Friday, January 25, 2019


part 26/art by kamal koria


அறுபது
எழுபது
எண்பது
எஸ்.சங்கரநாராயணன்

னால் நான் மாறுபட விரும்பினேன். எண்பதுகளில் நாங்கள் மாறுபட விரும்பினோம். கோணங்கியின் எழுத்து?வாழ்வின் முன்பகுதியும், பிறகு தன்னடையாளம் என தனி எடுப்பு வைத்துக் கொண்டதும் எல்லாரும் அறிந்ததே. அதில் நான் கிளை பிரிந்த விவரமும் வேறொரு பதிவில் சொன்ன நினைவு. சுருக்கமாய்ச் சொன்னால், முற்றிலும் வேறு வார்த்தைகள் வேறு அனுபவம் என்று வாசகனை, சொல்லிச் சொல்லி பழக்கப்பட்டு, நைந்து போன தமிழ் வார்த்தைக் குப்பையில் இருந்து மீட்டெடுப்பேன், என்றார் கோணங்கி. மரபைத் தொட்டு அதன் நீட்சியாக நான் என் அலைவரிசைகளை அமைத்துக்கொள்ள முன்வந்தேன். (நாமார்க்கும் குடியல்லோம் ‘சிவனை’ அஞ்சோம். - இப்படி. இதுபற்றி முன் பதிவுகளில் குறிப்பிட்ட நினைவு.)
எங்களுக்கு முந்தைய எழுத்தாளர்கள், ஐம்பது அறுபதுகளின் இலக்கிய அடையாளங்கள், பெரும்பாலும் பிராமணர்கள். அவர்கள் நடத்திய பத்திரிகைகள், சிறு பத்திரிகைகள் கோலோச்சிய காலம். பிராமணர் அல்லாத, எனினும் பிராமண சாதியோடு ஒத்துப்போகக் கூடிய மேல்சாதிக் காரர்களின் பத்திரிகைகள் இருந்தன. அவ்வண்ணமேயான எழுத்தாளர்களும் இருந்தார்கள். இலக்கியத்தின் போக்குகளை, இரத்தவோட்டத்தை அவர்கள் நிர்ணயித்தார்கள். தேவார, திவ்யப் பிரபந்த காலம் என்று மொழி, ஆன்மிகத்தில் செழித்த காலம் போல, எம்.எஸ்.வியோ, அதன்பின் இளையராஜாவோ திரை இசையின் போக்கை நிர்ணயித்தது போல, வசனத்தின் உரைநடையின் ஆரம்ப கால கட்டமாக அது இருந்தது.
ஒரு வேடிக்கையான உதாரணம் நினைவு வருகிறது. ‘சந்திரலேகா’ என ஒரு பிரம்மாண்டான தயாரிப்புத் திரைப்படம் வந்த காலத்தில், போலிஸ் ஒருவன் திருடனைப் பிடிக்க வியூகம் வகுப்பான். நீ அங்கே காத்திரு. இவன் இங்கே இருப்பான். யார் பார்க்கறீங்களோ, உடனே விசில் அடிக்க மற்றவர்கள் பாய்ந்து வந்து திருடனை வளைத்து விடலாம்... என்ற திட்டத்துக்கு வசனம், “இவா ஊதினா அவா வருவா” என பிராமண பாஷையில் இருக்கும்! அந்தகக்லத்தில் சாரங்கபாணியின் நகைச்சுவை உச்சரிப்பு பாணியிலேயே பிராமண வாடை தனியே தெரியும்... அது ஒரு காலம். எல்லாம் தாண்டித்தான் வந்திருக்கிறோம்.
எழுத்தில் தனிமனித வாழ்க்கையோ சம்பவங்களோ தாண்டி ஓர் அறவுணர்வை, ஒழுக்கத்தை வலியுறுத்தும்படி கதைகளை அவர்கள் வடிவமைத்துக் கொண்டார்கள். ஐம்பது அறுபது காலகாட்ட எழுத்தாளர்கள் அவர்கள். தன்னைவிட உயரமான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க அவர்கள் ஆர்வப் பட்டார்கள். இலட்சியத் தினவு, தோள்ப்பூரிப்பு, சமூகப் புரட்சி கொண்ட கதைகள், அவையும் ஒருபக்கம் ஆட்சிக்கு வந்தன. அப்படிக் கதைகள் எழுதுவது பெருமிதம் தருவதாக, பரவலான இலக்கிய அந்தஸ்தும், புகழும் ஈட்டித் தருவதாக இருந்தது. இதில் தனிமனிதக் கதைகள் அத்தனை எடுபடவில்லை, நா.பா, அகிலன், மு.வ. காட்டும் இலட்சியப் பாத்திரங்கள் தமிழ்த் தீவிரமோ, சமுதாயப் புரட்சி பாவனைகளோ கொண்டாடின. அவற்றுக்குத் தனி வாசக அரங்கு அமைந்தது.
அந்தப் படைப்புகளின் பாத்திரங்களின் பெயர்களையே தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் போக்கு கூட இருந்தது.
ஆனால் இலக்கிய அடையாளம் என அறம் வலியுறுத்தி, பரந்து பெய்யும் மழைபோல், தனிமனிதப் பாத்திரங்கள் தாண்டி சமூகத்தை அடையாளப் படுத்தும் கதைகள் சிறப்பு பெற்றன. (கு.அழகிரிசாமி, ஜானகிராமன்.) இதே அளவு, இந்த தனிமனித லௌகிகக் கதைகள் அங்கிகாரம் பெறவும் முடியவில்லை. வணிகப் பத்திரிகையில் லௌகிகக் கதைகள் எழுதியவர்கள் சுவாரஸ்ய அம்சம் கருதி வாசிக்கப் பட்டார்கள். இந்த சூழல் நடுவே, இலை நடுவே தாமரை என ஜெயகாந்தன் போன்றோர் தலையெடுத்தார்கள். ஒரு காலகட்டத்தின் போக்கு இது.
தனியொரு எழுத்தாளன் இதை நிர்ணயித்திருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அல்லது ஒரு தனி மனித முயற்சி பரவலாய் அடையாளப் படும்போது பிறரும் அவர்வழி கூட வந்திருக்கலாம். அப்படிப் போக்குகளை நிர்ணயிப்பவனே வகைமாதிரியாக (ஐகானாக) அழியாப் புகழ் பெறுகிறான். அந்த ஐகான்களையே நாம் உதாரணங்களாகக் கொண்டு அந்தக் காலகட்டத்தை அளவிடுகிறோம். மதிப்பிடுகிறோம்.
போன பதிவில் அறம் சார்ந்த உணர்வுகளை மீட்டியபடி நகரும் கதைகளாக, லாசராவின் குருஷேத்திரம் மற்றும் தி.ஜானகிராமனின் ஒரு கதை என உதாரணம் காட்டியதை இங்கே சேர்த்துப் பார்க்கலாம். பிற்காலங்களில், அறுபது தாண்டி எழுபதுகளின் எழுத்தாளர்கள், வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பிரபஞ்சன், சா.கந்தசாமி என ஒரு வட்டம் வருகையில் இந்தப் போக்கு மாற்றம் கண்டது. என்ன மாற்றம் அது? அறுபதுகளின் எழுத்தாளர்கள் எல்லாப் பாத்திரங்களையும் இலட்சிய வாதம் பேச வைத்தார்கள். அறமும் வாழ்வொழுங்கும் ஓரளவு லட்சியத் தினவே தானே. அறத்தின் நிமிர்வு அவசியம், என்று வலியுறுத்திப் பேசும்போது, பாத்திர வார்ப்புகள் எப்படி இருந்தாலும், அது எழுத்தாளனின் கனவு என்பது அதில் காணக் கிடைப்பதாகவே ஆகிப் போகிறது. ஆக அந்தக் கதாபாத்திரங்கள், எழுத்தாளனின் அறிவுத்தளத்திலேயே அவையும் இயங்கின, என்று கூறத் தோன்றுகிறது.
இந்த ஐம்பதுகளின் அறுபதுகளின் எழுத்தாளர்களில் அசோகமித்திரன் மாத்திரம், தான் வாழ்ந்த சூழலை, பொருளாதார அடிப்படையில் மத்திய தர, கீழ்மத்திய தர மனிதர்களை அடையாளப் படுத்திப் புனைவுகள் அளித்தார். என்றாலும் அப் பாத்திரங்களில், இப்போது நாம் குறிப்பிடுகிறோமே, அம்மாதிரி விளிம்புநிலை மனிதர்கள் இல்லை. அவர் வாழ்ந்த ஹைதராபாத் சூழல் தனி அடையாளம். எனினும் வலி மிக்க வாழ்க்கை அவரது கதைக் களன். அவ்வளவே. இந்தக் குழுவில் ஜெயகாந்தனின் பங்களிப்பு அபாரமானது. அவர்தான் பிராமணர், அப்பிராமணர் என்ற பாகுபாடு இல்லாமலும், மேல்சாதி கீழ்சாதி என்றெல்லாம் பராட்டாமலும் புனைவுகளில் ஈடுபட்டார். அவரது குணாம்சம் அது. அந்தக் காலகட்டத்தின் பெரும் வியப்பு இது. புதுமைப்பித்தனிடம் கூட சாதி சார்ந்த கட்டமைப்புகளில் பெரிய கேள்விகள் இல்லை. ஜெயகாந்தனிடமும் இல்லை, என்றாலும் அதில் சாதி அபிமானம் என்று தெரியாது. அவ்வளவில் புதுமைப்பித்தன் தான் பிறந்த பிள்ளை சமூகத்தின் அடையாளங்களைக் கூடவைத்துக் கொண்டவர், என்கிற விமரிசனம் அவருக்கு எழுந்தது. புதுமைப்பித்தனின் ஒரு சிறுகதையின் தலைப்பு - கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும். ஆனால் ஜெயகாந்தனோ பணம், கல்வி, சாதி அடையாளம் தாண்டி பொதுவாக அத்தனை விதமான வாழ்க்கைத்தர பாத்திரங்களையும் அன்பு, குடும்பச் சூழல் என பொதுவான நேர்மையுடன் வடித்துக் காட்டினார். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், போன்ற நாவல்களை அவரால் தர முடிந்தது. தனக்குள் கிளம்பும் விவாதங்களை அவர் பாத்திரங்களாக்கி ஆனால் விமரிசனமாகவோ, பிரச்சாரமாகவோ தெரியாமல் படைத்துக் காட்டிய அளவில் அவரது பரந்த மனது அத்தனை தரப்பு வாசகர்களையும் கொள்ளை கொள்வதாக அமைந்தது. மிகுந்த நேர்மையான உளப்பூர்வமான எழுத்து என ஜெயகாந்தனின் சிறுகதைகள் அமைந்தன. மற்ற எழுத்தாளர்கள் தங்கள் பாத்திரங்களை ஒரு குறிப்பிட்ட வர்க்கச் சூழலில், தான் அறிந்தது, தனக்குத் தெரிந்தது என எழுதத் தலைப் பட்டார்கள். ஜெயகாந்தன் வேறு வேறு மட்டத்திலான பாத்திரங்களை எழுதிப் பார்க்க உந்தப்பட்டார். பிராமணப் பாத்திரம். விளிம்பு நிலைப் பாத்திரம். நன்கு படித்த மேல் தட்டு வர்க்கம். வெளிநாட்டு பாவனைகளைக் கூட அவர் தன் கதைகளில் நடமாட விட்டது, அந்தக் கால கட்டத்தின் ஆகப் பெரிய ஆச்சர்யம்.
இன்னும் சொல்லப் போனால் யார் எழுத்தாளன், என்ற கேள்விக்கு, ‘எந்த விஷயம் பற்றியும் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் கேட்டால் தர அவனுக்கு முடிய வேண்டும். அப்போதுதான் அவன் எழுத்தாளன்,’ என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஜெயகாந்தனை அந்தவகை எழுத்தாளனாக இப்போது நினைத்துக் கொள்கிறேன்.
இந்தச் சூழலில் எழுபதுகளில், பூமணி, சா.கந்தசாமி போன்றவர்கள் பாத்திரங்களின் சூழலும், அறிவும் சார்ந்து எழுத்தாளனின் குறுக்கீடு இல்லாத படைப்புகளை அளிக்கத் தலைப்பட்டார்கள். ஓரளவு அசோகமித்திரனும் இவ்வகையில் முயன்று பார்த்திருப்பதாக உதாரணம் காட்ட முடியும். கதாபாத்திரங்கள் எவ்வளவிலும் தான் வாழும் சூழலுக்கு மேற்பட்ட தத்துவங்களை ஒருபோதும் உதிர்ப்பது இல்லை. பெரும் சிந்தனைகளுடன் அறிவும் தர்க்கமுமாய் வளையவர வில்லை அப் பாத்திரங்கள். மானுட விழுமியங்களை நோக்கி நகரும் அறுபதுகளின் பெரும் போக்கில் இருந்து இது துல்லியமான மாறுபாடுகள் கொண்டதாய் இருந்தது. இந்தக் காலகட்டங்களில் ஆ.மாதவன், பூமணி, கி.ரா. போன்றவர்களின் வட்டார வழக்கு உரையாடல்களின் பயன்பாடுகள் அந்த முயற்சிக்குப் பெரிதும் உறுதுணை புரிந்தன. கி.ரா. பாத்திரங்கள் அவரது ஆளுமையின் அடையாளங்கள், எனினும் அவர் காட்டிய உலகம் புதுசானது. லட்சியப் போக்குகளுக்கு மாறுபட்டதாய் இருந்தது. முற்போக்கு வாடை வீசும் கி.ரா. கதைகளில்.
பிறகான எண்பதுகள். எனது முதல் சிறுகதை 1979 வாக்கில் வெளியானது. ஒரு சுமாரான இதழில் வெளியான சுமாரான கதை அது. எனது நல்ல கதையை நிராகரித்திருப்பார்கள் அவர்கள், என்கிற அளவுக்கு சுமாரான இதழ் அது. நான் எழுத்தாளன் ஆகிவிட்டேன். நான் எழுத வந்தபோது எனக்கு இலக்கியப் பத்திரிகை, வணிகப் பத்திரிகை என்பது எல்லாம் தெரியாது. அப்போது சாவி, மணியன் இருவரும் தனித்தனியே பத்திரிகைகள் ஆரம்பித்தார்கள். சில வருடங்களில் அவர்களே நிறையத் துணை இதழ்களும் துவங்கினார்கள். கதைகள் பெருவாரியாகத் தேவை இருந்த காலம் அது. எனது கதைகள் கொண்டாடப் பட்ட காலம் அது. நான், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ம.வே.சிவகுமார், கார்த்திகா ராஜ்குமார் - என எழுத ஆரம்பித்த புதியவர் பட்டியல் உண்டு. குங்குமம் அறிமுக எழுத்தாளர் என்று முதல்கதை வெளியிட ஆர்வப் பட்ட காலம். இப்பெரும் போக்கோடு, நான் என் வழி தனியே பிரிந்து வந்தது எனக்கே ஆச்சர்யம். அதன் விவரங்களை வேறு இடத்தில் பதிவிட்டிருக்கிறதாக நினைக்கிறேன்.
குறிப்பாக வணிகக் கதைகள் சம்பவங்களை, திருப்பங்களை வைத்து வாசகனுக்கு சுவாரஸ்யமான வாசிப்பு தந்தன. இலக்கியத் தரமான கதைகள் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்தன, என எளிமையான வித்தியாசம் சொல்ல முடியும். இதையும் முன்பே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
எழுத்து ஓரளவு பிடிபட்ட போது விதவிதமாய் எழுதிப் பார்க்கிற ஆவல் வருகிறது. இதுவரை சொல்லப்படாத சேதிகளை, மனிதர்களை நாம் சொல்ல அவா எழுகிறது. தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும்போது நமக்குள் நிகழும் மாற்றங்கள் எத்தனை அருமையானவை. எழுதியபடியே எழுத்தால் தானும் வளர்கிறான் எழுத்தாளன். என் ஒரு கதை போல அடுத்தது இல்லாமல் பார்த்துக் கொள்ள நான் முடிந்த அளவு முயல்கிறேன்.
2
ழுத்தாளர் பா.திருச்செந்தாழை திசம்பர் 17, 2018 முகநூலில் எழுதிய ஒரு குறிப்பு மேற்சொன்ன விவரங்களைப் பற்றி மனசு வட்டமிட வைத்துவிட்டது. திருச்செந்தாழையின் பதிவின் முதல் பகுதி இதோ.
      “ஷங்கரநாராயணனின் கதை ஒன்று உள்ளது.   
      எப்போதும் சின்னபையனைப் போலவே பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் தந்தையைக் குறித்து குறைகூறிக் கொண்டே இருக்கும் ஒருவனிடம், தனது அந்திமத்தில் இருக்கும் அம்மா ஒருநாள் அவளது பழைய காதல் வாழ்வையும், அதில் தோற்று நின்ற அந்த நிமிடத்தில் எவ்வளவு இயல்பாய் தன்னுடன் இணைந்து பயணிக்கத் துவங்கிய அவனது தந்தையைப் பற்றியும் கூறி முடிப்பாள். இவன் திணறியபடி அதைக் கேட்டுமுடித்து அமைதியாவான். தந்தை குறித்த அவனது அனுமானங்களை என்ன செய்வதென அவன் மௌனிக்கும்போது, தெருவில் கிரிக்கெட் விளையாடும் பையன்களுக்குக் கையசைத்தபடி வீட்டிற்குள் நுழைந்து, விசிலடித்தபடி பௌலிங் செய்யும் பாவனையுடன் அப்பா தனிமையில் தனது அறைக்குள் செல்வார்.
      மகத்தானவைகள் என்பவை அளவில் மிகப்பெரியவை என்பது எப்படியோ பழக்கமாகிவிட்டது.”
திருச்செந்தாழையின் இந்த முகநூல் பதிவு நான் எதிர்பாராதது. அவர் குறிப்பிட்ட அந்தக் கதை என் நினைவில் இல்லை. ஆனால் மனிதர்களில் விடுபட்டவர்களை நாம் அடையாளம் காட்ட வேண்டும், என்கிற எனது உந்துதலில் அப்படி ஒரு கதை நான் எழுதி யிருப்பேன் என்றே தோன்றுகிறது. அச்சான கதைகளை சூதானமாக பத்திரப்படுத்தும் பழக்கம் எனக்கு எப்போதுமே இல்லை. அதனால் எனது ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் திரும்பக் கிடைக்கவில்லை எனக்கு. அதில் வருத்தமும் இல்லை.
‘சூரிய விளக்கும் சூறாவளியும்’ என நான் ஒரு கதை எழுதினேன். தலைப்பே சொல்லி விடும் அது என் எழுத்துலக ஆரம்பகாலக் கதை. எத்தனை தோல்விகள் வந்தாலும், வாழ்க்கை அடிமேல் அடி போட்டு அவனைப் புரட்டிப் போட்டாலும், புன்னகை மாறாமல் வாழும் ஒரு மனிதனின் கதை அது. பாசமே காட்டத் தெரியாத கொடுமைக்காரத் தந்தையிடம் பயந்து பயந்து வளர்ந்த ஒருவர். கல்லூரிக் காலத்தில் தன்னைக் காதலித்த ஓர் அபூர்வமான பெண்ணையே தன் அப்பாவுக்கு பயந்து கைப்பிடிக்கத் தவறவிட்டவர். எங்கு பார்த்தாலும் துரத்தி வரும் நிராசைகள். இதன் மத்தியில் அவர் தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்கிறதாகக் காட்டிக்கொண்டு, மனைவியை கௌரவமாக நடத்துவார். அதை மகனுக்கு அம்மா சொல்வதாக அமைத்திருந்த கதை அது. ஒருவேளை இந்தக் கதையைத் தான் இப்போது திருச்செந்தாழை நினைவு கூர்கிறாரோ என்னவோ? அவனுடன் அப்பா தெருவில் இறங்கும் போது தெருவில் பையன்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒருவன் அடித்த பந்து அப்பா முன்னால் வந்து விழும். அதைப் பிடித்து பௌலிங் போடுவார் அவர்... என எழுதிய நினைவு எனக்கு.
‘சூரிய விளக்கும் சூறாவளியும்’ என்ற அந்தக் கதை ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் கண்டது. ஓய்வு பெற்ற மாஜிஸ்டிரேட் எம்.எஸ்.ராமசாமி பண்ணி யிருந்தார். நிறையப் பேருக்கு அது பிடித்திருந்தது. அப்படி ஒரு வாழ்க்கை வாழ எல்லாருமே ஆசைப் படுகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது.
கதையமைப்பில் முழுக்க மானுடத்தை நோக்கி நாமே இயங்குவதான பாவனையுடன் சொந்தக் கற்பனையில் எழுதுவது அந்தக் கதை உருவான நேரத்தின் மன அமைதி சார்ந்தது. முழுக்கவே எல்லாப் பாத்திரங்களையும் நல்லவர்களாகவே படைத்து, வில்லன்களே இல்லாமல் கூட கதை எழுதி யிருக்கிறேன். இதற்கு முன்மாதிரி இல்லை என்கிற தனிக்கதை எனவும் முயன்று பார்த்திருக்கிறேன்.
துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை, என்ற சிறுகதை அப்படி. அது முன்மாதிரிகள் அற்றது. விதவை அம்மா. அம்மாவும் பெண்ணும் கோவில் பிராகரத்தில் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். திடுதிப்பென்று மின்சாரம் போய்விடுகிறது. அந்தப் பெரும் இருளில் அம்மாவின் உதட்டை யாரோ சட்டன கவ்வி முத்தம் இட்டு விடுகிறார்கள். விளக்கு வந்தபோது பார்த்தால் அவளுக்குப் பக்கமாகவோ, முன்னாலோ பின்னாலோ யாருமே இல்லை. இத்தனை வயசாகியும் நான் இன்னும் அத்தனை இளமையாகவா, ஈர்ப்பாகவே இருக்கிறேன்? என் உடல் இன்னும் கட்டுக் குலையாமல் ஆண்களைக் கிறங்கடிக்கிற அளவிலா இருக்கிறது? கூட வரும் மகள்... இவளுக்கு விஷயம் தெரிந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? யார் இப்படிச் செய்தது? யார் அவன்? லேசாய் உதட்டைத் தடவிக் கொள்ளலாமா என்று நினைவை உதறிக் கொண்டபடியே நடந்து வருவாள்.
திடீரென அவளுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வரும். மின்சாரம் போன அந்த விநாடி, அதற்கு சற்று முன்தான் அவளுக்கு இடப் பக்கமாக வந்து கொண்டிருந்த பெண், தற்செயலாக அவளுக்கு வலப் பக்கமாக வந்தாள், என்பது அம்மாவுக்கு ஞாபகம் வரும் - என்று முடியும் கதை.
இதேபோல முற்றிலும் புதிதான கற்பனை என்று இன்னொரு கதை நினைவுக்கு வருகிறது. ‘ஜலஜாவுக்குப் பைத்தியம்.’ இந்தக் கதையை எதிர்பாராத இடத்தில் முடித்திருப்பேன். எட்டாங் கிளாஸ் படிக்கிற வயசில் ஒரு சின்னப் பையன். அவன் வீட்டுக்கு எதிர்வீட்டில் ஒரு பைத்தியம், ஜலஜா. அதன் சேஷ்டைகள் இவனுக்கு சுவாரஸ்யமானவை. யாரும் இல்லாத சமயம் இவனும் அவளிடம் வேடிக்கை செய்து மகிழ்வான். ஒரு கோடை விடுமுறை என்று தாத்தா வீட்டுக்குப் போயிருப்பான் இவன். திரும்ப வந்தபோது ஜலஜா இல்லை. அந்த எதிர்வீட்டுத் திண்ணை காலியாகக் கிடைக்கும். என்ன ஆயிற்று ஜலஜாவுக்கு?
அவன் வகுப்புத்தோழன், புளுகுமாஸ்டர் அவனுக்குச் சொல்வான். ஜலஜா செத்துட்டா. அவங்க அம்மாவே அவளுக்கு பால்ல வெஷத்தைக் கலந்து குடுத்து... கேட்கவே நடுங்கும் அவனுக்கு. இதை நம்புவதா வேண்டாமா, என்று பதட்டமாய் இருக்கும். ஜலஜாவை ஊரில் யாரோ கெடுத்து விட்டார்கள், என்பது புளுகுமாஸ்டரின் கதை. அவளை யாரோ கர்ப்பமாக்கி விட்டார்கள். யார் என்பது ஜலஜாவுக்குச் சொல்லத் தெரியவில்லை. விஷயம் ஊருக்குத் தெரியுமுன்னால்... அவங்க அம்மா, வேறு வழியில்லாமல்... பாலில்...
போடா சர்த்தான், என அவனை உதறிவிட்டு வந்தாலும் இவனுக்கு ஜலஜா பற்றிய நினைவுகளே கூட வரும். அவள் வீட்டு வாசலில் காலித் திண்ணையைப் பார்த்தபடி அவன் நிற்பான். திடீரென்று அவள்வீட்டுக் கதவு திறக்கும். ஜலஜாவின் அம்மா வெளியே வருவாள். இவளா? இவளா கொலைகாரி?.. சே புளுகுகிறார்கள்... என்றிருக்கும். அவனைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு உள்ளே கூப்பிடுவாள் ஜலஜாவின் அம்மா. உள்ளே போய் அப்படியே நிற்பான். துக்கம் கேட்டு அவனுக்குப் பழக்கம் இல்லை. இவளா கொலைனாரி? இவளா?... என தனியே ஒரு பதற்றம். சரி மாமி. நான் வரேன், என அவன் கிளம்புவான். இருடா, வராதவன் வந்திருக்கே. ஒரு வாய் பால் சாப்ட்டுட்டுப் போ. ஒரே துள்ளலில் வெளியே ஓடுவான் அவன் - அந்தக் காலத்தில் நேரில் பார்த்தவர் எல்லாம் கைகொடுத்துக் குலுக்கிச் செல்வார்கள் இந்தக் கதை வந்த புதிதில்.
ஒரு அரசு அலுவலகத்தின் பழைய ஆவணக் காப்பு அறையும் அதன் புராதன இருளும் அதில் மேஜையில் குப்புறப் படுத்து உறங்கும் ஊழியனும் அவனுடன் நட்பு பாராட்டும் எலிகளும் என்கிற ஒரு கதை, ‘மார்ச்சுவரியில் ஒரு மனிதன்.’
இந்தியா டுடே இதழ் சிறுகதைகளை வெளியிட்டுக் கொண்டிருந்த போது நான் அதில் எழுதியிருந்த அத்தனை கதைகளும் எனக்கு மிகப் பிரியமானவை. பெயரே இல்லாத மனிதன் - யேசுதாஸ் என்று கதாபாத்திரத்துக்கு பாடகரின் பெயரையே கொடுத்து எழுதிய கதை. யேசுதாஸ் வீட்டு செவிட்டூமைத் தோட்டக்காரன் பற்றிய கதை. இசையில் வல்லவரான யேசுதாசுக்கு பெயருக்கு முன்னால் பத்மஸ்ரீ அது இது என்று, கூடவே பெயருக்குப் பின்னாலும் படித்து வாங்கிய பட்டங்கள். அவர் வீட்டில் வேலைக்கு வரும் செவிட்டூமைத் தோட்டக்காரன். அவனுக்குப் பெயரே இல்லை. யார் அவனைப் பேர் சொல்லி அழைக்கப் போகிறார்கள். அப்படி ஒரு பெயர் வைத்து அவனைக் கூப்பிட்டாலும் அவனுக்கு எப்படி அது கேட்கும்?
ஆனால் யேசுதாஸ் இசையில் விற்பன்னர், என்பதைப் போலவே, அவன் மண்ணின் மகத்துவம் அறிந்தவன். அவன் சொன்னதைக் கேட்டது தோட்ட மண். வாசல் பக்கப் புல்தரையை ஒழுங்கு செய்து மாலைகளில் அவர் அமர நாற்காலிகள் போட்டுக் கொள்ள வைத்தான். அவன் வைத்த ரோஜாச் செடி பூத்துக் குலுங்கியது. தன் வீட்டு வாசல் அலங்காரமாகி விட்டதில் அவருக்கு, யேசுதாசுக்குத் திருப்தி. அவன் மீது சக கலைஞன் என்ற அளவிலேயே அவருக்கு மரியாதை வந்தது.
இதில் நான் காட்டிய ஒரு சேதி முக்கியமானது. அதற்காகவே இங்கே அதை விளக்க முன்வந்தேன். இந்தக் கதை சார்ந்த வேறொரு சுவாரஸ்யத்தை வேறு இடத்தில் நான் பகிர்ந்து கொள்வேன். கதையமைப்பு என்னவென்றால், தனது ஞானம் சார்ந்த செருக்கும் மிடுக்குமான யேசுதாஸ். அவரது செருக்கை மெல்லக் கலைக்கிறான் (பெயர் கூட இல்லாத) தோட்டக்கலை நிபுணன்.
யேசுதாசின் மனைவி அவருக்குப் பணிவிடை செய்வதையே தனது கடமை எனக் கொண்டவள். காலையில் அவரது சாதக நேரத்துக்கு எல்லாம் அவருக்குத் தயாராய் எடுத்து வைப்பது முதல் அவரது தேவைகளைப் பாய்ந்து பாய்ந்து பொறுப்பாய் பயந்து பயந்து செய்கிறவள். அவர் வேலையாய் இருந்தால் நெருங்கவே யோசிப்பாள். தோட்டக்காரன் வந்தபிறகு யேசுதாஸ் தன்னளவிலேயே உள்ளிறுக்கம் தளர்வதை உணர்கிறார். தன் மனைவியையே அவர் பார்க்கும் பார்வையில் அந்த கெடுபிடி இல்லை. அன்பு, கனிந்த அன்பு கவிகிறது. ஒருவரை யொருவர் அன்பால் நெருங்கி வருகிறார்கள்.
அந்தக் கரைதலில் அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது. உயர்வு தாழ்வு சார்ந்தும், உணர்ச்சி பேதங்களிலும் அல்லாமல், கனிந்த அன்பிலும் குழைவிலும் உருவாகிறது குழவி. கணவன் மனைவி இடையே ‘நான்’ மறைந்து ‘நாம்’ என்றானபோது, இருவருக்கும் பொதுவான, இருவருக்குமான குழந்தை அங்கே வந்து சேர்கிறது.
ஒரு கதைபோல் மற்றது அமையாதபடி முடிந்தவரை எழுதிப் பார்ப்பது. யாரைப் போலவும் அல்லாமல் சிந்திக்கப் பயிற்சி பெறுவது... என்றெல்லாம் நான் இயங்கி வந்தேன். முழுக்கவே எல்லாப் பாத்திரங்களும் நல்லவர்களாகவே அமைகிறாப் போல ஒரு கதை கூட நான் பண்ணி யிருக்கிறேன்.
ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு பைத்தியம் ஆகிவிட்டார் அப்பா. பேச்சு அடங்கிப் போனவர். தன் காரியத்தைத் தானே செய்து கொள்ளத் தெரியாது அவருக்கு. வீட்டில் அவர், அவரது மனைவி, ஒரு மகன். மகன்மேல் எப்பவுமே உயிர்ப் பாசம் வைத்திருக்கும் அப்பா. யார் என்ன சொன்னாலும் கேட்காத அப்பா, மகனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டார். அவன்தான் அவரைக் காலையில் குளிப்பாட்டி விடுவது. தட்டில் சோறு வைத்துக் கொண்டு ஊட்டிவிட்டு விட்டு அவன் வேலைக்குக் கிளம்புவான்.
அம்மாவும், அம்மாவின் தம்பியுமாக பையனுக்குக் கல்யாணத்துக்குப் பெண் பார்க்க ஆரம்பிப்பார்கள். பையன் தனக்குக் கல்யாணமே வேண்டாம், என்று மறுத்து விடுவான். அப்பாவைக் கடைசி வரை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். வருகிறவள் அப்பாவிடம் வேத்துமுகம் காட்டிவிட்டால் என்னால் தாங்க முடியாது, என்று பிடிவாதமாய்க் கல்யாணத்துக்கு மறுத்து விடுகிறான்.
ஒருநாள் அவன் அலுவலகம் முடிந்து வீடு வருகையில் சில புது நபர்கள் வந்திருக்கிறார்கள். பெண் வீட்டுக்காரர்கள். அவன் “மன்னிக்கவும். எனக்கு இப்பக் கல்யாணம் பண்ணிக்கிற யோசனை இல்லை” எனக் கைகூப்பி அவர்களை அனுப்பி வைக்க முயல்கிறான். உங்க வீடு, உங்க அப்பா எல்லாம் எங்களுக்குத் தெரியும் தம்பி, என அவர்கள் சொல்லும் சமாதானம் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை. அவர்கள் வருத்தமாய்க் கிளம்பிப் போய்விடுகிறார்கள்.
அன்றைக்கு இரவு அப்பா அருகில் அவன் படுத்துக் கிடக்கிறான். இந்தப் பக்கம் அம்மா. கூட அவள் தம்பி. மாற்றி மாற்றிக் கல்யாணம் பற்றிப் பேசுகிறார்கள். அவன் பிடி கொடுக்கவே இல்லை.
காலையில் பார்த்தால், அவன் அருகில் படுத்துக் கிடந்த அப்பாவைக் காணவில்லை.
பதறியடித்து தெரிந்த இடம் எல்லாம் தேடுகிறார்கள். தங்கையைப் பக்கத்து ஊரில் கட்டிக் கொடுத்திருக்கிறது. அங்கேயும் அவர் இல்லை. எங்கே போனார் என்றே தெரியவில்லை.
ஒரு வாரத்தில் அவர்கள் வீட்டுக்கு ஒரு போஸ்ட்-கார்டு வருகிறது. பெண் கொடுக்க என்று வந்து பார்த்துவிட்டுப் போனவர்கள் வீட்டு முகவரி. அப்பா அங்கே போயிருக்கிறார். பெண்ணின் ஜாதகம், பையன் வீட்டில் தந்தது, அதில் இருக்கும் முகவரியைக் காட்டிக் காட்டி வழி கேட்டபடி நடந்தே அத்தனை தூரம், ஊர் விட்டு ஊர் போயிருக்கிறார்.
மகன் பதறியோடிப் போய்ப் பெண் வீட்டை அடைகிறான். பெண்ணின் அப்பா அவனை வரவேற்கிறார். எங்க வீட்ல நாங்க என்ன சொன்னாலும் அவர் காதுலயே வாங்கிக்க மாட்டார் தம்பி. நம்ம சாந்தி சொன்னா தான் அவரு கேக்கறாரு. தினசரி அவரைக் குளிப்பாட்டறது, அவருக்குச் சாப்பாடு கொடுக்கறது... எல்லாமே என் பொண்ணு தான், என்கிறார் பெண்ணின் அப்பா.
வீட்டுக்குள் உள்ளறையில் ஜல் ஜல் என்று இங்கே அங்கே அலைபாயும் கொலுசு ஒலியை அவன் காது நிறையக் கேட்கிறான் - என முடிகிறது கதை.
ஒரு கதையை உருவாக்குவது கதைஞனுக்கு எத்தனை ஆனந்த அனுபவம் என்று ஒரு உதாரணம் காட்ட நினைத்தேன். இத்தனை அலைபாய்தலுக்கும் காரணமான திருச்செந்தாழைக்கு நன்றி.
---
பின்குறிப்பு

சில வருடங்கள், இடைக்காலத்தில் நான் என் பெயரை ஷங்கரநாராயணன் என எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு திரும்ப இப்போது ஷ மாறி ச ஆகிவிட்டது. பிரபஞ்சன் போன்ற நண்பர்களே மேடையில் இதைக் கிண்டல் செய்தார்கள். யாரிடமோ ஜோசியம் கேட்டு பெயர் மாற்றம் செய்து கொண்டுவிட்டார், என்றார்கள். உண்மையில் நடந்தது என்ன?
என்னைப் போலவே எஸ்.சங்கரநாராயணன் என இன்னொரு எழுத்தாளர் எழுத வந்தார். அவர் கதை கல்கி சிறுகதைப் போட்டியில் தேர்வும் ஆனது. அந்த எஸ்.சங்கரநாராயணனிடம், எற்கனவே நான் இதே பெயரில் எழுதுவதைத் தெரிவித்தேன். ஒருபடி மேலே போய், தேவையில்லாமல் என் மோசமான கதைகளுக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லும்படி ஆக வேண்டும், என்றெல்லாம் கடிதம் எழுதினேன். ஒரு மாதம் இரண்டு மாதம் வரை பதில் இல்லை. பிறகு ஒரு அஞ்சல்-அட்டை வந்தது. அவர் என்னைவிட மிகப் பெரியவர். தவிரவும் சர்க்கரை வியாதி அதிகமாகி ஆஸ்பத்திரியில் போராடி, தன் காலை இழந்து வீடு திரும்பி என் கடிதத்தைப் பார்த்துவிட்டு பதில் எழுதினார். வயதில் மூத்தவர் அவர். தன் சொந்தப் பெயரில் எழுதுவதை நான் எப்படி மறுக்க முடியும், என்று என் பெயரை ஷ போட்டு நான் எழுத ஆரம்பித்தேன். சுருக்கமாய் முடித்து விடலாம் - இப்போது அவர் இறந்து விட்டார். நான் என் பழைய பாணியில் எஸ்.சங்கரநாராயணன், எனவே எழுத வந்துவிட்டேன்.
91 97899 87842 / 94450 16842
storysankar@gmail.com

Friday, January 18, 2019


part 25 / artist kamal koria
மழை
சொட்டும்
மரங்கள்
எஸ்.சங்கரநாராயணன்
 *
ல்லா எழுத்தாளனும் நல்ல வாசகனே. தனது எழுத்தின் மேம்பட்ட வாசகனே. தான் உயரவும், தன் படைப்பை மற்ற படைப்பில் இருந்து தனித்து நிறுத்தவும், மேம்படுத்தி அல்லது குறைந்தபட்சம் வித்தியாசப் படுத்திக் காட்டிக் கொள்ளவும் அவன் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பிற எழுத்தாளர்களை வாசிக்காமல் அவன் அதை எப்படி முடிவு செய்ய முடியும்? அத்தோடு, தான் தன்னளவில் தன்னை, தன் ரசனையை, தன் எழுத்தின் சூட்சுமங்களை, எழுத எழுத அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வது போலவே, வாசிப்பில் இருந்தும் பயன் பெற்றுக்கொள்ள முடியும்.
முன்பே பலமுறை சொன்னது போல, ஒரு நல்ல கதை, ஆகா எனத் திகட்டுகிறது வாசிக்கையில். நம்மை ரொம்ப நேரம் அதன் சூழலில், அதில் நம்மைக் கவர்ந்த ஏதோவொன்றில், அதன் நடையாய் இருக்கலாம், அதன் கருப்பொருளாய் இருக்கலாம், அது சொல்லப்பட்ட உத்தியாய் இருக்கலாம், அதன் உவமைநயங்களாய் இருக்கலாம், அது சார்ந்திருக்கிற கருத்தாய், தத்துவமாய் இருக்கலாம்... ஏதோவொன்று நம்மை மயக்குகிறது அதில். அந்த ஒரு விஷயத்தில் நாம் கட்டப்பட்டு விடுகிறோம். ஒரு படைப்பாளன் அப்படிப் படைப்பை இரு கையால் ஏந்தி, ஒரு குழந்தையைப் போல அதைக் கொண்டாடுகிறான். இதில் பொறாமை வராது. வரக்கூடாது. எந்த வீட்டுக் குழந்தையானால் என்ன, குழந்தைகள் எல்லாமே அழகு தானே...
சிலசமயம் ஒரு நல்ல படைப்பைப் படித்த வீர்யத்தில், வாசித்த படைப்பாளனுக்கு உடனே எதாவது எழுதப் பரபரத்து விடுகிறது. தான் ரசித்து வாசித்த படைப்பின் ‘அதே’ உயரத்தை எட்டிவிடும் வேகம் தான் அது. அந்தப் பரபரப்பின் விளைவுகள் பலவிதமாக அமைகின்றன. அதில் ஓர் எளிய நிலை, அந்தப் படைப்பு போலவே முகஜாடை, நடை உடை பாவனைகளைக் கூட மாற்றாமல் சில படைப்புகள் அவசரமாய்த் தெறித்து விடும். மர்மக்கதைகள் என சுஜாதா தந்த அநேகக் கதைகள் அப்படி அமைந்திருப்பதைக் காணலாம். செமி ஆபாச நடை என்று தனியே அவர் அடையாளம் இருந்தது, தப்பித்தார். ஒருவகையில் இது ‘நகல்’ என்றே சொல்லிவிடலாம். ஆனால் வேண்டாம், ஏனெனில்...
எனெனில், நானே சில நகல்களின் சொந்தக்காரன்! இங்கே அதைப் பற்றியும் கொஞ்சம் பேசத் தான் போகிறோம்.
இன்னொரு பகுதியில் ம.ந.ரா. ‘புதுப்புனல் விருது’ பெற்ற போது அவர் பற்றி நான் உரையாற்றிய தகுதியுரையை வாசித்திருக்கலாம். அதில் வரும் ம.ந.ரா. சிறுகதை ‘கதை உலகில் ஒரு மேதை’ கதையும் இங்கே நினைவுகூரத் தக்கது!
முந்தைய ஒரு பதிவில் சொன்னது போல, (முகாம்கள் பாசறைகள்), ஒரு ஜெர்மானியக் கதை. அதை விளக்கலாம் இப்போது. ஜெர்மெனியின் ஒரு புகழ்பெற்ற நதி. அதன்மேலான புகழ்பெற்ற பாலம். அந்த நதியையும் அதன் மேல் பாலத்தையும் அழகாய் ஓவியமாய் வடித்த ஓர் ஓவியன். கதைப்படி அந்தப் பகுதி எதிரிகளால் கைப்பற்றப் பட்டு விடுகிறது. எதிரி நாட்டு ராணுவ வீரன் ஒருவன். அவன் ஒரு ஓய்வு நடையில் அந்தப் பகுதிக்கு வந்தபோது அங்கே நிற்கிறான். அந்த ஆற்றையும் அந்தப் பாலத்தையும் பார்க்கிறான். ஆகா இந்த இடம் எனக்கு ஏற்கனவே பரிச்சயமானதைப் போல் இருக்கிறதே, என நினைக்கிறான். ஆம். இதை ஓர் ஓவியமாகப் பார்த்திருக்கிறேன், எனக் கண்டடைகிறான். யார் அந்த ஓவியன், என அவன்பெயரை தன் நினைவு வளாகத்துக்குள் தேடுகிறான். சட்டென்று அந்தப் பெயர் நினைவில் வரவில்லை.
எதிரி நாட்டு ராணுவ ட்ரக் அங்கே வந்து நிற்கிறது. அவனை விசாரிக்கிறது. “யார் நீ? இங்கே ஏன் நிற்கிறாய்?” அவன் தானும் அவர்களில் ஒருவன் என, தன் அடையாள அட்டையைக் காட்ட நினைக்கிறான். பார்த்தால் அவனது பர்ஸ் எங்கோ தொலைந்து போய் விட்டது. வந்த அதிகாரிகள் அவனை நம்ப மறுக்கிறார்கள். அந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்ள என்று அவனுக்குப் புரியவில்லை. அவர்களின் விசாரணைக்கு அவன் அளிக்கும் பதில்கள் அவர்களைத் திருப்தியுறச் செய்யவில்லை. இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில், அவனை அவர்கள் ட்ரக்கில் ஏற்றுகையில்... சட்டென அவன் நினைத்துக் கொள்கிறான், “ஆ அந்த ஓவியன் வான்கோ!” கதை அத்தோடு முடிகிறது, அந்த வரியுடன்.
அசோகமித்திரன் ஒரு கதை எழுதுகிறார். பீச்சிலேயோ எங்கேயோ, நடந்து போய்க் கொண்டிருக்கும் போது கதாநாயகன், ஒரு வேர்க்கடலை விற்கும் வண்டியை நிறுத்தி ஒரு பொட்டலம் வேர்க்கடலை வாங்குகிறான். அந்தப் பொட்டலம் சுற்றிய காகிதத்தை வாசிக்கிறான். அதில் ஒரு கவிதை இருக்கிறது. ஆனால் பாதிக் கவிதை தான் இருக்கிறது. அதை எழுதிய கவிஞன் பெயர் அதில் இல்லை. அவனுக்குத் தெரிந்த கவிதையாகத் தான் தோன்றுகிறது அந்தக் கவிதை. அந்தக் கவிஞனின் பெயர் சட்டென அவனுக்கு ஞாபகம் வரவில்லை. கதையில் அடுத்தடுத்து சம்பவங்கள். கதை முடியும் கட்டத்தில் சட்டென்று அவனுக்குப் பொறி தட்டுகிறது. “ஆ அந்தக் கவிஞர் க.நா.சு.” சுபம்.
அதே ஃபில்டரில் மிச்சம் இருந்த டிகாஷனில் கலந்த காபி என்று இதைச் சொல்லலாம் அல்லவா.
ஜாடை இருந்தாலும், ஜான் அப்டைக்கின் இந்தக் கதையில், அந்த உத்தி மாத்திரமே இருக்கிறதாக நான் நினைக்கிறேன். உத்திகள் யாருக்கு வேண்டுமானாலும் ஒரே மாதிரித் தோன்றக் கூடும்.
கணவனும் மனைவியும் காரில் போய்க் கொண்டிருக்கிறார்கள். சற்று வெடுக் வெடுக்கென்று பேசும் மனைவி. எதையும் மூர்க்கமாக மறுத்தோ கோபமாக முரண்பட்டோ வெளிப்படுத்தாத சாதுவான கணவன். வண்டி போய்க் கொண்டிருக்கையில் பழைய விஷயம் எதோ பேசுகிறார்கள். நாலைந்து வருடம் முன்னால் அவர்கள் டூர் போனபோது ஒரு விடுதியில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றிப் பேச்சு வருகிறது. அவன் ஒரு நபரைக் குறிப்பிடும்போது, ’‘ஆமாம் நீங்க அவன்கூடப் போயி சண்டை போட்டீங்க. அவன் சிவப்புச் சட்டை போட்டிருந்தான்...” என்கிறாள் அவள். அவனோ “இல்லை. நீலச் சட்டை...” என்கிறான். அவள் உறுதியாக மறுத்து, “சிவப்புச் சட்டை தான். உங்களுக்கு எப்பவுமே ஞாபகசக்தி கம்மி” என்று சிரிக்கிறாள். அது சுருக்கென்றிருக்கிறது அவனுக்கு. அவளே உற்சாகமாகத் தன் நினைவாற்றலை நிரூபிக்கிற விதமாக “அவன் பேர்கூட என்னவோ ஜிக்ஸ்னு வரும்” என்கிறாள். அவனுக்கும் அந்த மனிதனின் பெயர் தெரியவில்லை. அப்படியே பேச்சு தாவித் தாவி வேறு வேறு விஷயங்களுக்குப் போகிறது. “இப்படித்தான் எங்க ஊர்ல...” என அவள் ஆரம்பிக்கும்போது, அவன் முகம் சட்டென்று மலர்கிறது. “அவன் பேர் வால்டர் பிரிக்ஸ்” என்கிறான்.
இந்தக் கதையில் ஒரு ஈகோ பிரச்னை கதையின் தன்னடையாளமாக அமைகிறது அல்லவா? அப்டைக் இந்த ஜெர்மானியக் கதையை வாசித்திருக்கலாம், வாசிக்காமலும் இருக்கலாம். இன்னும் வேடிக்கையாய்ச் சொன்னால், எது முன்னால் எழுதப்பட்ட கதை என்பது கூட மாறுபடலாம். அப்போது ‘போலச் செய்தது’ இதுவா அதுவா என்றும் கேள்வி புறப்படும்!
நானும் இதையெல்லாம் கவனித்ததால், என் பார்வை வட்டத்துக்குள் வந்ததால் இதையெல்லாம் பகிர நேர்ந்தது.
சரி. இப்போது என் விஷயம். ஹெச். ஈ. பேட்ஸ் எனக்குப் பிடித்த இங்கிலாந்து எழுத்தாளர். என் மொழிபெயர்ப்பில் அவரது 'GO LOVELY ROSE' சிறுகதை தமிழில் வந்திருக்கிறது. அருமையான கதை. என் மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றி தனியே இன்னொரு புராணம் வைத்துக் கொள்ளலாம்.
ஹெச். ஈ. பேட்சின் ஒரு கதை. ஒரு கட்டட வடிவமைப்பு நிபுணன். அவனது வடிவமைப்புத் திறன் பார்த்து வியந்து அவனை நெருங்கிவந்து காதலித்து ஒருத்தி அவனை மணம் செய்து கொள்கிறாள். இப்படிப்பட்ட ஒரு பெண், தனது திறமையைப் பார்த்துக் காதலித்தவள் மனைவியாய் அமைந்தது குறித்து அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. அவளுக்காகவே பிரத்யேகமான கவனத்துடன் ஒரு வீடு கட்டுகிறான் அவன். அவளை அழைத்துவந்து ஒருநாள் அதைக் காட்டுகிறான். “வெரி குட். நீங்க இதுவரை வடிவமைச்சதிலேயே பெஸ்ட் இதுதான்” என்றவள், கூடவே “நல்ல விலை கிடைக்கும் இதுக்கு” என்கிறாள்.
எனது கதை ‘வித்யாசாகரின் ரசிகை.’ மாடர்ன் ஆர்ட் முறைப்படி சிக்கலான ஓவியங்கள் வரைகிற ஓர் ஓவியன். அவனது அறிவுஜீவி நண்பன் ஒருவன். இருவரும் காதல் என்பது, அதைவிடக் கல்யாணம்... ஒரு கலைஞனின் கற்பனை ஒளியை மங்கச் செய்துவிடும், என்று முன்பு பேசிக் கொண்டவர்கள். வித்யாசாகரின் ஓவிய நுட்பங்களை யெல்லாம் சரியாக அடையாளங் கண்டுகொண்டு அவனைப் பாராட்டி கை குலுக்கி நட்பு கொண்டு பிறகு காதலித்து அவனது மனைவியாகி விடுகிறாள் ஒருத்தி. இனிமேல் உன் கலைப் பங்களிப்பு இறங்குதிசை தான், எனக் கேலி பேசும் நண்பன். ஆனால் தனது ஓவியங்களை வருகிறவர்களிடம் விளக்கிச் சொல்லி நல்ல விலைக்கு அவளால் விற்க முடிகிறது, என்றும், நான் வேலை செய்கிறவன், விற்பனை என் கவனத்தைச் சிதறடிக்க அவள் அனுமதிப்பது இல்லை, அது எனக்கு விடுதலை, விற்பனை சமாச்சாரத்தை அவள் பார்த்துக் கொள்வதால், நான் மேலும் உற்சாகமாக என் வேலையில் ஈடுபட முடிகிறது, என்றெல்லாம் தன் வாழ்க்கையை உயர்த்திப் பிடிக்கிறான் வித்யாசாகர். சற்றே பொறாமையுடன் அந்த நண்பன் அவன் விட்டுக்கு வருகிறான். அவன் வீட்டு வரவேற்பறையில் வித்யாசாகரின் சுமாரான ஓவியங்களையே பார்க்க முடிகிறது. ஏன் இப்படி, என்று நண்பன் கேட்கிறான். “நல்ல படங்களை அவ வித்துருவா” என்கிறான் வித்யாசாகர்.
இதில் நான் கலைஞர்கள் லொளகிக வாழ்க்கை வாழ விரும்புவது இல்லை... என்கிற விவாதத்தைப் பாடுபொருளாக்கி யிருக்கிறேன் அல்லவா? எப்படி அப்டைக் ‘ஈகோ’வை முன்னிறுத்தி அதே உத்தியைப் பயன்படுத்தினார், அதைப் போல.
இல்ல, இது ஹெச். ஈ. பேட்சின் கதை தான், என்று நீங்கள் சொன்னாலும் சரியே!
தமிழின் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் நிறையக் கதைகளை, அதன் மூல வடிவத்தை ஆங்கிலத்தில் வேறு எழுத்தாளர்களின் கதைகளாக நான் வாசித்திருக்கிறேன். என் பிறவி இந்த மாதிரி விஷயங்களை மோப்பம் பிடிக்கிறதாக ஆகி விட்டது. தேவை இல்லை, என்பது அல்ல, எனக்கே தேவைப் படுகிறதே!
2
முகாம்கள் பாசறைகள், கட்டுரையில் இன்னொரு ‘கதை பாதிப்பு’ பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். தார்க்கோவ்ஸ்கியின் ‘தியாகம்’ திரைப்படத்தின் பாதிப்பில் நான் எழுதிய கதை ‘தாத்தாவின் பொய்கள்.’ தார்க்கோவ்ஸ்கி உலகத்தின் சிறந்த பத்து இயக்குநர்களில் ஒருவர். ‘தியாகம்’ ஒரு கிழவரின் தனிமையைப் பரத்திப் பேசுகிறது. யாரோடும் ஒட்டாத ஓடு கழன்ற புளியம்பழ வாழ்க்கை. எதிலுமே ஆர்வம் இல்லை. அவரது வேகம் வற்றி விட்டது. தனிமை, மகா தனிமை சூழ்ந்து கொண்டது அவரை. அந்த ‘உதடு அமுக்கப்பட்ட’ உம்மென்ற இறுக்கத்தை என்னமாய்ச் சொல்கிறார் தார்க்கோவ்ஸ்கி. இது தவிர அடிமனதில் அவருக்கு, கதாநாயகருக்கு சாவு பற்றிய பயம். திடீரென்று அது அவர் முன் குதிக்கலாம் என்ற அச்சம். எல்லாம் முடிந்து விட்டது. இனி சாவு தானே எனக்கு பாக்கி? ஆகவே அதை நோக்கி நான் நடந்து கொண்டிருக்கிறேன், என்ற அச்சம். திகில் இருக்கிறது அவருக்கு.
இதையெல்லாம் இப்படி, எழுத்தில் அல்ல, காட்சியில் கொண்டுவர வேண்டும்.
உலகத்தின் சிறந்த இன்னொரு இயக்குநர் இங்மர் பெர்க்மென், தார்க்கோவ்ஸ்கியின் படங்களைப் பார்த்து விட்டு, “அட சில விஷயங்களை ஃப்ரேமில் சொல்ல முடியாது என நினைத்திருந்தேன். இவரால் சொல்ல முடிகிறது” என்று வியந்தார்.
பிரம்மாண்டமான வெளி. அதில் அதோ ஒற்றையாய் ஒரு மரம். மரத்தின் நிழலில் பெஞ்சு ஒன்றில் அமர்ந்திருக்கிறார் கிழவர். அந்த மகா தனிமையில் ஒரு ஓவியக் காட்சி போல் தெரிகிறது அது. அவரது பேரன் ஊரில் இருந்து வந்திருக்கிறான். சிறுவன் தாத்தாவைத் தேடுகிறான். தாத்தா மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறான். சத்தமே போடாமல் அடி மேல் அடி வைத்து அவரது பின்பக்கமாகப் போய், “ஃபூ” என்று சத்தம் கொடுத்தால், சட்டெனத் திரும்பி அவனை அவர் அறைந்த அறை, பல் உடைந்து ரத்தம் வருகிறது அவனுக்கு.
தாத்தாவின் திகிலை இதைவிட எப்படிச் சொல்ல முடியும்?
‘தாத்தாவின் பொய்கள்’ என் கதை முதுமையின் வேறொரு சிக்கலைக் கையாள்கிறது. எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் எழுத்து நடை, சிறு சிறு வாக்கியங்கள் உணர்வுத் தாவலுடன் துள்ளிச் செல்லும் நடை எனக்குப் பிடிக்கும், அந்தப் பாணி நடையில் இதைத் தந்தேன்.
தாத்தா தன் இளம் வயதில் வீட்டுப் பொறுப்பு அற்றுத் திரிந்தவர். பாட்டியின் சாமர்த்தியத்தால் வீட்டுப்பாடு ஓடுகிறது. பாட்டி இறந்து விடுகிறாள். பையன்தான் அப்பாவைப் பார்த்துக்கொள்ள வேண்டி வருகிறது. பையனுக்கு ஒரு ஆண் குழந்தை. சிறுவனுக்குத் தாத்தா மேல் அலாதிப் பிரியம். ஆனால் தாத்தா தான் குடும்பத்தில், முற்காலத்தில் பொறுப்பு எதுவும் சுமக்காமல் இப்போது ஒண்டிக் கொள்வது சார்ந்து சங்கடத்தை குறுகுறுப்பை உணர்கிறார். ஆனால் மகன் தன் பிள்ளையிடம் தாத்தா பற்றி என்ன சொல்லி வைத்திருப்பான், என்றும் அவருக்கு பயமாய் இருக்கிறது. பேரனிடம் தாத்தா தான் ஒரு வீர பராக்கிரம சீலனாக, தன் ‘அந்தக் காலத்துல’ கதையைப் பேசுகிறார். “அப்பா சொல்லியிருக்கார் தாத்தா” என்கிறான் பேரன். திக்கென்கிறது அவருக்கு. அவன்அப்பா என்ன சொல்லி வைத்திருக்கிறானோ தெரியவில்லை. ஒருநாள் பேரன் தன் அப்பா பற்றி, அவர் தனக்குக் குளத்தில் நீச்சல் கற்றுத் தருவதைப் பற்றி உற்சாகமாகப் பேசுகிறான். “உங்க அப்பாவுக்கே நாந்தான் நீச்சல் கத்துக் குடுத்தேன்” என்கிறார் தாத்தா. “அந்தக் குளம் எவ்ளோ பெருசு...” ’‘ஆமா தாத்தா.” ”அதன் இந்தக் கரைலேர்ந்து அந்தக் கரை வரை நான் நீந்துவேண்டா” என்கிறார் தாத்தா.. ’‘ஐயோ நடுவுல சுழி இருக்கே தாத்தா...” தாத்தா சிரிக்கிறார். “ஆமா. அதெல்லாம் எனக்கு விசயமே இல்ல” என்கிறார். மறுநாள் காலை தாத்தா கண் விழித்துப் பார்த்தபோது பேரன் அவர்முன்னால் ஈரம் சொட்டச் சொட்ட நிற்கிறான். “என்னடா?” என்று கேட்கிறார். “இந்தக் கரை முதல் அந்தக் கரை வரை...” என மூச்சிறைக்கிறான். “நீந்திட்டேன் தாத்தா” என சிரிக்கிறான். தாத்தாவுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. அன்று மாலை பேரன் பள்ளி விட்டு வீடு திரும்புகிறான். தாத்தா இல்லை. வீட்டில் தேடிப் பார்க்கிறான். தாத்தா இல்லை. “தாத்தா” என்று கத்திக் கொண்டே ஊரணி நோக்கி ஓடுகிறான் பேரன்.
கடைசிப் பகுதியில், பேரன் ஊரணியை நோக்கி ஓடுதல் - அதிலேயே தாத்தாவின் பொய்கள் பற்றி அவனுக்குத் தெரிகிறது, என்பது அடையாளப் படுத்தப் பட்டிருக்கிறது, அல்லவா?
‘தியாகம்’ படத்தில் தார்க்கோவ்ஸ்கி தொட்ட அந்த முதுமை, அதன் இன்னொரு ‘கான்வாஸ்’ இது.. நல்ல படைப்புகள் அப்படி நம்மை நாமறியாத உயரங்களில் சஞ்சாரம் செய்ய வைத்து விடும்.
3
சில கதைகளை வாசிக்கையில் நாம் அந்த எழுத்தோடு ஓர் எழுத்தாளனாக முரண்படவும் நேர்ந்து விடுகிறது உண்டு. அறம் சார்ந்து ஒரு கவனம் எழுத்தாளனை இயக்கிக் கொண்டே இருக்கிறது. அதுதான் எழுத்தின் நியாயமாகவும் இருக்கலாம். ஏ ஜோக்குகளுக்கு நாம் சிரித்துக் கொண்டே வருவோம். சிலது திடீரென்று “அட இது ஆபாசம்” என நம்மை விலக வைத்துவிடும். நமது மனதின் இயல்புக்கு விழிப்பு வந்தாப் போல அப்படி ஆகிவிடுவது உண்டு.
பிரபஞ்சன் ஒருமுறை ஒரு கதை எழுதியிருந்தார். ஆனந்த விகடனில் வெளி வந்திருந்தது.
மனைவியை இழந்த தனிக்கட்டை ஒருத்தன், அதனாலேயே வாழ்க்கை சார்ந்த எரிச்சலில் இருக்கிறான். அவர்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு கல்யாணம் நடக்கிறது. அந்த வீட்டு மாப்பிள்ளையும் பெண்ணும் கல்யாணம் ஆகி வருகிறார்கள். இவன் தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருக்கிற போது, எதிர்வீட்டில் சன்னல் உள்ளே அந்த ராத்திரியில் வெகு நேரம் விளக்கு எரிவதை சொறிந்துகொண்டே பார்க்கிறான். தான் இப்படி தனியே படுத்துக் கிடக்க, எதிர்வீட்டில் நடக்கிற அமக்களம் அவனுக்குப் பொறுக்க முடியவில்லை, திடீரென்று எழுந்துகொண்டு அவன் “திருடன்! திருடன்!” என்று சத்தம் போடுகிறான்.
இப்படிக் கதை முடிகிறது. இதன் அடுத்த வரி என் மனதில் ஓடியது.
அந்த மாப்பிள்ளை வெளியே ஓடிவந்து இவன் மண்டையில் கட்டையால் ஒரு போடு போடுகிறான்!
ரொம்ப நாள், இந்த வார்த்தை ‘திருடன்’ என்று நள்ளிரவில் சத்தம் கொடுப்பது, என் மனதில் ஓடிக் கொண்டே யிருந்திருக்கலாம். நான் ‘திருட்டு’ என ஒரு கதை எழுதினேன்.
ஒரு வீட்டில் திருடன் ஒருவன் திருடப் போகிறான். அந்த வீட்டில் கணவன் ஊரில் இல்லை. ஆனால் உள்ளே சிரிப்புச் சத்தம் கேட்கிறது. அந்தப் பெண் வேறு யாருடனோ சிரித்தபடி இருக்கிறதைக் கேட்கிறான். திருடன் அந்த வீட்டை வெளியே யிருந்து தாளிட்டு விட்டு, “திருடன் திருடன்” என்று சத்தமிட்டபடியே ஓடுகிறான்.
சில கதைகளின் முடிவு சார்ந்து முரண்பட்டு வேறு கதை என நான் எழுதிப் பார்த்ததும் உண்டு. ஒரு கதையில், எனது வாசிப்பில் ஆசிரியரே சொல்லாத பல விஷயங்கள் நம்மில் அலையடித்து தனியே கதை எனத் தருவதும் உண்டு. ஒரு கதையில் ஒரு வரி என்னை அப்படியே தூக்கி யணைத்துக் கொள்ளும். அந்த வரியின் லாகிரியில் நான் எழுதுவதும் நடந்திருக்கிறது.
நோபல் பரிசு பெற்ற கனடா நாட்டு எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவின் ஒரு கதையை நான் தமிழில் மொழிபெயர்த்தேன். ஓநாய்ப் பண்ணை வைத்திருக்கிற ஒரு குடும்பத்தின் கதை. ஓநாய்களின் தோலை உரித்து விலைக்கு விற்கிற பண்ணைக்காரன். அவன் மனைவி அவனுக்குக் கூட ஒத்தாசை. ஞாயிறுகளில் அவள் சர்ச்சுக்குப் போகையில் நல்ல உடைகள் மாற்றிக் கொள்வாள். மகளின் பார்வையில், அம்மாவுக்குப் பிடித்த ஓர் உடை உண்டு. அதை அணிந்துகொண்டு அம்மா சர்ச்சுக்குக் கிளம்புவாள். அந்த உடை அணிந்து கொள்ளுந் தோறும் அம்மா சந்தோசமாய் இருந்தாள், என ஆலிஸ் மன்ரோ எழுதியதை நான் வெகுவாக ரசித்தேன்.
இந்த ஒற்றை வரியில் ஒரு பெண்ணின் உலகம் பூரணமாய்ப் பொலிகிறதாக நான் நம்புகிறேன். இப்படியே இந்த உணர்வைப் பயன்படுத்தி நான் எழுதிய ஒரு கட்டம், ‘இருள்வட்டம்’ கதையில் உண்டு. ‘அந்திமழை‘ இதழில் வெளிவ்தந கதை. அதே வரிகளில் தரலாம்.
“ஊருக்குப் போகையில் அம்மா எத்தனை அழகாய் இருந்தாள். அலங்காரங்கள் பெண்களுக்கு மெருகு கூட்டுகின்றன. அவர்களின் பெண்மை அப்போது தூக்கிக்காட்டப் படுகிறது. வீட்டில் இருக்கையில் ஒப்பனையில் அலட்சியம் காட்டுகிறார்கள் பெண்கள். வெளியே கிளம்புதல் அவர்களின் எதோ மடையைத் திறந்து விடுகிறது. வெளியிடங்களில், பிறந்த வீடுகளில், புகுந்த வீட்டுப் பெருமைபட நடமாட, அதாவது அங்கே தன் ஆளுமை பற்றி எடுத்துச்சொல்ல, அவர்களுக்குப் பிடிக்கிறது. கல்யாணங்களில் திடீரென வீட்டு வேலைகள் இல்லாமல் உபரி நேரம் நிறையக் கிடைக்கலாகிறது. அவர்கள் அலங்காரம் பண்ணிக்கொண்டு இப்படி அப்படி நடக்கிறார்கள், அழகிப் போட்டி நடக்கிறாப் போல ஒரு பாவனை… அம்மாவின் அழகு என்பது அந்த முக அழகு மட்டுமா? அந்த விடுதலை உணர்ச்சி. புதிய காற்று முகத்தில் பாயும் உற்சாகம் அல்லவா அது?(சிறுகதை இருள்வட்டம்.)
‘பன்னீர்’ என நான் எழுதிய சிறுகதை, அது கூட இதே மன-உலாவலில் கண்டெடுத்த கதைதான். ரொம்ப ஏழையான ஒருவன் ஜவுளிக்கடையில் வேலை செய்கிறான். அவளது பெண்ணின் கல்யாணம் வருகிறது. அதற்கு முதலாளியிடம் எதும் உதவி கேட்க வேண்டும் அவன். சரியான சந்தர்ப்பம் வர  காத்திருக்கிறான். முதலாளி ‘டேமேஜ்’ ஆன பட்டுப் புடவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு அழகான பட்டுப்புடவை. ஓரத்தில் சிறு தையல் பிரிசல். விற்க முடியாது அதை. ஆனால் அந்த இடத்தை உள்ப்பக்கமாக மறைத்துக் கட்டிக் கொண்டால் பார்க்கத் தெரியாது அந்தக் குறை. ஊழியர் வந்து பெண்ணின் கல்யாணம் என்று சொல்கிற போது, அந்த நல்ல பட்டுப் புடவையை முதலாளி அவனிடம் “இதை வெச்சிக்கோ” எனத் தூக்கிக் கொடுத்து விடுகிறார்.
அத்தனை விலையதிகப் புடவையில் கல்யாணத்தில் மணப்பெண், மாப்பிள்ளையை விட, அங்கிருந்த மற்ற எல்லாரையும் விட ஜொலிக்கிறாள். இதுகுறித்து அவளுக்குப் பெருமை என்றாலும் அதில் ஒரு சிக்கல். அதன்பிறகான மற்ற விஷேசங்களில் ஊருக்குப் போகையில் என்று அதைப் பயன்படுத்த முடியவில்லை. அத்னை ஒசத்தியான புடவை அது. பெட்டியிலேயே இருக்கிறது புடவை, ஒரு பெருமையான நினைவுச் சின்னம் போல. பயன்படுத்த வாய்ப்பு கிடைக்காமல்...
அவசியம் நீங்கள் ‘பன்னீர்’ கதை வாசிக்க வேண்டும். சொல்வனம், இணைய இதழில் வெளிவந்த கதை அது.
4
வேறு ஒரு நல்ல படைப்பு, எழுத்தாளனை உறக்கம் மறக்கடித்து, எப்படி யெல்லாம் உள்ளே ததும்பிப் பொங்குகிறது. எனது படைப்புகளையும் நிறையப் பேர் இப்படி பயன்படுத்தியதை நான் வாசிக்கும் போது கவனிக்கிறேன்.
அவர்களைக் குறை சொல்ல மாட்டேன். அது என் பெருமை தான்.
இந்த உலகில் ‘ஒரிஜினல்’ என்று எதுவுமே இல்லை, என்றுகூட ஒரு கருத்து உண்டு. நாம் அறியாமலேயே கூட அதே தளத்தில் வேறொரு எழுத்தாளன் பயணப் பட்டிருக்கவும் கூடும்.
உலகம் ஆச்சர்யங்களின் குவியல்.
“கம்பெனி சீக்ரெட்டை வெளிய சொல்லப்டாதுடா...” என்று ஒரு திரைப்படக் காட்சியில் வடிவேலு. சொன்னாலும் பரவாயில்லை. இது தான் நான், என்பது அல்ல. இதை மீறியும் என் தனித்தன்மை சுமந்த படைப்புகள் என்னைக் காப்பாற்றும்... அந்த நம்பிக்கை, நிமிர்வு எனக்கு உண்டு. என் வாசகர்கள் இதை அறிந்திருக்கிறார்கள், என்பது எனது தீர்மானம்.
*
storysankar@gmail.com
91 97899 87842


Friday, January 11, 2019


part 24

எல்லார்க்கும் பெய்யும் மழை
ஒரு தவறு தவறாக அல்லாமல்
சித்தரிக்கப்படுவது தவறு.

சேர்ந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ மனித சமூகம் தமக்குள் சில ஒழுங்குகளைக் கைக் கொள்கிறது. சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட், பலவான் தாக்குப் பிடித்து நீடிப்பான், மற்றவன் வீழ்ந்து படுவான், என்பது இயற்கை விதி. தனி மனிதனாக வாழும் வரை அது சரியாய் இருந்தது. கூட்டாக, சமுதாயமாக வாழத் துவங்கிய மனிதனின் விதி என வருகிறபோது இதை மாற்றி யமைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இதில் முக்கியப் பங்கு கலை எடுத்துக் கொள்கிறது. கலை மானுடத்தின் ஒத்திசைவை ஒழுங்குகளைக் கொண்டாடி அதை வழிமொழிய வேண்டி யிருக்கிறது. சில ஒழுங்குகளை மறுத்தும் கலை இயங்குவதை நாம் அவதானிக்கலாம். எனினும் அது வேறொரு ஒழுங்கை, இதனினும் மேம்பட்ட ஒன்றை மானுடத்துக்கு வழங்குகிற அந்தக் கலைஞனின் அக்கறையே அல்லவா?
சமூக அக்கறையற்ற படைப்புகள் குப்பைகளாகவே கருதப்படும். மட்டுமல்ல, அது சமுதாயத்துக்கு எதிரானது. வக்கிரங்கள் ஒருபோதும் நம்மை முன்னெடுத்துச் செல்ல உதவப் போவது இல்லை. ஒரு போலிஸ், பிராது கொடுக்க வந்த பெண்ணை வன்புணர்வு செய்கிறார், என்றோ, ஒரு டாக்டர் உடல் பரிசோதனை யறையில் வைத்து பெண் ஒருத்திக்கு மயக்க மருந்து கொடுத்து பின் அவளுக்குப் பாலியல் தொல்லை தருகிறார் என்றோ எழுதுவது தவறாகவே நான் கருதுகிறேன். காவலர் என்றில்லை மருத்துவர் என்றில்லை, எல்லாத் துறைகளிலும் பெண்பித்தர்கள் இருக்கிறார்கள். எங்கே தான் இல்லை? ஆகவே, ஒரு தனித் துறையில், அந்தச் செயலில் ஈடுபட்டவரை நிறுத்திக் கதை சொல்லக் கூடாது. அதை எழுதவே கூடாது, என்பதல்ல செய்தி. அதை எழுதுகையில் எழுத்தாளன் தன் நிலைப்பாட்டையும் வைக்க வேண்டும். வெறும் சித்தரிப்புகள், அவை அந்த வக்கிரத்தை நியாயப் படுத்தும் அளவிலேயே அமைந்து விடுகிறது. தவறு அது. ஒரு தவறு தவறாக அல்லாமல் சித்தரிக்கப்படுவது தவறு. பெண்-வன்புணர்வில் ஈடுபட்ட காவலர், அவர் காவலர் அல்ல, சமூக விரோதி அவ்வளவே. அவரைக் காவலர் எனச் சித்தரிக்க வேண்டாம் என்பது கருத்து. அந்த மருத்துவர் விஷயத்திலும் அவ்வண்ணமே கேட்டுக் கொள்கிறேன்.
PULP FICTION என வருகிற அநேகக் கதைகளில் சமுதாய அக்கறை என்பதே காணக் கிடைக்கவில்லை எனக்கு. வெறும் சுவாரஸ்யத்துக்காக, திடுக் திருப்பங்களுக்காக, சனங்களைப் பதறடிப்பதற்காக, அழ விடுவதற்காக, எதிர்பாராத் திருப்பம் தருவதற்காக சில சம்பவங்களை, காட்சிகளை அவர்கள் எழுதுகிறார்கள். வணிகத் திரைப்படங்களிலும் அப்படித்தான். சட்டென நினைவு வரும் ஒரு ‘கையடக்க’ நாவலில் ஒரு காட்சி. ஒரு பரிசோதனைக் கூடத்திற்குள் வரிசையாக பெரிய பெரிய பாட்டில்களில், புதிதாய்ப் பிறந்த சிசுக்களின் பிணங்கள் அடைத்து வைக்கப் பட்டிருப்பதாக விவரிக்கப் பட்டது. லாபில் ஃபார்மிக் ஆசிட் போட்டு பதப்படுத்திய உடல்கள். புதிதாய்ப் பிறந்த சிசுக்களின் உடல்கள் இப்படி பதப்படுத்தி வரிசையாய் வைக்கப் பட்டிருக்கின்றன. அதைப் பதப்படுத்தி வைத்த கிரிமினலை பிறகு கதாநாயக இன்ஸ்பெக்டர் கைது செய்வாராய் இருக்கும். வாசிக்கவே பதற வைக்கிற காட்சிகளை ரொம்ப சாமர்த்தியமாய்க் கதையில் கொண்டு வந்ததாய் அந்த எழுத்தாளர் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கவும் கூடும்.
ஒரு திரைப்படம் பார்த்தேன். தத்து எடுத்து வீட்டுக்கு அழைத்துவந்த குழந்தையை, கணவன் உடனே திரும்பக் கொண்டுபோய் விட்டுவிடும்படி கண்டிப்பான ஆத்திரத்துடன் மனைவியைத் திட்டுவதாக ஒரு காட்சி. எப்படி யெல்லாம் சிந்திக்க முடிகிறது இவர்களால் என்று அந்தத் திரைப்படம் பார்த்து நான் திகைத்துப் போனேன். பெரும் சுற்றிதழ் ஒன்றில் வந்த கதையில் ஓர் எழுத்தாளர், மாமியார் மருமகள் பிணக்கு பற்றி எழுதுகிறார். மாமியார் கொடுமையாம். மருமகள் தொடை நடுவே வெந்நீரை ஊற்றி விட்டார் மாமியார். இப்படி ஒரு கதை.
மேலே சொன்ன அத்தனை உதாரணங்களும், எனக்கு அதிர்ச்சி அளித்த எழுத்துக்களும், காட்சிகளும் எனக்கு அறிமுகமான நண்பர்களின் செயல்கள் தான். இப்படிச் சொல்லி பதறடித்து, கடைசியில் சில சமயம் அவர்கள் தர்மத்தை நிலை நாட்டுவார்கள். செத்தவன் குடும்பத்துக்கு பென்சன் தர்றதில்லையா, அது போல. அதிலும் கொடுமை சில சமயம் அப்படியே விட்டு விடுவதும் உண்டு. நன்றாக யோசித்துப் பார்க்கையில் ஒரு விஷயம் புலப்படும். அந்தக் காலத் திரைப்படங்களில் கதையில் குடும்பம் வரும். அதில் கூடவே காதல் வரும். காதலைக் கொண்டாடும் திரைப்படம், ஆனால் குடும்ப உறவுகளை அலட்சியப் படுத்தாது. இப்போது குடும்ப உறவுகளே இல்லாமல், காதலை மாத்திரம் பூதாகரமாக்கி படங்கள் வருகின்றன.
ஒரு காலத்தில் திரைப்படக் கதாநாயகன் பலசாலியாக இருப்பான். வில்லனைப் பந்தாடி வெற்றி பெறுவான். காலப் போக்கில் வில்லன்கள் மகா பயங்கரமாக, கொடூரமானவர்களாக, நிதானமாக வசனம் பேசியபடியே வக்கிரமான செயல்கள் செய்கிறார்கள். வில்லன் நடிப்பு சூப்பர்... என்பதாக ரசிகர் பட்டாளம் மகிழவும் செய்கிறது. அத்தனை ஈடுபட்டு சனங்களைப் பார்க்க வைக்கிறதாக திரைப்படங்கள் செயல் படுகின்றன. திரைப்படங்களில் கதநாயகனை விட வில்லன் பாத்திர ஜோடனை அதிக கவனம் எடுத்துக் கொள்ளப் படுகிறது. இது நல்லது அல்ல.
திரைப்படங்களைப் போல வக்கிரங்கள் எடுபடும் இடம் வேறில்லை. ஒரு விதவைப் பெண்ணுக்கு நெற்றியில் குங்குமம் வைக்க வில்லன் நெருங்க அவள் பதறி விலகி “வேண்டாம் வேண்டாம்” என்று கதறுவதாக ஒரு கிளைமாக்ஸ் காட்சி. ஒரு பிரபல இயக்குநரின் திரைப்படம். மாடுகள் மேய்க்கிறவனைப் பழிவாங்கும் காட்சி. அவனது மாடுகள் அருந்தும் தண்ணீரில் விஷத்தைக் கலந்து வைத்து அவைகளைக் குடிக்க வைப்பதாக சம்பவம். அதை இயக்குநர் எப்படி அமைக்கிறார்... மந்தைக்குள் வந்து இடையனைக் கையைக் காலை வாயைக் கட்டிப் போட்டு விடுவார்கள். பிறகு தண்ணீர்த் தொட்டியில் விஷத்தை இடையன் பார்க்கும் போதே கலப்பார்கள். போய் பட்டியைத் திறந்து மாடுகளை வெளியே விடுவார்கள். மாடுகள் உற்சாகமாய் நீர்த் தொட்டிக்கு ஓட - ம்ம்ம் ம்ஹும் என்று தலையாட்டி மறுத்தபடி கட்டுக்களை அவிழ்க்க முடியாமல் உருண்டு உருண்டு பரிதவிப்பான் அவன். அவன் துடிக்க துடிக்க மாடுகள் நீர் அருந்தும்...
ஐயையோ. ஹாலிவுட் பெரு வணிகப் படங்கள் இதைவிட மோசம். திரையரங்க இருளில் பதட்டமாய்ப் பார்க்கவென்றே திகில் காட்சிகளை, வன்முறைகளை விதவிதமாகச் சித்தரித்துக் காட்டுவதில் ஒருத்தரோடு ஒருத்தர் போட்டியே இருக்கிறது அங்கே. திகில் காட்சிகளில் நாம் அமர்ந்திருக்கும் நாற்காலிகளையே போட்டு ஆட்டு ஆட்டு என்று ஆட்டிவைப்பார்கள். சட்டென்று நினைவு வரும் ஒரு சண்டைக் காட்சியின் வக்கிரம். ஒரு சண்டையில் வில்லன் எதிராளி மீது கத்தியை வீசி அவன் முட்டியில் போய் அந்தக் கத்தி செருகிக் கொள்ளும். மேலும் சண்டை தொடர்கையில், வில்லன் சட்டென்று அவன் முட்டிப் பக்கம் குனிந்து செருகப்பட்ட அந்தக் கத்தியைப் பிடித்து முகம் நிறைய வக்கிரத்துடன் இப்படி அப்படி அசைக்க எதிராளி அலறுவதாகக் காட்சி!
தெலுங்குப் படங்களில் இதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். அம்மா பார்வையிலேயே குழந்தையை மரத்திண்டோடு கையில் கட்டி. வில்லன் ஷு போட்ட காலால் குழந்தையின் கையை, விரல்களை மிதித்து அரைப்பான். வில்லன் முகத்தின் வக்கிரக் கொண்டாட்டத்துக்கு க்ளோஸ்-அப். அம்மா துடித்து அலறுவாள்.
போதும்.
2
ஆனால் நல்ல எழுத்து இதற்கு நேர் மாறாக இயங்க வல்லது. தனது வாசகனையும், ஏன் எழுதுகிற நபரையுமே கூட சற்று மேலேடுத்து, மென்மையாக்கி கனிய வைத்து விட வல்லதாய் அது அமைகிறது. எழுத்து தனது தொடர்ந்த பயிற்சியில் மனதை இறுக்கந் தளர்த்தி உழுதாற் போல நெகிழ வைக்கிறது. “இரவில் படுக்கப் போகுமுன், எவ்வளவு மோசமான சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், உனக்கு துரோகமே இழைக்கப் பட்டிருந்தாலும், அந்த சம்பவத்தை மறக்க, அந்த நபரை மன்னித்து விட்டுப் படுக்கப் போங்கள்,” என்பார்கள். மிக முக்கியமான பழக்கம் அது. நம்மைத் தீட்டிக்கொள்ள மேம்படுத்த நமது நெறிகளில் உறுதிப்பட இப்படியாய் எழுத்தும் நமக்கு உதவ வல்லது,
எழுத எழுத அதன் உள்ளே தானே கரைதல் ஆனந்த அனுபவம். புதுமைப்பித்தன் ஒரு கதை எழுதுகிறார். அவர் பணியாற்றி வந்த சுதேசமித்திரன் பத்திரிகையில் சிறிது இடம் காலியாகக் கிடக்கிறது. அந்த இடத்தில் வெளியிட மாலைக்குள் ஒரு கதை தரும்படி அவரைக் கேட்கிறார்கள். உக்கிர வெயில் பொழுது. ‘டிரடில்’ எந்திரம் உள்ளே ஓடும் கடா முடா சத்தங்கள். தலை மேல் மின்விசிறி வெப்பத்தை அறை முழுதும் விசிறுகிறது. அனல் மிக்க அந்த இடத்தில் அமர்ந்து அவசரமாய் ஒரு கதையை சிந்திக்கிறார் புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தனுக்கு ஒரு பெண் குழந்தை. மனோகரி.
தாம்பிரவருணி நதியில் ஒரு சிறு பாறை. அதில் பெண் குழந்தை ஒன்று அமர்ந்திருக்கிறது. அதன் கால்கள் நதிநீரில் மூழ்கி யிருக்கின்றன. ஒரு சிற்றசைவில் குழந்தை காலைத் தூக்குகிறது. கொலுசு அணிந்த அந்தச் சிறுமியின் வெண் பாதம் பளீரென்று நீருக்கு வெளியே வருகிறது. சூரிய ஒளியில் அந்தப் பாதங்களும் கொலுசும் தகதகவென்று பொலிகின்றன. குழந்தை திரும்பவும் காலைக் கீழே நீருக்குள் அமிழ்த்திக் கொள்கிறது. ஆகா கால் உள்ளே சென்றுவிட்டதே. அந்த அழகான பாதங்களை இன்னொரு முறை பார்க்க வாய்க்காதா, என்று சூரியன் நினைக்கிறதாக புதுமைப்பித்தன் ஒரு கற்பனை செய்து, எழுதும்போதே புன்னகை செய்து கொள்கிறார். பிறகு எழுதுகிறார்.
சூரியனானால் என்ன, அந்தச் சிறு குழந்தை திரும்பவும் கால் தூக்க காத்திருக்கத் தானே வேண்டும்?
வெங்கட் சாமிநாதன் தன் விமரிசனத்தில் இந்த வரிகளுக்குச் சொக்கிப் போகிறார். எத்தனையோ ரிஷிகளும் சித்தர்களும் புதுமைப்பித்தன் கையில் வந்து அமர்ந்து அதை எழுத வைத்ததாக அவர் நெகிழ்ந்து சொல்கிறார்.
சென்னையில் அல்லாமல், எங்கோ ஊரில் இருக்கும் தன் மகளை அப்போது அந்தக் கணம் அவர், புதுமைப்பித்தன் மனசில் நினைத்து, அவளுக்கு, மனோகரிக்கு ஒரு முத்தம் தர நினைத்திருப்பாரோ?
இப்படி கதைகள் எழுதப்படுகையில் படைப்பாளனின் மன ஆளுமையினால் சட்டென ஓர் உச்சத்தைத் தொட்டுவிட முடிகிறது. கமலாம்பாள் சரித்திரத்தில் அருமையாய் அமைந்த இதேபோன்ற ஓர் இடத்தை இப்படி நான் சுட்டிக் காட்டி யிருக்கிறேன், வேறொரு பதிவில்.
குழைவான அன்பான மனசு வாழ்க்கையிலேயே இப்படி நற் தருணங்களைத் தருகின்றன. என்னுடன் பணியாற்றும் ஒரு பெண். திருமதி பத்மா சேகர். அவளுக்குக் குழந்தை பிறந்து தன் தாய் வீட்டில் இருந்தாள். மகளுக்கு மூன்று மாதம், குழந்தை நன்றாக முகம்பார்த்துச் சிரிக்க ஆரம்பித்ததில் பத்மாவுக்குப் பரவசம். மடியில் கிடந்து சிரிக்கிற குழந்தையை அப்படியே வாரியணைத்துக் கொண்டு, “என் கண்ணு. என் சமத்து” என்று கொஞ்சியபடி திரும்பினால் அறையின் வாசலில் அவள்அப்பா நின்றிருந்தார். சற்று அதிதமாகப் பரவசப் பட்டுவிட்டாப் போல அவளுக்கே வெட்கம் பூக்க அப்பாவைப் பார்த்தாள். “என்னமோ கல்யாணமே வேண்டான்னியே?” என்று அப்பா சொல்லிவிட்டுப் போனாராம்.
இதை திருமதி பத்மா சேகர் என்னிடம் பரிமாறிக் கொண்டபோது, என் வாழ்க்கை சம்பவம் இதேபோல் ஒன்றை நான் சொன்னேன். குழந்தைகளுடன் இருக்கும்போது நாமும் குழந்தையாகவே ஆகி விடுகிறோம். எனது பெரிய பையன் பிரசன்னாவுக்குப் பேச்சு வந்ததும் நான் அவனுடன் ரொம்ப ஆர்வமாய் உரையாடுவேன். அப்படி அவனோடு பேசிக் கொண்டிருந்த போது என் அக்கா லெட்சுமி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் பார்க்கிறாள் என்று தெரிந்ததும் நான் முகம் பூராவும் (அசட்டுச்) சிரிப்புடன் அவளிடம், “நல்லா பேசறான் இல்லே?” என்றேன். ’‘ஆமாம். உன் பையனாச்சே. உனக்கு அப்பிடித்தான் இருக்கும்” என்றாள்.
The feel of getting trapped!
இப்படி வாழ்வின் தருணங்களை நான் வேளை வரும்போது என் கதைகளில் பயன்படுத்தியும் இருக்கிறேன். நான் என் அக்கா லெட்சுமியிடம் மூக்கில் குத்து வாங்கிய அதே மாதிரியான தருணம். சௌந்தர்ய லகரி, என்று ஒரு சிறுகதை. அண்ணனுக்கு மன நலம் சரியில்லை. அவனுக்குத் திருமணம் முடிக்க லாயக்கில்லை. தம்பிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள். தம்பி தன் அண்ணனின் மன நலம் பற்றி ஏற்கனவே கல்யாணப் பெண்ணிடம் சொல்லி யிருக்கிறான். கல்யாணத்தில் அண்ணன் அப்படியொன்றும் கலாட்டா பண்ணுகிற மாதிரி நடந்து கொள்ளவில்லை. கல்யாணப் பெண் தற்செயலாக அவனைப் பார்த்தபோது அவளது பார்வையும், அந்த அண்ணனின் பார்வையும் சந்தித்துக் கொள்கின்றன. அவனைப் பார்த்தால் அவளுக்கு வித்தியாசம் தெரியவில்லை.
கல்யாண மந்திரங்கள் முடிந்து அவள் மணப்பெண் அறைக்கு வருகிறாள். அவளது உறவினர் பட்டாளம், இளசுகள் அவளைச் சூழ்ந்து கொள்கிறது. “யாருடி அது, மாப்ளைக்கு அண்ணன், பி.எஸ்சி. செகண்ட் இயரோட படிப்பை நிறுத்தினாலும், வளவளன்னு பாடம் பத்தியே பேசி எங்களை அறுத்தெடுத்துட்டாரு” என்கிறார்கள். “சீ பாவண்டி” என்பாள் அவள். கல்யாணப் பெண். “ஆமாமா பாவந்தான். உன் ஹஸ்பென்டோட அண்ணாவாச்சே...” எனக் கேலி செய்துவிட்டு அவர்கள் எழுந்து போய்விடுவார்கள். இப்படி நிறைய உதாரணங்கள் அடுக்கலாம். இப்போதைக்கு இத்தோடு நமது கருதுகோளுக்கு வரலாம்.
3
லா.ச.ரா.வின் ‘குருஷேத்திரம்’ முக்கியமான கதை. பழி பாவங்களுக்கு அஞ்சாத ஒரு திருடன், தான் திருடிய ஒரு மனிதன், அந்தப் பணத்தின் இழப்பைத் தாள முடியாமல் தற்கொலை செய்துகொண்டு, குளத்தில் மிதப்பதைப் பார்த்த கணம், அவன் மனதின் நல்ல தன்மைகளை, நெகிழ்ச்சிகளைத் திரும்பப் பெறும் கணம். பிறகு அவன் வாழ்க்கை எப்படியெல்லாம் நெறிப்படுகிறது, என்பது அதன் தாத்பரியம்.
எனது ஒரு சிறுகதையில் இப்படி ஒரு முயற்சியை நான் கைக் கொண்டது நினைவு வருகிறது. ‘பாறைகளும் நெம்புகோலும்’ என்பது அந்தக் கதை. பாலு மகேந்திராவுக்கு மிகவும் பிடித்து அது அவரது ‘கதை நேரத்தில்’ குறும்படமாக ‘குழந்தை’ என வெளியாகி எனக்கும், அவருக்கும் பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. அதை அவரது 25வது வாரத்தில் தனி அடையாளத்துடன் சன் தொலைக்காட்சியில் வெளியிட்டார். நன்றி பாலு மகேந்திரா.
இரவு நேரங்கழித்து வீடு திரும்புகிறான் அவன். தனது குடியிருப்புப் பகுதியின் தன் தெருவுக்கு முந்தைய தெருவில் அந்த ராத்திரியில் குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு சிசுவின் அழுகைச் சத்தம் கேட்கிறது. தூக்கிவாரிப் போடுகிறது அவனுக்கு. கிட்டே போய்ப் பார்க்கிறான். குப்பைத் தொட்டிக்குள் அழுதபடி கிடக்கிறது குழந்தை. ஐயோ, எனப் பதறுகிறான். யார் இந்தமாதிரிக் காரியம் செய்தது? இரக்கம் இல்லாமல் புதிதாய்ப் பிறந்த சிசுவைக் குப்பைத் தொட்டியில் வீசியது? பெத்தால் வளர்க்க வேண்டும். வளர்க்க வக்கில்லையென்றால் ஏன் பெத்துக் கொள்ள வேண்டும்?... அவனுக்கு ஆத்திரம், கோபம் எல்லாம் வரும். என்றாலும் அந்தக் குழந்தையைக் கையில் எடுத்து தன்வீட்டுக்கு அழைத்துப் போக வேண்டும், என்பதில் தயக்கம். ஒரு மனம் குழந்தைக்கு எதாவது செய், என்னும். இன்னொன்று வேண்டாத வம்பை விலைக்கு வாங்காதே, என எச்சரிக்கும். வீட்டுக்கு வந்து சாப்பிட முடியாமல் திணறுவான். மனதில் அந்தக் குழந்தை. அதை அப்படியே விட்டுவிட்டு வந்ததில் பதற்றம் இன்னும் இருக்கும். அப்போது திடீரென்று வெளியே மழை பெய்ய ஆரம்பிக்கும். துள்ளி அவன் வெளியே ஓடுவான் தெருவில், அந்தக் குழந்தையைத் தேடி. போய்ப் பார்த்தால், குப்பைத் தொட்டியில் குழந்தை இருக்காது- பிறகு... மீதிக் கதையை பாலு மகேந்திராவின் ‘குழந்தை’ குறும் படமாகப் பார்க்கலாம். அல்லது ‘எனது ‘பாறைகளும் நெம்புகோலும்’ கதையை வாசித்து அறிந்து கொள்ளலாம்.
‘குழந்தை’ குறும்படம் யூ டியூபில் காணக் கிடைக்கிறது!
எதற்குச் சொல்ல வருகிறேன். அவனது மனம் அலை பாய்ந்தபடி இருக்கும் போது, திடீரென்று வந்த மழை, ஐயோ குழந்தை நனைந்தால் இன்னும் அதற்கு உடம்புக்கு சிரமப் படுத்துமே, என்கிற அவனது கரிசனம், பதற்றம் அவனை குழந்தையை எடுத்துவர உந்துகிறது, என்பது கதை. எனது கற்பனை தான்.
4
எங்களுக்கு முந்தைய காலங்களில், அறுபது எழுபதுகளில், தமிழ்க் கதையுலகில் ஒரு போக்கு நிலவியது. வாழ்க்கையின் சம்பவங்களை தனி மனித அடிப்படையில் சொல்லாமல் சற்று பரந்து விரிந்த பார்வையுடன் சமுதாயக் கோணத்தையும் சேர்த்து கதை சொல்வது, என்கிற வழக்கம் இருந்தது. கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், லா.ச.ரா., ந. பிச்சமூர்த்தி, க.நா.சு. காலப் பழக்கம் அது.
புதுமைப்பித்தனின் ‘மனித யந்திரம்’ கதை, தான் வேலை பார்க்கும் கடையில் திருடிவிட்டு, மனம் தாளாமல் திரும்ப வந்து முதலாளியிடம் அதைத் தன் கணக்கில் கடனாக வைத்துக் கொள்ளச் சொல்லும் கதை. ஆங்கிலத்தில் ஆர்.கே.நாராயணன் எழுதிய ‘குருட்டு நாய்’ என்கிற கதையும் இதே வகைமைதான். ஒரு குருட்டுப்  பிச்சைக்காரன் அவனுக்கு வழிகட்டி முன்னேபோனபடி அவனை அழைத்துச் செல்லும் நாய். அதை அடித்தும் திட்டியும் அவன் கொடுமைப் படுத்துவான். கொடுமை தாளாமல் நாய் ஒருநாள் ஓடிப் போய்விடும். அவன் நாய் இல்லாமல் திண்டாடிப் போவான். பிறகு இரண்டொரு நாளில் நாய் திரும்ப அவனிடமே வந்துவிடும். திரும்ப அதை உதைத்தும் திட்டியும் வேலை வாங்கியபடியே, அந்த நாய் வழிகாட்ட அவன் பிச்சைக்குப் போவான் என்பது கதை. அவன் குருடன் அல்ல, அந்த நாய்க்கு தான் குருட்டுப் புத்தி, என்று ஆர்.கே.நாராயணன் சொல்கிறார். தாகூரிடமும் இப்படிக் கதைகள் ஒருவேளை கிடைக்கும்.
சமுதாய அறம் பாடும் கதைகள், என்கிற மோஸ்தர் அது. சமுதாயம் காட்டும் நெறிப்பட வாழ்வதை விட்டு விலகி பிறகு வந்து சேர்ந்து கொள்ளுதல், என்கிற பொது சாயல் அந்தக் காலக் கதையின் அடையாளமாகவே இருந்தது. இப்போது அது மாறிப் போனது என்பதும் நமக்குத் தெரிகிறது. என் கதைகள் அப்படியானவை அல்ல, என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
பொதுவான தளத்தின் அம்சங்களுடன் ஆயிரங் கால் மண்டபம் போல நான் எழுதிப் பார்த்திருக்கிறேன். ‘கூட்டம்’ என்கிற என் கதை, தீபத்தில் வெளியானது. ஜனத்தொகைப் பெருக்கத்தில், கூட்டமே பிடிக்காத ஒருவன். எங்கே ஒதுங்கினாலும் அவனுடன் கூடவே பெருங் கூட்டம் இருக்கும். அவனால் தவிர்க்கவே முடியாது. கோவிலுக்குப் போனாலும், காய்கறி மார்க்கெட்டுக்குப் போனாலும், எந்த அலுவலகம் போனாலும் கூட்டம், நெரிசல் அவனுக்கு எரிச்சலைத் தந்தபடி இருக்கும். கூட்டமான பஸ்சை விட்டுவிட்டு அடுத்த பஸ்சில் போகலாம் என ஒவ்வொரு பஸ்சாய்த் தவிர்த்து விட்டு கடைசியில் வேறு வழியில்லாமல் ஒரு நெரிசலான பஸ்சில் முண்டியடித்து ஏறியவன், அந்த நெரிசல் தாளாமல் பாதி வழியிலேயே பஸ்சில் இருந்து குதித்துவிடுவான். என்ன ஆயிற்று அவனுக்கு, என்று வேடிக்கை பார்க்க பெருங் கூட்டம் அவனைச் சூழ்ந்து கொண்டது, என அந்தக் கதை முடியும். (எழுதி எவ்வளவு வருடங்கள் ஆயின!)
இவை முனைந்து நான் எழுதுவது. தவிர பொதுவாக இப்படித் தளங்களை இக்காலத்தில் யாரும் கையாள்கிறார்களா சந்தேகமே.
தி.ஜானகிராமனின் ஒரு கதை எத்தனை தூரம் பயணிக்கிறது, என்று பாருங்கள். கும்பகோணத்தில் அந்த மாமா சாயந்தர வேளையில் ரயில்வே ஸ்டேஷன் பக்கமாக நடந்து வரும்போது எதிரே ஒரு பையனைச் சந்திக்கிறார். அவன்அப்பா அந்தக் காலத்தில் இவருக்கு படிக்க உதவி செய்திருக்கிறார். அவன்அப்பா இப்போது இல்லை. ஆனால் அந்தப் பையன் டெல்லியில் இருக்கிறவன். இங்கே எப்போது ஏன் வந்தான் தெரியவில்லை. “என்னப்பா மணி, (நான் வைத்த பெயர்.) இந்தப் பக்கம்?” என்று அவனை நிறுத்தி விசாரிக்கிறார். ’‘ஆ மாமா. நமஸ்காரம். நல்லவேளை உங்களைப் பார்த்தேன். அம்மாவுக்கு வயசாயிட்டதில்லையா. நம்ம ஊர்ப்பக்கம் போயி ஷேத்திராடனம் பண்ணணும்னு அவளுக்கு ஒரு இது. அதான் கூட்டிண்டு வந்தேன். வந்த இடத்தில் ஒரு அசம்பாவிதம் ஆயிடுத்து. ரயில்ல இருந்து கீழ எறங்கறச்ச சட்னு கால் பிசகி...’‘
“ஐயோ” என்றார் பெரியவர். “ம். அதான் இங்கதான் ஆஸ்பத்திரில சேர்த்திருக்கு. வந்த இடத்ல இப்படி ஆயிப்போச்சு. கைல காசு கிடையாது. ஒரு நூத்தியம்பது ரூபா (அந்தக் காலத்தில் அது பெரிய தொகை.) இருந்தாத் தேவலை. அதான் யோசனையா நடந்து வந்திட்டிருக்கேன்.” அவர் மணியை அழைத்துப்போய் வீட்டில் சாப்பாடு போட்டு கையில் 150 ரூபாயும் தந்தனுப்புகிறார். மறுநாள்ப் போல அவர் அந்த ஊரின் ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரிக்கிறார். அங்கே தர்மாம்பாள் (நான் வைத்த பெயர்) என்ற பெயரில் யாருமே அட்மிட் ஆகவில்லை, என்கிறார்கள். கால் முறிவு என்று எந்த கேசும் வரவில்லை, என்கிறார்கள்.
பெரியவர் டெல்லியில் உள்ள தன்மகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். மணி வந்திருந்ததைப் பற்றிச் சொல்லி, அவன்அம்மா பற்றி அங்கே விசாரிக்க முடியுமானால் நல்லது, கவலையாய் இருக்கிறது, என எழுதுகிறார். ஊரில் இருந்து பதில் வருகிறது. அப்பா, அந்த மணி ஒரு ஃப்ராடு. இங்கே அவன் பண்ணிய குளறுபடிகளால் வேலையை விட்டு அவனைத் தூக்கி விட்டார்கள். அவன்அம்மா இங்கேதான் நலமாக இருக்கிறாள். அவன்தான் எங்கேயோ போய்விட்டான், என்கிறாள். அவன் உன்னிடம் ஒரு பொய்சொல்லி எமாற்றி பணம் வாங்கிக்கொண்டு போயிருக்கிறான்...
அதனால் பரவாயில்லை அப்பா. நீ வருத்தப்படாதே. அவன்அப்பா நம்ம குடும்பத்துக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறார். அது போதும் நமக்கு... என்று முடிகிறது கடிதம். கடிதத்தை வாசித்து முடித்துவிட்டு மிகுந்த திருப்தியுடன் பெரியவர், “என் பையன் பையன்தாண்டி” என்பதாகக் கதையை தி.ஜா. முடிக்கிறார். பிறருக்கும் உதவியாக இருந்த ஒருவரின் மகன் இப்போது இப்படி ஏமாற்றித் திரிகிறான், என்பதன் சோகம் தாண்டி, தன் மகன் தன்னைப்போல பரோபகாரி சிந்தனையில் இருக்கிறான் என பெரியவர் அமைதியடையும் இடத்தில் கதை முடிகிறது.
இதுதான் அந்த கதை-சீஸனின் மோஸ்தர். நிறையப்பேர் இப்படி மானுட தர்மத்தை முன்னிறுத்தி கதைகள் எழுதினார்கள். குறிப்பாக வறுமையில் செம்மை. அப்படி வழக்கம் தன்னைப்போல காலப்போக்கில் உள்வாங்கி விட்டதாகவே நினைத்திருந்தேன். நோக்கம் போக்கும் இந்நாட்களில் எத்தனையோ மாற்றங்களை சந்தித்து விட்டது. ஆனால் ஆச்சர்யகரமாக ஜெயமோகனின் ‘அறம்’ தொகுதி அப்படியான தொரு பரவலான மழைபோல் வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
தொகுப்பில் நான் முரண்பட அநேக விஷயங்கள் இருக்கின்றன. என்றாலும் அது முக்கியமான தொகுதி தமிழுக்கு, என உடன்படுகிறேன். ‘சோற்றுக்கணக்கு’ என அதில் ஒரு கதை. மனிதனில் இருந்து மனிதத்தை மேலெடுத்துக் காட்டுகிற கதை. எலலாருமே நம்மளவில் லௌகிகச் சிறைகளில் தத்தளிக்கிறவர்கள் தாம். பொது நலன் என்பதோ, தான தர்மம் என்பதோ, நியாயம் என்பதோ கூட அப்படி நாம் விரும்பிய அளவில், மனசாட்சிப்படி நம்மால் கைக் கொள்ளப் படுவது இல்லை. இந்நிலையில் மனிதனை மீட்டெடுக்கும் காரியத்தை இலக்கியம் செய்யவேண்டி யிருக்கிறது.
மிகுந்த ஏழைப் பையன். வேறு ஊருக்கு வந்து சொந்தக்காரர் வீட்டில் அடைக்கலம் புகுந்து பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டி யிருக்கிறது. அந்தக் குடும்பத்தலைவிக்கு இது பிடிக்காவிட்டாலும் வேண்டா வேறுப்பாக அவனைக் கூட வைத்துக் கொள்கிறாள். தங்க இடமும் சாப்பாடும் கிடைக்கிறது. இந்நிலையில் அவனுக்குப் பள்ளிக்கூடச் செலவுக்கும் உணவுக்குமே பணம் தேவை என்று வெளியே ஓரிடத்தில் கணக்கு எழுதும் வேலையை மேற்கொள்கிறான் அவன். வேறு இடத்தில் சம்பாதிக்க என அவன் கிளம்பியதும் சட்டென்று அவனது சாப்பாட்டுக்கு அவனைக் காசு தரச் சொல்கிறாள் அந்தப் புண்ணியவதி. காலப்போக்கில் அவன் அந்தக் கணக்கெழுதும் இடத்திலேயே ஜாகை மாற்றிக் கொள்கிறான். படித்து நல்ல வேலை கிடைக்கிறது. இந்நாட்களில் அவனுக்கு கேத்தல் சாகிபு என்கிற ஒருவரின் சாப்பாட்டுக் கடையின் அறிமுகம் கிடைக்கிறது. சாகிபு யார் வந்தாலும் முகம் கோணாமல் உணவளிக்கிறவர். அவர் கை ஒன்றில் சோத்து சிப்பலும், அடுத்த கையில் கரண்டியும் இலையில் சாதத்தைக் கொட்டிக் கொண்டே யிருக்கும். சாப்பிட்டு விட்டு வசதி உள்ளவர் பணம் தரலாம். ஒரு உண்டியல் வைத்திருக்கிறார். அதில் அவரவரால் முடிந்த பணம் சாப்பாட்டுக்கு என்று போடலாம். பணம் இல்லாதவர் போடாமல் போனாலும் அவர் அதை சட்டை செய்வதில்லை.
அவரிடம் பணம் தராமல் சாப்பிட்டே தனது பெரும் வாழ்நாட்களை அவன் கழிக்க நேர்கிறது. இது குறித்து அவனுக்குத் தன்மீதே எரிச்சல் உண்டு. அவரையும் அதனால் பழித்துக் காட்டிப் பேசுகிறான். படித்து முடித்து நல்ல வேலை என அமர்கையில், அவனுக்கு அடைக்கலம் கொடுத்தவள், இந்நாட்களில் குடும்ப வறுமை மேலும் அதிகமாகி திணறிக் கொண்டிருப்பவள், தான் அவனுக்கு ஒரு காலத்தில் செய்த உதவியைச் சுட்டிக்காட்டி தனது மகளை அவன் மணந்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்கிறாள்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்றோ எப்போதோ செய்த உதவியைக் காட்டிக் காட்டி தன்னிடம் நெருக்கடிகள் தந்து சாமர்த்தியமாக தன் காரியம் பார்த்துக் கொள்ளும் அவளைப் பற்றி அவன் சிந்திக்கிற ஒரு நொடியில் தான், அவனுக்கு சாகிபின் பரந்த மனம் ஒரு ஒப்புமை போல மனதில் விரிகிறது. சாகிபின் கருணை ஒரு வெள்ளம் போல அவனது அழுக்குகளை, கறைகளைக் கரைக்கிறது. ஒரு வீடு வாங்கும் அளவு பணம் ஜிபிஎஃபில் இருந்து எடுத்து வைத்திருந்தான் அவன். அதுவரை சாகிபிடம் சாப்பிட்டதற்கு என அவன் உண்டியலில் பணம் போட்டதே இல்லை. சாகிபு அதைப் பற்றிக் கவலைப் பட்டதே யில்லை. அவன் பணம் தரவில்லை என்பதற்காக அவனை மறுநாள் எழுப்பி விட்டதும் இல்லை, உபசரிப்பில் அலட்சியம் செய்ததே இல்லை. ஒரே வேகத்தில் வந்து தனது சேமிப்புப் பணம் அத்தனையையும் அவரது உண்டியலில் போடுகிறான் அவன். போட்டுவிட்டு சாகிபுவைப் பார்க்கிறான். அவர் அவன்பக்கம் திரும்பி என்ன செய்கிறான் என்று பார்க்கவேயில்லை. யாரோ ஒருவரை உபசரிப்பதில் அவர் அப்போதும் கவனமாய் இருக்கிறார். இப்படி ஏழைப்பட்ட எத்தனை பேரை அவர் உயர்த்தி விட்டிருப்பரோ, அவரிடம் கணக்கு கிடையாது. அவர் கணக்கு வைத்துக் கொள்ளவும் மாட்டார்.
கதைசார்ந்த விழுமியங்களை உணர இதை வாசிக்கும் மனசு தானே முன்வரும். வெகு நாட்களுக்குப் பறிகு ஒரு பழைய மோஸ்தர் கதையை வாசிக்கிற பாவனையும், அதன் வாசனையும் அருமை. நல்ல படைப்பு எழுதுகையில் படைப்பாளனின் உள்ளே பூத்து மணம் வீசுகிறது. அது வாசிக்கிற சாமானியனை மேலும் உன்னதங்களுக்கு அழைத்துச் செல்ல வல்லதாயும் அமைகிறது. சாமானிய மனிதன் நல்ல தன்மைகளை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்த சமுதாய மேன்மையைக் கருத்தில் கொண்டு அப்படிப் படைப்புகள் கால காலத்துக்கும், ஓர் அபூர்வ கணத்தில் படைப்பாளர்களால் கண்டடையப் படுகிறது. ஒரு தவம். அதுதரும் சித்தி. அதன் பயனாக வாசகர்கள் பெறும் வரம்.
ஜெயமோகனின் இந்த ‘சோற்றுக் கணக்கு’ கதையில் கடைசிவரை அன்னதானம் செய்வதைப் பண்பாகக் கொண்டவர் தாழ்வே வராமல் காட்டப் படுகிறார் என்பது ஒன்று. அந்த உறவுக்காரப் பெண்மணி... தன் வறுமையில் அதிருப்தி அவளுக்கு. பணம் பணம் என்கிற உள்அலைச்சல். கடைசிவரை அவள் அப்படியான ஏக்க வாழ்க்கையே வாழ நேர்ந்து விடுகிறது. அதையும் கவனிக்க வேண்டும்.
‘நீலமலைத் திருடன்’ என்ற திரைப்படம். பெயர் சரியாகச் சொல்கிறேன், என நினைக்கிறேன். கதை இதுதான். காட்டில் மறைந்து வாழும் ஒரு திருடன். ஒரு சந்நியாசியைக் காட்டில் சந்திக்கிறான். ஒரு வேடிக்கை போல அவன் அவரிடம், நான் கைக்கொள்ளும் எளிய வாழ்க்கை முறை ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள், என்று வேண்டுகிறான். இன்றிலிருந்து பொய் சொல்லாதே, என்கிறார் துறவி. அவ்வளவு தானே, சுலபமான விஷயம் தான், நான் அப்படியே நடந்து கொள்கிறேன், என்கிறான் திருடன். பிறகு அரசனின் சிப்பாய்களிடம் மாட்டிக் கொள்கிறான். அரச சபையில் அரசன் அவனிடம் ’‘நீ யார்?” என்று கேட்டபோது “நான் ஒரு திருடன்” என்று ஒப்புக் கொள்கிறான். கிடைக்கும் தண்டனை அவனுக்கு வருத்தமாகவே இல்லை, என ஆச்சர்யத்துடன் அவன் உணர்கிறான். இப்படி படிப்படியாக அவனது மனசின் மாற்றங்கள் அருமையாக அந்தத் திரைப்படம் சொல்லும்.
ஒரு கெட்ட பழக்கம், மற்றொன்று மற்றொன்று என அநேக கெட்ட பழக்கங்களைக் கொண்டுவரும், என்கிற கருதுகோளுக்கு நேர் எதிர்த் திசையில் எவ்வளவு அழகாக இந்தக் கதை புனையப் பட்டிருக்கிறது. லா.ச.ரா.வின் ‘குருஷேத்திரம்’ கதையை இதனோடு வைத்துப் பார்க்கவும் முடியும்.
அடாடா. எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ பார்த்தது உண்டா? என்ன அற்புதமான படைப்பு.
PULP FICTION காலத்தில் இலக்கியத்தை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. வாசகன் தேடிக் கண்டடைய வேண்டும். ஆய்ந்து தெளிதல் வேண்டும். நல் இலக்கியங்கள் அவனுக்குக் காத்திருக்கின்றன.
**

storysankar@gmail.com
91 97899 87842 / 94450 16842