Friday, February 22, 2019


பகுதி 30
மொழிபெயர்ப்பு எனும் படைப்புக்கலை
எஸ்.சங்கரநாராயணன்
2018ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘மொழியாக்க விருது’ பெறுகிறேன். 19.02.2019 அன்று காலை 09.30 அளவில்  முதல்வர் அறையில் வைத்து விருது வழங்கப் படுவதாக கைக்கு வந்திருக்கிறது அரசாணை. (இதை எழுதும் நாள் 17.02.2019) எப்படியும் இந்த ‘யானையின் வண்ணப்படம்’ தொகுப்பின் ஒரு கட்டுரையாக ‘மொழிபெயர்ப்பு’ என்ற தலைப்பில் நான் எழுத இருக்கிறது தானே?
என்னைவிட என் நண்பர்கள் இதில், எனக்கான இந்த விருது சார்ந்து அதிக உற்சாகம் அடைகிறார்கள். எனது சிறப்புகளில் மாத்திரம் அல்ல, வாழ்வின் சிக்கலான கணங்களிலும் அவர்கள் என்னுடனேயே நெருக்கமாய், கூடப் பயணிக்க விரும்புகிறார்கள். அந்த நட்புவட்டம் எனது பெருமை. மூன்று வருடங்கள் முன்னால் எனது நண்பனும் பதிப்பாளனுமான உதயகண்ணன், முதல்வர் ஜெயலலிதா அவர்கள் புதிதாய் மொழியாக்க விருதுகளை அறிவித்திருப்பதாகவும், உங்களைப் பற்றிய குறிப்புகளையும் நான் தரலாமா, என்றும் கேட்டான். நான் எதிர்பாராமல், ஒரு முன்னிரவுப் பொழுதில் இப்போது திடீரென்று இந்த விருது அறிவிப்பு - அலைபேசிச் செய்தி, வந்தடைந்தது. உதயகண்ணனுக்கு நன்றி. அவன் விண்ணப்பத்திருக்கா விட்டால் இது வந்துமிராது. எனக்கே ஒருவேளை இதுபற்றித் தெரிந்துமிராது.
இதுவரை ‘உலகச் சிறுகதைகள் தொகுதி‘ நான்கு நூல்கள் தமிழில் தந்திருக்கிறேன். முதல் தொகுதி ‘கனவுச் சந்தை.’   அதன் முதல் கதை ROUND THE BEND, மேற்கு இந்தியத் தீவுகள் எழுத்தாளர் சாமுவேல் செல்வான் எழுதியது. நான் மொழிபெயர்த்த முதல் சிறுகதை இதுதான்.
முள்னதாக 3தமிழின் ஆக மோசமான மொழிபெயர்ப்புகளை நான் வாசித்திருந்தேன். அதுபற்றி அவனிடம், உதயகண்ணனிடம் நான் கேலியாடிக் கொண்டிருந்தேன். எப்பவுமே உற்சாகம் கிளம்பி விட்டால், நான் கேலியாடுவதில் இறங்குவதுதான். நான் படித்த மோசமான மொழிபெயர்ப்பு உதாரணங்களை, நிஜ அனுபவங்களை, இங்கே தவிர்க்கிறேன். விருது பெறும் நேரம் இது. ஆனால் அதற்காக உதாரணம் சொல்லாமல் எப்படி? HE IS A POOR TRANSLATOR - என்பதை அவன் ஓர் ஏழை மொழிபெயர்ப்பாளன், என மொழிபெயர்த்ததாகச் சொல்வார்கள். எகனாமிக் சைக்கிள், என்பது பொருளாதார மிதிவண்டி. ஆன்டன் செகாவின் ஒரு சிறுகதைத் தலைப்பு, லேடி வித் ய டாக், தமிழில் யாரோ, நாயுடன் கூடிய சீமாட்டி, என மொழிபெயர்த்ததாகச் சொல்வார்கள். வேடிக்கைக்காகச் சொல்லி யிருப்பார்களாய் இருக்கும். ஐயய்ய, எனக்கே ஒருமாதிரி இருக்கிறது.
எனது ‘கடல்காற்று’ நாவலில் ஒரு பாத்திரம் வரும். தெருவில் போய்க்கொண்டே அந்த மனிதன், வீட்டு வாசலில் டிரான்சிஸ்டர் கேட்டபடி அமர்ந்திருக்கும் பெரியவரிடம் கேட்பான். “ஆர் யு ஆஸ்கிங் சாங்ஸ்?”
சின்ன வயசில் கண்ணதாசனே சொல்வாராம் - டாக்டர் கிட்ட போய் நீடில் போட்டுக்க நான் பயப்படுவேன்.
உதயகண்ணன் சிரித்தான். என்றாலும் பிறகு சொன்னான் - நீங்களும் ஆங்கிலத்தில் வாசிக்கிறவர் தானே. அதுபற்றி நிறைய என்னிடமும் நண்பர்களிடமும் பேசுகிறீர்கள், நீங்களே மொழிபெயர்ப்பு செய்யலாமே, என்று எடுத்துத் தந்தவனும் அவனே. பதிப்பாளன் உதயகண்ணன்.
‘நிஜம்’ என சிற்றிதழ் ஒன்று நான் கொண்டு வந்தபோது, சாமர்செட் மாம் எழுதிய CAKES AND ALE நாவலில் ஒரு விவாதப் பகுதியை - A THING OF BEAUTY IS NOT A JOY FOREVER, என அமையும் அது, அந்தப் பகுதியை, சுமார் இரண்டு பக்கங்கள், மொழிபெயர்த்துத் தரும்படி கோபிகிருஷ்ணனிடம் தான் வேண்டினேன். பிறகு ஜெயமோகன், தாமஸ் மன் என்கிற எழுத்தாளரின் ஒரு கதையைத் தமிழில் தந்தார். அதை வெளியிட முடியாமல் போயிற்று. பத்திரிகை நின்று போயிற்று.
அப்போது ஒரு கதை, ஜான் அப்டைக் எழுதிய ‘வால்ட்டர் பிரிக்ஸ்,’ ஜெயமோகனுக்கு அனுப்பி தமிழில் செய்கிறீர்களா, என்று கேட்டது நினைவு. அதுவும் முற்று பெறவில்லை. அந்தக் கதையைத் தேடி எடுக்க வேண்டும். நானே மொழிபெயர்க்கலாம்.
இந்நிலையில் தான் அந்த மேற்கு இந்தியத் தீவுகள் கதையை நான் வாசித்துவிட்டு தமிழில் முயற்சி செய்தேன். ‘ரவுண்ட் தி பென்ட்’ தமிழில் ‘பின்வாசல்’ ஆயிற்று. சரி. அதை ஏன் மொழிபெயர்க்கலாம் என்று கையில் எடுத்தேன் நான்? அதன் கதையமைப்பு அப்படி. வேலையில்லாமல், பக்கத்து நாட்டுக்கு ஓடிவிட்டால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம், என கள்ளத்தோணி ஏறுகிற ஒருவனின் கதை அது. அந்தக் காலகட்டத்தில் இங்கேயும், நம்மூரிலும் ஸ்ரீ லங்காவில் இருந்து அகதிகளாக பாவப்பட்ட சனங்கள் கள்ளத்தோணி மூலம் வந்திறங்கிக் கொண்டிருந்தார்கள். எங்களது தந்தியலுவலகம் வந்து, ஸ்ரீ லங்காவுக்கு ‘கால்’ போட்டு ஒரு பெண் பேசினார். அவர் வரும்போது குண்டுவீச்சு பயங்கரமாக இருந்ததாம் ஊரிலும், கடலிலும். பேசுகிற இப்போதும் அவர் உடம்பு பயத்தில் தூக்கித் தூக்கிப் போட்டது.
ஆகவே நமது தமிழ் சனங்களுக்கு இந்த மொழிபெயர்ப்புக் கதை இணக்கமானதாக நான் நம்பினேன். அகதி என்கிற இதே சூழலில் இன்னொரு கதை கூட, ‘பெரிய எழுத்து டான் க்விக்சாட் கதை’ என நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.
முதல் கதை எல்லாருக்கும் பிடித்திருந்தது. எனக்கும் அதில் பிடித்த விஷயம் ஒன்று இருந்தது. ஒரு கதையை வாசகனாக ரசனையுடன் வாசிப்பது என்பது வேறு. மொழிபெயர்ப்பு என்று மெனக்கிடும் போது, அடேயப்பா, அதற்கு மூன்று மடங்கு கவனக் குவிப்பு தேவைப் படுகிறது. வண்டியில் நாம் தனியே போவது எப்படி, கூட மனுசாளை பின்னே ஏற்றிக் கொண்டு வாகனம் ஓட்டுவதன் கவனம் எப்படி? அதேபோலத் தானோ என்னவோ. இப்போது மூல எழுத்தாளனின் ‘பிடிகள்’ மேலும் புலப்பட்டன. அநேக சந்தர்ப்பங்களில் அவனது ஆத்மாவைக் கூட நாம் அடைய முடிகிறது. எப்பெரும் பேறு இது.
கதையுடன் பொதுவாக அந்த மூல எழுத்தாளனின் வாழ்க்கைக் குறிப்பு வெளியிடுவார்கள். சில கதைகளுக்கு மூல எழுத்தாளனைப் பற்றிய குறிப்பு கிடைக்காமல் போகும். புகைப்படம் கிடைக்காது. நான் அந்த முதல் தொகுதி ‘கனவுச்சந்தை’யில், கதையை மொழிபெயர்க்க என நான் ஏன் தேர்வு செய்தேன் என்பதைச் சொல்லி, அந்தக் கதையின் நுட்பங்களாக நான் கண்டவற்றையும், குறை எதுவும் கண்டால் அதையும் சுட்டிக்காட்டி விவாதமேடையாகவே பின்குறிப்பு இட்டேன். வாசக ரசனையை அடுத்த படிக்கு சிறிது அது ஏற்றிவிட்டால் நல்லது தானே?
2
இந்தத் தொகுதியை மதிப்புரை செய்த வெங்கட் சுவாமிநாதன், பின்குறிப்புகளைப் பாராட்டினார். அதேவேளை, எனது சில தமிழ்ப் பதப் பிரயோகங்கள், தமிழுக்கே ஆனவையாக இருப்பதால், மூலத்தோடு பொருந்தவில்லை, என கருத்துரைத்தார். இதேபோல ஞானக்கூத்தனுக்கு ஓர் அபிப்பராயம் இருந்தது. விமரிசனக் கட்டுரைகளில் நான் பாராட்டும் ஒரு முயற்சி - கட்டுரைச் சொற்கள் மிகுந்த நேரடித்தன்மையுடன், எந்தக் கலைப்பூச்சும் இல்லாமல் இருப்பது நல்லது. கட்டுரையின் விஷயம் நேரடியாக வாசகனுக்கு எளிமையாய்ச் சேர வேண்டும். கட்டுரை நடையில் நகாசு வேலைகள் வேண்டாம், என்று சொல்வேன். காரணம் அது புனைவு அல்ல. ஒரு கருத்துப் பதிவு, ஒரு கருத்தைப் பற்றிய இன்னொரு கருத்து அது, என்பது கருத்து.
ஞானக்கூத்தனுக்கு மொழிபெயர்ப்பு சார்ந்தும் இதே கருத்து இருந்தது. மொழிபெயர்ப்பு எனக் கையாளும் வார்த்தைகள் அத்தனை ‘சத்தாய்’ இருக்க வேண்டியதில்லை. நேரடியாக, அகராதியில் குறிப்பிடப் படுகிற பாணியில், அதுதவிர பூடகமாய் எதுவும் சொல்லாமல், இருந்தால் மொழிபெயர்ப்பு மூலத்துக்கு அதிக நியாயம் செய்யும், என்றார் அவர்.
மொழிபெயர்ப்பு என்பது வாசகனுக்கு வழங்கப் படுகிற தண்டனையா என்ன? நோயுற்றவனின் பத்தியச் சாப்பாடா அது? ஒரு தேர்ந்த வாசகனே மொழிபெயர்ப்பு என்று தன் வாசிப்பில் அடுத்த கட்டம் வருகிறான். அவனை அதைரியப் படுத்துவதா? அவநம்பிக்கை கொள்ளச் செய்வதா?
இது புனைவு, என்ற அளவில் புனைவின் அலங்காரங்கள் கதையில் இல்லாமல் எப்படி, என்பது எனது கேள்வியாக அவர்களுக்கு அமைந்தது. அவர்கள் அவர்கள்மொழியில் செய்யும் வித்தைகளை நாம் நமது மொழியில், மொழிபெயர்ப்பில் செய்ய என்ன தடை, என எனக்கு விளங்கவில்லை. உதாரணம் ஒன்று சொல்லி விடலாம். முல்க் ராஜ் ஆனந்தின் ‘விடியல் முகம்’ நான் தமிழில் மொழிபெயர்த்தேன். சாகித்ய அகாதெமி எனக்கு அளித்த பணி அது. PREM CHAND LIVED IN A LANE - என அவர் எழுதினார். நான் பிரேம் சந்து குடி யிருந்தது ஒரு சந்து, என எழுதினேன். பகவான் ஸ்ரீ அரவிந்தர், இறைவனின் படைப்பில் ஆகச் சிறந்த படைப்பு மனிதன், என்றும், இறைவனின் சோதனைகளின் அடுத்த கட்டம் மனிதனிடமே என்றும் குறிப்பிடுவார். My body is your playground - என அவர் சொல்வதை நான் தமிழில், என் உடல் உன் விளையாட்டுத் திடல், என்று சொல்கிறேன்.
முல்க் ராஜ் ஆனந்தின் ‘விடியல் முகம்’ பல சவால்களைக் கோரியது. சுதந்திரப் போராட்ட காலகட்டத்து நாவல் அது. அந்தக் காலகட்ட விவரங்கள் தேவையாய் இருந்தன. முஸ்லிமாக மாறிய இந்துக்களின் நிலையைச் சொல்லியது அது. பஞ்சாபின் சூழல் வருகிறது அதில். ஆகவே கதையில் இந்தி, உருது, சீக்கிய மொழிக் கலப்புடன் உரையாடல்கள் இருந்தன. ஒவ்வொரு விஷயத்துக்கும் எனக்கு ‘தகவல் உதவி’ தேடிப் பெற வேண்டியிருந்தது. அந்த நாவலையே, தற்போது அச்சில் இல்லை அது, தேடிப் பெற்றேன். புதுச்சேரியில் ராஜ்ஜா தனது தாகூர் கல்லூரியில் இதைப் பிரதி கண்டு நகல் எடுத்து அனுப்பி வைத்தார். மொழிபெயர்ப்பில் ‘மேசை வேலைகள்’ தாண்டி இப்படி நிறைய வேண்டி யிருக்கிறது, என்பதைச் சொல்லவே இதைக் குறிப்பிடுகிறேன்.
இதற்கும் மேலே, நான் பயன்படுத்தும் உரையாடல்களில் வட்டார வழக்கு வேறு. சொந்தப் படைப்புகளிலேயே வட்டார வழக்கு கூடாது, என்கிற உலகம் இது. ஆங்கிலத்தில் வரும் வசைச்சொல் இடத்தில், தமிழில் வசை ஒன்றைப் போட்டால், பொங்கிவிட்டார் வெங்கட் சாமிநாதன். காதைப் பொத்திக் கொண்டாரோ என்னவோ. ஷிட், என்பார்கள் ஆங்கிலத்தில். அதை அப்படியே தமிழில் பயன்படுத்த முடியாது. சனியனே, என்பது நம் வழக்கு.
அவர்கள் மூல மொழியில் செய்துகாட்டும் சாதுர்யங்களை நீங்கள், மொழிபெயர்க்கும் மொழி இலக்கண அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியாமல், விட்டுவிடுகிறீர்கள். மொழிபெயர்ப்பு சமயங்களில் இரண்டு மொழிகளுக்கு இடையேயான போர் அது. தமிழில், ‘உங்க அப்பாவுக்கு நீ எத்தனையாவது பிள்ளை?” என்பதை ஆங்கிலத்தில் சொல்ல முடியாது. மொழிபெயர்ப்பு விடுதல்கள் தவிர்க்க முடியாதவை. அதேசமயம் நம் மொழியிலான சாத்தியங்களைச் செய்தால் என்ன என்பது எனது நிலைப்பாடு. இன்னொரு விஷயம். HAMLET WITHOUT HAMLET  - என்ற ஷேக்ஸ்பியரின் வாசகத்தை எப்படி தமிழ்ப் படுத்த முடியும்? ஹேம்லெட் ஒரு குறுநில மன்னன். அவனது சிறு நாட்டின் பெயரும் ஹேம்லெட். அவன் இறந்துவிட்டான் என்பதை ஷேக்ஸ்பியர் இப்படிச் சொல்கிறார். HAMLET WITHOUT HAMLET.  இதைத் தமிழில் சொல்ல வேண்டியிருக்கிறது. அறிஞர் அண்ணா இதை, மணமகன் இல்லாத திருமணம் போல, எனச் சொல்வதை நான் வரவேற்கிறேன். போயடிக் லைசன்ஸ்,என்பார்கள். அது அனுமதிக்கப் பட்டுவிட்டது. டிரான்சிலேட்டர்ஸ் லைசன்ஸ், தாருங்கள் என்பது வேண்டுகோள்.
ஆங்கில மது பானங்களைச் சொல்லி வரும் ஒரு கவிதையை தமிழில் நமக்குப் பரிச்சயமான மது வகைகளுடன் சொல்லும் ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை வாசித்திருக்கிறேன். நமது தேவை என்ன? வாசகனுக்கு மூலாசிரியனின் செய்தியை நழுவ விடாமல் கூறுதல், கைமாற்றுதல், அதைச் சரியாகச் செய்கிறதாகவே நாங்கள் நம்புகிறோம். அவர்கள்? அவர்கள் செய்தியைச் சரியாகச் சொல்கிற பாவனையில் சுவாரஸ்யத்தை நழுவ விடுகிறார்கள். அசுவாரஸ்யப் படுத்தி விடுகிறார்கள் அவர்கள்.
‘கதீட்ரல்’ என்கிற ஒரு சிறுகதை., ரேமண்ட் கார்வர் எழுதியது. இதை வேறு சிலரும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழில் கூட தலைப்பை ‘கதீட்ரல்’ என்றே பயன்படுத்தினார்கள். நான் ‘வேதக்கோவில்’ என வட்டாரச் சொல் பயன்படுத்தினேன். அதில் ஒரு பார்வையற்றவன் பாத்திரம் வரும். அவனுடன் அமர்ந்து வீட்டுக்காரன் டிவி பார்த்துக் கொண்டிருப்பான். டிவியில் ரோம் நகரத்து ஒரு புராதன கதீட்ரல் காண்பிப்பார்கள். பார்வையற்றவன் வேதக்கோவில் எப்படி இருக்கும், என்று ஒரு கேள்வி கேட்பான். பார்வை உள்ளவனால் பார்வை அற்றவனுக்கு அந்தக் காட்சியை விளக்க முடியாது. அவனது வார்த்தைகள் கொண்டு பார்வை அற்றவனுக்கு அந்தக் காட்சியை  விவரிக்கவே முடியாமல் போகும். இவன் சொல்லச் சொல்ல அவன், பார்வை அற்றவன் மேலும் குழப்பமான கேள்விகளைக் கேட்பான்.
எழுத்தாளர் தமிழ்மகன் கேட்ட ஒரு கேள்வி. பார்வை அற்றவன், வேதக்கோயில் எப்படி இருக்கும், என்று கேட்டவுடன் வீட்டுக்காரன் தன் காட்சிக்கு வார்த்தை வடிவம் கொடுக்க ஆரம்பித்து, அது முழுமையாக பார்வை அற்றவனுக்கு விளக்கம் தராது, என தானே புரிந்து கொள்வான். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை, என இங்கே நான் அவனது திகைப்பை எழுதி யிருந்தேன். அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடக்கும் கதை இது, இங்கே மதுரை எப்படி வந்தது?... என்று கேட்டார் தமிழ்மகன். தமிழ் மக்கள் சுலபமாக விளங்கிக் கொள்வார்கள், என்று நீங்கள் இப்படிக் குறிப்பிட்டீர்கள், என்றால் இன்னொரு கேள்வி. மூல மொழியில் இருந்து பல கதைகள் ஆங்கிலத்துக்கு வருகின்றன. ஆங்கிலத்தில் இருந்து நீங்கள் அந்தக் கதையைத் தமிழில் மொழிபெயர்க்கிற மாதிரி, உங்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் இருந்து வேற்று மொழிக்கு இதை யாராவது மொழிபெயர்த்தால், மதுரை போன்ற பிரயோகங்கள், மொழியாக்கத்தில் மேலும் குழம்பிப் போகாதா?... என்றுகேட்டார் தமிழ்மகன்.
தமிழில் இருந்து மொழிபெயர்க்கிற ஒருத்தர், மதுரை என்பது தமிழ்ச் சூழலில் வந்த வார்த்தை என்றுகூடத் தெரியாமலா அதை மொழிபெயர்க்க வந்தார்... என்று நான் திருப்பிக் கேட்டேன். அப்படி ஒருவரை மொழிபெயர்ப்பாளர் தகுதியிலேயே சேர்க்கலாமா? மூலத்தில் உள்ளதை, அதன உணர்வு மட்டத்தில் சட்டென ஒரு உணர்வு வியூகத்துக்குள் வாசகனைக் கொண்டுவர படைப்பாளன் முயல்கிறான். மொழிபெயர்ப்பாளனும் முயல்கிறான்... என்று நான் விளக்கம் அளித்தேன்.
ஒரு மொழியில் மொழிபெயர்க்கிறவன் அந்த மொழியில் பாண்டியத்தியம் இல்லாதவனாய் இருத்தல் சோகமானது. அவன் வேறு வேலை எதுவும் இருந்தால் பார்க்கலாம். வார்த்தைகளைத் தேர்வு செய்வதில் அவன் திணறக் கூடாது. திக்குவாய் போல, திக்குமொழி அறவே கூடாது.
இதை வாசிக்கையில் ரமேஷ் வைத்யா ஒரு வகையில் தன் பாதிப்பைச் சொன்னார். ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் அடியில் கனம் என நம் பழக்கத்தில் ஒன்று கிடைக்கிறது. மதுரை என்றால் எனக்கு மீனாட்சியம்மன், பாண்டி நாடு... என எத்தனையோ அடிவண்டல்கள் கிளரப்பட்டு வாசனை மேலே வருகிறது. இப்போது இந்தக் கதையை விட்டு நான் விலகி விட வில்லையா... என்பது அவரது கேள்வி. நியாயமான கேள்விதான். உவமை என்று ஒன்றைப்போல ஒன்று என்று சேர்த்துச் சொன்னாலே இந்த அவஸ்தை இருக்கவே செய்கிறது. எந்த ஒன்றும் இன்னொன்று அல்ல. எதையும் இன்னொன்றாகப் பார்க்க இயலாது. அது மற்றும் இது, என இரண்டுமே அவற்றின் தனித்தன்மை காரணமாகவே ஜீவித்திருக்கின்றன. ஒப்புமை, அல்லது பிறிதொன்றைச் சுட்டிக் கதைத்தல் சுவாரஸ்யத்துக்காக மாத்திரமே. எளிதில் அந்த சூழலை விளக்க மாத்திரமே. படைப்பாளன் சொன்ன  தோரணை, அவன் காட்டிய வியூகம், அதைத் தாண்டி நீங்கள் தான் பிடி விலகிப் போகிறீர்கள், என நான் எடுத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது.
அதற்கும், அந்த உதாரணம் பிடி விலகிப் போக வைக்கிறது, என வாதங்கள் நீளக் கூடும்!
இதே தர்ம சங்கடம் எனக்கு எனது ‘மற்றவர்கள்’ நாவலை முனைவர் மறைமலை இலக்குவனார் வாசித்தபோது நேர்ந்தது. அந்த நாவலில் வீட்டு வளாகக் கதவை ஒருவர் திறப்பார். உள்ளே யிருந்து நாய் ஒன்று பாரதியார் போல, அந்நியர் வந்து புகல் என்ன நீதி, என்று குரைத்தது - என எழுதி யிருப்பேன். ஆகா பாரதியாரை நாயோடு சேர்த்தா சொல்வது, என அவருக்குக் கோபம் வந்து விட்டது. இது எழுத்தாளனுக்கு ஏற்படும் விபத்து அல்லது சிக்கல் தான். அதைத் தவிர்க்க முடியாது.
மன்னிக்கவும் ரமேஷ் வைத்யா. மறைமலை ஐயா.
இன்னொரு கேள்வியும் முன் வைக்கப் பட்டது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு பாணி என்று அமைகிறது. மூல மொழியில் அவன் எழுதியதை, நீங்கள் தமிழிலேயே எழுதியதைப் போல வாக்கிய அமைப்புகள் தந்தால், மூல எழுத்தாளனுக்கு அது நியாயம் எப்படிச் செய்யும்? அவருக்கும் நான் பதில் சொன்னேன் - ஒரு கதையை நானும் மொழிபெயர்க்கிறேன். இன்னொரு நபரும் அதை மொழிபெயர்க்கிறார்... என்று வைத்துக் கொள்வோம். வாசித்துப் பாருங்கள். இரண்டு மொழிபெயர்ப்புகளும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது?
ஆக எல்லாருமே அவரவர் மொழியில் தான் மொழிபெயர்க்கிறோம். மூல ஆசிரியன் தன் மொழியில் நடையில் காட்டிய சுவாரஸ்யங்களைக் கட்டாயம் மொழிபெயர்ப்பாளன் தன் ரசனை அடிப்படையில், அதிகபட்சமாக தன் மொழியில் சாத்தியப்படுத்தவே முயல்வான். அவன் அடிப்படையில் மூல எழுத்தாளனின் மிகச் சிறந்த வாசகன். அதைக் கொண்டுவராமல் அந்த மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளனுக்கு திருப்தி வராது, என்றும் எடுத்துச் சொன்னேன்.
அப்புறம், மிக முக்கியமான விஷயம். மொழிபெயர்ப்பு என்பது என்ன? மூலத்தை வாசிக்க வாய்ப்பு இல்லாதவனுக்கான ‘இலுப்பைப் பூ’ சர்க்கரை. மூலம் வாசிக்க வாய்த்தவன் மொழிபெயர்ப்பைப் புறந்தள்ளி விடலாம். இது எதற்கு அவனுக்கு? இரண்டாவது விஷயம், மொழிபெயர்ப்பு நூல்களை வாசிக்கிறவன், சராசரி வாசகனுக்கு அடுத்த மேம்பட்ட நிலையில் உள்ளவன் தான். வாசிப்பு ருசியும், எதை வாசிக்க வேண்டும் என்ற தேர்வும் உள்ளவன் தான் மொழிபெயர்ப்பு படைப்புகளை வாசிக்க வருகிறான். இதையெல்லாம் கருத்தில் கொண்டே மொழிபெயர்ப்பு, அதன் நுணுக்கமான தளத்தில் மேலதிக வசதிகளுடன் இயங்கலாம், என்பது எனது கொள்கை.
இந்த மொழிபெயர்ப்புப் பயணத்தில் விமலாதித்த மாமல்லன் வேறு ஒரு கருத்தை அவசரமாகப் பதிவு செய்திருந்தார். ஆதிக்க மாமல்லன். முல்க் ராஜ் ஆனந்தின் ‘விடியல் முகம்’ என்கிற நாவலின் என் மொழிபெயர்ப்பில், முன்னீடு நான் தந்திருந்தேன். அதில் மொழிபெயர்ப்பு என்பது இருவர் ஓரணியாக ஆடும் டென்னிஸ் ஆட்டம், என்று சொல்லி யிருந்தேன்.  ஒரு மொழிபெயர்ப்பில் மூல ஆசிரியனுக்குக் குறைந்தது அல்ல மொழிபெயர்ப்பாளனின் பணி. அவர்கள் இருவருமாகவே அந்த மொழிபெயர்ப்புப் பணியில் இயங்குகிறார்கள். அது ஓர் டென்னிஸ் இரட்டையர் ஆட்டம், என்று நான் சொன்னதை விமலாதித்த மாமல்லன் கேலி செய்கிறார். “டென்னிஸ் நான்கு பேர் ஆடும் ஆட்டம் அல்லவா, மீதி இரண்டு பேர் எங்கே?” என்று எழுதி யிருந்தார். எங்கள் தரப்பில் எதிரணி ஆட்டக்காரர்கள் வாசகர்கள், இலக்கியம் என்பதே பகிர்தல் தானே... அவர்களே மற்ற இருவர் என்பது வெளிப்படை. இதில் அவர் புரிந்துகொள்ள சிரமம் என்ன, மேலடி அடிக்க அவருக்கு ஏன் அவசரம், என்று புரியவில்லை. அவருக்கு நான் அப்போது பதில் சொல்லவில்லை.தேவையும் இல்லை, என நினைத்தேன்.
3
இந்த எழுத்துப் பயணத்தில் நான் மொழிபெயர்ப்பைப் பொறுத்த அளவில் சில தெளிவுகளுக்கு வந்திருக்கிறேன். முதல் கதையில் இருந்தே, இத்தனை ஸ்பஷ்டமாக என்னால் அப்போது சொல்ல முடியா விட்டாலும், அந்தத் தெளிவு என்னிடம் இருந்ததாகத் தான் நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு என்பது குமாஸ்தா வேலை அல்ல. மொழிபெயர்ப்பு என்பது சொந்தப் படைப்புக்கு சற்றும் சளைத்தது அல்ல. ஒருவரது சுய படைப்புகளைப் போலவே, அவரது மொழிபெயர்ப்புக்கும் நோக்கும் போக்கும் உள்ளது. இருந்தாக வேண்டும்.
ஒரு காலத்தில், எனது இளம் பருவத்தில், எனது ஆறாவது ஏழாவது வகுப்புப் பருவத்திலேயே எங்கள் ஊர், ஸ்ரீவைகுண்ட நூலகத்தில் மொழிபெயர்ப்பு நூல்கள் நான் நிறைய வாசித்திருக்கிறேன். யாரும் எடுக்காமல் புதிதாய் அவை எனக்குக் கிடைத்தன. முழுசும் புரியாவிட்டாலும், அந்த என் வயதுக்கு இவை புரிய காலம் எடுக்கும் என எனக்கே தெரிந்திருந்தது. என்றாலும் வாசிப்பு ஆர்வம் எனக்குக் குறையவில்லை. புரியவில்லை என்பது பிழை அல்ல. காத்திருப்பேன். நான் கற்றுக் கொள்வேன், என்றிருந்தது. அந்த மொழிபெயர்ப்புகளை மக்கள் வெளிநாடு, அதன் வாயில் நுழையாப் பெயருடைய ஊர்கள், புது மனிதர்கள், அவர்களது, நம்மில் இருந்து வேறான பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள், நம்பிக்கைகள், அந்த ஊர் அமைப்பு எல்லாமே வாசிக்க சுவாரஸ்யம், என்று வாசித்தார்கள். பட்டிக்காட்டான் பார்த்த மிட்டாய்க் கடை. மொழிபெயர்ப்புகள் அப்படி வேறொரு உலகத்தை நமக்கு அறிமுகம் செய்தது. கடும் பனி. தெருவெங்கும் பனி கொட்டி மூடிக் கிடக்கிறது. எங்கள் ஊர்ப் பூங்காவில் பன்னீர்ப் பூ உதிர்ந்து தரையே மூடிக் கிடக்கும். அந்த நாட்டின் அந்த ஊரில், பாரப்பா, பனியே இப்படி மூடிக் கிடக்கிறது. அதெல்லாம் வாசிக்க ஆச்சர்யம்.
பிறகு முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம் என்று ருஷ்ய மொழிபெயர்ப்புகள் நிறைய வர ஆரம்பித்தன. அவை கம்யூனிச சித்தாந்தத்தை வளர்த்தெடுக்கும் பணியில் பங்காற்ற ஆரம்பித்தன. புரட்சி பேசின அவை. வர்க்கம், பூர்ஷ்வா என புது வார்த்தைகளை அவை நம் புழக்கத்துக்குக் கொண்டு வந்தன. போராடுவதே வாழ்க்கை, என்றன அவை. தொண்டர்கள் போராடட்டும், தலைவர்கள் அதன் பயனை அனுபவிக்கலாம்.
அந்த நாட்டின் கொள்கைகளைப் பரப்பவே அவை தமிழில் மொழிமாற்றம் கண்டன. அது ஒரு கால கட்டம்.
விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்தில் இப்போது வேற்று நாடுகள், அதன் செய்திகள், தத்துவப் பார்வைகள் என எல்லாமே இப்போது நமக்கு அறிமுகம் ஆகிவிட்ட நிலையில் மொழிபெயர்ப்பில் அந்த ’முந்தைய கால’ சுவாரஸ்யம் வாசகனுக்கு இப்போது இருக்க வாய்ப்பு இல்லை, என நான் நினைத்தேன்.
அப்படியானால் இன்றைய கால கட்டத்தில் மொழிபெயர்ப்பின் பணி என்ன? பங்களிப்பு என்ன?
மனிதன் எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் அவன், உணர்வு அடிப்படையில் ஒருவன்தான், என நான் நம்புகிறேன். WAR, BEER சார்ந்த கதைகளைத் தாண்டிய இன்றைய உலகில் கதைகள் மனிதனைப் பொதுமனிதனாக, ‘உலக மனிதனாக’ அடையாளம் காட்ட வேண்டும். இலக்கிய உலகின், மொழிபெயர்ப்பு உலகின் தேவை அதுவே, என நான் நினைத்தேன்.
என் கதைகளை ஆகவே நான் அப்படித்தான் மொழிபெயர்க்க எனத் தேர்வு செய்கிறேன். அன்டன் செகாவ் பொது மனிதனைத் தான் தன் கதைகளில் படைக்கிறார். ஹெமிங்வே கதைகளில் மனிதன் மகத்தானவன் என்ற குரலே பிரதானமாக ஒலிக்கிறது. நான் மொழிபெயர்க்கும் கதைகளில் என் கவனம், மனிதன் உணர்வு அடிப்படையில், தமிழனும்,வேற்று நாட்டவனும் வேறு வேறானவன் அல்ல, என்றே கூற வருகின்றது. என் மொழிபெயர்ப்பின் அடிப்படை நோக்கமாக, அடிநாதமாக, ‘உலக மனிதனே’ இருக்கிறான். தமிழ் இலக்கியத்தில் தனி மனிதனைத் தாண்டி, ஒரு சமுதாய மனிதனை வகைமாதிரியாக நாம் முன்னிறுத்துகிறோம். அப்போது தான் அதற்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்கிறது. அதேபோலவே, மொழிபெயர்ப்பில், நான் தேர்வு செய்யும் கதைகளில், ‘உலக மனிதன்’ அடையாளம் பெறுகிறான்.
GO LOVELY ROSE - ஹெச்.ஈ.பேட்ஸ் என்கிற  இங்கிலாந்து எழுத்தாளரின் கதை. ‘டேட்டிங்’ என்று பெண் காதலனுடன் கிளம்பிப் போய்விடுகிறாள். அன்றைக்கு இரவு அந்தப் பெண்ணின் அப்பா தூக்கம் வராமல் வீட்டு வாசலில் அந்த இரவு முழுசும் தவிக்கிறார். வீட்டு வாசல் தோட்டத்துப் பனியில் இங்குமங்கும் விடிய விடிய நடந்தபடி தன் பெண்ணுக்குக் காத்திருக்கிறார்... என்பது கதை. இதை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அவரது உணர்ச்சிகள் ‘எல்லா’ தந்தைக்குமானது தானே?
உலகப் பொது மனிதன், என என் மொழிபெயர்ப்புப் பாத்திரங்களை வாசிக்கையில், மேற்சொன்ன கேள்விகள், சந்தேகங்கள் என் மொழிபெயர்ப்பு வியூகம் பற்றி, எழ வாய்ப்பே இல்லை, என்று தோன்றுகிறது. நான் மொழிபெயர்க்கும் கதைகள் வெறும் சுவாரஸ்ய நகல்கள் அல்ல. அது அல்ல என் பணி. இது எனக்குத் தெரியும்.
--
பின் குறிப்பு
தமிழக முதல்வர் அறையில் தகுதியுரைப் பட்டயமும் பொன்னாடையும் ரூபாய் ஒரு லட்சம் காசோலையும் அமைந்த ‘2018ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது’ 19 02 2019 அன்று பெற்றுக் கொண்டேன்.
storysankar@gmail.com
9789987842 - 9445016842

Friday, February 15, 2019

week 29

‘சாஸ்தா பிரீதி’ முதலிய கதைகள்
(சென்ற வாரத்தின் தொடர்ச்சி)


(குசிகர் குட்டிக் கதைகள், அ.மாதவையர், பக். 184 விலை ரூ 115/- வெளியீடு 2012. வைகுந்த் பதிப்பகம், 275 ஜே ஜே பவன், கணபதிநகர், நாகர்கோவில் 629002. அலைபேசி 94420 77268)
மாதவையாவுக்கு அத்தனை பெரிய வடுவை உள்ளத்தில் கொடுத்திருக்கிறது அவர்சார்ந்த சமூகத்தின் பொது செயல்பாடுகள். தவிரவும் கல்லூரிக் காலங்களில் பெண், இளமை, அவளது திருமணம், தங்களது திருமணம், வரதட்சிணை... இப்படியே அது மூச்சும் பேச்சுமாக பரபரத்தும் இருக்கலாம் அல்லவா?
ஆனால் தொகுப்பின் ஆகச் சிறந்த கதை ‘சாஸ்தா பிரிதி.’
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை, தற்கால இலக்கியத் தலைவர் முனைவர் சு. வேங்கடராமன் (தற்போது ஓய்வு பெற்று சென்னைவாசி இவர்.) இந்தக் கதையின் தேவையை என்னிடம் சொன்னபோது, நான் சென்னை மண்ணடி பக்கம் இருந்த மறைமலை அடிகள் நூலகத்தில் பஞ்சாமிர்தம் இதழின் பழைய பிரதிகளில் இந்தக் கதையைக் கண்டுபிடித்து என் கையெழுத்தில் நகலெடுத்து அவருக்கு அனுப்பித் தந்தேன். பின்பு அதைத் திண்ணை இணைய இதழிலும், எனது ‘ஞானக்கோமாளி’ பிளாக்கிலும் வெளியிட்டு மகிழ்ந்தேன்.
இந்தக் கால கட்டத்தில் சிறுகதை என்பதன் வடிவம் பற்றி மாதவையா தனக்குள் பிடிபட்டாப் போல உணர்ந்திருக்க வேண்டும். கதை சம்பவ ஒருமையுடன் அதைநோக்கிய எடுப்பு தொடுப்பு முடிப்பு எல்லாமாய் ஜோராய் அமைகிறது. ஒரு நாவல் சுருக்கம் போன்ற பெரிய காலவெளியை இந்தக் கதைக்குள் அவர் அடைக்கவில்லை. ஆரியன்காவு என்கிற ஊர். மன்னர் கொடையில் நடக்கிற பிராமணர்களுக்கான ஊட்டுப்பிறைச் சாப்பாடு. ஆரியன்காவு கோவிலின் கடவுள் தர்ம சாஸ்தா. அவருக்கான பிரீதி நடக்கிறது. பூஜை முடிவில் பக்தர்களில் யாருக்காவது ‘சாமி’ வரும் என்று ஐதிகம். சாஸ்தா, அவர்-உருவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதும், அவர்களின் குறைகளைக் கேட்பதும் நடந்தேறும். வெகுநேரம் யாருக்குமே ‘சாமி’ வராத நிலையில் பசியுடன் இருக்கிற ஒரு பிராமணர் தன்னில் ‘சாமி’ இறங்கி விட்டதாக ஆவேசமாய் நடிக்கிறார். பிறகு அவரும் அவரது சிநேகிதரும் கை நிறைய தட்சிணையும் சிறப்பு உபசாரங்களுமாக ஊட்டுப்பிறை உணவு உண்கிறார்கள்.
ஒரேயொரு சம்பவம். அதைச் சுற்றி நிகழ்கிறது கதை.
‘சாமி’ வருவது போல நடிப்பது, என்று சொல்கிற அவர், அந்த பிராமணரைக் குவித்துக் கதை சொல்கிறார். தொகுதியின் பிற கதைகளில் போல, எல்லா பிராமணரும் மோசம் என்கிற வறட்டு வேதாந்தம் இதில் இல்லை, என்றே என் வாசிப்பில் படுகிறது. ஆனால் சொல்ல வேண்டியதைச் சொல்வேன், என்கிற உறுதி. பிராமணரில் இப்படி ஏமாற்றிப் பிழைக்கும் ஆட்கள் இருப்பதை அடையாளம் காட்டுகிறார். வெளிப்படையான விமரிசனங்கள் அற்று, ஒரு காலகட்டம், அதன் ஒரு நிகழ்வு பற்றிய பதிவு என்கிற அளவில் அவர் எழுதிச் செல்வது சிறப்பு. அதில் இருந்து வாசிக்கிறவர் தாமே தன் விமரிசனைத்தை வைத்துப் பொருத்திக் கொள்ள முடியும், என்பது இந்தக் கதையைக் கலைப்படைப்பாக மாற்றிவிடுகிறது.
தெளிவான நீரோட்டமான கதை.
இருக்கும்போது இல்லை
வாழ்ந்த காலத்தில் தன் பெற்றோரை, வீட்டு முதியவர்களை ஒழுங்காக வைத்துக் கொள்ளாமல், அவர்கள் இறந்த பிறகு சிரார்த்தம் என்ற பெயரில் அவர்களுக்கான திவசத்தை சிரத்தையாய்ச் செய்யும் பாவனை பற்றிய கதை. சிரார்த்தத்துக்கு வரும் வைதிகரோ, திவச பிராமணரோ, சிரார்த்தம் செய்கிறவர்களோ அன்று காலை சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு சிரார்த்தம் செய்ய வேண்டும். இவர்களில் யாருமே காலையில் காபியாவது சாப்பிடாமல் சிரார்த்தம் செய்ய அமர்வது இல்லை. ஒருத்தரிடம் மற்றவர் சொல்லிக்கொள்ளா விட்டாலும் அவரவர் அளவில் காலையில் காபி சாப்பிட்டுவிட்டே சிரார்த்தத்தை நடத்துகிறார்கள். வீட்டுக்காரர் தந்தைக்கு சிரார்த்தம் கொடுத்தபின் அன்றிரவும் சாப்பிடக் கூடாது. அவர் அன்றைக்கு ராத்திரி சாப்பாடு சாப்பிடுகிறார். அவர் மாத்திரமல்ல, சாஸ்திரிகளும் கூட அப்படி, என்கிறார் மாதவையா. சிரார்த்தம் நடந்த வீட்டில் கதை செல்கையில் வம்படியாக கதையை கூட ஒரு வரி என்று, வைதிகரைப் பற்றியும் சொல்கிறார், என்பது வலியத் திணித்த குற்றச் சாட்டு. இந்த அம்சம்தான் போன கதை ‘சாஸ்தா பிரீதி’யில் இல்லை என்று குறிப்பிடப் பட்டது.
கதையை முடிக்கிறார் கிண்டலாக, ஒரு கட்டுரைத் தனத்துடன் - “இவ்வாறு, அந்த ‘ஏழை வழிப்போக்கிப் பிராமணரின்’ சிரார்த்தம் எல்லோருக்கும் திருப்தியாக, நடந்தேறியது.”
இனி அவர் நெஞ்சு வேகும்
படிக்காத பெண்களின் பொருமலுக்குத் திரும்ப வருகிறார் மாதவையா. படித்த நாகரிக மோஸ்தர் பேணுகிற பெண்களை இவர்கள் வசை பாடுகிறார்கள். இதெல்லாம் நல்ல குடும்ப ஸ்திரீகளுக்கு அழகல்ல, என்கிறார்கள். கதையில் கூனப்பாட்டி வருகிறாள். குற்றங்களின் மூட்டையைச் சுமந்து திரிகிறாள் அவள். ஊர் எப்படி உருப்படும் என்று அவள் எரிச்சல் பட்டுக் கொண்டே யிருக்கிறாள். கம்பராமணயம் தொட்டு, கூன் விழுந்த பாட்டிகள் வில்லிகளாக அமைந்து விட்டார்கள் கதைகளில், என்பது துக்கம் தான்.
கதையில் ஓர் உரையாடல் - (கூனப்பாட்டி) என்ன பெருமை அந்தப் பெண்ணுக்கு! தலைமயிரை, எல்லாரையும் போல் பின்னிக் கொள்ளாமல், ஏதோ பிஸ்கோத் கட்டாம், அப்படிக் கட்டிக் கொண்டு, மயிர் ஊசியும் செருகிக் கொள்கிறாள். இப்படிப் பட்ட பெண்கள் ஒரு நாளும் குடும்பங்களில் முன்னுக்கு வந்து உருக் கூடுகிறதில்லை.
(ராஜம்) - தலையைக் கட்டிக் கொள்கிறதுக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?
ருதுவாகிற வயதில் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்காமல் அப்பா அவளைப் பள்ளிக்கு அதுவும் எல்லா சாதிமாரும் படிக்கும் ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புவதை நிந்திக்கிறார்கள். இந்தப் பெண்களின் உரையாடலைப் போலவே, அடுத்து ஆண்களின் கலந்துரையாடலைத் தருகிறார் மாதவையா. இதே விவகாரம் அவர்கள் மத்தியில் பிரஸ்தாபிக்கப் படுகிறது. (இதில் ஒரு சுயகவனமான உத்தி இருக்கிறது அல்லவா?) அந்தக் கூட்டத்தில் பல பாஷைக்காரர்களும், அரசாங்கத்தில் பல நிலையில் வேலை செய்கிறவர்களுமாக அவர்கள் அமைகிறார்கள்.
ஐரோப்பியரை நாம் மிலேச்சர்களாக மதிக்கிறோம். ஆனால் அவர்களுக்கு சலாம் போட்டு வாழ்கிறோம். இந்திய பஞ்சமர் என்றால் மட்டும் ஆசாரமும் சாஸ்திரமும் வந்து விடுகிறதா, என்று ஒருவர் கேட்கிறார். அதன் நியாயத்தைப் பாதி ஏற்றுக் கொள்கிற ஒருத்தர், ஊர் மாறட்டும், யாராவது மாற்றிக் காட்டட்டும், நானும் மாறுகிறேன், என்கிறார்.
இங்கே ராமசேஷையர் ஒரு நேரடிப் பிரசங்கமே நிகழ்த்துகிறார். “ஆனால் அவர்களைச் சீர்திருத்தி சத்துக்களாக்க வழி தேடுங்கள். எங்கள் பள்ளிக்கூடங்களில் நுழையக் கூடாது, தெருக்களில் நடக்கக் கூடாது, எங்கள் கிட்டவே வரக் கூடாது. நீங்கள் மிருகங்களிலும் கீழான சடங்கள், ஆனால் உங்களை மேம்படுத்த நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம். நம்முடைய சொந்த ஜனங்களையே, எவர் உழைப்பினால் நாம் நாகரிகமாக வாழ்கிறோமோ, அவர்களையே நாம் இப்படி நடத்தினால், பின்பு வெள்ளைக்காரன் நம்மைச் சரியாக நடத்தவில்லை என்று முறையிட நமக்கு நாவேது?”
- இவ்வளவு தன்னிலை விளக்கமாக இந்த நூலில் வேறு எங்குமே மாதவையா தன்னை அடையாளங் காட்டவே யில்லை.
சேஷையர் பறைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கூடம் நடத்துகிறார். இரவு எட்டு மணி வரை அவர் பாடம் பயிற்றுவித்து விட்டு வீடு திரும்பினால் மனைவி அவரிடம் பிராது வைக்கிறாள். ஊரெல்லாம், தங்கள் பெண் இத்தனை வயதாகியும் திருமணம் ஆகாமல் வீட்டில் இருப்பது பற்றி வம்பு பேசுகிறார்கள், என்கிறாள். வரதட்சிணை, சீர் என்று அவரால் செலவு செய்ய முடியவில்லை, என்று பேசுகிறார் சேஷையர். தன் மூத்த பெண்ணை வயதுக்கு வருமுன்பே கட்டிக் கொடுத்தது குறித்து அவருக்கு வருத்தம். இளைய மகளையாவது சாஸ்திரப்படி, வயதுக்கு வந்து நாலைந்து வருடங்கள் கழித்து கல்யாணம் செய்து கொடுக்க உத்தேசிப்பதாக சேஷையர் சொல்கிறார்.
பெண்கள் ருதுவாகுமுன்பே கல்யாணம் என்று அவர்களைப் பிணைப்பது இடைப்பட்ட காலத்தில் நுழைந்த விஷயம் தான், என வலியுறுத்தியே அடிக்கடி பேசுகிறார் மாதவையா.
இந்நிலையில் பாம்பு கடித்து சேஷையர் இறந்து போகிறார். சமூகத்தைத் திருத்தும் அவரது நடவடிக்கைகளின் பாவங்ளால் தான் இந்த மரணம் என்று ஊர் பேசுகிறது. அந்த இரண்டாவது பெண்ணுக்கு, வேறு வழியில்லாமல், ஒரு நாற்பத்தைந்து வயது வரனுக்கு இளைய பெண்ணை திருப்பதிக்குப் போய் மணம் செய்துகொடுக்க ஏற்பாடு ஆகிறது. அந்த பிராமணன் அங்கேபோய் வரதட்சிணை 800 கேட்டு முரண்டு பிடிக்கிறார். கல்யாணம் நின்று போகிறது. ஊரார் யாரும் இவர்களுக்கு ஆதரவாக ஆறுதலாகப் பேசவில்லை. அந்த மாப்பிள்ளைக்கே அவர்கள் சாதகமாகப் பேசினார்கள்.
இந்தத் தொகுதியிலேயே எத்தனை கல்யாணங்கள் இப்படி நின்று போகின்றன. பெரும் துக்கம் தான். இத்தனை செலவு செய்து ஏற்பாடுகள் செய்து நடத்தப் படுகிற கல்யாணத்தில் பேரும், மானமும், பொருட் செலவும் அத்தனையும் திகைத்துப் போகின்றன. கல்யாணம் நின்றுபோன காட்சியை வைத்தே தனிக் கதை எழுதலாம் போலிருக்கிறது.
இந்தக் கதையில், பிறகு கல்கத்தாவில் இருந்து வந்த உறவினர்களின் மேற்பார்வையில் காமு என்கிற சேஷையரின் இரண்டாவது மகள், கல்யாணம் நின்றுபோனவள், தொடர்ந்து படித்து அழகிலும் கல்வியிலும் மேன்மை பெறுகிறாள். மாதவையா எழுதுகிறார் - “இதைக் கண்ட ஊராரெல்லாம் செல்லம்மாள் குடும்பத்தை, வம்பளக்கும் விஷயம் தவிர, இதர விஷயங்களி லெல்லாம் விலக்கி வைத்தார்கள்.”
அந்த ஹோட்டலில் தீ விபத்தாமே? - ஆமாம். அரிசியைத் தவிர எல்லாம் வெந்து போச்சு - என்பார்கள். அது நினைவு வருகிறது.
காமு, கல்வியும், அழகும், சங்கீத ஞானமும் நிறைந்த பதினேழு வயதுள்ள யுவதியான பின்பு, (ஆகா, பெண்ணெனும் குருத்து பளபளவென்று இலை விடுவது எத்தனை அழகு.) கல்கத்தாவில் அவள் அத்தான் சிநேகிதன், பி.ஏ. பட்டம் பெற்று உயர்ந்ததோர் உத்தியோகத்தி லிருப்பவன், சுமார் இருபத்திரண்டு வயதுள்ள ஒரு யௌவன புருஷனுக்கு மணஞ் செய்து கொடுக்கப் பட்டாள். இதே ஊரில் கோலாகலக் கல்யாணம். கல்யாணத்துக்கு வந்த பிராமணர்கள் சாப்பிடாமல் போகிறார்கள். பறைப் பிள்ளைகளுக்கு, அவர்கள் பள்ளியில் விருந்து நடந்ததுமன்றி, வஸ்திர தானமும் செய்யப் பட்டது.
ஆரம்பம் போலவே, வீரபத்ரையர் வீட்டில் நிகழ்ந்த சம்பாஷணையுடன் கதை முடிவு பெறுகிறது. கூனப்பாட்டி, வழக்கமில்லா வழக்கம் இது, என நொடிக்க ஒருத்தி பதில் சொல்கிறாள். இப்படி இன்னும் சில கல்யாணங்கள் நடந்து விட்டால், இதுவே வழக்கமாகி விடும்.
இதைப் பார்க்காமல் ராம சேஷையர் இறந்து விட்டாரே, ஆனால் இனி அவர் நெஞ்சு வேகும், என ஒருத்தி நினைக்கிறபடி கதை முடிவு பெறுகிறது. எப்பவோ செத்துப்போன, எப்பவோ தகனம் செய்த ராம சேஷையர் நெஞ்சு வேகும், என இப்போது குறிப்பிடுவது தான் புரியவில்லை! அவர் ஆத்மா சாந்தியடையும், என்கிற மாதிரி எதையாவது சொல்லி யிருக்கலாமோ?
கதையின் தலைப்பே இப்படி இருக்கிறது.
நரி பரியான அற்புதம்
ஆனால் இக்கதைகளில் நாவல் சுருக்கம் என்பதைத் தாண்டி கதை ஒரு நல்ல நகர்வைப் பெறுகிறது. தங்கையின் கணவர் இறந்து விட்டார், என தந்தி வருகிறது. கேசவையருக்கு. தங்கைக்கு மாதா மாதம் பண உதவி செய்கிறார் அவர். மனைவி நொடித்தாலும் அவர் உதவி செய்யத் தயங்கவே இல்லை. தங்கைபையன் கல்விக்கும் அவர் பெரும் உதவி செய்கிறார். தன் பெண்ணைப் பிற்காலத்தில் அவனுக்குத் தந்து மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ளலாம், என தன் யோசனையை மனைவியிடம் சொல்லி, தங்கைக்குப் பணம் அனுப்பும் செலவுகளை மனைவி தடுக்காமல் பார்த்துக் கொள்கிறார்.
ஆனால் தங்கை இங்கேவந்து அவர்களுடனேயே தங்க நேர்கிறது. அப்போதும் மனைவியை அடங்கிப் போகும்படி அவர் சமாதானம் செய்கிறார். ஆனால் நல்ல படிப்பு வேலை என்று அமர்ந்த பையன், தன் அம்மா சொற்படி நல்ல வரதட்சிணையுடன் பணக்கார சம்மந்தம் அமைந்தபோது இவர்களைத் துறந்து தனி வீடு எடுத்துப் போகிறான். அதுநாள் வரை கேசவையர் தன் மனைவியின் முணுமுணுப்பையும் மீறி தங்கைக்குச் செய்த பெரும் உதவிகள் ஒரு கணத்தில் அலட்சியம் செய்யப் படுகின்றன. தன் பெண்ணுக்கு, சீதையைத் தேடி வந்த ஸ்ரீராமன் போல, நல்ல வரன் தேடி வரும், என மனைவியிடம் கேசவையர் பேசிப் புலம்புவதாக முடிகிறது கதை. இந்தக் கதையில் பணம் பத்தும் செய்யும் என்கிற செய்தியை விட, கதையை உணர்ச்சிபூர்வமாக நடத்திக் காட்டிய அளவில் மற்ற கதையை விட இது வேறுபடுகிறது.
இதைத்தான் முன்பு பேசியது. கல்யாணம் நின்று போன காவிய சோகம், அதையும் இப்படி ஒரு கதையில் உணர்ச்சிச் சித்திரமாக்கி மாதவையா காட்டி யிருக்கலாமே, என்று.
விவாக சம்ஸ்காரம்
அந்த இளைஞருக்கு, மாதவையாவுக்கு விவாகம், அதுசார்ந்த இளமையான பெண்ணின் பிரச்னைகள் திரும்பத் திரும்ப மனசில் அலையடித்ததாகத் தெரிகிறது.
கதை என்ற அளவில் இது சிறப்பான வடிவம் பெற்றிருப்பதாகவே கருத முடிகிறது. கதாநாயகன் சேஷுவுக்குப் பதினெட்டு வயது. படித்துக் கொண்டிருக்கிறான். தற்போது கல்யாணம் தேவையில்லை என்கிறான். அதையும் மீறி பெண் பார்க்கப் போன இடத்தில் ஓர் எட்டுவயதுப் பெண்ணை மணக்கச் சம்மதமும் தந்து வருகிறான். ஆனால் வரதட்சிணைக்கு ஆசைப்பட்டு அந்த வரனை முறித்து அவலட்சணமான வேறொரு பெண்ணுக்குத் தன் பையனை முடிக்கப் பார்க்கிறார் அப்பா. சேஷுவின் சிநேகிதன் இதுவிஷயமாக அந்த வேறொரு பெண்ணின் வீட்டுக்குக் கடிதம் எழுதுகிறான். அப்படியும் அப்பாக்கள் இருவருமாக சேஷுவுக்கு நெருக்கடி தந்து இந்தக் கல்யாணத்தை விமரிசையாக ஏற்பாடு செய்கிறார்கள்.
இப்படி சம்பவங்களை வரி வரியாக நாவல் சுருக்கம் போல எழுதி வந்த மாதவையா, சட்டென நிறுத்தி, “கலியாண ஏற்பாடுகளில் ஒன்றை மட்டும் விவரித்துக் கூறி, அதைப் போன்ற விமரிசையுடனேயே மற்றவைகளும் நடந்தன வென்று சுருக்கிக் கூறுவோம்” என முன் வருவது, சிறுகதை இலக்கணமே யாகும்.
ஊர்க்கோலத்தில் எதிரெதிர் நாற்காலிகள் போட்டு மணமகனையும், மணமகளையும் அமர்த்துகிறார்கள். மணமகளின் முகத்தைப் பார்ககிறான் சேஷு.
”தன் வாழ்க்கைத் துணையின் சாயலையும் ரூப லாவண்யத்தையும், சேஷு உற்றுப் பார்த்தான். அவள் வயதுக்கு அவள் அதிகம் தடித்தவள். அவள் அணிந்திருந்த நகைகளும், வைரங்களும், பல்லக்கைச் சுற்றிலும் தொங்க விட்டிருந்த மெழுகுவர்த்தி விளக்குகளுமாகச் சேர்ந்து அவள் நிறத்தை, மைக்கறுப்பாய்க் காட்டின. அவளுக்கு நெற்றி மிகவும் சுருங்கி இருந்தது. தடித்த மோவாயும், அகலமான வாயும், அப்பக் கன்னங்களும் உடையவள். அவள் கீழுதடு அதிகப் பருமனாயும், வாயைச் சரியாக மூடாமல் அவளது பெரிய பல்வரிசைகளைக் காட்டிச் சிறிது கீழே தொங்கிக்கொண்டு மிருந்தது.”
அவளை அவன் வெறுத்தான், என்று சொல்ல அவளை அவலட்சணம், என வர்ணிக்கிறார் மாதவையா.
அவளை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஊர்வலத்தில் இரண்டு தாசிகள் சதிர் ஆடுகிறார்கள். அவர்களில் ஒருத்தியிடம் கிளர்ச்சியுற்று மோகம் கொள்கிறான் சேஷு. அதை அந்தப் பல்லாக்கிலேயே அவளிடம், மணமகளிடம் சொல்கிறான். தங்கள் இருவரிடையே பொருத்தமே யில்லை, என்று புலம்புகிறான். அந்தப்பெண் “அப்படி யெல்லாம் பேசாதேயுங்கள்” என துக்கம் நெஞ்சடைக்கச் சொல்கிறாள்.
பிறகு மாதவையர் எழுதிச் செல்லும் வரிகள் அற்புதமானவை. இங்கே மணமகன் அல்ல, மாதவையா பேசுவதாகவே தோன்றுகிறது.
அவன் வருத்தத்துடன், “உன்மேல் குற்றமில்லை. என்னைப் போலவே உன்னையும் பலியிட் டிருக்கிறார்கள். என்னைவிட நல்லவர்கள் எத்தனையோ பெயர்கள், இவ்வளவு சீருடனும் விமரிசையுடனும் உன்னைக் கலியாணஞ் செய்து கொள்வதில் ஆசைப்பட்டுச் சந்தோஷப்படக் கூடியவர்கள், இருக்கவே இருக்கிறார்கள்...”
அவனது ஏமாற்றத்தைக் கூறவந்த மாதவையருக்கு அவள்சார்ந்த நியாயங்கள் பிடிபட்டிருப்பதும் அதை வெளிப்படுத்துவதும் சிறப்பு. அவன் தாசியை நினைத்து மதிமயங்கியபடி ஊர்வலத்தில் பல்லக்கில் வந்து கொண்டிருந்தான், என கதையை அப்படியே முடிப்பதும் நவீனகால சிறுகதை அம்சம் தான்.
காட்சிகளின் ஒரு சம்பவத்தில் கதை ஊன்றி நின்று குவிகிறது.
குகைச் சாமியார்
முன்பே குறிப்பிட்டது போல, கதைகளில் உணர்ச்சிக் கட்டங்களை நோக்கி மாதவையா நகர்ந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கிறது. இந்த ‘குகைச் சாமியார்’ சிறுகதை பக்தி பரவசம் என்கிற, அவர்பாணியில் அல்லாத, உணர்ச்சிக் களங்களை எடுத்துச் சொல்கிறது.
சாமியார் ஒருவர் ஒரு வளர்ப்புப் பெண்ணுடன் குகையில் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணை இருவர் விரும்புகிறார்கள். ஒருத்தன் பணப்பித்து கொண்டவன். ஏற்கனவே அவன் செல்வந்தன். அடுத்தவன் உழைப்பாளி. ஏழை. தனது அந்திம காலத்தை முன்பே அறிந்து கொள்ள முடிந்த சாமியார் அவளது திருமணம் பற்றிப் பேசுகிறார். அதுவரை அதிகம் பேசாத சாமியார் மடை திறந்தாப் போல உரையாற்றுகிறார்.
அவர் பூஜை செய்துவரும் ஒரு பெட்டி. அது நிறைய நகைகள் இருக்கின்றன. அந்தப் பணக்காரனுக்கு அந்தப் பெட்டியையும், அந்த ஏழை உழைப்பாளிக்கு அந்தப் பெண்ணையும தந்துவிட்டு சாமியார் சித்தி யடைகிறார்.
ஒருவேளை ஒரு திரைப்படம் போல காட்சிகளை அமைக்க அவர் ஆசைப் பட்டிருக்கலாம். விதவிதமாக எழுதிப் பார்க்கும் வேட்கை அடைந்திருக்கலாம். இந்தக் கதைக் கூட்டத்தில் அதைச் சேர்த்த காரணமே எனக்கு விளங்கவில்லை. புராண சரித்திரக் கதைகளின் வசிகர மொழி இதில் இருக்கிறது. ஆனால், அவர் எந்த அளவில் சாமியார், அவரது நியதி நியமங்கள் என்னென்ன, போன்ற உள் விவரங்கள், கதையில் இல்லையே.. சாமியார் என்று சொல்லிவிட்டால் அவர் சாமியார் ஆகி விடுவாரா என்ன?
ஆலமரத்தின் கீழே
சுருதி சுத்தமான சினிமாக் கதை இது.
ஒரு கணவன் மனைவி. அவர்களுக்கு ஒரு குழந்தை. மனைவியை சந்தேகித்த கணவன். மனதில் சந்தேகம் வந்தால் எத்தகைய பிசாசுகள் அவனில் புகுந்து ஆட்டும், என்றெல்லாம் விவரங்கள் இல்லை. அவன் சந்தேகப்படும் ஒருவன் அவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கிறான். அவனைக் கணவன் கொன்றுவிட்டு (என்ன அவசரம்? விசாரிக்கக் கூட பொறுமை இல்லாமல்.) ஜெயிலுக்குப் போகிறான். வருடங்கள் உருண்டோடுகின்றன. அந்தக் காலக் கதைகளில் வருடங்கள் அடிக்கடி உருண்டோடவே செய்கின்றன.
ஆனால் கதையின் சிறுகதைத் தன்மை தெளிவானது. கதை துவங்கும்போது ஓர் ஊரின் திருவிழா வைபவம் வர்ணிக்கப் படுகிறது. ஊர் ஒதுக்குப் பறத்தில் ஓர் ஆல மரத்தின் கீழே அந்தப் பெண். மடியில் குழந்தை ஒன்று. திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்திருக்கிறார்கள். வாண வேடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தூக்கம் வராத பிள்ளை அம்மாவைக் கதை சொல்லச் சொல்கிறான். அம்மா ‘தன்’ கதையைச் சொல்கிறாள்.
வருடங்கள் பின்னோக்கி உருண்டோடுகின்றன!
ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்த அவள்கணவன் அந்த ஆலமரத்தின் பின்னே யிருந்து, மீசையும் தாடியுமாக சாமியார் போல வெளிப் படுகிறான். அப்படி வெளிப்படுவது அவள்புருஷன் தான் என்று நமக்கெல்லாம் புரிந்து விடுகிறது. எழுத்தாளருக்குப் புரியவில்லை. அப்புறம் உணர்ச்சிமயமான இரண்டு பக்கங்கள். அத்தோடு அதன்பின் திருவிழாவே வரவில்லை கதையில். அவர்கள் மீண்டும் ஒன்று கூடியது, இதைவிட பெரிய திருவிழா என்ன இருக்கிறது?
நல்லவேளை வாசகரைப் பார்த்து அவர்கள் மாலையும் கழுத்துமாகக் கை கூப்ப, பூமாரி பொழிய, ‘வணக்கம்’ போடவில்லை.
புதியதோர் பிசாசு
குடியால் கெட்ட ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை இது. வெளிப்படையான பிரச்சாரம்.
ஆதி ஆரியரது வாழ்க்கை எவ்வாறாயினும், அவர்கள் சந்ததியாராகிய நமக்குள் மதுபான வழக்கம் இல்லாம லிருந்தது. வாந்திபேதி உபத்திரவம் உற்றார்க்கும், பிரசவித்தவர்க்கும் சாராயமானது அவசியமான மருந்தென்று, நமக்குள் சிலர் எண்ணுகிறார்கள். இது முற்றிலும் தவறென்பது, சிறந்த மேனாட்டு வைத்திய சிகாமணிகளின் அபிப்ராயம். (...) மேனாட்டுச் சன சமூகங்களுக்குள் நடக்கும் குற்றங் கோளாறுகளுக் கெல்லாம் குடிவெறியே முக்கியக் காரணம் என்று ஒப்புக்கொள்ளப் படுகிறது. அங்ஙன மிருக்க, உஷ்ண பூமியில் அவசிய மில்லாததும், தேச சம்பிரதாயத்தோடு முரணயிதும், பிடித்தால் விடாததுமான ஓர் ஈன வழக்கத்தை, நம்முள் சிலர் புதிதாய் அப்பியசிப்பது பரிதபிக்கத் தக்கதே. பள்ளு பறை என்று கீழ் ஜாதிகளாக மதிக்கப்படும் இனத்தாரைத் தவிர, மற்றெவருமே மதுபானஞ் செய்யாதிருந்த இந் நாட்டிலே, இப்பொழுது மேல் ஜாதியாரும் குடிக்கக் கற்றுக்கொள்வது விபரீதமே. கீழ் ஜாதியாரின் கெட்ட வழக்கத்தை நீக்கி அவர்களை மேம்படுத்த முடியாமல், தாம் அவ்வழக்கத்தை அனுசரித்து, கீழ் ஜாதியாக முயலுதல் ஆச்சரியமே!... என்று இன்னும் நீள்கிறது உரை.
கதையில் ஒரு பிராமணர் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிறார். அவர் குடும்பத்தில் பிள்ளைகளே அவரோடு உணவு உண்ணுவதைத் தவிர்க்கிறார்கள். அவர் தனிமைப்படுகிறார். தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார். இறுதியில் உடல் சுகவீனத்தால் படுக்கையிலேயே அசிங்கமான தன் உடல் கழிவுகளுடன் இறந்து கிடக்கிறார் - இதுமாதிரி நான் கேள்விப்பட்டதே இல்லை. தன் படுக்கையிலேயே மல ஜலம் கழிக்கிற நிலை குடியால் வருமா? அது சாகும் போது தான் வருமா? அதற்கு முன்பே அவர் உடல் இன்னும் பல கட்டங்களில் மெல்ல சீரழியும் அல்லவா?
தவிரவும் குடித்ததால் அவர் சமூகக் குற்றம் எதுவும் இழைத்தாப் போலவும் கதையில் காட்டப்பட வில்லை.
கதை இப்படி நாடகத் திரையுடன் முடிகிறது. புத்தகமும்.
இதை வாசிக்கும் மித்திரர் பலர்க்குச் சுந்தரமையர் குடும்பத்தைப் போல் யஜமானன் குடியினால் கெட்டுப் போன குடும்பங்கள் சில ஞாபகத்துக்கு வரலாம். (...) தீய வழக்கங்களுக்குப் புலிபோலஞ்சி விலகுவதே ஆண்மையாகும்.
இந்தக் கடைசி வரியை மாத்திரம் வாசிப்பவர், இதை கதை என்பாரா கட்டுரை என்பாரா?
*
தான் பார்த்த கேட்ட கதைகளை, பாத்திரங்களை மாதவையா பேசுபொருளாக்கி யிருக்கிறார். அதில் பிறன்மனை விழைதல், தாசியிடம் போதல் வழக்கங்கள் இல்லை போலிருக்கிறது! அந்த மட்டுக்கு மாதவையாவின் சொந்தச் சூழல் சிறப்பாகவே அமைந்திருந்தது என்று சொல்லத் தோன்றுகிறது.
இளமையும் வேகமும், தமிழில் புதிதான துறைகளான புனைவு வடிவங்களில் வசன நடை முயற்சிகள் எல்லாமாக அவரை இயக்கி யிருக்கின்றன. வசன காலப் புனைவு இலக்கிய உலகில் நமக்குக் கிடைத்த முன்னோடிகள், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பி.ஆர்.ராஜமையர், மாதவையா போன்றோர் மேதைகளாகவே அமைந்தது நமது நல்லூழ். எப்போதுமே உலக இலக்கியத்துக்குச் சளைக்காத, மேன்மையான நூல்கள் நம்மிடம் கால காலமாக காணக் கிடைக்கின்றன. இவர்கள் மேதைகள் மாத்திரம் அல்ல, தான் அறிந்த சமூகத்தை தான் உணர்ந்த அளவு அடுத்தகட்ட நகர்வுக்குத் தயார்ப் படுத்தத் தவறவில்லை, என்பது நம் பெருமை.
கதாநாயகனுக்கு மணப்பெண்ணைப் பிடிக்கவில்லை, என அவளை மோசமாக வர்ணித்த மாதவையா உடனே அவளைக் குறை சொல்வதை நிறுத்தி, “உன்மேல் என்ன பிழை?” என நாயகனைப் பேச வைத்ததை மதிக்கிறேன். நமது வழிகாட்டிகள் உன்னதமானவர்கள். இது நம் பெருமை. அதேபோல கதையின் உணர்ச்சிக் கட்டங்களைக் கையாள மெல்ல பயிற்சி யடைகிறார் மாதவையா என்று அறிந்துகொள்ள முடிகிறது.
அதேபோல, கதைக்குத் தலைப்பு ரீதியாய், திரௌபதியின் கனவு, ஒரு அபாயகரமான திரிசக்கர வண்டி, நரி பரியான அற்புதம் - என்பன தேர்ச்சியான கையாளலாக பாராட்டு பெறத் தக்கவை. வாழ வகையில்லாத தங்கைக்கு அவள் தன் குழந்தைகளுடன் கடைத்தேற வழி செய்கிறார் அண்ணா. பிறகு அவளது நம்பிக்கைத் துரோகத்தால் ஏமாற்றம் அடைகிறார். தங்கை என்ற நரியை அவர் பரியாக்கினார், என்கிற அற்புதம் தான் இந்தக் கதை, அல்லவா?
பிராமணர்களில் ஒருவரை கீழ் சாதி முனேற்றத்துக்காகப் பாடுபாட வைக்கிறார், என்பதும், படித்துத் தேறிய ஒரு பெண் நல் வாழ்க்கை வாழ்கிற ஓர் உதாரணம் காட்டியதும் கவனிக்கத் தக்கது.
புத்தகத்தின் 2012 பதிப்புரையில், “1870ல் பிறந்த மாதவையர் 1925ல் தமிழ்க் கல்வியின் தேவையைக் குறித்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது உயிர் நீத்தார்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழே மூச்சாய் மரணம் எய்தி யிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தை எனக்கு விழுப்புரத்தில் ஒரு நூலகத்தில் கண்டெடுத்து, சிரமம் மிகக் கொண்டு ஜெராக்ஸ் எடுத்து அனுப்பி வைத்தவர் டி.கே.சுப்ரமணியன். ஓய்வு பெற்ற காவல்துறை எழுத்தர். என்மேல் பாசமும் மதிப்பும் கொண்டவர். என் கதைகள் மூலம், முகம் அறியாமலேயே என்னுடன் நண்பனாக உணர்ந்தவர். நேரில் ஒரு வாய்ப்பில் சந்தித்தபோது தான் அவர் என்னை, என் பழைய இடங்களில் தேடிவந்து திரும்பியிருக்கிறார், என்று தெரிந்தது. இத்தகைய நண்பர்கள் பெரும் பேறு அல்லவா? டி.கே.சுப்ரமணியனால் இந்த வாசிப்பும், இந்தக் கட்டுரையும் சாத்தியம் ஆனது.
நண்பர் டிகேயெஸ் அனுப்பிய ஜெராக்ஸ் பிரதியில் கடைசிச் சிறுகதை “19. விதிவசம்” இல்லை, என அறியத் தருகிறேன். வாய்ப்பு கிடைத்தால் அவர் அந்தக் கதையைத் தேடித் தரட்டும்.
இந்தக் கதைகளைப் பற்றி எழுத்தாளர் சைலபதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, பிராமணர்கள் தங்கள் பொருள் வசதிக்கு ஆங்கிலேயர்களிடம் அடிமை உத்தியோகம் பார்த்துக் கொண்டே, புரட்சியும் பேசுவார்கள், அதுவும் தங்கள் சமூகம் பற்றி... என்று ஒரு வரி குறிப்பிட்டார். காலை பத்து மணிக்கு முன்பாக பஞ்சகச்சம் கட்டி பிராமண நியதிகளை, பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு, பத்து மணிக்கு மேல்கோட்டு அணிந்துகொண்டு உத்தியோகம் போய், ஆங்கிலத்தில் பேசி பணியாற்றுவது இரட்டைநிலையாக அவர்கள் உணர்ந்ததே இல்லை, என்பது உண்மையே.
ஆயினும் மாற்றம் என்பது எப்படியாவது ஏற்பட்டே ஆகவேண்டும். நதிமூலம் அங்கே தேவைதான் இல்லை, என்று சொல்லத் தோன்றுகிறது.
மாற்றம் தேவை என உணர்கிறவர்களிடத்தில் குற்றம் காண ஆரம்பித்தால், மாற்றம் சாத்தியமே இல்லை. கலங்கித் தெளிதல் உலக நியதி.
குசிகர் குட்டிக் கதைகள் ஆங்கிலத்தில் எட்டெட்டு கதைகளாக இரு தொகுதிகள் வந்தன. பிறகு பஞ்சாமிர்தம் இதழுக்கு என 22 கதைகள், அவர் மேலும் ஆறு கதைகள் எழுதியிருக்கலாம். அல்லது ஆங்கிலத்தில் எழுதியவற்றில் வடிகட்டி 16 கதைகளாக முன்பு அவை பிரசுரம் ஆகியிருக்கலாம். தமிழில் வந்த 22ல் 19 கதைகள் இங்கே இப்போது 2012ல் வைகுந்த் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சில கதைகளைக் குறைத்தும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் வரலாற்றுத் தேவை இது. குசிகர் கதைகளாக சமூகக் கண்ணோட்டம் என கவன ஈர்ப்பு செய்யாத கதைகளையும், உணர்ச்சிக் கட்டங்களையும் மாதயை கையாண்டிருக்கிறார். அதை அறியத் தர வேண்டும், என்ற அளவில் மற்ற கதைகளும் இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருக்கலாம். அதுவும் நியாயமே.
தமிழின் முக்கியமான தொகுதி இது. சிறந்த வரலாற்று ஆவணம் போன்றது. வைகுந்த் பதிப்பகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
91 9789987842 / 91 9445016842 storysankar@gmail.com


    
  

Friday, February 8, 2019

part 28

‘சாஸ்தா பிரீதி’ முதலிய கதைகள்

(குசிகர் குட்டிக் கதைகள், அ.மாதவையர், பக். 184 விலை ரூ 115/- வெளியீடு 2012. வைகுந்த் பதிப்பகம், 275 ஜே ஜே பவன், கணபதிநகர், நாகர்கோவில் 629002)
 மிழில் வந்த துவக்க கால சிறுகதை நூல்களில் மாதவையாவின் ‘குசிகர் குட்டிக் கதைகள்’ கவனத்துக்குரியது. தன் சமகால நடைமுறைகளில் அவர் கண்ட, முகஞ் சுளிக்க வைக்கிற போக்குகளை அவர் கதையாடத் துணிந்த ஒன்றே அவரது தனிச் சிறப்பாகும். தான், தன் குடும்பம் என வாழ்க்கைச் சுருக்கமான கதைகள் வந்த காலகட்டம் அது. பிராமணர்களைப் பற்றியும், அதிகபட்சம் மேல் சாதியாரைப் பற்றியும், அவர்கள் வியந்து போற்றி நயந்து எழுதி வந்தார்கள். மாதவையாவின் பாத்திரங்களை, கதைமனிதனைப் பொது மனிதனாக சமூக அடையாளமாக முன்னிறுத்திக் காட்டியது சாதனை என்றே சொல்லமுடியும். அவரது மேதைமைக்கு இது ஒன்றே போதும் அடையாளம். முன்மாதிரிகள் அற்ற ஒரு சூழலில் தாமே முன்மாதிரி என பொறுப்புடன் இயங்கிய அவரது கவனம் போற்றத் தக்கது. ஆரம்பத்தில் அவர் மாதவையர் என்றே அழைக்கப் பட்டார் எனவும், பிற்பாடு மாதவையா என பெயர்மாற்றம் தரப்பட்டதாகவும், அவரது பெருமை மறைக்கப் பட்டதாகவும், அவரது நூல்களும், மறுபதிப்பு காணாமல் தவிர்க்கப் பட்டதாகவும் இந்த நூலின் பதிப்புரை பதிவு செய்கிறது.
- ‘குசிகர் குட்டிக் கதைகள்’ சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலத்தில் முதலில் வெளியானது. எட்டு கதைகள் வீதம் இரு தொகுப்புகளாக ஆங்கிலத்தில் தொகுப்பு வடிவம் பெற்றன. 1924 - 25 ஆம் வருடங்களில் ‘பஞ்சாமிர்தம்’ இதழை அவர் வெளிக் கொணர்ந்த போது, ‘குசிகர் குட்டிக் கதைகள்’ தமிழ்ப் பதிப்பு வெளியானது. தமிழ்ப் பதிப்பில் 22 கதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பார்ப்பன வாழ்வு எவ்வாறு இருந்தது என்பதனை மிகைப்படுத்தலின்றி நேர்மையாகப் பதிவு செய்துள்ளன - என அமைகிறது இந்த நூலின் 2012 பதிப்புரை.
தமிழில் ‘குசிகர்’ என எழுதப்பட்ட 22 கதைகளில் 19 கதைகளுடன் இந்தத் தொகுப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தின் அளவில் இவை முக்கியமானவை என்பதில் வேறு கருத்து காண முடியாது. இன்றைய காலகட்டத்தில் மாதவையா பற்றிய ஒரு மதிப்பீடு மாறும்படி வாய்ப்பும் உள்ளது. அதையும் மறுக்க முடியாது. அதற்கு மாதவையா பொறுப்பேற்கவும் முடியாது.
ஊரில் ‘அறுபத்தி நாலு வியாதிக்கும் ஆர்.எஸ்.பதி மருந்து’ என்று ஒரு வசனம் சொல்வார்கள். மாதவையா சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்தபோது கிடைத்த கிறித்தவ மதத் தாக்கத்தின் வழியாகவே தமிழ்ச் சமுதாயத்தைக் கண்ணோட்டம் இடுகிறதைக் காண முடிகிறது. வாலிப வயதில் மனசில் ஏறும் சித்திரங்கள் உளி கொண்டு செதுக்கப் பட்டு விடுகின்றன. ஒரு முழு வாழ்க்கைக்கான மதிப்பீடுகள் உருவேறுவது அந்தக் கல்லூரி வாழ்க்கையும் அதன்பின்னான ஐந்தாறு வருடங்களும் தான், என்று மனோதத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்.
சற்று நாடகத் தன்மையும், கதைகளின் முடிவாக தான் தரும் செயற்கை அழுத்தமும் தாண்டி இந்தக் கதைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. சில கதைகள் நாடகமாக நடிக்கிறாப் போலவே உரையாடல் வியூகத்துடன் அமைகின்றன. இந்த 19 கதைகளையுமே விரிவாக யோசிக்க, அசைபோட வாசகனுக்கு நிறைய இருக்கிறது. இவை ஆங்கிலத்தில், தி இந்து, நாளிதழில் வெளியானதாகச் சொல்வார்கள். அவரது சீர்திருத்தக் கதைகளையும் கருத்துகளையும் கடுமையாக விமரிசனம் செய்தும் எதிர்த்தும் வந்தது இந்து. அதே நாளிதழில் ஒரே வருடத்தில் அவருக்கு இந்தக் கதைகள் எழுதும்படி கதவு திறக்கப் பட்டது. தனது கொள்கைப் பிடிப்பில் உறுதியும்  வெற்றிக்கு அவசரப்படாத நிதானமும் ஞானத் தெளிவும் உள்ள ஒருவருக்கே இது சாத்தியம் அல்லவா?
குதிரைக்காரன் குப்பன்
நூலின் முதல் கதை இது. இந்தக் கதைகளை அது எழுதப்பட்ட வரிசையிலேயே அடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டதாக வாசிக்க முடிகிறது. விஸ்தாரமாக ஓர் ஊரின் அடையாளங்களுடன் முதல் கதையை அவர் தொடங்குகிறார். “பாலூர் அக்கிரகாரம் நதியின் வடகரையி லிருக்கிறது.” ஊரும் தெருக்களும் விவரணை பெறுகின்றன. “இரட்டை வரிசையான வீடுகளிலிருந்து வெளியே பெருக்கித் தள்ளி ஒதுக்கப் பட்ட குப்பை கூளங்களும், பலவித அசங்கியமான வஸ்துக்களும், தெருவின் நடுவே ஒரு வரிசையாக மேடிட்டுக் கிடந்தன. அது எந்த வீட்டாருக்கும் சொந்தமில்லைப் போலும்.”
அப்படியே ஒரு கோவிலும் அதில் நடந்து கொண்டிருக்கும் ‘ஜீவகாருண்ம்’ பற்றிய உபன்யாசமும் பதிவு பெறுகின்றன. அங்கே அப்போது ஒரு குதிரை வருகிறது. வந்தது புதிதாய் அந்த டிவிஷனுக்குப் பதவியேற்று வந்திருக்கும் சப் கலெக்டர் துரை, என சிலருக்குத் தெரிகிறது. குதிரையிலிருந்து இறங்கத் தெரியாமல் அவர் வேலைக்காரனை உரக்க அழைத்தார். அவன் வந்து துரையின் குதிரைசவாரித் திகைப்பைச் சமாளிக்கிறான். துரை ஒரு புன்னகை செய்துவிட்டு, அவருக்கு ஒரு சொல்லும் தமிழில் தெரியாது, கிளம்புகிறார். பின்னாலேயே அந்த வேலைக்காரனும் ஓடிப் போகிறான்.
ஒரு சில நிமிடங்களில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.
சப் கலெக்டர் மிலேச்சனே ஆயினும் ‘துரை’ - அந்த டிவிஷனில் ராஜப் பிரதிநிதி. மஹா விஷ்ணுவின் அம்சத்தில் ஒரு சிறிதுள்ளவர். பாதகமில்லை. அவருடைய குதிரைக்காரன், கேவலம் பறைப் பயல் தானே. அவன் ஏன் அக்கிரகாரத்துக்குள் துணிந்து வந்தான்? ‘அவன் ஒருவேளை துலுக்கனாய் இருக்கலாம். இல்லாவிட்டால், துரை வீதிக்குள் கூப்பிடுவாரா?’ என்று ஒரு பிராமணர் சொன்னார். கச்சேரி வாசல்களும், கோற்டு வியாச்சியங்களும், வக்கீல் வீடுகளும் களப்புகளுமாகப் பூர்வ சொத்தில் பாதிக்குமேல் தோற்றிருந்த வழக்காடி வேம்பையர், உடனே தமது விசேஷ அநுபவ ஞானத்தை வெளிப்படுத்த அதுவே தக்க சமயமென்று தெரிந்து, பதிற் சொன்னதாவது -
“யார் அவன் துலுக்கனென்று சொன்னது? இந்தப் பயலை எனக்குத் தெரியாதா என்ன? நம்ம பறைச் சுப்பன் மகன் தானே இவன்! இந்தப் பயல் நாலைந்து வருஷத்துக்கு முன்னே ரெங்கூனுக்கு ஓடிப்போனான். போன வருஷந் தான் திரும்பி வந்தான். முந்தின சப் கலெக்டர் துரையிடம் குதிரைக்காரனாக இருந்தான்...”
பிராமணர்களில் மோசமான மாதிரிகளை ஒன்றுகூட்டி நடக்கிறது கதை.
ஒரு பறைச்சாதிக் காரன் அக்கிரகாரத்துக்குள் வந்ததையிட்டு அந்த பிராமணர்கள் பொங்குகிறார்கள். துரைதான் அவனைக் கூப்பிட்டார், என்கிறார் ஒருவர். துரைக்குத் தெரியாது, இந்தப் பறை நாய்க்குத் தெரியாதா என்ன?... என்கிறார் மற்றவர். உடனே நாம் கிரிமினலாகவும், ஸிவிலாகவும் அவன் மேல் வியாச்சியம் செய்ய வேண்டும். துரையையும் இரண்டாவது பிரதிவாதியாகச் சேர்க்க வேண்டும், என்கிறார் ஒருத்தர். அது சரிதான். சப் கலெக்டர் மேலே சப் மாஜிஸ்டிரேட் பிராது வாங்கிக் கொள்வாரா, என ஒருவர் சந்தேகம் கேட்கிறார்.
ஊர்த் தீர்மானம். பறைச் சுப்பன் பத்து கலம் நெல்லு தண்டமிறுக்க வேண்டியது. இல்லாவிட்டால் அவனை ஊரையும் உழவையும் விட்டுத் துரத்திவிட வேண்டியது.
ஊரார் எல்லாருமாகக் கையொப்பமிட்டு பெரிய கலெக்டருக்கு ஒரு மனுச் செய்துகொள்ள வேண்டியது.
பிறகு ஊராறிற் பலர் ஆணும் பெண்ணும் நதிக்குச் சென்று ஸ்நானம் செய்தார்கள். சிலர் யக்ஞோபவீ தத்தை மாற்றி, காயத்ரி மந்திரத்தை ஆயிரத்தெட்டு ஆவர்த்தனம் ஜபித்தார்கள். ஊரும் மந்திர நீரால் தீட்டு மாற்றிப் புனிதப் படுத்தப்பட்டது.
இந்த விவரப் பகிர்வுக்குப் பிறகு பஞ்சமர்களின் வாழ்க்கையும் சேரியும் பற்றி விவரிக்கிறார் மாதவையா. அந்தப் பகுதிகள் மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலின் முதல் அத்தியாயத்தில், உழைக்கும் வர்க்கம் பற்றிய வர்ணனைகள் போல கருத்துச் செறிவாக அமைந்துள்ளன.
பறைச் சுப்பனின் மகன் குப்பன் ரெங்கூன் போய்ச்சேர்ந்து அங்கே குதிரைக்காரனாக ஒரு துரையிடம் வேலை செய்தபோது கிறித்துவ மதத்தினளான ஒரு பறைப் பெண் மேல் காதலாகி, அவளுடன் அம் மதத்தையும் தழுவிக்கொண்டான். (வாசிக்கையில் வெட்கமாய் இருந்தது!) முந்தைய வருஷம் தம்பதிகள் இந்நாட்டுக்குத் திரும்பி வந்து, சப் கலெக்டர் துரையின் கீழ், குப்பன் குதிரைக்காரனாகவும், அவன் மனைவி மேரி புல்லுக்காரியாகவும் வேலையில் அமர்ந்து, செழிப்பாகவே வாழ்ந்து வந்தார்கள்.
சரி. வியாச்சியம்? அதன் நிலை என்னாயிற்று?
மனுவை விசாரிக்க வந்த கலெக்டர், சப் கலெக்டர் முதலிய சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கும் அவர்கள் பரிவாரங்களுக்கும் உபசரணை செய்ததில் பாலூராருக்கு ரூபா இருநூறுக்கு மேல் செலவாயிற்று. 43 தலைக்கட்டடங்கிய 7 பறைக் குடும்பங்கள், இவ்வியாச்சிய மூலமாக, ஹிந்து மதத்தை நீங்கிக் கிறித்துவ மதத்தைச் சேர்ந்து கொண்டதும் தவிர, பிராமணராதி மேல்சாதியரின் நிர்ப்பந்தங்களையும் கொடுமைகளையும் வெறுத்து, பாலூரை விட்டுச், (மாதவையா விட்டுச் என்றெழுதி கமா போடுகிறார். அதேபோல கல்யாணம் என்று எழுதாமல் ‘கலியாணம்’ என்றே எழுதுகிறார்.) சத்திய தேவபுரத்துக்குக் குடியேறிப்போய், அங்கே இப்பொழுது மரியாதையாகவும் செழிப்பாகவும் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
- இப்படி முடிகிறது கதை. நல்ல கனவு, அல்லவா? இரு சமூகத்துக்கும் பண்டங்கள் கொள்வினை கொடுப்பினை, போன்ற விவகாரங்கள் எப்படி நடந்தன என்பது பற்றிய விளக்கங்கள் கதையில் இல்லை. உண்மையில் அதுதான் கதை. ஒரு புள்ளியோடு கதை முடிகிறது. பிரச்னை முடிந்து விட்டதாக எப்படி அதைக் கொள்ள முடியும்?
கதையின் ஆரம்பத்தில் உபன்யாசம் ‘ஜீவகாருண்யம்’ நடக்கிறது. முடிவில் பாலூர் கிராம மக்கள் மாறி, பஞ்சமர்களான மிகுந்த குடியானவர்கள் வைத்ததையே இப்பொழுது சட்டமாக ஏற்றுக்கொண்டு, அவர்களிடத்தில் ‘ஜீவகாருண்யத்தை’ உண்மையாகவே மிகவும் காட்டி வருகிறார்கள்.
கடைசிப் பகுதி வேடிக்கையாய் இருக்கிறது. குடியானவர்களின் சட்டத்தைப் பொதுசனம் ஏற்றுக்கொண்டு, அவர்களிடத்தில் ஜீவகாருண்யத்தை இவர்கள் காட்டுகிறார்களாம்.
எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று ஓர் அம்சத்துடன் இயங்குகிறது கதை. மதமாற்றம் பெரிய தீர்வு என்’று வலியுறுத்தப் படுகிறது.
அவனாலான பரிகாரம்
தொகுப்பின் இரண்டாவது கதை. முதல் வகுப்பில் ராஜஸ்தானிக்காக இரண்டாவது ஸ்தானத்தில் தேறியிருக்கிறான் கதாநாயகன். நிறைய பிராமணப் பிள்ளைகள் அற்புதமாகப் படித்து ராஜஸ்தானியில் முதல் இடம், இரண்டாம் இடம் என்று மாதவையா கதைகளில் வாங்குகிறார்கள். இந்தப் பையனின் படிப்புச் செலவுக்கும் இதர வசதிகளுக்குமாக இவன் கல்யாணத்தில் பெரும் தொகை வரதட்சிணையாகவும் சீர் வகைகளிலும் வாங்கும் பெற்றோர். கல்லூரியில் படிக்கிறபோது சக நண்பர்களுடன் தன் கல்யாணம் பற்றியும் பேசுகையில் வரதட்சிணை என்று ஒரு பைசாகூட வாங்கக் கூடாது. அது நமக்கு அவமானம், என பேசிக் கொள்கிறார்கள். இவன் கல்யாணத்தில் இவன்அப்பா கைநீட்டி வரதட்சிணை வாங்கியது அவனுக்கே தெரியாது, என்று கதை, நம்ப முடிகிறதா அதை? பிறகு என்ன தீர்மானம் எடுத்தான் அவன்? கல்யாண சமயம் தன் சூழலை அவன் ஆராய்ந்து பார்த்தானா? அப்பா அம்மாவிடம் தன் முடிவைச் சொன்னானா?
பிற்பாடு மனைவி மூலம் விவரம் அறிந்து அவமானப்பட்டு தன் பெற்றோரிடம் இருந்து வெளியேறி, வேற்றூரில் வேலைபார்த்து, தனது வரதட்சிணைக் கடனை மாமனாரிடம் அடைக்கிறான், என்று கதையை முடிக்கிறார் மாதவையா. பெண்கள் ருதுவாகு முன்னே மாப்பிள்ளை தேடி ஏகப்பட்ட வரதட்சிணை கொடுத்து கல்யாணம் பண்ணி, பெண் ருதுவானதும் ருதுசாந்தி என்று அதற்கும் செலவுகள் செய்யும் சமூகம் பற்றிய அடையாளம் கதையில் நன்றாக வந்திருக்கிறது.
திரௌபதி கனவு
இது ஒரு பிராமணக் கைம்பெண் பற்றிய கதை. கல்யாணம் முடித்த ஜோரில் கணவன் இறந்துபோகிறார். அவளுக்கு தான் பிறக்கும் போதே விதவையா, என்பது போன்ற மயக்கம், என எழுதுகிறார் மாதவையா. ஆனால் இவளது தகப்பனார் அந்த வயதிலும் தன் மனைவி இறந்தபின் மறுமணம் செய்து கொள்கிறார். அந்தச் சித்தியின் கொடுமைகள் கதையில் விவரிக்கப் படுகின்றன. இவளுக்கு உடல் சுகங்கள் தெரியாதபடி பசியும் பட்டினியும் நிறைய வேலைகளும் தந்தாள் சித்தி. திரௌபதி என்கிற அந்தப் பெண்ணைப் பற்றி அவளது தந்தைக்கும் அக்கறை இல்லை.
கதை பிறகு ஒரு கனவாக நீள்கிறது.
ஆண்களின் அதிகாரக் கட்டமைப்பு கொண்ட இந்த உலகில் இருந்து அவள் வேறுலகில் பிரவேசிக்கிறாள். அங்கே அல்லி ராஜ்ஜியம் நடக்கிறது. காட்சிகள் அப்படியே ‘உல்ட்டா’வாக மாறுகின்றன. பெண்கள் பல்லக்கு ஏறுகிறார்கள். ஆண்கள் அடிமைச் சேவகம் செய்கிறார்கள். பெண்களின் கொடி பறக்கிறது. நகைச்சுவையாகவும், சமூக நடப்புகளின் விமரிசனமாகவும், அந்தக் காலத்தின் முயற்சி என்ற அளவில் கவனம் பெறுகிறது கதை. எல்லாமே பிராமணக் கதைகள். தான் வாழ்ந்த சூழலின் அவலங்களைக் காணச் சகியாத ஒரு மனதின் வெளிப்பாடாக மாதவையாவின் கதைகள் விளங்குகின்றன.
ஓர் அபாயகரமான திரிசக்கர வண்டி
இக்கால கட்டங்களில் தனது கதை முயற்சிகளில் மாதவையா பெரிதும் உற்சாகம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. கதைக் கட்டமைப்பில் புதுமை கண்ட, போன ‘திரௌபதி’ கதைக்குப் பின் எழுத்தில் தான் மெருகேறி வருவதை மாதவையா அறிந்து கொண்டாரா?. இந்தத் தலைப்பே இலக்கிய முயற்சியாக வந்தமைகிறது, முந்தைய தலைப்புகளுடன் மாறுபட்டு இதைப் பார்க்கும் போது...
இரண்டு பெண்டாட்டிக் காரன் கதை இது. துவிசக்கர வண்டி குடும்ப வாழ்க்கை. கணவன் மனைவி, என்கிற இரு சக்கரங்கள் அதற்கு. அதன் சவாரி சுகம் பற்றி கவனப் படுத்திவிட்டு, மூன்று சக்கர வண்டிகள் இதைவிடவும் எளிதாய் சவாரி செய்ய உதவும், என்று சொல்லி, ஆனால் ரெண்டு தாரம் கட்டியவன் வாழ்க்கை அப்படி சுக சவாரியாய் அமைவது இல்லை... என அவர் சுட்டிக் காட்டுகிறார்!
அம்மா தன் மகனுக்கு ஒரு பெண்ணை ஆசைப்பட்டாள். வரதட்சிணைக்கு ஆசைப்பட்டு அப்பா அவனை வேறொரு பெண்ணுக்குப் பார்க்கிறார். அம்மா அந்தக் கல்யாணத்துக்கே போகவில்லை. வீட்டுக்கு வந்த மருமகளையும் அவள் சதா குறைசொல்லிக் கொண்டே இருந்தாள். பிறகு அம்மாவின் நச்சரிப்பின் பேரில் இரண்டாவது கல்யாணமும் மகன் பண்ணிக் கொள்கிறான். இதில் அந்த இரு மனைவிகளும் ஒருவரை ஒருவர் குணங் கெட்டவர்களாகக் கணவனிடம் குறை சொல்வது வரை இந்தப் பெண்-போட்டி பொறாமைகள், ஆங்காரங்கள் ஆற்றாமைகள் வளர்தோங்குகின்றன. அவர் காலப்போக்கில் மனைவிகள் இருவரையுமே நடத்தையில் சந்தேகம் கொள்ள ஆரம்பித்து பித்துப் பிடித்தவராகிறார். அலுவலகத்தில் வேலை செய்கையிலேயே பாதியில் வீட்டுக்கு விரைந்து வந்து பார்க்கிற அளவு நிலைமை முற்றிப் போகிறது. இறுதியில் அவராலேயே தாங்க முடியாமல் போய் ஓரிரவில் ஓர் உருண்டை அபினைச் சாப்பிட்டு, அவர் தற்கொலை செய்துகொள்கிறார்.
இப்போது ஒரு உபன்யாச பாவனையில் கதையை முடிக்கிறார் மாதவையா. ஒரு நாவலின் கதைச் சுருக்கமாகவே அந்தக் கால கட்டத்தின் அநேக கதைகளை வாசிக்க முடிகிறது. மாதவையா இருந்தால் இன்னொரு சந்தேகம் கேட்கலாம். “நான்கு சக்கர வாகனத்தில் சவாரி சுகம் இதைவிட சிலாக்கியமா, எப்படி?”
ஏட்டுச் சுரைக்காய்
தான் படித்த ஜெ.எஸ்.மில்லின் வியாசங்களை வியந்து கதையை ஆரம்பிக்கிறார் மாதவையா. இதில் நாயகன் மருத்துவன். வீட்டிலேயே மருந்துகள் வாங்கி வைத்துக்கொண்டு ஆங்கில மருத்துவம் பார்க்கிறான். அவனும் அவள் மனைவியின் தமையனும் சேர்ந்து நாயகியின் ஆங்கிலக் கல்வியில் அதிக அக்கறை செலுத்தி ஊக்கம் தருகிறார்கள். இது அவன் தாயாருக்குத் தரும் அசூயை, பொறாமை என்பதே கதை. தன் ஸ்தானம் பற்றிய அவளது கலவரம். தனக்கு வாய்க்காதது பிற பெண்ணுக்கு வாய்ப்பது கண்ட ஆத்திரம். ரெண்டு தவளைகள் கிணற்றில் இருந்தால், ஒன்று மேலேறும்போது மற்றது, ஏறுகிற தவளையைக் கீழே இழுத்து விடும் என்பது போல. ஸ்தான உரிமையில் மாமியாரிடம் மருமகள் படும் பாடுகள் கதை.
பணிந்து பழக்கப்பட்ட மகன் அம்மாவைத் தட்டிக்கேட்க முடியாத சங்கடம்.
துக்ககரமான இந்தக் கதையை இனி நீட்டிக்க மனமொப்ப வில்லை. வாசிப்போர் தம்மிஷ்டப் படியே இதை முடித்துக் கொள்ளுமாறு, இங்கே விட்டு விடுகிறோம் - என கதையை முடித்து, ஒரு பிரார்த்தனை (கிறித்துவ வழக்கமா?) வேறு தருகிறார் மாதவையா.
பெண்கல்வி இல்லாத ஒரு சமூகத்தில் பெண்கள் எப்படி திருப்தியில்லாத, சுதந்திரம் இல்லாத அளவில், கெட்ட குணங்கள் மேலோங்கப் பெற்றவர்களாக ஆகிப் போகிறார்கள், என்று மாதவையா அடையாளங் காட்டிக்கொண்டே யிருக்கிறார்.
தந்தையும் மகனும்
பனையேறி நாடார்களின் கதை என்று இந்தக் கதை திட்டமிடப் படுகிறது. சமுதாயத்தின் வேறு வேறு சாதியடுக்குகளின் தாழ்வு நிலைமையைச் சொல்ல மாதவையா கதைகளில் உந்தப் படுகிறார். மிகுந்த பொறுப்புடன் அவர் தன்னளவில் இயங்குகிறதாக நம்புகிறார். அவர் பெரும் செல்வம் சம்பாதித்தாலும் ஊர் பிராமணர்களால் ஒருமையில் அழைக்கப்பட்டும், பிராமணர்களின் நிலத்தை வாங்கினாலுங் கூட அக்கிரகார அதிகாரத்தின் முன் சிறுமைப்பட்டும் வாழ நேர்கிறது. தன் மகன் சுந்தரத்தை அவர் அருகில் உள்ள இங்கிலீஷ் பள்ளியில் அனுப்பும்போது, கீழே இப்படிக் குறிப்பும் தருகிறார் மாதவையா. “சாமிநாத நாடார் ஹிந்துவே, தெய்வ பக்தி உள்ளவரே. காலையில் எழுந்தவுடன் திருநீறணிந்த பின்தான் மறுவேலையில் அவர் புகுவது வழக்கம். எந்தக் கோவிலைக் கண்ணுற்றாலும் கும்பிடாது மேற்செல்லார். திருச்செந்தூர் முருகக் கடவுளின் மேல் விசேஷ பக்தியுள்ளவர். இதனால் தான், இவர், தன் மகனைக் கிறித்தவக் கல்லூரிக்கு அனுப்ப, முதலில் மனம் இசையாதது. இப்பொழுதோ அவர் துணிந்து விட்டார்.”
கிறித்துவப் பள்ளி என்பதாலேயே அதில் படிக்க மாணவர்களை அனுப்ப அக்காலத்தில் மக்கள் யோசித்தார்கள், எனவும், மாதவையா கிறித்தவக் கல்லூரி மாணவர் என்பதையும் இங்கே சேர்த்துப் பார்க்கலாம், என்று தோன்றுகிறது. பிராமண மதத்தில் இருந்து கிறித்தவ மதத்தைத் தழுவிய ஒரு பெண்ணை அவன் மணம் முடிக்க விரும்பி தந்தையிடம் கேட்க அவர் அனுமதி தருகிறார். அது எளிதாகக் கைகூடவே அவன், தன் தந்தையும் தாயும் கிறித்துவ மதத்தைத் தழுவலாமே என யோசனையை முன் வைக்கிறான். தந்தை மறுத்து விடுகிறார். அந்தக் குடும்பத்தில் அவன் மாத்திரம் கிறித்தவன் ஆகிறான்.
இந்தக் கதைகளில் கோட் ஸ்டாண்டில் இருந்து கோட்டை எடுத்து குளிருக்கு மாட்டிக் கொள்வதாகவே மத மாற்றம் நிகழ்கிறது. அதன் முன் பின் விபரீதங்கள் தெரியவில்லை. முன், என்றால் சாதி ஏற்றத் தாழ்வுகள் என்று சுலபமாக அதை ஒற்றைப் பரிமாணத்தில் கடந்துவிட முடியவில்லை. ஆச்சர்யகரமாக, மாதவையா பிராமணர்களின் நியதி ஒழுங்கின்மையைப் பேசுகிறவர், நியதிகளை வெறுக்கவில்லை. அவர் படித்த கிறித்தவக் கல்லூரி வளாகம் மத மாற்றங்களை ஒரு தீர்வாக, மெலிதான பாதிப்பை அவரிடத்தில் ஏற்படுத்தி யிருப்பதாகவே நினைக்க முடிகிறது. ஆனால் மத மாற்றத்தினால் அல்ல, பாத்திரங்கள் ரெங்கூனுக்கு ஓடிப் போகிறார்கள். பிறகு துரையிடத்தில் வந்து வேலைக்குச் சேர்கிறார்கள். ஆங்கிலம் அறிந்து வைத்திருக்கிறார்கள்... என அவர்கள் பிராமண அதிகாரத்திதில் இருந்து தப்பித்தது தற்செயலே, அல்லவா?
இவர்கள் ஏனோ அதே ஊருக்குத் திரும்பி வருகிறார்கள். மாதவையா அவர்களை வரவழைக்கிறார். வந்து இந்த அக்கிரகாரக் கொக்கரிப்புகளில் இருந்து அவர்கள் தப்பித்து வாழ்கிறார்கள். அதில் மாதவையாவுக்கு மகிழ்ச்சி!
சிறிய கிராமம் என்று சொல்லி அங்கே கலெக்டர் அலுவலகம் இருக்கிறது. அங்கே வேலை பார்க்கிறவர்கள் வருகிறார்கள். அல்லது கலெக்டர் அங்கே வருகிறார்.
இந்த ‘தந்தையும் மகனும்’ கதையில் பனையேறி நாடார் குலப் பையன் அதே ஊருக்கு தாசில்தாராகி வருகிறான். அதுவிவரம் அந்த ஊரில் யாரும் அறிந்ததாகவே இல்லை. அவன் தந்தையை அவமதித்த பிராமணக் கூட்டம் (அதில் பிற மேல் சாதி விவரங்களே இல்லை என்பது வியப்பு.) அவனுக்கு பரிசுப் பொருட்களோடு வரவேற்பு தருகிறது. அவன் அவர்களை வீட்டுக்கு வரச்சொல்லி, தன் தந்தையிடம் அந்தப் பரிசுப் பொருட்களைத் தரச் சொல்கிறான். அவர்களால் முற் காலத்தில் அவமானப் பட்ட தந்தை அவர்களிடம் கௌரவம் பெறுகிறார், என்பதாகக் கதை முடிகிறது.
அன்றுமாலை மகா-ள-ள-ஸ்ரீ, தாசில்தார் சாமிவேல், சா. சுந்தரம் அவர்கள், பி.ஏ., ஊர் மஹா ஜனங்கள் புடை சூழ, கிராம அதிகாரிகள் கைகட்டி இருபுறமும் வர, அசுவா ரூடராய், கிராமத்தைச் சுற்றிப் பார்த்துத் தணிக்கை செய்தார்கள். அவ்வாறு தணிக்கை செய்யும் பொழுது, அக்கிர ஹாரத்து வீதியையும் பாராது விடவுமில்லை. யாரும் ஆக்ஷேபிக்கவு மில்லை. ஏனெனின், “அவர் கிறிஸ்தவரே!” - என்கிறார் மாதவையா. கிறித்தவர் இல்லாவிட்டால் அக்கிரகாரத்தில் அதிகாரியை உள்ளே அனுமதிக்க மாட்டார்களா? அல்லது, கிறித்தவர் அல்லாதவர்களுக்கு அதிகாரி பதவி பிரிட்டிஷ் அரசில் கிடைக்காதா?
அவர் பார்க்காத ஊரா இது? தணிக்கை செய்வது என்றால் என்ன? ஏன் தணிக்கை செய்ய வேண்டும்?... போன்ற விவரங்கள் அந்தக் காலக் கதைகளில் காண முடிவதே இல்லை!
வரன் தேடும் வைபவம்
மூத்த பெண் கல்யாணம் முடித்த ஒரே வருடத்தில் விதவையாகிறாள். அடுத்த பெண்ணுக்கு விசுவநாதய்யர் நல்ல வரன்தேடி நான்கு திசைகளிலும் அலைவதே கதை. ஒரு நிதானமற்ற பரபரப்பும் பதட்டமுமாக, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிறாப் போல அவரது பாடுகள் சித்தரிக்கப் படுகின்றன. வரதட்சிணையும் வாங்கிக்கொண்டு வேறு இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள் சிலர். கையில் கிடைத்த ஜாதகங்களுடன் வரன்களின் வீடு தேடி அலைகிற அலைச்சல். ஆந்திரா வரை கூட அலைச்சல் காட்டப் படுகிறது. கடைசியில் முடிச்சு போட்ட வரன், பெண்ணின் அதே கோத்திரத்திலேயே இருப்பதை கவனிக்காமல் கல்யாணத்தில் தாலி கட்டு முன் தெரிகிறது. அந்தக் கல்யாணமும் நின்று போகிறது. ஒரு சமையல்கார ஏழைப் பையனுக்கு அதே முகூர்த்தத்தில் கல்யாணம் நடக்கிறதாக முடிகிறது கதை. அந்தக் கடைசித் திருப்பம் - ஒரே கோத்திரம் - என்பதை அடையுமுகமாகக் கதை நகர்கிறது. ஒரே கோத்திரத்தில் பெண் எடுத்தல் தவறா சரியா, என்று ஆசிரியர் கருத்துரைக்கவில்லை. அதனால் கல்யாணம் நின்றுபோனதில் பெண்ணின் தந்தையின் ஆத்திரம், அதையே ஆசிரியர் முன்வைக்கிறார்.
அது நேர்ந்த விதம்
இதுவும் பெண்ணுக்கு வரன் தேடும் புராணம் தான். அலுவலக வேலையை வீட்டிலும் எடுத்துவந்து விடிய விடிய வேலைசெய்யும் ஒரு மனிதர். அவர் என்றே விளிக்கப் படுவதும், அவர் மனைவியை அவள் என்றே பெயர் இல்லாமல் குறிப்பிடுவதும், குறிப்பிடத் தக்கது. ஊர்ப் பொது நிலவரத்தை இப்படி அடையாளங் காட்ட முடியும் என்று மாதவையா முடிவு செய்திருக்கிறார் அல்லவா?
மகள் கல்யாணத்துக்காக வீட்டையும் தோட்டத்தையும் விற்றுவிட யோசனை செய்யும் அப்பா. அம்மாவும் அப்பாவும் இராத்திரி பேசிக் கொள்வதைக் கேட்கும் மகள் சுந்தரி கொல்லைப்புறக் கிணற்றில், மடியில் கல்லைக் கட்டிக்கொண்டு குதித்து இறந்து போகிறாள். அப்பா சொத்தை விற்பதற்காக பெண் இறந்து போவாளா என்ன?
(வயசுப்பெண் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள், என்று அந்த வீடு இனி விற்றுப் போகாது!)
இதுதான் அது நேர்ந்த விதம், என கடைசி வரியில் மாதவையா கதைத் தலைப்போடு முடிக்கிறார்.
இந்தக் கதையில் இன்னொரு குறிப்பிடத் தக்க விஷயம் பார்க்க முடிகிறது. ஒரு விரக்தியில் அவர் பேசுகிறார். “இதையெல்லாம் பற்றி யோசிக்கும் பொழுது, சில வேளைகளில், இந்தப் பாழான பிராமண சமூகத்தையே விட்டு விலகி, பிரம்ம ஸமாஜத்தையோ, அல்லது கிறிஸ்தவ மதத்தையோ சேர்ந்து விடலாமென்று தோன்றுகிறது.”
பிரம்ம ஸமாஜம் பற்றி எதும் கதை எழுதினாரா மாதவையா, தெரியவில்லை. சந்நியாசம் வாங்கிக் கொள்வதைப் பற்றிச் சொல்ல வந்தும் இருக்கலாம்.
தர்ம சங்கடம்
இழுப்பு, எனும் ஆஸ்த்மா மனைவிக்கு வந்து அவஸ்தைப் படுகிறாள். வந்த மருமகளையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ளும் மாமியாரின் புலம்பல். மாதவையாவின் கதைகளில் புலம்பாத மாமியார் இல்லை. தனது அறிவின்மையால் மகன் தன் மருமகளுக்குச் செய்யும் இங்கிலீஷ் வைத்தியத்தை இகழ்ந்து பேசும், அலட்சியப் படுத்தும் அம்மா. மருத்துவர் சொற்படி மனைவியை வேறு வெப்பப் பிரதேசத்துக்கு ஜாகை மாற்ற அம்மாவையும் கூட அனுப்புகிறான். அம்மாவோ அங்கேபோய் டாக்டர் அறிவுரை எதையும் கடைப்பிடிக்காமல் அலட்சியம் செய்கிறாள். சமையலுக்கு என அமர்த்திய பரிசாரகனை சுத்தம் சரியில்லை, எனத் துரத்தி விடுகிறாள். தினசரி கறந்த பால் ஒரு படி நோயாளி அருந்த என வீட்டு வாசலிலேயே பால் கறந்து தரும் ஏற்பாடு மகன் செய்ய அதையும் விரட்டி யனுப்பி விடுகிறாள்.
ஆஸ்த்மாவுக்கு என்று சில மருந்துச் சுருட்டுகளை டாக்டர் எழுதித் தந்திருக்கிறார். பெண்ணாவது சுருட்டு பிடிக்கிறதாவது, அந்த வைத்தியன் நாசமாப் போவான், என அதையும் கடாசுகிறாள் மாமியார்.
மகன் செத்தாலும் பரவால்ல மருமக தாலியறுக்கணும், என்று பழமோழியே இருக்கிறது. வக்கிரமும் வெறுப்பும் ஆத்திரமும் சூழ்ந்த பெண்கள். குடும்பத்தின் அடக்கு முறைகளில் அவர்களுக்குக் கோபத்தின் ‘செல்லிடம்’ மருமகள்களே.
மாமியார் உடைச்சா மண்குடம். மருமகள் உடைச்சா பொன்குடம்.
மகன் வந்து பார்த்தபோது அவனது மனைவி நிலைமை முற்றிலும் ஷீணமாகி யிருக்கிறது. எல்லாவற்றுக்கும் தன் அம்மாவே காரணம் என்று ஆத்திரப்பட்டும் அவள் புரிந்து கொள்கிறாப் போலவே இல்லை.
இந்தப் பிரச்னையின் இந்தப்படியான விஸ்தீரணத்தில், கதை இப்படி முடிகிறது - “இப்பொழுது அவர் மனதிடிந்து, எப்பொழுதும் துயரத்தில் ஆழ்ந்தவராக இருக்கிறார். அவர் தாய் ராமுப் பாட்டியும் கூட, அவரைப் புனர் விவாகம் செய்துகொள்ளும்படி வேண்டத் துணியவில்லை. ‘தர்ம சங்கடம்’ என்னும் வசனம், இப்பொழுது சருவதா அவர் வாயில் வருகிறது. பெண் கல்வி விஷயத்தில் வெகு மும்முரமாய் உழைத்து வருகிறார்.”
பெண்களிடையே இத்தனை திண்டாட்டங்களின் ஊற்று பெண் கல்வியின்மை, என்பதை முத்தாய்ப்பாய் வைக்கிறார் இந்தக் கதையில், அது சட்டென்று ஒட்டாமல் தனித்துத் தெரிந்தாலும் கூட.
கமலத்தின் கலியாணம்
பணத்தாசை பிடித்த அப்பாக்கள் தக்க விலைக்கு தங்கள் பிள்ளைகளைத் கல்யாணம் என்று விற்கிறார்கள், என விளக்கும் இன்னொரு கதை. வேணுவுக்கு முதலில் ஓர் ஏழைப் பெண்ணைப் பார்த்து நிச்சயமும் ஆகிறது. அதைமீறி பணக்கார சம்பந்தம் என தட்டுப்படும் போது பெண்ணின் ஜாதகத்துக்குப் பொருத்தமாய் தன் பையனின் ஜாதகத்தையே மாற்றிக் கொடுத்து கல்யாணம் முடிக்கிறார் வேணுவின் அப்பா. ஜோசியருக்கு இரண்டு பக்கமும் வரும்படிக்குக் குறைவில்லை. கதையின் கடைசிப் பத்தி இது.
“நாள் இதுவரை, சாமி ஐயர், ஜோஸியருக்கு எண்ணூறு ரூபாய் கொடுத்தாகி விட்டது. இன்னும் இருநூறு தான் பாக்கி செல்ல வேண்டியது. வதூவரர்களின் சுக சௌபாக்கிய வாழ்க்கையோ? அந்தக் கதை வேறு. அதெல்லாம் விதி போல நடக்கும்.”
பிராமண மோசடிகளையே பட்டியலிட்டபடி நகர்கிறது பாதிப் புத்தகம். மாதவையாவுக்கு அத்தனை பெரிய வடுவை உள்ளத்தில் கொடுத்திருக்கிறது அவர்சார்ந்த சமூகத்தின் பொது செயல்பாடுகள். தவிரவும் கல்லூரிக் காலங்களில் பெண் இளமை அவளது திருமணம் தங்களது திருமணம் வரதடசிணை... இப்படியே அது மூச்சும் பேச்சுமாக பரபரத்தும் இருக்கலாம் அல்லவா?
*

(அடுத்த வாரம் தொடர்கிறது)
storysankar@gmail.com
91 97899 87842 / 91 94450 16842