part 20
தொடுவர்மம்
படைப்பு மனநிலை
என்பது ஓர் அபூர்வத் திளைப்பு. ஒரு வரம்தான் அது. அதன்முன் உலகின் எதுவுமே துச்சம்
தான். “கவிஞனுக்கு இல்லை வறுமை, இல்லவே இல்லை,” என்பார் க.நா.சு. லேசாய் விக்கல் எடுக்கும்
ஒரு துக்கம் அந்த வரிகளில் இருப்பதாக நான் கேலியாடுவது உண்டு. என்றாலும் தான் - தன்னுலகு
என்று கலைஞனின் வாழ்க்கை ஆனந்தமயம். அதில் ஏமாற்றங்கள் இல்லை.
எழுதும்போது எழுதப்பட்ட தக்கணத்தில் வாழ்க்கை அழகாக இருக்கிறது
அவனுக்கு. அவனது வாழ்க்கை. ஆனால் எழுத்தில் சிக்கிய வாழ்க்கை வேறாக இருக்கலாம். அது
விஷயம் அல்ல. எழுத்து எழுதுகிற சுகத்துக்காகவே எழுதப்படுகிறது, என்று சொல்லி விடலாம்.
துக்கத்தை அது எழுதலாம். அதை எழுதுவதில் துக்கம் இல்லை. எழுதும்போது, காகிதத்தோடு அதைப்
பகிரும்போது அந்த துக்கம் கனம் குறைகிறது. அதாவது அந்த துக்கத்துக்கு எதிர்த் திசையில்
அவனது நடை துவங்குகிறது. ஆனால் ஒரு நல்ல எழுத்து, எழுதி முடித்தபின்னும் எழுத்தாளனை
ஆக்கிரமித்திருக்கும் சிறிது காலம்.
தொட்ட அலை தொடாத அலை, நாவலை முடித்து ஒருவார அளவில் கூட நான்
அந்த ‘சாமிவந்த’ நிலையிலேயே இருந்தேன்.
நான் என்பவன் சாமானியன் தான். ஆனால் எழுதுகையில் அவன் கலைஞன்.
கலைஞன் சாமானியன் அல்ல. எழுதும்போது அவனில் ஒரு மேன்மை வந்தடைந்து விடுகிறது. அப்போது
அவன் பயன்படுத்தும் வார்த்தைகளின் செறிவு வேறானது. ஒரு தாவரத்தின் பூத்த நிமிடம் அது.
அதுவரை இருந்த தாவரம் வேறு. பூத்த தாவரம் வேறு, அல்லவா? எழுத்து ஒரு கடந்துவந்த நிலை.
அல்லது கண்டடைந்த நிலை. வெந்த சோறு. பக்குவப்பட்ட நிலை அது.
எழுதித் தீருமா? எழுதுவதை நிறுத்திவிட முடியுமா?... எழுத
முடியாத ஏக்கம் தான் இருக்கிறது. எழுதத் தினவு கண்டு எழுத அமர முடியாத கணங்கள் சில
சமயம் அமைந்து விடுகின்றன. எழுதத் தினவு கண்ட பின், நினைவுகளின் வரிசையில் தன்னில்
தானே திளைத்து பிறகு எழுத அமரும்போது, திளைத்ததில் பாதி கூட தேறாமல் போவதும் உண்டு.
ஒரு வேகத்தில் எழுதிவிட்டு பிறகு திரும்ப வாசித்து நகாசு வேலை செய்வதும் உண்டு. எனினும்
குறைந்தபட்ச சிந்தனைக் கோர்வை இல்லாமல் எழுத அமர முடியாது. நல்ல எழுத்து-மனநிலையில்
சொற்கள் வரிசை கட்டி சேவகத்துக்கு வரும்.
சாதாரண வேளை போல் தோன்றும் ஒரு பொழுது, சட்டென தேவைப்படி
அலங்கரித்துக் கொள்ளும் ஒரு கலைஞனுக்கு. ரித்விக் கடக்கின் ‘மேக தாக தாரா’ வங்காளப்
படத்தில், ஒரு பாடகன். வானொலியில் பாடுவது அவனது கனவு. அது நிறைவேறி விடும். கடக் அவன்
வானொலியில் பாடுவதைக் காட்ட மாட்டார். ஸ்டூடியோவில் பாடிவிட்டு அவன் தன் ஊர் திரும்புகிறான்.
சின்ன கிராமம் அவனது ஊர். ஊருக்கு வெளியே அவனை பஸ் இறக்கி விட்டுவிடும். பஸ்சில் இருந்து
பொத்தென உற்சாகமாகக் குதித்து இறங்குவான் அவன். வீடு வரை, வயல் வரப்புகள் தோட்டங்களைத்
தாண்டி நடந்து வருவான். அந்தப் பயிர்ப் பச்சைகளை ரசித்தபடி, அவற்றையெல்லாம் தன் ரசிகர்
படை போலும் பாவித்து, காற்றில் அவை தலையசைக்கும்... தன்னில் கரைந்தபடி அருமையாப் பாட்டெடுத்தபடியே
வீடு திரும்புவான்.
இந்த ‘மேக தாக தாரா’ தான் கே. பாலச்சந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை.’
டைட்டிலில் அதை அவர் சொன்னாரா?
ஜெயா தொலைக்காட்சியின் காலைமலரில் என்னைப் பேட்டி கண்ட பெண்மணி
என்னை அப்படி சஞ்சாரம் செய்ய வைத்ததை முன்பே பதிவிட்டு விட்டேன். நம்மிடம் ஓர் எதிர்பார்ப்பு
என்று வருகையில் அதற்குத் தக உயரப் பறத்தல் எப்பவுமே நமக்குப் பிடித்துப் போகிறது.
பதிப்பாளர்கள் திடீரென்று தொலைபேசியில் பேசுவார்கள். எனது அடுத்த நூலுக்கு அட்டைப்படம்,
பின்னட்டையை என்ன மாதிரி பயன்படுத்தலாம், என்றெல்லாம் கேட்பார்கள். புத்தகத்தை அச்சுக்கு
எடுத்துக் கொள்ளலாம், என வரும் கடிதங்களும் அவ்வண்ணமே பெரும் உற்சாகம் அளிக்கும்.
எஸ். சங்கரநாராயணனின் குறுநாவல்கள், என ஒரு தொகுதி நிவேதிதா
பதிப்பகம் வெளியிட்டது. அட்டையில், பெரிய அளவில் மயிற்பீலி ஒன்று போட்டிருந்தார்கள்.
என்னிடம் காட்டினார்கள். நான் சொன்னேன். அதில், உற்றுப் பார்த்தால் வாசிக்கிற அளவில்,
எட்டு பாயின்டில் வெளியிடுங்கள். ‘ஒரு பறவையின் மரணம்.’
அட்டையைக் கையில் எடுத்துப் பார்க்கிறவர்களுக்கு கவனமாய்ப்
பார்த்தால் ஓர் அதிர்வு கிட்டும், என்பது என் எதிர்பார்ப்பு.
•
‘புதுவெள்ளம்’ என என் சிறுகதைத் தொகுதி. பதிப்பாளர் அட்சரா.
என் சிறுகதைத் தொகுதிகளுக்கு, தொகுப்பில் உள்ள ஒரு கதையின் தலைப்பைப் பயன்படுத்தாமல்,
சிறுகதை என்கிற அம்சத்தோடு பொருந்திப் போகிற பொதுத் தலைப்புகள் வைக்க நான் பிரியப்படுவேன்.
அநேகமாக அந்தப் பதிப்பாளர் என் நூலைப் பிரசுரத்துக்கு எடுத்துக் கொள்ளும் அந்தக் கணம்
மனசில் அலையடித்து மேலே வரும் தலைப்பாக அது அமையும். அப்படி விளையாட்டு எனக்குப் பிடிக்கும்.
கேட்ட நேரம் அந்தக் கணத்தின் தேவைக்கு என என்னைத் தகவமைத்துக் கொள்வது. வெள்ளத்தனைய
மலர் நீட்டம், நான் தாமரை.
என் முதல் சிறுகதைத் தொகுதி, ‘அட்சரேகை தீர்க்கரேகை.’ இவை
கற்பனையே. ஆனால் இவற்றைக் கொண்டு நாம் உண்மையை, நம் பூமியின் அநேக விஷயங்களை அறிந்து
கொள்ள முடிகிறது. அவ்வண்ணமே இந்தக் கதைகள், இவை என் கற்பனையே, ஆனாலும் வாழ்க்கை பற்றிய
உண்மைகளை இவற்றில் அறிந்துகொள்ள முடியும், என்கிறதாக ஒரு விளக்கம் தந்து இந்தத் தலைப்பில்
நூலை வெளியிட்டேன். உயிரைச் சேமித்து வைக்கிறேன், படகுத்துறை, சராசரி இந்தியன், ஒரு
துண்டு ஆகாயம்... முதல், சமீபத்திய, இறந்த காலத்தின் சாம்பல், யானைகளின் கானகம் வரை
அப்படியான பொதுத் தலைப்புகளே. இதே தலைப்பில் தொகுப்பில் சிறுகதை எதுவும் இல்லை.
‘புதுவெள்ளம்’ என்ற பொதுத் தலைப்பில் சிறுகதை நூல் வெளியிடுகையில்
சட்டென ஒரு பொறி. அதன் பொருளடக்கத்தில் கடைசிக் கதையை முதலில் வைத்தேன். முதலில் அது
இடம் பெறும் பக்கம். பிறகு கதையின் தலைப்பு. 151 (கடைசிக் கதையின் தலைப்பு.) இப்படி.
அதன் கீழ் அதற்கு முந்தைய கதை. 138 (கதைத் தலைப்பு) இப்படி மாற்றி அடுக்கி, தொகுப்பின்
முதல் கதையைக் கடைசியில் வைத்தேன். 006 (முதல்கதை). ஏன் அப்படி அடுக்கினேன்? புத்தகத்தின்
தலைப்பு ‘புதுவெள்ளம்.’
பொருளடக்கம் என்று போடுவதற்கு பதிலாக, “நீர்மட்டம்” என்று
குறிப்பிட்டேன்.
பதிப்பாளர் இதை கவனித்தாரா தெரியாது. அவர் அதைப்பற்றி ஒன்றும்
கருத்துரைக்கவில்லை. வாசகர்களில் யார் கவனிக்கிறார்கள் இதை, என அறிய எனக்கு ஆர்வம்
இருந்தது. பொதுவாக ஒரு கதையில் எத்தனையோ நகாசு வேலைகளையும், தத்துவங்களையும், குறியீட்டுக்
குறிப்புகளையும் பொதிந்து தருகிறோம். அத்தனையும் வாசகனுக்குச் சேருமா தெரியாது. ஒருத்தருக்கு
ஒரு விஷயம் பிடிபடும். இன்னொருவருக்கு வேறொரு விஷயம் தட்டுப்படும்... ஆக இப்படி விஷயங்களை
வாசகர்களே கண்டுபிடித்து நம்மிடம் உரையாடக் காத்திருப்பது ரொம்ப இஷ்டமான பொழுதுபோக்கு,
எல்லா எழுத்தாளனுக்கும்.
நூல் வெளியாகி கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகள் கழித்து டெல்லியில்
இருந்து ஒரு அழைப்பு. தொலைபேசியில். “ஐயா, உங்க புதுவெள்ளம்...” என்று சொல்லிச் சிரிக்கிறார்.
சொல்லுங்க சொல்லுங்க, என நான் ஊக்கப் படுத்தினேன். “பொருளடக்கம்னு போடாமல் நீர்மட்டம்னு
போட்டீங்க.” ஆமாம். சொல்லுங்க நண்பரே, என்கிறேன். “அணையில் நீர்மட்டம் பார்க்கிற ஸ்கேல்
மாதிரி, கடைசிக் கதையில் இருந்து பக்க எண்களை ஆழம் குறைஞ்சிட்டே வர்றாப்போல அடுக்கிட்டீங்களே.
அருமை. அருமை”. என மிகிழ்ச்சியுடன் பேசினார் அவர்.
அநேகமாக நான் காத்திருந்து எதிர்பார்த்திருந்த விஷயங்கள்
என்னை தாமதித்தேனும் வந்தடைந்து விடுகின்றன.
இப்படிப் பொதிந்து வைப்பது தவிர, சில கேள்விகளை உக்கிரமாக
முன் வைப்பதும் வழக்கம் தான். ஓர் அறிவுஜீவி எழுத்தாளன், பெண்ணியம் பேசுகிறவன், தன்
மனைவியை அலட்சியமாக, உங்கள் அடிமைத்தனங்களை நீங்கள் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்,
என்பதாகக் கிண்டல் செய்கிறதாக ஒரு கதை. ‘அதோ பூமி.’ ஆண்களுக்கு விருப்பமாக அடிமையாகிறீர்கள்
நீங்கள், என்கிற அவன் எகத்தாளத்துக்கு அவள் பதில் சொல்வாள். “ஒரு டெசிமலில் இருந்து
ஒன்று என ஆகப் பயணப் படுகிறீர்கள் நீங்கள், அறிவுஜீவிகள். என்றால் அந்த டெசிமலில் இருந்து
பூஜ்யம் நோக்கிப் பயணப்படுவது எத்தனை மகத்தான தியாகம், உங்களால் அதை நினைத்தே பார்க்க
முடியாது,” என்பாள். நீங்கள் மேற்கத்திய தாக்கத்தில் பேசுகிறீர்கள். இது நமது மரபு.
பூஜ்யத்தைக் கண்டவர்கள் நாம் தான். THE SUN NEVER SETS IN THE BRITISH EMPIRE. இது
உங்கள் பெருமை. ஆனால் அதைவிட முக்கியம். IT RISES IN THE EAST.
கதையை இப்படி முடிக்கிறேன்.
அவள் பேசிவிட்டுப் போன பின்பும் அந்த ‘வெற்றிடம்’ அர்த்தபூர்வமாய்
இருந்தது.
எனது சமீபத்திய சிறுகதைத் தொகுதி ’பெருவெளிக்காற்று’ நூல்
ஆய்வு நிகழ்ச்சி டிஸ்கவரி புக் பேலசில் நடைபெற்றது. தலைமையாக அமைந்து பேசிய இந்திரன்,
“சங்கரநாராயணனிடம் பழகும் போதே ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். நம்மைப் பற்றி எதாவது
கதையில் நுழைச்சி விட்ருவாரோன்னு இருக்கும். ஒருமாதிரி தொடுவர்மம் அவரது எழுத்தில்
இருக்கிறது” என்றார்.
எழுத்துலகில் ஜாம்பவான் ஒருவர் சமீபத்தில் இறந்து போனார்.
அவரது வாழ்க்கையை உள்ளது உள்ளபடி ஒரு கதையில் நான் குறிப்பிட்டிருந்தேன். அது அந்த
எழுத்தாளர் என்னிடமும், பொதுவாகப் பல மேடைகளிலும் பகிர்ந்து கொள்ளும் ஒரு விஷயம்தான்.
என்ன, அதில் தவிர்க்க இயலாமல் அவரது ‘பரிவாரம்’ பற்றிய குறிப்பில் இன்னொரு எழுத்தாளர்,
சிறுபத்திரிகையாளர் பற்றி இடம்பெற வேண்டியதாயிற்று! பிரதான கதையில் யாருக்கும் எந்தப்
பிரச்னையும் இல்லை.
நான் ஏற்புரையில் பதில் சொல்ல வேண்டியதாயிற்று. “தொடுவர்மம்
என்றெல்லாம் இல்லை நண்பரே. ஆனால் சில கருத்துகளுக்கு அழுத்தம் தர சில பிரயோகங்கள் கதையமைப்புப்படி
நான் கையெடுக்கிறேன். உதாரணமாக...” என்று ஒரு கதை சொன்னேன்.
கல்யாணம் பண்ணிக்கொண்டு, மனைவியோடு நெருங்காமல், பணம் பணம்
என்று தன் வியாபாரத்திலேயே கவனமாய் இருக்கும் கணவன். அவள் தாய்மையடைகிறாள். இதில் திகைத்துப்
போகிறான் அவன். ஆனால் அவளிடம் கேட்கத் தயக்கம் அவனுக்கு. குழந்தை பிறந்து விடுகிறது.
இனியும் கேட்காமல் எப்படி, என அவன் பேச ஆரம்பிக்கிறான்.
“இந்தக் குழந்தை, யாருடையது?”
“அப்டின்னா?”
“இந்தக் குழந்தைக்கு அப்பா யாரு?”
“ஏன் நீங்கதான்.”
அவன். “துரோகி” என்று கத்துகிறான். அவளுக்குக் கோபம் வருகிறது.
“என்ன சொல்றீங்க? கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் வேறொருத்தருடன்
குழந்தை பெத்துக்கிட்டதா, நீங்க துரோகம்னு குற்றம் சாட்டறீங்க, அதுக்கும் முந்தி...
என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதே எனக்கு நீங்க செஞ்ச துரோகம் இல்லியா?” என்கிறாள்.
இந்தக் கதை என் அலுவலகத்தில் பல பெண்களால் படித்துப் பார்க்கப்
பட்டது. அவர்கள் “கதை சரிதான். அவள் கேள்வியும் சரிதான். ஆனால் அவளது குழந்தையின் தந்தை,
யார் அது? அதுபற்றி எதுவும் கதையில் இல்லையே?” என்றார்கள். நான் சொன்னேன். “அதுதான்
இங்கே சிக்கல். அந்த வாழ்க்கை பற்றி, அவளது காதலன் பற்றி, நான் எழுத ஆரம்பித்தாலே,
நீங்கள்... பெண்கள் உட்பட, இது தவறு அல்லவா, என்று குரல் கொடுக்க சமூக அளவில் பழக்கப்
படுத்தப் பட்டு விட்டீர்கள். அதனால் தான் அந்தப் பகுதியைக் கதையில் விளக்காமல் விட்டேன்.
நீங்க இப்போது அவளது கோபத்தை மாத்திரம் பார்க்க முடிகிறது. அதை நியாயம் எனவும் உணர
முடிகிறது...”
இந்திரன் எனது நல்ல நண்பர். அவரது முதல் மொழிபெயர்ப்புத்
தொகுதி ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்.’ அன்னம் வெளியீடு. இதை வாசித்த பல ஆண்டுகளுக்குப்
பிறகு பொள்ளாச்சியில் கவிஞர் சிற்பியின் வீட்டில் அவரது நூலக அறையில் இதன் பிரதியைப்
பார்த்தேன். ஆசையுடன் கையில் எடுத்து, “நான் வைத்துக் கொள்ளவா?” என்று வாங்கி வந்தேன்.
அதன்பிறகு, கருப்பினர் கவிதைகளில் காணப்படும் மீட்சி தேடும் குரல்களும், நமது சுதந்திரத்
தேடலின் குரலும் ஒத்திசைகிற மாதிரி ஒரு கதை எழுத ஆர்வப் பட்டேன். ‘புலிக்குகை.’ புதிய
பார்வை இதழில் அது எனக்குப் பெரிய பெயர் எடுத்துத் தந்தது. மகாகவி பாரதியாரை தமிழ்நாட்டில்
இருந்து வெள்ளைக்காரன் கண்ணில் படாமல் புதுவை அழைத்துச் செல்வது ஒரு பெண், என்று சொல்லி,
அவள் விதவை என்று விவரப்படுத்தி, அவள் கர்ப்பமாய் இருக்கிறாள், வயிற்றில் குழந்தை,
எனச் சொல்லி, அவளது கணவன் சுதந்திரப் போரில் உயிர் நீத்தவன் என்பதாக அமைத்து...
“இத்தனை தியாகங்களுக்குப் பின் நீ எனக்காக இப்படி ஒரு ஆபத்தை
எதிர் கொள்கிறாயே அம்மா?” என பாரதி நெகிழ்வார். “என் கணவரின் மரணம், அதன் லட்சியம்
நிறைவேறவே நான் இந்த ஆபத்தைக் கைக்கொண்டேன்” என்பாள் அவள். “உன் குழந்தை... அதற்கும்
இந்த ஆபத்துகள் தேவையா?” என்பார் பாரதி. “சுதந்திரத்துக்கான நம் பாடுகளை அது அறியட்டும்
ஐயா. இந்த சுதந்திரம் யாருக்கு? குழந்தைக்குத் தானே?” என்பாள் அவள்.
“ஆகா பாரதமாதா...” என கை கூப்புவார் மகாகவி. “உன் மணி வயிறு.
வயிறல்ல அது. புலிக்குகை. அதில் உறங்கும் உன் குழந்தை, அதுவே நம் நாட்டின் சுதந்திரம்,”
என்பார்.
இதில் பாரதியாரின் கவிதைகளாக நான் பயன்படுத்தியவை இந்திரன்
மொழிபெயர்த்த ஆப்பிரிக்கக் கவிதைகள் சில, அவற்றை ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’
தொகுப்பில் இருந்து எடுத்துப் பயன்படுத்தி விட்டு, கதையோடு அடிக்குறிப்பும் தந்தேன்.
நன்றி இந்திரன். இப்படியொரு கற்பனையை உங்கள் நூல் எனக்குச் சிறகளித்தது.
‘புலிக்குகை’ சிறுகதை, பாவை சந்திரன் ஆசிரியராக இருந்த ‘புதிய
பார்வை’ இதழில் வெளியாகி, அதற்கு அடுத்த வாரம் அவர் கல்கத்தா தமிழ்ச் சங்கம் போயிருந்த
போது அங்கே, இந்தக் கதையை வெளியிட்டதற்காகச் சிறப்பு பாராட்டு பெற்றார்.
•
கொண்டாட்ட மனநிலை வந்து விட்டால், உள்ளம் துள்ளி எழுந்து
ஆட்டம் போடும். என் இயல்பு அது.
‘கடிகாரத்தை முந்துகிறேன்’ என் சிறுகதைத் தொகுதி. பதிப்பாளர்
தேவகி ராமலிங்கம், நிவேதிதா பதிப்பகம். “சார் பின்னட்டை... என்ன செய்யலாம்?” என்று
அலைபேசியில் காத்திருக்கிறார். “என்ன புத்தகம் அம்மா? தலைப்பு என்ன சொல்லியிருக்கிறேன்?”
என்று கேட்கிறேன். ”கடிகாரத்தை முந்துகிறேன்” என்கிறார். ”சரி. சிறு கவிதை, பின்னட்டைக்கு.
எழுதிக் கொள்ளுங்கள்.”
ஒருகால் குட்டை
ஒருகால் நெட்டை
என்றாலும்
என்ன ஓட்டம் ஓடுது
இந்த கடிகாரம்
“சரியா இருக்காம்மா?” என்கிறேன். “அருமை சார். உங்க வேகம்
ஆச்சர்யமாய் இருக்கு” என்றார் தேவகி.
இன்னொரு சந்தர்ப்பம். எழுத்தாளர் திரு சாருகேசி, என் எழுத்தின்
மேல் மிகுந்த மரியாதை கொண்டவர். நான் அதுவரை அவரைச் சந்தித்தது இல்லை. என்றாலும் என்னைப்
பற்றி என் கதைகளில் அறிந்து மகிழ்ந்தவர். கல்கி ஆசிரியர் ராஜேந்திரனிடம் என்னைப் பற்றி
நல் வார்த்தை சொல்லி, “சங்கரநாராயணனிடம் கதை கேளுங்கள். அவர் கதை கல்கியில் வர வேண்டும்”
என்று எடுத்துச் சொன்னவர்.
எனக்கு கல்கி ஆசிரியரிடம் இருந்து கடிதம். கிர்ர் என்று ராட்டினம்
ஏறிய நிலை எனக்கு. அந்தக் கொண்டாட்ட மனநிலையிலேயே, முதலில் ஒரு தலைப்பு என மனசுக்குள்
பரபரத்தேன். எனது அநேகக் கதைகளை நான் தலைப்பு முன்னமே வைத்து விடுவேன். அல்லது முழுக்
கதையையுமே, மறந்து போகாமல் இருக்க, ஒரு குறுங் கவிதை போல தலைப்பாக்கி விடுவேன். “பிரசவ
அறைக்கு வெளியே வலியுடன் ஆண்கள்’ என ஒரு தலைப்பு இப்போது உதாரணம் சொல்ல நினைவு வருகிறது.
அடுத்த அரைமணி நேரத்தில், கல்கி பத்திரிகைக்கு ஒரு கடிதம்.
“கதை கேட்டதற்கு மகிழ்ச்சி. ஸ்கேலாயுதம், என ஒரு கதை தருகிறேன்” என எழுதிப் போட்டேன்.
தலைப்பு தயார். ஒரு வகுப்பாசிரியர். வேலாயுதம். ரொம்ப கண்டிப்பான
ஆசிரியர். அதனால் பிள்ளைகள் அவருக்கு வைத்த பட்டப்பேர் ஸ்கேலாயுதம். இதற்குமேல் கதை
என்னிடம் அப்போது இல்லை.
பிறகு ஒரு மன உலாவலில் கதை தயார் செய்தேன். ஒரு விஞ்ஞான ஆசிரியர்.
அவர் பேய்க்கு பயப்படுகிறார்!
கண்டிப்பான ஆசிரியர் அவர். மறுநாள் தேர்வு வைத்திருக்கிறார்.
பசங்களுக்கு பயமாய் இருக்கிறது. அந்த கிராமத்தில் எல்லாரும் மலஜலம் கழிக்க முள்ளுக்காட்டுப்
பக்கம் போய் வருவார்கள். அன்றைக்கு இரவில் வாத்தியாரை முள்ளுக்காட்டுப் பக்கம் பார்த்த
ஒரு மாணவன். அவரை “ப்பே...” என பயமுறுத்தி விட அவருக்குக் காய்ச்சல் கண்டு மறுநாள்
பள்ளிக்கூடம் வரவில்லை. தேர்வு நடக்கவில்லை, என்பது கதை.
கல்கி ராஜேந்திரனுக்கு அந்தக் கதை ரொம்பப் பிடித்துப் போனது.
ஒருமுறை நான் ‘அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி’ நடுவராகப் போனபோது, அவர் ஸ்கேலாயுதம்
கதையைச் சொல்லி, புன்னகையுடன் கைகுலுக்கி வரவேற்றார்.
•
ஒரு கொம்புசீவிய தருணத்தில் எகத்தாளத் தாளத்தில் மனம் தன்னைபோல
கூடு கட்டி விடுவதும் உண்டு. ஒரு பத்திரிகை நண்பரின் கல்யாணத்துக்குப் போயிருந்தேன்.
பிரபலமான, (அவர் அப்படி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.) சினிமாப் பாடலாசிரியர் ஒருவர்
தோள்பூரிக்க ஒரு படையுடன் நடந்து வந்தார். வழியில் அவரை நிறுத்தி எனக்கு அறிமுகம் செய்தார்கள்.
என்னைப் பார்த்து, கல்யாண ரிசப்ஷன் வாசலில் நிற்கும் பொம்மை போல கைகூப்பி விட்டு அதே
கம்பீர நடையுடன், (அப்படி அவர் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.) என்னைத் தாண்டிப்
போனார். சினிமா என்பது அவர்களை எப்படியெல்லாம் ஆட்டம் போட வைக்கிறது, என்று தோன்றியது.
அவர் நேரே போய் மணமேடை ஏறி மணமக்களை வாழ்த்துமுன், சினிமா
பற்றி ஒரு சப்ஜெக்ட் தயார் செய்ய வேண்டும், என நான் எனக்குள் சவால் விட்டுக் கொண்டேன்.
அப்படி உருவாக்கிய கதை தான். ‘கதை திரைக்கதை வசனம் டைரக்சன்.’
என்ன கதை?
சினிமா உலகின் ஒரு பிரபலமான கற்பழிப்பு வில்லன். அவனுக்குக்
கல்யாணம். இதேபோல ரிசப்ஷன். பிரமுகர்கள் வந்து அவனை ஒலிபெருக்கியில் எப்படியெல்லாம்
வாழ்த்துவார்கள்?
சிறப்பாகக் கற்பழிப்பார், என வாழ்த்துவதா? சரியான நேரத்துக்குப்
படப்பிடிப்புக்கு வருவார், என்றால் இதற்கு சரியான நேரத்துக்கு வருவது அத்தனை முக்கியமா
என்று தோன்றாதா? ஒரே டேக்கில் முடிப்பார், என்பதா? மேடையில் எப்படியெல்லாம் அவரைப்
பாராட்டிப் பேசுகிறார்கள் என்பதே கதை.
ஒரு திரைப்படப் படப்பிடிப்பு. இவர் கற்பழிப்பு வில்லன். கதாநாயகன்
வந்து இவரிடம் இருந்து கதாநாயகியைக் காப்பாற்ற வேண்டும். படப்பிடிப்பு முடிந்தது. இப்போது
கதாநாயகன் அவளிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்கிறார். (மீ ட்டூ, குற்றச் சாட்டு எழும்
போலிருக்கிறது.) அப்போது வில்லன் அவளைக் கதாநாயகனிடம் இருந்து காப்பாற்றுகிறார். அப்போது
இருவரிடையே நட்பு மலர்ந்து, காதல் கல்யாணத்தில் முடிகிறது. இதுதான் கதை.
‘கதை திரைக்கதை வசனம் டைரக்சன்’ அவசியம் நீங்கள் வாசிக்க
வேண்டும்.
இந்திரன் பயப்பட்ட தொடுவர்மம், இதில் இருக்கிறதா?
•
storysankar@gmail.com
91 97899 87842
No comments:
Post a Comment