Friday, October 19, 2018


part 12

போர் போர் அக்கப்போர்
எஸ். சங்கரநாராயணன்

றிவாளியோடு வாழ்ந்து விடலாம். முட்டாளோடும் வாழ்ந்து விடலாம். ஆனால் தாங்கள் அறிவாளி என நினைக்கிற இப்படி ஆட்களுடன் வாழவே முடியாது.
மேற்படி நபர்களுடன் சில சமயம் மாட்டிக்கொள்ள நேர்ந்து விடுகிறது. பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த அன்னையின் உபாசகன் நான். ஒரு நண்பரோடு எனது ஆன்மிக அனுபவங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, வேறு நண்பர் ஒருவர் இடைப் புகுந்தார். அவருக்குச் சம்பந்தம் இல்லாத வேலை இது. “தெரியும் சார்... மதர்னா, மதர் தெரசா தானே?“ என்று ஊடே புகுந்தார். இல்லை என்றாலும் அவர் விடுகிறாப் போல இல்லை. “வேற யாரு. ஓ அன்னிபெசன்ட் அம்மையாரைச் சொல்றீங்களா?” என தனக்குத் தெரிந்த பெண்மணிகளைப் பட்டியல் போட்டுத் தொடர்ந்த வண்ணம் இருந்தார். நாங்கள் இருவரும் வேறொரு சந்தர்ப்பத்தில் பேச்சைத் தொடரலாம் என்கிற முடிவுக்கு வந்து அந்த நண்பருக்கு வணக்கம் சொல்லிக் கலைய வேண்டியதாயிற்று.
கடைசிவரை அவர் ஸ்ரீ அரவிந்த அன்னையைச் சொல்லவே இல்லை.
இன்னொரு சந்தர்ப்பத்தில், இளையராஜாவின் ஒலிப்பதிவாளர், அவர் பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை. இளையராஜா வந்த பிறகுதான், ஒலிப்பதிவாளருக்கு கேசட்களில் பெயர் போடும் கௌரவம் கிடைத்தது. அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். என் அருகில் என் சொந்தக்காரர், அண்ணன் முறை அவர் எனக்கு, மத்திய அரசாங்க வேலை, பச்சைக் கையெழுத்துக்காரர். ஒலிப்பதிவாள நண்பர் ஒலியின் துல்லியத்தை காது கேட்கும் தருணங்கள் எத்தனை கொண்டாட்டமானவை, என உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருந்தார். ஐ-பாட் என்று புதிதாய் வந்த காலகட்டம். அதில் நம் காதுக்குள் ஒலிப்புனல்கள் (ஹெட்ஃபோன்) வழியே, பிற ஒலிகள் பாதிக்காமல், துல்லியமாய்ப் பாடல்கள் கேட்டுக் கொள்ள வசதிப்பட்ட காலம். அவர் பேசப் பேச நான் பரவசப் பட்டிருந்தேன். கூட இருந்த என் அண்ணன், அவருக்கு தன் மேதமையைக் காட்ட வேண்டும் என்று வேகம் வந்தது எனக்குத் தெரியாது. சட்டென என் அண்ணன் அவரை நிறுத்தி, “இளையராஜாவோட சிம்பன்சி எப்ப இந்தியாவுக்கு வருது?” என்று ஒரு கேள்வி போட்டார். அத்தோடு அடங்கியவர் தான் அந்த ஒலிப்பதிவாளர். அடுத்த வார்த்தை பேசாமல் நாங்கள் இடத்தைக் காலிசெய்ய வேண்டியதாயிற்று.
தான் அறிவாளி என நினைக்கிற முட்டாள்களிடம் வாதம் செய்ய முடியாது. கூடாது. யார் முட்டாள், என பார்க்கிறவர்கள் குழம்பி விட நேரிடலாம்.
அண்ணாச்சி கி.ரா.விடம் ஒருமுறை ஒருத்தன் கேட்டானாம். “அவரும் ஏழு ஸ்வரத்திலதான் பாடறாரு, நீங்களும் ஏழு ஸ்வரத்துலதான் பாடறீங்க. அப்றம் ஏன் அண்ணாச்சி அது ஹிந்தோளம்ன்றீங்க, இது தன்யாசின்றுங்க?”
சிலாள் டாக்டரையே எதிர்க் கேள்வி போடும்.
“இடது கால்ல வலி டாக்டர்” என்றார் அந்த வயசாளி.
“வயசானா அந்தமாதிரி வலி வர்றதுதான்.”
“அதெப்பிடி? வலது காலுக்கும் அதே வயசுதானே, அது வலிக்கலியே?”
இப்படி உதாரண புருஷர்கள் எழுத வந்து விடுவதும் உண்டு.
ஜோதிடம், ஜாதகம் இவற்றில் நம்பிக்கை உள்ளவர்களுக்குச் சொல்ல வேண்டுமானால், சில எழுத்தாளர்கள், தங்கள் ஜாதகத்தில் அந்த எழுத்து அமைப்புக்கு சிறு விநாடி இப்படியோ அப்படியோ பிறந்து தொலைத்து விடுகிறார்கள். அவர்கள் எழுத்தாளர்களாக கடைசிவரை ஆகவே முடியாது போகிறது. இதில் நாம் பாவம் பார்க்க ஏதும் இல்லை. அவர்கள் வாங்கி வந்த வரம் அது. சில மாடுகள் இயற்கையிலேயே தண்ணியாய்ப் பால் கறக்கிறது.
ஆனால் அவர்கள் நம்மை விடுகிறார்கள் இல்லை. இந்தப் பிரச்னை அவர்களுடையதா, நம்முடையதா என்பதே சவாலான கேள்வி!
இதில் ஐராவதம் என்று ஒருவர். ஆங்கிலத்திலும் வித்தகம் கொண்டவர் என்று நினைப்பு வேறு. எந்தக் கட்டுரை எழுதினாலும் மேற்கோள் என்று ஒரு ஆங்கில வரி, ‘புரோக்ஷணம்’ பண்ணித்தான் கட்டுரைக்குள் வருவார். அவரை நான் சட்டை செய்ததும் இல்லை. என்ன ஆயிற்று என்றால், விருட்சம் என ஒரு சிற்றிதழ் வந்தது. இப்போதும் 100 இதழ்களைக் கடந்து வந்து கொண்டிருக்கிறது. இப்போது அது நவீன விருட்சம். விருட்சத்தில் ஏது நவீனம், தெரியவில்லை.
அதில் இவர், ஐராவதம் எதாவது எழுதிக் கொண்டிருப்பார். அவருக்கு விமரிசன உலகில் தனி இடம் பிடிக்க ஆசை. (ஏற்கனவே அவருக்கு தனி இடம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அது அவர் நினைக்கிற தனி இடம் அல்ல, என்றாலும் கூட.)
எனது ஒரு சிறுகதைத் தொகுப்பு ‘ஒரு துண்டு ஆகாயம்’ நூலுக்கு அவர் விமரிசனம் எழுதி யிருந்தார் விருட்சத்தில். அதை நானும் வாசித்துப் பார்த்து விட்டு அத்தோடு விட்டு விட்டேன். ஆனால் விருட்சத்தின் ஆசிரியர் அழகியசிங்கர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, “உங்க நூலுக்கு விமரிசனம் எழுதியிருக்கிறார் ஐராவதம். பார்த்தீர்களா?” என்றார். “பார்த்தேன்” என்றேன். அத்தோடு அவர் விட்டிருக்கலாம். “நீங்கள் மறுப்பு எதுவும் தருவதானால் தாருங்கள். அதையும் வெளியிடுவோம்” என்றார். நான் கேட்டேன். “இதற்கு மறுப்பு என்னிடம் இருந்து வரும், என்ற எதிர்பார்த்தால் அதை ஏன் வெளியிட்டீர்கள்?”
பிறகு நான் அவர் வலியுறுத்தியதால் ஒரு பதில் தந்திருந்தேன். “இந்த விமரிசகர் வாய்ப்புக்கு அலைகிறவராகத் தெரிகிறது. இந்தப் புத்தகத்தின் ஒரு கதையை “சுமார்” என்று சொல்லிவிட்டு அத்தோடு விட்டிருக்கலாம். இப்படி மோசமான கதைகளுக்குத் தான் இலக்கியச் சிந்தனை பரிசும் தருகிறார்கள், என்று தேவை யில்லாமல், இலக்கியச் சிந்தனை அமைப்பை வம்புக்கு இழுக்கிறார். அவர் குறிப்பிட்ட அந்தக் கதை இலக்கியச் சிந்தனை பரிசு பெறாத போது, அவர் ஏன் அப்படிக் குறிப்பிட வேண்டும். எனக்கு இலக்கியச் சிந்தனை பரிசே தரக் கூடாது, என அவர் குறிப்பிட விரும்புகிறார் போலும். இப்படி விமரிசகர்கள், பொறுப்பில்லாமல் கைக்கு வந்ததை எழுதும்போது பத்திரிகை ஆசிரியர் முடிவு எடுப்பது அவசியம்.”
அந்தக் கடிதத்தை அழகியசிங்கர் வெளியிட்டார்.
அதன்பின் சுந்தரராமசாமி பற்றி இந்த ஐராவதம் எதோ தற்குறித்தனமாக எழுதப்போக விருட்சத்தில் ஒரு வருடம் அதை மறுத்தும் கண்டித்தும் கடிதங்கள் அழகியசிங்கர் பிரசுரித்தார். தன் பத்திரிகை பிரபலம் அடைவதாக அவர் நினைத்தாரா!
அப்போது தான் விருட்சம், ‘நவீன விருட்சம்’ என அவதாரம் எடுத்ததோ!
சில வருடங்கள் கழித்து, எஸ். வைதீஸ்வரனின் சிறுகதைத் தொகுதி ‘கால் முளைத்த மனம்’ வெளியானபோது, அது குறித்து என்னைப் பேசச் சொன்னார் அழகியசிங்கர். நான் வேணாம் என்று மறுக்கப் பார்த்தேன். புத்தகத்தைப் புரட்டினால் முன்னுரை தந்தவர், இந்த விமரிசன சிகாமணி ஐராவதம். அடேடே, என நான் பேச ஒத்துக் கொண்டேன்.
என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.
தொகுப்பில் ஒரு கதை. பிள்ளையார் சதுர்த்தி அன்று அப்பா களிமண்ணில் தானே பிள்ளையார் பிடிககப் பார்க்கிறார். அப்பா மேல் நல்ல மரியாதை உள்ள அவரது சிறு பிள்ளை எதிரே ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க அமர்கிறான். மண்ணைப் பிசைந்து உருட்டி அவர் வேலை செய்யச் செய்யத்தான் அவருக்கு பிள்ளையார் உருவம் சார்ந்து ஆயிரம் சந்தேகங்‘கள் வருகின்றன. தும்பிக்கை வலது புறம் வரணுமா, இடது புறமா... இப்படி. கடைசியில் தன் முயற்சியில் பின்வாங்கிய அப்பா, மகனிடம் எரிச்சல் படுகிறார். “போய்ப் படிடா. என்ன வேடிக்கை வேண்டிக்கிடக்கு உனக்கு...” என்கிறாப் போல கதை முடிகிறது.
மாஸ்டர் ஐராவதம் இந்தப் பிரச்னையைப் பற்றி, அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளி நன்றாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது, என்று முன்னுரையில் குறிப்பிட்டது எனக்குச் சிரிப்பு வந்தது.
அடங் கொக்க மக்கா!
நான் வெளியீட்டு விழா மேடையிலேயே குறிப்பிட்டேன். “முன்னுரை கேட்கும் போது இன்னும் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள் வைதீஸ்வரன். தலைமுறை இடைவெளி என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் தைரியமாக ஐராவதம் பயன்படுத்தி யிருக்கிறார். தலைமுறை இடைவெளி, என்பது ஒரு விஷயத்தில் அப்பா எடுத்த நிலைப்பாடுக்கு ‘நேர்-எதிர்’ நிலைப்பாடு பையனுக்கு இருந்தால் அதைத்தான் தலைமுறை இடைவெளி என்கிறார்கள். இந்தக் கதையில் என்ன அப்படி ஒரு நிலைப்பாட்டுப் பிரச்னை இருக்கிறது?” என்று கேட்டேன்.
கூட்டம் முடிந்து அழகியசிங்கரிடம் மாஸ்டர் ஐராவதம், “என்னப் பத்தி எப்பிடியும் சங்கர் பேசுவான்னு தெரியும். நான் எதிர்பார்த்திட்டே இருந்தேன்” என்றாரே தவிர, என் கேள்விக்கு அவர் பதில் சொல்ல முடியவில்லை.
பிற்காலத்தில் எனது அத்தனை புத்தகங்களையும் ஒருசேர வாசித்துப் பார்க்க அவர் ஆசைப்பட்டதாக அழகியசிங்கர் சொல்ல, ஒரு செட் தந்தனுப்பினேன். வாசித்திருப்பார். ஆனால் என்னிடம் அவை பற்றிப் பேசவில்லை. தயக்கம் இருந்திருக்கலாம்.
நானும் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தது கண்ணன் மகேஷ். அவரது நாவல் ‘வாழ்வெனும் மகாநதி’ கலைமகள் போட்டியில் பரிசு வென்று தொடராக வந்தது. வெள்ளைக்காக்கைகள், கிருதயுகம் எழுக, என்றெல்லாம் பிற நாவல்கள் எழுதியிருக்கிறார். புதிய எந்த நல்ல நட்பையும் நான் வெளிப்படையான அன்புடன் எளிமையுடன் வரவேற்கிறவன் தான். அநேகமாக தீபம் அலுவலகத்தில் இவரை நான் சந்தித்துப் பழக ஆரம்பித்திருக்கலாம். அல்லது வேறு இலக்கியக் கூட்டங்களில் இருக்கலாம். தான் முட்டும் அளவு புகழ் பெறவில்லை என்பது அவரது தணியாத ஏக்கமாய் இருந்தது. என்னைப் பற்றியே கூட என் நண்பர்கள் பலர் சொல்வார்கள் இதே மாதிரி. அவர்களின் அன்பைத் தவிர இதில் வேறு அர்த்தம் எதுவும் இல்லை.
உலகம் சிலரை அதுவும் சில சமயம் கொண்டாடும். ICONS உருவாவது ஒரு சமூக நிகழ்வு. (உதாரணம் அப்துல் கலாம்., ராஜேஷ்குமார்.) அது உனக்கு வாய்க்கலாம். வாய்க்காமலும் போகலாம். அதை எதிர்பார்த்து காத்திருக்க முடியாது. காத்திருந்தால் அது கிடைத்து விடும் என்பதும் இல்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல, நமது படைப்பு முயற்சிகளில் தளராத ஒழுங்கு வைத்துக்கொண்டு, நமது திறமையைப் பயிற்சியால் வளர்த்துக் கொள்வதே நமது சாத்தியம். ஒருவேளை நமக்கு ஓர் உச்ச அங்கீகாரம் கிடைத்தால், அதற்குத் தகுதியானவனாக ஆவதற்கு நாம் தயாரித்துக் கொள்ளலாம். அப்போது அந்தப் பட்டம் நமக்குத் தங்கும். இதுதான் என் முடிபு. இதில் ஆதங்கம் ஏக்கம், இதற்கெல்லாம் இடமே இல்லை.
என் படைப்புகளில் தலைப்பு உட்பட, உவமைத் தெறிப்புகள் உட்பட, நடை உட்பட... என் பாணி என நான் அமைத்துக் கொண்டிருக்கிறேன். இவர் இப்படி என்ற விமரிசன வட்டத்துக்குள் அடங்காத அளவு, புது விஷயங்களை நோக்கி கதைகள் புதிதாய் எழுதுந்தோறும் பயணிக்க ஆசைப்படுகிறேன். இந்தத் தேடல், அதன் சுகம் என் எழுத்தினை மிகுந்த அளவில் நியாயம் ஆக்குகிறது, சுவாரஸ்யம் ஆக்குகிறது, குறைந்தபட்சம் எனக்கு.
இருந்தாலும்... அங்கீகாரம்... என்று அவர், கண்ணன் மகேஷ், அடிக்கடி தனக்குள் துவள்கிறவராய் இருந்தார். கரகாட்டக்காரனில் செந்தில், “ஒரு விளம்பரம்...” என்று தவிப்பது போல. கண்ணன் மகேஷ் இதழ்களுக்கு வாசகர் கடிதங்கள் எழுதியபடியே, கதைகளும் அனுப்பினார். வாசகர் கடிதங்கள் பிரசுரம் ஆயின, கதைகள் திரும்பி வந்தன. (நல்லவேளை, வாசகர் கடிதங்களுக்கு அவர் ஸ்டாம்ப் வைத்து அனுப்பவில்லை.)
நுங்கம்பாக்கம் இந்துசமய அறநிலையத் துறையில் ஆடிட் பணி அவருக்கு. அந்தப் பக்கம் போனால் இறங்கி அவரையும் பார்த்து நாலு வார்த்தை பேசிவிட்டுப் போவது என் வழக்கம். இந்த மனுசருக்கு திடீரென்று ஒரு சந்தேகம். வந்தவன், எந்தப் பத்திரிகைக்கு அடுத்து கதை அனுப்பியிருக்கீங்க, என்றெல்லாம் விசாரிக்கிறான். வேவு பார்க்கிறானா?...
இப்படி ஆட்களுக்கு தங்கள் அறிவில் அல்லது அறிவின்மையில் அபார நம்பிக்கை இருக்கும். அதேதான், என கண்ணன் மகேஷ் தனக்குள் உறுதி செய்துகொண்டு விட்டார். பார்த்தால், அவரது கதை, என்னிடம் பேசிய கதை, நாலைந்து நாளில் திரும்பி வந்திருந்தது. சரி என்று அந்தப் பத்திரிகை இதழை அவர் வாங்கிப் பார்த்தால், வாசகர் கடிதம் அவர் எழுதி வந்திருக்கிறது, அத்தோடு, அதில் என் கதை, எஸ். சங்கரநாராயணனின் சிறுகதை வெளிவந்திருக்கிறது.
தாள முடியாத கண்ணன் மகேஷ் பேனாவை எடுத்து மையை ஒரு உதறு உதறி விறுவிறுவென்று அந்தப் பத்திரிகை உதவி ஆசிரியர் பற்றியும், என்னைப் பற்றியும், (என் இழிகுணங்கள் பற்றிச் சொல்ல வேண்டாமா? அவரிடம் எந்த இதழுக்கு அவர் கதை அனுப்பினார் என்ற விவரம் அறிந்துகொண்டு, நேரே அந்த இதழுக்குப் போய், கண்ணன் மகேஷ் கதையைப் போடாதீர்கள். என் கதையைப் போடுங்கள், என்று வம்பு நான் செய்வதாக ஒரு கதை எழுதி தினமணி கதிருக்கு அனுப்பி வைத்தார்.
‘பச்சைப் புல்லில்...’ என்பது கதை. அதில் என் பெயர் நாராயண சங்கர். நான் போய் அவரது கதையைப் பிரசுரம் செய்யாதீர்கள், என்று சொன்ன இதழ் சாவிக்கு பதிலாக, ‘கோவி.’ இப்படி.
அதைத் தற்செயலாக நான் வாசிக்கவும் நேர்ந்தது. கண்ணன் மகேஷ் கதையா, பரவாயில்லையே, அவருக்கு சந்தோஷமாய் இருக்கும், என நினைத்து வாசித்தேன். எனக்கு, அது... வருத்தமாய் இருந்ததா?
இல்லை. சிரிப்பு தான் வந்தது. அட வாசகர் கடிதம் எழுதுகிற ஒரு சாமானியன். சோளக்காட்டு பொம்மை கோபுரத்துக்கு ஆசைப் படலாமா? இந்த விவரங்கள் அத்தனையும் அசட்டுத் தனமான யூகங்கள் என்று எல்லாருக்குமே அடுத்து தெரிந்து விடாதா? இப்படி என்னைத் திட்டி எழுதியதால் ஒரே பயன், அந்தக் கதை பிரசுரம் ஆனது தான். ஆக அந்தப் பெருமையிலும் எனக்குப் பங்கு அளித்து விட்டார் கண்ணன் மகேஷ்.
அவரது ஒரு மொழிபெயர்ப்பும் வாசித்தேன். பேர்ள் எஸ். பக்கின் டாக்டர் பாத்திரம் அமைந்த கதை. அதில் ‘லவபிள் பேஷன்ட்’ என வரும். நம்மாளின் தமிழ், ‘விரும்பத்தக்க பொறுமைசாலி.’ இதன் தமிழ்ப் பிரதியை வைத்தே ஆங்கிலத்தில் இது எப்படிச் சொல்லப் பட்டிருக்கும் என நமக்குப் புரிகிறது. அவ்வளவு எளிய விஷயத்தில் அவருக்கு இத்தனை குளறுபடி.
மீண்டும் அந்த நாராயண சங்கர் விவகாரம்.
இது தவிர, ஆசிரியர் சாவிக்கு ஒரு கடிதம் அனுப்பி யிருந்தார் கண்ணன் மகேஷ். என் கதைகளை தயவு தாட்சண்யத்துடன், சாவி உதவியாசிரியர் ரவி பிரகாஷ் போடுவதாகவும், தன் கதைகளை வேண்டுமென்றே நிராகரிப்பதாகவும். அந்தக் கடிதம் சாவி சார் கையில் கிடைத்தபோது, என் கதை ‘அன்றிரவு’ சாவியில் பிரசுரம் ஆகி யிருந்தது.
சாவி அதை வாசித்து விட்டு, ரவி பிரகாஷை அழைத்தார். தனக்கு கண்ணன் மகேஷிடம் இருந்து வந்த கடிதம் பற்றிச் சொல்லாமல், “ஏன் சங்கரநாராயணனுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்தாய்? இனி கதைகளை என் மகள் வாசித்தபின், அவள் தேர்வு செய்வதை வெளியிடு நீ” என்று கடிந்து கொண்டார். தன்னை அபாண்டமாகக் குற்றம் சாட்டுவதாக ரவி பிரகாஷ், உதவி ஆசிரியர் உணர்ந்த கணம் அது. “தரம் அடிப்படையில் தான் நான் கதைகளைத் தேர்வு செய்வேன். இப்படி நீங்கள் என்னை சந்தேகப் படுவது முறையல்ல” என்றபடி சாவிக்கு வந்திருந்த அத்தனை கதைகளையும் சாவி சார் மேசையில் வைத்துவிட்டு, “உங்கள் மகள் தேர்வு செய்யும் கதைகள் இனி சாவியில் வெளிவரட்டும். ஆனால் சாவியில் வரும் கதைகளின் தரம் பற்றி இனி நான் பொறுப்பேற்க முடியாது” என்று ஒரு விரைப்புடன் சொன்னார் ரவி பிரகாஷ்.
இந்த விவரங்களை தன் பிளாக்கில் ரவி பிரகாஷ் விஸ்தாரமாய் எழுதியிருக்கிறார். சற்று முன்தான் நான் அதை வாசிக்க நேர்ந்தது.
என்ன வேடிக்கை, என்றால் சாவியில் வெளியான என் சிறுகதை ‘அனறிரவு’ இலக்கியச் சிந்தனையில் சிறந்த மாதக்கதைப் பரிசு பெற்று விட்டது.
பிறகு அது ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் தூர்தர்ஷனில் ஒருமணி நேரக் குறும்படமாகவும் பெரும் புகழ் பெற்றது. சாவி பத்திரிகைக்கு இலக்கியச் சிந்தனை ஒரு பாராட்டிதழும், இந்தக் கதையை வெளியிட்டதற்காக அனுப்பி வைத்தது. சாவியில் வந்த கதைகளில் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற ஒரே கதை, அல்லது முதல் கதை என் கதைதான்.
கண்ணன் மகேஷின் ‘பச்சைப் புல்லில்...’ கதைக்குப் பரிசு கிடைக்கவில்லை. மோசமான கதைகளுக்கு இலக்கியச் சிந்தனை பரிசளிப்பதில்லை.
இதில் என்ன வேடிக்கை என்றால், ‘பச்சைப் புல்லில் பசும் பாம்பு’ என என்னை அவர் கதையில் சாடுகிறார். உண்மையில், அவரை நல்ல நண்பராக நான் நினைத்ததற்கு, என்னை அவர் ஏமாற்றிய அளவில், பச்சைப் புல்லில் பசும் பாம்பு அவர் தானே!
சமீபத்தில் என் ‘பெருவெளிக்காற்று’ சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா டிஸ்கவரி புக் பேலசில் நடந்தது. பேச்சாளராக ரவி பிரகாஷ் வந்திருந்த போது, ‘பச்சைப் புல்லில்...’ கதை பற்றி மேடையில் குறிப்பிட்டார். அதுவரை கண்ணன் மகேஷின் இந்தக் கதை பற்றி நான் அவரிடமோ, அவர் என்னிடமோ பேசவே யில்லை. இருவருமே அதை சட்டை செய்யவில்லை என்று தோன்றுகிறது.
பெயர் களங்கப்பட்டாப் போல இருந்தாலும், பொறுமை காத்தால், அந்தக் களங்கம் விலகி மேலதிகம் நம்மைப் பற்றிய நன்மதிப்பு உயரவே செய்யும். நன்றி கண்ணன் மகேஷ்.
சில மாடுகள் இயல்பிலேயே தண்ணியாய்ப் பால் கறக்கிறது. இதுகுறித்து கவலைப்பட முடியாது.
*

storysankar@gmail.com
91 97899 87842

No comments:

Post a Comment