சிவன்கோவில்
கவியரங்கம்
*
எஸ். சங்கரநாராயணன்
அறிவிற்
சிறந்த இந்த அவைக்குத் தலை வணங்குகிறேன். இந்தக் கூட்டத்துக்கு என்னைத் தலைமை யேற்கும்படி ‘யுகமாயினி’ திரு சித்தன் சொன்னபோது எனக்கு
ஆச்சர்யமாய் இருந்தது. சித்தம் போக்கு சிவம் போக்கு என்பார்கள். அவர் போக்கே பல சந்தர்ப்பங்களில்
ஆச்சர்யமளிப்பதாய் இருக்கிறது. இந்த வேண்டுகோளும் அப்படியே.
இதில் ஒரு
அன்பர் ஹாங்காங் தமிழ்ச் சங்க செயல்பாடுகள் பற்றிப் பேச வந்திருக்கிறார். நான்கு
நூல்கள் வெளியிடப்பட இருக்கின்றன. அதை வெளியிட நால்வர், பெற்றுக்கொள்ள நால்வர்.
அதைப்பற்றிப் பேச நால்வர், பிறகு நூலாசிரியர் உரை.... என இனி மேடையேறுகிற
எல்லாருக்கும் அவரவர் வேலை இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. எனில் என் வேலைதான்
என்ன?
இத்தனை பேரைக்
கணக்கு பண்ணி ஆளுக்கு ரெண்டுபேரைக் கூட அழைத்து வந்தால் கூட அரங்கு நிரம்பி விடும்
என்று சித்தன் ஒரு கணக்கு வைத்திருக்கலாம்... நானும் சில நபரை வரச்
சொல்லியிருந்தேன். அவர்கள் வரவில்லை. அவர்கள் இன்றைக்கு இந்த கே.கே.நகர் பக்கமே
வரவில்லை என அறிகிறேன்.
கூட்டம்
என்பதை ஒரு பேருந்துப் பயணம் என்று உருவகித்தால், பஸ்சில் பயணிகளைக் கூட்டிப்போக
இத்தனை பேச்சாளப் பெருமக்கள் இருக்கிறார்கள். அவர்கள் டிரைவர் என்றால் நான்
ஒருவேளை கண்டக்டர் என என்னைச் சொல்லிக் கொள்ளலாம். இப்போது காம்பியரிங் என்கிற ஒரு
பாணி கூட்டங்களில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அழகான யாராவது இளவயசுப் பெண்ணை
மேடையேற்றி நட்சத்திர அந்தஸ்து தந்துவிடுகிறார்கள். தமிழை தமில் என அவள்
கிளிப்பேச்சு பேசுகிறாள். என் நகையைப் பார், என் உடையைப் பார் என அவள் காதுக்கு
அல்ல, கண்ணுக்கு விருந்தளிக்கிறாள். சில சினிமாக்களில் படத்தை விட இடைவேளை
பயனுள்ளதாக அமைந்துவிடுவதைப் போல, தொகுப்பாளினி ஒரு ஆசுவாசம் தருவதாகக் கூட சில
கூட்டங்கள் அமைவது உண்டு. சுதந்திரதினம் என்றால் அநேகம் பேருக்கு மிட்டாய்தினம்
என்றே தெரியும். அதைப்போல.
இலக்கியக்
கூட்டம் என்பதற்கு சில அடையாளங்கள் (இலட்சணங்கள்) உண்டு. எழுத்தாளர்களே பேச்சாளர்களாக
அமைவார்கள். பெரும்பாலும் அவர்களே துட்டு போட்டு நடத்தும் கூட்டம். நூல் வெளியீடு.
அந்த நூலும் அவர்களே துட்டு போட்டு வெளியிட்டதாக இருக்கலாம். இந்நிலையில்
கூட்டத்துக்கு வேறாளைப் பேச அழைத்து, சில சந்தர்ப்பங்களில் அவர் ஏடாகூடமாய் ஏதாவது
பேசிவிட்டுப் போய்விடுவாரோ என்ற அச்சம் எழுத்தாளனுக்கு உண்டு. பேசாமல்
பாராட்டிவிட்டுப் போனால் நல்ல பேச்சாளன்.
ஒருமாதிரி
பயமும் பரபரப்புமாக எழுத்தாளனின் ஆரம்பப் பயணம் அமைந்து விடுகிறது.
பொதுவாக
இலக்கியக் கூட்டங்களில், மேடையிலும் கீழேயும், எழுத்தாளர்களே அமர்வர். அதிகபட்சம்
நூல் வெளியிடுகிற நபரின் நண்பர், உறவினர் என்று சிறு கூட்டம், கைதட்டத் தயாருடன்
கீழே காத்திருப்பார்கள். கீழே அமர்ந்திருக்கிற மற்ற எழுத்தாளருக்கு இந்தக்
கூட்டத்தில் கலந்து கொண்டதும் தானும் எழுத வேண்டும், புத்தகம்போட வேண்டும், அதற்கு
விழா எடுக்க வேண்டும் என்று ஒரு நமநமப்பு ஏற்படும். பஸ்சில் பக்கத்து சீட்காரன்
எதும் முறுக்கை கடக் முடக் என்று கடித்தால், எதிரில் பார்த்துக் கொண்டிருக்கிற சின்னப்
பிள்ளையின் சங்கடம் அது. இதுதவிர எந்த சமுதாயச் சிந்தனையும் கூட்டங்களில்
கிளறிவிடப் பட்டதாக நான் நம்பவில்லை. அப்படியொரு நம்பிக்கை சித்தனிடமும் இருக்க
முடியாது. ஏனெனில் அவர் 'என்னைப்' பேச அழைத்திருக்கிறார். அதிலும் தலைமை என்று
போட்டிருக்கிறார்.
சிவன்கோவில்
கவியரங்கம்
கீழே அறுபத்திருவர் –
என நான் ஒரு
கவிதை எழுதியிருக்கிறேன்.
இதெல்லாம்
எழுத்தாளனுக்கு வேண்டியிருக்கிறது. கூரைமேல் ஏறி சேவல் விடியலை அறிவிக்க
முயல்வதைப் போல. அது அறிவிக்காட்டி விடியாதா என்ன? மனுசாளுக்கு சில அடையாளங்கள்
வேண்டியிருக்கிறது. அதாவது மேல்சட்டை போட்டால் பத்தாது. அதன் மேல் ஒரு துண்டு,
அல்லது அங்கவஸ்திரம். எழுத்தாளன் சமுதாயத்தில் தனக்கு ஒரு அந்தஸ்து இருப்பதாக
பாவம், நம்புகிறான். அதற்காக உள்ளூற ஏங்குகிறான். ஆனால் அவன் மேடைபோட்டு ''நான்
விலைபோக மாட்டேன், நான் அவதார புருஷன், லட்சிய வீரன்''... என்றெல்லாம் அறைகூவ
விரும்புகிறான். அல்லது ஆள் வைத்து தன்னைப் பற்றி இப்படிப் பேசச் சொல்லி காதாரக்
கேட்கிறான். ஊரறிய கல்யாணம் பண்ணிக் கொள்கிற ஒரு சந்தோஷம் இதில் இல்லையா?
இருக்கத்தான் இருக்கிறது.
இந்த எழுத்தாள ஆசாமி ஏன் தன்னை விநோதமான ஜந்துவாக உணர வேண்டும்
என்று தெரியவில்லை. அது ஒராளின் விசித்திர குணங்களில் ஒன்றாகத்தான் தோன்றுகிறது.
மனிதரில் சிலபேர் உட்கார்ந்திருக்கையில் சும்மா இருக்க மாட்டாமல் காலாட்டிக்கொண்டு
உட்கார்ந்திருக்கிறதைப் பார்க்கலாம். சிலபேர் தனியே நடந்து போகையில் எதாவது
பொட்டுக்கடலையோ பட்டாணியோ பொட்டலத்தில் வாங்கி வழிநெடுக அரைத்துக்கொண்டே
வீடடைகிறார்கள். என்னைப் பற்றியும் சொல்ல வேண்டும். நான் என்னையே அறியாமல் சில
சமயம் எதும் பாடியபடி வீடு திரும்புகிறேன். வயசாளிகளில் சில பேர் தனக்குத் தானே
பேசிக் கொள்வதும் உண்டு.
தனக்குத்தானே
சத்தமில்லாமல் பேசிக் கொள்கிறவனை எழுத்தாளன் என்று சொல்லலாம் போலிருக்கிறது. கூட
அவன் பேசாத, அல்லது அவனுக்குக் கூடப் பேச ஆளில்லாத அநாதையாகக் கூட அவன் இருக்கக்
கூடும்.
நாய் ஏன் ஓடிக்கொண்டே யிருக்கிறது, என ஆராய்ந்து பார்த்ததாக ஒரு சேதி உண்டு. நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமில்லை - என்று நம்மிடையே பழமொழி உண்டு. கடைசியில், நாயின் இயல்பு அது, ஓடிக்கொண்டே யிருப்பது, என்று முடிவுக்கு வந்தார்களாம். ஆங்கிலத்தில் கூட சொல்வார்கள்... what is paradise for a stray dog, roadful of trees and bagful of urine.
நாய் ஏன் ஓடிக்கொண்டே யிருக்கிறது, என ஆராய்ந்து பார்த்ததாக ஒரு சேதி உண்டு. நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமில்லை - என்று நம்மிடையே பழமொழி உண்டு. கடைசியில், நாயின் இயல்பு அது, ஓடிக்கொண்டே யிருப்பது, என்று முடிவுக்கு வந்தார்களாம். ஆங்கிலத்தில் கூட சொல்வார்கள்... what is paradise for a stray dog, roadful of trees and bagful of urine.
நாய்க்கு வேலையில்ல, நிற்க நேரமில்ல - என்று வசனம். எப்படியும் மிகைபட வாழ்தல் மனுசாள்
இயல்பாகி விட்டது. தங்கப்பல் கட்டிக்கிட்டவள் பக்கத்து வீட்டுக்குப் போய் ''இஞ்சி
இருக்கா இஞ்சி''ன்னு கேட்டாளாம்... இதில் எழுத்தாளனை, பாவம் அப்பாவி அவனை
விட்டுறலாம் போலிருக்கிறது. எதிர்காலம் பத்திய கவலையும் ஆர்வக் குறுகுறுப்புமாய்
சாமானியன் போய் ஜோசியம் பார்க்கிறான். குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி... என்று
எதிலாவது மாற்றம் கிடைக்காதா என ஒரு ஆசை. மாற்றம் தேவையாய் இருக்கிறது. சிலர் அந்த
ஜோசியர் வேலையை, கணிப்பைத் தாங்களே கையெடுத்துக் கொள்கிறார்கள். அவர்களை
எழுத்தாளர் எனலாம்.
எழுத்து
என்பது கட்டிக்கொடுத்த சோறு. அது எத்தனை காலம் கெடாமல் இருக்கும் என்று
தெரியவில்லை. காலாவட்டத்தில் உணவுப் பண்டங்கள், சாப்பிடும் முறைகள்
மாறிவிடுகின்றன. மோரும் கூழும் தேனும் தினைமாவும் தின்று வளர்ந்த சமூகம்...
இப்போது பெப்சி, பிசா, ஹார்லிக்ஸ் என்கிறார்கள். என்றாலும் எழுத்தாளனுக்கு நம்ம
எழுத்து நின்று நிலைக்கும், இந்த சமூகத்தைத் தட்டி எழுப்பும், புரட்டிப் போடும்
என்றெல்லாம் தளராத தன்னம்பிக்கை. அவன் நம்பிக்கை வாழ்க. ஒரு எழுத்தாளனின் எழுத்து
இந்த சமூகத்தை அலாக்காகத் தூக்கி வேறிடத்தில் நட்டுவிடும் என்றால், இதுவரை இத்தனை
எழுத்தாளன் பிறந்திருப்பானா என்றே தெரியவில்லை. ஒருத்தனே போதும் அல்லவா?
அடுத்தாளுக்கு வேலை இல்லை அல்லவா?
மாஜிக்
நிபுணர்களா எழுத்தாளர்கள்? சாமானியன் கண்ணை மூடிக்கொண்டு கனவு கண்டால், எழுத்தாளன்
கண்ணைத் திறந்தபின் கதை எழுதுகிறான். அவனும் கனவுதான் காண்கிறான். கனவு
வேண்டியிருக்கிறது. மாற்றம் வேண்டியிருக்கிறது. அதன் விளைவே கலைகளாக
உருவெடுக்கிறது. எழுத்து, பேச்சு, சித்திரம், நிழற்படம், சிற்பம், இசை.... என அவன்
கனவின் எல்லையை விரித்து வலையாகப் பரத்துகிறான். வாழ்க்கை அதில் சிக்குமா என்று
காத்திருக்கிறான். ஆனால் அது வாழ்க்கை அல்ல. வாழ்க்கையின் கனவு. வாழ்க்கை வெளியே
இருக்கிறது. அதுவும் அவனருகே அமர்ந்து வலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
அரைத்து வைத்த
தோசை மாவு மறுநாள் பொங்குவதைப் போல எழுத்து அதிதம். மிகை. எழுதுதல் தாண்டி
பதிப்பித்தல் அல்லது அச்சுவடிவம் காட்டுதல். அதை நூலக்கி அழகு பார்த்தல். அழகான
அட்டைப்படம் அதற்கு வேண்டியிருக்கிறது. கூந்தல் நிஜம். என்றாலும் அதைப்
பின்னிவிடலாம், கொண்டை போடலாம்... திருப்பதி காணிக்கையாக்கலாம். முடி நிஜம்.
கூந்தல் கனவு என்று சொல்லலாம். அந்தக் கனவுக்கு சிலர் அழகழகான ஸ்லைட் மாட்டி அழகு
செய்கிறார்கள். சிலர் வண்ண வண்ண, வாசனை வாசனையான பூக்கள் சூடிக் கொள்கிறார்கள்...
புத்தகம் தாண்டி, அதன் கட்டுமானம் தாண்டி... ஆ அதற்கு ஒரு தலைப்பு. அழகான
அட்டைப்படம் என்று ஒரு ஓவியம். கனவுகள் அடுக்கப் படுகின்றன. அதன் உச்சம் எது?...
அதற்கு ஒரு வெளியீட்டு விழா.
மௌனத்தில்,
கனவில் உள்ளே ஊறிய விஷயம். அதை மௌனமாய்ப் பகிர்ந்து கொள்வது இதைவிடச் சிறப்பாய் அமையக்கூடும்.
எழுதப்பட்ட விஷயம் வாசிக்கப் படுவதற்காக. அதை மேடையேற்றி சத்தமாய் இடம் சுட்டிப்
பொருள் விளக்குதல் சரியா? ஆனால் வேண்டித்தான் இருக்கிறது. அகோ வரும் பிள்ளாய்,
வந்து, ஆகச் சத்தமாய் அறைகூவு. மைக்கைப் பிடித்து, மௌனத்தைப் பற்றிப் பேசுக.
மிகைகள்
வாழ்வில் தவிர்க்க முடியாமல் கலந்துவிட்டன. அதுவும் நுகர்வுக் கலாச்சாரம் சார்ந்த
இந்தக் காலத்தில் எதிலும் ஒரு மிகை. விளம்பரம். அலட்டல் வந்து சேர்ந்து விடுகிறது.
தியானம் பற்றி டி.வி. சானல்கள் தவறாமல் ஒளிபரப்புகின்றன. சாமியார்கள் ஆசி
வழங்குகிறார்கள். மௌனமே முன்வந்து பேச ஆரம்பித்த காலமாய் இருக்கிறது...
ஒரு பாரசிகக் கவிஞன் சொன்னான்.
ரோஜாக்களை
கூவி விற்கிற வியாபாரியே
ரோஜாக்களை விற்று
இதைவிட உயர்ந்த எதை
வாங்கப் போகிறாய்?
(ரோஜாவை
விற்று ஒருவேளை வீட்டுக்கு மீன் வாங்கிப் போவானாய் இருக்கும்.)
பகிர ரெண்டு
சேதிகள் ஞாபகம் வருகின்றன. ஒண்ணு நமது தொன்மையான தமிழ்மொழியின் சிறப்பு. தமிழில்
நிறுத்தற் குறிகளே கிடையாது. அநேக ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகள் இராது. கமா,
முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி, கேள்விக்குறி எதுவுமே இல்லை. எல்லாம்
மேலை நாட்டில் இருந்து இறக்குமதியான சரக்குதான். சொல்லின் மிகை என்று சொல்ல
வருகிறேன். தமிழ் இலக்கணம் கச்சிதமானது. வினைமுற்று மொழியின் இறுதியில் அமையும்.
அத்தோடு அந்த வாக்கியம் முற்றுப் பெற்றதை வினைமுற்றே அறிவித்துவிடும்.
வாசிக்கும்போது தானே முற்றுப்புள்ளியை நாம் உணர்ந்துவிடலாம். கிருஷ்ணன்
வந்தான்.... என்று சொன்னால் வந்தானோடு வாசிப்பு முற்றுப்புள்ளி அளவில் தானே
நின்றுவிடுவதை அறிக. ஆகாரம் ஓகாரம் சேர, தானே கேள்விதொனி கிடைத்து விடுகிறது.
தனியே கேள்விக்குறி தேவையே இல்லை. அதேபோல கமா. நான் அவன்வீட்டுக்குப் போனபோது அவன்
தூங்கிக் கொண்டிருந்தான், என்று சொன்னால் போனபோது என வருகையிலேயே மனம் அந்த
கமாவைக் குறித்துக் கொண்டுவிடுகிறது, கவனிக்க. எழுவாய் மொழிமுதல் அமையும். கந்தன்
வந்தான், என்பதே சரி. வந்தான் கந்தன், என எழுதுதல் தகாது. பிழை அது.
இலக்கணமீறலாக
சீதையைக் கண்டேன், என்பதை ராமனுக்கு அனுமன், கண்டேன் சீதையை, என்று சொல்வதை
கலைநுட்பமாக நாம் காண்கிறோம்.
அடுத்த சேதி
பூமணி சொன்னது. கதைகள் வாழ்க்கையின் ஆக நேர்மையான தீற்றல்களாக குறைந்த அளவு
கற்பனைச்சாயலுடன் வடிவமைதி பெற வேண்டும் என்பார் அவர். வார்த்தை அதிதம் தகாது
என்பது அவர் கருத்து. அவர் சொன்னார். கதை என்றால் தலைப்பு எதற்கு? அதுவே முகத்தில்
துறுத்திய மூக்குதான். சங்கரநாராயணன் எழுதிய கதை, என்பதே போதும். தனியே அதற்கு
மிகையாக தலைப்பு ஒட்ட வைக்கப்பட்டு நாமும் பழகிவிட்டோம்... என்கிறார் பூமணி.
சரி என்றுதான்
படுகிறது.
•
(யுகமாயினி கூட்டம். 17
சனவரி 2011 அன்று
தலைமையேற்று
வாசித்தளித்தது.)
storysankar@gmail.com 9789987842
//ஒராளின் விசித்திர குணங்களில் ஒன்றாகத்தான் தோன்றுகிறது. மனிதரில் சிலபேர் உட்கார்ந்திருக்கையில் சும்மா இருக்க மாட்டாமல் காலாட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறதை// ஹிஹிஹி... :)
ReplyDeleteஏழை படும் பாடு - சினிமா தலைப்பு ; எழுத்தாளன் படும் பாடு - இந்த கட்டுரை / தலமையுரைக்கு ஏற்ற தலைப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது . [ அது சரி மேடையில் 16 பேர்கள் - கணக்கு சரிதானே ? - எதிரில் எத்தனை பேர்கள் ? ]
ReplyDeleteit had enough of audience அப்டின்னா நம்பவா போறீங்க?
Deleteமாஜிக் நிபுணர்களா எழுத்தாளர்கள்? சாமானியன் கண்ணை மூடிக்கொண்டு கனவு கண்டால், எழுத்தாளன் கண்ணைத் திறந்தபின் கதை எழுதுகிறான். அவனும் கனவுதான் காண்கிறான். கனவு வேண்டியிருக்கிறது. மாற்றம் வேண்டியிருக்கிறது. அதன் விளைவே கலைகளாக உருவெடுக்கிறது. எழுத்து, பேச்சு, சித்திரம், நிழற்படம், சிற்பம், இசை.... என அவன் கனவின் எல்லையை விரித்து வலையாகப் பரத்துகிறான். வாழ்க்கை அதில் சிக்குமா என்று காத்திருக்கிறான். ஆனால் அது வாழ்க்கை அல்ல. வாழ்க்கையின் கனவு. வாழ்க்கை வெளியே இருக்கிறது. அதுவும் அவனருகே அமர்ந்து வலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.// இந்த வரிகளில்தான் எனக்குப் பிடித்த ஷங்கரநாராயணன் இருக்கிறார்.
Deleteஇன்னொன்றும்...... ரோஜா கனவாக இருந்தாலும் மீன் உணவாக இருக்கிறதே என்ன செய்ய?
தொடருங்கள் என்று சொல்லக் கூடாது. நீங்கள் எப்போதுமே தொடர்ந்து செய்பவர். உண்மைதானே அண்ணா?
hope to write for some 16 weeks... other than fiction this is for kalakalappu, of course with some sense!
Delete