part 24
எல்லார்க்கும் பெய்யும் மழை
ஒரு தவறு தவறாக அல்லாமல்
சித்தரிக்கப்படுவது தவறு.
சேர்ந்து அனைவரும்
ஒற்றுமையாக வாழ மனித சமூகம் தமக்குள் சில ஒழுங்குகளைக் கைக் கொள்கிறது. சர்வைவல் ஆஃப்
தி ஃபிட்டஸ்ட், பலவான் தாக்குப் பிடித்து நீடிப்பான், மற்றவன் வீழ்ந்து படுவான், என்பது
இயற்கை விதி. தனி மனிதனாக வாழும் வரை அது சரியாய் இருந்தது. கூட்டாக, சமுதாயமாக வாழத்
துவங்கிய மனிதனின் விதி என வருகிறபோது இதை மாற்றி யமைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இதில் முக்கியப் பங்கு கலை எடுத்துக் கொள்கிறது.
கலை மானுடத்தின் ஒத்திசைவை ஒழுங்குகளைக் கொண்டாடி அதை வழிமொழிய வேண்டி யிருக்கிறது.
சில ஒழுங்குகளை மறுத்தும் கலை இயங்குவதை நாம் அவதானிக்கலாம். எனினும் அது வேறொரு ஒழுங்கை,
இதனினும் மேம்பட்ட ஒன்றை மானுடத்துக்கு வழங்குகிற அந்தக் கலைஞனின் அக்கறையே அல்லவா?
சமூக அக்கறையற்ற
படைப்புகள் குப்பைகளாகவே கருதப்படும். மட்டுமல்ல, அது சமுதாயத்துக்கு எதிரானது. வக்கிரங்கள்
ஒருபோதும் நம்மை முன்னெடுத்துச் செல்ல உதவப் போவது இல்லை. ஒரு போலிஸ், பிராது கொடுக்க
வந்த பெண்ணை வன்புணர்வு செய்கிறார், என்றோ, ஒரு டாக்டர் உடல் பரிசோதனை யறையில் வைத்து
பெண் ஒருத்திக்கு மயக்க மருந்து கொடுத்து பின் அவளுக்குப் பாலியல் தொல்லை தருகிறார்
என்றோ எழுதுவது தவறாகவே நான் கருதுகிறேன். காவலர் என்றில்லை மருத்துவர் என்றில்லை,
எல்லாத் துறைகளிலும் பெண்பித்தர்கள் இருக்கிறார்கள். எங்கே தான் இல்லை? ஆகவே, ஒரு தனித்
துறையில், அந்தச் செயலில் ஈடுபட்டவரை நிறுத்திக் கதை சொல்லக் கூடாது. அதை எழுதவே கூடாது,
என்பதல்ல செய்தி. அதை எழுதுகையில் எழுத்தாளன் தன் நிலைப்பாட்டையும் வைக்க வேண்டும்.
வெறும் சித்தரிப்புகள், அவை அந்த வக்கிரத்தை நியாயப் படுத்தும் அளவிலேயே அமைந்து விடுகிறது.
தவறு அது. ஒரு தவறு தவறாக அல்லாமல் சித்தரிக்கப்படுவது தவறு. பெண்-வன்புணர்வில் ஈடுபட்ட
காவலர், அவர் காவலர் அல்ல, சமூக விரோதி அவ்வளவே. அவரைக் காவலர் எனச் சித்தரிக்க வேண்டாம்
என்பது கருத்து. அந்த மருத்துவர் விஷயத்திலும் அவ்வண்ணமே கேட்டுக் கொள்கிறேன்.
PULP FICTION என
வருகிற அநேகக் கதைகளில் சமுதாய அக்கறை என்பதே காணக் கிடைக்கவில்லை எனக்கு. வெறும் சுவாரஸ்யத்துக்காக,
திடுக் திருப்பங்களுக்காக, சனங்களைப் பதறடிப்பதற்காக, அழ விடுவதற்காக, எதிர்பாராத்
திருப்பம் தருவதற்காக சில சம்பவங்களை, காட்சிகளை அவர்கள் எழுதுகிறார்கள். வணிகத் திரைப்படங்களிலும்
அப்படித்தான். சட்டென நினைவு வரும் ஒரு ‘கையடக்க’ நாவலில் ஒரு காட்சி. ஒரு பரிசோதனைக்
கூடத்திற்குள் வரிசையாக பெரிய பெரிய பாட்டில்களில், புதிதாய்ப் பிறந்த சிசுக்களின்
பிணங்கள் அடைத்து வைக்கப் பட்டிருப்பதாக விவரிக்கப் பட்டது. லாபில் ஃபார்மிக் ஆசிட்
போட்டு பதப்படுத்திய உடல்கள். புதிதாய்ப் பிறந்த சிசுக்களின் உடல்கள் இப்படி பதப்படுத்தி
வரிசையாய் வைக்கப் பட்டிருக்கின்றன. அதைப் பதப்படுத்தி வைத்த கிரிமினலை பிறகு கதாநாயக
இன்ஸ்பெக்டர் கைது செய்வாராய் இருக்கும். வாசிக்கவே பதற வைக்கிற காட்சிகளை ரொம்ப சாமர்த்தியமாய்க்
கதையில் கொண்டு வந்ததாய் அந்த எழுத்தாளர் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கவும் கூடும்.
ஒரு திரைப்படம் பார்த்தேன்.
தத்து எடுத்து வீட்டுக்கு அழைத்துவந்த குழந்தையை, கணவன் உடனே திரும்பக் கொண்டுபோய்
விட்டுவிடும்படி கண்டிப்பான ஆத்திரத்துடன் மனைவியைத் திட்டுவதாக ஒரு காட்சி. எப்படி
யெல்லாம் சிந்திக்க முடிகிறது இவர்களால் என்று அந்தத் திரைப்படம் பார்த்து நான் திகைத்துப்
போனேன். பெரும் சுற்றிதழ் ஒன்றில் வந்த கதையில் ஓர் எழுத்தாளர், மாமியார் மருமகள் பிணக்கு
பற்றி எழுதுகிறார். மாமியார் கொடுமையாம். மருமகள் தொடை நடுவே வெந்நீரை ஊற்றி விட்டார்
மாமியார். இப்படி ஒரு கதை.
மேலே சொன்ன அத்தனை
உதாரணங்களும், எனக்கு அதிர்ச்சி அளித்த எழுத்துக்களும், காட்சிகளும் எனக்கு அறிமுகமான
நண்பர்களின் செயல்கள் தான். இப்படிச் சொல்லி பதறடித்து, கடைசியில் சில சமயம் அவர்கள்
தர்மத்தை நிலை நாட்டுவார்கள். செத்தவன் குடும்பத்துக்கு பென்சன் தர்றதில்லையா, அது
போல. அதிலும் கொடுமை சில சமயம் அப்படியே விட்டு விடுவதும் உண்டு. நன்றாக யோசித்துப்
பார்க்கையில் ஒரு விஷயம் புலப்படும். அந்தக் காலத் திரைப்படங்களில் கதையில் குடும்பம்
வரும். அதில் கூடவே காதல் வரும். காதலைக் கொண்டாடும் திரைப்படம், ஆனால் குடும்ப உறவுகளை
அலட்சியப் படுத்தாது. இப்போது குடும்ப உறவுகளே இல்லாமல், காதலை மாத்திரம் பூதாகரமாக்கி
படங்கள் வருகின்றன.
ஒரு காலத்தில் திரைப்படக்
கதாநாயகன் பலசாலியாக இருப்பான். வில்லனைப் பந்தாடி வெற்றி பெறுவான். காலப் போக்கில்
வில்லன்கள் மகா பயங்கரமாக, கொடூரமானவர்களாக, நிதானமாக வசனம் பேசியபடியே வக்கிரமான செயல்கள்
செய்கிறார்கள். வில்லன் நடிப்பு சூப்பர்... என்பதாக ரசிகர் பட்டாளம் மகிழவும் செய்கிறது.
அத்தனை ஈடுபட்டு சனங்களைப் பார்க்க வைக்கிறதாக திரைப்படங்கள் செயல் படுகின்றன. திரைப்படங்களில்
கதநாயகனை விட வில்லன் பாத்திர ஜோடனை அதிக கவனம் எடுத்துக் கொள்ளப் படுகிறது. இது நல்லது
அல்ல.
திரைப்படங்களைப்
போல வக்கிரங்கள் எடுபடும் இடம் வேறில்லை. ஒரு விதவைப் பெண்ணுக்கு நெற்றியில் குங்குமம்
வைக்க வில்லன் நெருங்க அவள் பதறி விலகி “வேண்டாம் வேண்டாம்” என்று கதறுவதாக ஒரு கிளைமாக்ஸ்
காட்சி. ஒரு பிரபல இயக்குநரின் திரைப்படம். மாடுகள் மேய்க்கிறவனைப் பழிவாங்கும் காட்சி.
அவனது மாடுகள் அருந்தும் தண்ணீரில் விஷத்தைக் கலந்து வைத்து அவைகளைக் குடிக்க வைப்பதாக
சம்பவம். அதை இயக்குநர் எப்படி அமைக்கிறார்... மந்தைக்குள் வந்து இடையனைக் கையைக் காலை
வாயைக் கட்டிப் போட்டு விடுவார்கள். பிறகு தண்ணீர்த் தொட்டியில் விஷத்தை இடையன் பார்க்கும்
போதே கலப்பார்கள். போய் பட்டியைத் திறந்து மாடுகளை வெளியே விடுவார்கள். மாடுகள் உற்சாகமாய்
நீர்த் தொட்டிக்கு ஓட - ம்ம்ம் ம்ஹும் என்று தலையாட்டி மறுத்தபடி கட்டுக்களை அவிழ்க்க
முடியாமல் உருண்டு உருண்டு பரிதவிப்பான் அவன். அவன் துடிக்க துடிக்க மாடுகள் நீர் அருந்தும்...
ஐயையோ. ஹாலிவுட்
பெரு வணிகப் படங்கள் இதைவிட மோசம். திரையரங்க இருளில் பதட்டமாய்ப் பார்க்கவென்றே திகில்
காட்சிகளை, வன்முறைகளை விதவிதமாகச் சித்தரித்துக் காட்டுவதில் ஒருத்தரோடு ஒருத்தர்
போட்டியே இருக்கிறது அங்கே. திகில் காட்சிகளில் நாம் அமர்ந்திருக்கும் நாற்காலிகளையே
போட்டு ஆட்டு ஆட்டு என்று ஆட்டிவைப்பார்கள். சட்டென்று நினைவு வரும் ஒரு சண்டைக் காட்சியின்
வக்கிரம். ஒரு சண்டையில் வில்லன் எதிராளி மீது கத்தியை வீசி அவன் முட்டியில் போய் அந்தக்
கத்தி செருகிக் கொள்ளும். மேலும் சண்டை தொடர்கையில், வில்லன் சட்டென்று அவன் முட்டிப்
பக்கம் குனிந்து செருகப்பட்ட அந்தக் கத்தியைப் பிடித்து முகம் நிறைய வக்கிரத்துடன்
இப்படி அப்படி அசைக்க எதிராளி அலறுவதாகக் காட்சி!
தெலுங்குப் படங்களில்
இதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். அம்மா பார்வையிலேயே குழந்தையை மரத்திண்டோடு
கையில் கட்டி. வில்லன் ஷு போட்ட காலால் குழந்தையின் கையை, விரல்களை மிதித்து அரைப்பான்.
வில்லன் முகத்தின் வக்கிரக் கொண்டாட்டத்துக்கு க்ளோஸ்-அப். அம்மா துடித்து அலறுவாள்.
போதும்.
2
ஆனால் நல்ல எழுத்து
இதற்கு நேர் மாறாக இயங்க வல்லது. தனது வாசகனையும், ஏன் எழுதுகிற நபரையுமே கூட சற்று
மேலேடுத்து, மென்மையாக்கி கனிய வைத்து விட வல்லதாய் அது அமைகிறது. எழுத்து தனது தொடர்ந்த
பயிற்சியில் மனதை இறுக்கந் தளர்த்தி உழுதாற் போல நெகிழ வைக்கிறது. “இரவில் படுக்கப் போகுமுன், எவ்வளவு மோசமான சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும்,
உனக்கு துரோகமே இழைக்கப் பட்டிருந்தாலும், அந்த சம்பவத்தை மறக்க, அந்த நபரை மன்னித்து
விட்டுப் படுக்கப் போங்கள்,” என்பார்கள். மிக முக்கியமான பழக்கம் அது. நம்மைத்
தீட்டிக்கொள்ள மேம்படுத்த நமது நெறிகளில் உறுதிப்பட இப்படியாய் எழுத்தும் நமக்கு உதவ
வல்லது,
எழுத எழுத அதன் உள்ளே
தானே கரைதல் ஆனந்த அனுபவம். புதுமைப்பித்தன் ஒரு கதை எழுதுகிறார். அவர் பணியாற்றி வந்த
சுதேசமித்திரன் பத்திரிகையில் சிறிது இடம் காலியாகக் கிடக்கிறது. அந்த இடத்தில் வெளியிட
மாலைக்குள் ஒரு கதை தரும்படி அவரைக் கேட்கிறார்கள். உக்கிர வெயில் பொழுது. ‘டிரடில்’
எந்திரம் உள்ளே ஓடும் கடா முடா சத்தங்கள். தலை மேல் மின்விசிறி வெப்பத்தை அறை முழுதும்
விசிறுகிறது. அனல் மிக்க அந்த இடத்தில் அமர்ந்து அவசரமாய் ஒரு கதையை சிந்திக்கிறார்
புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தனுக்கு
ஒரு பெண் குழந்தை. மனோகரி.
தாம்பிரவருணி நதியில்
ஒரு சிறு பாறை. அதில் பெண் குழந்தை ஒன்று அமர்ந்திருக்கிறது. அதன் கால்கள் நதிநீரில்
மூழ்கி யிருக்கின்றன. ஒரு சிற்றசைவில் குழந்தை காலைத் தூக்குகிறது. கொலுசு அணிந்த அந்தச்
சிறுமியின் வெண் பாதம் பளீரென்று நீருக்கு வெளியே வருகிறது. சூரிய ஒளியில் அந்தப் பாதங்களும்
கொலுசும் தகதகவென்று பொலிகின்றன. குழந்தை திரும்பவும் காலைக் கீழே நீருக்குள் அமிழ்த்திக்
கொள்கிறது. ஆகா கால் உள்ளே சென்றுவிட்டதே. அந்த அழகான பாதங்களை இன்னொரு முறை பார்க்க
வாய்க்காதா, என்று சூரியன் நினைக்கிறதாக புதுமைப்பித்தன் ஒரு கற்பனை செய்து, எழுதும்போதே
புன்னகை செய்து கொள்கிறார். பிறகு எழுதுகிறார்.
சூரியனானால் என்ன,
அந்தச் சிறு குழந்தை திரும்பவும் கால் தூக்க காத்திருக்கத் தானே வேண்டும்?
வெங்கட் சாமிநாதன்
தன் விமரிசனத்தில் இந்த வரிகளுக்குச் சொக்கிப் போகிறார். எத்தனையோ ரிஷிகளும் சித்தர்களும்
புதுமைப்பித்தன் கையில் வந்து அமர்ந்து அதை எழுத வைத்ததாக அவர் நெகிழ்ந்து சொல்கிறார்.
சென்னையில் அல்லாமல்,
எங்கோ ஊரில் இருக்கும் தன் மகளை அப்போது அந்தக் கணம் அவர், புதுமைப்பித்தன் மனசில்
நினைத்து, அவளுக்கு, மனோகரிக்கு ஒரு முத்தம் தர நினைத்திருப்பாரோ?
இப்படி கதைகள் எழுதப்படுகையில்
படைப்பாளனின் மன ஆளுமையினால் சட்டென ஓர் உச்சத்தைத் தொட்டுவிட முடிகிறது. கமலாம்பாள்
சரித்திரத்தில் அருமையாய் அமைந்த இதேபோன்ற ஓர் இடத்தை இப்படி நான் சுட்டிக் காட்டி
யிருக்கிறேன், வேறொரு பதிவில்.
குழைவான அன்பான மனசு
வாழ்க்கையிலேயே இப்படி நற் தருணங்களைத் தருகின்றன. என்னுடன் பணியாற்றும் ஒரு பெண்.
திருமதி பத்மா சேகர். அவளுக்குக் குழந்தை பிறந்து தன் தாய் வீட்டில் இருந்தாள். மகளுக்கு
மூன்று மாதம், குழந்தை நன்றாக முகம்பார்த்துச் சிரிக்க ஆரம்பித்ததில் பத்மாவுக்குப்
பரவசம். மடியில் கிடந்து சிரிக்கிற குழந்தையை அப்படியே வாரியணைத்துக் கொண்டு, “என்
கண்ணு. என் சமத்து” என்று கொஞ்சியபடி திரும்பினால் அறையின் வாசலில் அவள்அப்பா நின்றிருந்தார்.
சற்று அதிதமாகப் பரவசப் பட்டுவிட்டாப் போல அவளுக்கே வெட்கம் பூக்க அப்பாவைப் பார்த்தாள்.
“என்னமோ கல்யாணமே வேண்டான்னியே?” என்று அப்பா சொல்லிவிட்டுப் போனாராம்.
இதை திருமதி பத்மா
சேகர் என்னிடம் பரிமாறிக் கொண்டபோது, என் வாழ்க்கை சம்பவம் இதேபோல் ஒன்றை நான் சொன்னேன்.
குழந்தைகளுடன் இருக்கும்போது நாமும் குழந்தையாகவே ஆகி விடுகிறோம். எனது பெரிய பையன்
பிரசன்னாவுக்குப் பேச்சு வந்ததும் நான் அவனுடன் ரொம்ப ஆர்வமாய் உரையாடுவேன். அப்படி
அவனோடு பேசிக் கொண்டிருந்த போது என் அக்கா லெட்சுமி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள்.
அவள் பார்க்கிறாள் என்று தெரிந்ததும் நான் முகம் பூராவும் (அசட்டுச்) சிரிப்புடன் அவளிடம்,
“நல்லா பேசறான் இல்லே?” என்றேன். ’‘ஆமாம். உன் பையனாச்சே. உனக்கு அப்பிடித்தான் இருக்கும்”
என்றாள்.
The feel of
getting trapped!
இப்படி வாழ்வின்
தருணங்களை நான் வேளை வரும்போது என் கதைகளில் பயன்படுத்தியும் இருக்கிறேன். நான் என்
அக்கா லெட்சுமியிடம் மூக்கில் குத்து வாங்கிய அதே மாதிரியான தருணம். சௌந்தர்ய லகரி,
என்று ஒரு சிறுகதை. அண்ணனுக்கு மன நலம் சரியில்லை. அவனுக்குத் திருமணம் முடிக்க லாயக்கில்லை.
தம்பிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள். தம்பி தன் அண்ணனின் மன நலம் பற்றி ஏற்கனவே
கல்யாணப் பெண்ணிடம் சொல்லி யிருக்கிறான். கல்யாணத்தில் அண்ணன் அப்படியொன்றும் கலாட்டா
பண்ணுகிற மாதிரி நடந்து கொள்ளவில்லை. கல்யாணப் பெண் தற்செயலாக அவனைப் பார்த்தபோது அவளது
பார்வையும், அந்த அண்ணனின் பார்வையும் சந்தித்துக் கொள்கின்றன. அவனைப் பார்த்தால் அவளுக்கு
வித்தியாசம் தெரியவில்லை.
கல்யாண மந்திரங்கள்
முடிந்து அவள் மணப்பெண் அறைக்கு வருகிறாள். அவளது உறவினர் பட்டாளம், இளசுகள் அவளைச்
சூழ்ந்து கொள்கிறது. “யாருடி அது, மாப்ளைக்கு அண்ணன், பி.எஸ்சி. செகண்ட் இயரோட படிப்பை
நிறுத்தினாலும், வளவளன்னு பாடம் பத்தியே பேசி எங்களை அறுத்தெடுத்துட்டாரு” என்கிறார்கள்.
“சீ பாவண்டி” என்பாள் அவள். கல்யாணப் பெண். “ஆமாமா பாவந்தான். உன் ஹஸ்பென்டோட அண்ணாவாச்சே...”
எனக் கேலி செய்துவிட்டு அவர்கள் எழுந்து போய்விடுவார்கள். இப்படி நிறைய உதாரணங்கள்
அடுக்கலாம். இப்போதைக்கு இத்தோடு நமது கருதுகோளுக்கு வரலாம்.
3
லா.ச.ரா.வின் ‘குருஷேத்திரம்’
முக்கியமான கதை. பழி பாவங்களுக்கு அஞ்சாத ஒரு திருடன், தான் திருடிய ஒரு மனிதன், அந்தப்
பணத்தின் இழப்பைத் தாள முடியாமல் தற்கொலை செய்துகொண்டு, குளத்தில் மிதப்பதைப் பார்த்த
கணம், அவன் மனதின் நல்ல தன்மைகளை, நெகிழ்ச்சிகளைத் திரும்பப் பெறும் கணம். பிறகு அவன்
வாழ்க்கை எப்படியெல்லாம் நெறிப்படுகிறது, என்பது அதன் தாத்பரியம்.
எனது ஒரு சிறுகதையில்
இப்படி ஒரு முயற்சியை நான் கைக் கொண்டது நினைவு வருகிறது. ‘பாறைகளும் நெம்புகோலும்’
என்பது அந்தக் கதை. பாலு மகேந்திராவுக்கு மிகவும் பிடித்து அது அவரது ‘கதை நேரத்தில்’
குறும்படமாக ‘குழந்தை’ என வெளியாகி எனக்கும், அவருக்கும் பெரிய அளவில் பெயர் வாங்கித்
தந்தது. அதை அவரது 25வது வாரத்தில் தனி அடையாளத்துடன் சன் தொலைக்காட்சியில் வெளியிட்டார்.
நன்றி பாலு மகேந்திரா.
இரவு நேரங்கழித்து
வீடு திரும்புகிறான் அவன். தனது குடியிருப்புப் பகுதியின் தன் தெருவுக்கு முந்தைய தெருவில்
அந்த ராத்திரியில் குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு சிசுவின் அழுகைச் சத்தம் கேட்கிறது.
தூக்கிவாரிப் போடுகிறது அவனுக்கு. கிட்டே போய்ப் பார்க்கிறான். குப்பைத் தொட்டிக்குள்
அழுதபடி கிடக்கிறது குழந்தை. ஐயோ, எனப் பதறுகிறான். யார் இந்தமாதிரிக் காரியம் செய்தது?
இரக்கம் இல்லாமல் புதிதாய்ப் பிறந்த சிசுவைக் குப்பைத் தொட்டியில் வீசியது? பெத்தால்
வளர்க்க வேண்டும். வளர்க்க வக்கில்லையென்றால் ஏன் பெத்துக் கொள்ள வேண்டும்?... அவனுக்கு
ஆத்திரம், கோபம் எல்லாம் வரும். என்றாலும் அந்தக் குழந்தையைக் கையில் எடுத்து தன்வீட்டுக்கு
அழைத்துப் போக வேண்டும், என்பதில் தயக்கம். ஒரு மனம் குழந்தைக்கு எதாவது செய், என்னும்.
இன்னொன்று வேண்டாத வம்பை விலைக்கு வாங்காதே, என எச்சரிக்கும். வீட்டுக்கு வந்து சாப்பிட
முடியாமல் திணறுவான். மனதில் அந்தக் குழந்தை. அதை அப்படியே விட்டுவிட்டு வந்ததில் பதற்றம்
இன்னும் இருக்கும். அப்போது திடீரென்று வெளியே மழை பெய்ய ஆரம்பிக்கும். துள்ளி அவன்
வெளியே ஓடுவான் தெருவில், அந்தக் குழந்தையைத் தேடி. போய்ப் பார்த்தால், குப்பைத் தொட்டியில்
குழந்தை இருக்காது- பிறகு... மீதிக் கதையை பாலு மகேந்திராவின் ‘குழந்தை’ குறும் படமாகப்
பார்க்கலாம். அல்லது ‘எனது ‘பாறைகளும் நெம்புகோலும்’ கதையை வாசித்து அறிந்து கொள்ளலாம்.
‘குழந்தை’ குறும்படம்
யூ டியூபில் காணக் கிடைக்கிறது!
எதற்குச் சொல்ல வருகிறேன்.
அவனது மனம் அலை பாய்ந்தபடி இருக்கும் போது, திடீரென்று வந்த மழை, ஐயோ குழந்தை நனைந்தால்
இன்னும் அதற்கு உடம்புக்கு சிரமப் படுத்துமே, என்கிற அவனது கரிசனம், பதற்றம் அவனை குழந்தையை
எடுத்துவர உந்துகிறது, என்பது கதை. எனது கற்பனை தான்.
4
எங்களுக்கு முந்தைய
காலங்களில், அறுபது எழுபதுகளில், தமிழ்க் கதையுலகில் ஒரு போக்கு நிலவியது. வாழ்க்கையின்
சம்பவங்களை தனி மனித அடிப்படையில் சொல்லாமல் சற்று பரந்து விரிந்த பார்வையுடன் சமுதாயக்
கோணத்தையும் சேர்த்து கதை சொல்வது, என்கிற வழக்கம் இருந்தது. கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன்,
லா.ச.ரா., ந. பிச்சமூர்த்தி, க.நா.சு. காலப் பழக்கம் அது.
புதுமைப்பித்தனின்
‘மனித யந்திரம்’ கதை, தான் வேலை பார்க்கும் கடையில் திருடிவிட்டு, மனம் தாளாமல் திரும்ப
வந்து முதலாளியிடம் அதைத் தன் கணக்கில் கடனாக வைத்துக் கொள்ளச் சொல்லும் கதை. ஆங்கிலத்தில்
ஆர்.கே.நாராயணன் எழுதிய ‘குருட்டு நாய்’ என்கிற கதையும் இதே வகைமைதான். ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் அவனுக்கு வழிகட்டி முன்னேபோனபடி அவனை
அழைத்துச் செல்லும் நாய். அதை அடித்தும் திட்டியும் அவன் கொடுமைப் படுத்துவான். கொடுமை
தாளாமல் நாய் ஒருநாள் ஓடிப் போய்விடும். அவன் நாய் இல்லாமல் திண்டாடிப் போவான். பிறகு
இரண்டொரு நாளில் நாய் திரும்ப அவனிடமே வந்துவிடும். திரும்ப அதை உதைத்தும் திட்டியும்
வேலை வாங்கியபடியே, அந்த நாய் வழிகாட்ட அவன் பிச்சைக்குப் போவான் என்பது கதை. அவன்
குருடன் அல்ல, அந்த நாய்க்கு தான் குருட்டுப் புத்தி, என்று ஆர்.கே.நாராயணன் சொல்கிறார்.
தாகூரிடமும் இப்படிக் கதைகள் ஒருவேளை கிடைக்கும்.
சமுதாய அறம் பாடும்
கதைகள், என்கிற மோஸ்தர் அது. சமுதாயம் காட்டும் நெறிப்பட வாழ்வதை விட்டு விலகி பிறகு
வந்து சேர்ந்து கொள்ளுதல், என்கிற பொது சாயல் அந்தக் காலக் கதையின் அடையாளமாகவே இருந்தது.
இப்போது அது மாறிப் போனது என்பதும் நமக்குத் தெரிகிறது. என் கதைகள் அப்படியானவை அல்ல,
என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
பொதுவான தளத்தின்
அம்சங்களுடன் ஆயிரங் கால் மண்டபம் போல நான் எழுதிப் பார்த்திருக்கிறேன். ‘கூட்டம்’
என்கிற என் கதை, தீபத்தில் வெளியானது. ஜனத்தொகைப் பெருக்கத்தில், கூட்டமே பிடிக்காத
ஒருவன். எங்கே ஒதுங்கினாலும் அவனுடன் கூடவே பெருங் கூட்டம் இருக்கும். அவனால் தவிர்க்கவே
முடியாது. கோவிலுக்குப் போனாலும், காய்கறி மார்க்கெட்டுக்குப் போனாலும், எந்த அலுவலகம்
போனாலும் கூட்டம், நெரிசல் அவனுக்கு எரிச்சலைத் தந்தபடி இருக்கும். கூட்டமான பஸ்சை
விட்டுவிட்டு அடுத்த பஸ்சில் போகலாம் என ஒவ்வொரு பஸ்சாய்த் தவிர்த்து விட்டு கடைசியில்
வேறு வழியில்லாமல் ஒரு நெரிசலான பஸ்சில் முண்டியடித்து ஏறியவன், அந்த நெரிசல் தாளாமல்
பாதி வழியிலேயே பஸ்சில் இருந்து குதித்துவிடுவான். என்ன ஆயிற்று அவனுக்கு, என்று வேடிக்கை
பார்க்க பெருங் கூட்டம் அவனைச் சூழ்ந்து கொண்டது, என அந்தக் கதை முடியும். (எழுதி எவ்வளவு
வருடங்கள் ஆயின!)
இவை முனைந்து நான்
எழுதுவது. தவிர பொதுவாக இப்படித் தளங்களை இக்காலத்தில் யாரும் கையாள்கிறார்களா சந்தேகமே.
தி.ஜானகிராமனின்
ஒரு கதை எத்தனை தூரம் பயணிக்கிறது, என்று பாருங்கள். கும்பகோணத்தில் அந்த மாமா சாயந்தர
வேளையில் ரயில்வே ஸ்டேஷன் பக்கமாக நடந்து வரும்போது எதிரே ஒரு பையனைச் சந்திக்கிறார்.
அவன்அப்பா அந்தக் காலத்தில் இவருக்கு படிக்க உதவி செய்திருக்கிறார். அவன்அப்பா இப்போது
இல்லை. ஆனால் அந்தப் பையன் டெல்லியில் இருக்கிறவன். இங்கே எப்போது ஏன் வந்தான் தெரியவில்லை.
“என்னப்பா மணி, (நான் வைத்த பெயர்.) இந்தப் பக்கம்?” என்று அவனை நிறுத்தி விசாரிக்கிறார்.
’‘ஆ மாமா. நமஸ்காரம். நல்லவேளை உங்களைப் பார்த்தேன். அம்மாவுக்கு வயசாயிட்டதில்லையா.
நம்ம ஊர்ப்பக்கம் போயி ஷேத்திராடனம் பண்ணணும்னு அவளுக்கு ஒரு இது. அதான் கூட்டிண்டு
வந்தேன். வந்த இடத்தில் ஒரு அசம்பாவிதம் ஆயிடுத்து. ரயில்ல இருந்து கீழ எறங்கறச்ச சட்னு
கால் பிசகி...’‘
“ஐயோ” என்றார் பெரியவர்.
“ம். அதான் இங்கதான் ஆஸ்பத்திரில சேர்த்திருக்கு. வந்த இடத்ல இப்படி ஆயிப்போச்சு. கைல
காசு கிடையாது. ஒரு நூத்தியம்பது ரூபா (அந்தக் காலத்தில் அது பெரிய தொகை.) இருந்தாத்
தேவலை. அதான் யோசனையா நடந்து வந்திட்டிருக்கேன்.” அவர் மணியை அழைத்துப்போய் வீட்டில்
சாப்பாடு போட்டு கையில் 150 ரூபாயும் தந்தனுப்புகிறார். மறுநாள்ப் போல அவர் அந்த ஊரின்
ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரிக்கிறார். அங்கே தர்மாம்பாள் (நான் வைத்த பெயர்) என்ற
பெயரில் யாருமே அட்மிட் ஆகவில்லை, என்கிறார்கள். கால் முறிவு என்று எந்த கேசும் வரவில்லை,
என்கிறார்கள்.
பெரியவர் டெல்லியில்
உள்ள தன்மகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். மணி வந்திருந்ததைப் பற்றிச் சொல்லி, அவன்அம்மா
பற்றி அங்கே விசாரிக்க முடியுமானால் நல்லது, கவலையாய் இருக்கிறது, என எழுதுகிறார்.
ஊரில் இருந்து பதில் வருகிறது. அப்பா, அந்த மணி ஒரு ஃப்ராடு. இங்கே அவன் பண்ணிய குளறுபடிகளால்
வேலையை விட்டு அவனைத் தூக்கி விட்டார்கள். அவன்அம்மா இங்கேதான் நலமாக இருக்கிறாள்.
அவன்தான் எங்கேயோ போய்விட்டான், என்கிறாள். அவன் உன்னிடம் ஒரு பொய்சொல்லி எமாற்றி பணம்
வாங்கிக்கொண்டு போயிருக்கிறான்...
அதனால் பரவாயில்லை
அப்பா. நீ வருத்தப்படாதே. அவன்அப்பா நம்ம குடும்பத்துக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறார்.
அது போதும் நமக்கு... என்று முடிகிறது கடிதம். கடிதத்தை வாசித்து முடித்துவிட்டு மிகுந்த
திருப்தியுடன் பெரியவர், “என் பையன் பையன்தாண்டி” என்பதாகக் கதையை தி.ஜா. முடிக்கிறார்.
பிறருக்கும் உதவியாக இருந்த ஒருவரின் மகன் இப்போது இப்படி ஏமாற்றித் திரிகிறான், என்பதன்
சோகம் தாண்டி, தன் மகன் தன்னைப்போல பரோபகாரி சிந்தனையில் இருக்கிறான் என பெரியவர் அமைதியடையும்
இடத்தில் கதை முடிகிறது.
இதுதான் அந்த கதை-சீஸனின்
மோஸ்தர். நிறையப்பேர் இப்படி மானுட தர்மத்தை முன்னிறுத்தி கதைகள் எழுதினார்கள். குறிப்பாக
வறுமையில் செம்மை. அப்படி வழக்கம் தன்னைப்போல காலப்போக்கில் உள்வாங்கி விட்டதாகவே நினைத்திருந்தேன்.
நோக்கம் போக்கும் இந்நாட்களில் எத்தனையோ மாற்றங்களை சந்தித்து விட்டது. ஆனால் ஆச்சர்யகரமாக
ஜெயமோகனின் ‘அறம்’ தொகுதி அப்படியான தொரு பரவலான மழைபோல் வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
தொகுப்பில் நான்
முரண்பட அநேக விஷயங்கள் இருக்கின்றன. என்றாலும் அது முக்கியமான தொகுதி தமிழுக்கு, என
உடன்படுகிறேன். ‘சோற்றுக்கணக்கு’ என அதில் ஒரு கதை. மனிதனில் இருந்து மனிதத்தை மேலெடுத்துக்
காட்டுகிற கதை. எலலாருமே நம்மளவில் லௌகிகச் சிறைகளில் தத்தளிக்கிறவர்கள் தாம். பொது
நலன் என்பதோ, தான தர்மம் என்பதோ, நியாயம் என்பதோ கூட அப்படி நாம் விரும்பிய அளவில்,
மனசாட்சிப்படி நம்மால் கைக் கொள்ளப் படுவது இல்லை. இந்நிலையில் மனிதனை மீட்டெடுக்கும்
காரியத்தை இலக்கியம் செய்யவேண்டி யிருக்கிறது.
மிகுந்த ஏழைப் பையன்.
வேறு ஊருக்கு வந்து சொந்தக்காரர் வீட்டில் அடைக்கலம் புகுந்து பள்ளிப் படிப்பைத் தொடர
வேண்டி யிருக்கிறது. அந்தக் குடும்பத்தலைவிக்கு இது பிடிக்காவிட்டாலும் வேண்டா வேறுப்பாக
அவனைக் கூட வைத்துக் கொள்கிறாள். தங்க இடமும் சாப்பாடும் கிடைக்கிறது. இந்நிலையில்
அவனுக்குப் பள்ளிக்கூடச் செலவுக்கும் உணவுக்குமே பணம் தேவை என்று வெளியே ஓரிடத்தில்
கணக்கு எழுதும் வேலையை மேற்கொள்கிறான் அவன். வேறு இடத்தில் சம்பாதிக்க என அவன் கிளம்பியதும்
சட்டென்று அவனது சாப்பாட்டுக்கு அவனைக் காசு தரச் சொல்கிறாள் அந்தப் புண்ணியவதி. காலப்போக்கில்
அவன் அந்தக் கணக்கெழுதும் இடத்திலேயே ஜாகை மாற்றிக் கொள்கிறான். படித்து நல்ல வேலை
கிடைக்கிறது. இந்நாட்களில் அவனுக்கு கேத்தல் சாகிபு என்கிற ஒருவரின் சாப்பாட்டுக் கடையின்
அறிமுகம் கிடைக்கிறது. சாகிபு யார் வந்தாலும் முகம் கோணாமல் உணவளிக்கிறவர். அவர் கை
ஒன்றில் சோத்து சிப்பலும், அடுத்த கையில் கரண்டியும் இலையில் சாதத்தைக் கொட்டிக் கொண்டே
யிருக்கும். சாப்பிட்டு விட்டு வசதி உள்ளவர் பணம் தரலாம். ஒரு உண்டியல் வைத்திருக்கிறார்.
அதில் அவரவரால் முடிந்த பணம் சாப்பாட்டுக்கு என்று போடலாம். பணம் இல்லாதவர் போடாமல்
போனாலும் அவர் அதை சட்டை செய்வதில்லை.
அவரிடம் பணம் தராமல்
சாப்பிட்டே தனது பெரும் வாழ்நாட்களை அவன் கழிக்க நேர்கிறது. இது குறித்து அவனுக்குத்
தன்மீதே எரிச்சல் உண்டு. அவரையும் அதனால் பழித்துக் காட்டிப் பேசுகிறான். படித்து முடித்து
நல்ல வேலை என அமர்கையில், அவனுக்கு அடைக்கலம் கொடுத்தவள், இந்நாட்களில் குடும்ப வறுமை
மேலும் அதிகமாகி திணறிக் கொண்டிருப்பவள், தான் அவனுக்கு ஒரு காலத்தில் செய்த உதவியைச்
சுட்டிக்காட்டி தனது மகளை அவன் மணந்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்கிறாள்.
வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம் என்றோ எப்போதோ செய்த உதவியைக் காட்டிக் காட்டி தன்னிடம் நெருக்கடிகள் தந்து
சாமர்த்தியமாக தன் காரியம் பார்த்துக் கொள்ளும் அவளைப் பற்றி அவன் சிந்திக்கிற ஒரு
நொடியில் தான், அவனுக்கு சாகிபின் பரந்த மனம் ஒரு ஒப்புமை போல மனதில் விரிகிறது. சாகிபின்
கருணை ஒரு வெள்ளம் போல அவனது அழுக்குகளை, கறைகளைக் கரைக்கிறது. ஒரு வீடு வாங்கும் அளவு
பணம் ஜிபிஎஃபில் இருந்து எடுத்து வைத்திருந்தான் அவன். அதுவரை சாகிபிடம் சாப்பிட்டதற்கு
என அவன் உண்டியலில் பணம் போட்டதே இல்லை. சாகிபு அதைப் பற்றிக் கவலைப் பட்டதே யில்லை.
அவன் பணம் தரவில்லை என்பதற்காக அவனை மறுநாள் எழுப்பி விட்டதும் இல்லை, உபசரிப்பில்
அலட்சியம் செய்ததே இல்லை. ஒரே வேகத்தில் வந்து தனது சேமிப்புப் பணம் அத்தனையையும் அவரது
உண்டியலில் போடுகிறான் அவன். போட்டுவிட்டு சாகிபுவைப் பார்க்கிறான். அவர் அவன்பக்கம்
திரும்பி என்ன செய்கிறான் என்று பார்க்கவேயில்லை. யாரோ ஒருவரை உபசரிப்பதில் அவர் அப்போதும்
கவனமாய் இருக்கிறார். இப்படி ஏழைப்பட்ட எத்தனை பேரை அவர் உயர்த்தி விட்டிருப்பரோ, அவரிடம்
கணக்கு கிடையாது. அவர் கணக்கு வைத்துக் கொள்ளவும் மாட்டார்.
கதைசார்ந்த விழுமியங்களை
உணர இதை வாசிக்கும் மனசு தானே முன்வரும். வெகு நாட்களுக்குப் பறிகு ஒரு பழைய மோஸ்தர்
கதையை வாசிக்கிற பாவனையும், அதன் வாசனையும் அருமை. நல்ல படைப்பு எழுதுகையில் படைப்பாளனின்
உள்ளே பூத்து மணம் வீசுகிறது. அது வாசிக்கிற சாமானியனை மேலும் உன்னதங்களுக்கு அழைத்துச்
செல்ல வல்லதாயும் அமைகிறது. சாமானிய மனிதன் நல்ல தன்மைகளை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது.
ஒட்டுமொத்த சமுதாய மேன்மையைக் கருத்தில் கொண்டு அப்படிப் படைப்புகள் கால காலத்துக்கும்,
ஓர் அபூர்வ கணத்தில் படைப்பாளர்களால் கண்டடையப் படுகிறது. ஒரு தவம். அதுதரும் சித்தி.
அதன் பயனாக வாசகர்கள் பெறும் வரம்.
ஜெயமோகனின் இந்த
‘சோற்றுக் கணக்கு’ கதையில் கடைசிவரை அன்னதானம் செய்வதைப் பண்பாகக் கொண்டவர் தாழ்வே
வராமல் காட்டப் படுகிறார் என்பது ஒன்று. அந்த உறவுக்காரப் பெண்மணி... தன் வறுமையில்
அதிருப்தி அவளுக்கு. பணம் பணம் என்கிற உள்அலைச்சல். கடைசிவரை அவள் அப்படியான ஏக்க வாழ்க்கையே
வாழ நேர்ந்து விடுகிறது. அதையும் கவனிக்க வேண்டும்.
‘நீலமலைத் திருடன்’
என்ற திரைப்படம். பெயர் சரியாகச் சொல்கிறேன், என நினைக்கிறேன். கதை இதுதான். காட்டில்
மறைந்து வாழும் ஒரு திருடன். ஒரு சந்நியாசியைக் காட்டில் சந்திக்கிறான். ஒரு வேடிக்கை
போல அவன் அவரிடம், நான் கைக்கொள்ளும் எளிய வாழ்க்கை முறை ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்,
என்று வேண்டுகிறான். இன்றிலிருந்து பொய் சொல்லாதே, என்கிறார் துறவி. அவ்வளவு தானே,
சுலபமான விஷயம் தான், நான் அப்படியே நடந்து கொள்கிறேன், என்கிறான் திருடன். பிறகு அரசனின்
சிப்பாய்களிடம் மாட்டிக் கொள்கிறான். அரச சபையில் அரசன் அவனிடம் ’‘நீ யார்?” என்று
கேட்டபோது “நான் ஒரு திருடன்” என்று ஒப்புக் கொள்கிறான். கிடைக்கும் தண்டனை அவனுக்கு
வருத்தமாகவே இல்லை, என ஆச்சர்யத்துடன் அவன் உணர்கிறான். இப்படி படிப்படியாக அவனது மனசின்
மாற்றங்கள் அருமையாக அந்தத் திரைப்படம் சொல்லும்.
ஒரு கெட்ட பழக்கம்,
மற்றொன்று மற்றொன்று என அநேக கெட்ட பழக்கங்களைக் கொண்டுவரும், என்கிற கருதுகோளுக்கு
நேர் எதிர்த் திசையில் எவ்வளவு அழகாக இந்தக் கதை புனையப் பட்டிருக்கிறது. லா.ச.ரா.வின்
‘குருஷேத்திரம்’ கதையை இதனோடு வைத்துப் பார்க்கவும் முடியும்.
அடாடா. எம்.ஜி.ஆர்.
நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ பார்த்தது உண்டா? என்ன அற்புதமான படைப்பு.
PULP FICTION காலத்தில்
இலக்கியத்தை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. வாசகன் தேடிக் கண்டடைய வேண்டும். ஆய்ந்து
தெளிதல் வேண்டும். நல் இலக்கியங்கள் அவனுக்குக் காத்திருக்கின்றன.
**
storysankar@gmail.com
91 97899 87842 / 94450 16842
No comments:
Post a Comment