Saturday, May 4, 2019


artist / nartaki natraj

வந்தடைந்த ரயிலின்
கடைசிப் பெட்டி
எஸ்.சங்கரநாராயணன்
*
*
 திருவிழாக் கொண்டாட்டங்கள், ஆரவாரங்கள் முடிந்தாப் போலிருக்கிறது. வானம் ஒரு கண்ணை லேசாய் அரைத் தூக்கத்துடன் மூடிக் கொள்கிறது... ஒரு கருந் திரை மெல்ல இறங்குகிறாப் போல. பறவைகள் மெல்ல மரங்களுக்குத் திரும்புகின்றன. நிழலோடு ஐக்கியமாகும் பொழுதாகி யிருக்கிறது. வெளிச்சம் விடைபெறும் வேளை.
சனிக்கிழமை தோறும் சிந்தனை நீட்சியாய் இப்படி எதாவது இலக்கியச் செய்திகள் பரிமாற என யோசிக்கிற வழக்கத்தில் இருந்து சிறிது ஓய்வு கொள்ளலாம். இப்படியொரு கட்டுரைத் தொகுப்பு அமையலாம், என தனி நூலாக்கும் அளவில் நான் முன் அனுமானம் எதுவும் வைத்துக்கொள்ள வில்லை. அபுனைவு எனது வேலையல்ல என்கிறாப் போல ஓர் உதடு திறக்காத இறுக்கம் காத்து வந்தவன் நான். ஆச்சர்யகரமாக இது நிகழ்ந்து விட்டது. அதன் விடைபெறும் தருணமும் வந்தாகி விட்டது!
ஒரு பதினாறு வாரம் என இவை அமையும் என்றே, எழுதத் தலைப்பட்டேன். நண்பர்களிடமும் அப்படியே பேசி வந்தேன். சில நிகழ்வுகள் இதன் சில பகுதிகளை எழுதத் தூண்டின. சில அரங்குகளில் நான் பேசியவற்றை இங்கே பகிர வேண்டும் என உணர்ந்தேன். புதிதாய் நிறைய, அந்த வாரம் எழுத, என யோசிக்க எனக்குப் பிடித்திருந்தது. நண்பர்களுடன், வாசகர்களுடனான அரட்டையின் போது வந்த யோசனையை விரித்துச் சொல்ல இங்கே இடம் இருந்தது.
முகநூலில், ‘வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ என ஓர் ரசிகர் குழு தமிழின் இலக்கிய முயற்சிகளை அடையாளங் காட்டியும், விவாதித்தும், ரசித்தும், ஆக்க பூர்வமான விமரிசனங்களுடனும், ஒரு கருத்துப் பரிமாற்றம்... என இயங்க ஆரம்பித்தது. ஓர் எழுத்தாளரின் படைப்புகளைப் பற்றி அந்த வாரம் முழுதும் தகவல்கள், விமரிசனக் குறிப்புகள் பகிரப் பட்டன. குழு துவங்கிய வெகு சீக்கிரமே நானும் அந்தப் பட்டியலில் ‘வார எழுத்தாளர்’ கௌரவம் பெற்றேன். குழு அமைப்பளர்கள் யார் என்று நான் முன்அறிமுகம் இல்லாதவன். படைப்புகளால் அவர்கள் என்னை அறிந்திருந்தார்கள், என்பது அருமையான விஷயம் அல்லவா? அவ்வளவில் மிகுந்த மகிழ்ச்சியளித்தது அவர்களின் அந்தப் பாங்கு.
வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் - குழுவின் மந்திரமூர்த்தி அழகு, கவிஞர் சுப்ரா, சத்யா ஜி. ப்பி, சரஸ்வதி காயத்ரி, சுரேஷ் சுப்ரமணி, இராமச்சந்திரன் காளஹஸ்தி ஆகியோருக்கு நன்றி. இவர்களில் பலரை இன்றளவும் நான் சந்தித்ததோ உரையாடியதோ இல்லை. எந்த சுயநலமும் இன்றி, பக்கச் சார்பு இன்றி அவர்கள் தமிழின் ‘எல்லா’ இலக்கியப் போக்குகள் சார்ந்தும் சமமான அக்கறையும் கவனமும் தர முன்வருகிறார்கள். நான் அவர்களை முகநூலில் தொடர்ந்து வருகிறேன். துவக்க காலகட்டத்தைத் தாண்டிய வளர்ச்சி அடைந்துள்ளது இந்த அமைப்பு. ஒரு வருடம் நிறைவு காணப் போகிறது. அவ்வளவில் கதை கட்டுரை கவிதை நாவல் மொழிபெயர்ப்பு - என பொது வெளியில் எந்தப் புத்தகம் பற்றியும் குறிப்புகள் தர அங்கே அதன் ‘கான்வாஸ்’ விரிந்து கொடுத்திருக்கிறது இப்போது. தமிழ் தாண்டி, பிற மொழி இலக்கியம், உலக இலக்கியம், மொழிபெயர்ப்புகள் பற்றியும் அங்கே பதிவுகள் உலா வருகின்றன. வாசகர்கள் கொடுத்து வைத்தவர்கள். வாசிப்போம் குழு ஒரு நல் இயக்கம். மேலும் வளர்ந்து சிறக்க வேண்டும் அது. அது தமிழின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
இலக்கியம் சார்ந்து எனக்கான கருத்து வளாகங்களை அப்போது, அதில் வரும் குறிப்புகளைப் பார்க்கையில் நான் கண்டடைய நேர்ந்தது. எனது ஆதர்ச எழுத்தாளர்கள் யார் யார், யாரோடு நான் உடன் படுகிறேன், யாரோடெல்லாம் எப்படியெல்லாம் முரண் படுகிறேன்... இன்னவும் பிறவுமான என் சிந்தனை யோட்டங்களை, ஆனால் இந்தக் குழுவில் நான் பகிர்வது பாந்தமாய் இராது, என்று தோன்றியது. குழுவில் இடம் பெறும் பதிவுகள் அந்தப் படைப்பையோ எழுத்தாளனையோ சார்ந்து இயங்க வேண்டும். அதாவது குழு அந்த எழுத்தாளர் பற்றிய ஒரு பொதுக் கருத்தை உருவாக்க முயல்கிற அளவில் செயல்படுகிறது. அதுவே அந்தக் குழுவின் செயல்பாட்டுக்கு நியாயம் செய்யும். அதில் பகிர வாய்க்காத அநேகக் கருத்துக்களை நாம் இங்கே, எனது ‘பிளாக்’கில் பகிரலாம் என்று தோன்றியது. முழுக்க என் அடையாளங்கள், என் பார்வை சார்ந்த பதிவாக அது அமையும். அப்படி எழுத ஆரம்பித்தது தான் இந்த ‘யானையின் வண்ணப்படம்.’
கட்டுரைகள் எழுதக் கூடாது என்று வைத்திருந்தேன். பத்திகள், கட்டுரைகள் போன்றவை ஒதுக்கி, எழுதக் கிடைத்த என் நேரத்தை, புனைவு நோக்கி மாத்திரமே நான் செலவழிக்க வேண்டும், என்று தீர்மானித்து வைத்திருந்தேன். அதிகக் கூட்டங்களை நான் தவிர்த்தேன். முன்னுரைகள் தருவதிலும் எனக்குப் பெரிய ஆர்வம் இல்லை. தவிர்க்க முடியாமல், அந்தப் புத்தகம் எனக்குப் பிடித்திருந்தால் மாத்திரம், நான் முன்னுரை தருவேன். புத்தக மதிப்புரைகளும் அப்படியே. எனது பணி புனைவு இலக்கியம் தான். என் கவனத்தை அதில் இருந்து பிட்டுக் கொள்ள வேண்டாம் என்பதாய் இருந்தேன். எப்படியோ இந்தத் தன்னனுபவக் குறிப்புகள் தவறி என்னில் இருந்து வெளியேறி விட்டன! நண்பர்களுடன் அரட்டை யடிப்பது போன்ற எளிமையும் இயல்பான நகைச்சுவையுமாகவே இவற்றை அமைத்துக் கொண்டேன். இலக்கியப் பத்திகள் என்று வார்த்தைகளால் மிரட்டவோ, ‘ர்’ என பல் காட்டி கர்ஜனை செய்யவோ நான் விரும்பவில்லை.
இலக்கியப் பயணம் என்று என் வாழ்வில் நான் கடந்து வந்த பாதைகள், சந்தித்த பிரமுகர்கள், அவர்களிடம் கற்றுக் கொண்டது... இப்படியான அடையாளங்களை இதில் காண முடியும். விமரிசன அதிரடிகள் வேண்டாம். குறை சொன்னாலும் அந்தப் படைப்புகளில் எனக்கு மரியாதை இல்லாத அளவில் அவற்றைப் பற்றி எழுதவும் நான் விரும்பவில்லை. ஜெயமோகனின் நாவல் ‘விஷ்ணுபுரம்’ வெளியான போது நான் எழுதிய விமரிசனக் கட்டுரை கணையாழியில் வெளியானது. அப்போது கணையாழியிலும் பிற ‘சிவப்பு’ இதழ்களிலும் உடனே வேறு சில எழுத்தாளர்களை, நாவல்ளைக் குறிப்பிட்டு, விமரிசனங்கள் தாருங்கள், போடலாம், என்றார்கள். அவர்களுக்கு ஒரு கருத்து வளாகம் இருந்து வருகிறது. அதில் என்னை ஈர்த்துக் கொள்கிற முயற்சி அது. நான் அதில் தலைகொடுக்க விரும்பவில்லை. இதே ஜெயமோகன் கட்டுரையை, ‘சிவப்பு’ இதழ்களில் வெளியிடாமல் கணையாழியில் நான் வெளியிட்டதையே கவனிக்க வேண்டும். நாவலையிட்டு என் கருத்துகளை நேரடியாக வாசகர்கள் எடுத்துக் கொள்ளட்டும். எனக்கு ‘சிவப்பு’ கம்பள வரவேற்பு வேண்டாம்.
உடனே மீண்டும் எனது புனைவுச் சூழலுக்கு வந்திருந்தேன். இப்போது பதிவுகளாக இவை பெரும் நூலாக வளர்ந்ததும் ஆச்சர்யம் தான். மிகவும் சிரமம் இன்றியே இந்தப் பகுதிகளை எழுதி யிருக்கிறேன். மனதில் உள்ள கதைகள், எழுத்தாளர்கள் என்று துடுப்பு போட்டுப் போனேன். இலக்கிய மிரட்டல்கள், அதிகார த்வனி, கெடுபிடி, சட்டாம்பிள்ளைத் தனம்... நமக்கு வேண்டாம். நண்பர்களுடன் உரையாடல்கள் இவை. வாசிப்பின் சுவாரஸ்யம் முக்கியம். கருத்துப் பகிர்தல் முக்கியம். கருத்தில், கருத்து தாண்டிய ‘பின்னணி’ ஆராய்ச்சிகள் இங்கே இல்லை. மனதில் ஒன்று வைத்து வேறான்றாக, பூடகமாக, வக்கிரமாக எழுதிச் செல்லுதல் வேண்டாம். யாரும் முகம் சுளிக்கிற அளவில் இதைத் தோல்விகரமான படைப்பாக ஆக்க நான் விரும்பவில்லை. என் நோக்கமும் அது அல்ல.
இதை ஒருசேரப் பார்க்கையில் நானும் இலக்கியச் சண்டைகள் போட்டிருக்கிறேன், என்று தெரிகிறது. எனக்கும் எதிரிகள், பொறாமைக் காரர்கள், என்னைப் பிடிக்காதவர்கள் என்று சிலர் என் வாழ்வில் வந்து போயிருக்கிறார்கள். என்னை எதிர்க்கிறவர் இருக்கலாம். எனக்கு எதிரிகள் இல்லை.
பத்திரிகைகளுடன் எனக்கு கருத்து வேறுபாடு வந்திருக்கிறது. நான் சில இதழ்களில் எழுதுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறேன். பிறகு சமாதானங்கள் அமைந்துள்ளன. சில பத்திரிகைகள் திடீரென்று எனக்கு ‘வேத்துமுகம்’ காட்டுகின்றன... இவற்றை எல்லாம் இங்கே தற்செயலாக நான் பதிவு செய்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் எழுத்து வாழ்க்கை சுமுகமானது அல்ல... என்று தெரிகிறது.
அது உண்மைதான். தலை வணங்காமல் இங்கே எழுத்து வாழ்க்கை வாழ முடியாது. அது சாத்தியமாக வேண்டுமானால், சாப்பாட்டுக்கு வேறு வேலை வைத்துக் கொண்டு எழுத வர வேண்டும். நான் அப்படியே சுதந்திரப் பட முடிந்தது. இவற்றை எல்லாம் தற்செயலாக இங்கே இந்த நூலின் பதிவுகளில் திரும்பிப் பார்க்க வாய்த்தது. பழைய விஷயங்களை நான் திரும்பிப் பார்ப்பது இல்லை. சில விவரங்களை என் நண்பர்கள் சிலர், தேதி மாதம் வருடம் அளவில் நினைவு வைத்துக் கொண்டு சொல்வார்கள். அதில் நான் அசடு. ஆனால் அதை மீறி எத்தனையோ, நினைவுக்குள் இருந்திருக்கிறது. பத்திகளில் குதித்திருக்கிறது. கால அடையாளங்கள் தவிர்த்த, காலத்தைத் தாண்டிய அடையாளங்கள் அவை. அவற்றில் அனுபவப் பாடங்கள் இருந்தன.
நான் பேசிய உரைகளில் சிலவும், நூல் முன்னுரைகள் மற்றும் மதிப்புரைகள் சிலவும், வெளியிட்ட கட்டுரைகள் சிலவும் இங்கே இடம் பெற்றுள்ளன, அவற்றின் தகுதிப்படி. தவிர்த்தவை அதிகம். அதேபோல வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொன்ன ஒரே விஷயத்தை நூல் வடிவம் பெறும் இந்த சமயம், கூறியது கூறல் குற்றம், என்ற அளவில் முடிந்த அளவு தவிர்க்கவும் முயற்சி மேற் கொண்டேன். ஒரே விஷயத்தின் வேறு கோணங்களை அனுமதிக்கவும் வேண்டி யிருந்தது.
இதைத் தனி நூலாக்கு முன், ‘கூறியது கூறல்’ தவிர்க்க என்று சரிபார்க்க உதவிய எழுத்தாளர் எஸ். குமார், எனது 38 ஆண்டு கால நண்பர். எழுத்து நடையில் சொற் சுருக்கமும் இறுக்கமுமான மொழி அவருடையது. பெரும் சுற்றிதழ்களில் அவ்வாறான தன்னடையாளங்களுடன் வெற்றி உலா கண்டார் எஸ்.குமார். தெற்கே அன்புமகா சமுத்திரம், ஒரு பட்டாம்பூச்சியின் கறுப்பு வெள்ளைப் புகைப்படம், ஒரு பறவைப் பார்வை, கனவளவு உலகம் உட்பட பன்னிரண்டு புனைவு நூல்களின் ஆசிரியர். எந்தத் தயக்கமும் இன்றி நான் அவரிடம் பணி ஒப்படைக்க, இத்தனை விரைவாகவே அதை அவர் நிறைவேற்றியும் தந்துவிட்டார்.
இந்த நூலின் பக்கங்களில் என்னுடைய வாசகர்கள், ரசிகர்கள், நண்பர்கள், சில உறவினர்களும், (ஹா ஹா... சில எதிரிகளும்) இடம் பெற்றிருக்கிறர்கள். அவர்களுக்கு நன்றி.
எனது காணொலி, தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் சொன்னதுதான். இந்த வாராந்திரப் பதிவுகளில், தனியான அடையாளங்கள் என முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், பெண்சார்ந்த உடல்மொழி இலக்கியம்... என்றெல்லாம் நான் கட்சி கட்டுவதைத் தவிர்த்தேன். அவை அந்தந்தக் காலகட்ட அலை யெழும்புதல்கள். கால காலத்துக்குமான பொதுத்தன்மை சார்ந்தே நான் இலக்கியம் பேச விரும்புகிறேன். இதுகுறித்து மாற்றுக் கருத்துள்ளவர்களை நான் மதிக்கிறேன். அவர்களும் என்னை மதிப்பார்கள் என்பது என் விருப்பம். இப்படியாகத்தான் நான் ஒளிவட்ட அமைப்புகளோ, ரசிகர் குழுப் பின்னணியோ வேண்டாம் என்று தவிர்த்தேன். எனது வாசகர் தனக்கான சிந்தனை வளாகம், சுதந்திரம் உள்ளவர், அது அவரின் தகுதி என்று நான் மதிக்கிறேன். அங்கிகரிக்கிறேன். அவரை அவ்வளவில் போற்றுகிறேன். நான் கட்டுப்படாதவன் என்ற அளவில் அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பதே நியாயம் அல்லவா?
தனி நூல் எனத் தருகிற போது, யானையின் வண்ணப்படம், என்ற இந்தப் பொதுத் தலைப்பை ‘உலகெனும் வகுப்பறை’ என அமைத்துக் கொள்கிறேன். இன்முகமும் பொறுமையும் காட்டி, இதுகாறும் என்னுடன் பயணித்த நண்பர்களுக்கு வணக்கம். நன்றி. உலகம் அழகாகவே இருக்கிறது. இந்த நிமிடத்தில் யாரிடமும் எனக்கு கசப்போ வெறுப்போ இல்லை. அதுவே என் வாழ்வின் நியாயம். இப்படியே ஓடிவிடும் என்று நம்புகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
*
storysankar@gmail.com
91 97899 87842 / 91 94450 16842


No comments:

Post a Comment