Friday, December 28, 2018


PART 22

கமலாம்பாள் சரித்திரம்
“கமலாம்பாள் சரித்திரத்தை வெகு ஸ்வாரஸ்யமாகச் சொல்லுவாள் அம்மா. பாப்பா பட்டியகத்து வெட்டரிவாளைப் பற்றியும், பேயாண்டித் தேவர் திருவுலாவைப் பற்றியும் பேசுவோம். இப்பேச்சு முடியும்பொழுது, நம்ம ராஜம் மாதிரி இனி யார் எழுத முடியும் என்று அம்மா சொல்லுவாள்…” ‘என் கதை,’ கட்டுரையில் பி.எஸ்.ராமையா இப்படிக் குறிப்பிடுகிறார். இதனை ஒரு முக்கியமான விமரிசனமாக நாம் கொள்ள வேண்டும். காரணம் ஓர் எழுத்தாளன் விமரிசகனை எதிர்நோக்கியல்ல, தனது இலக்கிய ஸ்தானத்தை எதிர்நோக்கியுமல்ல, வாசகனை நினைத்தே மிகுந்த ஆர்வத்துடன் தன் படைப்புகளை சபைக்கு அனுப்புகிறான். வாசகனைக் கவர்வதே, வாசகனோடு பகிர்ந்து கொள்வதே – அவனது நோக்கமும் பயனுமாக இருக்கிறது. அதுவே அவனது நிலைத்த வெற்றியுமாகிறது. விமரிசனமோ இரக்கமற்றது. அறிவு சார்ந்தது. தன்னுள் தனக்கென மிகக் கண்டிப்பான விதிமுறைகளை உள்ளடக்கியது அது. படைப்பும் ரசனையும் அப்படியல்ல; அது உள்ளன்போடு கூடிய, ஆத்ம ஒளியோடு இணைந்த, அறிவின் உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடு. எழுதுகிறவன் உணர்வுரீதியாய் இயங்குகிறான்; எழுதுமுன்னும் எழுதும்போதும் தன் பாத்திரங்களை அந்தரங்கத்தின் பிரத்யேகத்தில் முப்பரிமாணச் சித்திரங்களாய் அவன் காண்கிறான். தன் வாழ்க்கையையோ, தான் அறிந்த வாழ்க்கையையோ, அல்லது தான் அடைய விரும்பிய வாழ்க்கையையோ கொண்டு, தன்னொத்த அல்லது எதிரான குணாம்சங்களுக்கு வண்ணந் தீட்டி, தனது பாத்திரங்களுக்கு ஊனும் உயிரும் உணர்வும் தந்து உலவ விடுகிறான்.
‘கமலாம்பாள் சரித்திரம்’ இலக்கிய வடிவமும், நடையழகும், விஷயத் தீவிரமும், பாத்திரங்களின் அதீதமற்ற வண்ணங்களும் கூடிய முழுமையான நாவல். தமிழில் நாவல் இலக்கியத்தின் முன்மாதிரியாக அமைந்த இந்நாவல் இத்தனை அழகோடும் தத்துவ வீச்சோடும் கச்சிதமான உருவ அமைப்போடும் அமைந்தது ஒரு பெரிய சாதனைதான். இது 1893-ஆம் ஆண்டு ‘விவேக சிந்தாமணி’ மாத இதழில் தொடர்கதையாகத் தொடங்கப்பட்டு, இரண்டு வருடங்கள் வெளிவந்தது. 1896-இல் நூல்வடிவம் பெற்றது. இத்தொடர் துவங்கும்போது ‘அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்’ என்று பெயரிடப்பட்டது. இரண்டாவது மாதத்தில் தலைப்பு ‘ஆபத்துக்கிடமான அபவாதம்’ என்று மாற்றப்பட்டுப் பின்னர் ‘கமலாம்பாள் சரித்திரம்’ எனவே அறியப்பட்டது. நாவலுக்கு இரண்டு தலைப்புகள் வைப்பதை முதலில் ராஜமய்யரே அறிமுகம் செய்கிறார். ‘சரித்திரம்’ என்ற பதம் நல்ல ஆழமும் வீச்சும் விசாலமும் கொண்டது. உண்மையின் எதிரொலியை உள்ளடக்கிய தொனி அதற்கு உண்டு என்பதனால் மட்டும் இத்தொடருக்கு ராஜமய்யர் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்று பெயர் வைத்துவிட்டதாகக் கூறவியலாது.
அதைவிட முக்கியமான விஷயம் தொடராகப் பல பகுதிகளாக எழுதப்பட்டுள்ள இந்நாவல் – நாவலின் பின்பகுதி சற்று துரித கதியில் ஓடுவதாலும், பின் பகுதியில் காணப்படும் அடுக்கடுக்கான தொடர்ந்த சம்பவங்களாலும் இதை அறிய முடியும்* (* நாவலின் பிற்கூற்றாக ஆசிரியர் எழுதும்போது ‘இக்கதை பெரும்பாலும் பலவித மனோசஞ்சலத்தின் மத்தியில் எழுதப்பட்டதாதலால்…’ என்று குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.) – தொடர்பு சிறிதும் சிதையாமலும், தனித்தனிப் பகுதிகள் தன்னளவில் முழுமை பெற்றும், இறுதிவரையிலான அடித்தளத்தின் ஊடுசரம் சிதையாமலும், மொத்தத்தில் நூல் வடிவம் பெறுகையில் ஒரு நாவலின் ஒட்டுமொத்த உருவின் இலக்கணச் சிறப்புடனும் வியக்கத்தக்க முறையில் அமைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் இதற்குமுன் வெளியான ஸூ.வை.குருஸ்வாமி சர்மாவின் ‘பிரேமகலாவதியம்’ நாவலிலிருந்தும், பின்னர் வெளியான அ.மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திர’த்திலிருந்தும் இந்நாவல் எப்படி வேறுபட்டும் தனித்தன்மையுடனும் விளங்குகிறது என அறிவது அவசியமாகும். தம் வாழ்நாளில் – இருபத்தியாறு வருடங்கள் - இது தவிர ராஜமய்யர் என்கிற சிவசுப்ரமணிய ஐயர் வேறு நாவல்கள் எதுவும் நமக்குத் தரவில்லை. இதன்பிறகு ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதி பாதிவரை அது வளர்ந்தபோது அவர் காலமானதாகத் தெரிகிறது.
அடிப்படையில் ராஜமய்யர் மென்மையானவர். சிறந்த ரசனையுள்ளவர். கவிதையுள்ளம் நிரம்பியவர். தமிழில் வசன நடையின் முழு வீச்சையும் புரிந்துகொண்டு, புரியவைத்தவர். கம்பனிடத்தில் மனத்தைப் பறிகொடுத்தவர். அவர் தமது மிகப் பிரியமான லட்சுமி என்ற பாத்திரத்தைக் கம்பராமாயணப் பாடல்களை அபாரமாய்ப் பாடுவதாக அமைத்துக் கொள்கிறார். கம்பனையும், மாணிக்கவாசகரையும் மிகுந்த விருப்பமுடன் பல விதங்களில் பல இடங்களில் அவர் பயன்படுத்திக் கொள்கிறார். இந்த ரசனை, அடிப்படையில் நாவலின் பெரிய பலமாக அவருக்குக் கைகொடுத்தது. (படைப்பாளன் – வாசகன் என்ற இரு நிலைகள் உண்மையில் நெருங்கிய தொடர்புடையன. பொதுவாக எழுத்தாளர்கள் எல்லாருமே தங்கள் எழுத்தின் தரத்துக்கும் மேம்பட்ட வாசகர்கள் என்பதையும் இங்கு நினைவு கூர்வோம்.) காட்சியமைப்புகள் மற்றும் சம்பவ வர்ணனைகள் நிறைய இடங்களில் அமைந்துள்ளன.
இந்நாவலில் பாத்திரங்களின் குணச்சித்திர வர்ணனைகளும் சம்பவங்களின் யதார்த்த சித்தரிப்புகளும் ராஜமய்யரின் தனி ஆளுமை கொண்டவை. இவ்விதத்தில் பாத்திரங்களின் வாழ்வியல் கவர்ச்சி வாசகனைப் பெரிதும் ஈர்த்து மறக்க முடியாதபடி கட்டிப்போட்டு விடுகிறது. இந்த ஒரு திறனில் ராஜமய்யர் குருஸ்வாமி சர்மாவையும், மாதவையாவையும் பெரிய அளவில் விஞ்சி நிற்கிறார். தவிரவும் பாத்திரங்களில் எவ்வித அதிதத்தன்மையும் இலட்சிய நோக்கும் முன்னே துருத்தித் தெரியவில்லை. பாத்திரப் படைப்பு ரீதியில் எழுது முன்னரான இந்த சிந்தனையே அந்தக் காலகட்டத்தில் அவரது பெரிய வெற்றியாகும்.
தமது பாத்திரங்களை – குறிப்பாக நாயக நாயகியைச் சித்தரிக்கையில் காவிய நடையிலும் செய்யுளின் சுழிப்புகளுடனும் அற்புத நவிற்சியாய் எழுதுகிறார் குருஸ்வாமி சர்மா. நாயகன் நாயகி கலாவதியை முதன்முதலில் சந்திக்கும் கட்டத்தில் நாயகியைத் தாமே வர்ணித்துத் தோளில் ஏற்றிக்கொண்டு கூத்தாடுகிறார் குருஸ்வாமி சர்மா, அதேபோல நாயகனையும் (பிரேமகலாவதியம், அதிகாரம் 9, பக். 115,116). இது காவிய மரபாக நமக்கு அறிமுகமான விஷயந்தான். ராஜமய்யரின் உத்தி இங்கே புதுமாதிரியாய் உருவாகிறது. தமது பாத்திரங்களின் சிறப்பை விளக்க அவர் மற்ற பாத்திரங்கள் பேசுவதாகக் கோடிகாட்டுகிறார். கமலாம்பாளைப் பற்றியும் முத்துஸ்வாமி ஐயரைப் பற்றியும் வேறு இரு கிழவர்கள் இப்படிப் பேசிக் கொள்கிறார்கள்:
“முத்துஸ்வாமியும் மனிதர்கள் பேரில் அபிமானம், விதரணை இதெல்லாமுடையவன். அவன் சம்சாரம் அதைவிட. நான் போய்விட்டேனானால் ‘மாமா மாமா’ என்று செய்யும் ஆசார உபசாரம் சொல்லி முடியாது. ஊர் யோகக்‌ஷேமம் விசாரிக்கிறதும், எதிராளி நோக்கத்தைக் கண்டு நடக்கிறதும் அவளிடத்தில் நிரம்ப நன்றாயிருக்கும். இரைந்த சொல் கிடையாது…” (ப.9) என்று குணச்சித்திர வர்ணனையாக அமைவதையும் இங்கே கவனிக்க வேண்டும் (லட்சுமி ஸ்ரீனிவாசன் திருமணத்துக்குப் பிறகு இருவருடைய அங்க லாவண்யங்களையும் விவரிக்கிற கட்டம் வந்தாலும் அப்பகுதி முற்றிலும் உரைநடை வீச்சுடன் அமைந்து சிறப்பாய்ப் பொலிகிறது (பக்.75-76)).
இந்த நாவலிலேயே அவருக்குப் பிடித்த பாத்திரங்களான லட்சுமியும் ஸ்ரீனிவாசனும்தான் எத்தனை அற்புதமாகவும் மென்மையாகவும் உலவுகிறார்கள். இவர்களது கணவன் – மனைவி உறவு நிலைகளில்கூட எவ்விதச் சிக்கலையும் ராஜமய்யர் உருவாக்கவில்லை. கமலாம்பாள் – முத்துஸ்வாமி ஐயரின் முதிர்ந்த தாம்பத்தியம் சற்று உணர்வுச் சலனங்களில் ஆட்படுகிறது, கதையின் தேவைப்படியும், முத்துஸ்வாமி ஐயரின் இயல்புப் படியும். லட்சுமி – ஸ்ரீனிவாசனின் இளமைக் காதலோ முற்றிலும் கறையற்ற தூய்மையுடன் விவரிக்கப் பட்டுள்ளது. லட்சுமி பாத்திரத்தையும் ஸ்ரீனிவாசன் மூலமாகவே விளக்கத் தலைப்படுகிறார் ஆசிரியர். தம் அபிமானத்தையும் ஸ்ரீனிவாசனின் அபிமானத்தையும் இப்படியாக ஒரே சமயத்தில் சொல்லிவிட அவருக்கு முடிகிறது. ஸ்ரீனிவாசனும் அவன் நண்பன் சுப்பராயனும் லட்சுமி பற்றி இப்படி உரையாடுகிறார்கள் (பக்.54-55).
ஸ்ரீனிவாசன்: “(சிறு குளத்தில்) ஒரு அகத்தில் ‘தடிவியம்’ போட்டார்களாம். அங்கே ஒரு சிறு பெண் தம்பூர் வைத்துக் கொண்டு பாட்டுப் பாடினாளாம். கேள், கம்பராமாயணம் என்ன, தாயுமான சுவாமி பாடல் என்ன, தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி, கப்பற்பாட்டு, ஜாவளி இப்படி தினுசுக்கு ஐந்தாறு ஜமாய்த்து விட்டாளாம். ஏகக் கூட்டமாம். புருஷர்களும் பெண்களும் அதுவும் கம்பராமாயணம் பாடுகிறபோது – கங்கைப் படலத்து முதற்பாட்டுகள் போல இருக்கிறது – குதிக்காதவர்கள் பாவம். தாயுமானவர் பாடல் பாடுகிறபோது உருகி அழாதவர்கள் பாவமாம். சொல்லுகிறான் சொல்லுகிறான், அதி அற்புதமாக இருக்கிறது. சொல்லுகிறதிலேயே அவனுக்கு (சிறுகுளம் போய் வந்து சொன்ன ஸ்ரீனிவாசனின் நண்பனுக்கு) ஆனந்தம் பொங்குகிறது. அந்தப்பெண்தான் என் அகமுடையாள்.”
சுப்பராயன்: “ஓ அப்படியா! அவ்வளவு பாட்டா? உன் அகமுடையாளா! பத்து வயதுக் குட்டியல்லவோ?”
... என்று மூன்று பக்கம் நீளுகிறது உரையாடல்.
ஸ்ரீனிவாசன் இளைஞன். குழந்தை மனம் மாறாதவன். மென்மையானவன். “எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் சிறு குழந்தையானதினால் உலகத்தை அறியான். பெண்டாட்டி என்றால் ‘பாக்குக் கொடுத்த பாக்கியவதி, புஷ்பம் கொடுத்த புண்ணியவதி, சந்தனம் கொடுத்த சரஸ்வதி’ என்ற இவ்வித எண்ணந் தவிர, வேறொன்றும் அறிய அவனுக்கு வயது போதாது…” (ப.59) என்று அவனைப் பற்றி எழுதுகிறார் ராஜமய்யர்.
அவசரமில்லாத நிதானத்துடன் ‘கமலாம்பாள் சரித்திரம்’ ஆரம்பிக்கிறது. “மதுரை ஜில்லாவில் சிறுகுளம் என்ற ஒரு கிராமம் உண்டு. அந்தக் கிராமத்தின் நடுத்தெருவின் மத்தியில் ‘பெரிய வீடு’ என்ற பெயருள்ள ஒரு வீடு இருந்தது…” என்று துவங்குகிறது. கதையின் நாயகனாகிய முத்துஸ்வாமி ஐயர் தூங்கியெழுந்து உட்கார்ந்து மனைவியுடன் உரையாடும்போது தம் பெண் கல்யாணியின் (லட்சுமி) திருமணப் பேச்சை எடுக்க அவரது தம்பி பையன் மூலம் வாத்தியார் அழைத்து வரப்படுவதுடன் முதல் அத்தியாயம் முடிகிறது. சற்று பெரிய பரந்த விஸ்தாரத்தைக் காட்டி மெதுவாய்க் கதைக்குள் புகுவது ராஜமய்யரின் இயல்பாகவுள்ளது. பின்னால் ஸ்ரீனிவாசன் கல்யாணம் பற்றிச் சொல்ல வரும்போது, பக்கத்துக் கிராமங்களில் இருந்தெல்லாமான மக்களின் வருகை சுவாரஸ்யமாகச் சுட்டப்படுகிறது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து வண்டிகளிலான இரவுப் பயணம் அற்புதமாய் இன்று வெளியான நாவல் போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
“இம்முப்பது வண்டிகளும் விடிந்து பத்து நாழிகைக்குப் பயணம் புறப்பட ஆரம்பித்து, அஸ்தமிக்கப் பத்து நாழிகைக்கு ஊரைவிட்டு நகர்ந்ததையும், அவைகள் இராத்திரி இருட்டில் போகும்போது கிருஷ்ணய்யர் ‘லாந்தரை’க் கையில் பிடித்துக்கொண்டு யார் என்ன சொல்லியும் ‘உங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டுச் சேவகர்களுடன் வண்டிப் பாதையைப் பார்த்துக்கொண்டு போனதையும், நொடிகள் பார்த்து வண்டிக்காரர்களுக்கு அவர் எச்சரிக்கை கொடுத்ததையும், கள்ள ஊராகிய நகரி என்ற கிராமம் சமீபிக்கவே, ஓரிருண்ட தோப்பின் வழி போகும்போது வெளிச்சங்களையெல்லாம் மறைத்துக் கொண்டு குழந்தைகள் வாயைப் பொத்திக்கொண்டு ‘பேசாதே, பேசாதே’ என்று மெதுவாய் எல்லோரும் பேசியதையும், மரத்துக்கு மரம் கள்ளனிருப்பதாகப் பயந்து வண்டிக்காரர்கள்கூட மாட்டை இரைந்து அதட்டாமல் வண்டியை வேகமாய் விட்டதையும், அவ்வூர் தாண்டிய உடனே ‘ஜோ’ என்று மழை பெய்ததுபோல் எல்லோரும் இரைந்து பேசியதையும், வனதேவதைகள் கோவில்தோறும் எல்லோரும் இறங்கி சேவித்துச் சென்றதையும், மறுநாள் ஒரு பெரிய சோலையில் தங்கிச் சாப்பாடு செய்ததையும்…” (ப.65) சித்தரிப்பில் இடத்துக்கேற்றபடியும் உணர்வுக்கேற்றபடியும் வார்த்தைகளைக் கையாள்கிறார் ராஜமய்யர்.
தமக்கு முன்னே வேதநாயகம் பிள்ளையும், குருஸ்வாமி சர்மாவும் கவனம் செலுத்திய நகைச்சுவை கலந்த நடையை ராஜமய்யரும் தம் தேவைப்படி கையாள்கிறார். ஆனால் குருஸ்வாமி சர்மாவின் நகைச்சுவை கற்பனை சார்ந்து, கதைப்போக்கில் சுவாரஸ்யமூட்டும் அம்சமாய் மட்டுமே பயன்பட்டது. ராஜமய்யரின் நகைச்சுவை தனிச் சிறப்புடையது. பாத்திரங்களின் குணாம்சமாயும் கதையில் யதார்த்தமாயும் அது அமைவது தவிர, முற்றிலும் தமக்குச் சாதகமான ஓர் உத்தி என ராஜமய்யர் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
பிற்பாடு பல்வேறு அடுத்தடுத்த துன்பங்களைச் சந்திக்கிற முத்துஸ்வாமி ஐயரையும் கமலாம்பாளையும் ஆரம்பத்தில் காட்டும்போதே சற்றே நகைச்சுவை கலந்த அந்நியோன்யத்துடன் அறிமுகம் செய்கிறார் ராஜமய்யர். தாம் அடுத்துக் கொணரவுள்ள கதைச் சிக்கல்களாலும் அவலச்சுவை மிக்க சம்பவங்களாலும் வாசகனை இம்முறையில் அதிகம் கவரலாம் என அவர் முன்பே கணித்துவிட்டார். அத்தோடு ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளை முற்றிலும் நகைச்சுவை கலந்த பாத்திரம். சமகால விமர்சனப் பார்வையை நல்ல ஆளுமையுடன் அம்மையப்ப பிள்ளை மூலம் முன்வைக்கிறார் ராஜமய்யர். இது தவிர முத்துஸ்வாமி ஐயரின் தயாள குணத்தை விளக்கவும், பின்னால் கதையின் இறுக்கத்தில் நாவல் துரிதமும் அவலமுமாய் உருவெடுக்கும்போது வாசகனை மீண்டும் சமநிலைப் படுத்தவும், உணர்வுகளை மீறிய நிலையில் சம்பவங்களைப் புரிந்துகொள்ளவும் வைக்க, இடையே ஓர் அத்தியாயத்தில் (31) அம்மையப்ப பிள்ளையைக் கொண்டுவந்து கதையின் போக்கோடு பிணைப்பதும் நாவல் பற்றிய ராஜமய்யரின் ஞானமும் ஆளுமையும் கலந்த மேதைமையைப் புலப்படுத்தும். நாவல் என்ற வடிவமே அப்போது அறிமுகம், சரிவர அறிமுகம் ஆகாத காலத்தின் சாதனை அல்லவா இது?
இதேபோலவே நல்ல வசீகரத்துடன் வளர்ந்துவரும் ஸ்ரீனிவாசனின் திருமண வைபவங்களில் ’பாப்பா பட்டி யகத்து வெட்டரிவாள்’, ’குப்பிப் பாட்டியின் அபசகுனம்’ போன்ற ஊடே சீறி உரத்து ஒலிக்கும் வசைமொழிகள் (அத்தியாயம் 9, ப.66. முகூர்த்தம் ஆனபிறகு ஆசீர்வாதத்துக்கு எத்தனமாய் எல்லோரும் வந்திருக்கும் தருணத்தில் திடீரென்று, “ஐயோ ஐயோ ஐயோ! நீ நாசமாய்ப் போக, நீ கரியாகப் போக, உன் அப்பன், ஆத்தாள், மாமன், மச்சினன், பிள்ளை, பேரன், பேத்தி, அத்தான், அம்மாஞ்சி (அம்மான்சேய்) எல்லோரும் பூண்டோட நாசமாய்ப் போக! ஐயையோ ஐயையோ!” என்றபடி ஓர் பெரிய கூக்குரல் உண்டாக, எல்லோரும் திடுக்கிட்டு வெளியே ஓடினார்கள். (ஸ்ரீனிவாசன் பாத்திரம் ஆசிரியரின் பிரியத்தோடு உருவானது. எனவேதான் ‘முகூர்த்தம் ஆனபிறகு’ இந்த சகுனத்தடையை ஏற்படுத்துவதாக யூகிக்கலாம்.) அற்புதமான சித்திரங்களாகும்.
காலத்தால் இதற்கு முந்தைய, ஸூவை. குருஸ்வாமி சர்மாவின் ‘பிரேமகலாவதியம்’ பல விதங்களில் சிறப்பு வாய்ந்த நாவலாகும். தமிழின் ஆரம்ப நாவலாசிரியர்கள் எல்லோருமே ஓரளவு தனித்தன்மை வாய்ந்தவர்களாய் இருந்ததும் இங்கே கவனங் கொள்ளத்தக்க நல்ல விஷயம். எல்லோருமே மகிழ்வூட்டலும் அறிவூட்டலுமே நாவலின் தேவை என்கிற முடிவுடன் இயங்குகின்றனர். பெண்களைப் பற்றிய பல மோசமான பழமை பாராட்டும் மதிப்பீடுகளை முன்வைக்கிற குருஸ்வாமி சர்மா, பெண் கல்வியை ஆதரித்துப் போற்றுகிறார். கல்வி, ஆசிரியரின் இலக்கணம், பள்ளிகளின் இலட்சணம், கல்வியின் தரம், நமக்கு அவசியமான தேசாபிமானம், மத அபிமானம், மொழியபிமானம் என அவ்வப்போது உரையாடல் வடிவிலோ ஆசிரியர் கூற்றாகவோ தயங்காமல் இடைப்புகுந்து உபதேசிக்கிறார். (கதைக்களமாய் மன்னராட்சிக் காலத்தை எடுத்துக்கொண்டு தேச, மத, மொழியபிமான தற்காலப் பிரச்சினைகளை குருஸ்வாமி சர்மா பொருந்தாமல் பேசுகிறார்.) அ.மாதவையாவும் இதேபோலத் தம் கருத்துகளைத் தனி நீண்ட பத்திகளாய்த் தரத் தயங்குவதில்லை. இதனால் நாவலின் கதையோட்டமும் அது சார்ந்த சிந்தனையோட்டமும் தடைப்படுகின்றன. நாவலில் பிரச்சார தொனியின்றி கருத்துக்களை முன்வைப்பதை ராஜமய்யர் அறிந்திருக்கிறார். குருஸ்வாமி சர்மா தம் நாயகனைக் கொண்டு நாயகிக்குக் கல்வி பயிற்றுவிக்கிறார். அ.மாதவையாவும் இப்படியே. ஆனால் ராஜமய்யரோ தம் இரு முக்கியப் பாத்திரங்களை – லட்சுமியையும் கமலாம்பாளையும் – கல்வியறிவு நிரம்பியவர்களாகவே, சங்கீதமும் இலக்கியமும் (கம்பராமாயணமும்) பரிச்சயமுள்ளவர்களகவே படைக்கிறார். இது தற்செயல் அல்ல. ஏனெனில் அரைக்கல்வி யறிந்த பொன்னம்மாளும், கல்வியறிவற்ற பிற ‘வம்பர்மகா சபை’யின் பெண்களும் மோசமாகவும் கொடிய செயல்கள் புரிகிறவர்களாகவும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். கதையமைப்புப் படி பின்னால் முத்துஸ்வாமி ஐயர் தம் மனைவி கமலாம்பாளின் நடத்தையில் சந்தேகம் கொண்டு (அத்தியாயம் 24) தற்கொளை முயற்சி செய்கிறார். இதனை யதார்த்தமாய்ச் சொல்கிற பிரயத்தனத்தில் ஆறாம் அத்தியாயத்திலேயே முத்துஸ்வாமி ஐயரின் இயல்பாக, பெண்களைப் பற்றிய முத்துஸ்வாமி ஐயரின் கருத்துகளாக “பெண்களுக்கே கலகம்தான் தொழில்” என்றும், “… இப்படித்தான் கோளும் புரளியும் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்,” என்றும் ஐயர் கமலாம்பாளுடன் கோபப்படுவதாக உரையாடல் அமைக்கப்பட்டுள்ளது (ப.32). இதனோடுகூடவே முத்துஸ்வாமி ஐயரின் பெண்களைப் பெருமை பாராட்டாத இயல்பினையும் கூறுகிறார் ஆசிரியர். “பெண்களே கெட்டவர்கள் என்பது அவர் (முத்துஸ்வாமி ஐயர்) அருமையாகப் பாராட்டி வந்த அபிப்பிராயங்களில் ஒன்று.” (ப.33)
இதனால் தம் கதைப் பின்னலை இப்படி இறுக்கமாயும் யதார்த்த பூர்வமாயும், தருக்க முறைப்படியும் பின்னால் அமைத்துக்கொள்கிற ராஜமய்யரின் ஆழ்ந்த கவனம் பெரிதும் மதிக்கத் தக்கதா யிருக்கிறது. தொடராக அநேக பகுதிகளாக எழுதப்பட்ட போதிலும் இந்த சிந்தனை நேர்த்தி ராஜமய்யரின் பலம். அவரை இலக்கிய ஆளுமையுடன் அது அடையாளஞ் சொல்லுகிறது. இந்த இடத்தில் பெண்களைப் பற்றிய தம் அபிப்பிராயங்களாக (மேற்கூறிய ‘கெட்டவர்கள்’) அதே விஷயத்தைச் சொல்லாததையும் கவனிக்க வேண்டும். மாதவையாவும், குருஸ்வாமி சர்மாவும் ‘கொள்கை விளக்க’க் கதைகளை எழுதினார்கள். உத்திகள் என்று பூடகமாய்ச் சொல்வதை அவர்கள் விரும்பவில்லை. அதை அவர்களின் இயல்பாகவே கொள்ளவேண்டும். ராஜமய்யரின் உத்திரீதியான ஞானமே நமது இப்போதைய கவனமாகும்.
ஒரு வேடிக்கையும் நாம் காண முடிகிறது. ராஜமய்யரும், மாதவையாவும் ஒரே கல்லூரியில் (பிரசிடென்சி, சென்னை) படித்தவர்கள். ஒரே காலம் தான். ஒருவரை மற்றவர் இலக்ககிய ருசி அளவில் அறிந்தவராய்த் தான் இருப்பார்கள். கமலாம்பாள் சரித்திர முன்னுரையில ராஜமய்யர், தாமே முதலாவதாக நாவல் என்கிற வகைமையைக் கைக்கொள்வதாகக் குறிப்பு தருகிறார். மாதவையா நாவல் காலத்தால் பிந்தியது. ஆனால் மாதவையா தனக்கு முன்னால் ராஜமய்யர் ஒரு நாவல் எழுதியதைக் குறிப்பிடவே இல்லை. தன் நாவலே முதலாவது என்பது போல அவர் பதிவு செய்கிறார்.
அதேபோலவே படிக்கிற காலத்திலேயே ‘இளமை மணம்’ தவறு என்று குருஸ்வாமி சர்மாவும் (கல்யாணம் செய்ய வேண்டிய முறைமை அடியோடு தப்பிப் போய்ச் சிறுவயதிலேயே படிப்பாவதின் முன் செய்வதும், அதனால் சிறுவர்கள் கெடுவதுமாயிருக்கிறது (பிரேமகலாவதியம், ப.161)) மாதவையாவும் (இல்லறத்தில் அதிக ஈடுபாடு கொண்டதால் கோபாலன் தேர்வில் தோற்றுப் போவதாக மாதவையா ‘பத்மாவதி சரித்திரத்’தின் கதையையே அமைத்துக் கொள்கிறார்.) வலியுறுத்துகிறார்கள். இதை ராஜமய்யர் ஏற்றுக் கொள்ளவில்லை. இளமை மணத்தை அவர் ஆதரிக்கிறார். ஸ்ரீனிவாசன் – லட்சுமியின் ஐந்து நாள் கல்யாணத்தையும் வைபவ ரீதியாய் மிகுந்த ஆர்வத்துடன் விஸ்தரித்து விவரிக்கிறார் அவர். அதுவும் காணாமல், பின்பகுதியில், ‘நமக்குள் தற்காலத்தில் சில சிறுவர்கள் ஸ்திரீகள் இருபது வயதுக்கு மேற்பட்டு மணம் செய்தால்தான் புருஷனுடன் சுகித்து வாழக்கூடும் என்று நினைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் – லட்சுமி இவர்களுடைய நேசத்தை அறிந்த எனக்கு அப்படித் தோன்றவில்லை’ (ப.155) என்று தனியாகவே, வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார்.
இந்நாவலுக்கு ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்ற தலைப்பு பொருத்தம் தானா என்பது தவிர, தமக்கு முந்தைய நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரத்’தைப் பார்த்து இத்தலைப்பு வைத்தாரா என்பதும் யோசிப்பது தவிர, கதை முழுக்க முத்துஸ்வாமி ஐயரை மையமிட்டே இறுதிவரை ஓடியும், பெண்கள் மேலும், தமது இரு (கமலாம்பாள், லட்சுமி) பெண் பாத்திரங்கள் மீதான அபிமானத்தினாலும் இத்தலைப்பை அவர் சூட்டியிருக்கலாம் என்று படுகிறது. கதையமைப்புப் பிரகாரம் ‘அநியாய அல்லது ஆபத்துக்கிடமான அபவாதமான’ மனைவியை முத்துஸ்வாமி ஐயர் சந்தேகிப்பதை ராஜமய்யர் முக்கியமான திருப்பமாக அமைத்துக் கொண்டாரெனினும், அவரது சிந்தனை வீர்யமும் ஞானமும் இந்த ‘சந்தேகத்தை’ அவ்வளவாக மதிக்கவில்லை. இதனை அவரது மேதைமையின் உச்சமாக நாம், அந்தக் காலகட்டத்தை வைத்துப் பாராட்ட வேண்டும். கதையின் மையம் எது என்பதை அவர் தெளிவாகவே வரையறுத்துக் கொண்டிருக்கிறார். பிற்பாடு பின்பகுதிகளில் இந்த ‘சந்தேகத்தை’ அவர் வளர்த்தவுமில்லை; ஓரிடத்திலேனும் பிரஸ்தாபிக்கவுமில்லை. தலைப்பினையும் அதனாலேயே ‘அபவாதம்’ என்பதைக் ’கமலாம்பாள் சரித்திரமா’ய் அவர் மாற்றியிருக்கக்கூடும்.
குருஸ்வாமி சர்மா பாத்திரங்களை – அதன் குணாம்சங்களை விளக்க ஓர் உத்தியைக் கொண்டாடினார். பாத்திரங்களின் இயல்புப்படி அவற்றுக்குப் பெயர் வைத்தார். பிரேமநாதன், கொடுமுகி, ஆத்திரேயன், தயாநாதர் – இப்படி. இந்த உத்தியின் யதார்த்தமற்ற செயற்கைத்தன்மை ராஜமய்யரிடம் வேறு பாணியில் பரிணமிக்கிறது. நம் வழக்கப்படி பாட்டியின் பெயர் (லட்சுமி) வைக்கப்பட்டவள் கல்யாணி என்று அழைக்கப்படுவது தவிர, பிற பாத்திரங்களுக்கு நகைச்சுவை அம்சமாய் ராஜமய்யர் எள்ளல் தொனியில் பட்டப் பெயர்கள் வைக்கிறார். பாப்பாபட்டியகத்து வெட்டரிவாள், வம்பர் மஹாசபை அக்கிராசனாதிபதி, சம்சார ஸ்திரீகள், தமிழ் வித்துவான் ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளை, தெனாலிராமன், லேடி, பெருந்தீனி வைத்தி, மாம்பழம், ஷோக் சங்கரன் – இப்படி. இதனால் பாத்திரங்கள் வாசகர்களால் ஒரு நெருக்கத்துடன் அடையாளங் காணப்படுகிறார்கள். அ.மாதவையாவும் இதை ரசித்து பள்ளி மாணவர்களைப் பட்டப்பேர் வைக்கும் பழக்கமுடையவர்களாய்ச் சித்தரிக்கிறார் (குண்டுமணி நாரதர், சிச்சீ நாணு – பத்மாவதி சரித்திரம். பக்.39, 40). அவரே பிற்பாடு சங்கு என்ற பாத்திரத்துக்கு அவுட்டுப்புலி டால் – ஜோடி ஸபாஷ் சங்கரையர் என்ற பட்டமளிக்கிறார்.
அதேபோலவே சுப்ரமண்ய ஐயரை ஏமாற்றி, அவருக்கு வசிய மருந்து தரப் பொன்னம்மாள் வரும்போது மெட்டிகள் ‘பராக் எச்சரிக்கை பராக் எச்சரிக்கை’ என்று கட்டியங்கூறுவதாய் ராஜமய்யர் (ப.90) வர்ணிக்கிறார். இதே பாணியை மாதவையாவும் பத்மாவதியின் கரிக்கிட்டுவுடனான திருமணத்துக்கு முன்பாக (அது நடக்கவில்லை. கரிக்கிட்டு கதைப்படி திருமணத்துக்கு முன் செத்துப்போனான்.) அலங்காரங்களைச் சொல்லி அவள், நடக்கையில் சில நகைகள் ’ஐயோ ஐயோ’ என்றும், சில நகைகள் ‘பாவம் பாவம்’ என்றும் முறையிடுவதாய் வர்ணிப்பதும் (பத்மாவதி சரித்திரம், அத்தியாயம் 10, ப.59) குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இது நிற்க, வேதநாயகம் பிள்ளையும், மாதவையாவும் ‘சரித்திரம்’ என்று கூறி முனைவர் சுயவரலாறு போலவும், பின்னவர் வாழ்க்கை வரலாறு போலவும் தம் நாவலைப் படைக்கலாயினர். மாதவையா அது நடந்த கதை என நிறுவவும் பிரயத்தனிக்கிறார் (அந்த வருஷம் ஆடி மாதம் பன்னிரண்டாந்தேதி திங்கட்கிழமையன்றிரவு, திருநெல்வேலி வடக்குக் கோபுர வாயிலில் நரசிங்கராயர் நாடகக் கொட்டகை தீப்பட்டதும், அதிலுண்டான உயிர்ச் சேதமும் உலகமறிந்த விஷயமே… (அத்தியாயம் 28,ப.138).
இதில் ராஜமய்யர், கமலாம்பாள் இராமனை அடைவதையும், முத்துஸ்வாமி ஐயர் சிவனைச் சென்றடைவதையும் கவனித்தால் சைவர் வைஷ்ணவர்களின் தேவையற்ற விரோதம் நீக்கி ஒற்றுமையை வலியுறுத்த ஆசிரியர் முயன்றதாகவும் கொள்ளலாம்.
அ.மாதவையா பெண் கல்வியை அநேகமாகத் தமது எல்லாப் படைப்புகளிலும் வலியுறுத்தி வருகிறவர். ‘பத்மாவதி சரித்திர’த்தின் சிறப்பான பகுதிகளில் ஒன்று பத்மாவதி நாராயணனுக்குக் குறைக் கல்வியுடன் தப்பும் தவறுமாய்க் கடிதம் எழுதும் பகுதியாகும். ‘யெந்நோட,அத்தான் நாணு உக்கு னாந்னம்ஷ்காறம் பன்நறேன். இங்கே, னான் சவிக்கமாயிருக் கென்னீயும் அத்தனும் சவிக்கமா யிருக்கேளா.’ (என்னுடைய அத்தான் நாணுவுக்கு நான் நமஸ்காரம் பண்ணுகிறேன். இங்கே நான் செளக்கியமாயிருக்கிறேன் நீயும் அத்தையும் செளக்கியமா யிருக்கிறீர்களா?.. பத்மாவதி சரித்திரம், ப.36)
ரசனைக்குரிய இதே முறைக் கடிதத்தை ராஜமய்யர் மாதவையாவுக்கு முன்பே கையாள்கிறார். ஸ்ரீனிவாசனின் மூன்றாம் நாள் கல்யாணத்தன்று லட்சுமி எழுதியதாய் ஒரு குறும்புப் பெண் தானே எழுதி ஸ்ரீனிவாசனிடம் கொடுக்கிறாள். “…எந்நை இடிக்கச் சொல்லிருக்கோ. இந்நமே அப்படி இடிக்கப்படாது. எல்லா குட்டிகளுக்கும் எதெரிக்க எந்நோடு பேசலாமா, சீ இது எந்ந லெட்சைக் கூத்து-” ப.80)
இப்படித் தமக்கு முன் வந்த நாவலைக் கடந்தும் தம் அடுத்து வந்த நாவலைப் பாதித்தும் ராஜமய்யரின் நாவல் அமைந்துள்ளதை அறியலாம். இளமைப்பருவ விளையாட்டுகள் பற்றியும், கதைப் போக்கிலான ஒரு சம்பவமாய்த் தீவிபத்து ஒன்றினையும் விரிவாய் குருஸ்வாமி சர்மா எழுதுகிறார் (பிரேமகலாவதியம், அதிகாரம் 3, பக்.29-35 மற்றும் (தீ விபத்து வர்ணனை - அதிகாரம் 6, பக்.78,79). ராஜமய்யரின் நாவலிலும், அவசியம் என்று கூறமுடியாமல், ஸ்ரீனிவாசன் ‘பலீன் சடுகுடு’ விளையாடுவதும், (இங்கிலீஷ் படிப்பு வர வர, நம்முடைய விளையாட்டுக்களைக்கூட நாம் மறந்து விட்டோம், ப.121) வைக்கோற்போர் தீப்பற்றி எரிவதும் (ப.95) இடம் பெறுகின்றன. இதேபோல மாதவையாவும் தம் நாவலில் போகிற போக்கில் நாடகக் கொட்டகை தீப்பற்றி எரிந்ததாய்ச் (பத்மாவதி சரித்திரம், அத்தியாயம் 28, ப.138 முதல் பாகம்) சொல்லிச் செல்கிறார்.
குருஸ்வாமி சர்மாவின் ‘பிரேமகலாவதியத்தில்’ ராஜமய்யரைப் பெரிதும் பாதித்தது நரபலியாகவே தோன்றுகிறது. குருஸ்வாமி சர்மா நரபலி பற்றியும் அதன் களமான காளி கோவில் பற்றியும் விரிவாக எழுதியும், தாமே நரபலியைக் கண்டித்தும் குறிப்பிடுகிறார் (பிரேமகலாவதியம் – அதிகாரம் 4, பக்.41-45 மற்றும் அதிகாரம் 8, பக்.111, 112). ராஜமய்யரின் நாவலிலும் நரபலியின் களமான காளி கோவில் பற்றியும் விவரங்கள் இடம் பெறுகின்றன (ப.141).
மேற்கூறியவற்றால் எந்தவொரு எழுத்தாளரையும் நாம் தனியே உயர்த்தியோ விமர்சித்துப் பேசுவதாகவோ கொள்ளல் கூடாது. தம் காலகட்டத்தில் மூவருமே சந்தேகமில்லாமல் சாதனை புரிந்தவர்கள் என்பது தெளிவு. தவிரவும் நாவல் என்கிற முற்றிலும் புதிய அம்சத்தை இவர்கள் கையாண்டு வெற்றி பெற்றதே தனிச் சிறப்பாய்ப் போற்றப்பட வேண்டியதாகும்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளையும், அ.மாதவையாவும், ராஜமய்யரும் தமது நாவலுக்கு ‘சரித்திரம்’ என தலைப்பு வைத்தபோது, ஸூ.வை. குருஸ்வாமி சர்மா, நாயகன் பிரேமநாதன், நாயகி கலாவதி இணைந்த அளவில் பிரேமகலாவதியம், (பிரேம கலாவதி இசம்) என நாவல் தலைப்பைப் புதிதாக சிந்தித்ததைப் பாராட்டாமல் எப்படி?
‘கமலாம்பாள் சரித்திரம்’ அமைப்பில் மிகுந்த தனித்தன்மை கொண்டது. இன்றுவரையும் (2018 திசம்பர்) கருவினால் இதனோடு பேசக்கூடிய மற்றொரு நாவல் எழுதப்படாததே அதன் சிறப்பாகும். மானுட வாழ்வின் அநேக சோதனைகளைக் கண்டும் கடந்தும் ஆத்மா இறைவனை அடைகிறது. நிலையற்ற அமைதியற்ற மனது அலைந்து திரிந்து இறைவனை அடைந்து அடங்குகிறது. பொறுமையும் அமைதியும் பிரம்மானந்தத்தைத் தருகின்றன. இதை எளிய நடையில் வாசகர் உள்ளங் கொள்ளும் வகையில் முற்றிலும் சமகால வாழ்வின் சிக்கல்களாலும் மெலிதான நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான கதைப்பின்னலாலும் தந்துள்ளார் ராஜமய்யர்.
வம்பர் மஹா சபையின் சுப்புவின் ‘ர’கரம் வராத பேச்சு மகாத்மியம், கல்யாண வீட்டில் ஸ்ரீனிவாசனிடம் ஊர்ப் பெண்டுகள் அடிக்கிற கொட்டம், மாணவர்கள் ஆடுசாபட்டியாரைப் படுத்தும் பாடு, அவரது தமிழ் வித்வத்துவம், பேயாண்டித் தேவர் உலா - என்று கதையை எடுத்துப் போகிற நேர்த்தி அருமை, எந்தவொரு பாத்திரமும் சோடைபோகாமல் எதையும் மறக்க முடியாமல் அமைத்த திறம் – ஆகியவை ஆசிரியரின் எழுத்து வன்மைக்குச் சான்றுகள். நிலவையும் கடலையும் ரசித்து மனமொன்றி விவரிக்கிறார் ராஜமய்யர். கடற்கரையில் ஸ்ரீனிவாசனும் லட்சுமியும் இயற்கையின் அற்புதங்களை ஆழ்ந்த உணர்வுடன் பிரஸ்தாபிப்பதை, கதையின் அவலச்சுவை திரண்டு விம்முகையில் இடையில் கொணர்ந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். ரயில் விபத்தின் சித்தரிப்பும், முன்பு சொன்ன இருட்டு வழி வண்டிப் பயணம் போலவே நல்ல வீச்சுடன் கைவந்துள்ளது.
‘கமலாம்பாள் சரித்திர’த்தில் பல நிகழ்ச்சிப் போக்குகளை ஆசிரியர் முன்பே கோடிகாட்டுவதைக் குறிப்பிட்டாக வேண்டும். ‘ஆருத்ரா தரிசன’ நாளன்று தம் குழந்தையைப் பறி கொடுத்த முத்துஸ்வாமி ஐயர், மூன்று ஆண்டுகளுக்குப் பின் தம் மனைவியின் நடத்தையை சந்தேகித்து தற்கொலை செய்துகொள்ள முயல்கிற நாளும் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன நாளாக ஆசிரியர் கொண்டுவருகிறார். இதன் மூலம் குழந்தை தொலைந்த பழைய நாளை வாசகர் மனத்தில் நிழலாடச் செய்கிற உத்தி சிறப்பானதாகும். அதேபோல முத்துஸ்வாமி ஐயர் தம் குழந்தை நடராஜனைக் கொஞ்சுகையில், இது நிலைக்குமா - என ஐயுறுவதும், பிற்காலத்தில் பிரிகிற முத்துஸ்வாமி ஐயர் துறவறம் பூணுவதாகக் கமலாம்பாள் கனவு காண்பதும், கதையின் கவர்ச்சியைத் தூண்டுகின்றன (டாக்டர் இரா.தண்டாயுதம், சமூக நாவல்கள், பக்.177,178).
கோள் சொல்ல வருகிற சுப்பு நெருப்புக் கேட்டு வருவதும், நாயும் திருடனும் சிலேடையைக் கேட்டுக்கொண்டே ஆண்டியொருவன் அம்மையப்ப பிள்ளையின் பணத்தை உருவியபடி “நாய் தன்பாட்டில் குலைக்கிறது. திருடனும் தன்பாட்டில் திருடுகிறான்” என்று ஓடுவதும் நயமான பகுதிகள்.
‘கமலாம்பாள் சரித்திரம்’ முற்பகுதி நாவல், பிற்பாதி கனவு – என்கிறார் புதுமைப்பித்தன். அதை அடியொற்றியே கைலாசபதியும் “ஜீவப் பிரம்ம ஐக்கியம் ஒன்றே நாவலின் நோக்கம் என்பதையும், அதை வாழ்வு மூலம் சொல்வதில் ராஜமய்யர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதையும் நம்மால் உணர முடிகிறது. தவிரவும் நாவலாசிரியனை இப்படி எழுது என்று முன்மொழிவதும் சரியாகாது அல்லவா? ஒரு பிரத்யேக வாழ்வனுபவத்தை அறியத் தருகிறபோது அதனை முற்றிலும் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டியது வாசகனின் கடமையும் கட்டாயமும் ஆகும்.
முற்பகுதியில் சீராய்ச் செல்கிற நாவல் சுருதி பிசகி சற்று துரிதமாய் உச்சத்தை எட்டி, பின் உணர்வின் கூர்த்தன்மையுடன் முடிகிறது. அடுக்கடுக்கான துயர சம்பவங்கள் பின்பகுதியில் கதைத் தன்மையுடன் திருப்பங்களாய் நிகழ்ந்தாலும், முடிவென்ற தெளிவை நெருங்குகிற ஆசிரியரின் பரவசமும், ஞானமும், தீவிரமும், எழுத்து வன்மையும் பிரமிக்கத்தக்க அளவில் கைகொடுத்து உதவுகின்றன. அந்த உணர்வுச் சுழல் சாதாரண யதார்த்த வட்டத்திலிருந்து, கூரிய ஓர் ஆன்மிக வட்டத்துக்குள் வாசகனை இழுக்கிறது. இதை ஆசிரியர் நன்கு உணர்ந்து கொண்டே நல்ல நிதானத்துடன் மேற்கொண்டு கதையைத் துடுப்பு போட்டுச் செல்கிறார். குரு சிஷ்ய மனோபாவத்தை விளக்கும் ஓர் அத்தியாயத்தில் (10) ‘கதையை மட்டும் கவனிப்பவருக்கு இது அத்தியாவசியமுமன்று’ என்று தெளிவாய் அடிக்குறிப்பும் தருகிறார்.
‘கமலாம்பாள் சரித்திரத்’தைப் பற்றி எத்தனையோ பார்வைகள் வெளியாகி விட்டன. தமிழ் நாவல் இலக்கிய வரலாறு எழுத வரும், அறிய வரும் எவருமே ‘கமலாம்பா’ளை விட்டுவிட முடியாது.
நமது கணிப்பில் ராஜமய்யர் கவிதையுள்ளம் கொண்டவர். வாழ்வியலின் கூறுகளைச் சற்று உயர்த்தி, தம் சிந்தனையின் கவர்ச்சியேற்றியே அவர் கூறுகிறார். முதல் பகுதியில் கமலாம்பாள் - முத்துஸ்வாமி ஐயர் தம்பதியின் உரையாடலிலிருந்து – வம்பர் மகா சபை –வித்துவான் அம்மையப்ப பிள்ளை - பேயாண்டித்தேவன் – நரபலி - கடலைப் பார்த்துக் கவிதையாய் நெகிழ்தல் என்று கதையினைத் தம் பார்வை எல்லைக்குள்ளேயே இயக்கிச் செல்கிறார். அதனாலேயே பாத்திரங்களின் அழியாத்தன்மையும் வாசகனிடம் ஆசிரியரின் எழுத்து பற்றிய பிரமிப்பும் ஏற்படுகின்றன. ஆச்சரியகரமான விஷயம் என்னவென்றால் இதை முழுக்க உணர்ந்தே அவர் செய்கிறார். பின்பகுதியில் வரும் அடுக்கடுக்கான திருப்பங்களும் அவரது எழுத்தின் கவர்ச்சியை நம்பியே வரையப் பட்டவையாக அறியலாம்.
தவிரவும் நாவலுக்குப் புதிய எளிய வாசகர்களைத் தம் நோக்கத்துக்கு வெற்றிகரமாகக் கொண்டுவர இந்த சுவாரஸ்யமாய்க் கதை சொல்லும் அம்சத்தைக் கையாண்டார் ராஜமய்யர் எனலாம். யதார்த்தச் சித்தரிப்புகள் வளர வளர, இன்னும் சொல்ல வேண்டிய கதையின் தத்துவச் சரடுக்குள் நழையவே இல்லை, என அவர் கதைத் தடத்தை ஆன்மிகத்துக்கு நகர்த்திச் செல்ல முயன்றிருக்கவும் கூடும். நாவல் இன்னும் நூறு பக்க அளவில் கூட அவரால் வளர்த்தெடுத்திருக்க முடியும், என்ற நிலையில் வலைவீச்சை அவர் சுருக்க நேர்ந்திருக்கலாம். நாவலின் வழி தர்மத்தை வலியுறுத்துவதில் அவர் அக்கறை காட்டினார், எனலாம். கொடிய பாத்திரங்கள் எல்லாமே கடைசியில் அல்லலுறுகின்றன. அல்லது செத்துப் போகின்றன. வைத்தியநாதன் - (அத்தியாயங்கள் 15, 16, 17-களில் வருகிறான்) என்கிற துலுக்க பாஷை பேசுகிற வில்லன் பாத்திரத்தைப் பின்னால் அப்படியே விட்டுவிடுகிறார். பேயாண்டித் தேவனோ திருந்தி நல்வாழ்வு வாழ்கிறான். இதெல்லாம் தம் எளிய வாசகர்களைத் திருப்தி செய்வதற்காக அவர் கொண்டு வந்திருக்கலாம். தற்கால இலக்கியங்கள் ராஜமய்யரை விட்டு இரு நிலைகளில் விலகுகின்றன. முதலாவது, பாத்திரங்களின் வாழ்வும் திருப்பங்களும் முடிவுகளும் பாத்திரங்களையே சார்ந்தவை போன்ற நம்பகத் தன்மையுடன் ஆசிரியர்களால் படைக்கப் படுகின்றன. மற்றது, இந்த அறிவுரீதியாய்ப் படைப்பாளனின் ஆளுமை இன்றைய இலக்கியகர்த்தாக்களால் அநேகமாய்ப் பூரணமாய் மறைத்துக் கொள்ளப்படுகிறது. (உதாரணம் பூமணி, சா.கந்தசாமி, அசோகமித்திரனின் படைப்புகள். இவர்களது பாத்திரங்கள் தங்கள் சுய அறிவு மற்றும் சிந்தனை மற்றும் பலவீனங்களை மீறி இயங்க முடியாதவர்கள்.)
தம் அறிவினால் தரும் கவர்ச்சியம்சத்தையும் மீறி யதார்த்தமாய் ஸ்ரீனிவாசன் லட்சுமி இருவரையும் பூரண உள்ளன்போடு படைத்துள்ளார் ராஜமய்யர். குழந்தையுள்ளத்தை அவர் விரும்புகிறார் என்பதை மேலும் பல இடங்களில் கவனிக்க முடிகிறது. அன்றியும் ஸ்ரீனிவாசன் என்பது சிறுவயது ராஜமய்யர்தானோ என்னவோ?... இது இப்படியிருக்க, கதையில் யதார்த்தமாய்ச் சில கட்டங்களை அமைக்காமலில்லை அவர். முத்துஸ்வாமி ஐயர் அடிக்கடி (கடைசி வரை) உரையாடலின்போது ‘கழுதை’ என்ற சொல்லைப் பிரயோகிப்பதும், ஸ்ரீனிவாசன் திருமணத்துக்கான இரவுப் பயணமும், திருமண வைபவங்களும், தம் நாவல் நடக்கிற மதுரை ஜில்லாவின் தனிப்பழக்கமான ஜல்லிக்கட்டும், பிற்பாடான ரயில் விபத்தும் நல்ல நடப்பியல் சித்திரங்களே.
பி.எஸ்.ராமையாவின் அம்மா சரியாகவே சொல்லிவிட்டாள்.
டாக்டர் இரா. மோகன் தொகுத்து மணிவாசகர் நூலகம் வெளியிட்ட
‘தமிழ் நாவல் வளர்ச்சி’ திரட்டில் எனது கட்டுரை.
storysankar@gmail.com
*1 *7899 87842


No comments:

Post a Comment