week 29
‘சாஸ்தா பிரீதி’ முதலிய கதைகள்
(சென்ற வாரத்தின் தொடர்ச்சி)
(குசிகர் குட்டிக் கதைகள், அ.மாதவையர்,
பக். 184 விலை ரூ 115/- வெளியீடு 2012. வைகுந்த் பதிப்பகம், 275 ஜே ஜே பவன், கணபதிநகர்,
நாகர்கோவில் 629002. அலைபேசி 94420 77268)
மாதவையாவுக்கு அத்தனை பெரிய வடுவை உள்ளத்தில் கொடுத்திருக்கிறது
அவர்சார்ந்த சமூகத்தின் பொது செயல்பாடுகள். தவிரவும் கல்லூரிக் காலங்களில் பெண், இளமை,
அவளது திருமணம், தங்களது திருமணம், வரதட்சிணை... இப்படியே அது மூச்சும் பேச்சுமாக பரபரத்தும்
இருக்கலாம் அல்லவா?
ஆனால் தொகுப்பின் ஆகச் சிறந்த
கதை ‘சாஸ்தா பிரிதி.’
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்
தமிழ்த்துறை, தற்கால இலக்கியத் தலைவர் முனைவர் சு. வேங்கடராமன் (தற்போது ஓய்வு பெற்று
சென்னைவாசி இவர்.) இந்தக் கதையின் தேவையை என்னிடம் சொன்னபோது, நான் சென்னை மண்ணடி பக்கம்
இருந்த மறைமலை அடிகள் நூலகத்தில் பஞ்சாமிர்தம் இதழின் பழைய பிரதிகளில் இந்தக் கதையைக்
கண்டுபிடித்து என் கையெழுத்தில் நகலெடுத்து அவருக்கு அனுப்பித் தந்தேன். பின்பு அதைத்
திண்ணை இணைய இதழிலும், எனது ‘ஞானக்கோமாளி’ பிளாக்கிலும் வெளியிட்டு மகிழ்ந்தேன்.
இந்தக் கால கட்டத்தில் சிறுகதை
என்பதன் வடிவம் பற்றி மாதவையா தனக்குள் பிடிபட்டாப் போல உணர்ந்திருக்க வேண்டும். கதை
சம்பவ ஒருமையுடன் அதைநோக்கிய எடுப்பு தொடுப்பு முடிப்பு எல்லாமாய் ஜோராய் அமைகிறது.
ஒரு நாவல் சுருக்கம் போன்ற பெரிய காலவெளியை இந்தக் கதைக்குள் அவர் அடைக்கவில்லை. ஆரியன்காவு
என்கிற ஊர். மன்னர் கொடையில் நடக்கிற பிராமணர்களுக்கான ஊட்டுப்பிறைச் சாப்பாடு. ஆரியன்காவு
கோவிலின் கடவுள் தர்ம சாஸ்தா. அவருக்கான பிரீதி நடக்கிறது. பூஜை முடிவில் பக்தர்களில்
யாருக்காவது ‘சாமி’ வரும் என்று ஐதிகம். சாஸ்தா, அவர்-உருவில் பக்தர்களுக்கு பிரசாதம்
வழங்குவதும், அவர்களின் குறைகளைக் கேட்பதும் நடந்தேறும். வெகுநேரம் யாருக்குமே ‘சாமி’
வராத நிலையில் பசியுடன் இருக்கிற ஒரு பிராமணர் தன்னில் ‘சாமி’ இறங்கி விட்டதாக ஆவேசமாய்
நடிக்கிறார். பிறகு அவரும் அவரது சிநேகிதரும் கை நிறைய தட்சிணையும் சிறப்பு உபசாரங்களுமாக
ஊட்டுப்பிறை உணவு உண்கிறார்கள்.
ஒரேயொரு சம்பவம். அதைச் சுற்றி
நிகழ்கிறது கதை.
‘சாமி’ வருவது போல நடிப்பது,
என்று சொல்கிற அவர், அந்த பிராமணரைக் குவித்துக் கதை சொல்கிறார். தொகுதியின் பிற கதைகளில்
போல, எல்லா பிராமணரும் மோசம் என்கிற வறட்டு வேதாந்தம் இதில் இல்லை, என்றே என் வாசிப்பில்
படுகிறது. ஆனால் சொல்ல வேண்டியதைச் சொல்வேன், என்கிற உறுதி. பிராமணரில் இப்படி ஏமாற்றிப் பிழைக்கும் ஆட்கள் இருப்பதை அடையாளம் காட்டுகிறார். வெளிப்படையான விமரிசனங்கள் அற்று, ஒரு
காலகட்டம், அதன் ஒரு நிகழ்வு பற்றிய பதிவு என்கிற அளவில் அவர் எழுதிச் செல்வது சிறப்பு.
அதில் இருந்து வாசிக்கிறவர் தாமே தன் விமரிசனைத்தை வைத்துப் பொருத்திக் கொள்ள முடியும்,
என்பது இந்தக் கதையைக் கலைப்படைப்பாக மாற்றிவிடுகிறது.
தெளிவான நீரோட்டமான கதை.
இருக்கும்போது இல்லை
வாழ்ந்த காலத்தில் தன் பெற்றோரை,
வீட்டு முதியவர்களை ஒழுங்காக வைத்துக் கொள்ளாமல், அவர்கள் இறந்த பிறகு சிரார்த்தம்
என்ற பெயரில் அவர்களுக்கான திவசத்தை சிரத்தையாய்ச் செய்யும் பாவனை பற்றிய கதை. சிரார்த்தத்துக்கு
வரும் வைதிகரோ, திவச பிராமணரோ, சிரார்த்தம் செய்கிறவர்களோ அன்று காலை சாப்பிடாமல் வெறும்
வயிற்றோடு சிரார்த்தம் செய்ய வேண்டும். இவர்களில் யாருமே காலையில் காபியாவது சாப்பிடாமல்
சிரார்த்தம் செய்ய அமர்வது இல்லை. ஒருத்தரிடம் மற்றவர் சொல்லிக்கொள்ளா விட்டாலும் அவரவர்
அளவில் காலையில் காபி சாப்பிட்டுவிட்டே சிரார்த்தத்தை நடத்துகிறார்கள். வீட்டுக்காரர்
தந்தைக்கு சிரார்த்தம் கொடுத்தபின் அன்றிரவும் சாப்பிடக் கூடாது. அவர் அன்றைக்கு ராத்திரி
சாப்பாடு சாப்பிடுகிறார். அவர் மாத்திரமல்ல, சாஸ்திரிகளும் கூட அப்படி, என்கிறார் மாதவையா.
சிரார்த்தம் நடந்த வீட்டில் கதை செல்கையில் வம்படியாக கதையை கூட ஒரு வரி என்று, வைதிகரைப்
பற்றியும் சொல்கிறார், என்பது வலியத் திணித்த குற்றச் சாட்டு. இந்த அம்சம்தான் போன
கதை ‘சாஸ்தா பிரீதி’யில் இல்லை என்று குறிப்பிடப் பட்டது.
கதையை முடிக்கிறார் கிண்டலாக,
ஒரு கட்டுரைத் தனத்துடன் - “இவ்வாறு, அந்த ‘ஏழை வழிப்போக்கிப் பிராமணரின்’ சிரார்த்தம்
எல்லோருக்கும் திருப்தியாக, நடந்தேறியது.”
இனி அவர் நெஞ்சு வேகும்
படிக்காத பெண்களின் பொருமலுக்குத்
திரும்ப வருகிறார் மாதவையா. படித்த நாகரிக மோஸ்தர் பேணுகிற பெண்களை இவர்கள் வசை பாடுகிறார்கள்.
இதெல்லாம் நல்ல குடும்ப ஸ்திரீகளுக்கு அழகல்ல, என்கிறார்கள். கதையில் கூனப்பாட்டி வருகிறாள்.
குற்றங்களின் மூட்டையைச் சுமந்து திரிகிறாள் அவள். ஊர் எப்படி உருப்படும் என்று அவள்
எரிச்சல் பட்டுக் கொண்டே யிருக்கிறாள். கம்பராமணயம் தொட்டு, கூன் விழுந்த பாட்டிகள்
வில்லிகளாக அமைந்து விட்டார்கள் கதைகளில், என்பது துக்கம் தான்.
கதையில் ஓர் உரையாடல் - (கூனப்பாட்டி)
என்ன பெருமை அந்தப் பெண்ணுக்கு! தலைமயிரை, எல்லாரையும் போல் பின்னிக் கொள்ளாமல், ஏதோ
பிஸ்கோத் கட்டாம், அப்படிக் கட்டிக் கொண்டு, மயிர் ஊசியும் செருகிக் கொள்கிறாள். இப்படிப்
பட்ட பெண்கள் ஒரு நாளும் குடும்பங்களில் முன்னுக்கு வந்து உருக் கூடுகிறதில்லை.
(ராஜம்) - தலையைக் கட்டிக் கொள்கிறதுக்கும்
குடும்ப வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?
ருதுவாகிற வயதில் பெண்ணைக் கல்யாணம்
பண்ணிக் கொடுக்காமல் அப்பா அவளைப் பள்ளிக்கு அதுவும் எல்லா சாதிமாரும் படிக்கும் ஆங்கிலப்
பள்ளிக்கு அனுப்புவதை நிந்திக்கிறார்கள். இந்தப் பெண்களின் உரையாடலைப் போலவே, அடுத்து
ஆண்களின் கலந்துரையாடலைத் தருகிறார் மாதவையா. இதே விவகாரம் அவர்கள் மத்தியில் பிரஸ்தாபிக்கப்
படுகிறது. (இதில் ஒரு சுயகவனமான உத்தி இருக்கிறது அல்லவா?) அந்தக் கூட்டத்தில் பல பாஷைக்காரர்களும்,
அரசாங்கத்தில் பல நிலையில் வேலை செய்கிறவர்களுமாக அவர்கள் அமைகிறார்கள்.
ஐரோப்பியரை நாம் மிலேச்சர்களாக
மதிக்கிறோம். ஆனால் அவர்களுக்கு சலாம் போட்டு வாழ்கிறோம். இந்திய பஞ்சமர் என்றால் மட்டும்
ஆசாரமும் சாஸ்திரமும் வந்து விடுகிறதா, என்று ஒருவர் கேட்கிறார். அதன் நியாயத்தைப்
பாதி ஏற்றுக் கொள்கிற ஒருத்தர், ஊர் மாறட்டும், யாராவது மாற்றிக் காட்டட்டும், நானும்
மாறுகிறேன், என்கிறார்.
இங்கே ராமசேஷையர் ஒரு நேரடிப்
பிரசங்கமே நிகழ்த்துகிறார். “ஆனால் அவர்களைச் சீர்திருத்தி சத்துக்களாக்க வழி தேடுங்கள்.
எங்கள் பள்ளிக்கூடங்களில் நுழையக் கூடாது, தெருக்களில் நடக்கக் கூடாது, எங்கள் கிட்டவே
வரக் கூடாது. நீங்கள் மிருகங்களிலும் கீழான சடங்கள், ஆனால் உங்களை மேம்படுத்த நாங்கள்
ஒன்றும் செய்ய மாட்டோம். நம்முடைய சொந்த ஜனங்களையே, எவர் உழைப்பினால் நாம் நாகரிகமாக
வாழ்கிறோமோ, அவர்களையே நாம் இப்படி நடத்தினால், பின்பு வெள்ளைக்காரன் நம்மைச் சரியாக
நடத்தவில்லை என்று முறையிட நமக்கு நாவேது?”
- இவ்வளவு தன்னிலை விளக்கமாக
இந்த நூலில் வேறு எங்குமே மாதவையா தன்னை அடையாளங் காட்டவே யில்லை.
சேஷையர் பறைப் பிள்ளைகளுக்குச்
சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கூடம் நடத்துகிறார். இரவு எட்டு மணி வரை அவர் பாடம் பயிற்றுவித்து
விட்டு வீடு திரும்பினால் மனைவி அவரிடம் பிராது வைக்கிறாள். ஊரெல்லாம், தங்கள் பெண்
இத்தனை வயதாகியும் திருமணம் ஆகாமல் வீட்டில் இருப்பது பற்றி வம்பு பேசுகிறார்கள், என்கிறாள்.
வரதட்சிணை, சீர் என்று அவரால் செலவு செய்ய முடியவில்லை, என்று பேசுகிறார் சேஷையர்.
தன் மூத்த பெண்ணை வயதுக்கு வருமுன்பே கட்டிக் கொடுத்தது குறித்து அவருக்கு வருத்தம்.
இளைய மகளையாவது சாஸ்திரப்படி, வயதுக்கு வந்து நாலைந்து வருடங்கள் கழித்து கல்யாணம்
செய்து கொடுக்க உத்தேசிப்பதாக சேஷையர் சொல்கிறார்.
பெண்கள் ருதுவாகுமுன்பே கல்யாணம்
என்று அவர்களைப் பிணைப்பது இடைப்பட்ட காலத்தில் நுழைந்த விஷயம் தான், என வலியுறுத்தியே
அடிக்கடி பேசுகிறார் மாதவையா.
இந்நிலையில் பாம்பு கடித்து சேஷையர்
இறந்து போகிறார். சமூகத்தைத் திருத்தும் அவரது நடவடிக்கைகளின் பாவங்ளால் தான் இந்த
மரணம் என்று ஊர் பேசுகிறது. அந்த இரண்டாவது பெண்ணுக்கு, வேறு வழியில்லாமல், ஒரு நாற்பத்தைந்து
வயது வரனுக்கு இளைய பெண்ணை திருப்பதிக்குப் போய் மணம் செய்துகொடுக்க ஏற்பாடு ஆகிறது.
அந்த பிராமணன் அங்கேபோய் வரதட்சிணை 800 கேட்டு முரண்டு பிடிக்கிறார். கல்யாணம் நின்று
போகிறது. ஊரார் யாரும் இவர்களுக்கு ஆதரவாக ஆறுதலாகப் பேசவில்லை. அந்த மாப்பிள்ளைக்கே
அவர்கள் சாதகமாகப் பேசினார்கள்.
இந்தத் தொகுதியிலேயே எத்தனை கல்யாணங்கள்
இப்படி நின்று போகின்றன. பெரும் துக்கம் தான். இத்தனை செலவு செய்து ஏற்பாடுகள் செய்து
நடத்தப் படுகிற கல்யாணத்தில் பேரும், மானமும், பொருட் செலவும் அத்தனையும் திகைத்துப்
போகின்றன. கல்யாணம் நின்றுபோன காட்சியை வைத்தே தனிக் கதை எழுதலாம் போலிருக்கிறது.
இந்தக் கதையில், பிறகு கல்கத்தாவில்
இருந்து வந்த உறவினர்களின் மேற்பார்வையில் காமு என்கிற சேஷையரின் இரண்டாவது மகள், கல்யாணம்
நின்றுபோனவள், தொடர்ந்து படித்து அழகிலும் கல்வியிலும் மேன்மை பெறுகிறாள். மாதவையா
எழுதுகிறார் - “இதைக் கண்ட ஊராரெல்லாம் செல்லம்மாள் குடும்பத்தை, வம்பளக்கும் விஷயம்
தவிர, இதர விஷயங்களி லெல்லாம் விலக்கி வைத்தார்கள்.”
அந்த ஹோட்டலில் தீ விபத்தாமே?
- ஆமாம். அரிசியைத் தவிர எல்லாம் வெந்து போச்சு - என்பார்கள். அது நினைவு வருகிறது.
காமு, கல்வியும், அழகும், சங்கீத
ஞானமும் நிறைந்த பதினேழு வயதுள்ள யுவதியான பின்பு, (ஆகா, பெண்ணெனும் குருத்து பளபளவென்று
இலை விடுவது எத்தனை அழகு.) கல்கத்தாவில் அவள் அத்தான் சிநேகிதன், பி.ஏ. பட்டம் பெற்று
உயர்ந்ததோர் உத்தியோகத்தி லிருப்பவன், சுமார் இருபத்திரண்டு வயதுள்ள ஒரு யௌவன புருஷனுக்கு
மணஞ் செய்து கொடுக்கப் பட்டாள். இதே ஊரில் கோலாகலக் கல்யாணம். கல்யாணத்துக்கு வந்த
பிராமணர்கள் சாப்பிடாமல் போகிறார்கள். பறைப் பிள்ளைகளுக்கு, அவர்கள் பள்ளியில் விருந்து
நடந்ததுமன்றி, வஸ்திர தானமும் செய்யப் பட்டது.
ஆரம்பம் போலவே, வீரபத்ரையர் வீட்டில்
நிகழ்ந்த சம்பாஷணையுடன் கதை முடிவு பெறுகிறது. கூனப்பாட்டி, வழக்கமில்லா வழக்கம் இது,
என நொடிக்க ஒருத்தி பதில் சொல்கிறாள். இப்படி இன்னும் சில கல்யாணங்கள் நடந்து விட்டால்,
இதுவே வழக்கமாகி விடும்.
இதைப் பார்க்காமல் ராம சேஷையர்
இறந்து விட்டாரே, ஆனால் இனி அவர் நெஞ்சு வேகும், என ஒருத்தி நினைக்கிறபடி கதை முடிவு
பெறுகிறது. எப்பவோ செத்துப்போன, எப்பவோ தகனம் செய்த ராம சேஷையர் நெஞ்சு வேகும், என
இப்போது குறிப்பிடுவது தான் புரியவில்லை! அவர் ஆத்மா சாந்தியடையும், என்கிற மாதிரி
எதையாவது சொல்லி யிருக்கலாமோ?
கதையின் தலைப்பே இப்படி இருக்கிறது.
நரி பரியான அற்புதம்
ஆனால் இக்கதைகளில் நாவல் சுருக்கம்
என்பதைத் தாண்டி கதை ஒரு நல்ல நகர்வைப் பெறுகிறது. தங்கையின் கணவர் இறந்து விட்டார்,
என தந்தி வருகிறது. கேசவையருக்கு. தங்கைக்கு மாதா மாதம் பண உதவி செய்கிறார் அவர். மனைவி
நொடித்தாலும் அவர் உதவி செய்யத் தயங்கவே இல்லை. தங்கைபையன் கல்விக்கும் அவர் பெரும்
உதவி செய்கிறார். தன் பெண்ணைப் பிற்காலத்தில் அவனுக்குத் தந்து மாப்பிள்ளை ஆக்கிக்
கொள்ளலாம், என தன் யோசனையை மனைவியிடம் சொல்லி, தங்கைக்குப் பணம் அனுப்பும் செலவுகளை
மனைவி தடுக்காமல் பார்த்துக் கொள்கிறார்.
ஆனால் தங்கை இங்கேவந்து அவர்களுடனேயே
தங்க நேர்கிறது. அப்போதும் மனைவியை அடங்கிப் போகும்படி அவர் சமாதானம் செய்கிறார். ஆனால்
நல்ல படிப்பு வேலை என்று அமர்ந்த பையன், தன் அம்மா சொற்படி நல்ல வரதட்சிணையுடன் பணக்கார
சம்மந்தம் அமைந்தபோது இவர்களைத் துறந்து தனி வீடு எடுத்துப் போகிறான். அதுநாள் வரை
கேசவையர் தன் மனைவியின் முணுமுணுப்பையும் மீறி தங்கைக்குச் செய்த பெரும் உதவிகள் ஒரு
கணத்தில் அலட்சியம் செய்யப் படுகின்றன. தன் பெண்ணுக்கு, சீதையைத் தேடி வந்த ஸ்ரீராமன்
போல, நல்ல வரன் தேடி வரும், என மனைவியிடம் கேசவையர் பேசிப் புலம்புவதாக முடிகிறது கதை.
இந்தக் கதையில் பணம் பத்தும் செய்யும் என்கிற செய்தியை விட, கதையை உணர்ச்சிபூர்வமாக
நடத்திக் காட்டிய அளவில் மற்ற கதையை விட இது வேறுபடுகிறது.
இதைத்தான் முன்பு பேசியது. கல்யாணம்
நின்று போன காவிய சோகம், அதையும் இப்படி ஒரு கதையில் உணர்ச்சிச் சித்திரமாக்கி மாதவையா
காட்டி யிருக்கலாமே, என்று.
விவாக சம்ஸ்காரம்
அந்த இளைஞருக்கு, மாதவையாவுக்கு
விவாகம், அதுசார்ந்த இளமையான பெண்ணின் பிரச்னைகள் திரும்பத் திரும்ப மனசில் அலையடித்ததாகத்
தெரிகிறது.
கதை என்ற அளவில் இது சிறப்பான
வடிவம் பெற்றிருப்பதாகவே கருத முடிகிறது. கதாநாயகன் சேஷுவுக்குப் பதினெட்டு வயது. படித்துக்
கொண்டிருக்கிறான். தற்போது கல்யாணம் தேவையில்லை என்கிறான். அதையும் மீறி பெண் பார்க்கப்
போன இடத்தில் ஓர் எட்டுவயதுப் பெண்ணை மணக்கச் சம்மதமும் தந்து வருகிறான். ஆனால் வரதட்சிணைக்கு
ஆசைப்பட்டு அந்த வரனை முறித்து அவலட்சணமான வேறொரு பெண்ணுக்குத் தன் பையனை முடிக்கப்
பார்க்கிறார் அப்பா. சேஷுவின் சிநேகிதன் இதுவிஷயமாக அந்த வேறொரு பெண்ணின் வீட்டுக்குக்
கடிதம் எழுதுகிறான். அப்படியும் அப்பாக்கள் இருவருமாக சேஷுவுக்கு நெருக்கடி தந்து இந்தக்
கல்யாணத்தை விமரிசையாக ஏற்பாடு செய்கிறார்கள்.
இப்படி சம்பவங்களை வரி வரியாக
நாவல் சுருக்கம் போல எழுதி வந்த மாதவையா, சட்டென நிறுத்தி, “கலியாண ஏற்பாடுகளில் ஒன்றை
மட்டும் விவரித்துக் கூறி, அதைப் போன்ற விமரிசையுடனேயே மற்றவைகளும் நடந்தன வென்று சுருக்கிக்
கூறுவோம்” என முன் வருவது, சிறுகதை இலக்கணமே யாகும்.
ஊர்க்கோலத்தில் எதிரெதிர் நாற்காலிகள்
போட்டு மணமகனையும், மணமகளையும் அமர்த்துகிறார்கள். மணமகளின் முகத்தைப் பார்ககிறான்
சேஷு.
”தன் வாழ்க்கைத் துணையின் சாயலையும்
ரூப லாவண்யத்தையும், சேஷு உற்றுப் பார்த்தான். அவள் வயதுக்கு அவள் அதிகம் தடித்தவள்.
அவள் அணிந்திருந்த நகைகளும், வைரங்களும், பல்லக்கைச் சுற்றிலும் தொங்க விட்டிருந்த
மெழுகுவர்த்தி விளக்குகளுமாகச் சேர்ந்து அவள் நிறத்தை, மைக்கறுப்பாய்க் காட்டின. அவளுக்கு
நெற்றி மிகவும் சுருங்கி இருந்தது. தடித்த மோவாயும், அகலமான வாயும், அப்பக் கன்னங்களும்
உடையவள். அவள் கீழுதடு அதிகப் பருமனாயும், வாயைச் சரியாக மூடாமல் அவளது பெரிய பல்வரிசைகளைக்
காட்டிச் சிறிது கீழே தொங்கிக்கொண்டு மிருந்தது.”
அவளை அவன் வெறுத்தான், என்று
சொல்ல அவளை அவலட்சணம், என வர்ணிக்கிறார் மாதவையா.
அவளை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
ஊர்வலத்தில் இரண்டு தாசிகள் சதிர் ஆடுகிறார்கள். அவர்களில் ஒருத்தியிடம் கிளர்ச்சியுற்று
மோகம் கொள்கிறான் சேஷு. அதை அந்தப் பல்லாக்கிலேயே அவளிடம், மணமகளிடம் சொல்கிறான். தங்கள்
இருவரிடையே பொருத்தமே யில்லை, என்று புலம்புகிறான். அந்தப்பெண் “அப்படி யெல்லாம் பேசாதேயுங்கள்”
என துக்கம் நெஞ்சடைக்கச் சொல்கிறாள்.
பிறகு மாதவையர் எழுதிச் செல்லும்
வரிகள் அற்புதமானவை. இங்கே மணமகன் அல்ல, மாதவையா பேசுவதாகவே தோன்றுகிறது.
அவன் வருத்தத்துடன், “உன்மேல்
குற்றமில்லை. என்னைப் போலவே உன்னையும் பலியிட் டிருக்கிறார்கள். என்னைவிட நல்லவர்கள்
எத்தனையோ பெயர்கள், இவ்வளவு சீருடனும் விமரிசையுடனும் உன்னைக் கலியாணஞ் செய்து கொள்வதில்
ஆசைப்பட்டுச் சந்தோஷப்படக் கூடியவர்கள், இருக்கவே இருக்கிறார்கள்...”
அவனது ஏமாற்றத்தைக் கூறவந்த மாதவையருக்கு
அவள்சார்ந்த நியாயங்கள் பிடிபட்டிருப்பதும் அதை வெளிப்படுத்துவதும் சிறப்பு. அவன் தாசியை
நினைத்து மதிமயங்கியபடி ஊர்வலத்தில் பல்லக்கில் வந்து கொண்டிருந்தான், என கதையை அப்படியே
முடிப்பதும் நவீனகால சிறுகதை அம்சம் தான்.
காட்சிகளின் ஒரு சம்பவத்தில்
கதை ஊன்றி நின்று குவிகிறது.
குகைச் சாமியார்
முன்பே குறிப்பிட்டது போல, கதைகளில்
உணர்ச்சிக் கட்டங்களை நோக்கி மாதவையா நகர்ந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயமாக
இருக்கிறது. இந்த ‘குகைச் சாமியார்’ சிறுகதை பக்தி பரவசம் என்கிற, அவர்பாணியில் அல்லாத,
உணர்ச்சிக் களங்களை எடுத்துச் சொல்கிறது.
சாமியார் ஒருவர் ஒரு வளர்ப்புப்
பெண்ணுடன் குகையில் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணை இருவர் விரும்புகிறார்கள். ஒருத்தன்
பணப்பித்து கொண்டவன். ஏற்கனவே அவன் செல்வந்தன். அடுத்தவன் உழைப்பாளி. ஏழை. தனது அந்திம
காலத்தை முன்பே அறிந்து கொள்ள முடிந்த சாமியார் அவளது திருமணம் பற்றிப் பேசுகிறார்.
அதுவரை அதிகம் பேசாத சாமியார் மடை திறந்தாப் போல உரையாற்றுகிறார்.
அவர் பூஜை செய்துவரும் ஒரு பெட்டி.
அது நிறைய நகைகள் இருக்கின்றன. அந்தப் பணக்காரனுக்கு அந்தப் பெட்டியையும், அந்த ஏழை
உழைப்பாளிக்கு அந்தப் பெண்ணையும தந்துவிட்டு சாமியார் சித்தி யடைகிறார்.
ஒருவேளை ஒரு திரைப்படம் போல காட்சிகளை
அமைக்க அவர் ஆசைப் பட்டிருக்கலாம். விதவிதமாக எழுதிப் பார்க்கும் வேட்கை அடைந்திருக்கலாம்.
இந்தக் கதைக் கூட்டத்தில் அதைச் சேர்த்த காரணமே எனக்கு விளங்கவில்லை. புராண சரித்திரக்
கதைகளின் வசிகர மொழி இதில் இருக்கிறது. ஆனால், அவர் எந்த அளவில் சாமியார், அவரது நியதி
நியமங்கள் என்னென்ன, போன்ற உள் விவரங்கள், கதையில் இல்லையே.. சாமியார் என்று சொல்லிவிட்டால்
அவர் சாமியார் ஆகி விடுவாரா என்ன?
ஆலமரத்தின் கீழே
சுருதி சுத்தமான சினிமாக் கதை
இது.
ஒரு கணவன் மனைவி. அவர்களுக்கு
ஒரு குழந்தை. மனைவியை சந்தேகித்த கணவன். மனதில் சந்தேகம் வந்தால் எத்தகைய பிசாசுகள்
அவனில் புகுந்து ஆட்டும், என்றெல்லாம் விவரங்கள் இல்லை. அவன் சந்தேகப்படும் ஒருவன்
அவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கிறான். அவனைக் கணவன் கொன்றுவிட்டு (என்ன
அவசரம்? விசாரிக்கக் கூட பொறுமை இல்லாமல்.) ஜெயிலுக்குப் போகிறான். வருடங்கள் உருண்டோடுகின்றன.
அந்தக் காலக் கதைகளில் வருடங்கள் அடிக்கடி உருண்டோடவே செய்கின்றன.
ஆனால் கதையின் சிறுகதைத் தன்மை
தெளிவானது. கதை துவங்கும்போது ஓர் ஊரின் திருவிழா வைபவம் வர்ணிக்கப் படுகிறது. ஊர்
ஒதுக்குப் பறத்தில் ஓர் ஆல மரத்தின் கீழே அந்தப் பெண். மடியில் குழந்தை ஒன்று. திருவிழாவை
வேடிக்கை பார்க்க வந்திருக்கிறார்கள். வாண வேடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தூக்கம்
வராத பிள்ளை அம்மாவைக் கதை சொல்லச் சொல்கிறான். அம்மா ‘தன்’ கதையைச் சொல்கிறாள்.
வருடங்கள் பின்னோக்கி உருண்டோடுகின்றன!
ஜெயிலில் இருந்து விடுதலையாகி
வந்த அவள்கணவன் அந்த ஆலமரத்தின் பின்னே யிருந்து, மீசையும் தாடியுமாக சாமியார் போல
வெளிப் படுகிறான். அப்படி வெளிப்படுவது அவள்புருஷன் தான் என்று நமக்கெல்லாம் புரிந்து
விடுகிறது. எழுத்தாளருக்குப் புரியவில்லை. அப்புறம் உணர்ச்சிமயமான இரண்டு பக்கங்கள்.
அத்தோடு அதன்பின் திருவிழாவே வரவில்லை கதையில். அவர்கள் மீண்டும் ஒன்று கூடியது, இதைவிட
பெரிய திருவிழா என்ன இருக்கிறது?
நல்லவேளை வாசகரைப் பார்த்து அவர்கள்
மாலையும் கழுத்துமாகக் கை கூப்ப, பூமாரி பொழிய, ‘வணக்கம்’ போடவில்லை.
புதியதோர் பிசாசு
குடியால் கெட்ட ஒரு தமிழ்க் குடும்பத்தின்
கதை இது. வெளிப்படையான பிரச்சாரம்.
ஆதி ஆரியரது வாழ்க்கை எவ்வாறாயினும்,
அவர்கள் சந்ததியாராகிய நமக்குள் மதுபான வழக்கம் இல்லாம லிருந்தது. வாந்திபேதி உபத்திரவம்
உற்றார்க்கும், பிரசவித்தவர்க்கும் சாராயமானது அவசியமான மருந்தென்று, நமக்குள் சிலர்
எண்ணுகிறார்கள். இது முற்றிலும் தவறென்பது, சிறந்த மேனாட்டு வைத்திய சிகாமணிகளின் அபிப்ராயம்.
(...) மேனாட்டுச் சன சமூகங்களுக்குள் நடக்கும் குற்றங் கோளாறுகளுக் கெல்லாம் குடிவெறியே
முக்கியக் காரணம் என்று ஒப்புக்கொள்ளப் படுகிறது. அங்ஙன மிருக்க, உஷ்ண பூமியில் அவசிய
மில்லாததும், தேச சம்பிரதாயத்தோடு முரணயிதும், பிடித்தால் விடாததுமான ஓர் ஈன வழக்கத்தை,
நம்முள் சிலர் புதிதாய் அப்பியசிப்பது பரிதபிக்கத் தக்கதே. பள்ளு பறை என்று கீழ் ஜாதிகளாக
மதிக்கப்படும் இனத்தாரைத் தவிர, மற்றெவருமே மதுபானஞ் செய்யாதிருந்த இந் நாட்டிலே, இப்பொழுது
மேல் ஜாதியாரும் குடிக்கக் கற்றுக்கொள்வது விபரீதமே. கீழ் ஜாதியாரின் கெட்ட வழக்கத்தை
நீக்கி அவர்களை மேம்படுத்த முடியாமல், தாம் அவ்வழக்கத்தை அனுசரித்து, கீழ் ஜாதியாக
முயலுதல் ஆச்சரியமே!... என்று இன்னும் நீள்கிறது உரை.
கதையில் ஒரு பிராமணர் குடிப்
பழக்கத்துக்கு அடிமையாகிறார். அவர் குடும்பத்தில் பிள்ளைகளே அவரோடு உணவு உண்ணுவதைத்
தவிர்க்கிறார்கள். அவர் தனிமைப்படுகிறார். தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார். இறுதியில்
உடல் சுகவீனத்தால் படுக்கையிலேயே அசிங்கமான தன் உடல் கழிவுகளுடன் இறந்து கிடக்கிறார்
- இதுமாதிரி நான் கேள்விப்பட்டதே இல்லை. தன் படுக்கையிலேயே மல ஜலம் கழிக்கிற நிலை குடியால்
வருமா? அது சாகும் போது தான் வருமா? அதற்கு முன்பே அவர் உடல் இன்னும் பல கட்டங்களில்
மெல்ல சீரழியும் அல்லவா?
தவிரவும் குடித்ததால் அவர் சமூகக்
குற்றம் எதுவும் இழைத்தாப் போலவும் கதையில் காட்டப்பட வில்லை.
கதை இப்படி நாடகத் திரையுடன்
முடிகிறது. புத்தகமும்.
இதை வாசிக்கும் மித்திரர் பலர்க்குச்
சுந்தரமையர் குடும்பத்தைப் போல் யஜமானன் குடியினால் கெட்டுப் போன குடும்பங்கள் சில
ஞாபகத்துக்கு வரலாம். (...) தீய வழக்கங்களுக்குப் புலிபோலஞ்சி விலகுவதே ஆண்மையாகும்.
இந்தக் கடைசி வரியை மாத்திரம்
வாசிப்பவர், இதை கதை என்பாரா கட்டுரை என்பாரா?
*
தான் பார்த்த கேட்ட கதைகளை, பாத்திரங்களை
மாதவையா பேசுபொருளாக்கி யிருக்கிறார். அதில் பிறன்மனை விழைதல், தாசியிடம் போதல் வழக்கங்கள்
இல்லை போலிருக்கிறது! அந்த மட்டுக்கு மாதவையாவின் சொந்தச் சூழல் சிறப்பாகவே அமைந்திருந்தது
என்று சொல்லத் தோன்றுகிறது.
இளமையும் வேகமும், தமிழில் புதிதான
துறைகளான புனைவு வடிவங்களில் வசன நடை முயற்சிகள் எல்லாமாக அவரை இயக்கி யிருக்கின்றன.
வசன காலப் புனைவு இலக்கிய உலகில் நமக்குக் கிடைத்த முன்னோடிகள், மாயூரம் வேதநாயகம்
பிள்ளை, பி.ஆர்.ராஜமையர், மாதவையா போன்றோர் மேதைகளாகவே அமைந்தது நமது நல்லூழ். எப்போதுமே
உலக இலக்கியத்துக்குச் சளைக்காத, மேன்மையான நூல்கள் நம்மிடம் கால காலமாக காணக் கிடைக்கின்றன.
இவர்கள் மேதைகள் மாத்திரம் அல்ல, தான் அறிந்த சமூகத்தை தான் உணர்ந்த அளவு அடுத்தகட்ட
நகர்வுக்குத் தயார்ப் படுத்தத் தவறவில்லை, என்பது நம் பெருமை.
கதாநாயகனுக்கு மணப்பெண்ணைப் பிடிக்கவில்லை,
என அவளை மோசமாக வர்ணித்த மாதவையா உடனே அவளைக் குறை சொல்வதை நிறுத்தி, “உன்மேல் என்ன
பிழை?” என நாயகனைப் பேச வைத்ததை மதிக்கிறேன். நமது வழிகாட்டிகள் உன்னதமானவர்கள். இது
நம் பெருமை. அதேபோல கதையின் உணர்ச்சிக் கட்டங்களைக் கையாள மெல்ல பயிற்சி யடைகிறார்
மாதவையா என்று அறிந்துகொள்ள முடிகிறது.
அதேபோல, கதைக்குத் தலைப்பு ரீதியாய்,
திரௌபதியின் கனவு, ஒரு அபாயகரமான திரிசக்கர வண்டி, நரி பரியான அற்புதம் - என்பன தேர்ச்சியான
கையாளலாக பாராட்டு பெறத் தக்கவை. வாழ வகையில்லாத தங்கைக்கு அவள் தன் குழந்தைகளுடன்
கடைத்தேற வழி செய்கிறார் அண்ணா. பிறகு அவளது நம்பிக்கைத் துரோகத்தால் ஏமாற்றம் அடைகிறார்.
தங்கை என்ற நரியை அவர் பரியாக்கினார், என்கிற அற்புதம் தான் இந்தக் கதை, அல்லவா?
பிராமணர்களில் ஒருவரை கீழ் சாதி
முனேற்றத்துக்காகப் பாடுபாட வைக்கிறார், என்பதும், படித்துத் தேறிய ஒரு பெண் நல் வாழ்க்கை
வாழ்கிற ஓர் உதாரணம் காட்டியதும் கவனிக்கத் தக்கது.
புத்தகத்தின் 2012 பதிப்புரையில்,
“1870ல் பிறந்த மாதவையர் 1925ல் தமிழ்க் கல்வியின் தேவையைக் குறித்து சென்னைப் பல்கலைக்
கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது உயிர் நீத்தார்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
தமிழே மூச்சாய் மரணம் எய்தி யிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தை எனக்கு விழுப்புரத்தில்
ஒரு நூலகத்தில் கண்டெடுத்து, சிரமம் மிகக் கொண்டு ஜெராக்ஸ் எடுத்து அனுப்பி வைத்தவர்
டி.கே.சுப்ரமணியன். ஓய்வு பெற்ற காவல்துறை எழுத்தர். என்மேல் பாசமும் மதிப்பும் கொண்டவர்.
என் கதைகள் மூலம், முகம் அறியாமலேயே என்னுடன் நண்பனாக உணர்ந்தவர். நேரில் ஒரு வாய்ப்பில்
சந்தித்தபோது தான் அவர் என்னை, என் பழைய இடங்களில் தேடிவந்து திரும்பியிருக்கிறார்,
என்று தெரிந்தது. இத்தகைய நண்பர்கள் பெரும் பேறு அல்லவா? டி.கே.சுப்ரமணியனால் இந்த
வாசிப்பும், இந்தக் கட்டுரையும் சாத்தியம் ஆனது.
நண்பர் டிகேயெஸ் அனுப்பிய ஜெராக்ஸ்
பிரதியில் கடைசிச் சிறுகதை “19. விதிவசம்” இல்லை, என அறியத் தருகிறேன். வாய்ப்பு கிடைத்தால்
அவர் அந்தக் கதையைத் தேடித் தரட்டும்.
இந்தக் கதைகளைப் பற்றி எழுத்தாளர்
சைலபதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, பிராமணர்கள் தங்கள் பொருள் வசதிக்கு ஆங்கிலேயர்களிடம்
அடிமை உத்தியோகம் பார்த்துக் கொண்டே, புரட்சியும் பேசுவார்கள், அதுவும் தங்கள் சமூகம்
பற்றி... என்று ஒரு வரி குறிப்பிட்டார். காலை பத்து மணிக்கு முன்பாக பஞ்சகச்சம் கட்டி
பிராமண நியதிகளை, பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு, பத்து மணிக்கு மேல்கோட்டு அணிந்துகொண்டு
உத்தியோகம் போய், ஆங்கிலத்தில் பேசி பணியாற்றுவது இரட்டைநிலையாக அவர்கள் உணர்ந்ததே
இல்லை, என்பது உண்மையே.
ஆயினும் மாற்றம் என்பது எப்படியாவது
ஏற்பட்டே ஆகவேண்டும். நதிமூலம் அங்கே தேவைதான் இல்லை, என்று சொல்லத் தோன்றுகிறது.
மாற்றம் தேவை என உணர்கிறவர்களிடத்தில்
குற்றம் காண ஆரம்பித்தால், மாற்றம் சாத்தியமே இல்லை. கலங்கித் தெளிதல் உலக நியதி.
குசிகர் குட்டிக் கதைகள் ஆங்கிலத்தில்
எட்டெட்டு கதைகளாக இரு தொகுதிகள் வந்தன. பிறகு பஞ்சாமிர்தம் இதழுக்கு என 22 கதைகள்,
அவர் மேலும் ஆறு கதைகள் எழுதியிருக்கலாம். அல்லது ஆங்கிலத்தில் எழுதியவற்றில் வடிகட்டி
16 கதைகளாக முன்பு அவை பிரசுரம் ஆகியிருக்கலாம். தமிழில் வந்த 22ல் 19 கதைகள் இங்கே
இப்போது 2012ல் வைகுந்த் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சில கதைகளைக் குறைத்தும் இருக்கலாம்
என்று தோன்றுகிறது. ஆனால் வரலாற்றுத் தேவை இது. குசிகர் கதைகளாக சமூகக் கண்ணோட்டம்
என கவன ஈர்ப்பு செய்யாத கதைகளையும், உணர்ச்சிக் கட்டங்களையும் மாதயை கையாண்டிருக்கிறார்.
அதை அறியத் தர வேண்டும், என்ற அளவில் மற்ற கதைகளும் இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருக்கலாம்.
அதுவும் நியாயமே.
தமிழின் முக்கியமான தொகுதி இது.
சிறந்த வரலாற்று ஆவணம் போன்றது. வைகுந்த் பதிப்பகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
•
91 9789987842 /
91 9445016842 storysankar@gmail.com
அருமை!
ReplyDeletedid you read the last episode Sir/
ReplyDeletethe essay is of two parts....
thanks for your comment!