
part 25 / artist kamal koria
மழை
சொட்டும்
மரங்கள்
எஸ்.சங்கரநாராயணன்
எல்லா எழுத்தாளனும்
நல்ல வாசகனே. தனது எழுத்தின் மேம்பட்ட வாசகனே. தான் உயரவும், தன் படைப்பை மற்ற படைப்பில்
இருந்து தனித்து நிறுத்தவும், மேம்படுத்தி அல்லது குறைந்தபட்சம் வித்தியாசப் படுத்திக்
காட்டிக் கொள்ளவும் அவன் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பிற எழுத்தாளர்களை வாசிக்காமல்
அவன் அதை எப்படி முடிவு செய்ய முடியும்? அத்தோடு, தான் தன்னளவில் தன்னை, தன் ரசனையை,
தன் எழுத்தின் சூட்சுமங்களை, எழுத எழுத அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வது போலவே,
வாசிப்பில் இருந்தும் பயன் பெற்றுக்கொள்ள முடியும்.
முன்பே பலமுறை சொன்னது
போல, ஒரு நல்ல கதை, ஆகா எனத் திகட்டுகிறது வாசிக்கையில். நம்மை ரொம்ப நேரம் அதன் சூழலில்,
அதில் நம்மைக் கவர்ந்த ஏதோவொன்றில், அதன் நடையாய் இருக்கலாம், அதன் கருப்பொருளாய் இருக்கலாம்,
அது சொல்லப்பட்ட உத்தியாய் இருக்கலாம், அதன் உவமைநயங்களாய் இருக்கலாம், அது சார்ந்திருக்கிற
கருத்தாய், தத்துவமாய் இருக்கலாம்... ஏதோவொன்று நம்மை மயக்குகிறது அதில். அந்த ஒரு
விஷயத்தில் நாம் கட்டப்பட்டு விடுகிறோம். ஒரு படைப்பாளன் அப்படிப் படைப்பை இரு கையால்
ஏந்தி, ஒரு குழந்தையைப் போல அதைக் கொண்டாடுகிறான். இதில் பொறாமை வராது. வரக்கூடாது.
எந்த வீட்டுக் குழந்தையானால் என்ன, குழந்தைகள் எல்லாமே அழகு தானே...
சிலசமயம் ஒரு நல்ல
படைப்பைப் படித்த வீர்யத்தில், வாசித்த படைப்பாளனுக்கு உடனே எதாவது எழுதப் பரபரத்து
விடுகிறது. தான் ரசித்து வாசித்த படைப்பின் ‘அதே’ உயரத்தை எட்டிவிடும் வேகம் தான் அது.
அந்தப் பரபரப்பின் விளைவுகள் பலவிதமாக அமைகின்றன. அதில் ஓர் எளிய நிலை, அந்தப் படைப்பு
போலவே முகஜாடை, நடை உடை பாவனைகளைக் கூட மாற்றாமல் சில படைப்புகள் அவசரமாய்த் தெறித்து
விடும். மர்மக்கதைகள் என சுஜாதா தந்த அநேகக் கதைகள் அப்படி அமைந்திருப்பதைக் காணலாம்.
செமி ஆபாச நடை என்று தனியே அவர் அடையாளம் இருந்தது, தப்பித்தார். ஒருவகையில் இது ‘நகல்’
என்றே சொல்லிவிடலாம். ஆனால் வேண்டாம், ஏனெனில்...
எனெனில், நானே சில
நகல்களின் சொந்தக்காரன்! இங்கே அதைப் பற்றியும் கொஞ்சம் பேசத் தான் போகிறோம்.
இன்னொரு பகுதியில்
ம.ந.ரா. ‘புதுப்புனல் விருது’ பெற்ற போது அவர் பற்றி நான் உரையாற்றிய தகுதியுரையை வாசித்திருக்கலாம்.
அதில் வரும் ம.ந.ரா. சிறுகதை ‘கதை உலகில் ஒரு மேதை’ கதையும் இங்கே நினைவுகூரத் தக்கது!
முந்தைய ஒரு பதிவில்
சொன்னது போல, (முகாம்கள் பாசறைகள்), ஒரு ஜெர்மானியக் கதை. அதை விளக்கலாம் இப்போது.
ஜெர்மெனியின் ஒரு புகழ்பெற்ற நதி. அதன்மேலான புகழ்பெற்ற பாலம். அந்த நதியையும் அதன்
மேல் பாலத்தையும் அழகாய் ஓவியமாய் வடித்த ஓர் ஓவியன். கதைப்படி அந்தப் பகுதி எதிரிகளால்
கைப்பற்றப் பட்டு விடுகிறது. எதிரி நாட்டு ராணுவ வீரன் ஒருவன். அவன் ஒரு ஓய்வு நடையில்
அந்தப் பகுதிக்கு வந்தபோது அங்கே நிற்கிறான். அந்த ஆற்றையும் அந்தப் பாலத்தையும் பார்க்கிறான்.
ஆகா இந்த இடம் எனக்கு ஏற்கனவே பரிச்சயமானதைப் போல் இருக்கிறதே, என நினைக்கிறான். ஆம்.
இதை ஓர் ஓவியமாகப் பார்த்திருக்கிறேன், எனக் கண்டடைகிறான். யார் அந்த ஓவியன், என அவன்பெயரை
தன் நினைவு வளாகத்துக்குள் தேடுகிறான். சட்டென்று அந்தப் பெயர் நினைவில் வரவில்லை.
எதிரி நாட்டு ராணுவ
ட்ரக் அங்கே வந்து நிற்கிறது. அவனை விசாரிக்கிறது. “யார் நீ? இங்கே ஏன் நிற்கிறாய்?”
அவன் தானும் அவர்களில் ஒருவன் என, தன் அடையாள அட்டையைக் காட்ட நினைக்கிறான். பார்த்தால்
அவனது பர்ஸ் எங்கோ தொலைந்து போய் விட்டது. வந்த அதிகாரிகள் அவனை நம்ப மறுக்கிறார்கள்.
அந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்ள என்று அவனுக்குப் புரியவில்லை. அவர்களின் விசாரணைக்கு
அவன் அளிக்கும் பதில்கள் அவர்களைத் திருப்தியுறச் செய்யவில்லை. இத்தனை நெருக்கடிகளுக்கு
மத்தியில், அவனை அவர்கள் ட்ரக்கில் ஏற்றுகையில்... சட்டென அவன் நினைத்துக் கொள்கிறான்,
“ஆ அந்த ஓவியன் வான்கோ!” கதை அத்தோடு முடிகிறது, அந்த வரியுடன்.
அசோகமித்திரன் ஒரு
கதை எழுதுகிறார். பீச்சிலேயோ எங்கேயோ, நடந்து போய்க் கொண்டிருக்கும் போது கதாநாயகன்,
ஒரு வேர்க்கடலை விற்கும் வண்டியை நிறுத்தி ஒரு பொட்டலம் வேர்க்கடலை வாங்குகிறான். அந்தப்
பொட்டலம் சுற்றிய காகிதத்தை வாசிக்கிறான். அதில் ஒரு கவிதை இருக்கிறது. ஆனால் பாதிக்
கவிதை தான் இருக்கிறது. அதை எழுதிய கவிஞன் பெயர் அதில் இல்லை. அவனுக்குத் தெரிந்த கவிதையாகத்
தான் தோன்றுகிறது அந்தக் கவிதை. அந்தக் கவிஞனின் பெயர் சட்டென அவனுக்கு ஞாபகம் வரவில்லை.
கதையில் அடுத்தடுத்து சம்பவங்கள். கதை முடியும் கட்டத்தில் சட்டென்று அவனுக்குப் பொறி
தட்டுகிறது. “ஆ அந்தக் கவிஞர் க.நா.சு.” சுபம்.
அதே ஃபில்டரில் மிச்சம்
இருந்த டிகாஷனில் கலந்த காபி என்று இதைச் சொல்லலாம் அல்லவா.
ஜாடை இருந்தாலும்,
ஜான் அப்டைக்கின் இந்தக் கதையில், அந்த உத்தி மாத்திரமே இருக்கிறதாக நான் நினைக்கிறேன்.
உத்திகள் யாருக்கு வேண்டுமானாலும் ஒரே மாதிரித் தோன்றக் கூடும்.
கணவனும் மனைவியும்
காரில் போய்க் கொண்டிருக்கிறார்கள். சற்று வெடுக் வெடுக்கென்று பேசும் மனைவி. எதையும்
மூர்க்கமாக மறுத்தோ கோபமாக முரண்பட்டோ வெளிப்படுத்தாத சாதுவான கணவன். வண்டி போய்க்
கொண்டிருக்கையில் பழைய விஷயம் எதோ பேசுகிறார்கள். நாலைந்து வருடம் முன்னால் அவர்கள்
டூர் போனபோது ஒரு விடுதியில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றிப் பேச்சு வருகிறது. அவன்
ஒரு நபரைக் குறிப்பிடும்போது, ’‘ஆமாம் நீங்க அவன்கூடப் போயி சண்டை போட்டீங்க. அவன்
சிவப்புச் சட்டை போட்டிருந்தான்...” என்கிறாள் அவள். அவனோ “இல்லை. நீலச் சட்டை...”
என்கிறான். அவள் உறுதியாக மறுத்து, “சிவப்புச் சட்டை தான். உங்களுக்கு எப்பவுமே ஞாபகசக்தி
கம்மி” என்று சிரிக்கிறாள். அது சுருக்கென்றிருக்கிறது அவனுக்கு. அவளே உற்சாகமாகத்
தன் நினைவாற்றலை நிரூபிக்கிற விதமாக “அவன் பேர்கூட என்னவோ ஜிக்ஸ்னு வரும்” என்கிறாள்.
அவனுக்கும் அந்த மனிதனின் பெயர் தெரியவில்லை. அப்படியே பேச்சு தாவித் தாவி வேறு வேறு
விஷயங்களுக்குப் போகிறது. “இப்படித்தான் எங்க ஊர்ல...” என அவள் ஆரம்பிக்கும்போது, அவன்
முகம் சட்டென்று மலர்கிறது. “அவன் பேர் வால்டர் பிரிக்ஸ்” என்கிறான்.
இந்தக் கதையில் ஒரு
ஈகோ பிரச்னை கதையின் தன்னடையாளமாக அமைகிறது அல்லவா? அப்டைக் இந்த ஜெர்மானியக் கதையை
வாசித்திருக்கலாம், வாசிக்காமலும் இருக்கலாம். இன்னும் வேடிக்கையாய்ச் சொன்னால், எது
முன்னால் எழுதப்பட்ட கதை என்பது கூட மாறுபடலாம். அப்போது ‘போலச் செய்தது’ இதுவா அதுவா
என்றும் கேள்வி புறப்படும்!
நானும் இதையெல்லாம்
கவனித்ததால், என் பார்வை வட்டத்துக்குள் வந்ததால் இதையெல்லாம் பகிர நேர்ந்தது.
சரி. இப்போது என்
விஷயம். ஹெச். ஈ. பேட்ஸ் எனக்குப் பிடித்த இங்கிலாந்து எழுத்தாளர். என் மொழிபெயர்ப்பில்
அவரது 'GO LOVELY ROSE' சிறுகதை தமிழில் வந்திருக்கிறது. அருமையான கதை. என் மொழிபெயர்ப்பு
முயற்சிகள் பற்றி தனியே இன்னொரு புராணம் வைத்துக் கொள்ளலாம்.
ஹெச். ஈ. பேட்சின்
ஒரு கதை. ஒரு கட்டட வடிவமைப்பு நிபுணன். அவனது வடிவமைப்புத் திறன் பார்த்து வியந்து
அவனை நெருங்கிவந்து காதலித்து ஒருத்தி அவனை மணம் செய்து கொள்கிறாள். இப்படிப்பட்ட ஒரு
பெண், தனது திறமையைப் பார்த்துக் காதலித்தவள் மனைவியாய் அமைந்தது குறித்து அவனுக்கு
ஒரே மகிழ்ச்சி. அவளுக்காகவே பிரத்யேகமான கவனத்துடன் ஒரு வீடு கட்டுகிறான் அவன். அவளை
அழைத்துவந்து ஒருநாள் அதைக் காட்டுகிறான். “வெரி குட். நீங்க இதுவரை வடிவமைச்சதிலேயே
பெஸ்ட் இதுதான்” என்றவள், கூடவே “நல்ல விலை கிடைக்கும் இதுக்கு” என்கிறாள்.
எனது கதை ‘வித்யாசாகரின்
ரசிகை.’ மாடர்ன் ஆர்ட் முறைப்படி சிக்கலான ஓவியங்கள் வரைகிற ஓர் ஓவியன். அவனது அறிவுஜீவி
நண்பன் ஒருவன். இருவரும் காதல் என்பது, அதைவிடக் கல்யாணம்... ஒரு கலைஞனின் கற்பனை ஒளியை
மங்கச் செய்துவிடும், என்று முன்பு பேசிக் கொண்டவர்கள். வித்யாசாகரின் ஓவிய நுட்பங்களை
யெல்லாம் சரியாக அடையாளங் கண்டுகொண்டு அவனைப் பாராட்டி கை குலுக்கி நட்பு கொண்டு பிறகு
காதலித்து அவனது மனைவியாகி விடுகிறாள் ஒருத்தி. இனிமேல் உன் கலைப் பங்களிப்பு இறங்குதிசை
தான், எனக் கேலி பேசும் நண்பன். ஆனால் தனது ஓவியங்களை வருகிறவர்களிடம் விளக்கிச் சொல்லி
நல்ல விலைக்கு அவளால் விற்க முடிகிறது, என்றும், நான் வேலை செய்கிறவன், விற்பனை என்
கவனத்தைச் சிதறடிக்க அவள் அனுமதிப்பது இல்லை, அது எனக்கு விடுதலை, விற்பனை சமாச்சாரத்தை
அவள் பார்த்துக் கொள்வதால், நான் மேலும் உற்சாகமாக என் வேலையில் ஈடுபட முடிகிறது, என்றெல்லாம்
தன் வாழ்க்கையை உயர்த்திப் பிடிக்கிறான் வித்யாசாகர். சற்றே பொறாமையுடன் அந்த நண்பன்
அவன் விட்டுக்கு வருகிறான். அவன் வீட்டு வரவேற்பறையில் வித்யாசாகரின் சுமாரான ஓவியங்களையே
பார்க்க முடிகிறது. ஏன் இப்படி, என்று நண்பன் கேட்கிறான். “நல்ல படங்களை அவ வித்துருவா”
என்கிறான் வித்யாசாகர்.
இதில் நான் கலைஞர்கள்
லொளகிக வாழ்க்கை வாழ விரும்புவது இல்லை... என்கிற விவாதத்தைப் பாடுபொருளாக்கி யிருக்கிறேன்
அல்லவா? எப்படி அப்டைக் ‘ஈகோ’வை முன்னிறுத்தி அதே உத்தியைப் பயன்படுத்தினார், அதைப்
போல.
இல்ல, இது ஹெச்.
ஈ. பேட்சின் கதை தான், என்று நீங்கள் சொன்னாலும் சரியே!
தமிழின் மிகப் பிரபலமான
எழுத்தாளர்களின் நிறையக் கதைகளை, அதன் மூல வடிவத்தை ஆங்கிலத்தில் வேறு எழுத்தாளர்களின்
கதைகளாக நான் வாசித்திருக்கிறேன். என் பிறவி இந்த மாதிரி விஷயங்களை மோப்பம் பிடிக்கிறதாக
ஆகி விட்டது. தேவை இல்லை, என்பது அல்ல, எனக்கே தேவைப் படுகிறதே!
2
முகாம்கள் பாசறைகள்,
கட்டுரையில் இன்னொரு ‘கதை பாதிப்பு’ பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். தார்க்கோவ்ஸ்கியின்
‘தியாகம்’ திரைப்படத்தின் பாதிப்பில் நான் எழுதிய கதை ‘தாத்தாவின் பொய்கள்.’ தார்க்கோவ்ஸ்கி
உலகத்தின் சிறந்த பத்து இயக்குநர்களில் ஒருவர். ‘தியாகம்’ ஒரு கிழவரின் தனிமையைப் பரத்திப்
பேசுகிறது. யாரோடும் ஒட்டாத ஓடு கழன்ற புளியம்பழ வாழ்க்கை. எதிலுமே ஆர்வம் இல்லை. அவரது
வேகம் வற்றி விட்டது. தனிமை, மகா தனிமை சூழ்ந்து கொண்டது அவரை. அந்த ‘உதடு அமுக்கப்பட்ட’
உம்மென்ற இறுக்கத்தை என்னமாய்ச் சொல்கிறார் தார்க்கோவ்ஸ்கி. இது தவிர அடிமனதில் அவருக்கு,
கதாநாயகருக்கு சாவு பற்றிய பயம். திடீரென்று அது அவர் முன் குதிக்கலாம் என்ற அச்சம்.
எல்லாம் முடிந்து விட்டது. இனி சாவு தானே எனக்கு பாக்கி? ஆகவே அதை நோக்கி நான் நடந்து
கொண்டிருக்கிறேன், என்ற அச்சம். திகில் இருக்கிறது அவருக்கு.
இதையெல்லாம் இப்படி,
எழுத்தில் அல்ல, காட்சியில் கொண்டுவர வேண்டும்.
உலகத்தின் சிறந்த
இன்னொரு இயக்குநர் இங்மர் பெர்க்மென், தார்க்கோவ்ஸ்கியின் படங்களைப் பார்த்து விட்டு,
“அட சில விஷயங்களை ஃப்ரேமில் சொல்ல முடியாது என நினைத்திருந்தேன். இவரால் சொல்ல முடிகிறது”
என்று வியந்தார்.
பிரம்மாண்டமான வெளி.
அதில் அதோ ஒற்றையாய் ஒரு மரம். மரத்தின் நிழலில் பெஞ்சு ஒன்றில் அமர்ந்திருக்கிறார்
கிழவர். அந்த மகா தனிமையில் ஒரு ஓவியக் காட்சி போல் தெரிகிறது அது. அவரது பேரன் ஊரில்
இருந்து வந்திருக்கிறான். சிறுவன் தாத்தாவைத் தேடுகிறான். தாத்தா மரத்தடியில் அமர்ந்திருப்பதைப்
பார்க்கிறான். சத்தமே போடாமல் அடி மேல் அடி வைத்து அவரது பின்பக்கமாகப் போய், “ஃபூ”
என்று சத்தம் கொடுத்தால், சட்டெனத் திரும்பி அவனை அவர் அறைந்த அறை, பல் உடைந்து ரத்தம்
வருகிறது அவனுக்கு.
தாத்தாவின் திகிலை
இதைவிட எப்படிச் சொல்ல முடியும்?
‘தாத்தாவின் பொய்கள்’
என் கதை முதுமையின் வேறொரு சிக்கலைக் கையாள்கிறது. எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் எழுத்து
நடை, சிறு சிறு வாக்கியங்கள் உணர்வுத் தாவலுடன் துள்ளிச் செல்லும் நடை எனக்குப் பிடிக்கும்,
அந்தப் பாணி நடையில் இதைத் தந்தேன்.
தாத்தா தன் இளம்
வயதில் வீட்டுப் பொறுப்பு அற்றுத் திரிந்தவர். பாட்டியின் சாமர்த்தியத்தால் வீட்டுப்பாடு
ஓடுகிறது. பாட்டி இறந்து விடுகிறாள். பையன்தான் அப்பாவைப் பார்த்துக்கொள்ள வேண்டி வருகிறது.
பையனுக்கு ஒரு ஆண் குழந்தை. சிறுவனுக்குத் தாத்தா மேல் அலாதிப் பிரியம். ஆனால் தாத்தா
தான் குடும்பத்தில், முற்காலத்தில் பொறுப்பு எதுவும் சுமக்காமல் இப்போது ஒண்டிக் கொள்வது
சார்ந்து சங்கடத்தை குறுகுறுப்பை உணர்கிறார். ஆனால் மகன் தன் பிள்ளையிடம் தாத்தா பற்றி
என்ன சொல்லி வைத்திருப்பான், என்றும் அவருக்கு பயமாய் இருக்கிறது. பேரனிடம் தாத்தா
தான் ஒரு வீர பராக்கிரம சீலனாக, தன் ‘அந்தக் காலத்துல’ கதையைப் பேசுகிறார். “அப்பா
சொல்லியிருக்கார் தாத்தா” என்கிறான் பேரன். திக்கென்கிறது அவருக்கு. அவன்அப்பா என்ன
சொல்லி வைத்திருக்கிறானோ தெரியவில்லை. ஒருநாள் பேரன் தன் அப்பா பற்றி, அவர் தனக்குக்
குளத்தில் நீச்சல் கற்றுத் தருவதைப் பற்றி உற்சாகமாகப் பேசுகிறான். “உங்க அப்பாவுக்கே
நாந்தான் நீச்சல் கத்துக் குடுத்தேன்” என்கிறார் தாத்தா. “அந்தக் குளம் எவ்ளோ பெருசு...”
’‘ஆமா தாத்தா.” ”அதன் இந்தக் கரைலேர்ந்து அந்தக் கரை வரை நான் நீந்துவேண்டா” என்கிறார்
தாத்தா.. ’‘ஐயோ நடுவுல சுழி இருக்கே தாத்தா...” தாத்தா சிரிக்கிறார். “ஆமா. அதெல்லாம்
எனக்கு விசயமே இல்ல” என்கிறார். மறுநாள் காலை தாத்தா கண் விழித்துப் பார்த்தபோது பேரன்
அவர்முன்னால் ஈரம் சொட்டச் சொட்ட நிற்கிறான். “என்னடா?” என்று கேட்கிறார். “இந்தக்
கரை முதல் அந்தக் கரை வரை...” என மூச்சிறைக்கிறான். “நீந்திட்டேன் தாத்தா” என சிரிக்கிறான்.
தாத்தாவுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. அன்று மாலை பேரன் பள்ளி விட்டு வீடு திரும்புகிறான்.
தாத்தா இல்லை. வீட்டில் தேடிப் பார்க்கிறான். தாத்தா இல்லை. “தாத்தா” என்று கத்திக்
கொண்டே ஊரணி நோக்கி ஓடுகிறான் பேரன்.
கடைசிப் பகுதியில்,
பேரன் ஊரணியை நோக்கி ஓடுதல் - அதிலேயே தாத்தாவின் பொய்கள் பற்றி அவனுக்குத் தெரிகிறது,
என்பது அடையாளப் படுத்தப் பட்டிருக்கிறது, அல்லவா?
‘தியாகம்’ படத்தில்
தார்க்கோவ்ஸ்கி தொட்ட அந்த முதுமை, அதன் இன்னொரு ‘கான்வாஸ்’ இது.. நல்ல படைப்புகள்
அப்படி நம்மை நாமறியாத உயரங்களில் சஞ்சாரம் செய்ய வைத்து விடும்.
3
சில கதைகளை வாசிக்கையில்
நாம் அந்த எழுத்தோடு ஓர் எழுத்தாளனாக முரண்படவும் நேர்ந்து விடுகிறது உண்டு. அறம் சார்ந்து
ஒரு கவனம் எழுத்தாளனை இயக்கிக் கொண்டே இருக்கிறது. அதுதான் எழுத்தின் நியாயமாகவும்
இருக்கலாம். ஏ ஜோக்குகளுக்கு நாம் சிரித்துக் கொண்டே வருவோம். சிலது திடீரென்று “அட
இது ஆபாசம்” என நம்மை விலக வைத்துவிடும். நமது மனதின் இயல்புக்கு விழிப்பு வந்தாப்
போல அப்படி ஆகிவிடுவது உண்டு.
பிரபஞ்சன் ஒருமுறை
ஒரு கதை எழுதியிருந்தார். ஆனந்த விகடனில் வெளி வந்திருந்தது.
மனைவியை இழந்த தனிக்கட்டை
ஒருத்தன், அதனாலேயே வாழ்க்கை சார்ந்த எரிச்சலில் இருக்கிறான். அவர்கள் வீட்டுக்கு எதிர்
வீட்டில் ஒரு கல்யாணம் நடக்கிறது. அந்த வீட்டு மாப்பிள்ளையும் பெண்ணும் கல்யாணம் ஆகி
வருகிறார்கள். இவன் தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருக்கிற போது, எதிர்வீட்டில் சன்னல்
உள்ளே அந்த ராத்திரியில் வெகு நேரம் விளக்கு எரிவதை சொறிந்துகொண்டே பார்க்கிறான். தான்
இப்படி தனியே படுத்துக் கிடக்க, எதிர்வீட்டில் நடக்கிற அமக்களம் அவனுக்குப் பொறுக்க
முடியவில்லை, திடீரென்று எழுந்துகொண்டு அவன் “திருடன்! திருடன்!” என்று சத்தம் போடுகிறான்.
இப்படிக் கதை முடிகிறது.
இதன் அடுத்த வரி என் மனதில் ஓடியது.
அந்த மாப்பிள்ளை
வெளியே ஓடிவந்து இவன் மண்டையில் கட்டையால் ஒரு போடு போடுகிறான்!
ரொம்ப நாள், இந்த
வார்த்தை ‘திருடன்’ என்று நள்ளிரவில் சத்தம் கொடுப்பது, என் மனதில் ஓடிக் கொண்டே யிருந்திருக்கலாம்.
நான் ‘திருட்டு’ என ஒரு கதை எழுதினேன்.
ஒரு வீட்டில் திருடன்
ஒருவன் திருடப் போகிறான். அந்த வீட்டில் கணவன் ஊரில் இல்லை. ஆனால் உள்ளே சிரிப்புச்
சத்தம் கேட்கிறது. அந்தப் பெண் வேறு யாருடனோ சிரித்தபடி இருக்கிறதைக் கேட்கிறான். திருடன்
அந்த வீட்டை வெளியே யிருந்து தாளிட்டு விட்டு, “திருடன் திருடன்” என்று சத்தமிட்டபடியே
ஓடுகிறான்.
•
சில கதைகளின் முடிவு
சார்ந்து முரண்பட்டு வேறு கதை என நான் எழுதிப் பார்த்ததும் உண்டு. ஒரு கதையில், எனது
வாசிப்பில் ஆசிரியரே சொல்லாத பல விஷயங்கள் நம்மில் அலையடித்து தனியே கதை எனத் தருவதும்
உண்டு. ஒரு கதையில் ஒரு வரி என்னை அப்படியே தூக்கி யணைத்துக் கொள்ளும். அந்த வரியின்
லாகிரியில் நான் எழுதுவதும் நடந்திருக்கிறது.
நோபல் பரிசு பெற்ற
கனடா நாட்டு எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவின் ஒரு கதையை நான் தமிழில் மொழிபெயர்த்தேன். ஓநாய்ப்
பண்ணை வைத்திருக்கிற ஒரு குடும்பத்தின் கதை. ஓநாய்களின் தோலை உரித்து விலைக்கு விற்கிற
பண்ணைக்காரன். அவன் மனைவி அவனுக்குக் கூட ஒத்தாசை. ஞாயிறுகளில் அவள் சர்ச்சுக்குப்
போகையில் நல்ல உடைகள் மாற்றிக் கொள்வாள். மகளின் பார்வையில், அம்மாவுக்குப் பிடித்த
ஓர் உடை உண்டு. அதை அணிந்துகொண்டு அம்மா சர்ச்சுக்குக் கிளம்புவாள். அந்த உடை அணிந்து
கொள்ளுந் தோறும் அம்மா சந்தோசமாய் இருந்தாள், என ஆலிஸ் மன்ரோ எழுதியதை நான் வெகுவாக
ரசித்தேன்.
இந்த ஒற்றை வரியில்
ஒரு பெண்ணின் உலகம் பூரணமாய்ப் பொலிகிறதாக நான் நம்புகிறேன். இப்படியே இந்த உணர்வைப்
பயன்படுத்தி நான் எழுதிய ஒரு கட்டம், ‘இருள்வட்டம்’ கதையில் உண்டு. ‘அந்திமழை‘ இதழில்
வெளிவ்தந கதை. அதே வரிகளில் தரலாம்.
“ஊருக்குப் போகையில் அம்மா எத்தனை அழகாய்
இருந்தாள். அலங்காரங்கள் பெண்களுக்கு மெருகு கூட்டுகின்றன. அவர்களின் பெண்மை அப்போது
தூக்கிக்காட்டப் படுகிறது. வீட்டில் இருக்கையில் ஒப்பனையில் அலட்சியம் காட்டுகிறார்கள்
பெண்கள். வெளியே கிளம்புதல் அவர்களின் எதோ மடையைத் திறந்து விடுகிறது. வெளியிடங்களில்,
பிறந்த வீடுகளில், புகுந்த வீட்டுப் பெருமைபட நடமாட, அதாவது அங்கே தன் ஆளுமை பற்றி
எடுத்துச்சொல்ல, அவர்களுக்குப் பிடிக்கிறது. கல்யாணங்களில் திடீரென வீட்டு வேலைகள்
இல்லாமல் உபரி நேரம் நிறையக் கிடைக்கலாகிறது. அவர்கள் அலங்காரம் பண்ணிக்கொண்டு இப்படி
அப்படி நடக்கிறார்கள், அழகிப் போட்டி நடக்கிறாப் போல ஒரு பாவனை… அம்மாவின் அழகு என்பது
அந்த முக அழகு மட்டுமா? அந்த விடுதலை உணர்ச்சி. புதிய காற்று முகத்தில் பாயும் உற்சாகம்
அல்லவா அது?” (சிறுகதை
இருள்வட்டம்.)
‘பன்னீர்’ என நான்
எழுதிய சிறுகதை, அது கூட இதே மன-உலாவலில் கண்டெடுத்த கதைதான். ரொம்ப ஏழையான ஒருவன்
ஜவுளிக்கடையில் வேலை செய்கிறான். அவளது பெண்ணின் கல்யாணம் வருகிறது. அதற்கு முதலாளியிடம்
எதும் உதவி கேட்க வேண்டும் அவன். சரியான சந்தர்ப்பம் வர காத்திருக்கிறான். முதலாளி ‘டேமேஜ்’ ஆன பட்டுப்
புடவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு அழகான பட்டுப்புடவை. ஓரத்தில் சிறு தையல்
பிரிசல். விற்க முடியாது அதை. ஆனால் அந்த இடத்தை உள்ப்பக்கமாக மறைத்துக் கட்டிக் கொண்டால்
பார்க்கத் தெரியாது அந்தக் குறை. ஊழியர் வந்து பெண்ணின் கல்யாணம் என்று சொல்கிற போது,
அந்த நல்ல பட்டுப் புடவையை முதலாளி அவனிடம் “இதை வெச்சிக்கோ” எனத் தூக்கிக் கொடுத்து
விடுகிறார்.
அத்தனை விலையதிகப்
புடவையில் கல்யாணத்தில் மணப்பெண், மாப்பிள்ளையை விட, அங்கிருந்த மற்ற எல்லாரையும் விட
ஜொலிக்கிறாள். இதுகுறித்து அவளுக்குப் பெருமை என்றாலும் அதில் ஒரு சிக்கல். அதன்பிறகான
மற்ற விஷேசங்களில் ஊருக்குப் போகையில் என்று அதைப் பயன்படுத்த முடியவில்லை. அத்னை ஒசத்தியான
புடவை அது. பெட்டியிலேயே இருக்கிறது புடவை, ஒரு பெருமையான நினைவுச் சின்னம் போல. பயன்படுத்த
வாய்ப்பு கிடைக்காமல்...
அவசியம் நீங்கள்
‘பன்னீர்’ கதை வாசிக்க வேண்டும். சொல்வனம், இணைய இதழில் வெளிவந்த கதை அது.
4
வேறு ஒரு நல்ல படைப்பு,
எழுத்தாளனை உறக்கம் மறக்கடித்து, எப்படி யெல்லாம் உள்ளே ததும்பிப் பொங்குகிறது. எனது
படைப்புகளையும் நிறையப் பேர் இப்படி பயன்படுத்தியதை நான் வாசிக்கும் போது கவனிக்கிறேன்.
அவர்களைக் குறை சொல்ல
மாட்டேன். அது என் பெருமை தான்.
இந்த உலகில் ‘ஒரிஜினல்’
என்று எதுவுமே இல்லை, என்றுகூட ஒரு கருத்து உண்டு. நாம் அறியாமலேயே கூட அதே தளத்தில்
வேறொரு எழுத்தாளன் பயணப் பட்டிருக்கவும் கூடும்.
உலகம் ஆச்சர்யங்களின்
குவியல்.
“கம்பெனி சீக்ரெட்டை
வெளிய சொல்லப்டாதுடா...” என்று ஒரு திரைப்படக் காட்சியில் வடிவேலு. சொன்னாலும் பரவாயில்லை.
இது தான் நான், என்பது அல்ல. இதை மீறியும் என் தனித்தன்மை சுமந்த படைப்புகள் என்னைக்
காப்பாற்றும்... அந்த நம்பிக்கை, நிமிர்வு எனக்கு உண்டு. என் வாசகர்கள் இதை அறிந்திருக்கிறார்கள்,
என்பது எனது தீர்மானம்.
*
storysankar@gmail.com
91 97899 87842
No comments:
Post a Comment