Friday, August 31, 2018

சனிக்கிழமை தோறும்
பகுதி 05

ப ற வை த் த ட ம்
எஸ். சங்கரநாராயணன்


வாழ்க்கை என்பதே பேரனுபவமாய் இருக்கிறது. வாயளவுக்கும் அதிகமான உணவு அது. கால துரித கெடுபிடியில், எதை உணர, எதை இழக்க என்ற திணறலில் இருந்து விடுதலை என்பதே இல்லை. பேரனுபவமும், ம/கிழ்ச்சியும், அடி வண்டலாய் சிறு சோகமுமானது வாழ்க்கை.
ஆனாலும் பரவாயில்லை. சோகப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. நேரமில்லை. வாழ்க்கை என்பJது குறுகிய ஒருவழிப் பாதை. மிக மிகவும் சிறுத்த இந்த வாழ்க்கைக் கையிருப்பில் அனுபவங்களை, வைரங்களை வாரியிரைத்து, ஆரவாரத்துடன் முன்னே முன்னே என்று திருப்பதி தரிசனக் கூட்டமாய் முன்னே மாத்திரம் நகர்கிறது காலம். விடுபட்டுப் பறக்கத் துடிப்பான பட்சியை, உள்ளங்கைக்குள் காபந்து பண்ணுகிற சிறுவனின் முயற்சியையே எழுத்தாளன் செய்கிறான் எனலாம்.
மணல்வீட்டைக் கலைத்துப் போகிற குறும்புக்காரக் காற்றைப்போல காலம் கனவுகளை எத்திச் சிதறடித்துச் செல்லப் பிரியம் கொண்டதாய் இருக்கிறது. பள்ளிக்கூட வாத்தியார் போல எழுதி எழுதி, அழித்துக்கொண்டே போகிறது அது. உருவங் கொள்ளுமுன் ஒரு விஷயம் கைநழுவி விடுமோ என்ற ஆதங்கக் குடைச்சலில், அறிந்த கொஞ்சத்திலும், இயன்ற அளவு தக்கவைத்துக் கொள்ளும் ஆவேசம் கிளர்ந்தெழுகிறது. அதிலும் நினைவில் சேமித்தது கொஞ்சமே கொஞ்சம். என்றாலும் அதாவது மிஞ்ச வேண்டும். அது முக்கியம்.
சற்றுமுன்
பறந்துகொண்டிருந்த
பறவை எங்கே
அது
சற்றுமுன்
பறந்துகொண்டிருக்கிறது.

புலன் வழிப்பட்ட நிஜத்தின் தரிசனம் கைநழுவிப் போகிற இயலாமையில், நகலெடுத்துக் கொள்ளுதல் தேவையாகிறது. நகலில் இருந்து மீண்டும் மீண்டும் நிஜத்தை மனதுக்குள் கொண்டுவந்து கொள்ள முடியும் அல்லவா?
சற்றுமுன் பறந்துபோன பறவையை, நினைவில் திரும்ப கொண்டுவரும் பிரயத்தனத்தில், பறவைக்கு அதே நிரந்தரமான இடம் மனது கொடுத்து விடுகிறது. நிஜத்தின் பிரதி இது. நகல்.
அதை அழிக்க காலத்துக்கு சக்தி கிடையாது. புயலாய்ச் சீறி, சினந்து அது வேரோடு மரத்தைப் பெயர்த்தால் தான் உண்டு. மனிதன் அப்போது சரணாகதி, என்றாலும் அது காலத்தின் தோல்விபயத்திலான ஆத்திரம், என்று அவன் புன்னகையுடன் செத்துப்போகலாம். அவனது வாழ்க்கை போலவே, அப்போது அவனது மரணமும் அர்த்தபூர்வமாகி விடும். நல்ல விஷயம் தான் அது, அல்லவா?
மனிதனைக் கலைத்துப் போடுகிற காலத்தை, ஆனால் கலைஞனோ சிறு புன்னகையுடன் அலட்சியமாக, முன்பின்னாகப் புரட்டிக் கூட, சீட்டு விளையாட்டில் மாற்றியடுக்கிப் பார்ப்பது போல, விளையாடுகிறான். தீராத சுவாரஸ்யமான விளையாட்டு அது. காலத்துக்கு ஆரம்பமும் முடிவும் ஏது? அதுபோல எழுத்தாளனுக்கும் ஓய்வு என்பதே கிடையாது. சுடருடன் விளையாடும் பூனைக்குட்டியாய் காலத்தோடு ஒரு விளையாட்டு.
காலம் தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டே யிருக்கிறது. அது காத்திருக்குமா யாருக்காகவேனும்? நிற்குமா? தேங்குமா? - அதுபோலவே கலைஞனுக்கும் ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் தொடர்ந்த வேலைக்கண்ணிகளால் அவன் பிணைக்கப் பட்டிருக்கிறான். இந்த ஈடுபாட்டில், சராசரி மனித வாழ்வே கூட, அவனுக்கு இரண்டாம் பட்சம் தான். அவனுக்கு ஏமாற்றங்கள் இல்லை. வறுமை இல்லை. தோல்விகள் இல்லை. வெற்றிகளும், அது சராசரியாகப் புரிந்துகொள்ளப் படுகிற அர்த்தத்தில், இப்படி நெருக்கடிகளில் இருந்து, கலைஞன், அவன் கலைஞன் ஆனதினால் தப்பித்தான், எனலாம்.
வாழ்க்கை பற்றிய அவதானிப்பின் இடையறாத முனைப்பில், அவனது பார்வை விசாலப் படுகிறது. தரிசனம் ஆழப் படுகிறது. தளம் விகாசப்படுகிறது... என தனி மனித எல்லைகள் விரிந்து கொடுக்கின்றன. நேற்றையும் இன்றையும் உறைய வைத்துப் பதனப் படுத்துகிற பிரயத்தனத்தில், சிறு நீட்சியாக, தன்னைப்போல நாளை என்கிற தொடர்-அம்சமும் அவனது கவன எல்லைக்குள் சேர்ந்து கொள்கிறது.
நாளை என்பது அடுத்த கட்டம். நாளை என்பது என்ன? நேற்றில் இருந்து புறப்பட்டு, இன்று வழியாக, நாம் போய்ச் சேரப் போகிற இடம்.
நாம் இறந்து காலத்துள்
நடந்து சென்று
எதிர்காலத்தை
அடைகிறோம்.

அடுத்த கட்டம் என்பது ஒரு கற்பனை. கனவு. அது இன்னும் சித்திக்காதது, என்ற பொருளில். அதை பிரமிப்பு விலக்கிய தன்னம்பிக்கையுடன் மனத் திண்மையுடன், ஆர்வத்துடன் எதிர்நோக்க, வரவேற்க, கலை கற்றுத் தருகிறது.
எடுத்துரைத்தல் பழக்கமாக ஆகிப் போனபின், எழுத்தில் ஒரு சீர், அணி, சங்கீதம், தாளக்கட்டு, அவரவர் பாணி, என ஏற்பட்டுப் போகிறது. யதார்த்தத்தின் சுருதி எல்லார்க்கும் பொது.
கூறியது கூறல் நமக்கானதல்ல. அதை, கிளிப்பிள்ளைகளுக்கு அந்த வேலையை விட்டுக் கொடுப்போம்.
காலப்போக்கில், அல்லது அடிப்படை நிலையில் வெளியே தெரியாமலும், பின் தெரிந்துமாக, தன்முகம் நிறுவிக் கொள்கிற ஆவேசம், எழுத்தின் ஊடுசரம். நதியில் நீர் அருந்தும் நாய் தன் முகம் பார்க்கிறாப் போல. ஒருவேளை எழுத்தின் மூலஸ்தானமும் அதுவாகவே இருக்கலாம். அதனால்தான் அவன் உற்சவம் கிளம்பியும் இருக்கலாம்.
இதிலும் ஒரு வளர்ச்சி நிலை, அபூர்வமான விஷயம் கலைக்கு. எங்கும் நாம் நம்மை நிறுவிக் கொள்ள வேண்டியது இல்லை. எங்கெங்குமான ஒன்று நம்முள் இருக்கிறது. நாம் இந்தப் பிரபஞ்சத்தின் துகள்களே, என்ற உணர்வு, ஆச்சர்யமாக ஒரு கலைஞனுக்கு ஒரு காகலகட்டத்தில் நிகழ்கிறது. எங்கும் தன்னை நிறுத்துகிற ஆவேசம் போய், எங்கும் தான் ஏற்கனவே நிறைந்திருக்கிற நிறைவு, எத்தகைய ஆனந்தம்.
காலகாலமாய் மனிதனின் போராட்டங்களும், அதுசார்ந்த முடிவுகளும், தத்துவ மயக்கங்களும், அதனின்று மீளலும் என்று இந்த வாழ்வின் தொடர் ஓட்டத்தில், ஒரு நிலையில், வாழ்க்கையே சிலரது கணிப்பில் தத்துவங்களாக, கருத்துருவங்களாக, இசங்களாக சுருங்கிப் போகிற அவலம் துயரமானது.
எந்தக் காலகட்டத்திலும் ஒரு சமூகம், நவீனத்திலும் அல்ல பழமையிலும் அல்ல, இந்த இரண்டு நிலைகளையும் இரு கரைகளாகக் கொண்டு நடுவே ஆறாகப் பெருகியோடிக் கொண்டிருக்கிறது. எனவேதான் தத்துவ தரிசன அடிப்படையில், முடிவை அல்ல, சற்று அடுத்த கட்டத்தைச் சுட்டுவதும், கவனப் படுத்துவதும் கலைஞனின் பணியாக இருக்கிறது. அதற்கு நம்பகத்தன்மை அவசியம். மட்டுமல்ல, பிறரையும் கூடக் கூட்டிப்போகிற சிறு அக்கறையாவது இல்லாமல் எப்படி?
கல்வியும் மதமும் அரசியலும், வாழ்க்கையைத் தத்துவ விசாரத்துக்குள் சுருக்கி விடுகின்றன. அவ்வளவில் சருக்கியும் விடுகின்றன. அவை நிறுத்துப் பார்க்க முயல்கின்றன, சரிதான். யாரிடம் இருப்பது சரியான தராசு என்பதிலேயே ஆளாளுக்குச் சிக்கல்.
கலை எடைபோட வில்லையா? அதுமாத்திரம் சரி, என்று எப்படி நிர்ணயம் செய்து கொள்வது... என்றால், முடியாது தான். ஆனால்...
இன்னொரு விஷயம் சொல்லி இந்த ஆனாலுக்கு வருவோம். அரசியல் என்ன சொல்கிறது, தனிமனித முயற்சிகளை அது ஒருமாற்று குறைத்து, கணக்கில் சேர்த்துக் கொள்ளாமல், அது சமூக முன்னேற்றம் பற்றி  கவலைப்படுகிறது அரசியல். பெரும்பான்மைதான் அங்கே கணக்கில் இருக்கிறது.
மதமோ கல்வியோ, இதன் எதிர்நிலை கொள்கின்றன. தனிமனிதனுக்கு அவை அதிக முக்கியத்துவம் தருகின்றன். அதன்மூலம் சமூகத்தை, அதன் எழுச்சியை உத்வேகப் படுத்த முடியுமா என அவை யத்தனிக்கின்றன.  தனிமனித வேறுபாடுகளில் மதம் எதிர்மறையான விளைவுகளையும் அநேகத்தரம் சந்திக்கிறது.
இப்போது ஆனால்...
ஆனால்... கலை என்ன செய்கிறது, அது தனிமனிதப் பிரச்னை போல, ஒரு சமூகப் பிரச்னையைச் சொல்லிப் பார்க்கிறது. எழுத்தாளனின் தேர்வு அடிப்படையில், அந்தத் தனிமனித ‘வகைமாதிரி’ (ஸ்பெசிமன்) ஒரு குறிப்பட்ட தளத்தில் இயக்கப்படுகிறான். ஒரு குறிப்பிட்ட தீர்வை நோக்கி. அதாவது ஒரு தனிமனிதப் பிரச்னை, தனிமனிதத் தீர்வாக முன்வைக்கப் படுகிறது. படிக்கிற வாசகன் அதைத் தன் பிரச்னையாக உணர வேண்டியது இல்லை. தனக்கான தீர்வாகவும் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை. அது அவனது அப்போதைய பிரச்னையாகக் கூட அப்போது இராது போகலாம். அந்தப் பாத்திரத்தின் தீர்வு இதுவானால், அதே பிரச்னைக்குத் தன் தீர்வ என்ன என அவன் தனக்குள்  சிந்திக்கிற, முடிவெடுக்கிற உரிமையைக் கலை வழங்குகிறது. அவனை ‘தன்’ பிரச்னையைப் பற்றிய யோசனைகளைக் கிளர்த்தி, அதன் தீர்வையும் ‘தானே’ முடிவெடுக்கிற சுதந்திரத்தையும் அவனுக்குத் தந்து, அதேசமயம் அவனை யோசிக்கப் பழக்கப் படுத்தி, தெளிவாக்க கலை உதவுகிறது. அருமையான விஷயம் இது அல்லவா?
அரசியலோ கல்வியோ மதமோ போல, வாழ்வில் இருந்து மனிதன் பெற்றது சாறு. தத்துவக் கூறு. தத்துவக் கடிவாளத்துடன் வாழ்க்கையைப் பார்க்கிற போதே வாழ்வின் தளம் சிறுத்துப் போகலாம் ஒருவேளை.
கலை வாழ்க்கைக்கு மேலதிக நியாயம் செய்கிறது.
எழுத்து வீர்யத்தைக் காவு கொடுக்காமல், இழக்காமல் சற்று பரந்த தளத்தில் சமூகத்துக்கு அறிமுகம் ஆகிறது நல்ல விஷயந்தான். சில சமயம் அப்படி விபத்துகள், அல்லது வாய்ப்ப்புகள் நேர்ந்துதான் விடுகின்றன. சில படைப்புகளைப் படைக்கிற போது, அட இது இன்னும் விரிவான தளத்தில் அறியப்படலாமே என்கிற யோசனை வருவதும் இயல்பான ஒன்றே. ஒருவேளை பரிசுகளால் அது சாத்தியப்படவும் கூடும், என்கிற கணிப்பில், அந்த விபத்தும் நிகழ்ந்ததான கணத்தில், அந்தப் படைப்பு தன்னை ஓரளவு நிறுவிக் கொண்டாற் போல, மன அமைதியும் கிட்டுகிறது.
இதுவரை தனது படைப்புகளால் தன் வாசகரை கௌரவப்படுத்தி வந்த கலைஞன், தன்னையும், அதன்மூலம் தன் வாசகரையும் ஒருசேர கௌரவம் அளிக்கிற முயற்சியைக் கைகுலுக்கி ஏற்றுக் கொள்கிறான்.
மானுடப் பொதுவாழ்வின் சற்று அடுத்தகட்டத்தைச் சுட்டும் பொறுப்புமிக்க கலைஞனுக்கு, பரிசுகள் சில சமயம் தன் எழுத்தின் தீவிரத்திலும், போக்கிலுமே கூட அடுத்த கட்டத்தைச் சுட்டிக் காட்டிவிட வல்லதாய் அமையக் கூடும்.
பரிசுகளை விட, இப்படித் தேடி வாசிக்கிற, வாசித்துத் தேர்வு செய்கிற, கௌரவிக்கிற நபர்களும், அமைப்புகளும், இயக்கங்களும் இருப்பதே ஆரோக்கியமான செய்திதான். எந்த மொழிக்கும் எந்த நாட்டுக்கும் எந்தக் காலத்துக்கும் அது தேவை. மிகத் தேவை.
முக்கியமாய், படைப்புக்கான பரிசு என்பது, அவனது மிகச் சிறந்த வாசகர்களால் நிர்ணயம் பெறுகிறது. ஒரு கலைஞனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

 •

‘நேற்று இன்றல்ல நாளை’ நாவலுக்கு அக்னி அட்சர விருது 
பெற்றுக்கொண்ட ஏற்புரை (14,02,1997)
91 9789987842
storysankar@gmail.com

2 comments:

  1. ” முக்கியமாய், படைப்புக்கான பரிசு என்பது, அவனது மிகச் சிறந்த வாசகர்களால் நிர்ணயம் பெறுகிறது. ஒரு கலைஞனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? ” - சீரான ஆரம்பம் ; சிறப்பான முடிவு . ஆமாம் ... பகுதி 4 ஐ பகுதி 5 முந்தியதின் மர்மம் என்னவோ ?

    ReplyDelete
  2. அருமைங்க அய்யா ஒரு கலைஞனின் எதிர்பார்ப்பு

    ReplyDelete