Friday, November 2, 2018



பறவையைக் கண்டான்
விமானம் படைத்தான்
 *
எஸ். சங்கரநாராயணன்

தற்போது பரவலாக ‘அடி’ படும் சர்ச்சை ‘சர்(க்)கார்’ படக்கதை யாருடையது என்பதே. ஆகாவென தர்ம அடி சீலர்கள் விபத்து நடந்த இடத்துக்குப் போல துள்ளியோடி வந்தார்கள். பெரும் முதலீட்டில் படம் தயாராகி விட்டது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டிய அவசரம். போட்ட முதலைக் கூடிய சீக்கிரம் எடுக்க அவர்களுக்குப் பரபரப்பு. அவர்கள் பண முதலைகள். தாமதம் என்றால் அந்த முதலை இவர்களைச் சாப்பிட்டு விடும்... தயாரிப்பாளருக்கோ, நடிகருக்கோ இது, கதை யாருடையது என்பது, தெரிந்தும் இருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். அவர்களைப் பொறுத்தமட்டில் படம் வெளிவருவதில் தாமதம் கூடாது, அவ்வளவே.
இந்தக் கதையம்சம் இப்படி ஒத்துப் போவதே தற்செயலாகவும் இருக்கலாம். ஒருவேளை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும், விஜய்க்கும் முன்பே வருண் இந்தக் கதையைச் சொல்லி அவர்கள் முருகதாசிடம் இந்தப் படம் பண்ணலாம் என்றும் ஆரம்பித்திருக்கலாம்.
ஆனால் என்ன, அவர் பத்து வருடம் முன்பே தன் கதையைப் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த வழக்கும் பெரிய மனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு பரிசீலனைக்கு வந்து, முறையிட வந்த வருண் ராஜேந்திரனுக்கு சாதகமாக கே. பாக்யராஜ் கொடி யசைத்தது, ‘இந்தியத் திரையுலகில் முதல் முறையாக’ என்று சொல்லலாம் போலிருக்கிறது.
இந்த மேகங்களைக் கலைக்க இயக்குநர் முருகதாஸ், தனது பரிவாரத்தில் ஒருவரான ஜெயமோகனைப் பயன்படுத்திக் கொள்ள முன்வந்தார். படத்தில் அவரது பங்களிப்பு கணிசமாக இருக்கும், என எதிர்பார்க்கப் படுகிற நிலையில், ஜெயமோகன் மைக்கைப் பிடித்து கதை விவகாரம் பற்றி முட்டுக் கொடுக்க முனைந்ததும், அதற்குப்பின் விவகாரம் வழக்கு மன்றம் வரை போனதும், முருகதாஸ் கதை வருணுடையது என்பதாக ‘நன்றி’ என்று அவரது பெயரை முன்மொழிய ஒத்துக்கொண்டதும், ஜெயமோகனுக்கு சறுக்கலாகவே நான் உணர்கிறேன்.
அதைவிட, அடுத்த கட்டமாக, கதை என்னுடையதுதான், கதை வசனம், இயக்கம் - எல்லாம் நானே, என முருகதாஸ் அறிக்கை விட்டார்! அப்படியானால் ஜெயமோகன் பங்களித்தது என்ன, என்று ஒரு கேள்வி எழுந்து எல்லாரையும் நெற்றி சுருக்க வைத்து விட்டது. பின்னணி, உதவி (கட்டபொம்மன் சொல்வது போல, எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தல்) என்றால் இவர் முன்வந்து மைக்கைக் கையில் எடுத்து பேட்டி என்று தண்டோரா அறிவித்தது ஒவ்வாதது. ஒரு பூகம்பக் குலுக்கலாக அது நிகழ்ந்தது. அவருக்கு என்ன தேவை, புகழுக்கு முந்திக் கொள்ளும் அவசரம் தவிர? படத்தில் நான் இருக்கிறேன், என காட்டிக் கொள்கிற அவசரம் அது. அப்படி முந்தி முண்டியடிப்பவர்களைத் தான் ராக்கெட் போல சினிமா கழட்டி விட்டுவிட்டு மேலே போய்விடுகிறது.
வழக்குமன்றம் போகும் வரை முருகதாஸ் பிடி கொடுக்கவே இல்லை என்பதைச் சொல்ல வேண்டும். ஒருவேளை அவர் இந்தக் கதையை அறியாமலேயே கூட தன் இயல்பாய் ஒரு பத்திரிகைச் செய்தியோடு திரைப்படத்தின் கதைக்குப் பயணப் பட்டிருக்கலாம். அதேசமயம், படம் வெளியாகிற நேரத்தில் இந்தப் பிரச்னை அதிகம் சிக்கலாகாமல் அழுத்தத்தைத் தளர்த்த, ஒரு ‘நன்றி’ கார்டு போட்டு சுமுகமாக்கி விடலாம் எனவும் தயாரிப்பாளர் தரப்பு முடிவுக்கு வந்திருக்கலாம். அதற்கான பண பேரமும் படிந்திருக்கக் கூடும்.
என் ஆசான், தடாலடி தாண்டவராயன், டபிள்யூ சாமர்செட் மாம், “ஒரிஜினல் என்று உலகத்தில் எதுவுமே இல்லை” என்கிறார்.
இதை யார் சொன்னது சாமர்செட் மாம்?
சர் சி.வி.ராமனின் நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பை கிட்டத்தட்ட வேறொரு விஞ்ஞானி ராமன் வெளியிட்ட அதே நேரம் நெருங்கி விட்டதாகச் சொல்வார்கள். அதிர்ஷ்டம் சர் சி.வி.ராமனுக்கு இருந்தது.
நான் முருகதாசை ஆதரித்துப் பேசுவதாக இதை எடுத்துக்கொள்ளக் கூடாது. உண்மை என்ன என நான் அறியேன், என்பதை அறியத் தருகிறேன்.
ஹிட்ச்காக்கின் கதை ஒன்றும் இப்படி உரிமை கோரி ஒருவரால் வழக்கு தொடரப்பட்டது. அப்போது வேறு நாலு பேரை ஹிட்ச்காக்கே, இதே கதை தன்னுடையது, என உரிமை கோரச் சொல்லி, வழக்கு தொடரச் சொன்னதாகவும், ஒரே மாதிரி ஐடியாக்கள் பல பேருக்கு வரும், என்ற சாத்தியத்தில், முதல் வழக்கை முறியடித்ததாகவும் சொல்கிறார்கள். நான் கேள்விப் பட்டது தான்.
கோர்ட் சார்ந்து ஒரு வேடிக்கை நினைவுக்கு வருகிறது. ஒருவன் கொலை செய்துவிட்டுப் பிடிபட்டு விட்டான். அவன் கொலை செய்த ஆயுதம் எதுவும் கிடைக்கவில்லை. அவன்தான் கொலை செய்தான் என்று சாட்சியங்களும் சிக்கவில்லை. ஆனாலும் அவன்தான் கொலை செய்தவன், என்பது காவல்துறைக்கும், ஏன் நீதிபதிக்குமே தெரிகிறது.
அப்போது அந்தக் குற்றவாளியின் வக்கீல் ஒரு உபாயம் செய்தார். கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, கொலையான அந்த நபர், அவரே கோர்ட்டுக்கு வந்து நிற்கிறாப் போல ஒரு நாடகம் செய்தார். அந்த வக்கீல் வாதம் செய்துகொண்டே, “இதோ கொலையானதாகச் சொல்லும் அந்த மனிதர், அவரே வருகிறார் பாருங்கள்,” என வாசலைக் காட்டினார்.
எதிர்த்தரப்பு வழக்கறிஞரும், வழக்கை வேடிக்கை பார்க்க வந்தவர்களும், கோர்ட் ஊழியர்களும்... எல்லாருமே வாசலை ஆர்வத்துடன் பார்த்தார்கள். அந்த வக்கீல் சிரித்தபடி, “எல்லாருமே கொலையான நபர் திரும்ப வருவார் என்ற சாத்தியத்தை ஒத்துக்கொண்டார்கள் பார்த்தீர்களா, ஆகவே என் கட்சிக்காரரை விடுதலை செய்ய வேண்டும்,” என்று புன்னகை செய்தபடி அமர்ந்தார்.
நீதிபதி தீர்ப்பளித்தார், குற்றம் சாட்டப்பட்டவர் கொலை செய்தவர் தான்!
எல்லாரும் கொலையாளி வந்துவிட்டான், என்றபோது வாசலைப் பார்த்தார்கள். எல்லாருக்கும் அவன் வந்துவிடுவான் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் குற்றவாளி, அவன் வாசலைப் பார்க்கவே இல்லை. ஆகவே அவன் வரமாட்டான், என்பது அவனுக்குத் தெரிகிறது, அவன் குற்றம் செய்ததை இதன் மூலமே நாம் முடிவு செய்ய முடியும், என தீர்ப்பு அளித்தாராம்.
இது ஒரு கதை, என்றுதான் தோன்றுகிறது. இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்ன? எங்காவது சினிமாவில் சீனாக வைக்கலாம்.
அதைவிட இன்னொரு விஷயம். இது நான் கேள்விப்பட்ட கதை. இங்கே இதை நான் பதிவது, இதுவே ஒருவகையில் திருட்டு தானோ!
எனது கதைகள் பத்திரிகைகளில் நிராகரிப்பட்டு பிறகு அதே கரு வேறு எழுத்தாளரின் கதையாக வந்து நான் பார்த்திருக்கிறேன். என் கதை திரும்பி வந்து விட்டது அல்லவா? அந்தக் கதையை முன்வாசிப்பு செய்த யாராவது எழுத்தாளர் தன் நினைவில் வைத்திருந்து, அல்லது வேண்டுமென்றே இப்படி என் கதைக்கருவைப் பயன்படுத்தி யிருக்கலாம். சில சமயம், பத்திரிகையின் உதவியாசிரியர்களே கதைகள் எழுதும்போது, என் கதையின் நல்ல வரிகள் பயன்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் என் கதை திரும்பி வந்திருக்கும். “அவன் மனதில் யானைகள் புரண்டு படுத்தன,” என்கிற என் வரி, என் கதை திரும்பி ,வந்த இரண்டாவது வாரம், நான் அனுப்பி வைத்திருந்த அதே பத்திரிகையின் உதவி ஆசிரியர் எழுதிய கதையில் பார்த்திருக்கிறேன். இப்படி எத்தனையோ உதாரணங்கள் சொல்ல முடியும்.
அட அச்சானதையே தைரியமாக, தன்கருத்தாகப் பயன்படுத்துகிறார்கள். குமுதம் ஒரு இதழ் கே. பாலச்சந்தர் தயாரித்தார். அதில் நான் ஒரு கதை எழுதினேன். “ட்டி.டி.கே 60.” இது கதையின் பெயர். அதில் ஒரு பார்வையற்றவன். அவனுக்கு கேசட்டில் பாடங்களை வாசித்துக் காட்ட வரும் ஒரு பெண். அவளை அவன் காதலிக்கிறான். கேசட்டிலேயே அவன் தன் காதலைப் பதிவு செய்து, “இதை வீட்டுக்குப் போய்ப் போட்டுக் கேள்” என்று சொல்லியனுப்புகிறான். சினிமாக்காரர் கேட்ட கதை அல்லவா? காட்சிகள் அப்படி இருக்கலாம் என்று தோன்றியது. அவள் வீட்டில் போய் அந்த கேசட்டை ஓட விடுவாள். அதில் ஒரு கவிதை சொல்வேன். “அன்பே - நீ இங்கு நலம் - நான் அங்கு நலமா?”
காதலன் படத்தில் ஷங்கர் இதைப் பயன்படுத்தி யிருக்கிறார் அல்லவா? நானும் ஷங்கர்தானே என எடுத்துக் கொண்டார் போல! ஜெயிலில் பிரபு தேவா சுவரில் கரிக்கட்டியால் எழுதுவான். அன்பே நீ இங்கு நலம். நான் அங்கு நலமா.
அகத்தியனின் ஒரு திரைப்படப் பாடலிலும் இதே வரிகளை நீங்கள் கேட்டிருக்கலாம்.
முதலில் குமுதத்தில் இதை நான் எழுதியிருக்கிறேன்.
அதேபோல என் ‘தொட்ட அலை தொடாத அலை’ நாவலில் நான் ஓர் ஆங்கில சமத்கார வரியைச் சொல்லி யிருப்பேன். 13.58க்குக் கிளம்ப வேண்டிய ரயில் 02,02க்குக் கிளம்புகிறது. இதை எப்படி அறிவித்தார்கள்?
THE DEPARTURE OF THE TRAIN HAS BEEN RESCHEDULED FROM TWO-TO-TWO TO TWO-TWO.
இதைப் பிறகு ‘அன்பே சிவம்’ படதத்தில் பயன்படுத்தி விட்டார்கள்.
ஒருவேளை என் பள்ளி ஆசிரியரோ, நான் பள்ளிப் பருவத்தில் கேட்ட அளவிலோ இதுவே என்னில் புகுந்தும் இருக்கலாம். ஊரறிய தமிழறிய முதலில் பயன்படுத்தியது நான் தான்.
சில வேற்று மொழிக் கதைளை இப்படி நம்ம மொழியில் ‘லபக்’கிக் கொள்வது சர்வ சாதாரணம். வேறு பதிவுகளில் இதைப் பேசியிருக்கிறேன். சிலாள் ரொம்ப சாமர்த்தியம் என நினைத்து, அதில் ஆண் பாத்திரம் வந்தால், இதில் பெண் பாத்திரமாய் அதை மாற்றி எழுதி விடுவார்கள். எங்க வீட்டுப் பிள்ளை படம்தான், வாணி ராணி, என்று ‘ஆனந்த விகடன்’ ரவி பிரகாஷ் சொல்கிறார்.
திரைப்படப் பாடல்கள்? அவற்றில் எத்தனை உல்டா அம்சங்கள் நமக்கே அடையாளம் தெரிகின்றன.
‘கல்யாணப் பரிசு’ வசனம் போல, நீங்க எந்த மன்னார் அன்ட் கம்பெனி? - நாங்க ராஜமன்னார். - ராஜமன்னார்ல எங்க மாமாதானே மேனேஜர்... இப்படியாக சங்கடங்கள் நிகழக்கூடும். ‘கதை உலகில் ஒரு மேதை’ என ம.ந. ராமசாமி ஒரு கதை எழுதியிருக்கிறார். அதைப் பற்றியும் வேறு பதிவில் சொல்லிச் செல்வோம். (முடிந்தால் அடுத்த பதிவில்!)
ஒரு பத்து கம்பெனிகள் அளவில் நானும், எனது நண்பர்கள் திரைத்துறைக்குப் புகும் போது கதை விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். நான் முதல்-உதவிஇயக்குநராகப் பணியாற்றி, (அந்தப் படத்துக்கு நான் முதல் உதவி செய்ய வேண்டியிருந்தது.) ‘சாதிசனம்’ என ஒரு படம் வந்தது. அதில் காவல்துறை அதிகாரியாக யூனிஃபார்மில் ஒரு காட்சியில் வேறு நான் வந்தேன். விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒரு இயக்குநருக்காக விவாதத்தில் இயங்குவோம். அதில் உள்ள நல்ல காட்சிகளை வேறு படங்களில், வேறு கதைகளில் பயன்படுத்தி விடுவார்கள். கதை விவாதத்தில் உள்ள யாருக்குப் படம் கிடைத்தாலும், முன்பே பேசி தேர்த்தி வைத்திருந்த சீன்கள் எல்லாம் அப்படியே ஸ்வாகா ஆகிவிடத்தான் செய்கிறது! அந்த ஸ்வாகா நண்பன், அவனது படத்தின் கதை விவாதத்தில் நம்மை அழகாகத் தவிர்த்து விடுகிறது சகஜம் தான்!
இதுல என்ன வேடிக்கை என்றால், என் கதைகளின் அடிப்படையில் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அதில் சில எனக்கே தெரியாத அளவில் மோல்டிங் பண்ணி புதுத் தயாரிப்பாக வந்து விடுகிறது. நம்மிடம் பழைய மொபைலை வாங்கி புதுசு போலத் திரும்ப நமக்கே விற்கிறார்கள் அல்லவா, அதைப்போல. தமிழின் மிகப் பெரிய நடிகர் ஒருவர் இதை மேடையிலேயே அறிவிக்கிறார். அவர் பேசுவதைக் கேட்டுவிட்டு வந்த நண்பர்கள் என்னிடம் இந்தத் தகவலைச் சொல்கிறார்கள். “அட அந்தப் படமா? என் கதையா?” என எனக்கே ஆச்சர்யம். அதன்பின் நான் அந்தப் படத்தை கவனமாகப் பார்த்தால், ஆமாம். கதையின் மையச் சரடு என்னிடம் இருந்து எடுக்கப் பட்டிருக்கிறது. விந்து என்னுடையது. கதைக்கு டிஎன்ஏ டெஸ்ட் உண்டா தெரியவில்லை.
சாவி குழுமத்தில் இருந்து ‘சுஜாதா’ என்கிற வாரமிருமுறை இதழில் நான் ‘மைக்கேல் மறக்கவில்லை’ என ஒரு குறுநாவல் எழுதினேன். அதன் இறுதிப் பகுதியை வைத்துக்கொண்டு ஒரு பெண் எழுத்தாளர், தன் கிரைம் தொடரின் முதல் அத்தியாயத்தை அமைத்துக் கொண்டார். அந்தப் பெண் எழுத்தாளரின் வேறொரு தொடரும் இப்படி ஆங்கிலக் கதையின் தழுவல் என்பதாகப் பேர் வந்தது. அவரது ஆகச் சிறந்த தொடர்கதையே தழுவல் தான் என்கிறார்கள். அந்த மூலக் கதைகளை நான் வாசித்திருந்தால் தனியாக ஒரு பதிவு எழுதி யிருக்க மாட்டேனா?!
சரி, இப்போது என் கதை.
ஒருவனை நான்கு பேர் சேர்ந்து கொன்று விடுவார்கள். அவன் ஆவியாக வந்து அந்த நாலு பேரையும் பழி வாங்குவான். அந்த நாலு பேரையும் தனித்தனியே தொடர்பு கொண்டு, இந்த நேரம் இத்தனை மணிக்கு நான் உன்னைக் கொலை செய்யப் போகிறேன். முடிந்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள், என்று தகவலும் தருவான். அப்படியே ஒவ்வொருவராகக் கொலை செய்யப் படுவார்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகக் கொலை செய்வான். அதில் ஒருவர் யாருக்குமே தெரியாத தன் தனி பங்களாவில் போய் ஒளிவார், என்று வைத்துக் கொள்ளுங்கள், மைக்கேல் அங்கே பிரசன்னமாகி, “நீ இங்கதான் வந்து ஒளிவேன்னு எனக்குத் தெரியும்...” என்று கொலை செய்வான்.
இதை நெட்டை குட்டை என்று என்னவெல்லாமோ சர்க்கஸ் வேலைகள் செய்து எத்தனையோ விதமாகத் திரைக்கதை அமைத்துக் கொண்டால், நான் என்ன கேள்வி கேட்பது. ஆனால் அப்போது எனக்கு ஏமாந்தாப் போலவெல்லாம் இல்லை. தன் கவச குண்டலங்களைப் பிய்த்துத் தரும்போது கர்ணன் சொன்னானாமே, “கிருஷ்ணா, தானம் அளிக்கிற என் கை உயர்ந்து இருக்க, தானம் பெறுகிற உன் கை என் கைக்குக் கீழே இருக்கிறதே, அதுவே போதும்,” என்றானாமே. அந்த மனநிலை தான்.
அதைவிட, என்னிடம் இருப்பதனால் தானே காப்பி அடிக்கிறார்கள், என்கிற கர்வம் வேறு. எனது நெருங்கிய நண்பர்களே அந்த நடிகரின் வளாகத்தில் போய் சங்கமம் ஆனார்கள். சில படங்களில் கூட பணியாற்றினார்கள். அவரே என்னைக் கூப்பிட்டிருக்க வேண்டாமா? நான் போகவும் இல்லை அவரைத் தேடி. அதை இழப்பாகவும் உணரவில்லை. கேட்டுக் கூட அல்ல. கேட்காமலேயே எடுத்துக் கொண்டார், என்றால் அது என் பெருமை... என்றுதான் இன்றும் தோன்றுகிறது.
என்.ஆர். தாசனுக்கு நல்ல ‘குடுமிப்பிடி’ கிடைத்தது. கண்ணதாசன் இதழில் ‘வெறும்மண்’ என அவர் ஒரு கதை எழுதினார். வயது வித்தியாசம் அதிகம் உள்ள பெண்ணும் ஆணும் காதலிப்பதே அந்தக் கதை. கே. பாலச்சந்தர் ‘அபூர்வராகங்கள்’ என எடுத்த படத்தின் கதை தன்னுடையதில் இருந்து உருவப்பட்டதே, என அவர் வழக்கு தொடுத்தார். படம் வெளியாகி நன்றாகவும் ஓடிக் கொண்டிருந்தது. வழக்கும் பல ஆண்டுகளாக நடந்து, கடைசியில் வழக்கில், அது என்.ஆர்.தாசனின் கதைதான், என்று தீர்ப்பும் வந்தது. கே. பாலச்சந்தருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்கள். என்.ஆர்.தாசன் வழக்கில் வெற்றி பெற்றதும், கதை - என்.ஆர்.தாசன், என டைட்டில் கார்டு கொஞ்ச காலம் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அப்புறம் அது எடுக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. பட்டி விக்கிரமாதித்தன் கதை ஒன்றில் இருந்து இந்தக் கருவை எடுத்ததாக கே.பி. சொன்னார். நானும் அதைத்தான் கையாண்டேன், ஆனால் உங்களுக்கு முன்னதாகவே கையாண்டு அது ஒரு இதழில் அச்சாகவும் வந்துவிட்டது, என்பது என்.ஆர்.தாசனின் வாதம்.
‘பிறகு’ என ஒரு கதை நான் ஆனந்த விகடனில் எழுதினேன். சில சந்தர்ப்பங்களில் வழக்கமான பாணிகளைத் தவிர்த்து புதிதாக நமக்குச் சொல்ல என்ன இருக்கிறது, என ஒரு துடிப்பு வரும். அப்படி வந்த கதை தான் ‘பிறகு.’ பொதுவாக கிராமத்துப் பஞ்சாயத்துக் கதைகளில், கிராமத்து ரௌடி ஒருத்தன் ஒரு பெண்ணைக் கற்பழித்து விடுவான். பஞ்சாயத்து கூடும், அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லி அவனை வற்புறுத்தித் தீர்ப்பு வரும், அத்துடன் கதை முடிந்து விடும்.
எனது ‘பிறகு’ கதை இந்த முடிவில் தான் ஆரம்பிக்கிறது.
ஒருவனால் கற்பழிக்கப்பட்ட பெண். பஞ்சாயத்தில் அவனையே கல்யாணம் பண்ணி வைக்கப் பட்டவள். இருவருக்குமான கல்யாண வாழ்க்கை எப்படி நடக்கிறது, என்பதே என் கதை.
இதை மிகவும் ரசித்து இயக்குநர் ஆர்.சி.சக்தி தன் உதவியாளர் கணேசன் என்பவரை என்னிடம் அனுப்பி இதைத் திரைப்படமாக எடுக்க அனுமதி கேட்டு அணுகினார். அப்போது நான் எழுத வந்த புதிது. என் முதல் சிறுகதைத் தொகுதி கூட அச்சாகி யிருக்கவில்லை. வைரமுத்து நடை பயின்றபடி பாடல் எழுதுவார் அல்லவா, அந்த செனாய்நகர் திரு.வி.க. பூங்காவில் நான் கணேசனைச் சந்தித்தேன். கதைக்காக எனக்கு 2000 ரூபாய் தருவதாக ஆர்.சி.சக்தி சொல்லியனுப்பினார். “உங்க பேரைச் சொல்லி, நான் என் முதல் சிறுகதைத் தொகுதி வெளியிட்டுக்கறேன். ஒரு 5000 தாருங்கள்” என நான் சொல்லியனுப்பினேன். “சார் இது நல்ல வாய்ப்பு. பணத்தைப் பார்க்காதீர்கள்” என்று கணேசன் சொல்லிவிட்டுப் போனார்.
பிறகு நான் ஆர்.சி.சக்தியை ஐயப்பா நகர், சென்னை 111 அவரது இல்லத்தில் சந்தித்தேன். “தம்பி இது பட்ஜெட் படம். பெரிய லாபம்லாம் கிடையாது இதில். அத்தோட படம் எடுக்கறது பெரிய ரிஸ்க். ஒடுமா ஓடாதான்னே தெரியாது...” என்றெல்லாம் பேசினார் அவர். “என் கதை நல்லா யிருக்குன்னு நீங்க சொல்றதை நான் நம்பறேன் சார். படம் ஒடாதுன்னா நீங்க என்கிட்ட கதைகேட்டு வந்திருக்க மாட்டீங்க. உங்கமேல எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றெல்லாம் நானும் ‘டயலாக்’ விட்டேன். கடைசியில் பேரம் படியவில்லை.
நான் எதிர்பார்க்காதது நடந்தது. அனுராதா ரமணனின் ‘சிறை’ கதையை அடிப்படையாகக் கொண்டதாக என்னிடம் பேசிய அந்தப் படம் வெளியானது. நான் அப்படியே கை கழுவப் பட்டேன். ஒருவேளை என்னிடம் பேசும்போதே அனுராதா ரமணனிடமும் கதைபேரம் நடந்திருக்கலாம். இறுதியாக அது படிந்தும் இருக்கலாம்.
அனுராதா ரமணனின் கதையில் உள்ள கற்பழிப்பு சம்பவத்துக்குப் பின் நடக்கும் காட்சிகளுக்கு என் கதை ரொம்ப உதவியாகப் போய்விட்டது அவர்களுக்கு.
கதையின் கிளைமாக்சில் அந்த ரௌடி இறந்து விடுகிறான். அவள் தாலியைக் கழற்றி வீசுகிறாள். அது அவனது துப்பாக்கியில் போய் மாட்டித் தொங்குகிறது.
சரி. அதனால் என்ன சொல்ல வருகிறீர்கள் ஆர்.சி.சக்தி?
வேடிக்கை பார்ப்பதைத் தவிர எனக்கு வேற வழியும் இல்லை. இப்போது ஆர்.சி.சக்தியும் இல்லை. அனுராதா ரமணனும் இல்லை.
பிற்காலத்தில் நான் பாரதிராஜாவிடம் பேசி என் கதை திரைப்படமாக வரும் வாய்ப்பு இருந்தது. கே.பாலச்சந்தருடன் சிறைச்சாலை வளாகத்தில் நடக்கிறதாக, ஒரு தொலைக்காட்சித் தொடர் வர வாய்ப்பு வந்தது.
‘நாடோடித் தென்றல்’ கிளைமாக்சில் சில காட்சிகள் மாத்திரம் பாரதிராஜாவுக்கு பாக்கி யிருந்தது. அந்த பிரஞ்சு நடிகை இந்தியா வருவதில் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரம் அது. அதை முடித்து விட்டு என்னை அழைப்பதாக பாரதிராஜா சொன்னார். அருகில் இருந்த சித்ராலயா லெட்சுமணனிடம் “ஒரே ஷெட்யூல். 22 நாள்ல படத்தை முடிச்சிற முடியாதா?” என்பது போல நம்பிக்கையாய்ப் பேசினார். பிறகு அலைகள் அடங்கி விட்டன.
பாலச்சந்தரின் அந்த சிறை தொலைக்காட்சித் தொடர், “இதே மாதிரி ஜெயில் கதை எதுவும் இதுக்கு முன்னாடி வந்திருக்கான்னு, நான் (நடிகர்) சிவகுமார் கிட்டயும், (நடிகர்) ராஜேஷ் கிட்டயும் கேட்டுக்கறேன். அப்பறம் இந்தக் கதையில் நாம இறங்கலாம்” என்றார் பாலச்சந்தர். திரைப்படங்கள் சார்ந்த அபார நினைவாற்றல் உள்ளவர்கள் இந்த இருவரும்.. அப்புறம் பாலச்சந்தர், அவரே மறந்திருக்கலாம்.
நானாக எப்படி அவர்களைப் பின்தொடர்ந்து போவது என்று விட்டு விட்டேன். இது என் தவறு, என சினிமா சார்ந்த பிற நபர்கள் நினைக்கக் கூடும்.
மலையாள இயக்குநர் சேதுமாதவனுடன் சில விவாதங்கள் எனக்கு அமைந்தன. ருத்ரா படத்தின் இயக்குநர் சசிமோகன், சந்தானபாரதி, மனோபாலா, பி.சி.ஸ்ரீராம்.. என்று எல்லாரும் முகமறிந்த நல் நண்பர்களே.
இதை ஆதங்கப் பதிவாக சிலர் பார்க்கவும் கூடும். சமீபத்திய ‘சர்(க்)கார்’ சர்ச்சை தூசி கிளப்பி விட்டுவிட்டது. இருக்கட்டும். என் வாழ்வின் பக்கங்கள் இவை..
*
*
கடைசிச் செய்தி. (02.11.2018 மதியம்.) 
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை 
கே. பாக்யராஜ் ராஜினாமா செய்கிறார்.
91 97899 87842 storysankar@gmail.com

No comments:

Post a Comment