவறு. அந்த வடிவத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை ரசிப்பதும் நமது வடிவத்தில் மேலும் ஆழ்ந்து இயங்க உதவும் என்று பிறகு அறிந்து கொண்டேன்.
அவ்வளவில், ஒரு திரைக்காட்சி போலவே நான் சில சமயம் சிறுகதைகள் எழுதிப் பார்த்திருக்கிறேன். அதில் ஒன்று என் சிறுகதை ‘மூங்கில் பல்லக்கு.’ சாவியில் வெளிவந்தது. அதை வாசித்துவிட்டு ஒருவர் ‘உங்களை குருநாதராக ஏற்றுக்கொண்டு எழுத வருகிறேன்’ என்று கடிதம் எழுதினார். ராஜகுமாரன் என்கிற அவர் இப்போது எழுத்தாளர், இயக்குநர்.
எனது நாவல் ‘மற்றவர்கள்’ எழுதியபோது அதில் காட்சிகளை நிறைய இடங்களில் திரைப்படம் பார்க்கிற அடையாளம் காட்ட முனைந்து செய்தேன்.
பாலு மகேந்திரா நான்கு கதைகள் தேர்வு செய்து எடுத்து வைத்திருந்தார். அவற்றில் இரண்டை சன் தொலைக்காட்சி ‘கதைநேரம்’ பகுதியில் குறும்படங்களாக்கித் தந்தார். அவருக்காகவே நான் பின்னர் எழுதிய ‘வம்சம்’ கதையும் நினைவு வருகிறது. அதுவும் குறும்படம் ஆக காலம் கூடி வரவில்லை, என்பதில் வருத்தம் உண்டு.
எல்லாவித கலை வடிவங்களும் மற்ற கலை வடிவத்தை ஊக்குவிக்கவே செய்யும். இடையூறு செய்யாது, என்று நானே அநேக உதாரணங்கள் சொல்ல முடியும்.
யுத்தத்தின் உக்கிரத்தை விளக்க தார்க்கோவ்ஸ்கியின் ஒரு காட்சியை முன்பே பதிவு செய்தேன். தனித்த வீடு. வீடுதிரும்பும் ராணுவ வீரன், நிலைப்படி மாத்திரமேயான தன் வீட்டை வந்து பார்க்கிறான்... என்ற காட்சியை அவனது முகத்துக்கு நெருக்கமாக காமெராவை வைத்துக்கொண்டு மெல்ல பின் நகர்த்துகிறார் தார்க்கோவ்ஸ்கி. அவன் ஒரு வீட்டு நிலைப்படியில் இருக்கிறது காட்சிக்கு வரும். இன்னும் பின்னே நகர நகர நிலைப்படி மாத்திரமே அங்கே இருப்பதும், வீடே இல்லை என்பதும் காட்டித் தரப்படும். சூழலின் பயங்கரத்தைப் பின்னணி துக்கயிசையுடன் கேட்க வேண்டும்.
ஒரு சிறைக்கைதி எத்தனை வன்முறையுடன் அடித்து நொறுக்கப் பட்டிருப்பான், என்று உணர்த்த ஒரு நுட்பமான காட்சியைத் தார்க்கோவ்ஸ்கி வடிவமைத்திருப்பார். கைதி படுத்திருப்பான் சிறையில். அவனைக் காட்டும் காமெரா மெல்ல சுவரைக் காட்டியபடியே மேலே ஏறும். நாலைந்து விநாடிகள் வரை அமைதி. அந்த அறையின் ஆக உயரத்தைக் காமெரா காட்டும்போது, அங்கே ஒரு ரத்தக்கறையைக் காட்டுவார். பின்னணியில் அதிர்ச்சி இசை வரும். அவ்வளவு உயரத்தில் ரத்தம் தெறிக்கும் அளவு அவன் அடிவாங்கியதாக நாம் உணர்ந்து அதிர்கிறோம்.
கதை திரைக்கதை வசனம் - எதுவுமே இல்லாமல் கதை சொல்ல வல்லவர் தார்க்கோவ்ஸ்கி. யுத்தம் பற்றிய கொடூரத்தை அவர் சொல்லும் முறையே அற்புதமானது. அண்ணன் ராணுவத்தில் பணி புரிகிறவன், விடுப்பு எடுத்து வீட்டுக்கு வந்திருப்பான். எல்லையில் யுத்தம் என்பதாக உடனே அவனைத் திரும்ப வரச் சொல்லி தந்தி வந்திருக்கும். அண்ணன் லேசான உள்க் கலவரத்துடன் முக இறுக்கத்துடன் அந்தத் தந்தியை வாசிப்பான். அருகில் இருக்கும் அவனது சிறு வயதுத் தம்பி, “நானும் உன் கூட யுத்தத்துக்கு வருவேன். வந்து நம் எதிரிகளை டப் டப்பென்று சுட்டு வீழ்த்துவேன்” என்று தோள் பூரிக்கப் பேசுவான். அண்ணன் ஒரு இறுக்கத்துடன், மரண பயத்துடன் தம்பியின் தோளை அழுத்துவான்.
நினைவின் பரணில் தூசி தட்டி விவரங்கள் எழுதுகிறேன். அதுதான் எனக்குப் பிடிக்கும். மீண்டும் ஒருமுறை ‘ரெஃபர்’ பண்ணி சரிபார்த்தபடி எழுதுவது வேண்டாம். புள்ளி விவரங்கள் அல்ல, விஷயம், அதன் வீர்யம் முக்கியம்... ஆமாம், தமிழில் பாலச்சந்தரிடம் இப்படி நுட்பங்களை, காட்சிகளை மீறி இயக்குநராக அவர் ஜொலித்த இடங்களைக் கண்டிருக்கிறேன்.
புன்னகை மன்னன் திரைப்படத்தில் இயற்கையை ரசித்தபடி கமல் ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டிருப்பார் ஒரு தோட்டத்தில். அவரைக் காதலிக்கிற ரேவதி கமலைப் படம் பிடிப்பார். கமல் படம் எடுப்பதுபோன்ற காட்சி ஃபிரேம் ஃப்ரீஸ் ஆகும். பிறகு ரேவதியைக் காட்டுவார்கள். படம் எடுக்கிறவனைப் படம் எடுக்கிறாள்!
சினிமா ஷுட்டிங் என்று தன் குழந்தையை வாடகைக்குத் தந்திருப்பாள் ஒருத்தி. அந்தக் குழந்தை தீயில் மாட்டிக் கொள்வதாகவும், கதாநாயகி பதறுவதாகவும் திரைக்காட்சி. சினிமாத் தாய் பதறுவதைக் காட்டியபடி, ஷுட்டிங் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் தாய், அவள் பதறுவதையும் அதே ஃப்ரேமில் காட்டுவார் பாலச்சந்தர். (படம் ஒருவீடு இருவாசல்.)
இதைவிட எனக்குப் பிடித்த காட்சி. படம் வறுமையின் நிறம் சிவப்பு. பிரிந்து போன கமலைத் தேடிக் கொண்டிருப்பார், பூர்ணம் விசுவநாதன் அப்பா. அவர் ஒரு கர்நாடக சங்கீதப் பாடகர். அவன் டெல்லியில் இருப்பது தெரியாது. ஆனால் பூர்ணத்துக்கு டெல்லியில் ஒரு கச்சேரி. கமலின் நண்பன் ஓவியர் பரணி ஒரு விபத்தில் அடிபட்டுக் கிடப்பான். அங்கேயிருந்து பூர்ணம் கச்சேரியில் பாடும் பாடல் “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ” என்று இசை ஓவர்லேப் ஆகி, பாடகரிடம் வந்து, பின் அதே டெல்லியில் வேறொங்கோ இருக்கும் கமலைக் காட்டும்.
அபார்ஷன் பற்றிய என் ஒரு கதையில், அவள் மருத்துவர் அறைக்கு வெளியே காத்திருப்பாள். சுவரில் ஒரு குழந்தைப் படம். கூட வசனம். MY TOMORROWS ARE WITH YOU. அத்தோடு அங்கே குழந்தையை வயிற்றில் சுமந்தபடி மனம் நிறையக் கனவுகளுடன் அவள் அருகில் ஒரு பெண் அமர்ந்திருப்பதாக முரண் காட்சி வைத்திருப்பேன்.
கதையின் நுட்பமான ஒரு புள்ளியை, கதை எழுதும்போது எட்டிவிட முடிந்தால் எத்தனை உற்சாகம் ஆகிவிடுகிறது. பிற எழுத்தாளர்களின் உதாரணங்கள் சொல்லலாம் இப்போது. தமிழ்மகனின் ஒரு சிறுகதை. வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய கதை. ஒரு மில்லில் வேலைக்கு ஆள் எடுப்பார்கள். அன்றைய வேலைக்கு மில்லில் தேவை இருபது ஆட்களே. என்றால் நூறு பேருக்கு மேல் வந்து காத்திருப்பார்கள். அதில் கதாநாயகனும் இருப்பான். ஒரு மேஸ்திரி வந்து அந்த நூறு பேரில் ஒவ்வொருவராய்த் தன் பக்கம் அழைப்பான். ”நீ வா. நீ வா.” கதாநாயகன் ”ஐயோ என்னை விட்டுவிடுவானோ?” என்று மனசில் படபடப்பாய் உணர்வான். மேஸ்திரி அவனையும் தன் பக்கம் “நீ வா” என அழைத்து விடுவான். ஒரு விநாடி ஆசுவாசப் பட்டவன், ஐயோ தன் பக்கமாய்க் கூப்பிட்டு விட்டு எங்களை வேண்டாம் என வெளியே அனுப்பி விடுவானோ, என்று திரும்ப பயப்படுவான்!
வெகு நாட்களுக்கு முன் கணையாழி இதழில் வாசித்த ஒரு கதை. எழுத்தாளர் பெயர் நினைவில் இல்லை. கண் ஆஸ்பத்திரி ஒன்றில் இளம் பெண் ஒருத்தி. அவள் கண்ணுக்கு மருந்து ஊற்றியிருப்பார்கள். புடவையை இழுத்து இழுத்து மார்பு மேல் மூடிக் கொண்டே யிருந்தாள் அவள், என்று குறிப்பிட்டிருந்தார் எழுத்தாளர்.
இளமைவேகமும் துடிப்புமான அந்தக் காலகட்டத்தில் தீபம் இருபதாண்டு நிறைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். ‘இயேசுவின் சிலுவையை இறக்கி வையுங்கள்’ என்ற அந்தக் கதையில் ஒரு வரி. வைரமுத்து மேடையிலேயே பாராட்டிய வரி. ”அம்மா புதிதாய் வரும் என் நண்பன் முன்னால் முந்தானையை இழுத்திப் போர்த்துக் கொண்டு அவனை அவமானப் படுத்துவாள்.” இந்தக் கதை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் கண்டது. டாக்டர் சேஷன் இந்தியில் தந்தார். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஓய்வுபெற்ற மாஜிஸ்ட்ரேட் எம்.எஸ். ராமசாமி. அந்தத் தலைப்பு, இயேசுவின் சிலுவையை இறக்கி வையுங்கள், அதை என் ‘அட்சரேகை தீர்க்கரேகை’ புத்தகத்தில் ஸ்டார் போட்டு ஆங்கிலப்படுத்தி யிருந்தேன்.
RELIEVE JESUS OFF THE CROSS. அது எம்.எஸ். ஆருக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
கதை எழுதுகையிலேயே உணர்வு ரீதியான ஒரு மூழ்குதல் எழுத்தாளனுக்குக் கிட்டினால் அதை வாசகனும் பெற்றுக் கொள்கிறான்.
எழுதும் போக்கில் பிரச்னையின் சிக்கலில் ஒரு நுட்பமான அடையாளத்தைக் காட்ட முடிவது சிறந்த கதை யாகிறது. சர்க்கஸ் ஒன்று போதிய வரவேற்பு இல்லாமல் நொடித்துப் போகிறதாக என் ஒரு சிறுகதை. (கலைஞன்.) சாப்பாட்டுக்கே பிரச்னை என்றாகிற நிலையில், இருக்கும் மிருகங்களில் அதிகப் படியான மிருகங்களை விற்று விட முடிவு செய்வார்கள். இரண்டு குதிரைகளில் நல்ல ஆரோக்கியமான குதிரையை சர்க்கசுக்கு வைத்துக் கொண்டு, நலிந்த அடுத்த குதிரையை விற்க முனைவார்கள். வாங்க வந்தவர்கள் நல்ல குதிரையை விலைக்குக் கேட்பார்கள், அதைத் தந்தபின் சர்க்கஸ் நிலை இன்னும் மோசமானது!
இப்படி விஷயங்களை பிற முக்கியஸ்தர்களோடு பேசுவதும் பெரும் உற்சாகம் அளிப்பதாய் இருக்கும். டாக்டர் ஔவை நடராசன் அவர்களுடன் ஒரு காலத்தில் தினசரி மாலைகளில் நான் உலா போவேன். சென்னை அண்ணா சாலை சாந்தி தியேட்டர் எதிரில் இருந்த தந்தி அலுவலகத்தில் காலை ஏழு மணி பணிமுறை எனக்கு. மதியம் இரண்டு மணி வாக்கில் பணி முடிந்து, தலைமைச் செயலகம் போய்விட்டால், டாக்டர் ஔவை நடராசன் அலுவலகம். அப்போது அவர் அரசுச் செயலர். அவரது வேலைகளுக்கு நடுவே உலக விஷயங்கள் பேசுவது விவாதிப்பது. என் எழுத்தின் சிறப்பான கட்டங்களை நான் பகிர்ந்தால், அவரது படிப்பு ஆளுமையுடன் அநேக விஷயங்களை என்னுடன் பகிர்வார் அவர். என் ஒரு வரி. மரணம் பற்றிய கதை. ‘காலம் மனிதனைப் பறக்க விட்டு இறகுகளைக் கத்தரிக்கிறது’ என நான் எழுதியிருந்தேன். அவர் சொன்னார். “பட்டினத்தார் சொல்கிறார், சாகப் போகிற பிணங்கள் செத்த பிணத்தைத் தூக்கிச் செல்கின்றன.’’
கிருஷ்ணனைக் கேலி பேசுகிறாப் போல நான், அன்று கோபியர்களிடம் ஆடை பறித்துக் கொண்டவன் கண்ணன். திரௌபதிக்கு ஆடை அளித்தான், என்று குறிப்பிட்டேன். “அட இங்க வாங்கி அங்க குடுத்துட்டான்னு சொல்லணும்” என்றார் அவர் சிரித்தபடி.
டாக்டர் ஔவை அவர்களின் நகைச்சுவை எனக்குப் பிடிக்கும். அவற்றில் ஒன்று.
நாம் எல்லாரும் உயரமான இடத்தில் அமர்ந்தபடி தாழ்வான இடத்தில் உணவை வைத்துக்கொண்டு சாப்பிடுவோம். பலகை போட்டு அமர்ந்துகொண்டு தரையில் இலை போட்டுச் சாப்பிடுவோம். வெள்ளைக்காரன் தாழ்வான இடத்தில் அமர்ந்தபடி உயரமான இடத்தில் சாப்பிடுவான். நாற்காலியில் அமர்வான். மேசையில் சாப்பிடுவான்.
என் வீட்டுக்கு ஒரு வெள்ளைக்காரன் வந்தான். அவனுக்கு பலகை போட்டு இலை போட்டோம்.
இலைல உட்கார்ந்திட்டான்.
எழுதியதும் வாசித்ததுமாக, கலந்துரையாடுகையில், நாமே உயரம் என நினைத்த கணங்களில், அதைவிட உயரங்கள் தொட்ட கணங்களை இப்படி எடுத்துத் தர பெரியோர் அருகில் கிடைப்பது ஒரு வரம்தான்.
சரிந்து இறங்கிய பறவை
கீழே போட்டது
நிழலை.

இப்படி ஒரு கற்பனை நான் சொன்னபோது, ஒரு தமிழ் ஆசிரியர், கம்பர் இதை இதைவிட உச்சமாகச் சொல்லி விட்டார். “எத்தனை உயரம் பறந்த போதும் அந்தப் பறவையால் தன் நிழலைக் கீழே போட முடியவில்லை,” என்று எனக்கு எடுத்து சசொன்னார். கவிச் சக்கரவர்த்தி அல்லவா!
மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார், என ஒரு கதைக்கு நான் தலைப்பு வைத்திருந்தேன். அப்புறம் பார்த்தால் என் ஞான ஆசான் பகவான் ஸ்ரீ அரவிந்தர் சாவித்திரியின் முதல் வரியை இப்படி அமைக்கிறார். “கடவுள் கண் விழிக்கு முன்னான அதிகாலை...” ஆசானுக்கு வணக்கம்.
வெளிநாட்டுத் திரைப்படங்கள் ஒரு காலத்தில் நிறையப் பார்ப்பேன். இப்போது இருக்கும் கண்ணசதியில் வாசிக்கவே முடியாது திகைப்பாய் இருக்கிறது. அந்தக் காலத்தில் பார்த்த படங்களில் எத்தனை காட்சிகள், எத்தனை ஃப்ரேம்கள், மணிரத்தினமோ, பிற இயக்குநர்களோ அப்படியே கையாண்டிருக்கிறார்கள், என அலசிப் பார்ப்பது வேடிக்கையான பொழுது போக்கு. கே. பாலச்சந்தர் அவர்களிடம் இதுபற்றி நிறையப் பேசவும் அந்நாட்களில் வாய்த்தது. தன் அனுபவம் சார்ந்த நிறைய நுட்பங்களை அவர் பகிர்ந்து கொண்டதும் உண்டு. அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள முடியும். எனது ‘சராசரி இந்தியன்’ நூலுக்கு அவர் முன்னுரை தந்தார். அவர் ஆசிரியராக இருந்து தயாரிதத குமுதம் இதழிலும் நான் சிறுகதை பங்களித்தேன். பின்னாட்களில் நான் அவரை விட்டு விலகி வந்திருந்தேன். அடிக்கடி சென்று பார்த்து அந்த நட்பைப் புதுப்பித்திருக்க வேண்டும். விட்டு விட்டது. அவரை எப்பவுமே எத்தனையோ பேர் சூழ்ந்து வலம் வந்து கொண்டுதான் இருப்பார்கள். இதில் அவர் நினைவில் நான் கரைந்து போயிருக்கலாம்.
பாலகுமாரன் அவரது உதவியாளராக இருந்த சமயம் ‘சிந்து பைரவி’ திரைப்படம் வந்தது. பொதுவாக தன் கதைகளை உதவி இயக்குநர்களிடம் அவர் விவாதிப்பதே இல்லை. ஷுட்டிங் நடக்கையில் நாமாக கணக்குகள் போட்டு இந்தப் பாத்திரம் இந்த சமபவங்கள், பிறகு இப்படி கதை நகரும்... என நாமே யூகித்துக் கொண்டே வர வேண்டும். “கர்நாடக இசைக் கலைஞர் சிவகுமாருக்கு சங்கீதம் தெரியாத மனைவி. ராகம் ஒன்றை முனைந்து அவர் சாதகம் செய்து கொண்டிருப்பார். கிர்ர் என்று மிக்சியில் மிளகாய்ப் பொடி அரைப்பாள் அவள். “ரசனை கெட்ட ஜென்மம்  லதா மங்கேஷ்கர் பாடிய பாட்டு. இப்படி கர்ண கடூரமா நடுவுல மிக்சிச் சத்தம்” என்று கோபப் படுவார் சிவகுமார். “லதா மங்கேஷ்கரா உங்களுக்கு இட்லி மிளகாப் பொடி அரப்பா?” என்று கேட்பாள் சுலக்சணா.
சிவகுமாருக்கு தன் ரசிகை என அறிமுகமாகும் சுகாசினியோடு ஒரு நட்பு வந்து வளர்ந்து காதலாகி... கதை அப்படி நகர்கிறது. “இதை எப்பிடி முடிக்கலாம், என்று பாலகுமாரனிடம் கேட்டன்ப்பா...” என்று பாலச்சந்தர் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தார்.
“பேசாம ரெண்டு பேரையும் அவன் கல்யாணம் பண்ணிக்கட்டுமே சார்... அதனால என்ன?..ன்றான்...” என்று சிரித்தவர், பிறகு என் பக்கம் குனிந்து சொன்னார். ’‘அவன் திரும்ப முதல் மனைவியோட வந்து சேர்ந்துக்கறான். அதான் முடிவு. அதுக்காகத்தான் நான் சிவகுமாரை வெச்சி கதை சொல்றேன். ரெண்டு பேரையும் அவன் கல்யாணம் பண்ணிண்டா அது கமலுக்கான கதை இல்லையோ?” என்றார்.
வெற்றியின் சூட்சுமங்கள்!
இன்னொரு சம்பவம் கூட நினைவில் வருகிறது. அது கருப்பு வெள்ளை திரைப்பட காலம். அப்பவே சொல்லத்தான் நினைக்கிறேன் எடுத்தார் அவர். ஒரு கதநாயகன். ஒரே வீட்டில் கல்யாணம் ஆகாத நாலு பெண்கள். நாலு பேருமே அவனை விரும்புவார்கள்... என்று கதையமைப்பு. “கிராமத்து மணலில் டூரிங் டாக்கிசில் படம் பார்க்கிற பெண்கள், என்னதான் இருந்தாலும் இந்த நாலு பொண்ணுகளும் இப்பிடியா கல்யாணத்துக்கு அலையும்னு முகம் சுளிக்கலாம்னு நான் எதிர்பார்த்தேன்” என்றார் பாலச்சந்தர். “அதனால் தான் முதல் காட்சியிலேயே அந்த நாலு பெண்களின் அப்பாவான எஸ். வி. சுப்பையாவை கை நிறைய லாட்டரி டிக்கெட்டுகளுடன் அறிமுகம் செய்தேன்.” இந்தச் சீட்டெல்லாம் பரிசு விழுந்திட்டா என் அத்தனை பொண்ணுக்கும் நான் கல்யாணம் பண்ணிருவேன், என்ற வசனமும் வைத்தார் அவர். எத்தனை கவனமான காய் நகர்த்தல்.
குறைந்த பட்சம் ஒரு தொலைக்காட்சித் தொடராவது அவருடன் நான் செய்திருக்க வேண்டும். வாய்ப்பு வந்தது. நழுவி விட்டது. (ஜெயில் - என தலைப்பிட்டு நான் சொன்ன கதை அவருக்குப் பிடித்திருந்தது.)
கே. பாலச்சந்தருடன் வெளிமொழி, வெளிநாட்டுப் படங்களை நிறையப் பேசுவேன். ஒருமுறை அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது பின்னணியில் கதரி கோபால்நாத்தின் இசை. “வெள்ளி உருகி ஓடுவதுபோல் எத்தனை அற்புதமாய் இருக்கிறது இந்த இசை. இதை அவசியம் பயன்படுத்திக் கொள்ளுங்கள் சார்” என்றேன். அதனால் தானோ என்னவோ, டூயட் படத்தில் அவர் பயன்படுத்தினார். அவர் முன்பே யோசித்தும் இருக்கலாம். நான் சொன்னபோது அந்த யோசனை அவருக்கு சரி என்றும் பட்டிருக்கலாம்.
ஒருமுறை வேடிக்கை போல மிருணாள் சென்னின் ஒரு படம் பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
ஒரு ஏழை இளைஞன். நன்றாகப் பாடுவான். அவனது பணக்கார நண்பன். ஒரு கச்சேரியில் அவன் பாடியதைக் கேட்டு இளம் பெண், பெரும் பணக்காரி அவனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள். கச்சேரி முடிந்து நண்பரின் காரில் இந்த ஏழைப் பாடகன் வந்து ஏறுகையில், அவள் அது பாடகனது கார்தான், என நினைத்துக் கொள்கிறாள். அதன்பின் பாடகனுக்கு அவள்முன் தான் பணக்காரன் என்றே காட்டிக்கொள்ள, வேஷம் போட வேண்டியிருக்கிறது.
ஒருநாள் அவள் தன் தந்தையுடன் அவன் வீட்டுக்கு வரப்போவதாகச் சொல்கிறாள். பாடகன் நண்பனிடம் கெஞ்சி ஒரு ஒருமணி நேரம் அவன் வீட்டை தனக்குத் தன் வீடாக நடிக்கத் தரச் சொல்லிக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறான். கார்க்கார நண்பனின் தாய், தந்தை வீட்டில் இல்லை. நண்பன் சம்மதிக்கிறான். நண்பனின் அறையில் அவன் தலைக்கு மேல் இருக்கிற அவனது தாய் தந்தை படத்தை எடுத்துவிட்டு, தன் படத்தைப் பாடகன் மாட்டி வைக்கிறான். மறக்காமல் அவனது கார்ச் சாவியை வாங்கி வைத்துக் கொள்கிறான். நண்பனது கார் டிரைவரிடம் சொல்லி, அவனைத் தன்கீழே வேலை செய்கிற டிரைவர் என்று நடிக்க சம்மதம் வாங்கிக் கொள்கிறான்... எல்லா முன்னேற்பாடுகளும் தயார்!
இப்போது கதாநாயகியும் அவள் தந்தையும் அவனைப் பார்க்க வருகிறார்கள். அப்போது அது அவன் வசிப்பிடம் அல்ல என்கிறாப் போல அவன் மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டும். அதற்கு ஒரு பொருளை (பிராபர்ட்டி) மிருணாள் சென் பயன்படுத்துகிறார். அது என்ன?
- என்று பாலச்சந்தரிடம் ஒரு வேடிக்கை போல நான் செக் வைத்தேன். மூன்று நிமிடங்கள் கூட எடுத்துக் கொள்ளுங்கள். அவரே தனக்குள் பேசிக்கொண்டாப்போல இங்கே அங்கே நடந்தார். தன்னைத் தானே தலையாட்டி மறுத்துக் கொண்டார். பிறகு ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் என்னிடம் “அது என்ன பொருள்?” என்னிடம் கேட்டார்.
பெரும் பணக்கார நண்பன். எப்பவும் அவன் சிகெரெட் பற்ற வைக்க என்று லைட்டர் வைத்திருப்பான். அப்போது அதை அவன் கையோடு எடுத்துப் போயிருப்பான்.
உள்ளே வந்து பெண்ணின் அப்பா, வாயில் சிகெரெட் வைத்தபடி, “லைட்டர்?” என்று அவனிடம் கை நீட்டுவார். எத்தனை முன் தயாரிப்புடன் அவன் இருந்தாலும், சட்டென அந்தக் கேள்வியால் அவன் திக்குமுக்காடி மேசையில், டிராயர்களில் காகிதங்களுக்கு அடியில் என்று ஒரு திக்கென்ற மனசுடன் தேடும் காட்சி பார்க்க கன வேடிக்கையாய் இருக்கும்.
“அடாடா அருமை” என சந்தோஷப் பட்டார் அவர்.
இன்னொரு சந்தர்ப்பம். நான் பார்த்த அநேக வெளிநாடடுப் படங்களின் பல ஃப்ரேம்கள் அப்படியே நம் தமிழ் சினிமாவில் வருவதைப் பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மணிரத்தினத்தின் ஒரு திரைப்படம். வைக்கோல் பரப்பிய ஒரு குதிரை வண்டி நிற்கிறது. அந்த வைக்கோல் குப்பென்று தீ பற்றிக் கொள்கிறது. குதிரை மிரண்டு ஓடுகிறது. காமெரா அருகில் இருந்து வண்டி கிளம்பி ஒரு புள்ளி போல மறைகிறது. திரையில் பார்க்க கண்கொள்ளாக் காட்சி.
இந்த ஃப்ரேம் வந்த வெளிநாட்டுப் படம் பற்றி பாலச்சந்தரிடம் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். யுத்தப் படம். வேறு நாட்டு ராணுவ வீரர்களின் ஆக்கிரமிப்பில் ஊரே அல்லோல கல்லோலப் படுகிறது. வெறி கொண்ட ராணுவக் கூட்டம். குதிரைகளில் சர்ர் சர்ரென்று கையில் நீண்ட குச்சிகளில் தீப் பந்தங்களுடன் வீதியெங்கும் ஆவேசமாய்த் திரிகிறார்கள். தோன்றியபடி அவர்கள் ஊரையே கொளுத்திக் கொண்டு போகிறார்கள்.
எதிரிகளின் படையெடுப்பால் ஊரை விட்டு வெளியேறும் கூட்டம். வேறு ஊருக்கு நகர்கிறார்கள். ஒரு பதினைந்து இருபது பேர். அதில் ஒரு பதின்வயசு ஜோடி. ஓர் இளம் பெண். ஒரு வாலிபன். அப்போது தான் அந்தத் துயரத்தின் நடுவே மற்றவர்களுக்கு ஒரு நம்பிக்கையின் கிரணம் கிடைக்கும், என்ற அளவில். நமக்கும் கதையை கவனிக்க ஒரு பிடிப்பு வரும்... என்பதாக.
இரவுகளில் அவர்கள் குழுவாக நடந்து பக்கத்து ஊரை அடைகிறார்கள். அந்த இளம் ஜோடி க்ளுக் க்ளுக் என்று சிரித்தபடி வருவது அவர்கள் எல்லாருக்குமே பிடித்திருக்கிறது. பக்கத்து ஊரில் உள்ள ஒரு சர்ச்சில் அவர்கள் இரா தங்குகிறார்கள். ஆனால் அந்த ஊரையும் எதிரிகள் கைப் பற்றி விட்டார்கள். வெளியே ஒரே கலவரச் சத்தங்கள். அப்படியே அடங்கி ஒடுங்கி முடங்கிக் கிடக்கிறார்கள்.
கடும் இரவு. சப்தங்கள் அடங்கி மெல்ல அமைதியாக விடிகிறது காலை. (இந்த ஷாட்களை யெல்லாம் மணிரத்னம் எங்காவது வைத்திருக்கிறாரா, நான் பார்க்கவில்லை.) அந்த இளம் பெண் சர்ச்சின் பின் வாசல் வழியே வெளியே வருகிறாள். இடுப்பு உயரத்துக்கு வளர்ந்த புல். இளம் வெயிலின் மினுமினுப்பு. கண் கொள்ளாக் காட்சி. உற்சாகமாய் அவள் அந்தப் புல்வெளி நோக்கி லுலுலுலு என்று ஓடுகிறாள். போகாதே, போகாதே... என்று மற்றவர்கள் எச்சரித்துச் சத்தம் போடுவதை அலட்சித்து அவள் ஓடுகிறாள். இடுப்பு உயரமான புல்வெளியில் அவள் உருவம். டப். குண்டுச் சத்தம். அவள் புல்வெளிக்குள் சரிந்து விழுகிறாள்.
காதலன் ஊ..வென அலறி புல்வெளிக்கு ஓடுகிறான். அவனைப் போகாதே, போகாதே, என எச்சரிக்கிறார்கள் எல்லாரும். அந்தப் பெண்ணைத் தூக்கி வாரியெடுத்துக்கொண்டு அழுதபடி வருகிறான் காதலன். இறந்த அவளை சர்ச்சுக்குள் கொண்டு வருகிறார்கள். ஒருநாள் இரண்டுநாள் என நாள் கடக்கிறது. வெளியே எதிரி ராணுவக்காரர்களின் அட்டகாசம் அதிகரித்திருக்கிறது இப்போது. எத்தனை நாள் இவளை இப்படி வைத்துக் கொள்வது, இவளை நல்லடக்கம் செய்ய வேண்டும், நான் கிளம்புகிறேன்... என்கிறான் காதலன். இப்போது வெளியே போவது ஆபத்து... என்கிற எச்சரிக்கைகளையும் மீறி ஒரு குதிரை வண்டியில் வைக்கோல் படுக்கையிட்டு அவளை ஏற்றிக் கொண்டு சர்ச்சுக்கு வெளியே வருகிறான்.
குதிரையொன்றில், நீளமான குச்சியில் தீப் பந்தம் ஏற்றிய ஒரு ராணுவ வீரன் அங்கே வந்து வண்டியில் கிடத்தப் பட்டிருக்கும் காதலியின் கவுனைக் குச்சியால் தூக்கி அவளது பெண்குறியைப் பார்க்கிறான். இதனால் ஆத்திரம் அடைந்த காதலன் அவனைத் தாக்கப் பாய்கிறான். வீரன் அவனைத் தன்னிடம் உள்ள கயிற்றால் கட்டி குதிரையோடு தரையில் தரதரவென்று அவனை இழுத்துப் போகுமுன்...
திரும்பி அந்தத் தீப் பந்தத்தை குதிரைவண்டியின் வைக்கோலுக்கு எறிகிறான்.
குப்பென தீ பற்றியெரிகிறது. குதிரை மிரண்டு விர்ரென்று அந்த ஃப்ரேமை விட்டு, உள்ளே உள்ளே சிறிதாகி புள்ளியாகி மறைகிறது. (மணிரத்தினம் பயன்படுத்திய அதே ஷாட்.)
நான் பாலச்சந்தரிடம் கேட்டேன். ”காதலனைக் கயிற்றில் கட்டி குதிரையோடு வரும்படி தரதரவென்று இழுத்துச் செல்கிறான். சரி. அந்த வண்டிக்குத் தீ வைக்க வைண்டிய அவசியம் என்ன? அந்த ஃப்ரேம் சினிமாவில் காட்ட நல்லா யிருக்கு. அதனால் தான் மணிரத்தினம் அதே ஷாட்டைப் பயன்படுத்துகிறார். ஆனால் எனக்கு இது வக்கிரமா இருக்கு,” என்றேன்.
பாலச்சந்தர் சிரித்தபடி, “இல்லப்பா... இதுவரை கதை காதலனையும் காதலியையும் சுத்தி வந்தது இல்லியா? இனிமே கதை என்னாவும், அவனை இழுத்துப் போகிறார்கள். துன்புறுத்துகிறார்கள்... இப்பிடி மாறப் போகுது. அப்ப அந்தப் பொண்ணு? அதை அப்பிடியே தெருவுல விட்டுட்டுப் போக முடியாது. அவள் கதைக்கு ஒரு முடிவு வேணாமா? அதுக்கு தான் அந்த தீப்பந்தம் எறிகிற காட்சி. ரொம்ப கரெக்டாப் பண்ணியிருக்கான் அந்த டைரக்டர்” என்றார் பாலச்சந்தர்.
அகக் கண் விழித்த கணம் அது. அதன்பின் நானும், கதை என எழுதினாலும் அந்தக் காட்சியில் இடம் பெறும் பிற பாத்திரங்களின் உணர்வுகளையும் மனதில் கொண்டு அங்கே ஓர் உலகத்தை சிருஷ்டி செய்ய ஆரம்பித்தேன்.
இன்னொரு விஷயம் மாத்திரம் மறக்காமல் இங்கே சொல்லி விட வேண்டும். கதை எழுதுகையில் ஒரு பாத்திரத்தோடு மனசை இயங்க வைத்து அவனது உணர்ச்சிகளோடு கதையை முடித்து ஒதுங்கிக் கொள்ளலாம். ஆனால் திரையில் அப்படி முடியாது. திரையில் ஒரு காட்சியில் உலா வரும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஓர் உலகம் உண்டு. அதை, மற்ற பாத்திரங்களின் சூழலை கவனம் செய்தாக வேண்டும்.
‘மதிலுகள்’ கதையில் வைக்கம் முகம்மது பஷீர், சுதந்திரப் போராட்டக் கைதி, சிறைச் சுவரின் அந்தப் பக்கத்துப் பெண்ணோடு காதல்வயப் படுவார். அவளை நேரில் சந்திக்கிற வாய்ப்புக்குப் பரபரப்புடன் காத்திருப்பார். மறுநாள் மருத்துவர் வந்து கைதிகளை சந்திப்பார் என்று சொல்லி, அந்தப் பெண் அவரையும் மருத்துவரைப் பார்க்க வருகிறாப் போல வரச் சொல்வாள். ஆனால் முந்தைய மாலையே அவரை விடுதலை செய்து விடுவார்கள். பெரும் சோகமாய் அவர் விடுதலையை வாங்கிக் கொள்வார்... என கதாபாத்திரத்திடம் நெருங்கி வந்து கதையை பஷீர் முடித்து விடுவார்.
மம்முட்டி நடித்து வந்தது ‘மதிலுகள்’ திரைப்படம். ஆனால் திரைப்படம் என்று வருகையில் அந்த முடிவு எனக்குப் போதவில்லை. ஏனெனில் விடுதலை பெற்றுவிட்டாலும், மறுநாள் பார்வையாளர் என்ற முறையில் மனு கொடுத்து அவரால் அவளைப் பார்க்க முடியுமே, என்று தோன்றி அந்த அவரது சோகம் வம்படியானது, என்று எனக்குப் பட்டது.
மதிலுகள், கதை அடிப்படையில் மிக முக்கியமான வரவு என்று நினைக்கிறேன். அதன் ருசியில் நான் சமைத்தது ‘ஜெயில்’ - சிறைச்சாலை பற்றிய வேறொரு கோணத்திய பார்வை அது. கே.பி. சாருக்குப் பிடித்திருந்தது. ஜெயில், என்ற பின்னணியில் வேறு என்னென்ன கதைகள் வந்திருக்கின்றன, என்று திரைப்பட நடிகர் ராஜேஷிடமும், நடிகர் சிவகுமாரிடமும் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து நாம் இதைத் தொலைக்காட்சிக்காகப் பண்ணலாம் என்றார்.
அது பலிதம் ஆகவில்லை. ராஜேஷோடும், சிவகுமாரோடும் அவர் விவாதித்தாரா தெரியாது.
இந்தக் கட்டுரை வெளியாகிற போது, திருமதி ராஜம் பாலச்சந்தர், அவரும் இயற்கை எய்தினார் என்று செய்தி வருகிறது. (26,11,2018) அவர் பரிமாறச் சாப்பிட்டிருக்கிறேன். அவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி.
*
storysankar@gmail.com - mobile 91 97899 87842

Friday, November 23, 2018

PART 17

நிலையின் திரியாது அடங்கியான்
எஸ். சங்கரநாராயணன்

மிழுக்கு ஞானக்கூத்தனின் பங்களிப்பு பரந்து பட்டது. எனது கல்லூரி நாட்களில், 1980 களில், அவரை அறிமுகம் செய்துகொண்டது சிறு புன்னகை வரவழைக்கிற அவருடைய தெறிப்புகளில் தான். காளமேகப் புலவருக்குப் பின் சட்டென, மாபெரும் இடைவெளியில், இதோ, ஒரு rebel என மனம் பொங்கிய தருணம் அது.
தமிழ் எனக்கு மூச்சு, ஆனால் பிறர் மேல் விட மாட்டேன், என்பார் அவர். அரசியல்வாதிகளிடம் அவருக்கு ஒரு ஆக்ரோஷமான கோபம் இருந்தது. தலைவர்களேங், என்ற அவரது கவிதை மகா பிரசித்தம். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தினரால் ராமருக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடந்தது. ஞானக்கூத்தன், அதில்வந்த எத்தனை பேர் ராத்திரி மனம் குறுகுறுக்க தூக்கம் வராமல் புரண்டார்களோ, என எழுதிக் காட்டுவார். சொல்முறையில் அவருக்கு ஒரு கருத்து வீச்சு தெளிவாக இருந்தது. கடவுளையும் அவர் விட்டு வைக்கவில்லை.
      கவிதை 1
      நாயகம்
மனிதர் போற்றும் சாமிகளில்
ஒற்றைக் கொம்பு கணபதியை
எனக்குப் பிடிக்கும். ஏனெனில் வே
றெந்த தெய்வம் வணங்கியபின்
ஒப்புக் கொள்ளும் நாம் உடைக்க?
      கவிதை 2
      மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்
எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழி வாற்றலானார்:
வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;
மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்;
வேட்டியை இறுக்கிக் கொண்டு
‘விடுதலை தவறி’ என்றார்;
பெண்களை நோட்டம் விட்டு
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்;
புறப்பட்டு நான் போகச்சே
‘பாரத தேசம்’ என்றார்;
‘வாழ்விக்க வந்த’ என்னும்
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள
அரசாங்க வேலையாட்கள் அலுவலகத்தில் தூங்கி வழிகிறார்கள் என்கிற அவரது கிண்டல் நுட்பமானது. அரசுக் கட்டிலில் தூங்கிய முதல் மனிதர் மோசி கீரனார், என்பார். அம்மாவின் பொய்கள், என்கிற கிண்டல் அபாரமானது அல்லவா?
சென்னைக்காரன் என்கிற அளவில் சில இலக்கியக் கூட்டங்களிலும், நண்பர்கள் வீட்டு திருமண மற்றும் பிற வைபவங்களிலும் அவரைச் சந்திக்க வாய்ப்புகள் அமைந்தபடி யிருந்தன. எளிய நல்ல நண்பர். கவனமாய் நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டு, தன் கருத்தை அதே அமைதியுடன் சொல்வார். மொழிபெயர்ப்பு சார்ந்து நான் அவரிடம் அதிகம் முரண்பட்டேன். அவர் கருத்துக்கள் காலத்தால் முந்தையவை என்பது எனது கருத்து. எனது இந்தக் கருத்து அவருக்குத் தெரியும்.
இருபது வருடம் முன்னால் நான் ‘நிஜம்’ என்கிற சிற்றிதழ் நடத்தினேன். அதில் மரபுக் கவிதைகளுக்கான உரை போலவே, புதுக் கவிதைகளின் வசிகரத்தை முழுமையாக  உணரும்படியும், அதன் புரியாத்தன்மை சார்ந்து எடுத்துத் தரும்படியும், இதழ்தோறும் விளக்கக் கட்டுரை வெளியிட விரும்பினேன். அதை ராஜன் என்கிற புனைப்பெயரில் எழுதினார் ஜெயமோகன்.
நிஜம் இரு இதழ்கள் தான் வந்தது. அத்தோடு பொய்யாகி விட்டது. முதல் இதழில் க.நா.சு.வின் ஒரு கவிதைக்கு விளக்கம் தரப்பட்டது. அடுத்த இதழில் ஞானக்கூத்தனின் ‘நாய் குரைத்தல்’ பற்றிய கவிதை பற்றி விளக்கம். நிஜம் போன்ற நடுவான, வாசகனை மருட்டாத இலக்கிய முயற்சிகள் தேவை தான், என்றார் ஞானக்கூத்தன்.
நானும் எழுத்தாள நண்பர்கள் ஏ.ஏ.ஹெச்.கே. கோரியும், சாந்தனுமாக மாதந்தோறும் சிறந்த சிறுகதை ஒன்றுக்குப் பரிசளித்து, பன்னிரண்டு மாதங்களின் சிறந்த கதைக்கு முதல் பரிசும் அளித்து, அந்தக் கதைகளைத் தனி நூலாக்கியும் மகிழ்ந்தோம். ‘ஜோதி விநாயகம் நினைவு சிறுகதைப் பரிசுத் திட்டம்’ என அறியப்பட்டது அது. மூன்று ஆண்டுகள் நடந்தது இந்த அமைப்பு. அதன் இரண்டாவது ஆண்டு விழாவுக்கு ஞானக்கூத்தன் வந்தார். அவரது சிறப்புரை எனக்குப் பிடித்திருந்தது. கருத்துச் செறிவுடன் வளமாகப் பேசத் தெரிந்த மிகச் சில எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். வடமொழி அறிந்தவர். பேசியபடியே சிந்தனையால் எட்டு திசையிலும் பயணம் செய்வார் அவர். கேட்டுக் கொண்டே யிருக்கலாம்.
சிறுகதையின் இலக்கணம் என்று வடமொழியில் ஒரு கதையும், நகைச்சுவையின் இலக்கணம் என ஒரு வடமொழி எடுத்துக்காட்டும் தந்தார் அவர்.
(அவர் சொன்ன வடமொழிச் சிறுகதையை, இந்தத் தொடரின் வேறு பகுதியில் பகிர்ந்துள்ளேன்.)
ஒரு நல்ல நகைச்சுவையின் இலக்கணம் என்ன? அதற்கும் ஒரு வடமொழி உதாரணம் தந்தார் ஞானக்கூத்தன்.
ஒரு பிராமணன் காலையில் ஆற்றுக்குக் குளிக்கப் போனபோது ஆற்றங்கரையில் ஒரு வெறிநாய் துரத்திவிட்டது. அப்புறம் அவன் குளிக்க ஆற்றங்கரைப் பக்கம் போகவில்லை. ஒரு வாரம் ஆனது. அவன் நண்பன் வந்து அவனிடம் சொன்னான். “இனி அந்த ஆற்றங்கரைக்குக் குளிக்கப் போகலாம்”
“அந்த வெறியாய் என்னாயிற்று?”
“கவலைப்படாதே. அந்த வெறிநாய் இப்போது இல்லை. அதை ஒரு சிங்கம் தின்றுவிட்டது.”
இலக்கியத்தில் சதா வாசித்தபடி இருந்தார் ஞானக்கூத்தன். எதையிட்டும் அவரிடம் தகவல் பெறலாம். கடந்த ஏழு வருடங்களாக நான் ஆண்டுதோறும் ‘இருவாட்சி’ என்ற பொங்கல்மலர், சிற்றிதழ் பாணியில், வெளியிட்டு வருகிறேன். ஏழு ஆண்டுகளிலும் தொடர்ந்து விருப்பமாய்ப் பங்களித்தார் ஞானக்கூத்தன். அவரது சமீபத்திய கட்டுரைகளைத் தொகுத்து ‘ரூபம் பிரதிரூபம் மற்றும் பாவனை’ என தயார் செய்து கொண்டிருந்தோம். அதைப் பார்க்க அவர் இல்லை. விரைவில், அதை நூலாக்க வேண்டும்.
நண்பர்களின் இல்ல வைபவங்களுக்கு அநேகத் தரம் அவருடன் போய்வந்திருக்கிறேன். என் அருகில் அமர்ந்து உணவு அருந்துவார் அவர். சமீபத்தில் என்ன எழுதினீர்கள், என்று சம்பிரதாயம் அற்ற முறையில் அக்கறையுடன் விசாரிப்பார். வீடு காலி செய்துகொண்டு போவதில் உள்ள துக்கம் பற்றி ஒரு கதை எழுதி யிருப்பதாக நான் சொன்னேன். அவரிடம். “பிரச்னையின் அழுத்தத்தைக் கூட்டுவதற்காக, ஒரு பார்வையற்ற பெண் வீட்டைக் காலி  செய்கிறதாக எழுதியிருக்கிறேன். பார்வையற்ற பெண்ணுக்கு அந்த வீட்டோடு அதிகமான நெருக்கவுணர்வு இருக்கும் அல்லவா? பிரிவும் அதிகமாக அவளை பாதிக்கும் அல்லவா?” என்றேன்.
அவர் சொன்னதுதான் அருமையாக இருந்தது. “எனது ஒரு கவிதையில் அவங்க வீட்டைக் காலி செய்துகொண்டு போறாங்க. அந்த வீட்டு பீரோ வெளியே வர மறுக்கிறது. பலவந்தமா அதை இழுக்கறாங்க. சட்னு அது காலைக் கிழிச்சிருது…”
என்ன கற்பனை!
நிறைய உற்சாகமான தருணங்கள் நினைவில் அலை மோதுகின்றன. வயது வித்தியாசமே தெரியாமல் காத்திரமான உரையடல்களை நிகழ்த்துவார் அவர். இன்றைய இளைய தலைமுறையிடம் அவருக்கு நம்பிக்கை இருந்தது. புலம்பல் அவரிடம் கிடையவே கிடையாது.
அவரிடம் நாம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது. வயது 78. நிறைந்த வாழ்க்கை தான், கடமை எல்லாம் முடிந்த களைப்புடன் தான் இருந்தார் அவர். எனது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு (நன்றி ஓ ஹென்றி) வெளியீட்டு விழாவுக்கு சிறப்புரை தந்தார். நல் நினைவுகளுடன் விடை தர வேண்டியிருக்கிறது. காலம் இரக்கம் அற்றது. யாருக்கும் அது விட்டுக் கொடுக்காது.
தமிழின் கவிதைகளில் ஒரு உயிர்ப்பு சார்ந்த குறுகுறுப்பு தர முடிந்தது அவர் ஒருவரால் தான். வெறும் உணர்ச்சித் தெறிப்புகளோ, தத்துவ விசாரமோ அல்ல. வாழ்க்கை காணக் கிடைத்தது அவரது கவிதைகளில். தமிழுக்கே அது வழி காட்டிச் சென்றது. அவரை யாரும் பின்பற்ற முடியுமா என்பதே சந்தேகம் என்பேன். அத்தனை தனிப் பாணி அது.
முடிக்கு முன் இன்னொரு வேடிக்கை கூட ஞாபகம் வருகிறது.
ஒரு பெரிய தொலைக்காட்சி ‘காலை விருந்தினர்’ பேட்டிக்கு ஞானக்கூத்தன் போயிருந்தார். அவரைப் பேட்டி கண்டவருக்கு இலக்கியம் பற்றி லவலேசமும் தெரியாது. “நீங்க எப்பிடி எழுத்துத் துறைக்கு வந்தீங்க?” என்று கேட்டாள் பேட்டியாளினி. “நான் ஒரு  எளிய கிராமத்தில் இருந்து வந்தவன். நான் சென்னை பிரசிடென்சி கல்லூரிக்கு வந்தபோது தான் உலக இலக்கியவாதிகள், பைரன், ஷெல்லி எல்லாரையும் அறிமுகம் செய்துகொள்ள முடிஞ்சது…”
கேட்டாள் பார் பேட்டியாளினி. “அப்பிடியா? அவங்க எல்லாரும் சென்னைக்கு வந்திருந்தாங்களா?”
நல்ல நகைச்சுவைக்கு வடமொழியில் தான் உதாரணம் தர வேண்டுமா?
storysankar@gmail.com
91 97899 87842


Friday, November 16, 2018



16
எஸ்.சங்கரநாராயணன்
 
காகிதத்தில் என்ன இருக்கிறது

தமிழில் விமரிசனம் வளம் பெற்றதாகத் தெரியவில்லை. வாசிப்பு நுட்பங்களை, தாங்கள் ரசிக்கிற அடிப்படையில் விதந்து விவரிக்கிற கட்டுரைகளை நிறையப் பார்க்க முடிகிறது. காய்தல் அல்லது உவத்தல் என்கிற ஒரு நிலைப்பாடே பொதுவாக நமக்கு கருத்துக்களாக அறியக் கிடைக்கின்றன. சில நபர்கள், விமரிசனம் என்று அந்த முழுப் படைப்பின் சுருக்கம் வெளியிடுகிறார்கள். சினிமாப் பாட்டுப் புத்தகத்தில் அந்தக் காலத்தில் ‘கதைச் சுருக்கம்,’ எனப் போடுவார்கள்... அது போல. அவர்களாவது இரண்டு மூன்று பத்திகளோடு நிறுத்தி, மீதியை வெண் திரையில் காண்க, என விலகிக்கொண்டு, நமக்கு ஒரு பகுதியைப் படம் பார்க்க மிச்சம் வைப்பார்கள். இவர்கள் முழுக் கதையுமே சொல்லி விடுகிறார்கள்.
ஒரு படைப்பை வாசிக்கு முன்னான, சுய பக்கச் சார்புடன் அணுகுவதாலேயே இப்படி விமரிசனக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது செருப்புக்குத் தக்க காலை வெட்டும் முயற்சியாகும். ஆங்கிலத்தில் கௌரவமாக, OPERATION SUCCESS PATIENT DIED, என்பார்கள்.
ஆனால் நமது இலக்கண நூல்களே மிகத் தொன்மையானவை. இலக்கணம் எழுதப்பட்டது என்றால் அதற்கு முன்பே இலக்கியம் எத்தனை வளமாக காத்திரமாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நினைக்க வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன. தொன்மைக் காலத்தில் இருந்து நாம் பெற்றவற்றை விட இழந்தவை, அதாவது தொலைத்தவை ஏராளம் என்று தோன்றுகிறது. சங்க இலக்கியங்களின் சிந்தனைக் கட்டுக்கோப்பு தற்செயலானது அல்ல. அது பிற்காலத்தில் தொகுத்த நபரின் கற்பனை வளமும் அல்ல. நம் கையில் இலக்கியமும் இலக்கணமுமாக, அச்சு வடிவாக்கம் பெறக் கிடைத்தது ஓரளவு நல்லூழே, என்பேன்.
தமிழில் விமரிசனம் என எழுதிக் காட்ட வருகிறவர்களின் பக்கச் சார்பு சட்டென அவ்வெழுத்தில் வெளியே, முகத்தில் மூக்காகத் தெரிகிறது. அதைக் காட்டிக் கொள்ள அவர்களும் தயக்கம் காட்டுவது இல்லை. அப்படி, ஒரு குழு என ஆங்காங்கே அவர்கள் இயங்குகிறார்கள். அதை அவர்களே விரும்புகிறார்கள் என்றும் கூறலாம்.
படைப்பின் ரகசியங்களை, நுட்பங்களை எடுத்துரைத்து அதன் நுணுக்கங்களைக் கொண்டாடும் பயிற்சியே நம்மிடம் இல்லை. வாசகனின் துரதிர்ஷ்டமே அது. ஒரு படைப்பு எப்படி அணுகப்பட வேண்டும், என்பதிலேயே இங்கே ரொம்ப எளிய நிலையே கடைப்பிடிக்கப் படுகிறது. அதிலும் பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்களும் அவர்களின் ஆய்வு நூல்களும் பெரும் அயர்ச்சி தருகின்றன. நூற் தலையணைகள்.
உறக்கம் கலைக்க வேண்டிய ஆய்வுகள், உறக்கத்தை வரவழைப்பதா.
ஆயின் இலக்கியம் தமிழில் வெகு காலம் முன்பிருந்தே வெகு நுட்பமாக உரு உக்கிரம் பெற்றிருப்பதை எப்போதும் நான் உணர்ந்திருக்கிறேன். அதை மேலும் கையெடுத்துச் செல்ல முடியாமல் இங்கே மனிதர்களின் கால காலமான அமைதியின்மை, போர்கள், போலிப் போராளி முழக்கங்கள் என இலக்கியம் மடைமாற்றப் பட்டுவிட்டதோ, அதனால் இலக்கியம் சவலைப் பிள்ளையாகி விட்டதோ என்னவோ. புகழ்ச்சி அன்றி இலக்கியம் இல்லை என்கிற காலம் இங்கே வேரூன்றி வெகு காலம் ஆயிற்று.
சங்க காலம் தொட்ட வளர்ச்சி எத்தகைய அளவில் இன்று வந்து சேர்ந்திருக்க வேண்டும்? இடையே பக்தி இலக்கியம் என்று, சைவரும் வைணவரும் பண்ணிசை தந்தார்கள். திவ்யப் பிரபந்தங்கள் வந்தன. அதையும் ஒதுக்கி ஒரு குரல் எழுந்து அதை அப்படியே மூடி மறைத்த சதி. தமிழ்ச் சூழலில் வெளிப்படைத் தன்மை இல்லவே இல்லை. இதை இப்படி நான் எழுதும்போதே, என் சாதி பார்த்து அம்புகள் கிளம்ப ஆரம்பித்து விடுவதும் உண்டு.
யாதும் ஊரே யாவரும் கேளிர், என்கிற சொல்லாடலிலேயே அரசியல் இருக்கிறது, என்பார்கள். போரிட்டு வென்ற அரசனுக்கு சார்பாக, அந்த நாட்டைக் கைப்பற்றிய அரசன் சொல்லி கணியன் பூங்குன்றன், மக்களின் போராட்டத்தை இவ்வாறு சமாதானப் படுத்தி அடக்கி முடக்குகிறார். புதிய மன்னனை ஏற்றுக் கொள்ளவும், பழைய மன்னனின் ஆதரவாக கிளர்ச்சி செய்யாதிருக்கவுமான ரகசிய அழுத்தம் இது. அவனை மன்னனாக ஏற்றுக் கொள்ளச் செய்கிற அடுத்த வரியையும் அவரே சொல்கிறார். தீதும் நன்றும் பிறர் தர வாரா. (நமது தோல்விக்கு நமது விதிப்பயனே காரணம்.)
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, என்பது கீதை. எதைக் கொண்டு வந்தாய் இழப்பதற்கு.
பெரும்பான்மை இலக்கியங்கள் இப்படி ஆளும் அரசை ஆதரிக்கிற அளவிலேயே முடங்கி விடுவதை ஒரு தேர்ந்த வாசகனால் இனம் காண முடியும். ஒரு நுட்பமான மூளைச் சலவை இது.
கதிரையும் சாவியையும் பிரித்தறிய சிரமப் பட வேண்டியிருக்கிறது. சாவிகள் கதிர் என வலம் வரவும் செய்கின்றன. அவை தூபம் போட்டு கொண்டாடப் படவும், அவற்றிற்கான எதிர்க்குரல் அடக்கப் படவுமான சூழல். விமரிசனங்கள் என்று இல்லை... கருத்தாடல்களே முடக்கப் படுகின்றன, கவனமான எச்சரிக்கையுடன்.
மதம் சார்ந்த எந்த சேதியையும் அரசியல் பார்வையுடன் அணுக வேண்டும். அரசியல் சார்ந்த எந்த சேதியையும் ஆன்மிகத்துடன் கண்ணோட்டம் செய்ய வேண்டும், என்பது ஒரு பார்வைமுறை.
இயேசு, ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு, என்றார். பெரும்பான்மை யூதர்கள் மத்தியில் நாம் வாழ்கிறோம். யூதன் உன்னைக் கன்னத்தில் அடித்தால் எதிர்த்து முரண்டு பிடித்துப் போராட முனையாதே. நம் இனம் சிறியது... அடங்கிப் போ, அவன் இனம் கொந்தளித்தால் தாங்காது நம் இனம், என்று இயேசு சொன்னதாக ஒரு விளக்கம் இருக்கிறது.
சம்பிரதாயப்படி ராமன் அரசாள வேண்டும். ஆனால் தசரதனினிடம் தன் மகன் பரதனை அரசனாக்க இளையாள் கைகேயி முயல்கிறாள். பட்டத்து அரசிக்கு அடுத்த மனைவிகள் என்னதான் ஆனாலும் பட்டத்து அரசிக்கு அடிமைகளே. அவளது குழந்தைகளும் அடிமைகளே. என்ற அளவில், லெட்சுமணன் அடிமையாக ராமனோடு கானகம் அனுப்பப் படுகிறான்... என்கிற ஒரு பார்வை உண்டு. அதை மறுத்துவிட முடியாது.
ராமாயணத்தில் கடைசி வரை கற்பைக் காப்பாற்றியவள் சீதை. அப்படியென்றால் ராவணனும் கற்பை இழக்கவில்லை, என்று சொல்வார்கள்.
தர்க்கம் ரொம்ப வேடிக்கையான விஷயம். அதுபற்றி வேறு சந்தர்ப்பத்தில் பேசலாம்.
நகைச்சுவையும் பழமொழிகளுமே நம்மிடையே மிகச் சிறப்பாகப் பொலிந்தவை. மூத்தா பத்தினி - என்பார்கள். இளையவள்? என நாமே கேள்வி கேட்டு, பதிலும் வரவழைத்துக் கொள்ளலாம். பேச்சு வழக்கே இத்தனை சிறப்பாக ஒரு மொழி அமைவது அதன் தொன்மையின் சிறப்பினால் தான். சம்சாரி வீட்டில் தீ பிடித்தால் காலைக் கட்டிக் கொண்டு அழுதானாம், என்று ஒரு சொலவடை. (காலை விட்டுவிட்டால் போய் அவன் தீயை அணைத்து விடுவானாம். அதை அனமதித்து விடாத நல்ல எண்ணம் அது.)
புரூசன் அடிச்சதுக்கு அழல்ல. இளையாள் சிரிப்பாளேன்னு அழுதாளாம்.
ஜவுளிக்கடையில் நஷ்டம் வந்தால் முதலாளி தினசரி பட்டு வேட்டி கட்டுவார்.
மருமக புண்ணியம் பண்ணியிருந்தா தான் மாமியா படுக்கைல கெடக்காம (செத்துப்) போவா.
தொன்மையான மொழி என்பதாலே அதன் ஆளுமைத் திறனும் அவ்வளவில் மிகுந்த சூட்சுமங்கள் கொண்டதாக சங்ககாலம் தொட்டே புழங்கி வருதல் அருமையான விஷயம். எந்த மொழிக்கும் இல்லாத அதன் சிறப்பு அதன் தொன்மையால், தொடர்ந்த பயன்பாட்டால் விளைந்திருக்கும். ஐவகை நிலங்களாகப் பாடுபொருளைப் பிரித்து, திணைகள் வகுத்து, கருப்பொருள், உரிப்பொருள் என்ன இத்தனை வகைமையான இலக்கணம் வேறு எந்த மொழியிலும் இல்லை. கல்யாண விருந்தில் இலை முழுசுமாய்ப் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள், அது போல.
உரையாடலில் இலக்கியம் என்றால் பிராந்தியத்துக்கு பிராந்தியம் பேச்சுமொழி வித்தியாசப் படுகிறது என்ற அளவில், இலக்கியம் அதன் நீடித்த தன்மைக்கு செய்யுளைத் தேர்வுசெய்து கொண்டது, எனத் தோன்றுகிறது.
முன்னமே குறிப்பிட்டது போல தமிழில் நிறுத்தற் குறிகள் கிடையா. ஓலைச் சுவடிகளில் எழுதும்போது நிறுத்தக் குறிகள் ஒட்டை யிட்டு விடலாம் என்பதற்காகத் தவிர்க்கப் பட்டிருக்கலாம், என்பார்கள். அது அல்ல. தமிழின் இலக்கண வரையறை கறாரானது. எழுவாய் பயனிலை செயப்படு பொருள் என இலக்கணம் சொல்கிறது. வினைச்சொற்கள் வாக்கியத்தின் இறுதியில் அமைகின்றன. ராமன் போனான், என எழுதினால் போனான் என்றதோடு வினை முற்றுப்பெற்று விடுகிறது. தனியே அங்கே முற்றுப் புள்ளி தேவையாய் இல்லை. அதைப்போலவே அவன் வந்தபோது, நான் உறங்கிக் கொண்டிருந்தேன், என்றாகிற வாக்கியத்தில் வந்தபோது, என்று சொல்லிவிட்டால் கமா அதிகபட்சமே. அத்தனை சிறப்பானது நம் இலக்கணம். தவிர, வினைச்சொல்லோடு விகுதிகள் சேர்த்துப் பயன்படுத்தும் பழக்கமும் நமக்கு இருக்கிறது. வந்தான், வந்தாள், இப்படி மேலதிகம் ஒரு வினைச்சொல், வினையைத் தாண்டி, காலம், பால் என நமக்குப் பகிர்கிறது.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே 

பசும்புல் தலைகாண்பு அரிது 

வான்சிறப்பின் இந்தக் குறள் நினைக்குந்தோறும் மயக்கத்தக்க அழகுடன் பொலிகிறது எனக்கு. மழை என்று சொல்லாமல் விசும்பின் துளி, என்பதே நல்ல கவிதைத் துவக்கம். வானம் என்ற பிரம்மாண்டத்தை மனசில் நிறுத்தி, பிறகு துளி என சிறு உருவை மனசில் கொண்டு வருகிறார் திருவள்ளுவர். அது விழா விட்டால்?... என்று கேள்வி கேட்கிறார். பிறகு பசும் புல், இளம் புல் என்பதை அறியலாம். இருப்பதில் சிறிய தாவரம் புல். அதன் தலை கூட நாம் காண்பது அரிது, சிறிய புல் என ஒரு உருக் கற்பனை, அதன் தலை, எத்தனை சிறிது. அதையும் காண்பது அரிது... என்பது மழையின் முக்கியத்துவத்தை எத்தனை விரிக்கிறது.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் காண்பர், என்கிற போதும் இந்த உவமையின் காட்சித் திறன், அப்பப்பா, திகட்டுகிறது.
வள்ளுவரின் எத்தனையோ கவிதைகள் ஒலியழகும் சொற்செட்டும் சிந்தனை வீச்சும் பெற்றுப் பொலிகின்றன. உலகின் சிறந்த நூல்களில் ஒன்று வள்ளுவம். சங்கக் கவிதைகளில், ஒன்றைச் சொல்லி அது தொடர்பான இன்னொன்றை மனதில் இருத்தும் உத்தி சாதுர்யம் சரளமாகக் காணக் கிடைக்கிறது. காதலன் தோப்பில் காத்திருப்பதை, மழையில் தவித்து நிற்கும் யானையைப் பற்றிச் சொல்லி குறிப்புணர்த்துவதைப் பார்க்கலாம்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

வள்ளுவரின் இந்தக் குரல் எத்தனை இயல்பாக, குற்றம் சாட்டாத பாவனையில் எழுகிறது. என்ன சொல்ல வருகிறார். இன்னாத கூறாதே, என்கிறார். ஆனால் கூறாதே என அவர் அறிவுரை வழங்குகிற பாவனையைத் தவிர்க்கிறார்.
கண்ணதாசனின் ஒரு பாடல் நினைவு வருகிறது.
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று...
நான் காற்று, நீ கீற்று, என்பது வெறும் சந்தமாகவோ உவமையாகவோ நின்று போய்விடவில்லை. ஒரு விண்ணப்பம் வைக்கிறான் காதலன். அதைச் சொல்லாமல் சொல்கிறான் காதலன். நான் பாடுகிறேன். நீ ஆடு, என்கிறான். ஆனால் அதை எத்தனை பாவனையாகச் சொல்கிறான்...
இலக்கிய நுட்பங்களோடு அதை நுகர்வது என்பது பெரும் வாசிப்பு அனுபவம். ஒரு எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் நாவல். ‘டெத் இன் தி ஆஃப்டர்நூன்’ - அந்த நாவலா தெரியவில்லை. அந்தப் பெண்ணை இருவர் காதலிப்பார்கள். இன்னும் யார் அவளைக் காதலிக்கிறாள் என்பதை அவள் வெளிப்படுத்தாத நிலையில் இருவருமே காத்திருக்கிறார்கள். இருவருமே அவளுக்கு நல்ல நண்பர்கள். ஒரு எருதுபொருதும் விளையாட்டை வேடிக்கை பார்க்க என அவள் தன்னுடன் வரும்படி இருவரையும் அழைத்திருப்பாள். ரயில் நிலையத்தில் அவளுக்காக அவர்கள் இருவரும் காத்திருப்பதாகக் காட்டுகிறார் ஹெமிங்வே. அவள் இல்லாமல் அவர்கள் மாத்திரமான காட்சி அமைப்பு எத்தனை உள்ப் பரபரப்பும் வெளியே அமைதிபோலானதுமான கட்டம். இருவருக்குமே அவள் தன்னைத் தான் இறுதியில் வரிப்பாள், என்கிற தளரா நம்பிக்கை. அதை மற்றவனிடம் எத்தனை நைச்சியமாக வெளிப்படுத்திவிட முடியுமோ அப்படி வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதை இரண்டே இரண்டு உரையாடல் வரிகளில் ஹெமிங்வே பதிவு செய்கிறார். அடேயப்பா, அதுதான் உலக எழுத்து என்பது. அந்த உரையாடல் இதுதான்.
தனக்கு அவளைப் பற்றி நன்றாகத் தெரியும், என மற்றவனிடம் காட்டிக் கொள்கிற முனைப்பில் ஒருத்தன் ஆரம்பிக்கிறான்.
“அவ எப்பவுமே இப்படித்தான். சொன்ன நேரத்துக்கு வருவதே யில்லை.”
அடுத்தவன் பதில்.
“இல்ல. என்கிட்டச் சொன்னா சரியா வந்திருவா.”
என்ன நுட்பமான உரையாடல். இடையே எத்தனை குமுறல்கள், ஆவேசங்கள் தெரிகின்றன. வெளியே ஆழம் காட்டாத கடல்.
ஒரு படைப்பை எப்படி வாசிப்பது, எப்படி ரசிப்பது என எடுத்துரைக்கிற அளவில் நமக்கு ஆசான்கள் அமையவில்லை என்றுதான் வருத்தமாய் இருக்கிறது.
ஒரே வரியில் ஒரு கதை எழுதினார் ஹெமிங்வே.
CHILDREN SHOES FOR SALE, UNWORN.  பிஞ்சுகள் இன்னும் அணிந்தே பார்த்திராத காலணிகள்... என்பது எவ்வளவு அழகான கவிதையாய் இருக்கிறது கேட்க.
அதைவிட ஒரே வரியில் எனக்குப் பிடித்த இன்னொரு வரி. இதை எழுதியவர் பெயர் ஞாபகத்தில் இல்லை.
பாராசூட் விற்பனைக்கு, ஒரேமுறை பயன்படுத்தியது, திறக்கப்படாதது.
படைப்பு நுட்பங்களுக்காக தனி உரைநூல்கள் என்கிற பாணி அந்தக் காலத்தில் இருந்தது. அந்த வழக்கமும் விட்டுப் போயிற்று. அவற்றால் என்ன பயன், என்றால் அது ஒரு வகையாய் அந்தப் படைப்பை அணுக உதவும் என்றாலும் வாசகன் தன் பார்வையில் பிரிந்து சென்று சுய விளக்கங்களை தன் வாசிப்பு அனுபவம் சார்ந்து பகிர்ந்துகொள்ள முடியும்.
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.
இது காளமேகப் புலவரின் ஒரு பாடல். ஒரு சத்திரத்தில் அங்கே அவர் போயிருந்தபோது காத்தான் என்கிற சத்திரக்காரன் அவருக்குச் சாப்பாடு போடத் தாமதம் ஆக்கிவிட்டான் என்ற கோபத்தில் பாடியது. சத்திரக்காரன் அவர் காளமேகம் என்றறிந்து, ஐயோ வசை பாடி விட்டீர்களே, என மன்னிப்பு கேட்டதாகக் கதை. காளமேகம் சமாதானப் படுத்தினாராம்... இல்லை, உன்னை வாழ்த்தியே பாடினேன் என்று சொல்லி ஒரு விளக்கம் தந்தாராம்.
அத்தமிக்கும் போதில் அரிசி வரும் என்றால், ஊரிலேயே பஞ்சம் என்றாலும் அங்கே அரிசி இருக்கும், என்று பொருள். குத்தி உலையிலிட... ஊரடங்கும், என்றால் ஊர் பசியடங்கும், என விளக்கம். ஓரகப்பை அன்னம் இலையில் விழ வெள்ளி எழும், என்றால் விடிஞ்சது போ, என்பதல்ல, சூரியனே அந்த அன்னத்தின் வெண்மையில் வெட்கி ஓடும், என புகழ்ந்துரைத்ததாக விளக்கம் தரப்பட்டதாம்.
இது கதை. தமிழ் ஆர்வலரான ஒரு நண்பர் இதைக் கேட்டுவிட்டு ஒரே வரியில் இதைச் சிறப்பித்துச் சொன்னார். அந்தக் கவிதைக்கு அதே குற்றஞ் சாட்டும் பொருளே வைத்துக் கொண்டாலுமே, “அங்கே நேரம் காலம் இல்லாமல் இருபத்தி நாலு மணி நேரமும் சாப்பாட்டுப் பந்தி நடைபெறும்” என்று பொருள் சொன்னார்.
எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள். எனக்குத் தோன்றவில்லையே இது.
இரட்டுற மொழிதலில் மன்னன் காளமேகம். பிற மொழி எதிலாவது இந்த ‘இரட்டுற மொழிதல்’ பாணி இருக்கிறதா தெரியவில்லை.
விக்கிரமாதித்தனின் ஒரு கவிதை உதாரணம் சொன்னால், கவிதை மனம் எப்படி சட்டென விழித்து இயங்குகிறது, என்று அறியலாம். கவிதை மூலம் கவிதை மனத்தைக் கண்டடைவது பெரும் பயிற்சி.
இக்கரைக்கும் அக்கரைக்கும்
அலைகிறான் ஓடக்காரன்
அமைதியாய் ஒடிக்கொண்டிருக்கிறது
நதி.
ஒரு காட்சி அவனில் பதிகிறது. ஓடக்காரன் ஒருவன் நதியைக் கடக்க பரிசல் ஓட்டிச் செல்கிறான். ஆனால் கவிஞன் சட்டென தன்னுலகில் தரிசனப் படுகிறான். எப்படி? ஓடக்காரன் நதியை எப்படிக் கடக்கிறான், குறுக்கு வசத்தில். இந்தக் கரையில் இருந்து அந்தக் கரை வரை அவன் போகிறான். ஆனால் நதி? அது நீள வசமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வாழ்க்கையில் நாமும் சிறு பகுதியையே கடக்கிறோம். ஒருகாலும் வாழ்க்கையின் பிரம்மாண்டத்தை நாம் அறிய முடியாது, என்று அறிவிக்கிறார் கவிஞர்.
நிறைய முற்போக்குத் தளங்களில் கிண்டல் செய்யப்படுகிற ஒரு நகுலனின் கவிதை நினைவில் தட்டுகிறது.
காகிதத்தில்
என்ன இருக்கிறது
காகிதம்.
ஆனால் இங்குதான் கவிஞனின் நுட்பம் தெரிகிறது. தனது நுட்பத்துக்காக கவிதையை, அதன் எளிமையை விட்டுக்கொடுக்க நகுலன் தயாராய் இல்லை.
என்ன சிறப்பு இந்தக் கவிதையில்? காகிதம் என்பது என்ன என்று பார்க்கலாம். காகிதம் என்பது ஒரு ஊடகம். அதில் எதாவது எழுதப்படும் போது மற்றவர்கள் அதை அறிந்துகொள்கிறார்கள். அது ஒரு ஊடகமாகப் பயன்படுத்தப் படுகிறது. அதில் ஒருவன் எழுதிக் காட்டினால் மற்றவன் வாசித்து அதை அறிந்து கொள்கிறான்.
வேறு ஊடகங்கள் எவை எவை என்று பார்க்கலாம். கண்ணாடி ஒரு ஊடகம். அதில் நாம் பார்த்தால் நம்மை அது காட்டுகிறது. தண்ணீர். தண்ணீர் ஒரு ஊடகம். அதுவும் நம் பிம்பத்தைக் காட்டுகிறது.
நகுலன் என்ன சொல்கிறார். காகிதத்தில் என்ன இருக்கிறது காகிதம், என்கிறார்.
ஆக மற்ற ஊடகங்களில் இல்லாத ஒரு சிறப்பை இந்த ஊடகத்தில், காகிதத்தில் அவர் பார்க்கிறார். அவரது தரிசன உக்கிரமே இந்தக் கவிதை.
கண்ணாடி என்ன செய்கிறது, நாம் அதில் பார்க்கையில் நம்மை அது காட்டுகிறது. நாம் பார்க்காவிட்டாலும் அது வேறு எதையாவது காட்டிக் கொண்டே தான் இருக்கிறது. எங்கிருந்தும் நாம் கண்ணாடி பார்த்தால் அதில் எதாவது பிம்பம் தெரிந்தபடியே இருக்கும். தண்ணீர்? அதுவும் அப்படியே நாம் பார்த்தால் நம்மையும், நாம் பார்க்காவிட்டாலும் அது எதையாவது காட்டியடிபயே தான் இருக்கும்.
ஆனால் காகிதம்? அது நாம் எதுவும் எழுதாதவரை...
எதையும் காட்டாது.
அதுவே அதன் தனித் தன்மை. மற்ற ஊடகங்களைப் போல அல்ல அது.
காகிதத்தில்
என்ன இருக்கிறது
காகிதம்.

• • •

(மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்)
91 97899 87842
storysankar@gmail.com

Friday, November 9, 2018



part 15 
லிப்ஸ்டிக் அணிந்த பெண்மணி
எஸ். சங்கரநாராயணன்
*
ம.ந.ராமசாமிக்கும் எனக்குமான நட்பு பல பத்தாண்டுகள் கடந்தது. ஒருவகையில் பழம் திரைப்படங்களின் காதல் காட்சி போல என இதை, இந்த நட்பைச் சொல்லிவிடலாம். கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களில் டமாலென்று அவனும் அவளும் மோதிக்கொண்டு சண்டைவெடிக்கும். பிறகு மெல்ல அவனைப் பார்க்க அவளுள் வெட்கம் பூசிய சந்தோஷம் வரும். ம.ந.ரா. எனக்குப் பரிச்சயம் ஆனபோது எனக்கு அவர்மீது பல கடுமையான விமரிசனங்கள் இருந்தன. சில இன்னும் இருக்கின்றன.
அவரது பெரும்பாலான கதைகள் எனக்கு சிவப்புச்சாயம் பூசிய லிப்ஸ்டிக் பெண்மணியை நினைவு படுத்துகின்றன. 'அலிபாபாவும் 40 அரசியல்வாதிகளும்' போன்ற கேவா கலர்த் திரைப்படங்களைப் போல அவர் எழுத்தில் எப்பவுமே ஒரு சிவப்புத் தீற்றல் பின்புலம், கான்வாஸ் இருக்கிறது. செம்மண் விளைச்சல்கள் ம.ந.ரா. கதைகள். அதில் ம.ந.ரா. பாணி என்று ஒன்று அமைந்திருக்கிறது. கதைக் கருவைக் கேட்ட மாத்திரத்தில் இது ம.ந.ரா. கதை தானே, என்று சொல்லிவிடக் கூடிய ஓர் அம்சம், முத்திரை அதில் நமக்கு வாய்க்கிறது.
அது, அந்த முத்திரை எனது எழுதுமுறையோடு ஒவ்வாதது. தேவையும் இல்லை தான்.
'அக்பர் சாஸ்திரி' என்று ஒரு கதை. ஆயுத பூஜை அன்று சாக்லேட்டுகளைப் படையலாகப் பரப்பி நைவேத்தியம் பண்ணி ஆராதனை காட்டும் ஒரு முஸ்லிமின் கதை. இதில் பிரசாதம் என்பது சாக்லேட், என்பது ம.ந.ரா. இழுக்கும் வம்பு, என்றால் அதில் முஸ்லிம் பூஜை செய்வது வன்முறை. யாராவது வந்து என்னுடன் சண்டை போடுங்களேன், என நெஞ்சை நிமிர்த்திக் காட்டும் WWF வம்பு.
அவர் எழுதவந்த தமது வசந்த காலத்தில் இந்த மோஸ்தர் கொஞ்சம் அதிகம். காரம் தூக்கலான ஆந்திரா சமையல். அக்கிரகாரத்துப் பெண் கற்பிழந்து வீடு திரும்பினால் அவள் அம்மாவோ, நார்மடிப் பாட்டியோ அவள் தலையில் ஒரு செம்பு ஜலம் ஊற்றி, எல்லாம் சரியாயிட்டதுடி, என தெம்பு சொல்லி வீட்டுக்குள் அழைத்துக்கொள்ளும் புரட்சி காலம். ஏன் அக்கிரகாரப் பெண் கற்பிழக்க வேண்டும் தெரியவில்லை. கிரகப் பிரவேச வைபவத்தன்று வாத்தியார் புண்ணியாக வசனம் செய்த செம்புத் தீர்த்தத்தை மாவிலையில் எடுத்து அறை அறையாக ப்ரோஷணம் பண்ணி, சுத்தி செய்வார். அந்தத் தாக்கம் இது. இன்னுஞ் சிலர் விலைமாதர்களுக்கு வக்காலத்து வாங்கித் திரிந்தார்கள். அவர்கள்காட்டும் கணிகையர் ஆக்ரோஷமாய் லட்சியம் பேசினார்கள். இவர்களுக்கு தண்டனை வழங்குகிறீர்கள், இவர்களை இப்படி ஆக்கிய சமுதாயத்துக்கு என்ன தண்டனை?... என எழுத்தாளர் பொங்கிய காலம். உங்களில் யார் தவறு செய்யாதவரோ, அவரே இவளை தண்டிக்கத் தகைமை கொண்டவர், என்பது பைபிள்.
சமுதாயம் தரங்கெட்டு தள்ளாடிக் கொண்டிருக்கையில் ம.ந.ரா. போன்ற மகான்கள் அவதாரம் எடுக்க நேர்ந்து விடுகிறது. எழுத என உட்கார்ந்தால் சாமி வந்தாப்போல ஒரு கிறுகிறுப்பும் கண் சிவப்பும் அவர்களை இயக்குகிறதோ என்னவோ. எனக்கு ம.ந.ரா.வைப் பத்திரிகைகளில் வாசித்ததை விட, அவரது முதல் சிறுகதைத் தொகுதியில் தான் பிடி, அறிமுகம் கிடைத்தது. தனித்தனியே அவ்வப்போது வெளியாகும் பத்திரிகைக் கதைகளில் ஒரு எழுத்தாளன் பல்லாக்கு பவனி வந்துவிடலாம். அவன் கதைகள் பலவும் ஒரே கூரையில் அடங்கும் போது தான் அவனை எடைபோட முடியும்.
அவரது முதல் சிறுகதைத் தொகுதி 'வாழத் துடிப்பவர்கள்.' தலைப்பே எனக்கு ஏனோ நிலத்தில் விழுந்த மீனை ஞாபகப்படுத்தி விட்டது. துக்க ஜீவிகளை அவரது பெருங்கருணை அள்ளியெடுத்து ஆதுரத்தோடு உச்சி மோந்தது. நான் அப்போது 'நிஜம்' என சிற்றிதழ் ஒன்று துவங்கினேன். ரெண்டே இதழ்கள் தாம் அது வெளியானது. அது ஏன் நின்றது? அது இந்த ராமாயணத்தின், ம.ந.ராமாயணத்தின் கிளைக் கதை. இப்போது வேணாம் அது.
'நிஜம்' இதழில் 'வாழத் துடிப்பவர்கள்' கதைகளை நான் கடுமையாய் விமரிசித்து மதிப்புரை தந்திருந்தேன். நானும் இந்த உலகத்துக்குப் புதுசு. எனக்கும் கையில் கம்பு கிடைத்தால் சும்மாவாச்சும் சுழற்றிப் பார்க்கிற ஆசை. பிரமைகள் இயக்குகிற வேளை எனக்கும் இருந்திருக்கலாம்.
பிற்பாடு வல்லிக்கண்ணனை நான் சந்திக்கிறேன். யாருக்கோ போஸ்ட் கார்டு எழுதிக் கொண்டிருந்தவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். ம.ந.ரா.வின் 'வாழத் துடிப்பவர்கள்' பற்றிய என் மதிப்புரையை அவர் வாசித்திருந்தார். ''எங்களுக்கெல்லாம்அவர் கதைகள் சரியாக இருப்பதாகத் தான் படுகிறது'' என்றார். அதைப்பற்றி எனக்குதான் போஸ்டு கார்டு எழுதிக் கொண்டிருந்தாரோ என்னவோ.
இப்போது ஒரு யூகம் எனக்குக் கிடைத்தது. என்ன அது? இந்தக் கதைகளை வாசிப்பதில் எனக்கு ஒரு 'தலைமுறைச் சிக்கல்' இருக்கிறது. அப்படி என்றால் என்ன? இப்போதும் கூட சிவாஜி படம் தொலைக்காட்சியில் பார்த்தால் விக்கி விக்கி அழும் மகாத்மாக்கள் உளர். நமக்கு தான் அழுகை வர மாட்டேன் என்கிறது. நிறைய பாவப்பட்ட எழுத்தாளர்களுக்கு ஒரு அவலம் நேர்ந்து விடுகிறது. இதில் சக எழுத்தாளனாக நான் அவர்கள் சார்ந்து வருத்தப்படுகிறேன்.
என்ன அவலம் அது, ம.ந.ரா. இந்தத் தொகுப்பில் பதினெட்டு ஆண்டுகளில் தாம் எழுதிய கதைகளைத் தொகுத்திருந்தார். ராமரின் வனவாசத்துக்கும் பெரிய ராமாயணக் கதை இது. அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிக்கொணர அவர் இத்தனை காலம் காத்திருக்க, மெனக்கெட வேண்டியிருந்திருக்கிறது. முதல் தொகுப்பு என்கிற அளவில் தமக்கு வரவு சொல்லிய கதைகளை யெல்லாம் ஒன்று திரட்டி நெல்லிமூட்டையாய் இதில் கட்டியிருக்கிறார்.
எங்களுக்கு இல்லை இந்த அவலம். ஒரு வருடம், அல்லது அடுத்த வருடத்திலேயே எங்கள் கதைகள் நூல் வடிவம் பெற்றுவிடுகின்றன. தீபாவளி மெருகு குலையாத சட்டைகள் அவை. இவற்றுக்கான விமரிசனங்களையும் நாங்கள் கதை எழுதிய அதே வீர்யத்துடன் எதிர்கொள்ள வாய்த்து விடுகிறது. தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என அத்தனை பேரையும் ஒண்ணா உட்கார வைத்து எடுத்த குரூப் ஃபோட்டோ போல ஒரு சிறுகதைத் தொகுப்பு எங்களுக்கு ஆகாது. தனித் தனி ஆல்பங்கள் அவை.
குறிப்பாக இதில் ஒரு விஷயம் இருக்கிறது. நான் முதலில் எழுதிய விஷயங்களுக்கும், பத்து வருடத்தில் எழுதும் இப்போதைய விஷயத்துக்குமே எனக்குள்ளேயே கருத்து அளவில் மாற்றங்கள் உண்டு. வளர்ச்சியும் உண்டு. முன் சொன்ன விஷயங்களை மறுத்தும் நான் சிந்திக்க ஆரம்பிக்கிறது உண்டு. இப்படி காலத்தால் சிதறுண்ட கதைகளைச் சேர்க்கையில் ஒன்றுக்கொன்று நடையிலும், கருத்தளவிலும், சொல்முறையிலும், பார்க்கும் கோணத்திலுமே ஒட்டாமல் போகிற வாய்ப்பு உண்டு. கதைத் தொகுதி  நவகிரக சந்நிதி போல ஆகிவிட வாய்ப்பு உண்டு. பதினெட்டு வருடமாக எடுத்த படம் எப்படி இருக்கும்? அதன் கதாநாயகி சில இடங்களில் குண்டாகவும், சில இடங்களில் ஒல்லியாயும் இருப்பாள்...
நான் வந்துபோனதை யிட்டு வலலிக்கண்ணன் ம.ந.ரா.வுக்கு போஸ்ட் கார்டு எழுதியிருக்கலாம்.
வல்லிக்கண்ணன் சொன்னது சரி. இந்த முற்போக்கு வட்டாரக் கதைகளை வாசிக்க அடிப்படையில் ஒரு வாசிப்புமுறை தேவைப்படுகிறது. வேறொரு வாழ்க்கைச் சூழலை அவர்கள் விவாதம் என முன் வைக்கிறார்கள். கிளர்த்திப் பரத்துகிறார்கள். ஜாதிக் கொடுமை என அவர்கள் அரிவாளும் முறுக்கு மீசையுமாய்க் கதைகள் சொல்கிற போது, அது எங்களுக்குப் புதிய விஷயமாய் இருக்கிறது. ஏனெனில் நாங்கள் ஜாதி பார்க்காத, பார்க்கத் தெரியாத ஒரு சமூகத்துப் பிரஜைகள். பள்ளியிலும் கல்லூரியிலும் எங்களுடன் வாசித்தவர்களின், பழகியவர்களின் ஜாதியே தெரியாமல் நாங்கள் அன்பும் நட்புமாய்ப் பழகினோம். வாத்தியாரைக் கிண்டல் அடிப்பதில், பட்டப்பேர் வைப்பதில் நாங்கள் அத்தனை ஒற்றுமை பாராட்டினோம்.
ம.ந.ரா. சொல்லும் சமூகக் கொடுமைகள் எங்களுக்குப் புதிதாய் இருந்தன. எங்களுக்கு அவை நாடக மிகை நவிற்சியாய்ப் பட்டன. இதைப்போலவே அவருக்கும் எங்கள் கதைகள் சுகப் பிரசவங்களாய் அலுப்பு தட்டியிருக்கலாம். சிசேரியன் கேசுகள் டாக்டருக்கு ஒளிவட்ட வாய்ப்பு அளிக்கின்றன. என் கதைகளை வாசித்துவிட்டு அவரும் காரசாரமாக எனக்கு எழுதினார். நானும் அவரை அத்தனை விமரிசனம் பண்ணிவிட்டு வேறு மாதிரியாய் அவர் எனக்கு எழுதுவார் என எதிர்பார்க்கவில்லை. என் கதைகள் பற்றி. என்னைப் பற்றிய அவர் விமரிசனம் ராமாயணத்தின் இன்னொரு கிளைக்கதை. இப்போது வேணாம்.
'வாழத் துடிப்பவர்கள்' பற்றிய என் புத்தக விமரிசனத்தை ம.ந.ரா. மௌனமாக எதிர்கொண்டார். பிறகு நிறைய நாங்கள் கடிதங்கள் எழுதிக் கொண்டோம். என் கதைகளை அவர் வாசித்தார். அவர் கதைகளை என்னுடன் பரிமாறிக் கொண்டார். ஒரு வேடிக்கை போல, இரண்டு சந்தர்ப்பங்களில் அவரது இரு கதைகளை, ''நீங்கள் இதை இப்படிச் சொல்லியிருக்கலாம், என் பாணி இது,'' என நானும் அதே கருவை வைத்து கதை எழுதிக் காட்டினேன்.
'சிறு வரலாறு - சிறுகதை அல்ல' என ஒரு கதை. சினிமாவில் பெரிய வாய்ப்பு தேடிக்கொண்டிக்கும் உதிரி நடிகை  ஒருத்திக்கு நடனம் சொல்லித் தரும் மாஸ்டர் பற்றிய கதை. மாஸ்டர் அவளது அண்ணனிடம் சம்பளம் என்று கேட்கிறபோது அவன், சம்பளமா? வேணா அவளை அனுபவிச்சிருங்க, என்பதாக கதையை அவர் முடிப்பார். இந்தக் கதையை நான் 'ரசாபாசம்' என எழுதி குங்குமம் இதழில் வெளியானது. அந்த டான்ஸ் மாஸ்டர் வேலைக்கு பங்கம் வந்துவிடும் பயத்திலேயே பிரம்மச்சர்ய விரதத்தை வேறு வழியில்லாமல் காப்பாற்றி வந்தவன், என்கிற பாத்திர வார்ப்பு செய்திருந்தேன். இறுதியில் நிலைமை கட்டுமீறி அந்தப் பெண்ணே அவனுடன் நெருக்கமாய் வரும் சமயத்தில் அவள் அண்ணன் திடுமென்று கதவைத் திறந்து வீட்டினுள் பிரவேசிக்கிறான். 'நீங்கதானா?' என்றபடி திரும்ப கதவைச் சாத்திவிட்டுப் போய்விடுகிறான், என்கிறதாக என் கதை முடிந்தது.
ரெண்டாவது கதை சந்திரமதி. சன்டே இந்தியனில் ம.ந.ரா. எழுதியது. வீட்டில் மூத்தவன் பைத்தியமாகி, அடுத்தவளின் கல்யாணம் தடைப்பட்டுக் கொண்டே போகும். அப்பா இவன் இடைஞ்சலைப் பொறுக்க முடியாமல் ஒரு மீனவனிடம் பணம் கொடுத்து இவனைக் கடலில் தள்ளிவிட்டுவிடச் சொல்லி அனுப்புவார். கடற்கரையில் அவர் மீனவனுக்காகக் காத்திருக்கும் போது, வெகு நேரம் கழித்து கரையேறி வந்தது, மீனவன் அல்ல, அந்த பைத்தியம், என்கிறதாக ம.ந.ரா. கதை முடியும். என் கதை 'மேளா' கல்கியில் வந்திருந்தது. வடநாடு நோக்கிப் போகும் ரயிலேறி ஊர் தாண்டி பாஷை தெரியாத எதோ ஊரில் திருவிழாக் கூட்டத்தில் அவனை விட்டுவிட்டு அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தபோதுதான் அப்பா கவனிப்பார். அவர் பர்ஸ் திருடு போயிருக்கும். வீடு திரும்ப சல்லிக் காசு இல்லாத நிலையில் ரெண்டு நாள் மூணு நாள் திண்டாடி எப்படியோ ஊர் வந்து சேர்ந்து, அவர் தன் வீட்டுக் கதவைத் தட்டினால், வந்து திறந்தது அந்தப் பைத்தியம் - இது என் முடிவு.
அந்தப் பைத்தியம் வேறு ஊரில் படும் பாடுகளை இவர்களும் அனுபவித்தார்கள், என்பது குறிப்பு. தவிரவும், கள்ள ரயில் ஏறுவதோ வீடு திரும்புவதோ அவனக்கு சாதாரணம். அது ஒரு மிருக சூட்சுமம். நாய்கள், ஆடு மாடுகள், பூனைகள்... எங்கே கொண்டுவிட்டாலும் தன்னைப்போல பழைய இடம் திரும்பி விடும். அந்த சூட்சம அம்சங்கள் பைத்தியங்களுக்கும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
இங்கே இரு விவரங்கள் சொல்லிவிடலாம். இவை ம.ந.ரா.வுடன் பேசி அவருக்குத் தெரிந்து நான் எழுதி அவருக்குக் காட்டிய கதைகள். இரண்டாவது, இவ்விரு கதைகளிலுமே ம.,ந.ரா.வின் கதைமுறுக்கம் காணக் கிடைக்கிறது அல்லவா?
இன்னொரு விவரமும் சொல்லலாம். இஸட் பிளஸ் - குங்குமம் இதழில் நான் எழுதிய இன்னொரு கதை. மந்திரிமார்களின் பாதுகாப்புக்கு என மெய்க்காப்பாளனாக கையில் துப்பாக்கி ஏந்தி அவர்களுக்குப் பின்னால் நின்றபடி கூட்டத்தையே சந்தேகமாய் உற்று நோட்டம் பார்க்கிற ஒருவனின் கதை அது. அரசியல்வாதி மேடையில் சிரிக்கச் சிரிக்கப் பேசினாலும், அதைக் கேட்டு கூட்டமே ஹோவென்று சிரித்தாலும் அவன் அப்படியே இறுக்கமாய் முழு விரைப்பாய் நிற்பான். இந்த என் கதைக் கருவைக் கேட்டதும் ம.ந.ரா. இதன் கடைசிப் பகுதியை உடனே தொலைபேசி உரையாடலின் போது சொன்னார். கைதேர்ந்த ரௌடி அமைச்சராகி வருகிறான். ஏய் எனக்கா பாதுகாப்பு தர்றே நீயி? என்னை யார் என்ன செய்துவிட முடியும்?... எனப் பேசுகிறான். நான் கவனம் மிக்கவன் ஐயா. உங்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிப்பேன், என்று பாதுகாவலன் சொன்னபோது. கிழிச்சே, இந்தா இது உன் பர்ஸ் தானே? - என்று நீட்டுவதாக ம.ந.ரா. முடிவு உரைத்தார். இந்த முடிவை அப்படியே என் கதையில் நான் பயன்படுத்தியதையும் அறியத் தருகிறேன்.
ஒரு பயணம் என்றால், காலப்போக்கில் அதில் ரசனையும், நல்லனுபவங்களும், மகிழ்ச்சிகளும் கிடைக்கவே செய்யும். 'வாழத் துடிப்பவர்கள்' தொகுதியில் தான் ம.ந.ரா. எழுதிய 'யன்மே மாதா' கதையை வாசிக்க நேர்ந்தது. தமிழின் முக்கியமான கதைகளில் ஒன்றாக இன்றும் எல்லாரும் அதை நினைவுகூர்கிறார்கள். தன் தாய்க்கு திவசம் போடும் ஒருவன் அந்த மந்திரங்களின் அர்த்தம் கேட்டுக் கேட்டு மந்திரங்கள் சொல்லி வருகிறான். யன்மே மாதா, என அதில் ஒரு மநதிரம். என் தாய் ஒருவேளை எதாவது அசந்தர்ப்பத்தில் தன் பத்தினித்தன்மையை இழந்திருந்தாலும்... என வரும். அந்த மந்திரத்தை அவன் சொல்லாமல் மறுத்து விடுகிறான். மனிதன் காடுகளில் வாழ்ந்த காலத்தில் ஒருவேளை அது சரியான மந்திரமாய் இருக்கலாம், என் தாய் பத்தினி, என அவன் அந்த மந்திரத்தை மறுத்துவிடுகிற போது, சாஸ்திரிகள், நீ திவசம் பண்ணாமல் உன்னிடம் நான் தட்சிணை வாங்க என் மனம் இடம் தரவில்லை, என எழுந்து போகிறார். வெயிலில் காய்ந்த திருநீற்றுப் பட்டையாய் பளிச்சென அமைந்த கதை. பூடகம் இல்லை. ஒளிவு இல்லை மறைவு இல்லை. அதேசமயம் இதில் ஒரு சுடும் உண்மை இருந்தது. சாஸ்திரி பாத்திரத்தையும் பண்புடன் உயர்த்திப் பிடித்த பொறுப்பான எழுத்தாக இது எனக்குப் பட்டது.
ம.ந.ரா. கதைகள் ஒரு வாதத் தீவிரம் (அது தீவிர வாதம் அல்ல!) சார்ந்த சுழிப்புடன் இயங்குகிறதை அவர் விரும்புகிறார். எனது பல்வேறு திரட்டு நூல்களிலும் நான் அவரைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். எனது 'பரிவாரம்' திரட்டில் அவரது 'புழு' கதை வெளிவந்தது. காலில் புண் ஆழப்பட்டு சதைக்குழி விழுந்த ஒருத்தனின் உடம்போடு புழு ஒன்று வளர ஆரம்பித்து அவனோடு உசாவ ஆரம்பித்த கதை. உலகக் கதைகளின் தரத்தில் இதை நன் நேர்த்தியுடன் அவர் செய்திருந்தார். .... நிசத்தில் இந்தக் கதையை அருவருப்பு தட்டாத சுவாரஸ்யத்துடன் எழுதியதே சவால்தான். சங்கீதக் கதைகளை நான் தொகுத்து 'ஜுகல்பந்தி' வெளியிட்டபோது, இசைக்கு மொழி அவசியம் இல்லை, என்கிறதாக விவாதம் கிளர்த்தும் ஒரு கதையைப் பங்களித்தார். மொழி வேண்டாம் என்பது அதிகபட்ச உரிமை கோரலாகவே இன்றும் நான் நினைக்கிறேன். என்றாலும் விவாதங்களை நானும் வரவேற்று அந்தக் கதையை வெளியிட்டேன்.
'மொட்டு' போன்ற அபூர்வமான கதைகளை அவர் தந்திருக்கிறார். இதயத்தில் கோளாறு வந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள விருக்கிற ஒரு இளவயதுப் பெண்ணுக்கும், பக்கத்துவீட்டு வேலைகிடைக்காத இளைஞனுக்குமான சின்ன சிநேகம் பற்றிய கதை. உயிர் பிழைக்க மாட்டோம் என்கிற அவள் பயம். அறுவைச் சிகிச்சை சிறப்பாக முடிந்து அவள் வாழ்வில் நம்பிக்கைப் படுகிற போது அவனது சிநேகத்தை அவள் அலட்சிக்கிறாள். இதில் ம.ந.ரா.வின் முத்திரை என்ன என்றால், அந்த இளைஞன் அவளை சரியாகப் புரிந்து கொள்கிறான் என்பதே. இளமையும் மீதி வாழ்க்கையும் கனவுகளும் உள்ள அவள் தன்னை இன்னும் சிறகு விரித்துக் கொள்வதே முறை, என அவன் அவளைப் புரிந்துகொண்டு விலகுகிறான். இவ்வளவு விரிந்த மனதை எல்லா எழுத்தாளர்களிடமும் நாம் காணக் கிடைக்கிறதா என்ன?
2
ம.ந.ரா. இந்நாட்களில் என்னுடன் நெருக்கமாகி விட்டார். கடிதங்களில் நாங்கள் முட்டிமோதிக் கொண்டோம். என்றாலும் அவர் கதைகளின் முதல் வாசகனாக என்னை அவர் வரித்தது ஆச்சர்யம். எனது 'படகுத்துறை' சிறுகதைத் தொகுதியை நான் அவருக்கு சமர்ப்பணம் செய்தேன். அடுத்து அவரது புத்தகங்களை நான் வேறு வேறு பதிப்பகங்களுக்கு பரிந்துரை செய்தேன். உதயகண்ணனின் பதிப்புகளுக்கு நான் நெறியாள்கை செய்து தருகிறேன். அவ்வகையில் ம.ந.ரா. புத்தகங்களையும் நிறைய நான் சிந்தனைக் கட்டுக்கோப்பு சரிபார்த்திருக்கிறேன். நெறியாள்கை அற்புதமான பணி. எனக்கு அது பிடிக்கும். நெறியாள்கை என்றால் அடுத்தவர் கருத்தை வெட்டி வீழ்த்தி என் கருத்தளவில் அந்தப் படைப்பை உருமாற்றுவது அல்ல. அப்படிச் செய்திருந்தால் ம.ந.ரா.வின் அடையாளங்கள் காணாமல் போயிருக்கும். நெறியாள்கை அது அல்ல. அவரவர் படைப்பில் அவரவர் கருத்தை உக்கிரப்படுத்துவதும், அவரவர் பாணியை மெருகேற்றுவதும் ஆகும். என்னிடம் புத்தகங்கள் கேட்ட அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (அறிவுலகின் திறவுகோல்), நிவேதிதா (புதிய இலக்கு புதிய தடம்), மற்றும் நிவேதிதா புத்தகப் பூங்கா (வண்டினமே வருக) ஆகிய என் பதிப்பகங்களில் ம.ந.ரா. நூல்களும் வெளியாயின. எந்த எழுத்தாளனுக்குமே தொடர்ந்த வாய்ப்புகள், ஊக்கம் மிக அவசியம். என் யோசனைகளை ம.ந.ரா. கிட்டத்தட்ட ஆணையாகவே சிரமேற்கொண்டது குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டு. அடிப்படையில் என்மீது அவர்கொண்ட நம்பிக்கையும் பரிவும் அதில் நான் கண்டேன்.
காடு என்கிற பாடுபொருளில் நான் எழுதச்சொல்லி அவர் செய்தளித்த நாவல் 'மந்த்ர புஷ்பம்'. எத்தனை விதமான மரங்களை அவர் அதில் சொல்லி குணாம்சப் படுத்தியிருந்தார். வேத காலமும் குருகுலவாசக் கல்வியும் செறிந்த நாவல். இசை பற்றி அவர் நிறைய என்னுடன் பேசுவார். 'நாதலயம்' என ஓர் இசைக் கலைஞி பற்றி அவர் எழுதிய நாவல் அநேக இசைக் குறிப்புகள் கொண்டது. 'நம்பிக்கை' என ஓர் ஆத்திக நாத்திக முட்டுமோதல் குறுநாவல் தந்தார். அது இரண்டாம் பதிப்பாக 'தூணிலும் இல்லை துரும்பிலும் இல்லை' என வெளியானது. அந்த நூலுக்கு 'புதிய வானத்தின் கீழே' என்கிற முன்னுரை தந்திருக்கிறேன்.
 புரட்சித்தினவு, வம்பு சார்ந்த கதைவளாகத்தில் இருந்து மேல்தளத்துக்கு அவரது பயணம் வந்தடைந்திருப்பதாக நான் உணர்ந்த கணம் அது. ஜுகல்பந்தி சங்கீதக் கதைகளுக்கு அடுத்து நான் 'அமிர்தம்' என உணவு சார்ந்த கதைகளைத் திரட்டியபோது, 'மந்திரம்' என ஒரு கதை தந்தார். ஒரு மேல்சாதி இளைஞன் மெஸ்சில் சாப்பிடும்போது தினசரி சாப்பிடுமுன்னால், ஒரு மந்திரம் சொல்லி, இந்த உணவைத் தனக்கு அருளிய கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டுச் சாப்பிடுவான். அதைப் பார்த்த வேறுசாதி இளைஞன் தானும் மந்திரம்போல, இதை விளைவித்துத் தந்த குடியானவன், இதை தன் வாய்வரை கொணர்ந்த வணிகர் என நன்றி சொல்லி உணவுகொள்வதாக ம.ந.ரா. கதைத்தார். பழைய வம்பின் சுருதிப் பிசிர் இதில் இல்லை. கையாளலில் நல்ல நிதானம் கைவந்த கதை இது.
அவரது முதல் தொகுதி 'வாழத் துடிப்பவர்கள்' வெளியானபோதே அவர் பதவி ஓய்வு கண்டிருந்தார். தனிமையான பெரும் பொழுதுகள் தன்மேல் கவிந்தாப் போல அவர் மூச்சுத் தவித்துக் கொண்டிருந்தார் போல. இக் காலகட்டத்தில் என் அறிமுகம், அது எத்தனை கடும் அல்லது சுடும் விமரிசனங்களுடன் என்றாலும் அவருக்கு வேண்டியிருந்ததோ எனனவோ? என்னதான் வலி என்று குழந்தை அழுதாலும், கவனிப்பார் இல்லாவிட்டால் அழவே அதற்கு போரடித்து விடும், அல்லவா? அந்த சமயம் எனக்கு எழுத்து உலகில் புதிய நட்புகள் வளர்ந்துவந்த காலம். நான் நிறைய நட்புக் கடிதங்கள் எழுதினேன். சில அ-நட்புக் கடிதங்களும். ஓர் கிறித்தவ எழுத்தாளர் எனக்கு கடிதம் எழுதுகையில், நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிக்கிறாப் போல, 'இயேசு என் தெய்வம்' என எழுதிவந்தார். அவருக்கு நான் பதில் எழுதியபோது, பிள்ளையார் சுழி இடத்தில், 'இயேசு உன் தெய்வம்' என எழுதி அனுப்பினேன்.
ம.ந.ரா.வின் பரந்த அனுபவம், வயசு சார்ந்த தீர்க்கம், அவர் வாழ்ந்த ஆணாதிக்க காலம் எல்லாம் பார்த்து அவர் எழுத்தில் நான் கண்ட ஆழ்மன வக்கிரப் பாத்திர வார்ப்புகள் என்னை எப்பவுமே வியப்படைய வைக்கின்றன. வாழ்க்கையோடு நெருங்கிய பரிச்சயம் அற்று இப்படிப் பாத்திரங்களை எழுத வராது. எனக்கு இன்றளவும் சில பாத்திர வார்ப்புகள் வாய்ப்பதே இல்லை. எழுதித் தோற்றும் இருக்கிறேன். ம.ந.ரா. ஆழ்மனதின் விசித்திர வக்கிரங்களைப் படம்பிடிப்பதில் வல்லவர். அவரிடம் பேசினால் சொல்வார். அவரது பெரும்பாலான கதைகள் வாழ்வின் நேரடி, அல்லது காது அனுபவத்தில் இருந்து பெறப்பட்டவை தாம். நாங்கள் அப்படி விஷயங்களை அடிவண்டலாக்கி கிடைக்கும் மதிப்பீடுகள் அடிப்படையில் ஒரு கற்பனை முலாம் பூசி மீள் உருச் செய்வோம். ம.ந.ரா. உயிரான பாத்திரங்களையே உலவ விடுவதாகச் சொன்னார். சுத்த நெய்ப் பலகாரங்கள் அவை.
தமது அருமை மனைவியுடன் திருச்சியில் ஒதுக்கமான, அமைதியான வாழ்வு வாழ்ந்து வந்தார் ம.ந.ரா. இடையில் உடல்நலக் குறைவினால் நிலைமை கட்டுமீறி ரயிலில் மருத்துவப் பாதுகாப்புடன் படுத்தபடி சென்னைக்கு தன் மகன் இல்லத்துக்கு வந்தார். ஒருமாத அளவில் அவர படுத்த படுக்கையாகவே இருந்தார். என் பதிப்பாள நண்பனிடம் சொல்லி அப்போது எங்களிடம் இருந்த ஒரு நாவலை, 'ஓவியங்கள் நிறைந்த அறை' என அதன் தலைப்பு, உடனே நாங்கள் வெளியிட்டோம். நானும் பதிப்பாளன் உதயகண்ணனும் அதை எடுத்துக்கொண்டு அவரை நேரில்போய் அவரது மகன் இல்லத்தில் சந்தித்தோம். சட்டென எழுந்து உட்கார்ந்து அந்த நாவலை எத்தனை ஆதுரத்துடன் பிரித்துப் பார்த்தார். அவருக்கு நாவலைப் பார்த்தது கண்கொள்ளாக் காட்சி. என்றால் எங்களுக்கு அவரை அப்போது பார்த்த காட்சியே கண் கொள்ளவில்லை.
அன்றில் இருந்து எனக்கு ஒரு சங்கல்பம். இன்றுவரை அவரை எழுதச்சொல்லி நான் தூண்டிக் கொண்டிருக்கிறேன். அந்த நிகழ்வுக்குப் பின் ஏறத்தாழ பத்து நூல்கள் வரை அவர் எழுதிவிட்டார். இந்நாட்களில் நான் மொழிபெயர்ப்புகள் சார்ந்து கவனப்பட ஆரம்பித்திருந்தேன். அதற்குமுன்பே ம.ந.ரா. சாகித்ய அகாதெமிக்காக சில மொழிபெயர்ப்புகள் செய்திருந்தார். நான் மொழிபெயர்க்க வைத்திருந்த சில ஆங்கிலப் படைப்புகளை அவரிடம் தந்து மொழிபெயர்க்கப் பணியளித்தேன்.
அன்தன் செகாவின் 'ஸ்டெப்பி' நாவல். மகா புல்வெளி, என ம.ந.ரா. செய்தார். பச்சைப் பசேல் புல்வெளிப் பயணம் அந்தக் கதை. பச்சைப்பசேல் அட்டை. உள் அட்டை ஒட்டும் தாளும் பச்சைப் பசேல். தவிர கதையையே பச்சைப் பசேல் மையில் அச்சிட்டு வெளியிட்டோம்.
கல்லூரிக் காலகட்டத்தில் நான் எழுத வந்தபோது ஆங்கிலத்தில் நான் வாசித்து மகிழ்ந்த சில படைப்புகளை மொழிபெயர்க்க என நினைவில் கொண்டிருந்தேன். அவற்றில் ரெண்டாவது சாமர்செட் மாமின் 'கேக்ஸ் அன்ட் ஏல்'. நான் 'முன்னணியின் பின்னணிகள்' என செய்தேன். முதலாவது 'அப் ஃப்ரம் ஸ்லேவரி'. புக்கர் டி. வாஷிங்டன் எழுதியது. ம.ந.ரா. அதை அழகாக 'அடிமையின் மீட்சி' என செய்தார்.
மொழிபெயர்ப்புகளில் ம.ந.ரா. காட்டும் சிரத்தையும் அக்கறையும் நான் எப்போதுமே வியக்கிற ஒன்று. கதை நிகழும் இடங்களைக் குறித்துக்கொண்டு முடிந்தால் ஒரு மேப், வரைபடமும் வரைந்து தந்துவிடுவார் ம.ந.ரா. தெரிந்த விவரங்களைத் தவறாமல் அடிக்குறிப்புகளாகத் தருவார். தெரியாத விவரங்களைத் தேடித் துருவி விசாரித்து கண்டடைந்து அடிக்குறிப்புகளாகச் சேர்ப்பார். 'அடிமையின் மீட்சி' மொழிபெயர்ப்பைக் கையில் வாங்கியதுமே மனம் விம்மியது. இது தமிழ்கூறும் நல்லுலகில் நன் மதிப்புரைகள் பெறும், என நான் யூகித்தேன். நூலின்அருமை கருதி, குமுதம் போன்ற பெரும் சுற்று இதழ்களே இதைக் கண்டுகொண்டன. மதிப்புரைகள் வழங்கின. இந்த மொழிபெயர்ப்புக்காக ம.ந.ரா. 'நல்லி-திசை எட்டும்' சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றபோது, நான் அடைந்த மகிழ்ச்சியை அளவிடவே முடியாது. இந்தப் பரிசு அவரது தேக ஆரோக்கியத்தில் எப்பெறும் ஊட்டம் அளித்திருக்கும், என்பதை நாம் யூகிப்பதும் கடினம் அல்ல.
தற்போது சாமர்செட் மாமின் ‘Rain’ அவர் மொழிபெயர்ப்பில் வெளியானது. நமக்கெல்லாம் மழை விருப்பமானது. நாம் வெப்பப் பிரதேசத்தில் வாழ்கிறவர்கள். ஆனால் மேற்கத்தியர்களுக்கு மழை ஓர் இம்சை. ‘Rain rain go away, Little tommy wants to play’ என்று அவர்கள் பாலர் பாடலே எழுதுகிறார்கள். சாமர்செட் மாம் 'மழை' என்பதை இகழ்ச்சிக் குறிப்பாகவே பயன்படுத்துகிறார் என முன்குறிப்புடன் ம.ந.ரா. அதை 'மழை' என்று அல்ல - 'மழைதாரை' என மொழியாக்கம் செய்தார்.
'மாற்றான் தோட்டம்' அவர் மொழிபெயர்த்த உலகப் புகழ்பெற்ற சிறுகதைகள் தொகுதி. தாஸ்தயேவ்ஸ்கி, வில்லியம் ட்ரவர், சல்மான் ருஷ்டி, சீமாமந்தா, டி.ஹெச். லாரன்ஸ் ஆகியோர் கதைகளை உள்ளடக்கியது, அடுத்து வெளியானது.
தற்போது அயன் ரான்டின் 'கீதம்' மற்றும், ஜான் ஸ்டீன்பெக்கின் 'முத்து' ஆகியவை அவர் மொழிபெயர்த்து முடித்து அச்சுக்குக் காத்திருக்கின்றன. (இப்போது 2018 அக்டோபர் - புத்தகங்கள் அச்சில் வந்தாயிற்று.)
இலக்கியமே மூச்சாக வாழும் ம.ந.ரா.வுக்கு இவ்வாண்டின் 'புதுப் புனல்' விருது வழங்கப்படுகிற தருணம் இது. அவரது இரு கரங்களையும் பற்றிக் குலுக்கி, பல்லாண்டு வாழ்க, என வாழ்த்துச் சொல்லி மகிழ்கிறேன். ம.ந.ரா.வின் கதைகளின் தனித்தன்மை பற்றி நான் எடுத்துக்காட்டிய சில துளிகளே அடையாளப்படுத்தி விடும். அவரது 'கதை உலகில் ஒரு மேதை' கதையைச் சொல்லி இந்த உரையை நிறைவு செய்யலாமாய் இருக்கிறது.
இளம் வயதிலேயே அபார நினைவாற்றலுடன் ஒரு இளைஞன். எந்த எழுத்தாளர் பற்றிக் கேட்டாலும், அவரது புத்தகங்களை, அவர் எழுதிய கதைகளை யெல்லாம் சட்டெனச் சொல்கிற திறன் படைத்தவன் அவன். எந்தக் கதையின் பேர் சொன்னாலும், உடனே அந்த எழுத்தாளரைச் சொல்கிறான் அவன். தன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருக்கிற ஒரு பிரபலம் ஆகாத எழுத்தாளரின் ஒரு கதையைச் சொல்லி, இது யார் எழுதியது என்று கேட்டு வம்பு செய்ய நினைக்கும் ஓருவர். அந்தக் கதையைக் கேட்டதுமே அவன், ''இது ஒரு புகழ்பெற்ற ஆங்கிலக் கதை. இதை இன்னார் எழுதினார்'' என்று சொல்லி விடுகிறான்.
அப்போதுதான் கேள்வி கேட்ட நபருக்கு, தன் பக்கத்து வீட்டு எழுத்தாளர் ஒரு ஆங்கிலக் கதையைக் காப்பி அடித்து கதை எழுதியது தெரிகிறது, என்பதாகக் கதை முடிகிறது.
நானும் ம.ந.ரா.வும் காப்பி அடிப்பது இல்லை. மொழிபெயர்த்து விடுகிறோம்.
புதுப்புனல் விருது ம.ந.ரா.வுக்கு வழங்கப்பட்ட போது ஆற்றிய உரை
ஏப்ரல் 1, 2012
storysankar@gmail.com * 91 97899 87842