பகுதி 7
மழைப் பொழுதில்
வீழ்ந்த ஆலமரம்
எஸ். சங்கரநாராயணன்
‘கலைஞன் பதிப்பகம் திரு மாசிலாமணி இயற்கை எய்தினார்.‘
கடந்த நாலைந்து வருடங்களாக அவரைப் பார்க்கவில்லை, என்றாலும் சட்டென
உள்ளே சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது அந்தச் செய்தி. கல்லூரியில் இருந்து பட்டம்
பெற்று வெளியேறும் காலகட்டம் அது. எழுத்துசார்ந்த ஆர்வக் குறுகுறுப்பான, கொஞ்சம்
கனவு சார்ந்த அசட்டுத்தனங்களுடன் திரிந்த பருவம். அப்போது வேடந்தாங்கல் இலக்கிய
வீதி அமைப்புடனும், அதன் அமைப்பாளர் திரு இனியவன் அவர்களுடனும் ஒரு பரிச்சயம்
ஏற்பட்டது.
மதுரையில் கல்லூரிப்படிப்பு முடித்து எதும் வேலைகிடைக்கும், யாராவது
ஏமாறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நான் சென்னை வந்தடைந்தேன். இலக்கிய வீதியின்
மாதாந்திரக் கூட்டங்கள் மதுராந்தகத்தில் நடக்கும். மாதம் ஒரு எழுத்தாளரின்
புத்தகம் பற்றி விமரிசன அரங்கம். எங்களைப் போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு மூத்த
எழுத்தாளரைச் சந்திக்க உரையாட விவாதிக்க பெரிய வாய்ப்பாய் அது அமைந்தது.
தீவிர வாசகனான பாவனையுடனும், உலகத்தை நிமிர்த்த வேண்டிய பொறுப்புடனான
இளைஞனைப் போலவும் நாங்கள் அக் கூட்டங்களில் பங்குகொள்வோம். எழுத்துத் துறையில்
பழம் தின்று கொட்டைபோட்ட மூத்தவர்களில் இருந்து, இப்போது ஒளிகசிய ஆரம்பித்து வரும்
நட்சத்திரங்கள் வரை வந்துபோனார்கள். எழுத்தாளர் வரவழைக்கப்பட்டு அன்னாரிள் ஒரு
நூலை ஒருவர் விமரிசனம்செய்து பேசுவார். பிறகு விவாதங்கள். அந்த எழுத்தாளரிடம்
நாங்கள் விவாதமோ விமரிசனமோ அன்றி, விசாரணையாகவே கேள்விகள் கேட்டுமகிழ்வோம். அந்த
வரிசையில் ஜெயந்தனின் ஒரு சிறுகதைத் தொகுப்பு நூலை நான் விமரிசனம் செய்து
பேசினேன்.
ஜெயந்தனின் எழுத்துகளை நாம் அறிவோம். கெட்டிச் சாயம் அல்ல என்றாலும்
லேசான சிவப்பு சாயம் தெரிகிற எழுத்து. அந்தக் கால கேவா கலர் திரைப்படம் போல.
நாடோடி மன்னன். குலேபகாவலி வரிசை... அந்தக் கூட்டத்துக்குத் தலைமை திரு ஔவை
நடராசன். இந்நாளில் அவர் முன்னாள் துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்.
அந்நாளில் அவர் பின்னாள் துணைவேந்தர். நறுக்குத் தெறித்த சொல்லாளர். அவருடன்
கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினர் – கலைஞன் பதிப்பகம் திரு மாசிலாமணி. அவர்கள்
இருவரையும் அப்போதுதான் முதன்முதலில் சந்திக்கிறேன். அப்போது என் கதைகள் எல்லா
பெருஞ்சுற்றிதழ் வளாகங்களிலும் வெளிவர ஆரம்பித்து விட்டன.
என் எழுத்தில், மற்றவர் பற்றி என்ன, எனக்கே ஒரு மயக்கம் இருந்தது.
என்னை நானே காமுற்ற பருவம். ஜெயந்தனின் இலக்கிய ஸ்தானம் பற்றி நான் அப்போது
பேசியபோது “பசப்பலாய் போலிக் கவர்ச்சியுடன் பெரும் இதழ்களில் வலம்வரும் வணிக
எழுத்தளர்கள் மத்தியில், ஒரு நோக்கும் போக்கும் கொண்டு சுய தீர்மானங்களுடன்
மதிப்பீடுகளை முன்வைக்கிறவர் ஜெயந்தன்“ என்று சொல்ல வந்தவன், அந்தப் புகழ்ப்பித்த
எழுத்தாளர்களை ‘பேனாமினுக்கிகள்‘ என்று குறிப்பிட்டேன். ஹா, அப்போது நானே
பேனாமினுக்கிதான்... அந்தச் சொல்லாக்கம் ஔவை நடராசனை மிகவும் கவர்ந்துவிட்டது
என்பதை பிறகு அறிந்துகொண்டேன். நான் எழுத்தாளனாகவே உருவாகாத பருவம் அது.
பேச்சுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. கையில் கட்டுரையாகத் தயாரித்து லேசான
கீச்சுக் குரலில் பயத்துடன் பேசி மூச்சுத் திணறலுடன் முடித்து அமர்ந்து தண்ணீர்
குடித்தேன்.
என் விமரிசனம் கச்சிதமாக இருந்ததாக மதுராந்தகத்தில் இருந்து
திரும்பும் வழியில் ஔவை நடராசன் தெரிவித்தார். எனது இளமைக் குதூகலம் துறுதுறுப்பு,
அவருக்கு உவப்பாக இருந்தது போலும். கட்டவுத்து விட்ட கன்றுக்குட்டிகளை ரசிக்க
நாட்டில் ஆள் இருக்கிறது. நாங்கள் – நான், ஒளவை நடராசன் மற்றும் கலைஞன் பதிப்பகம்
மாசிலாமணி, மூவரும் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். “இந்தப் பையன் நல்லா
எழுத்தில் முன்னுக்கு வருவான். இவனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்“ என்று ஒளவை
நடராசன் மாசிலாமணியிடம் பேசினார். பிறகு என்னிடம் திருமபி “வைரமுத்துவை நான்
சொல்லி மாசிலாமணி பதிப்பித்தார். இப்போது அவன் நல்லா முன்னுக்கு வந்திட்டான்...“
என்றார். அவரது பரந்த கனிந்த மனம் எனக்குப் பரவசம் அளித்த கணம் அது. மாசிலாமணி
“தம்பி நீ அடுத்து ஒரு நாவல் எழுது. நான் போடறேன்...“ என உடனே சம்மதமும் ஊக்கமும்
அளித்தது மறக்க முடியாத சம்பவம்.
எனக்கு பத்திரிகைகளில் கதைகள் எழுதலாம் என்று தெரியும். நோயாளிக்கு
டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் போல, சமூக நோய்களுக்கு நாங்கள் கதை எழுதுகிறோம். பிறகு
ஒரு மாதம் ரெண்டு மாதத்தில் அதற்கு துட்டு அனுப்புவார்கள். எழுத்தாளர்கள் டாக்டர்
என்றால் இது கன்சல்டிங் ஃபீஸ். கிட்டத்தட்ட நம்ம கஜானா காலி என்ற கணத்தில்
மணியார்டராகவோ, காசோலையாகவோ லட்சுமிதேவி நம் முன்னே வந்து நாணி நிற்பாள், அவ்வளவே
தெரியும். சிகெரெட், லாகிரி என்று அந்தக் காலத்திலும் சரி, இப்போது வரை கெட்ட
பழக்கங்கள் எதுவுங் கிடையாது. என்றாலும் திரைப்படங்கள் பார்ப்பேன் நிறைய. (இப்போது
அந்தப் பழக்கமும் போச்சு.) ராத்திரிகளில் மொட்டைமாடியில் படுத்துக்கொள்வதாக
வீட்டில் சொல்லிவிட்டு தலையணையைப் போர்வையால் மூடி படுத்துக்கொண்டிருக்கிற பாவனையைக்
காட்டிவிட்டு இரண்டாம் ஆட்டம் ஓடிவிடுவேன். எதுவும் மூளையில் பொறிதட்டி விட்டால்
உடனே செயல்படுத்தி விடுகிற பரபரப்பு அப்போது. ஆனால் பதிப்பகம், புத்தகம் நூல்
வடிவம்பெறுதல் இதெல்லாம் யோசனையிலேயே இல்லை. அதுவும் நாவல் எழுதச் சொல்கிறார்.
பார்க்கலாம், என நினைத்துக் கொண்டேன்.
நாவல் என்ற பாணியில் நான் சுமார் எண்பது பக்கங்கள் வரை எழுதி வளராமல்
ஒரு கதை பரணில் கிடந்தது. எனக்கு வேலை கிடைத்திருந்தது இப்போது. அண்ணாசாலை தந்தி
அலுவலகத்தில் தந்தியாளன். மார்ஸ் கோடில் நிபுணன் என்று பேர் எடுத்தேன்.
கட்டுகடகட்டுகடகட்டு, என்றால் செய்தி ஆரம்பிக்கிறது என்று பொருள்... எங்கள்
மதுரைக்கார நண்பன் திருமலையுடன் தனியே ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தேன். அப்போதைய
லெக்ஷ்மி ஜெனரல் ஃபைனான்ஸ், இப்போதைய சுந்தரம் ஃபைனான்சில் அவன் வேலை. அந்த
அமைந்தகரை வீட்டில் மாசிலாமணி தந்த ஊக்கத்துடன் நான் பரணில் கிடந்த நாவலை
எடுக்காமல், புதிய நாவல் எழுத முடிவெடுத்தேன்.
மதியப் பணிமுறை (ஷிஃப்ட்) எனக்கு உவப்பானது. நம்ப முடியாத விஷயம்,
நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். திருமலையே சாட்சி.... தினசரி காலை நாவலை
ஆரம்பித்து 30 பக்கங்கள் கையெழுத்தில் எழுதிவிட்டு மதியம் 2 மணிக்கு அலுவலகம்
போவேன். எட்டுநாளில் நாவலை நினைத்த காலக்கெடுவில் முடித்தேன். கையால்
இப்போதெல்லாம் எழுதுகிறதே, எழுத முடிகிறதே இல்லை. கணினி அச்சுதான் என்றாலும்
ரெண்டு பக்கம் எழுதுமுன் முதுகு அச்சு உயர வசத்தில் இருந்து நீள வசத்துக்கு ஏங்க
ஆரம்பித்து விடுகிறது. கையெழுத்தில் உருவான அந்த நாவலில் அடித்தல் திருத்தல்
இல்லை. திரும்ப வாசிக்கவும் தேவையாக நான் நினைக்கவில்லை. 240 பக்கங்கள் எழுதிய
நாவல் அது. ‘பெண்கள் பெண்கள் பெண்கள்‘ என தலைப்பு. எழுதி அதை பைன்ட் செய்து கலைஞன்
பதிப்பகத்துக்கு, நேரில் போக தயக்கமாய் இருந்ததால் அனுப்பிவைத்து விட்டேன். பிறகு
அதை மறந்தும் விட்டேன்.
ஒரே மாதத்தில் அலுவலகத் தொலைபேசியில் மாசிலாமணி தன்னை வந்து
பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். எனக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. நேரே போனால்
நம் நாவலை விமரிசனம் செய்தால் என்ன பண்ணுவது? அப்ப எல்லாம் தலையை உயர்த்தி கழுத்து
விரைப்புடன் கேள்விகள் கேட்போம், பதில்கேள்வி வந்தால் ஆமையாய் கழுத்துக்குள்
போய்விடும் தலை. தவிரவும், நான் வாசித்துக் கொண்டிருக்கிற அளவில், நாவல் என்பது
விலாவாரியாக வம்படியா பக்கங்களை இழுத்துப் போகிற சமாச்சாரமாகவே பட்ட காலகட்டம்.
நமது இலக்கிய வரலாற்றில் ஆரம்ப காலகட்ட நாவல்கள் பிறந்தது முதல் செத்துப்போவது வரை
பேசின. தலைப்பே ‘சரித்திரம்‘ என்றுதான் வைத்தார்கள். நாவல் என்பதில் ஆகக் குறைந்த
காலஅளவை வைத்துக்கொள்ள நான் பிரியப்பட்டேன்.
பெருமாள்சாமி என் கதாநாயகன். தன்சார்ந்த நம்பிக்கைகள் அற்றவன்.
செய்யாத தப்புக்காக மேனேஜர் முன் நின்று அவர் அர்ச்சனை முழுதையும் வாங்கிக்கொண்டு
வருவான். பிறகு மேனேஜரே, அது அவன் செய்த பிழை அல்ல, என்று கூப்பிட்டு விடுவார்.
ஏன்யா முதல்லியே சொல்லியிருந்தால் இத்தனை திட்டு வாங்கியிருக்க வேணாம்ல, என்பார்.
அவனுக்கு பதில் சொல்லத் தெரியாது. இப்படி தன்னையே தாழ்வாக நினைக்கிறவனுக்குக்
கல்யாணம் ஆகப்போகிறது. வரப்போகும் மணமகளை நினைத்துப்பார்த்து மிரள்கிறான்
கதாநாயகன். கணவன் என்பது ஒரு பெரிய மலைபாரம். கதாநாயக அந்தஸ்து என திகைப்பாய்
இருக்கிறது. அவளை ஆளுமை செய்ய முடியுமா? நம்மை அவள் ஏற்றுக்கொள்வாளா, தூக்கி
இடுப்புல வெச்சிக்கிட்டான்னா? எகிறிட்டான்னா?... என்கிறதான தலையிடி. குழப்பங்கள்.
கடைசியில், அவனுக்கு இணக்கமாய் அவள் அமைந்து, ‘ரெண்டுபேரும் சேர்ந்தே
கத்துக்கலாம்...‘ என இவனை ஆசுவாசப்படுத்தும் கதை. கல்யாணப் பேச்செடுப்பார்கள்,
கல்யாணமாகி விடும் என்பதுதான் இதன் சம்பவங்கள். கால அளவும் அவ்வளவே. இதை மாசிலாமணி
எப்படி எடுத்துக்கொள்வார் என்று யோசனைதான்.
உடனே அவரை நான் போய்ப் பார்க்கவில்லை. பிறகு கடிதம் வந்தபோதும்,
அவரைச் சந்திப்பதைத் தள்ளிப் போட்டேன். அடுத்து அவரது மூத்த மகன் திருமணத்துக்கு
அழைப்பு அனுப்பினார். இதை நாள்-தள்ளிப்போட முடியாது. நான் நேரில் போனபோது மண்டப
வாசலிலேயே மாசிலாமணி வந்து கைகுலுக்கினார். அருமையா இருக்கு நாவல், போட்டுறலாம்,
அலுவலகம் வந்து பார்னா வர மாட்டேங்கறியே... என்று பிரியமாய்ப் பேசினார். என் முதல்
நாவலுக்கு தலைப்பு மாற்ற நானே நினைத்திருந்தேன். எழுத ஆரம்பித்த வேகத்தில்
நினைவுக்காக ‘பெண்கள் பெண்கள் பெண்கள்‘ என வைத்திருந்தாலும், அவரிடம் சொன்ன
மாற்றுத் தலைப்புகளில் ‘நந்தவனத்துப் பறவைகள்‘ அவருக்கு உவப்பாய் இருந்தது.
நாவல் மிக அழகாக வெளிவந்தது. மேலட்டை ஓவியம் மருது. ஓவியர் மருது
போட்ட முதல் புத்தக அட்டைப்படம் அதுதான்... அந்த நாவல் எஸ்பிளனேடு
ஒய்.எம்.சி.ஏ.வில் வெளியீட்டு விழாவும் கண்டது. தினமணியில் மாயாவி அதைப்பற்றி
விரிவாய் நல்வார்த்தைகள் எழுதினார். எனது முதல் நாவல், நான் பி.எஸ்சி. வாசித்த
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. மாணவர்களுக்கு நவீன இலக்கிய துணைப்பாட
நூலாகவும் அமைந்தது. என்னவெல்லாம் நடக்கிறது… யோசித்துப் பார்த்தால், ஒரு
பல்கலைக்கழக கதவுகளைத் தட்டி என்னால் இந்த நூலைப் பாடமாக்கும்படி ஆதரவு
தேடியிருக்க சாத்தியமே இல்லை. எப்படி அமைந்தது இது?... என என்னை நானே வியந்துகொண்ட
வேளை அது. மாசிலாமணி ஐயாவிடம் போய் மூச்சிறைக்க நின்றபடி இந்தத் தகவல் சொன்னது
இன்னும் நினைவில் இருக்கிறது.
“எங்களால் எழுத்தாளர்களைக் கண்டுபிடிக்க முடியும்“ என அவர்
புன்னகைத்ததை இந்த நிமிடம், கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் அவருக்கு மாலைபோட்ட
இக்கணத்தில் நினைவுகூர்ந்து நெகிழ்கிறேன்.
நாவல் பிறகு இரண்டாம் மூன்றாம் பதிப்புகள் ‘கிளிக்கூட்டம்‘ என
வெளியாயிற்று. 85ல் என் திருமணம். அன்போடு வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து
உபசரித்தார் மாசிலாமணி. என் மனைவிக்கு ஒரு புடவையும், புதிய வெள்ளி ஐம்பது ரூபாய்
நாணயமும் வைத்தளித்தார். நெஞ்சைக் கசிய வைத்த கணங்கள் அவை. பிற்பாடு பூமணியின்
‘பிறகு‘ நாவல் வாசிக்கக் கிடைத்தபோது அடாடா, இதல்லவா எழுத்து என்று திகட்டிய
கணங்கள். இன்றைக்கும் எனக்கு நல்ல எழுத்து பற்றி ஒரு கருத்து உண்டு. ஒரு நல்ல
எழுத்து மற்ற எழுத்தாளனைத் தூங்காமல் அடிக்கும். அவனைத் தன்படைப்பு சார்ந்து
இயங்கத் துடிப்பேற்றும். பூமணியை வாசிக்குந்தோறும் அவர் காட்டும் மனிதர்களின்
வியர்வை தட்டுகிறது எனக்கு. குளத்தின் அலை பாதம் தழுவிய சின்னச் சிலிர்ப்பான
மெல்லிய கவிதைகளாய் மோதுகின்றன அவர் எழுத்தில். தவிர கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்‘.
மட்பாண்டம் வனைய மண்ணைக் குழைத்தாற்போல ஒரு வார்த்தைக் குழைவை அவர் எழுத்தில்
கண்டு பிரமித்திருக்கிறேன்.
தவிர பெரும்சுற்று இதழ்களில் வளைய வந்துகொண்டிருந்த என் கதைகள்
சம்பவங்கள் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த வேளையில், இவர்கள் சம்பவங்கள் தாண்டி
மனிதர்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார்கள்... என மனம் விழித்த கணம் அது.
இவர்கள் எல்லாரும் தான் பரணில் கிடத்தியிருந்த என் நாவலை திரும்ப எடுத்து எழுதி
முடிக்க ஊக்குவித்தவர்கள். அப்போது அதற்கு ‘கிரகணம்‘ என தலைப்பு வைத்திருந்தேன்.
அதுவும் கிட்டத்தட்ட 240 பக்க அளவில் என் கையெழுத்தில் அமைந்தது. முதல்கட்டமாக 80
பக்கங்கள் எழுதி வைத்திருந்தேன். மீண்டும் வேறு இடத்தில் இருந்து கதையைத் தொடர
உத்தேசித்து அடுத்த 80 பக்கங்கள் எழுதி ஆறப்போட்டேன்.
எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. எழுத்தில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்
கொள்வேன். ஒரே பாணியான கதைகளைத் தவிர்க்க அது உதவுகிறதாக நம்புகிறேன். எழுத்தில்
உக்ரப்பட்டு சில படைப்புகள் எழுதி முடித்தபின் அந்த எழுத்தாள ‘சாமியாட்டத்தில்‘
இருந்து வெளியேறி விடுவேன். பாலமுரளி கிருஷ்ணா சில கச்சேரிகளில் மிருதங்கம்
வாசிப்பார். ஒரு இறுக்கத் தளர்வு மனுசாளுக்குத் தேவையாய்த்தான் இருக்கிறது. ஒரு
ஓய்வுக்குப் பின் எழுத்தில் வேறு இடத்தில் இருந்து துவங்குகிறாப் போல நடை மற்றும்
உத்தியம்சங்களையே கூட மாற்றி வேறு தளத்தில் இயங்குவதற்கு சௌகர்யமாய் இருக்கிறது.
எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் இடைவெளிக்குப் பின் மூன்றாம் பகுதியும்
80 பக்கங்கள் நிறைவு செய்து ‘கிரகணம்‘ நாவலை கலைஞன் பதிப்பகத்துக்குத் தந்தேன்.
நாவலுக்கு தீபம் நா.பா. முன்னுரை. அதற்கு மானுட சங்கமம் என்று தலைப்பு மாற்றினோம்.
மானுடம் என்று போடுவதா, மானிடம் என்று போடுவதா, என்று கலந்து பேசினோம். மானுடம்
வென்றதம்மா, என்ற பாரதி வரிகளை நான் மேற்கோள் காட்ட, மானிடம் என்ற இடங்களை
மாசிலாமணி எடுத்துச் சொன்னார். நா.பா. மானுடம் என்றே அமைய ஆதரவு நல்கினார். நாவலை
வாசித்து பேசி விவாதித்து வெளியிடுவார் மாசிலாமணி. மானுட சங்கமம் நாவலை
முன்வாசிப்பு செய்த இராம. கண்ணப்பன் (கண்ணதாசனின் உதவியாளராக இவர் பணியாற்றியது
எல்லாரும் அறிந்த விஷயம்.) அதன் ஒரு குறையைச் சுட்டிக்காட்டினார். மாசிலாமணி,
கண்ணப்பன், நான் கலந்துகொண்ட விவாதம் அது.
அதன் முதல் அத்தியாயத்தில் ஒரு வெள்ளச்சேதம் இடம்பெறும். ஒரு ஊரின்
கதை அது. தனி மனித பாத்திரங்கள் வந்துபோனாலும், சம்பவங்கள் நிகழ்ந்தாலும்,
எல்லாவற்றையும் ஊரில் ஏற்பட்ட மாற்றங்களாகவே கணித்து, நாவல் வாசித்து முடிக்கையில்
பாத்திரங்களை மீறி ஒரு ஊரை அடையாளப்படுத்த முடியுமா, என்கிற முயற்சியே அந்த நாவல்.
அதன் துவக்க அத்தியாயத்தில் ஒரு வெள்ளக் கலவர விறுவிறுப்புடன் நாவலை ஆரம்பிக்க
நினைத்தேன் நான். ஒரு ஸ்திரீ வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருக்க அவளைக் காப்பாற்ற
ஹெலிகேப்டர் வருகிறது. வெள்ளம் அவள் உடைகளை அடித்துச் சென்றுவிட்டது. கழுத்தளவு
ஆழத்தில் நிற்கிறாள் அவள். ஹெலிகேப்டர் கயிறுவீசி அவளை மீட்க முயல்கிறது. அவள்
கயிறுபற்றி மேலே வர அவள் நிர்வாணம் வெளிப்படுவதில் பதறி திரும்ப அவள், கயிறை
விட்டுவிட்டு தண்ணீருக்குள் அமிழ்ந்துகொள்கிறாள். வேறு வழியின்றி ஹெலி தாழ
இறங்குகையில் வெள்ளத்தில் சிக்கி ஹெலியே மூழ்கி விடுகிறது. இது நான் வாசித்திருந்த
ஒரு பத்திரிகைச் செய்தி.
கண்ணப்பன் நாவலின் இந்தப் பகுதியை வாசித்துவிட்டு, “இந்தச் சிறுபெண்
தன் தாயைப் பறிகொடுத்த நினைவுகள் பற்றி எழுதுகிறீர்கள். இவளுக்கு எட்டு வயசில்
நடந்த சம்பவம், இவ்ளுக்கே இப்போது 90க்குமேல் வயது என்கிறீர்கள். ஆனால்
ஹெலிகேட்பர் கண்டுபிடித்தே 75 ஆண்டுகள்தான் ஆகின்றன.... கதையோடு ஒட்டவில்லையே,“ என
ஒரு திகைப்பான கேள்வி போட்டார். கிழவிக்கு இப்போதைய வயதைச்சொல்லாமல் அந்த நிகழ்வை
வெளியிட்டோம், என்று வையுங்கள். இப்படியெல்லாம் விவாதித்து விளக்கி ஒரு நாவலை
எந்தப் பதிப்பாளரும் வெளியிடுவாரா? வேறு உதாரணம் தெரிந்தால் சொல்லுங்கள்.
என் படைப்புகளை இதுவரை சுமார் 10 பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
பத்தில் ஒரே ஒருவர் இவர். மாசிலாமணி. இவரது அக்கறையை வேறு யாரிடமும் நான்
காணவில்லை. நாவலை வெளியிட்டபின் இதுவும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்
முதுகலை இலக்கியப் பயில்நூல் அங்கிகாரம் பெற்றது. அடுத்த பதிப்பில் அது ‘ஆயுள்ரேகை‘
என தலைப்பு மாற்றம் கண்டது. நாவலை வாசித்துப் பார்த்தபின் மாசிலாமணி கூறிய அறிவுரை
மறக்கவே முடியாதது.
நாவலின் இறுதிப் பகுதி. ஒரு ரெண்டுங் கெட்டான் பாத்திரம் அக்னி.
கோவில் வேலைகளில் இருப்பவன். சாமி புறப்பாட்டில் தீவட்டி எடுக்கிறவன்.
நந்தவனத்துக் கிணற்றில் கோவிலுக்குத் தண்ணீர் சேந்திக் கொடுக்கிறவன். அவன் ஊரில்
உள்ள பிரமிளா என்ற பெண்ணினால் பாலியல் ரீதியாய்ப் பயன்படுத்தப் படுகிறான்.
பின்னாளில் அவளுக்குத் திருமணம் நடக்கிறது. சமையல் வேலைகளில் உதவியாக அக்னியே
அங்கே வரவேண்டி யிருக்கிறது. அதுவரை விளையாட்டுத்தனமாய் வளைய வந்துகொண்டிருந்த
அக்னிக்கு, அவள் இன்னொருவனைக் கைப்பிடிக்கப் போகிறாள் என்கிற எண்ணம் கல்யாண
முகூர்த்தம் நெருங்க நெருங்க உறைக்கிறது. அவன் தவிப்பு அதிகரிக்கிறது. தான்
ஏமாற்றப்பட்டு விட்டதாக அவனில் ஜ்வாலை குமுறுகிறது. ஜானவாச இரவன்று மாப்பிள்ளையைத்
தனியே சந்தித்து, அவள் உனக்கு வேண்டாம், என்று சொல்லிவிட்டு இரவோடிரவாக ஊரைவிட்டு
வெளியேறி விடுகிறான்... என்பது கதை.
மறுநாள் ஊரில் அவன் இருக்க முடியாது. ஊரார் அவனை அடி புரட்டியெடுத்து
விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஒரு வெள்ளம் கிராமத்தில் நுழைவதை வைத்து
ஆரம்பிக்கிற மானுடசங்கமம் நாவல், ஒரு மனிதன் ஊரைவிட்டு வெளியேறுவதில் முடியும்.
விளையாட்டுத்தனமான வாழ்க்கை வாழ்ந்த அக்னி சூட்சுமங்கள் உசுப்பப்படுவதாக நான் கதை
சொல்லியிருந்தேன். மாசிலாமணி சொன்னார். அடாடா, ஒரு பெண்ணின் வாழ்க்கையைப்
பறிக்கிறா மாதிரி முடிவு சொல்லக் கூடாதுடா, என்றார் வாசித்துவிட்டு. கல்யாணம்
என்றால் எத்தனை செலவு, எத்தனை காரியங்கள் ஆக வேண்டியிருக்கிறது, எத்தனை
ஏற்பாடுகள்… எல்லாத்தையும் சரசரவென்று சரிப்பது சரி அல்ல என நினைத்தாரோ என்னவோ?
துன்பியல் முடிவு வேண்டாம், இன்பியல் முடிவுதான் வேண்டும் என்று நான் சொல்லவில்லை.
ஆனால் ஒரு அழிவை நோக்கி கதையை முடிக்கக் கூடாது... என இதமாய் வருத்தமாய்ப்
பேசினார்.
அட என் தந்தையே, என்றிருந்தது. நாவல் இப்படியான முடிவுடன்தான்
வெளியானது என்றாலும், அந்த சமூகப் பார்வையை இளைஞனான எனக்கு அவர் விதைத்தது மறக்கவே
முடியாத விஷயம். பின்னாளில் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் வளர்ப்புமகன் லெனின்
(என்டியெஸ் பதிப்பகம்) வெளியிட்ட என் ‘விநாடியுகம்‘ நாவலை நான் மாசிலாமணிக்கு
சமர்ப்பணம் செய்தேன். என்னிடம் ஒரு பதிப்பாள உறவும், பாசமிக்க குடும்பத்துப்
பெரியவரின் உறவும், நல்ல வாசக ரசனையும் பாராட்டியவர் மாசிலாமணி.
அநேகமாக வைரமுத்துவிடமும், லா.ச.ரா.விடமும், ப. சிங்காரம்,
இரவிச்சந்திரன், ஸ்டெல்லா புரூஸ், விட்டல்ராவ், அசோகமித்திரன், ஜெயகாந்தனிடமும்
கூட இப்படித்தான் அவர் பழகியிருப்பார் என யூகிக்க முடிகிறது. பிற்காலத்தில்
என்போன்ற இந்தத் தலைமுறை எழுத்தாளர்களின் மொத்த சிறுகதைக் கொத்துகளும் அவர்
வெளியிட்டார். தீபம், கணையாழி, கசடதபற, பிரசண்ட விகடன்… போன்ற சிற்றிதழ்களின்
மொத்தத் தொகுப்புகளும் வெளியிட்டார்.
அதைவிட முக்கியம் அசோகமித்திரன், லா.ச.ரா. போன்ற படைப்பாளிகளுக்கு
தேர்ந்த திறனாய்வாளர்களை வைத்து ‘படைப்புலகம்‘ என்கிற, படைப்பாளரின் சிறந்த
படைப்புகளும், அவர் சார்ந்த சிறந்த திறனாய்வுகளும் கலந்த ஆவணங்களை தமிழில்
முதன்முதலாக வெளியிட்டார். தமிழுக்கு அவர் செய்த வணக்கம் அது.
பதிப்புத் துறை என்பது ஒரு வணிக வளாகம் அல்ல, அறிவு வளாகம் என்று
செயல்பட்டவர் மாசிலாமணி. நல்ல வாசகராகவும் திறனாய்வாளராகவும் அவர் அமைந்தது
பதிப்புத் துறையின், அதனால் எங்களைப் போன்ற எழுத்துத்தாளர்களின் பேறு.
தமது 81வது வயதில் சென்னையில் மாசிலாமணி காலமானார். கலைஞன் போல் வேறு
பதிப்பாளர் பற்றி யோசிக்கவோ எழுதவோ முடியாதுதான். மாசிலாமணியின் வெற்றி சரித்திரம்
அது.
*
(நன்றி - இருவாட்சி இலக்கியத் துறைமுகம். பொங்கல் சிறப்பு வெளியீடு)
No comments:
Post a Comment