முகாம்கள்
பாசறைகள்
எஸ். சங்கரநாராயணன்
பொதுக் கருத்துகளையும்
தனது கருத்துகளையும் கவனத்தில் நிறுத்தி, எல்லாருக்கும் பொதுவானதொரு தளத்தில் ஒரு படைப்பு
முன்வைக்கப் படுகிற போது, அது புரிந்துகொள்ளப் படுகிற அளவில் அதன் இலக்கிய வெற்றி அமைகிறது.
தானும் பிறருமான ஒரு சமுதாயத்தின் ஒரு வடிவமாகவே எழுத்தாளன், எழுதுவதான சிந்தனையில்
ஈடுபடுகிறான். அவனது விதிகளோ, ஒழுங்குகளோ சமுதாய விதிகளில் இருந்து சிலசமயம் மாறுபட்டும்
போகின்றன. ஆனால் அவை சமுதாயத்தின் மேன்மையையிட்டு அவன், அந்த எழுத்துக்காரன் உத்தேசித்தவைதாம்.
நடைமுறையினின்றும் மேம்பட்டவை யாகவும், முரண் பட்டவையாகவும் அவை இருப்பதே அவனுக்குத்
தன் எழுத்தின் நியாயமாகப் படுகிறது.
முரண்பாடு தவிர்க்க முடியாதது. முரண்பாடுதான் எழுத்தின் காரணம்.
ஆதார சுருதி. ஒரு செய்தியிலிருந்து, ஒரு சம்பவத்தின் நிகழ் நிலையிலிருந்து படைப்புக்காரன்
தனித் தளத்தில் பிரிந்துபோய் இயங்குகிறபோது எழுத்து பிறக்கிறது. கலை என்பதே முரண் தான்.
முரண் என்தென்ன? இருநிலைத் தன்மை. மின்சாரத்தின் பாசிடிவ் நெகடிவ் போல. இரண்டுமே சத்தியின்
ஆதாரக் கூறுகள் தாம். ஒன்றைச் சொல்ல அதற்குரிய முரணைத் தேர்வு செய்து கொள்வது, அல்லது
முரணான தன்மையில் எதிர்ப்புகளை எழுதும் போதுகூட, ஒத்திசையும் அம்சங்களின் மதிப்புகள்
விளக்கப் படுகின்றன.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வி முழுங்கிவிடப் பார்க்கிறது,
கிரகணத்துப் பாம்பு போல. தர்மத்தினை மீட்டெடுக்க வேண்டி யிருக்கிறது. சிலர் உதறியெழ
தாமாகவே முயல்கிறார்கள். வெற்றியும் பெறுகிறார்கள். சிலருக்கு உந்துசக்தி தேவைப் படுகிறது.
எழுத்தாளன் தனது படைப்பில் அந்த உந்துசக்தியை வழங்கிவிட முடியுமா
என ஆவேசமுறுகிறான். அது புரிந்துகொள்ளப் படுகிற அளவில் அவன் தனது முயற்சியிலக்கை அடைந்துவிட்டதாக
அவன் உணர்கிறான். சமுதாயத்தின் எந்தவொரு மதிப்பும், காலத்தின் முன், மனிதனிடமிருந்து
சக மனிதனுக்குக் கை மாறுமுன், அதில் கொஞ்சம் கொஞ்சமாய்க் கறை படிந்துபோய் விடுகிறது.
காரணம் முதலில், அதன் ஆரம்ப நிலையில் அது கொண்டிருந்த தூய்மை நிலை, கைகள் மாற மாற திரிந்துபோய்
விடுகிறது. அதாவது, ஒரு செய்தி என எடுத்துக் கொண்டாலும் கூட, இரண்டாமவன் மூன்றாமவனிடம்
அதைச் சேர்ப்பிக்கும்போது தனது கற்பனையையும், குறைந்தபட்சம் அதுசார்ந்த தன்கணிப்புகளையும்
ஏற்றி, தன் உணர்வு வியூகத்துடனேயே கைமாற்றுகிறான். அதன் இறுதி வடிவம் ஒருவேளை, ஆரம்ப
வடிவத்துக்கு சம்பந்தமே இல்லாதுகூட ஆகிப் போகலாம். பேசும் த்வனியில், அந்த ஆரம்ப வடிவத்தைச்
சார்ந்தோ, சில சமயம் எதிர்த்தோ கூட அந்த விஷயம் பரிமாறப் பட்டுவிடக் கூடும்.
எழுத்து நேரடியாக படைப்பாளனிடமிருந்து வாசகனுக்குச் சென்றடைகிறது.
அத்தோடு சாமான்யர்களிடம் அறிவுவேட்டை யாடும் சிலர் சந்தர்ப்பவவாதிகளாக,
சூழ்நிலைகளைத் தங்கள் வசத்தில் பயன்படுத்திக் கொண்டு சாமான்யர்களை அதிகாரம் செலுத்தி
வெற்றியும் பெற்று விடுகிறார்கள். ஓர் உதாரணம் சொல்லி வேறு விஷங்களுக்குப் போய்விடலாம்.
இயற்கையை, அதன் பிரம்மாண்டத்தை மனிதன் பிரமித்து, அதனை வணங்க ஆரம்பித்தால், காலப்போக்கில்
கடவுள் என்கிற மதிப்பு சாமான்யன் மனதில் ஆழமாய் வேரூன்றப்பட்டு ஒரு கும்பலே அதைவைத்துப்
பிழைப்பு நடத்த ஆரம்பித்து விட்டது அல்லவா? எழுத்தாளனுக்கு இந்த அதிகார அடிமைத் தனங்களிலிருந்து
மானுடனை விடுவிக்கிற ஆவேசம் உண்டு. தன்னை அவன் வெளிப்படுத்திக் கொள்கிற போது சமுதாயப்
பாதுகாவலராய் வேஷம் போடுகிற இந்த எதிரிகளிடம் பெரும் எதிர்ப்பைப் பெறுகிறான். சிலசமயம்
சமான்யர்களே கூட அவனைத் தனது எதிரி என நினைத்தும் விடுகிறார்கள். இந்த நிலையில் அவனது
பொறுப்பு மேலும் அதிகமாகத்தான் ஆகிப் போகிறது. தர்மம் மறுபடி வெல்லும். காலப்போக்கில்
அதை அறிவிப்பதும், அதை நோக்கி நம்பிக்கையூட்டுவதும், அதை துரிதப் படுத்துவதும், ஒவ்வொரு
மனிதனையும் அதைநோக்கித் தயார்ப் படுத்துவதும் எழுத்தின் பங்களிப்பாக இருக்கிறது.
சிந்தனை அளவிலும் செயல் அளவிலும் எழுத்து ஒருவரது தனி அனுபவம்.
ஆனால் எழுத்தாளன் சிந்தனைகளில் தனி-மனிதன் அல்ல. தனிப்பட்ட ஒருவனது அனுபவம் பிறருக்குப்
பகிர்ந்தளிக்கப் படுகிறது. பிறகு, பிறருக்கும் பயன் படுவதாக அது எல்லை விரித்துக் கொள்கிறது.
தனி மனித எழுத்து, தனி மனித மேம்பாட்டில் துவங்கி, அதை வாசிக்கிற தனி மனிதனில், தன்னளவிலான
முடிவுகளை அல்லது வினாக்களை எழுப்பி, அவனைக் கூர்மையுடன் தயார் செய்கிறது. அந்தக் கருத்தை
ஒட்டியோ மறுத்தோ, ஆனால் வாசிப்பவன் கூர்மை யடைகிறான். எழுத்தாளன் தன்னையே முன்னிறுத்தியோ
மறைத்துக் கொண்டோ, அல்லது தன்னையே பார்வையாளனாக விலக்கிக் கொண்டோ, பல்வேறு முறைகளில்
படைப்பினை அளிக்கிறான். ஒரு படைப்பில் ஒரு சமுதாயத்தின் பிரம்மாண்ட அம்சத்தின் துகள்கள்,
CHIPS FROM THE BLOCK என்று கூறுவார்களே, அவை இருக்கலாம். தவிர்க்கப் பட்டும் விடலாம்.
அது எழுத்தின் சுதந்திரம். இருண்டு வகையிலுமே வாசகனாக நமக்கு அநேக விஷயங்கள் கிடைக்கின்றன.
கருத்து அடிப்படையில் மனதில் பதிந்த விஷயங்களை எழுத்தாளன்
உணர்வு அடிப்படையில் வழங்குகிறான். ஏனெனில் வாழ்க்கை அவனால் உணர்ந்து உள்வாங்கிக் கொள்ளப்பட்டு,
கருத்து என மதிப்பீடு அளவில் பதிந்து, மீண்டும் படைப்பாக மலர்கிற போது வாழ்க்கையாகவே
அமைய அவன் அதன் உணர்வுத் தளத்துக்கு நகர வேண்டி யிருக்கிறது. இந்த உணர்வுத் தளத்துக்கும்,
அவன் தன் வாழ்வில் அனுபவித்த சூழ்நிலை அம்சத்துக்கும் வித்தியாசம் இருக்கலாம். அதன்
செறிந்த வடிவமாகவும், அவனது கருத்தை வலியுறுத்தும் விதமாகவும் அவன் சூழலை மாற்றியமைப்பதும்
சாத்தியம் தான். எழுத்தாளன் அனுபவித்த உணர்வுத்தளம் பூமியில் வெட்டியெடுத்த தாது
(ORE) போல. அதை சுத்தம் பண்ணி மனசில் இருது வெளியே எடுத்து உலோகம் போல எழுத்தாளன் படைப்பினை
அளிக்கிறான். உலோகமாகவோ ஆயுதமாகவோ கூட அவன் அளிக்கிறான்.
படைப்பில் உணர்வுத் தளம் குறைந்து போனால் அதன் நம்பகத் தன்மை
குறைந்து போகிறது. வாசகனுக்கு அதில் ஆர்வம், சுவாரஸ்யம் அல்லது பிடிப்பு தளர்ந்து போகிறது.
கருத்துத் தளத்தைத் தூக்கலாய் அமைத்துக் கொள்வது என்பது, பாத்திரங்களுக்கு உயிரை அல்ல,
யந்திரத் தன்மையையே தர முடியும். வாசகனுக்கான தன்-யோசனைக்கே இடம் அங்கே கிடைக்காமல்
போகிறது என்பதும் முக்கிய வேறுபாடு. இலவச வேட்டி சேலை, என அரசாங்கம் அறிவிக்கிற திட்டங்கள்
போல. பாத்திரங்களின் உணர்வுச் சிக்கல்களை அடியொற்றி, தான் சிந்திக்க முடிவுகளுக்கு
வர வாசகனை ஈடுபடுத்துதல் முக்கியமானது. வாழ்க்கை சார்ந்த சுய கணிப்புகளைப் பெற, தனது
சூழல் பற்றிய பிரக்ஞை பெற ஒரு பயிற்சிக் களமாக எழுத்து அமைவது வாசகனுக்குப் படைப்பாளன்
செய்கிற கௌரவம், மரியாதை, அந்த எழுத்தைப் படிக்கிறவனுக்கு அளிக்கிற நியாயமும் கூட.
வாசகன் ஒரு படைப்பினால் தனது சூட்சுமங்களை அடையாளங் கண்டுகொள்ள வேண்டும். செஸ் விளையாட்டோ,
சீட்டு ஆட்டமோ வெளியே, பக்கத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறவனுக்குத் தெளிவாய்ப்
புரிகிறதே, அதைப்போல. எழுத்து அவனுக்கு வாழ்க்கையைப் புரியவைக்க முயற்சிக்கிறது.
எழுத்து வாழ்க்கையைப் பாசி விலக்கிக் காட்டுகிறது.
எழுத்தில் ஒரு படைப்பாளன் அடையாளங் காட்டுகிற யதார்த்தம்
வாழ்க்கையின் அன்றாடம் போன்றது, அதேசமயம் அன்றாடம் சார்ந்ததும் அல்ல அது. அன்றாடம்
என்பது தர்க்க நியாயங்கள் அற்றது. கட்டுக்கோப்பு இல்லாதது. யூகங்கள் அங்கே இல்லை. சந்தர்ப்பங்கள்,
விபத்துகள், தாற்காலிகங்கள் நிறைந்தது. திரும்பத் திரும்ப அலுப்பான தொடர்நிகழ்வுகளைக்
கொண்டது அன்றாடம். அர்த்த வீர்யம் குறைந்தது. அபத்தங்கள் நிறைந்தது.
ஆனால் எழுத்து வடிவத்தில் யதார்த்தம் தர்க்க எல்லைகள் கொண்டது.
அறிவின் நிர்ணயங்கள் கொண்டது. காரண காரியங்கள், வியூகங்கள், சூட்சும அம்சங்கள் கொண்டது.
நான்கு மணி நேரத்தில் பசித்து விடுகிறது நமக்கு. இரவானால் தூங்க வேண்டி யிருக்கிறது.
திரும்பத் திரும்ப நிகழும் இம்மாதிரி வாழ்வம்சங்களை நிராகரித்து, வாழ்வின் செறிவாக,
சாறாக எழுத்து, வாழ்வை அதிக அர்த்த பாவனைகளுடன், உணர்வு வீர்யத்துடன், குறைந்தபட்ச
அபத்தங்களுடன் உருவாக்கிக் காட்டுகிறது. வெறும் சம்பவக் கோர்வையாக, உள் சரடின்றி, தர்க்க
நியாயங்கள் இன்றி எழுத்து அமைய முடியாது. அமையுமாயின் அது பூசப்படாத சுவர் போல பல்லைக்
காட்டிவிடும். எழுத்தாளனின் அறிவு வியூகம் எழுத்தில் பெரும் பங்கு வகிப்பது. அது வாசகனின்
அறிவோடு ரகசியங்கள் பரிமாற வல்லது. நல் எழுத்தின் பண்பும் பயனும் அது. ஆனால் எழுதப்படும்
பாத்திரங்கள் பயிற்சியில் மேலும் மேன்மேலும் எளிமைப்பட்டு துலக்கம் பெற்று வருகின்றன.
எழுத்தின் வளர்ச்சி அது. அதேபோல எழுத்து முறையும் வார்த்தை இறுக்கம் குறைந்து எளிமையாக ஆகிக்கொண்டு வர வேண்டும். என்பதால்
எழுத்து சாமானிய விஷயங்களையே பிரதிபலிக்கிறது என்பதல்ல. எதை எப்படிச் சொல்வது, என்பது
சார்ந்த எழுத்தாளனின் தேர்வும் கவனமும் முக்கியமானது. அதில் அவன் பெறும் தேர்ச்சியின்
முதிர்ச்சியின் அடிப்படையில் தான் எழுதும் விஷயங்களின் தரம் நிர்ணயம் ஆகிறது. மிகப்
பெரும் விஷயங்களையும் மிக எளிமையாய்ச் சொல்ல எழுத்தாளன் பயிற்சி பெறுகிறான். சிறந்த
சங்கீத வித்வான் மூச்சுத் திணறல் இல்லாமல் பாடி நம்மை ஆனந்தப் படுத்துகிறார் அல்லவா,
அதைப் போல.
ஆனால் எழுத்தாளன்
சாமானியன் அல்ல, அவன் சாமானிய மனிதர்களைப் பற்றி எழுதினாலுங் கூட. எழுதுவதற்காக அவன்
பேனாவைத் திறந்த அளவிலேயே அவனது பீடம் சற்று, கண்ணுக்குப் புலப்படாத அளவு உயர்ந்து
தான் விடுகிறது. ஆனால், அவனுக்குள்ளான சாமானிய உணர்வே அவனை எழுதத் தூண்ட வேண்டும்.
தன்னை மேம்பட்டவனாக எழுத்தாளன் நினைத்துக் கொள்கிற போது வாசகனைப் பிரிந்து, வாசகனால்
கூட வர முடியாத தளத்துக்குப் போய்விடுகிறான். அவனது நியாயங்கள் தன்னளவில் சுருங்கி
விடுகின்றன அப்போது. அறிவுத் தளத்திலேயே பொதுத்தளத்தில் கவனம் பெற இயலாதவன் அவன். அவனது
கணிப்புகள் அந்தரத்தில் நின்று போகின்றன அப்போது.
எழுது முன்னான
எழுத்தாளப் பயிற்சிகள் முக்கியம் அவனுக்கு. ஒரு தேர்ந்த வாசகனாக அவன் தன்னைத் தயாரித்துக்
கொள்ள வேண்டும். புலன்களும் அறிவும் இணைந்த அவனது உள் உலகத்தை விகாசப் படுத்திக் கொண்டே
அவன் வர வேண்டும். அதுவே அவனது எழுத்துக்கு உந்து சக்தியாக அமைகிறது. இதில் மேலும்
முக்கியமான ஒரு விஷயம். சிந்தனை நகல்கள் இங்கே தேவையில்லை, இரண்டு எழுத்தாளர்களது சாராம்சம்
என்றால், அங்கே ஒருவரே போதும், இரண்டாமவன் எழுத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறான்,
அவ்வளவுதான். கூறியது கூறல் இலக்கியப் பிழை. ஆகவே ஓர் எழுத்தாளன் நிறையவும், நிறைய
நிறையவும் வாசிக்க வேண்டும். இதுவரை வந்து சேர்ந்த இலக்கியத் தடத்தை அவன் உய்த்துணர
வேண்டும். உலக அரங்கை அவன் கவனத்தில் கொள்ள வேண்டும். தனது நிலை அறிய வேண்டும். அதன்
எதிர்காலப் பாதையும் யூகிக்க வேண்டும். தன் வலியும் மாற்றான் வலியும் புரிந்து கொள்ள
வேண்டும். The writer carries the torch of tradition. ஒரு தொடர்-ஓட்டம், ரிலே ரேஸ்
அது.
இலக்கியத்
தடம் பற்றிய அறிவோடு, அவன் எல்லை விஸ்தீரணங்களை கவனப் படுத்திக் கொண்டு, ஆனால் வாசகனை
நாம் நிற்கிற புள்ளியில் இருந்து சிறிது, தன்னால் முடிந்த சிறிது முன்னகர்த்த வேண்டியது
தான் எழுத்தின் வேலை. எழுத்தாளனின் பங்களிப்பும் அதுவே. தடத்தின் எல்லை என்பது கனவு.
அது காலந்தோறும் தலைமுறை தோறும் விரிந்தவண்ணம் அமைகிறது. அது ஒரு அழகான அனுமானம். வானத்தை
உணர்வதைப் போல. அதைத் தவறு என்று எண்ண வேண்டியது இல்லை. அனாலும் அந்த அனுமானத்தை உணர்ந்து
வாசகனுக்கு அதை உணரவைப்பது எழுத்து. சமூகத்தைத் தயார் செய்வது என்பது எழுத்தின் இயல்பு.
இன்னும்
சொல்லப் போனால், தடத்தின் எல்லை, அது கனவு, இன்னும் நடைமுறையில் எட்டப்படாதது. அதை
சித்திக்க வைக்க சிந்திக்க வைப்பது எழுத்து. அதைநோக்கி நடைபோட வாசகனுக்கான பயிற்சிக்களமே
எழுத்து. எனினும் முடிவுப் பகுதியைச் சொல்லி விட்டால் வாசகனுக்குக் கனவுகளை வாரி வழங்கியவனாகிறான்
எழுத்தாளன். அப்போது பலத்தை அல்ல, பலவீனங்களுக்குத் தீனி போடுகிற அபாயமும் அதில் இருக்கிறது,
என்பதையும் நோக்க வேண்டும்.
தீர்க்கமாக
வாசகப் பயிற்சி சொள்கிறவன் எழுத்தாளனாக, சுய கணிப்புகளுடன் உயர்வு பெறுகிறான். வாசகனைத்
தூக்கி விடுகிறது, எழச் செய்கிறது நல்ல எழுத்து. எழுத்து சாமானியர்களில் மேம்பட்டவர்களால்,
சாமனியர்களைப் பற்றி, சாமானிய பாவனையிலேயே முன்வைக்கப் படுகிறது. அவ்வாறன்றி அமையும்போது
அது வாசகனில் இருந்து அநிநியப் பட்டுப் போகும். பட்டுப் போகும்.
எழுத்தாளன்
தனக்காகவே தனது உள் தேடலுக்காகவே எழுதுகிறான். ஆனால் அந்த எழுத்தாளன் தனி மனிதன் அல்ல.
அதனால்தான் பிறகு அந்த எழுத்து வாசிக்கிற பிறருக்கும் பயன்படுவதாக அமைய முடிகிறது.
முதல் கட்டத்திலேயே ஓர் எழுத்து பிறருக்காக உருவாக முடியும் என்பது, வாய்ப்பு அளவிலேயே
சாத்தியம் அற்றது அல்லவா? (வின் தொலைக்காட்சி பேட்டியில் இதை இப்படிச் சொன்னேன். பிறருக்காக
ஒருவன் எழுதுவது என்பது, அம்மா சொல்லச் சொல்ல எழுதும் மளிகை லிஸ்ட் தான்.) அதாவது எழுத்து
எழுதப் படுகிற அளவிலேயே தளமும், தனக்கான வாசக வட்டமும் நிர்ணயித்துக் கொண்டே பிறகு
உருவம் கொள்வதாக இருக்கிறது. யாருக்காக, மானுடப் பெரு சமூகத்தின் எந்த சிறு பிரிவு
சார்ந்து கதை நிகழ்கிறது, என ஒரு குவிப்பு நிகழாமல் எப்படி எதைப் பற்றி எழுத முடியும்?
யாரைப் பற்றி எழுதுகிறோமோ அந்தப் பாத்திரம் அதுபோன்ற வாசகனுக்கு என் அமைந்துவிடுகிற
நிலையில் அந்த எழுத்தாளனும் வாசகனும் ஒரே தன்மையுடையர் ஆயினர் என்பதறிக. அதாவது அது
எழுத்தாளனே, என்பது முடிபு.
எழுத்து
வாழ்க்கையைக் கூர்மையாக்கி அழகாக்கி விடுகிறது. சுவாரஸ்யப் படுத்தி மேலும் அர்த்தப்
படுத்தி விடுகிறது. சாமானியனுக்கு அது வாழ்வின் பிடிப்புகளை எடுத்துக் கொடுக்கிறது.
தனது தடத்தை கணித்து பயணம் புறப்படுகிற எழுத்தாளன், தனது எழுத்தில் ஒரு பிரச்னையை வெளிப்படுத்தும்
போது, அதன் ஆழங்களை மாத்திரம் அல்ல, அதன் நேற்று இன்று மற்றும் நாளை பற்றிய யோசனைகளையும்
பொதிந்து வைக்கிறான். வெறும் நிகழ்கால நடைமுறை அல்ல அது, அது எப்படி இருந்தது, இருக்கிறது,
எப்படி இருந்தால் நலம்... என்கிற மூன்று நிலைகளிலும் எழுத்தாளன், காயப் போட்ட நெல்லை
காலால் அளைகிறாப் போல எழுதிச் செல்கிறான். எழுத்து என்பது ஒரு பிரச்னையின் விளக்கமான
இந்த மூன்றின் கலவை. வாசகனுக்கு எப்பெரும் பயன் அது... அல்லவா?
எழுத்து
வாழ்வின் தீவிரத்தன்மையை அதிகப் படுத்துகிறது.
சிந்தனைக்கு
எல்லைகள் இல்லை. அறிவுக்கு எல்லைகள் இல்லை. ஆகவே எழுத்துக்கும் எல்லைகள் கிடையா. புலன்களைத்
தாண்டி அறிவின் உருப் பெருக்கமாய் அது ஊரின், நாட்டின் எல்லைகளை யெல்லாம் கடந்து ஒட்டு
மொத்தமாய்த் தழுவிக் கொள்ள முடிகிறது. எப் பெரும் பேறு இது. குழந்தையின் ஆர்வமும்,
ஆச்சர்யமும், ஆர்வக் குறுகுறுப்புமாய், அது தாயின் இடுப்பில் இருந்து இறங்கி குடுகுடுவென்று
ஓடித் தேடுகிறது.
எழுத்து
விஞ்ஞான பூர்வமானது தான். தர்க்க அடிப்படை கொண்ட எதுவும் விஞ்ஞான பூர்வமானது தான்.
கல்வியில் மொழியோ கணிதமோ விஞ்ஞானமோ, எல்லாமே ஓர் உயர்ந்த தளத்தில் ஒன்று கலந்து கொள்கிறது
அல்லவா. எழுத்தில் எல்லாவித கலை வடிவங்களும் குழைந்து பரிமளிக்க முடியும். அதன் உயர்ந்த
தளத்தில் பிரச்சாரம் என தனியே அதில் வேண்டியது இல்லை. டாக்டர் லோகநாயகி (லேடி டாக்டர்)
என்று போர்டு வைப்பது போலாகி விடும் அது. உண்மையில் பிரச்சாரம் இன்றி எதுவுமே இல்லை.
மொழி என்பதே நமது தொடர்பு சாதனம் என்றாகிற போது, வெளிப் படுத்துகிற எல்லாமே பிரச்சாரம்
சார்ந்த விஷயங்கள் தாம்.
ஒரு நல்ல
படைப்பில் வாழ்வில் இருந்து பிரச்சாரத்தைப் பிரித்தறிய இயலாது. எனினும் வாசகனால் அது
உள்வாங்கப் பட்டுவிடும். படைப்பாளனால் அது உணர்த்தப் பட்டுவிடும். தன்னை வெளிப்படுத்திக்
கொள்வதில் கிளர்ந்த எழுத்து ஆர்வம், தன்னை மறைத்துக் கொள்வதில், பூடகப் படுத்துவதில்
வெற்றி பெற்றதாகக் கருதப் படுகிறது. எடுத்துச் சொல்லுதல் அல்ல, அடியெடுத்துக் கொடுத்தல்.
மீனைத் தராதே, தூண்டிலைக் கொடு, என்கிற சீனப் பழமொழி போல.
இசையில்
இடைப்பட்ட மௌனம் அர்த்த பூர்வமாய் உணரப் படுவது போல, எழுத்தில் வாக்கியங்களுக்கு இடையேயான
மௌனத்தின் கனம் வாசகனால், தன் சிந்தனை வீச்சில் வாழ்க்கை யனுபவமாக உணரப்பட வேண்டும்.
எழுத்து அழகான ஓவியத்தின் முகம் வரைந்துகாட்டி கண் வரையச் சொல்கிறது. தன்னை வெளிப்படுத்திக்
கொள்ள எழுத்தாளன் செய்கிற முக்கியப் பணி தன்னை மறைத்துக் கொள்வது தான். ஒளிந்து கொள்வது
கண்டுபிடிக்கப் படத்தான்... கண்ணாமூச்சி போல.
உலக எல்லையும்
தாண்டி விரியும் எழுத்து, ஆனால் அதன் பாவனை இல்லாமல், புதிய மனிதர்களை நம் உணர்வு அடையாளங்களுடன்
பரிச்சயப் படுத்துகிறது. பாத்திரங்களின் பொது அம்சங்களை விவரித்து சிறப்பு அம்சங்களை
முன்னிறுத்துகிறது. எவ்வளவுக்கு அது எளிமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அது கொள்திறன்
அதிகம் கொண்டதாக அமைய முடியும். வாசகனின் உணர்திறன் சார்ந்து அதன் அருமை மின்னும்.
அந்த எளிமையே அதைநோக்கிய கவர்ச்சியாக உணரப்படும், மறு வாசிப்பில் மேலும் அதன் உள் அழகுகள்
எட்டப் படவும் கூடும். வார்த்தை வியூகங்கள், அலங்காரங்கள் கூட அல்ல, அதை எளிமையாய்ச்
சொல்லத்தான் எழுத்தாளன் பாடுபட வேண்டி யிருக்கிறது. அதற்காக அவன் தன் வீர்யத்தைக் குறைத்துக்
கொள்வதும் இல்லை. வாழ்வின் பிரம்மாண்டத்தை, சுவாரஸ்யத்தை அவன் விட்டுக் கொடுத்து விடுவதும்
இல்லை. அதுவே எழுத்தின் ஆரோக்கிய அம்சம்.
•
(நிறைவுப்
பகுதி அடுத்த வாரம்)
•
திசம்பர்
20, 1995 - திருவண்ணாமலையில் நிகழ்ந்த தமுஎச மாவட்ட மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக்
கலந்துகொண்டு வாசித்து அளித்தது.
No comments:
Post a Comment