பகுதி 4
இரு துளி
கண்ணீர்
எஸ். சங்கரநாராயணன்
தூர்தர்ஷனில்
(இப்போது பொதிகை) எனது முதல் படைப்பு பற்றி ஒரு பத்து நிமிடப் பேட்டி. அந்த முதல் படைப்பை
எழுதியதற்கு நான் வெட்கப் படுகிறேன், என்று சொன்னேன். அது அல்லாமல் அதைவிடச் சிறந்த
படைப்பு ஒன்றை நான் தர அது உந்தியது, என்பது
உண்மை. ஆகவே என் சிறந்த படைப்புக்காக நான் நகர்ந்து கொண்டிருக்கிறேன், என்றேன்.
எப்போதுமே சொல்லி முடித்ததும் சொல்லியதில் சொல்லாமல் விட்டதை ஓர் எழுத்தாளன் உணர நேர்ந்து
விடுகிறது. இது வளர்ச்சியா தளர்ச்சியா சொல்ல முடியவில்லை.
ஒரு பெரிய கட்டடத்தின் முதல் செங்கல் அத்தனை நினைவுக்குரியது
அல்ல. அத்தோடு நதிமூலம் ரிஷிமூலம் போல இந்த ஆரம்ப காலகட்டம், அது எதிர்பாராத் தன்மை
கொண்டது. அதில் இருந்து இது என்கிற தர்க்கங்களைத் தாண்டி நகர்கிறது வாழ்க்கை. ஒரு கட்டத்தில்
நல்லவனாகவும், அவனே இன்னொரு கட்டத்தில் வில்லனாகவும் வாழ்க்கை நமக்கு அறியத் தருவதை
உணர்ந்துகொள்ள வேண்டும்.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. வேதியியல் மதுரை சரஸ்வதி
நாராயணன் கல்லூரியில் படிக்கையில் எழுத வந்ததாக நினைவு. என் முதல் கதை வெளியான காலகட்டம்.
1977 - 78. எழுத்தைப் பற்றிப் பெரிசாக எதுவும் தெரியாது. பெரிசாக என்ன, எதுவுமே தெரியாது.
தெரியாது என்பதும் தெரியாது.
மிக மோசமான மாணவனாகவே கல்லூரிப் பருவம் எனக்கு அமைந்தது.
பொறுப்பற்ற கோவில்காளைத் தனம் என்னிடம் இருந்தது. ஒரு காரணமும் அற்ற திமிர். தேவையற்ற
நிமிர்வு. எல்லாம் அதுவாகவே தானாகவே நல்லது எனக்கு நடக்கும். நடக்காமல் எப்படி, என்கிற
அசட்டு நம்பிக்கை. அப்படியொரு பாதுகாப்பான வசதியான சூழலோ பாசம் மிகுந்த குடும்பம் என்றோ
இல்லை தான். ஆனால் கேட்க ஆளில்லாத தான்தோன்றித் தனம். வழிகாட்ட எடுத்துச்சொல்ல ஆள்
இல்லை.
இதில் உலகுக்கு அறிவுரைகள் வழங்க எனக்கு ஆசை. அந்தப் பதின்
பருவ ஆரம்பத்தில் இருந்தே பிள்ளைகளுக்கு ஒரு கிறுக்கு. தானாகவே யோசிக்கிற பாவனையில்
பெரியவர்களிடத்தில் ஓர் அலட்சியமும், தனக்கே சொந்தமாக எல்லாம் தெரியும் என்கிற ஆணவமும்
ஒட்டிக் கொள்ளும் பருவம். சற்று வெளியே எல்லாம் சிறப்பாக இருப்பதாகவும் நம் இந்தச்
சூழலையிட்டு சிறு ஆதங்கமும் வருகின்றன அப்போது. சைக்கிள் கத்துக்கிறவன் எடுத்த ஜோரில்
மகா வேகமாக தலைமுடி பறக்கப் போவானே, அதைப் போல. இது வாழ்க்கை சைக்கிள்.
சமுதாயச் சீர்கேடுகள் என்று மத்தவர்கள் சுட்டிக்காட்டியதை
வைத்துக்கொண்டு ஆத்திரக் கூத்தாடுவதன் மூலம் என் சமுதாயப் பொறுப்பைப் பறைசாற்றலாம்
அல்லவா? எங்காவது போராட்டம் என்றால் கூடப்போகலாம், பங்கெடுத்துக் கொள்ளலாம். எவன் குரல்
கொடுக்கிறானோ அவனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அழுத பிள்ளை பால் குடிக்கும், என்று
சும்மாவா சொன்னார்கள்?
இதயம் வழி காட்டும் வயசு. மூளையை மீறி உணர்ச்சித் ததும்பல்
அது. பதினாறு வயசில் கம்யூனிஸ்ட்டா இல்லைன்னா உனக்கு இதயமே இல்லை. நாற்பது வயதில் ஆன்மிகவாதியா
மாறாட்டி உனக்கு அறிவே இல்லை - என்று ஒரு சொலவடை உண்டு அல்லவா?
‘ஊர்வலத்தில் கடைசி மனிதன்.’ இப்படி ஒரு கவிதைத் தொகுப்பு
என்னுடையது.
பிரச்னைக்கு இரு பக்கங்கள் என்பதே தெரியாது அந்தக் காலத்தில்.
அது ஒரு பருவம். இளமைத் தினவெடுத்து சொறிய சுவர் தேடி அலைந்தேன் நான், என்று தோன்றுகிறது.
ஒரு ஆரம்பம் எல்லாருக்கும் தேவைப் படுகிறது அல்லவா? அது நல்ல
தருணமோ மோசமான தருணமோ. தருணங்கள் நிறைந்தது உலக வாழ்க்கை. அப்போது திருப்பங்கள் நிகழ்கின்றன.
அதைக் கணிக்கிறவன் கவனிக்கிறவன் அதை சற்று முன்னதாகவே உணர்கிறவன் அதைப் பயன்படுத்தி
முன்னேற முடியும். அதுவரை இல்லாமல் உலகம் அந்தத் தருணத்தில் புதியதாக மனசில் வண்ணங்
காட்டுகிறது. எனக்கு மோசமான தருணங்களின் வண்ணங்கள் கிடைத்திருக்கலாம்.
எனினும் வாழ்க்கையின் நெடிய பயணத்தில் எவையும் விரயம் அல்ல
என்றுதான் எண்ணுகிறேன். வாழ்க்கை அனுபவங்களின் பயிற்சிக் களம். நதியடிக் கூழாங்கற்கள்
நாம்.
அந்தத் தாவரத்தில் பூ ஒன்று மலர்வதைக் கண்டேன். அதுவரை அந்தப்
பூவுக்கும் அந்தத் தாவரத்துக்கும் சம்பந்தமே இல்லை. தாவரம் பச்சையாய் இருக்கிறது. அதில்
இந்த வண்ணம் எப்படிப் புகுந்தது. யார் பார்த்த வேலை இது? இரவில் அந்தப் பூ அங்கே இல்லை.
காலையில் ஆகா, எப்படி நிகழ்ந்தது அந்த அற்புதம்.
உண்மையில் அவை அற்புதங்கள் அல்ல. அவை பற்றிய கவனம் எனக்கு
அப்போது இல்லை. இப்போது எப்படியோ வந்தது.
அல்லது, வாழ்க்கையின் அன்றாடத்தில் அற்புதங்கள் நிகழ்ந்தவண்ணமே
இருக்கினற்ன. அவை உள்ளங்கையில் தரப் படுவது இல்லை. நீ எட்டிப் பறிக்க வேண்டும் அவற்றை.
அப்போது வாழ்க்கை வேறொரு பரிமாணத்தில், முப்பரிமாணத்தில் உன் உள்ளங்கைக்குள் சிறகு
புதுசாய் முளைத்த பட்சியாய் வந்து இறங்கும்.
வெளியே அன்றாடங்களில் இயங்கும் நாம், அதை மீறி ஒவ்வொரு ஆழ்மனமும்
சில குணங்களைத் தாங்கியே இயங்குகிறது. இதை நாம் அநேகர் உணர்கிறது இல்லை. அடிக்கடி ஆழ்மனசைத்
துருவி துழாவிப் பார்க்க முடிந்தவர் பாக்கியவான்கள். அவர்களிடம் பிரமைகள் கிடையா. இயல்பாகவே
அவர்கள் சாதனையாளர்களாகத் தங்களை வெகு சுருக்கில் தயார் செய்து கொள்கிறார்கள். இந்த
ஆழ்மன உந்துதல் மனிதனின் இயல்பான தினவு தான். அதுவே அன்றில் இருந்து இன்றுவரை மனிதனின்
நாகரிகத்துக்கு, வளர்ச்சிக்கு, விஞ்ஞான பதில்களுக்கு, மேம்பட்ட வாழ்க்கை முறைகளுக்கு,
வசதிகளுக்கு எல்லாம் ஆதாரம்.
கொண்டாட்ட குணங்கள் இளமையின் ஓர் அம்சம். இதில் ஒருபடி மேலான
கிறுக்கு எனக்கு இருந்தது. நான் கொண்டாடப்பட ஆசைப்பட்டேன். அதன் தகுதி என்ன, அதற்கான
தயாரிப்பு என்ன அதெல்லாம் தெரியாது. ஒரு கூட்டத்தில் தனியே நான் அடையாளப்பட வேண்டும்
என்கிற ஆசை. என் குரல் ஒரு கூட்டத்தில் ஓங்கி ஒலிக்கும். எதைப் பற்றியும் எனக்கு ஒரு
விமரிசனம் இருந்தாப் போல காட்டிக் கொண்டேன். குறைகுடம் ஆட்டம் போடத் தானே செய்யும்.
என் இதயத்தில் சொற்கள் குவிய உடுக்கை போல உள்ளதிர்ந்தபடியே
இருந்தது.
எப்படி எழுத்துக்கு வந்தேன் என்பதே வேடிக்கை. சுப. சுப்பிரமணியன்
என்கிற ஒரு நண்பன் என் கல்லூரிக் காலத்தில். எப்பவும் ரேடியோ கேட்டபடி யிருப்பான்.
அந்தக் காலத்தில் சிலோன் ரேடியோ தமிழ்நாட்டில் அப்படியொரு பிரபலம். அவன் கேட்டபடி,
சிலோன் ரேடியோவின் ஒரு அறிவிப்பாளர், கனகரத்தினம் என்பவர், தன் பெயரைக் கொஞ்ச நாட்களாக
முழுசாய், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், என்று அறிவிக்க ஆரம்பித்தார். அதை ஒரு துணுக்காய் குமுதம் இதழுக்கு எழுதிப் போட்டான் சுபா.
“இது வெளியிட தேர்வாகாது” என்று நான் மறுத்தேன். அது வெளியானது. எனக்கு ஆச்சர்யம்.
நான் பிறகு வேறொரு துணுக்கு எழுதிப் போட்டேன். அதுவும் வெளியானது. இப்படியாய் எனக்கு
எழுத்துக் கிறுக்கு பிடித்தது. அச்சில் என் பெயர் பார்க்கிற ஆவேசம். எழுதுவதை நிறுத்தவே
இல்லை நான். நான் எழுதியதை விட திரும்பி வந்த கதைகள் அதிகம்.
கல்யாணத்தில் நலுங்கு விளையாடுகிறாப் போல, அவர்கள் தேங்காய்
உருட்ட, நானும் பத்திரிகை ஆசிரியரும் கதைகள் பரிமாறிக் கொண்டோம்.
சுப. சுப்பிரமணியன் இப்போது ஐசிஐசிஐ வங்கியில் மேனேஜர். அவன்
எழுதிய ஒரே துணுக்கு அதுவே. என்னை எழுத்தாளன் ஆக்கிவிட்டு அவன் ஒதுங்கிக் கொண்டான்.
எனக்கு ஒரு போட்டி குறைந்தது.
கனகரத்தினத்துக்கு நன்றி.
எதையாவது எழுத என்று ஆரம்பித்து, பத்திரிகைகளின் தேவைக்கு,
என் கற்பனைக்கு என்று நான் எழுதிய கதைகள் பெரிதும் வரவேற்பு கண்டன. ஒரே வாரத்தில் பதிமூன்று
கதைகள் எல்லாம் வெளியான காலம் உண்டு. அப்போது சாவி, இதயம் பேசுகிறது இதழ்களுக்கு கிளை
இதழ்கள் உண்டு. ஒரு சம்பவம் அமைத்து அதில் ஒரு எதிர்பாராத் திருப்பம். ஒரு சோக நிகழ்வில்
ஆக சோகமான, நெஞ்சை நெருடுகிற முடிவு, இப்படி என் கதைகளை அடுக்கினேன். தமிழில் என்று
இல்லை உலகம் முழுசுமே துன்பியல் முடிவு கொண்ட கதைகளுக்கு ‘டிமான்ட்’ அதிகம்.
அந்த இளமையின் திமிர் வேறு. திமில் சிலிர்த்த காளை. சமுதாயத்தில்
விதவைகளே இருக்கக் கூடாது... என்று எனக்குக் கோபம். விதவை என்றால் என்ன, அவள் பிரச்னைகள்
என்ன, தெரியாது. கல்யாணம் என்றாலே தெரியாது எனக்கு. ஒரு பெண் விதவையானதும் அந்தப் பெண்ணைப்
பற்றி கண் காது வைத்து ஊரில் சலசலப்பு வருகிறது, என எனக்கு ஆத்திரம். இதைத் தட்டிக்கேட்கிற
வேகம், எழுத்தாளனைத் தவிர வேறு யாருக்கு வரும்? ‘ஒரு வெள்ளை உடுத்திய தேவதை’ என என்
சிறுகதை, தி வேர்ல்ட் இஸ் வெரி பிரிமிடிவ், என ஆங்கில வரியுடன் இந்தக் கதை முடியும்.
இந்தக் கதை எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்த அடுத்த வாரமே விதவைகளுக்கு
விடிவு காலம் வந்துவிடும் என நம்பினேன்.
அந்த வாசகியை சந்தித்தது ஒரு நற் தருணம் என்றுதான் தோன்றுகிறது.
தாவரத்துக்கு பூ முளைத்த வேளை அது. அந்தப் பெண்ணிடம் கரிசனம், இரக்கம், அன்பு எல்லாம்
வைத்திருக்கிறாய் சங்கர். “தேங்ஸ்,” என்றேன் பல்லிளிப்புடன். அப்புறம் ஏன் தலைப்பு,
‘ஒரு வெள்ளை உடுத்திய தேவதை’, என இத்தனை அலங்காரம்?... என அவள் கேட்டுவிட்டுப் போய்விட்டாள்.
கதைச் சூழலோடு தலைப்பும், பயன்படுத்தும் சொற்களும் பொருந்தி
இழைய வேண்டும், என முதன் முதலாக அந்தப் பெண் என் கண்ணைத் திறந்தாள். அவள் பெயர் கூட
மறந்து விட்டது.
அருமையான வாசகர்களை நான் என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன்.
இன்னொரு பெண், ‘நீங்க திருநெல்வேலிப் பக்கமா?’ என ஒருமுறை கேட்டாள். நான் பிறந்தது
ஸ்ரீவைகுண்டம். “ஆமா, எப்பிடிக் கண்டுபிடிச்சீங்க?” அவள் சொன்னாள். ‘மறதி’ கதையில்
அப்பளம் பொறிக்கக் கூட தேங்காய் எண்ணெய் இல்லை, என்று வருகிறது. தேங்காய் எண்ணெயில்
அப்பளம் பொறிக்கிறவர்கள் திருநெல்வேலி அல்லது கேரளாப்பக்கம் தான், என்றாள். அட இப்படியெல்லாம்
வாசிக்க வேண்டும், என பொறாமை ஏற்பட்ட கணம் அது.
இன்னோரு வாசகர். இவரும் பெண்தான். உங்கள் கதையில் ஆண் எழுதிய
கதை, என்கிற அடையாளம் இருக்கிறது. தவிர்க்கலாமே, என்றார். எனக்கு ஆச்சர்யம். மொட்டைமாடியில்
சட்டையைக் கழற்றிவிட்டு உட்கார்ந்தான், என ஒரு பெண் எழுத்தாளர் எழுத மாட்டார், என அவர்
விளக்கினார்.
இப்படி அபார வாசிப்பு சூட்சுமம் உள்ளவர்கள் தான் இலக்கிய
மேன்மைக்கு அடிநாதம் என்று தோன்றுகிறது.
என் நண்பர் இளசை எஸ். சுந்தரம் சொல்வார். சாதி அடையாளங்களே
வரக்கூடாது என அவர் ஒரு கதை எழுதினார். அதில் உள்ள சாதியை ஒரு வாசகர் சொன்னாராம். சாவில்
ரெட்டைச் சங்கு ஊதி பிணத்தை எடுக்கிறீர்கள், ‘அந்த’ சாதியில் மட்டும் தானே இப்படி?...
என்றாராம் அந்த வாசகர்.
‘கடல்காற்று’ என ஒரு நாவல். அது கோவை பாரதியார் பல்கலைக்
கழகத்தில் துணைப்பாட நூலாகப் பரிந்துரை பெற்றது. சில தன்னாட்சிக் கல்லூரிகளிலும் அது
பாடமாய் இருந்தது. உடுமலைப்பேட்டை ஜிவிஜி விசாலாட்சி கல்லூரியிலும் அது இருந்தபோது
அந்தக் கல்லூரியின் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் முன்னிலையில் நான் பேசினேன்.
ஒரு மாணவி எழுந்து, நாவலின் சம்பவங்களைச் சுட்டிக் காட்டி, அதன்படி கதாநாயகிப் பெண்ணுக்கு
வயது 62க்கு மேல் இருக்க வேண்டும், ஆனால் நீங்கள் வயது 58 என ஒரிடத்தில் குறிப்பிட்டீர்கள்,
என்றார்.
அந்த மாணவிக்காக ஒரு சிறப்பு கைதட்டல், என நான் மேடையில்
அறிவித்தேன். இப்படி நுணுக்கமான வாசகியைப் பெற நான் கொடுத்து வைத்தவன். மற்றபடி பதில்
தானே? அந்த அம்மையாருக்குத் தன் உண்மையான வயதைச் சொல்ல விருப்பம் இல்லை, அதனால் தான்
நான் குறைத்துப் போட்டேன், என்றேன். இப்போது நான் அறிவிக்காமலேயே கைதட்டல் கேட்டது.
வாசகர்கள் பலவிதம். என்னைப் பார்த்த கணம் மகிழ்ச்சியுடன்
முகம் வீங்க கைகொடுப்பார்கள். புத்தகக் கண்காட்சியில் ஒரு அன்பர் மதுரைக்காரர், சென்னைவரை
வந்தவர் என்னைப் புத்தகக் கண்காட்சியில் சென்னையில் சந்தித்தார். அடுத்த வருடமும் அவர் வந்திருந்தார். “சங்கரநாராயணன் உங்களைப்
பார்க்க முடியுமான்னு நினைச்சிக்கிட்டே வந்தேன்” என்றார்.
தற்போதைய வாசக அன்பர் டிகேயெஸ்.
ஒய்வுபெற்ற போலிஸ் ரைட்டர் இவர். விழுப்புரத்துக்காரர். நண்பர் ராகவபிரியன் திருமகளின்
கல்யாணத்தில் இவரைச் சந்தித்தபோது நெகிழ்ந்து போனார். சென்னை வந்தால் அவசியம் வீடுவரை
வருவார். வாய் வலிக்காமல் பேசுவார்.
கல்கி பத்திரிகையுடன் சிறு மனக்
கசப்பு ஏற்பட்டபோது நான் அதில் எழுதுவதை நிறுத்தி யிருந்தேன். ‘உயிரைச் சேமித்து வைக்கிறேன்’
என்கிற என் சிறுகதை நூலுக்கு தமிழக அரசு பரிசு கிடைத்தது. வாங்கிக் கொண்டு கீழே இறங்கியபோது
ஒரு மனிதர் என்னை நோக்கி ஓடி வந்தார். “நீங்க ஏன் இப்ப கல்கியில் எழுதுறது இல்லை. எங்கள்
வீட்டில் கல்கிதான் வாங்குவோம். அவசியம் கல்கியில் எழுதுங்கள்” என்றார். அவருக்குத்
தலைவணங்கி பிறகு கல்கியில் மீண்டும் தொடர்ந்தேன்.
வாசகர்கள் பற்றி அவ்வப்போது பகிர்ந்துகொள்ள
விருப்பம். ஓர் எழுங்ததாளனின் வாழ்க்கையில் வளர்ச்சியில் வாசகனுக்கும் கணிசமான பங்கு
உண்டு. நாம் எழுதும் விஷயத்தில் வாசகனுக்கு இன்னும் பரந்துபட்ட அனுபவம் இருக்கலாம்.
அல்லது அவனது கவனம், எழுதும்போது நாம் காட்டிய கவனத்தை விட அதிகமாகவும் அமையலாம். சுஜாதா
ஒரு வரி எழுதினார். “அவன் மூன்றாவது மாடியில் இருந்து நூற்றியெண்பது கி.மீ. வேகத்தில்
விழுந்து செத்துப் போனான்.” ஒரு வாசகர் அவரைத் திருத்தினார். “தவறு. கீழே இறங்க இறங்க
புவியீர்ப்பு விசையால் அவன் வேகம் அதிகரிக்கும். ஒரே வேகத்தில் அவன் கீழே விழ முடியாது.”
•
இரண்டாவது ஆண்டு பிஎஸ்சி. படிக்கும்போது
முதல் கதை வெளியானது. என்றாலும் எழுத்தில் ஓரளவு பிடி கிடைத்த கதை சுவாரஸ்யமானது.
என் அம்மாவுக்கு நான் கதைகள் எழுதுவது
பிடிக்கவில்லை. கதைகளைப் பிடிக்கவில்லை, என்பதல்ல. கதை ‘எழுதுவது’ பிடிக்கவில்லை. கல்லூரிக்காலம்.
படித்து மதிப்பெண் வாங்கினால் அவளுக்கு சந்தோஷம். அவங்க அப்படித்தான் நினைப்பார்கள்,
என எல்லாம் தெரிந்த அலட்சியம் எனக்கு.
நான் பி.எஸ்சி. பட்டப்படிப்பில்
தோற்றுப் போனேன். என் குடும்பத்துக்கு என்றில்லை. எனக்கே அது அதிர்ச்சி.
நான் சென்னையில். என் அண்ணனின் கடிதம்
தகவல் தெரிவித்து என் கையில். இரு துளி கண்ணீர் என்னில் இருந்து சொட்டி அந்தக் கடிதத்தை
நனைத்தது. அப்போது நினைத்தேன். எழுத வேண்டும் என்று ஆர்வத்தில் அல்லது ஆர்வக் கோளாறில்
வந்துவிட்டேன். கல்வி கைவிட்டு விட்டது. இனி எழுத்தாளன் ஆகியே தீர வேண்டும்...
கண்ணைத் துடைத்துக்கொண்டு நான் எழுதியனுப்பிய
கதை சாவியில் பிரசுரம் ஆனது. ஓரளவு கௌரவமாய் நடை, உத்தி என நான் முயன்றிருந்தேன் அதில்.
நான் எழுத்தாளன் ஆகி விட்டதாக என்னை உணர வைத்த கதை அது.
அம்மாவுக்கு ஓர் ஆறுதல் நான் வழங்கினேன்
பிற்காலத்தில். நான் எழுதி அச்சில் வந்த முதல் நாவல் ‘நந்தவனத்துப் பறவைகள்’ நான் பி.எஸ்சி.
முதல் முயற்சியில் தோற்று, (இரண்டாம் முயற்சியில் தேறினேன்.) அதே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்
எம்.ஏ. மாணவர்களுக்கு நவீன இலக்கியப் பாடநூலாக இடம் பெற்றது.
அழுகைகள் ஒருபோதும் அர்த்தம் இழப்பது
இல்லை.
*
storysankar@gmail.com
91 97899 87842
No comments:
Post a Comment