Friday, April 19, 2019


part 38

அதோ அந்த
பறவை போல
*
எஸ்.சங்கரநாராயணன்
*

முதலில் துணுக்குகள், வாசகர் கடிதங்கள் என்றெல்லாம் எழுதி அச்சில் என் பெயர் பார்த்து மகிழ்ந்து, பிறகு சிறுகதை எழுத்தாளன் என்று மெல்ல, பொந்துக்கு வெளியே வரும் பாம்பு போல தயங்கித் தலை நீட்டினேன். அப்படித்தான் எழுத்துக்கு வர முடியும் என்று தோன்றியது. எழுத்தை, வாசிப்பை ஊக்குவிக்க எடுத்துக்காட்டி வழிநடத்த ஆட்கள் இல்லை. கைக்குக் கிடைத்ததை வாசிப்பது, பிறகு அதில் ஒரு ருசி தட்டி, குறிப்பிட்ட எழுத்தாளர்களை ரசித்து, அவர் எழுத்துக்களைப் பின் தொடர்ந்து, பின் எழுத்தை ஆய்வு செய்து, விமரிசனப் பாங்கில் அலசிப் பார்த்து மேலதிகத் தரமான எழுத்துக்களுக்கு நகர்வது... அதுவும் இது போலத்தானே அல்லவா? ஆனால் சிலர் இயல்பிலேயே உள் சூட்சுமத்தை திடீரென்று தாங்களே உணர்ந்து கொள்கிறார்கள். நாம் வெகு காலம் யோசித்து கண்டடைந்த முடிவுகளை அவர்கள் தற்செயலாகவே அடைந்து விடுகிறார்கள்... வாழ்க்கை பல ஆச்சர்யங்கள் கொண்டது.
சிறுகதை எழுதவே நிறைய மெனக்கிட வேண்டி யிருந்தது. என்றாலும் நாலுக்கு ரெண்டு பிரசுரமும் ஆகிறது என்று அந்த ஆசுவாசத்தில் தொடர்கிறோம். நாவல் என்பது, குறுநாவல் என்பது வேறொரு பயிற்சிக் களம். படித்துறை, நதிதீரம், ஊரணி என வெவ்வேறு நீர்நிலைகள்... அதைப்போல. அநேகமாக குறுநாவல்கள் யாரும் எழுதுவதே இல்லை. சிறுகதை என ஆரம்பித்து கையைச் சுருக்கத் தெரியாமல் பெரிசாய் எழுதி விட நேர்ந்தவர்கள் அநேகம். நாவல் என்பதின் ‘ரிஸ்க்’ பெரியது. அதை வெளியிட ஆள் கிடைப்பது அரிது. தவிரவும் அந்தப் பெரிய பரப்பில் நீச்சல் அடிப்பது, பயமற்று நெடுஞ்சாலையில் தனியே வண்டியோட்டிப் போகிறாப் போல. தனியே என்பது... நாம் முதலில் நாவல் எழுதும் அனுபவத்தைச் சொல்கிறேன். சுவாரஸ்யமாக இருக்கிறதா என்கிற சந்தேகம் வந்தபடியே யிருக்கும். நமக்குத் தெரிந்ததை யெல்லாம் வளவளவென்று கொட்டுகிறோமோ (தேளாய்?) என்று தோன்றும். திடீரென்று எழுதுவதை நிறுத்தி மூச்சு வாங்கிக் கொள்ளவும் நேரும். எழுதிப் பாதியில் நிறுத்திய நாவல்கள் நிறையப் பேரிடம் இப்பவும் இருக்கும். என்னிடமே உண்டு. ஒரு நாவலை, சாதிகளால் எப்படி ஊர் துண்டாடப் படுகிறது... என அதன் கலவரங்களை விரித்து எழுத முற்பட்டேன். அதன் பிரதியே இப்போது என்னிடம் இல்லை. காணவில்லை.
பல சிறுகதைகளைத் தாண்டித் தான் நாவல் எழுதலாம் என்கிற யோசனையே வரும். அத்தனைக்கு மக்களோடு, சம்பவங்களோடு ஊடாடித் திரிய வேண்டும், சந்தைமாடு போல... என நினைத்திருந்தேன். ஆனால் இன்றைக்கு நிறையப் பேர் கதை கவிதை கட்டுரை எதுவும் முயற்சி செய்யாமலேயே நேரடியாய் நாவல் எழுத வந்திருக்கிறார்கள், என்பதைப் பார்க்க வியப்பாகத் தான் இருக்கிறது. சமுத்திர ஸ்நானம்! அவர்கள் சிறுகதைகள் எழுதி பிரசுரிக்காமல் இருந்தார்களோ என்னவோ? வண்ணதாசன், புதுமைப்பித்தன் போன்றவர்கள் நாவல் பக்கமே வரவில்லை. லா.ச.ரா. குறுநாவல்கள், நாவல்கள் எழுதினாலும், அவை நீண்ட கதைகளே. இரா.முருகவேள் போன்றவர்கள் நேரடியாக நாவல் அனுபவத்தைக் கண்டார்கள். இரா.முருகன் சிறுகதைகள் எழுதத் தொடங்கி, இப்போது அவருக்கு ருசி நாவல் தான். சிறுகதை எழுதுவதை விட நாவல் எழுத அவருக்குப் பிரியமாய் இருக்கிறது. இன்னொரு பாவப்பட்ட என் நண்பர் ஒருவர். ம்ஹும். பேர் எதுக்கு? வணிகப் பத்திரிகைக்கு கதை மேல் கதையாக எழுதி அனுப்பிக் கொண்டே யிருந்தார். தபால் ஆபிசே அவரை வைத்து தான் இயங்கியது. பிரசுரம் கண்டவை எல்லாம் ஒருபக்கக் கதைகள். “ஏண்ணா நாலைந்து பக்கங்கள் வரும் அளவில் பெரிய கதையாக முயற்சி செய்யலாமே?” என்று ஒருநாள் கேட்டுவிட்டேன். “நான் பெரிய கதையாகத் தான் எழுதுகிறேன். அவர்கள் சுருக்கி ஒருபக்கமாகப் போடுகிறார்கள்” என்றார்.
ஒருபக்கக் கதை என்று அவர் அனுப்பினால் என்னாகும் தெரியவில்லை.
சொல்ல மறந்து விட்டேன். அவர் துணுக்குகளும் எழுதுவார்!
2
நான் எழுதிய முதல் நாவல் இரணடாவதாக அச்சில் வெளியானது. அதை ஓர் எளிய பதிப்பாளரிடம் தந்து கசப்பான அனுபவங்களை அடைந்தேன். அதற்கு ‘கிரகணம்’ என்று பெயர் வைத்தேன். கிரகணம் விலகவே விலகாது போல ஆகி விட்டது. பெரிய நாவலாக இருக்கிறது. சிறிது குறைத்து 200 250 பக்க அளவில் அச்சிடும்படி தாருங்கள், என்றார்கள். மறுக்கப் பார்த்தால், அட்டை அடித்துத் தயாராய் வைத்திருந்தார்கள். காட்டினார்கள். எழுத்தாளர் பேர் இல்லாமல் அட்டை தயாராய் இருந்தது. என்ன செய்ய? அப்போது மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் தற்கால இலக்கியம், துறைத் தலைவராக இருந்த முனைவர் சு.வேங்கடராமன் மனமுவந்து அதைக் குறைத்துத் தந்தார். அதில் நான் அழகான பகுதிகள் என நினைத்திருந்த பல பகுதிகள் வெட்டி குறைக்கப் பட்டன. “தம்பி, இது உன் முதல் நாவல், ரொம்ப எகிர்றதெல்லாம் வேணாம், உன் நல்லதுக்கு...” என என் வாலையே குறைத்தார் அவர். அவர் சொன்னதை இளையவனான நான் வழிமொழிந்தேன். அதன்பிறகும் அந்தப் பதிப்பாளரோடு வாக்குவாதம் வந்து, ‘கிரகணம்’ வெளியாகும் சாத்தியக்கூறுகள் குறைவாய் இருந்தன. திருப்பி வாங்கி வந்துவிட்டேன். (கிரகணம், என அந்தப் பதிப்பகத்தின் ஆஸ்தான எழுத்தாளர் வேறு நாவல் அவருக்கு அளித்து அது வெளியானது தனிக் கதை. அட்டை தயாரித்து விட்டு எழுதப்பட்ட நாவல்.) அடுத்த முயற்சியாக கலைஞன் பதிப்பகத்தில் எனது இரண்டாவது நாவலுக்குப் பிறகு இதுவும் வெளியானது. வேறு பதிப்பகத்தில் இருந்து வாங்கி வருகிறேன் ஐயா, என்று சொன்னபோது மாசிலாமணி, பதிப்பாளர், சங்கரநாராயணன் நாவலை மறுக்க முடியுமோ, என்றது இப்போது நினைத்தாலும் கண் பனிக்க வைக்கிறது.
எனது முதல் நாவல் ‘மானுட சங்கமம்.’ ஒரு கிராமத்தின் கதை என அதை மனசில் இருத்தி பாத்திரங்களின் ஊடே ஆனால் ஊரின் கதையாக அதைச் சொல்ல ஆவல் கொண்டேன். கதாபத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை ஊரின் வரலாறு போல் பொருத்திச் சொன்னேன். நாவல் துவக்கத்தில் பெருவெள்ளம் வரும். ஊரிலேயே வயதான பாட்டி ஒருத்தி அந்த வெள்ளத்தில், தன் சிறு வயதில் தாயாரைப் பறி கொடுத்திருப்பாள். காலரா வந்து ஊரில் மரணங்கள் திரும்பத் திரும்ப சம்பவிக்கும். தபாலாசிஸ் போஸ்ட் மாஸ்டர் பணி ஓய்வு பெற்று வெளியேறுவார். வேறொருவர் அங்கே பணிக்கு வருவார். ஒரு பகுத்தறிவு பேசும் பாத்திரம். பிராமணப் பெண்ணிடம் அது அடங்கும்! அந்த வயசுக் கதை... நாதஸ்வரக் கலைஞர் ஒருவர், தன் கலைக்கு மரியாதை இல்லாததால் ஊரை விட்டு வெளியேறுவார் - இப்படி அமையும் நாவல், கடைசிப் பகுதியில் ஒரு கிறித்துவ டீச்சர் பள்ளிக்கூடத்தில் வேலைக்கு வருவாள். அவள் குழந்தைகளுக்கு ‘ஏசுவை நேசித்துக் கை தட்டு’ என்று புதுப் பாடல் எல்லாம் சொல்லித் தருவாள். ஊர்ப் பெண் பிரமீளாவுக்குக் கல்யாணம்... அத்தோடு நிறைவு காணும் நாவல். ஆனால் அந்தக் கல்யாணம் நின்று விடும், என ஒரு கிளைக்கதை. ‘மானுட சங்கமம்’ நாவலுக்கு தீபம் நா.பா. முன்னுரை தந்தார். முன்னுரை என்பது என்ன, விழா துவங்குமுன் தீபம் ஏற்றுவது போலத் தானே?
நான் இரண்டாவதாக எழுதி முதலாவதாக அச்சான நாவல் ‘நந்தவனத்துப் பறவைகள்.’ கிளிக்கூட்டம், என இரண்டாம் பதிப்பும் கண்டது அது. காலத்தின் ஆகச் சிறு பகுதியை எடுத்துக் கொண்டு அதிலேயே நாவல் நுட்பமாக உள்ளே இயங்க வேண்டும், என ஆர்வம் கொண்டு அமைத்த நாவல் இது. தன்னைப் பற்றி தனக்கே நம்பிக்கை இல்லாத ஒருவனின் கதை. அலுவலகத்தில் தன்னை வேலைக்கு வைத்துக் கொள்வதே தான் செய்த புண்ணியம் என தானே தன்னைப் பற்றித் தாழ்வாக நினைக்கிறான் அவன். அப்படியாப்பட்ட அவனுக்குக் கல்யாணம்! வீட்டில் ஏற்பாடுகள் ஆரம்பிக்கிறார்கள்! எப்படி தன் கல்யாணம் பற்றி அவன் பயந்து குழம்பி தடுமாறுகிறான் என்பதே கதை. குடும்பத் தலைவன் என்று பொறுப்பு, மேலாண்மை தன்னாலாகுமா, என்கிற உதறல் தான். கடைசியில்... வாய்த்த மனைவி, அவனை மதித்துப் பேசுகிறாள். எல்லார்க்கும் எல்லாம் தெரிஞ்சிருதா என்ன. இருவருமாச் சேர்ந்தே கத்துக்கலாம்.., என்று ஆசுவாசப் படுத்துகிறாள் அவனை. இது கதையமைப்பு. அவளுடன் ஒரு சிறு பிணக்கு வந்து அதை தானே வெற்றிகரமாக அவன் சமாளிப்பதாக, நல் வார்த்தையுடன் முடிகிறது நாவல். மானுட சங்கமத்தை விட, இந்த நந்தவனத்துப் பறவைகள் நாவல் மிகுந்த தற்காலத் தன்மை கொண்டது.
இந்த நாவல்கள் இரண்டுமே மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியப் பயில்நூலாக அங்கிகாரம் பெற்றன. மூத்த எழுத்தாளர்கள் பலர் அவற்றை கவனித்தார்கள் என்று பின்னாளில் அறிய சந்தோசம். நான் இன்றைய எழுத்தாளன். அவ்வளவில் என் அடையாளம், என் நாவல்களில் நான் கையாளும் காலத்தின் சிற்றளவு, என வகுத்துக் கொண்டேன். முதல் இரண்டு நாவல்கள் கிராமப் பின்னணியில் அமைந்து விட்டன. இரண்டாவது நாவலின் களம் வளர்ந்து வரும் சிற்றூர். ஸ்ரீவைகுண்டம், வத்றாப் என்று எனது சூழலின் அடையாளமாக அது காணக் கிடைப்பது தவிர்க்க முடியாதது.
என் பின்னணியிலேயே ஆனால் நகரம் பற்றி எழுதலாம் என்று அமைத்துக்கொண்ட என் மூன்றாவது நாவல். ‘நகரம்’ என்றே அதன் பெயர் வைத்தேன். முன் வாசிப்பு செய்தவர்கள், அவர்கள் பார்த்த நகரத்தின் கூறுகளை, அதில் இருந்திருக்கலாம் என அபிப்ராயப் பட்டுப் பேசியது வியப்பளித்தது. நகரத்துக்குப் புதிதாய் வரும் இளைஞன். சென்னையின் கச்சேரி சீசனைப் பற்றிச் சொல்லவே இல்லை அது, என ஒருவர் கேட்டார். அவனுக்கு கர்நாடக சங்கீத அறிவும் ரசனையும் நான் தரவே இல்லை. அவன் ஊரில் எங்கு போனாலும் நடை, அல்லது அப்பாவின் சைக்கிள் என்று போய் வருகிறவன். வேலை தேடி நகரத்துக்குள் நுழைந்தவன். பாத்திர அடிப்படையில் நகரத்தை எதிர்கொள்ளும் பார்வை அம்சங்கள் மாறவே செய்யும்.
அச்சாகும் போது ‘காலத்துளி’ என வெளியிட்டேன். ஒரு ரெண்டுங் கெட்டான் ஊரில் இருந்து சென்னை நோக்கி, அசட்டு நம்பிக்கைகளுடனும், தன்னைப் பற்றிய அதித பிரமைகளுடனும் வந்து சேர்கிற இளைஞன். நகரத்து இளைஞர்களின் வாழ்க்கை சார்ந்த சுய கவனம் அவனை அயர்த்துகிறது. தங்கள் எதிர்காலத்தை அவர்கள் நுட்பமாக யோசிக்கிறார்கள். இளைஞர்கள் அதற்குக் கடுமையாகத் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள். சிறப்பு வகுப்புகள் போய் வருகிறார்கள். கணினி கையாளக் கற்றுக் கொள்கிறார்கள். கடும் பயிற்சியுடன் அவர்கள் முட்டி மோதி முந்திச் செல்கிறார்கள். எல்லாரும் எதாவது வேலை என்று கிடைத்ததைப் பற்றிக் கொண்டு, பிறகு நல்ல வேலையில் அமர்ந்து கொள்கிறார்கள். சில பேர் பார்க்கும் வேலை தவிர, பார்ட் டைம் என்று மேலதிகம் உழைக்கிறார்கள். அவர்களின் சுறுசுறுப்பும் முன்னேற வேண்டும் என்கிற துடிப்பும் அறிந்து நகர யந்திரத்தோடு அவனும் தன்னை ஒரு கண்ணியாக இணைத்துக் கொள்வதே கதை. நகர அடையாளங்கள் என நான் அடுக்கக வாழ்க்கை சார்ந்த விஷயங்களை அலசிச் செல்கிறேன் இந்த நாவலில். ஒரு சிறு கவிதை -
மொட்டைமாடியில்
கரையும் காகம்
எந்த ஃபிளாட்
விருந்தாளிக்காக.
‘காலத்துளி’ மறுபதிப்பாக ‘புன்னகைத் தீவுகள்’ எனவும் வலம் வந்தது. வேலைதேடும் இளைஞனின் கதை என்ற அளவில் இந்த நாவலையும், ம.வே.சிவகுமாரின் ‘வேடந்தாங்கல்’ நாவலையும் சேர்த்துப் பார்க்கிறதாக கோவை ஞானி ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். இதேபோல இன்னொரு சந்தர்ப்பத்தில் எனது, வேலையில்லாத இளைஞன் பற்றிய சிறுகதை ஒன்று - குதிரை மீதொரு ராஜகுமாரன் - மற்றும் இதேமாதிரியான கருத்துச் சூழலில் மாலன் எழுதிய ‘23’ சிறுகதையும் ஒப்பு நோக்கி ராஜன் என்ற பெயரில் ஒரு ஆய்வுக் கட்டுரை ஜெயமோகன் எழுதினார்... என்பதையும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன்.
கலைஞன் பதிப்பகத்தில் 64 பக்க அளவில் சிறு நாவல்கள் என ஒரு செட் கொண்டு வந்தார்கள். நாங்கள் ஒரு இருபது முப்பது பேர் எழுதினோம். இரண்டு இரண்டு நாவல்களைச் சேர்த்து நூலாக்கினார்கள். அப்படி வந்த எனது நாவல் ‘கனவுகள் உறங்கட்டும்.’ ஒரு திரைப்படத்துக்கான கதையாக அதை அமைத்திருந்தேன். மல்யுத்த வீரன் ஒருவனின் கதை. வெற்றி போதை அடங்கியபின் அவன் எதிராளியை அடிப்பதை வெறுக்கிறான். இந்த வெற்றி தோல்வி என்கிற மீண்டும் மீண்டுமான விளையாட்டு யாருக்காக, என நினைக்கிறான். அவன் குடும்பம் அவனை மீண்டும் மீண்டும் போட்டியிட வற்புறுத்தும் போது அவன் தோற்றுப் போக விரும்புவதாக பாத்திரவார்ப்பு கண்ட கதை அது. பூமணிக்குப் பிடித்த கதை இது.
அதன்பிறகு எழுதிய நாவல் ‘மற்றவர்கள்.’ எழுதும்போது மிகுந்த பொறுப்பான எழுத்தாளனாக நான், நிறைய எனக்குள் யோசிக்கிறவனாக ஆகியிருந்ததாகத் தோன்றுகிறது. எழுத்துப் பயிற்சியின் முக்கிய மாற்றத்தை நானே உணர்ந்த நிலை அது. (“சிற்பியைப் பார்த்து / முறைபிட்டது கல் / என்னை மூளியாக்கி விட்டாய்.”) இயற்கை அழகு, என்றாலும் வெயிலும் அழகு.. என்றெல்லாம் அதில் சொல்லி யிருப்பேன். வாழ்க்கை அது தரும் படிப்பினைகள், கல்விக் கூடங்களில் அறிவு பெற்ற கால காலமான மேல் சாதி இளைஞன் ஒருவன். அவனை விட, வாழ்க்கையை நேசிக்கிற, தனக்குள் தேடல் கொண்ட நாயகன். பள்ளிக்கூடத்துக்கு மேல் கல்வியைத் தொடராத ஓர் இளைஞன், பிராமணப் பையன் கிருஷ்ணப்ரேமியின் பள்ளிவகுப்புத் தோழன் ஜோதி பற்றிய கதை அது. மிக மென்மையான உணர்வுகளையும் வருடிச் செல்லும் அந்த எழுத்து. கோபிகிருஷ்ணன் அதற்கு முன்னுரை தந்தார். அந்த நாவலை நான் தந்த அமைதியான நடை அவரைக் கவர்ந்தது, அவரது முன்னுரையில் அந்த அமைதியை அவரும் அடைந்திருந்தார். அந்த அளவு அந்த நாவல் அவரை ஈர்த்திருந்ததை உணர முடிந்தது. நன்றி கோபிகிருஷ்ணன். அந்த நாவலை அவர் வாசித்த பின் நாங்கள் மேலும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.
நாவல் பாலு மகேந்திராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. நாவலைப் பற்றிப் பிரியமாய்ப் பேசுமுன் அதன் அட்டைப்பட வடிவமைப்பை வியந்தார் அவர். தமிழின் எல்லா எழுத்தாளர்களின் பெயரையும் எழுதி அதன் குறுக்கே “மற்றவர்கள்” என பெரிதாய் ‘எம்போஸ்’ பண்ணிவிட்டு, கீழே எஸ்.சங்கரநாராயணன் என தனியே குறிப்பிட்டிருப்பேன் அட்டையில்.
அரும்பு மாத இதழுக்காக ஆறு இதழ்கள் தொடராக எழுதியது ‘கடல்காற்று.’ கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் இளங்கலை நவீன இலக்கியப் பயில்நூல் என அடையாளம் பெற்றது. ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரின் கதை. டியூஷன் எடுக்கிறார். அவர் இறந்து போகிறபோது அவரது கூடப் பிறந்த அண்ணன் தங்கை அக்கா என அத்தனை பேரும் மீண்டும் சந்திப்பதும், அவரவர்களின் வாழ்க்கை எவ்வளவில் தன்வழி எனப் பிரிந்து முன்னேறி, அல்லது பின்னேறி யிருக்கிறது... என்று அலசிச் செல்கிறது அந்த நாவல். ‘கடல்காற்று’ என்றே தலைப்பு வைத்தேன். மென்மையான அந்தக் காற்றுக்கு ‘கடற்காற்று’ என வல்லின அழுத்தம் தவிர்த்தேன்.
பெண்ணிலை வாதம் பேசும் அநேகக் கதைகள் நான் தந்தது போலவே, வேலைக்குப் போகும் இன்றைய பெண் பற்றி வரைந்த சித்திரம் ‘நேற்று இன்றல்ல நாளை.’ அக்னி அட்சர விருது கிடைத்தது அந்த நாவலுக்கு. காலச் சிறு பகுதி என மீண்டும் நான் அமைத்துக் கொண்ட நாவல். அபார்ஷ்ன் பற்றிய கதை அது. ஒரு பெரும் உணர்ச்சிச் சுழலில் இயங்கும் நாவல். நவின இலக்கியத்தின் போக்குகளை அடையாளங் காட்டும் அளவில் திலகவதி ‘காலப்பெட்டகம்’ பெருந் திரட்டு வெளியிட்ட போது, இந்த நாவலின் பகுதிகள் அதில இடம் பெற்றன.
பிறப்பும் இறப்பும் சார்ந்த யோசனைகளை முன்னிறுத்திய ‘தொட்ட அலை தொடாத அலை.’ திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்ற நாவல். இல்வாழ்வின் கடமைகளை முடித்தபின் கடைசிக் காலங்களில் தன் சாவை நினைத்து அசைபோடும் முதியவரின் கதை. அந்த அனுபவம் சார்ந்த சொல் அழுத்தமும் தத்துவ வீச்சும் வாய்த்த கதை அது.
இந்தப் புத்தகங்களைப் பற்றி விவரங்கள் வேறு வேறு பகுதிகளில் சொல்லி யிருப்பதால் தகவல் எனக் கடந்து செல்கிறேன். தவிரவும் இந்தப் பகுதியின் நோக்கம், எழுத்தில் நாவல் நாவலாக நான் கடந்து வரும் போது நான் இயங்கிய தளங்களைப் பகிர்வது மாத்திரமே.
சிறு சிறு தொடர்கதைகள் எழுதினாலும் எனக்கு தொடர்கதை என்ற அம்சத்தில் ஆர்வம் இல்லை. அவர்களும் அவ்வளவில் என்னிடம் கேட்கவில்லை, என்று சொல்லலாம். ‘நேற்று இன்றல்ல நாளை’ நாவலே ஹைக்கூ தொடர், என குமுதத்தில் வெளியானது. பிற்பாடு, குமுதம் இணையத்தில் பத்திரிகை என வந்தபோது இளமைத் துள்ளலுடன் தந்த கதை ‘முத்த யுத்தம்.’ 24 காரட் நகைச்சுவை. எத்தனை அருமையான வாசகர்கள் கிடைத்தார்கள் அந்தத் தொடருக்கு. அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் 30 அத்தியாயங்கள் வரை வளர்ந்த அந்த நாவலுக்கு நான் குமுதத்தில் சொன்ன கதைச் சுருக்கத்தின் - சினாப்சிஸ் - முதல் வரி கூட விவரப் படாமல் நாவலையே எழுதி முடித்து விட்டேன். வாரா வாரம் எழுதித்தர வேண்டியிருந்தது, குமுதம் இதழில் அதைத் தொடர இயலாத நிலையில் கடைசிப் பகுதிகளை எழுதி 30 பகுதிகளில் முற்றும் போட்டேன். பத்திரிகைகளில் தொடர் எழுதுவது வேறு விதமான பயிற்சி. புது அனுபவம். பத்திரிகைத் தொடர்கள் அனுபவமே தனியானது தான். நல்லதும் மோசமானதுமாய் கலந்து கட்டிய அனுபவம்!
‘திசை ஒன்பது திசை பத்து’ மற்றும் ‘இரவில் கனவில் வானவில்’ 100 பக்க அளவில் கேட்டபோது இதழ்களுக்குத் தந்தவை தாம். ஒரு நண்பருக்காக முன்னதையும், கே.பாக்யராஜுக்காக இரண்டாவதையும் எழுதித் தந்தேன். மற்றபடி இந்த மாதநாவல் பணி, தொடர்கதைப் பாணியில் எனக்கு ஆர்வம் கிடையாது. நல்ல துட்டு அதில் இருந்தாலும் கூட!
‘நீர்வலை’ என ஒரு சுனாமிபற்றிய நாவல். கலைமகள் போட்டிக்கு என எழுதி அது பிரசுரம் ஆகவும் இல்லை. பிறகு இன்னும் சிறிது விரித்து தனி நூலாக்கிய போது தமிழக அரசின், ஆண்டின் சிறந்த நாவல், பரிசு வாங்கித் தந்தது. வலை வீசி மீன் பிடிக்கப் போனவனை, அலை வீசி கடல் பிடித்த கதை. ஹெமிங்வேயின் பாத்திர வார்ப்பும் சாயலும் அதில் எனக்கு நிறைவளித்தது. தவிரவும் ஒரு நிகழ்காலப் பதிவு, முக்கியம் அல்லவா? இந்தோனிஷியாவில் சுனாமி வந்தபோது ஒருவன் கடலில் வீசப்பட்டு, கைக்கு எட்டிய ஒரு மரக்கிளையைப் பற்றி மிதந்தபடியே 22 நாட்கள் தத்தளித்து, பின் மீட்கப் பட்டான்... என்ற பத்திரிகைச் செய்தி அடிப்படையிலேயே இந்த நாவல்.
‘இன்று நேற்று நாளை’ என காலப் பயணம் சார்ந்த ஒரு திரைப்படம் வந்தது அல்லவா? அந்தத் திரைப்படத்துக்காகப் பேசிய பல கதைகளில் என் கதை ஒன்று. முடிவில் வேறு கதையை இயக்குநர் ரவிகுமார் தேர்வு செய்து கொண்டார். திரைப்படம் வெளியானதும், என் கதையைப் புத்தகமாக்கினேன். ‘வசிகரப் பொய்கள் 2’ திரைப்பட வடிவில் ஒரு நாவல். அந்தத் திரைப்படம் அநேகம் பேர் பார்த்திருக்கலாம். அதற்கு ‘கால யந்திரம்’ எல்லாம் பயன்படுத்தி ஒரு கதை சொன்னார் ரவிகுமார். காலத்தினால் பின் செல்ல கதாநாயகனுக்கு ஒரு கால யந்திரம் கிடைக்கிறது... என்கிற பாணிக் கதை. ‘வசிகரப் பொய்கள்’ கதையில் ஒரு லிஃப்ட், அதையே கால யந்திரம் போன்று பயன்படுத்தலாம் என நான் யோசித்தேன். எட்டு அடுக்குகள் கொண்ட ஒரு அடுக்ககம். அதில் கதாநாயகன் ஏழாவது மாடியில் இருக்கிறான். அவன் லிஃப்டில் நுழைந்து பொத்தானை அழுத்தப் போகும்போது ஒருநாள் அவனுக்கு மாத்திரம் லிஃப்ட் ‘மைனஸ் ஒன்’ என்று புதிய பொத்தான் காட்டுகிறது. அந்த லிஃப்டில் ஸீரோ முதல் எட்டு வரை தான் பொத்தான்கள் இருக்கும். ஆச்சயர்யத்துடன் மைனஸ் ஒன்னை அவன் முடுக்க, அதில் இருந்து இறங்கி அவன் இரண்டு வருடங்கள் முந்தைய உலகத்துக்குச் சென்று விடுகிறான். லிஃப்டில் ஏறி வேளியே வருகையில் நிகழ்காலத்துக்கு வந்து விடுவான். அவனுக்கு மாத்திரமே இது நிகழ்கிறது... என்கிற கதையமைப்பு, என் கதை. திரைப்படமாக அது விரைவில் வெளிவரக் கூடும்.
இவை தவிர, பூமிக்குத் தலை சுற்றுகிறது, விநாடியுகம் என குறுநாவல்கள் தொகுதிகளும் அமைந்தன. குறுநாவல்கள் என்ற வடிவம் பிடித்து பத்துக்கும் மேற்பட்ட அளவில் முயன்று பார்த்திருக்கிறேன்.
நாவல் என்ற வடிவத்தில் வாழ்வின் தத்துவச் சரடைப் பற்றிச் சென்றபடி எழுத, தனி அனுபவம் அது. பாத்திரங்களோடு நாமே இழைந்து பயணப்படுவதும் உண்டு. மனசு வசம் ஒரு நாவல் இருக்கிறது. இன்றைய பேரிளம் பெண் ஒருத்தியின் கதை அது. விவரங்கள் வேண்டாம். எப்போது எழுதக் கையில் எடுப்பேன் தெரியாது. காலச் சிறு பகுதி. இன்றைய கால அடையாளங்களுடனான எழுத்தாக அதை அமைக்க உத்தேசம்.
எனது நாவல்களையும், சிறுகதைகளையும் ஒருசேர வாசித்தால், நாவலில் என் முகம் வேறாகவும், சிறுகதைகளில் வேறாகவும் தோன்றுகிறது ஏனோ. மத்த எழுத்தாளர்கள் பற்றித் தெரியவில்லை. சிறுகதை எழுதினால் கூட பல சந்தர்ப்பங்களில் யார் எழுதினார்கள் என்று கவனிக்காமல் வாசகர்கள் வாசித்துக் கடந்து விடுவார்கள். நாவல் ஆசிரியனை அவர்கள் இன்னும் பிரியமாய்ப் பெயரோடு அடையாளங் கண்டு கொள்கிறார்கள் என்றே தெரிகிறது.
சிறுகதை என்பது பாடலின் ஓரிடத்திலான ஆலாபனை. நாவலுக்கு பல்வேறு படித்துறைகள் வாய்க்கின்றன. கச்சேரி அது.
storysankar@gmail.com
91 9789987842 / 91 9445016842

2 comments:

  1. எவ்வளவு கதைகள்! உங்கள் பேனாவில் மை தீர்வதே இல்லை. இளம் எழுத்தாளர்களுக்கு பலன் தரக்கூடிய அனுப்வ விவரிப்பு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க அன்பானவர் நீங்கள்...

      Delete