16
எஸ்.சங்கரநாராயணன்
காகிதத்தில் என்ன இருக்கிறது
தமிழில் விமரிசனம் வளம் பெற்றதாகத் தெரியவில்லை. வாசிப்பு
நுட்பங்களை, தாங்கள் ரசிக்கிற அடிப்படையில் விதந்து விவரிக்கிற கட்டுரைகளை நிறையப்
பார்க்க முடிகிறது. காய்தல் அல்லது உவத்தல் என்கிற ஒரு நிலைப்பாடே பொதுவாக நமக்கு கருத்துக்களாக
அறியக் கிடைக்கின்றன. சில நபர்கள், விமரிசனம் என்று அந்த முழுப் படைப்பின் சுருக்கம்
வெளியிடுகிறார்கள். சினிமாப் பாட்டுப் புத்தகத்தில் அந்தக் காலத்தில் ‘கதைச் சுருக்கம்,’
எனப் போடுவார்கள்... அது போல. அவர்களாவது இரண்டு மூன்று பத்திகளோடு நிறுத்தி, மீதியை
வெண் திரையில் காண்க, என விலகிக்கொண்டு, நமக்கு ஒரு பகுதியைப் படம் பார்க்க மிச்சம்
வைப்பார்கள். இவர்கள் முழுக் கதையுமே சொல்லி விடுகிறார்கள்.
ஒரு படைப்பை வாசிக்கு முன்னான, சுய பக்கச் சார்புடன் அணுகுவதாலேயே
இப்படி விமரிசனக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது செருப்புக்குத் தக்க காலை வெட்டும் முயற்சியாகும்.
ஆங்கிலத்தில் கௌரவமாக, OPERATION SUCCESS PATIENT DIED, என்பார்கள்.
ஆனால் நமது இலக்கண நூல்களே மிகத் தொன்மையானவை. இலக்கணம் எழுதப்பட்டது
என்றால் அதற்கு முன்பே இலக்கியம் எத்தனை வளமாக காத்திரமாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
என நினைக்க வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன. தொன்மைக் காலத்தில் இருந்து நாம்
பெற்றவற்றை விட இழந்தவை, அதாவது தொலைத்தவை ஏராளம் என்று தோன்றுகிறது. சங்க இலக்கியங்களின்
சிந்தனைக் கட்டுக்கோப்பு தற்செயலானது அல்ல. அது பிற்காலத்தில் தொகுத்த நபரின் கற்பனை
வளமும் அல்ல. நம் கையில் இலக்கியமும் இலக்கணமுமாக, அச்சு வடிவாக்கம் பெறக் கிடைத்தது
ஓரளவு நல்லூழே, என்பேன்.
தமிழில் விமரிசனம் என எழுதிக் காட்ட வருகிறவர்களின் பக்கச்
சார்பு சட்டென அவ்வெழுத்தில் வெளியே, முகத்தில் மூக்காகத் தெரிகிறது. அதைக் காட்டிக்
கொள்ள அவர்களும் தயக்கம் காட்டுவது இல்லை. அப்படி, ஒரு குழு என ஆங்காங்கே அவர்கள் இயங்குகிறார்கள்.
அதை அவர்களே விரும்புகிறார்கள் என்றும் கூறலாம்.
படைப்பின் ரகசியங்களை, நுட்பங்களை எடுத்துரைத்து அதன் நுணுக்கங்களைக்
கொண்டாடும் பயிற்சியே நம்மிடம் இல்லை. வாசகனின் துரதிர்ஷ்டமே அது. ஒரு படைப்பு எப்படி
அணுகப்பட வேண்டும், என்பதிலேயே இங்கே ரொம்ப எளிய நிலையே கடைப்பிடிக்கப் படுகிறது. அதிலும்
பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்களும் அவர்களின் ஆய்வு நூல்களும் பெரும் அயர்ச்சி தருகின்றன.
நூற் தலையணைகள்.
உறக்கம் கலைக்க வேண்டிய ஆய்வுகள், உறக்கத்தை வரவழைப்பதா.
ஆயின் இலக்கியம் தமிழில் வெகு காலம் முன்பிருந்தே வெகு நுட்பமாக
உரு உக்கிரம் பெற்றிருப்பதை எப்போதும் நான் உணர்ந்திருக்கிறேன். அதை மேலும் கையெடுத்துச்
செல்ல முடியாமல் இங்கே மனிதர்களின் கால காலமான அமைதியின்மை, போர்கள், போலிப் போராளி
முழக்கங்கள் என இலக்கியம் மடைமாற்றப் பட்டுவிட்டதோ, அதனால் இலக்கியம் சவலைப் பிள்ளையாகி
விட்டதோ என்னவோ. புகழ்ச்சி அன்றி இலக்கியம் இல்லை என்கிற காலம் இங்கே வேரூன்றி வெகு
காலம் ஆயிற்று.
சங்க காலம் தொட்ட வளர்ச்சி எத்தகைய அளவில் இன்று வந்து சேர்ந்திருக்க
வேண்டும்? இடையே பக்தி இலக்கியம் என்று, சைவரும் வைணவரும் பண்ணிசை தந்தார்கள். திவ்யப்
பிரபந்தங்கள் வந்தன. அதையும் ஒதுக்கி ஒரு குரல் எழுந்து அதை அப்படியே மூடி மறைத்த சதி.
தமிழ்ச் சூழலில் வெளிப்படைத் தன்மை இல்லவே இல்லை. இதை இப்படி நான் எழுதும்போதே, என்
சாதி பார்த்து அம்புகள் கிளம்ப ஆரம்பித்து விடுவதும் உண்டு.
யாதும் ஊரே யாவரும் கேளிர், என்கிற சொல்லாடலிலேயே அரசியல்
இருக்கிறது, என்பார்கள். போரிட்டு வென்ற அரசனுக்கு சார்பாக, அந்த நாட்டைக் கைப்பற்றிய
அரசன் சொல்லி கணியன் பூங்குன்றன், மக்களின் போராட்டத்தை இவ்வாறு சமாதானப் படுத்தி அடக்கி
முடக்குகிறார். புதிய மன்னனை ஏற்றுக் கொள்ளவும், பழைய மன்னனின் ஆதரவாக கிளர்ச்சி செய்யாதிருக்கவுமான
ரகசிய அழுத்தம் இது. அவனை மன்னனாக ஏற்றுக் கொள்ளச் செய்கிற அடுத்த வரியையும் அவரே சொல்கிறார்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா. (நமது தோல்விக்கு நமது விதிப்பயனே காரணம்.)
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, என்பது கீதை. எதைக் கொண்டு
வந்தாய் இழப்பதற்கு.
பெரும்பான்மை இலக்கியங்கள் இப்படி ஆளும் அரசை ஆதரிக்கிற அளவிலேயே
முடங்கி விடுவதை ஒரு தேர்ந்த வாசகனால் இனம் காண முடியும். ஒரு நுட்பமான மூளைச் சலவை
இது.
கதிரையும் சாவியையும் பிரித்தறிய சிரமப் பட வேண்டியிருக்கிறது.
சாவிகள் கதிர் என வலம் வரவும் செய்கின்றன. அவை தூபம் போட்டு கொண்டாடப் படவும், அவற்றிற்கான
எதிர்க்குரல் அடக்கப் படவுமான சூழல். விமரிசனங்கள் என்று இல்லை... கருத்தாடல்களே முடக்கப்
படுகின்றன, கவனமான எச்சரிக்கையுடன்.
மதம் சார்ந்த எந்த சேதியையும் அரசியல் பார்வையுடன் அணுக வேண்டும்.
அரசியல் சார்ந்த எந்த சேதியையும் ஆன்மிகத்துடன் கண்ணோட்டம் செய்ய வேண்டும், என்பது
ஒரு பார்வைமுறை.
இயேசு, ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு,
என்றார். பெரும்பான்மை யூதர்கள் மத்தியில் நாம் வாழ்கிறோம். யூதன் உன்னைக் கன்னத்தில்
அடித்தால் எதிர்த்து முரண்டு பிடித்துப் போராட முனையாதே. நம் இனம் சிறியது... அடங்கிப்
போ, அவன் இனம் கொந்தளித்தால் தாங்காது நம் இனம், என்று இயேசு சொன்னதாக ஒரு விளக்கம்
இருக்கிறது.
சம்பிரதாயப்படி ராமன் அரசாள வேண்டும். ஆனால் தசரதனினிடம்
தன் மகன் பரதனை அரசனாக்க இளையாள் கைகேயி முயல்கிறாள். பட்டத்து அரசிக்கு அடுத்த மனைவிகள்
என்னதான் ஆனாலும் பட்டத்து அரசிக்கு அடிமைகளே. அவளது குழந்தைகளும் அடிமைகளே. என்ற அளவில்,
லெட்சுமணன் அடிமையாக ராமனோடு கானகம் அனுப்பப் படுகிறான்... என்கிற ஒரு பார்வை உண்டு.
அதை மறுத்துவிட முடியாது.
ராமாயணத்தில் கடைசி வரை கற்பைக் காப்பாற்றியவள் சீதை. அப்படியென்றால்
ராவணனும் கற்பை இழக்கவில்லை, என்று சொல்வார்கள்.
தர்க்கம் ரொம்ப வேடிக்கையான விஷயம். அதுபற்றி வேறு சந்தர்ப்பத்தில்
பேசலாம்.
நகைச்சுவையும் பழமொழிகளுமே நம்மிடையே மிகச் சிறப்பாகப் பொலிந்தவை.
மூத்தா பத்தினி - என்பார்கள். இளையவள்? என நாமே கேள்வி கேட்டு, பதிலும் வரவழைத்துக்
கொள்ளலாம். பேச்சு வழக்கே இத்தனை சிறப்பாக ஒரு மொழி அமைவது அதன் தொன்மையின் சிறப்பினால்
தான். சம்சாரி வீட்டில் தீ பிடித்தால் காலைக் கட்டிக் கொண்டு அழுதானாம், என்று ஒரு
சொலவடை. (காலை விட்டுவிட்டால் போய் அவன் தீயை அணைத்து விடுவானாம். அதை அனமதித்து விடாத
நல்ல எண்ணம் அது.)
புரூசன் அடிச்சதுக்கு அழல்ல. இளையாள் சிரிப்பாளேன்னு அழுதாளாம்.
ஜவுளிக்கடையில் நஷ்டம் வந்தால் முதலாளி தினசரி பட்டு வேட்டி
கட்டுவார்.
மருமக புண்ணியம் பண்ணியிருந்தா தான் மாமியா படுக்கைல கெடக்காம
(செத்துப்) போவா.
தொன்மையான மொழி என்பதாலே அதன் ஆளுமைத் திறனும் அவ்வளவில்
மிகுந்த சூட்சுமங்கள் கொண்டதாக சங்ககாலம் தொட்டே புழங்கி வருதல் அருமையான விஷயம். எந்த
மொழிக்கும் இல்லாத அதன் சிறப்பு அதன் தொன்மையால், தொடர்ந்த பயன்பாட்டால் விளைந்திருக்கும்.
ஐவகை நிலங்களாகப் பாடுபொருளைப் பிரித்து, திணைகள் வகுத்து, கருப்பொருள், உரிப்பொருள்
என்ன இத்தனை வகைமையான இலக்கணம் வேறு எந்த மொழியிலும் இல்லை. கல்யாண விருந்தில் இலை
முழுசுமாய்ப் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள், அது போல.
உரையாடலில் இலக்கியம் என்றால் பிராந்தியத்துக்கு பிராந்தியம்
பேச்சுமொழி வித்தியாசப் படுகிறது என்ற அளவில், இலக்கியம் அதன் நீடித்த தன்மைக்கு செய்யுளைத்
தேர்வுசெய்து கொண்டது, எனத் தோன்றுகிறது.
முன்னமே குறிப்பிட்டது போல தமிழில் நிறுத்தற் குறிகள் கிடையா.
ஓலைச் சுவடிகளில் எழுதும்போது நிறுத்தக் குறிகள் ஒட்டை யிட்டு விடலாம் என்பதற்காகத்
தவிர்க்கப் பட்டிருக்கலாம், என்பார்கள். அது அல்ல. தமிழின் இலக்கண வரையறை கறாரானது.
எழுவாய் பயனிலை செயப்படு பொருள் என இலக்கணம் சொல்கிறது. வினைச்சொற்கள் வாக்கியத்தின்
இறுதியில் அமைகின்றன. ராமன் போனான், என எழுதினால் போனான் என்றதோடு வினை முற்றுப்பெற்று
விடுகிறது. தனியே அங்கே முற்றுப் புள்ளி தேவையாய் இல்லை. அதைப்போலவே அவன் வந்தபோது,
நான் உறங்கிக் கொண்டிருந்தேன், என்றாகிற வாக்கியத்தில் வந்தபோது, என்று சொல்லிவிட்டால்
கமா அதிகபட்சமே. அத்தனை சிறப்பானது நம் இலக்கணம். தவிர, வினைச்சொல்லோடு விகுதிகள் சேர்த்துப்
பயன்படுத்தும் பழக்கமும் நமக்கு இருக்கிறது. வந்தான், வந்தாள், இப்படி மேலதிகம் ஒரு
வினைச்சொல், வினையைத் தாண்டி, காலம், பால் என நமக்குப் பகிர்கிறது.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
வான்சிறப்பின் இந்தக் குறள் நினைக்குந்தோறும்
மயக்கத்தக்க அழகுடன் பொலிகிறது எனக்கு. மழை என்று சொல்லாமல் விசும்பின் துளி, என்பதே
நல்ல கவிதைத் துவக்கம். வானம் என்ற பிரம்மாண்டத்தை மனசில் நிறுத்தி, பிறகு துளி என
சிறு உருவை மனசில் கொண்டு வருகிறார் திருவள்ளுவர். அது விழா விட்டால்?... என்று கேள்வி
கேட்கிறார். பிறகு பசும் புல், இளம் புல் என்பதை அறியலாம். இருப்பதில் சிறிய தாவரம்
புல். அதன் தலை கூட நாம் காண்பது அரிது, சிறிய புல் என ஒரு உருக் கற்பனை, அதன் தலை,
எத்தனை சிறிது. அதையும் காண்பது அரிது... என்பது மழையின் முக்கியத்துவத்தை எத்தனை விரிக்கிறது.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
காண்பர், என்கிற போதும் இந்த உவமையின் காட்சித் திறன், அப்பப்பா, திகட்டுகிறது.
வள்ளுவரின் எத்தனையோ கவிதைகள் ஒலியழகும்
சொற்செட்டும் சிந்தனை வீச்சும் பெற்றுப் பொலிகின்றன. உலகின் சிறந்த நூல்களில் ஒன்று
வள்ளுவம். சங்கக் கவிதைகளில், ஒன்றைச் சொல்லி அது தொடர்பான இன்னொன்றை மனதில் இருத்தும்
உத்தி சாதுர்யம் சரளமாகக் காணக் கிடைக்கிறது. காதலன் தோப்பில் காத்திருப்பதை, மழையில்
தவித்து நிற்கும் யானையைப் பற்றிச் சொல்லி குறிப்புணர்த்துவதைப் பார்க்கலாம்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
வள்ளுவரின் இந்தக் குரல் எத்தனை இயல்பாக,
குற்றம் சாட்டாத பாவனையில் எழுகிறது. என்ன சொல்ல வருகிறார். இன்னாத கூறாதே, என்கிறார்.
ஆனால் கூறாதே என அவர் அறிவுரை வழங்குகிற பாவனையைத் தவிர்க்கிறார்.
கண்ணதாசனின் ஒரு பாடல் நினைவு வருகிறது.
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று...
நான் காற்று, நீ கீற்று, என்பது வெறும் சந்தமாகவோ உவமையாகவோ
நின்று போய்விடவில்லை. ஒரு விண்ணப்பம் வைக்கிறான் காதலன். அதைச் சொல்லாமல் சொல்கிறான்
காதலன். நான் பாடுகிறேன். நீ ஆடு, என்கிறான். ஆனால் அதை எத்தனை பாவனையாகச் சொல்கிறான்...
இலக்கிய நுட்பங்களோடு அதை நுகர்வது என்பது பெரும் வாசிப்பு
அனுபவம். ஒரு எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் நாவல். ‘டெத் இன் தி ஆஃப்டர்நூன்’ - அந்த நாவலா
தெரியவில்லை. அந்தப் பெண்ணை இருவர் காதலிப்பார்கள். இன்னும் யார் அவளைக் காதலிக்கிறாள்
என்பதை அவள் வெளிப்படுத்தாத நிலையில் இருவருமே காத்திருக்கிறார்கள். இருவருமே அவளுக்கு
நல்ல நண்பர்கள். ஒரு எருதுபொருதும் விளையாட்டை வேடிக்கை பார்க்க என அவள் தன்னுடன் வரும்படி
இருவரையும் அழைத்திருப்பாள். ரயில் நிலையத்தில் அவளுக்காக அவர்கள் இருவரும் காத்திருப்பதாகக்
காட்டுகிறார் ஹெமிங்வே. அவள் இல்லாமல் அவர்கள் மாத்திரமான காட்சி அமைப்பு எத்தனை உள்ப்
பரபரப்பும் வெளியே அமைதிபோலானதுமான கட்டம். இருவருக்குமே அவள் தன்னைத் தான் இறுதியில்
வரிப்பாள், என்கிற தளரா நம்பிக்கை. அதை மற்றவனிடம் எத்தனை நைச்சியமாக வெளிப்படுத்திவிட
முடியுமோ அப்படி வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதை இரண்டே இரண்டு உரையாடல் வரிகளில்
ஹெமிங்வே பதிவு செய்கிறார். அடேயப்பா, அதுதான் உலக எழுத்து என்பது. அந்த உரையாடல் இதுதான்.
தனக்கு அவளைப் பற்றி நன்றாகத் தெரியும், என மற்றவனிடம் காட்டிக்
கொள்கிற முனைப்பில் ஒருத்தன் ஆரம்பிக்கிறான்.
“அவ எப்பவுமே இப்படித்தான். சொன்ன நேரத்துக்கு வருவதே யில்லை.”
அடுத்தவன் பதில்.
“இல்ல. என்கிட்டச் சொன்னா சரியா வந்திருவா.”
என்ன நுட்பமான உரையாடல். இடையே எத்தனை குமுறல்கள், ஆவேசங்கள்
தெரிகின்றன. வெளியே ஆழம் காட்டாத கடல்.
ஒரு படைப்பை எப்படி வாசிப்பது, எப்படி ரசிப்பது என எடுத்துரைக்கிற
அளவில் நமக்கு ஆசான்கள் அமையவில்லை என்றுதான் வருத்தமாய் இருக்கிறது.
ஒரே வரியில் ஒரு கதை எழுதினார் ஹெமிங்வே.
CHILDREN SHOES FOR SALE, UNWORN. பிஞ்சுகள் இன்னும் அணிந்தே பார்த்திராத காலணிகள்...
என்பது எவ்வளவு அழகான கவிதையாய் இருக்கிறது கேட்க.
அதைவிட ஒரே வரியில் எனக்குப் பிடித்த இன்னொரு வரி. இதை எழுதியவர்
பெயர் ஞாபகத்தில் இல்லை.
பாராசூட் விற்பனைக்கு, ஒரேமுறை பயன்படுத்தியது, திறக்கப்படாதது.
படைப்பு நுட்பங்களுக்காக தனி உரைநூல்கள் என்கிற பாணி அந்தக்
காலத்தில் இருந்தது. அந்த வழக்கமும் விட்டுப் போயிற்று. அவற்றால் என்ன பயன், என்றால்
அது ஒரு வகையாய் அந்தப் படைப்பை அணுக உதவும் என்றாலும் வாசகன் தன் பார்வையில் பிரிந்து
சென்று சுய விளக்கங்களை தன் வாசிப்பு அனுபவம் சார்ந்து பகிர்ந்துகொள்ள முடியும்.
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.
இது காளமேகப் புலவரின் ஒரு பாடல். ஒரு சத்திரத்தில் அங்கே
அவர் போயிருந்தபோது காத்தான் என்கிற சத்திரக்காரன் அவருக்குச் சாப்பாடு போடத் தாமதம்
ஆக்கிவிட்டான் என்ற கோபத்தில் பாடியது. சத்திரக்காரன் அவர் காளமேகம் என்றறிந்து, ஐயோ
வசை பாடி விட்டீர்களே, என மன்னிப்பு கேட்டதாகக் கதை. காளமேகம் சமாதானப் படுத்தினாராம்...
இல்லை, உன்னை வாழ்த்தியே பாடினேன் என்று சொல்லி ஒரு விளக்கம் தந்தாராம்.
அத்தமிக்கும் போதில் அரிசி வரும் என்றால், ஊரிலேயே பஞ்சம்
என்றாலும் அங்கே அரிசி இருக்கும், என்று பொருள். குத்தி உலையிலிட... ஊரடங்கும், என்றால்
ஊர் பசியடங்கும், என விளக்கம். ஓரகப்பை அன்னம் இலையில் விழ வெள்ளி எழும், என்றால் விடிஞ்சது
போ, என்பதல்ல, சூரியனே அந்த அன்னத்தின் வெண்மையில் வெட்கி ஓடும், என புகழ்ந்துரைத்ததாக
விளக்கம் தரப்பட்டதாம்.
இது கதை. தமிழ் ஆர்வலரான ஒரு நண்பர் இதைக் கேட்டுவிட்டு ஒரே
வரியில் இதைச் சிறப்பித்துச் சொன்னார். அந்தக் கவிதைக்கு அதே குற்றஞ் சாட்டும் பொருளே
வைத்துக் கொண்டாலுமே, “அங்கே நேரம் காலம் இல்லாமல் இருபத்தி நாலு மணி நேரமும் சாப்பாட்டுப்
பந்தி நடைபெறும்” என்று பொருள் சொன்னார்.
எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள். எனக்குத் தோன்றவில்லையே
இது.
இரட்டுற மொழிதலில் மன்னன் காளமேகம். பிற மொழி எதிலாவது இந்த
‘இரட்டுற மொழிதல்’ பாணி இருக்கிறதா தெரியவில்லை.
விக்கிரமாதித்தனின் ஒரு கவிதை உதாரணம் சொன்னால், கவிதை மனம்
எப்படி சட்டென விழித்து இயங்குகிறது, என்று அறியலாம். கவிதை மூலம் கவிதை மனத்தைக் கண்டடைவது
பெரும் பயிற்சி.
இக்கரைக்கும் அக்கரைக்கும்
அலைகிறான் ஓடக்காரன்
அமைதியாய் ஒடிக்கொண்டிருக்கிறது
நதி.
ஒரு காட்சி அவனில் பதிகிறது. ஓடக்காரன் ஒருவன் நதியைக் கடக்க
பரிசல் ஓட்டிச் செல்கிறான். ஆனால் கவிஞன் சட்டென தன்னுலகில் தரிசனப் படுகிறான். எப்படி?
ஓடக்காரன் நதியை எப்படிக் கடக்கிறான், குறுக்கு வசத்தில். இந்தக் கரையில் இருந்து அந்தக்
கரை வரை அவன் போகிறான். ஆனால் நதி? அது நீள வசமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வாழ்க்கையில் நாமும் சிறு பகுதியையே கடக்கிறோம். ஒருகாலும்
வாழ்க்கையின் பிரம்மாண்டத்தை நாம் அறிய முடியாது, என்று அறிவிக்கிறார் கவிஞர்.
நிறைய முற்போக்குத் தளங்களில் கிண்டல் செய்யப்படுகிற ஒரு
நகுலனின் கவிதை நினைவில் தட்டுகிறது.
காகிதத்தில்
என்ன இருக்கிறது
காகிதம்.
ஆனால் இங்குதான் கவிஞனின் நுட்பம் தெரிகிறது. தனது நுட்பத்துக்காக
கவிதையை, அதன் எளிமையை விட்டுக்கொடுக்க நகுலன் தயாராய் இல்லை.
என்ன சிறப்பு இந்தக் கவிதையில்? காகிதம் என்பது என்ன என்று
பார்க்கலாம். காகிதம் என்பது ஒரு ஊடகம். அதில் எதாவது எழுதப்படும் போது மற்றவர்கள்
அதை அறிந்துகொள்கிறார்கள். அது ஒரு ஊடகமாகப் பயன்படுத்தப் படுகிறது. அதில் ஒருவன் எழுதிக்
காட்டினால் மற்றவன் வாசித்து அதை அறிந்து கொள்கிறான்.
வேறு ஊடகங்கள் எவை எவை என்று பார்க்கலாம். கண்ணாடி ஒரு ஊடகம்.
அதில் நாம் பார்த்தால் நம்மை அது காட்டுகிறது. தண்ணீர். தண்ணீர் ஒரு ஊடகம். அதுவும்
நம் பிம்பத்தைக் காட்டுகிறது.
நகுலன் என்ன சொல்கிறார். காகிதத்தில் என்ன இருக்கிறது காகிதம்,
என்கிறார்.
ஆக மற்ற ஊடகங்களில் இல்லாத ஒரு சிறப்பை இந்த ஊடகத்தில், காகிதத்தில்
அவர் பார்க்கிறார். அவரது தரிசன உக்கிரமே இந்தக் கவிதை.
கண்ணாடி என்ன செய்கிறது, நாம் அதில் பார்க்கையில் நம்மை அது
காட்டுகிறது. நாம் பார்க்காவிட்டாலும் அது வேறு எதையாவது காட்டிக் கொண்டே தான் இருக்கிறது.
எங்கிருந்தும் நாம் கண்ணாடி பார்த்தால் அதில் எதாவது பிம்பம் தெரிந்தபடியே இருக்கும்.
தண்ணீர்? அதுவும் அப்படியே நாம் பார்த்தால் நம்மையும், நாம் பார்க்காவிட்டாலும் அது
எதையாவது காட்டியடிபயே தான் இருக்கும்.
ஆனால் காகிதம்? அது நாம் எதுவும் எழுதாதவரை...
எதையும் காட்டாது.
அதுவே அதன் தனித் தன்மை. மற்ற ஊடகங்களைப் போல அல்ல அது.
காகிதத்தில்
என்ன இருக்கிறது
காகிதம்.
• • •
(மீண்டும் அடுத்த வாரம்
சந்திப்போம்)
91 97899 87842
storysankar@gmail.com
No comments:
Post a Comment