இனி நம் முறை
எஸ். சங்கரநாராயணன்
அவர்கள் இன்னும் நண்பர்களாகத்
தான் இருக்கிறார்கள். என்றாலும் திடீரென்று எதோ அவர்களுக்கு ஆகிப் போகிறது. அல்லது
நமக்கு திடீரென்று எதோ ஆகிவிட்டதாக அவர்கள் நினைக்கவும் செய்யலாம். பெரும்பாலும் எளிமையாய்
இருந்து நாம் ஏமாந்த சந்தர்ப்பங்கள் அதிகம். எந்தக் காரணமும் இல்லாமல் நமக்கு எதிராக
நாம் அறியாமல் வேலைகள் நடக்கின்றன. இதை ஊழ் என்பதா? திடுதிப்பென்று வானம் மூடி மழை
கொட்டத் தொடங்கி விடுகிறது. முன்னரே எதிர்பார்த்திருந்தால் குடையாவது எடுத்துக் கொண்டு
வந்திருக்கலாம். நம்மைச் சுற்றி நம்மைப் பற்றி வேறெதோ நடந்திருக்கிறது, என பின்னாளில்
அறிகிற போது, நாம் எவ்வளவு வெள்ளந்தியாக இருந்திருக்கிறோம் என வெட்கமாய், வருத்தமாய்
இருக்கிறது.
சந்திரசேகரை முட்டாளாக்கி
வி.பி.சிங் பிரதமராகப் பதறி யேற்கவில்லயா? தேர்தல் வெற்றிக்குப் பின் (ஜனதாதளம்) வி.பி.சிங்
தன் கட்சி சார்பில் பிரதமராக விரும்பினார். அப்போது கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர்
என மேலும் இருவர் போட்டியிட ஆர்வம் காட்டினர். ஒருவர் தேவிலால். மற்றவர் சந்திரசேகர்.
இருவரையும் எப்படிச் சமாளிப்பது, என வி.பி.சிங் ஒரு திட்டம் தீட்டினார்.
தேவிலாலுக்கு துணைப்
பிரதமர் பதவி தர அவரே தேவிலாலிடம் பேரம் பேசி ஒத்துக்கொள்ள வைத்தார். சந்திரசேகரிடம்
இப்படிப் பேரம் பேச முடியாது. அதனால் ஒரு இரகசிய ஏற்பாடு செய்தார் வி.பி.சிங். மூவருமாய்க்
கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் தேர்தலுக்கு முன் பேசிக் கொண்டார்கள். கட்சி எம்.பி.க்கள்
யாரைத் தேர்வு செய்கிறார்களோ அதன்படி கட்டுப்படலாம், என பொது முடிவு எடுத்தார்கள்.
பிரதமர் வேட்பாளருக்கு வி.பி.சிங்கை சந்திரசேகர் முன்மொழிய வேண்டும். சந்திரசேகரை பிரதம
வேட்பாளராக வி.பி.சிங் முன்மொழிவார். பின் தேர்தல் நடக்கும்.
இந்த வலையில் சந்திரசேகர்
வீழ்ந்தார். அவர் தன்னை முன்மொழிய வேறு யாரிடமும் கேட்டுக்கொள்ளவில்லை. கூட்டம் துவங்கியதும்
வி.பி.சிங் தேவிலாலைத் துணைப் பிரதமராக முன்மொழிந்தார். மாற்றுக் கருத்து இல்லாமல்
அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டது. இனி பிரதமருக்கான தேர்வு. சந்திரசேகர் எழுந்து வி.பி.சிங்
பெயரை முன்மொழிந்தார். அதற்கும் மறுப்பு கிளம்பவில்லை. இப்போது வி.பி.சிங் சந்திரசேகர்
பெயரை, போட்டி வேட்பாளராக அறிவிக்காமல் மௌனம் காத்தார். போட்டியின்றி வி.பி.சிங் தேர்வு
பெற்றதாக அறிவிக்கப் பட்டது!
என்ன மோசடி நடந்தது
என்றே தெரியாமல் திகைத்துப் போய்விட்டார் சந்திரசேகர். காமெரா அவரை நெருக்கத்தில்,
அவரது உணர்வுகளை உலகம் பூராவுக்கும் காட்டியது. அப்போது அவர் சொன்ன வார்த்தைகளை நான்
என் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது. சந்திரசேகர் சொன்னார்.
“ஏமாறுவதில் என்ன
கேவலம் இருக்கிறது. நான் ஒருவரை நம்பியது தவறா? ஆகவே ஏமாறுவது தப்பு இல்லை. ஆனால் ஏமாற்றுவது
மோசமானது.”
காலம் அப்படி ஏமாற்றுப்
பேர்வழிகளை, நம்பிக்கை துரோகிகளை அவ்வப்போது நமக்கு காட்டிக்கொண்டு தான் இருக்கிறது.
அவர்கள் மாற மாட்டார்கள். முடிந்தால் நாம் தான் மாற வேண்டும். முடியுமா?
முன்பொரு பதிவில்
கண்ணன் மகேஷ் பற்றிச் சொல்லவில்லயா, சும்மா இருந்தாலும் கிட்டவந்து குடிகார மோதல்கள்…
லாரி தெருத் தண்ணியை வாரியடித்து உடையை நனைத்துவிட்டுப் போகிறது.
வெளிப்படையான வாழ்க்கை
யாருக்குமே ஒத்துவராதோ என்னவோ. அப்படி அமையாதோ, என ஆதங்கப் படுவதைத் தவிர, வருத்தப்படுவதைத்
தவிர வேறு போக்கு இல்லை. நாம் மாறிக் கொள்ளவும் முடியாது.
இப்படி நடந்து விட்டதைப்
பின்னாளில் அறிகிற போது அந்த நிகழ்வுகளோடு அதைத் தொடரும் சந்தர்ப்பங்களில் ஒரு சுவாரஸ்ய
ரகசியத்துடன் நாம் விளையாட ஆரம்பிக்கிறோம். பின் விளைவுகளின் வேடிக்கை ரசமானது. உன்
கபட முகம் எனக்குத் தெரிந்து விட்டது, என நாம் சொல்லாமல் சொல்லி ஆடும் ஆடுபுலி ஆட்டம்.
அதில் சில சமயம் நாம் ஆடு. அது முதல் கட்டம். அவர்கள் பசுத்தோல் போர்த்திய புலி. பிறகு,
அதன் அடுத்த கட்டம்… நாம் புலி. புலியாக மாறிய பசு. இப்போது நம் முறை.
இனி நம் முறை.
ஒரு பாம்புக்கு முனிவர்,
யாரையும் கடித்து விடாதே, அது பாவம், என்று அறிவுரை வழங்கப் போக, அது கடிக்காது என்று
தெரிந்ததும் ஆளாளுக்கு அதைக் கல்லால் அடித்துச் சிரித்தார்களாம். அது உடலெங்கும் ரணகளமாக
முனிவரிடம் வந்தபோது, அவர் அதனிடம், கடிக்காதே என்றுதான் சொன்னேன், சீறாதே என்று சொன்னேனா,
என்று கேட்டதாக நம்மில் கதை உண்டு.
நானும் சீறி யிருக்கிறேன்!
சரித்திரக் கதைகள்
என்று அவர் எதோ எழுதுகிறார். அவரை நான் கிண்டல் செய்திருக்கக் கூடாது. அது நோக்கமும்
அல்ல. என் இயல்பு அது. நமது எளிமையும் முக பாவமும் சிறு அசைவுகளுமே நம்மைக் காட்டிக்
கொடுத்து விடுகின்றன. அவற்றை மறைத்துப் பேசுதல் நமக்கு வழக்கமும் இல்லை. எனக்கு ஒரு
தீவிரமான கருத்து உண்டு. முழுக்கவே எழுதி அதனால் வரும் வருமானத்தில் சாப்பிடுகிறவர்களை
பொதுவெளியில் நான் விமரிசித்துவிட மாட்டேன். அது அவர்கள் தொழிலை பாதிக்கும் என்பது
என் கருத்து. நம்மால் அப்படி நிகழ்ந்துவிடக் கூடாது, என்பதில் நான் கவனமாய்த்தான் இருக்கிறேன்.
இவரும் அப்படி ஒரு நபர் தான். இவரையே பாவம் என்கிறவன் நான். இவருக்குப் பத்திரிகை கொடுத்து
வைத்திருந்தவன் மகான் அல்லவா?
அசோகமித்திரன், பிரபஞ்சன்,
எஸ்.ராமகிருஷ்ணன், பா.ராகவன் இப்படி முழுநேர எழுத்தாளர்கள் என்னை ஆச்சர்யப் படுத்துகிறார்கள்.
தமிழ்மகன், சுந்தரபுத்தன், கதிர்வேலன்... இப்படிப் பாத்திரிகையாளர்களும் ஒவ்வொரு முறை
பார்க்கும் போதும், இப்ப... என்று நான் ஆரம்பிக்கையில் வேறு பத்திரிகையில் சேர்ந்து
விட்டதாகச் சொல்வார்கள். ஒருமாதிரி தத்தளிப்பாகவே வாழ்கிறார்கள். எழுத்து சோறு போடுமா
என்பதில் எனக்குத் தயக்கம் உண்டு. நான் இந்த பி.எஸ்.என்.எல் வேலைக்கு வந்ததே, சாப்பாட்டுப்
பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளலாம், எழுத்து எனக்கு ஆதர்சம் என வரித்துக் கொள்ளலாம்,
என்கிற ஏற்பாட்டுக்குத்தான். அது ஓரளவு வெற்றிகரமாகவே தொடர்கிறது, என்றுதான் சொல்லவேண்டும்.
வரும் 2019 ஜுலை பணி ஓய்வும் ஆகப் போகிறது. என் முதலாளிக்கு விடுதலை.
எழுதிப் பிழைக்கிறவர்களை
நான் அவர்கள் எழுத்தில் குறை கண்டு விமரிசனம் என்கிற கெடுபிடி கொண்டு பார்த்து கருத்திடுவது
இல்லை, என்கிற வழக்கம் முன்பு இருந்தது. என்றாலும் பிரமைகள் எனக்கு சகிக்க வொண்ணாத
விஷயம். தலைவீக்கம் அவலட்சணம் எனக்கு. நண்பர்கள் முன்னால் பாவனைகள், நடிப்புகள், போலிக்
கொண்டாட்டங்கள் தேவையே இல்லை. நட்புக்கு எதிரானவையே அவை. அந்த இருவரையும் நண்பர்களாகக்
கருத முடியாது. நடிப்பை நடிப்பென உரித்துக் காட்டா விட்டால் நமக்குத் தலையும் வெடித்து
விடுகிறது. இந்த உலகத்தைத் திருத்துவதா நம் வேலை? இல்லை தான். குறைந்த பட்சம் அந்த
நபரையாவது திருத்த முடியுமா? அது கூட அல்ல. உன் வேலையை என்னிடம் காட்டாதே, என்றாவது
சொல்லாமல் எப்படி என்று தோன்றி விடுகிறது. சீண்டப்படும் போது சீற வேண்டி வந்து விடுகிறது.
அதில் பல உத்திகளும் உள்ளன.
சரித்திரக் கதைஞருக்கு
முன் வேறொரு சம்பவம் சொல்லி விடலாம். நாம் ஒன்றும் ஏமாளி அல்ல, ஏமாளி என்று நினைத்தால்
நாம் யார் என்று அவர்கள் புரிந்துகொள்ளும் அளவில் அந்தச் சூழலைக் கையாளவும் நம்மால்
ஆகும், என்கிற உதாரணம் இது.
அவர் என்னுடைய பதிப்பாளர்களில்
ஒருவர். எனது எழுத்தில் மயக்கம் காட்டிய ஒரு வங்கி அதிகாரி எனக்கு வங்கிக் கடன் அளிக்க
முன்வந்தார். “எனக்கு வேண்டாம். உங்கள் அன்புக்கு நன்றி. எனது பதிப்பாளருக்கு உதவி
செய்யுங்கள்,” என்று சொல்லி அந்தப் பதிப்பாளருக்கு ஒரு பத்தாயிரம் வாங்கிக் கொடுத்தேன்.
ஐஓபி. 1995, 96 வாக்கில் நடந்திருக்கலாம் இது. கடனுக்கு நானும் பொறுப்புக்கடிதம் தந்திருந்தேன்.
அந்த மனுசன் பாருங்கள், முதல் மாதத் தவணையே கட்டவில்லை. முதல் மாதம் முடிந்து, கூட
ஒரு மாதம் வரை பொறுமை காத்த வங்கி, அடுத்து எனது அலுவலக முகவரிக்கு, எனக்குக் கடிதம்
அனுப்பினார்கள், கடன் பாக்கியைச் செலுத்துங்கள். அப்போது தான் எனக்கு இந்த மனுசன் முதல்
தவணையே கட்டவில்லை என்பது தெரியும். இப்படி கடன் கட்டச் சொல்லி எனக்கே நோட்டிஸ் வருவது…
புதிய அனுபவம் அது. என்னுடைய கடைசி அனுபவமும் அது தான். எதையுமே கடனாகவோ, தவணை வசதியுடனோ
வாங்குவது எனக்கு அறவே பிடிக்காது. உடம்பு நடுங்கி விட்டது. சும்மா இருந்த அந்தப் பதிப்பாளரை,
வாங்க, என அழைத்துப்போய் நாமதானே கடன் என்று பெரிய தொகை வாங்கிக் கொடுத்தோம். நமக்கு
இது தேவையா, இந்த அவமானம்?... என்றாகி விட்டது. அவரை எப்படிப் பணத்தைக் கட்ட வைப்பது?
நான் அந்த நபரிடம்
போனேன். “வங்கி மேலாளர் நம்ம மனிதர் தான். 10000 என்பது முதல்கட்ட சிறிய தொகை. இதை
வாங்கின மாதிரி வாங்கிக் கொண்டு ஓரிரு மாதத்தில் முழுத் தொகையும் அடைத்து நல்ல பெயர்
வாங்கிக் கொண்டால் 25000 என்று இதைவிடப் பெரிய தொகை அடுத்து கடன் வாங்கிக் கொள்ளலாம்”
என்று பதிப்பாளர் காதில் போட்டேன். எங்கே எப்படிப் புரட்டினாரோ, மனிதன் வட்டியுடன்
அந்த 10000 தொகையை அடைத்து விட்டார்.
அத்தோடு அவருக்கு
வணக்கம் சொன்னது தான்.
ஔரங்கசீப் பற்றி
ஒரு கதை சொல்வார்கள். அது நினைவு வருகிறது. ஔரங்கசீப்பின் மகன் ஒருவன். அவரோடு என்னவோ
முரண்பட்டு அவரது எதிரிநாட்டு மன்னனோடு போய்ச் சேர்ந்து கொண்டான். ஒருவேளை இந்த நாட்டு
ரகசியங்களை யெல்லாம் அவன் எடுத்துக் கொடுத்து தன் மீது படையெடுத்து எதிரி நாட்டு மன்னனை
அழைத்துவந்து என்னை வென்று தான் ஆள நினைக்கிறானோ, என ஔரங்கசீப் யோசித்தார். அவர் மகனுக்கு
ஒரு கடிதம் எழுதினார். “மகனே உன் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும்
நீ ஜாக்கிரதையாக அந்த மன்னன் உன்னை சந்தேகிக்காதபடி நடந்து கொண்டு அந்த நாட்டு ரகசியங்களை
எனக்கு அனுப்ப வேண்டும்.” அதை ஒரு ஒற்றன் மூலம் அவனுக்குக் கொடுத்தனுப்வுது போன்ற பாவனையில்
அந்த ஒற்றனை எதிரியிடம் மாட்டிக் கொள்ளச் செய்தார். மீதிக்கதை? என்ன ஆகும், உங்களுக்குத்
தெரியாதா?
•
இவர் பத்திரிகையாளர்.
சரித்திரக் கதைக்கும் சமூகக் கதைக்கும் எழுதுவதில் என்ன வித்தியாசம், என அவரிடம் ஒரு
பேட்டியில் கேட்டார்கள். “சரித்திரக் கதைகளில் மின் கம்பஙகள் வராது” என்று அவர் சொன்னபோது
அவர் முகத்தில் எத்தனை அறிவுக்களை. அவர் அதை நம்பிக் கொண்டிருப்பது தான் அதில் எனக்கு
ஆச்சர்யம். வட்டங்கள் உள்ளும் புறமும், என நான் எழுதிய ஒரு சிறுகதையில் அவர் வருகிறார்.
அம்புலிமமா கதைகளை சரித்திரக் கதைகள் எனலாமா, என்றுதான் அதைத் துவங்குவேன்.
நண்பன் ரமேஷ் வைத்யா
சிரித்தபடி சொல்வான் - விஜயபுரி என்ற நாட்டை விஜயன் என்ற அரசன் ஆண்டுவந்தான், என்று
எழுதுகிறார்கள். அடேய் அவங்க ஐயா ஆண்டப்போ நாட்டுக்கு வேற பெயரா இருந்தது? ஆளு சாகச்
சாக நாட்டோட பெயரை மாத்திக்குவாங்க போல!
ஒருநாள் அவருடன்,
சரித்திரப் புகழாளருடன் அவரது பத்திரிகை அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தேன். 1990
களில் ஒரு நிகழ்வு. எங்க பத்திரிகைலல்லாம் எழுத மாட்டீங்களா சங்கரநாராயணன்? நாங்க இலக்கியப்
பத்திரிகை இல்லையா, என்று தன்மையாகத் தான் கேட்டார். என் கெட்ட நேரமா என்ன தெரியவில்லை.
க்ளுக். அத்துடன் அந்தச் சிரிப்பை நான் அமுக்கி விட்டேன். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால்,
இம்மாதிரி மனுசர்களுக்கு, யாராவது தங்களைக் கிண்டல் பண்ணினால் உடனே அது புரிந்து விடுகிறது.
அதாவது நம்மைக் கிண்டல் செய்யப் போகிறார்கள், என அவர்கள் ஒரு தயாருடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்!
அவர் முகம் பாழடைந்து
போனது. சரித்திர இருட்டு.
அவரது பத்திரிகையின்
ஓர் இதழ் தயாரித்துக் கொடுத்தேன் நான். சில்வியாவின் சிறப்புச் சிறுகதை, நீலமணியின்
ஒரு கவிதைநூல் அறிமுகம், புதுக்கவிதை பண்ணுவது எப்படி, என எனது கிண்டல் கட்டுரை எல்லாம்
இருந்தது அதில். அவருக்கு இதழ் பிடித்திருந்தது. இதழ் தயாரிக்கும் போதுதான் இந்த உரையாடல்
நடந்ததா தெரியாது. நினைவில்லை. அதன் பின்னால் அவர் வேறு பத்திரிகையின் ஆசிரியராகவும்
பணியமர்ந்தார். முகம் சுருங்கிய அந்தக் கணத்தில் இருந்து என் கதைகளை வாசிக்காமலேயே
நிராகரிக்கிறவராய் இருந்தார் அவர். பிற்காலத்தில் தானே ஒரு தனி இதழ் நடத்தினார். தற்போது
அவர் உயிருடன் இல்லை. தனது சரித்திரக் கதாபாத்திரங்களோடு போய்ச் சேர்ந்திருக்கலாம்
அவர்.
அவரது உதவியாசிரியர்கள்
என் கதைகளை எடுத்து அவரது மேசையில் வைப்பார்கள்.
அதை மாத்திரம் அப்படியே திருப்பித் தருவார் அவர். வாசிக்க மாட்டார். “அவங்க
நம்மள மதிக்க மாட்டாங்கப்பா. நாம ஏன் அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்?” என
அவர் சொன்னதாக ஓர் உதவியாசிரியர் என்னிடமே சொன்னார் வருத்தத்துடன். எனக்கு வருத்தம்
எல்லாம் இல்லை. என் கதைகள் அதைவிடப் பெரிய இதழ்களில் எல்லாம் நல்ல பெயருடன் வருகின்றன.
சிறப்பு அழைப்புகள். ஒரு வருடம் எட்டு தீபாவளி மலர்களில் கதை எழுத வாய்ப்பு கிடைத்தது.
அதைவிட வேறென்ன மரியாதை வேண்டும் ஓர் எழுத்தாளனுக்கு.
வேறு வேறு சந்தர்ப்பங்கள்
அவரை நான் சந்திக்கும்படி அமைந்தன. என்னைப் பார்த்த ஜோரில் அவரிடம் ஒரு ஜாக்கிரதை உணர்வு,
உள் பம்மல் வருவதை ரசிக்க கண் கோடி வேண்டும். நான் வலியப் போய் அவரிடம் பேசுவேன். (முன்பொரு
பதிவில் ஐராவதம் பற்றிச் சொன்னேன் அல்லவா? அதைப்போல எனக்கு இன்னொரு உறவு இவர். ஐராவதம்
நம்பர் 2.)
ஒருமுறை ‘படகுத்துறை’
என்கிற என் சிறுகதைத் தொகுதி பரிசு பெற்றது. (என்.சி.அனந்தாச்சாரி அறக்கட்டளை.) அந்த
விழாவில் அவரையும் பேச அழைத்திருந்தார்கள். அழைப்பிதழைப் பார்த்ததுமே அவருக்கு வாட்டம்
கண்டிருக்கும். உள்ளே ஆட்டம் கண்டிருக்கும். விழா அரங்கத்தில் அவரை நோக்கி நேரே வந்தேன்.
நான் வரும்போதே அவர் காதில் அந்த முன் சம்பவம் நிழலாடும்படி அவரையே கூர்ந்து பார்த்தபடி
வந்தேன். (“எங்க பத்திரிகை இலக்கியப் பத்திரிகை இல்லியா?” க்ளுக்- என்ற சிரிப்பு.)
அதன் தொடர்ச்சி போல, அவரைப் பார்த்து, “நீங்க எப்பிடி இங்க?” என்று அழுத்தமாய்க் கேட்டேன்.
உடல் நடுங்க தூக்கிவாரிப் போட்டது அவருக்கு. “ஏன் நாங்கல்லாம் இங்க வரப்டாதா?” என்றார்
பதட்டமாய்.
அவரைப் பொறுத்தமட்டில்
க்ளுக்கின் கொடுக்கை நான் கடைசிவரை உள் மடக்கவே இல்லை.
பள்ளி கல்லூரிக்
காலங்களின் அதே தலைபடியாத திமிர், இம்மாதிரி சில சந்தர்ப்பங்களில் என்னிடம் மேலெழுந்து
வந்ததோ என்னவோ.
•
இது ஒரு பெண்மூலம்
எனக்கு வந்த வினை. அவரும் கதை கவிதை என எழுதுகிறவர் தான். என்மேல் மிகுந்த நட்பும்
மரியாதையும் உள்ளவர் தான். ஆனால் யாரிடம் என்ன பேசக் கூடாதோ அதை சட்டெனப் பேசி விடுவார்.
அவரது புத்தகத்துக்கு அட்டைப்படம் டிசைன் பண்ண என்று ஒரு நண்பரிடம் அழைத்துப் போகிறேன்.
அந்த நண்பரும் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டவர் தான். நேரே அவரிடம் “உங்க கவிதைகள்ல
விஷயமே இல்லியே?” என்று ஒருபோடு போட்டார் இந்த மகா கவி.
தற்போது கொடிகட்டிப்
பறக்கும் இரு இலக்கியவாதிகள், ஒருவர் கதைஞர், ஒருவர் கவிஞர், மற்றும் பதிப்பாளர். இருவருமாக
திருச்சியில் ஒரு எழுத்துப் பட்டறையில் இவரை, இந்தப் பெண்மணியை சந்தித்துப் பேசினார்கள்.
அந்தப் பெண்மணி கதைஞரிடம் அதிகம் பேசியது, கவிஞருக்குப் பொறுக்கவில்லை. தனியே அந்தப்
பெண்ணை அழைத்து, “அவன்கூட அதிகம் பேச வேண்டாம்” என்கிறாப் போல, என்ன ஒழுக்க சிந்தனை,
அறிவுரைத்திருக்கிறார். இந்தப் பெண் சும்மா இல்லாமல் என்னிடம் ஒரு தொலைபேசி அழைப்பில்
இதைச் சொல்ல, நான் “இலக்கிய உலகம் பழகறதுக்கு அத்தனை நலல விஷயம் இல்லை போலிருக்கே”
என்கிறதாக என் பங்குக்கு எதோ சொல்லிவிட்டேன்.
ஒரு நகைச்சுவை கேள்விபட்டது
உண்டா?
ஏன்டி அவகிட்ட சொல்லாதேன்னு
நான் உங்கிட்ட சொன்னதை நீ அவகிட்ட ஏன் சொன்னே?
ஐயோ அவகிட்ட சொல்லாதேன்னு
நீ என்கிட்ட சொன்ன விஷயத்தை நான் அவகிட்ட சொன்னதை அவ உன்கிட்ட சொல்லிட்டாளா?
சரி சரி. அவகிட்ட
சொல்லாதேன்னு நான் உங்ககிட்ட சொன்னதை நீ அவகிட்ட சென்னதைப் பத்தி அவ என்கிட்ட சொன்னதை
நான் உங்கிட்ட கேட்டதா நீ அவகிட்ட சொல்லிறாதே.
அநேக சமயங்களில்
பெண் விஷயங்கள் அப்படி றெக்கை கட்டுகின்றன.
அத்தோடு விஷயம் முடிந்திருக்கலாம்.
இந்தப் பெண் நான் சொன்னதை, அந்த மிகப் பிரபலக் கதைஞரிடம் அலைபேசி உரையாடலில் சொல்லிவிட்டது.
அந்த மனுசனுக்கு கவிஞர் மேல் கோபம் வந்திருக்க வேண்டியது, அதானே அப்பா நியாயம்? ஆனால்
அவர் கோபம் என்மேல் திரும்பி விட்டது. பெரும் சுற்றிதழ் ஒன்று நடத்தும் சிற்றிதழ் பாணி
பததிரிகையில் அவர் மாதாமாதம், கதையா கட்டுரையா வாழ்பனுவமா என்று பிரித்தறிய முடியாத
ஒரு ‘பத்தி’ எழுதிக் கொண்டிருந்தவர், அதில் நடுவே என்னை ‘நாட்டுநாய்’ என்று குறித்து,
நாட்டுநாயின் இலக்கணங்களைப் புட்டுப் புட்டு வைத்து, அத்தனையும் எனக்குப் பொருத்தமாய்
இருப்பதாகக் கொண்டுவந்தார். அட, தற்செயலாக நான் அதை வாசிக்க நேர்ந்தது!
ஏற்கனவே அவரது மகத்தான்
ஒரு நாவலை நான் உரித்துத் தோரணம் கட்டி யிருந்தேன். அந்தக் கோபம் இத்தோடு சேர்ந்து
கொண்டதா தெரியவில்லை. எழுத்தாளனுக்கு அப்படிப் பொறுமையற்ற ஆத்திரம் எப்படி வருகிறது
தெரியவில்லை. எனக்கு இது தேவையே இல்லை. நான் அந்தப் பெண்ணிடம் தற்கால இலக்கியவாதிகள்
பற்றி அப்படிச் சொல்லாமலாவது இருந்திருக்க வேண்டும். அது என்னைப் பார்க்க துப்பாக்கி
குண்டுகளைத் திருப்பி விட்டிருக்கிறது.
அடுத்த வார ‘திண்ணை’
இணைய இதழில் என் சிறுகதை. ‘நாட்டு நாய்களும் நகரத்து நாய்களும்.’ நாய் என்று வந்துவிட்டால்,
நாட்டுநாய் என்ன நகரத்து நாய் என்ன, எல்லாமே நக்கிதான் குடிக்ணுமப்போவ், என்கிற எகத்தாளமான
த்வனி பொதிந்த கதை. அதில் இலக்கிய உலகில் நான் கேள்விப்பட்ட பிற அக்கப்போர்கள் இரண்டு
மூன்றை உள்ளடக்கி கதையாக்கி யிருந்தேன். அதன் கடைசிவரி “இதையும் திட்டி எழுதுவது உன்
தீராவிதி” என முடியும்
அதை அவர் வாசித்துவிட்டு,
அடுத்த தொடரில் எனது நண்பனைக் கேலிசெய்து, அந்த எழுத்தாளனைச் சுற்றி தூசும் தும்பும்
பறக்கின்றன, என ஒரு கதை எழுத, நான் எனது அடுத்த கதை என் நண்பன் அப்பாவிதான், ஆனால்
அயோக்கியன் அல்ல என்கிற பாணியில், கதை இரண்டு, எழுத, அதையும் வாசித்துவிட்டு, அவர்
சிறிது மௌனம் காத்தார்.
என்று பார்த்தால்,
இந்த விஷயம் அந்தக் ‘கவிஞர்’ காதுக்கும் போய்விட்டது. கதைஞர் சொன்னாரா, அல்லது அந்தப்
பெண்மணியே உளறித் தொலைத்ததா தெரியாது., பிரபல இதழில் அவர் இதைவைத்து நடுப்பக்கத்தில்
கவிதை எழுதினார்.“எழுதினால மாட்டிக் கொள்ளாமல் எழுதத் தெரிய வேண்டும்…” இப்படி இருந்தது
அந்தக் கவிதை. எனது மூன்றாவது கதைக்கு அவசியம் ஏற்பட்டு விட்டது இப்போது. அவர்கள் மூவரையும்
முன்கொணர்கிற மாதிரி, மாதர்குழல் விளக்கு, என ஒரு கதை நான் தந்தேன். அதுவும் அந்த வளாகத்தில்
வளைய வந்திருக்க வேண்டும். இப்போது சிற்றிதழில் அந்தக் கதைஞர் ஒரு சமாதானக் கொடி அசைக்கிறார்.
“இனி அவரவர் பாதை அவரவர்க்கு” என்கிற மாதிரி. பிறகு எனது நான்காவது கதை இந்தியா டுடேயில்
வெளிவந்தது. ‘தோணியும் அந்தோணியும்.’ பெருமாள் கோவில் குருக்களின் மகனும், மீனவனின்
மகனும் பள்ளியில் ஒன்றாய்ப் படித்த நண்பர்கள். மீனவப் பையன் கடலில் காணாமல் போய்விடுகிறான்.
இந்த குருக்களின் பையன் மீனவப் பையனின் அப்பாவிடம் துக்கம் கேட்டு மௌனமாக நிற்கிறான்.
இருவரும் ஒருவரை ஒருவர் மௌனமாகப் புரிந்து கொள்கிறார்கள்... என்கிற அடிப்படைக் கருவில்
அமைந்த கதை அது.
இந்த நான்கு கதைகளுமே
எனது சிறுகதைத் தொகுப்பு ‘கடிகாரத்தை முந்துகிறேன்’ நூலில் வாசிக்கக் கிடைக்கும்!
தனியே வாசித்தாலும்
சுவை குறையாத கதைகள் இவை. இந்தப் பின்னணியோடு வாசிக்க அதிக ருசி கிடைக்கும்.
•
இது தவிர, இலக்கிய
உலகில் தனக்கென தனியிடம் கிடைத்து கொண்டாடப்பட்டு வருகிற ஒரு நபர். அவர் ஒரு இலக்கிய
இதழின் ஆசிரியராகவும் இருந்தார். எனக்கு அவர் எழுத்தில் ஒரு மயக்கமான மரியாதை உண்டு.
அந்த இதழுக்கு ‘காமதகனம்’ என ஒரு கதை அனுப்பினேன். அண்ணியைக் குளிக்கும் போது எட்டிப்
பார்த்து விடுகிறான் ஒரு பையன். எதிர்பாராமல், அவன் குளியல் அறைக் கதவில் கண் வைக்கப்
போன சமயம் கதவு திறந்துவிடுகிறது. சட்டென அந்தக் கதவு அவன் முகத்தில் அறைய அவனது ‘சில்லுமூக்கு’
உடைந்து விடுகிறது.“ஐயோ” என்று பதறுகிறாள் அண்ணி. தன்னை அவன் நிர்வாணமாகப் பார்த்தது
அல்ல, அவன் மூக்கு உடைந்தது தான் அவளது அப்போதைய பதட்டமாய் இருக்கிறது. தன்னையே வெறுத்து
வெளியே ஓடுகிறான் அவன்.
அண்ணா அலுவலகம் முடிந்து
இரவு வீடு திரும்புகிறான். தம்பியைத் தேடி வருகிறான். தெருவோர பஜனை மடத்தில் தம்பியைப்
பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்படி அழைக்கிறான். தம்பி வெட்கப்படுகிறான். பிறகு “அண்ணா
நீ ஒண்ணு புரிஞ்சிக்கணும். அந்த நிமிஷம் நான் அவளை அண்ணியாப் பார்க்கல்ல. ஒரு பெண்ணாத்தான்
பார்த்தேன். நான் ஆணாயிருந்தேன் அப்போது. உன் தம்பியா இல்லை…” என்று பேசிக்கொண்டே வருகிறான்.
“என் தங்கையோடு நான்
தெருவில் வரும்போது யாராவது பார்த்தால் எனக்கு ஒருமாதிரி பிடித்திருக்கிறது என்பது
உண்மைதான். தங்கையுடன் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா என்ன? ஆனால் ஒண்ணு நீ புரிஞ்சுக்கணும்.
SURVIVAL OF THE FITTEST, இது இயற்கையின் விதி. சமூகமா மனுசன் வாழ ஆரம்பித்தபோது அவன்
புது விதி ஒணணு வெச்சிக்கிட்டான். SURVIVAL OF EVERYBODY. அந்த விதியை மதிக்க நாம கத்துக்கணும்.
மதிச்சாகணும். இல்லாட்டி என்னாகும், உன்னைவிட பலசாலிகிட்ட உன் பொக்கிஷங்களை நீ பறிகொடுக்க
வேண்டி வரும்.” அண்ணா பதில் சொல்கிறான்.
இப்படிப் போகிற கதை
அது.‘காமதகனம்’ என்ற என் இரண்டாவது தொகுப்பில் உள்ள கதை. இந்தக்கதை அந்தப் பத்திரிகையில்
இருந்து திரும்பி வரவில்லை. வெளியாகவும் இல்லை. புத்தகம் என்று வந்தபோது நான் இரண்டாவது
தடவையாக எழுதினேன். அந்த மகா எழுத்தாளர் இந்தக் கதையை நிராகரிக்கட்டும். அதைப் பற்றி
என்ன? ஆனால் அடுத்த இரண்டு மாதத்தில் ஒரு பிரபல வார இதழில் அவர் ஒரு கதை எழுதினார்.
அதுதான் அவரது கடைசிச் சிறுகதை என்று தோன்றுகிறது. அவர் மறைந்துவிட்டார் இப்போது.
வானத்தில் ஊர்வசி
போகிறாள். அவளை வழிமறித்து தன் காதலைச் சொல்கிறான் பிரம்மதேவன். என்னைப் படைத்தவன்
நீதானே? நீயே என்னைப் பார்த்து மையல் கொள்ளலாகுமோ, என அவள் கேட்கிறாள். நான் பிரம்மதேவன்
அல்ல, ஓர் ஆண்மகனாகத் தான் இப்போது நான் உன்னைப் பார்க்கிறேன்… என அவனது வாதங்கள் அமைகின்றன.
இதை யாரிடம் முறையிட
முடியும் நான்?
பின்னாளில் நான்
அவரது நடையிலேயே ஒரு கதை, ஒரு சவாலுக்காக எழுதினேன். அவரது பிரபலமான ஒரு சிறுகதையைக்
கையில் எடுத்து, அதில் உள்ள அபத்தங்களை விவரித்து அதை மேலடி அடிக்கிறாப் போல என் சிறுகதை
‘பிரபஞ்ச ரகசியம்.’ புதிய பார்வை இதழில் வெளியானது. அவரது கதை போலவே பாதிக் கதை அமையும்.
அந்தக் கதையை இந்த எழுத்தாளரிடம் ரயிலில் ஒருவர் சொல்லிக்கொண்டே வருவார். பாதியில்
நிறுத்தி, மீதிக் கதையயை நீ சொல்… என்பார். தான் எழுதியபடி அந்த எழுத்தாளர் கதை சொல்ல,
“அப்படி இல்லை. அதில் இத்தனை பிழை இருக்கிறது. இதோ அதன் முடிவு” என எதிர் இருக்கைக்காரர்
கதையை, தன் வாழ்க்கைக் கதையை முடிப்பதாக என் கதை.
இப்படி சில கதைளின்
உற்பத்திக் களங்கள் சுவாரஸ்யமான பின்னணி கொண்டவை. இதன் இன்னொரு விதம் இருக்கிறது. அதை
ஒரு பதிவில் சொன்னால் ஆயிற்று!
---
பின்குறிப்பு
பொதுவாக கதை எழுதி
அதன் குறிப்பாக “இதில் வரும் சம்பவங்கள், காட்சிகள் என் கற்பனையே. யாரையும் புண்படுத்தும்
நோக்கத்துடன் நிஜ வாழ்க்கையில் இருந்து கையாளப் பட்டவை அல்ல,” என்று எழுதுவார்கள்.
இது கட்டுரை. நிஜ வாழ்க்கை. இது புண்பட்ட நோக்கத்தில் எழுதப் பட்டது.
***
storysankar@gmail.com
91 97899 87842
Best 8 casinos in South Africa - Mapyro
ReplyDeleteWhat 김천 출장안마 are the best casinos in South 진주 출장안마 Africa? We list the top 10 casinos that have a total 경주 출장안마 of 4200 slots. 동해 출장마사지 This includes table games, live games, 나주 출장마사지