Friday, October 26, 2018


part 13

துரும்படியில் யானை படுத்திருக்கும்
எஸ். சங்கரநாராயணன்
 சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று, காலந்தோறும் அதன் வரையறைகளையும் எல்லைகளையும் விரித்தும் சுருக்கியும் மாற்றியும், பரோட்டா மாவு பிசைகிறாப்போல ஏதாவது உருட்டிப் புரட்டிக் கொண்டே வருகிறார்கள். ஒரே விஷயத்தை மையமிட்டு அது இயங்க வேண்டும், என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. அதிகபட்சம் 30 நிமிடங்களில் வாசித்து முடிக்கக் கூடிய புனைவு வடிவம் அது, என்றுகூட ஒரு இலக்கணம் கொண்டு வந்தார்கள். சுமார் 120 பக்க அளவிலான எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘தி ஒல்ட் மேன் அன்ட் தி சீ’ ஒரு சிறுகதையே என்று வாதிடுகிறவர்கள் இருக்கிறார்கள். பக்க அளவு, வாசிக்கிற கால அளவு எல்லாம் தாண்டி, அது ஒரே விஷயத்தை மையமிட்டு மையத்தைவிட்டு அகலாமல் இயங்குகிற ஒரு தளத்தில் கட்டுக்கோப்புடன் அமைய வேண்டும் எனவும் ஒரு கோஷ்டி உண்டு. ஏதோ ஒரு ஒருமை, கால ஒருமையாகவோ, நினைவு ஒருமையாகவோ, செய்தி ஒன்றினைச்சுற்றியே ஒட்டியும் வெட்டியும் எனவோ அமைவதும் சிறுகதை என்று காலம் அதை மாற்றிச் சொல்ல வைத்திருக்கிறது. ஒரு வடிவம் அதன் வெளிப்பாட்டு முறையில் பழகியதும், தானே புதிய தளங்களுக்கு வடிவங்களுக்கு மாறிக் கொள்வதை அவதானிக்கலாம். செய்யுள், கவிதை சட்டென்று வசனகவிதை என்று புதிய கிளை விட்டாப்போல, அடுத்து புதுக்கவிதை என்று வடிவம் மாற்றிக் கொண்டாப்போல காலம் எதையாவது நிகழ்த்திக் கொண்டேதான் வந்திருக்கிறது. முழுக்கைச் சட்டை, அரைக்கைச் சட்டை, அட கையே இல்லாத ரவிக், பஃப் வெச்ச பிளவுஸ்… எல்லாம் ஒண்ணுமாத்தி ஒண்ணு வரும். திரும்ப முதல் ஐட்டமே கொடியேத்துவதும் உண்டு.
ஞானக்கூத்தன் எனக்குச் சொன்னது இது. சிறுகதை என்றால் என்ன என்று மாதிரிக்கதை வடமொழியில் இருக்கிறது. ஆங்கிலத்திலும் மாதிரிக்கதை என ஒன்று கேள்விப்பட்டிருக்கிறேன் – தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒளவை நடராசன் சொன்னது. அதை அடுத்து பார்க்கலாம். முதலில் வடமொழிக் கதை.
ஒரு ஊரில் ஒரு மோசமான பாடகன் இருந்தான். சகிக்க முடியாத குரலில் அவன் அதிகாலையிலேயே எழுந்து அசுர சாதகம் செய்தான். அவன் வீட்டுக்கு எதிரே முருங்கைமரம் ஒன்று. வேதாளம் ஒன்று அதில் குடியிருந்தது. காலையிலும் மாலையிலும் அந்தப் பாடகனின் தொந்தரவு அதனால் சகிக்க முடியாமல் இருந்தது.
பாடகனுக்கு ஒரு நண்பன் இருந்தான். வேதாளம் அந்த நண்பனிடம் போய், என்னால் இவனைத் தாள முடியவில்லை. எப்படியாவது இவனை இந்த இடத்தை விட்டுக் காலிசெய்யச் சொல், அதற்குப் பிரதியுபகாரமாக, நான் போய் இந்த நாட்டு ராஜகுமாரியைப் பிடித்துக் கொள்கிறேன். எந்த வைத்தியன், எந்த மந்திரவாதி வந்து, யார் விரட்டினாலும் நான் போக மாட்டேன். நீ வந்தால் அவளை விட்டு விடுகிறேன். ராஜா உனக்கு நிறைய வெகுமதிகள் தருவார். அதை வைத்துக் கொண்டு நீ சந்தோஷமாக வாழலாம், என்றது.
நண்பன் ஒத்துக் கொண்டான். சொன்னபடி, எதையோ பேசிச் சமாளித்து, அந்தப் பாடகனை வீடுமாற வைத்து விட்டான். வாக்கு தவறாமல் வேதாளமும் போய் ராஜகுமாரியைப் பிடித்துக் கொண்டது. அந்த வேதாளத்தை ஓட்ட ராஜா அரண்மனைவைத்தியரை அழைத்துப் பார்த்தான். முடியவில்லை. நாடெங்கிலும் தண்டோரா போட்டு வைத்தியர்களையும் மந்திரவாதிகளையும் அழைத்துவந்து பார்த்தான். வேதாளம் ராஜகுமாரியை விட்டு நகர்வதாய் இல்லை. பிறகு இந்த நண்பன் போனான். அவன்போய் நின்றகணம் வேதாளம் இறங்கிப்போய் பக்கத்து நாட்டு இளவரசியைப் பிடித்துக் கொண்டது.
ராஜாவுக்கு ரொம்ப சந்தோஷம். பெரும் வெகுமதிகள் கொடுத்து அவனை கெளரவித்து அனுப்பினான். நண்பனின் புகழ் நாடெங்கிலும், நாடுதாண்டியும் பரவி விட்டது.
பக்கத்து நாட்டு ராஜா இப்போது என்ன செய்ய என்று திகைத்தான். அவன் நாட்டிலும் எந்த விதத்திலும் அவனால் அந்த வேதாளத்தை விரட்ட முடியவில்லை. உடனே அவன் இந்தநாட்டில் வேதாளத்தை விரட்டிய நண்பனைப் பற்றிக் கேள்விப்பட்டான். சகல மரியாதைகளுடனும் இவனை அழைத்துவரச் சொன்னான்.
நண்பனுக்கு பயம் வந்து விட்டது. ஆனாலும் அரசகட்டளை, வேறு வழியில்லை அல்லவா? பக்கத்து நாட்டு அரண்மனைக்குப் போனான். அவனைப் பார்த்ததும் வேதாளம் ரொம்பக் கோபப்பட்டது. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு ஒருமுறை நான் உனக்கு உதவி செய்தேன். நீ எனக்குச் செய்த உதவிக்கு நான் கைம்மாறு செய்துவிட்டேன்...
நான் உனக்கு இம்முறை உதவப் போவதில்லை, என்றது வேதாளம். இப்படி ஒவ்வொரு இடத்துக்கும் நீ என்பின்னால் வந்தால் நான் எங்குதான் எப்படித்தான் வாழ்வது? நான் உனக்கு உதவ மாட்டேன், என்றது வேதாளம்.
அப்போது நண்பன் சொன்னான் – நீ இப்படியெல்லாம் அடம் பிடிப்பேன்னுதான், நான் தயாரா, அந்தப் பாடகனையும் என்கூட கூட்டி வந்திருக்கிறேன்!...
கதை என்றால் ஒரு ஆரம்பம், பிறகு எடுப்பு, தொடுப்பு, ஒரு இடைச்சரடு, சின்னத் திருப்பத்துடன் ஒரு முடிப்பு இதெல்லாம் வேண்டும், என்கிறது இந்த இலக்கணம். மொத்தத்தில் கதை என்றால் எதிர்பார்ப்புடன் கூடிய சுவாரஸ்யம் அல்லது ஈர்ப்பு அதில் வேண்டும். இது சமஸ்கிரதத்தில் உள்ள கதை.
இனி ஆங்கில இலக்கணம். பிற்பாடு சாமர்செட் மாம் எழுதிய சிறுகதை இது, என்று வாசித்தறிந்தேன். இதோ அதையும் சொல்லிறலாம்.
பாக்தாத்தில் ஒரு வியாபாரி. சில சாமான்களை வாங்கி வருவதற்காக அவன் தன் வேலைக்காரனை பஜாருக்கு அனுப்பினான். போனவன் குய்யோ முறையோ என்று பதறியோடி வந்தான்.
ஐயா, பஜார்க் கூட்ட நெரிசலில் நான் ஒரு பெண்ணிடம் இடித்துக் கொண்டேன். கிட்டத்தில் பார்த்தபோதுதான் அது பெண் அல்ல, மரணம் என்று தெரிந்தது. மரணம் என்னை எச்சரித்தது. தயவுசெய்து உங்கள் குதிரையைத் தாருங்கள். நான் என் தலைவிதியில் இருந்து தப்பித்தாக வேண்டும். நான் அதில் ஏறி கண்காணாத தூரத்துக்கு, சாமாரா நகரத்துக்குப் போய் ஒளிந்து கொள்கிறேன். அங்கே மரணம் என்னைக் கண்டுபிடிக்க முடியாது.
முதலாளியும் குதிரையைக் கொடுத்தார். அவன் அதன்மீதேறி எவ்வளவு வேகமாகப் போகமுடியுமோ அந்த வேகத்தில் ஊரைவிட்டே வெளியேறி விட்டான்.
அவனை அனுப்பிவிட்டு அந்த வியாபாரி அவரே கடைத்தெருவுக்குப் போனார். அங்கே அவர் மரணத்தைச் சந்தித்தார். ”நீ ஏன் என் வேலைக்காரனைப் பார்த்து எச்சரிக்கை செய்தாய்?” என்று கேட்டார்.
“அது எச்சரிக்கை சைகை அல்ல. நான் அவனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஏனெனில் இன்று இரவு அவனை சாமாரா நகரத்தில் சந்தித்தாக வேண்டும். இங்கே இருக்கிறான் அவன்!”
மாம் எழுதிவிட்டார் கதை, சரி. இதில் உள்ள திருப்பம், அதன் ஊடான சேதி, மரணத்தை வென்றவர் யாருமில்லை என்பது, நேரம் வராதபோது அது உன்னை சட்டை பண்ணாது, என்ற அளவில் வியாபாரி அதைச் சந்தித்து சாவகாசமாய் உரையாடுவது… என்றெல்லாம் கிளையாய்க் கற்பனையை வளர்த்துக் கொள்ளலாம் இதில்.
இதென்ன ஐயா விசேஷம். நம்ம உள்ளூர் உதாரணம் ஒண்ணு சொல்லலாம். மகாகவி பாரதியார் ஒரே வரியில் ஒரு கதை எழுதியிருக்கிறார்!
கடவுள் கேட்டார் – பக்தா, இதுதான் பூலோகமா?
எத்தனை யோசனைக்கிளைகள் பிரிகின்றன இதில் பாருங்கள். கடவுள் கேட்டார். அவர் ஏன் கேட்கவேண்டும்? எல்லாம் அறிந்தவர்தானே அவர்? சரி யாரிடம் கேட்டார்? பக்தனிடம்! அவரை நம்பி வந்த பக்தனிடம் அவர் சந்தேகம் கேட்கிறார். அடுத்தது, இவன் அவரை பூலோகத்துக்கு அழைத்து வருகிறான். அவராக வரவில்லை. பிறகு, அவர் சந்தேகமாய்க் கேட்கிறார், இதுதான் பூலோகமா? அதுவே தெரியாத அவர் இவன்பிரச்னைக்கு என்ன தீர்வு சொல்ல முடியும்?
இலக்கணங்களை மறந்து விடலாம் என்று தோணுகிறது… நாவலைவிட சிறுகதைக்கு வடிவ நேர்த்தி முக்கியம். கட்டுக்கோப்பு முக்கியம். தெளிவு முக்கியம். ஒரு கலைத்திகட்டல் அடிநாக்குத் தித்திப்பாக, காட்டில் நாவில் விழுந்த தேன்துளியாக நல்முகூர்த்தம் ஒன்றில் வசப்படும். சட்டென புது வெயில் வந்தாப்போல உலகமே புதுவிதமாய்க் காட்சிப்படும் கலைஞனுக்கு. வழக்கத்தில் இருந்து வழக்கமற்ற ஏதோ, புதுசான ஏதோ. அது எப்ப வேணாலும் கிட்டும். தூக்கத்திலும் கூட கிடைக்கலாம். நானே ஒரு கனவை, சட்டெனக் கண்விழித்து எழுந்துகொண்டு கதையாக்கி யிருக்கிறேன்.
கதைக்கு ஒரு உண்மையின் பின்னணி தேவையா? ஆம் என்றும் இல்லை என்றும் சொல்வேன். நமக்குக் கற்பனை போன்ற, பிறர் வாழ்வில் உண்மையான பின்னணியைக் கதையில் கையாளுதல் இயல்பான விஷயம். என்னைப் பொறுத்தமட்டில் தெரிந்த நிஜப் பாத்திரங்களை வைத்துக் கதை புனைய எனக்குச் சம்மதம் கிடையாது. காரணம் நான் அவரைப் பற்றிய ஒரு வியூகத்தை, என் அறிவுதர்க்கத்துக்கு உட்பட்டு எழுத வந்தால், நாளை ஒருவேளை என் கருத்து, கணிப்பு தவறாக ஆகிவிடக்கூடிய சாத்தியம் உள்ள நிலையில், என் மனது என்னைக் குற்றவாளியாய்க் காணும். என்னால் அதைத் தாள இயலாது.
கவிதை பொங்கும் திறந்த மனசுக்குக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. பாத்திரங்கள் வாழ்வனுபவத்தில் தெறிப்பாய்ச் சொல்லும் வசனங்கள் பெரும் வியூகங்களைத் தர வல்லவை. எர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு மீனவனோடு படகில் கடலுக்குள் போய் அவனுடனேயே இருந்து பழகி ஒரு நாவல் எழுதினார். எழுத ஆரம்பிக்குமுன் அவனிடம் தன் நாவலுக்கு ஒரு பெயர் வை, என்று கேட்டார். ஐய எனக்கு என்ன சாமி தெரியும்… என்றவன், ஆனாலுங்கூட சாமி எனக்கு ஒரு ஆச்சர்யம் உண்டுங்க. சிலாள் பொறக்கும்போதே பணக்காரனா பொறந்துர்றான். சிலாள் ஏழையாப் பொறந்து கடேசிவரை காசைக் கண்ணால பாக்காமயே மண்ணுக்குள்ள போயிர்றான், ஏன் சாமி அப்டி? – என்றான் இடுங்கிய கண்களுடன். அவன் நினைவாக அந்த நாவலுக்கு To have and have not என்று பெயர் வைத்தார் ஹெமிங்வே.
நமது பழமொழிகளையும் சொலவடைகளையும் பார்த்தாலே தெரியும். வாழ்க்கை, அது தரும் அனுபவங்கள் சிறப்பான சொல்தெறிப்புகளாக வந்து விழுந்து விடுகின்றன. கண்ணதாசனிடம் ஒருவர் சொன்னாராம். “பாவம் அவரு ரொம்ப ஏழைங்க. அவரு வேட்டில நெஞ்ச நூலை விட தெச்ச நூல் அதிகம்.”
நான் BSNL அண்ணாநகர் சென்னை தந்தியலுவலகத்தில் வேலை பார்த்து வந்தேன். எங்கள் அலுவலகத்துக்கு மேல்மாடியில் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆளனுப்புகிற ஒரு ஏஜென்சி இருந்தது. வருகிற ஆட்கள் எல்லாம் கிடைத்த இடத்திலெல்லாம் கடன் வாங்கிக் காசு தேர்த்தி வேலைக்கு என்று துபாய், அரேபியா என்று கிளம்புகிறவர்கள். ஒருநாள் ஒருவன் வாசலில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன் – அன்று இரவு அவனுக்கு ஃப்ளைட். அதுவரை சாப்பிடக் கூட கையில் காசு இல்லை அவனிடம். நல்லாத் தண்ணி குடிச்சிட்டேன். ராத்திரி ஃப்ளைட்ல எப்பிடியும் சாப்பாடு உண்டுல்லா? – என்றான் அவன். அந்தச் சாப்பாட்டை நம்பி, அதுவரை சாப்பிடாமல் கிளம்பும் மகாத்மா.
எங்கள் அலுவலகத்தில் தினக்கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்த பையன் ஒருவன். அவன் தாய் இறந்து விட்டாள். பத்தாம் நாள் காரியத்துக்கு ஊரில் இருந்து உறவுக்காரர்கள் வந்தபோது அவன் அடைந்த மகிழ்ச்சியை நான் காண முடிந்தது. அவர்களோடு ஊருக்குப் போகவேண்டும் என்று அப்பாவிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தான் அவன்.
கதை சொல்லுவதற்கான முறைமையை இப்படி வாழ்க்கை சட்டென அடியெடுத்துக் கொடுத்து விடும். கமலாதாஸ் ஒரு ‘சிறுமி-விபச்சாரம்’ பற்றிய கதையைத் தலைப்பிலேயே அழுத்தமாய் ஆரம்பிக்கிறார். DOLL FOR THE CHILD-PROSTITUTE. இந்தத் தலைப்பைப் படித்துவிட்டு ரொம்ப நேரம் வேறு வேலை செய்ய முடியாமல் தவித்தேன் நான்.
சமீபத்தில் நான் பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னையின்பால் ஈர்க்கப்பட்டு கவரப்பட்டு வருகிறேன் என்பது புதிய செய்தி அல்ல. எங்கள் வீட்டு வாசலில் அப்போது செம்பருத்திச் செடி ஒன்று இருந்தது. தினசரி காலை என் மனைவிக்காக நான் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தந்து உதவுகிறது உண்டு. அதிகாலையில் மரத்துடன் பழகுவது அருமையான அனுபவம். இலைகளுக்குள்ளும், வேருக்கும் நீர் தெளிப்பதும் ஊற்றுவதும், இலை அப்போது தரும் வாசனையும், மண்ணின் நெகிழ்ச்சியும், பூக்கள் சூரியனைக் காணக்காண உடலை விரிப்பதும் அழகு. மூடிய குடைபோல் கிடக்கும் செம்பருத்திப் பூ, சூரியன் வர சட்டென மூக்கை வெளியே நீட்டி, மடல்களை விரியத் திறப்பது, யானையொன்று தும்பிக்கையை நீட்டியாடுவது போலவும், அதன் இதழ்கள் ஆப்பிரிக்க யானையின் காதுகள் போலவும் தோற்றங் காட்டின. சிவப்பு யானைகள் என ஒரு கதை, பாக்யா தீபாவளி மலரில் நான் பிறகு எழுதினேன்.
லா.ச.ரா. செம்பருத்திப் பூவை அம்பாளின் அருள் வழங்கும் உள்ளங்கை, என எழுதியிருக்கிறார்.
அவசரம், கதை எழுதித் தந்தாக வேண்டும், என்கிற நெருக்கடியில் வாழ்வின் கவிதைக் கணங்களை உருவகித்துக் கொண்டு இயங்குவதும் வழக்கம்தான். லிஃப்டில் தனியே மாட்டிக்கொண்ட நிமிடங்கள் பற்றி இரா. முருகன் எழுதியிருக்கிறார். கவிதைக் கணங்கள் என்பது சட்டென உணர்வெழுச்சி கண்டு அடங்காப் படபடப்பு தந்த கணங்கள். அன்போடு வளர்த்த பூனை கால்தவறிக் கிணற்றில் விழுந்துவிட பெரியவர் படும்பாடு, என தி. ஜானகிராமன் எழுதியிருக்கிறார். புதுமைப்பித்தனின் ஒரு கதை – மனிதயந்திரம், என்று நினைக்கிறேன். ஒரு அவசரம் என்று முதலாளி அறியாமல் கல்லாவில் காசெடுத்துவிட்டு, மனசு அதிர்வதைத் தாளமுடியாமல் ரயிலில் இருந்து இறங்கி முதலாளியிடம் பணத்தைத் திரும்பிவந்து சேர்த்த ஒரு கடை ஊழியனின் கதை ஞாபகம் வருகிறது.
சில சமயம் இப்படிக் கதைகள் ஒரு பெரும் மானுட சமூகத்தின் பங்களிப்பாக உருப்பெருகி நிற்பதும் உண்டு. லா.ச.ரா.வின் குருஷேத்திரம், என்னை அயர்த்திய ஒரு கதைப்பொருள். திருடன் ஒருவன், திருடிவிட்டு, திரும்ப ரொம்ப நேரங்கழித்து அந்தப் பக்கம் வருகிறான். திருட்டுக் கொடுத்ததைத் தாளமுடியாமல் பறிகொடுத்தவன் அந்தக் கோயில் குளத்தில் பிணமாக மிதந்து கொண்டிருக்கிறான். ஐயோ, என்ற திருடனின் மன உளைச்சல்தான் கதை. ஜானகிராமன் கதை ஒன்று. சின்னப்பிள்ளை ஒன்று மிட்டாய் வாங்கக் கடைக்கு வரும். கடைக்காரர் மிட்டாய் தந்துவிட்டு மிச்சச் சில்லரை தராமல் குழந்தையை அனுப்பி விடுவார். குழந்தையை அதன் அம்மா கூட்டிவந்து கடைக்காரரிடம் சில்லரை கேட்பாள். அவர் தந்தனுப்பி விட்டதாய்ச் சொல்வார். அந்த இடத்திலேயே அந்த அம்மா குழந்தையை ஒரு மொத்து மொத்தி, “சனியன் இந்த வயசுலயே பொய் சொல்லுது” என்று திட்டும்போது, ஐயோ, என்று மனம் பதறுவார் கடைக்காரர். அடி அவர் முதுகில் விழுந்தாப் போல!
சில சமயம் இப்படிக் கவிதைக் கணங்களை விடுத்து, உலகளாவிய ஒரு விழுமியத்தைக் கையில் எடுப்பதும் உண்டு. இவையெல்லாம் காலம் அளிக்கிற கொடை அல்ல. அறிவின் வீச்சு. சட்டுச் சட்டென்று மனதில் வந்த உதாரணங்களைச் சொல்லிச் செல்கிறேன். இதேபோன்ற வேறு உதாரணங்கள் உங்கள் மனதில் அலையடிக்கலாம். ஜெயமோகனின் வாரிக்குழி, மறக்க முடியாத கதை. மதம் பிடித்த யானை ஒன்று கட்டறுத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடுகிறது. கையில் வெறும் அங்குசத்துடன், ஆனால் யானையின் பயத்தை மெல்ல மெல்லப் பெரிதாக்கி, அதைத் தன் ஆளுமைக்குள் கொண்டுவந்து, யானைமேல் அமர்ந்து திரும்ப ஊருக்குள் வரும் பாகனின் கதை. மனிதன் மகத்தானவன் என்கிற விழுமியம் மனசை விம்ம வைக்கிறது.
ஒரு சீனக்கதை – எருது, என நான் மொழிபெயர்த்திருக்கிறேன். மகா பலசாலியான எருது, மனிதனைக் கண்டாலே நடுங்கி அவன் பராக்கிரமன், தன்னை அவன் சுண்டுவிரலாலேயே அழித்து விடுவான் என்று பதறும் குணத்தை விவரித்துச் செல்கிறது கதை. அதை ஒரு கொத்தடிமை விவரிப்பதாகவும், அவனுக்கே தன் பலம் தெரியாமல் கொத்தடிமையாய் வாழ்கிறான் என்றும் ஒரு முடிச்சு போடுகிறார் ஆசிரியர் யெ ஷேங்தாவ்.
கதை மனசில் சட்டெனக் கூடு கட்டும் கணங்கள் மகத்தானவை. தற்போது மெகா தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதிவரும் பாஸ்கர் சக்தி ஒருமுறை என்னை ஸ்பீல்பர்க்கின் ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ படம் வீடியோவில் பார்க்கக் கூப்பிட்டான். அப்போது திரையிடப்படாமல் அரிதாக வீடியோ கிடைத்தது எங்களுக்கு. அவனது உறவினர் வீட்டுக்கு நெற்குன்றத்துக்கு வரச்சொன்னான் பாஸ்கர். வரும் வழி கேட்டேன். “மேடு இறங்கினால் செங்கச்சூளை, அப்படியே திரும்பினா சித்தப்பா வீடு…” என்று வழி சொன்னான். போகிற இடத்தின் பெயர் நெற்குன்றம். இப்போது அந்தப் பகுதி செங்கற்குன்றமாகி விட்டது. சட்டெனக் கிளம்பிய பொறியில் அன்று நான் திரைப்படம் பார்க்கப் போகவில்லை. கல்கி தீபாவளி மலருக்கு அப்போதே ’நெற்குன்றம்’ என நகர்மயமாதலை வைத்து ஒரு கதை எழுத முடிந்தது.
ஒரு வேலைகிடைக்காத இளைஞன். அவனது தந்தை நெற்குன்றத்தில் வீடு கட்டுகிறார். கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் சிமென்ட், கம்பிகள் இவற்றுக்குக் காவலாக அவன் இரா தங்குகிறான். அங்கே வாழும் பாம்பு ஒன்று. அதன் வசிப்பிடம் அது. அதை ஆக்கிரமித்துக் கொண்டு அதை அடித்துப் போட்டு விடுகிறார்கள், என்பது கதை. பக்கமாய் யார் வந்தாலும் சீறும் பாம்பு, வேலை கிடைக்காத இளைஞன் போலத் தானே அது?
சுதாரித்து கவனமாய் இயங்கும் மனம் தானே நல்ல நல்ல கருக்களை சுவிகரித்துக் கொள்ளும். ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தேன். யார் அவன், எந்த ஊர் தெரியாது. யாரையும் மதிக்கிறவனாகவும், யாரோடும் பேசுகிறவனாகவும், பிச்சையெடுக்கிறாப் போலவும் அவன் இல்லை. தான், தன்னுலகம் என அலைந்து திரிகிற மனிதன். அவனுக்கும் இப்பவோ முன்போ ஓர் உலகம் இல்லாமல் இருக்குமா, என்று தோணியது. ஆனால் அவனைப் பற்றிய விவரங்கள் யாரிடமும் இல்லை. யாரோடும் அவன் பேசுவதோ பழகுவதோ, சிரிப்பதோ கூட இல்லை.
அவன் ஆச்சர்யமான ஒரு காரியம் செய்தான். டவுண்பஸ் ஒன்று அங்கே நின்றிருந்தது. அதன் தோள்ப் பக்கங்களில் சிவப்புப் பட்டையில், அது நின்று செல்லும் இடங்களை வரிசையாய் எழுதியிருந்தார்கள். திடீரென்று அந்தப் பைத்தியக்காரன் தரையில் தேடி ஒரு கரிக்கட்டியைக் கண்டுபிடித்து, அந்த ஊர்களுக்கு ஊடே தன் ஊரையும், எந்த ஊர் நினைவில்லை – சின்னாளப்பட்டி, என்று வையுங்களேன்… கரிக்கட்டியால் சின்னாளப்பட்டி என எழுதியதைப் பார்த்தேன்.
நான் ஒரு கதை எழுதினேன்.
என் கற்பனையில் ஒரு லாரி டிரைவர் அந்த வழியே அடிக்கடி போய் வருகிறவன், இவனைப் பார்த்து ஆச்சர்யப் படுகிறான். ஒருநாள் இவன் டவுண்பஸ்ஸில் எழுதியதைப் பார்த்து விட்டு, அவனை அடுத்த முறை அந்த வழியே போகும்போது, சின்னாளப்பட்டியிலேயே இறக்கி விட்டுவிடுகிறேன், என் கூட வரியா?... என்று அழைத்துக் கொண்டுபோய் விடுகிறான். ஒரு மனிதன், இன்னொரு மனிதன் – என்று தலைப்பு. மிகப்புதிய கரு அல்லவா? இவனுக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பேச்சுவார்த்தை கூடக் கிடையாது. ஆனாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் சக மனிதர்களாக, பின்னும் பேசிக் கொள்ளாமலேயே அறிமுகமாகி பிரிந்து போகிறார்கள்!
வாழ்வின் ‘இருண்மை’ சார்ந்து எப்போதாவதுதான் எழுத வாய்க்கிறது.
வாழ்க்கை சொல்லித் தந்துகொண்டேதான் இருக்கிறது. அதன் மொழியை அறிய பயிற்சி தேவை. விசாலமான வாங்குதிறனுள்ள மனம், கதவைத் திறந்து வைத்த மனம் தேவை. சின்ன விஷயங்களில் கூட கவனமாய்ப் பார்த்தால் பெரிய கருக்கள் கிடைக்கவே செய்யும்.
துரும்படியில் யானையைக் கண்டுபிடிக்கிறான் படைப்பாளி.

28.10.2007 நவி மும்பை வாஷி தமிழ்ச் சங்கத்தில் உரை
storysankar@gmail.com - 91 97899 87842

Friday, October 19, 2018


part 12

போர் போர் அக்கப்போர்
எஸ். சங்கரநாராயணன்

றிவாளியோடு வாழ்ந்து விடலாம். முட்டாளோடும் வாழ்ந்து விடலாம். ஆனால் தாங்கள் அறிவாளி என நினைக்கிற இப்படி ஆட்களுடன் வாழவே முடியாது.
மேற்படி நபர்களுடன் சில சமயம் மாட்டிக்கொள்ள நேர்ந்து விடுகிறது. பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த அன்னையின் உபாசகன் நான். ஒரு நண்பரோடு எனது ஆன்மிக அனுபவங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, வேறு நண்பர் ஒருவர் இடைப் புகுந்தார். அவருக்குச் சம்பந்தம் இல்லாத வேலை இது. “தெரியும் சார்... மதர்னா, மதர் தெரசா தானே?“ என்று ஊடே புகுந்தார். இல்லை என்றாலும் அவர் விடுகிறாப் போல இல்லை. “வேற யாரு. ஓ அன்னிபெசன்ட் அம்மையாரைச் சொல்றீங்களா?” என தனக்குத் தெரிந்த பெண்மணிகளைப் பட்டியல் போட்டுத் தொடர்ந்த வண்ணம் இருந்தார். நாங்கள் இருவரும் வேறொரு சந்தர்ப்பத்தில் பேச்சைத் தொடரலாம் என்கிற முடிவுக்கு வந்து அந்த நண்பருக்கு வணக்கம் சொல்லிக் கலைய வேண்டியதாயிற்று.
கடைசிவரை அவர் ஸ்ரீ அரவிந்த அன்னையைச் சொல்லவே இல்லை.
இன்னொரு சந்தர்ப்பத்தில், இளையராஜாவின் ஒலிப்பதிவாளர், அவர் பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை. இளையராஜா வந்த பிறகுதான், ஒலிப்பதிவாளருக்கு கேசட்களில் பெயர் போடும் கௌரவம் கிடைத்தது. அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். என் அருகில் என் சொந்தக்காரர், அண்ணன் முறை அவர் எனக்கு, மத்திய அரசாங்க வேலை, பச்சைக் கையெழுத்துக்காரர். ஒலிப்பதிவாள நண்பர் ஒலியின் துல்லியத்தை காது கேட்கும் தருணங்கள் எத்தனை கொண்டாட்டமானவை, என உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருந்தார். ஐ-பாட் என்று புதிதாய் வந்த காலகட்டம். அதில் நம் காதுக்குள் ஒலிப்புனல்கள் (ஹெட்ஃபோன்) வழியே, பிற ஒலிகள் பாதிக்காமல், துல்லியமாய்ப் பாடல்கள் கேட்டுக் கொள்ள வசதிப்பட்ட காலம். அவர் பேசப் பேச நான் பரவசப் பட்டிருந்தேன். கூட இருந்த என் அண்ணன், அவருக்கு தன் மேதமையைக் காட்ட வேண்டும் என்று வேகம் வந்தது எனக்குத் தெரியாது. சட்டென என் அண்ணன் அவரை நிறுத்தி, “இளையராஜாவோட சிம்பன்சி எப்ப இந்தியாவுக்கு வருது?” என்று ஒரு கேள்வி போட்டார். அத்தோடு அடங்கியவர் தான் அந்த ஒலிப்பதிவாளர். அடுத்த வார்த்தை பேசாமல் நாங்கள் இடத்தைக் காலிசெய்ய வேண்டியதாயிற்று.
தான் அறிவாளி என நினைக்கிற முட்டாள்களிடம் வாதம் செய்ய முடியாது. கூடாது. யார் முட்டாள், என பார்க்கிறவர்கள் குழம்பி விட நேரிடலாம்.
அண்ணாச்சி கி.ரா.விடம் ஒருமுறை ஒருத்தன் கேட்டானாம். “அவரும் ஏழு ஸ்வரத்திலதான் பாடறாரு, நீங்களும் ஏழு ஸ்வரத்துலதான் பாடறீங்க. அப்றம் ஏன் அண்ணாச்சி அது ஹிந்தோளம்ன்றீங்க, இது தன்யாசின்றுங்க?”
சிலாள் டாக்டரையே எதிர்க் கேள்வி போடும்.
“இடது கால்ல வலி டாக்டர்” என்றார் அந்த வயசாளி.
“வயசானா அந்தமாதிரி வலி வர்றதுதான்.”
“அதெப்பிடி? வலது காலுக்கும் அதே வயசுதானே, அது வலிக்கலியே?”
இப்படி உதாரண புருஷர்கள் எழுத வந்து விடுவதும் உண்டு.
ஜோதிடம், ஜாதகம் இவற்றில் நம்பிக்கை உள்ளவர்களுக்குச் சொல்ல வேண்டுமானால், சில எழுத்தாளர்கள், தங்கள் ஜாதகத்தில் அந்த எழுத்து அமைப்புக்கு சிறு விநாடி இப்படியோ அப்படியோ பிறந்து தொலைத்து விடுகிறார்கள். அவர்கள் எழுத்தாளர்களாக கடைசிவரை ஆகவே முடியாது போகிறது. இதில் நாம் பாவம் பார்க்க ஏதும் இல்லை. அவர்கள் வாங்கி வந்த வரம் அது. சில மாடுகள் இயற்கையிலேயே தண்ணியாய்ப் பால் கறக்கிறது.
ஆனால் அவர்கள் நம்மை விடுகிறார்கள் இல்லை. இந்தப் பிரச்னை அவர்களுடையதா, நம்முடையதா என்பதே சவாலான கேள்வி!
இதில் ஐராவதம் என்று ஒருவர். ஆங்கிலத்திலும் வித்தகம் கொண்டவர் என்று நினைப்பு வேறு. எந்தக் கட்டுரை எழுதினாலும் மேற்கோள் என்று ஒரு ஆங்கில வரி, ‘புரோக்ஷணம்’ பண்ணித்தான் கட்டுரைக்குள் வருவார். அவரை நான் சட்டை செய்ததும் இல்லை. என்ன ஆயிற்று என்றால், விருட்சம் என ஒரு சிற்றிதழ் வந்தது. இப்போதும் 100 இதழ்களைக் கடந்து வந்து கொண்டிருக்கிறது. இப்போது அது நவீன விருட்சம். விருட்சத்தில் ஏது நவீனம், தெரியவில்லை.
அதில் இவர், ஐராவதம் எதாவது எழுதிக் கொண்டிருப்பார். அவருக்கு விமரிசன உலகில் தனி இடம் பிடிக்க ஆசை. (ஏற்கனவே அவருக்கு தனி இடம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அது அவர் நினைக்கிற தனி இடம் அல்ல, என்றாலும் கூட.)
எனது ஒரு சிறுகதைத் தொகுப்பு ‘ஒரு துண்டு ஆகாயம்’ நூலுக்கு அவர் விமரிசனம் எழுதி யிருந்தார் விருட்சத்தில். அதை நானும் வாசித்துப் பார்த்து விட்டு அத்தோடு விட்டு விட்டேன். ஆனால் விருட்சத்தின் ஆசிரியர் அழகியசிங்கர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, “உங்க நூலுக்கு விமரிசனம் எழுதியிருக்கிறார் ஐராவதம். பார்த்தீர்களா?” என்றார். “பார்த்தேன்” என்றேன். அத்தோடு அவர் விட்டிருக்கலாம். “நீங்கள் மறுப்பு எதுவும் தருவதானால் தாருங்கள். அதையும் வெளியிடுவோம்” என்றார். நான் கேட்டேன். “இதற்கு மறுப்பு என்னிடம் இருந்து வரும், என்ற எதிர்பார்த்தால் அதை ஏன் வெளியிட்டீர்கள்?”
பிறகு நான் அவர் வலியுறுத்தியதால் ஒரு பதில் தந்திருந்தேன். “இந்த விமரிசகர் வாய்ப்புக்கு அலைகிறவராகத் தெரிகிறது. இந்தப் புத்தகத்தின் ஒரு கதையை “சுமார்” என்று சொல்லிவிட்டு அத்தோடு விட்டிருக்கலாம். இப்படி மோசமான கதைகளுக்குத் தான் இலக்கியச் சிந்தனை பரிசும் தருகிறார்கள், என்று தேவை யில்லாமல், இலக்கியச் சிந்தனை அமைப்பை வம்புக்கு இழுக்கிறார். அவர் குறிப்பிட்ட அந்தக் கதை இலக்கியச் சிந்தனை பரிசு பெறாத போது, அவர் ஏன் அப்படிக் குறிப்பிட வேண்டும். எனக்கு இலக்கியச் சிந்தனை பரிசே தரக் கூடாது, என அவர் குறிப்பிட விரும்புகிறார் போலும். இப்படி விமரிசகர்கள், பொறுப்பில்லாமல் கைக்கு வந்ததை எழுதும்போது பத்திரிகை ஆசிரியர் முடிவு எடுப்பது அவசியம்.”
அந்தக் கடிதத்தை அழகியசிங்கர் வெளியிட்டார்.
அதன்பின் சுந்தரராமசாமி பற்றி இந்த ஐராவதம் எதோ தற்குறித்தனமாக எழுதப்போக விருட்சத்தில் ஒரு வருடம் அதை மறுத்தும் கண்டித்தும் கடிதங்கள் அழகியசிங்கர் பிரசுரித்தார். தன் பத்திரிகை பிரபலம் அடைவதாக அவர் நினைத்தாரா!
அப்போது தான் விருட்சம், ‘நவீன விருட்சம்’ என அவதாரம் எடுத்ததோ!
சில வருடங்கள் கழித்து, எஸ். வைதீஸ்வரனின் சிறுகதைத் தொகுதி ‘கால் முளைத்த மனம்’ வெளியானபோது, அது குறித்து என்னைப் பேசச் சொன்னார் அழகியசிங்கர். நான் வேணாம் என்று மறுக்கப் பார்த்தேன். புத்தகத்தைப் புரட்டினால் முன்னுரை தந்தவர், இந்த விமரிசன சிகாமணி ஐராவதம். அடேடே, என நான் பேச ஒத்துக் கொண்டேன்.
என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.
தொகுப்பில் ஒரு கதை. பிள்ளையார் சதுர்த்தி அன்று அப்பா களிமண்ணில் தானே பிள்ளையார் பிடிககப் பார்க்கிறார். அப்பா மேல் நல்ல மரியாதை உள்ள அவரது சிறு பிள்ளை எதிரே ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க அமர்கிறான். மண்ணைப் பிசைந்து உருட்டி அவர் வேலை செய்யச் செய்யத்தான் அவருக்கு பிள்ளையார் உருவம் சார்ந்து ஆயிரம் சந்தேகங்‘கள் வருகின்றன. தும்பிக்கை வலது புறம் வரணுமா, இடது புறமா... இப்படி. கடைசியில் தன் முயற்சியில் பின்வாங்கிய அப்பா, மகனிடம் எரிச்சல் படுகிறார். “போய்ப் படிடா. என்ன வேடிக்கை வேண்டிக்கிடக்கு உனக்கு...” என்கிறாப் போல கதை முடிகிறது.
மாஸ்டர் ஐராவதம் இந்தப் பிரச்னையைப் பற்றி, அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளி நன்றாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது, என்று முன்னுரையில் குறிப்பிட்டது எனக்குச் சிரிப்பு வந்தது.
அடங் கொக்க மக்கா!
நான் வெளியீட்டு விழா மேடையிலேயே குறிப்பிட்டேன். “முன்னுரை கேட்கும் போது இன்னும் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள் வைதீஸ்வரன். தலைமுறை இடைவெளி என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் தைரியமாக ஐராவதம் பயன்படுத்தி யிருக்கிறார். தலைமுறை இடைவெளி, என்பது ஒரு விஷயத்தில் அப்பா எடுத்த நிலைப்பாடுக்கு ‘நேர்-எதிர்’ நிலைப்பாடு பையனுக்கு இருந்தால் அதைத்தான் தலைமுறை இடைவெளி என்கிறார்கள். இந்தக் கதையில் என்ன அப்படி ஒரு நிலைப்பாட்டுப் பிரச்னை இருக்கிறது?” என்று கேட்டேன்.
கூட்டம் முடிந்து அழகியசிங்கரிடம் மாஸ்டர் ஐராவதம், “என்னப் பத்தி எப்பிடியும் சங்கர் பேசுவான்னு தெரியும். நான் எதிர்பார்த்திட்டே இருந்தேன்” என்றாரே தவிர, என் கேள்விக்கு அவர் பதில் சொல்ல முடியவில்லை.
பிற்காலத்தில் எனது அத்தனை புத்தகங்களையும் ஒருசேர வாசித்துப் பார்க்க அவர் ஆசைப்பட்டதாக அழகியசிங்கர் சொல்ல, ஒரு செட் தந்தனுப்பினேன். வாசித்திருப்பார். ஆனால் என்னிடம் அவை பற்றிப் பேசவில்லை. தயக்கம் இருந்திருக்கலாம்.
நானும் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தது கண்ணன் மகேஷ். அவரது நாவல் ‘வாழ்வெனும் மகாநதி’ கலைமகள் போட்டியில் பரிசு வென்று தொடராக வந்தது. வெள்ளைக்காக்கைகள், கிருதயுகம் எழுக, என்றெல்லாம் பிற நாவல்கள் எழுதியிருக்கிறார். புதிய எந்த நல்ல நட்பையும் நான் வெளிப்படையான அன்புடன் எளிமையுடன் வரவேற்கிறவன் தான். அநேகமாக தீபம் அலுவலகத்தில் இவரை நான் சந்தித்துப் பழக ஆரம்பித்திருக்கலாம். அல்லது வேறு இலக்கியக் கூட்டங்களில் இருக்கலாம். தான் முட்டும் அளவு புகழ் பெறவில்லை என்பது அவரது தணியாத ஏக்கமாய் இருந்தது. என்னைப் பற்றியே கூட என் நண்பர்கள் பலர் சொல்வார்கள் இதே மாதிரி. அவர்களின் அன்பைத் தவிர இதில் வேறு அர்த்தம் எதுவும் இல்லை.
உலகம் சிலரை அதுவும் சில சமயம் கொண்டாடும். ICONS உருவாவது ஒரு சமூக நிகழ்வு. (உதாரணம் அப்துல் கலாம்., ராஜேஷ்குமார்.) அது உனக்கு வாய்க்கலாம். வாய்க்காமலும் போகலாம். அதை எதிர்பார்த்து காத்திருக்க முடியாது. காத்திருந்தால் அது கிடைத்து விடும் என்பதும் இல்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல, நமது படைப்பு முயற்சிகளில் தளராத ஒழுங்கு வைத்துக்கொண்டு, நமது திறமையைப் பயிற்சியால் வளர்த்துக் கொள்வதே நமது சாத்தியம். ஒருவேளை நமக்கு ஓர் உச்ச அங்கீகாரம் கிடைத்தால், அதற்குத் தகுதியானவனாக ஆவதற்கு நாம் தயாரித்துக் கொள்ளலாம். அப்போது அந்தப் பட்டம் நமக்குத் தங்கும். இதுதான் என் முடிபு. இதில் ஆதங்கம் ஏக்கம், இதற்கெல்லாம் இடமே இல்லை.
என் படைப்புகளில் தலைப்பு உட்பட, உவமைத் தெறிப்புகள் உட்பட, நடை உட்பட... என் பாணி என நான் அமைத்துக் கொண்டிருக்கிறேன். இவர் இப்படி என்ற விமரிசன வட்டத்துக்குள் அடங்காத அளவு, புது விஷயங்களை நோக்கி கதைகள் புதிதாய் எழுதுந்தோறும் பயணிக்க ஆசைப்படுகிறேன். இந்தத் தேடல், அதன் சுகம் என் எழுத்தினை மிகுந்த அளவில் நியாயம் ஆக்குகிறது, சுவாரஸ்யம் ஆக்குகிறது, குறைந்தபட்சம் எனக்கு.
இருந்தாலும்... அங்கீகாரம்... என்று அவர், கண்ணன் மகேஷ், அடிக்கடி தனக்குள் துவள்கிறவராய் இருந்தார். கரகாட்டக்காரனில் செந்தில், “ஒரு விளம்பரம்...” என்று தவிப்பது போல. கண்ணன் மகேஷ் இதழ்களுக்கு வாசகர் கடிதங்கள் எழுதியபடியே, கதைகளும் அனுப்பினார். வாசகர் கடிதங்கள் பிரசுரம் ஆயின, கதைகள் திரும்பி வந்தன. (நல்லவேளை, வாசகர் கடிதங்களுக்கு அவர் ஸ்டாம்ப் வைத்து அனுப்பவில்லை.)
நுங்கம்பாக்கம் இந்துசமய அறநிலையத் துறையில் ஆடிட் பணி அவருக்கு. அந்தப் பக்கம் போனால் இறங்கி அவரையும் பார்த்து நாலு வார்த்தை பேசிவிட்டுப் போவது என் வழக்கம். இந்த மனுசருக்கு திடீரென்று ஒரு சந்தேகம். வந்தவன், எந்தப் பத்திரிகைக்கு அடுத்து கதை அனுப்பியிருக்கீங்க, என்றெல்லாம் விசாரிக்கிறான். வேவு பார்க்கிறானா?...
இப்படி ஆட்களுக்கு தங்கள் அறிவில் அல்லது அறிவின்மையில் அபார நம்பிக்கை இருக்கும். அதேதான், என கண்ணன் மகேஷ் தனக்குள் உறுதி செய்துகொண்டு விட்டார். பார்த்தால், அவரது கதை, என்னிடம் பேசிய கதை, நாலைந்து நாளில் திரும்பி வந்திருந்தது. சரி என்று அந்தப் பத்திரிகை இதழை அவர் வாங்கிப் பார்த்தால், வாசகர் கடிதம் அவர் எழுதி வந்திருக்கிறது, அத்தோடு, அதில் என் கதை, எஸ். சங்கரநாராயணனின் சிறுகதை வெளிவந்திருக்கிறது.
தாள முடியாத கண்ணன் மகேஷ் பேனாவை எடுத்து மையை ஒரு உதறு உதறி விறுவிறுவென்று அந்தப் பத்திரிகை உதவி ஆசிரியர் பற்றியும், என்னைப் பற்றியும், (என் இழிகுணங்கள் பற்றிச் சொல்ல வேண்டாமா? அவரிடம் எந்த இதழுக்கு அவர் கதை அனுப்பினார் என்ற விவரம் அறிந்துகொண்டு, நேரே அந்த இதழுக்குப் போய், கண்ணன் மகேஷ் கதையைப் போடாதீர்கள். என் கதையைப் போடுங்கள், என்று வம்பு நான் செய்வதாக ஒரு கதை எழுதி தினமணி கதிருக்கு அனுப்பி வைத்தார்.
‘பச்சைப் புல்லில்...’ என்பது கதை. அதில் என் பெயர் நாராயண சங்கர். நான் போய் அவரது கதையைப் பிரசுரம் செய்யாதீர்கள், என்று சொன்ன இதழ் சாவிக்கு பதிலாக, ‘கோவி.’ இப்படி.
அதைத் தற்செயலாக நான் வாசிக்கவும் நேர்ந்தது. கண்ணன் மகேஷ் கதையா, பரவாயில்லையே, அவருக்கு சந்தோஷமாய் இருக்கும், என நினைத்து வாசித்தேன். எனக்கு, அது... வருத்தமாய் இருந்ததா?
இல்லை. சிரிப்பு தான் வந்தது. அட வாசகர் கடிதம் எழுதுகிற ஒரு சாமானியன். சோளக்காட்டு பொம்மை கோபுரத்துக்கு ஆசைப் படலாமா? இந்த விவரங்கள் அத்தனையும் அசட்டுத் தனமான யூகங்கள் என்று எல்லாருக்குமே அடுத்து தெரிந்து விடாதா? இப்படி என்னைத் திட்டி எழுதியதால் ஒரே பயன், அந்தக் கதை பிரசுரம் ஆனது தான். ஆக அந்தப் பெருமையிலும் எனக்குப் பங்கு அளித்து விட்டார் கண்ணன் மகேஷ்.
அவரது ஒரு மொழிபெயர்ப்பும் வாசித்தேன். பேர்ள் எஸ். பக்கின் டாக்டர் பாத்திரம் அமைந்த கதை. அதில் ‘லவபிள் பேஷன்ட்’ என வரும். நம்மாளின் தமிழ், ‘விரும்பத்தக்க பொறுமைசாலி.’ இதன் தமிழ்ப் பிரதியை வைத்தே ஆங்கிலத்தில் இது எப்படிச் சொல்லப் பட்டிருக்கும் என நமக்குப் புரிகிறது. அவ்வளவு எளிய விஷயத்தில் அவருக்கு இத்தனை குளறுபடி.
மீண்டும் அந்த நாராயண சங்கர் விவகாரம்.
இது தவிர, ஆசிரியர் சாவிக்கு ஒரு கடிதம் அனுப்பி யிருந்தார் கண்ணன் மகேஷ். என் கதைகளை தயவு தாட்சண்யத்துடன், சாவி உதவியாசிரியர் ரவி பிரகாஷ் போடுவதாகவும், தன் கதைகளை வேண்டுமென்றே நிராகரிப்பதாகவும். அந்தக் கடிதம் சாவி சார் கையில் கிடைத்தபோது, என் கதை ‘அன்றிரவு’ சாவியில் பிரசுரம் ஆகி யிருந்தது.
சாவி அதை வாசித்து விட்டு, ரவி பிரகாஷை அழைத்தார். தனக்கு கண்ணன் மகேஷிடம் இருந்து வந்த கடிதம் பற்றிச் சொல்லாமல், “ஏன் சங்கரநாராயணனுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்தாய்? இனி கதைகளை என் மகள் வாசித்தபின், அவள் தேர்வு செய்வதை வெளியிடு நீ” என்று கடிந்து கொண்டார். தன்னை அபாண்டமாகக் குற்றம் சாட்டுவதாக ரவி பிரகாஷ், உதவி ஆசிரியர் உணர்ந்த கணம் அது. “தரம் அடிப்படையில் தான் நான் கதைகளைத் தேர்வு செய்வேன். இப்படி நீங்கள் என்னை சந்தேகப் படுவது முறையல்ல” என்றபடி சாவிக்கு வந்திருந்த அத்தனை கதைகளையும் சாவி சார் மேசையில் வைத்துவிட்டு, “உங்கள் மகள் தேர்வு செய்யும் கதைகள் இனி சாவியில் வெளிவரட்டும். ஆனால் சாவியில் வரும் கதைகளின் தரம் பற்றி இனி நான் பொறுப்பேற்க முடியாது” என்று ஒரு விரைப்புடன் சொன்னார் ரவி பிரகாஷ்.
இந்த விவரங்களை தன் பிளாக்கில் ரவி பிரகாஷ் விஸ்தாரமாய் எழுதியிருக்கிறார். சற்று முன்தான் நான் அதை வாசிக்க நேர்ந்தது.
என்ன வேடிக்கை, என்றால் சாவியில் வெளியான என் சிறுகதை ‘அனறிரவு’ இலக்கியச் சிந்தனையில் சிறந்த மாதக்கதைப் பரிசு பெற்று விட்டது.
பிறகு அது ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் தூர்தர்ஷனில் ஒருமணி நேரக் குறும்படமாகவும் பெரும் புகழ் பெற்றது. சாவி பத்திரிகைக்கு இலக்கியச் சிந்தனை ஒரு பாராட்டிதழும், இந்தக் கதையை வெளியிட்டதற்காக அனுப்பி வைத்தது. சாவியில் வந்த கதைகளில் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற ஒரே கதை, அல்லது முதல் கதை என் கதைதான்.
கண்ணன் மகேஷின் ‘பச்சைப் புல்லில்...’ கதைக்குப் பரிசு கிடைக்கவில்லை. மோசமான கதைகளுக்கு இலக்கியச் சிந்தனை பரிசளிப்பதில்லை.
இதில் என்ன வேடிக்கை என்றால், ‘பச்சைப் புல்லில் பசும் பாம்பு’ என என்னை அவர் கதையில் சாடுகிறார். உண்மையில், அவரை நல்ல நண்பராக நான் நினைத்ததற்கு, என்னை அவர் ஏமாற்றிய அளவில், பச்சைப் புல்லில் பசும் பாம்பு அவர் தானே!
சமீபத்தில் என் ‘பெருவெளிக்காற்று’ சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா டிஸ்கவரி புக் பேலசில் நடந்தது. பேச்சாளராக ரவி பிரகாஷ் வந்திருந்த போது, ‘பச்சைப் புல்லில்...’ கதை பற்றி மேடையில் குறிப்பிட்டார். அதுவரை கண்ணன் மகேஷின் இந்தக் கதை பற்றி நான் அவரிடமோ, அவர் என்னிடமோ பேசவே யில்லை. இருவருமே அதை சட்டை செய்யவில்லை என்று தோன்றுகிறது.
பெயர் களங்கப்பட்டாப் போல இருந்தாலும், பொறுமை காத்தால், அந்தக் களங்கம் விலகி மேலதிகம் நம்மைப் பற்றிய நன்மதிப்பு உயரவே செய்யும். நன்றி கண்ணன் மகேஷ்.
சில மாடுகள் இயல்பிலேயே தண்ணியாய்ப் பால் கறக்கிறது. இதுகுறித்து கவலைப்பட முடியாது.
*

storysankar@gmail.com
91 97899 87842

Friday, October 12, 2018



காயம்பட்ட புன்னகை
எஸ். சங்கரநாராயணன்

னது நண்பரும், தமிழ் இலக்கிய உலகில் தனி அடையாளங்களுடன் வளைய வந்த சிறந்த எழுத்தாளருமான எம். ஜி. சுரேஷ், அக்டோபர் 02 2017 அன்று வளர் இரவில் தன் மகளது இல்லத்தில் சிங்கப்பூரில் காலமாகி விட்ட செய்தியை அவரது மனைவி, இறந்த பத்து பதினைந்து நிமிடங்களில் சிங்கப்பூரில் இருந்து தகவல் தெரிவித்தார். துரிதமாய் நிகழ்ந்திருந்தது அந்த மரணம். படுக்கையில் கிடக்காமல் பிறரைத் துன்பப் படுத்தாமல், அதை அவர் ஒருக்காலும் செய்ய விரும்ப மாட்டார், அவ்வண்ணமே இறந்து போனது அவருக்குத் திருப்தி அளித்திருக்கும், என்றே நம்புகிறேன்.
ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டேன்.
தமிழில் எம். ஜி. சுரேஷ் ஒரு வெற்றிடத்தை நிரப்பிய எழுத்துக்காரர் என்று சொல்லத் தோன்றுகிறது. அந்த வெற்றிடம் அவர் எழுத வந்து, எழுதிக் காட்டி உணர்த்திய இடம் என்கிற அளவில் அவரது தனித்தன்மையை வாசக உலகம் உணர்ந்தது. தமிழில் பெரும்பான்மை எழுத்துக்கள் குடும்பக் கதைகள் என சிறு வட்டத்துக்குள், அதைப் போற்றியும், விசாரித்துமாக வெளிவந்து கொண்டிருந்தன. இருக்கின்றன. அரசியல் சார்ந்த கதைகள் மிகச் சொற்பமே. கம்யூனிச சித்தாந்தப் பிடிப்பு கொண்ட கதைகளும் வராமல் இல்லை, எனினும் அவற்றுக்கு இலக்கிய அந்தஸ்து சிறிது குறைவாகவே கிடைத்து வந்த காலம் அது. பெரும்பாலானவை அன்றாட வாழ்வியல் யதார்த்தம் சார்ந்த கதைகள். சமூகத்தில் சாமானியனின் சாமானிய வாழ்க்கையை, அதன் சராசரித் தனங்களுடன் எழுதிக் காட்டினார்கள் இலக்கியவாதிகள். உலகளாவிய இலக்கியப் போக்குகளில் தமிழ் அக்கறை காட்டவே இல்லை. அதுபற்றிய அறியாமையே இங்கே நிலவி வந்தது. உலகம் சார்ந்த பெருவெளியின் தரிசனம் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைக்காமலேயே இருந்து வந்தது. அட சுதந்திரப் போராட்டம், அதுகூட ஓரளவு அடையாளப் பட்டது, உலகப் போர்கள் தமிழில் அடையாளப் படவே இல்லை.
ஒரு காலத்தில் மொழிபெயர்ப்புகள் என்ற அளவில் ஓரளவு மேனாட்டு பன்னாட்டு இலக்கியங்கள் தமிழில் கிடைத்தன. குறிப்பாக ருஷ்ய இலக்கியங்கள். ஆனால் அவை அந்நாட்டு மக்களின் புரட்சி வியூகத்தைக் கொண்டாடும் எல்லைக்குள், தன்கவனத்துடன் இயங்குவதாய் இருந்தன. ஹெமிங்வே, ஜாக் லண்டன் போன்றோரின் கதைகளும் கிடைத்தன, என்றாலும் அவற்றைக் கொள்வார் அதிகம் இல்லாதிருந்தது. மொழிபெயர்ப்புப் பரிமாற்ற ஆரம்ப காலகட்டம் அது. அந்த நூலில் வரும் ஊர்கள், இடங்கள், பனி விழும் பிரதேசங்கள், அவர்களின் உடை, அவர்களின் உணவு என்று எல்லாமே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறவையான சுவாரஸ்யத்துடன் வாசிக்கக் கிடைத்தன. எனினும் தத்துவச் சரடு போல, வாழ்வின் முடிச்சுகளை நோக்கி தமிழ் இலக்கியமும், நமக்குக் கிடைத்த மொழிபெயர்ப்புப் புனைவுகளும் கணிசமாய் அமையவில்லை என்றே சொல்லவேண்டும்.
எம்.ஜி. சுரேஷ் மிகுந்த உற்சாகத்துடன் எழுத வந்தார். எல்லா இளைஞர்களையும் போலவே சுஜாதா பாணி எழுத்து, எழுதும் போதே தான் ரசித்து, பிறகு அதை ஒரு புன்னகையுடன் வாசகனுக்குப் பரிமாறும் எழுத்துவகை அவருக்குப் பிரியமானதாய் இருந்தது. அவரது அந்தவகைக் கதைகளை நான் சிலாகிக்க மாட்டேன். என் ருசி இன்றும் வேறானதாகவே இருக்கிறது. அரட்டைக் கச்சேரிகளுக்கு நான் போவது இல்லை.
ஆனால் வாசிப்பில் அபார ருசி கொண்டிருந்தார் சுரேஷ். குறிப்பாக ஆங்கிலத்தில் கிடைத்த உலக நூல்களைப் பெரு விருப்புடன் வாசித்துத் தள்ளினார் சுரேஷ். வேறு சாளரம் திறந்து கொண்டாப் போல இருந்தது அவருக்கு. வரலாற்று நோக்கில் காலந்தோறும் மனிதக் கலாச்சாரம் தத்துவங்களாகவும் தரிசனங்களாகவும் கண்டைடைகிற இடங்களை அவர் ஒரு பரவசத்துடன் கவனித்தார். உலகம் ஒரு பந்துக்கோளமாய்ச் சுழன்று அவருக்கு கலைடாஸ்கோப் சித்திரங்களைத் தந்தவண்ணம் இருந்தது. வண்ணங்களாய் இருந்தது அவரது உலகம். புராதனத்தில் இருந்து தற்காலம் அல்லது நவீனம் வரையிலான நீண்ட நடைபாதையில் அவர் தானும் நடைபயின்றாப் போல உணர்ந்திருக்கலாம். அரசியல்வாதிகள், தத்துவ மேதைகள் என உலகில் ஆங்காங்கே எழும் வெளிச்சப் புள்ளிகளை, அவை பெருகி எழுப்பும் கிரண வீச்சுகளை ரசிக்கிற அனுபவத்தில் தமிழின் நிலைமை அவருக்கு உவப்பாய் இல்லை என்றே கணிக்கத் தோன்றுகிறது.
இலக்கியத்தில் நவீன காலம், பின் நவீன காலம் என்கிற கருத்தியல்களில் அவர் ஆர்வம் செலுத்திய அதே சமயம் இன்னும் சிலர் தமிழில் அவற்றை அறிமுகப் படுத்தத் தலைப்பட்டார்கள். என்றாலும் அவர்கள் அல்ல எம். ஜி. சுரேஷ். புதிய எல்லைகளோடு தமிழ் இலக்கியத்தைக் கையாள என அவர்கள் புறப்பட்ட பாவனையில், ஒரு நிமிர்வும், பிற தற்கால இலக்கியங்கள் சார்ந்த அலட்சியமும், தாமே உயர்வு என்கிற பீட சிந்தனையுமாய் அவர்கள் மேடையிலும் எழுத்திலும் கொக்கரித்தார்கள். பொங்கினார்கள். அழகு மமதையான பெண் எந்த ஆண் பார்த்தாலும் உதடு சுழித்து ஒரு வெட்டு வெட்டிப் போகிறாப் போல.
பின் நவீன பாவனைகளை மிக நிதானத்துடனும், புதியதை வாசகனுக்கு எளிமையாய்க் கைமாற்றும் அக்கறையுடனும் எடுத்துக்காட்டும் எம். ஜி. சுரேஷின் அறிமுகக் கட்டுரைகள் விலை மதிப்பில்லாதவை. பின் நவீனத்துவம் என்றால் என்ன, நூலும், இசங்கள் ஆயிரம் நூலும், பின் நவீனக் கருத்தியல்வாதிகளின் அறிமுகமான சிறு நூல்களுமாக அவர் மிகப் பொறுப்புடன் செயல்பட்டது நமது பேறு என்றே சொல்ல முடியும்.
அவரது கடைசி மூன்று நூல்களை நானே மேற்பார்வையிட்டு வெளிக் கொணர்ந்தேன். அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே, என்ற புத்தகம் மீண்டும் மீண்டும் வாசிக்கிற அளவில் ஈரக்க வல்லது. சமீப காலத்திய் அவரது கட்டுரைகள், நிகழ்த்தப்பட்ட மரணங்கள் என்கிற தலைப்பில் வெளியானது. சுரேஷின் ஆகச் சிறந்த கட்டுரைகள் அதில் காணக் கிடைக்கின்றன. அந்த நூலை எனக்கு அர்ப்பணித்திருந்தார் சுரேஷ்.
மூன்றாவது நூல் அவரது கடைசி நாவல், தந்திர வாக்கியம்.
சிறுகதைகளில் அவரது போதாமையை உணர்கிற நான், நாவல் என்கிற தளத்தில அவர் நிகழ்த்திக் காட்டிய புதுமைகளை வியப்புடன் நோக்கினேன். பல்வேறு சோதனை வடிவங்களை அவர் தமிழில் கையாண்டார். யதார்த்தத்தைத் தாண்டிய பெரிய வியூகம் இல்லை, என்றே நான் இன்னும் ஓர் எழுத்தாளனாக நம்புகிறேன். பின் நவீனத்துவம் போன்ற பூச்சுகள், மேனாட்டு வகைமைகள், ஒரு பாவனையே. அவை கதையின் ஆதார சுருதிக்கோ அதன் அடிப்படைக் கோட்பாட்டுச் சரடுக்கோ எவ்வளவில் பங்களிப்பு செய்யும், முட்டுக் கொடுப்பதைத் தவிர என்று இன்னும் எனக்கு ஐயம் உண்டு.
மேனாட்டு நிலவரங்களின் அரசியல் சூழலில் நேரடியாக ஒரு சமூக அவலத்தைச் சுட்டிக்காட்ட இயலாத அரசு நெருக்கடிகளில் சொல்வதைப் பூடகமாகவும், பிற உத்திகளின் மூலமாகவும் மறைபொருள் எனவே எழுதிக் காட்ட இலக்கியவாதிகள் தலைப்பட்டார்கள். நம் எழுத்து அத்தனை நெருக்கடிகளில் சிக்கவும் இல்லை. இங்கத்திய சுதந்திரம் எவ்வித பங்கமும் இன்றியே இருக்கிறது. பின் நவீனக் கூறுகள் மாதிரியான தேவைகள் இங்கே என்ன வந்தது என்கிற கேள்வி எனக்கு உண்டு.
நம் சமூகம் தீவிர எழுத்துகள் சார்ந்து கவனம் செலுத்துவதாகவே தெரியவில்லை.
மேனாட்டு இலக்கிய நகல்கள் நமக்குத் தேவைதானா, எனவும் நான் எம். ஜி. சுரேஷிடமே பகடி செய்திருக்கிறேன். அவர் புன்னகையுடன், பகடி என்பதே பின் நவீனக் கூறுகளில் முக்கியமானது தான், என்பார். வாரம் ஒருமுறையாவது அவர் என்னைச் சந்திப்பார். நான் வசிக்கும் அதே அம்பத்தூர் பகுதியிலேயே அவர் இருந்தார். எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் நாங்கள் சேர்ந்தே போய் வருவோம். கடந்த ஆறேழு வருடங்களாக, நான் முகப்பேரில் இருந்து இங்கே ஜாகை மாற்றி வந்த இந்தக் காலத்தில் அவர் மிகவும் அலுப்பு கண்டிருந்தார். உடல் அலுப்பு ஒருபக்கம். இரத்த அழுத்தம் சீராக இல்லை. சர்க்கரையின் அளவு அவரைத் திகைக்க வைத்தது. உறவினர்கள் வீட்டுக்கு வந்தாலோ, அல்லது இவர் வெளியூர் என்று போய் வந்தாலோ தாறுமாறான உணவுப் பழக்கம் அவரது ஆரோக்கியத்தை சீரற்றதாக்கி விட்டது. தவிரவும், அவர் எழுதிய கட்டுரை நூல்களில் அவர் தந்த எளிமை மற்ற பின் நவீனப் புனைவாளர்களிடையே உவப்பான நல் வரவாக எடுத்துக் கொள்ளப் படவில்லை. புதிய கருத்தியல்களைப் புரியாத அளவிலேயே வைத்துக்கொண்டு கூத்தாடி, அவர்கள் பெரும் புகழ் அடைந்து விட்டதாகவும், தான் பின்தங்கி விட்டதாகவும் சுரேஷ் அலுப்படைந்திருந்தார்.
எனக்கும் உடல் ஆரோக்கியம் அத்தனைக்கு இல்லை தான். கண் என் பிரச்னை. என்றாலும் நான் இந்த உலகத்தை நேசிக்கிறேன். எந்த பிரதி பலனும் தேவை இல்லை எனக்கு. வாழ்க்கை அழகானது என நம்புகிறேன். என் அருகில் இருப்பவர் குணங்கள் பற்றி கவலைப்படாமல், பொருட்படுத்தாமல் என் அன்பை அவரோடு பகிர்கிறேன். இது என் இயல்பு. என்னுடன் செலவழிக்கிற கணங்களில் எம். ஜி. சுரேஷ் தன்னை உற்சாகமாய் உணர்ந்ததாகவே நினைக்கறேன். அவரும், குறிப்பாக அவர் மனைவி நிர்மலாவும் அதை விரும்பியதாகவே தெரிகிறது.
அவரது கட்டுரைகளையும், உருமாற்றம் என்கிற ஒரு சிறுகதையையும் எனது இருவாட்சி இலக்கியத் துறைமுகம் பொங்கல் மலர்களில் வெளியிட்டேன். தனது அத்தனை படைப்புகளையும் அவர் முதல் வாசகனாக என் பார்வைக்கு உட்படுத்தினார். எனக்குக் கிடைத்த மேடை வாய்ப்புகள் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடக வாய்ப்புகளில் கட்டாயம் எம். ஜி. சுரேஷ் இடம் பெற்றார். அவரது பிற்காலங்களை என்னால் முடிந்த வரை உற்சாகம் உள்ளதாக ஆக்க நான் முயற்சி செய்தேன். உதாரணமாக வின் தொலைக்காட்சியில் படைப்பாளனாக எனது பேட்டி ஒரு மணி நேர அளவில் அமைந்தது. அடுத்த ஒரு மாதத்தில் எம். ஜி. சுரேஷின் பேட்டியும். நான் அடிக்கடி பங்களிக்கும் பேசும் புதிய சக்தி இதழுக்கு எம். ஜி. சுரேஷ் ‘செலுலாயிட் பயணங்கள்’ என்கிற தொடர் கட்டுரை, பயணங்கள் விலாவாரியாக இடம் பெறும் உலகத் திரைப்படங்களின் அறிமுகத்தை அவர் நிகழ்த்தினார்.
உணவு விஷயத்தில் அவரைக் கட்டுப்பாடாய் வைத்திருந்தார் அவர் மனைவி நிர்மலா. காலையில் ஓட்ஸ் அல்லது தானிய தோசை. மதியத்தில் சிறு கிண்ண அளவு அரசிச்சோறு, இரவில் சப்பாத்தி… என்கிறதாய் அவரது உடல்ரீதியான உணவுக் கட்டுப்பாடுகளை அவர் மேற்கொண்டார். நிர்மலா அவரது மிகப் பெரிய சொத்து, என நான் அறிவேன். ஒரு வயதுக்குப் பின் ஆண்கள், குறிப்பாக ஆண்கள், பெண்களின் குழந்தைகளாக ஆகிப் போகிறார்கள். எம். ஜி. சுரேஷ் நிர்மலாவின் குழந்தை.
அவர் எழுதிய கடைசி நாவல் ‘தந்திர வாக்கியம்’ அழகான புனைவு. தமிழில் அதிகம் அறியப்படாமலே போய்விட்ட களப்பிரர் காலச் சூழலை மேலடுக்கில் கொண்டுவர அவர் அதில் மெனக்கிட்டார். களப்பிரர் காலத்திலேயே பொதுவுடைமை சித்தாந்தங்கள் மேலெழ ஆரம்பித்து விட்டதாக அவர் துணிந்தார். ஒரு யாத்ரிகரின் பயணக் குறிப்புகளாக அதை அவர் இன்று நிகழும் ஒரு ஐ. ட்டி. கதையில் செருகினார். சிதறலான தகவல்களுடனான நாவல் என அதை அவர் வடிவமைத்தார். முதல் வாசகனாக நான் அதில் சொன்ன விமரிசனங்களில் அவர் அதிர்ச்சி அடைந்தார். பிறகு ஒரு மாதம் கழித்து அவரே, எல்லாவற்றையும் அங்கீகரித்தார். நான் சொன்ன மாற்றங்களை அவர் செவி மடுத்தார். குறிப்பாக இறுதிப் பகுதி.
நாவலை உதயகண்ணன் மூலம் நான் வெளிக்கொணரவும் ஏற்பாடு செய்தேன். எங்கள் ‘புத்தகக் கண்காட்சி அரங்கில்’ சிறப்பாக நால்வர் அதைப் பேசினார்கள். மேலும் கூட்டங்களை நான் ஒழுங்கு செய்கிறதாகவே இருந்தது. அதற்குள் மரணம் அவரை முந்திக் கொண்டது.
ஒரு மகன், ஒரு மகள் அவருக்கு. இருவரும் நல்ல நிலைக்கு வந்து விட்டார்கள். கடமைச் சுமை இல்லை அவருக்கு. அருமையான மனைவி. அவரை நன்றாகப் பார்த்துக் கொண்டார். அவரது கடைசித் தருணங்களும் அவ்வகையில் அமைந்தது அறிய எனக்கு ஆறுதலாக இருந்தது. அவரது வாழ்க்கையின் சிறப்புக்கு அவரது மனைவி நிர்மலாவின் பங்களிப்பைப் போற்றுகிறேன். அவரும் சுரேஷின் மரணம் அவருக்கு, சுரேஷுக்கு சாதக அம்சம் தான் என்கிற அளவில் மனம் தேறி வருவார், என்றே நினைக்கிறேன்.
அதிராத பேச்சு. அன்பு. கனிவு. எழுத்தில், திரைத் துறையில் கனவு கண்டவர் எம். ஜி .சுரேஷ். ஒரு படத்தில் ஷுட்டிங் ஸ்பாட்டில் அவர் எழுதிய வசனம் என்று அவர் புன்னகையுடன் சொல்வார். “மீசை இருக்குன்னு கரப்பான்பூச்சி கட்டபொம்மனாக முடியாது.” எனது நகைச்சுவை அவருக்குப் பிடிக்கும். மந்தகாசமான முகத்துடன் அவர் தான் வாசித்தறிந்த பிற நல்ல மேற்கத்திய நகைச்சுவைகளை என்னுடன் பகிர்ந்து கொள்வார்.
எளிமையான அப்பாவியான நல்ல மனிதர் சுரேஷ். எதையும் சுயநலமாய் தன்சார்பாய் அதிரடியாய்ப் பேசி முட்டிமோதி தன் இலக்கை, காரியத்தை அடைவது அவருக்குத் தெரியாது. அதை இழப்பாக அவர் உணர்ந்திருக்கலாம். என்றாலும் அவர் வாழ்க்கை ஏமாற்றம் சார்ந்தது அல்ல என்றே நான் அறுதியிட விரும்புவேன். அவர் உள்ளி, அல்லது துள்ளி எட்டாத விஷயங்கள் இருந்தன அவருக்கு. என்றாலும் கைக்கு எட்டியவை அருமையானவையே.
*
storysankar@gmail.com

91 97899 87842

Friday, October 5, 2018



எது நடந்ததோ
அது நன்றாகவே
நடக்கவில்லை
எஸ். சங்கரநாராயணன்
*

னக்குக் கதை எழுதத் தெரியாது.
நான் ஒரு கதை எழுதினேன். அதில் ஒரு சம்பவம் இருந்தது. வாழ்க்கையின் ஒரு சிறு வட்டம் இருந்தாற் போலிருந்தது. நான் படித்த சில நல்ல சிறுகதைகள், அவை போல இல்லை அது. சரி என்று கிழித்துப் போட்டுவிட நினைத்தேன்.
தியாகு என் அறைநண்பன். “என்னடா பண்ணிட்டிருக்கே” என்றபடி உள்ளே வந்தவன் கைக்காகிதத்தைப் பார்த்தான்.
“அட தேவராஜ், நீ கதையெல்லாம் வேற எழுதறியா?”
“இதுதான் முதல்...” என்றேன், எதோ தப்பு பண்ணிவிட்டாப் போல.
“கொண்டா படிச்சிப் பாப்பம்.”
“இல்ல வேணாம்.”
“அதான் எழுதிட்டயில்ல. பின்ன என்ன?”
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். லேசான உட் படபடப்பு. இதயத்தின் டப்பு டப்பு, அது தப்பு தப்பு என்றது. பத்து வரியில் திருப்பித் தந்து விடுவான் என்று நினைத்தேன்.
“அருமை...” என்றான் தோளணைத்து.
எனக்குக் கதை எழுதத் தெரியுமா தெரியாதா என நான் குழம்பும்படி ஆகிவிட்டது. காரணம் நல்ல சிறுகதை பற்றி அவனுக்கு என்ன தெரியும், என நான் நினைத்திருந்தேன்!
ஒருவேளை நண்பன் என்று ஓர் இரக்க அடிப்படையில் சொல்கிறானோ?
அந்தக் கதையை நான் எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பப் போவது இல்லை.
அந்தக் கதை பிரபல இதழ் ஒன்றில் வெளியாகி யிருந்தது!
ஆச்சர்யம். இது எப்படி நடந்தது!
“நான்தான் அனுப்பி வைத்தேன்” என்றான் அவன் புன்னகையுடன்.
அவனுக்கு நன்றி சொல்வதா, கோபப்படுவதா?
“தியாகு, நீ ஒரு விஷயம் புரிஞ்சிக்கோ.”
“சொல்லு.”
“நான் படிச்ச எந்தக் கதை மாதிரியும் இல்லியே இது.”
“அதனால் என்ன,” என்றான் அவன். “இப்ப சொன்னியே அதான் அதன் ஸ்பெஷாலிட்டி.”
என்ன இவன் என்னைப் போட்டுப் பார்க்கிறானா?
நல்ல சிறுகதை எது என்பது எனக்குத் தெரியும். இது அல்ல அது.
ஆன்டன் செகாவ், ஹெமிங்வே, தாமஸ் மன்... அட, ஓ ஹென்றி, நம்மாளுகளில் புதுமைப்பித்தன், அழகிரிசாமி, இப்பத்தைய ஆட்கள் என்றால் நாஞ்சில்நாடன், ஜெயமோகன்...
நான் இன்னொரு கதை எழுதினேன். இதற்காக நான் மெனக்கெட வேண்டியிருந்தது. வார்த்தைகளுக்கு தவங் கிடக்க வேண்டியிருந்தது. கற்பனைவெளி யெங்கும் துழாவ வேண்டியிருந்தது.
“தியாகு” என்று கூப்பிட்டேன்.
“படிச்சிப் பாரு” என்றேன் நம்பிக்கையுடன்.
பத்து வரி வாசித்திருப்பான். உதட்டைப் பிதுக்கி திருப்பித் தந்தான்.
“குப்பை!”
“அட ரசனை கெட்ட நாயே! உன்னைப்போய் வாசிக்கச் சொன்னேன் பார்.”
சிரித்தபடி பார்த்துக்கொண்டே நிற்கிறான் கடன்காரன்.
ஆ, நான் நினைத்தது சரி. நல்ல சிறுகதை என்றால் எது என அவனுக்குத் தெரியவில்லை. அதை அவனுக்கு நிரூபிப்பேன்.
முந்தைய கதையை வெளியிட்ட இதழுக்கு அந்தக் கதையை அனுப்பி வைத்தேன்.
திரும்பி வந்துவிட்டது!
தியாகு கேட்டான். “என்னடா மாப்ள, உன் கதையத் திருப்பிட்டாங்களே...”
சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தேன். உள்ளுக்குள் சிரிக்கிறானோ?
எது நல்ல கதை என்று எனக்குத் தெரியாதோ? அழுது விடுவேன் போலிருந்தது.
நான் இன்னொரு கதை எழுதினேன். இது தியாகுவுக்குத் தெரியக் கூடாது, என நினைத்தேன். இதைப் பத்திரிகைக்கு அனுப்பக் கூடாது, என நினைத்தேன்.
எழுதி முடித்துவிட்டு வாசித்துப் பார்த்தேன். இது சரியாய் வந்திருக்கிறதா இல்லையா, என்றே புரியவில்லை. யாரிடமாவது வாசிக்கத் தராமல் எப்படி முடிவுக்கு வருவது...
தியாகுவிடம்... ச், வேணாம். சனி, வரவர அவன் கிண்டல் ரொம்ப அதிகமாகி விட்டது.
ஒன்று செய்யலாம். கல்கி போன்றவர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒரு படைப்பை எழுதி முடிச்சவுடன் அதை அச்சுக்குத் தந்துவிட மாட்டடார்களாம். அப்படியே கிடப்பில் போட்டு விடுவார்களாம். அந்தப் படைப்பினை உருவாக்கும் போதான உள்ளுணர்வின் அலைத் தளும்பல்கள் பூராவும் அடங்கியதும், ஒருவாரமோ பத்துநாளோ கழித்துத் திரும்ப எடுத்து வாசித்துப் பார்ப்பார்களாம்.
“இதை எப்ப எழுதினே?” என்று தியாகு கதையை நீட்டிக்கொண்டே கேட்டான்.
“என் பீரோவைத் திறந்து பாத்தியாக்கும்?” என்றேன் கோபமாய்.
“ஒரு கல்யாணத்துக்குப் போகணும். உன் டிரஸ் எதுவும் சிக்குமான்னு பார்த்தேன்... பாத்தா... கதை!” என்று புன்னகைத்தான்.
கேட்க வேண்டாம் என்று தான் நினைத்தேன். அடக்க முடியவில்லை.
“கதை எப்பிடிடா?”
“ஒண்ணும் விசேஷமா இல்லை...” என்றபடியே என் உடையை மாட்டிக் கொண்டான்.
ஆ, நான் கேட்டிருக்கக் கூடாது!
இதை அனுப்பிப் பார்ப்பமோ? ச். வேணாம்.
ஆச்சர்யம். அந்தக் கதை பிரசுரம் ஆகி யிருந்தது!
“இப்ப என்ன சொல்ற?”
“அப்டின்னா?” என்று என்னைப் பார்த்தான் தியாகு. “உன் கேள்வி எனக்குப் புரியல தேவராஜ்.”
“என் கதை நல்லா இல்லைன்னியே?”
“இப்பவுந்தான் சொல்றேன்.”
“அப்ப பிரசுரம் ஆயிருக்கே?”
“அ” என்றான் தியாகு. “பிரசுரம் ஆயிட்டா? அப்ப நல்ல கதைன்னு அர்த்தம் ஆயிருமா?”
எனக்குத் திகைப்பாய் இருந்தது.
இக் காலங்களில் நான் கதைகள் நிறைய எழுத ஆரம்பித்திருந்தேன். சில வந்தன. பல நிராகரிக்கப் பட்டன.
தியாகுவின் கிறுக்குத்தனம் மாத்திரம் மாறவே இல்லை. பிரசுரமான பல கதைகளை விட, திரும்பி வந்த கதைகளில் அதிகம் அவனுக்குப் பிடித்திருந்தன.
“ஆனா திரும்பிட்டதே?” என்றேன் தியாகுவிடம்.
“அதுக்காக? ஒரு கதை திரும்பி வந்திட்டா அது மட்டம்னு ஆயிருமா என்ன?”
அவன் சொன்னது எனக்குப் புரிபடவில்லை.
ஆனால் ஒரு பத்திரிகையில் நிராகரிக்கப்பட்ட என் கதை இன்னொன்றில் முத்திரைக் கதை என்று பிரசுரம் ஆனது.
“பாத்தியா?” என்றான் தியாகு.
“முத்திரைக் கதைன்னு போட்டா அது நல்ல கதைன்னு ஆயிருமா?” என்று கேட்டுவிட்டு நானே தலையை உதறிக் கொண்டேன். வரவர தியாகுவாட்டம் பேச ஆரம்பித்திருக்கிறேனோ.
“ஒரு நல்ல சிறுகதை முன்மாதிரிகள் அற்றது” என்றான் தியாகு. “அதாவது அது பிற்பாடு தன்னைப் போன்ற மாதிரிகளை உருவாக்க வேண்டும்.”
என்ன அபத்தமான விளக்கம் இது!
ஒரு நல்ல சிறுகதை மாதிரிகளை உருவாக்க வல்லதாம். ஆனால் அந்த மாதிரிகள் நல்ல சிறுகதை அல்லவாம்...
அதேசமயம், அந்த மாதிரிகளை உருவாக்கிய கதை நல்ல கதையாம்...
நல்ல கதையா யிருக்கே?
தியாகுவுக்குப் பைத்தியம் கிய்த்தியம் பிடித்து விட்டதா?
“தியாகு, என் கதைகளிலேயே உனக்குப் பிடிச்ச கதை எது?”
“உன் முதல் கதை.”
“அது சரி மாப்ள, அதைப்போல வேற கதை எதுவும் வந்ததாத் தெரியலையே?”
“அப்டின்னா அது இன்னும் ஒசத்தியான கதை இல்லியோ?”
“அட நாயே!” என்று நான் கத்தினேன்.
இந்த விமரிசகர்களுக்கு ஜனங்களைக் குழப்பிவிடுவதே தொழிலாகி விட்டது.
என் முதல் கதை எனக்கு திருப்தி தரவில்லை. தந்திருந்தால் நான் இரண்டாவது மூன்றாவது... என எழுதியிருக்க மாட்டேன். அது தியாகுவுக்குப் புரியவில்லை.
அவன் அதை விளக்கினால், எனக்குப் புரியவில்லை.
நான் இப்போது ஒரு முடிவுக்கு வந்தேன். என் முதல் கதை, அதைப் போல நானே இன்னொன்றை எழுதினேன்.
தியாகு அதை வாசித்துப் பார்த்தான். “ச்” என்றான். “தேறவில்லை.”
என் கதையைப் போல என்னாலேயே எழுத முடியவில்லை, என்கிறானா?
“இதில் அதன் உயிர் இல்லை தேவராஜ்.”
“ஒரு நல்ல கதை, நல்ல கதையா இல்லையான்னு எழுத்தாளன் எப்பிடித் தெரிஞ்சிக்கறது?”
“தெரிஞ்சுக்க முடியாது!”
“அவனுக்குத் தெரியாது, ஆனா அவன் நல்ல கதை எழுதிருவான்!”
தியாகு சிரித்தான். “ஆமாம்” என்றான்.
“ஏம்ப்பா ஒரு அளவுக்கு மீறி உளர்றேன்னு உனக்கே புரியலியா தியாகு?” இதைச் சொல்லுமுன், எனக்கே அவன் பேசுவது புரியவில்லையே என்றிருந்தது.
இப்போது நான் பிரபல எழுத்தாளன். முன்பு என் நிறையக் கதைகள் நிராகரிக்கப் பட்டன. சில வெளிவந்தன. இப்போது என் நிறையக் கதைகள் வெளிவந்தன. சில நிராகரிக்கப் பட்டன. ஒரு இதழில் நிராகரிக்கப் பட்ட கதை இன்னொன்றில் வெளியானதும் உண்டு.
அதிர்ச்சியான விஷயம். பிரசுரமாக வேண்டும், என ஆர்வப்பட்ட கதைகள் நிராகரிக்கப் பட்டன. அலட்சியமாக எழுதிய சில கதைகள் பிரமாதப் புகழ் தேடித் தந்ததும் உண்டு.
இதற்கெல்லாம் அர்த்தமே இல்லை.
இப்போது என் கதைகளைக் கேட்டு வாங்கிப் போட ஆரம்பித்திருக்கிறார்கள். தியாகு என்னிடம் சொன்னான்.
“தேவராஜ், நல்லா இருக்கோ இல்லியோ, உன் கதைகளைப் படிக்க ஜனங்க முடிவு செஞ்சிட்டாங்க. இனியும் உன்னை மட்டந் தட்டி நான் பேசக் கூடாது.”
“அப்டில்லாம் நீ மேலும் என்னைக் குழப்பக் கூடாது” என நான் சிரித்தேன். “நீ சொல்றியேன்னு நான் எழுதறதை நிறுத்தலை, அந்தமட்டுக்குத் தேவலை.”
அப்போது பிரசுரம் ஆகியிருந்த ஒரு கதையை நான் அவனிடம் கொடுத்தேன். “இது எப்பிடி இருக்கு, படிச்சிப் பார் தியாகு.”
தியாகு வாசித்து விட்டுத் திருப்பிக் கொடுத்தான்.
“என்னடா? கதை எப்படி?”
“ம்.”
“நல்லா இருக்கா?”
“ம்.”
“நல்லா இல்லியா?”
“ம்.”
“அடப்பாவி!” என்றேன் நான். அவன் கருத்து சொல்வதை நிறுத்திக் கொண்டிருந்தான்.
பிரபல இதழ் ஒன்றின் சிறப்பு மலருக்காக கதை கேட்டிருந்தார்கள். நான் கதை தருமுன்பே போஸ்டர், விளம்பரம் என்று அமர்க்களப் படுத்தி யிருந்தார்கள்.
நான் அடுத்த கதை எழுத உட்கார்ந்தேன். கை நகரவில்லை. சற்று உலவிவிட்டு வந்தேன். கை நகரவில்லை. மதியம் கதை வாங்கிக் கொண்டு போக ஆள் வந்து விடுமே?
எனக்கு எழுத வரவில்லை. ஏமாற்றமாக இருந்தது. என்னாயிற்று எனக்கு?
என்னால் எழுதவே முடியாதா?
ஆச்சர்யம். எனக்குக் கதை எழுத வரும் என உலகம் நம்பியபோது எனக்கு எழுத வரவில்லை, என நான் உணர்ந்தேன்.
வாழ்க்கையில் அபத்தங்களுக்கு அளவே இல்லை!
“தியாகு?”
“என்னடா?”
“என்னைத் திட்டுடா, ப்ளீஸ்” என்றேன் நான்.

storysankar@gmail.com
91 97899 87842