Friday, February 22, 2019


பகுதி 30
மொழிபெயர்ப்பு எனும் படைப்புக்கலை
எஸ்.சங்கரநாராயணன்
2018ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘மொழியாக்க விருது’ பெறுகிறேன். 19.02.2019 அன்று காலை 09.30 அளவில்  முதல்வர் அறையில் வைத்து விருது வழங்கப் படுவதாக கைக்கு வந்திருக்கிறது அரசாணை. (இதை எழுதும் நாள் 17.02.2019) எப்படியும் இந்த ‘யானையின் வண்ணப்படம்’ தொகுப்பின் ஒரு கட்டுரையாக ‘மொழிபெயர்ப்பு’ என்ற தலைப்பில் நான் எழுத இருக்கிறது தானே?
என்னைவிட என் நண்பர்கள் இதில், எனக்கான இந்த விருது சார்ந்து அதிக உற்சாகம் அடைகிறார்கள். எனது சிறப்புகளில் மாத்திரம் அல்ல, வாழ்வின் சிக்கலான கணங்களிலும் அவர்கள் என்னுடனேயே நெருக்கமாய், கூடப் பயணிக்க விரும்புகிறார்கள். அந்த நட்புவட்டம் எனது பெருமை. மூன்று வருடங்கள் முன்னால் எனது நண்பனும் பதிப்பாளனுமான உதயகண்ணன், முதல்வர் ஜெயலலிதா அவர்கள் புதிதாய் மொழியாக்க விருதுகளை அறிவித்திருப்பதாகவும், உங்களைப் பற்றிய குறிப்புகளையும் நான் தரலாமா, என்றும் கேட்டான். நான் எதிர்பாராமல், ஒரு முன்னிரவுப் பொழுதில் இப்போது திடீரென்று இந்த விருது அறிவிப்பு - அலைபேசிச் செய்தி, வந்தடைந்தது. உதயகண்ணனுக்கு நன்றி. அவன் விண்ணப்பத்திருக்கா விட்டால் இது வந்துமிராது. எனக்கே ஒருவேளை இதுபற்றித் தெரிந்துமிராது.
இதுவரை ‘உலகச் சிறுகதைகள் தொகுதி‘ நான்கு நூல்கள் தமிழில் தந்திருக்கிறேன். முதல் தொகுதி ‘கனவுச் சந்தை.’   அதன் முதல் கதை ROUND THE BEND, மேற்கு இந்தியத் தீவுகள் எழுத்தாளர் சாமுவேல் செல்வான் எழுதியது. நான் மொழிபெயர்த்த முதல் சிறுகதை இதுதான்.
முள்னதாக 3தமிழின் ஆக மோசமான மொழிபெயர்ப்புகளை நான் வாசித்திருந்தேன். அதுபற்றி அவனிடம், உதயகண்ணனிடம் நான் கேலியாடிக் கொண்டிருந்தேன். எப்பவுமே உற்சாகம் கிளம்பி விட்டால், நான் கேலியாடுவதில் இறங்குவதுதான். நான் படித்த மோசமான மொழிபெயர்ப்பு உதாரணங்களை, நிஜ அனுபவங்களை, இங்கே தவிர்க்கிறேன். விருது பெறும் நேரம் இது. ஆனால் அதற்காக உதாரணம் சொல்லாமல் எப்படி? HE IS A POOR TRANSLATOR - என்பதை அவன் ஓர் ஏழை மொழிபெயர்ப்பாளன், என மொழிபெயர்த்ததாகச் சொல்வார்கள். எகனாமிக் சைக்கிள், என்பது பொருளாதார மிதிவண்டி. ஆன்டன் செகாவின் ஒரு சிறுகதைத் தலைப்பு, லேடி வித் ய டாக், தமிழில் யாரோ, நாயுடன் கூடிய சீமாட்டி, என மொழிபெயர்த்ததாகச் சொல்வார்கள். வேடிக்கைக்காகச் சொல்லி யிருப்பார்களாய் இருக்கும். ஐயய்ய, எனக்கே ஒருமாதிரி இருக்கிறது.
எனது ‘கடல்காற்று’ நாவலில் ஒரு பாத்திரம் வரும். தெருவில் போய்க்கொண்டே அந்த மனிதன், வீட்டு வாசலில் டிரான்சிஸ்டர் கேட்டபடி அமர்ந்திருக்கும் பெரியவரிடம் கேட்பான். “ஆர் யு ஆஸ்கிங் சாங்ஸ்?”
சின்ன வயசில் கண்ணதாசனே சொல்வாராம் - டாக்டர் கிட்ட போய் நீடில் போட்டுக்க நான் பயப்படுவேன்.
உதயகண்ணன் சிரித்தான். என்றாலும் பிறகு சொன்னான் - நீங்களும் ஆங்கிலத்தில் வாசிக்கிறவர் தானே. அதுபற்றி நிறைய என்னிடமும் நண்பர்களிடமும் பேசுகிறீர்கள், நீங்களே மொழிபெயர்ப்பு செய்யலாமே, என்று எடுத்துத் தந்தவனும் அவனே. பதிப்பாளன் உதயகண்ணன்.
‘நிஜம்’ என சிற்றிதழ் ஒன்று நான் கொண்டு வந்தபோது, சாமர்செட் மாம் எழுதிய CAKES AND ALE நாவலில் ஒரு விவாதப் பகுதியை - A THING OF BEAUTY IS NOT A JOY FOREVER, என அமையும் அது, அந்தப் பகுதியை, சுமார் இரண்டு பக்கங்கள், மொழிபெயர்த்துத் தரும்படி கோபிகிருஷ்ணனிடம் தான் வேண்டினேன். பிறகு ஜெயமோகன், தாமஸ் மன் என்கிற எழுத்தாளரின் ஒரு கதையைத் தமிழில் தந்தார். அதை வெளியிட முடியாமல் போயிற்று. பத்திரிகை நின்று போயிற்று.
அப்போது ஒரு கதை, ஜான் அப்டைக் எழுதிய ‘வால்ட்டர் பிரிக்ஸ்,’ ஜெயமோகனுக்கு அனுப்பி தமிழில் செய்கிறீர்களா, என்று கேட்டது நினைவு. அதுவும் முற்று பெறவில்லை. அந்தக் கதையைத் தேடி எடுக்க வேண்டும். நானே மொழிபெயர்க்கலாம்.
இந்நிலையில் தான் அந்த மேற்கு இந்தியத் தீவுகள் கதையை நான் வாசித்துவிட்டு தமிழில் முயற்சி செய்தேன். ‘ரவுண்ட் தி பென்ட்’ தமிழில் ‘பின்வாசல்’ ஆயிற்று. சரி. அதை ஏன் மொழிபெயர்க்கலாம் என்று கையில் எடுத்தேன் நான்? அதன் கதையமைப்பு அப்படி. வேலையில்லாமல், பக்கத்து நாட்டுக்கு ஓடிவிட்டால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம், என கள்ளத்தோணி ஏறுகிற ஒருவனின் கதை அது. அந்தக் காலகட்டத்தில் இங்கேயும், நம்மூரிலும் ஸ்ரீ லங்காவில் இருந்து அகதிகளாக பாவப்பட்ட சனங்கள் கள்ளத்தோணி மூலம் வந்திறங்கிக் கொண்டிருந்தார்கள். எங்களது தந்தியலுவலகம் வந்து, ஸ்ரீ லங்காவுக்கு ‘கால்’ போட்டு ஒரு பெண் பேசினார். அவர் வரும்போது குண்டுவீச்சு பயங்கரமாக இருந்ததாம் ஊரிலும், கடலிலும். பேசுகிற இப்போதும் அவர் உடம்பு பயத்தில் தூக்கித் தூக்கிப் போட்டது.
ஆகவே நமது தமிழ் சனங்களுக்கு இந்த மொழிபெயர்ப்புக் கதை இணக்கமானதாக நான் நம்பினேன். அகதி என்கிற இதே சூழலில் இன்னொரு கதை கூட, ‘பெரிய எழுத்து டான் க்விக்சாட் கதை’ என நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.
முதல் கதை எல்லாருக்கும் பிடித்திருந்தது. எனக்கும் அதில் பிடித்த விஷயம் ஒன்று இருந்தது. ஒரு கதையை வாசகனாக ரசனையுடன் வாசிப்பது என்பது வேறு. மொழிபெயர்ப்பு என்று மெனக்கிடும் போது, அடேயப்பா, அதற்கு மூன்று மடங்கு கவனக் குவிப்பு தேவைப் படுகிறது. வண்டியில் நாம் தனியே போவது எப்படி, கூட மனுசாளை பின்னே ஏற்றிக் கொண்டு வாகனம் ஓட்டுவதன் கவனம் எப்படி? அதேபோலத் தானோ என்னவோ. இப்போது மூல எழுத்தாளனின் ‘பிடிகள்’ மேலும் புலப்பட்டன. அநேக சந்தர்ப்பங்களில் அவனது ஆத்மாவைக் கூட நாம் அடைய முடிகிறது. எப்பெரும் பேறு இது.
கதையுடன் பொதுவாக அந்த மூல எழுத்தாளனின் வாழ்க்கைக் குறிப்பு வெளியிடுவார்கள். சில கதைகளுக்கு மூல எழுத்தாளனைப் பற்றிய குறிப்பு கிடைக்காமல் போகும். புகைப்படம் கிடைக்காது. நான் அந்த முதல் தொகுதி ‘கனவுச்சந்தை’யில், கதையை மொழிபெயர்க்க என நான் ஏன் தேர்வு செய்தேன் என்பதைச் சொல்லி, அந்தக் கதையின் நுட்பங்களாக நான் கண்டவற்றையும், குறை எதுவும் கண்டால் அதையும் சுட்டிக்காட்டி விவாதமேடையாகவே பின்குறிப்பு இட்டேன். வாசக ரசனையை அடுத்த படிக்கு சிறிது அது ஏற்றிவிட்டால் நல்லது தானே?
2
இந்தத் தொகுதியை மதிப்புரை செய்த வெங்கட் சுவாமிநாதன், பின்குறிப்புகளைப் பாராட்டினார். அதேவேளை, எனது சில தமிழ்ப் பதப் பிரயோகங்கள், தமிழுக்கே ஆனவையாக இருப்பதால், மூலத்தோடு பொருந்தவில்லை, என கருத்துரைத்தார். இதேபோல ஞானக்கூத்தனுக்கு ஓர் அபிப்பராயம் இருந்தது. விமரிசனக் கட்டுரைகளில் நான் பாராட்டும் ஒரு முயற்சி - கட்டுரைச் சொற்கள் மிகுந்த நேரடித்தன்மையுடன், எந்தக் கலைப்பூச்சும் இல்லாமல் இருப்பது நல்லது. கட்டுரையின் விஷயம் நேரடியாக வாசகனுக்கு எளிமையாய்ச் சேர வேண்டும். கட்டுரை நடையில் நகாசு வேலைகள் வேண்டாம், என்று சொல்வேன். காரணம் அது புனைவு அல்ல. ஒரு கருத்துப் பதிவு, ஒரு கருத்தைப் பற்றிய இன்னொரு கருத்து அது, என்பது கருத்து.
ஞானக்கூத்தனுக்கு மொழிபெயர்ப்பு சார்ந்தும் இதே கருத்து இருந்தது. மொழிபெயர்ப்பு எனக் கையாளும் வார்த்தைகள் அத்தனை ‘சத்தாய்’ இருக்க வேண்டியதில்லை. நேரடியாக, அகராதியில் குறிப்பிடப் படுகிற பாணியில், அதுதவிர பூடகமாய் எதுவும் சொல்லாமல், இருந்தால் மொழிபெயர்ப்பு மூலத்துக்கு அதிக நியாயம் செய்யும், என்றார் அவர்.
மொழிபெயர்ப்பு என்பது வாசகனுக்கு வழங்கப் படுகிற தண்டனையா என்ன? நோயுற்றவனின் பத்தியச் சாப்பாடா அது? ஒரு தேர்ந்த வாசகனே மொழிபெயர்ப்பு என்று தன் வாசிப்பில் அடுத்த கட்டம் வருகிறான். அவனை அதைரியப் படுத்துவதா? அவநம்பிக்கை கொள்ளச் செய்வதா?
இது புனைவு, என்ற அளவில் புனைவின் அலங்காரங்கள் கதையில் இல்லாமல் எப்படி, என்பது எனது கேள்வியாக அவர்களுக்கு அமைந்தது. அவர்கள் அவர்கள்மொழியில் செய்யும் வித்தைகளை நாம் நமது மொழியில், மொழிபெயர்ப்பில் செய்ய என்ன தடை, என எனக்கு விளங்கவில்லை. உதாரணம் ஒன்று சொல்லி விடலாம். முல்க் ராஜ் ஆனந்தின் ‘விடியல் முகம்’ நான் தமிழில் மொழிபெயர்த்தேன். சாகித்ய அகாதெமி எனக்கு அளித்த பணி அது. PREM CHAND LIVED IN A LANE - என அவர் எழுதினார். நான் பிரேம் சந்து குடி யிருந்தது ஒரு சந்து, என எழுதினேன். பகவான் ஸ்ரீ அரவிந்தர், இறைவனின் படைப்பில் ஆகச் சிறந்த படைப்பு மனிதன், என்றும், இறைவனின் சோதனைகளின் அடுத்த கட்டம் மனிதனிடமே என்றும் குறிப்பிடுவார். My body is your playground - என அவர் சொல்வதை நான் தமிழில், என் உடல் உன் விளையாட்டுத் திடல், என்று சொல்கிறேன்.
முல்க் ராஜ் ஆனந்தின் ‘விடியல் முகம்’ பல சவால்களைக் கோரியது. சுதந்திரப் போராட்ட காலகட்டத்து நாவல் அது. அந்தக் காலகட்ட விவரங்கள் தேவையாய் இருந்தன. முஸ்லிமாக மாறிய இந்துக்களின் நிலையைச் சொல்லியது அது. பஞ்சாபின் சூழல் வருகிறது அதில். ஆகவே கதையில் இந்தி, உருது, சீக்கிய மொழிக் கலப்புடன் உரையாடல்கள் இருந்தன. ஒவ்வொரு விஷயத்துக்கும் எனக்கு ‘தகவல் உதவி’ தேடிப் பெற வேண்டியிருந்தது. அந்த நாவலையே, தற்போது அச்சில் இல்லை அது, தேடிப் பெற்றேன். புதுச்சேரியில் ராஜ்ஜா தனது தாகூர் கல்லூரியில் இதைப் பிரதி கண்டு நகல் எடுத்து அனுப்பி வைத்தார். மொழிபெயர்ப்பில் ‘மேசை வேலைகள்’ தாண்டி இப்படி நிறைய வேண்டி யிருக்கிறது, என்பதைச் சொல்லவே இதைக் குறிப்பிடுகிறேன்.
இதற்கும் மேலே, நான் பயன்படுத்தும் உரையாடல்களில் வட்டார வழக்கு வேறு. சொந்தப் படைப்புகளிலேயே வட்டார வழக்கு கூடாது, என்கிற உலகம் இது. ஆங்கிலத்தில் வரும் வசைச்சொல் இடத்தில், தமிழில் வசை ஒன்றைப் போட்டால், பொங்கிவிட்டார் வெங்கட் சாமிநாதன். காதைப் பொத்திக் கொண்டாரோ என்னவோ. ஷிட், என்பார்கள் ஆங்கிலத்தில். அதை அப்படியே தமிழில் பயன்படுத்த முடியாது. சனியனே, என்பது நம் வழக்கு.
அவர்கள் மூல மொழியில் செய்துகாட்டும் சாதுர்யங்களை நீங்கள், மொழிபெயர்க்கும் மொழி இலக்கண அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியாமல், விட்டுவிடுகிறீர்கள். மொழிபெயர்ப்பு சமயங்களில் இரண்டு மொழிகளுக்கு இடையேயான போர் அது. தமிழில், ‘உங்க அப்பாவுக்கு நீ எத்தனையாவது பிள்ளை?” என்பதை ஆங்கிலத்தில் சொல்ல முடியாது. மொழிபெயர்ப்பு விடுதல்கள் தவிர்க்க முடியாதவை. அதேசமயம் நம் மொழியிலான சாத்தியங்களைச் செய்தால் என்ன என்பது எனது நிலைப்பாடு. இன்னொரு விஷயம். HAMLET WITHOUT HAMLET  - என்ற ஷேக்ஸ்பியரின் வாசகத்தை எப்படி தமிழ்ப் படுத்த முடியும்? ஹேம்லெட் ஒரு குறுநில மன்னன். அவனது சிறு நாட்டின் பெயரும் ஹேம்லெட். அவன் இறந்துவிட்டான் என்பதை ஷேக்ஸ்பியர் இப்படிச் சொல்கிறார். HAMLET WITHOUT HAMLET.  இதைத் தமிழில் சொல்ல வேண்டியிருக்கிறது. அறிஞர் அண்ணா இதை, மணமகன் இல்லாத திருமணம் போல, எனச் சொல்வதை நான் வரவேற்கிறேன். போயடிக் லைசன்ஸ்,என்பார்கள். அது அனுமதிக்கப் பட்டுவிட்டது. டிரான்சிலேட்டர்ஸ் லைசன்ஸ், தாருங்கள் என்பது வேண்டுகோள்.
ஆங்கில மது பானங்களைச் சொல்லி வரும் ஒரு கவிதையை தமிழில் நமக்குப் பரிச்சயமான மது வகைகளுடன் சொல்லும் ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை வாசித்திருக்கிறேன். நமது தேவை என்ன? வாசகனுக்கு மூலாசிரியனின் செய்தியை நழுவ விடாமல் கூறுதல், கைமாற்றுதல், அதைச் சரியாகச் செய்கிறதாகவே நாங்கள் நம்புகிறோம். அவர்கள்? அவர்கள் செய்தியைச் சரியாகச் சொல்கிற பாவனையில் சுவாரஸ்யத்தை நழுவ விடுகிறார்கள். அசுவாரஸ்யப் படுத்தி விடுகிறார்கள் அவர்கள்.
‘கதீட்ரல்’ என்கிற ஒரு சிறுகதை., ரேமண்ட் கார்வர் எழுதியது. இதை வேறு சிலரும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழில் கூட தலைப்பை ‘கதீட்ரல்’ என்றே பயன்படுத்தினார்கள். நான் ‘வேதக்கோவில்’ என வட்டாரச் சொல் பயன்படுத்தினேன். அதில் ஒரு பார்வையற்றவன் பாத்திரம் வரும். அவனுடன் அமர்ந்து வீட்டுக்காரன் டிவி பார்த்துக் கொண்டிருப்பான். டிவியில் ரோம் நகரத்து ஒரு புராதன கதீட்ரல் காண்பிப்பார்கள். பார்வையற்றவன் வேதக்கோவில் எப்படி இருக்கும், என்று ஒரு கேள்வி கேட்பான். பார்வை உள்ளவனால் பார்வை அற்றவனுக்கு அந்தக் காட்சியை விளக்க முடியாது. அவனது வார்த்தைகள் கொண்டு பார்வை அற்றவனுக்கு அந்தக் காட்சியை  விவரிக்கவே முடியாமல் போகும். இவன் சொல்லச் சொல்ல அவன், பார்வை அற்றவன் மேலும் குழப்பமான கேள்விகளைக் கேட்பான்.
எழுத்தாளர் தமிழ்மகன் கேட்ட ஒரு கேள்வி. பார்வை அற்றவன், வேதக்கோயில் எப்படி இருக்கும், என்று கேட்டவுடன் வீட்டுக்காரன் தன் காட்சிக்கு வார்த்தை வடிவம் கொடுக்க ஆரம்பித்து, அது முழுமையாக பார்வை அற்றவனுக்கு விளக்கம் தராது, என தானே புரிந்து கொள்வான். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை, என இங்கே நான் அவனது திகைப்பை எழுதி யிருந்தேன். அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடக்கும் கதை இது, இங்கே மதுரை எப்படி வந்தது?... என்று கேட்டார் தமிழ்மகன். தமிழ் மக்கள் சுலபமாக விளங்கிக் கொள்வார்கள், என்று நீங்கள் இப்படிக் குறிப்பிட்டீர்கள், என்றால் இன்னொரு கேள்வி. மூல மொழியில் இருந்து பல கதைகள் ஆங்கிலத்துக்கு வருகின்றன. ஆங்கிலத்தில் இருந்து நீங்கள் அந்தக் கதையைத் தமிழில் மொழிபெயர்க்கிற மாதிரி, உங்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் இருந்து வேற்று மொழிக்கு இதை யாராவது மொழிபெயர்த்தால், மதுரை போன்ற பிரயோகங்கள், மொழியாக்கத்தில் மேலும் குழம்பிப் போகாதா?... என்றுகேட்டார் தமிழ்மகன்.
தமிழில் இருந்து மொழிபெயர்க்கிற ஒருத்தர், மதுரை என்பது தமிழ்ச் சூழலில் வந்த வார்த்தை என்றுகூடத் தெரியாமலா அதை மொழிபெயர்க்க வந்தார்... என்று நான் திருப்பிக் கேட்டேன். அப்படி ஒருவரை மொழிபெயர்ப்பாளர் தகுதியிலேயே சேர்க்கலாமா? மூலத்தில் உள்ளதை, அதன உணர்வு மட்டத்தில் சட்டென ஒரு உணர்வு வியூகத்துக்குள் வாசகனைக் கொண்டுவர படைப்பாளன் முயல்கிறான். மொழிபெயர்ப்பாளனும் முயல்கிறான்... என்று நான் விளக்கம் அளித்தேன்.
ஒரு மொழியில் மொழிபெயர்க்கிறவன் அந்த மொழியில் பாண்டியத்தியம் இல்லாதவனாய் இருத்தல் சோகமானது. அவன் வேறு வேலை எதுவும் இருந்தால் பார்க்கலாம். வார்த்தைகளைத் தேர்வு செய்வதில் அவன் திணறக் கூடாது. திக்குவாய் போல, திக்குமொழி அறவே கூடாது.
இதை வாசிக்கையில் ரமேஷ் வைத்யா ஒரு வகையில் தன் பாதிப்பைச் சொன்னார். ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் அடியில் கனம் என நம் பழக்கத்தில் ஒன்று கிடைக்கிறது. மதுரை என்றால் எனக்கு மீனாட்சியம்மன், பாண்டி நாடு... என எத்தனையோ அடிவண்டல்கள் கிளரப்பட்டு வாசனை மேலே வருகிறது. இப்போது இந்தக் கதையை விட்டு நான் விலகி விட வில்லையா... என்பது அவரது கேள்வி. நியாயமான கேள்விதான். உவமை என்று ஒன்றைப்போல ஒன்று என்று சேர்த்துச் சொன்னாலே இந்த அவஸ்தை இருக்கவே செய்கிறது. எந்த ஒன்றும் இன்னொன்று அல்ல. எதையும் இன்னொன்றாகப் பார்க்க இயலாது. அது மற்றும் இது, என இரண்டுமே அவற்றின் தனித்தன்மை காரணமாகவே ஜீவித்திருக்கின்றன. ஒப்புமை, அல்லது பிறிதொன்றைச் சுட்டிக் கதைத்தல் சுவாரஸ்யத்துக்காக மாத்திரமே. எளிதில் அந்த சூழலை விளக்க மாத்திரமே. படைப்பாளன் சொன்ன  தோரணை, அவன் காட்டிய வியூகம், அதைத் தாண்டி நீங்கள் தான் பிடி விலகிப் போகிறீர்கள், என நான் எடுத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது.
அதற்கும், அந்த உதாரணம் பிடி விலகிப் போக வைக்கிறது, என வாதங்கள் நீளக் கூடும்!
இதே தர்ம சங்கடம் எனக்கு எனது ‘மற்றவர்கள்’ நாவலை முனைவர் மறைமலை இலக்குவனார் வாசித்தபோது நேர்ந்தது. அந்த நாவலில் வீட்டு வளாகக் கதவை ஒருவர் திறப்பார். உள்ளே யிருந்து நாய் ஒன்று பாரதியார் போல, அந்நியர் வந்து புகல் என்ன நீதி, என்று குரைத்தது - என எழுதி யிருப்பேன். ஆகா பாரதியாரை நாயோடு சேர்த்தா சொல்வது, என அவருக்குக் கோபம் வந்து விட்டது. இது எழுத்தாளனுக்கு ஏற்படும் விபத்து அல்லது சிக்கல் தான். அதைத் தவிர்க்க முடியாது.
மன்னிக்கவும் ரமேஷ் வைத்யா. மறைமலை ஐயா.
இன்னொரு கேள்வியும் முன் வைக்கப் பட்டது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு பாணி என்று அமைகிறது. மூல மொழியில் அவன் எழுதியதை, நீங்கள் தமிழிலேயே எழுதியதைப் போல வாக்கிய அமைப்புகள் தந்தால், மூல எழுத்தாளனுக்கு அது நியாயம் எப்படிச் செய்யும்? அவருக்கும் நான் பதில் சொன்னேன் - ஒரு கதையை நானும் மொழிபெயர்க்கிறேன். இன்னொரு நபரும் அதை மொழிபெயர்க்கிறார்... என்று வைத்துக் கொள்வோம். வாசித்துப் பாருங்கள். இரண்டு மொழிபெயர்ப்புகளும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது?
ஆக எல்லாருமே அவரவர் மொழியில் தான் மொழிபெயர்க்கிறோம். மூல ஆசிரியன் தன் மொழியில் நடையில் காட்டிய சுவாரஸ்யங்களைக் கட்டாயம் மொழிபெயர்ப்பாளன் தன் ரசனை அடிப்படையில், அதிகபட்சமாக தன் மொழியில் சாத்தியப்படுத்தவே முயல்வான். அவன் அடிப்படையில் மூல எழுத்தாளனின் மிகச் சிறந்த வாசகன். அதைக் கொண்டுவராமல் அந்த மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளனுக்கு திருப்தி வராது, என்றும் எடுத்துச் சொன்னேன்.
அப்புறம், மிக முக்கியமான விஷயம். மொழிபெயர்ப்பு என்பது என்ன? மூலத்தை வாசிக்க வாய்ப்பு இல்லாதவனுக்கான ‘இலுப்பைப் பூ’ சர்க்கரை. மூலம் வாசிக்க வாய்த்தவன் மொழிபெயர்ப்பைப் புறந்தள்ளி விடலாம். இது எதற்கு அவனுக்கு? இரண்டாவது விஷயம், மொழிபெயர்ப்பு நூல்களை வாசிக்கிறவன், சராசரி வாசகனுக்கு அடுத்த மேம்பட்ட நிலையில் உள்ளவன் தான். வாசிப்பு ருசியும், எதை வாசிக்க வேண்டும் என்ற தேர்வும் உள்ளவன் தான் மொழிபெயர்ப்பு படைப்புகளை வாசிக்க வருகிறான். இதையெல்லாம் கருத்தில் கொண்டே மொழிபெயர்ப்பு, அதன் நுணுக்கமான தளத்தில் மேலதிக வசதிகளுடன் இயங்கலாம், என்பது எனது கொள்கை.
இந்த மொழிபெயர்ப்புப் பயணத்தில் விமலாதித்த மாமல்லன் வேறு ஒரு கருத்தை அவசரமாகப் பதிவு செய்திருந்தார். ஆதிக்க மாமல்லன். முல்க் ராஜ் ஆனந்தின் ‘விடியல் முகம்’ என்கிற நாவலின் என் மொழிபெயர்ப்பில், முன்னீடு நான் தந்திருந்தேன். அதில் மொழிபெயர்ப்பு என்பது இருவர் ஓரணியாக ஆடும் டென்னிஸ் ஆட்டம், என்று சொல்லி யிருந்தேன்.  ஒரு மொழிபெயர்ப்பில் மூல ஆசிரியனுக்குக் குறைந்தது அல்ல மொழிபெயர்ப்பாளனின் பணி. அவர்கள் இருவருமாகவே அந்த மொழிபெயர்ப்புப் பணியில் இயங்குகிறார்கள். அது ஓர் டென்னிஸ் இரட்டையர் ஆட்டம், என்று நான் சொன்னதை விமலாதித்த மாமல்லன் கேலி செய்கிறார். “டென்னிஸ் நான்கு பேர் ஆடும் ஆட்டம் அல்லவா, மீதி இரண்டு பேர் எங்கே?” என்று எழுதி யிருந்தார். எங்கள் தரப்பில் எதிரணி ஆட்டக்காரர்கள் வாசகர்கள், இலக்கியம் என்பதே பகிர்தல் தானே... அவர்களே மற்ற இருவர் என்பது வெளிப்படை. இதில் அவர் புரிந்துகொள்ள சிரமம் என்ன, மேலடி அடிக்க அவருக்கு ஏன் அவசரம், என்று புரியவில்லை. அவருக்கு நான் அப்போது பதில் சொல்லவில்லை.தேவையும் இல்லை, என நினைத்தேன்.
3
இந்த எழுத்துப் பயணத்தில் நான் மொழிபெயர்ப்பைப் பொறுத்த அளவில் சில தெளிவுகளுக்கு வந்திருக்கிறேன். முதல் கதையில் இருந்தே, இத்தனை ஸ்பஷ்டமாக என்னால் அப்போது சொல்ல முடியா விட்டாலும், அந்தத் தெளிவு என்னிடம் இருந்ததாகத் தான் நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு என்பது குமாஸ்தா வேலை அல்ல. மொழிபெயர்ப்பு என்பது சொந்தப் படைப்புக்கு சற்றும் சளைத்தது அல்ல. ஒருவரது சுய படைப்புகளைப் போலவே, அவரது மொழிபெயர்ப்புக்கும் நோக்கும் போக்கும் உள்ளது. இருந்தாக வேண்டும்.
ஒரு காலத்தில், எனது இளம் பருவத்தில், எனது ஆறாவது ஏழாவது வகுப்புப் பருவத்திலேயே எங்கள் ஊர், ஸ்ரீவைகுண்ட நூலகத்தில் மொழிபெயர்ப்பு நூல்கள் நான் நிறைய வாசித்திருக்கிறேன். யாரும் எடுக்காமல் புதிதாய் அவை எனக்குக் கிடைத்தன. முழுசும் புரியாவிட்டாலும், அந்த என் வயதுக்கு இவை புரிய காலம் எடுக்கும் என எனக்கே தெரிந்திருந்தது. என்றாலும் வாசிப்பு ஆர்வம் எனக்குக் குறையவில்லை. புரியவில்லை என்பது பிழை அல்ல. காத்திருப்பேன். நான் கற்றுக் கொள்வேன், என்றிருந்தது. அந்த மொழிபெயர்ப்புகளை மக்கள் வெளிநாடு, அதன் வாயில் நுழையாப் பெயருடைய ஊர்கள், புது மனிதர்கள், அவர்களது, நம்மில் இருந்து வேறான பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள், நம்பிக்கைகள், அந்த ஊர் அமைப்பு எல்லாமே வாசிக்க சுவாரஸ்யம், என்று வாசித்தார்கள். பட்டிக்காட்டான் பார்த்த மிட்டாய்க் கடை. மொழிபெயர்ப்புகள் அப்படி வேறொரு உலகத்தை நமக்கு அறிமுகம் செய்தது. கடும் பனி. தெருவெங்கும் பனி கொட்டி மூடிக் கிடக்கிறது. எங்கள் ஊர்ப் பூங்காவில் பன்னீர்ப் பூ உதிர்ந்து தரையே மூடிக் கிடக்கும். அந்த நாட்டின் அந்த ஊரில், பாரப்பா, பனியே இப்படி மூடிக் கிடக்கிறது. அதெல்லாம் வாசிக்க ஆச்சர்யம்.
பிறகு முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம் என்று ருஷ்ய மொழிபெயர்ப்புகள் நிறைய வர ஆரம்பித்தன. அவை கம்யூனிச சித்தாந்தத்தை வளர்த்தெடுக்கும் பணியில் பங்காற்ற ஆரம்பித்தன. புரட்சி பேசின அவை. வர்க்கம், பூர்ஷ்வா என புது வார்த்தைகளை அவை நம் புழக்கத்துக்குக் கொண்டு வந்தன. போராடுவதே வாழ்க்கை, என்றன அவை. தொண்டர்கள் போராடட்டும், தலைவர்கள் அதன் பயனை அனுபவிக்கலாம்.
அந்த நாட்டின் கொள்கைகளைப் பரப்பவே அவை தமிழில் மொழிமாற்றம் கண்டன. அது ஒரு கால கட்டம்.
விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்தில் இப்போது வேற்று நாடுகள், அதன் செய்திகள், தத்துவப் பார்வைகள் என எல்லாமே இப்போது நமக்கு அறிமுகம் ஆகிவிட்ட நிலையில் மொழிபெயர்ப்பில் அந்த ’முந்தைய கால’ சுவாரஸ்யம் வாசகனுக்கு இப்போது இருக்க வாய்ப்பு இல்லை, என நான் நினைத்தேன்.
அப்படியானால் இன்றைய கால கட்டத்தில் மொழிபெயர்ப்பின் பணி என்ன? பங்களிப்பு என்ன?
மனிதன் எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் அவன், உணர்வு அடிப்படையில் ஒருவன்தான், என நான் நம்புகிறேன். WAR, BEER சார்ந்த கதைகளைத் தாண்டிய இன்றைய உலகில் கதைகள் மனிதனைப் பொதுமனிதனாக, ‘உலக மனிதனாக’ அடையாளம் காட்ட வேண்டும். இலக்கிய உலகின், மொழிபெயர்ப்பு உலகின் தேவை அதுவே, என நான் நினைத்தேன்.
என் கதைகளை ஆகவே நான் அப்படித்தான் மொழிபெயர்க்க எனத் தேர்வு செய்கிறேன். அன்டன் செகாவ் பொது மனிதனைத் தான் தன் கதைகளில் படைக்கிறார். ஹெமிங்வே கதைகளில் மனிதன் மகத்தானவன் என்ற குரலே பிரதானமாக ஒலிக்கிறது. நான் மொழிபெயர்க்கும் கதைகளில் என் கவனம், மனிதன் உணர்வு அடிப்படையில், தமிழனும்,வேற்று நாட்டவனும் வேறு வேறானவன் அல்ல, என்றே கூற வருகின்றது. என் மொழிபெயர்ப்பின் அடிப்படை நோக்கமாக, அடிநாதமாக, ‘உலக மனிதனே’ இருக்கிறான். தமிழ் இலக்கியத்தில் தனி மனிதனைத் தாண்டி, ஒரு சமுதாய மனிதனை வகைமாதிரியாக நாம் முன்னிறுத்துகிறோம். அப்போது தான் அதற்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்கிறது. அதேபோலவே, மொழிபெயர்ப்பில், நான் தேர்வு செய்யும் கதைகளில், ‘உலக மனிதன்’ அடையாளம் பெறுகிறான்.
GO LOVELY ROSE - ஹெச்.ஈ.பேட்ஸ் என்கிற  இங்கிலாந்து எழுத்தாளரின் கதை. ‘டேட்டிங்’ என்று பெண் காதலனுடன் கிளம்பிப் போய்விடுகிறாள். அன்றைக்கு இரவு அந்தப் பெண்ணின் அப்பா தூக்கம் வராமல் வீட்டு வாசலில் அந்த இரவு முழுசும் தவிக்கிறார். வீட்டு வாசல் தோட்டத்துப் பனியில் இங்குமங்கும் விடிய விடிய நடந்தபடி தன் பெண்ணுக்குக் காத்திருக்கிறார்... என்பது கதை. இதை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அவரது உணர்ச்சிகள் ‘எல்லா’ தந்தைக்குமானது தானே?
உலகப் பொது மனிதன், என என் மொழிபெயர்ப்புப் பாத்திரங்களை வாசிக்கையில், மேற்சொன்ன கேள்விகள், சந்தேகங்கள் என் மொழிபெயர்ப்பு வியூகம் பற்றி, எழ வாய்ப்பே இல்லை, என்று தோன்றுகிறது. நான் மொழிபெயர்க்கும் கதைகள் வெறும் சுவாரஸ்ய நகல்கள் அல்ல. அது அல்ல என் பணி. இது எனக்குத் தெரியும்.
--
பின் குறிப்பு
தமிழக முதல்வர் அறையில் தகுதியுரைப் பட்டயமும் பொன்னாடையும் ரூபாய் ஒரு லட்சம் காசோலையும் அமைந்த ‘2018ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது’ 19 02 2019 அன்று பெற்றுக் கொண்டேன்.
storysankar@gmail.com
9789987842 - 9445016842

No comments:

Post a Comment