Friday, January 4, 2019


23

பத்திரிகைப் பேராளுமை

ணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கிகாரத்துடனும் தானாக அமைத்துக்கொண்ட ராஜபாட்டையில் உல்லாச வலம் வந்தார் சுஜாதா. உற்சாகத்துக்கு மறுபெயர் சுஜாதா. அவர் எழுத்தில் அலுப்பைப் பார்க்க முடியாது. சுவாரஸ்யமே எழுத்தின் தாரக மந்திரம் அவருக்கு. எழுத்தை சுவாரஸ்யமாக்கும் கவனத்தில் தன்னடையாளம் கூட அவருக்கு ரெண்டாம் பட்சம் தான் என்று தோன்றுகிறது. கணையாழியில் ஒரு ரசிகர் அவரை ‘எழுத்துலகின் சிலுக்கு’ என்று குறிப்பிட்டார்.
புனைகதைகளில் அவர் எழுதிக்காட்டிய ஆபாச வசனங்களுக்கு அவரை சொந்தமாக்க முடியாத அளவுக்கு நல்ல மனிதராக, எளிமையாய் நட்பு பேணுகிறவராக அவர் இருந்தார். விளம்பரங்களில், சினிமாவில் கொஞ்சூண்டு ஆபாசம் நல்லது, என்பார்கள். திட்டுவாங்க, என்றாலும் மனதில் நிற்குமே, என்கிற வியாபாரத் தந்திரம். அதைத்தான் ‘சுஜாதாகாலம்’ என்கிற பத்திரிகைப் பேராளுமை நிருவி அடங்கி யிருக்கிறது. பூகம்பம் பற்றி அவர் எழுதும்போது கூட அவரால் ‘கட்டில் கெட்ட காரியம் பண்ணுகிறாற் போல ஆடியது’ என்றுதான் எழுத முடிந்தது.
ஆம்பளைங்க செய்யிற அத்தனை காரியத்தையும் பெண்ணால செய்ய முடியுமா? ஆணைப்போல ஸ்வைங்னு உயரத்துக்கு ஒண்ணுக்கு அடிக்க முடியுமா?... என அவர் கேட்டார். அதன்பேர் நகைச்சுவை. பிற்பாடு ஒரு திரைப்படத்தில் அவர் எழுதிய வசனமாகவும் அது இடம் பிடித்தது. சுய அங்கிகாரம்!
வணிகப் பத்திரிகை உலகில் அவரும், ஓவியர் ஜெயராஜும் கொட்டமடித்தார்கள். பெண்களை பனியனுடன் வரைந்து அதில் ‘மில்க்கி வே’ என்பது போல வாரா வாரம் புதிய வார்த்தைகளை எழுதி மகிழ்ந்தார் ஜெ. சுஜாதா கதையில் இல்லாத வார்த்தைகள் எல்லாம் ஜெ. கற்பனையில் முளைத்தன. குமுதத்திலேயே அவருக்கு உதவியாளர்கள் இப்படி வார்த்தைகளை எடுத்துத் தந்திருக்கவும் கூடும். கதையில் பெண் பனியன் அணிந்து வராவிட்டாலும் ஜெ. அணிவித்தார்.
மொழியில் சுறுசுறுப்பு விறுவிறுப்பு வேகம்... என்று அவர் சுட்டிக் காட்டிய நடைகூட, அவருக்கு முன்பே எழுதிக் காட்டிவந்த ஸ்ரீ வேணுகோபாலன் என எழுதி வந்த, பிற்பாடு சிவப்பு விளக்குக் கதைகள் தந்த புஷ்பா தங்கதுரை தன் பாணி என வரித்து வைத்திருந்த நடையே தான். உரையாடலில் அவர், புஷ்பா தங்கதுரை, மேற்கோள் குறி தவிர்த்து ஹைஃபன் இடுவார். பரவலாய் சுஜாதாவுக்குக் கிடைத்த அங்கிகாரம், சாவி, எஸ்.ஏ.பி, ஆனந்த விகடன் எஸ்.பாலசுப்பிரமணியன் போன்றவர்கள் சுஜாதாவை உயர்த்திப் பிடித்த உற்சாகம். சுஜாதாவின் சலவைக் குறிப்பைக் கூட வெளியிடுவீர்களா?... என ஒரு வாசகர் கேள்வி கேட்டபோது, சாவி கேட்டு வாங்கி நிஜமாகவே சலவைக் குறிப்பு வெளியிடவும் செய்தார். எழுத்துக்கு சன்மானம் என்று ஆலாய்ப் பரக்காத, விரட்டி விரட்டிக் கேட்காத எழுத்தாளர்களைத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ரொம்பப் பிடித்தது. அவை அவர்களை உயர்த்திக் கொண்டாடின.
மரமக்கதை என அவர் கொண்டுவந்த கணேஷ், வசந்த் துப்பறியும் பாத்திரங்கள். அதில் வசந்த்தின் குறும்பு என்கிற மாதிரியான ஆபாச வசனங்கள். “பொண்ணு சூப்பர் பாஸ். நின்னு விளையாடும் போலுக்கே.” அதையெல்லாம் இளைஞர்கள், இளைஞிகள் தனியே ரகசியமாகப் படித்து ரசித்துப் பின் பொது சந்திப்பில் பரிமாறி உற்சாகப் படுத்திக் கொண்டார்கள்.
அவர் எழுதிய மர்மக் கதைகள் ஆங்கிலத்தில் பரவலாக அறியப்பட்ட ‘பெஸ்ட் செல்லர்’ கதைகளின் தாக்கங்களே. சில சமயம் அதன் மொழிப்பாடுகளைக் கூட, சுஜாதா கையாளத் தயங்கவில்லை. ‘எனார்மஸ் பிரஸ்ட்’ என இர்விங் வாலேசோ, ஹெரால்ட் ராபின்ஸ் அல்லது இயான் ஃபிளமிங் யாராவது ஆங்கிலத்தில் சொன்னபோது, அதையே அவர் தமிழில் ‘ஏராளமான மார்பு’ என எழுதிக்காட்டி இளைஞர்களைப் புல்லரிக்க வைத்தார். சோப்பில் சாவியைப் பதித்து மாற்றுச் சாவி செய்கிற அவரது, சுஜாதாவின் கதை, எற்கனவே நான் ஆங்கிலத்தில் (ஃப்ரடரிக் ஃபோர்சித்) வாசித்திருக்கிறேன். லுட்லும் எழுதிய பிரபலமான ஒரு சிறுகதை. மனைவியை ஒரு கள்ளக்காதலனுடன் கணவன் பார்த்து விடுகிறான். அவன் மனைவியை நேசிக்கிறவன். கூலிப்படையை வைத்து அந்தக் கள்ளக்காதலனை, அடையாளம் காட்டி அவனைக் கொன்றுவிட ஏவுவான். எந்தத் தடயமும் இல்லாமல் காரியம் முடியணும், என்பான்.
கணவனுக்கு ஃபோன் வரும். “நீங்க சொன்ன ஆளைக் கொன்னுட்டேன்.” - “கொன்னதுக்கு சாட்சி எதும் இல்லியே?” என்று கேட்பான் கணவன். “கவலைப்படாதீங்க. ஒரு சாட்சி இருந்தது, அதையும் கொன்னுட்டோம்.” - “யார் அது?” - “அது ஒரு பெண்.”  அதாவது அவனது மனைவி. இந்தக் கதையை அப்படியே தமிழில் எழுதினார் சுஜாதா.
நச்சென்று சிறுகதைகளைத் தந்ததாக சுஜாதாவுக்கு பேர் கிடைத்தது. ஆனால் அவை பெரும்பாலும் மையப்புள்ளி விலகிய கதைகளே. ஒரு விபத்தைச் சொல்லி, மறுபுறம் ஒரு பெண் கணவனுக்காகக் காத்திருப்பதாய்ச் சொல்லிக் கொண்டே வருகிறார். விபத்தானவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வருவான் ஒருவன். கடைசியாய் முத்தாய்ப்பாய், அந்தக் காப்பாற்றப் போனவனின் மனைவிதான் காத்திருக்கிறாள், என கதையை முடிப்பார். திருப்பம், அது முக்கியம் அவருக்கு. விபத்து ஒரு மன பாதிப்பான .நிகழ்வாக அவரில் பதிவு பெறவே இல்லை. மும்பை இடநெருக்கடி பற்றி ஒரு கதை. தெருவில் ஒருவன் விபத்தாகிக் கிடப்பான். அவன் வீடறிந்து ஒருவன் வாடகைக்கு அவன் வீட்டைக் கேட்டு ஓடோடிப் போய்க் கதவைத் தட்டினால், அதற்குமுன் வேறு ஒருவன் வந்து அட்வான்ஸ் தந்துவிட்டான்... என முடியும் கதை. சுஜாதாவின் பெரும்பான்மைக் கதைகளில் இப்படி உணர்வுரீதியான கட்டங்களை அவர் வெறும் திருப்ப அளவிலேயே கையாள்கிறார். ஷாவோலின் டெம்பிள் படங்களில் அடிதடிக்குக் கணக்கே கிடையாது. வெட்டுவதோ சுடுவதோ அதுபாட்டுக்கு நடக்கும். நம்ம கௌபாய் படங்கள், அதிலும் அதுமாதிரி தான். வாழ்க்கைக்கு சிறிதும் நியாயம் செய்யாமல்,  திருப்பம் என்றும் சுவாரஸ்யம் எனவும் இயங்கினார் சுஜாதா.
கணவன் சாகக் கிடக்கிறான் என்று அறிந்து அவனுக்கு ஆஸ்பத்திரியில் துணையாக உபகாரமாக முதல் மனைவி பாவம் பார்த்து வந்து கூட இருக்கிறாள். இரண்டாம் மனைவி அந்தப் பக்கமே வரவில்லை. உடல் நலம் தேறி கண்ணைத் திறக்கிற கணவன், முதல் கேள்வியாய் அவளைக் கேட்கிறான். ரெண்டாவது மனைவி பேர் சொல்லி, அவள் எங்கே?
பெரும்பான்மை எழுத்தில் சுஜாதா யார், என வரையறுத்தாக வேண்டி யிருக்கிறது.
சுஜாதாவின் எழுத்து இளைஞர்களைக் குறி வைத்து வெற்றிகரமாக இயங்கியது. விவரப் பதிவுகளுடனான நடையே அப்போது புதுசு. வழக்கிலேயே இல்லை. அதிலேயே அபத்தங்களும் நிறைய வந்தன. (இப்போதும் வருகின்றன.) ஆரணி குப்புசாமி முதலியார், என்று நினைக்கிறேன். அல்லது வடுவூர் துரைசாமி ஐயங்காரோ? ஒரு துப்பறியும் கதை. வங்கிக் கொள்ளை. கொள்ளையடித்த பணத்தை ஒரு சாக்கில் கட்டி எடுத்து வரும் திருடன், அந்த வெற்றியைக் கொண்டாட, பெரிய ஓட்டல் ஒன்றில் நுழைந்து விலையுயர்ந்த ஸ்வீட் - அல்வா, கொண்டுவரச் சொல்லிச் சாப்பிடுகிறான். நம்புங்கள். நான் வாசித்த நாவல் இது. ஓட்டலில் அல்வா சாப்பிடுவதே அந்த எழுத்தாளருக்கு அத்தனாம் பெரிய விஷயமாய் இருந்திருக்கிறது. இன்னொரு கதை. ஆர்.வி. (அணையாவிளக்கு நாவலாய் இருக்கலாம்.) அந்த ஊருக்குக் கலெக்டர் வருகிறார். அவர் வந்து என்ன செய்யப் போகிறார், அந்த ஊர்க் கோவில் குருக்கள் பெண்ணைப் பார்த்து மயங்கி அவளைக் கல்யாணம் பண்ணப் போகிறார். தாசில்தாருக்குத் தந்தி வருகிறது. “கலெக்டர் நாளை உங்கள் ஊருக்கு வருகிறார். ஆவன செய்யவும்.” கலெக்டர் எதற்கு வருகிறார் என்ற விவரம் கிடையாது. அவர் வரும்போது செய்ய வேண்டிய ஆயத்தங்கள் என்ன தெரியாது. தாசில்தார் அந்தத் தந்தியை குமாஸ்தாவிடம் கொடுத்து, வேண்டிய ஏற்பாடுகள் செய்யுங்கள், என்பார். என்ன, அதிகம் போனால் ரயில்வே ஸ்டேஷனுக்கு அவரை எதிர்கொண்டழைக்கப் போகணும், அதற்கு மேல் விவரம் யாருக்கும், எழுத்தாளருக்கும் தெரியாது.
சுஜாதா விவரங்களுடன் கதைகள் அளிக்க முயன்றார். எழுதும் பாத்திரத்தின் சூழல், அல்லது வேலை பற்றி விசாரித்து, தேடி அறிந்து சொற்பமாய் அதை ஆனால் எல்லாம் தெரிந்த பாவனையில் பயன்படுத்தி விடுவார். அந்த விவரங்கள் சரியானவை என சாமானியர்கள் நம்பினார்கள். எல்லாவற்றையும் ஒரு தரவுடன் சொல்கிற பாவனை அவருக்குப் பிடித்தது. அறிந்தோ அறியாமலோ இந்தியா டுடே இதழில், புதுக்கவிதை பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை அவர் எழுதியபோது, அன்புள்ள அண்ணா, என எதுகையாக... என்பது போல் ஒரு குறிப்பு. மரபில் எதுகை மோனை தேவை. புதுக்கவிதை அதை உதறி யெழுந்தது, என்று கூற வருகிறார். அ-வுக்கு அ- இது எதுகையா? மோனை அல்லவா? கட்டுரையின் முதல் வரியில் பிழை. அவரை அப்படியே பிரசரித்தது பத்திரிகை உலகம். ‘நில்லுங்கள் ராஜாவே’ அவரது தொடர்கதையில் ஒரு பிழையான குறிப்பு வந்ததை வேறொரு இடத்தில் பதிவு செய்திருக்கிறேன். விஷயம் என்னவென்றால், இப்படி மறுப்புகள் எழுந்தால், மாமா சித்தப்பா பெரிய அத்தான் எல்லாரிடமும் போஸ்ட்கார்டு வாங்கிக் கொடுத்து எழுதிப் போடுகிறார்கள், என எகிறுவார். கிண்டலாம் அது.
நடையில் புதுமை. இறங்கினான், என்பதை இ ற ங் கி னா ன் - என ஒவ்வொரு எழுத்தாக கீழே இறக்கி எழுதிக் காட்டினார் அவர். அது ஜான் அப்டைக் பாணி. இலை உதிர்கிறது, என்பதை அவர் உ தி ர் கி ற து என கீழே கீழே ஆங்கிலத்தில் எழுதிக் காட்டியிருந்தார். ஒருதடவை மின்தூக்கி பற்றிய குறிப்பில், இடது பக்கம் ’நுழைந்து’ என்று போட்டு மேலிருந்து கீழாக ‘லிஃப்டில்’ என்று எழுதிக்காட்டி, பின் திரும்ப ‘வெளியேறினான்’ என படுக்கைவசத்தில் அவர் எழுதினார். அதற்கு ஒரு வாசகர் கடிதம் வந்திருந்தது. “எந்த லிஃப்டில் ஏற ஒரு வாசல், இறங்க இன்னொரு வாசல் இருக்கிறது?”
தில்லியில் கஸ்தூரிரங்கனுடன் பரிச்சயம் நெருங்கி, கணையாழியில் பத்திகள் எழுத வந்தது தற்செயல் என்றாலும், அதில் படித்த கண்ட கேட்ட ரசித்த விஷயங்களைப் புதுசு புதுசாக எழுத அடையாளங் காட்ட சுஜாதா உற்சாகம் காட்டினார். பத்தி எழுத்து என்ற வகைமையே அப்போது, அதுவும் தமிழில் அரிது. அவரது ‘எலைட்’ வாசகர் கூட்டம் இந்தப் பத்தி எழுத்துக்கு வசப்பட்டது. பிற்பாடு பெருஞ் சுற்றிதழ்களும் அவரைப் பத்தியெழுத அழைத்தன. ஒருகட்டத்தில் கொடி தளரும்போது, எழுத்தாளனுக்கு பத்தி எழுத்து அபாரமாய்க் கை கொடுக்கும். சில கச்சேரிகளில் யேசுதாஸ், சரியாக கச்சேரி எடுபடாமல் போகிற தன்னுணர்வு தட்டும் போது, ‘ஷீர சாகர சயன...’ என ஆரம்பிப்பார்.
சுஜாதா என்றால் வாசிக்க எனது தேர்வு அவரது ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ என்று சொல்லிவிடுவேன். பத்திகளில் சுஜாதா நவின இலக்கியம், மரபிலக்கியம், சங்க இலக்கியம், சமகால விஷயம், விஞ்ஞானத் தரவு என அடுக்குகளை மாற்றி ஒரே பக்கத்தில் வர்ணஜாலங் காட்டினார். சிறந்த கவிஞர்கள் என அவர் வணிக இதழ்களில் அடையாளங் காட்டிய கவிஞர்களின் கவிதைகளை, சுஜாதா இல்லை யென்றால் அந்த வணிக இதழ்கள் அவற்றைப் பிரசுரம் செய்திருக்காது. தற்போது, சீரியசான கவிதைகள் வணிக இதழ்களில் வர ஆரம்பித்து விட்டன. அதற்கு சுஜாதாவின் பங்களிப்பும் உண்டு. வணிக இதழ்களில் நல்லிலக்கிய அறிமுகம் என்று அவர் மனசாரச் செய்தார் என்றுதான் தோன்றுகிறது. அவரது ரசனையில் பாசாங்கு கிடையாது. வெண்பாப் போட்டி, ஹைக்கூ போட்டி, என அறிவித்தார் அவர். ஊக்குவித்தார். தேர்வு செய்து பரிசுகள் அளித்தார். அவர் ஊக்குவித்து இலக்கிய அங்கிகாரம் பெற்ற படைப்பாளிகள், அவர்களும் எழுத்து சுவாரஸ்யக்காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
வணிக இதழ்கள் இன்று ஓரளவு தரமான இலக்கிய முயற்சிகளுக்குப் பழகி கொண்டிருக்கின்றன. அவை கதைகளுக்கு வெளியிடும் ஓவியங்களிலும் ஒரு நவீனத்தன்மை வந்திருக்கிறது. மூஞ்சி சப்பையாய் உடலே நெளிசலான படங்கள், புரிந்தும் புரியாத கையெழுத்தில் தலைப்புகள் எழுதுதல் என்று சிற்றிதழ் பாணிக்கு அவை வந்திருக்கின்றன. இப்போது மக்களும் அவற்றுக்குப் பழகி வந்துவிட்டார்கள். நல்ல இலக்கியப் படைப்பு எனக் காட்ட ஓவியங்களில் இப்படி அடையாளங்கள் வணிக இதழ்களில் வந்ததற்கு சுஜாதா ஒரு பாலமான காரணம் என்று துணிந்து கூறலாம். அவரே இதை எதிர்பார்த்தாரா தெரியாது. அவரது பாசாங்கற்ற அணுகுமுறை இப்படியொர் கவன மாற்றத்தை வணிக இதழ்களில் நிகழ்த்திக் காட்டியது.
நாடகங்களில் பிழியப் பிழிய அழுகை, குலுங்கக் குலுங்கச் சிரிப்பு, என்றில்லாமல் மாமி கதைகளாகவும் இல்லாமல், சுவாரஸ்யம் விலகாத குடும்பக் கதைகளை, சராசரி மனித வியாகூலங்களை நம்பிக்கைகளைப் பிரதிபலித்தார் சுஜாதா. பூர்ணம் விஸ்வநாதன் சுஜாதாவுக்குக் கிடைத்தது சுஜாதாவின் அதிர்ஷ்டம் தான். தனி முத்திரை பதித்தன அந் நாடகங்கள்.
ஆனால் சினிமாவில் அவரைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் சினிமாவின் போக்கோடு அவரை இயக்கினார்கள். தன் அடையாளம் இன்றி, அவருக்கு இருந்த சுவாரஸ்யப் போக்கு, அலட்சிய பாவனை கொண்டாடும் நகைச்சுவை, (கைரேகை ஜோசியன் - ஆயுள் ரேகையே காணமடா!... என்று பயப்படுத்துவான். ஆஸ்பத்திரியில் ஸ்ட்ரெட்சர் தள்ளும் வார்டு பாய் - பாத்துடா. இப்பிடித்தான் அன்னிக்கு ஸ்ட்ரெட்சரைக் கீழ போட்டுட்டே!... என்பான்.) என்று வேண்டியதைப் பெற்றுக் கொண்டார்கள். சினிமா, அது இளைஞர்களைக் கவரும் உலகம். சினிமாவில் சுஜாதா இல்லாமல் எப்படி?
என்றாலும், இந்தியன் திரைப்படத்தில் லஞ்சம் தராத எல் போர்டு பார்ட்டியை ஆர் ட்டி ஓ எட்டு போடச் சொல்லாமல் பதினொண்ணு போடச் சொல்வது நல்ல நகைச்சுவை தான்!
பிற் காலங்களில் அவர் விஞ்ஞானக் கதைகள் எழுத ஆரம்பித்தார். அது சுஜாதா என்பதால் அதற்கும் இங்கே அங்கிகாரம் கிடைத்தது. வேறு எழுத்தாளருக்கு இது நிகழ்ந்தே யிராது. அவர்களும் முயற்சி செய்திருக்க மாட்டார்கள்.
தேர்தல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வர அவரது பங்களிப்பு இருந்தது, என அவரை இரங்கல் செய்தியில் தமிழக முதல்வர் நினைவு கூர்ந்தார். தவிரவும், ‘விஞ்ஞானக் கலைச்சொல் அகராதி’ அவர் முனைந்து கொண்டு வந்ததைச் சொல்லியாக வேண்டும்.
தமிழில் தட்டச்சு செய்து, காலப் போக்கில் நேரடியாக கணினியில் கதை எழுத ஆரம்பித்த முதல் எழுத்தாளர் சுஜாதா தான். முதல் இணையதளப் பத்திரிகை ‘மின்னம்பலம்’ கொண்டு வந்தது முக்கியமான அவரது பங்களிப்பு. தொழில்நுட்பத்தோடு இணக்கமான நெருங்கிய அவதானிப்பும் உறவும் ஆர்வமும் அவர் கொண்டிருந்தார்.
சதா வாசிப்பு ருசி கொண்ட மனிதராக இருந்தார் சுஜாதா. இலக்கியப் போக்கு என்று பொத்தம் பொதுக் கருத்துக்களை நகைச்சுவை சாயம் பூசி அவர் எழுதினாலும், எந்த எழுத்தாளரையும் விரல் சுட்டினாற் போல அவர் சாடியது இல்லை. பத்திரிகையாளர்கள் கேட்கும் போதெல்லாம் சிறுகதை, தொடர்கள் என்று அவர் வாரி வழங்கிக் கொண்டே யிருந்தார். அவரது இந்த வேகத்தில் நிகழும் குளறுபடிகளை உதவி-ஆசிரியர்கள் சில சமயம் பிழை திருத்தினார்கள். சிலது அப்படியே கூட வெளியாகி யாரும் கண்டுகொள்ளாமல் விடப் பட்டன. அவர் எழுதினால் பத்திரிகை விற்பனை கிடுகிடுவென்று உயர்ந்தது. தமிழில் அத்தனை பெரிய வாசகர் வட்டம் சுஜாதா மற்றும் சாண்டில்யன் இருவருக்கு தான் கிடைத்தது. கல்கி தன் பத்திரிகையில் பெற்ற ரசிக மகா சபை வேறு. இவர்கள் இருவரும் எல்லாப் பத்திரிகைகளிலும் பங்களித்தார்கள் அல்லவா?
நமது மண்ணின் மரபுப் படியே அவரும், வயது முதிர, பழைய இலக்கியங்களிலும், ஆன்மிகத்திலும் ஈடுபாடு காட்டினார். புறநானூறு பொழிப்புரை தந்தார். திருக்குறளுக்குக் கூட உரை தந்தார். வைணவ இலக்கியத்தில் தோய்வு கண்டார்.
தமிழ் வசன உலகத்தில் சுஜாதா ஒரு வேகத்தையும், குறியையும் தந்துவிட்டுப் போயிருக்கிறார். அவரது ஆளுமை அழியாது, என்று தான் படுகிறது. ஒவ்வொரு புது தலைமுறை, இளையவர்கள், வாலிபக் கூட்டமும் அவருக்கு உருவாகிக் கொண்டே யிருக்கும். அவர் கால காலத்துக்கும் கொண்டாடப் படுவார்.
சுஜாதா சொன்ன ஒரு நகைச்சுவை -
பையன் கேட்கிறான் அப்பாவிடம். “அப்பா, நீயும் அம்மாவும் ஹனிமூன் போயிருந்தப்போ, நான் உன்கூட வந்தேனா, அம்மாகூட வந்தேனா?”
அப்பா சொன்னார். “போகும்போது என்கூட வந்தே. வரும்போது அம்மாகூட வந்தே.”
--
பின்குறிப்பு

அவரது நிலம், திமலா - இரு கதைகளை என் திரட்டுகளில், அவரது அனுமதியின் பேரில் நான் பயன்படுத்திக் கொண்டேன்.
இப்போது நிதானித்துப் பார்க்கையில் சுஜாதாவின் கதைகளை வேறு மாதிரி யோசித்துப் பார்க்கலாமோ என்று தோன்றுகிறது. ஒரு எழுத்து-வாழ்க்கையின் உள் வெளிகளைத் தேடிப் பயணித்தல் அவசியம் அல்லவா?
அவர் கதை முடிவுகளில் ஒரு கடும் வக்கிரம் எனக்குக் கிடைக்கிறது. தண்ணீர், கதையை எடுத்துக் கொண்டால், சென்னை மாநகரத்தின் துண்ணீர்த் தேவையை நான் தீர்ப்பேன், என்னிடம் ஒரு திட்டம் உள்ளது, என்று வெளிநாட்டில் இருந்து வருகிறான் ஒருவன். என்ன திட்டம்? அதை சுஜாதா பிரஸ்தாபிக்க மாட்டார், (அணையாவிளக்கு ஆர்.வி!) லாரியில் தண்ணீர் நகரில் சப்ளை பண்ணிக் கொள்ளையாய்க் காசு அள்ளும் நாலைந்து ரௌடிகள் அவனை நடுத் தெருவில் அடித்துப் போட்டுவிட்டுப் போய் விடுவார்கள். பெருங் கூட்டம் சூழ்ந்து கொள்ளும் அவனை. கண் திறந்து பார்த்து “தண்ணீர்” என்று கேட்பான், என கதையை முடிக்கிறார். மும்பையில் ஒரு வாலிபன் விபத்தில் இறந்து கிடக்கையில் அவனது அறையை வாடகைக்குக் கேட்க முந்தியோடும் இருவர், என ஒரு கதையை இங்கேயே முன்பு பதிவு செய்தேன்.
‘பூனை’ என்று ஒரு கதை. அந்தப் பூனை பேசும். அதை ஒரு சினிமாவில் நடிக்க வைத்துவிட அதன் சொந்தக்காரனுக்கு ஆசை. ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்குப் பூனையைக் கூட்டிப் போகிறான். படப்பிடிப்பு நடந்தபடி யிருக்கிறது. அதன் இடைவேளையில் தன் பூனையை இயக்குநரிடம் காட்டி சினிமா வாய்ப்பு கேட்கலாம் என்று ஆர்வமாய்க் காத்திருக்கிறான். இயக்குநரும் நேரம் ஒதுக்கி அந்தப் பூனை பேசுவதைக் கேட்கத் தயாராகிறார். திடீரென்று அத்தனை கூட்டம் சுற்றி நிற்க பூனை மிரள்கிறது. ஒரு வார்த்தை கூட அது பேசவில்லை. அடுத்த ஷாட் ரெடி... என அவர்கள் தயாராகிறார்கள். என்றாலும் அதைத் தாமதப்படுத்தி விட்டு இயக்குநர் பூனை பேசக் காத்திருக்கிறார். பூனை பிடிவாதமாக மௌனம் காக்கிறது. பொறுமை யிழந்த இயக்குநர் அவனைப் போகச் சொல்லிவிட்டு ஷுட்டிங் வேலைக்கு எழுந்து போய்விடுகிறார். பூனையைத் தூக்கிக் கொண்டு ஏமாற்றத்துடன் போகிறவன், ஒரு சுவர் அருகே நிற்கிறான். திடீரென்று அந்தப் பூனையைத் தூக்கி வாலைச் சுழற்றி சுவரில் அடிக்கிறான். சுஜாதாவின் கடைசி வரி - கிய்க் என்று சின்னதாகத் தான் சத்தம் கேட்டது.
பாலு சத்யா என்று என் நண்பன். எழுத்தாளன் தான். தற்போது ஆனந்த விகடனில் பணி செய்கிறான். ஒருமுறை அவனிடம், “சுதா ரகுநாதன் பாட்டு எனக்கு அப்பீல் ஆகல்லியேப்பா? தாளக்கட்டுக்கு அதிக கவனத்தோடு அதையே மூளையில் வெச்சிக்கிட்டு அவங்க பாடறாப்ல எனக்குக் கேட்குதே?” என்று சொன்னேன். பாலு சத்யா சொன்னான். “சுதா ரகுநாதனின் ஸ்பெஷாலிட்டி, அவங்க சுருதி பிசகவே மாட்டாங்க. அதை மாத்திரம் கவனம் பண்ணி அவங்க பாட்டைக் கேட்டுப் பாருங்க” என்றான். அது உண்மை தான், என்று பிற்பாடு சுதா ரகுநாதன் பாடும்போது நான் கவனம் பெற்றேன்.
சுஜாதா ஏன் இப்படி முடிவுகளைத் தருகிறார்?
நான் தேடினேன். ஒரு புகைப்படம் போல, ஆங்கிலத்தில் சொல்வதானால் மேட்டர்-ஆஃப்-ஃபேக்ட் போல கதையை முடிக்க FREEZE செய்ய அவர் விரும்புகிறாரோ? தர்மம் வெல்லும், என்கிற அறச் சிந்தனை எல்லாம் சரிங்கப்பா. வாழ்க்கை அப்படி இருக்கிறதா? உன் கதை வாழ்க்கைக்கு நியாயம் செய்வதாய் நீ நினைக்கிறாயா? நீ நினைக்கிற மாதிரி கதை-முடிவுகளுடன் எல்லா சந்தர்ப்பத்திலும் வாழ்க்கை அமைகிறதா? நான் ஏன் முடிவு என்று என் கதையில் பொய் சொல்ல வேண்டும்? நான் மாட்டேன்... என்கிற மாதிரியாய் கதையின் முடிவுப் பகுதியில் அவர் சட்டென்று தன்னைக் கதையின் உணர்வு வியூகத்தில் இருந்து விலக்கிக் கொள்கிறாரோ?
*
storysankar@gmail.com
91 97899 87842


3 comments:

  1. அணு அணுவாக அலசிவிட்டீகள்.சுஜாதவை ஆரம்ப கட்டத்திலிருந்து தொடர்ந்து வந்த என் போன்றோருக்கு இது அசை போடும் மகிழ்வு.கமல் சயலில் இருந்த மோகன், பாலு குரல் சாயலில் மனோ, சுஜாதா நடை சாயலில் புஷ்பா தங்கதுரை என வாய்ப்புகள் அடைந்தனர் என்பது வரலாறு.சுஜாதாவின் கிளுகிளுப்பில் ஆபாசத்தை ஒரு போதும் நான் காஅவில்லை. மாறாக நகச்சுவை இழையும் வார்த்தைகளை கையாண்டிருப்பார். இளம் பெண்ணை வர்ணிக்கையில் சாக்குப் பையில் கட்டிவைத்த இரண்டு முயல்கள் துள்ளுவது போல் என்று எழுதியிருப்பார்.புன்னகை வரவழிக்கும் உபமானங்கள் பல இடங்களில் காணலாம். மிக அருமையான கட்டிரை சார். நன்றி.

    ReplyDelete
  2. நீங்கள் குறிப்பிட்டுள்ள மனைவி, கள்ளக்காதலன் கதை (கதையே அது அல்ல என்பது வேறு விஷயம்) Frederick Forsythe எழுதிய No comebacks என்கிற சிறுகதை. அதைத் தமிழ்ப் படுத்தியதும் சுஜாதா அல்ல! வேறு ஒரு ப்ரபல run of the mill க்ரைம் த்ரில்லர் ரைட்டர். '80 களின் பிற்பகுதியில் 'சாவி' வார இதழில் 'நந்தினியை அடையணும்' என்கிற தலைப்பில் சிறுகதையாக வெளியானது. அப்போதே மூலக் கதையுடன் சாவிக்கு எழுதினேன். ஏழை சொல் அம்பலம் ஏறவில்லை.

    ReplyDelete
  3. https://m.facebook.com/story.php?story_fbid=1806586552955892&id=100008136942970

    ReplyDelete