Friday, August 31, 2018

சனிக்கிழமை தோறும்
பகுதி 05

ப ற வை த் த ட ம்
எஸ். சங்கரநாராயணன்


வாழ்க்கை என்பதே பேரனுபவமாய் இருக்கிறது. வாயளவுக்கும் அதிகமான உணவு அது. கால துரித கெடுபிடியில், எதை உணர, எதை இழக்க என்ற திணறலில் இருந்து விடுதலை என்பதே இல்லை. பேரனுபவமும், ம/கிழ்ச்சியும், அடி வண்டலாய் சிறு சோகமுமானது வாழ்க்கை.
ஆனாலும் பரவாயில்லை. சோகப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. நேரமில்லை. வாழ்க்கை என்பJது குறுகிய ஒருவழிப் பாதை. மிக மிகவும் சிறுத்த இந்த வாழ்க்கைக் கையிருப்பில் அனுபவங்களை, வைரங்களை வாரியிரைத்து, ஆரவாரத்துடன் முன்னே முன்னே என்று திருப்பதி தரிசனக் கூட்டமாய் முன்னே மாத்திரம் நகர்கிறது காலம். விடுபட்டுப் பறக்கத் துடிப்பான பட்சியை, உள்ளங்கைக்குள் காபந்து பண்ணுகிற சிறுவனின் முயற்சியையே எழுத்தாளன் செய்கிறான் எனலாம்.
மணல்வீட்டைக் கலைத்துப் போகிற குறும்புக்காரக் காற்றைப்போல காலம் கனவுகளை எத்திச் சிதறடித்துச் செல்லப் பிரியம் கொண்டதாய் இருக்கிறது. பள்ளிக்கூட வாத்தியார் போல எழுதி எழுதி, அழித்துக்கொண்டே போகிறது அது. உருவங் கொள்ளுமுன் ஒரு விஷயம் கைநழுவி விடுமோ என்ற ஆதங்கக் குடைச்சலில், அறிந்த கொஞ்சத்திலும், இயன்ற அளவு தக்கவைத்துக் கொள்ளும் ஆவேசம் கிளர்ந்தெழுகிறது. அதிலும் நினைவில் சேமித்தது கொஞ்சமே கொஞ்சம். என்றாலும் அதாவது மிஞ்ச வேண்டும். அது முக்கியம்.
சற்றுமுன்
பறந்துகொண்டிருந்த
பறவை எங்கே
அது
சற்றுமுன்
பறந்துகொண்டிருக்கிறது.

புலன் வழிப்பட்ட நிஜத்தின் தரிசனம் கைநழுவிப் போகிற இயலாமையில், நகலெடுத்துக் கொள்ளுதல் தேவையாகிறது. நகலில் இருந்து மீண்டும் மீண்டும் நிஜத்தை மனதுக்குள் கொண்டுவந்து கொள்ள முடியும் அல்லவா?
சற்றுமுன் பறந்துபோன பறவையை, நினைவில் திரும்ப கொண்டுவரும் பிரயத்தனத்தில், பறவைக்கு அதே நிரந்தரமான இடம் மனது கொடுத்து விடுகிறது. நிஜத்தின் பிரதி இது. நகல்.
அதை அழிக்க காலத்துக்கு சக்தி கிடையாது. புயலாய்ச் சீறி, சினந்து அது வேரோடு மரத்தைப் பெயர்த்தால் தான் உண்டு. மனிதன் அப்போது சரணாகதி, என்றாலும் அது காலத்தின் தோல்விபயத்திலான ஆத்திரம், என்று அவன் புன்னகையுடன் செத்துப்போகலாம். அவனது வாழ்க்கை போலவே, அப்போது அவனது மரணமும் அர்த்தபூர்வமாகி விடும். நல்ல விஷயம் தான் அது, அல்லவா?
மனிதனைக் கலைத்துப் போடுகிற காலத்தை, ஆனால் கலைஞனோ சிறு புன்னகையுடன் அலட்சியமாக, முன்பின்னாகப் புரட்டிக் கூட, சீட்டு விளையாட்டில் மாற்றியடுக்கிப் பார்ப்பது போல, விளையாடுகிறான். தீராத சுவாரஸ்யமான விளையாட்டு அது. காலத்துக்கு ஆரம்பமும் முடிவும் ஏது? அதுபோல எழுத்தாளனுக்கும் ஓய்வு என்பதே கிடையாது. சுடருடன் விளையாடும் பூனைக்குட்டியாய் காலத்தோடு ஒரு விளையாட்டு.
காலம் தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டே யிருக்கிறது. அது காத்திருக்குமா யாருக்காகவேனும்? நிற்குமா? தேங்குமா? - அதுபோலவே கலைஞனுக்கும் ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் தொடர்ந்த வேலைக்கண்ணிகளால் அவன் பிணைக்கப் பட்டிருக்கிறான். இந்த ஈடுபாட்டில், சராசரி மனித வாழ்வே கூட, அவனுக்கு இரண்டாம் பட்சம் தான். அவனுக்கு ஏமாற்றங்கள் இல்லை. வறுமை இல்லை. தோல்விகள் இல்லை. வெற்றிகளும், அது சராசரியாகப் புரிந்துகொள்ளப் படுகிற அர்த்தத்தில், இப்படி நெருக்கடிகளில் இருந்து, கலைஞன், அவன் கலைஞன் ஆனதினால் தப்பித்தான், எனலாம்.
வாழ்க்கை பற்றிய அவதானிப்பின் இடையறாத முனைப்பில், அவனது பார்வை விசாலப் படுகிறது. தரிசனம் ஆழப் படுகிறது. தளம் விகாசப்படுகிறது... என தனி மனித எல்லைகள் விரிந்து கொடுக்கின்றன. நேற்றையும் இன்றையும் உறைய வைத்துப் பதனப் படுத்துகிற பிரயத்தனத்தில், சிறு நீட்சியாக, தன்னைப்போல நாளை என்கிற தொடர்-அம்சமும் அவனது கவன எல்லைக்குள் சேர்ந்து கொள்கிறது.
நாளை என்பது அடுத்த கட்டம். நாளை என்பது என்ன? நேற்றில் இருந்து புறப்பட்டு, இன்று வழியாக, நாம் போய்ச் சேரப் போகிற இடம்.
நாம் இறந்து காலத்துள்
நடந்து சென்று
எதிர்காலத்தை
அடைகிறோம்.

அடுத்த கட்டம் என்பது ஒரு கற்பனை. கனவு. அது இன்னும் சித்திக்காதது, என்ற பொருளில். அதை பிரமிப்பு விலக்கிய தன்னம்பிக்கையுடன் மனத் திண்மையுடன், ஆர்வத்துடன் எதிர்நோக்க, வரவேற்க, கலை கற்றுத் தருகிறது.
எடுத்துரைத்தல் பழக்கமாக ஆகிப் போனபின், எழுத்தில் ஒரு சீர், அணி, சங்கீதம், தாளக்கட்டு, அவரவர் பாணி, என ஏற்பட்டுப் போகிறது. யதார்த்தத்தின் சுருதி எல்லார்க்கும் பொது.
கூறியது கூறல் நமக்கானதல்ல. அதை, கிளிப்பிள்ளைகளுக்கு அந்த வேலையை விட்டுக் கொடுப்போம்.
காலப்போக்கில், அல்லது அடிப்படை நிலையில் வெளியே தெரியாமலும், பின் தெரிந்துமாக, தன்முகம் நிறுவிக் கொள்கிற ஆவேசம், எழுத்தின் ஊடுசரம். நதியில் நீர் அருந்தும் நாய் தன் முகம் பார்க்கிறாப் போல. ஒருவேளை எழுத்தின் மூலஸ்தானமும் அதுவாகவே இருக்கலாம். அதனால்தான் அவன் உற்சவம் கிளம்பியும் இருக்கலாம்.
இதிலும் ஒரு வளர்ச்சி நிலை, அபூர்வமான விஷயம் கலைக்கு. எங்கும் நாம் நம்மை நிறுவிக் கொள்ள வேண்டியது இல்லை. எங்கெங்குமான ஒன்று நம்முள் இருக்கிறது. நாம் இந்தப் பிரபஞ்சத்தின் துகள்களே, என்ற உணர்வு, ஆச்சர்யமாக ஒரு கலைஞனுக்கு ஒரு காகலகட்டத்தில் நிகழ்கிறது. எங்கும் தன்னை நிறுத்துகிற ஆவேசம் போய், எங்கும் தான் ஏற்கனவே நிறைந்திருக்கிற நிறைவு, எத்தகைய ஆனந்தம்.
காலகாலமாய் மனிதனின் போராட்டங்களும், அதுசார்ந்த முடிவுகளும், தத்துவ மயக்கங்களும், அதனின்று மீளலும் என்று இந்த வாழ்வின் தொடர் ஓட்டத்தில், ஒரு நிலையில், வாழ்க்கையே சிலரது கணிப்பில் தத்துவங்களாக, கருத்துருவங்களாக, இசங்களாக சுருங்கிப் போகிற அவலம் துயரமானது.
எந்தக் காலகட்டத்திலும் ஒரு சமூகம், நவீனத்திலும் அல்ல பழமையிலும் அல்ல, இந்த இரண்டு நிலைகளையும் இரு கரைகளாகக் கொண்டு நடுவே ஆறாகப் பெருகியோடிக் கொண்டிருக்கிறது. எனவேதான் தத்துவ தரிசன அடிப்படையில், முடிவை அல்ல, சற்று அடுத்த கட்டத்தைச் சுட்டுவதும், கவனப் படுத்துவதும் கலைஞனின் பணியாக இருக்கிறது. அதற்கு நம்பகத்தன்மை அவசியம். மட்டுமல்ல, பிறரையும் கூடக் கூட்டிப்போகிற சிறு அக்கறையாவது இல்லாமல் எப்படி?
கல்வியும் மதமும் அரசியலும், வாழ்க்கையைத் தத்துவ விசாரத்துக்குள் சுருக்கி விடுகின்றன. அவ்வளவில் சருக்கியும் விடுகின்றன. அவை நிறுத்துப் பார்க்க முயல்கின்றன, சரிதான். யாரிடம் இருப்பது சரியான தராசு என்பதிலேயே ஆளாளுக்குச் சிக்கல்.
கலை எடைபோட வில்லையா? அதுமாத்திரம் சரி, என்று எப்படி நிர்ணயம் செய்து கொள்வது... என்றால், முடியாது தான். ஆனால்...
இன்னொரு விஷயம் சொல்லி இந்த ஆனாலுக்கு வருவோம். அரசியல் என்ன சொல்கிறது, தனிமனித முயற்சிகளை அது ஒருமாற்று குறைத்து, கணக்கில் சேர்த்துக் கொள்ளாமல், அது சமூக முன்னேற்றம் பற்றி  கவலைப்படுகிறது அரசியல். பெரும்பான்மைதான் அங்கே கணக்கில் இருக்கிறது.
மதமோ கல்வியோ, இதன் எதிர்நிலை கொள்கின்றன. தனிமனிதனுக்கு அவை அதிக முக்கியத்துவம் தருகின்றன். அதன்மூலம் சமூகத்தை, அதன் எழுச்சியை உத்வேகப் படுத்த முடியுமா என அவை யத்தனிக்கின்றன.  தனிமனித வேறுபாடுகளில் மதம் எதிர்மறையான விளைவுகளையும் அநேகத்தரம் சந்திக்கிறது.
இப்போது ஆனால்...
ஆனால்... கலை என்ன செய்கிறது, அது தனிமனிதப் பிரச்னை போல, ஒரு சமூகப் பிரச்னையைச் சொல்லிப் பார்க்கிறது. எழுத்தாளனின் தேர்வு அடிப்படையில், அந்தத் தனிமனித ‘வகைமாதிரி’ (ஸ்பெசிமன்) ஒரு குறிப்பட்ட தளத்தில் இயக்கப்படுகிறான். ஒரு குறிப்பிட்ட தீர்வை நோக்கி. அதாவது ஒரு தனிமனிதப் பிரச்னை, தனிமனிதத் தீர்வாக முன்வைக்கப் படுகிறது. படிக்கிற வாசகன் அதைத் தன் பிரச்னையாக உணர வேண்டியது இல்லை. தனக்கான தீர்வாகவும் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை. அது அவனது அப்போதைய பிரச்னையாகக் கூட அப்போது இராது போகலாம். அந்தப் பாத்திரத்தின் தீர்வு இதுவானால், அதே பிரச்னைக்குத் தன் தீர்வ என்ன என அவன் தனக்குள்  சிந்திக்கிற, முடிவெடுக்கிற உரிமையைக் கலை வழங்குகிறது. அவனை ‘தன்’ பிரச்னையைப் பற்றிய யோசனைகளைக் கிளர்த்தி, அதன் தீர்வையும் ‘தானே’ முடிவெடுக்கிற சுதந்திரத்தையும் அவனுக்குத் தந்து, அதேசமயம் அவனை யோசிக்கப் பழக்கப் படுத்தி, தெளிவாக்க கலை உதவுகிறது. அருமையான விஷயம் இது அல்லவா?
அரசியலோ கல்வியோ மதமோ போல, வாழ்வில் இருந்து மனிதன் பெற்றது சாறு. தத்துவக் கூறு. தத்துவக் கடிவாளத்துடன் வாழ்க்கையைப் பார்க்கிற போதே வாழ்வின் தளம் சிறுத்துப் போகலாம் ஒருவேளை.
கலை வாழ்க்கைக்கு மேலதிக நியாயம் செய்கிறது.
எழுத்து வீர்யத்தைக் காவு கொடுக்காமல், இழக்காமல் சற்று பரந்த தளத்தில் சமூகத்துக்கு அறிமுகம் ஆகிறது நல்ல விஷயந்தான். சில சமயம் அப்படி விபத்துகள், அல்லது வாய்ப்ப்புகள் நேர்ந்துதான் விடுகின்றன. சில படைப்புகளைப் படைக்கிற போது, அட இது இன்னும் விரிவான தளத்தில் அறியப்படலாமே என்கிற யோசனை வருவதும் இயல்பான ஒன்றே. ஒருவேளை பரிசுகளால் அது சாத்தியப்படவும் கூடும், என்கிற கணிப்பில், அந்த விபத்தும் நிகழ்ந்ததான கணத்தில், அந்தப் படைப்பு தன்னை ஓரளவு நிறுவிக் கொண்டாற் போல, மன அமைதியும் கிட்டுகிறது.
இதுவரை தனது படைப்புகளால் தன் வாசகரை கௌரவப்படுத்தி வந்த கலைஞன், தன்னையும், அதன்மூலம் தன் வாசகரையும் ஒருசேர கௌரவம் அளிக்கிற முயற்சியைக் கைகுலுக்கி ஏற்றுக் கொள்கிறான்.
மானுடப் பொதுவாழ்வின் சற்று அடுத்தகட்டத்தைச் சுட்டும் பொறுப்புமிக்க கலைஞனுக்கு, பரிசுகள் சில சமயம் தன் எழுத்தின் தீவிரத்திலும், போக்கிலுமே கூட அடுத்த கட்டத்தைச் சுட்டிக் காட்டிவிட வல்லதாய் அமையக் கூடும்.
பரிசுகளை விட, இப்படித் தேடி வாசிக்கிற, வாசித்துத் தேர்வு செய்கிற, கௌரவிக்கிற நபர்களும், அமைப்புகளும், இயக்கங்களும் இருப்பதே ஆரோக்கியமான செய்திதான். எந்த மொழிக்கும் எந்த நாட்டுக்கும் எந்தக் காலத்துக்கும் அது தேவை. மிகத் தேவை.
முக்கியமாய், படைப்புக்கான பரிசு என்பது, அவனது மிகச் சிறந்த வாசகர்களால் நிர்ணயம் பெறுகிறது. ஒரு கலைஞனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

 •

‘நேற்று இன்றல்ல நாளை’ நாவலுக்கு அக்னி அட்சர விருது 
பெற்றுக்கொண்ட ஏற்புரை (14,02,1997)
91 9789987842
storysankar@gmail.com

Friday, August 24, 2018


பகுதி 4
இரு துளி
கண்ணீர்
எஸ். சங்கரநாராயணன்

தூர்தர்ஷனில் (இப்போது பொதிகை) எனது முதல் படைப்பு பற்றி ஒரு பத்து நிமிடப் பேட்டி. அந்த முதல் படைப்பை எழுதியதற்கு நான் வெட்கப் படுகிறேன், என்று சொன்னேன். அது அல்லாமல் அதைவிடச் சிறந்த படைப்பு ஒன்றை நான் தர அது உந்தியது, என்பது  உண்மை. ஆகவே என் சிறந்த படைப்புக்காக நான் நகர்ந்து கொண்டிருக்கிறேன், என்றேன். எப்போதுமே சொல்லி முடித்ததும் சொல்லியதில் சொல்லாமல் விட்டதை ஓர் எழுத்தாளன் உணர நேர்ந்து விடுகிறது. இது வளர்ச்சியா தளர்ச்சியா சொல்ல முடியவில்லை.
ஒரு பெரிய கட்டடத்தின் முதல் செங்கல் அத்தனை நினைவுக்குரியது அல்ல. அத்தோடு நதிமூலம் ரிஷிமூலம் போல இந்த ஆரம்ப காலகட்டம், அது எதிர்பாராத் தன்மை கொண்டது. அதில் இருந்து இது என்கிற தர்க்கங்களைத் தாண்டி நகர்கிறது வாழ்க்கை. ஒரு கட்டத்தில் நல்லவனாகவும், அவனே இன்னொரு கட்டத்தில் வில்லனாகவும் வாழ்க்கை நமக்கு அறியத் தருவதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. வேதியியல் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் படிக்கையில் எழுத வந்ததாக நினைவு. என் முதல் கதை வெளியான காலகட்டம். 1977 - 78. எழுத்தைப் பற்றிப் பெரிசாக எதுவும் தெரியாது. பெரிசாக என்ன, எதுவுமே தெரியாது. தெரியாது என்பதும் தெரியாது.
மிக மோசமான மாணவனாகவே கல்லூரிப் பருவம் எனக்கு அமைந்தது. பொறுப்பற்ற கோவில்காளைத் தனம் என்னிடம் இருந்தது. ஒரு காரணமும் அற்ற திமிர். தேவையற்ற நிமிர்வு. எல்லாம் அதுவாகவே தானாகவே நல்லது எனக்கு நடக்கும். நடக்காமல் எப்படி, என்கிற அசட்டு நம்பிக்கை. அப்படியொரு பாதுகாப்பான வசதியான சூழலோ பாசம் மிகுந்த குடும்பம் என்றோ இல்லை தான். ஆனால் கேட்க ஆளில்லாத தான்தோன்றித் தனம். வழிகாட்ட எடுத்துச்சொல்ல ஆள் இல்லை.
இதில் உலகுக்கு அறிவுரைகள் வழங்க எனக்கு ஆசை. அந்தப் பதின் பருவ ஆரம்பத்தில் இருந்தே பிள்ளைகளுக்கு ஒரு கிறுக்கு. தானாகவே யோசிக்கிற பாவனையில் பெரியவர்களிடத்தில் ஓர் அலட்சியமும், தனக்கே சொந்தமாக எல்லாம் தெரியும் என்கிற ஆணவமும் ஒட்டிக் கொள்ளும் பருவம். சற்று வெளியே எல்லாம் சிறப்பாக இருப்பதாகவும் நம் இந்தச் சூழலையிட்டு சிறு ஆதங்கமும் வருகின்றன அப்போது. சைக்கிள் கத்துக்கிறவன் எடுத்த ஜோரில் மகா வேகமாக தலைமுடி பறக்கப் போவானே, அதைப் போல. இது வாழ்க்கை சைக்கிள்.
சமுதாயச் சீர்கேடுகள் என்று மத்தவர்கள் சுட்டிக்காட்டியதை வைத்துக்கொண்டு ஆத்திரக் கூத்தாடுவதன் மூலம் என் சமுதாயப் பொறுப்பைப் பறைசாற்றலாம் அல்லவா? எங்காவது போராட்டம் என்றால் கூடப்போகலாம், பங்கெடுத்துக் கொள்ளலாம். எவன் குரல் கொடுக்கிறானோ அவனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அழுத பிள்ளை பால் குடிக்கும், என்று சும்மாவா சொன்னார்கள்?
இதயம் வழி காட்டும் வயசு. மூளையை மீறி உணர்ச்சித் ததும்பல் அது. பதினாறு வயசில் கம்யூனிஸ்ட்டா இல்லைன்னா உனக்கு இதயமே இல்லை. நாற்பது வயதில் ஆன்மிகவாதியா மாறாட்டி உனக்கு அறிவே இல்லை - என்று ஒரு சொலவடை உண்டு அல்லவா?
‘ஊர்வலத்தில் கடைசி மனிதன்.’ இப்படி ஒரு கவிதைத் தொகுப்பு என்னுடையது.
பிரச்னைக்கு இரு பக்கங்கள் என்பதே தெரியாது அந்தக் காலத்தில். அது ஒரு பருவம். இளமைத் தினவெடுத்து சொறிய சுவர் தேடி அலைந்தேன் நான், என்று தோன்றுகிறது.
ஒரு ஆரம்பம் எல்லாருக்கும் தேவைப் படுகிறது அல்லவா? அது நல்ல தருணமோ மோசமான தருணமோ. தருணங்கள் நிறைந்தது உலக வாழ்க்கை. அப்போது திருப்பங்கள் நிகழ்கின்றன. அதைக் கணிக்கிறவன் கவனிக்கிறவன் அதை சற்று முன்னதாகவே உணர்கிறவன் அதைப் பயன்படுத்தி முன்னேற முடியும். அதுவரை இல்லாமல் உலகம் அந்தத் தருணத்தில் புதியதாக மனசில் வண்ணங் காட்டுகிறது. எனக்கு மோசமான தருணங்களின் வண்ணங்கள் கிடைத்திருக்கலாம்.
எனினும் வாழ்க்கையின் நெடிய பயணத்தில் எவையும் விரயம் அல்ல என்றுதான் எண்ணுகிறேன். வாழ்க்கை அனுபவங்களின் பயிற்சிக் களம். நதியடிக் கூழாங்கற்கள் நாம்.
அந்தத் தாவரத்தில் பூ ஒன்று மலர்வதைக் கண்டேன். அதுவரை அந்தப் பூவுக்கும் அந்தத் தாவரத்துக்கும் சம்பந்தமே இல்லை. தாவரம் பச்சையாய் இருக்கிறது. அதில் இந்த வண்ணம் எப்படிப் புகுந்தது. யார் பார்த்த வேலை இது? இரவில் அந்தப் பூ அங்கே இல்லை. காலையில் ஆகா, எப்படி நிகழ்ந்தது அந்த அற்புதம்.
உண்மையில் அவை அற்புதங்கள் அல்ல. அவை பற்றிய கவனம் எனக்கு அப்போது இல்லை. இப்போது எப்படியோ வந்தது.
அல்லது, வாழ்க்கையின் அன்றாடத்தில் அற்புதங்கள் நிகழ்ந்தவண்ணமே இருக்கினற்ன. அவை உள்ளங்கையில் தரப் படுவது இல்லை. நீ எட்டிப் பறிக்க வேண்டும் அவற்றை. அப்போது வாழ்க்கை வேறொரு பரிமாணத்தில், முப்பரிமாணத்தில் உன் உள்ளங்கைக்குள் சிறகு புதுசாய் முளைத்த பட்சியாய் வந்து இறங்கும்.
வெளியே அன்றாடங்களில் இயங்கும் நாம், அதை மீறி ஒவ்வொரு ஆழ்மனமும் சில குணங்களைத் தாங்கியே இயங்குகிறது. இதை நாம் அநேகர் உணர்கிறது இல்லை. அடிக்கடி ஆழ்மனசைத் துருவி துழாவிப் பார்க்க முடிந்தவர் பாக்கியவான்கள். அவர்களிடம் பிரமைகள் கிடையா. இயல்பாகவே அவர்கள் சாதனையாளர்களாகத் தங்களை வெகு சுருக்கில் தயார் செய்து கொள்கிறார்கள். இந்த ஆழ்மன உந்துதல் மனிதனின் இயல்பான தினவு தான். அதுவே அன்றில் இருந்து இன்றுவரை மனிதனின் நாகரிகத்துக்கு, வளர்ச்சிக்கு, விஞ்ஞான பதில்களுக்கு, மேம்பட்ட வாழ்க்கை முறைகளுக்கு, வசதிகளுக்கு எல்லாம் ஆதாரம்.
கொண்டாட்ட குணங்கள் இளமையின் ஓர் அம்சம். இதில் ஒருபடி மேலான கிறுக்கு எனக்கு இருந்தது. நான் கொண்டாடப்பட ஆசைப்பட்டேன். அதன் தகுதி என்ன, அதற்கான தயாரிப்பு என்ன அதெல்லாம் தெரியாது. ஒரு கூட்டத்தில் தனியே நான் அடையாளப்பட வேண்டும் என்கிற ஆசை. என் குரல் ஒரு கூட்டத்தில் ஓங்கி ஒலிக்கும். எதைப் பற்றியும் எனக்கு ஒரு விமரிசனம் இருந்தாப் போல காட்டிக் கொண்டேன். குறைகுடம் ஆட்டம் போடத் தானே செய்யும்.
என் இதயத்தில் சொற்கள் குவிய உடுக்கை போல உள்ளதிர்ந்தபடியே இருந்தது.
எப்படி எழுத்துக்கு வந்தேன் என்பதே வேடிக்கை. சுப. சுப்பிரமணியன் என்கிற ஒரு நண்பன் என் கல்லூரிக் காலத்தில். எப்பவும் ரேடியோ கேட்டபடி யிருப்பான். அந்தக் காலத்தில் சிலோன் ரேடியோ தமிழ்நாட்டில் அப்படியொரு பிரபலம். அவன் கேட்டபடி, சிலோன் ரேடியோவின் ஒரு அறிவிப்பாளர், கனகரத்தினம் என்பவர், தன் பெயரைக் கொஞ்ச நாட்களாக முழுசாய், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், என்று அறிவிக்க ஆரம்பித்தார். அதை ஒரு துணுக்காய் குமுதம் இதழுக்கு எழுதிப் போட்டான் சுபா. “இது வெளியிட தேர்வாகாது” என்று நான் மறுத்தேன். அது வெளியானது. எனக்கு ஆச்சர்யம். நான் பிறகு வேறொரு துணுக்கு எழுதிப் போட்டேன். அதுவும் வெளியானது. இப்படியாய் எனக்கு எழுத்துக் கிறுக்கு பிடித்தது. அச்சில் என் பெயர் பார்க்கிற ஆவேசம். எழுதுவதை நிறுத்தவே இல்லை நான். நான் எழுதியதை விட திரும்பி வந்த கதைகள் அதிகம்.
கல்யாணத்தில் நலுங்கு விளையாடுகிறாப் போல, அவர்கள் தேங்காய் உருட்ட, நானும் பத்திரிகை ஆசிரியரும் கதைகள் பரிமாறிக் கொண்டோம்.
சுப. சுப்பிரமணியன் இப்போது ஐசிஐசிஐ வங்கியில் மேனேஜர். அவன் எழுதிய ஒரே துணுக்கு அதுவே. என்னை எழுத்தாளன் ஆக்கிவிட்டு அவன் ஒதுங்கிக் கொண்டான். எனக்கு ஒரு போட்டி குறைந்தது.
கனகரத்தினத்துக்கு நன்றி.
எதையாவது எழுத என்று ஆரம்பித்து, பத்திரிகைகளின் தேவைக்கு, என் கற்பனைக்கு என்று நான் எழுதிய கதைகள் பெரிதும் வரவேற்பு கண்டன. ஒரே வாரத்தில் பதிமூன்று கதைகள் எல்லாம் வெளியான காலம் உண்டு. அப்போது சாவி, இதயம் பேசுகிறது இதழ்களுக்கு கிளை இதழ்கள் உண்டு. ஒரு சம்பவம் அமைத்து அதில் ஒரு எதிர்பாராத் திருப்பம். ஒரு சோக நிகழ்வில் ஆக சோகமான, நெஞ்சை நெருடுகிற முடிவு, இப்படி என் கதைகளை அடுக்கினேன். தமிழில் என்று இல்லை உலகம் முழுசுமே துன்பியல் முடிவு கொண்ட கதைகளுக்கு ‘டிமான்ட்’ அதிகம்.
அந்த இளமையின் திமிர் வேறு. திமில் சிலிர்த்த காளை. சமுதாயத்தில் விதவைகளே இருக்கக் கூடாது... என்று எனக்குக் கோபம். விதவை என்றால் என்ன, அவள் பிரச்னைகள் என்ன, தெரியாது. கல்யாணம் என்றாலே தெரியாது எனக்கு. ஒரு பெண் விதவையானதும் அந்தப் பெண்ணைப் பற்றி கண் காது வைத்து ஊரில் சலசலப்பு வருகிறது, என எனக்கு ஆத்திரம். இதைத் தட்டிக்கேட்கிற வேகம், எழுத்தாளனைத் தவிர வேறு யாருக்கு வரும்? ‘ஒரு வெள்ளை உடுத்திய தேவதை’ என என் சிறுகதை, தி வேர்ல்ட் இஸ் வெரி பிரிமிடிவ், என ஆங்கில வரியுடன் இந்தக் கதை முடியும்.
இந்தக் கதை எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்த அடுத்த வாரமே விதவைகளுக்கு விடிவு காலம் வந்துவிடும் என நம்பினேன்.
அந்த வாசகியை சந்தித்தது ஒரு நற் தருணம் என்றுதான் தோன்றுகிறது. தாவரத்துக்கு பூ முளைத்த வேளை அது. அந்தப் பெண்ணிடம் கரிசனம், இரக்கம், அன்பு எல்லாம் வைத்திருக்கிறாய் சங்கர். “தேங்ஸ்,” என்றேன் பல்லிளிப்புடன். அப்புறம் ஏன் தலைப்பு, ‘ஒரு வெள்ளை உடுத்திய தேவதை’, என இத்தனை அலங்காரம்?... என அவள் கேட்டுவிட்டுப் போய்விட்டாள்.
கதைச் சூழலோடு தலைப்பும், பயன்படுத்தும் சொற்களும் பொருந்தி இழைய வேண்டும், என முதன் முதலாக அந்தப் பெண் என் கண்ணைத் திறந்தாள். அவள் பெயர் கூட மறந்து விட்டது.
அருமையான வாசகர்களை நான் என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன். இன்னொரு பெண், ‘நீங்க திருநெல்வேலிப் பக்கமா?’ என ஒருமுறை கேட்டாள். நான் பிறந்தது ஸ்ரீவைகுண்டம். “ஆமா, எப்பிடிக் கண்டுபிடிச்சீங்க?” அவள் சொன்னாள். ‘மறதி’ கதையில் அப்பளம் பொறிக்கக் கூட தேங்காய் எண்ணெய் இல்லை, என்று வருகிறது. தேங்காய் எண்ணெயில் அப்பளம் பொறிக்கிறவர்கள் திருநெல்வேலி அல்லது கேரளாப்பக்கம் தான், என்றாள். அட இப்படியெல்லாம் வாசிக்க வேண்டும், என பொறாமை ஏற்பட்ட கணம் அது.
இன்னோரு வாசகர். இவரும் பெண்தான். உங்கள் கதையில் ஆண் எழுதிய கதை, என்கிற அடையாளம் இருக்கிறது. தவிர்க்கலாமே, என்றார். எனக்கு ஆச்சர்யம். மொட்டைமாடியில் சட்டையைக் கழற்றிவிட்டு உட்கார்ந்தான், என ஒரு பெண் எழுத்தாளர் எழுத மாட்டார், என அவர் விளக்கினார்.
இப்படி அபார வாசிப்பு சூட்சுமம் உள்ளவர்கள் தான் இலக்கிய மேன்மைக்கு அடிநாதம் என்று தோன்றுகிறது.
என் நண்பர் இளசை எஸ். சுந்தரம் சொல்வார். சாதி அடையாளங்களே வரக்கூடாது என அவர் ஒரு கதை எழுதினார். அதில் உள்ள சாதியை ஒரு வாசகர் சொன்னாராம். சாவில் ரெட்டைச் சங்கு ஊதி பிணத்தை எடுக்கிறீர்கள், ‘அந்த’ சாதியில் மட்டும் தானே இப்படி?... என்றாராம் அந்த வாசகர்.
‘கடல்காற்று’ என ஒரு நாவல். அது கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணைப்பாட நூலாகப் பரிந்துரை பெற்றது. சில தன்னாட்சிக் கல்லூரிகளிலும் அது பாடமாய் இருந்தது. உடுமலைப்பேட்டை ஜிவிஜி விசாலாட்சி கல்லூரியிலும் அது இருந்தபோது அந்தக் கல்லூரியின் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் முன்னிலையில் நான் பேசினேன். ஒரு மாணவி எழுந்து, நாவலின் சம்பவங்களைச் சுட்டிக் காட்டி, அதன்படி கதாநாயகிப் பெண்ணுக்கு வயது 62க்கு மேல் இருக்க வேண்டும், ஆனால் நீங்கள் வயது 58 என ஒரிடத்தில் குறிப்பிட்டீர்கள், என்றார்.
அந்த மாணவிக்காக ஒரு சிறப்பு கைதட்டல், என நான் மேடையில் அறிவித்தேன். இப்படி நுணுக்கமான வாசகியைப் பெற நான் கொடுத்து வைத்தவன். மற்றபடி பதில் தானே? அந்த அம்மையாருக்குத் தன் உண்மையான வயதைச் சொல்ல விருப்பம் இல்லை, அதனால் தான் நான் குறைத்துப் போட்டேன், என்றேன். இப்போது நான் அறிவிக்காமலேயே கைதட்டல் கேட்டது.
வாசகர்கள் பலவிதம். என்னைப் பார்த்த கணம் மகிழ்ச்சியுடன் முகம் வீங்க கைகொடுப்பார்கள். புத்தகக் கண்காட்சியில் ஒரு அன்பர் மதுரைக்காரர், சென்னைவரை வந்தவர் என்னைப் புத்தகக் கண்காட்சியில் சென்னையில் சந்தித்தார். அடுத்த வருடமும் அவர் வந்திருந்தார். “சங்கரநாராயணன் உங்களைப் பார்க்க முடியுமான்னு நினைச்சிக்கிட்டே வந்தேன்” என்றார்.
தற்போதைய வாசக அன்பர் டிகேயெஸ். ஒய்வுபெற்ற போலிஸ் ரைட்டர் இவர். விழுப்புரத்துக்காரர். நண்பர் ராகவபிரியன் திருமகளின் கல்யாணத்தில் இவரைச் சந்தித்தபோது நெகிழ்ந்து போனார். சென்னை வந்தால் அவசியம் வீடுவரை வருவார். வாய் வலிக்காமல் பேசுவார்.
கல்கி பத்திரிகையுடன் சிறு மனக் கசப்பு ஏற்பட்டபோது நான் அதில் எழுதுவதை நிறுத்தி யிருந்தேன். ‘உயிரைச் சேமித்து வைக்கிறேன்’ என்கிற என் சிறுகதை நூலுக்கு தமிழக அரசு பரிசு கிடைத்தது. வாங்கிக் கொண்டு கீழே இறங்கியபோது ஒரு மனிதர் என்னை நோக்கி ஓடி வந்தார். “நீங்க ஏன் இப்ப கல்கியில் எழுதுறது இல்லை. எங்கள் வீட்டில் கல்கிதான் வாங்குவோம். அவசியம் கல்கியில் எழுதுங்கள்” என்றார். அவருக்குத் தலைவணங்கி பிறகு கல்கியில் மீண்டும் தொடர்ந்தேன்.
வாசகர்கள் பற்றி அவ்வப்போது பகிர்ந்துகொள்ள விருப்பம். ஓர் எழுங்ததாளனின் வாழ்க்கையில் வளர்ச்சியில் வாசகனுக்கும் கணிசமான பங்கு உண்டு. நாம் எழுதும் விஷயத்தில் வாசகனுக்கு இன்னும் பரந்துபட்ட அனுபவம் இருக்கலாம். அல்லது அவனது கவனம், எழுதும்போது நாம் காட்டிய கவனத்தை விட அதிகமாகவும் அமையலாம். சுஜாதா ஒரு வரி எழுதினார். “அவன் மூன்றாவது மாடியில் இருந்து நூற்றியெண்பது கி.மீ. வேகத்தில் விழுந்து செத்துப் போனான்.” ஒரு வாசகர் அவரைத் திருத்தினார். “தவறு. கீழே இறங்க இறங்க புவியீர்ப்பு விசையால் அவன் வேகம் அதிகரிக்கும். ஒரே வேகத்தில் அவன் கீழே விழ முடியாது.”
இரண்டாவது ஆண்டு பிஎஸ்சி. படிக்கும்போது முதல் கதை வெளியானது. என்றாலும் எழுத்தில் ஓரளவு பிடி கிடைத்த கதை சுவாரஸ்யமானது.
என் அம்மாவுக்கு நான் கதைகள் எழுதுவது பிடிக்கவில்லை. கதைகளைப் பிடிக்கவில்லை, என்பதல்ல. கதை ‘எழுதுவது’ பிடிக்கவில்லை. கல்லூரிக்காலம். படித்து மதிப்பெண் வாங்கினால் அவளுக்கு சந்தோஷம். அவங்க அப்படித்தான் நினைப்பார்கள், என எல்லாம் தெரிந்த அலட்சியம் எனக்கு.
நான் பி.எஸ்சி. பட்டப்படிப்பில் தோற்றுப் போனேன். என் குடும்பத்துக்கு என்றில்லை. எனக்கே அது அதிர்ச்சி.
நான் சென்னையில். என் அண்ணனின் கடிதம் தகவல் தெரிவித்து என் கையில். இரு துளி கண்ணீர் என்னில் இருந்து சொட்டி அந்தக் கடிதத்தை நனைத்தது. அப்போது நினைத்தேன். எழுத வேண்டும் என்று ஆர்வத்தில் அல்லது ஆர்வக் கோளாறில் வந்துவிட்டேன். கல்வி கைவிட்டு விட்டது. இனி எழுத்தாளன் ஆகியே தீர வேண்டும்...
கண்ணைத் துடைத்துக்கொண்டு நான் எழுதியனுப்பிய கதை சாவியில் பிரசுரம் ஆனது. ஓரளவு கௌரவமாய் நடை, உத்தி என நான் முயன்றிருந்தேன் அதில். நான் எழுத்தாளன் ஆகி விட்டதாக என்னை உணர வைத்த கதை அது.
அம்மாவுக்கு ஓர் ஆறுதல் நான் வழங்கினேன் பிற்காலத்தில். நான் எழுதி அச்சில் வந்த முதல் நாவல் ‘நந்தவனத்துப் பறவைகள்’ நான் பி.எஸ்சி. முதல் முயற்சியில் தோற்று, (இரண்டாம் முயற்சியில் தேறினேன்.) அதே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மாணவர்களுக்கு நவீன இலக்கியப் பாடநூலாக இடம் பெற்றது.
அழுகைகள் ஒருபோதும் அர்த்தம் இழப்பது இல்லை.
*
storysankar@gmail.com
91 97899 87842

Friday, August 17, 2018


பகுதி 3
மின் கம்பிக் 
குருவிகள்
 எஸ். சங்கரநாராயணன்
 *
ரு விரல் உலகைப் பார்த்து நீட்டும் போது மத்த மூணு விரல்கள் உன்னையே காட்டுகிறது என்பார்கள். அதைத் தவிர்க்க முடியாது. பிறரைப் பற்றி எழுதுவதான பாவனையில் மிக்கவாறும் தன்னையே காட்டிக் கொடுத்து விடுகிறது எழுத்து. அதற்கு ஓர் எழுத்தாளன் தயாராய் இருக்க வேண்டும். காலப்போக்கில் ஒரு வேடிக்கை போல அந்த எழுத்தின் அடிநாதமான விமரிசனக் குரலை அவன் தன் வாழ்க்கை பாவனைகளாக ஆக்கிக்கொள்ள உந்தப் படுகிறான். அது ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது. முதல் நிலை, இந்த பாவனைகளில் இருந்து தான் அந்த எழுத்து பிறக்கிறது. அடுத்த நிலை, எழுத்து என்று சகஜப்பட்டான பின், எழுத்தில் இருந்து இவனுக்கு ஒரு கிரண வீச்சு கிடைக்கிறது. பெறும் நிலைக்கு, வாசக நிலைக்கு அவன் மீண்டும் வந்தமைகிற வேளை அது.
எதனால் எழுதுகிறேன்?
அப்படி அல்லாமல் வேறு எவ்வாறும் என்னை, என் இருப்பை என்னால் நியாயப் படுத்திக் கொள்ள முடியாது என்று தோன்றுகிறது. நான் ஒரு அலுவலகப் பணியாளி. பிணியாளி. இது பிணிக்கப் பட்ட பணி. அன்றாடங்களின் ஒழுங்கு அதில் உள்ளது. ஆனால் வாழ்க்கை? அது ஒழுங்கற்று நேர்ப் பாதையாய் அல்லாமல் முப்பரிமாணக் காட்சி என பரந்து விரிந்து கிடக்கிறது, ஒரு வானம் போல. சமுதாயம் என்கிறது ஒரு தன்னார்வ அமைப்பு. நாம் கட்டமைத்த ஒரு கற்பனை வடிவம். மனித உயிர் சிரஞ்ஜீவியாக வாழ அவாவுறுகிறது. குறைந்த பட்சம் பாதுகாப்பாக வாழ அது ஆவேசப்படுகிறது. அதை அலட்சியமாக, சம்பவங்களின் இடிபாடுகளில் மாட்டிக்கொள்ள அனுமதிக்க முடியாது. இதற்கு வாழ்வில் ஒரு கூட்டு அமைப்பு, ஒழுங்கு, நியதிகள் என அடுக்குகளை உருவாக்கிக் கொள்கிறான் மனிதன்.. இந்த ஒழுங்கற்ற மொத்தத்தில் சிறு ஒழுங்கைப் பிரித்து தன் ராஜ்ஜியத்தை அவன் அமைத்துக் கொள்கிறான். எதிர்பாராத ஒரு ஆபத்தைச் சமாளிக்க, தன்னால் தனியாக அல்லாமல், ஒரு மனிதக் கூட்டமாக என்றால் வேலை எளிது, என்பது அவன் துணிபு. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் வேறு வேறு நபர்கள் தருகிறார்கள். மானுடம் வெல்க. மிருகம் மாரும் ஆனது கிடையாது. மனிதம் மானுடம் ஆகி விட்டது.
மேலதிக ஒழுங்குகளை அவன் வரையறை செய்துகொண்டபோது, அதற்கான கணக்குகளில், இந்த ஒழுங்கு சார்ந்த கலை வடிவம் தன்னைப் போல சித்தித்தது அவனுக்கு. வாழ்க்கையைக் காரண காரியங்களுக்கு உட்படுத்துகிற அவனது பிரியத்தில், இந்த கலை ஒழுங்குகள் அவனைக் கவர்கின்றன. இப்படிப்பட்ட ஒன்றைத்தான் அவன் வாழ்க்கையில் லட்சியப் படுத்துகிறான். ஒழுங்குகள் சார்ந்த உலகத்தில் மரண பயம் இல்லை. மரணத்தை மீறி வாழ்க்கை சார்ந்து அவனுக்கு நெடுந்தூரப் பயணம் இருக்கிறது. வாழ்க்கை அற்புதமானது என்கிறது கலை. எடுத்துச் சொல்கிறது கலை. அவனது மனசின் விழைவு அது.
ஆனால் கலை என்பது என்ன? கலை எப்படித் தோன்றியது?
கலை என்பது அடிப்படையில் முரண். ஒரு கருத்துக்கு நீட்சி என்றோ, மாற்று எனறோ உதிக்கும்போது அங்கே பரிமாற்றம் நிகழ்கிறது. எது சரி எது தவறு போன்ற விவாதங்கள் நிகழ்கின்றன. கலை அதற்கு ஏற்பாடு செய்கிறது. நல்லது நிற்க வேண்டும். நிலைக்க வேண்டும். இதுவரை இருந்தது அகன்று வேறு, சரி எனப் படும் ஒன்று, மேல் மட்டத்துக்கு, புழக்கத்துக்கு வருகிறது. கலை ஒரு முரண் சார்ந்த வழியில் மேலதிக உன்னதம் நோக்கி மனிதனை வழி நடத்துகிறது.
அதோ, என்கிறது கலை.
ஒரு நல்ல பாடல் கேட்கிறோம். மனசின் இருட்டு, அல்லது கவலை மெல்ல மேகம் விலகுவதாக உணர்கிறோம். கலையின் ஒழுங்கு, அந்த உள்மனச் சிதறலைத் திரும்ப சமப்படுத்த முயல்கிறதாக நமக்கு அமைகிறது. ஒரு பிரச்னை. அதைத் தீர்க்க வேண்டியிருக்கிறது. கலை, புனைவு என்கிற வடிவம் வேறொரு பிரச்னையை எடுத்துப் பேசுகிறது. அதற்கான தீர்வு அதில், அந்தப் புனைவில் நேரடியாகவோ உட்பொருளாகவோ காட்டப் பட்டிருக்கும். அல்லது விவாதிக்கப் பட்டிருக்கும். வேறொரு பிரச்னையை அங்கே விவாதித்திருக்கலாம். நம் பிரச்னை என்ன? அதன் தீர்வு நோக்கி நம்மை எப்படி சமப்படுத்திக் கொள்கிறோம்… என கலை சிந்தனைகளைத் தருகிறது. அது சொன்ன தீர்வை ஒட்டியும் வெட்டியும் இப்படியும் அப்படியுமாய் கலை ஊடாடுகிறது.
மின கம்பிக் குருவிகள்.
எதனால் எழுத வந்தேன் தெரியாது. ஆனால் ஒழுங்குகளுக்கும், ஒழுங்கற்ற சம்பவங்களுக்கும் ஒரு ஒத்திசைவைத் தர கலை முயல்வதை நான் அவதானிக்கிறேன். கட்டாயம் மனிதனுக்கு அது தேவையாய் இருக்கிறது, என்பதை உணர்கிறேன். எனக்கு அது தேவை.
இந்த சமூகத்தில் நான் ஓர் இடத்தில் பணி செய்கிறேன். எனக்கு அந்த வேலை அத்தனை உவப்பாய் இல்லை. ஒருவேளை வேறொரு இடத்தில் நான் இன்னும் சிறப்பாக இயங்க முடியுமோ என நினைக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. இதைவிட ஒரு நல்ல மனைவி கிடைத்திருக்கலாம், என்று சில சமயம் தோன்றுகிறது. நான் பிறந்த ஊர், என் குடும்பம்… எல்லாம் சார்ந்து எனது அதிருப்திகளை நான் கவனிக்கிறேன். அமைதல், புண்ணியம், விதி என்றெல்லாம் மனசு ஊசல் ஆடுகிறது. யாருக்கும் எல்லாமும் கிடைத்து விடாது, என்று தான் உலகம் அமைந்திருக்கிறது. அல்லது, இல்லாத ஒன்றுக்குக் கை நீட்டுவதே மனசின் எடுப்பாக இருக்கிறது. இன்றை விட நாளை மேலாக இருக்க வேண்டும் என மனசு வேண்டுகிறது. அப்படியானால் இருக்கிற இருப்பில் ஒரு மனம் திருப்தி கொண்டு அடங்கவிட முடியாது.
மேலான வாழ்க்கை பற்றிய ஒரு கற்பனையைக் கலை ஊக்குவிக்கிறது.
நான் எனக்கு உகந்த பிரதேசங்களில் பயணிக்க, சஞ்சரிக்க என் கலை எனக்கு, ஒரு படைப்பாளனாக வெகு உதவி. இந்த வாழ்க்கை, இது எனக்கு அமைந்தது. என்றால், நானாகத் தேர்ந்து கொண்ட என் எழுத்து, அதில் எனக்கான ஒரு வாழ்க்கையை, உன்னதத்தை நான சிருஷ்டி செய்து கொள்வேன். அதில் எனக்கு வாயத்தது இது என்கிற, இன்னொரு தலையீடு இல்லை. ஏமாற்றங்கள் சாத்தியமே இல்லை.
நான் என் எழுத்தை நேசிக்கிறேன். கலைஞர்கள் பிறப்பது இல்லை. அப்படியெல்லாம் அதித நம்பிக்கை எனக்கு இல்லை. நான் கலைஞனாக உருவானவன். இந்த வாழ்க்கையில் வேறு எங்கும் கிடைக்காத அமைதி, திருப்தி எனக்கு, நான் கலைஞனாக ஈடுபாடு காட்டுகையில் எனக்கு வாய்க்கிறது.
ஆகா, இதைக் கைமாற்ற முடியுமா?
அதனால் எழுதுகிறேன்.
என் கதைகள் அதை உறுதி செய்கின்றனவா? செய்ய வேண்டும். இது என் அவா.

storysankar@gmail.com
91 97899 87842



Friday, August 10, 2018


பகுதி 2

கதவுக்குள் கதவு
எஸ்.சங்கரநாராயணன்
ரு நாட்டின் சிறந்த அடையாளமாக அந்த நாட்டில் சாமானிய மக்களிடையே பரவலாய்ப் பரிமாறப்படும் பழமொழிகளையும் குட்டிக்கதைகளையும் நாம் காண முடியும். அந்தக் காலத்தின் சாமானிய மக்களின் குரலை அவற்றில் நம்மால் இனங் காண முடிகிறது அல்லவா? ஒரு ஆதங்கம், சோகம், அல்லது குமுறல் மற்றும் நீதி அந்த சாமானிய மனிதனால் உள் வைத்துக் கட்டமைக்கப் படுகின்றன அந்தக் குட்டிக்கதைகள். அவையே மக்ளிடையே பரவலாய் மீண்டும் மீண்டும் பரிமாறப் படுகின்றன. நம்மிடைம் புழங்கிவரும் இரு குட்டிக்கதைகளுடன் ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது. அதற்குமுன் ஒரு செய்தி.
கே. பாலச்சந்தர், இயக்குநர் ஒரு குமுதம் இதழ் தயாரித்த போது என்னிடம் மிகச் சிறிய கதைகளாக எதாவது வெளியிடலாமா, என்று கேட்டார். நான் சில கதைகள் அப்படிச் சொன்னேன். அதில் சுமாரானதை அவர் தேர்ந்தெடுத்து வெளியிட்டார் என்பது வேறு  கதை.
அது,
நாற்காலியில் வானம் பார்க்க தலை சாய்த்து கண்மூடி யிருந்தான் அவன். இதுவே சரியான தருணம் என சர்ரக் என்று கத்தியை உருவி... ஷேவிங்கை ஆரம்பித்தான்.
இன்னொரு கதையை நான் ஆனந்த விகடனில் தந்தேன். அதுவும் வெளியானது.
அரசர் கவலைக்கிடம். அவருக்கு வாரிசு இல்லை, என்பதால் யானையிடம் மாலை தந்து அது யாருக்கு மாலை இடுகிறதோ அவரே ராஜா என்று முடிவாகிறது. தளபதி இரகசியமாக மாவுத்தனிடம் வந்து “என் மகனுக்கு யானையை மாலையிடச் சொல். உனக்கு வெகுமதிகள் தருவேன்” என்று ஆசைகாட்டிச் செல்கிறான். பின்னாலேயே அமைச்சர் வந்து “என் மகளுக்கு யானையை மாலை போடச் செய். உனக்கு வேண்டுமான செல்வம் தருகிறேன்” என்று அவரும் வேண்டிக் கொள்கிறார். யானை மாலையிட்டது... மாவுத்தனின் மகனுக்கு.
வேறு கதைகள், கே.பி.யிடம் சொன்னது, இப்போது ஞாபகத்தில் இல்லை.
இப்போது எனக்குப் பிடித்த சில குட்டிக் கதைகள், நம்மிடையே புழங்கி வருகிற கதைகளைச் சொல்லலாம்.
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று நடந்து போய்க் கொண்டிருந்தது. அது எதிரே வந்த முயலைப் பார்த்து. நில்லு, என மிரட்டலாய்க் கூப்பிட்டது. முயல் பயந்து அப்படியே நின்றது. இந்தக் காட்டிலேயே பலசாலி யார் சொல்லு, என்றது சிங்கம். “நீங்கதான் மகராசா,” என்று நடுங்கிச் சொன்னது முயல். ம். அதை ஞாபகம் வெச்சிக்க, போ, என்றது சிங்கம். தொடர்ந்து போனபோது ஒரு மான் வந்தது. மானையும் நிறுத்தி சிங்கம் கேட்டது. இந்தக் காட்டிலேயே யார் பலசாலி? “நீங்க தான் மகராசா,” என்றது மான். ம், போ, என வழிவிட்டது சிங்கம்.
வழியில் ஒரு யானை குனிந்து புல்லைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. நான் வந்திருக்கிறேன். என்னைக் கூட பார்க்காமல் சட்டை செய்யாமல்... இந்த யானைக்கு எவ்வளவு திமிர், என்று அதற்குக் கோபம் வந்தது. அது யானையின் முன்னால் போய் நின்றது. ஏய் யானை, இந்தக் காட்டிலேயே யார் பலசாலி, என்று கேட்டது.
யானை தும்பிக்கை நீட்டி அந்த சிங்கத்தை அப்படியே தூக்கி ஒரு சுழட்டு சுழட்டி வீசிவிட்டு திரும்பப் புல் கடிக்க ஆரம்பித்தது.
பொத்தென்று தூரப் போய் விழுந்த சிங்கத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. அடச்சீ, கேட்டா கேள்விக்கு பதிலே தெரியவில்லை, உனக்கெல்லாம் ஒரு கோபம், என்றபடி எழுந்து போனது சிங்கம்.
காட்டில் இருந்து வேடுவன் ஒருவன் அரசனைப் பார்க்க வந்தான். அவன் அரசனிடம் ஒரு பழத்தைத் தந்து ‘‘இந்தப் பழத்தை உண்டால் உங்களுக்கு மரணமே இல்லை” என்றான். அரசனுக்கு அருகில் இருந்த மெய்க்காவலனுக்கு அதைக் கேட்டதும் அந்தப் பழத்தின் மீது ஆசை வந்துவிட்டது. அரசன் அதை தன் வாயில் போடுமுன் சட்டென அவன் அதை அரசன் கையில் இருந்து பறித்து தன் வாயில் போட்டுக்கொண்டு விழுங்கி விட்டான்.
அரசனுக்கோ கடுங் கோபம். யாரங்கே, இவனை சிரச்சேதம் செய்யுங்கள், என உத்தரவு பிறப்பித்தான். அதைக் கேட்டு அந்த மெய்க்காவலன் சிரித்தான். அரசே, நான் தின்றது மரணமில்லா வாழ்வு தரும் பழம், நீங்கள் என்னைக் கொல்ல முடியாது, என்றான்.
ராஜாவுக்குத் திகைப்பாய் இருந்தது. இருந்தாலும், அதையும் பார்த்து விடலாம், இவன் கழுத்தை வெட்டுங்கள், என ஆணை பிறப்பித்தான். அப்போதும் மனந் தளராமல் அந்தக் காவலன், அரசே, ஒருவேளை நான் கழுத்தறு பட்டு இறந்து போகலாம். அப்போது இந்தப் பழம் வெறும் சாதாரணப் பழமாக ஆகிறது. ஒரு சின்னப் பழத்தைத் தின்றதற்கா சிரச்சேத தண்டனை? இது தகுமா?... என்று கேட்டான்.
அரசன் மேலும் குழப்பமடைந்தான். பின், பிழைத்துப் போ, என்று விட்டுவிட்டான்.
2
ழுத்து என்பது ஒரு கிறுக்கு மாதிரி. பிடிச்சிட்டா லேசில் விடாது. லேசில் என்ன, விடவே விடாது. எல்லாவற்றையும் நம் மொழியில் சொல்லிப் பார்ப்பது. எதையிட்டும் கடைசியாய் தடலாடியாய் நம்மை எதாவது சொல்ல வைப்பது என்று எழுத்தாள மனசு அலைபாய்கிறது. சுற்றியுள்ள எல்லாவற்றையிட்டும் எழுத்தாளனுக்கு சுய பார்வை உண்டு. விமரிசனம் உண்டு. ரசிக்கவோ மறுக்கவோ அவன் உள்க் கிளர்ச்சி யடைகிறான். இதில் சைவ அசைவ எழுத்தாளர் என்று பேதம் இல்லை. தலித், ஆரிய சோ கால்ட் வந்தேறி - முற்போக்கு அறிவுப்போக்கு என்கிற வித்தியாசம் எல்லாம் கிடையாது. எழுதுகிற விசயம் சார்ந்து வித்தியாசங்கள், பார்க்கிற கோணம் என்று பேதங்கள் இருக்கலாம். பேதங்கள் அல்ல அவை. அடையாளங்கள்.
எழுத வந்த புதிதில் கி.ரா. என் ஆசான். அவரது கோபல்ல கிராமத்தில் நிறைய நிறைய குட்டிக்கதைகள் வரும். கதை அதுபாட்டுக்குப் போனாலும் இடையே சுவாரஸ்யம் கருதி குட்டிக்கதைகள் அள்ளி வீசுவார். கிராமத்து வண்டியின் சினிமா நோட்டிஸ் மாதிரி.
நினைவில் நின்றதை வைத்து எழுதுகிறேன். திரும்ப மூலத்தை எடுத்து சரி பார்த்து எழுத எனக்குப் பிடிக்காது. காலம் தாண்டி நிற்கிறதே அதன் பெருமை. (அல்லது என் பெருமை!)
ஈக்கும் ஈக்கும் கல்யாணம். ராணி ஈக்கு கழுத்து முழுசா நகை. அப்பிடி யொரு அழகு. அத்தனை பெரிய கல்யாணம். பக்கத்துல மாப்பிள்ளை நிக்காரு. ராணி ஈக்கு திரும்பி அவர் முகத்தைப் பார்க்க ஆசை. கழுத்து பூரா நகை போட்டதுல ராணி ஈக்கு திரும்ப முடியல. ராணி ஈ எப்பிடித் திரும்பிப் பாத்தது?...
என்று கேட்பார். பதில் சொல்ல மாட்டார். திரும்ப கதைக்குப் போய் விடுவார்.
ரெண்டு பெண்டாட்டிக்காரன் ஒருத்தன். மச்சில்ல ஒரு பொண்டாட்டி படுத்துக் கெடக்கா. கீழ்த்தளத்தில் இன்னொருத்தி. இவன் ஏணில ஏறப் போறான். மச்சில்லேர்ந்து ஒருத்தி அவனைக் கையப் பிடிச்சி இழுக்கா. இன்னொருத்தி கீழேர்ந்து காலைப் பிடிச்சி இழுக்கா... அவன் என்ன செய்தான்?
என்று கேட்பார்.
கி ரா அண்ணாச்சி கிண்டல்கார மனுசன். எழுத்தில் இறங்க அதுவும் ஒரு பாதை. சிலாள் சும்மா இருக்கிறபோது பொட்டுக்கடலையோ, கடலை மிட்டாயோ வாங்கி மென்னுக்கிட்டே இருப்பான். வெறும் வாய்க்கு அவல் என்று பழமொழியே உண்டு அல்லவா?
பெண் போலிஸ் என்று நியமனம் ஆரம்பித்தபோது கி.ரா. அண்ணாச்சிக்குச் சிரிப்பு வந்திருக்கலாம். என்னலே இது, நம்ம வீட்டுப் பொம்பளைங்களே எங்கயாச்சும் வெளியக் கிளியக் கிளம்பினா ஆம்பளைத் துணையக் கூட்டிட்டுப் போகுது, இது பொம்பளையாள்களைப் போலிசாப் போடறதா? ஆனால் அவர் கற்பனையில் ஒரு காட்சியை எழுதிப் பார்க்கிறார்.
என்ன ஆயா போலிஸ் ஸ்டேஷன் வந்திருக்கே?
என் பேத்தி இங்கதான் போலிசா வேலை செய்யுது. வீட்டுக்குக் கூட்டிப்போக வந்திருக்கேன்.
கி.ரா. அண்ணாச்சியின் யதார்த்த வரிகளே, கெக் கெக் என்று சிரிப்பை வரவழைத்து விடுகிறது. அவரது ரசனை சார்ந்த குணமே இதன் அடிப்படை. மீண்டும் மீண்டும் திருத்தி எழுதி ஒரு பக்குவப் பட்ட வெளிப்பாடாய் அவர் கதையில் நடை மிளிர்கிறது.
மழை பெய்யுது. மரமெல்லாம் கொப்புகளை இப்பிடி அப்பிடி என முதுகு காட்டி அனுபவிச்சி மழையில் குளிக்கிறது... என எழுத அவரால் தான் முடியும்.
மரம் சும்மா இருந்தாலும், காத்து சும்மா இருக்க விடுமா? - போன்ற பழமொழிகளை அவர் கையாளும் போது வாழ்க்கையின்னா இப்பிடி வாழணும்டா என்று கூடத் தோணும்.
ஆம்பளை பத்தி கி.ரா. சொல்கையில்
சனியன் ஒரு துளியோ ரெண்டு துளியோ, ஆனாலும் மனுசாளைத் தூங்க விடுதா?
சம்சாரி கோமணம் எத்தனை தடவை இறுக்கி இறுக்கிக் கட்டினாலும் ஒதுங்கி ஒதுங்கிப் போவுது.
எங்கூர்ல ஒரு தேவிடியா இருக்கா, அவளுக்குப் புருசன் மேல அத்தனை இஷ்டம். அவ சொல்வா. என்னை என்ன வேணா பண்ணிக்க. ஆனா உதட்டுல மாத்திரம் முத்தம் குடுக்கப்டாது. அது எம் புருசனுக்குத்தான்.
அடங்கொய்யால இது எழுத்து.
இப்போது எனக்கு வயது 59. அடுத்த வருடம் பணி ஓய்வு (பி எஸ் என் எல்) பெறுகிறேன்.
ஆயிற்று சுமார் 90, 95 புத்தகங்கள் வந்திருக்கின்றன.
எனது முதல் நாவலில் இருந்து நிறைய இடைக் கதைகளை, குட்டிக்கதைகளை நானும் பயன்படுத்துகிறேன்.
முதலில் வெளிவந்த எனது ‘நந்தவனத்துப் பறவைகள்’ நாவலின் சில இடைக் கதைகள், இப்போதைய என் நினைவில் இருந்து. இது அச்சில் வெளியான என் முதல் நாவல். என் முதல் நாவலே, நான பி.எஸ்சி. வேதியியல் படித்த மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், மேல்நிலைப் பட்ட (எம்.ஏ.) மாணவர்களுக்கு நவீன இலக்கியப் பாடநூலாக அமைந்தது வியப்பான மகிழ்ச்சி எனக்கு.
கடற்கரையில் இரண்டு எலும்பு வைத்திய நிபுணர்கள் நடைப்பயிற்சி போகிறார்கள். எதிரே ஒருவன் விந்தி விந்தி வருகிறான். ஒரு மருத்துவர் அவனுக்குக் கரண்டைக் காலில் அடி, அதனால் தான் இப்பிடி நடக்கிறான், என்கிறார். அடுத்த மருத்துவர், இல்லை அவனுக்கு முழங்காலில் அடி. அதனால் தான் நடக்க சிரமப் படுகிறான், என்கிறார். இருவருக்கும் வாக்குவாதம். அதற்குள் அவன் இவர்கள் அருகில் வந்து விடுகிறான். அவனிடமே சந்தேகம் கேட்கிறார்கள். அவன் சொன்னான். ரெண்டும் இல்ல சாமி. செருப்பு பிஞ்சிட்டது. அதான் விந்தி விந்தி நடக்கிறேன்.
‘நந்தவனத்துப் பறவைகள்’ நாவலின் கதாநாயகன் ஒரு கிராமத்து எளிய அப்பிராணி. சற்று வசதி குறைவான ஆசாமி. இப்படி நபர்கள் தங்கள் செருப்பு போன்ற வஸ்துக்களை அப்படி ஒரு பிரியத்துடன் பராமரித்து பேணி வைத்திருப்பார்கள். அதை வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டு உள்ளே போகவே அவர்கள் வருத்தமாய் உணர்வார்கள். இப்போது ஒரு குட்டிக்கதை, அந்த நாவலின் பகுதி இது.
மீண்டும் மீண்டும் பயன்படுத்தி ஆறு மாதத்தில் அது எருக்க இலை போலத் தேய்ந்து விட்டது. என்றாலும் அந்தச் செருப்பை விட அவனுக்கு மனசு வரவில்லை. அலுவலகம் விட்டு வீடு திரும்பும் பெருமாள்சாமி மழை வருகிறாப் போல இருக்கவே நடையே எட்டிப்போட்டு வேகம் தர முயன்றால் செருப்பு முரண்டுகிறது. சற்று மெதுவாக செருப்பை அனுசரித்து அது பிய்ந்துவிடாத கவனத்துடன் அவன் நடக்கையில் பினனால் வந்தவன் அவனது அவசரத்தில் இவன் செருப்பை மிதித்து விட்டான். அவன் காலுக்கும் செருப்புக்கும் இடையே வந்தவன் கால் இடற ஒரு நொடியில் அந்தச் செருப்பு இவன் காலில் இருந்து விடுதலை பெற்று நடுத் தெருவில் போய் விழுகிறது, இரண்டு துண்டுகளாக.
பெருமாள்சாமி தனது இடது கால் செருப்பை அதுவும் இரண்டு துண்டுகளாக நடுத் தெருவில் பார்க்கிறான். ஆகா என்னவோர் கோர விபத்து என்பதாக மனசு பரிதவிக்கிறது. இந்நிலையில் இந்த வலது கால் செருப்பு, அந்த ஒற்றைச் செருப்பால் என்ன பயன், என்று அதைப் பிரியாவிடை தந்து அப்படியே தெருவில் விட்டுவிட்டு நடக்கிறான். மகா துக்க கணம் அது. தெரு திரும்புகையில் தான் விட்டுவிட்டு வந்த அந்த செருப்புகளைக் கடைசியாக ஒரு பார்வை பார்க்க நினைத்தான். தெருவில் அவன் பார்த்தபோது, இடது கால் இல்லாத ஒரு நொண்டி அவனது பிய்யாத வலது கால் செருப்பை எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்தான்.
ரொம்ப கண்டிப்பான டீச்சர் ஒருத்தி. ஸ்கேல் இல்லாமல் அவளால் பாடம் நடத்த முடியாது. மொட்டைமாடியில் வீட்டு டியூஷன் நடக்கிறது. அவள் அருகில் பழக்கமான ஸ்கேல். இரு மாணவர்கள் டியூஷன் படித்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று விளக்கு அணைகிறது. திரும்ப விளக்கு வருகிறது. “என்னை யார் ஸ்கேலால அடிச்சா?” என்று கத்துகிறாள் டீச்சர். அந்த இரண்டு மாணவர்களில் யார் அவளை ஸ்கேல் எடுத்து அடித்தார்கள் என்று தெரியவில்லை..
பூமணி எழுத்திலும் அடிக்கடி இந்த வகையான சிறு இடைக் கதைகளை நான் ரசிப்பேன். ஒரு திரைப்படத்தில் வடிவேலு பகுதிகளைக் குட்டிக்கதைகள் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. இடையில் நான் எப்படியோ இந்தக் குட்டிக்கதைகள் ஊடாட எழுதும் பாணியை விட்டு விலகி விட்டேன் என்று தோன்றுகிறது.
வேறொரு சிறுகதை. அவன் இரவில் விழித்துக் கொள்கிறான் தண்ணீர்த் தாகம் எடுத்திருக்கலாம். எழுந்து விளக்கைப் போட்டான். திடீரென்று வெளிச்சம் வந்ததில் திகிலடைந்த கரப்பான் பூச்சி ஒன்று சரசரவென்று இங்குமங்குமாகப் பறக்கிறது. அதை விரட்ட பயத்துடன் அவன் போராடியபடி பார்த்தால் அருகே மனைவி. வாயைப் பிளந்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்பி, “என்ன கரப்பான் பறக்குது. வாயைப் பிளந்துட்டுத் தூங்கறியே?” என்று கேட்டான். அவள் சொன்னாள். “நேத்தி நீங்க அப்படித்தான் தூங்கினீங்க.”
சமீபத்தில் நான் எழுதிய ஒரு குறுநாவல். “ஈரிதழ் வால்வுகள்” அதை எழுதுகையில் ஒரு குட்டிக்கதையை, அதே வரிகளில் வாசிக்கலாம் நீங்கள்.
படுக்கை அறையில் கண்ணாடி மாட்டியிருந்தான் லெட்சுமணன். அவளுக்கு ஒரே சிரிப்பு. வெட்கம். இப்படி யெல்லாம் அவள் கேள்விப் பட்டதே இல்லை. உயரம் தட்டாத மலிவுப் பாவாடைகள் அணிந்து புடவைக்குள் உயரத்தில் அது நிற்கும். இங்கே அவன் உள்ளாடைகளுக்கே தனியாய்ச் செலவு செய்தான். லேஸ் வைத்த பிரா, எத்தனை அழகு. ஆளுக்கு தனித் தனி சோப். அவளுக்கு பாண்ட்ஸ் பவுடர் பிடிக்காது. வீட்டில் பெரிய டப்பாவாய் அதையே வாங்குவார்கள். அதையே எல்லாரும் போட்டுக் கொள்வார்கள். இவனும் பெரிய டப்பா வாங்கி வந்தபோது அவள் சொன்னாள். உடனே அடுத்த தடவை, மைசூர் சான்டல் டால்கம் பவுடர் வாங்கியாச். “எனக்கும் பாண்ட்ஸ் பிடிக்காது” என்றான் அவளிடம். பெண்கள் ஆண்களைப் பொய் சொல்ல வைக்கிறார்கள். இதெல்லாம் எங்க போய் முடியுமோ?
கல்யாணம் முடிந்து அவளைக் கொண்டுவிட அப்பா வந்திருந்தார். காமா சோமாவென்று கல்யாணம் ஆகி, முதல் இரவு சோபிக்காமல், எல்லாரும் உம்மென்று மாப்பிள்ளை வீடு வந்து இறங்கி யிருந்தார்கள். வீட்டில் ஆரத்தி எடுக்க ஆள் இல்லை. ஒரு அத்தை இருந்தாள். அவள் விதவை. அவள் ஆரத்தி எடுக்கப்டாது. நேரே எதிரே வரப்டாது. “இங்க இனி எல்லாமே நீதான்...” என்றான் லெட்சுமணன். “உன்னால தான் வீடே வெளிச்சமாகப் போகுது...” தன் நெஞ்சு அறிவது பொய் சொல்க, கல்யாணக் குறள் இது. பொய்மையும் வாய்மை இடத்து. ருக்மணி விரைவில் தேறி வந்தாள். தொலைபேசி உள்ள வீடு. அதுவே புதுசு. நல்ல சினிமா என்றால் அவளைக் கேட்காமல் டிக்கெட் (தரை டிக்கெட் அல்ல. பால்கனி) வாங்கிவரும் கணவன். அவளுக்குப் பிடித்த பொய்கள் சொல்கிறான். “ருக்கூ...” என அவளைக் குயில் போல் அழைக்கிறான். அவள்அப்பா, எப்பவும் சாமி படங்களுக்குத் தான் கூட்டிப் போவார். காதல் படங்கள் அவரைக் கலவரப் படுத்தின. அவருக்கு ரெண்டும் பெண்கள்.
திரும்ப அவள் அப்பாவீட்டுக்கு 'தாலியைப் பிரித்துக் கோர்க்க' என போயிருந்தாள். அப்பாவின் படுக்கை அறையைத் தற்செயலாகப் பார்த்தாள். புதுசாய்க் கண்ணாடி இருந்தது.
*
(அடுத்த வாரம் சந்திப்போம்)
91 97899 87842  storysankar@gmail.com


Friday, August 3, 2018


                                                   சிவன்கோவில்
கவியரங்கம்
*
எஸ். சங்கரநாராயணன்
றிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலை வணங்குகிறேன். இந்தக் கூட்டத்துக்கு என்னைத் தலைமை யேற்கும்படி ‘யுகமாயினி’ திரு சித்தன் சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. சித்தம் போக்கு சிவம் போக்கு என்பார்கள். அவர் போக்கே பல சந்தர்ப்பங்களில் ஆச்சர்யமளிப்பதாய் இருக்கிறது. இந்த வேண்டுகோளும் அப்படியே.
இதில் ஒரு அன்பர் ஹாங்காங் தமிழ்ச் சங்க செயல்பாடுகள் பற்றிப் பேச வந்திருக்கிறார். நான்கு நூல்கள் வெளியிடப்பட இருக்கின்றன. அதை வெளியிட நால்வர், பெற்றுக்கொள்ள நால்வர். அதைப்பற்றிப் பேச நால்வர், பிறகு நூலாசிரியர் உரை.... என இனி மேடையேறுகிற எல்லாருக்கும் அவரவர் வேலை இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. எனில் என் வேலைதான் என்ன?
இத்தனை பேரைக் கணக்கு பண்ணி ஆளுக்கு ரெண்டுபேரைக் கூட அழைத்து வந்தால் கூட அரங்கு நிரம்பி விடும் என்று சித்தன் ஒரு கணக்கு வைத்திருக்கலாம்... நானும் சில நபரை வரச் சொல்லியிருந்தேன். அவர்கள் வரவில்லை. அவர்கள் இன்றைக்கு இந்த கே.கே.நகர் பக்கமே வரவில்லை என அறிகிறேன்.
கூட்டம் என்பதை ஒரு பேருந்துப் பயணம் என்று உருவகித்தால், பஸ்சில் பயணிகளைக் கூட்டிப்போக இத்தனை பேச்சாளப் பெருமக்கள் இருக்கிறார்கள். அவர்கள் டிரைவர் என்றால் நான் ஒருவேளை கண்டக்டர் என என்னைச் சொல்லிக் கொள்ளலாம். இப்போது காம்பியரிங் என்கிற ஒரு பாணி கூட்டங்களில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அழகான யாராவது இளவயசுப் பெண்ணை மேடையேற்றி நட்சத்திர அந்தஸ்து தந்துவிடுகிறார்கள். தமிழை தமில் என அவள் கிளிப்பேச்சு பேசுகிறாள். என் நகையைப் பார், என் உடையைப் பார் என அவள் காதுக்கு அல்ல, கண்ணுக்கு விருந்தளிக்கிறாள். சில சினிமாக்களில் படத்தை விட இடைவேளை பயனுள்ளதாக அமைந்துவிடுவதைப் போல, தொகுப்பாளினி ஒரு ஆசுவாசம் தருவதாகக் கூட சில கூட்டங்கள் அமைவது உண்டு. சுதந்திரதினம் என்றால் அநேகம் பேருக்கு மிட்டாய்தினம் என்றே தெரியும். அதைப்போல.
இலக்கியக் கூட்டம் என்பதற்கு சில அடையாளங்கள் (இலட்சணங்கள்) உண்டு. எழுத்தாளர்களே பேச்சாளர்களாக அமைவார்கள். பெரும்பாலும் அவர்களே துட்டு போட்டு நடத்தும் கூட்டம். நூல் வெளியீடு. அந்த நூலும் அவர்களே துட்டு போட்டு வெளியிட்டதாக இருக்கலாம். இந்நிலையில் கூட்டத்துக்கு வேறாளைப் பேச அழைத்து, சில சந்தர்ப்பங்களில் அவர் ஏடாகூடமாய் ஏதாவது பேசிவிட்டுப் போய்விடுவாரோ என்ற அச்சம் எழுத்தாளனுக்கு உண்டு. பேசாமல் பாராட்டிவிட்டுப் போனால் நல்ல பேச்சாளன்.
ஒருமாதிரி பயமும் பரபரப்புமாக எழுத்தாளனின் ஆரம்பப் பயணம் அமைந்து விடுகிறது.
பொதுவாக இலக்கியக் கூட்டங்களில், மேடையிலும் கீழேயும், எழுத்தாளர்களே அமர்வர். அதிகபட்சம் நூல் வெளியிடுகிற நபரின் நண்பர், உறவினர் என்று சிறு கூட்டம், கைதட்டத் தயாருடன் கீழே காத்திருப்பார்கள். கீழே அமர்ந்திருக்கிற மற்ற எழுத்தாளருக்கு இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதும் தானும் எழுத வேண்டும், புத்தகம்போட வேண்டும், அதற்கு விழா எடுக்க வேண்டும் என்று ஒரு நமநமப்பு ஏற்படும். பஸ்சில் பக்கத்து சீட்காரன் எதும் முறுக்கை கடக் முடக் என்று கடித்தால், எதிரில் பார்த்துக் கொண்டிருக்கிற சின்னப் பிள்ளையின் சங்கடம் அது. இதுதவிர எந்த சமுதாயச் சிந்தனையும் கூட்டங்களில் கிளறிவிடப் பட்டதாக நான் நம்பவில்லை. அப்படியொரு நம்பிக்கை சித்தனிடமும் இருக்க முடியாது. ஏனெனில் அவர் 'என்னைப்' பேச அழைத்திருக்கிறார். அதிலும் தலைமை என்று போட்டிருக்கிறார்.
      சிவன்கோவில்
      கவியரங்கம்
      கீழே அறுபத்திருவர் –
என நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.
இதெல்லாம் எழுத்தாளனுக்கு வேண்டியிருக்கிறது. கூரைமேல் ஏறி சேவல் விடியலை அறிவிக்க முயல்வதைப் போல. அது அறிவிக்காட்டி விடியாதா என்ன? மனுசாளுக்கு சில அடையாளங்கள் வேண்டியிருக்கிறது. அதாவது மேல்சட்டை போட்டால் பத்தாது. அதன் மேல் ஒரு துண்டு, அல்லது அங்கவஸ்திரம். எழுத்தாளன் சமுதாயத்தில் தனக்கு ஒரு அந்தஸ்து இருப்பதாக பாவம், நம்புகிறான். அதற்காக உள்ளூற ஏங்குகிறான். ஆனால் அவன் மேடைபோட்டு ''நான் விலைபோக மாட்டேன், நான் அவதார புருஷன், லட்சிய வீரன்''... என்றெல்லாம் அறைகூவ விரும்புகிறான். அல்லது ஆள் வைத்து தன்னைப் பற்றி இப்படிப் பேசச் சொல்லி காதாரக் கேட்கிறான். ஊரறிய கல்யாணம் பண்ணிக் கொள்கிற ஒரு சந்தோஷம் இதில் இல்லையா? இருக்கத்தான் இருக்கிறது.
 இந்த எழுத்தாள ஆசாமி ஏன் தன்னை விநோதமான ஜந்துவாக உணர வேண்டும் என்று தெரியவில்லை. அது ஒராளின் விசித்திர குணங்களில் ஒன்றாகத்தான் தோன்றுகிறது. மனிதரில் சிலபேர் உட்கார்ந்திருக்கையில் சும்மா இருக்க மாட்டாமல் காலாட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறதைப் பார்க்கலாம். சிலபேர் தனியே நடந்து போகையில் எதாவது பொட்டுக்கடலையோ பட்டாணியோ பொட்டலத்தில் வாங்கி வழிநெடுக அரைத்துக்கொண்டே வீடடைகிறார்கள். என்னைப் பற்றியும் சொல்ல வேண்டும். நான் என்னையே அறியாமல் சில சமயம் எதும் பாடியபடி வீடு திரும்புகிறேன். வயசாளிகளில் சில பேர் தனக்குத் தானே பேசிக் கொள்வதும் உண்டு.
தனக்குத்தானே சத்தமில்லாமல் பேசிக் கொள்கிறவனை எழுத்தாளன் என்று சொல்லலாம் போலிருக்கிறது. கூட அவன் பேசாத, அல்லது அவனுக்குக் கூடப் பேச ஆளில்லாத அநாதையாகக் கூட அவன் இருக்கக் கூடும்.
நாய் ஏன் ஓடிக்கொண்டே யிருக்கிறது, என ஆராய்ந்து பார்த்ததாக ஒரு சேதி உண்டு. நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமில்லை - என்று நம்மிடையே பழமொழி உண்டு. கடைசியில், நாயின் இயல்பு அது, ஓடிக்கொண்டே யிருப்பது, என்று முடிவுக்கு வந்தார்களாம். ஆங்கிலத்தில் கூட சொல்வார்கள்... what is paradise for a stray dog, roadful of trees and bagful of urine.
நாய்க்கு வேலையில்ல, நிற்க நேரமில்ல - என்று வசனம். எப்படியும் மிகைபட வாழ்தல் மனுசாள் இயல்பாகி விட்டது. தங்கப்பல் கட்டிக்கிட்டவள் பக்கத்து வீட்டுக்குப் போய் ''இஞ்சி இருக்கா இஞ்சி''ன்னு கேட்டாளாம்... இதில் எழுத்தாளனை, பாவம் அப்பாவி அவனை விட்டுறலாம் போலிருக்கிறது. எதிர்காலம் பத்திய கவலையும் ஆர்வக் குறுகுறுப்புமாய் சாமானியன் போய் ஜோசியம் பார்க்கிறான். குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி... என்று எதிலாவது மாற்றம் கிடைக்காதா என ஒரு ஆசை. மாற்றம் தேவையாய் இருக்கிறது. சிலர் அந்த ஜோசியர் வேலையை, கணிப்பைத் தாங்களே கையெடுத்துக் கொள்கிறார்கள். அவர்களை எழுத்தாளர் எனலாம்.
எழுத்து என்பது கட்டிக்கொடுத்த சோறு. அது எத்தனை காலம் கெடாமல் இருக்கும் என்று தெரியவில்லை. காலாவட்டத்தில் உணவுப் பண்டங்கள், சாப்பிடும் முறைகள் மாறிவிடுகின்றன. மோரும் கூழும் தேனும் தினைமாவும் தின்று வளர்ந்த சமூகம்... இப்போது பெப்சி, பிசா, ஹார்லிக்ஸ் என்கிறார்கள். என்றாலும் எழுத்தாளனுக்கு நம்ம எழுத்து நின்று நிலைக்கும், இந்த சமூகத்தைத் தட்டி எழுப்பும், புரட்டிப் போடும் என்றெல்லாம் தளராத தன்னம்பிக்கை. அவன் நம்பிக்கை வாழ்க. ஒரு எழுத்தாளனின் எழுத்து இந்த சமூகத்தை அலாக்காகத் தூக்கி வேறிடத்தில் நட்டுவிடும் என்றால், இதுவரை இத்தனை எழுத்தாளன் பிறந்திருப்பானா என்றே தெரியவில்லை. ஒருத்தனே போதும் அல்லவா? அடுத்தாளுக்கு வேலை இல்லை அல்லவா?
மாஜிக் நிபுணர்களா எழுத்தாளர்கள்? சாமானியன் கண்ணை மூடிக்கொண்டு கனவு கண்டால், எழுத்தாளன் கண்ணைத் திறந்தபின் கதை எழுதுகிறான். அவனும் கனவுதான் காண்கிறான். கனவு வேண்டியிருக்கிறது. மாற்றம் வேண்டியிருக்கிறது. அதன் விளைவே கலைகளாக உருவெடுக்கிறது. எழுத்து, பேச்சு, சித்திரம், நிழற்படம், சிற்பம், இசை.... என அவன் கனவின் எல்லையை விரித்து வலையாகப் பரத்துகிறான். வாழ்க்கை அதில் சிக்குமா என்று காத்திருக்கிறான். ஆனால் அது வாழ்க்கை அல்ல. வாழ்க்கையின் கனவு. வாழ்க்கை வெளியே இருக்கிறது. அதுவும் அவனருகே அமர்ந்து வலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
அரைத்து வைத்த தோசை மாவு மறுநாள் பொங்குவதைப் போல எழுத்து அதிதம். மிகை. எழுதுதல் தாண்டி பதிப்பித்தல் அல்லது அச்சுவடிவம் காட்டுதல். அதை நூலக்கி அழகு பார்த்தல். அழகான அட்டைப்படம் அதற்கு வேண்டியிருக்கிறது. கூந்தல் நிஜம். என்றாலும் அதைப் பின்னிவிடலாம், கொண்டை போடலாம்... திருப்பதி காணிக்கையாக்கலாம். முடி நிஜம். கூந்தல் கனவு என்று சொல்லலாம். அந்தக் கனவுக்கு சிலர் அழகழகான ஸ்லைட் மாட்டி அழகு செய்கிறார்கள். சிலர் வண்ண வண்ண, வாசனை வாசனையான பூக்கள் சூடிக் கொள்கிறார்கள்... புத்தகம் தாண்டி, அதன் கட்டுமானம் தாண்டி... ஆ அதற்கு ஒரு தலைப்பு. அழகான அட்டைப்படம் என்று ஒரு ஓவியம். கனவுகள் அடுக்கப் படுகின்றன. அதன் உச்சம் எது?... அதற்கு ஒரு வெளியீட்டு விழா.
மௌனத்தில், கனவில் உள்ளே ஊறிய விஷயம். அதை மௌனமாய்ப் பகிர்ந்து கொள்வது இதைவிடச் சிறப்பாய் அமையக்கூடும். எழுதப்பட்ட விஷயம் வாசிக்கப் படுவதற்காக. அதை மேடையேற்றி சத்தமாய் இடம் சுட்டிப் பொருள் விளக்குதல் சரியா? ஆனால் வேண்டித்தான் இருக்கிறது. அகோ வரும் பிள்ளாய், வந்து, ஆகச் சத்தமாய் அறைகூவு. மைக்கைப் பிடித்து, மௌனத்தைப் பற்றிப் பேசுக.
மிகைகள் வாழ்வில் தவிர்க்க முடியாமல் கலந்துவிட்டன. அதுவும் நுகர்வுக் கலாச்சாரம் சார்ந்த இந்தக் காலத்தில் எதிலும் ஒரு மிகை. விளம்பரம். அலட்டல் வந்து சேர்ந்து விடுகிறது. தியானம் பற்றி டி.வி. சானல்கள் தவறாமல் ஒளிபரப்புகின்றன. சாமியார்கள் ஆசி வழங்குகிறார்கள். மௌனமே முன்வந்து பேச ஆரம்பித்த காலமாய் இருக்கிறது...
      ஒரு பாரசிகக் கவிஞன் சொன்னான்.
      ரோஜாக்களை
      கூவி விற்கிற வியாபாரியே
      ரோஜாக்களை விற்று
      இதைவிட உயர்ந்த எதை
      வாங்கப் போகிறாய்?
(ரோஜாவை விற்று ஒருவேளை வீட்டுக்கு மீன் வாங்கிப் போவானாய் இருக்கும்.)
பகிர ரெண்டு சேதிகள் ஞாபகம் வருகின்றன. ஒண்ணு நமது தொன்மையான தமிழ்மொழியின் சிறப்பு. தமிழில் நிறுத்தற் குறிகளே கிடையாது. அநேக ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகள் இராது. கமா, முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி, கேள்விக்குறி எதுவுமே இல்லை. எல்லாம் மேலை நாட்டில் இருந்து இறக்குமதியான சரக்குதான். சொல்லின் மிகை என்று சொல்ல வருகிறேன். தமிழ் இலக்கணம் கச்சிதமானது. வினைமுற்று மொழியின் இறுதியில் அமையும். அத்தோடு அந்த வாக்கியம் முற்றுப் பெற்றதை வினைமுற்றே அறிவித்துவிடும். வாசிக்கும்போது தானே முற்றுப்புள்ளியை நாம் உணர்ந்துவிடலாம். கிருஷ்ணன் வந்தான்.... என்று சொன்னால் வந்தானோடு வாசிப்பு முற்றுப்புள்ளி அளவில் தானே நின்றுவிடுவதை அறிக. ஆகாரம் ஓகாரம் சேர, தானே கேள்விதொனி கிடைத்து விடுகிறது. தனியே கேள்விக்குறி தேவையே இல்லை. அதேபோல கமா. நான் அவன்வீட்டுக்குப் போனபோது அவன் தூங்கிக் கொண்டிருந்தான், என்று சொன்னால் போனபோது என வருகையிலேயே மனம் அந்த கமாவைக் குறித்துக் கொண்டுவிடுகிறது, கவனிக்க. எழுவாய் மொழிமுதல் அமையும். கந்தன் வந்தான், என்பதே சரி. வந்தான் கந்தன், என எழுதுதல் தகாது. பிழை அது.
இலக்கணமீறலாக சீதையைக் கண்டேன், என்பதை ராமனுக்கு அனுமன், கண்டேன் சீதையை, என்று சொல்வதை கலைநுட்பமாக நாம் காண்கிறோம்.
அடுத்த சேதி பூமணி சொன்னது. கதைகள் வாழ்க்கையின் ஆக நேர்மையான தீற்றல்களாக குறைந்த அளவு கற்பனைச்சாயலுடன் வடிவமைதி பெற வேண்டும் என்பார் அவர். வார்த்தை அதிதம் தகாது என்பது அவர் கருத்து. அவர் சொன்னார். கதை என்றால் தலைப்பு எதற்கு? அதுவே முகத்தில் துறுத்திய மூக்குதான். சங்கரநாராயணன் எழுதிய கதை, என்பதே போதும். தனியே அதற்கு மிகையாக தலைப்பு ஒட்ட வைக்கப்பட்டு நாமும் பழகிவிட்டோம்... என்கிறார் பூமணி.
சரி என்றுதான் படுகிறது.
(யுகமாயினி கூட்டம். 17 சனவரி 2011 அன்று 
தலைமையேற்று வாசித்தளித்தது.)

storysankar@gmail.com 9789987842