Friday, October 12, 2018



காயம்பட்ட புன்னகை
எஸ். சங்கரநாராயணன்

னது நண்பரும், தமிழ் இலக்கிய உலகில் தனி அடையாளங்களுடன் வளைய வந்த சிறந்த எழுத்தாளருமான எம். ஜி. சுரேஷ், அக்டோபர் 02 2017 அன்று வளர் இரவில் தன் மகளது இல்லத்தில் சிங்கப்பூரில் காலமாகி விட்ட செய்தியை அவரது மனைவி, இறந்த பத்து பதினைந்து நிமிடங்களில் சிங்கப்பூரில் இருந்து தகவல் தெரிவித்தார். துரிதமாய் நிகழ்ந்திருந்தது அந்த மரணம். படுக்கையில் கிடக்காமல் பிறரைத் துன்பப் படுத்தாமல், அதை அவர் ஒருக்காலும் செய்ய விரும்ப மாட்டார், அவ்வண்ணமே இறந்து போனது அவருக்குத் திருப்தி அளித்திருக்கும், என்றே நம்புகிறேன்.
ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டேன்.
தமிழில் எம். ஜி. சுரேஷ் ஒரு வெற்றிடத்தை நிரப்பிய எழுத்துக்காரர் என்று சொல்லத் தோன்றுகிறது. அந்த வெற்றிடம் அவர் எழுத வந்து, எழுதிக் காட்டி உணர்த்திய இடம் என்கிற அளவில் அவரது தனித்தன்மையை வாசக உலகம் உணர்ந்தது. தமிழில் பெரும்பான்மை எழுத்துக்கள் குடும்பக் கதைகள் என சிறு வட்டத்துக்குள், அதைப் போற்றியும், விசாரித்துமாக வெளிவந்து கொண்டிருந்தன. இருக்கின்றன. அரசியல் சார்ந்த கதைகள் மிகச் சொற்பமே. கம்யூனிச சித்தாந்தப் பிடிப்பு கொண்ட கதைகளும் வராமல் இல்லை, எனினும் அவற்றுக்கு இலக்கிய அந்தஸ்து சிறிது குறைவாகவே கிடைத்து வந்த காலம் அது. பெரும்பாலானவை அன்றாட வாழ்வியல் யதார்த்தம் சார்ந்த கதைகள். சமூகத்தில் சாமானியனின் சாமானிய வாழ்க்கையை, அதன் சராசரித் தனங்களுடன் எழுதிக் காட்டினார்கள் இலக்கியவாதிகள். உலகளாவிய இலக்கியப் போக்குகளில் தமிழ் அக்கறை காட்டவே இல்லை. அதுபற்றிய அறியாமையே இங்கே நிலவி வந்தது. உலகம் சார்ந்த பெருவெளியின் தரிசனம் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைக்காமலேயே இருந்து வந்தது. அட சுதந்திரப் போராட்டம், அதுகூட ஓரளவு அடையாளப் பட்டது, உலகப் போர்கள் தமிழில் அடையாளப் படவே இல்லை.
ஒரு காலத்தில் மொழிபெயர்ப்புகள் என்ற அளவில் ஓரளவு மேனாட்டு பன்னாட்டு இலக்கியங்கள் தமிழில் கிடைத்தன. குறிப்பாக ருஷ்ய இலக்கியங்கள். ஆனால் அவை அந்நாட்டு மக்களின் புரட்சி வியூகத்தைக் கொண்டாடும் எல்லைக்குள், தன்கவனத்துடன் இயங்குவதாய் இருந்தன. ஹெமிங்வே, ஜாக் லண்டன் போன்றோரின் கதைகளும் கிடைத்தன, என்றாலும் அவற்றைக் கொள்வார் அதிகம் இல்லாதிருந்தது. மொழிபெயர்ப்புப் பரிமாற்ற ஆரம்ப காலகட்டம் அது. அந்த நூலில் வரும் ஊர்கள், இடங்கள், பனி விழும் பிரதேசங்கள், அவர்களின் உடை, அவர்களின் உணவு என்று எல்லாமே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறவையான சுவாரஸ்யத்துடன் வாசிக்கக் கிடைத்தன. எனினும் தத்துவச் சரடு போல, வாழ்வின் முடிச்சுகளை நோக்கி தமிழ் இலக்கியமும், நமக்குக் கிடைத்த மொழிபெயர்ப்புப் புனைவுகளும் கணிசமாய் அமையவில்லை என்றே சொல்லவேண்டும்.
எம்.ஜி. சுரேஷ் மிகுந்த உற்சாகத்துடன் எழுத வந்தார். எல்லா இளைஞர்களையும் போலவே சுஜாதா பாணி எழுத்து, எழுதும் போதே தான் ரசித்து, பிறகு அதை ஒரு புன்னகையுடன் வாசகனுக்குப் பரிமாறும் எழுத்துவகை அவருக்குப் பிரியமானதாய் இருந்தது. அவரது அந்தவகைக் கதைகளை நான் சிலாகிக்க மாட்டேன். என் ருசி இன்றும் வேறானதாகவே இருக்கிறது. அரட்டைக் கச்சேரிகளுக்கு நான் போவது இல்லை.
ஆனால் வாசிப்பில் அபார ருசி கொண்டிருந்தார் சுரேஷ். குறிப்பாக ஆங்கிலத்தில் கிடைத்த உலக நூல்களைப் பெரு விருப்புடன் வாசித்துத் தள்ளினார் சுரேஷ். வேறு சாளரம் திறந்து கொண்டாப் போல இருந்தது அவருக்கு. வரலாற்று நோக்கில் காலந்தோறும் மனிதக் கலாச்சாரம் தத்துவங்களாகவும் தரிசனங்களாகவும் கண்டைடைகிற இடங்களை அவர் ஒரு பரவசத்துடன் கவனித்தார். உலகம் ஒரு பந்துக்கோளமாய்ச் சுழன்று அவருக்கு கலைடாஸ்கோப் சித்திரங்களைத் தந்தவண்ணம் இருந்தது. வண்ணங்களாய் இருந்தது அவரது உலகம். புராதனத்தில் இருந்து தற்காலம் அல்லது நவீனம் வரையிலான நீண்ட நடைபாதையில் அவர் தானும் நடைபயின்றாப் போல உணர்ந்திருக்கலாம். அரசியல்வாதிகள், தத்துவ மேதைகள் என உலகில் ஆங்காங்கே எழும் வெளிச்சப் புள்ளிகளை, அவை பெருகி எழுப்பும் கிரண வீச்சுகளை ரசிக்கிற அனுபவத்தில் தமிழின் நிலைமை அவருக்கு உவப்பாய் இல்லை என்றே கணிக்கத் தோன்றுகிறது.
இலக்கியத்தில் நவீன காலம், பின் நவீன காலம் என்கிற கருத்தியல்களில் அவர் ஆர்வம் செலுத்திய அதே சமயம் இன்னும் சிலர் தமிழில் அவற்றை அறிமுகப் படுத்தத் தலைப்பட்டார்கள். என்றாலும் அவர்கள் அல்ல எம். ஜி. சுரேஷ். புதிய எல்லைகளோடு தமிழ் இலக்கியத்தைக் கையாள என அவர்கள் புறப்பட்ட பாவனையில், ஒரு நிமிர்வும், பிற தற்கால இலக்கியங்கள் சார்ந்த அலட்சியமும், தாமே உயர்வு என்கிற பீட சிந்தனையுமாய் அவர்கள் மேடையிலும் எழுத்திலும் கொக்கரித்தார்கள். பொங்கினார்கள். அழகு மமதையான பெண் எந்த ஆண் பார்த்தாலும் உதடு சுழித்து ஒரு வெட்டு வெட்டிப் போகிறாப் போல.
பின் நவீன பாவனைகளை மிக நிதானத்துடனும், புதியதை வாசகனுக்கு எளிமையாய்க் கைமாற்றும் அக்கறையுடனும் எடுத்துக்காட்டும் எம். ஜி. சுரேஷின் அறிமுகக் கட்டுரைகள் விலை மதிப்பில்லாதவை. பின் நவீனத்துவம் என்றால் என்ன, நூலும், இசங்கள் ஆயிரம் நூலும், பின் நவீனக் கருத்தியல்வாதிகளின் அறிமுகமான சிறு நூல்களுமாக அவர் மிகப் பொறுப்புடன் செயல்பட்டது நமது பேறு என்றே சொல்ல முடியும்.
அவரது கடைசி மூன்று நூல்களை நானே மேற்பார்வையிட்டு வெளிக் கொணர்ந்தேன். அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே, என்ற புத்தகம் மீண்டும் மீண்டும் வாசிக்கிற அளவில் ஈரக்க வல்லது. சமீப காலத்திய் அவரது கட்டுரைகள், நிகழ்த்தப்பட்ட மரணங்கள் என்கிற தலைப்பில் வெளியானது. சுரேஷின் ஆகச் சிறந்த கட்டுரைகள் அதில் காணக் கிடைக்கின்றன. அந்த நூலை எனக்கு அர்ப்பணித்திருந்தார் சுரேஷ்.
மூன்றாவது நூல் அவரது கடைசி நாவல், தந்திர வாக்கியம்.
சிறுகதைகளில் அவரது போதாமையை உணர்கிற நான், நாவல் என்கிற தளத்தில அவர் நிகழ்த்திக் காட்டிய புதுமைகளை வியப்புடன் நோக்கினேன். பல்வேறு சோதனை வடிவங்களை அவர் தமிழில் கையாண்டார். யதார்த்தத்தைத் தாண்டிய பெரிய வியூகம் இல்லை, என்றே நான் இன்னும் ஓர் எழுத்தாளனாக நம்புகிறேன். பின் நவீனத்துவம் போன்ற பூச்சுகள், மேனாட்டு வகைமைகள், ஒரு பாவனையே. அவை கதையின் ஆதார சுருதிக்கோ அதன் அடிப்படைக் கோட்பாட்டுச் சரடுக்கோ எவ்வளவில் பங்களிப்பு செய்யும், முட்டுக் கொடுப்பதைத் தவிர என்று இன்னும் எனக்கு ஐயம் உண்டு.
மேனாட்டு நிலவரங்களின் அரசியல் சூழலில் நேரடியாக ஒரு சமூக அவலத்தைச் சுட்டிக்காட்ட இயலாத அரசு நெருக்கடிகளில் சொல்வதைப் பூடகமாகவும், பிற உத்திகளின் மூலமாகவும் மறைபொருள் எனவே எழுதிக் காட்ட இலக்கியவாதிகள் தலைப்பட்டார்கள். நம் எழுத்து அத்தனை நெருக்கடிகளில் சிக்கவும் இல்லை. இங்கத்திய சுதந்திரம் எவ்வித பங்கமும் இன்றியே இருக்கிறது. பின் நவீனக் கூறுகள் மாதிரியான தேவைகள் இங்கே என்ன வந்தது என்கிற கேள்வி எனக்கு உண்டு.
நம் சமூகம் தீவிர எழுத்துகள் சார்ந்து கவனம் செலுத்துவதாகவே தெரியவில்லை.
மேனாட்டு இலக்கிய நகல்கள் நமக்குத் தேவைதானா, எனவும் நான் எம். ஜி. சுரேஷிடமே பகடி செய்திருக்கிறேன். அவர் புன்னகையுடன், பகடி என்பதே பின் நவீனக் கூறுகளில் முக்கியமானது தான், என்பார். வாரம் ஒருமுறையாவது அவர் என்னைச் சந்திப்பார். நான் வசிக்கும் அதே அம்பத்தூர் பகுதியிலேயே அவர் இருந்தார். எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் நாங்கள் சேர்ந்தே போய் வருவோம். கடந்த ஆறேழு வருடங்களாக, நான் முகப்பேரில் இருந்து இங்கே ஜாகை மாற்றி வந்த இந்தக் காலத்தில் அவர் மிகவும் அலுப்பு கண்டிருந்தார். உடல் அலுப்பு ஒருபக்கம். இரத்த அழுத்தம் சீராக இல்லை. சர்க்கரையின் அளவு அவரைத் திகைக்க வைத்தது. உறவினர்கள் வீட்டுக்கு வந்தாலோ, அல்லது இவர் வெளியூர் என்று போய் வந்தாலோ தாறுமாறான உணவுப் பழக்கம் அவரது ஆரோக்கியத்தை சீரற்றதாக்கி விட்டது. தவிரவும், அவர் எழுதிய கட்டுரை நூல்களில் அவர் தந்த எளிமை மற்ற பின் நவீனப் புனைவாளர்களிடையே உவப்பான நல் வரவாக எடுத்துக் கொள்ளப் படவில்லை. புதிய கருத்தியல்களைப் புரியாத அளவிலேயே வைத்துக்கொண்டு கூத்தாடி, அவர்கள் பெரும் புகழ் அடைந்து விட்டதாகவும், தான் பின்தங்கி விட்டதாகவும் சுரேஷ் அலுப்படைந்திருந்தார்.
எனக்கும் உடல் ஆரோக்கியம் அத்தனைக்கு இல்லை தான். கண் என் பிரச்னை. என்றாலும் நான் இந்த உலகத்தை நேசிக்கிறேன். எந்த பிரதி பலனும் தேவை இல்லை எனக்கு. வாழ்க்கை அழகானது என நம்புகிறேன். என் அருகில் இருப்பவர் குணங்கள் பற்றி கவலைப்படாமல், பொருட்படுத்தாமல் என் அன்பை அவரோடு பகிர்கிறேன். இது என் இயல்பு. என்னுடன் செலவழிக்கிற கணங்களில் எம். ஜி. சுரேஷ் தன்னை உற்சாகமாய் உணர்ந்ததாகவே நினைக்கறேன். அவரும், குறிப்பாக அவர் மனைவி நிர்மலாவும் அதை விரும்பியதாகவே தெரிகிறது.
அவரது கட்டுரைகளையும், உருமாற்றம் என்கிற ஒரு சிறுகதையையும் எனது இருவாட்சி இலக்கியத் துறைமுகம் பொங்கல் மலர்களில் வெளியிட்டேன். தனது அத்தனை படைப்புகளையும் அவர் முதல் வாசகனாக என் பார்வைக்கு உட்படுத்தினார். எனக்குக் கிடைத்த மேடை வாய்ப்புகள் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடக வாய்ப்புகளில் கட்டாயம் எம். ஜி. சுரேஷ் இடம் பெற்றார். அவரது பிற்காலங்களை என்னால் முடிந்த வரை உற்சாகம் உள்ளதாக ஆக்க நான் முயற்சி செய்தேன். உதாரணமாக வின் தொலைக்காட்சியில் படைப்பாளனாக எனது பேட்டி ஒரு மணி நேர அளவில் அமைந்தது. அடுத்த ஒரு மாதத்தில் எம். ஜி. சுரேஷின் பேட்டியும். நான் அடிக்கடி பங்களிக்கும் பேசும் புதிய சக்தி இதழுக்கு எம். ஜி. சுரேஷ் ‘செலுலாயிட் பயணங்கள்’ என்கிற தொடர் கட்டுரை, பயணங்கள் விலாவாரியாக இடம் பெறும் உலகத் திரைப்படங்களின் அறிமுகத்தை அவர் நிகழ்த்தினார்.
உணவு விஷயத்தில் அவரைக் கட்டுப்பாடாய் வைத்திருந்தார் அவர் மனைவி நிர்மலா. காலையில் ஓட்ஸ் அல்லது தானிய தோசை. மதியத்தில் சிறு கிண்ண அளவு அரசிச்சோறு, இரவில் சப்பாத்தி… என்கிறதாய் அவரது உடல்ரீதியான உணவுக் கட்டுப்பாடுகளை அவர் மேற்கொண்டார். நிர்மலா அவரது மிகப் பெரிய சொத்து, என நான் அறிவேன். ஒரு வயதுக்குப் பின் ஆண்கள், குறிப்பாக ஆண்கள், பெண்களின் குழந்தைகளாக ஆகிப் போகிறார்கள். எம். ஜி. சுரேஷ் நிர்மலாவின் குழந்தை.
அவர் எழுதிய கடைசி நாவல் ‘தந்திர வாக்கியம்’ அழகான புனைவு. தமிழில் அதிகம் அறியப்படாமலே போய்விட்ட களப்பிரர் காலச் சூழலை மேலடுக்கில் கொண்டுவர அவர் அதில் மெனக்கிட்டார். களப்பிரர் காலத்திலேயே பொதுவுடைமை சித்தாந்தங்கள் மேலெழ ஆரம்பித்து விட்டதாக அவர் துணிந்தார். ஒரு யாத்ரிகரின் பயணக் குறிப்புகளாக அதை அவர் இன்று நிகழும் ஒரு ஐ. ட்டி. கதையில் செருகினார். சிதறலான தகவல்களுடனான நாவல் என அதை அவர் வடிவமைத்தார். முதல் வாசகனாக நான் அதில் சொன்ன விமரிசனங்களில் அவர் அதிர்ச்சி அடைந்தார். பிறகு ஒரு மாதம் கழித்து அவரே, எல்லாவற்றையும் அங்கீகரித்தார். நான் சொன்ன மாற்றங்களை அவர் செவி மடுத்தார். குறிப்பாக இறுதிப் பகுதி.
நாவலை உதயகண்ணன் மூலம் நான் வெளிக்கொணரவும் ஏற்பாடு செய்தேன். எங்கள் ‘புத்தகக் கண்காட்சி அரங்கில்’ சிறப்பாக நால்வர் அதைப் பேசினார்கள். மேலும் கூட்டங்களை நான் ஒழுங்கு செய்கிறதாகவே இருந்தது. அதற்குள் மரணம் அவரை முந்திக் கொண்டது.
ஒரு மகன், ஒரு மகள் அவருக்கு. இருவரும் நல்ல நிலைக்கு வந்து விட்டார்கள். கடமைச் சுமை இல்லை அவருக்கு. அருமையான மனைவி. அவரை நன்றாகப் பார்த்துக் கொண்டார். அவரது கடைசித் தருணங்களும் அவ்வகையில் அமைந்தது அறிய எனக்கு ஆறுதலாக இருந்தது. அவரது வாழ்க்கையின் சிறப்புக்கு அவரது மனைவி நிர்மலாவின் பங்களிப்பைப் போற்றுகிறேன். அவரும் சுரேஷின் மரணம் அவருக்கு, சுரேஷுக்கு சாதக அம்சம் தான் என்கிற அளவில் மனம் தேறி வருவார், என்றே நினைக்கிறேன்.
அதிராத பேச்சு. அன்பு. கனிவு. எழுத்தில், திரைத் துறையில் கனவு கண்டவர் எம். ஜி .சுரேஷ். ஒரு படத்தில் ஷுட்டிங் ஸ்பாட்டில் அவர் எழுதிய வசனம் என்று அவர் புன்னகையுடன் சொல்வார். “மீசை இருக்குன்னு கரப்பான்பூச்சி கட்டபொம்மனாக முடியாது.” எனது நகைச்சுவை அவருக்குப் பிடிக்கும். மந்தகாசமான முகத்துடன் அவர் தான் வாசித்தறிந்த பிற நல்ல மேற்கத்திய நகைச்சுவைகளை என்னுடன் பகிர்ந்து கொள்வார்.
எளிமையான அப்பாவியான நல்ல மனிதர் சுரேஷ். எதையும் சுயநலமாய் தன்சார்பாய் அதிரடியாய்ப் பேசி முட்டிமோதி தன் இலக்கை, காரியத்தை அடைவது அவருக்குத் தெரியாது. அதை இழப்பாக அவர் உணர்ந்திருக்கலாம். என்றாலும் அவர் வாழ்க்கை ஏமாற்றம் சார்ந்தது அல்ல என்றே நான் அறுதியிட விரும்புவேன். அவர் உள்ளி, அல்லது துள்ளி எட்டாத விஷயங்கள் இருந்தன அவருக்கு. என்றாலும் கைக்கு எட்டியவை அருமையானவையே.
*
storysankar@gmail.com

91 97899 87842

2 comments:

  1. நெஞ்சம் கசியும் பதிவு !

    ReplyDelete
    Replies
    1. I am happy you replied

      I am happy that i am NOT unnoticed...

      just like how m g suesh felt for himself!

      thanks

      Delete