பகுதி 2
கதவுக்குள்
கதவு
எஸ்.சங்கரநாராயணன்
ஒரு நாட்டின் சிறந்த அடையாளமாக அந்த நாட்டில் சாமானிய மக்களிடையே
பரவலாய்ப் பரிமாறப்படும் பழமொழிகளையும் குட்டிக்கதைகளையும் நாம் காண முடியும். அந்தக்
காலத்தின் சாமானிய மக்களின் குரலை அவற்றில் நம்மால் இனங் காண முடிகிறது அல்லவா? ஒரு
ஆதங்கம், சோகம், அல்லது குமுறல் மற்றும் நீதி அந்த சாமானிய மனிதனால் உள் வைத்துக் கட்டமைக்கப்
படுகின்றன அந்தக் குட்டிக்கதைகள். அவையே மக்ளிடையே பரவலாய் மீண்டும் மீண்டும் பரிமாறப்
படுகின்றன. நம்மிடைம் புழங்கிவரும் இரு குட்டிக்கதைகளுடன் ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது.
அதற்குமுன் ஒரு செய்தி.
கே. பாலச்சந்தர், இயக்குநர் ஒரு குமுதம் இதழ் தயாரித்த போது
என்னிடம் மிகச் சிறிய கதைகளாக எதாவது வெளியிடலாமா, என்று கேட்டார். நான் சில கதைகள்
அப்படிச் சொன்னேன். அதில் சுமாரானதை அவர் தேர்ந்தெடுத்து வெளியிட்டார் என்பது வேறு
கதை.
அது,
நாற்காலியில் வானம் பார்க்க தலை சாய்த்து கண்மூடி யிருந்தான்
அவன். இதுவே சரியான தருணம் என சர்ரக் என்று கத்தியை உருவி... ஷேவிங்கை ஆரம்பித்தான்.
இன்னொரு கதையை நான் ஆனந்த விகடனில் தந்தேன். அதுவும் வெளியானது.
அரசர் கவலைக்கிடம். அவருக்கு வாரிசு இல்லை, என்பதால் யானையிடம்
மாலை தந்து அது யாருக்கு மாலை இடுகிறதோ அவரே ராஜா என்று முடிவாகிறது. தளபதி இரகசியமாக
மாவுத்தனிடம் வந்து “என் மகனுக்கு யானையை மாலையிடச் சொல். உனக்கு வெகுமதிகள் தருவேன்”
என்று ஆசைகாட்டிச் செல்கிறான். பின்னாலேயே அமைச்சர் வந்து “என் மகளுக்கு யானையை மாலை
போடச் செய். உனக்கு வேண்டுமான செல்வம் தருகிறேன்” என்று அவரும் வேண்டிக் கொள்கிறார்.
யானை மாலையிட்டது... மாவுத்தனின் மகனுக்கு.
வேறு கதைகள், கே.பி.யிடம் சொன்னது, இப்போது ஞாபகத்தில் இல்லை.
இப்போது எனக்குப் பிடித்த சில குட்டிக் கதைகள், நம்மிடையே
புழங்கி வருகிற கதைகளைச் சொல்லலாம்.
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று நடந்து போய்க் கொண்டிருந்தது.
அது எதிரே வந்த முயலைப் பார்த்து. நில்லு, என மிரட்டலாய்க் கூப்பிட்டது. முயல் பயந்து
அப்படியே நின்றது. இந்தக் காட்டிலேயே பலசாலி யார் சொல்லு, என்றது சிங்கம். “நீங்கதான்
மகராசா,” என்று நடுங்கிச் சொன்னது முயல். ம். அதை ஞாபகம் வெச்சிக்க, போ, என்றது சிங்கம்.
தொடர்ந்து போனபோது ஒரு மான் வந்தது. மானையும் நிறுத்தி சிங்கம் கேட்டது. இந்தக் காட்டிலேயே
யார் பலசாலி? “நீங்க தான் மகராசா,” என்றது மான். ம், போ, என வழிவிட்டது சிங்கம்.
வழியில் ஒரு யானை குனிந்து புல்லைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது.
நான் வந்திருக்கிறேன். என்னைக் கூட பார்க்காமல் சட்டை செய்யாமல்... இந்த யானைக்கு எவ்வளவு
திமிர், என்று அதற்குக் கோபம் வந்தது. அது யானையின் முன்னால் போய் நின்றது. ஏய் யானை,
இந்தக் காட்டிலேயே யார் பலசாலி, என்று கேட்டது.
யானை தும்பிக்கை நீட்டி அந்த சிங்கத்தை அப்படியே தூக்கி ஒரு
சுழட்டு சுழட்டி வீசிவிட்டு திரும்பப் புல் கடிக்க ஆரம்பித்தது.
பொத்தென்று தூரப் போய் விழுந்த சிங்கத்துக்கு ஒன்றுமே புரியவில்லை.
அடச்சீ, கேட்டா கேள்விக்கு பதிலே தெரியவில்லை, உனக்கெல்லாம் ஒரு கோபம், என்றபடி எழுந்து
போனது சிங்கம்.
•
காட்டில் இருந்து வேடுவன் ஒருவன் அரசனைப் பார்க்க வந்தான்.
அவன் அரசனிடம் ஒரு பழத்தைத் தந்து ‘‘இந்தப் பழத்தை உண்டால் உங்களுக்கு மரணமே இல்லை”
என்றான். அரசனுக்கு அருகில் இருந்த மெய்க்காவலனுக்கு அதைக் கேட்டதும் அந்தப் பழத்தின்
மீது ஆசை வந்துவிட்டது. அரசன் அதை தன் வாயில் போடுமுன் சட்டென அவன் அதை அரசன் கையில்
இருந்து பறித்து தன் வாயில் போட்டுக்கொண்டு விழுங்கி விட்டான்.
அரசனுக்கோ கடுங் கோபம். யாரங்கே, இவனை சிரச்சேதம் செய்யுங்கள்,
என உத்தரவு பிறப்பித்தான். அதைக் கேட்டு அந்த மெய்க்காவலன் சிரித்தான். அரசே, நான்
தின்றது மரணமில்லா வாழ்வு தரும் பழம், நீங்கள் என்னைக் கொல்ல முடியாது, என்றான்.
ராஜாவுக்குத் திகைப்பாய் இருந்தது. இருந்தாலும், அதையும்
பார்த்து விடலாம், இவன் கழுத்தை வெட்டுங்கள், என ஆணை பிறப்பித்தான். அப்போதும் மனந்
தளராமல் அந்தக் காவலன், அரசே, ஒருவேளை நான் கழுத்தறு பட்டு இறந்து போகலாம். அப்போது
இந்தப் பழம் வெறும் சாதாரணப் பழமாக ஆகிறது. ஒரு சின்னப் பழத்தைத் தின்றதற்கா சிரச்சேத
தண்டனை? இது தகுமா?... என்று கேட்டான்.
அரசன் மேலும் குழப்பமடைந்தான். பின், பிழைத்துப் போ, என்று
விட்டுவிட்டான்.
எழுத்து என்பது ஒரு கிறுக்கு மாதிரி. பிடிச்சிட்டா லேசில்
விடாது. லேசில் என்ன, விடவே விடாது. எல்லாவற்றையும் நம் மொழியில் சொல்லிப் பார்ப்பது.
எதையிட்டும் கடைசியாய் தடலாடியாய் நம்மை எதாவது சொல்ல வைப்பது என்று எழுத்தாள மனசு
அலைபாய்கிறது. சுற்றியுள்ள எல்லாவற்றையிட்டும் எழுத்தாளனுக்கு சுய பார்வை உண்டு. விமரிசனம்
உண்டு. ரசிக்கவோ மறுக்கவோ அவன் உள்க் கிளர்ச்சி யடைகிறான். இதில் சைவ அசைவ எழுத்தாளர்
என்று பேதம் இல்லை. தலித், ஆரிய சோ கால்ட் வந்தேறி - முற்போக்கு அறிவுப்போக்கு என்கிற
வித்தியாசம் எல்லாம் கிடையாது. எழுதுகிற விசயம் சார்ந்து வித்தியாசங்கள், பார்க்கிற
கோணம் என்று பேதங்கள் இருக்கலாம். பேதங்கள் அல்ல அவை. அடையாளங்கள்.
எழுத வந்த புதிதில் கி.ரா. என் ஆசான். அவரது கோபல்ல கிராமத்தில்
நிறைய நிறைய குட்டிக்கதைகள் வரும். கதை அதுபாட்டுக்குப் போனாலும் இடையே சுவாரஸ்யம்
கருதி குட்டிக்கதைகள் அள்ளி வீசுவார். கிராமத்து வண்டியின் சினிமா நோட்டிஸ் மாதிரி.
நினைவில் நின்றதை வைத்து எழுதுகிறேன். திரும்ப மூலத்தை எடுத்து
சரி பார்த்து எழுத எனக்குப் பிடிக்காது. காலம் தாண்டி நிற்கிறதே அதன் பெருமை. (அல்லது
என் பெருமை!)
ஈக்கும் ஈக்கும் கல்யாணம். ராணி ஈக்கு கழுத்து முழுசா நகை.
அப்பிடி யொரு அழகு. அத்தனை பெரிய கல்யாணம். பக்கத்துல மாப்பிள்ளை நிக்காரு. ராணி ஈக்கு
திரும்பி அவர் முகத்தைப் பார்க்க ஆசை. கழுத்து பூரா நகை போட்டதுல ராணி ஈக்கு திரும்ப
முடியல. ராணி ஈ எப்பிடித் திரும்பிப் பாத்தது?...
என்று கேட்பார். பதில் சொல்ல மாட்டார். திரும்ப கதைக்குப்
போய் விடுவார்.
ரெண்டு பெண்டாட்டிக்காரன் ஒருத்தன். மச்சில்ல ஒரு பொண்டாட்டி
படுத்துக் கெடக்கா. கீழ்த்தளத்தில் இன்னொருத்தி. இவன் ஏணில ஏறப் போறான். மச்சில்லேர்ந்து
ஒருத்தி அவனைக் கையப் பிடிச்சி இழுக்கா. இன்னொருத்தி கீழேர்ந்து காலைப் பிடிச்சி இழுக்கா...
அவன் என்ன செய்தான்?
என்று கேட்பார்.
கி ரா அண்ணாச்சி கிண்டல்கார மனுசன். எழுத்தில் இறங்க அதுவும்
ஒரு பாதை. சிலாள் சும்மா இருக்கிறபோது பொட்டுக்கடலையோ, கடலை மிட்டாயோ வாங்கி மென்னுக்கிட்டே
இருப்பான். வெறும் வாய்க்கு அவல் என்று பழமொழியே உண்டு அல்லவா?
பெண் போலிஸ் என்று நியமனம் ஆரம்பித்தபோது கி.ரா. அண்ணாச்சிக்குச்
சிரிப்பு வந்திருக்கலாம். என்னலே இது, நம்ம வீட்டுப் பொம்பளைங்களே எங்கயாச்சும் வெளியக்
கிளியக் கிளம்பினா ஆம்பளைத் துணையக் கூட்டிட்டுப் போகுது, இது பொம்பளையாள்களைப் போலிசாப்
போடறதா? ஆனால் அவர் கற்பனையில் ஒரு காட்சியை எழுதிப் பார்க்கிறார்.
என்ன ஆயா போலிஸ் ஸ்டேஷன் வந்திருக்கே?
என் பேத்தி இங்கதான் போலிசா வேலை செய்யுது. வீட்டுக்குக்
கூட்டிப்போக வந்திருக்கேன்.
கி.ரா. அண்ணாச்சியின் யதார்த்த வரிகளே, கெக் கெக் என்று சிரிப்பை
வரவழைத்து விடுகிறது. அவரது ரசனை சார்ந்த குணமே இதன் அடிப்படை. மீண்டும் மீண்டும் திருத்தி
எழுதி ஒரு பக்குவப் பட்ட வெளிப்பாடாய் அவர் கதையில் நடை மிளிர்கிறது.
மழை பெய்யுது. மரமெல்லாம் கொப்புகளை இப்பிடி அப்பிடி என முதுகு
காட்டி அனுபவிச்சி மழையில் குளிக்கிறது... என எழுத அவரால் தான் முடியும்.
மரம் சும்மா இருந்தாலும், காத்து சும்மா இருக்க விடுமா?
- போன்ற பழமொழிகளை அவர் கையாளும் போது வாழ்க்கையின்னா இப்பிடி வாழணும்டா என்று கூடத்
தோணும்.
ஆம்பளை பத்தி கி.ரா. சொல்கையில்
சனியன் ஒரு துளியோ ரெண்டு துளியோ, ஆனாலும் மனுசாளைத் தூங்க
விடுதா?
சம்சாரி கோமணம் எத்தனை தடவை இறுக்கி இறுக்கிக் கட்டினாலும்
ஒதுங்கி ஒதுங்கிப் போவுது.
எங்கூர்ல ஒரு தேவிடியா இருக்கா, அவளுக்குப் புருசன் மேல அத்தனை
இஷ்டம். அவ சொல்வா. என்னை என்ன வேணா பண்ணிக்க. ஆனா உதட்டுல மாத்திரம் முத்தம் குடுக்கப்டாது.
அது எம் புருசனுக்குத்தான்.
அடங்கொய்யால இது எழுத்து.
•
இப்போது எனக்கு வயது 59. அடுத்த வருடம் பணி ஓய்வு (பி எஸ்
என் எல்) பெறுகிறேன்.
ஆயிற்று சுமார் 90, 95 புத்தகங்கள் வந்திருக்கின்றன.
எனது முதல் நாவலில் இருந்து நிறைய இடைக் கதைகளை, குட்டிக்கதைகளை
நானும் பயன்படுத்துகிறேன்.
முதலில் வெளிவந்த எனது ‘நந்தவனத்துப் பறவைகள்’ நாவலின் சில
இடைக் கதைகள், இப்போதைய என் நினைவில் இருந்து. இது அச்சில் வெளியான என் முதல் நாவல்.
என் முதல் நாவலே, நான பி.எஸ்சி. வேதியியல் படித்த மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்,
மேல்நிலைப் பட்ட (எம்.ஏ.) மாணவர்களுக்கு நவீன இலக்கியப் பாடநூலாக அமைந்தது வியப்பான
மகிழ்ச்சி எனக்கு.
•
கடற்கரையில் இரண்டு எலும்பு வைத்திய நிபுணர்கள் நடைப்பயிற்சி
போகிறார்கள். எதிரே ஒருவன் விந்தி விந்தி வருகிறான். ஒரு மருத்துவர் அவனுக்குக் கரண்டைக்
காலில் அடி, அதனால் தான் இப்பிடி நடக்கிறான், என்கிறார். அடுத்த மருத்துவர், இல்லை
அவனுக்கு முழங்காலில் அடி. அதனால் தான் நடக்க சிரமப் படுகிறான், என்கிறார். இருவருக்கும்
வாக்குவாதம். அதற்குள் அவன் இவர்கள் அருகில் வந்து விடுகிறான். அவனிடமே சந்தேகம் கேட்கிறார்கள்.
அவன் சொன்னான். ரெண்டும் இல்ல சாமி. செருப்பு பிஞ்சிட்டது. அதான் விந்தி விந்தி நடக்கிறேன்.
•
‘நந்தவனத்துப் பறவைகள்’ நாவலின் கதாநாயகன் ஒரு கிராமத்து
எளிய அப்பிராணி. சற்று வசதி குறைவான ஆசாமி. இப்படி நபர்கள் தங்கள் செருப்பு போன்ற வஸ்துக்களை
அப்படி ஒரு பிரியத்துடன் பராமரித்து பேணி வைத்திருப்பார்கள். அதை வீட்டுக்கு வெளியே
விட்டுவிட்டு உள்ளே போகவே அவர்கள் வருத்தமாய் உணர்வார்கள். இப்போது ஒரு குட்டிக்கதை,
அந்த நாவலின் பகுதி இது.
மீண்டும் மீண்டும் பயன்படுத்தி ஆறு மாதத்தில் அது எருக்க
இலை போலத் தேய்ந்து விட்டது. என்றாலும் அந்தச் செருப்பை விட அவனுக்கு மனசு வரவில்லை.
அலுவலகம் விட்டு வீடு திரும்பும் பெருமாள்சாமி மழை வருகிறாப் போல இருக்கவே நடையே எட்டிப்போட்டு
வேகம் தர முயன்றால் செருப்பு முரண்டுகிறது. சற்று மெதுவாக செருப்பை அனுசரித்து அது
பிய்ந்துவிடாத கவனத்துடன் அவன் நடக்கையில் பினனால் வந்தவன் அவனது அவசரத்தில் இவன் செருப்பை
மிதித்து விட்டான். அவன் காலுக்கும் செருப்புக்கும் இடையே வந்தவன் கால் இடற ஒரு நொடியில்
அந்தச் செருப்பு இவன் காலில் இருந்து விடுதலை பெற்று நடுத் தெருவில் போய் விழுகிறது,
இரண்டு துண்டுகளாக.
பெருமாள்சாமி தனது இடது கால் செருப்பை அதுவும் இரண்டு துண்டுகளாக
நடுத் தெருவில் பார்க்கிறான். ஆகா என்னவோர் கோர விபத்து என்பதாக மனசு பரிதவிக்கிறது.
இந்நிலையில் இந்த வலது கால் செருப்பு, அந்த ஒற்றைச் செருப்பால் என்ன பயன், என்று அதைப்
பிரியாவிடை தந்து அப்படியே தெருவில் விட்டுவிட்டு நடக்கிறான். மகா துக்க கணம் அது.
தெரு திரும்புகையில் தான் விட்டுவிட்டு வந்த அந்த செருப்புகளைக் கடைசியாக ஒரு பார்வை
பார்க்க நினைத்தான். தெருவில் அவன் பார்த்தபோது, இடது கால் இல்லாத ஒரு நொண்டி அவனது
பிய்யாத வலது கால் செருப்பை எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்தான்.
•
ரொம்ப கண்டிப்பான டீச்சர் ஒருத்தி. ஸ்கேல் இல்லாமல் அவளால்
பாடம் நடத்த முடியாது. மொட்டைமாடியில் வீட்டு டியூஷன் நடக்கிறது. அவள் அருகில் பழக்கமான
ஸ்கேல். இரு மாணவர்கள் டியூஷன் படித்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று விளக்கு
அணைகிறது. திரும்ப விளக்கு வருகிறது. “என்னை யார் ஸ்கேலால அடிச்சா?” என்று கத்துகிறாள்
டீச்சர். அந்த இரண்டு மாணவர்களில் யார் அவளை ஸ்கேல் எடுத்து அடித்தார்கள் என்று தெரியவில்லை..
•
பூமணி எழுத்திலும் அடிக்கடி இந்த வகையான சிறு இடைக் கதைகளை
நான் ரசிப்பேன். ஒரு திரைப்படத்தில் வடிவேலு பகுதிகளைக் குட்டிக்கதைகள் என்று சொல்லலாம்
என்று தோன்றுகிறது. இடையில் நான் எப்படியோ இந்தக் குட்டிக்கதைகள் ஊடாட எழுதும் பாணியை
விட்டு விலகி விட்டேன் என்று தோன்றுகிறது.
வேறொரு சிறுகதை. அவன் இரவில் விழித்துக் கொள்கிறான் தண்ணீர்த்
தாகம் எடுத்திருக்கலாம். எழுந்து விளக்கைப் போட்டான். திடீரென்று வெளிச்சம் வந்ததில்
திகிலடைந்த கரப்பான் பூச்சி ஒன்று சரசரவென்று இங்குமங்குமாகப் பறக்கிறது. அதை விரட்ட
பயத்துடன் அவன் போராடியபடி பார்த்தால் அருகே மனைவி. வாயைப் பிளந்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளை எழுப்பி, “என்ன கரப்பான் பறக்குது. வாயைப் பிளந்துட்டுத் தூங்கறியே?” என்று கேட்டான்.
அவள் சொன்னாள். “நேத்தி நீங்க அப்படித்தான் தூங்கினீங்க.”
சமீபத்தில் நான் எழுதிய ஒரு குறுநாவல். “ஈரிதழ் வால்வுகள்”
அதை எழுதுகையில் ஒரு குட்டிக்கதையை, அதே வரிகளில் வாசிக்கலாம் நீங்கள்.
•
படுக்கை அறையில் கண்ணாடி மாட்டியிருந்தான் லெட்சுமணன். அவளுக்கு
ஒரே சிரிப்பு. வெட்கம். இப்படி யெல்லாம் அவள் கேள்விப் பட்டதே இல்லை. உயரம் தட்டாத
மலிவுப் பாவாடைகள் அணிந்து புடவைக்குள் உயரத்தில் அது நிற்கும். இங்கே அவன் உள்ளாடைகளுக்கே
தனியாய்ச் செலவு செய்தான். லேஸ் வைத்த பிரா, எத்தனை அழகு. ஆளுக்கு தனித் தனி சோப்.
அவளுக்கு பாண்ட்ஸ் பவுடர் பிடிக்காது. வீட்டில் பெரிய டப்பாவாய் அதையே வாங்குவார்கள்.
அதையே எல்லாரும் போட்டுக் கொள்வார்கள். இவனும் பெரிய டப்பா வாங்கி வந்தபோது அவள் சொன்னாள்.
உடனே அடுத்த தடவை, மைசூர் சான்டல் டால்கம் பவுடர் வாங்கியாச். “எனக்கும் பாண்ட்ஸ் பிடிக்காது”
என்றான் அவளிடம். பெண்கள் ஆண்களைப் பொய் சொல்ல வைக்கிறார்கள். இதெல்லாம் எங்க போய்
முடியுமோ?
கல்யாணம் முடிந்து அவளைக் கொண்டுவிட அப்பா வந்திருந்தார்.
காமா சோமாவென்று கல்யாணம் ஆகி, முதல் இரவு சோபிக்காமல், எல்லாரும் உம்மென்று மாப்பிள்ளை
வீடு வந்து இறங்கி யிருந்தார்கள். வீட்டில் ஆரத்தி எடுக்க ஆள் இல்லை. ஒரு அத்தை இருந்தாள்.
அவள் விதவை. அவள் ஆரத்தி எடுக்கப்டாது. நேரே எதிரே வரப்டாது. “இங்க இனி எல்லாமே நீதான்...”
என்றான் லெட்சுமணன். “உன்னால தான் வீடே வெளிச்சமாகப் போகுது...” தன் நெஞ்சு அறிவது
பொய் சொல்க, கல்யாணக் குறள் இது. பொய்மையும் வாய்மை இடத்து. ருக்மணி விரைவில் தேறி
வந்தாள். தொலைபேசி உள்ள வீடு. அதுவே புதுசு. நல்ல சினிமா என்றால் அவளைக் கேட்காமல்
டிக்கெட் (தரை டிக்கெட் அல்ல. பால்கனி) வாங்கிவரும் கணவன். அவளுக்குப் பிடித்த பொய்கள்
சொல்கிறான். “ருக்கூ...” என அவளைக் குயில் போல் அழைக்கிறான். அவள்அப்பா, எப்பவும் சாமி
படங்களுக்குத் தான் கூட்டிப் போவார். காதல் படங்கள் அவரைக் கலவரப் படுத்தின. அவருக்கு
ரெண்டும் பெண்கள்.
திரும்ப அவள் அப்பாவீட்டுக்கு 'தாலியைப் பிரித்துக் கோர்க்க'
என போயிருந்தாள். அப்பாவின் படுக்கை அறையைத் தற்செயலாகப் பார்த்தாள். புதுசாய்க் கண்ணாடி
இருந்தது.
*
(அடுத்த வாரம் சந்திப்போம்)
91 97899 87842 storysankar@gmail.com
அரசர் கலைக்கிடம் - ஒரு ” வ “ ; ஆயிற்று சுமார் 90 95 புத்தகங்கள் வந்திருக்கின்றன - 90 , 95 - ஒரு கமா . [ அப்புறம் இந்த பின்னூட்டத்தை அப்புறப் படுத்தி விடலாம் ]
ReplyDeletecorrected boss!
Deletethanks
but how does it feel... this article?
அருமை சார். சுவாரசியமாக சொல்கிறீர்கள். கவிதைகல் கதைகள் சிறுகதைகள் சார்ந்து ஏராளமாகத் தெரிந்து கொள்ள் முடிகிறது. யார் பலசாலி குட்டிக்கதை வடிவேலுக்கு மகா பொருத்தம்.
ReplyDeleteமன்னிக்கவும். மேலே பின்னூட்டத்தில் கவிதைகள்- கவிதைகல் என்று தட்டச்சுப் பிழையாகி விட்டது.
ReplyDelete