எது நடந்ததோ
அது நன்றாகவே
நடக்கவில்லை
எஸ். சங்கரநாராயணன்
*
எனக்குக்
கதை எழுதத் தெரியாது.
நான் ஒரு
கதை எழுதினேன். அதில் ஒரு சம்பவம் இருந்தது. வாழ்க்கையின் ஒரு சிறு வட்டம் இருந்தாற்
போலிருந்தது. நான் படித்த சில நல்ல சிறுகதைகள், அவை போல இல்லை அது. சரி என்று கிழித்துப்
போட்டுவிட நினைத்தேன்.
தியாகு என்
அறைநண்பன். “என்னடா பண்ணிட்டிருக்கே” என்றபடி உள்ளே வந்தவன் கைக்காகிதத்தைப் பார்த்தான்.
“அட தேவராஜ்,
நீ கதையெல்லாம் வேற எழுதறியா?”
“இதுதான்
முதல்...” என்றேன், எதோ தப்பு பண்ணிவிட்டாப் போல.
“கொண்டா
படிச்சிப் பாப்பம்.”
“இல்ல வேணாம்.”
“அதான் எழுதிட்டயில்ல.
பின்ன என்ன?”
நான் அவனையே
பார்த்துக் கொண்டிருந்தேன். லேசான உட் படபடப்பு. இதயத்தின் டப்பு டப்பு, அது தப்பு
தப்பு என்றது. பத்து வரியில் திருப்பித் தந்து விடுவான் என்று நினைத்தேன்.
“அருமை...”
என்றான் தோளணைத்து.
எனக்குக்
கதை எழுதத் தெரியுமா தெரியாதா என நான் குழம்பும்படி ஆகிவிட்டது. காரணம் நல்ல சிறுகதை
பற்றி அவனுக்கு என்ன தெரியும், என நான் நினைத்திருந்தேன்!
ஒருவேளை
நண்பன் என்று ஓர் இரக்க அடிப்படையில் சொல்கிறானோ?
அந்தக் கதையை
நான் எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பப் போவது இல்லை.
அந்தக் கதை
பிரபல இதழ் ஒன்றில் வெளியாகி யிருந்தது!
ஆச்சர்யம்.
இது எப்படி நடந்தது!
“நான்தான்
அனுப்பி வைத்தேன்” என்றான் அவன் புன்னகையுடன்.
அவனுக்கு
நன்றி சொல்வதா, கோபப்படுவதா?
“தியாகு,
நீ ஒரு விஷயம் புரிஞ்சிக்கோ.”
“சொல்லு.”
“நான் படிச்ச
எந்தக் கதை மாதிரியும் இல்லியே இது.”
“அதனால்
என்ன,” என்றான் அவன். “இப்ப சொன்னியே அதான் அதன் ஸ்பெஷாலிட்டி.”
என்ன இவன்
என்னைப் போட்டுப் பார்க்கிறானா?
நல்ல சிறுகதை
எது என்பது எனக்குத் தெரியும். இது அல்ல அது.
ஆன்டன் செகாவ்,
ஹெமிங்வே, தாமஸ் மன்... அட, ஓ ஹென்றி, நம்மாளுகளில் புதுமைப்பித்தன், அழகிரிசாமி, இப்பத்தைய
ஆட்கள் என்றால் நாஞ்சில்நாடன், ஜெயமோகன்...
நான் இன்னொரு
கதை எழுதினேன். இதற்காக நான் மெனக்கெட வேண்டியிருந்தது. வார்த்தைகளுக்கு தவங் கிடக்க
வேண்டியிருந்தது. கற்பனைவெளி யெங்கும் துழாவ வேண்டியிருந்தது.
“தியாகு”
என்று கூப்பிட்டேன்.
“படிச்சிப்
பாரு” என்றேன் நம்பிக்கையுடன்.
பத்து வரி
வாசித்திருப்பான். உதட்டைப் பிதுக்கி திருப்பித் தந்தான்.
“குப்பை!”
“அட ரசனை
கெட்ட நாயே! உன்னைப்போய் வாசிக்கச் சொன்னேன் பார்.”
சிரித்தபடி
பார்த்துக்கொண்டே நிற்கிறான் கடன்காரன்.
ஆ, நான்
நினைத்தது சரி. நல்ல சிறுகதை என்றால் எது என அவனுக்குத் தெரியவில்லை. அதை அவனுக்கு
நிரூபிப்பேன்.
முந்தைய
கதையை வெளியிட்ட இதழுக்கு அந்தக் கதையை அனுப்பி வைத்தேன்.
திரும்பி
வந்துவிட்டது!
தியாகு கேட்டான்.
“என்னடா மாப்ள, உன் கதையத் திருப்பிட்டாங்களே...”
சட்டென்று
அவனை நிமிர்ந்து பார்த்தேன். உள்ளுக்குள் சிரிக்கிறானோ?
எது நல்ல
கதை என்று எனக்குத் தெரியாதோ? அழுது விடுவேன் போலிருந்தது.
நான் இன்னொரு
கதை எழுதினேன். இது தியாகுவுக்குத் தெரியக் கூடாது, என நினைத்தேன். இதைப் பத்திரிகைக்கு
அனுப்பக் கூடாது, என நினைத்தேன்.
எழுதி முடித்துவிட்டு
வாசித்துப் பார்த்தேன். இது சரியாய் வந்திருக்கிறதா இல்லையா, என்றே புரியவில்லை. யாரிடமாவது
வாசிக்கத் தராமல் எப்படி முடிவுக்கு வருவது...
தியாகுவிடம்...
ச், வேணாம். சனி, வரவர அவன் கிண்டல் ரொம்ப அதிகமாகி விட்டது.
ஒன்று செய்யலாம்.
கல்கி போன்றவர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒரு படைப்பை எழுதி முடிச்சவுடன் அதை அச்சுக்குத்
தந்துவிட மாட்டடார்களாம். அப்படியே கிடப்பில் போட்டு விடுவார்களாம். அந்தப் படைப்பினை
உருவாக்கும் போதான உள்ளுணர்வின் அலைத் தளும்பல்கள் பூராவும் அடங்கியதும், ஒருவாரமோ
பத்துநாளோ கழித்துத் திரும்ப எடுத்து வாசித்துப் பார்ப்பார்களாம்.
“இதை எப்ப
எழுதினே?” என்று தியாகு கதையை நீட்டிக்கொண்டே கேட்டான்.
“என் பீரோவைத்
திறந்து பாத்தியாக்கும்?” என்றேன் கோபமாய்.
“ஒரு கல்யாணத்துக்குப்
போகணும். உன் டிரஸ் எதுவும் சிக்குமான்னு பார்த்தேன்... பாத்தா... கதை!” என்று புன்னகைத்தான்.
கேட்க வேண்டாம்
என்று தான் நினைத்தேன். அடக்க முடியவில்லை.
“கதை எப்பிடிடா?”
“ஒண்ணும்
விசேஷமா இல்லை...” என்றபடியே என் உடையை மாட்டிக் கொண்டான்.
ஆ, நான்
கேட்டிருக்கக் கூடாது!
இதை அனுப்பிப்
பார்ப்பமோ? ச். வேணாம்.
ஆச்சர்யம்.
அந்தக் கதை பிரசுரம் ஆகி யிருந்தது!
“இப்ப என்ன
சொல்ற?”
“அப்டின்னா?”
என்று என்னைப் பார்த்தான் தியாகு. “உன் கேள்வி எனக்குப் புரியல தேவராஜ்.”
“என் கதை
நல்லா இல்லைன்னியே?”
“இப்பவுந்தான்
சொல்றேன்.”
“அப்ப பிரசுரம்
ஆயிருக்கே?”
“அ” என்றான்
தியாகு. “பிரசுரம் ஆயிட்டா? அப்ப நல்ல கதைன்னு அர்த்தம் ஆயிருமா?”
எனக்குத்
திகைப்பாய் இருந்தது.
இக் காலங்களில்
நான் கதைகள் நிறைய எழுத ஆரம்பித்திருந்தேன். சில வந்தன. பல நிராகரிக்கப் பட்டன.
தியாகுவின்
கிறுக்குத்தனம் மாத்திரம் மாறவே இல்லை. பிரசுரமான பல கதைகளை விட, திரும்பி வந்த கதைகளில்
அதிகம் அவனுக்குப் பிடித்திருந்தன.
“ஆனா திரும்பிட்டதே?”
என்றேன் தியாகுவிடம்.
“அதுக்காக?
ஒரு கதை திரும்பி வந்திட்டா அது மட்டம்னு ஆயிருமா என்ன?”
அவன் சொன்னது
எனக்குப் புரிபடவில்லை.
ஆனால் ஒரு
பத்திரிகையில் நிராகரிக்கப்பட்ட என் கதை இன்னொன்றில் முத்திரைக் கதை என்று பிரசுரம்
ஆனது.
“பாத்தியா?”
என்றான் தியாகு.
“முத்திரைக்
கதைன்னு போட்டா அது நல்ல கதைன்னு ஆயிருமா?” என்று கேட்டுவிட்டு நானே தலையை உதறிக் கொண்டேன்.
வரவர தியாகுவாட்டம் பேச ஆரம்பித்திருக்கிறேனோ.
“ஒரு நல்ல
சிறுகதை முன்மாதிரிகள் அற்றது” என்றான் தியாகு. “அதாவது அது பிற்பாடு தன்னைப் போன்ற
மாதிரிகளை உருவாக்க வேண்டும்.”
என்ன அபத்தமான
விளக்கம் இது!
ஒரு நல்ல
சிறுகதை மாதிரிகளை உருவாக்க வல்லதாம். ஆனால் அந்த மாதிரிகள் நல்ல சிறுகதை அல்லவாம்...
அதேசமயம்,
அந்த மாதிரிகளை உருவாக்கிய கதை நல்ல கதையாம்...
நல்ல கதையா
யிருக்கே?
தியாகுவுக்குப்
பைத்தியம் கிய்த்தியம் பிடித்து விட்டதா?
“தியாகு,
என் கதைகளிலேயே உனக்குப் பிடிச்ச கதை எது?”
“உன் முதல்
கதை.”
“அது சரி
மாப்ள, அதைப்போல வேற கதை எதுவும் வந்ததாத் தெரியலையே?”
“அப்டின்னா
அது இன்னும் ஒசத்தியான கதை இல்லியோ?”
“அட நாயே!”
என்று நான் கத்தினேன்.
இந்த விமரிசகர்களுக்கு
ஜனங்களைக் குழப்பிவிடுவதே தொழிலாகி விட்டது.
என் முதல்
கதை எனக்கு திருப்தி தரவில்லை. தந்திருந்தால் நான் இரண்டாவது மூன்றாவது... என எழுதியிருக்க
மாட்டேன். அது தியாகுவுக்குப் புரியவில்லை.
அவன் அதை
விளக்கினால், எனக்குப் புரியவில்லை.
நான் இப்போது
ஒரு முடிவுக்கு வந்தேன். என் முதல் கதை, அதைப் போல நானே இன்னொன்றை எழுதினேன்.
தியாகு அதை
வாசித்துப் பார்த்தான். “ச்” என்றான். “தேறவில்லை.”
என் கதையைப்
போல என்னாலேயே எழுத முடியவில்லை, என்கிறானா?
“இதில் அதன்
உயிர் இல்லை தேவராஜ்.”
“ஒரு நல்ல
கதை, நல்ல கதையா இல்லையான்னு எழுத்தாளன் எப்பிடித் தெரிஞ்சிக்கறது?”
“தெரிஞ்சுக்க
முடியாது!”
“அவனுக்குத்
தெரியாது, ஆனா அவன் நல்ல கதை எழுதிருவான்!”
தியாகு சிரித்தான்.
“ஆமாம்” என்றான்.
“ஏம்ப்பா
ஒரு அளவுக்கு மீறி உளர்றேன்னு உனக்கே புரியலியா தியாகு?” இதைச் சொல்லுமுன், எனக்கே
அவன் பேசுவது புரியவில்லையே என்றிருந்தது.
இப்போது
நான் பிரபல எழுத்தாளன். முன்பு என் நிறையக் கதைகள் நிராகரிக்கப் பட்டன. சில வெளிவந்தன.
இப்போது என் நிறையக் கதைகள் வெளிவந்தன. சில நிராகரிக்கப் பட்டன. ஒரு இதழில் நிராகரிக்கப்
பட்ட கதை இன்னொன்றில் வெளியானதும் உண்டு.
அதிர்ச்சியான
விஷயம். பிரசுரமாக வேண்டும், என ஆர்வப்பட்ட கதைகள் நிராகரிக்கப் பட்டன. அலட்சியமாக
எழுதிய சில கதைகள் பிரமாதப் புகழ் தேடித் தந்ததும் உண்டு.
இதற்கெல்லாம்
அர்த்தமே இல்லை.
இப்போது
என் கதைகளைக் கேட்டு வாங்கிப் போட ஆரம்பித்திருக்கிறார்கள். தியாகு என்னிடம் சொன்னான்.
“தேவராஜ்,
நல்லா இருக்கோ இல்லியோ, உன் கதைகளைப் படிக்க ஜனங்க முடிவு செஞ்சிட்டாங்க. இனியும் உன்னை
மட்டந் தட்டி நான் பேசக் கூடாது.”
“அப்டில்லாம்
நீ மேலும் என்னைக் குழப்பக் கூடாது” என நான் சிரித்தேன். “நீ சொல்றியேன்னு நான் எழுதறதை
நிறுத்தலை, அந்தமட்டுக்குத் தேவலை.”
அப்போது
பிரசுரம் ஆகியிருந்த ஒரு கதையை நான் அவனிடம் கொடுத்தேன். “இது எப்பிடி இருக்கு, படிச்சிப்
பார் தியாகு.”
தியாகு வாசித்து
விட்டுத் திருப்பிக் கொடுத்தான்.
“என்னடா?
கதை எப்படி?”
“ம்.”
“நல்லா இருக்கா?”
“ம்.”
“நல்லா இல்லியா?”
“ம்.”
“அடப்பாவி!”
என்றேன் நான். அவன் கருத்து சொல்வதை நிறுத்திக் கொண்டிருந்தான்.
பிரபல இதழ்
ஒன்றின் சிறப்பு மலருக்காக கதை கேட்டிருந்தார்கள். நான் கதை தருமுன்பே போஸ்டர், விளம்பரம்
என்று அமர்க்களப் படுத்தி யிருந்தார்கள்.
நான் அடுத்த
கதை எழுத உட்கார்ந்தேன். கை நகரவில்லை. சற்று உலவிவிட்டு வந்தேன். கை நகரவில்லை. மதியம்
கதை வாங்கிக் கொண்டு போக ஆள் வந்து விடுமே?
எனக்கு எழுத
வரவில்லை. ஏமாற்றமாக இருந்தது. என்னாயிற்று எனக்கு?
என்னால்
எழுதவே முடியாதா?
ஆச்சர்யம்.
எனக்குக் கதை எழுத வரும் என உலகம் நம்பியபோது எனக்கு எழுத வரவில்லை, என நான் உணர்ந்தேன்.
வாழ்க்கையில்
அபத்தங்களுக்கு அளவே இல்லை!
“தியாகு?”
“என்னடா?”
“என்னைத்
திட்டுடா, ப்ளீஸ்” என்றேன் நான்.
•
storysankar@gmail.com
91 97899 87842
WAh super narration.
ReplyDeleteSankaranarration rather .
Delete