Friday, September 28, 2018



முகாம்கள் பாசறைகள்
(சென்ற வாரத் தொடர்ச்சி)
-
எழுத்து வாசகனைத் தேடி, ஆனால் காத்திருக்கிறது. அது தேடிப்போக முடியாது. அதன் அழகு காத்திருப்பது. வாசகன் தான் சுய தயாரிப்புடன் அதைநோக்கி வந்துசேர வேண்டும். வரட்டும், என அது, எழுத்து ஆர்வமாய்க் காத்திருக்கிறது. வரும்வரை காத்திருக்கிறது. சுய ஆர்வம் இல்லாத, முன் தயாரிப்பு இல்லாத வாசகனுக்கு எழுத்து பயன் தராது. அவனுக்கு அக்கறை இல்லாத போது எழுத்தினால் அவனுக்கு உதவ முடியாது. இது ஒரளவு கடவுள் நம்பிக்கை போல என்று கூடச் சொல்லிவிடலாம். ஒரு வாசகன் தன் தேடலின் மூலம் நல்ல எழுத்தைக் கண்டுகொண்டு, அங்கு வந்தடைந்து தன் தரத்தையும், அந்த எழுத்தின் கௌரவத்தையும் உயர்த்துகிறான். ஒரு தேடல், ஒரு காத்திருத்தல் - நியாயம் செய்து கொள்கின்றன பரஸ்பரம்.
வாசகனின் பங்கு ஆகவே முக்கியமானதொரு விஷயம். அது வாசகனை அலட்சியப் படுத்தி விடாத எழுத்து.
எந்த எழுத்தாளனும் அடிப்படையில் தன் எழுத்தினும் அதிகத் தகுதியான படைப்புகளின் அருமையான வாசகன் தான். எழுத்தின் எத்தகைய கருதுகோள்களைச் சார்ந்து அவன் இயங்கினாலும், வாசிப்பில் கிணற்றுத் தவளை அல்ல அவன். மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகர அவன் தவறுவதே இல்லை. அது தன்நிலையை தனது கருத்துகளை மேலும் வளப் படுத்தும், தனது எழுத்து-நியாயங்களை மேலும் செழுமைப் படுத்தும் என அவன் அறிவான். தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால் மாறிக் கொள்ள அவன் தயக்கம் காட்டுவது இல்லை. அவனது வளர்ச்சி நிலையே அது, என அறிந்து தெளிந்தவன் அவன்.
வாசக உலகம் எத்தனை அற்புதமாய் இருக்கிறது. எழுதியும் வாசித்துமே ஒரு படைப்பாளன் தன் வாழ்நாள் முழுதும் கழித்துவிட முடிகிறது. உலகத்தின் சிறந்த ஓவியங்கள், அற்புதமான திரைப்படங்கள், பிற கலை வடிவங்கள்... எல்லாமே அவனுக்குப் பெரும் உணர்வு உந்துதல் தருகின்றன. வான்கோவின் ஓர் ஓவியம், ‘பாலங்கள்’ என்ற ஜெர்மானியச் சிறுகதைக்கு, வித்திடுகிறது. (இதே கதையை அடியொற்றி, வான்கோவை தமிழில் க.நா.சு. பாத்திரமாக மாற்றி நம்ம அசோகமித்திரன் ஒரு கதை ‘செய்திருக்கிறார்.’) ருஷ்ய இ,யக்குநர் தார்க்கோவ்ஸ்கியின் ‘தியாகம்’ திரைப்படத்தின் தாக்கத்தில் மயங்கி நான் ‘தாத்தாவின் பொய்கள்’ சிறுகதை எழுதினேன். முதுமையின் தத்தளிப்பு இடைநாதமாய் அமைந்த கதை இதுவும். அதில் நடை எர்னஸ்ட் ஹெமிங்வேயின் பரபர நடையாக அமைத்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது. (இம்மாதிரி உந்துதல்கள் மூலக்கதையோடு சம்பந்தம் இல்லாமல் எழுத்தாளனின் தனித்தன்மையை உயர்த்திப் பிடிக்கிறதாக அமைந்து விடும்.)
ஒரு படைப்பு உள்ளே உசுப்பி விட்ட அளவில் வேறொரு படைப்பு கிளர்ந்தெழுகிறது. அந்தப் படைப்புக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கக் கூட இருக்காது. பல சந்தர்ப்பங்களில் எழுத்தாளன் விளக்கிச் சொன்னாலொழிய அதை மற்றவர்கள் சாயல்கண்டடைவது சிரமந் தான். அசோகமித்திரனின் ‘பூனை’ கதை நகர இட நெருக்கடி பற்றிச் சொல்கிறது. ஹைதராபாத்தில் ஓர் அப்பார்ட்மென்ட்டில் பத்தாவது மாடி தாண்டிய மொட்டை மாடியின் ஒரு ஓரத்தில் கூரைப்பெட்டி போன்ற அறையில் இரவைக் கழிக்கிற ஒருவனுக்கும், அங்கே ஒதுங்க முயற்சிக்கிற பூனை ஒன்றுக்குமான இடப் போராட்டம். அதன் மன அலைக் கழிப்பில் நான் ‘ஸ்தலபுராணம்’ சிறுகதை எழுதினேன். ஆனால் ‘ஸ்தலபுராணம்’ பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கைகளையும், தலைமுறை இடைவெளியையும், பணம் சார்ந்த உலகத்தையும் சொல்லும் கதை. ‘ஸ்தலபுராணம்’ அவசியம் நீங்கள் வாசிக்க வேண்டும், ‘பூனை’ அசோகமித்திரனை விட்டுவிட்டாலும்!
இலக்கியத்தில் ஒரு படைப்பை அடிநாதமாகக் கொண்டு அதைச் சார்ந்தும், அதன் எதிர்த்தளத்திலும், மறு வாசிப்புப் படைப்புகள், இயல்பானவையே. ஹென்ரிக் இப்சனின் ‘மக்களின் பகைவன்’ நாடகத்தை உள்வாங்கி சத்தியஜித் ரே ஒரு திரைப்படம் எடுத்தார். ஷேக்ஸ்பியரின் ‘லீயர் அரசன்’ ஏற்படுத்திய தாக்கத்தினால் குரோசோவா, கோடார்ட், பெர்க்மென் போன்ற உலகத்தர திரைப்பட இயக்குநர்கள் படங்கள் தந்துள்ளார்கள். இவை மூலப் படைப்பின் அஸ்திவாரமும், தங்களின் தனி ஆளுமையும் கொண்டவையாக விளங்குகின்றன.
வாசகனாக, ஒரு நாணயத்தின் இரு பக்கங்களையும் விளக்கும் வெவ்வேறு படைப்புகளை வாசிப்பது தனி அனுபவம். பேர்ள் எஸ் பக் என்கிற அமெரிக்கப் பெண்மணி (நோபல் பரிசு பெற்ற புனைவாளர்) உலகத்தின் காலை நாங்கள் சொன்னால் தான் விடியும், என அமெரிக்காவின் அணுகுண்டு சோதனை வெற்றியைக் கொண்டாடி எழுதிய ‘கமான்ட் தி மார்னிங்’ நாவலும், ஹிரோஷிமாவில் குண்டு வெடித்தபின், அந்தப் பகுதியின் துயரத்தை நேரில் கண்டு சொன்ன ‘ஹிரோஷிமா’ புத்தகமும் எனக்கு ஒருசேர வாசிக்க அமைந்தது சுவாரஸ்யமானது.
மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலின் அற்புதமான முதல் ஐம்பது பக்கங்கள், தொழிலாளி வர்க்கம் பற்றிய அவரது விவரிப்பு.  உலகின் சிறந்த இலக்கியப் பக்கங்கள், என என்னை வசிகரித்தன அவை. அதேசமயம், ‘ஃபார் ஹும் தி பெல் டால்ஸ்’ எழுதிய ஹெமிங்வே மற்றொரு சித்திரத்தை, சமுதாயப் புரட்சி என்பது முதலில் எப்படி ஊர் நன்மைக்காக என்று அறிவுஜீவிகளால் துவக்கப் பட்டு, பின் வெகு சுருக்கில் காலிகளால், சமூக விரோதிகளால், அயோக்கியர்களால் கையில் எடுத்துக் கொள்ளப் பட்டு திரிந்து போகிறது, என்கிற சித்திரத்தை ஆழமாய்ப் பதிக்கிறார்.
உலக இலக்கியத்தில் இன்னொரு முக்கியப் பதிவு, ‘ட்டு ஹேவ் அன்ட் ஹேவ் நாட்’ நாவலில் கிழவன் ஒருவன் மரணத் தருவாயில் என்னென்னவோ சொல்ல நினைத்து நினைவுகள் பல ஒரே சமயம் முட்ட, பல விஷயங்களை ஒரே சமயத்தில் சொல்ல முயன்று குழம்பி, பிதற்றிவிட்டுச் செத்துப் போகிறதை, அவன் உரையாடல்களாய்த் தந்த இடம். எழுத்தில் அத்தனை உயரங்களை தரிசித்தது அந்த வயதில் என் பேறு என்பேன்.
ஒருமுறை மனநல மருத்துவர் டாக்டர் ருத்ரனிடம் இப்படி உச்சம் தொட்ட படைப்புகளை சிலாகித்துப் பேசியபோது, அவர் தான் வாசித்த சில உதாரணங்களையும் சொல்லி, “அதனால் தான் நான் புனைவு எழுதுவதைக் கையில் எடுக்காமல் விட்டேன்” என்று புன்னகைத்தார்.
மாற்றுத் தரப்பு விவாதங்களைக் கூட தெளிவுடன் உள் வாங்கிக் கொள்ளப் பழகிக் கொள்வது, எழுத்தை வளர்த்துக் கொள்ள உதவி செய்கிறது. லா.ச.ரா. எழுதிய ‘கறந்தபால்’ சிறுகதையில் அவரது பக்தி சிலிர்ப்பு அப்படியே நம்மை எட்டுகிறது. கடவுளை மறுக்கிற கந்தர்வனின் ‘சீவன்’ இதற்கு சளைத்தது அல்ல. ஆச்சர்யகரமாக, ஹெப்சிபா ஏசுதாசனின் ‘அநாதை’ சிறு நாவல், ஆகா தமிழுக்கு நோபல் பரிசு தரலாமே இதற்கு, என்று என்னைக் கிறங்கடிக்கிறது. உலகம் என்பது என்ன, கடைசியில் தோல்விகள் தானே, என்று அவர் தன் முன்னுரையை முடிக்கிற போது பகீரென்றது. ஆனால் அதை அவர் ஒரு வாழ்க்கையாக எழுதிக் காட்டிய விவேகம் மறுக்க முடியாதது.
எழுத்து காலந்தோறும் அந்தப் படைப்பாளனை வளர்த்து வருகிறது, என அறிகிறேன். ஒரு படைப்பில் இருந்து அடுத்த படைப்பை வித்தியாசப் படுத்திக் காட்ட, புதிய வளாகங்களில் சஞ்சாரம் செய்ய அவன் முயற்சி செய்கிறான். கூறாததைக் கூறவும், கூறியதில் கூறாததைக் கூறவும் அவன் அவாவுறுகிறான். அதற்காய் அவன் தன்னை ஓயாமல் புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவனது அடுத்த எழுத்தை அவன் நியாயம் செய்தாக வேண்டும். எனவே அவன் தொடர்ந்து தன் வாசக நிலையிலும், சாமான்ய பொதுஜன நிலையிலும் தக்கவைத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது.
தமிழில் அற்புதமான விஷயங்கள் எழுதப்பட்டுக் கிடைக்கின்றன. உலகின் தொன்மையான மொழியில் அன்றே பெரும் காப்பியங்களை நாம் கொண்டிருக்கிறோம். எழுத்தைப் பாதுகாத்தல் என்ற அளவில் கூடாமல், வாய்வழி செவிவழி பரிமாற்றங்களுக்கு செய்யுள் வடிவம் உவப்பானது, மனதில் தங்கும் என அவர்கள் நினைத்தார்கள். அகநானூறு, புறநானூறு காட்டும் வாழ்வியல் சித்திரங்கள் குறியீட்டு அளவிலும், பின்புல நுட்பங்களிலும் நவீனத்தன்மை கொண்டவை. வாழ்வின் பல்வேறு உணர்வுத் தளங்களை, நிலத்தை ஐந்திணைகளாகப் பிரித்து வாழ்வோடு பொருத்திக் காட்டுகிற நுண்மை வேறு எந்த மொழியில் இருக்கிறது?
அதிலும் கதை சொல்லுதலில் நாம் எவ்வளவு முன்னேறி யிருக்கிறோம், என்பதே வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது எனக்கு. ராமாயண மகாபாரதம் சார்ந்து எத்தனை குட்டிக் கதைகள், பழமொழிகள்,  சொல் வழக்குகள் நம்மிடையே இன்றும் புழங்கி வருகின்றன. கிருஷ்ண லீலா கதைகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. மண்ணைத் தின்ற கண்ணனை வாயைத் திறந்து காட்டச் சொல்ல, அவன் வாய்க்குள் உலகத்தையே பார்த்து மகிழ்ந்தாளாம் யசோதா. அரக்கியொருத்தி கிருஷ்ணனை எடுத்து தாய்ப்பால் என மார்பில் விஷப்பால் ஊட்ட கிருஷ்ணன் அவள் உயிரையே உறிஞ்சிக் குடித்தான். குறும்பு தாங்காத கிருஷ்ணனைத் தாய் உரலில் கட்டிப் போடுகிறாள். குழந்தையோ உரலையே சேர்த்து உருட்டிக்கொண்டு தோட்டத்துக்கு வந்துவிட, இரு நெருக்கமான மரங்களிடையே அது தவழ்ந்து போனதில் உரல் மரங்களிடையே மாட்டிக் கொள்கிறது. அதைவிட இரண்ய வதம். அவன் பெற்ற வரம் விசித்திரமானது. இரவிலும் எனக்குச் சாவு வரக் கூடாது. பகலிலும் வரக் கூடாது. மனிதனாலும் நான் சாகக் கூடாது. மிருகத்தாலும் சாகக் கூடாது. வீட்டுக்குள்ளும் சாகக் கூடாது. வெளியிலும் சாகக் கூடாது. உயிருள்ள பொருளாலும், உயிரற்ற பொருளாலும் என் சாவு அமையக் கூடாது. அப்படி வரம் பெற்ற இரண்யனை கடவுள், சிம்ம முகமும் மனித உடலுமாய் வந்து, அந்தி நேரத்தில், வீட்டு வாசல் நிலைப்படியில் வைத்து, நகங்களால் கீறிக் கிழித்து வதம் செய்கிறார், என்பது எத்தனை அருமை!
பள்ளிக் காலத்திலேயே தமிழில் நான், நோபல் பரிசு பெற்ற சில கதைகளை வாசித்திருக்கிறேன். எங்கள் ஊர் ஸ்ரீவைகுண்டத்துப் பொது நூலகத்தில் அவை வாசிக்கக் கிடைத்தன. ஜான் ஸ்டீன்பெக்கின் ‘நிலவு வந்து பாடுமோ’, ‘முத்து’, அப்புறம் ஜாக் லண்டனின் ‘கானகத்தின் குரல்’ போன்ற அருமையான மொழிபெயர்ப்புகள், அவற்றின் தரம் புரியாவிட்டாலும் சுவாரஸ்யத்தோடு வாசித்திருக்கிறேன். முத்து பதிப்பகம் என அன்றைய நாளில் அருமையான மொழிபெயர்ப்புகள் தமிழில் கொண்டு வந்தார்கள். இப்போது சற்று விவரம் தெரிந்த வயதில் அந்தப் புத்தகங்களை ஆங்கிலத்தில் வாசிக்க வாய்க்கும் போது தான் அவற்றை நான் முன்பே தமிழில் வாசித்த நினைவுகள் மகிழ்ச்சியுடன் அலையடிக்கின்றன.
காலம் காலமாக என் எழுத்து மாறுதல் கண்டே வந்துள்ளதாகத் தோன்றுகிறது. என்னிடம் கதைகேட்டு வெளியிடுகிற நிலையில், அது சிற்றிதழா வணிக இதழா என நான் பேதம் பாராட்டுவது இல்லை. கதைகளில் என் தரம் என்கிற ஒரு அளவுகோல் கட்டாயம் இருக்கும். கதை கேட்கிற பத்திரிகையாளர்களும் அதை என்னிடம் எதிர்பார்க்கிறார்கள் என்பது எத்தனை நல்ல விஷயம்.
என் ஆரம்பகாலக் கதைகள் என் சூழலை ஒட்டி அமைந்தவையே. என் ஜாதி சார்ந்து நான் அறிந்த சிறு வட்டத்து மனிதர்களை அடையாளங் காட்டி வந்தேன். அதைத் தவறாகவும் நினைக்கவில்லை. எனக்கு நடக்கக் கற்றுத் தந்தவர்கள் அவர்கள். என்னிடம் ஒரு எழுத்துநடை இருந்தது. எனது வாசிப்பு அனுபவம் யார் மாதிரியும் எழுதாத விதத்தில் என் எழுத்தை அமைத்துக் கொடுத்தது. ஹெமிங்வே போல, லாசரா போல, தி. ஜானகிராமன் போல நான் எழுதிப் பார்த்திருக்கிறேன். அவை வேண்டுமென்றே முயற்சி செய்தவை. சில எழுத்தாளர்களின் சில படைப்புகளைத் தொட்டும் விரித்தும் கடந்தும் கதைகள் புனைந்திருக்கிறேன். அதுபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.
என் கதையில் நான் பிரயோகப் படுத்தும் வார்த்தைகள், அதில் சொல்லிச் செல்லும் பாத்திரங்களின் சூழல், அறிவுத் தளங்களை அடியொற்றி அவர்களது கிரகிக்கும் திறன் சார்ந்து அமைத்துக் கொள்கிறேன் நான். பாத்திர வார்ப்புகள் என் கதையில் முக்கியம். இதை என் விமரிசகர்களே கவனித்து என்னிடம் என் அடையாளமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
அதேபோல ஒரு பத்தியில, அந்தப் பத்தியில் உணர்த்தப்படும் உணர்ச்சி, அதன் தீவிர அடிப்படையில் அந்தப் பத்தியின் நீளம் அமைகிறது. உணர்ச்சித் தீவிரமான ஒரு நெடிய பத்தி அமைந்தால், அதன் கடைசி வரியை, ஓரிரு வார்த்தைகளாக, அந்த உணர்ச்சியை வெளியே எடுத்துத் தந்து விடுவதும், என் பாணி.
என்னுடைய ஒரு படைப்பு போல இன்னொன்று இருப்பதை நான் விரும்பவில்லை. அதில் என் அடையாளம் என் கலை ஆளுமைதான். சொல்லும் திறன் மாத்திரம் தான். ஒரு கதை சொல்வதில் பல்வேறு வகை உத்திகள் உள்ளன. புதிதாகவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றிலும் நான் இயங்கிப் பார்க்க, மூழ்கி முத்தெடுக்க ஆசைப் படுகிறேன். ஒரு படைப்பு அதை வெளிப்படுத்தும் உத்தியைத் தானே தேர்வுசெய்து கொள்கிறது என்றுதான் தோன்றுகிறது. அப்படியல்லாது வேறு முறையில் சொல்லப்பட்டால் அந்தக் கதை இத்தனை வீர்யம் பெறாது என்று தோன்றும் படி அந்தக் கதையில் வியூகம் அமைக்கப்பட நான் முயற்சி செய்கிறேன்.
ஆரம்பகால எனது எழுத்தில் ஜிம்மிக்ஸ், வார்த்தைக் குறும்புகள் அதிகம் ஊடாடி வந்தன. வயசும் அப்படி. நானே யாரோடும் அப்படியான துள்ளலுடன் தான் பழகி வந்தேன். இப்போது இந்த வயதில் வாழ்விலும் எழுத்திலும் எனக்கு அவை துறுத்தித் தெரிகின்றன. ‘குதிரை மீதொரு ராஜகுமாரன்’ கதையில் ஒல்லியான அப்பா என்றால், அவரை விட அவர் கைத்தடி குண்டாய், என எழுதுவேன். இந்த வீட்டில் தான் நாளாக நாளாக ரூபாயின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது, என எழுதுவேன். இப்போது ‘மற்றவர்கள்’ நாவலில் பையன் சைக்கிளை ஓட்டி வருகிறான். நேர்ப்பார்வைக்கு அவன் மாத்திரமே வருகிறாப் போலிருக்கும். வீட்டருகே வந்து அவன் சைக்கிளை நிறுத்த பின்னே யிருந்து அப்பா இறங்குவார், எனச் சொல்லியிருக்கிறேன். அய்யனார் சிலைக்குக் கீழே கால்கட்டிய இரு கழுதைகள் தலை குனிந்து மௌனமாய் நிற்கும். குதிரைக்குக் கிடைத்த அங்கீகாரம் தங்களுக்கு இல்லையே, என அவை முறையிடுவதாக அதைச் சொல்லி யிருப்பேன். அந்தந்த நேரத்து மன எழுச்சியில் கதையில் கிளம்பும் அலைகள்.
பின்னாளில், இந்த வார்த்தைக் குறும்புகள் பிடி மாறி, கதையின் கருவை முக்கியமான ஒரே வாக்கியத்தில் கதைக்குள் எடுத்துத் தர முன்வந்தேன். ‘மிஸஸ்’ என்றொரு கதை. ‘வேலைக்காரியிடம் பேசுவதோ, பிச்சைக்காரியின் குழழந்தையைப் பார்த்துச் சிரிப்பதோ என் மனைவிக்குப் பிடிக்கவில்லை’ என்பது அந்தக் கதையின் மந்திர வரி. ‘கனவு தேசத்து அகதிகள்’ என்றொரு கதையின் வரி. ‘அவனது தேவைகளை அவனைவிட அவள் அறிந்திருந்தாள். இதுகுறித்து அவளுக்குப் பெருமிதம் இருந்தது.’
முரண் அம்சங்களை நுணுக்கமாக அடுக்கிச் சித்தரிப்பதும் சுவாரஸ்யத்துக்கு உதவுகின்றன. அதேபோல கச்சிதமான உவமைகளைக் கையாள்வது எனது சொத்து என நான் தலைப்பட்டேன். காலையில் பால் வந்து இறங்கியதும் பால்காரனைச் சுற்றி நீட்டப்ட்ட ஏராளமான பால் கார்டுகள். பிரேக்டவுன் ஆன பஸ் கண்டக்டர் போல அவன் திணறினான், என எழுதியது நினைவு வருகிறது.
ஷேவிங் சோப் போட்டுக்கொண்ட கன்னத்துடன் அவன் பார்க்க கிறிஸ்துமஸ் தாத்தா போல இருந்தான்.
முரண் அம்சம் என்றால், ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். அதைக் கண்டு அந்த அறைக்குள் போனவன் அந்த உடலைத் தூக்குக் கயிற்றில் இருந்து கீழே இறக்க வேண்டும், எப்படி என்று பதட்டத்துடன் நிற்கிறான். அறைக்கு வெளியே யிருந்து அப்போது கேட்ட பிற மனிதக் கூக்குரல்கள் அவனுக்கு, கூட ஆட்கள் இருக்கிற ஆறுதல் தந்தன. வாழ்க்கையே முரண்களால் ஆனது. அதைக் கண்டுகொள்வதும் எழுத்தாக்குவதும் தனி அனுபவம். நல்ல நகைச்சுவையும் அதில் காணக் கிடைக்கும். உப்பு விக்கப் போனால் மழை பெய்தது, மாவு விக்கப் போனால் காத்தடிச்சது, எனப் பழமொழி கேள்விப் பட்டிருக்கலாம்.
ஆடிட் செய்ய வந்தவர் முந்திரி வறுவலை எடுத்து வாயில் போட்டுக் கொண்டே, இந்த மூவாயிரத்துக்கு என்னய்யா கணக்கு, என்று கேட்கிறார். எந்த மூவாயிரம், என கணக்குப்பிள்ளை கண்ணாடியைச் சரிசெய்தபடி எட்டிப் பார்க்கிறார். அவர் கண்ணாடி உடைந்து ஆறு மாசம் ஆகிறது. அதைச் சரி செய்ய கையில் காசு இல்லை, என எழுதிக் காட்டியது நினைவு வருகிறது. கண்ணாடி வாங்க அவருக்கு உதவாத முதலாளி, ஆடிட்டருக்கு முந்திரியுடன் சீராட்டு செய்கிறான்!
கருத்து அடிப்படையில் அல்லாமல், கொள்கை அடிப்படையிலும் அல்லாமல் வாழ்க்கையை சந்திப்பது, அதை எடுத்துரைப்பது என்பது முக்கியம். எனக்கு மாற்றான கருத்துகளைக் கூட பாத்திர அடிப்படையில் நான் சித்தரிக்கலாம். அதன் பாத்திர வார்ப்பு நியாயத்துடன் அது அமைகிறது. அப்படி நாம் விலகி பாத்திரங்களை உண்மை சொரூபமாக, கருத்துக் குறுக்கமாக அல்லாமல் காட்டும்போது, அது நல்ல சமூக அடையாளமாக, சில சமயம் சமூக விமரிசனமாகவும் ஆகிக் கொள்கிறது. முகாம்களிலும் பாசறைகளிலும் எந்த நல்ல எழுத்தும் அடைபட்டுக் கொள்ள முடியாது. ஆனாலும் அவை தேவைதான், என்பதில் மறுக்க ஒன்றும் இல்லை. வெறும் யதார்த்தச் சித்தரிப்புகளே கூட, எழுத்தாளனின் சிந்தனைக் குவிப்பு அடிப்படையில் பெரும் ஆவேசத்தை, உள் தூண்டலை நிகழ்த்தி விடக் கூடும். கமலாதாஸ் போல பலர் அதை சாதித்துக் காட்டி யிருக்கிறார்கள். சொல்லும் திறனை மேம்படுத்திக் கொண்டு, வாழ்வின் யதார்த்தங்களை எந்தப் பக்கமும் சாராமல் கதை கூறுதல் ஆகச் சிறப்பான இலக்கியம் என்பேன். அதில் இருந்து மொத்த மானுடமும் எடுத்துக் கொள்ளக் கிடைக்கிறது. ‘ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்’ எழுதி ஒரு தனி மனித சோகத்தை ஒட்டுமொத்த மானுடத்துக்கே ஏற்றிக் காட்ட முடிந்தது ஹெமிங்வேக்கு. வாழ்வின் எல்லைவரை போய்விட்டுத் திரும்பிய தாஸ்தயேவ்ஸ்கி ‘பியூட்டி வில் சேவ் தி வேர்ல்ட்’ என்று அறைகூவல் விடுத்தான், என்பதில் உள்ள நியாயத்தை புறக்கணிக்க முடியாது. அவன் கலைஞன் என்பதால் அப்படி அவனுக்கு சாத்தியப் பட்டது.
கலைஞனுக்கு வாழ்க்கை அற்புதமானதொரு அனுபவம். உடல் குளிரக் குளிர உன்னைக் கடந்து ஓடிக் கொண்டே யிருக்கும் நதி அது. அவன் பார்க்கும் வாழ்க்கை முகமூடி வழியே அல்ல. கடிவாளம் கொண்டது அல்ல அவன் பார்வை. கணந்தோறும் புதிதாய்ப் பிறக்கிற அனுபவமே வாழ்க்கை. வாழ்வின் பிரம்மாண்டத்தில் தன் சார்ந்து அதைக் குறுகிய அளவில் உள்ளங்கை நீர் என, எண்ணுவது பேதைமை.
‘குமுதம்’ பேட்டியில் ஒருமுறை இப்படிச் சொன்னேன். எழுத்தாளன் உங்களுக்கு உங்களைக் காட்டித் தருகிறான். ஒரு மருத்துவத் தாதி போல அவன் உங்களை உங்களிடமிருந்து எடுத்து உங்களுக்குக் காட்டுகிறான்.
குஷ்டரோகிப் பிச்சைக்காரனுக்கு ஒருத்தி பிச்சை போடுகிறாள். பிச்சையைப் பார்க்காமல் அவளைப் பார்க்கிற பிச்சைக்காரன்.
ஒண்ணரைக் கண் பெண் கூட கண்ணுக்கு மை தீட்டி அழகு படுத்திக் கொள்கிறாள். அழகாய் உணர்தல், அதுதானே முக்கியம்.
பார்க்கும் காட்சிகள், விழும் படிமங்கள், நிழலும் வெளிச்சமுமாய் அவன் மனசில் பிம்பங்கள் மாறி மாறி விழுகின்றன. அவனுக்குத் தோல்விகள் இல்லை. வாழ்வின் அனுபவங்கள் தோல்விகள் ஆகா. பிறிதின் நோய் தன் நோய் என உணர்கிறவன் அவன். பிறரின் மகிழ்ச்சியும்... ஆகவே, அவன் தன் நோய்க்கு அல்லல் உறுவதே இல்லை.
எழுத்தை விட வாழ்க்கை அற்புதமானது.
ஆனால் அதை நமக்கு எடுத்துச் சொல்ல ஓர் எழுத்தாளன் தேவை.

திசம்பர் 30, 1995 - திருவண்ணாமலை மாவட்ட தமுஎச மாநாட்டில் சிறப்பு விருந்தினராக வாசித்தளித்த உரை.  
storysankar@gmail.com 91 97899 87842

Friday, September 21, 2018


முகாம்கள்
பாசறைகள்
எஸ். சங்கரநாராயணன்

பொதுக் கருத்துகளையும் தனது கருத்துகளையும் கவனத்தில் நிறுத்தி, எல்லாருக்கும் பொதுவானதொரு தளத்தில் ஒரு படைப்பு முன்வைக்கப் படுகிற போது, அது புரிந்துகொள்ளப் படுகிற அளவில் அதன் இலக்கிய வெற்றி அமைகிறது. தானும் பிறருமான ஒரு சமுதாயத்தின் ஒரு வடிவமாகவே எழுத்தாளன், எழுதுவதான சிந்தனையில் ஈடுபடுகிறான். அவனது விதிகளோ, ஒழுங்குகளோ சமுதாய விதிகளில் இருந்து சிலசமயம் மாறுபட்டும் போகின்றன. ஆனால் அவை சமுதாயத்தின் மேன்மையையிட்டு அவன், அந்த எழுத்துக்காரன் உத்தேசித்தவைதாம். நடைமுறையினின்றும் மேம்பட்டவை யாகவும், முரண் பட்டவையாகவும் அவை இருப்பதே அவனுக்குத் தன் எழுத்தின் நியாயமாகப் படுகிறது.
முரண்பாடு தவிர்க்க முடியாதது. முரண்பாடுதான் எழுத்தின் காரணம். ஆதார சுருதி. ஒரு செய்தியிலிருந்து, ஒரு சம்பவத்தின் நிகழ் நிலையிலிருந்து படைப்புக்காரன் தனித் தளத்தில் பிரிந்துபோய் இயங்குகிறபோது எழுத்து பிறக்கிறது. கலை என்பதே முரண் தான். முரண் என்தென்ன? இருநிலைத் தன்மை. மின்சாரத்தின் பாசிடிவ் நெகடிவ் போல. இரண்டுமே சத்தியின் ஆதாரக் கூறுகள் தாம். ஒன்றைச் சொல்ல அதற்குரிய முரணைத் தேர்வு செய்து கொள்வது, அல்லது முரணான தன்மையில் எதிர்ப்புகளை எழுதும் போதுகூட, ஒத்திசையும் அம்சங்களின் மதிப்புகள் விளக்கப் படுகின்றன.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வி முழுங்கிவிடப் பார்க்கிறது, கிரகணத்துப் பாம்பு போல. தர்மத்தினை மீட்டெடுக்க வேண்டி யிருக்கிறது. சிலர் உதறியெழ தாமாகவே முயல்கிறார்கள். வெற்றியும் பெறுகிறார்கள். சிலருக்கு உந்துசக்தி தேவைப் படுகிறது.
எழுத்தாளன் தனது படைப்பில் அந்த உந்துசக்தியை வழங்கிவிட முடியுமா என ஆவேசமுறுகிறான். அது புரிந்துகொள்ளப் படுகிற அளவில் அவன் தனது முயற்சியிலக்கை அடைந்துவிட்டதாக அவன் உணர்கிறான். சமுதாயத்தின் எந்தவொரு மதிப்பும், காலத்தின் முன், மனிதனிடமிருந்து சக மனிதனுக்குக் கை மாறுமுன், அதில் கொஞ்சம் கொஞ்சமாய்க் கறை படிந்துபோய் விடுகிறது. காரணம் முதலில், அதன் ஆரம்ப நிலையில் அது கொண்டிருந்த தூய்மை நிலை, கைகள் மாற மாற திரிந்துபோய் விடுகிறது. அதாவது, ஒரு செய்தி என எடுத்துக் கொண்டாலும் கூட, இரண்டாமவன் மூன்றாமவனிடம் அதைச் சேர்ப்பிக்கும்போது தனது கற்பனையையும், குறைந்தபட்சம் அதுசார்ந்த தன்கணிப்புகளையும் ஏற்றி, தன் உணர்வு வியூகத்துடனேயே கைமாற்றுகிறான். அதன் இறுதி வடிவம் ஒருவேளை, ஆரம்ப வடிவத்துக்கு சம்பந்தமே இல்லாதுகூட ஆகிப் போகலாம். பேசும் த்வனியில், அந்த ஆரம்ப வடிவத்தைச் சார்ந்தோ, சில சமயம் எதிர்த்தோ கூட அந்த விஷயம் பரிமாறப் பட்டுவிடக் கூடும்.
எழுத்து நேரடியாக படைப்பாளனிடமிருந்து வாசகனுக்குச் சென்றடைகிறது.
அத்தோடு சாமான்யர்களிடம் அறிவுவேட்டை யாடும் சிலர் சந்தர்ப்பவவாதிகளாக, சூழ்நிலைகளைத் தங்கள் வசத்தில் பயன்படுத்திக் கொண்டு சாமான்யர்களை அதிகாரம் செலுத்தி வெற்றியும் பெற்று விடுகிறார்கள். ஓர் உதாரணம் சொல்லி வேறு விஷங்களுக்குப் போய்விடலாம். இயற்கையை, அதன் பிரம்மாண்டத்தை மனிதன் பிரமித்து, அதனை வணங்க ஆரம்பித்தால், காலப்போக்கில் கடவுள் என்கிற மதிப்பு சாமான்யன் மனதில் ஆழமாய் வேரூன்றப்பட்டு ஒரு கும்பலே அதைவைத்துப் பிழைப்பு நடத்த ஆரம்பித்து விட்டது அல்லவா? எழுத்தாளனுக்கு இந்த அதிகார அடிமைத் தனங்களிலிருந்து மானுடனை விடுவிக்கிற ஆவேசம் உண்டு. தன்னை அவன் வெளிப்படுத்திக் கொள்கிற போது சமுதாயப் பாதுகாவலராய் வேஷம் போடுகிற இந்த எதிரிகளிடம் பெரும் எதிர்ப்பைப் பெறுகிறான். சிலசமயம் சமான்யர்களே கூட அவனைத் தனது எதிரி என நினைத்தும் விடுகிறார்கள். இந்த நிலையில் அவனது பொறுப்பு மேலும் அதிகமாகத்தான் ஆகிப் போகிறது. தர்மம் மறுபடி வெல்லும். காலப்போக்கில் அதை அறிவிப்பதும், அதை நோக்கி நம்பிக்கையூட்டுவதும், அதை துரிதப் படுத்துவதும், ஒவ்வொரு மனிதனையும் அதைநோக்கித் தயார்ப் படுத்துவதும் எழுத்தின் பங்களிப்பாக இருக்கிறது.
சிந்தனை அளவிலும் செயல் அளவிலும் எழுத்து ஒருவரது தனி அனுபவம். ஆனால் எழுத்தாளன் சிந்தனைகளில் தனி-மனிதன் அல்ல. தனிப்பட்ட ஒருவனது அனுபவம் பிறருக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. பிறகு, பிறருக்கும் பயன் படுவதாக அது எல்லை விரித்துக் கொள்கிறது. தனி மனித எழுத்து, தனி மனித மேம்பாட்டில் துவங்கி, அதை வாசிக்கிற தனி மனிதனில், தன்னளவிலான முடிவுகளை அல்லது வினாக்களை எழுப்பி, அவனைக் கூர்மையுடன் தயார் செய்கிறது. அந்தக் கருத்தை ஒட்டியோ மறுத்தோ, ஆனால் வாசிப்பவன் கூர்மை யடைகிறான். எழுத்தாளன் தன்னையே முன்னிறுத்தியோ மறைத்துக் கொண்டோ, அல்லது தன்னையே பார்வையாளனாக விலக்கிக் கொண்டோ, பல்வேறு முறைகளில் படைப்பினை அளிக்கிறான். ஒரு படைப்பில் ஒரு சமுதாயத்தின் பிரம்மாண்ட அம்சத்தின் துகள்கள், CHIPS FROM THE BLOCK என்று கூறுவார்களே, அவை இருக்கலாம். தவிர்க்கப் பட்டும் விடலாம். அது எழுத்தின் சுதந்திரம். இருண்டு வகையிலுமே வாசகனாக நமக்கு அநேக விஷயங்கள் கிடைக்கின்றன.
கருத்து அடிப்படையில் மனதில் பதிந்த விஷயங்களை எழுத்தாளன் உணர்வு அடிப்படையில் வழங்குகிறான். ஏனெனில் வாழ்க்கை அவனால் உணர்ந்து உள்வாங்கிக் கொள்ளப்பட்டு, கருத்து என மதிப்பீடு அளவில் பதிந்து, மீண்டும் படைப்பாக மலர்கிற போது வாழ்க்கையாகவே அமைய அவன் அதன் உணர்வுத் தளத்துக்கு நகர வேண்டி யிருக்கிறது. இந்த உணர்வுத் தளத்துக்கும், அவன் தன் வாழ்வில் அனுபவித்த சூழ்நிலை அம்சத்துக்கும் வித்தியாசம் இருக்கலாம். அதன் செறிந்த வடிவமாகவும், அவனது கருத்தை வலியுறுத்தும் விதமாகவும் அவன் சூழலை மாற்றியமைப்பதும் சாத்தியம் தான். எழுத்தாளன் அனுபவித்த உணர்வுத்தளம் பூமியில் வெட்டியெடுத்த தாது (ORE) போல. அதை சுத்தம் பண்ணி மனசில் இருது வெளியே எடுத்து உலோகம் போல எழுத்தாளன் படைப்பினை அளிக்கிறான். உலோகமாகவோ ஆயுதமாகவோ கூட அவன் அளிக்கிறான்.
படைப்பில் உணர்வுத் தளம் குறைந்து போனால் அதன் நம்பகத் தன்மை குறைந்து போகிறது. வாசகனுக்கு அதில் ஆர்வம், சுவாரஸ்யம் அல்லது பிடிப்பு தளர்ந்து போகிறது. கருத்துத் தளத்தைத் தூக்கலாய் அமைத்துக் கொள்வது என்பது, பாத்திரங்களுக்கு உயிரை அல்ல, யந்திரத் தன்மையையே தர முடியும். வாசகனுக்கான தன்-யோசனைக்கே இடம் அங்கே கிடைக்காமல் போகிறது என்பதும் முக்கிய வேறுபாடு. இலவச வேட்டி சேலை, என அரசாங்கம் அறிவிக்கிற திட்டங்கள் போல. பாத்திரங்களின் உணர்வுச் சிக்கல்களை அடியொற்றி, தான் சிந்திக்க முடிவுகளுக்கு வர வாசகனை ஈடுபடுத்துதல் முக்கியமானது. வாழ்க்கை சார்ந்த சுய கணிப்புகளைப் பெற, தனது சூழல் பற்றிய பிரக்ஞை பெற ஒரு பயிற்சிக் களமாக எழுத்து அமைவது வாசகனுக்குப் படைப்பாளன் செய்கிற கௌரவம், மரியாதை, அந்த எழுத்தைப் படிக்கிறவனுக்கு அளிக்கிற நியாயமும் கூட. வாசகன் ஒரு படைப்பினால் தனது சூட்சுமங்களை அடையாளங் கண்டுகொள்ள வேண்டும். செஸ் விளையாட்டோ, சீட்டு ஆட்டமோ வெளியே, பக்கத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறவனுக்குத் தெளிவாய்ப் புரிகிறதே, அதைப்போல. எழுத்து அவனுக்கு வாழ்க்கையைப் புரியவைக்க முயற்சிக்கிறது.
எழுத்து வாழ்க்கையைப் பாசி விலக்கிக் காட்டுகிறது.
எழுத்தில் ஒரு படைப்பாளன் அடையாளங் காட்டுகிற யதார்த்தம் வாழ்க்கையின் அன்றாடம் போன்றது, அதேசமயம் அன்றாடம் சார்ந்ததும் அல்ல அது. அன்றாடம் என்பது தர்க்க நியாயங்கள் அற்றது. கட்டுக்கோப்பு இல்லாதது. யூகங்கள் அங்கே இல்லை. சந்தர்ப்பங்கள், விபத்துகள், தாற்காலிகங்கள் நிறைந்தது. திரும்பத் திரும்ப அலுப்பான தொடர்நிகழ்வுகளைக் கொண்டது அன்றாடம். அர்த்த வீர்யம் குறைந்தது. அபத்தங்கள் நிறைந்தது.
ஆனால் எழுத்து வடிவத்தில் யதார்த்தம் தர்க்க எல்லைகள் கொண்டது. அறிவின் நிர்ணயங்கள் கொண்டது. காரண காரியங்கள், வியூகங்கள், சூட்சும அம்சங்கள் கொண்டது. நான்கு மணி நேரத்தில் பசித்து விடுகிறது நமக்கு. இரவானால் தூங்க வேண்டி யிருக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் இம்மாதிரி வாழ்வம்சங்களை நிராகரித்து, வாழ்வின் செறிவாக, சாறாக எழுத்து, வாழ்வை அதிக அர்த்த பாவனைகளுடன், உணர்வு வீர்யத்துடன், குறைந்தபட்ச அபத்தங்களுடன் உருவாக்கிக் காட்டுகிறது. வெறும் சம்பவக் கோர்வையாக, உள் சரடின்றி, தர்க்க நியாயங்கள் இன்றி எழுத்து அமைய முடியாது. அமையுமாயின் அது பூசப்படாத சுவர் போல பல்லைக் காட்டிவிடும். எழுத்தாளனின் அறிவு வியூகம் எழுத்தில் பெரும் பங்கு வகிப்பது. அது வாசகனின் அறிவோடு ரகசியங்கள் பரிமாற வல்லது. நல் எழுத்தின் பண்பும் பயனும் அது. ஆனால் எழுதப்படும் பாத்திரங்கள் பயிற்சியில் மேலும் மேன்மேலும் எளிமைப்பட்டு துலக்கம் பெற்று வருகின்றன. எழுத்தின் வளர்ச்சி அது. அதேபோல எழுத்து முறையும் வார்த்தை இறுக்கம் குறைந்து எளிமையாக ஆகிக்கொண்டு வர வேண்டும். என்பதால் எழுத்து சாமானிய விஷயங்களையே பிரதிபலிக்கிறது என்பதல்ல. எதை எப்படிச் சொல்வது, என்பது சார்ந்த எழுத்தாளனின் தேர்வும் கவனமும் முக்கியமானது. அதில் அவன் பெறும் தேர்ச்சியின் முதிர்ச்சியின் அடிப்படையில் தான் எழுதும் விஷயங்களின் தரம் நிர்ணயம் ஆகிறது. மிகப் பெரும் விஷயங்களையும் மிக எளிமையாய்ச் சொல்ல எழுத்தாளன் பயிற்சி பெறுகிறான். சிறந்த சங்கீத வித்வான் மூச்சுத் திணறல் இல்லாமல் பாடி நம்மை ஆனந்தப் படுத்துகிறார் அல்லவா, அதைப் போல.
ஆனால் எழுத்தாளன் சாமானியன் அல்ல, அவன் சாமானிய மனிதர்களைப் பற்றி எழுதினாலுங் கூட. எழுதுவதற்காக அவன் பேனாவைத் திறந்த அளவிலேயே அவனது பீடம் சற்று, கண்ணுக்குப் புலப்படாத அளவு உயர்ந்து தான் விடுகிறது. ஆனால், அவனுக்குள்ளான சாமானிய உணர்வே அவனை எழுதத் தூண்ட வேண்டும். தன்னை மேம்பட்டவனாக எழுத்தாளன் நினைத்துக் கொள்கிற போது வாசகனைப் பிரிந்து, வாசகனால் கூட வர முடியாத தளத்துக்குப் போய்விடுகிறான். அவனது நியாயங்கள் தன்னளவில் சுருங்கி விடுகின்றன அப்போது. அறிவுத் தளத்திலேயே பொதுத்தளத்தில் கவனம் பெற இயலாதவன் அவன். அவனது கணிப்புகள் அந்தரத்தில் நின்று போகின்றன அப்போது.
எழுது முன்னான எழுத்தாளப் பயிற்சிகள் முக்கியம் அவனுக்கு. ஒரு தேர்ந்த வாசகனாக அவன் தன்னைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். புலன்களும் அறிவும் இணைந்த அவனது உள் உலகத்தை விகாசப் படுத்திக் கொண்டே அவன் வர வேண்டும். அதுவே அவனது எழுத்துக்கு உந்து சக்தியாக அமைகிறது. இதில் மேலும் முக்கியமான ஒரு விஷயம். சிந்தனை நகல்கள் இங்கே தேவையில்லை, இரண்டு எழுத்தாளர்களது சாராம்சம் என்றால், அங்கே ஒருவரே போதும், இரண்டாமவன் எழுத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறான், அவ்வளவுதான். கூறியது கூறல் இலக்கியப் பிழை. ஆகவே ஓர் எழுத்தாளன் நிறையவும், நிறைய நிறையவும் வாசிக்க வேண்டும். இதுவரை வந்து சேர்ந்த இலக்கியத் தடத்தை அவன் உய்த்துணர வேண்டும். உலக அரங்கை அவன் கவனத்தில் கொள்ள வேண்டும். தனது நிலை அறிய வேண்டும். அதன் எதிர்காலப் பாதையும் யூகிக்க வேண்டும். தன் வலியும் மாற்றான் வலியும் புரிந்து கொள்ள வேண்டும். The writer carries the torch of tradition. ஒரு தொடர்-ஓட்டம், ரிலே ரேஸ் அது.
இலக்கியத் தடம் பற்றிய அறிவோடு, அவன் எல்லை விஸ்தீரணங்களை கவனப் படுத்திக் கொண்டு, ஆனால் வாசகனை நாம் நிற்கிற புள்ளியில் இருந்து சிறிது, தன்னால் முடிந்த சிறிது முன்னகர்த்த வேண்டியது தான் எழுத்தின் வேலை. எழுத்தாளனின் பங்களிப்பும் அதுவே. தடத்தின் எல்லை என்பது கனவு. அது காலந்தோறும் தலைமுறை தோறும் விரிந்தவண்ணம் அமைகிறது. அது ஒரு அழகான அனுமானம். வானத்தை உணர்வதைப் போல. அதைத் தவறு என்று எண்ண வேண்டியது இல்லை. அனாலும் அந்த அனுமானத்தை உணர்ந்து வாசகனுக்கு அதை உணரவைப்பது எழுத்து. சமூகத்தைத் தயார் செய்வது என்பது எழுத்தின் இயல்பு.
இன்னும் சொல்லப் போனால், தடத்தின் எல்லை, அது கனவு, இன்னும் நடைமுறையில் எட்டப்படாதது. அதை சித்திக்க வைக்க சிந்திக்க வைப்பது எழுத்து. அதைநோக்கி நடைபோட வாசகனுக்கான பயிற்சிக்களமே எழுத்து. எனினும் முடிவுப் பகுதியைச் சொல்லி விட்டால் வாசகனுக்குக் கனவுகளை வாரி வழங்கியவனாகிறான் எழுத்தாளன். அப்போது பலத்தை அல்ல, பலவீனங்களுக்குத் தீனி போடுகிற அபாயமும் அதில் இருக்கிறது, என்பதையும் நோக்க வேண்டும்.
தீர்க்கமாக வாசகப் பயிற்சி சொள்கிறவன் எழுத்தாளனாக, சுய கணிப்புகளுடன் உயர்வு பெறுகிறான். வாசகனைத் தூக்கி விடுகிறது, எழச் செய்கிறது நல்ல எழுத்து. எழுத்து சாமானியர்களில் மேம்பட்டவர்களால், சாமனியர்களைப் பற்றி, சாமானிய பாவனையிலேயே முன்வைக்கப் படுகிறது. அவ்வாறன்றி அமையும்போது அது வாசகனில் இருந்து அநிநியப் பட்டுப் போகும். பட்டுப் போகும்.
எழுத்தாளன் தனக்காகவே தனது உள் தேடலுக்காகவே எழுதுகிறான். ஆனால் அந்த எழுத்தாளன் தனி மனிதன் அல்ல. அதனால்தான் பிறகு அந்த எழுத்து வாசிக்கிற பிறருக்கும் பயன்படுவதாக அமைய முடிகிறது. முதல் கட்டத்திலேயே ஓர் எழுத்து பிறருக்காக உருவாக முடியும் என்பது, வாய்ப்பு அளவிலேயே சாத்தியம் அற்றது அல்லவா? (வின் தொலைக்காட்சி பேட்டியில் இதை இப்படிச் சொன்னேன். பிறருக்காக ஒருவன் எழுதுவது என்பது, அம்மா சொல்லச் சொல்ல எழுதும் மளிகை லிஸ்ட் தான்.) அதாவது எழுத்து எழுதப் படுகிற அளவிலேயே தளமும், தனக்கான வாசக வட்டமும் நிர்ணயித்துக் கொண்டே பிறகு உருவம் கொள்வதாக இருக்கிறது. யாருக்காக, மானுடப் பெரு சமூகத்தின் எந்த சிறு பிரிவு சார்ந்து கதை நிகழ்கிறது, என ஒரு குவிப்பு நிகழாமல் எப்படி எதைப் பற்றி எழுத முடியும்? யாரைப் பற்றி எழுதுகிறோமோ அந்தப் பாத்திரம் அதுபோன்ற வாசகனுக்கு என் அமைந்துவிடுகிற நிலையில் அந்த எழுத்தாளனும் வாசகனும் ஒரே தன்மையுடையர் ஆயினர் என்பதறிக. அதாவது அது எழுத்தாளனே, என்பது முடிபு.
எழுத்து வாழ்க்கையைக் கூர்மையாக்கி அழகாக்கி விடுகிறது. சுவாரஸ்யப் படுத்தி மேலும் அர்த்தப் படுத்தி விடுகிறது. சாமானியனுக்கு அது வாழ்வின் பிடிப்புகளை எடுத்துக் கொடுக்கிறது. தனது தடத்தை கணித்து பயணம் புறப்படுகிற எழுத்தாளன், தனது எழுத்தில் ஒரு பிரச்னையை வெளிப்படுத்தும் போது, அதன் ஆழங்களை மாத்திரம் அல்ல, அதன் நேற்று இன்று மற்றும் நாளை பற்றிய யோசனைகளையும் பொதிந்து வைக்கிறான். வெறும் நிகழ்கால நடைமுறை அல்ல அது, அது எப்படி இருந்தது, இருக்கிறது, எப்படி இருந்தால் நலம்... என்கிற மூன்று நிலைகளிலும் எழுத்தாளன், காயப் போட்ட நெல்லை காலால் அளைகிறாப் போல எழுதிச் செல்கிறான். எழுத்து என்பது ஒரு பிரச்னையின் விளக்கமான இந்த மூன்றின் கலவை. வாசகனுக்கு எப்பெரும் பயன் அது... அல்லவா?
எழுத்து வாழ்வின் தீவிரத்தன்மையை அதிகப் படுத்துகிறது.
சிந்தனைக்கு எல்லைகள் இல்லை. அறிவுக்கு எல்லைகள் இல்லை. ஆகவே எழுத்துக்கும் எல்லைகள் கிடையா. புலன்களைத் தாண்டி அறிவின் உருப் பெருக்கமாய் அது ஊரின், நாட்டின் எல்லைகளை யெல்லாம் கடந்து ஒட்டு மொத்தமாய்த் தழுவிக் கொள்ள முடிகிறது. எப் பெரும் பேறு இது. குழந்தையின் ஆர்வமும், ஆச்சர்யமும், ஆர்வக் குறுகுறுப்புமாய், அது தாயின் இடுப்பில் இருந்து இறங்கி குடுகுடுவென்று ஓடித் தேடுகிறது.
எழுத்து விஞ்ஞான பூர்வமானது தான். தர்க்க அடிப்படை கொண்ட எதுவும் விஞ்ஞான பூர்வமானது தான். கல்வியில் மொழியோ கணிதமோ விஞ்ஞானமோ, எல்லாமே ஓர் உயர்ந்த தளத்தில் ஒன்று கலந்து கொள்கிறது அல்லவா. எழுத்தில் எல்லாவித கலை வடிவங்களும் குழைந்து பரிமளிக்க முடியும். அதன் உயர்ந்த தளத்தில் பிரச்சாரம் என தனியே அதில் வேண்டியது இல்லை. டாக்டர் லோகநாயகி (லேடி டாக்டர்) என்று போர்டு வைப்பது போலாகி விடும் அது. உண்மையில் பிரச்சாரம் இன்றி எதுவுமே இல்லை. மொழி என்பதே நமது தொடர்பு சாதனம் என்றாகிற போது, வெளிப் படுத்துகிற எல்லாமே பிரச்சாரம் சார்ந்த விஷயங்கள் தாம்.
ஒரு நல்ல படைப்பில் வாழ்வில் இருந்து பிரச்சாரத்தைப் பிரித்தறிய இயலாது. எனினும் வாசகனால் அது உள்வாங்கப் பட்டுவிடும். படைப்பாளனால் அது உணர்த்தப் பட்டுவிடும். தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் கிளர்ந்த எழுத்து ஆர்வம், தன்னை மறைத்துக் கொள்வதில், பூடகப் படுத்துவதில் வெற்றி பெற்றதாகக் கருதப் படுகிறது. எடுத்துச் சொல்லுதல் அல்ல, அடியெடுத்துக் கொடுத்தல். மீனைத் தராதே, தூண்டிலைக் கொடு, என்கிற சீனப் பழமொழி போல.
இசையில் இடைப்பட்ட மௌனம் அர்த்த பூர்வமாய் உணரப் படுவது போல, எழுத்தில் வாக்கியங்களுக்கு இடையேயான மௌனத்தின் கனம் வாசகனால், தன் சிந்தனை வீச்சில் வாழ்க்கை யனுபவமாக உணரப்பட வேண்டும். எழுத்து அழகான ஓவியத்தின் முகம் வரைந்துகாட்டி கண் வரையச் சொல்கிறது. தன்னை வெளிப்படுத்திக் கொள்ள எழுத்தாளன் செய்கிற முக்கியப் பணி தன்னை மறைத்துக் கொள்வது தான். ஒளிந்து கொள்வது கண்டுபிடிக்கப் படத்தான்... கண்ணாமூச்சி போல.
உலக எல்லையும் தாண்டி விரியும் எழுத்து, ஆனால் அதன் பாவனை இல்லாமல், புதிய மனிதர்களை நம் உணர்வு அடையாளங்களுடன் பரிச்சயப் படுத்துகிறது. பாத்திரங்களின் பொது அம்சங்களை விவரித்து சிறப்பு அம்சங்களை முன்னிறுத்துகிறது. எவ்வளவுக்கு அது எளிமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அது கொள்திறன் அதிகம் கொண்டதாக அமைய முடியும். வாசகனின் உணர்திறன் சார்ந்து அதன் அருமை மின்னும். அந்த எளிமையே அதைநோக்கிய கவர்ச்சியாக உணரப்படும், மறு வாசிப்பில் மேலும் அதன் உள் அழகுகள் எட்டப் படவும் கூடும். வார்த்தை வியூகங்கள், அலங்காரங்கள் கூட அல்ல, அதை எளிமையாய்ச் சொல்லத்தான் எழுத்தாளன் பாடுபட வேண்டி யிருக்கிறது. அதற்காக அவன் தன் வீர்யத்தைக் குறைத்துக் கொள்வதும் இல்லை. வாழ்வின் பிரம்மாண்டத்தை, சுவாரஸ்யத்தை அவன் விட்டுக் கொடுத்து விடுவதும் இல்லை. அதுவே எழுத்தின் ஆரோக்கிய அம்சம்.

(நிறைவுப் பகுதி அடுத்த வாரம்)
திசம்பர் 20, 1995 - திருவண்ணாமலையில் நிகழ்ந்த தமுஎச மாவட்ட மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாசித்து அளித்தது.

Friday, September 14, 2018


பகுதி 7
மழைப் பொழுதில்
வீழ்ந்த ஆலமரம்
எஸ். சங்கரநாராயணன்

 திசம்பர் பத்தொன்பது 2010. ஞாயிறு மதியம். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. எனது பதிப்பாள நண்பனும் கவிஞனுமான உதய கண்ணன் தொலைபேசியில் தகவல் சொன்னான்.

‘கலைஞன் பதிப்பகம் திரு மாசிலாமணி இயற்கை எய்தினார்.‘

கடந்த நாலைந்து வருடங்களாக அவரைப் பார்க்கவில்லை, என்றாலும் சட்டென உள்ளே சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது அந்தச் செய்தி. கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று வெளியேறும் காலகட்டம் அது. எழுத்துசார்ந்த ஆர்வக் குறுகுறுப்பான, கொஞ்சம் கனவு சார்ந்த அசட்டுத்தனங்களுடன் திரிந்த பருவம். அப்போது வேடந்தாங்கல் இலக்கிய வீதி அமைப்புடனும், அதன் அமைப்பாளர் திரு இனியவன் அவர்களுடனும் ஒரு பரிச்சயம் ஏற்பட்டது. 

மதுரையில் கல்லூரிப்படிப்பு முடித்து எதும் வேலைகிடைக்கும், யாராவது ஏமாறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நான் சென்னை வந்தடைந்தேன். இலக்கிய வீதியின் மாதாந்திரக் கூட்டங்கள் மதுராந்தகத்தில் நடக்கும். மாதம் ஒரு எழுத்தாளரின் புத்தகம் பற்றி விமரிசன அரங்கம். எங்களைப் போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு மூத்த எழுத்தாளரைச் சந்திக்க உரையாட விவாதிக்க பெரிய வாய்ப்பாய் அது அமைந்தது.

தீவிர வாசகனான பாவனையுடனும், உலகத்தை நிமிர்த்த வேண்டிய பொறுப்புடனான இளைஞனைப் போலவும் நாங்கள் அக் கூட்டங்களில் பங்குகொள்வோம். எழுத்துத் துறையில் பழம் தின்று கொட்டைபோட்ட மூத்தவர்களில் இருந்து, இப்போது ஒளிகசிய ஆரம்பித்து வரும் நட்சத்திரங்கள் வரை வந்துபோனார்கள். எழுத்தாளர் வரவழைக்கப்பட்டு அன்னாரிள் ஒரு நூலை ஒருவர் விமரிசனம்செய்து பேசுவார். பிறகு விவாதங்கள். அந்த எழுத்தாளரிடம் நாங்கள் விவாதமோ விமரிசனமோ அன்றி, விசாரணையாகவே கேள்விகள் கேட்டுமகிழ்வோம். அந்த வரிசையில் ஜெயந்தனின் ஒரு சிறுகதைத் தொகுப்பு நூலை நான் விமரிசனம் செய்து பேசினேன்.

ஜெயந்தனின் எழுத்துகளை நாம் அறிவோம். கெட்டிச் சாயம் அல்ல என்றாலும் லேசான சிவப்பு சாயம் தெரிகிற எழுத்து. அந்தக் கால கேவா கலர் திரைப்படம் போல. நாடோடி மன்னன். குலேபகாவலி வரிசை... அந்தக் கூட்டத்துக்குத் தலைமை திரு ஔவை நடராசன். இந்நாளில் அவர் முன்னாள் துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம். அந்நாளில் அவர் பின்னாள் துணைவேந்தர். நறுக்குத் தெறித்த சொல்லாளர். அவருடன் கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினர் – கலைஞன் பதிப்பகம் திரு மாசிலாமணி. அவர்கள் இருவரையும் அப்போதுதான் முதன்முதலில் சந்திக்கிறேன். அப்போது என் கதைகள் எல்லா பெருஞ்சுற்றிதழ் வளாகங்களிலும் வெளிவர ஆரம்பித்து விட்டன.

என் எழுத்தில், மற்றவர் பற்றி என்ன, எனக்கே ஒரு மயக்கம் இருந்தது. என்னை நானே காமுற்ற பருவம். ஜெயந்தனின் இலக்கிய ஸ்தானம் பற்றி நான் அப்போது பேசியபோது “பசப்பலாய் போலிக் கவர்ச்சியுடன் பெரும் இதழ்களில் வலம்வரும் வணிக எழுத்தளர்கள் மத்தியில், ஒரு நோக்கும் போக்கும் கொண்டு சுய தீர்மானங்களுடன் மதிப்பீடுகளை முன்வைக்கிறவர் ஜெயந்தன்“ என்று சொல்ல வந்தவன், அந்தப் புகழ்ப்பித்த எழுத்தாளர்களை ‘பேனாமினுக்கிகள்‘ என்று குறிப்பிட்டேன். ஹா, அப்போது நானே பேனாமினுக்கிதான்... அந்தச் சொல்லாக்கம் ஔவை நடராசனை மிகவும் கவர்ந்துவிட்டது என்பதை பிறகு அறிந்துகொண்டேன். நான் எழுத்தாளனாகவே உருவாகாத பருவம் அது. பேச்சுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. கையில் கட்டுரையாகத் தயாரித்து லேசான கீச்சுக் குரலில் பயத்துடன் பேசி மூச்சுத் திணறலுடன் முடித்து அமர்ந்து தண்ணீர் குடித்தேன். 

என் விமரிசனம் கச்சிதமாக இருந்ததாக மதுராந்தகத்தில் இருந்து திரும்பும் வழியில் ஔவை நடராசன் தெரிவித்தார். எனது இளமைக் குதூகலம் துறுதுறுப்பு, அவருக்கு உவப்பாக இருந்தது போலும். கட்டவுத்து விட்ட கன்றுக்குட்டிகளை ரசிக்க நாட்டில் ஆள் இருக்கிறது. நாங்கள் – நான், ஒளவை நடராசன் மற்றும் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி, மூவரும் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். “இந்தப் பையன் நல்லா எழுத்தில் முன்னுக்கு வருவான். இவனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்“ என்று ஒளவை நடராசன் மாசிலாமணியிடம் பேசினார். பிறகு என்னிடம் திருமபி “வைரமுத்துவை நான் சொல்லி மாசிலாமணி பதிப்பித்தார். இப்போது அவன் நல்லா முன்னுக்கு வந்திட்டான்...“ என்றார். அவரது பரந்த கனிந்த மனம் எனக்குப் பரவசம் அளித்த கணம் அது. மாசிலாமணி “தம்பி நீ அடுத்து ஒரு நாவல் எழுது. நான் போடறேன்...“ என உடனே சம்மதமும் ஊக்கமும் அளித்தது மறக்க முடியாத சம்பவம்.

எனக்கு பத்திரிகைகளில் கதைகள் எழுதலாம் என்று தெரியும். நோயாளிக்கு டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் போல, சமூக நோய்களுக்கு நாங்கள் கதை எழுதுகிறோம். பிறகு ஒரு மாதம் ரெண்டு மாதத்தில் அதற்கு துட்டு அனுப்புவார்கள். எழுத்தாளர்கள் டாக்டர் என்றால் இது கன்சல்டிங் ஃபீஸ். கிட்டத்தட்ட நம்ம கஜானா காலி என்ற கணத்தில் மணியார்டராகவோ, காசோலையாகவோ லட்சுமிதேவி நம் முன்னே வந்து நாணி நிற்பாள், அவ்வளவே தெரியும். சிகெரெட், லாகிரி என்று அந்தக் காலத்திலும் சரி, இப்போது வரை கெட்ட பழக்கங்கள் எதுவுங் கிடையாது. என்றாலும் திரைப்படங்கள் பார்ப்பேன் நிறைய. (இப்போது அந்தப் பழக்கமும் போச்சு.) ராத்திரிகளில் மொட்டைமாடியில் படுத்துக்கொள்வதாக வீட்டில் சொல்லிவிட்டு தலையணையைப் போர்வையால் மூடி படுத்துக்கொண்டிருக்கிற பாவனையைக் காட்டிவிட்டு இரண்டாம் ஆட்டம் ஓடிவிடுவேன். எதுவும் மூளையில் பொறிதட்டி விட்டால் உடனே செயல்படுத்தி விடுகிற பரபரப்பு அப்போது. ஆனால் பதிப்பகம், புத்தகம் நூல் வடிவம்பெறுதல் இதெல்லாம் யோசனையிலேயே இல்லை. அதுவும் நாவல் எழுதச் சொல்கிறார். பார்க்கலாம், என நினைத்துக் கொண்டேன்.

நாவல் என்ற பாணியில் நான் சுமார் எண்பது பக்கங்கள் வரை எழுதி வளராமல் ஒரு கதை பரணில் கிடந்தது. எனக்கு வேலை கிடைத்திருந்தது இப்போது. அண்ணாசாலை தந்தி அலுவலகத்தில் தந்தியாளன். மார்ஸ் கோடில் நிபுணன் என்று பேர் எடுத்தேன். கட்டுகடகட்டுகடகட்டு, என்றால் செய்தி ஆரம்பிக்கிறது என்று பொருள்... எங்கள் மதுரைக்கார நண்பன் திருமலையுடன் தனியே ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தேன். அப்போதைய லெக்ஷ்மி ஜெனரல் ஃபைனான்ஸ், இப்போதைய சுந்தரம் ஃபைனான்சில் அவன் வேலை. அந்த அமைந்தகரை வீட்டில் மாசிலாமணி தந்த ஊக்கத்துடன் நான் பரணில் கிடந்த நாவலை எடுக்காமல், புதிய நாவல் எழுத முடிவெடுத்தேன்.

மதியப் பணிமுறை (ஷிஃப்ட்) எனக்கு உவப்பானது. நம்ப முடியாத விஷயம், நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். திருமலையே சாட்சி.... தினசரி காலை நாவலை ஆரம்பித்து 30 பக்கங்கள் கையெழுத்தில் எழுதிவிட்டு மதியம் 2 மணிக்கு அலுவலகம் போவேன். எட்டுநாளில் நாவலை நினைத்த காலக்கெடுவில் முடித்தேன். கையால் இப்போதெல்லாம் எழுதுகிறதே, எழுத முடிகிறதே இல்லை. கணினி அச்சுதான் என்றாலும் ரெண்டு பக்கம் எழுதுமுன் முதுகு அச்சு உயர வசத்தில் இருந்து நீள வசத்துக்கு ஏங்க ஆரம்பித்து விடுகிறது. கையெழுத்தில் உருவான அந்த நாவலில் அடித்தல் திருத்தல் இல்லை. திரும்ப வாசிக்கவும் தேவையாக நான் நினைக்கவில்லை. 240 பக்கங்கள் எழுதிய நாவல் அது. ‘பெண்கள் பெண்கள் பெண்கள்‘ என தலைப்பு. எழுதி அதை பைன்ட் செய்து கலைஞன் பதிப்பகத்துக்கு, நேரில் போக தயக்கமாய் இருந்ததால் அனுப்பிவைத்து விட்டேன். பிறகு அதை மறந்தும் விட்டேன்.

ஒரே மாதத்தில் அலுவலகத் தொலைபேசியில் மாசிலாமணி தன்னை வந்து பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். எனக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. நேரே போனால் நம் நாவலை விமரிசனம் செய்தால் என்ன பண்ணுவது? அப்ப எல்லாம் தலையை உயர்த்தி கழுத்து விரைப்புடன் கேள்விகள் கேட்போம், பதில்கேள்வி வந்தால் ஆமையாய் கழுத்துக்குள் போய்விடும் தலை. தவிரவும், நான் வாசித்துக் கொண்டிருக்கிற அளவில், நாவல் என்பது விலாவாரியாக வம்படியா பக்கங்களை இழுத்துப் போகிற சமாச்சாரமாகவே பட்ட காலகட்டம். நமது இலக்கிய வரலாற்றில் ஆரம்ப காலகட்ட நாவல்கள் பிறந்தது முதல் செத்துப்போவது வரை பேசின. தலைப்பே ‘சரித்திரம்‘ என்றுதான் வைத்தார்கள். நாவல் என்பதில் ஆகக் குறைந்த காலஅளவை வைத்துக்கொள்ள நான் பிரியப்பட்டேன்.

பெருமாள்சாமி என் கதாநாயகன். தன்சார்ந்த நம்பிக்கைகள் அற்றவன். செய்யாத தப்புக்காக மேனேஜர் முன் நின்று அவர் அர்ச்சனை முழுதையும் வாங்கிக்கொண்டு வருவான். பிறகு மேனேஜரே, அது அவன் செய்த பிழை அல்ல, என்று கூப்பிட்டு விடுவார். ஏன்யா முதல்லியே சொல்லியிருந்தால் இத்தனை திட்டு வாங்கியிருக்க வேணாம்ல, என்பார். அவனுக்கு பதில் சொல்லத் தெரியாது. இப்படி தன்னையே தாழ்வாக நினைக்கிறவனுக்குக் கல்யாணம் ஆகப்போகிறது. வரப்போகும் மணமகளை நினைத்துப்பார்த்து மிரள்கிறான் கதாநாயகன். கணவன் என்பது ஒரு பெரிய மலைபாரம். கதாநாயக அந்தஸ்து என திகைப்பாய் இருக்கிறது. அவளை ஆளுமை செய்ய முடியுமா? நம்மை அவள் ஏற்றுக்கொள்வாளா, தூக்கி இடுப்புல வெச்சிக்கிட்டான்னா? எகிறிட்டான்னா?... என்கிறதான தலையிடி. குழப்பங்கள். கடைசியில், அவனுக்கு இணக்கமாய் அவள் அமைந்து, ‘ரெண்டுபேரும் சேர்ந்தே கத்துக்கலாம்...‘ என இவனை ஆசுவாசப்படுத்தும் கதை. கல்யாணப் பேச்செடுப்பார்கள், கல்யாணமாகி விடும் என்பதுதான் இதன் சம்பவங்கள். கால அளவும் அவ்வளவே. இதை மாசிலாமணி எப்படி எடுத்துக்கொள்வார் என்று யோசனைதான். 

உடனே அவரை நான் போய்ப் பார்க்கவில்லை. பிறகு கடிதம் வந்தபோதும், அவரைச் சந்திப்பதைத் தள்ளிப் போட்டேன். அடுத்து அவரது மூத்த மகன் திருமணத்துக்கு அழைப்பு அனுப்பினார். இதை நாள்-தள்ளிப்போட முடியாது. நான் நேரில் போனபோது மண்டப வாசலிலேயே மாசிலாமணி வந்து கைகுலுக்கினார். அருமையா இருக்கு நாவல், போட்டுறலாம், அலுவலகம் வந்து பார்னா வர மாட்டேங்கறியே... என்று பிரியமாய்ப் பேசினார். என் முதல் நாவலுக்கு தலைப்பு மாற்ற நானே நினைத்திருந்தேன். எழுத ஆரம்பித்த வேகத்தில் நினைவுக்காக ‘பெண்கள் பெண்கள் பெண்கள்‘ என வைத்திருந்தாலும், அவரிடம் சொன்ன மாற்றுத் தலைப்புகளில் ‘நந்தவனத்துப் பறவைகள்‘ அவருக்கு உவப்பாய் இருந்தது.

நாவல் மிக அழகாக வெளிவந்தது. மேலட்டை ஓவியம் மருது. ஓவியர் மருது போட்ட முதல் புத்தக அட்டைப்படம் அதுதான்... அந்த நாவல் எஸ்பிளனேடு ஒய்.எம்.சி.ஏ.வில் வெளியீட்டு விழாவும் கண்டது. தினமணியில் மாயாவி அதைப்பற்றி விரிவாய் நல்வார்த்தைகள் எழுதினார். எனது முதல் நாவல், நான் பி.எஸ்சி. வாசித்த மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. மாணவர்களுக்கு நவீன இலக்கிய துணைப்பாட நூலாகவும் அமைந்தது. என்னவெல்லாம் நடக்கிறது… யோசித்துப் பார்த்தால், ஒரு பல்கலைக்கழக கதவுகளைத் தட்டி என்னால் இந்த நூலைப் பாடமாக்கும்படி ஆதரவு தேடியிருக்க சாத்தியமே இல்லை. எப்படி அமைந்தது இது?... என என்னை நானே வியந்துகொண்ட வேளை அது. மாசிலாமணி ஐயாவிடம் போய் மூச்சிறைக்க நின்றபடி இந்தத் தகவல் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

“எங்களால் எழுத்தாளர்களைக் கண்டுபிடிக்க முடியும்“ என அவர் புன்னகைத்ததை இந்த நிமிடம், கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் அவருக்கு மாலைபோட்ட இக்கணத்தில் நினைவுகூர்ந்து நெகிழ்கிறேன்.

நாவல் பிறகு இரண்டாம் மூன்றாம் பதிப்புகள் ‘கிளிக்கூட்டம்‘ என வெளியாயிற்று. 85ல் என் திருமணம். அன்போடு வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரித்தார் மாசிலாமணி. என் மனைவிக்கு ஒரு புடவையும், புதிய வெள்ளி ஐம்பது ரூபாய் நாணயமும் வைத்தளித்தார். நெஞ்சைக் கசிய வைத்த கணங்கள் அவை. பிற்பாடு பூமணியின் ‘பிறகு‘ நாவல் வாசிக்கக் கிடைத்தபோது அடாடா, இதல்லவா எழுத்து என்று திகட்டிய கணங்கள். இன்றைக்கும் எனக்கு நல்ல எழுத்து பற்றி ஒரு கருத்து உண்டு. ஒரு நல்ல எழுத்து மற்ற எழுத்தாளனைத் தூங்காமல் அடிக்கும். அவனைத் தன்படைப்பு சார்ந்து இயங்கத் துடிப்பேற்றும். பூமணியை வாசிக்குந்தோறும் அவர் காட்டும் மனிதர்களின் வியர்வை தட்டுகிறது எனக்கு. குளத்தின் அலை பாதம் தழுவிய சின்னச் சிலிர்ப்பான மெல்லிய கவிதைகளாய் மோதுகின்றன அவர் எழுத்தில். தவிர கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்‘. மட்பாண்டம் வனைய மண்ணைக் குழைத்தாற்போல ஒரு வார்த்தைக் குழைவை அவர் எழுத்தில் கண்டு பிரமித்திருக்கிறேன்.

தவிர பெரும்சுற்று இதழ்களில் வளைய வந்துகொண்டிருந்த என் கதைகள் சம்பவங்கள் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த வேளையில், இவர்கள் சம்பவங்கள் தாண்டி மனிதர்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார்கள்... என மனம் விழித்த கணம் அது. இவர்கள் எல்லாரும் தான் பரணில் கிடத்தியிருந்த என் நாவலை திரும்ப எடுத்து எழுதி முடிக்க ஊக்குவித்தவர்கள். அப்போது அதற்கு ‘கிரகணம்‘ என தலைப்பு வைத்திருந்தேன். அதுவும் கிட்டத்தட்ட 240 பக்க அளவில் என் கையெழுத்தில் அமைந்தது. முதல்கட்டமாக 80 பக்கங்கள் எழுதி வைத்திருந்தேன். மீண்டும் வேறு இடத்தில் இருந்து கதையைத் தொடர உத்தேசித்து அடுத்த 80 பக்கங்கள் எழுதி ஆறப்போட்டேன்.

எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. எழுத்தில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்வேன். ஒரே பாணியான கதைகளைத் தவிர்க்க அது உதவுகிறதாக நம்புகிறேன். எழுத்தில் உக்ரப்பட்டு சில படைப்புகள் எழுதி முடித்தபின் அந்த எழுத்தாள ‘சாமியாட்டத்தில்‘ இருந்து வெளியேறி விடுவேன். பாலமுரளி கிருஷ்ணா சில கச்சேரிகளில் மிருதங்கம் வாசிப்பார். ஒரு இறுக்கத் தளர்வு மனுசாளுக்குத் தேவையாய்த்தான் இருக்கிறது. ஒரு ஓய்வுக்குப் பின் எழுத்தில் வேறு இடத்தில் இருந்து துவங்குகிறாப் போல நடை மற்றும் உத்தியம்சங்களையே கூட மாற்றி வேறு தளத்தில் இயங்குவதற்கு சௌகர்யமாய் இருக்கிறது.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் இடைவெளிக்குப் பின் மூன்றாம் பகுதியும் 80 பக்கங்கள் நிறைவு செய்து ‘கிரகணம்‘ நாவலை கலைஞன் பதிப்பகத்துக்குத் தந்தேன். நாவலுக்கு தீபம் நா.பா. முன்னுரை. அதற்கு மானுட சங்கமம் என்று தலைப்பு மாற்றினோம். மானுடம் என்று போடுவதா, மானிடம் என்று போடுவதா, என்று கலந்து பேசினோம். மானுடம் வென்றதம்மா, என்ற பாரதி வரிகளை நான் மேற்கோள் காட்ட, மானிடம் என்ற இடங்களை மாசிலாமணி எடுத்துச் சொன்னார். நா.பா. மானுடம் என்றே அமைய ஆதரவு நல்கினார். நாவலை வாசித்து பேசி விவாதித்து வெளியிடுவார் மாசிலாமணி. மானுட சங்கமம் நாவலை முன்வாசிப்பு செய்த இராம. கண்ணப்பன் (கண்ணதாசனின் உதவியாளராக இவர் பணியாற்றியது எல்லாரும் அறிந்த விஷயம்.) அதன் ஒரு குறையைச் சுட்டிக்காட்டினார். மாசிலாமணி, கண்ணப்பன், நான் கலந்துகொண்ட விவாதம் அது.

அதன் முதல் அத்தியாயத்தில் ஒரு வெள்ளச்சேதம் இடம்பெறும். ஒரு ஊரின் கதை அது. தனி மனித பாத்திரங்கள் வந்துபோனாலும், சம்பவங்கள் நிகழ்ந்தாலும், எல்லாவற்றையும் ஊரில் ஏற்பட்ட மாற்றங்களாகவே கணித்து, நாவல் வாசித்து முடிக்கையில் பாத்திரங்களை மீறி ஒரு ஊரை அடையாளப்படுத்த முடியுமா, என்கிற முயற்சியே அந்த நாவல். அதன் துவக்க அத்தியாயத்தில் ஒரு வெள்ளக் கலவர விறுவிறுப்புடன் நாவலை ஆரம்பிக்க நினைத்தேன் நான். ஒரு ஸ்திரீ வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருக்க அவளைக் காப்பாற்ற ஹெலிகேப்டர் வருகிறது. வெள்ளம் அவள் உடைகளை அடித்துச் சென்றுவிட்டது. கழுத்தளவு ஆழத்தில் நிற்கிறாள் அவள். ஹெலிகேப்டர் கயிறுவீசி அவளை மீட்க முயல்கிறது. அவள் கயிறுபற்றி மேலே வர அவள் நிர்வாணம் வெளிப்படுவதில் பதறி திரும்ப அவள், கயிறை விட்டுவிட்டு தண்ணீருக்குள் அமிழ்ந்துகொள்கிறாள். வேறு வழியின்றி ஹெலி தாழ இறங்குகையில் வெள்ளத்தில் சிக்கி ஹெலியே மூழ்கி விடுகிறது. இது நான் வாசித்திருந்த ஒரு பத்திரிகைச் செய்தி.

கண்ணப்பன் நாவலின் இந்தப் பகுதியை வாசித்துவிட்டு, “இந்தச் சிறுபெண் தன் தாயைப் பறிகொடுத்த நினைவுகள் பற்றி எழுதுகிறீர்கள். இவளுக்கு எட்டு வயசில் நடந்த சம்பவம், இவ்ளுக்கே இப்போது 90க்குமேல் வயது என்கிறீர்கள். ஆனால் ஹெலிகேட்பர் கண்டுபிடித்தே 75 ஆண்டுகள்தான் ஆகின்றன.... கதையோடு ஒட்டவில்லையே,“ என ஒரு திகைப்பான கேள்வி போட்டார். கிழவிக்கு இப்போதைய வயதைச்சொல்லாமல் அந்த நிகழ்வை வெளியிட்டோம், என்று வையுங்கள். இப்படியெல்லாம் விவாதித்து விளக்கி ஒரு நாவலை எந்தப் பதிப்பாளரும் வெளியிடுவாரா? வேறு உதாரணம் தெரிந்தால் சொல்லுங்கள்.

என் படைப்புகளை இதுவரை சுமார் 10 பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ளார்கள். பத்தில் ஒரே ஒருவர் இவர். மாசிலாமணி. இவரது அக்கறையை வேறு யாரிடமும் நான் காணவில்லை. நாவலை வெளியிட்டபின் இதுவும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலை இலக்கியப் பயில்நூல் அங்கிகாரம் பெற்றது. அடுத்த பதிப்பில் அது ‘ஆயுள்ரேகை‘ என தலைப்பு மாற்றம் கண்டது. நாவலை வாசித்துப் பார்த்தபின் மாசிலாமணி கூறிய அறிவுரை மறக்கவே முடியாதது.

நாவலின் இறுதிப் பகுதி. ஒரு ரெண்டுங் கெட்டான் பாத்திரம் அக்னி. கோவில் வேலைகளில் இருப்பவன். சாமி புறப்பாட்டில் தீவட்டி எடுக்கிறவன். நந்தவனத்துக் கிணற்றில் கோவிலுக்குத் தண்ணீர் சேந்திக் கொடுக்கிறவன். அவன் ஊரில் உள்ள பிரமிளா என்ற பெண்ணினால் பாலியல் ரீதியாய்ப் பயன்படுத்தப் படுகிறான். பின்னாளில் அவளுக்குத் திருமணம் நடக்கிறது. சமையல் வேலைகளில் உதவியாக அக்னியே அங்கே வரவேண்டி யிருக்கிறது. அதுவரை விளையாட்டுத்தனமாய் வளைய வந்துகொண்டிருந்த அக்னிக்கு, அவள் இன்னொருவனைக் கைப்பிடிக்கப் போகிறாள் என்கிற எண்ணம் கல்யாண முகூர்த்தம் நெருங்க நெருங்க உறைக்கிறது. அவன் தவிப்பு அதிகரிக்கிறது. தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக அவனில் ஜ்வாலை குமுறுகிறது. ஜானவாச இரவன்று மாப்பிள்ளையைத் தனியே சந்தித்து, அவள் உனக்கு வேண்டாம், என்று சொல்லிவிட்டு இரவோடிரவாக ஊரைவிட்டு வெளியேறி விடுகிறான்... என்பது கதை.

மறுநாள் ஊரில் அவன் இருக்க முடியாது. ஊரார் அவனை அடி புரட்டியெடுத்து விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஒரு வெள்ளம் கிராமத்தில் நுழைவதை வைத்து ஆரம்பிக்கிற மானுடசங்கமம் நாவல், ஒரு மனிதன் ஊரைவிட்டு வெளியேறுவதில் முடியும். விளையாட்டுத்தனமான வாழ்க்கை வாழ்ந்த அக்னி சூட்சுமங்கள் உசுப்பப்படுவதாக நான் கதை சொல்லியிருந்தேன். மாசிலாமணி சொன்னார். அடாடா, ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பறிக்கிறா மாதிரி முடிவு சொல்லக் கூடாதுடா, என்றார் வாசித்துவிட்டு. கல்யாணம் என்றால் எத்தனை செலவு, எத்தனை காரியங்கள் ஆக வேண்டியிருக்கிறது, எத்தனை ஏற்பாடுகள்… எல்லாத்தையும் சரசரவென்று சரிப்பது சரி அல்ல என நினைத்தாரோ என்னவோ? துன்பியல் முடிவு வேண்டாம், இன்பியல் முடிவுதான் வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு அழிவை நோக்கி கதையை முடிக்கக் கூடாது... என இதமாய் வருத்தமாய்ப் பேசினார்.

அட என் தந்தையே, என்றிருந்தது. நாவல் இப்படியான முடிவுடன்தான் வெளியானது என்றாலும், அந்த சமூகப் பார்வையை இளைஞனான எனக்கு அவர் விதைத்தது மறக்கவே முடியாத விஷயம். பின்னாளில் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் வளர்ப்புமகன் லெனின் (என்டியெஸ் பதிப்பகம்) வெளியிட்ட என் ‘விநாடியுகம்‘ நாவலை நான் மாசிலாமணிக்கு சமர்ப்பணம் செய்தேன். என்னிடம் ஒரு பதிப்பாள உறவும், பாசமிக்க குடும்பத்துப் பெரியவரின் உறவும், நல்ல வாசக ரசனையும் பாராட்டியவர் மாசிலாமணி.

அநேகமாக வைரமுத்துவிடமும், லா.ச.ரா.விடமும், ப. சிங்காரம், இரவிச்சந்திரன், ஸ்டெல்லா புரூஸ், விட்டல்ராவ், அசோகமித்திரன், ஜெயகாந்தனிடமும் கூட இப்படித்தான் அவர் பழகியிருப்பார் என யூகிக்க முடிகிறது. பிற்காலத்தில் என்போன்ற இந்தத் தலைமுறை எழுத்தாளர்களின் மொத்த சிறுகதைக் கொத்துகளும் அவர் வெளியிட்டார். தீபம், கணையாழி, கசடதபற, பிரசண்ட விகடன்… போன்ற சிற்றிதழ்களின் மொத்தத் தொகுப்புகளும் வெளியிட்டார்.

அதைவிட முக்கியம் அசோகமித்திரன், லா.ச.ரா. போன்ற படைப்பாளிகளுக்கு தேர்ந்த திறனாய்வாளர்களை வைத்து ‘படைப்புலகம்‘ என்கிற, படைப்பாளரின் சிறந்த படைப்புகளும், அவர் சார்ந்த சிறந்த திறனாய்வுகளும் கலந்த ஆவணங்களை தமிழில் முதன்முதலாக வெளியிட்டார். தமிழுக்கு அவர் செய்த வணக்கம் அது.

பதிப்புத் துறை என்பது ஒரு வணிக வளாகம் அல்ல, அறிவு வளாகம் என்று செயல்பட்டவர் மாசிலாமணி. நல்ல வாசகராகவும் திறனாய்வாளராகவும் அவர் அமைந்தது பதிப்புத் துறையின், அதனால் எங்களைப் போன்ற எழுத்துத்தாளர்களின் பேறு.

தமது 81வது வயதில் சென்னையில் மாசிலாமணி காலமானார். கலைஞன் போல் வேறு பதிப்பாளர் பற்றி யோசிக்கவோ எழுதவோ முடியாதுதான். மாசிலாமணியின் வெற்றி சரித்திரம் அது.

*
(நன்றி - இருவாட்சி இலக்கியத் துறைமுகம். பொங்கல் சிறப்பு வெளியீடு)
storysankar@gmail.com
91 97899 87842 

Friday, September 7, 2018


பகுதி 06

தராசு 1 தராசு 2
எஸ். சங்கரநாராயணன்
 ழுத்தின் பயன் இன்பம் பயப்பதாக இருக்க வேண்டும் என்பார்கள். நான் அதை நம்புகிறேன். எழுத்து என்று இல்லை. கலையின் அடிப்படையே நுகர்வின்பம் என்பதே நியாயம் ஆகும். சோகம் வரக் கூடாதா என்ன, என்றால் அதுவும் ஒருவிதமான துய்ப்பு ரசமே எனலாம். ஒரு யதார்த்தத்தின் சாயல் அந்தக் கலைப்படைப்பை கண்விரிய எதிர்கொள்ள வைக்கிறது. அந்தக் கலைப்படைப்பு உண்மையாகவும், உண்மைபோலவும் காட்சிப்படுகிறது, என்பதே அதன் வசிகரத்துக்குக் காரணமாக அமைகிறது. கடைசி வரி வரை வாசகனைக் கூட்டிச் செல்கிற சுவாரஸ்யம் எழுத்தின் அடிப்படைத் தகுதி என நான் வைத்துக் கொள்கிறேன்.
ஜெயா டிவியின் ஒரு காலைமலர் நிகழ்ச்சிக்காக எனது பேட்டி, அது ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு, நானே எதிர்பாராமல், என்னைக் கேள்வி கேட்ட அந்தப் பெண் கலை சார்ந்த நுட்பங்களை நோக்கித் தன் கேள்விகளில் நகர்ந்தார். எனக்கு அது மிக ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்து விட்டது. நிகழ்ச்சியின் முதல் கேள்வி இதுதான். “ஒரு படைப்பில் நிஜம் எவ்வளவு இருக்கிறது? கற்பனை எவ்வளவு இருக்கிறது? அதை எப்படிக் கண்டுகொள்ள முடியும்?” ஒரு தொலைக்காட்சியின் காலைமலர் பேட்டியில் இப்படியொரு முதல் கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் பதில் சொன்னேன். “படைப்பாளனின் படைப்பு ரகசியம் அது. அந்தப் படைப்பில் படைப்பாளி இயங்கும்போது நிஜத்தோடு கற்பனையும் ஒரு விகிதத்தில் தானே கலந்து கொள்கிறது, மண்ணும் மழைநீருமாய்.... அதைப் பிரித்தறிய முடியுமா? ஒரு படைப்பில் நிஜத்தையும் கற்பனையையும் பார்ப்பது, சன்னல் வழியே வரிக்குதிரைகளைப் பார்ப்பது போல” என்றேன்.
இப்படியே அரை மணி நேரம் மிக அற்புதமாக அமைந்தது பேட்டி. அந்தப் பெண் வாழ்க. அவர் கேட்ட இன்னொரு கேள்வி எனக்கு நினைவில் இருக்கிறது.
“ஒரு நல்ல படைப்பு என்பது எப்படி இருக்க வேண்டும்?”
என் பதில். “எங்கு தொட்டாலும் ஷாக் அடிக்கக் கூடிய ஒரு ஒழுகும் வீட்டைப் போல இருக்க வேண்டும்.”
ஒரு கலைஞன் எழுதுகையிலேயே தன்னளவில் ஊக்கமும் உற்சாகமும் கொண்டு தன் படைப்பில் ஆனந்தக் குளியல் கொள்கிறான். அதன் திவலைகள் வாசகனையும் சிலீரென்று எட்டித் தொடுகின்றன. ஜெயகாந்தன் ஒருமுறை ஆவேசப்பட்டார். சாகித்ய அகாதெமி விருதுகள் எப்பவுமே வேண்டிவர்களுக்காக சிபாரிசு அடிப்படையிலேயே வழங்கப் படுவதாக ஒரு முணுமுணுப்பு உண்டு. ஜெயகாந்தன் சொன்னார். “பேசாமல் சீட்டுல பேர் எழுதிப் போட்டு குலுக்கி எடுத்து விடலாம். அப்பக்கூட ஒரு அதிர்ஷ்டத்தில் சரியான நபருக்குப் பரிசு கிடைக்க வாய்ப்பு கிடைக்கும்.”
ஒருமுறை கவிஞர் வாலி அவர்களை எனது புத்தக வெளியீடு ஒன்றுக்குப் பேச அழைத்தபோது அவர் மறுத்து விட்டார். “எப்பவும் தொலைபேசி பக்கத்துலயே உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கு எனக்கு. பாட்டு எழுத என்று உடனே கிளம்பி வரச் சொல்வார்கள். அப்பா பாத்ரூம்ல இருக்கார்னு என் பையன் சொன்னாலே, ஃபோனை வைத்து விட்டு வேற ஆளைப் போட்டு விடுகிறார்கள்.”
ஒரு படைபப்புக்கான கரு உருவாவது தவிர, அதைச் சொல்லும் முறை என்பது எழுத்தாளனின் தனி அடையாளம். பெரும் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளைக் கையாளும் அநாயாசம் மனங் கொள்ளாக் காட்சி. மீண்டும் மீண்டும் அதை நம் மனம் நினைத்து நினைத்துப் பார்த்து மகிழ வைக்கும். வியக்க வைக்கும். அப்படியொரு சொல்லாடலோ, உரையாடலோ, நுட்பமோ அந்தப் படைப்பாளியின் அடையாளமாக நமக்கு அதில் துய்க்கக் கிடைக்கும்.
தி. ஜானகிராமனின் ஒரு கதை. ‘கோதாவரிக் குண்டு.’ பழைய பேப்பர் எடுக்க வந்திருக்கிற வியாபாரியின் எதிரே வீட்டுக்காரர். இப்போது கதை அதே வரிகளில்.
தராசு முள்ளைப் பார்த்தேன். தெய்வீக முள்ளாயிற்றே அது! அறுபது காகிதமானால் என்ன? அரைக் காகிதமானால் என்ன? நடுநிலை பிசகுமோ! ஹும் நமக்கென்று சொந்தமாகத் தராசு வைத்துக்கொள்ள எப்போது காலம் வரப்போகிறதோ, கை வரப் போகிறதோ, ஈசுவரா!
கடைசி வாக்கியத்தை வாயைவிட்டே சொல்லிவிட்டேன். இப்படி ஏமாறுவதை எந்தப் புழுதான் சகிக்கும்?
“சாமி இந்தத் தராசைப் பார்த்து இப்பிடிச் சொல்றீங்களே. எளுதின கார்டுக்கும் எழுதாத கார்டுக்கும் வித்தியாசம் காட்டும் சாமி......”
என்னவொரு எகிறலான பதில்! கதை எழுதுகையில் எழுத்தாளன் அடையும் எழுச்சியைக் காட்டும் ஒரு உதாரணம் இது.
‘திரைகளுக்கு அப்பால்’ நாவலில் இந்திரா பார்த்தசாரதி எழுதுகிறார். டெல்லியில் பஸ் நிறுத்தத்தில் ஒரு குரல். ‘அய்யா சாமி தர்மம் பண்ணுங்க’ என்கிற பிச்சைக்குரல். அடுத்த வரியில் இந்திரா பார்த்தசாரதி இப்படி எழுதுகிறார்.
‘பாரதியின் கனவு நிறைவேறி விட்டது. தலைநகரில் தெருவெங்கும் தமிழ் முழக்கம்.’
பிரபலமான வரிகளை இப்படிப் போட்டுவாங்குவது எப்பவுமே எனக்குப் பிடிக்கும். ஒருமுறை, ''சேதுவை மேடுறுத்தி வீதி சமைக்கிறவர்கள் வீதியிலேயே சமைக்கிறார்கள்," என எழுதியிருந்தேன்.
தமிழின் முதல்நாவல்கள் ஐந்துமே மிக அருமையானவை. அதில் மூன்று நான்கு நான் வாசித்திருக்கிறேன். தமிழின் முதல் நாவலாகக் கருதப்படுகிற ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ மாயூரம் முன்சிப் வேதநாயகம் பிள்ளை எழுதியது. முதல் பக்கத்திலேயே அதிரடியாக ஒரு உரையாடலை அவர் முன்வைத்திருப்பார்.
வாழ்க்கையில் புத்திசாலியும் அநேகத் தவறுகள் செய்கிறான். முட்டாளும் செய்கிறான். ஆனால் அவனை புத்திசாலி என்கிறோம். இவனை முட்டாள் என்கிறோம். ஏன் அப்படி?
அவரே பதிலும் சொல்வார்.
ஒரு முட்டாள் தவறு செய்தால் அவனுக்கு மட்டும் தெரியாது. ஊருக்கே அது தெரிந்துவிடும். ஆனால் ஒரு புத்திசாலி தவறுசெய்தால் அது அவனுக்கு மட்டுமே தெரியும். ஊருக்குத் தெரியாது.
ஒரு ஆன்மிக உரையின் போது காஞ்சி மகா பெரியவர் அவர்கள் சட்டென்று ஒரு பொறியாக, GOD GIVES AND FORGIVES, MAN GETS AND FORGETS என்று குறிப்பிட்டார். அவரே போல தாய்மொழி ஆங்கிலம் அல்லாத ஒருவர், நெப்போலியன் போனபார்ட், இலையுதிர் காலத்துக் கடுங்குளிரில் ரஷ்யா மேல் படையெடுத்துக் கிளம்பிப்போய் ரஷ்யா உள்ளே புகமுடியாமல் வெளியே முகாமிட்டிருந்த போது இப்படிச் சொன்னதாகச் சொல்வார்கள்.
FALL LEAVES WHEN LEAVES FALL.
இந்த வாக்கியத்தின் சிறப்பு இந்த வார்த்தைகளை வலமிருந்து இடம் வாசித்தாலும் அதே பொருள் கிடைக்கிறது.
‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் வந்தாலும் அதற்கு முன்பே எனது ‘தொட்ட அலை தொடாத அலை’ நாவலில் நான் ஒரு விஷயம் குறிப்பிட்டிருக்கிறேன். 13.58-க்குக் கிளம்ப வேண்டிய ரயில் நாலு நிமிடம் தாமதமாக 02.02-க்குக் கிளம்பும் என்பதை ஆங்கிலத்தில் எப்படி அறிவித்தார்கள்?
THE DEPARTURE HAS BEEN RESCHEDULED FROM TWO-TO-TWO TO TWO-TWO.
நயம்பட உரைத்தல் என்றதும் ரஷ்ய இயக்குநர் தார்க்கோவ்ஸ்கியின் ஒரு திரைப்படக் காட்சி நினைவுக்கு வருகிறது. படத்தின் பெயர் நினைவு இல்லை. ‘சாக்ரிஃபை’சாக இருக்கலாம். யுத்தத்தின் உக்கிரத்தைச் சொல்லும் காட்சி.
டைட் குளோசப்பில் கதாநாயகன். அவனது சோக முகம். கேமெரா மெல்ல பின்வாங்க, ஒரு வீட்டு வாசல் என்று தெரிகிறது. அவன் கவலையுடன் வீட்டு நிலைப்படியில் அமர்ந்திருக்கிறான். இன்னும் காமெரா பின்வாங்குகிறது. லாங் ஷாட். ஒரு கட்டாந்தரை. அதில் நிலைவாசல் மாத்திரம் இருக்கிறது. மொத்த வீடுமே தரைமட்டமாகி வெறும் நிலைவாசல், அதில் அவன் அமர்ந்திருக்கிறான். .
எப்படியெல்லாம் கதை சொல்கிறார்கள் என நான் அதிசயித்த கணம் அது.
ஒரு டியூஷன் ஆசிரியர் பற்றிய என் கதை ‘கடல்காற்று.’ என்கிற அந்த நாவல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் இளங்கலை மாணவர்களுக்கு, அது நவீன இலக்கியப் பாடநூலாக அமைந்தது. அதில் அவரது வாழ்க்கை பற்றிய என் சித்திரம்.
உடம்பு சரியில்லாமல் வாத்தியார் டாக்டரிடம் போனார். டாக்டர் ‘ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க’ என்று ஊசி போட்டு மருந்து எழுதித் தந்தார். டாக்டருக்குப் பணம் தர வாத்தியார் மேலதிகம் டியூஷன் எடுத்தார். டியூஷன் எடுத்ததால் ஸ்ட்ரெய்ன் அதிகமானது. ஸ்ட்ரெய்ன் அதிகமானதால் வாத்தியார் டாக்டரிடம் போனார்.
‘கருப்புப் புள்ளிகள்’ என்கிற ஒரு குறுநாவல். அதில் குடிகாரன் ஒருவன் சைவ ஹோட்டலுக்குள் வந்து உட்கார்ந்து விடுவான். அவனுக்கும் சப்ளையருக்குமான உரையாடல்.
என்ன சாப்டறீங்க?
பிரியாணி கொண்டா.
பிரியாணி இல்ல.
பிரியாணி இல்லையா?
இல்ல.
ஏன்.
இது ஐயரு ஹோட்டல்.
ஐயரு ஹோட்டலா?
ஆமா.
அப்ப பிரியாணி இல்லியா?
இல்ல.
ஏன்?
என் நண்பன் ஒருவன் திரைப்பட உதவி இயக்குநன். அவன் பணிபுரிந்த திரைப்படத்தின் ப்ரிவியூவுக்கு என்னை அழைத்தான். நானும் போயிருந்தேன். படம் மொக்கை. படம் முடிந்து வெளியே வந்தால் நண்பன் நிற்கிறான். என் கையைப் பிடித்துக் கொண்டான். “படம் எப்பிடி?” என்று கேட்டான். நான் பதில் சொன்னேன்.
“படம் சுமார் தான். ஆனால் அசிஸ்டென்ட் டைரக்சன் சூப்பர்.”
நயம்பட உரைத்தல், என்று சொல்லிவிட்டு கி.ரா. அண்ணாச்சியைச் சொல்லாமல் விட்டுவிட முடியுமா என்ன? இது தனிச் சிறுகதையா, எங்காவது நாவலின் இடையே வருகிறதா தெரியவில்லை. என்றாலும் நினைக்க நினைக்க அப்பிடியொரு சிரிப்பு எனக்குப் பொங்கும்.
கி.ரா. எண்பதாவது பிறந்த நாள் என்று வை.கோ தலைமையில் சிறப்பாக விழா நடந்தது. சென்னை ஆனந்த் தியேட்டர் வளாகத்தில். மேடையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கையில், என் அருகே இருந்த வண்ணநிலவனிடம் நான் இந்தக் கதையை விவரிக்க, பாவி மனுசன் குபீரென்று அத்தனை சத்தமாய்ச் சிரித்துத் தொலைத்தார்.
அப்போது ஜானகிராமனின் தராசு பார்த்தோம். இதோ கி.ரா. அண்ணாச்சியின் தராசு, என் நினைவில் இருந்து.
கிராமத்துப் பெண்கள் கணவனை இழந்ததும் ஜாக்கெட் அணிய மாட்டார்கள். அப்பிடியொரு வழக்கம் இருந்த காலம் அது. கணவன் இறந்து அவர் மனைவி கணவனின் பருத்தி வியாபாரக் கடைக்கு வந்து அமர்ந்து பருத்தி வியாபாரம் செய்ய ஆரம்பித்தாள். அவளது கடைக்கு எதிர்க்கடையில் ஒரு நாயக்கர். ரொம்ப நேர்மையானவர். நாணயஸ்தர். வியாபாரத்தில் தர்மசீலர். நல்ல தரமான பருத்தி. எடையில் ஊழல் செய்யாமல் நியாய விலைக்கு அவர் விற்றுக் கொண்டிருந்தார்.
இந்த அம்மணி வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்ததும் அவளது கடையில் கூட்டம் அப்படி அப்பியது. அவள் விற்ற பருத்தியின் தரமும் சுமார்தான். அதை வீட்டுக்கு வந்து நிறுத்துப் பார்த்தாலும் எடை ஐம்பது கிராம் குறைந்தது. என்றாலும் அந்தக் கடையில் கூட்டம் குறைவதே கிடையாது. இது குறித்து அவளுக்கு எதிர் வாடையில் கடை போட்டிருந்த அந்த நியாயவான் வியாபாரிக்கு ரொம்ப வருத்தம் இருந்தது. நாம எத்தனை நேர்மையா இருந்தாலும் சண்டாளப் பயலுக அங்க தானய்யா போயி விளுகறாங்க, என அவருக்குச் சலிப்பு.
அந்த ஊரில் ஒரு விடாக்கண்டன் இருந்தார். அவரிடம் யாரும் காரியம் செயிக்க முடியாது. அத்தனை தன் குறிப்பான ஆளு அவர். அந்த விடாக்கண்டன் இந்த நியாயவானிடம் ஒருநாள் சவால் விட்டார். “அந்த அம்மாகிட்ட நான் போயி ஒரு கிலோ பருத்தி வாங்கி வாரேன். எடையும் கச்சிதமா, ஒரு கிலோ, குறையாம வாங்கிட்டு வாரேன்” என்று கிளம்பினார்.
ஒரு கிலோ பருத்தி கேட்டுக்கொண்டு பையை விரித்தபடி நின்றார் விடாக்கண்டன். அந்த அம்மாள் தராசுத் தட்டில் பருத்தியை அள்ளி அள்ளி வைக்கிறாள். விடாக்கண்டன் கண்ணை விலக்கவே இல்லை. இடது பக்கம் தராசுத் தட்டில் படிக்கல். வலப்பக்கம் தட்டில் பருத்தி. எடையை அவர் சரி பார்த்தபடியே. கண்ணை ம்ஹும் நகர்த்தவே இல்லை. ஒரு கிலோ எடை சரியாக இருக்கிறது. விடாக்கண்டன் தன் பையை விரித்து அந்த எடைபோட்ட பருத்தியை பைக்குள் அவள் போடக் காத்திருந்தார்.
அப்பதான்...
பருத்தி இருக்கிற தராசுத் தட்டை பைக்குள் கவுத்திய அந்த அம்மாள் ஒரு தரம் ‘கிச்சுக்’ என்று தோள்பட்டையைக் குலுக்கினா பாரு, அப்பதான் அந்த அம்பது கிராம் குறைந்தது...
91 97899 87842
storysankar@gmail.com