part 28
தமிழில் வந்த துவக்க கால சிறுகதை நூல்களில் மாதவையாவின் ‘குசிகர்
குட்டிக் கதைகள்’ கவனத்துக்குரியது. தன் சமகால நடைமுறைகளில் அவர் கண்ட, முகஞ் சுளிக்க
வைக்கிற போக்குகளை அவர் கதையாடத் துணிந்த ஒன்றே அவரது தனிச் சிறப்பாகும். தான், தன்
குடும்பம் என வாழ்க்கைச் சுருக்கமான கதைகள் வந்த காலகட்டம் அது. பிராமணர்களைப் பற்றியும்,
அதிகபட்சம் மேல் சாதியாரைப் பற்றியும், அவர்கள் வியந்து போற்றி நயந்து எழுதி வந்தார்கள்.
மாதவையாவின் பாத்திரங்களை, கதைமனிதனைப் பொது மனிதனாக சமூக அடையாளமாக முன்னிறுத்திக்
காட்டியது சாதனை என்றே சொல்லமுடியும். அவரது மேதைமைக்கு இது ஒன்றே போதும் அடையாளம்.
முன்மாதிரிகள் அற்ற ஒரு சூழலில் தாமே முன்மாதிரி என பொறுப்புடன் இயங்கிய அவரது கவனம்
போற்றத் தக்கது. ஆரம்பத்தில் அவர் மாதவையர் என்றே அழைக்கப் பட்டார் எனவும், பிற்பாடு
மாதவையா என பெயர்மாற்றம் தரப்பட்டதாகவும், அவரது பெருமை மறைக்கப் பட்டதாகவும், அவரது
நூல்களும், மறுபதிப்பு காணாமல் தவிர்க்கப் பட்டதாகவும் இந்த நூலின் பதிப்புரை பதிவு
செய்கிறது.
‘சாஸ்தா பிரீதி’
முதலிய கதைகள்
(குசிகர் குட்டிக் கதைகள், அ.மாதவையர், பக். 184 விலை ரூ
115/- வெளியீடு 2012. வைகுந்த் பதிப்பகம், 275 ஜே ஜே பவன், கணபதிநகர், நாகர்கோவில்
629002)
- ‘குசிகர் குட்டிக் கதைகள்’ சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில்
ஆங்கிலத்தில் முதலில் வெளியானது. எட்டு கதைகள் வீதம் இரு தொகுப்புகளாக ஆங்கிலத்தில்
தொகுப்பு வடிவம் பெற்றன. 1924 - 25 ஆம் வருடங்களில் ‘பஞ்சாமிர்தம்’ இதழை அவர் வெளிக்
கொணர்ந்த போது, ‘குசிகர் குட்டிக் கதைகள்’ தமிழ்ப் பதிப்பு வெளியானது. தமிழ்ப் பதிப்பில்
22 கதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்திலும் பார்ப்பன வாழ்வு எவ்வாறு இருந்தது என்பதனை மிகைப்படுத்தலின்றி
நேர்மையாகப் பதிவு செய்துள்ளன - என அமைகிறது இந்த நூலின் 2012 பதிப்புரை.
தமிழில் ‘குசிகர்’ என எழுதப்பட்ட 22 கதைகளில் 19 கதைகளுடன்
இந்தத் தொகுப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தின் அளவில் இவை
முக்கியமானவை என்பதில் வேறு கருத்து காண முடியாது. இன்றைய காலகட்டத்தில் மாதவையா பற்றிய
ஒரு மதிப்பீடு மாறும்படி வாய்ப்பும் உள்ளது. அதையும் மறுக்க முடியாது. அதற்கு மாதவையா
பொறுப்பேற்கவும் முடியாது.
ஊரில் ‘அறுபத்தி நாலு வியாதிக்கும் ஆர்.எஸ்.பதி மருந்து’
என்று ஒரு வசனம் சொல்வார்கள். மாதவையா சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்தபோது கிடைத்த
கிறித்தவ மதத் தாக்கத்தின் வழியாகவே தமிழ்ச் சமுதாயத்தைக் கண்ணோட்டம் இடுகிறதைக் காண
முடிகிறது. வாலிப வயதில் மனசில் ஏறும் சித்திரங்கள் உளி கொண்டு செதுக்கப் பட்டு விடுகின்றன.
ஒரு முழு வாழ்க்கைக்கான மதிப்பீடுகள் உருவேறுவது அந்தக் கல்லூரி வாழ்க்கையும் அதன்பின்னான
ஐந்தாறு வருடங்களும் தான், என்று மனோதத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்.
சற்று நாடகத் தன்மையும், கதைகளின் முடிவாக தான் தரும் செயற்கை
அழுத்தமும் தாண்டி இந்தக் கதைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. சில கதைகள் நாடகமாக
நடிக்கிறாப் போலவே உரையாடல் வியூகத்துடன் அமைகின்றன. இந்த 19 கதைகளையுமே விரிவாக யோசிக்க,
அசைபோட வாசகனுக்கு நிறைய இருக்கிறது. இவை ஆங்கிலத்தில், தி இந்து, நாளிதழில் வெளியானதாகச்
சொல்வார்கள். அவரது சீர்திருத்தக் கதைகளையும் கருத்துகளையும் கடுமையாக விமரிசனம் செய்தும்
எதிர்த்தும் வந்தது இந்து. அதே நாளிதழில் ஒரே வருடத்தில் அவருக்கு இந்தக் கதைகள் எழுதும்படி
கதவு திறக்கப் பட்டது. தனது கொள்கைப் பிடிப்பில் உறுதியும் வெற்றிக்கு அவசரப்படாத நிதானமும் ஞானத் தெளிவும்
உள்ள ஒருவருக்கே இது சாத்தியம் அல்லவா?
குதிரைக்காரன்
குப்பன்
நூலின் முதல் கதை இது. இந்தக் கதைகளை அது எழுதப்பட்ட வரிசையிலேயே
அடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டதாக வாசிக்க முடிகிறது. விஸ்தாரமாக ஓர் ஊரின் அடையாளங்களுடன்
முதல் கதையை அவர் தொடங்குகிறார். “பாலூர் அக்கிரகாரம் நதியின் வடகரையி லிருக்கிறது.”
ஊரும் தெருக்களும் விவரணை பெறுகின்றன. “இரட்டை வரிசையான வீடுகளிலிருந்து வெளியே பெருக்கித்
தள்ளி ஒதுக்கப் பட்ட குப்பை கூளங்களும், பலவித அசங்கியமான வஸ்துக்களும், தெருவின் நடுவே
ஒரு வரிசையாக மேடிட்டுக் கிடந்தன. அது எந்த வீட்டாருக்கும் சொந்தமில்லைப் போலும்.”
அப்படியே ஒரு கோவிலும் அதில் நடந்து கொண்டிருக்கும் ‘ஜீவகாருண்ம்’
பற்றிய உபன்யாசமும் பதிவு பெறுகின்றன. அங்கே அப்போது ஒரு குதிரை வருகிறது. வந்தது புதிதாய்
அந்த டிவிஷனுக்குப் பதவியேற்று வந்திருக்கும் சப் கலெக்டர் துரை, என சிலருக்குத் தெரிகிறது.
குதிரையிலிருந்து இறங்கத் தெரியாமல் அவர் வேலைக்காரனை உரக்க அழைத்தார். அவன் வந்து
துரையின் குதிரைசவாரித் திகைப்பைச் சமாளிக்கிறான். துரை ஒரு புன்னகை செய்துவிட்டு,
அவருக்கு ஒரு சொல்லும் தமிழில் தெரியாது, கிளம்புகிறார். பின்னாலேயே அந்த வேலைக்காரனும்
ஓடிப் போகிறான்.
ஒரு சில நிமிடங்களில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.
சப் கலெக்டர் மிலேச்சனே ஆயினும் ‘துரை’ - அந்த டிவிஷனில்
ராஜப் பிரதிநிதி. மஹா விஷ்ணுவின் அம்சத்தில் ஒரு சிறிதுள்ளவர். பாதகமில்லை. அவருடைய
குதிரைக்காரன், கேவலம் பறைப் பயல் தானே. அவன் ஏன் அக்கிரகாரத்துக்குள் துணிந்து வந்தான்?
‘அவன் ஒருவேளை துலுக்கனாய் இருக்கலாம். இல்லாவிட்டால், துரை வீதிக்குள் கூப்பிடுவாரா?’
என்று ஒரு பிராமணர் சொன்னார். கச்சேரி வாசல்களும், கோற்டு வியாச்சியங்களும், வக்கீல்
வீடுகளும் களப்புகளுமாகப் பூர்வ சொத்தில் பாதிக்குமேல் தோற்றிருந்த வழக்காடி வேம்பையர்,
உடனே தமது விசேஷ அநுபவ ஞானத்தை வெளிப்படுத்த அதுவே தக்க சமயமென்று தெரிந்து, பதிற்
சொன்னதாவது -
“யார் அவன் துலுக்கனென்று சொன்னது? இந்தப் பயலை எனக்குத்
தெரியாதா என்ன? நம்ம பறைச் சுப்பன் மகன் தானே இவன்! இந்தப் பயல் நாலைந்து வருஷத்துக்கு
முன்னே ரெங்கூனுக்கு ஓடிப்போனான். போன வருஷந் தான் திரும்பி வந்தான். முந்தின சப் கலெக்டர்
துரையிடம் குதிரைக்காரனாக இருந்தான்...”
பிராமணர்களில் மோசமான மாதிரிகளை ஒன்றுகூட்டி நடக்கிறது கதை.
ஒரு பறைச்சாதிக் காரன் அக்கிரகாரத்துக்குள் வந்ததையிட்டு
அந்த பிராமணர்கள் பொங்குகிறார்கள். துரைதான் அவனைக் கூப்பிட்டார், என்கிறார் ஒருவர்.
துரைக்குத் தெரியாது, இந்தப் பறை நாய்க்குத் தெரியாதா என்ன?... என்கிறார் மற்றவர்.
உடனே நாம் கிரிமினலாகவும், ஸிவிலாகவும் அவன் மேல் வியாச்சியம் செய்ய வேண்டும். துரையையும்
இரண்டாவது பிரதிவாதியாகச் சேர்க்க வேண்டும், என்கிறார் ஒருத்தர். அது சரிதான். சப்
கலெக்டர் மேலே சப் மாஜிஸ்டிரேட் பிராது வாங்கிக் கொள்வாரா, என ஒருவர் சந்தேகம் கேட்கிறார்.
ஊர்த் தீர்மானம். பறைச் சுப்பன் பத்து கலம் நெல்லு தண்டமிறுக்க
வேண்டியது. இல்லாவிட்டால் அவனை ஊரையும் உழவையும் விட்டுத் துரத்திவிட வேண்டியது.
ஊரார் எல்லாருமாகக் கையொப்பமிட்டு பெரிய கலெக்டருக்கு ஒரு
மனுச் செய்துகொள்ள வேண்டியது.
பிறகு ஊராறிற் பலர் ஆணும் பெண்ணும் நதிக்குச் சென்று ஸ்நானம்
செய்தார்கள். சிலர் யக்ஞோபவீ தத்தை மாற்றி, காயத்ரி மந்திரத்தை ஆயிரத்தெட்டு ஆவர்த்தனம்
ஜபித்தார்கள். ஊரும் மந்திர நீரால் தீட்டு மாற்றிப் புனிதப் படுத்தப்பட்டது.
இந்த விவரப் பகிர்வுக்குப் பிறகு பஞ்சமர்களின் வாழ்க்கையும்
சேரியும் பற்றி விவரிக்கிறார் மாதவையா. அந்தப் பகுதிகள் மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’
நாவலின் முதல் அத்தியாயத்தில், உழைக்கும் வர்க்கம் பற்றிய வர்ணனைகள் போல கருத்துச்
செறிவாக அமைந்துள்ளன.
பறைச் சுப்பனின் மகன் குப்பன் ரெங்கூன் போய்ச்சேர்ந்து அங்கே
குதிரைக்காரனாக ஒரு துரையிடம் வேலை செய்தபோது கிறித்துவ மதத்தினளான ஒரு பறைப் பெண்
மேல் காதலாகி, அவளுடன் அம் மதத்தையும் தழுவிக்கொண்டான். (வாசிக்கையில் வெட்கமாய் இருந்தது!)
முந்தைய வருஷம் தம்பதிகள் இந்நாட்டுக்குத் திரும்பி வந்து, சப் கலெக்டர் துரையின் கீழ்,
குப்பன் குதிரைக்காரனாகவும், அவன் மனைவி மேரி புல்லுக்காரியாகவும் வேலையில் அமர்ந்து,
செழிப்பாகவே வாழ்ந்து வந்தார்கள்.
சரி. வியாச்சியம்? அதன் நிலை என்னாயிற்று?
மனுவை விசாரிக்க வந்த கலெக்டர், சப் கலெக்டர் முதலிய சர்க்கார்
உத்தியோகஸ்தர்களுக்கும் அவர்கள் பரிவாரங்களுக்கும் உபசரணை செய்ததில் பாலூராருக்கு ரூபா
இருநூறுக்கு மேல் செலவாயிற்று. 43 தலைக்கட்டடங்கிய 7 பறைக் குடும்பங்கள், இவ்வியாச்சிய
மூலமாக, ஹிந்து மதத்தை நீங்கிக் கிறித்துவ மதத்தைச் சேர்ந்து கொண்டதும் தவிர, பிராமணராதி
மேல்சாதியரின் நிர்ப்பந்தங்களையும் கொடுமைகளையும் வெறுத்து, பாலூரை விட்டுச், (மாதவையா
விட்டுச் என்றெழுதி கமா போடுகிறார். அதேபோல கல்யாணம் என்று எழுதாமல் ‘கலியாணம்’ என்றே
எழுதுகிறார்.) சத்திய தேவபுரத்துக்குக் குடியேறிப்போய், அங்கே இப்பொழுது மரியாதையாகவும்
செழிப்பாகவும் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
- இப்படி முடிகிறது கதை. நல்ல கனவு, அல்லவா? இரு சமூகத்துக்கும்
பண்டங்கள் கொள்வினை கொடுப்பினை, போன்ற விவகாரங்கள் எப்படி நடந்தன என்பது பற்றிய விளக்கங்கள்
கதையில் இல்லை. உண்மையில் அதுதான் கதை. ஒரு புள்ளியோடு கதை முடிகிறது. பிரச்னை முடிந்து
விட்டதாக எப்படி அதைக் கொள்ள முடியும்?
கதையின் ஆரம்பத்தில் உபன்யாசம் ‘ஜீவகாருண்யம்’ நடக்கிறது.
முடிவில் பாலூர் கிராம மக்கள் மாறி, பஞ்சமர்களான மிகுந்த குடியானவர்கள் வைத்ததையே இப்பொழுது
சட்டமாக ஏற்றுக்கொண்டு, அவர்களிடத்தில் ‘ஜீவகாருண்யத்தை’ உண்மையாகவே மிகவும் காட்டி
வருகிறார்கள்.
கடைசிப் பகுதி வேடிக்கையாய் இருக்கிறது. குடியானவர்களின்
சட்டத்தைப் பொதுசனம் ஏற்றுக்கொண்டு, அவர்களிடத்தில் ஜீவகாருண்யத்தை இவர்கள் காட்டுகிறார்களாம்.
எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று ஓர் அம்சத்துடன் இயங்குகிறது
கதை. மதமாற்றம் பெரிய தீர்வு என்’று வலியுறுத்தப் படுகிறது.
அவனாலான பரிகாரம்
தொகுப்பின் இரண்டாவது கதை. முதல் வகுப்பில் ராஜஸ்தானிக்காக
இரண்டாவது ஸ்தானத்தில் தேறியிருக்கிறான் கதாநாயகன். நிறைய பிராமணப் பிள்ளைகள் அற்புதமாகப்
படித்து ராஜஸ்தானியில் முதல் இடம், இரண்டாம் இடம் என்று மாதவையா கதைகளில் வாங்குகிறார்கள்.
இந்தப் பையனின் படிப்புச் செலவுக்கும் இதர வசதிகளுக்குமாக இவன் கல்யாணத்தில் பெரும்
தொகை வரதட்சிணையாகவும் சீர் வகைகளிலும் வாங்கும் பெற்றோர். கல்லூரியில் படிக்கிறபோது
சக நண்பர்களுடன் தன் கல்யாணம் பற்றியும் பேசுகையில் வரதட்சிணை என்று ஒரு பைசாகூட வாங்கக்
கூடாது. அது நமக்கு அவமானம், என பேசிக் கொள்கிறார்கள். இவன் கல்யாணத்தில் இவன்அப்பா
கைநீட்டி வரதட்சிணை வாங்கியது அவனுக்கே தெரியாது, என்று கதை, நம்ப முடிகிறதா அதை? பிறகு
என்ன தீர்மானம் எடுத்தான் அவன்? கல்யாண சமயம் தன் சூழலை அவன் ஆராய்ந்து பார்த்தானா?
அப்பா அம்மாவிடம் தன் முடிவைச் சொன்னானா?
பிற்பாடு மனைவி மூலம் விவரம் அறிந்து அவமானப்பட்டு தன் பெற்றோரிடம்
இருந்து வெளியேறி, வேற்றூரில் வேலைபார்த்து, தனது வரதட்சிணைக் கடனை மாமனாரிடம் அடைக்கிறான்,
என்று கதையை முடிக்கிறார் மாதவையா. பெண்கள் ருதுவாகு முன்னே மாப்பிள்ளை தேடி ஏகப்பட்ட
வரதட்சிணை கொடுத்து கல்யாணம் பண்ணி, பெண் ருதுவானதும் ருதுசாந்தி என்று அதற்கும் செலவுகள்
செய்யும் சமூகம் பற்றிய அடையாளம் கதையில் நன்றாக வந்திருக்கிறது.
திரௌபதி கனவு
இது ஒரு பிராமணக் கைம்பெண் பற்றிய கதை. கல்யாணம் முடித்த
ஜோரில் கணவன் இறந்துபோகிறார். அவளுக்கு தான் பிறக்கும் போதே விதவையா, என்பது போன்ற
மயக்கம், என எழுதுகிறார் மாதவையா. ஆனால் இவளது தகப்பனார் அந்த வயதிலும் தன் மனைவி இறந்தபின்
மறுமணம் செய்து கொள்கிறார். அந்தச் சித்தியின் கொடுமைகள் கதையில் விவரிக்கப் படுகின்றன.
இவளுக்கு உடல் சுகங்கள் தெரியாதபடி பசியும் பட்டினியும் நிறைய வேலைகளும் தந்தாள் சித்தி.
திரௌபதி என்கிற அந்தப் பெண்ணைப் பற்றி அவளது தந்தைக்கும் அக்கறை இல்லை.
கதை பிறகு ஒரு கனவாக நீள்கிறது.
ஆண்களின் அதிகாரக் கட்டமைப்பு கொண்ட இந்த உலகில் இருந்து
அவள் வேறுலகில் பிரவேசிக்கிறாள். அங்கே அல்லி ராஜ்ஜியம் நடக்கிறது. காட்சிகள் அப்படியே
‘உல்ட்டா’வாக மாறுகின்றன. பெண்கள் பல்லக்கு ஏறுகிறார்கள். ஆண்கள் அடிமைச் சேவகம் செய்கிறார்கள்.
பெண்களின் கொடி பறக்கிறது. நகைச்சுவையாகவும், சமூக நடப்புகளின் விமரிசனமாகவும், அந்தக்
காலத்தின் முயற்சி என்ற அளவில் கவனம் பெறுகிறது கதை. எல்லாமே பிராமணக் கதைகள். தான்
வாழ்ந்த சூழலின் அவலங்களைக் காணச் சகியாத ஒரு மனதின் வெளிப்பாடாக மாதவையாவின் கதைகள்
விளங்குகின்றன.
ஓர் அபாயகரமான
திரிசக்கர வண்டி
இக்கால கட்டங்களில் தனது கதை முயற்சிகளில் மாதவையா பெரிதும்
உற்சாகம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. கதைக் கட்டமைப்பில் புதுமை கண்ட, போன ‘திரௌபதி’
கதைக்குப் பின் எழுத்தில் தான் மெருகேறி வருவதை மாதவையா அறிந்து கொண்டாரா?. இந்தத்
தலைப்பே இலக்கிய முயற்சியாக வந்தமைகிறது, முந்தைய தலைப்புகளுடன் மாறுபட்டு இதைப் பார்க்கும்
போது...
இரண்டு பெண்டாட்டிக் காரன் கதை இது. துவிசக்கர வண்டி குடும்ப
வாழ்க்கை. கணவன் மனைவி, என்கிற இரு சக்கரங்கள் அதற்கு. அதன் சவாரி சுகம் பற்றி கவனப்
படுத்திவிட்டு, மூன்று சக்கர வண்டிகள் இதைவிடவும் எளிதாய் சவாரி செய்ய உதவும், என்று
சொல்லி, ஆனால் ரெண்டு தாரம் கட்டியவன் வாழ்க்கை அப்படி சுக சவாரியாய் அமைவது இல்லை...
என அவர் சுட்டிக் காட்டுகிறார்!
அம்மா தன் மகனுக்கு ஒரு பெண்ணை ஆசைப்பட்டாள். வரதட்சிணைக்கு
ஆசைப்பட்டு அப்பா அவனை வேறொரு பெண்ணுக்குப் பார்க்கிறார். அம்மா அந்தக் கல்யாணத்துக்கே
போகவில்லை. வீட்டுக்கு வந்த மருமகளையும் அவள் சதா குறைசொல்லிக் கொண்டே இருந்தாள். பிறகு
அம்மாவின் நச்சரிப்பின் பேரில் இரண்டாவது கல்யாணமும் மகன் பண்ணிக் கொள்கிறான். இதில்
அந்த இரு மனைவிகளும் ஒருவரை ஒருவர் குணங் கெட்டவர்களாகக் கணவனிடம் குறை சொல்வது வரை
இந்தப் பெண்-போட்டி பொறாமைகள், ஆங்காரங்கள் ஆற்றாமைகள் வளர்தோங்குகின்றன. அவர் காலப்போக்கில்
மனைவிகள் இருவரையுமே நடத்தையில் சந்தேகம் கொள்ள ஆரம்பித்து பித்துப் பிடித்தவராகிறார்.
அலுவலகத்தில் வேலை செய்கையிலேயே பாதியில் வீட்டுக்கு விரைந்து வந்து பார்க்கிற அளவு
நிலைமை முற்றிப் போகிறது. இறுதியில் அவராலேயே தாங்க முடியாமல் போய் ஓரிரவில் ஓர் உருண்டை
அபினைச் சாப்பிட்டு, அவர் தற்கொலை செய்துகொள்கிறார்.
இப்போது ஒரு உபன்யாச பாவனையில் கதையை முடிக்கிறார் மாதவையா.
ஒரு நாவலின் கதைச் சுருக்கமாகவே அந்தக் கால கட்டத்தின் அநேக கதைகளை வாசிக்க முடிகிறது.
மாதவையா இருந்தால் இன்னொரு சந்தேகம் கேட்கலாம். “நான்கு சக்கர வாகனத்தில் சவாரி சுகம்
இதைவிட சிலாக்கியமா, எப்படி?”
ஏட்டுச் சுரைக்காய்
தான் படித்த ஜெ.எஸ்.மில்லின் வியாசங்களை வியந்து கதையை ஆரம்பிக்கிறார்
மாதவையா. இதில் நாயகன் மருத்துவன். வீட்டிலேயே மருந்துகள் வாங்கி வைத்துக்கொண்டு ஆங்கில
மருத்துவம் பார்க்கிறான். அவனும் அவள் மனைவியின் தமையனும் சேர்ந்து நாயகியின் ஆங்கிலக்
கல்வியில் அதிக அக்கறை செலுத்தி ஊக்கம் தருகிறார்கள். இது அவன் தாயாருக்குத் தரும்
அசூயை, பொறாமை என்பதே கதை. தன் ஸ்தானம் பற்றிய அவளது கலவரம். தனக்கு வாய்க்காதது பிற
பெண்ணுக்கு வாய்ப்பது கண்ட ஆத்திரம். ரெண்டு தவளைகள் கிணற்றில் இருந்தால், ஒன்று மேலேறும்போது
மற்றது, ஏறுகிற தவளையைக் கீழே இழுத்து விடும் என்பது போல. ஸ்தான உரிமையில் மாமியாரிடம்
மருமகள் படும் பாடுகள் கதை.
பணிந்து பழக்கப்பட்ட மகன் அம்மாவைத் தட்டிக்கேட்க முடியாத
சங்கடம்.
துக்ககரமான இந்தக் கதையை இனி நீட்டிக்க மனமொப்ப வில்லை. வாசிப்போர்
தம்மிஷ்டப் படியே இதை முடித்துக் கொள்ளுமாறு, இங்கே விட்டு விடுகிறோம் - என கதையை முடித்து,
ஒரு பிரார்த்தனை (கிறித்துவ வழக்கமா?) வேறு தருகிறார் மாதவையா.
பெண்கல்வி இல்லாத ஒரு சமூகத்தில் பெண்கள் எப்படி திருப்தியில்லாத,
சுதந்திரம் இல்லாத அளவில், கெட்ட குணங்கள் மேலோங்கப் பெற்றவர்களாக ஆகிப் போகிறார்கள்,
என்று மாதவையா அடையாளங் காட்டிக்கொண்டே யிருக்கிறார்.
தந்தையும் மகனும்
பனையேறி நாடார்களின் கதை என்று இந்தக் கதை திட்டமிடப் படுகிறது.
சமுதாயத்தின் வேறு வேறு சாதியடுக்குகளின் தாழ்வு நிலைமையைச் சொல்ல மாதவையா கதைகளில்
உந்தப் படுகிறார். மிகுந்த பொறுப்புடன் அவர் தன்னளவில் இயங்குகிறதாக நம்புகிறார். அவர்
பெரும் செல்வம் சம்பாதித்தாலும் ஊர் பிராமணர்களால் ஒருமையில் அழைக்கப்பட்டும், பிராமணர்களின்
நிலத்தை வாங்கினாலுங் கூட அக்கிரகார அதிகாரத்தின் முன் சிறுமைப்பட்டும் வாழ நேர்கிறது.
தன் மகன் சுந்தரத்தை அவர் அருகில் உள்ள இங்கிலீஷ் பள்ளியில் அனுப்பும்போது, கீழே இப்படிக்
குறிப்பும் தருகிறார் மாதவையா. “சாமிநாத நாடார் ஹிந்துவே, தெய்வ பக்தி உள்ளவரே. காலையில்
எழுந்தவுடன் திருநீறணிந்த பின்தான் மறுவேலையில் அவர் புகுவது வழக்கம். எந்தக் கோவிலைக்
கண்ணுற்றாலும் கும்பிடாது மேற்செல்லார். திருச்செந்தூர் முருகக் கடவுளின் மேல் விசேஷ
பக்தியுள்ளவர். இதனால் தான், இவர், தன் மகனைக் கிறித்தவக் கல்லூரிக்கு அனுப்ப, முதலில்
மனம் இசையாதது. இப்பொழுதோ அவர் துணிந்து விட்டார்.”
கிறித்துவப் பள்ளி என்பதாலேயே அதில் படிக்க மாணவர்களை அனுப்ப
அக்காலத்தில் மக்கள் யோசித்தார்கள், எனவும், மாதவையா கிறித்தவக் கல்லூரி மாணவர் என்பதையும்
இங்கே சேர்த்துப் பார்க்கலாம், என்று தோன்றுகிறது. பிராமண மதத்தில் இருந்து கிறித்தவ
மதத்தைத் தழுவிய ஒரு பெண்ணை அவன் மணம் முடிக்க விரும்பி தந்தையிடம் கேட்க அவர் அனுமதி
தருகிறார். அது எளிதாகக் கைகூடவே அவன், தன் தந்தையும் தாயும் கிறித்துவ மதத்தைத் தழுவலாமே
என யோசனையை முன் வைக்கிறான். தந்தை மறுத்து விடுகிறார். அந்தக் குடும்பத்தில் அவன்
மாத்திரம் கிறித்தவன் ஆகிறான்.
இந்தக் கதைகளில் கோட் ஸ்டாண்டில் இருந்து கோட்டை எடுத்து
குளிருக்கு மாட்டிக் கொள்வதாகவே மத மாற்றம் நிகழ்கிறது. அதன் முன் பின் விபரீதங்கள்
தெரியவில்லை. முன், என்றால் சாதி ஏற்றத் தாழ்வுகள் என்று சுலபமாக அதை ஒற்றைப் பரிமாணத்தில்
கடந்துவிட முடியவில்லை. ஆச்சர்யகரமாக, மாதவையா பிராமணர்களின் நியதி ஒழுங்கின்மையைப்
பேசுகிறவர், நியதிகளை வெறுக்கவில்லை. அவர் படித்த கிறித்தவக் கல்லூரி வளாகம் மத மாற்றங்களை
ஒரு தீர்வாக, மெலிதான பாதிப்பை அவரிடத்தில் ஏற்படுத்தி யிருப்பதாகவே நினைக்க முடிகிறது.
ஆனால் மத மாற்றத்தினால் அல்ல, பாத்திரங்கள் ரெங்கூனுக்கு ஓடிப் போகிறார்கள். பிறகு
துரையிடத்தில் வந்து வேலைக்குச் சேர்கிறார்கள். ஆங்கிலம் அறிந்து வைத்திருக்கிறார்கள்...
என அவர்கள் பிராமண அதிகாரத்திதில் இருந்து தப்பித்தது தற்செயலே, அல்லவா?
இவர்கள் ஏனோ அதே ஊருக்குத் திரும்பி வருகிறார்கள். மாதவையா
அவர்களை வரவழைக்கிறார். வந்து இந்த அக்கிரகாரக் கொக்கரிப்புகளில் இருந்து அவர்கள் தப்பித்து
வாழ்கிறார்கள். அதில் மாதவையாவுக்கு மகிழ்ச்சி!
சிறிய கிராமம் என்று சொல்லி அங்கே கலெக்டர் அலுவலகம் இருக்கிறது.
அங்கே வேலை பார்க்கிறவர்கள் வருகிறார்கள். அல்லது கலெக்டர் அங்கே வருகிறார்.
இந்த ‘தந்தையும் மகனும்’ கதையில் பனையேறி நாடார் குலப் பையன்
அதே ஊருக்கு தாசில்தாராகி வருகிறான். அதுவிவரம் அந்த ஊரில் யாரும் அறிந்ததாகவே இல்லை.
அவன் தந்தையை அவமதித்த பிராமணக் கூட்டம் (அதில் பிற மேல் சாதி விவரங்களே இல்லை என்பது
வியப்பு.) அவனுக்கு பரிசுப் பொருட்களோடு வரவேற்பு தருகிறது. அவன் அவர்களை வீட்டுக்கு
வரச்சொல்லி, தன் தந்தையிடம் அந்தப் பரிசுப் பொருட்களைத் தரச் சொல்கிறான். அவர்களால்
முற் காலத்தில் அவமானப் பட்ட தந்தை அவர்களிடம் கௌரவம் பெறுகிறார், என்பதாகக் கதை முடிகிறது.
அன்றுமாலை மகா-ள-ள-ஸ்ரீ, தாசில்தார் சாமிவேல், சா. சுந்தரம்
அவர்கள், பி.ஏ., ஊர் மஹா ஜனங்கள் புடை சூழ, கிராம அதிகாரிகள் கைகட்டி இருபுறமும் வர,
அசுவா ரூடராய், கிராமத்தைச் சுற்றிப் பார்த்துத் தணிக்கை செய்தார்கள். அவ்வாறு தணிக்கை
செய்யும் பொழுது, அக்கிர ஹாரத்து வீதியையும் பாராது விடவுமில்லை. யாரும் ஆக்ஷேபிக்கவு
மில்லை. ஏனெனின், “அவர் கிறிஸ்தவரே!” - என்கிறார் மாதவையா. கிறித்தவர் இல்லாவிட்டால்
அக்கிரகாரத்தில் அதிகாரியை உள்ளே அனுமதிக்க மாட்டார்களா? அல்லது, கிறித்தவர் அல்லாதவர்களுக்கு
அதிகாரி பதவி பிரிட்டிஷ் அரசில் கிடைக்காதா?
அவர் பார்க்காத ஊரா இது? தணிக்கை செய்வது என்றால் என்ன? ஏன்
தணிக்கை செய்ய வேண்டும்?... போன்ற விவரங்கள் அந்தக் காலக் கதைகளில் காண முடிவதே இல்லை!
வரன் தேடும்
வைபவம்
மூத்த பெண் கல்யாணம் முடித்த ஒரே வருடத்தில் விதவையாகிறாள்.
அடுத்த பெண்ணுக்கு விசுவநாதய்யர் நல்ல வரன்தேடி நான்கு திசைகளிலும் அலைவதே கதை. ஒரு
நிதானமற்ற பரபரப்பும் பதட்டமுமாக, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிறாப் போல அவரது
பாடுகள் சித்தரிக்கப் படுகின்றன. வரதட்சிணையும் வாங்கிக்கொண்டு வேறு இடத்தில் கல்யாணம்
பண்ணிக் கொள்கிறார்கள் சிலர். கையில் கிடைத்த ஜாதகங்களுடன் வரன்களின் வீடு தேடி அலைகிற
அலைச்சல். ஆந்திரா வரை கூட அலைச்சல் காட்டப் படுகிறது. கடைசியில் முடிச்சு போட்ட வரன்,
பெண்ணின் அதே கோத்திரத்திலேயே இருப்பதை கவனிக்காமல் கல்யாணத்தில் தாலி கட்டு முன் தெரிகிறது.
அந்தக் கல்யாணமும் நின்று போகிறது. ஒரு சமையல்கார ஏழைப் பையனுக்கு அதே முகூர்த்தத்தில்
கல்யாணம் நடக்கிறதாக முடிகிறது கதை. அந்தக் கடைசித் திருப்பம் - ஒரே கோத்திரம் - என்பதை
அடையுமுகமாகக் கதை நகர்கிறது. ஒரே கோத்திரத்தில் பெண் எடுத்தல் தவறா சரியா, என்று ஆசிரியர்
கருத்துரைக்கவில்லை. அதனால் கல்யாணம் நின்றுபோனதில் பெண்ணின் தந்தையின் ஆத்திரம், அதையே
ஆசிரியர் முன்வைக்கிறார்.
அது நேர்ந்த
விதம்
இதுவும் பெண்ணுக்கு வரன் தேடும் புராணம் தான். அலுவலக வேலையை
வீட்டிலும் எடுத்துவந்து விடிய விடிய வேலைசெய்யும் ஒரு மனிதர். அவர் என்றே விளிக்கப்
படுவதும், அவர் மனைவியை அவள் என்றே பெயர் இல்லாமல் குறிப்பிடுவதும், குறிப்பிடத் தக்கது.
ஊர்ப் பொது நிலவரத்தை இப்படி அடையாளங் காட்ட முடியும் என்று மாதவையா முடிவு செய்திருக்கிறார்
அல்லவா?
மகள் கல்யாணத்துக்காக வீட்டையும் தோட்டத்தையும் விற்றுவிட
யோசனை செய்யும் அப்பா. அம்மாவும் அப்பாவும் இராத்திரி பேசிக் கொள்வதைக் கேட்கும் மகள்
சுந்தரி கொல்லைப்புறக் கிணற்றில், மடியில் கல்லைக் கட்டிக்கொண்டு குதித்து இறந்து போகிறாள்.
அப்பா சொத்தை விற்பதற்காக பெண் இறந்து போவாளா என்ன?
(வயசுப்பெண் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள்,
என்று அந்த வீடு இனி விற்றுப் போகாது!)
இதுதான் அது நேர்ந்த விதம், என கடைசி வரியில் மாதவையா கதைத்
தலைப்போடு முடிக்கிறார்.
இந்தக் கதையில் இன்னொரு குறிப்பிடத் தக்க விஷயம் பார்க்க
முடிகிறது. ஒரு விரக்தியில் அவர் பேசுகிறார். “இதையெல்லாம் பற்றி யோசிக்கும் பொழுது,
சில வேளைகளில், இந்தப் பாழான பிராமண சமூகத்தையே விட்டு விலகி, பிரம்ம ஸமாஜத்தையோ, அல்லது
கிறிஸ்தவ மதத்தையோ சேர்ந்து விடலாமென்று தோன்றுகிறது.”
பிரம்ம ஸமாஜம் பற்றி எதும் கதை எழுதினாரா மாதவையா, தெரியவில்லை.
சந்நியாசம் வாங்கிக் கொள்வதைப் பற்றிச் சொல்ல வந்தும் இருக்கலாம்.
தர்ம சங்கடம்
இழுப்பு, எனும் ஆஸ்த்மா மனைவிக்கு வந்து அவஸ்தைப் படுகிறாள்.
வந்த மருமகளையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ளும் மாமியாரின் புலம்பல். மாதவையாவின்
கதைகளில் புலம்பாத மாமியார் இல்லை. தனது அறிவின்மையால் மகன் தன் மருமகளுக்குச் செய்யும்
இங்கிலீஷ் வைத்தியத்தை இகழ்ந்து பேசும், அலட்சியப் படுத்தும் அம்மா. மருத்துவர் சொற்படி
மனைவியை வேறு வெப்பப் பிரதேசத்துக்கு ஜாகை மாற்ற அம்மாவையும் கூட அனுப்புகிறான். அம்மாவோ
அங்கேபோய் டாக்டர் அறிவுரை எதையும் கடைப்பிடிக்காமல் அலட்சியம் செய்கிறாள். சமையலுக்கு
என அமர்த்திய பரிசாரகனை சுத்தம் சரியில்லை, எனத் துரத்தி விடுகிறாள். தினசரி கறந்த
பால் ஒரு படி நோயாளி அருந்த என வீட்டு வாசலிலேயே பால் கறந்து தரும் ஏற்பாடு மகன் செய்ய
அதையும் விரட்டி யனுப்பி விடுகிறாள்.
ஆஸ்த்மாவுக்கு என்று சில மருந்துச் சுருட்டுகளை டாக்டர் எழுதித்
தந்திருக்கிறார். பெண்ணாவது சுருட்டு பிடிக்கிறதாவது, அந்த வைத்தியன் நாசமாப் போவான்,
என அதையும் கடாசுகிறாள் மாமியார்.
மகன் செத்தாலும் பரவால்ல மருமக தாலியறுக்கணும், என்று பழமோழியே
இருக்கிறது. வக்கிரமும் வெறுப்பும் ஆத்திரமும் சூழ்ந்த பெண்கள். குடும்பத்தின் அடக்கு
முறைகளில் அவர்களுக்குக் கோபத்தின் ‘செல்லிடம்’ மருமகள்களே.
மாமியார் உடைச்சா மண்குடம். மருமகள் உடைச்சா பொன்குடம்.
மகன் வந்து பார்த்தபோது அவனது மனைவி நிலைமை முற்றிலும் ஷீணமாகி
யிருக்கிறது. எல்லாவற்றுக்கும் தன் அம்மாவே காரணம் என்று ஆத்திரப்பட்டும் அவள் புரிந்து
கொள்கிறாப் போலவே இல்லை.
இந்தப் பிரச்னையின் இந்தப்படியான விஸ்தீரணத்தில், கதை இப்படி
முடிகிறது - “இப்பொழுது அவர் மனதிடிந்து, எப்பொழுதும் துயரத்தில் ஆழ்ந்தவராக இருக்கிறார்.
அவர் தாய் ராமுப் பாட்டியும் கூட, அவரைப் புனர் விவாகம் செய்துகொள்ளும்படி வேண்டத்
துணியவில்லை. ‘தர்ம சங்கடம்’ என்னும் வசனம், இப்பொழுது சருவதா அவர் வாயில் வருகிறது.
பெண் கல்வி விஷயத்தில் வெகு மும்முரமாய் உழைத்து வருகிறார்.”
பெண்களிடையே இத்தனை திண்டாட்டங்களின் ஊற்று பெண் கல்வியின்மை,
என்பதை முத்தாய்ப்பாய் வைக்கிறார் இந்தக் கதையில், அது சட்டென்று ஒட்டாமல் தனித்துத்
தெரிந்தாலும் கூட.
பணத்தாசை பிடித்த அப்பாக்கள் தக்க விலைக்கு தங்கள் பிள்ளைகளைத்
கல்யாணம் என்று விற்கிறார்கள், என விளக்கும் இன்னொரு கதை. வேணுவுக்கு முதலில் ஓர் ஏழைப்
பெண்ணைப் பார்த்து நிச்சயமும் ஆகிறது. அதைமீறி பணக்கார சம்பந்தம் என தட்டுப்படும் போது
பெண்ணின் ஜாதகத்துக்குப் பொருத்தமாய் தன் பையனின் ஜாதகத்தையே மாற்றிக் கொடுத்து கல்யாணம்
முடிக்கிறார் வேணுவின் அப்பா. ஜோசியருக்கு இரண்டு பக்கமும் வரும்படிக்குக் குறைவில்லை.
கதையின் கடைசிப் பத்தி இது.
“நாள் இதுவரை, சாமி ஐயர், ஜோஸியருக்கு எண்ணூறு ரூபாய் கொடுத்தாகி
விட்டது. இன்னும் இருநூறு தான் பாக்கி செல்ல வேண்டியது. வதூவரர்களின் சுக சௌபாக்கிய
வாழ்க்கையோ? அந்தக் கதை வேறு. அதெல்லாம் விதி போல நடக்கும்.”
பிராமண மோசடிகளையே பட்டியலிட்டபடி நகர்கிறது பாதிப் புத்தகம்.
மாதவையாவுக்கு அத்தனை பெரிய வடுவை உள்ளத்தில் கொடுத்திருக்கிறது அவர்சார்ந்த சமூகத்தின்
பொது செயல்பாடுகள். தவிரவும் கல்லூரிக் காலங்களில் பெண் இளமை அவளது திருமணம் தங்களது
திருமணம் வரதடசிணை... இப்படியே அது மூச்சும் பேச்சுமாக பரபரத்தும் இருக்கலாம் அல்லவா?
*
(அடுத்த வாரம் தொடர்கிறது)
storysankar@gmail.com
91 97899 87842 / 91 94450 16842
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete“நான்கு சக்கர வாகனத்தில் சவாரி சுகம் இதைவிட சிலாக்கியமா, எப்படி?”
ReplyDeleteபாலகுமாரனைத்தான் கேட்டிருக்கக வேண்டும்.
நிறையப் பேர் இருக்கிறார்கள் கேட்க!
Delete