பகுதி 06
தராசு 1 தராசு 2
எஸ். சங்கரநாராயணன்
ஜெயா டிவியின் ஒரு காலைமலர் நிகழ்ச்சிக்காக எனது பேட்டி,
அது ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு, நானே எதிர்பாராமல், என்னைக் கேள்வி கேட்ட அந்தப்
பெண் கலை சார்ந்த நுட்பங்களை நோக்கித் தன் கேள்விகளில் நகர்ந்தார். எனக்கு அது மிக
ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்து விட்டது. நிகழ்ச்சியின் முதல் கேள்வி இதுதான்.
“ஒரு படைப்பில் நிஜம் எவ்வளவு இருக்கிறது? கற்பனை எவ்வளவு இருக்கிறது? அதை எப்படிக்
கண்டுகொள்ள முடியும்?” ஒரு தொலைக்காட்சியின் காலைமலர் பேட்டியில் இப்படியொரு முதல்
கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் பதில் சொன்னேன். “படைப்பாளனின் படைப்பு ரகசியம்
அது. அந்தப் படைப்பில் படைப்பாளி இயங்கும்போது நிஜத்தோடு கற்பனையும் ஒரு விகிதத்தில்
தானே கலந்து கொள்கிறது, மண்ணும் மழைநீருமாய்.... அதைப் பிரித்தறிய முடியுமா? ஒரு படைப்பில்
நிஜத்தையும் கற்பனையையும் பார்ப்பது, சன்னல் வழியே வரிக்குதிரைகளைப் பார்ப்பது போல”
என்றேன்.
இப்படியே அரை மணி நேரம் மிக அற்புதமாக அமைந்தது பேட்டி. அந்தப்
பெண் வாழ்க. அவர் கேட்ட இன்னொரு கேள்வி எனக்கு நினைவில் இருக்கிறது.
“ஒரு நல்ல படைப்பு என்பது எப்படி இருக்க வேண்டும்?”
என் பதில். “எங்கு தொட்டாலும் ஷாக் அடிக்கக் கூடிய ஒரு ஒழுகும்
வீட்டைப் போல இருக்க வேண்டும்.”
ஒரு கலைஞன் எழுதுகையிலேயே தன்னளவில் ஊக்கமும் உற்சாகமும்
கொண்டு தன் படைப்பில் ஆனந்தக் குளியல் கொள்கிறான். அதன் திவலைகள் வாசகனையும் சிலீரென்று
எட்டித் தொடுகின்றன. ஜெயகாந்தன் ஒருமுறை ஆவேசப்பட்டார். சாகித்ய அகாதெமி விருதுகள்
எப்பவுமே வேண்டிவர்களுக்காக சிபாரிசு அடிப்படையிலேயே வழங்கப் படுவதாக ஒரு முணுமுணுப்பு
உண்டு. ஜெயகாந்தன் சொன்னார். “பேசாமல் சீட்டுல பேர் எழுதிப் போட்டு குலுக்கி எடுத்து
விடலாம். அப்பக்கூட ஒரு அதிர்ஷ்டத்தில் சரியான நபருக்குப் பரிசு கிடைக்க வாய்ப்பு கிடைக்கும்.”
ஒருமுறை கவிஞர் வாலி அவர்களை எனது புத்தக வெளியீடு ஒன்றுக்குப்
பேச அழைத்தபோது அவர் மறுத்து விட்டார். “எப்பவும் தொலைபேசி பக்கத்துலயே உட்கார்ந்திருக்க
வேண்டியிருக்கு எனக்கு. பாட்டு எழுத என்று உடனே கிளம்பி வரச் சொல்வார்கள். அப்பா பாத்ரூம்ல
இருக்கார்னு என் பையன் சொன்னாலே, ஃபோனை வைத்து விட்டு வேற ஆளைப் போட்டு விடுகிறார்கள்.”
ஒரு படைபப்புக்கான கரு உருவாவது தவிர, அதைச் சொல்லும் முறை
என்பது எழுத்தாளனின் தனி அடையாளம். பெரும் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளைக் கையாளும்
அநாயாசம் மனங் கொள்ளாக் காட்சி. மீண்டும் மீண்டும் அதை நம் மனம் நினைத்து நினைத்துப்
பார்த்து மகிழ வைக்கும். வியக்க வைக்கும். அப்படியொரு சொல்லாடலோ, உரையாடலோ, நுட்பமோ
அந்தப் படைப்பாளியின் அடையாளமாக நமக்கு அதில் துய்க்கக் கிடைக்கும்.
தி. ஜானகிராமனின் ஒரு கதை. ‘கோதாவரிக் குண்டு.’ பழைய பேப்பர்
எடுக்க வந்திருக்கிற வியாபாரியின் எதிரே வீட்டுக்காரர். இப்போது கதை அதே வரிகளில்.
தராசு முள்ளைப்
பார்த்தேன். தெய்வீக முள்ளாயிற்றே அது! அறுபது காகிதமானால் என்ன? அரைக் காகிதமானால்
என்ன? நடுநிலை பிசகுமோ! ஹும் நமக்கென்று சொந்தமாகத் தராசு வைத்துக்கொள்ள எப்போது காலம்
வரப்போகிறதோ, கை வரப் போகிறதோ, ஈசுவரா!
கடைசி வாக்கியத்தை
வாயைவிட்டே சொல்லிவிட்டேன். இப்படி ஏமாறுவதை எந்தப் புழுதான் சகிக்கும்?
“சாமி இந்தத்
தராசைப் பார்த்து இப்பிடிச் சொல்றீங்களே. எளுதின கார்டுக்கும் எழுதாத கார்டுக்கும்
வித்தியாசம் காட்டும் சாமி......”
என்னவொரு எகிறலான பதில்! கதை எழுதுகையில் எழுத்தாளன் அடையும்
எழுச்சியைக் காட்டும் ஒரு உதாரணம் இது.
‘திரைகளுக்கு அப்பால்’ நாவலில் இந்திரா பார்த்தசாரதி எழுதுகிறார்.
டெல்லியில் பஸ் நிறுத்தத்தில் ஒரு குரல். ‘அய்யா சாமி தர்மம் பண்ணுங்க’ என்கிற பிச்சைக்குரல்.
அடுத்த வரியில் இந்திரா பார்த்தசாரதி இப்படி எழுதுகிறார்.
‘பாரதியின் கனவு நிறைவேறி விட்டது. தலைநகரில் தெருவெங்கும்
தமிழ் முழக்கம்.’
பிரபலமான வரிகளை இப்படிப் போட்டுவாங்குவது எப்பவுமே எனக்குப்
பிடிக்கும். ஒருமுறை, ''சேதுவை மேடுறுத்தி வீதி சமைக்கிறவர்கள் வீதியிலேயே சமைக்கிறார்கள்,"
என எழுதியிருந்தேன்.
தமிழின் முதல்நாவல்கள் ஐந்துமே மிக அருமையானவை. அதில் மூன்று
நான்கு நான் வாசித்திருக்கிறேன். தமிழின் முதல் நாவலாகக் கருதப்படுகிற ‘பிரதாப முதலியார்
சரித்திரம்’ மாயூரம் முன்சிப் வேதநாயகம் பிள்ளை எழுதியது. முதல் பக்கத்திலேயே அதிரடியாக
ஒரு உரையாடலை அவர் முன்வைத்திருப்பார்.
வாழ்க்கையில் புத்திசாலியும் அநேகத் தவறுகள் செய்கிறான்.
முட்டாளும் செய்கிறான். ஆனால் அவனை புத்திசாலி என்கிறோம். இவனை முட்டாள் என்கிறோம்.
ஏன் அப்படி?
அவரே பதிலும் சொல்வார்.
ஒரு முட்டாள் தவறு செய்தால் அவனுக்கு மட்டும் தெரியாது. ஊருக்கே
அது தெரிந்துவிடும். ஆனால் ஒரு புத்திசாலி தவறுசெய்தால் அது அவனுக்கு மட்டுமே தெரியும்.
ஊருக்குத் தெரியாது.
ஒரு ஆன்மிக உரையின் போது காஞ்சி மகா பெரியவர் அவர்கள் சட்டென்று
ஒரு பொறியாக, GOD GIVES AND FORGIVES, MAN GETS AND FORGETS என்று குறிப்பிட்டார்.
அவரே போல தாய்மொழி ஆங்கிலம் அல்லாத ஒருவர், நெப்போலியன் போனபார்ட், இலையுதிர் காலத்துக்
கடுங்குளிரில் ரஷ்யா மேல் படையெடுத்துக் கிளம்பிப்போய் ரஷ்யா உள்ளே புகமுடியாமல் வெளியே
முகாமிட்டிருந்த போது இப்படிச் சொன்னதாகச் சொல்வார்கள்.
FALL LEAVES WHEN LEAVES FALL.
இந்த வாக்கியத்தின் சிறப்பு இந்த வார்த்தைகளை வலமிருந்து
இடம் வாசித்தாலும் அதே பொருள் கிடைக்கிறது.
‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் வந்தாலும் அதற்கு முன்பே எனது
‘தொட்ட அலை தொடாத அலை’ நாவலில் நான் ஒரு விஷயம் குறிப்பிட்டிருக்கிறேன். 13.58-க்குக்
கிளம்ப வேண்டிய ரயில் நாலு நிமிடம் தாமதமாக 02.02-க்குக் கிளம்பும் என்பதை ஆங்கிலத்தில்
எப்படி அறிவித்தார்கள்?
THE DEPARTURE HAS BEEN RESCHEDULED FROM TWO-TO-TWO TO
TWO-TWO.
நயம்பட உரைத்தல் என்றதும் ரஷ்ய இயக்குநர் தார்க்கோவ்ஸ்கியின்
ஒரு திரைப்படக் காட்சி நினைவுக்கு வருகிறது. படத்தின் பெயர் நினைவு இல்லை. ‘சாக்ரிஃபை’சாக
இருக்கலாம். யுத்தத்தின் உக்கிரத்தைச் சொல்லும் காட்சி.
டைட் குளோசப்பில் கதாநாயகன். அவனது சோக முகம். கேமெரா மெல்ல
பின்வாங்க, ஒரு வீட்டு வாசல் என்று தெரிகிறது. அவன் கவலையுடன் வீட்டு நிலைப்படியில்
அமர்ந்திருக்கிறான். இன்னும் காமெரா பின்வாங்குகிறது. லாங் ஷாட். ஒரு கட்டாந்தரை. அதில்
நிலைவாசல் மாத்திரம் இருக்கிறது. மொத்த வீடுமே தரைமட்டமாகி வெறும் நிலைவாசல், அதில்
அவன் அமர்ந்திருக்கிறான். .
எப்படியெல்லாம் கதை சொல்கிறார்கள் என நான் அதிசயித்த கணம்
அது.
ஒரு டியூஷன் ஆசிரியர் பற்றிய என் கதை ‘கடல்காற்று.’ என்கிற
அந்த நாவல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் இளங்கலை மாணவர்களுக்கு, அது நவீன இலக்கியப்
பாடநூலாக அமைந்தது. அதில் அவரது வாழ்க்கை பற்றிய என் சித்திரம்.
உடம்பு சரியில்லாமல் வாத்தியார் டாக்டரிடம் போனார். டாக்டர்
‘ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க’ என்று ஊசி போட்டு மருந்து எழுதித் தந்தார். டாக்டருக்குப்
பணம் தர வாத்தியார் மேலதிகம் டியூஷன் எடுத்தார். டியூஷன் எடுத்ததால் ஸ்ட்ரெய்ன் அதிகமானது.
ஸ்ட்ரெய்ன் அதிகமானதால் வாத்தியார் டாக்டரிடம் போனார்.
‘கருப்புப் புள்ளிகள்’ என்கிற ஒரு குறுநாவல். அதில் குடிகாரன்
ஒருவன் சைவ ஹோட்டலுக்குள் வந்து உட்கார்ந்து விடுவான். அவனுக்கும் சப்ளையருக்குமான
உரையாடல்.
என்ன சாப்டறீங்க?
பிரியாணி கொண்டா.
பிரியாணி இல்ல.
பிரியாணி இல்லையா?
இல்ல.
ஏன்.
இது ஐயரு ஹோட்டல்.
ஐயரு ஹோட்டலா?
ஆமா.
அப்ப பிரியாணி இல்லியா?
இல்ல.
ஏன்?
என் நண்பன் ஒருவன் திரைப்பட உதவி இயக்குநன். அவன் பணிபுரிந்த
திரைப்படத்தின் ப்ரிவியூவுக்கு என்னை அழைத்தான். நானும் போயிருந்தேன். படம் மொக்கை.
படம் முடிந்து வெளியே வந்தால் நண்பன் நிற்கிறான். என் கையைப் பிடித்துக் கொண்டான்.
“படம் எப்பிடி?” என்று கேட்டான். நான் பதில் சொன்னேன்.
“படம் சுமார் தான். ஆனால் அசிஸ்டென்ட் டைரக்சன் சூப்பர்.”
நயம்பட உரைத்தல், என்று சொல்லிவிட்டு கி.ரா. அண்ணாச்சியைச்
சொல்லாமல் விட்டுவிட முடியுமா என்ன? இது தனிச் சிறுகதையா, எங்காவது நாவலின் இடையே வருகிறதா
தெரியவில்லை. என்றாலும் நினைக்க நினைக்க அப்பிடியொரு சிரிப்பு எனக்குப் பொங்கும்.
கி.ரா. எண்பதாவது பிறந்த நாள் என்று வை.கோ தலைமையில் சிறப்பாக
விழா நடந்தது. சென்னை ஆனந்த் தியேட்டர் வளாகத்தில். மேடையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கையில்,
என் அருகே இருந்த வண்ணநிலவனிடம் நான் இந்தக் கதையை விவரிக்க, பாவி மனுசன் குபீரென்று
அத்தனை சத்தமாய்ச் சிரித்துத் தொலைத்தார்.
அப்போது ஜானகிராமனின் தராசு பார்த்தோம். இதோ கி.ரா. அண்ணாச்சியின்
தராசு, என் நினைவில் இருந்து.
கிராமத்துப் பெண்கள் கணவனை இழந்ததும் ஜாக்கெட் அணிய மாட்டார்கள்.
அப்பிடியொரு வழக்கம் இருந்த காலம் அது. கணவன் இறந்து அவர் மனைவி கணவனின் பருத்தி வியாபாரக்
கடைக்கு வந்து அமர்ந்து பருத்தி வியாபாரம் செய்ய ஆரம்பித்தாள். அவளது கடைக்கு எதிர்க்கடையில்
ஒரு நாயக்கர். ரொம்ப நேர்மையானவர். நாணயஸ்தர். வியாபாரத்தில் தர்மசீலர். நல்ல தரமான
பருத்தி. எடையில் ஊழல் செய்யாமல் நியாய விலைக்கு அவர் விற்றுக் கொண்டிருந்தார்.
இந்த அம்மணி வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்ததும் அவளது கடையில்
கூட்டம் அப்படி அப்பியது. அவள் விற்ற பருத்தியின் தரமும் சுமார்தான். அதை வீட்டுக்கு
வந்து நிறுத்துப் பார்த்தாலும் எடை ஐம்பது கிராம் குறைந்தது. என்றாலும் அந்தக் கடையில்
கூட்டம் குறைவதே கிடையாது. இது குறித்து அவளுக்கு எதிர் வாடையில் கடை போட்டிருந்த அந்த
நியாயவான் வியாபாரிக்கு ரொம்ப வருத்தம் இருந்தது. நாம எத்தனை நேர்மையா இருந்தாலும்
சண்டாளப் பயலுக அங்க தானய்யா போயி விளுகறாங்க, என அவருக்குச் சலிப்பு.
அந்த ஊரில் ஒரு விடாக்கண்டன் இருந்தார். அவரிடம் யாரும் காரியம்
செயிக்க முடியாது. அத்தனை தன் குறிப்பான ஆளு அவர். அந்த விடாக்கண்டன் இந்த நியாயவானிடம்
ஒருநாள் சவால் விட்டார். “அந்த அம்மாகிட்ட நான் போயி ஒரு கிலோ பருத்தி வாங்கி வாரேன்.
எடையும் கச்சிதமா, ஒரு கிலோ, குறையாம வாங்கிட்டு வாரேன்” என்று கிளம்பினார்.
ஒரு கிலோ பருத்தி கேட்டுக்கொண்டு பையை விரித்தபடி நின்றார்
விடாக்கண்டன். அந்த அம்மாள் தராசுத் தட்டில் பருத்தியை அள்ளி அள்ளி வைக்கிறாள். விடாக்கண்டன்
கண்ணை விலக்கவே இல்லை. இடது பக்கம் தராசுத் தட்டில் படிக்கல். வலப்பக்கம் தட்டில் பருத்தி.
எடையை அவர் சரி பார்த்தபடியே. கண்ணை ம்ஹும் நகர்த்தவே இல்லை. ஒரு கிலோ எடை சரியாக இருக்கிறது.
விடாக்கண்டன் தன் பையை விரித்து அந்த எடைபோட்ட பருத்தியை பைக்குள் அவள் போடக் காத்திருந்தார்.
அப்பதான்...
பருத்தி இருக்கிற தராசுத் தட்டை பைக்குள் கவுத்திய அந்த அம்மாள்
ஒரு தரம் ‘கிச்சுக்’ என்று தோள்பட்டையைக் குலுக்கினா பாரு, அப்பதான் அந்த அம்பது கிராம்
குறைந்தது...
•
91 97899 87842
storysankar@gmail.com
No comments:
Post a Comment