Friday, November 23, 2018

PART 17

நிலையின் திரியாது அடங்கியான்
எஸ். சங்கரநாராயணன்

மிழுக்கு ஞானக்கூத்தனின் பங்களிப்பு பரந்து பட்டது. எனது கல்லூரி நாட்களில், 1980 களில், அவரை அறிமுகம் செய்துகொண்டது சிறு புன்னகை வரவழைக்கிற அவருடைய தெறிப்புகளில் தான். காளமேகப் புலவருக்குப் பின் சட்டென, மாபெரும் இடைவெளியில், இதோ, ஒரு rebel என மனம் பொங்கிய தருணம் அது.
தமிழ் எனக்கு மூச்சு, ஆனால் பிறர் மேல் விட மாட்டேன், என்பார் அவர். அரசியல்வாதிகளிடம் அவருக்கு ஒரு ஆக்ரோஷமான கோபம் இருந்தது. தலைவர்களேங், என்ற அவரது கவிதை மகா பிரசித்தம். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தினரால் ராமருக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடந்தது. ஞானக்கூத்தன், அதில்வந்த எத்தனை பேர் ராத்திரி மனம் குறுகுறுக்க தூக்கம் வராமல் புரண்டார்களோ, என எழுதிக் காட்டுவார். சொல்முறையில் அவருக்கு ஒரு கருத்து வீச்சு தெளிவாக இருந்தது. கடவுளையும் அவர் விட்டு வைக்கவில்லை.
      கவிதை 1
      நாயகம்
மனிதர் போற்றும் சாமிகளில்
ஒற்றைக் கொம்பு கணபதியை
எனக்குப் பிடிக்கும். ஏனெனில் வே
றெந்த தெய்வம் வணங்கியபின்
ஒப்புக் கொள்ளும் நாம் உடைக்க?
      கவிதை 2
      மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்
எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழி வாற்றலானார்:
வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;
மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்;
வேட்டியை இறுக்கிக் கொண்டு
‘விடுதலை தவறி’ என்றார்;
பெண்களை நோட்டம் விட்டு
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்;
புறப்பட்டு நான் போகச்சே
‘பாரத தேசம்’ என்றார்;
‘வாழ்விக்க வந்த’ என்னும்
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள
அரசாங்க வேலையாட்கள் அலுவலகத்தில் தூங்கி வழிகிறார்கள் என்கிற அவரது கிண்டல் நுட்பமானது. அரசுக் கட்டிலில் தூங்கிய முதல் மனிதர் மோசி கீரனார், என்பார். அம்மாவின் பொய்கள், என்கிற கிண்டல் அபாரமானது அல்லவா?
சென்னைக்காரன் என்கிற அளவில் சில இலக்கியக் கூட்டங்களிலும், நண்பர்கள் வீட்டு திருமண மற்றும் பிற வைபவங்களிலும் அவரைச் சந்திக்க வாய்ப்புகள் அமைந்தபடி யிருந்தன. எளிய நல்ல நண்பர். கவனமாய் நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டு, தன் கருத்தை அதே அமைதியுடன் சொல்வார். மொழிபெயர்ப்பு சார்ந்து நான் அவரிடம் அதிகம் முரண்பட்டேன். அவர் கருத்துக்கள் காலத்தால் முந்தையவை என்பது எனது கருத்து. எனது இந்தக் கருத்து அவருக்குத் தெரியும்.
இருபது வருடம் முன்னால் நான் ‘நிஜம்’ என்கிற சிற்றிதழ் நடத்தினேன். அதில் மரபுக் கவிதைகளுக்கான உரை போலவே, புதுக் கவிதைகளின் வசிகரத்தை முழுமையாக  உணரும்படியும், அதன் புரியாத்தன்மை சார்ந்து எடுத்துத் தரும்படியும், இதழ்தோறும் விளக்கக் கட்டுரை வெளியிட விரும்பினேன். அதை ராஜன் என்கிற புனைப்பெயரில் எழுதினார் ஜெயமோகன்.
நிஜம் இரு இதழ்கள் தான் வந்தது. அத்தோடு பொய்யாகி விட்டது. முதல் இதழில் க.நா.சு.வின் ஒரு கவிதைக்கு விளக்கம் தரப்பட்டது. அடுத்த இதழில் ஞானக்கூத்தனின் ‘நாய் குரைத்தல்’ பற்றிய கவிதை பற்றி விளக்கம். நிஜம் போன்ற நடுவான, வாசகனை மருட்டாத இலக்கிய முயற்சிகள் தேவை தான், என்றார் ஞானக்கூத்தன்.
நானும் எழுத்தாள நண்பர்கள் ஏ.ஏ.ஹெச்.கே. கோரியும், சாந்தனுமாக மாதந்தோறும் சிறந்த சிறுகதை ஒன்றுக்குப் பரிசளித்து, பன்னிரண்டு மாதங்களின் சிறந்த கதைக்கு முதல் பரிசும் அளித்து, அந்தக் கதைகளைத் தனி நூலாக்கியும் மகிழ்ந்தோம். ‘ஜோதி விநாயகம் நினைவு சிறுகதைப் பரிசுத் திட்டம்’ என அறியப்பட்டது அது. மூன்று ஆண்டுகள் நடந்தது இந்த அமைப்பு. அதன் இரண்டாவது ஆண்டு விழாவுக்கு ஞானக்கூத்தன் வந்தார். அவரது சிறப்புரை எனக்குப் பிடித்திருந்தது. கருத்துச் செறிவுடன் வளமாகப் பேசத் தெரிந்த மிகச் சில எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். வடமொழி அறிந்தவர். பேசியபடியே சிந்தனையால் எட்டு திசையிலும் பயணம் செய்வார் அவர். கேட்டுக் கொண்டே யிருக்கலாம்.
சிறுகதையின் இலக்கணம் என்று வடமொழியில் ஒரு கதையும், நகைச்சுவையின் இலக்கணம் என ஒரு வடமொழி எடுத்துக்காட்டும் தந்தார் அவர்.
(அவர் சொன்ன வடமொழிச் சிறுகதையை, இந்தத் தொடரின் வேறு பகுதியில் பகிர்ந்துள்ளேன்.)
ஒரு நல்ல நகைச்சுவையின் இலக்கணம் என்ன? அதற்கும் ஒரு வடமொழி உதாரணம் தந்தார் ஞானக்கூத்தன்.
ஒரு பிராமணன் காலையில் ஆற்றுக்குக் குளிக்கப் போனபோது ஆற்றங்கரையில் ஒரு வெறிநாய் துரத்திவிட்டது. அப்புறம் அவன் குளிக்க ஆற்றங்கரைப் பக்கம் போகவில்லை. ஒரு வாரம் ஆனது. அவன் நண்பன் வந்து அவனிடம் சொன்னான். “இனி அந்த ஆற்றங்கரைக்குக் குளிக்கப் போகலாம்”
“அந்த வெறியாய் என்னாயிற்று?”
“கவலைப்படாதே. அந்த வெறிநாய் இப்போது இல்லை. அதை ஒரு சிங்கம் தின்றுவிட்டது.”
இலக்கியத்தில் சதா வாசித்தபடி இருந்தார் ஞானக்கூத்தன். எதையிட்டும் அவரிடம் தகவல் பெறலாம். கடந்த ஏழு வருடங்களாக நான் ஆண்டுதோறும் ‘இருவாட்சி’ என்ற பொங்கல்மலர், சிற்றிதழ் பாணியில், வெளியிட்டு வருகிறேன். ஏழு ஆண்டுகளிலும் தொடர்ந்து விருப்பமாய்ப் பங்களித்தார் ஞானக்கூத்தன். அவரது சமீபத்திய கட்டுரைகளைத் தொகுத்து ‘ரூபம் பிரதிரூபம் மற்றும் பாவனை’ என தயார் செய்து கொண்டிருந்தோம். அதைப் பார்க்க அவர் இல்லை. விரைவில், அதை நூலாக்க வேண்டும்.
நண்பர்களின் இல்ல வைபவங்களுக்கு அநேகத் தரம் அவருடன் போய்வந்திருக்கிறேன். என் அருகில் அமர்ந்து உணவு அருந்துவார் அவர். சமீபத்தில் என்ன எழுதினீர்கள், என்று சம்பிரதாயம் அற்ற முறையில் அக்கறையுடன் விசாரிப்பார். வீடு காலி செய்துகொண்டு போவதில் உள்ள துக்கம் பற்றி ஒரு கதை எழுதி யிருப்பதாக நான் சொன்னேன். அவரிடம். “பிரச்னையின் அழுத்தத்தைக் கூட்டுவதற்காக, ஒரு பார்வையற்ற பெண் வீட்டைக் காலி  செய்கிறதாக எழுதியிருக்கிறேன். பார்வையற்ற பெண்ணுக்கு அந்த வீட்டோடு அதிகமான நெருக்கவுணர்வு இருக்கும் அல்லவா? பிரிவும் அதிகமாக அவளை பாதிக்கும் அல்லவா?” என்றேன்.
அவர் சொன்னதுதான் அருமையாக இருந்தது. “எனது ஒரு கவிதையில் அவங்க வீட்டைக் காலி செய்துகொண்டு போறாங்க. அந்த வீட்டு பீரோ வெளியே வர மறுக்கிறது. பலவந்தமா அதை இழுக்கறாங்க. சட்னு அது காலைக் கிழிச்சிருது…”
என்ன கற்பனை!
நிறைய உற்சாகமான தருணங்கள் நினைவில் அலை மோதுகின்றன. வயது வித்தியாசமே தெரியாமல் காத்திரமான உரையடல்களை நிகழ்த்துவார் அவர். இன்றைய இளைய தலைமுறையிடம் அவருக்கு நம்பிக்கை இருந்தது. புலம்பல் அவரிடம் கிடையவே கிடையாது.
அவரிடம் நாம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது. வயது 78. நிறைந்த வாழ்க்கை தான், கடமை எல்லாம் முடிந்த களைப்புடன் தான் இருந்தார் அவர். எனது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு (நன்றி ஓ ஹென்றி) வெளியீட்டு விழாவுக்கு சிறப்புரை தந்தார். நல் நினைவுகளுடன் விடை தர வேண்டியிருக்கிறது. காலம் இரக்கம் அற்றது. யாருக்கும் அது விட்டுக் கொடுக்காது.
தமிழின் கவிதைகளில் ஒரு உயிர்ப்பு சார்ந்த குறுகுறுப்பு தர முடிந்தது அவர் ஒருவரால் தான். வெறும் உணர்ச்சித் தெறிப்புகளோ, தத்துவ விசாரமோ அல்ல. வாழ்க்கை காணக் கிடைத்தது அவரது கவிதைகளில். தமிழுக்கே அது வழி காட்டிச் சென்றது. அவரை யாரும் பின்பற்ற முடியுமா என்பதே சந்தேகம் என்பேன். அத்தனை தனிப் பாணி அது.
முடிக்கு முன் இன்னொரு வேடிக்கை கூட ஞாபகம் வருகிறது.
ஒரு பெரிய தொலைக்காட்சி ‘காலை விருந்தினர்’ பேட்டிக்கு ஞானக்கூத்தன் போயிருந்தார். அவரைப் பேட்டி கண்டவருக்கு இலக்கியம் பற்றி லவலேசமும் தெரியாது. “நீங்க எப்பிடி எழுத்துத் துறைக்கு வந்தீங்க?” என்று கேட்டாள் பேட்டியாளினி. “நான் ஒரு  எளிய கிராமத்தில் இருந்து வந்தவன். நான் சென்னை பிரசிடென்சி கல்லூரிக்கு வந்தபோது தான் உலக இலக்கியவாதிகள், பைரன், ஷெல்லி எல்லாரையும் அறிமுகம் செய்துகொள்ள முடிஞ்சது…”
கேட்டாள் பார் பேட்டியாளினி. “அப்பிடியா? அவங்க எல்லாரும் சென்னைக்கு வந்திருந்தாங்களா?”
நல்ல நகைச்சுவைக்கு வடமொழியில் தான் உதாரணம் தர வேண்டுமா?
storysankar@gmail.com
91 97899 87842


No comments:

Post a Comment