Friday, January 25, 2019


part 26/art by kamal koria


அறுபது
எழுபது
எண்பது
எஸ்.சங்கரநாராயணன்

னால் நான் மாறுபட விரும்பினேன். எண்பதுகளில் நாங்கள் மாறுபட விரும்பினோம். கோணங்கியின் எழுத்து?வாழ்வின் முன்பகுதியும், பிறகு தன்னடையாளம் என தனி எடுப்பு வைத்துக் கொண்டதும் எல்லாரும் அறிந்ததே. அதில் நான் கிளை பிரிந்த விவரமும் வேறொரு பதிவில் சொன்ன நினைவு. சுருக்கமாய்ச் சொன்னால், முற்றிலும் வேறு வார்த்தைகள் வேறு அனுபவம் என்று வாசகனை, சொல்லிச் சொல்லி பழக்கப்பட்டு, நைந்து போன தமிழ் வார்த்தைக் குப்பையில் இருந்து மீட்டெடுப்பேன், என்றார் கோணங்கி. மரபைத் தொட்டு அதன் நீட்சியாக நான் என் அலைவரிசைகளை அமைத்துக்கொள்ள முன்வந்தேன். (நாமார்க்கும் குடியல்லோம் ‘சிவனை’ அஞ்சோம். - இப்படி. இதுபற்றி முன் பதிவுகளில் குறிப்பிட்ட நினைவு.)
எங்களுக்கு முந்தைய எழுத்தாளர்கள், ஐம்பது அறுபதுகளின் இலக்கிய அடையாளங்கள், பெரும்பாலும் பிராமணர்கள். அவர்கள் நடத்திய பத்திரிகைகள், சிறு பத்திரிகைகள் கோலோச்சிய காலம். பிராமணர் அல்லாத, எனினும் பிராமண சாதியோடு ஒத்துப்போகக் கூடிய மேல்சாதிக் காரர்களின் பத்திரிகைகள் இருந்தன. அவ்வண்ணமேயான எழுத்தாளர்களும் இருந்தார்கள். இலக்கியத்தின் போக்குகளை, இரத்தவோட்டத்தை அவர்கள் நிர்ணயித்தார்கள். தேவார, திவ்யப் பிரபந்த காலம் என்று மொழி, ஆன்மிகத்தில் செழித்த காலம் போல, எம்.எஸ்.வியோ, அதன்பின் இளையராஜாவோ திரை இசையின் போக்கை நிர்ணயித்தது போல, வசனத்தின் உரைநடையின் ஆரம்ப கால கட்டமாக அது இருந்தது.
ஒரு வேடிக்கையான உதாரணம் நினைவு வருகிறது. ‘சந்திரலேகா’ என ஒரு பிரம்மாண்டான தயாரிப்புத் திரைப்படம் வந்த காலத்தில், போலிஸ் ஒருவன் திருடனைப் பிடிக்க வியூகம் வகுப்பான். நீ அங்கே காத்திரு. இவன் இங்கே இருப்பான். யார் பார்க்கறீங்களோ, உடனே விசில் அடிக்க மற்றவர்கள் பாய்ந்து வந்து திருடனை வளைத்து விடலாம்... என்ற திட்டத்துக்கு வசனம், “இவா ஊதினா அவா வருவா” என பிராமண பாஷையில் இருக்கும்! அந்தகக்லத்தில் சாரங்கபாணியின் நகைச்சுவை உச்சரிப்பு பாணியிலேயே பிராமண வாடை தனியே தெரியும்... அது ஒரு காலம். எல்லாம் தாண்டித்தான் வந்திருக்கிறோம்.
எழுத்தில் தனிமனித வாழ்க்கையோ சம்பவங்களோ தாண்டி ஓர் அறவுணர்வை, ஒழுக்கத்தை வலியுறுத்தும்படி கதைகளை அவர்கள் வடிவமைத்துக் கொண்டார்கள். ஐம்பது அறுபது காலகாட்ட எழுத்தாளர்கள் அவர்கள். தன்னைவிட உயரமான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க அவர்கள் ஆர்வப் பட்டார்கள். இலட்சியத் தினவு, தோள்ப்பூரிப்பு, சமூகப் புரட்சி கொண்ட கதைகள், அவையும் ஒருபக்கம் ஆட்சிக்கு வந்தன. அப்படிக் கதைகள் எழுதுவது பெருமிதம் தருவதாக, பரவலான இலக்கிய அந்தஸ்தும், புகழும் ஈட்டித் தருவதாக இருந்தது. இதில் தனிமனிதக் கதைகள் அத்தனை எடுபடவில்லை, நா.பா, அகிலன், மு.வ. காட்டும் இலட்சியப் பாத்திரங்கள் தமிழ்த் தீவிரமோ, சமுதாயப் புரட்சி பாவனைகளோ கொண்டாடின. அவற்றுக்குத் தனி வாசக அரங்கு அமைந்தது.
அந்தப் படைப்புகளின் பாத்திரங்களின் பெயர்களையே தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் போக்கு கூட இருந்தது.
ஆனால் இலக்கிய அடையாளம் என அறம் வலியுறுத்தி, பரந்து பெய்யும் மழைபோல், தனிமனிதப் பாத்திரங்கள் தாண்டி சமூகத்தை அடையாளப் படுத்தும் கதைகள் சிறப்பு பெற்றன. (கு.அழகிரிசாமி, ஜானகிராமன்.) இதே அளவு, இந்த தனிமனித லௌகிகக் கதைகள் அங்கிகாரம் பெறவும் முடியவில்லை. வணிகப் பத்திரிகையில் லௌகிகக் கதைகள் எழுதியவர்கள் சுவாரஸ்ய அம்சம் கருதி வாசிக்கப் பட்டார்கள். இந்த சூழல் நடுவே, இலை நடுவே தாமரை என ஜெயகாந்தன் போன்றோர் தலையெடுத்தார்கள். ஒரு காலகட்டத்தின் போக்கு இது.
தனியொரு எழுத்தாளன் இதை நிர்ணயித்திருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அல்லது ஒரு தனி மனித முயற்சி பரவலாய் அடையாளப் படும்போது பிறரும் அவர்வழி கூட வந்திருக்கலாம். அப்படிப் போக்குகளை நிர்ணயிப்பவனே வகைமாதிரியாக (ஐகானாக) அழியாப் புகழ் பெறுகிறான். அந்த ஐகான்களையே நாம் உதாரணங்களாகக் கொண்டு அந்தக் காலகட்டத்தை அளவிடுகிறோம். மதிப்பிடுகிறோம்.
போன பதிவில் அறம் சார்ந்த உணர்வுகளை மீட்டியபடி நகரும் கதைகளாக, லாசராவின் குருஷேத்திரம் மற்றும் தி.ஜானகிராமனின் ஒரு கதை என உதாரணம் காட்டியதை இங்கே சேர்த்துப் பார்க்கலாம். பிற்காலங்களில், அறுபது தாண்டி எழுபதுகளின் எழுத்தாளர்கள், வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பிரபஞ்சன், சா.கந்தசாமி என ஒரு வட்டம் வருகையில் இந்தப் போக்கு மாற்றம் கண்டது. என்ன மாற்றம் அது? அறுபதுகளின் எழுத்தாளர்கள் எல்லாப் பாத்திரங்களையும் இலட்சிய வாதம் பேச வைத்தார்கள். அறமும் வாழ்வொழுங்கும் ஓரளவு லட்சியத் தினவே தானே. அறத்தின் நிமிர்வு அவசியம், என்று வலியுறுத்திப் பேசும்போது, பாத்திர வார்ப்புகள் எப்படி இருந்தாலும், அது எழுத்தாளனின் கனவு என்பது அதில் காணக் கிடைப்பதாகவே ஆகிப் போகிறது. ஆக அந்தக் கதாபாத்திரங்கள், எழுத்தாளனின் அறிவுத்தளத்திலேயே அவையும் இயங்கின, என்று கூறத் தோன்றுகிறது.
இந்த ஐம்பதுகளின் அறுபதுகளின் எழுத்தாளர்களில் அசோகமித்திரன் மாத்திரம், தான் வாழ்ந்த சூழலை, பொருளாதார அடிப்படையில் மத்திய தர, கீழ்மத்திய தர மனிதர்களை அடையாளப் படுத்திப் புனைவுகள் அளித்தார். என்றாலும் அப் பாத்திரங்களில், இப்போது நாம் குறிப்பிடுகிறோமே, அம்மாதிரி விளிம்புநிலை மனிதர்கள் இல்லை. அவர் வாழ்ந்த ஹைதராபாத் சூழல் தனி அடையாளம். எனினும் வலி மிக்க வாழ்க்கை அவரது கதைக் களன். அவ்வளவே. இந்தக் குழுவில் ஜெயகாந்தனின் பங்களிப்பு அபாரமானது. அவர்தான் பிராமணர், அப்பிராமணர் என்ற பாகுபாடு இல்லாமலும், மேல்சாதி கீழ்சாதி என்றெல்லாம் பராட்டாமலும் புனைவுகளில் ஈடுபட்டார். அவரது குணாம்சம் அது. அந்தக் காலகட்டத்தின் பெரும் வியப்பு இது. புதுமைப்பித்தனிடம் கூட சாதி சார்ந்த கட்டமைப்புகளில் பெரிய கேள்விகள் இல்லை. ஜெயகாந்தனிடமும் இல்லை, என்றாலும் அதில் சாதி அபிமானம் என்று தெரியாது. அவ்வளவில் புதுமைப்பித்தன் தான் பிறந்த பிள்ளை சமூகத்தின் அடையாளங்களைக் கூடவைத்துக் கொண்டவர், என்கிற விமரிசனம் அவருக்கு எழுந்தது. புதுமைப்பித்தனின் ஒரு சிறுகதையின் தலைப்பு - கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும். ஆனால் ஜெயகாந்தனோ பணம், கல்வி, சாதி அடையாளம் தாண்டி பொதுவாக அத்தனை விதமான வாழ்க்கைத்தர பாத்திரங்களையும் அன்பு, குடும்பச் சூழல் என பொதுவான நேர்மையுடன் வடித்துக் காட்டினார். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், போன்ற நாவல்களை அவரால் தர முடிந்தது. தனக்குள் கிளம்பும் விவாதங்களை அவர் பாத்திரங்களாக்கி ஆனால் விமரிசனமாகவோ, பிரச்சாரமாகவோ தெரியாமல் படைத்துக் காட்டிய அளவில் அவரது பரந்த மனது அத்தனை தரப்பு வாசகர்களையும் கொள்ளை கொள்வதாக அமைந்தது. மிகுந்த நேர்மையான உளப்பூர்வமான எழுத்து என ஜெயகாந்தனின் சிறுகதைகள் அமைந்தன. மற்ற எழுத்தாளர்கள் தங்கள் பாத்திரங்களை ஒரு குறிப்பிட்ட வர்க்கச் சூழலில், தான் அறிந்தது, தனக்குத் தெரிந்தது என எழுதத் தலைப் பட்டார்கள். ஜெயகாந்தன் வேறு வேறு மட்டத்திலான பாத்திரங்களை எழுதிப் பார்க்க உந்தப்பட்டார். பிராமணப் பாத்திரம். விளிம்பு நிலைப் பாத்திரம். நன்கு படித்த மேல் தட்டு வர்க்கம். வெளிநாட்டு பாவனைகளைக் கூட அவர் தன் கதைகளில் நடமாட விட்டது, அந்தக் கால கட்டத்தின் ஆகப் பெரிய ஆச்சர்யம்.
இன்னும் சொல்லப் போனால் யார் எழுத்தாளன், என்ற கேள்விக்கு, ‘எந்த விஷயம் பற்றியும் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் கேட்டால் தர அவனுக்கு முடிய வேண்டும். அப்போதுதான் அவன் எழுத்தாளன்,’ என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஜெயகாந்தனை அந்தவகை எழுத்தாளனாக இப்போது நினைத்துக் கொள்கிறேன்.
இந்தச் சூழலில் எழுபதுகளில், பூமணி, சா.கந்தசாமி போன்றவர்கள் பாத்திரங்களின் சூழலும், அறிவும் சார்ந்து எழுத்தாளனின் குறுக்கீடு இல்லாத படைப்புகளை அளிக்கத் தலைப்பட்டார்கள். ஓரளவு அசோகமித்திரனும் இவ்வகையில் முயன்று பார்த்திருப்பதாக உதாரணம் காட்ட முடியும். கதாபாத்திரங்கள் எவ்வளவிலும் தான் வாழும் சூழலுக்கு மேற்பட்ட தத்துவங்களை ஒருபோதும் உதிர்ப்பது இல்லை. பெரும் சிந்தனைகளுடன் அறிவும் தர்க்கமுமாய் வளையவர வில்லை அப் பாத்திரங்கள். மானுட விழுமியங்களை நோக்கி நகரும் அறுபதுகளின் பெரும் போக்கில் இருந்து இது துல்லியமான மாறுபாடுகள் கொண்டதாய் இருந்தது. இந்தக் காலகட்டங்களில் ஆ.மாதவன், பூமணி, கி.ரா. போன்றவர்களின் வட்டார வழக்கு உரையாடல்களின் பயன்பாடுகள் அந்த முயற்சிக்குப் பெரிதும் உறுதுணை புரிந்தன. கி.ரா. பாத்திரங்கள் அவரது ஆளுமையின் அடையாளங்கள், எனினும் அவர் காட்டிய உலகம் புதுசானது. லட்சியப் போக்குகளுக்கு மாறுபட்டதாய் இருந்தது. முற்போக்கு வாடை வீசும் கி.ரா. கதைகளில்.
பிறகான எண்பதுகள். எனது முதல் சிறுகதை 1979 வாக்கில் வெளியானது. ஒரு சுமாரான இதழில் வெளியான சுமாரான கதை அது. எனது நல்ல கதையை நிராகரித்திருப்பார்கள் அவர்கள், என்கிற அளவுக்கு சுமாரான இதழ் அது. நான் எழுத்தாளன் ஆகிவிட்டேன். நான் எழுத வந்தபோது எனக்கு இலக்கியப் பத்திரிகை, வணிகப் பத்திரிகை என்பது எல்லாம் தெரியாது. அப்போது சாவி, மணியன் இருவரும் தனித்தனியே பத்திரிகைகள் ஆரம்பித்தார்கள். சில வருடங்களில் அவர்களே நிறையத் துணை இதழ்களும் துவங்கினார்கள். கதைகள் பெருவாரியாகத் தேவை இருந்த காலம் அது. எனது கதைகள் கொண்டாடப் பட்ட காலம் அது. நான், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ம.வே.சிவகுமார், கார்த்திகா ராஜ்குமார் - என எழுத ஆரம்பித்த புதியவர் பட்டியல் உண்டு. குங்குமம் அறிமுக எழுத்தாளர் என்று முதல்கதை வெளியிட ஆர்வப் பட்ட காலம். இப்பெரும் போக்கோடு, நான் என் வழி தனியே பிரிந்து வந்தது எனக்கே ஆச்சர்யம். அதன் விவரங்களை வேறு இடத்தில் பதிவிட்டிருக்கிறதாக நினைக்கிறேன்.
குறிப்பாக வணிகக் கதைகள் சம்பவங்களை, திருப்பங்களை வைத்து வாசகனுக்கு சுவாரஸ்யமான வாசிப்பு தந்தன. இலக்கியத் தரமான கதைகள் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்தன, என எளிமையான வித்தியாசம் சொல்ல முடியும். இதையும் முன்பே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
எழுத்து ஓரளவு பிடிபட்ட போது விதவிதமாய் எழுதிப் பார்க்கிற ஆவல் வருகிறது. இதுவரை சொல்லப்படாத சேதிகளை, மனிதர்களை நாம் சொல்ல அவா எழுகிறது. தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும்போது நமக்குள் நிகழும் மாற்றங்கள் எத்தனை அருமையானவை. எழுதியபடியே எழுத்தால் தானும் வளர்கிறான் எழுத்தாளன். என் ஒரு கதை போல அடுத்தது இல்லாமல் பார்த்துக் கொள்ள நான் முடிந்த அளவு முயல்கிறேன்.
2
ழுத்தாளர் பா.திருச்செந்தாழை திசம்பர் 17, 2018 முகநூலில் எழுதிய ஒரு குறிப்பு மேற்சொன்ன விவரங்களைப் பற்றி மனசு வட்டமிட வைத்துவிட்டது. திருச்செந்தாழையின் பதிவின் முதல் பகுதி இதோ.
      “ஷங்கரநாராயணனின் கதை ஒன்று உள்ளது.   
      எப்போதும் சின்னபையனைப் போலவே பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் தந்தையைக் குறித்து குறைகூறிக் கொண்டே இருக்கும் ஒருவனிடம், தனது அந்திமத்தில் இருக்கும் அம்மா ஒருநாள் அவளது பழைய காதல் வாழ்வையும், அதில் தோற்று நின்ற அந்த நிமிடத்தில் எவ்வளவு இயல்பாய் தன்னுடன் இணைந்து பயணிக்கத் துவங்கிய அவனது தந்தையைப் பற்றியும் கூறி முடிப்பாள். இவன் திணறியபடி அதைக் கேட்டுமுடித்து அமைதியாவான். தந்தை குறித்த அவனது அனுமானங்களை என்ன செய்வதென அவன் மௌனிக்கும்போது, தெருவில் கிரிக்கெட் விளையாடும் பையன்களுக்குக் கையசைத்தபடி வீட்டிற்குள் நுழைந்து, விசிலடித்தபடி பௌலிங் செய்யும் பாவனையுடன் அப்பா தனிமையில் தனது அறைக்குள் செல்வார்.
      மகத்தானவைகள் என்பவை அளவில் மிகப்பெரியவை என்பது எப்படியோ பழக்கமாகிவிட்டது.”
திருச்செந்தாழையின் இந்த முகநூல் பதிவு நான் எதிர்பாராதது. அவர் குறிப்பிட்ட அந்தக் கதை என் நினைவில் இல்லை. ஆனால் மனிதர்களில் விடுபட்டவர்களை நாம் அடையாளம் காட்ட வேண்டும், என்கிற எனது உந்துதலில் அப்படி ஒரு கதை நான் எழுதி யிருப்பேன் என்றே தோன்றுகிறது. அச்சான கதைகளை சூதானமாக பத்திரப்படுத்தும் பழக்கம் எனக்கு எப்போதுமே இல்லை. அதனால் எனது ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் திரும்பக் கிடைக்கவில்லை எனக்கு. அதில் வருத்தமும் இல்லை.
‘சூரிய விளக்கும் சூறாவளியும்’ என நான் ஒரு கதை எழுதினேன். தலைப்பே சொல்லி விடும் அது என் எழுத்துலக ஆரம்பகாலக் கதை. எத்தனை தோல்விகள் வந்தாலும், வாழ்க்கை அடிமேல் அடி போட்டு அவனைப் புரட்டிப் போட்டாலும், புன்னகை மாறாமல் வாழும் ஒரு மனிதனின் கதை அது. பாசமே காட்டத் தெரியாத கொடுமைக்காரத் தந்தையிடம் பயந்து பயந்து வளர்ந்த ஒருவர். கல்லூரிக் காலத்தில் தன்னைக் காதலித்த ஓர் அபூர்வமான பெண்ணையே தன் அப்பாவுக்கு பயந்து கைப்பிடிக்கத் தவறவிட்டவர். எங்கு பார்த்தாலும் துரத்தி வரும் நிராசைகள். இதன் மத்தியில் அவர் தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்கிறதாகக் காட்டிக்கொண்டு, மனைவியை கௌரவமாக நடத்துவார். அதை மகனுக்கு அம்மா சொல்வதாக அமைத்திருந்த கதை அது. ஒருவேளை இந்தக் கதையைத் தான் இப்போது திருச்செந்தாழை நினைவு கூர்கிறாரோ என்னவோ? அவனுடன் அப்பா தெருவில் இறங்கும் போது தெருவில் பையன்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒருவன் அடித்த பந்து அப்பா முன்னால் வந்து விழும். அதைப் பிடித்து பௌலிங் போடுவார் அவர்... என எழுதிய நினைவு எனக்கு.
‘சூரிய விளக்கும் சூறாவளியும்’ என்ற அந்தக் கதை ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் கண்டது. ஓய்வு பெற்ற மாஜிஸ்டிரேட் எம்.எஸ்.ராமசாமி பண்ணி யிருந்தார். நிறையப் பேருக்கு அது பிடித்திருந்தது. அப்படி ஒரு வாழ்க்கை வாழ எல்லாருமே ஆசைப் படுகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது.
கதையமைப்பில் முழுக்க மானுடத்தை நோக்கி நாமே இயங்குவதான பாவனையுடன் சொந்தக் கற்பனையில் எழுதுவது அந்தக் கதை உருவான நேரத்தின் மன அமைதி சார்ந்தது. முழுக்கவே எல்லாப் பாத்திரங்களையும் நல்லவர்களாகவே படைத்து, வில்லன்களே இல்லாமல் கூட கதை எழுதி யிருக்கிறேன். இதற்கு முன்மாதிரி இல்லை என்கிற தனிக்கதை எனவும் முயன்று பார்த்திருக்கிறேன்.
துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை, என்ற சிறுகதை அப்படி. அது முன்மாதிரிகள் அற்றது. விதவை அம்மா. அம்மாவும் பெண்ணும் கோவில் பிராகரத்தில் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். திடுதிப்பென்று மின்சாரம் போய்விடுகிறது. அந்தப் பெரும் இருளில் அம்மாவின் உதட்டை யாரோ சட்டன கவ்வி முத்தம் இட்டு விடுகிறார்கள். விளக்கு வந்தபோது பார்த்தால் அவளுக்குப் பக்கமாகவோ, முன்னாலோ பின்னாலோ யாருமே இல்லை. இத்தனை வயசாகியும் நான் இன்னும் அத்தனை இளமையாகவா, ஈர்ப்பாகவே இருக்கிறேன்? என் உடல் இன்னும் கட்டுக் குலையாமல் ஆண்களைக் கிறங்கடிக்கிற அளவிலா இருக்கிறது? கூட வரும் மகள்... இவளுக்கு விஷயம் தெரிந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? யார் இப்படிச் செய்தது? யார் அவன்? லேசாய் உதட்டைத் தடவிக் கொள்ளலாமா என்று நினைவை உதறிக் கொண்டபடியே நடந்து வருவாள்.
திடீரென அவளுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வரும். மின்சாரம் போன அந்த விநாடி, அதற்கு சற்று முன்தான் அவளுக்கு இடப் பக்கமாக வந்து கொண்டிருந்த பெண், தற்செயலாக அவளுக்கு வலப் பக்கமாக வந்தாள், என்பது அம்மாவுக்கு ஞாபகம் வரும் - என்று முடியும் கதை.
இதேபோல முற்றிலும் புதிதான கற்பனை என்று இன்னொரு கதை நினைவுக்கு வருகிறது. ‘ஜலஜாவுக்குப் பைத்தியம்.’ இந்தக் கதையை எதிர்பாராத இடத்தில் முடித்திருப்பேன். எட்டாங் கிளாஸ் படிக்கிற வயசில் ஒரு சின்னப் பையன். அவன் வீட்டுக்கு எதிர்வீட்டில் ஒரு பைத்தியம், ஜலஜா. அதன் சேஷ்டைகள் இவனுக்கு சுவாரஸ்யமானவை. யாரும் இல்லாத சமயம் இவனும் அவளிடம் வேடிக்கை செய்து மகிழ்வான். ஒரு கோடை விடுமுறை என்று தாத்தா வீட்டுக்குப் போயிருப்பான் இவன். திரும்ப வந்தபோது ஜலஜா இல்லை. அந்த எதிர்வீட்டுத் திண்ணை காலியாகக் கிடைக்கும். என்ன ஆயிற்று ஜலஜாவுக்கு?
அவன் வகுப்புத்தோழன், புளுகுமாஸ்டர் அவனுக்குச் சொல்வான். ஜலஜா செத்துட்டா. அவங்க அம்மாவே அவளுக்கு பால்ல வெஷத்தைக் கலந்து குடுத்து... கேட்கவே நடுங்கும் அவனுக்கு. இதை நம்புவதா வேண்டாமா, என்று பதட்டமாய் இருக்கும். ஜலஜாவை ஊரில் யாரோ கெடுத்து விட்டார்கள், என்பது புளுகுமாஸ்டரின் கதை. அவளை யாரோ கர்ப்பமாக்கி விட்டார்கள். யார் என்பது ஜலஜாவுக்குச் சொல்லத் தெரியவில்லை. விஷயம் ஊருக்குத் தெரியுமுன்னால்... அவங்க அம்மா, வேறு வழியில்லாமல்... பாலில்...
போடா சர்த்தான், என அவனை உதறிவிட்டு வந்தாலும் இவனுக்கு ஜலஜா பற்றிய நினைவுகளே கூட வரும். அவள் வீட்டு வாசலில் காலித் திண்ணையைப் பார்த்தபடி அவன் நிற்பான். திடீரென்று அவள்வீட்டுக் கதவு திறக்கும். ஜலஜாவின் அம்மா வெளியே வருவாள். இவளா? இவளா கொலைகாரி?.. சே புளுகுகிறார்கள்... என்றிருக்கும். அவனைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு உள்ளே கூப்பிடுவாள் ஜலஜாவின் அம்மா. உள்ளே போய் அப்படியே நிற்பான். துக்கம் கேட்டு அவனுக்குப் பழக்கம் இல்லை. இவளா கொலைனாரி? இவளா?... என தனியே ஒரு பதற்றம். சரி மாமி. நான் வரேன், என அவன் கிளம்புவான். இருடா, வராதவன் வந்திருக்கே. ஒரு வாய் பால் சாப்ட்டுட்டுப் போ. ஒரே துள்ளலில் வெளியே ஓடுவான் அவன் - அந்தக் காலத்தில் நேரில் பார்த்தவர் எல்லாம் கைகொடுத்துக் குலுக்கிச் செல்வார்கள் இந்தக் கதை வந்த புதிதில்.
ஒரு அரசு அலுவலகத்தின் பழைய ஆவணக் காப்பு அறையும் அதன் புராதன இருளும் அதில் மேஜையில் குப்புறப் படுத்து உறங்கும் ஊழியனும் அவனுடன் நட்பு பாராட்டும் எலிகளும் என்கிற ஒரு கதை, ‘மார்ச்சுவரியில் ஒரு மனிதன்.’
இந்தியா டுடே இதழ் சிறுகதைகளை வெளியிட்டுக் கொண்டிருந்த போது நான் அதில் எழுதியிருந்த அத்தனை கதைகளும் எனக்கு மிகப் பிரியமானவை. பெயரே இல்லாத மனிதன் - யேசுதாஸ் என்று கதாபாத்திரத்துக்கு பாடகரின் பெயரையே கொடுத்து எழுதிய கதை. யேசுதாஸ் வீட்டு செவிட்டூமைத் தோட்டக்காரன் பற்றிய கதை. இசையில் வல்லவரான யேசுதாசுக்கு பெயருக்கு முன்னால் பத்மஸ்ரீ அது இது என்று, கூடவே பெயருக்குப் பின்னாலும் படித்து வாங்கிய பட்டங்கள். அவர் வீட்டில் வேலைக்கு வரும் செவிட்டூமைத் தோட்டக்காரன். அவனுக்குப் பெயரே இல்லை. யார் அவனைப் பேர் சொல்லி அழைக்கப் போகிறார்கள். அப்படி ஒரு பெயர் வைத்து அவனைக் கூப்பிட்டாலும் அவனுக்கு எப்படி அது கேட்கும்?
ஆனால் யேசுதாஸ் இசையில் விற்பன்னர், என்பதைப் போலவே, அவன் மண்ணின் மகத்துவம் அறிந்தவன். அவன் சொன்னதைக் கேட்டது தோட்ட மண். வாசல் பக்கப் புல்தரையை ஒழுங்கு செய்து மாலைகளில் அவர் அமர நாற்காலிகள் போட்டுக் கொள்ள வைத்தான். அவன் வைத்த ரோஜாச் செடி பூத்துக் குலுங்கியது. தன் வீட்டு வாசல் அலங்காரமாகி விட்டதில் அவருக்கு, யேசுதாசுக்குத் திருப்தி. அவன் மீது சக கலைஞன் என்ற அளவிலேயே அவருக்கு மரியாதை வந்தது.
இதில் நான் காட்டிய ஒரு சேதி முக்கியமானது. அதற்காகவே இங்கே அதை விளக்க முன்வந்தேன். இந்தக் கதை சார்ந்த வேறொரு சுவாரஸ்யத்தை வேறு இடத்தில் நான் பகிர்ந்து கொள்வேன். கதையமைப்பு என்னவென்றால், தனது ஞானம் சார்ந்த செருக்கும் மிடுக்குமான யேசுதாஸ். அவரது செருக்கை மெல்லக் கலைக்கிறான் (பெயர் கூட இல்லாத) தோட்டக்கலை நிபுணன்.
யேசுதாசின் மனைவி அவருக்குப் பணிவிடை செய்வதையே தனது கடமை எனக் கொண்டவள். காலையில் அவரது சாதக நேரத்துக்கு எல்லாம் அவருக்குத் தயாராய் எடுத்து வைப்பது முதல் அவரது தேவைகளைப் பாய்ந்து பாய்ந்து பொறுப்பாய் பயந்து பயந்து செய்கிறவள். அவர் வேலையாய் இருந்தால் நெருங்கவே யோசிப்பாள். தோட்டக்காரன் வந்தபிறகு யேசுதாஸ் தன்னளவிலேயே உள்ளிறுக்கம் தளர்வதை உணர்கிறார். தன் மனைவியையே அவர் பார்க்கும் பார்வையில் அந்த கெடுபிடி இல்லை. அன்பு, கனிந்த அன்பு கவிகிறது. ஒருவரை யொருவர் அன்பால் நெருங்கி வருகிறார்கள்.
அந்தக் கரைதலில் அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது. உயர்வு தாழ்வு சார்ந்தும், உணர்ச்சி பேதங்களிலும் அல்லாமல், கனிந்த அன்பிலும் குழைவிலும் உருவாகிறது குழவி. கணவன் மனைவி இடையே ‘நான்’ மறைந்து ‘நாம்’ என்றானபோது, இருவருக்கும் பொதுவான, இருவருக்குமான குழந்தை அங்கே வந்து சேர்கிறது.
ஒரு கதைபோல் மற்றது அமையாதபடி முடிந்தவரை எழுதிப் பார்ப்பது. யாரைப் போலவும் அல்லாமல் சிந்திக்கப் பயிற்சி பெறுவது... என்றெல்லாம் நான் இயங்கி வந்தேன். முழுக்கவே எல்லாப் பாத்திரங்களும் நல்லவர்களாகவே அமைகிறாப் போல ஒரு கதை கூட நான் பண்ணி யிருக்கிறேன்.
ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு பைத்தியம் ஆகிவிட்டார் அப்பா. பேச்சு அடங்கிப் போனவர். தன் காரியத்தைத் தானே செய்து கொள்ளத் தெரியாது அவருக்கு. வீட்டில் அவர், அவரது மனைவி, ஒரு மகன். மகன்மேல் எப்பவுமே உயிர்ப் பாசம் வைத்திருக்கும் அப்பா. யார் என்ன சொன்னாலும் கேட்காத அப்பா, மகனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டார். அவன்தான் அவரைக் காலையில் குளிப்பாட்டி விடுவது. தட்டில் சோறு வைத்துக் கொண்டு ஊட்டிவிட்டு விட்டு அவன் வேலைக்குக் கிளம்புவான்.
அம்மாவும், அம்மாவின் தம்பியுமாக பையனுக்குக் கல்யாணத்துக்குப் பெண் பார்க்க ஆரம்பிப்பார்கள். பையன் தனக்குக் கல்யாணமே வேண்டாம், என்று மறுத்து விடுவான். அப்பாவைக் கடைசி வரை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். வருகிறவள் அப்பாவிடம் வேத்துமுகம் காட்டிவிட்டால் என்னால் தாங்க முடியாது, என்று பிடிவாதமாய்க் கல்யாணத்துக்கு மறுத்து விடுகிறான்.
ஒருநாள் அவன் அலுவலகம் முடிந்து வீடு வருகையில் சில புது நபர்கள் வந்திருக்கிறார்கள். பெண் வீட்டுக்காரர்கள். அவன் “மன்னிக்கவும். எனக்கு இப்பக் கல்யாணம் பண்ணிக்கிற யோசனை இல்லை” எனக் கைகூப்பி அவர்களை அனுப்பி வைக்க முயல்கிறான். உங்க வீடு, உங்க அப்பா எல்லாம் எங்களுக்குத் தெரியும் தம்பி, என அவர்கள் சொல்லும் சமாதானம் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை. அவர்கள் வருத்தமாய்க் கிளம்பிப் போய்விடுகிறார்கள்.
அன்றைக்கு இரவு அப்பா அருகில் அவன் படுத்துக் கிடக்கிறான். இந்தப் பக்கம் அம்மா. கூட அவள் தம்பி. மாற்றி மாற்றிக் கல்யாணம் பற்றிப் பேசுகிறார்கள். அவன் பிடி கொடுக்கவே இல்லை.
காலையில் பார்த்தால், அவன் அருகில் படுத்துக் கிடந்த அப்பாவைக் காணவில்லை.
பதறியடித்து தெரிந்த இடம் எல்லாம் தேடுகிறார்கள். தங்கையைப் பக்கத்து ஊரில் கட்டிக் கொடுத்திருக்கிறது. அங்கேயும் அவர் இல்லை. எங்கே போனார் என்றே தெரியவில்லை.
ஒரு வாரத்தில் அவர்கள் வீட்டுக்கு ஒரு போஸ்ட்-கார்டு வருகிறது. பெண் கொடுக்க என்று வந்து பார்த்துவிட்டுப் போனவர்கள் வீட்டு முகவரி. அப்பா அங்கே போயிருக்கிறார். பெண்ணின் ஜாதகம், பையன் வீட்டில் தந்தது, அதில் இருக்கும் முகவரியைக் காட்டிக் காட்டி வழி கேட்டபடி நடந்தே அத்தனை தூரம், ஊர் விட்டு ஊர் போயிருக்கிறார்.
மகன் பதறியோடிப் போய்ப் பெண் வீட்டை அடைகிறான். பெண்ணின் அப்பா அவனை வரவேற்கிறார். எங்க வீட்ல நாங்க என்ன சொன்னாலும் அவர் காதுலயே வாங்கிக்க மாட்டார் தம்பி. நம்ம சாந்தி சொன்னா தான் அவரு கேக்கறாரு. தினசரி அவரைக் குளிப்பாட்டறது, அவருக்குச் சாப்பாடு கொடுக்கறது... எல்லாமே என் பொண்ணு தான், என்கிறார் பெண்ணின் அப்பா.
வீட்டுக்குள் உள்ளறையில் ஜல் ஜல் என்று இங்கே அங்கே அலைபாயும் கொலுசு ஒலியை அவன் காது நிறையக் கேட்கிறான் - என முடிகிறது கதை.
ஒரு கதையை உருவாக்குவது கதைஞனுக்கு எத்தனை ஆனந்த அனுபவம் என்று ஒரு உதாரணம் காட்ட நினைத்தேன். இத்தனை அலைபாய்தலுக்கும் காரணமான திருச்செந்தாழைக்கு நன்றி.
---
பின்குறிப்பு

சில வருடங்கள், இடைக்காலத்தில் நான் என் பெயரை ஷங்கரநாராயணன் என எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு திரும்ப இப்போது ஷ மாறி ச ஆகிவிட்டது. பிரபஞ்சன் போன்ற நண்பர்களே மேடையில் இதைக் கிண்டல் செய்தார்கள். யாரிடமோ ஜோசியம் கேட்டு பெயர் மாற்றம் செய்து கொண்டுவிட்டார், என்றார்கள். உண்மையில் நடந்தது என்ன?
என்னைப் போலவே எஸ்.சங்கரநாராயணன் என இன்னொரு எழுத்தாளர் எழுத வந்தார். அவர் கதை கல்கி சிறுகதைப் போட்டியில் தேர்வும் ஆனது. அந்த எஸ்.சங்கரநாராயணனிடம், எற்கனவே நான் இதே பெயரில் எழுதுவதைத் தெரிவித்தேன். ஒருபடி மேலே போய், தேவையில்லாமல் என் மோசமான கதைகளுக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லும்படி ஆக வேண்டும், என்றெல்லாம் கடிதம் எழுதினேன். ஒரு மாதம் இரண்டு மாதம் வரை பதில் இல்லை. பிறகு ஒரு அஞ்சல்-அட்டை வந்தது. அவர் என்னைவிட மிகப் பெரியவர். தவிரவும் சர்க்கரை வியாதி அதிகமாகி ஆஸ்பத்திரியில் போராடி, தன் காலை இழந்து வீடு திரும்பி என் கடிதத்தைப் பார்த்துவிட்டு பதில் எழுதினார். வயதில் மூத்தவர் அவர். தன் சொந்தப் பெயரில் எழுதுவதை நான் எப்படி மறுக்க முடியும், என்று என் பெயரை ஷ போட்டு நான் எழுத ஆரம்பித்தேன். சுருக்கமாய் முடித்து விடலாம் - இப்போது அவர் இறந்து விட்டார். நான் என் பழைய பாணியில் எஸ்.சங்கரநாராயணன், எனவே எழுத வந்துவிட்டேன்.
91 97899 87842 / 94450 16842
storysankar@gmail.com

3 comments:

  1. சார் நீண்ட நாட்களாக உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன் அதற்கான விடை இன்று கிடைத்து விட்டது. நான் 10 அல்லது 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன என் நினைக்கிறேன். கல்கி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அந்தக் கதையின் தலைப்பு மாறாத பரிணாமங்கள்.அதை எழுதியவர் சங்கர நாராயணன் என்றும் நினைவு இருக்கிறது. அது நீங்கள் எழுதிய கதையாக இருக்குமோ என்று கேட்க நினைத்தேன். ஆனால் நீங்கள் வாங்கிய விருதுகள் சிறப்புகளில் அந்தக் க்தை இலலை. என்றாலும் அந்த ஐயம் தீரவில்லை. இன்று அறிய முடிந்தது. நன்றி. அது நினைவில் இருக்கக் காரணம்,நானும் அந்தப் போட்டிகு மடத்தனமாக ஒரு கதை எழுதி அனுப்பி இருந்தேன். திரு இனையவன் அவர்களுடைய குடும்பத் தொடர்பு எழுத்தாளர் ஆசையை உருவாக்கியது. 16வயதில் நான் பெரியவர்கள் கதையை எழுதினால் எப்படி இருக்கும்?. அது திரும்பி வந்து விட்டது. அதன் முடிவுகளை வேறு ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது. சங்கரநாராயணன் க்தையில் உஷாவை கன்னத்தில் பளாரெனறு அறைந்தான் என்ற வரிகளைத் தவிர வேறு எதுவும் ஞாபகத்தில் இல்லை.

    ReplyDelete
  2. நான் சொல்லும் இந்த சங்கரநாராயணன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் ஒரு கிராமத்தில் இருந்து எழுதிவந்தார். அவர் சிறுகதைத் தொகுப்பு ஒன்று மணிமேகலைப் பிரசுரத்தில் வெளியானது.

    ReplyDelete