Friday, April 12, 2019


பகுதி 37
 
விசிலில் பாட்டெடுத்தல்
எஸ். சங்கரநாராயணன்

விதைத் தெறிப்பான கணங்களைப் போலவே, எழுதுகையில் சில சமயம் விளக்கு போட்டாப் போல உற்சாகமாக உணர்வது உண்டு. அந்த சந்தர்ப்பங்களில் நகைச்சுவையும் ததும்ப ஆரம்பித்து விடும். அப்படிக் கணங்களைத் தான் வாசகர்கள் கதைகளில் இனங்கண்டு கொண்டு அந்த எழுத்தாளர்களை மனதில் இருத்தி மகிழ்கிறார்கள். கதையின் தத்துவார்த்த வரிகளை விட, இந்த மாதிரி எகத்தாளங்களுக்கு, அல்லது கிண்டல்களுக்கு மவுஸ் அதிகம். ‘நீர்வலை’ நாவலில் பிச்சைக்காரன் போட்டுக் கொண்டிருக்கும் சட்டை பெரிய சைசில் இருக்கும். இது அவன் கேட்காமலேயே கிடைத்த ‘பெரிதினும் பெரிது’ என்று சொல்லியது நினைவு வருகிறது. திடீரென்று எங்காவது யாராவது வாசகர் என்னைச் சந்திக்க நேர்கையில் இம்மாதிரி மேற்கொள் காட்டி புன்னகையுடன் கை குலுக்குவார். எனக்கு இவ்வகையில் பெரும் வாசகர் வட்டமே உண்டு. பெரும்பாலும் அவர்கள் எனது ஒரு படைப்பைப் பற்றி புன்னகையுடன் பேச ஆரம்பிக்கும்போது, எனது இந்த எள்ளல் வரிகளை அவர் எடுத்துக்காட்டப் போகிறார் என்கிற என எதிர்பார்ப்பது வழக்கமாகி விட்டது. அதிலும் சில சமயம் நான் அவர் சொல்லப்போகிற ஒரு இடத்தை யோசிக்க, அவர் அதே படைப்பில் வேறொரு பகுதியைப் பேசுவார்!
பி.ஜி.உட்ஹவுசின் ஒரு கதை. அவன் ஒருவரைத் தேடி வேகமாக வீட்டுக்குள் ஓடி அவர் இல்லாமல் வேகமாய் வெளியே வருவான். அவன் எத்தனை வேகமாய் ஓடினான் என்றால், அவன் உள்ளேபோய் வெளியே வருகையில் அவனை அவனே சந்தித்துக் கொண்டான், என எழுதுவார்.
அருமை வாசகர் ட்டி.கே.சுப்ரமணியன் விழுப்புரத்துக்காரர். ஒய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர். மீண்டும் ஒருமுறை சந்திக்க வந்திருந்தார். திடீரென்று, “சார் அந்த நாவலில்...” என சிரிக்க ஆரம்பித்தார். ஒரு சிரியசான கட்டம் அது. ரேடியோவில் ‘அந்தநாள் ஞாபகம்’ பாடல். “உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் பிரிந்து போய்விட்டன. அவை மீண்டும் சந்தித்தபோது?... பேச முடியவில்லையே...” என்கிற உணர்ச்சிக் கட்டம். கீழே நான் “அட அறிவு கெட்டவனே, ஆடு எப்பய்யா பேசியது?” எனப் போட்டிருந்ததை இப்போது நினைத்து ரசித்து சிரித்துக் கை கொடுக்கிறார்.
நகைச்சுவையில் இது ஒரு பாணி. ஒரு கவனத்தில் இருந்து விடுவித்து, வேறொன்றை அங்கே எடுத்துச் சொல்லுதல். இந்த விரலை எங்க டீச்சர் பயன்படுத்த மாட்டாங்க, ஏன்னு சொல்லு? - (ஏன்னா இது என்னோட விரல், என்பது பதில்.) பெண்கள் வலது கையில் வாச் கட்டறாங்க. ஆண்கள் இடது கையில் கட்டறாங்க. ஏன்னு சொல்லு? - (மணி பாக்கத்தான், என்பது பதில்.)
இவற்றையெல்லாம் எழுதிய பின் மறந்துதான் விடுகிறோம். ஆனால் அவர்கள், பிரியமான வாசகர்கள் நினைவில் வைத்து ரசித்து நமக்கே எடுத்துத் தருகிறார்கள். எதற்காக அதை எழுதினோமோ அதன் பயன் கிட்டி விட்டது அல்லவா?
ரொம்ப சீரியசான எழுத்தாளர்களே கூட சில சமயம் சட்டென்று இப்படி முக இறுக்கம் தளர்த்திக் கொள்கிறார்கள், என்பதை அறிவது சுவாரஸ்யம். கலைஞனின் நெகிழ்ந்த மனநிலை, வாசகர்களுக்கு அல்லது கூட இருக்கிறாட்களுக்கு அற்புத அனுபவமாகிப் போகும். சிலாட்கள் விருந்து சாப்பிட உட்கார்ந்து சாப்பாடு அம்சமாய் அமைஞ்சிட்டால் சட்டென்று இடுப்பு வேட்டிய தளர்த்திக்குவான். அந்தமாதிரி எழுத்தாளர்களே சிறிது புன்னகையுடன் எழுதிச்செல்கிற அளவில் கதைகள் அமைந்துவிடும். கேலி கிண்டல் எல்லாம் அப்படி அமைவது தான். ஒரு முறை இப்போதைய இயக்குநர் சரண், அப்போது அவர் கே.பாலச்சந்தரிடம் உதவி, ஒரு பாடல் பதிவு என்று ஜேசுதாஸ் வந்துவிட்டார். இசையமைப்பாளர் மரகதமணி வரவில்லை. அவர் வந்து சேரும்வரை, ஜேசுதாஸ் சரணுடன், கலைஞனின் கவன உக்கிரத்துடன் அல்லாமல், இயல்பாக உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தாராம். என் வாழ்வில் மறக்க முடியாத அற்புதத் தருணம் அது, என்று இன்றும் பேசுவார் சரண்.
பாமா விஜயம் திரைப்படத்தில் பாலச்சந்தர் வசனம். நடிகையிடம் கேள்வி. காதல் காட்சியில நெருங்கி நடிக்கிறீங்களே வெட்கம் இருக்காதா? - வெட்கப்பட்டா எப்பிடிங்க நடிக்க முடியும்? - உடனே அடுத்த கேள்வி - சரி. வெட்கப் படறா மாதிரி நடிக்கச் சொன்னா என்ன பண்ணுவீங்க?...
பாட்டும் பரதமும் படத்தில் மல்லியம் ராஜகோபால் வசனம். இவங்க நாட்டிய தாரகை - ஆறு வயசில் ஆட ஆரம்பிச்சாங்க. அறுபது வயசாகுது இன்னமும் ஆடிட்டே இருக்காங்க. அதைக் கேட்ட நாகேஷ் வசனம் - அறுபது வயசாயிட்டா அவங்க ஏன் ஆடணும்? உடம்பு தன்னால ஆடுமே.
எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஒரு நாவல். ட்டு ஹேவ் அன்ட் ஹேவ்நாட், என்று தோன்றுகிறது. அதில் ஒரு மதுக்கூடத்தின் காட்சி. ஒரு குடிகாரன் பக்கத்தில் இருக்கும் இன்னொரு குடிகாரனிடம் தனது துக்கத்தைப் பகிர்ந்து கொள்வான். தூரத்தில் ஒருவனைக் காட்டி, அதோ பார், அவன்தான்... அவன்தான் என் வாழ்க்கையையே பாழ் பண்ணியவன், HE HAS SPOILED MY LIFE, என்று சொல்வான். கூட இருந்த குடிகாரன் அதை அரைகுறையாகக் காதில் வாங்கிக்கொண்டு, ஐயையோ அப்படியா, என்று தனக்கு இந்தப் பக்கம் இருக்கிற நபரிடம், SEE THAT MAN. HE HAS SPOILED THIS MAN'S WIFE, என்பான். முதல் குடிகாரனுக்குத் தூக்கிவாரிப் போடும். அட, ஒய்ஃப் இல்ல, லைஃப், என்பான். அதை யாரும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அந்த மூணாவது மனிதன் வந்து, பாவம் நீ... என அவனிடம் ஆறுதல் சொல்வான். அவனிடம் இவன் விளக்க முற்படுமுன், அவன் நாலாவது ஆளிடம் போய்... அதே செய்தியை, மனைவியை இழந்தவன்... என்கிற செய்தியைச் சொல்லுவான்... என நீளும் காட்சி. ஹெமிங்வேயிடம் இப்படியொரு காட்சி! ஆச்சர்யமாய் இருந்தது.
கதை எழுதுகையில் சட்டென இப்படி நகைச்சுவைச் சிறகு முளைப்பது தவிர ஒரு சந்தர்ப்பத்தில் முழு கதையுமே இப்படி உருவாகி விடும்! அதாவது கதைக்கான பொறி கிடைக்கும்போதே அப்படியொரு மந்தகாச மன இயல்பில் அந்தப் படைப்பாளன் இருந்திருக்கலாம். அப்படிக் கதைகள் வாசகனின் பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை’ என்ற ஒரு கதைச் சித்திரத்தை இதே பகுதியில் முன்பு பகிர்ந்தேன். ஒரு அரசு அலுவலகத்தில் பழைய கோப்புகள் அறையின் கிளர்க் ஒருவனைப் பற்றி எழுதியதும் ஞாபகம் வருகிறது. மார்ச்சுவரியில் ஒரு மனிதன், என்பது அந்தக் கதை. வடக்கு வாசல் இதழுக்காக ஒரு சிறுகதை எழுதினேன். ஒருவன் மனைவியுடன் திகைத்துப் போய்த் தனியே பிரிந்து போய்விடுவான். பிற்காலத்தில் அவன் உலக சாதனை ஒன்று செய்வான். கடுமையான விஷப் பாம்புகளுடன் அறுபத்திநான்கு நாட்கள் இரா பகலாக ஒரே அறையில் வாழ்ந்து காட்டுவான்... கதைக்குத் தலைப்பும் அவ்வளவில். ‘நிர்த்தாட்சாயணி.’ இந்த மாதிரி கதைகளை நான் எழுதுகையில் இப்படி அமைகிறாப் போன்ற யோசனை நிட்சியில் தலைப்பிலேயே அப்படியொரு நகைச்சுவையான முரணை முன்னரே தீர்மானித்துக் கொள்வேன். தலைப்பில் சுவாரஸ்யத்தை வாசகனை ஈர்க்கிற அளவில் தர எப்போதுமே எனக்குப் பிரியம் உண்டு. ‘பூமிக்குத் தலை சுற்றுகிறது’ என்பது என் ஒரு குறுநாவல்.
யுகமாயினி இதழுக்காகத் தந்த கதை ’துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை.’ கல்லூரிப் பருவ இளம் பெண்ணும் அவள் அம்மாவும் கோவிலில் பிராகாரத்தில் போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று மின்சாரம் போய்விடும். அந்த அம்மாவுக்கு யாரோ பச்சக் என்று இதழில் முத்தம் தந்து விடுவார்கள். மின்சாரம் வந்ததும் அவள் தேடிப் பார்த்தால் சுற்று முற்றும் யாருமே இருக்க மாட்டார்கள். அருகில் நடந்தது தெரியாமல் கூட வந்து கொண்டிருக்கும் பெண். நல்லவேளை இவளுக்குத் தெரியாது, என்று நினைத்தபடி அவள் அந்த முத்தத்தை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டே பிராகாரத்தில் வருவாள். இத்தனை வயதிலும் நான் அப்படியொரு அழகா, ஒரு ஆணைத் தூண்டும் வகையில்? கணவனை இழந்து இத்தனை வயதிலும் என் உடல் கட்டுக்கோப்பாக, ஓர் ஆணைப் பித்தம் கொள்ள வைக்கிற அளவில், கிறுகிறுப்பாக்குகிற அளவில் இருக்கிறதா... என்றெல்லாம் யோசனை நீளும். கதையின் கடைசிப் பத்தி இப்படி முடியும் - சட்டென அம்மாவுக்கு ஞாபகம் வந்தது. பிராகாரத்தில் இடப்பக்கம் அம்மா. வலப்பக்கம் பெண்... என்று வந்து கொண்டிருந்தார்கள். மின்சாரம் துண்டிக்கப் படும் அந்த விநாடிக்குச் சற்று முன், அவர்கள் இடம் மாறி விட்டார்கள். அம்மா வலப்பக்கம். பெண் இடப்பக்கம் என்று மாறிக் கொண்டிருந்தார்கள்!
2
இந்தமாதிரியான கதைகளை உள்ளே புரட்டிக்கொண்டு எழுதுவது எழுதவே உற்சாகம். இதில் இரு நிலைகள் உள்ளன. இருவகையான உதாரணங்களையும் இங்கே பகிர உத்தேசம். முதல் வகை கதை எழுதுகையில் நமக்கே உள் கிளர்ந்த உற்சாகத்தில் வரும் தடாலடி வரிகள். அந்தக் குடும்பத்தில் வலது கை போல அவன், என்று எழுதும்போது, அந்தக் குடும்பத்தில் வலது கையின் கட்டைவிரல் அவன், என எழுதிச் செல்வது. அதைப்போலவே சினிமாப்பாடல் ஒரு வரி சொல்லி, அடுத்த வரியாக அதை முரண்டி எழுதுதல். “என்ன மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக. மன்னார்குடியில கேட்டாக. அந்த மாயவரத்துல கேட்டாக...” என்று பாடும்போது, “உள்ளூர்ல எவனும் கேக்கல போல?” என எகிறி யடித்தல், ஓர் உதாரணம். பழமொழிகளையும் சொலவடைகளையும் சுட்டிக் காட்டி அதை எகிறி ஒரு வரி, அடுத்த வரி போடுதல். AN APPLE A DAY KEEPS THE DOCTOR AWAY. இதன் அடுத்த வரி - IF THE APPLE IS CUTE KEEP THE DOCTOR AWAY.
இரண்டாவது பாணி மொத்தக் கதையமைப்பிலேயே சுவாரஸ்யம். கதாபாத்திரங்களோடு ஜாலியாக நீச்சல் அடித்துப் போகிற எழுத்து. கூட நடந்து வருகிற நண்பனை ‘லந்து’ பண்ணுகிறாப் போல சில சமயம் நமது பாத்திரங்களையே இப்படி ‘கலாய்க்கிறது’ - அதுவும் தவிர்க்க முடியாதது. லா.ச.ரா.வின் ஒரு சிறுகதை. ‘வித்துக்கள்.’ லா.சா.ரா.விடம் இருந்து இப்படி ஒரு கதை, யாரால் எதிர்பார்க்க முடியும்? ஒரு பெண்ணுக்கு மகா மகா சேட்டைக்காரனாகப் பிள்ளை. அந்தப் பள்ளிக்கூட தலைமையாசிரியை அவனைச் சமாளிக்கப் படாத பாடு படுகிறாள். அடிக்கடி அந்த அம்மாக்காரியைப் பள்ளிக்கு அழைத்து அவள் மகனைப் பற்றி முறையிடுகிறாள். இந்நிலையில் அந்தத் தாய் மீண்டும் கர்ப்பம் ஆகிறாள். அடுத்த குழந்தை பிறக்கிறது. இரண்டாவது குழந்தையையும் அவள் அதே பள்ளியில் சேர்க்க என்று போகிறாள். தலைமையாசிரியை “ஐயோ இன்னொரு பையனா? வேண்டவே வேண்டாம்” என்று தவிர்க்கப் பார்க்கிறாள். இல்லை, மூத்தவன் போல இல்லை, இவன் சாது, என்றெல்லாம் சமாளித்துச் சொல்லி, அவனை அதே பள்ளியில் சேர்த்து விட்டு வருகிறாள் அம்மா. நாலே மாதத்தில் அந்த ரெண்டாவது பிள்ளையின் சேட்டைகளையும் தாள முடியாமல் தலைமையாசிரியை அந்த அம்மாவைக் கூப்பிட்டு விடுகிறாள். இப்போது அவளது பிராது இரண்டாவது பிளளையைப் பற்றி. உள்ளே நுழைந்த அந்த அம்மாவைப் பார்த்ததும் தலைமையாசிரியை திகைக்கிறாள். பின் கேட்கிறாள். “ஏங்க நீங்க மறுபடியும் தாயாகப் போறீங்களா?” அவள் வயிறு உப்பி யிருக்கிறது!
இரா.முருகனின் ஒரு சிறுகதை. ஸ்ரீவில்லிபுத்தூர் அல்லது அதேபோல புராணப் புகழ் வாய்ந்த தலம் ஒன்று. அதில் வாழ்ந்த தனது ‘தாத்தாவுக்குத் தாத்தா’வைப் பற்றி ஒருவன் அறிய விரும்புகிறான். அந்த ஊருக்குப் போனால் அங்கே யாருக்கும் அவரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. அக்கிரகாரத்தில் அவருக்குச் சொந்த வீடு இருந்ததாகத் தெரிகிறது. அந்த வீட்டில் வசிப்பவருக்கே விவரங்கள் தெரியவில்லை. அந்த ஊரில் வயதானவர் ஒருவரைப் போய்ப் பார்க்கச் சொல்கிறார்கள். நினைவுகளில் தேடிப் பார்க்கிறார். அவருக்குமே அவனுக்கு உதவிகரமாக எந்தத் தகவலும் தர இயலவில்லை. ஒரு நூறு வருடங்களுக்கு முந்தைய கதை தான் அது. யாருக்குமே சரியான தரவுகள் இல்லை. அவனுக்கு ஏமாற்றமாகி விடுகிறது. அவன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்குப் போகிறான். புராணச் சிறப்பு கொண்ட கோவில் அல்லவா அது? அங்கே ஒரு ‘கைடு’ அவனை அழைத்துப்போய் இங்கதான் ஆண்டாள் பிறந்தது, என ஒரு நந்தவனத்தைக் காட்டி, ஆண்டாள் பிறந்ததை நேரில் பார்த்தது போல அத்தனை தத்ரூபமாகக் கதை சொல்வதாக கதை முடிகிறது!
நாஞ்சில்நாடனின் கதைகளில் கும்பமுனி என்கிற பாத்திரம் பற்றி அறிந்திருக்கலாம். இது கும்பமுனி கதை அல்ல. காலச்சுவடு இதழில் வெளிவந்து, நான் என் இசை சார்ந்த சிறுகதைத் திரட்டு ‘ஜுகல்பந்தி’ வெளியிட்டபோது பயன்படுத்திக் கொண்டேன் இந்தக் கதையை. ‘பிணத்தின் முன்னமர்ந்து திருவாசகம் படிப்பவர்.’ ஊரில் பெரிய தலை ஒன்று மண்டையைப் போட்டு விடுகிறது. அவரது சாவை எடுக்கும்வரை ஓர் ஓதுவாரை வரவழைத்து அவரை பிணத்தின் அருகே அமர்ந்து திருவாசகம் பாடச் சொல்கிறார்கள். அவருக்கு மீற முடியவில்லை. தினந்தோறும் சிவலிங்கத்தின் முன் நின்றபடி உருக உருக திருவாசகம் பாடியவர் அவர். இப்போது இந்த சலனமற்ற பிணத்தின் அருகில் பாட வேண்டி யிருக்கிறது. அது இவரை கவனிக்குமா? சுற்றிலும் பிணத்தின் உறவு சனம். அந்த உயிருள்ள சனத்திலேயே யாரும் அவரை கவனித்ததாகத் தெரியவில்லை. இதில் பிணம் எப்படி அவரை கவனிக்கும்? அட இந்தப் பிணம் அது உயிரோடு இருந்த காலத்திலாவது திருவாசகம் கேட்டிருக்குமா அதுவே சந்தேகம் தான். தனக்குள் பல்வேறு வெட்கமயமான சங்கடமயமான உணர்வுகளுடன் ஆனாலும் அவர் வந்த வேலையை மேற்கொள்கிறார்.
இடையே புகுந்து ஒரு செய்தி சொல்லி விடலாம். இப்படி தன்னெழுச்சி கொண்ட கதைகளை எழுத்தாளர்கள் அட்டகாசமாக முடிக்கிறார்கள். லா.ச.ரா.வின் முடிவு எப்படி? இரா.முருகன் எப்படி முடிக்கிறார்... நாஞ்சில்நாடனும் அற்புதமாக முடிக்கிறார் அந்தக் கதையை. பிணத்தை எடுத்த அளவில் அவர் கையில் தட்சிணையாக ஓர் ஆயிரம் ரூபாய் தந்தனுப்புகிறார்கள். ஓதுவார் ஆனந்த அதிர்ச்சியில் திகைத்துப் போகிறார். “அட ஈஸ்வரா உன் முன் அமர்ந்து இத்தனை நாள் பாடியதில் ஒருநாள் கூட இத்தனை பெரிய தொகையை நான் பார்த்ததே யில்லையே!”
கிண்டல் என்று நகைச்சுவைப் படாமல் ஆனால் உக்கிரப்பட்ட கதை கந்தர்வனின் ‘சீவன்.’ தருணம், என்கிற என் சிறுகதைத் திரட்டில் இடம் பெற்ற கதை அது. இந்தப் பகுதிக்கான நகைச்சுவை உதாரணம் அல்ல அது. என் பதின்ம வயதுகளில், ஆச்சர்யம் கலைமகள் அந்தக்கால இதழ் ஒன்றில் ஒரு சிறுகதை வாசித்திருக்கிறேன். இப்போது 40 வருடங்கள் தாண்டியும் அது நினைவில் இருக்கிறது. ஒரு ‘ஸ்டோர்’ பாணி கொத்து வீடுகள். அதில் முதல் வீட்டில் இளம் பெண் ஒருத்தி வசிக்கிறாள். அவள் வீட்டைத் தாண்டி இளைஞன் ஒருவன் போக வேண்டும். அதேபோல அந்தக் குடியிருப்புகளைக் கடந்து தனியே எல்லாருக்குமான பொதுக் குளியல் அறை. அவன் ஒருநாள் அந்தப் பெண்ணின் வீட்டைத் தாண்டிப் போகையில் அவள் வீட்டு வாசல் கதவு திறந்திருக்கிறது. தற்செயலாக உள்ளே பார்த்தால் உள்ளே அரையிருளில் இருந்து அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒருவேளை நம்மையே அவள் வேண்டுமென்றே பார்க்கிறாளோ, வேண்டுமென்றே கதவைத் திறந்து வைத்திருக்கிறாளோ என்று இருக்கிறது அவனுக்கு. பிறகு இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒருமுறை குளியல் அறையில் அவள் இருக்கும் போதும் கதவு சரியாகத் தாளிடப் படவில்லையோ என்னவோ, பார்த்துவிட நேர்கிறது. அவளாக அவனுக்காக இப்படி எதுவும் முயற்சி செய்கிறாளா என்ன? என்ன இந்தப் பெண் இத்தனை மோசமானவளா, என அவளைப் பற்றி அவன் மனதில் தவறாக நினைக்க ஆரம்பிக்கிறான். ஒருமுறை வெளியே கோவிலில் அவளைத் தன் தோழியுடன் அவன் பார்க்கிறான். அவர்கள் அறியாமல் பின்னால் அவன் நடக்கிறபோது அவள் தோழியிடம் பேசுவதைக் கேட்கிறான். “எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற பையன் ரொம்ப மோசம்டி. காம்பவுண்டுக்குள்ள நுழையும்போதே எந்த வீடு திறந்திருக்கும், உள்ள எட்டிப்பாக்கலாம்னு நோட்டம் பாத்துக்கிட்டே வருவான் போல. ஒருநாள் பாத்ரூம் கதவு லேசாத் திறந்திருந்தது. அதை எப்பிடித் தெரிஞ்சிக்கிட்டானோ... அங்கேயே வந்து என்னை உத்துப் பாக்கறான். ரொம்ப தான் அலையறான்டி அவன்...” அவளைப் பற்றி அவன் என்ன நினைத்திருந்தானோ அதே கருத்தை அவள் அவனைப் பற்றிச் சொல்வதாக ஒரு கதை. ஆச்சர்யமான கற்பனையாக அந்த வயதில் என்னை ஈர்த்தது.
சுஜாதா கதைகளைப் பற்றி யோசிக்கையில், வித்தியாசமான கற்பனை என்று அவர் யோசிக்கிறார். ஒருவனைக் குதிரை கடித்து விடுகிறது. டாக்டரிடம் போனால் அவர் அறிந்த அளவில் குதிரைக்கடி என்று அவரிடம் யாரும் வந்ததும் இல்லை. அவர் படித்த வரையில் அதற்கு மருத்துவமும் இல்லை... என்கிற குழப்பத்தைச் சொல்லும் கதை. இன்னொரு கதையில் ஓர் இளைஞன். வீணை வாசிப்பதில் அபூர்வத் திறமை கொண்டவன். அவனது அநாயாசமான சங்கதிகள் எல்லாரையும் அயர்த்தும். பெரிய கச்சேரி போன்ற வாய்ப்புகள் அவனுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் கூட்டத்தின் ரசனைக்கு அவனால் தீனி போட முடியாமல் போகிறது. அவனது ஆழ்ந்த திறமையை ரசிக்க ஆளே இல்லை என்று எழுதி வருவார் சுஜாதா. கடைசியில் ரேடியோவில் வரும் ஒரு விளம்பரம்... அதன் இடைப்பட்ட சிறு நேரத்தில் ஓர் அபூர்வ வீணை கேட்கிறதே. அதை வாசிக்கிறவன் அவன்தான், என முடிப்பார்.
கதை யமைப்பிலேயே எழுத்தாளர் மனதில் உற்சாகம் ததும்ப எழுதும் படைப்புகள், அப்படி சுஜாதாவிடம் எனக்கு சட்டென்று உதாரணம் கிட்டவில்லை.
3
விட்டல்ராவ் எழுதிய ‘மரமத்து’ என்றொரு சிறுகதை. ஓர் அரசு அலுவலகத்தில் எதோ மராமத்து வேலைகள் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போடப்படும் ஓர் ஆணை. அந்த தட்டச்சு எழுத்தர் தவறுதலாக ‘மராமத்து’ என்ற வார்த்தையை ‘மரமத்து’ என்று தட்டச்சு செய்துவிடுகிறார். அதிகாரியும் அந்த ஆணையில் கவனமின்றிக் கையெழுத்து இட்டுவிடுகிறார். அதை அப்படியே ஏற்றுகொண்டு அரசுத்துறை உடனே மரமத்து ஒன்றைத் தயார் செய்கிற வேலையில் ஈடுபடுகிறது. மரமத்து சார்ந்து காவியங்களில் இருந்து மேற்கோள்கள் அலசப் படுகின்றன. அரசின் இந்தச் செயலால் அது வரலாற்றில் இடம் பெறும், என்று ஜால்ராக்கள் புகழ் பாடுகின்றன... என நகரும் கதை. இதே பாணியில் பாவண்ணனின் கதை ஒன்று புத்தக வெளியீட்டு விழாவுக்கு நாள் பார்த்து இடமும் பார்த்து விடுவார்கள். புத்தகம் அச்சிட்டு வந்திருக்காது. வெள்ளைத் தாளை பைன்ட் செய்து புத்தகம் போல வெளியிட்டு விடுவார்கள். அந்தப் புத்தகம் பற்றி நான்கு பேர் உரையாற்றவும் செய்வார்கள்... என்கிறதாக ஒரு கதை.
உண்மையிலேயே நடந்த ஓர் உதாரணம். ஒரு பெரிய தொழிலதிபர் எழுதிய புத்தகம், work is worship, செய்யும் தொழிலே தெய்வம், என்பார்களே அதுதான் தலைப்பு. ஓர் அமைச்சர் அதை வெளியிட்டுப் பேசினார். நானும் அந்த விழாவுக்குப் போயிருந்தேன். அமைச்சர் பேசினார். work is workshop, அருமையான புத்தகம், நான் பலமுறை வாசித்து மகிழ்ந்தேன். (ஒருதடவை கூட புத்தகத்தின் தலைப்பைப் பார்க்கவில்லை போலும்!)
‘மரமத்து’, அதைவிட எனக்கு விட்டல்ராவின், முஸ்லிம் விஞ்ஞானி ஒருவர் பற்றிய கதை, தினமணி கதிரில் வெளியானது, பிடித்திருந்தது. தன்னைச் சுற்றியுள்ளவர் யாரிடமும் அதிகம் பழகாமல், தான் உண்டு தன் வேலை உண்டு, என ஒரு விஞ்ஞானி. வெளிநாடுகளில் போய் ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் சமர்ப்பித்து வருவார் அவர். காரில் கதவுகளை ஏற்றிவிட்டபடி அவர் வெளியே போவார். அந்தத் தெரு சனங்களில் யாரும் விஞ்ஞானியைப் பார்த்தது, பழகிப் பரிச்சயப் பட்டது கிடையாது. அவர் வீடு காம்பவுண்டு எடுத்து வாசலில் ஒரு வாச்மேன் இருப்பான். முஸ்லிம் விஞ்ஞானி வீட்டில் ஆடு ஒன்றை வளர்ப்பார். அந்த ஆட்டை அநேகமாக வாசலில் கட்டிப் போட்டிருப்பார்கள். அடிக்கடி அந்த ஆடு கயிற்றை அவிழ்த்துக்கொண்டு தெருவுக்கு ஓடிவிடும். பக்கத்து, எதிர் வீடுகளில் வாசலில் வளர்த்திருக்கும் செடி கொடிகளின் இலைகளைச் சாப்பிட்டு விடும். அந்தப் பகுதிப் பெண்கள் வாசல் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களில் யாராவது ஆடு மேய்வதைப் பார்த்து விட்டு எழுந்து வந்து சத்தம் போடுவார்கள். வாச்மேன் ஓடிவந்து ஆட்டைப் பிடித்துக் கொண்டு போவான்.
அந்த விஞ்ஞானி இறந்து விடுவார். அந்தச் செய்தியே பக்கத்து வீடுகளுக்கு, அந்தத் தெருவில் யாருக்கும் தெரியாது. அவரை அறியாதவர்கள் தானே அவர்கள். அந்தத் திண்ணையரட்டைக் கூட்டத்துப் பெண்களில் ஒருத்தி செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பாள். அவள்தான் செய்தித்தாளில் இரங்கல் செய்தி பார்ப்பாள். விஞ்ஞானயின் படம் போட்டு, கீழே முகவரி இருக்கும். “அடியே நம்ம தெருடி” என்று கூவுவாள். இங்க யாருடி விஞ்ஞானி, நம்ம தெருவுல? கதவு எண் 13 எங்க இருக்குடி... என்று கேட்பாள். அதற்கு மற்றவள், அதாண்டி அந்த ஆடு, அடிக்கடி அவுத்துக்கிட்டு நம்ம வாசல் பயிரைக் கடிக்க வரும் இல்லே? அந்த வீட்டுக்காரர்டி... என்று அடையாளம் சொல்வாள். உலகறிந்த விஞ்ஞானிக்கு அந்தத் தெருவில் அடையாளம் அவர் வளர்த்த ஆடு, என்கிற நுட்பமான கிண்டல்!
கதைக்களம் என்று முற்றிலும் புதுசாய் எழுதிப் பார்த்த கதைகள் எனக்கு வாசிக்க எப்பவும் பிடிக்கும். அசோகமித்திரனின் கதை ஒன்று. தலைப்பு சரியாக நினைவில் இல்லை. ஒருவன் பழைய புத்தகக் கடையில் தனக்குப் பிடித்த புத்தகம் ஒன்றை சகாய விலையில் வாங்கி வருவான். அன்றைக்கு இரவு ஓய்வு நேரத்தில் வாசிக்கலாம் என்று அந்தப் புத்தகத்தைப் பிரிப்பான். அதில் முதல் பக்கத்தில், சிவகாமிக்கு அன்புடன் அருணாசலம் என்று கையெழுத்திட்டு தேதியிடப் பட்டிருக்கும். யாரோ ஒரு சிவகாமி. அவளுக்கு யாரோ ஒரு அருணாசலம் பரிசளித்திருக்கிறான் என்று நினைத்துக் கொள்வான். ஏன் அவன் அவளுக்குப் பரிசளிக்க வேண்டும்? அதுவும் எத்தனையோ பரிசுகள் இருக்க, புத்தகம் ஒன்றை அவளுக்கு அவன் பரிசளித்திருக்கிறான் என்றால் ஆச்சர்யம் தான், என் நினைத்துக் கொள்வான். இப்படியே யோசனை செய்ததில் நேரம் கடந்துவிடும், புத்தகத்தை மூடிவிட்டு விளக்கணைத்துப் படுத்து விடுவான்.
இரண்டு மூன்று நாள் கழித்து திரும்ப அந்தப் புத்தகத்தை வாசிக்கக் கையில் எடுப்பான். முதல் பக்கத்தில் அந்த அன்புடன்... வரிகள். மனம் திரும்ப கிளை விரிக்கும். யார் அந்த சிவகாமி? அவளுக்கும் இவனுக்கும் என்ன உறவு? சிவகாமி அவனது தோழியா? அக்காவா? அம்மா? காதலியாக இருக்குமா? காதலில் யாராவது, காதலிக்கு யாராவது புத்தகம் பரிசளிப்ர்களா? ஒருவேளை அவள் நல்ல ரசிகையாக இருக்கலாம். அவள் இந்த எழுத்தாளரை விரும்பி வாசிக்கிறவளாக இருக்கலாம். எதிர்பாராமல் அவளுக்குப் பிடித்த எழுத்தாளரின் ஒரு புத்தகத்தை அவன் பரிசாக அளித்து அவளை சந்தோஷப்படுத்த நினைத்திருக்கலாம்... என்கிற அளவில் சிந்தனைகள் படரும். கொட்டாவி விட்டபடியே மணி பார்த்துவிட்டு, புத்தகத்தை மூடிவைத்துவிட்டு உறங்கிப் போவான்.
பிறகு பல நாட்கள் புத்தகம் நினைவு கூட வராது. அடாடா புத்தகத்தை வாங்கி இத்தனை நாள் ஆகிவிட்டதே, என உறுத்தலாகி மீண்டும் புத்தகத்தை ஓர் இரவில் பிரிப்பான். அந்த அன்புடன் வரிகளைக் கடக்கையில் அது பரிசளிக்கப் பட்ட நாளைப் பார்ப்பான். அந்தத் தேதியில் முக்கியமாக அவளுக்கோ அவனுக்கோ என்னவோ கவனம் இருக்கிறது. அது அவளின் பிறந்த நாளோ? அவர்கள் கல்யாணமான தம்பதியாக இருக்குமோ? அன்றைய தினம் அவர்களின் கல்யாண நாளாக இருக்குமா?... நினைவுகள் பிடி நழுவிப் பறக்க ஆரம்பித்து அன்றைக்கும் அவனால் புத்தகத்தை வாசிக்க வாய்ப்பு இல்லாமல் போகும்.
மறுநாள் அலுவலகத்தில் வேலை செய்கையிலேயே அந்தப் பத்தகம் நினைவு வரும். வீட்டுக்கு வந்து எப்படியும் புத்தகத்தை வாசிக்கத் தீர்மானம் எடுத்துக் கொள்வான். இரவில் மற்ற வேலைகளை விரைவாக முடித்துக்கொண்டு உட்கார்ந்து புத்தகத்தை விரிப்பான். முதல் பக்கத்தைப் பார்ப்பான். அன்புடன்... என்கிற எழுத்துகளைப் பார்ப்பான். சர்ரக் என்று அந்தப் பக்கத்தைக் கிழித்து குப்பையில் எறிவான். பிறகு புத்தகத்தை வாசிக்க ஆரம்பிப்பான்.
இந்தக் கதையை இந்தியா டுடே இதழில் வாசித்திருக்கிறேன். எனது ‘யானைச்சவாரி’ திரட்டிலும் அவர், அசோகமித்திரனின் அனுமதியுடன் பயன்படுத்திக் கொண்டேன்.
4
இது தவிர இன்னொரு வகை இருக்கிறது. அது எழுத்தாளனே தன் பாத்திரத்தைக் காலை வாரிவிட்டு மகிழ்வது! அதை என்னமாய் ரசித்து எழுத முடிகிறது... பாட்டை விசிலில் பாடுவது போல!
பத்திரிகைகளில் நிறைய நகைச்சுவைத் துணுக்குகள் எழுதும் சிலரைப் பார்த்திருக்கிறேன் நான். அத்தனை உற்சாகமான வாழ்க்கையல்ல அவர்களுடையது, என்றும் கவனித்திருக்கிறேன். எப்படியும் நம் பெயர் பத்திரிகையில் வந்தால் போதும், என்று பொன்மொழிகள் எழுதி யனுப்பும் சிலர், கீழே அதைச் சொன்ன பிரபலத்தின் பெயரைப் போடுவார்கள். யார் சொன்னது, என்று தெரியாதவர்கள், கீழே ‘யாரோ’ என்று போட்ட துணுக்குகள் அனுப்புவது உண்டு. யாரோ, என்ற தலைப்பில் நான் கணையாழியில் ஒரு கதை எழுதினேன்.
எப்பவும் ‘என்னடா வாழ்க்கை இது, தற்கொலை பண்ணிக்கலாம் போலருக்கு...’ என வெறுப்பேற்றிக் கொண்டிருக்கும் ஒரு பெரியவர். வயது அறுபதைத் தாண்டி. பத்திரிகைத் துணுக்கு எழுத்தாளர். அறையில் இரண்டு மெடிக்கல் ரெப்புகளுடன் கூட அவரும் இருப்பார். அவர் சமையல் நன்றாகச் செய்வார்... என்று வேறு வழியின்றி அவரைக் கூட வைத்துக் கொண்டிருப்பார்கள். எப்பவுமே சலித்தபடி இருப்பார் அவர். அத்தனை வயதிலும் அவர் ஒண்டிக்கட்டை. இளம் வயதில் அவர் ஒரு பெண்ணைக் காதலித்தார். அந்தப் பெண்ணிடம் நாணிக் கோணி அவர் தன் காதலைச் சொன்னபோது அந்தப்பெண், உன் மூஞ்சிக்குக் காதல் ஒரு கேடா?.. என்றுவிட்டாள். அதைச் சொல்லி வருத்தப் படுவார் அடிக்கடி. நண்பர்களான ரெப்புகள் தங்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள், என்றாலும் அவரிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். அநேகமாக அவள் மறுத்த பிறகுதான் அவர் அடிக்கடி, என்னடா வாழ்க்கை, நான் தற்கொலை செஞ்சிக்கப் போறேன், என்று ஆரம்பித்திருக்க வேண்டும். இத்தனை வருடங்களாகப் புலம்பலுக்குக் குறைச்சல் இல்லை. அவர் தற்கொலை செய்து கொள்ளவும் இல்லை.
சமையலுக்குக் காய்கறி வாங்க ஒருநாள் பெரியவர் மார்க்கெட் போகிறார். ஆச்சர்யம். அங்கே அவள். அவரது காதலி. உடம்பே மெலிந்து ஒடுங்கி நடந்து போகிறாள். இப்போது அவள் முதியோர் இல்லத்தில். அவளது கணவர் இறந்து போய்விட்டார். ஐயோ, என்றார் அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. ஒரே பையன். அவன் அவளை வைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டான். மிகுந்த மன பாரத்துடன் அவர் அறை திரும்பினார். நண்பர்களிடம் தன் காதலியை சந்தித்ததாகவும் அவள் இப்போது முதியோர் இல்லத்தில் இருப்பதாகவும் சொல்லி, என்ன வாழ்க்கைடா இது... என்று முடிக்கிறார். பிறகு நண்பர்களிடம் தானும் அந்த முதியோர் இல்லத்தில் போய்ச் சேர்ந்துகொள்ளப் போவதாகச் சொல்கிறார். அவர்களுக்கு அவரைப் பிரிய வருத்தம், இருந்தாலும் அவரை வாழ்த்தி அனுப்பி வைக்கிறார்கள்.
ரெண்டே நாளில் அவர் திரும்பி வந்துவிடுகிறார். வாயில் அதே சலிப்பு. என்னடா வாழ்க்கை இது. தற்கொலை பண்ணிக்கலாம் போல வருது எனக்கு. நடந்தது இதுதான். மொட்டைமாடி. தனிமை. அவர் அவளை, தன் காதலியை தனியே வரச்சொல்லி அழைத்து மிகுந்த கனிவுடன், இப்பகூட நீ கலைப்படாதே இவளே. உன்னை நான் நல்லா வெச்சிப்பேன். உன்னை இப்பவும் நான் காதலிக்கிறேன், என்கிறார். அவள் அந்த அறுபது வயதில் இரண்டாவது தடவையாக அதே பதிலைத் திரும்பவும் சொல்கிறாள். உன் மூஞ்சிக்குக் காதல் ஒரு கேடா?
தி.ஜானகிராமனின் ‘மாடியும் தாடியும்’ என்ற ஒரு சிறுகதை. ஒரு கிராமத்து அக்கிரகாரத்து மனிதர். நிலத்தைக் குத்ததைக்குக் கொடுத்துவிட்டு வெட்டியாகப் பொழுது போக்கிக் கொண்டு வீட்டுத் திண்ணையில் காலாட்டியபடி உட்கார்ந்திருப்பவர். காலையில் இருந்து மாலை வரை அவருக்கு வேலையே இல்லை. அவர் ஒருநாள் மொட்டைமாடியில் இருக்கையில் ஓர் அம்மாளும் அவளுடன் சிறுவன் ஒருவனும் மாடியேறி வருவார்கள். அதுவரை அவரிடம் யாரும் எந்தக் காரியமாகவும் வந்து நின்றதே கிடையாது. அவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்று அவருக்குத் திகைப்பாய் இருக்கும். அந்த மாமி சிறுவனிடம் மாமாவை நமஸ்காரம் பண்ணிக்கோடா, என முதுகில் தள்ளி விடுவாள். இருக்கட்டும் இருக்கட்டும்... என அவர் கூச்சத்துடன் காலை நகர்த்திக் கொள்வார். எனக்கா இத்தனை மரியாதை... ஆகாவென்றிருக்கும். மாமி அவரிடம், இந்தப் பிள்ளை எப்ப பாரு விளையாட்டு தான். படிக்கவே மாட்டேங்கறான். ஒருவேலையும் செய்ய மாட்டேங்கறான். யார் சொல்லியும் கேழ்க்க மாட்டேங்கறான்... அதான். ஊர்ல பெரிய மனுசா, (நானா?... என திரும்பவும் அவருக்கு ஆனந்த அதிர்ச்சி.) நாலு வார்த்தை நல்லதா எடுத்துச் சொல்லுங்கோ குழந்தைக்கு... என்கிறாள் மாமி.
தொண்டையைச் செருமிக் கொள்கிறார். குழந்தே பெரியவா எது சொன்னாலும் உன்னோட நல்லதுக்கு தான் சொல்வா. அவா சொல்றதைக் கேழ்க்கணும். இப்ப உனக்கு அதோட அருமை தெரியாது. பின்னால நீ பெரியவனா ஆகும்போது நினைச்சிப் பார்த்தா தான் அவா சொல்றதெல்லாம் எத்தனை சரின்னு உனக்குப் புரியும்...
நன்னா சொல்றேள். பெரியவான்னா சும்மாவா, என்று அந்த மாமி சந்தோஷமாய்ப் பேசுவாள். சுப்ரமணிய மாமாவப் போய்ப் பாருன்னு ஊர்ல எல்லாரும் சொல்றான்னா சரியாத்தான் இருக்கு... என்கிறாள். சுப்ரமணியா, பக்கத்து வீடு... என்கிறார் அவர். அடாடா, மன்னிக்கணும். தப்பா வந்திட்டோம், என்றபடி மாமி சிறுவனை அழைத்துக் கொண்டு கீழே போகிறாள் - என முடிகிறது கதை.
வழக்கமான பாணியில் இருந்து ஓர் எழுத்தாளன் இப்படி வெளியே வந்து அடையாளப் படுவது முக்கியம் என்றே நான் கருதுகிறேன். செய்த வேலையையே திருப்பிச் செய்யாத அளவில் அவன் தன்னை ஒருவேளை புதுப்பித்துக் கொள்ள நினைக்கிறானோ என்னவோ? நண்பர் இரா.முருகவேள் கூட நாவலில் அல்ல, சிறுகதை என்ற அளவில் தன்னைப் புன்னகையுடன் தளர்த்திக் கொள்வதாகவே தெரிகிறது. சாளரங்களைத் திறந்து வைத்துக் கொண்டு அவர்கள் இயங்குகிறார்கள். இயல்பாகவே உணர்வுகள் உள்ளே புகையென நடமாடி உருவங் கொள்கின்றன அப்போது.


சனிக்கிழமை தோறும் தொடர்கிறேன்
storysasnkar@gmail.com
91 9789987842 - 91 9445016842



2 comments:

  1. கற்றலின் கேட்டல் இனிது. இக்கதைகளை படித்டிருந்தால் கூட நீங்கள் சொன்னவற்றை ரசித்திருப்போமா என்பது சந்தேகம்தான். பல கதைகளை படித்த உணர்வு ஏறபடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே... கதையை எப்படி உள் புகுந்து வாசிக்க வேண்டும்... என்பது தனி சப்ஜெக்ட். ரசிக்கச் சொல்லித் தர இங்கே ஆளே இல்லை... எத்தனை நட்புபூர்வமாக இதமாக எழுதுகிறீர்கள்...

      Delete