Friday, February 1, 2019


சனிக்கிழமை தோறும்
part 27
நட்பாங் கிழமை
எஸ்.சங்கரநாராயணன்
ல்ல வாசகர்கள் ஓர் எழுத்தாளனுக்கு காலப்போக்கில் நல்ல நண்பர்களாக ஆகி விடுகிறார்கள். ஒரு நல்ல எழுத்தாளனுக்கு, என்றும் சேர்த்துக் கொள்ளலாம். எதிரிகள் அற்ற சமூகம் அவனது கனவு. எதிரிகள் அற்ற சுமுகம், என்றும் சேர்த்துச் சொல்லலாம். அதுவே அவனது அவாவாக, அவன் எழுத்தின் நியாயமும், தேவையுமாக அமைகிறது. கூடி வாழ்தல் என்பதன் விளைவுகளே கலையின் கண்டுபிடிப்பும் வளர்ச்சியும் என பலமுறை இதே பகுதியில் நான் எழுதி யிருக்கிறேன். அந்த ஒரு தினவில் கலைகள் ஒன்று மாற்றி இன்னொன்று என்று பலவாகப் பரிமணித்து கிளைத்து கிளர்ந்தெழுந்தன. விழுது விடுகின்றன. கலைகளின் பண்பும் பயனும் அதுவே.
இந்த மொத்த உலகத்தையும் இறுகத் தழுவிக் கொள்ளும் ஆவேசம் கொண்டவன் கலைஞன். அவனால் அது சில சமயம் சாத்தியப் படவும் கூடும். ஒரு பாடகன் அல்லது சொற்பொழிவாளன், அந்தப் புண்ணியம் பண்ணியவனாகிறான். மேடையில் அமர்ந்தபடி ஆயிரக் கணக்கான சாமான்யர்களை ஒரே நேரம் அவனால் மகிழ்விக்க முடிகிறது. சிந்திக்க வைக்க முடிகிறது. எல்லாக் கலைஞனுக்கும் இலக்கு அதுவே. நிலா ஊருக்கே வெளிச்சம் தருவதைப் போல.
ஒரு நல்ல நட்பு என்பது சட்டென பூ போல மலர்ந்து பிறகு அது வாடுவதே இல்லை. முகத்தின் புன்னகையுடன் அது தொடங்குகிறது. ஒரு விளக்கு மற்றொரு விளக்கை ஏற்றுகிறாப் போல அது மற்றவருக்கும் வெளிச்சமாய்ப் பரவுகிறது. காற்று அதை அணைத்துவிட முடியாது. காலம் அதை இடைஞ்சல் செய்ய இயலாது. உன்னுடனேயே அது வாழத் துவங்கி விடுகிறது. முதலில் புன்னகைத்த அந்த மனிதர் பற்றிய உனது நினைவில் முதலில் மனசில் தட்டுவது அந்த வெளிச்சமே. அணையா விளக்கு அது. அவைகளுக்கு ஆரம்பம் உண்டு. முடிவு இல்லை. நம் உயிர் முடியும் அப்போது அந்த எண்ணங்களும் முற்றுப் பெறும். வாழ்வில் அப்படிப் பேறு பெற்றவன் பாக்கியவான். எழுத்தாளர்களுக்கு, கலைஞர்களுக்கு அப்படி ஒரு வரம் வாய்க்கத் தான் செய்கிறது. நான் ஏன் எழுத்தாளன் ஆனேன், என யோசிப்பதை விட, இப்படி நட்புக்கள் கிடைப்பதில் வாழ்க்கை ஆனந்த மயமாகி விடுகிறது, என்பதால் எழுத்தின், கலையின் இந்த விழுதுவிடல் பெரும் பேறு அல்லவா?
முகம் தெரியாத நண்பர்கள், நான் அவர்களை அறிந்திருக்க மாட்டேன். ஆனால் அவர்கள் என் எழுத்தை வாசித்தவர்களாய் இருக்கிறார்கள். அதில் அவர்கள் தங்கள் வாழ்க்கையையோ, தாங்கள் ரசித்த வாழ்க்கையையோ கண்டு கொள்கிறார்கள். அல்லது தாங்கள் அறியாத வேறொரு வாழ்க்கை அங்கே சொல்லப் பட்டிருக்கிறது என அறிகிறார்கள் அவர்கள். புதிய வளாகங்கள். ஆச்சர்யப்படுத்துகிறது அது அவர்களை. ரசிக்க வைக்கிறது. சிரிக்க வைக்கிறது. இந்த ஒப்புதல் எழுத்தாளனின் வெற்றி. அவன் உங்களைத் தொட்டும் விரித்தும் அலையென உங்களில் பரவ வல்லவன். அவனுக்கே தெரியாது இது. ஆனால் இது நிகழ்ந்து விடுகிறது. பொது இடங்களில் ஓடோடி வந்து ரசிகர்கள் கை குலுக்குவார்கள். ஒத்த ரசனைகள் கை குலுக்கிக் கொள்கின்றன. அநேகமாக, நாம் எப்போதோ எழுதி, ஆமாமாம், நாமே மறந்துவிட்ட கதைகள். கதாபாத்திரங்களையோ, சில சித்தரிப்புகளையோ, சில வரிகளையோ கூட அவர்கள் கைகுலுக்கி நம்மிடமே பகிர்ந்து கொள்கிறார்கள். அடாடா அவர்களின் அந்த ரசனை முகத்தில் சிரிப்பாக வழிகிற போது அதை நாம் காணும் நொடி மகத்தானதாய் இருக்கிறது. அந்த வாசகர்கள் எனது கண்ணாடிபோலவே என் முன் நிற்கிறதாக நான் உணர்கிறேன். அவர்களும் என்னில் தங்களை அடையாளம் கண்டவர்களாக இருக்கலாம். நான் அவர்களின் கண்ணாடியாக அவர்களும் உணர்ந்திருக்கலாம். பரஸ்பரம், ஓர் ஒத்திசைவு அங்கே நிகழ்கிறது. கலையின் வெற்றி அது.
எனக்கு அலுவலகத்தில் ரொம்ப சீனியர் அவர். கிருபாகரன். நான் அண்ணாசாலை தந்தி யலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த புதிது. வேலைக்குப் புதிதாய் வந்தால் உடனே இரவுப் பணிமுறை தான் வாய்க்கும். அந்த வயதில் அது பெரிதாய்த் தெரியவும் செய்யாது. இப்போது, இந்த அறுபதை நெருங்கும் வயதில், அலுப்பாய் உணர்ந்த கணம் தலை தானாய்த் துவளத் துவங்கி விடுகிறது. குழந்தைத் தன்மையை மீட்டெடுத்தாப் போல. நான் இரவுப் பணியில் வேலையில் இருக்கிறேன். அப்போது ஒன்றிரண்டு புத்தகங்கள் எழுதி யிருந்தேன். பத்திரிகைகளில் கதைகள் வந்து கொண்டிருந்தன. தந்தி அலுவலகத்தில் அங்கேயே பணியாற்றிக் கொண்டிருந்தார் கிருபாகரன். விடிய விடிய, நான் பாட்டுக்கு வேலை செய்ய, அவர் என் அருகில், என் கதைகளை வியந்தும் நயந்தும்... அட அவருக்கு என்னைப் பார்த்து விட்டதில் தூக்கத்தையே தள்ளி வைத்துவிட்டுப் பேச வந்திருந்தார். பழைய நண்பர்களோ, பிடித்த உறவினர்களோ வீட்டுக்கு வந்து, அதுவும் ராத் தங்கி விட்டால், எப்படி விடிய விடியப் பேசிக் கொள்வார்கள். அதைப் போல ஆகிவிட்டதே. வெறும் புன்னகை தவிர அவருக்கு நான் தர எதுவும் இல்லை. என் எழுத்தில் அவர் ரசித்த இடங்களை நான் தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தேன். வயல்வெளியில் பெரிய மின்சார கோபுரங்கள். அதில் போகும் உயர் அழுத்த மின்சாரத்தினால் ருய்ங் என்று வரும் அந்த சப்தத்தை நான் எழுதி யிருந்தேன். அதை அப்படி லயித்து நினைவூட்டினார். வயலை இப்படி யாரும் வர்ணித்து நான் கேட்டதே இல்லையே, என்றார் கிருபா.
ஒரு வயதான கிழவி. இரவின் அரை குறைத் தூக்கத்தில், சற்றே காய்ச்சல் கண்ட நிலையில் ஒண்ணுக்கு நெருக்க எழுந்துகொண்டு புறக்கடைக்குப் போவதாக நினைத்து வாசல் பக்கமாய் நடப்பாள். ஆழ்ந்த உறக்கத்தில் நாம் படுத்திருக்கும் நிலைக்கு நேர் எதிர்த்திசையில் படுத்திருப்பதாகவே உணர்வு தட்டும்... என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதை அவர் குறிப்பிட்டு ரசித்தார். எனது முதல் நாவல் ‘மானுட சங்கமம்’ - அதில் காணப்பட்ட குறிப்புகள் இவை. எழுதவந்த புதிது அது எனக்கு. அவரது ரசனை எப்பெரும் உற்சாகம் அளித்திருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். இன்றும் அவர் என் அருகில் இருந்து உரையாடும் காட்சி என் மனதில் அழியவே இல்லை. அந்த உரையாடல்களும்.
நான் கல்லூரி படிக்கையில் பஸ்சில் போய்க் கொண்டிருந்த போது, என் முன்-இருக்கைக் காரர்கள் என் கதையை வாசித்துக்கொண்டே வந்ததும், அதை மற்றவரிடம் காட்டி வாசிக்கச் சொன்னதும் நானே பார்க்க நேர்ந்தது. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கையில் என் கதைகள் பத்திரிகைகளில் வர ஆரம்பித்திருந்தன. மதுரையில் எங்கள் வீட்டுக்கு அருகில், சுப்பிரமணியபுரத்தில், வெள்ளிக்கிழமை ஆனந்த விகடன் வரும். சற்று தள்ளி, மதுரைக்கு வெளி வட்டத்தில், என் கல்லூரி வழியில், அவனியாபுரத்தில், வியாழன் மாலையே இதழ் கிடைக்கும். வியாழன் அவனியாபுரம் வரை சைக்கிளில் போய் ஆனந்த விகடன் வாங்கிப் பார்ப்பேன். என் கதை இருந்தால் ஆகாவென்றிருக்கும் அந்தக் கணம். இரண்டு வாரம் அதிகபட்சம் மூணு வாரத்தில் என் கதை பிரசுரமாகிக் கொண்டிருந்தது. சாவி இதழில் ஆறு நாள் ஏழு நாளில் என் கதைகள் வந்ததும் உண்டு. என் நண்பர்கள் மத்தியில் இந்தக் கதைக்கு யார் படம் வரைவார்கள், ராமுவா, ஜெயராஜா, மணியம் செல்வனா என விவாதம் நடக்கும். எங்கள் தெருவில் ஒரு பெட்டிக்கடையில் பத்திரிகைகள் சணல் கயிறில் தொங்கும். ஒரு சுற்று சைக்கிளில் வரும்போது எண்ணுவேன். பன்னிரண்டு ஆனந்த விகடன் இதழ்கள் தொங்கும். அரைமணி ஒருமணி கழிந்து திரும்ப வந்தால், இதழில் ஒண்ணு எண்ணிக்கை குறைந்திருந்தால், ஆகாவென்றிருக்கும். யாரோ ஒரு வாசகர் எனக்குக் கிடைத்து விட்டதாக ஒரு பெருமிதம்!
மிதந்து திரிந்த காலங்கள் அவை. அவை ஒருபோதும் திரும்ப வரப் போவது இல்லை. ஆனால் இப்படி வாசகர்கள், கிருபாகரன் போன்றவர்கள், அன்றிலிருந்து இன்றுவரை, கூட வருகிறார்கள். வாழ்க்கை தான் எத்தனை அற்புதமானது. எழுத்தாளன் என்பதனால் என் மேல் பிரியப்பட்டு நண்பர் என கைகுலுக்கியவர் அநேகம். பஸ் நிலையத்திலோ ரயிலில் போக நேர்ந்தாலோ சற்று தூரத்தில் நின்று புன்னகை செய்கிறார்கள். அவர்களை நான் அறியாதவன். அவர்களுக்கு என்னைத் தெரிகிறது. அட, ஒருமுறை விஜய் தொலைக்காட்சி ‘நீயா நானா’வில் சிறப்பு விருந்தினர் என வந்து போனேன். என்னை எடுத்ததே பத்து நிமிடம், அதில் காட்டியது ரெண்டு மூன்று நிமிடங்கள். அவர்கள் விவாதம் சென்ற திசையை நான் தேர்-முட்டு கொடுத்து மடைமாற்ற நினைத்தேன். அவர்கள் அதற்கு ஒருவேளை சம்மதப் படாதிருந்திருக்கக் கூடும். விஜய் டிவி பார்த்துவிட்டு மறுநாள் எங்கள் தெருவிலேயே நிறையப் பேர் புன்னகையுடன் வந்து கை குலுக்கினார்கள்.
டாக்டர் ஹிமேஸ்வரி, வர்த்தினி பர்வதா போன்ற நன்மக்கள் எல்லாரும் என் எழுத்தை ரசித்து நட்பு பூண்டார்கள் என்பது மகிழ்ச்சி. பத்திரிகையைத் திறந்ததும் உங்க கதை இருக்கான்னு பார்ப்பேன் சார். இருந்தால் அதை முதலில் வாசித்து விட்டு அடுத்த வேலை பார்ப்பேன், என்கிற ரசிகர்கள் இருக்கிறார்கள். கதை வந்த உடனே எனக்கு அலைபேசியில், அந்தக் காலத்தில் தொலைபேசியில் பேசுவார்கள். சிலசமயம் வாசகர்கள் சொல்லி பிறகு நான் கதையை அந்தப் பத்திரிகையில் பார்ப்பேன். அவர்கள் முந்திக் கொண்டதும் உண்டு. சில வாசகர்கள் தாங்கள் ரசித்த சம்பவம், அனுபவம், தான் கேள்விப்பட்ட செய்தி என உற்சாகமாகப் பகிர்ந்து கொள்வார்கள். டாக்டர் ஹிமேஸ்வரி தன் அனுபவத்தைச் சொல்லி அதை நான் கதையாகப் பதிவு செய்திருக்கிறேன். (மக்கள் தேவர் நரகர்.) அவர் வாழ்க்கையில் இருந்து ஒரு கதை நானே எழுதிக் காட்டினேன். அருமைத் தோழி சென்ற மாதம் காலமாகி விட்டார், என அறிகிறேன். அதை அறிந்த நாளில் வேறு வேலை எதுவுமே ஒடவில்லை எனக்கு. வாசித்த முதல் கதையில் இருந்து அவர் எனக்குத் தந்த ரசனை கலந்த மரியாதை. என்னைப் பார்த்த கணம் பூக்கும் அவர் முகம். ஒரு தோழியை இழந்தேன்.
இப்படி, நண்பர்களுக்காக சில கதைகள் எழுதிக் காட்டியதும் உண்டு. அது இந்தக் கட்டுரையின் கிளைமாக்ஸ். கடைசியில் சொல்கிறேன்.
எளிய அருமையான வாசகர்கள். நம்மைச் சந்தித்ததைக் கொண்டாடும் வாசகர்கள். ஒரு குடும்ப உறுப்பினர் போன்ற பாசத்துடன் அவர்கள் நம்மை அணுகுகிறார்கள். மதுரை எஸ்.எஸ்.காலனியில் வசித்துவந்த ஓர் ஆங்கிலப் பேராசிரியர். சட்டென்று அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை. என் கதைகளை அப்படி ரசித்து வாசிப்பவர். அவரை நான் சந்தித்தது கிடையாது. கேள்விப்பட்டதோடு சரி. அவர் வாழ்வில் பெரும் துக்கம் ஒன்று சம்பவித்து விட்டது. நாலு ஐந்து வயதுக் குழந்தையுடன் அவர் சாலையைக் கடக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக குழந்தை அவர் கையை உதறிவிட்டு தெருவில் ஓடி, ஒரு வாகனத்தில் அடிபட்டு இறந்து விட்டது. கண்ணெதிரே தன் குழந்தையின் மரணத்தைப் பார்த்துவிட்டார் அவர். அந்த அதிர்ச்சி அப்படியே அவரை உறைய வைத்து விட்டது. அந்த அதிர்ச்சியில் யாரோடும் அவர் பேசுவதையே நிறுத்தி விட்டார். அவர் மனைவிக்கோ குழந்தையை இழந்தது ஒரு சோகம். அவர் பேச்சடங்கிப் போனது அதைவிட துக்கம்.
நான கேள்விப்பட்டு பிறகு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். கதவைத் திறந்து என்னைத் தலையாட்டி உள்ளே வரச்சொல்லிக் கூட்டிப்போனவர் அவர்தான். மிகக் குறைவான சலனங்களே அவரிடம் இருந்தன. ஆதுரத்துடன் அவர்தோளைப் பற்றிக் கொண்டேன். அவர் மறுக்கவில்லை. அதுவரை பழகாத நண்பர் தான். ஆனால் என்னிடம் மாத்திரம் தான் அந்த இளக்கம் அவரிடம் இருந்ததாக அவர் மனைவி சொன்னார். பிறகு நாலைந்து மாதத்தில் அவர் மீண்டு வந்திருந்தார். காலம் தான் அவர் மனத்தின் இருளை விலக்க வல்லதாக இருந்தது.
2
ஓர் எழுத்தாளனின் கதைகளை வாசித்து ரசிப்பவர் தங்களுக்குள் அதைக் கொண்டாட ஆரம்பிக்கிறார். எழுத்தாளனை அல்ல, அந்தக் கதையை. பிறகு அதே எழுத்தாளனைத் தேடி வாசிக்க ஆரம்பிக்கிறதாக அந்த உறவு வளர்கிறது. கடிதங்கள் எழுதி சிலர் நம்மை, எழுத்தாளர்களை மகிழ்விப்பதும் உண்டு. பெரும்பாலானாவர்கள் நேரில் சந்திக்கும்போது பொட்டலம் உடைந்தாற் போல வெளிப்படுகிறார்கள்.
திருப்பூர் போயிருந்தேன். திரைப்பட இயக்குநர் (இன்று நேற்று நாளை) ரவிக்குமாரின் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர். “வாங்க வாங்க சங்கரநாராயணன்” என்று சிரிக்க ஆரம்பித்து விட்டார். அவர் சிரிப்புக்குக் காரணம் நான் எழுதியிருந்த ஒரு கதைப்பகுதி. திசை ஒன்பது திசை பத்து, என்கிற நாவல். சென்னை பஸ்சில் இரு குடிகாரர்கள் பேசிக் கொள்வதாக அதில் ஒரு சம்பவம்.
டேய் வேணாண்டா. வார்த்தையைத் தப்பா விட்டுறக் கூடாது. வள்ளுவரே சொல்லிருக்காரு.
இரண்டு குடிகாரர்கள். இவன் என்னடா வள்ளுவர் பத்திப் பேசறான் என்று கதாநாயகன் திரும்பிப் பார்ப்பான். அடுத்தவன் இப்போது பேசுகிறான்.
வள்ளுவரா, இன்னா சொல்லிர்க்காரு?
முதலாமவன் பதில் சொல்கிறான் - யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் - ஙொம்மாள - சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
அட வள்ளுவர் எப்படா ஙொம்மாளன்னு எழுதினாரு?.. என கதையில் அடுத்த வரி.
என்னைப் பார்த்தவுடன் அவருக்கு அந்த ஞாபகம் தட்டி விட்டது. இந்த வரியை எடுத்துச் சொல்லி என்கூடச் சிரக்க ஆசை வந்திருந்தது. இதெல்லாம் போகிற போக்கில் அமைகிற வரிகள் அல்லவா?
தஞ்சை தாமு என்றும் வல்லம் தாஜ்பால் என்றும் அப்போது இதழ்களில் எழுதி வந்த இன்னொரு அன்பர். அவர் பெயர் இக்பால். நாலைந்து ஆண்டுக்கு ஒருமுறை நான் அவரைப் பார்க்க நேர்கிறது, எங்காவது இலக்கியக் கூட்டங்களிலோ, நண்பர்களின் வீட்டு வைபவங்களிலோ. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், எனது எதாவது கதையின் எதாவது எழுத்தை எடுத்துச் சொல்லி மகிழ்வார். தொடர்ந்து வாசிக்கிற இப்படி வாசகர்களால் நமக்கே ஒரு பெருமிதம் வருகிறது அல்லவா. முதன் முதலில் அவர் என்னைச் சந்தித்தபோது, “சார் விகடன்ல நீங்க.. அந்தக் கதை.” முகம் எல்லாம் சிரிக்கிறது அவருக்கு. விகடனில் நான் எத்தனையோ கதை எழுதி யிருக்கிறேன். எப்ப வந்த கதையைப் பற்றி இவர் பேசுகிறார்?
‘பிட்’ படம் காட்டும் ஒரு திரையரங்கம். படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே திடுதிப்பென்று சம்பந்தம் இல்லாமல் ஒரு பத்து நிமிடம் நீலப் படம் ஓடிய காலம், நான் எழுதும் கதையில் வருகிறது. சனங்கள் எல்லாரும் ‘பிட்’ எப்ப வரும் என்று காத்திருந்தார்கள். ஓடும் மலையாளப் படத்தில் கிழவி ஒருத்தி கால்நீட்டி உட்கார்ந்தபடி முறத்தில் எதையோ சாவகாசமாகப் புடைத்துக் கொண்டிருந்தாள், என்று எழுதி அடைப்புக்குறியில் (ரொம்ப முக்கியம்) என எழுதியதை அப்படிச் சிரித்தபடி அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு முறை பார்க்கிற போதும் வேறு வேறு கதைப் பகுதிகளை அவர் ரசித்து என்னிடம் சொல்வார்.
சில சமயம் இப்படி நாமே எதிர்பாராத அளவில் சில அலட்சியமான வார்த்தை யெடுப்புகள் கொண்டாடப் பட்டுவிடுவது உண்டு. எழுத வந்த புதிதில் சாவி இதழில் நான் எழுதிய ஒரு ஜோக். அதை வாசித்தவுடனேயே சாவி ஹா ஹா என்று உரக்கச் சிரித்தாராம். அந்த நகைச்சுவை இதுதான்.
காவல் நிலையம். இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். ஏய் மோகன்லால் சேட்டைக் கொன்னவன் நீதானே?
நான் இல்லை.
ஏய் மரியாதையா உண்மையச் சொல்லு...
நான் இல்லைங்க சார்!
என்மேல் மிக மரியாதை காட்டி வரும் இக்பால். சமீபத்தில் என் அலுவலகத் தோழி சகிரா பானுவின் மகன் திருமணம் என்று தஞ்சாவூர் போயிருந்தேன். இக்பால் அங்கே வந்திருந்தபோது, அதே ‘நட்பாங் கிழமை’யுடன் ஓடி வந்து கை குலுக்கினார். காலையில் திருமணம் முடிந்த பின், நான் இரவு ரயில் ஏறுமுன், அன்றைக்கு மாலையே நான் தங்கி யிருந்த அறையில் சிறு இலக்கிய உரையாடல். இக்பால் ஏற்பாடு. ஒரு பத்து பன்னிரெண்டு பேர் வரை வந்திருந்தார்கள். மிக மகிழ்ச்சியான தருணம் அது. எல்லாரும் பிரிய மனமின்றிப் பிரிந்தார்கள். உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்... என்கிறார் வள்ளுவர்.
அநேகமாக இந்த ‘யானையின் வண்ணப்படம்’ கட்டுரைகளைத் தனி நூலாக்கும் போது, அவர் வேண்டிக் கொண்டபடி, தஞ்சாவூரில் இக்பால் ஏற்பாட்டில் ஒரு தனி நிகழ்வில் இதை வெளியிடலாம் என்று தோன்றுகிறது. எழுத்தார்வத் துடிப்பு கொண்ட ஒரு படை அவருடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. தஞ்சாவூர் சந்திப்பில், கலந்துரையாடலில் மூன்று மணி நேரம் நேரம்போனதே தெரியவில்லை.
3

பத்திரிகைகளில் கதைகள் வெளியாகும் போது, அந்த இதழின் உதவியாசிரியர்கள், என் கதைக்கு ஓவியம் வரைந்த ஓவியர்கள் என நட்பு வட்டம் விரிகிறது. அப்போது சாவி இதழில் கரோ என ஓர் ஓவியர் வரைவார். பிற்பாடு அவர் ‘கமர்ஷியல் டிசைன்’ என தன் பணியில் மும்முரமாகி விட்டார். ஓவியர்கள் ராமு, ஜெயராஜ், மணியம் செல்வன், தாமரை, அரஸ், ஸ்யாம், ஜீவா என நிறையப் பேர் என் எழுத்தால் எனக்கு அறிமுகம் ஆனார்கள். இதில் கரோ, ராமு, அரஸ், ஸ்யாம் இவர்கள் எனது நூல்களுக்கு அட்டைப்படம் கூட பங்களித்திருக்கிறார்கள். ராமுவுக்கும், ஜெயராஜுக்கும், ஜீவாவுக்கும் கதைக்கான ஓவியம் எப்படி வர வேண்டும், என்று நான் தொலைபேசியில் விளக்கம் சொல்லிய சந்தர்ப்பங்களும் அமைந்தன. அந்தந்த இதழ் ஆசிரியர்களோடு கூட இருந்தபோது, ஓவியருடன் கதைக்கான காட்சியை விளக்கிப் பேசும் வாய்ப்பு அமைந்தது ஆச்சர்யமான அனுபவம். அதிலும் மணியம் செல்வனுடனான நட்பு, ஓர் ஆச்சர்யம்!
முன்பே வேறொரு பகுதியில் குறிப்பிட்ட ‘பெயரே இல்லாத மனிதன்’ சிறுகதை. அது வாஸந்தி ஆசிரியராக இருந்த கால கட்டத்தில் ‘இந்தியா டுடே’ இதழில் வெளியானது. அவரது காலகட்டத்தில் எனது சிறந்த கதைகள் பல ‘இந்தியா டுடே’ இதழில் வெளியாயின. ‘ஜன்னல் வழியே என்னைப் பார்க்கிறேன்’ கதையை முதல்நாள் அனுப்பினேன். மறுநாள் அதை வாங்கி உறை பிரித்த ஜோரில் வாசித்துவிட்டு என்னுடன் அருமையாய்ப் பேசினார் வாஸந்தி. இந்த ‘பெயரே இல்லாத மனிதன்’ கதையில் ஒரு கர்நாடக இசைப் பாடகர், யேசுதாஸ் என்றே பெயர் பயன்படுத்திய கதை. அவரிடம் வேலைகேட்டு வரும் செவிட்டூமைத் தோட்டக்காரன். அவர் பாடலை அவன் கேட்கப் போவதே இல்லை. அவரும் அவனை எந்தப் பெயர் வைத்தும் அழைக்க முடியாது. தனது பெயருக்கு முன்னும் பின்னும் பட்டங்கள் சுமக்கும் அவருக்கும், பெயரே இல்லாத அந்த மனிதனுக்குமான உறவே கதை. இந்தக் கதை பற்றி முன்பே விவரப் படுத்தி யிருக்கிறேன்.
கதை எழுதி ‘இந்தியா டுடே’ இதழுக்கு அனுப்பிய இரண்டே நாளில் தொலைபேசி அழைப்பு. வாஸந்தி அல்ல. இது மணியம் செல்வன். “சார் உங்க கதை படம் வரைய எனக்கு வந்திருக்கிறது, வாசித்துப் பார்த்தேன். அற்புதமான கதை. இருபது வருடங்களுக்கு ஒருமுறை தான் இப்படிக் கதைகளை வாசிக்க வாய்க்கிறது... அடாடா அடாடா” என நெகிழ்ந்தார். இதற்கு பத்து வருடம் முன்பே கல்கி இதழில் என் கதை ஒன்றுக்கு அவர் ஒரு பதில் சொல்லி யிருந்தார். கதையின் பெட்டிச் செய்தி போல ஒரு கேள்வி. “இந்தக் கதையில் உங்களை அதிகம் கவர்ந்த விஷயம் எது? - தலைப்பு. உத்தி. முடிவு. நடை - இப்படி நான்கு வாய்ப்புகள். கதையின் தலைப்பு, ஒரு சிறகு இரு பறவைகள். அவர் ‘நடைதான் எனக்குப் பிடித்தது’ என பதில் சொல்லி யிருந்தார்.
ஆனால் நானும் அவரும் இப்படி உரையாடிக் கொண்டது இல்லை. அதைவிட அவர் சொன்ன செய்தி எனக்கு அதிக உற்சாகம் தந்தது. “சார், அழகான கதை எழுதிட்டீங்க. இப்ப நான் அதுக்கு எப்பிடி ஓவியம் வரையறேன்... பாருங்க,” என்று தொலைபேசியை வைத்து விட்டார். அந்த சஸ்பென்ஸ் எனக்கு மிகவும் பிடித்தது. என்ன அருமையாய்ப் பழகுகிறார்கள். மனசுக்குப் பிடித்துவிட்டால் நட்பு எப்படியெல்லாம் சிரிப்பும் கூத்துமாய் ஆட்டம் போடுகிறது.
சங்கீதத்தில் மிகப் பெரியவர் அவர். கதாநாயகர். ஆனால் அவர் அந்த எளிமையான தோட்டக்காரனை வியக்கிறார் - இது தானே கதை? ஆனால் கதை எவ்வளவிலும் ஒருத்தரை உயர்த்தும் பாங்கில் மற்றவரை சிறுமைப் படுத்தவில்லை. அதுதான் அந்த எழுத்தின் சவால். இப்போது ஓவியருக்கு இந்த சவால் பரிமாறப் பட்டு விட்டது! அதை அவர் புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளவும் செய்தார்.
கதை ‘இந்தியா டுடே’ இதழில் வெயியாகி யிருந்தது. அவரது ஓவியங்களுடன். பார்த்தேன். ஆகா, என்று எனக்கு அவரைக் கட்டிக் கொள்ள வேண்டுமாய் இருந்தது அவரது படைப்புத் திறன். கதையின் துவக்கப் பக்கத்தில் DOUBLE SPREAD என்ற அளவில் யேசுதாஸ். சாதகம் செய்கிற யேசுதாஸ். நம்மைப் பார்க்க அல்ல. நமக்கு முதுகைக் காட்டி.
அடுத்த பக்கம் திருப்பினால், தோட்டக்காரன். தோளில் மண்வெட்டியுடன் கம்பீரமாய், பீமன் போல நிற்கிறான். நம்மைப் பார்க்க நிற்கிறான். இந்த ஓவியம் அதைவிட பெரிய அளவில். அரைப் பக்கப் படம். யேசுதாசை விடப் பெரிய படம்.
உடனே அலைபேசியை எடுத்து அவருக்கு என் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டேன். அதன் பிறகு ஆனந்த விகடனில் எனது மூன்று சிறுகதைகள் அடுத்தடுத்து வெளியான போது, அவரது ஓவியத்தைக் கேட்டு வாங்கச் சொல்லி நான விகடனில் பரிந்துரை செய்தேன். “அவர் தாமதம் செய்வாரே” என உதவியாசிரியர் சொன்னார். ஒரே வாரத்துக்குள் நான் வாங்கித் தருகிறேன், என்று உறுதிமொழி தந்தபின் சம்மதித்தார்கள். ம.செ.யிடம் நான் பேசி வாங்கித் தந்தேன். என்ன அருமையான நட்பான காலங்கள் அவை.
ம.செ. என்னிடம், தானே முன்வந்து நட்புடன் கைகுலுக்கினார் அல்லவா? இப்போது என் முறை. அவரே அறியாமல் குமுதம் இதழில் நான் அவரைப் பாத்திரமாக வைத்து ஒரு சிறுகதை எழுதினேன். ‘அலைகளும் சிலைகளும்.’ ஹா ஹா, அப்பாவும் பிள்ளையும். இரண்டு ஆண் பாத்திரங்கள். பெண் பாத்திரம் இல்லாத கதை, குமுதத்தில்!
மணியம் செல்வனின் தந்தை ஓவியர் மணியம். அநேகமாக எல்லாரும் அறிந்த செய்திதானே இது. கல்கியின் சரித்திரக் கதைகளுக்கு மணியம் ஓவியம் வரைந்து வந்ததும் அறிந்ததே. என் கதை. முதுமையின் காரணமாக கை நடுக்கத்துடன், ஓவியம் வரைய முடியாத நிலை அப்பாவுக்கு. ஆனாலும் அந்தக் கலைஞனுக்கு இப்போது இயங்க முடியாத வருத்தம். மகன் மணியம் செல்வன் அதை அறிந்து கொண்டான். ஒருநாள் காரில் அவரை மகாபலிபுரம் வரை அழைத்துப் போகிறான்.
பாதி சரித்திரம், பாதி சமூகம் என்று ஒரு தொடர்கதை எழுதினார் கல்கி. பகலில் அந்தக் கதை நிகழ்காலத்தில் நடக்கும். இரவில் அது சரித்திரப் பாத்திரங்களுடன் இயல்பு மாறி விடும்... என்கிற கற்பனை. ஓவியர் மணியம் ஒரு சரித்திரக் கதைக்கான குறிப்புகள் வேண்டி மகாபலிபுரம் போய் அந்த சிற்பங்களை யெல்லாம் கூர்மையாய்ப் பார்த்து விட்டு வந்து வரைந்ததாக நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.
ஓவியர் மணியம் தன் மகன் மகாபலிபுரம் அழைத்து வந்ததை பெரும் நெகிழ்ச்சியுடன எதிர்கொள்கிறார், கதையில். இருமருங்கும் சரித்திரகாலச் சிலைகள். அதனூடே அவர் அந்தப் பௌர்ணமி வெளிச்சத்தில் நடந்து போகிறார். ஒரு பக்கம் ஓயாமல் அலைவீசி சளசளவென்று பேசிக் கொண்டிருக்கும் கடல். இதோ இங்கே இத்தனை உருவங்கள். கலைச் சிற்பங்கள். ஆனால் மகா அமைதி. அந்த முரண் அவருக்குப் பெரும் கிளர்ச்சி தருகிறது. அந்தச் சிலைகள் பாத்திரங்களாகி அவருடன் எதோ பேச முயல்வதாகவும் அதைப் புரிந்து கொள்ள தம்மால் இயலவில்லை என்பது போலவும் அவர் துக்கப் படுகிறார். அந்த வளாகமே சரித்திரக் காலத்துக்குத் திரும்பிப் போனாப் போலவும் அவர்தான் வேறு காலத்தில் இருந்து இங்கே வந்து நடமாடுகிற மாதிரியும் தோன்றுகிறது அவருக்கு.
எத்தனை நேரம் அப்படியே இருந்தார் அவர். அவருக்கே தெரியாது. அவர் தோளைத் தொடுகிறான் மகன். மணியம் செல்வன். நிகழ்காலத்துக்கு மனம் இல்லாமல் திரும்புகிறார் மணியம். ஒரு பெருமூச்சுடன் காருக்குத் திரும்புகிறார். காரின் பின் இருக்கையில் அவன், மகன் வரைந்த ஓவியம். அந்தச் சிலைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்ளும் அப்பா. அத்தனை தத்ரூபமான ஓவியம். அப்பா அவனை அப்படியே வாரித் தழுவிக் கொள்கிறார்.
இம் மாதிரி ஒரு கதை நான் எழுதி, அது வெளிவரும் வரை ம.செ.யிடம் நான் சொல்லவில்லை. கதை வெளியானது. குமுதம் இதழில் அப்போது ராவ் சார் ஆசிரியர். அவருக்கும் கதை பிடித்திருந்தது. பெண் பாத்திரம் இல்லாத கதை. அவர் போடத் தயங்கவும் இல்லை.
கதை வெளியானதும் ம.செ.யிடம் தகவல் சொன்னேன். படத்துக்கான ஓவியம் அவரை வரையச் சொல்ல வேண்டாம், என்று ராவ் சாரிடம் நான் சொல்லி யிருந்தேன். அந்த சஸ்பென்ஸ் இருக்கட்டுமே என்றேன். அவரும் ஏற்றுக் கொண்டார்.
ம.செ. பார்த்துவிட்டு எனக்கு நெகிழ்ச்சியுடன் அலைபேசியில் பேசினார்.
இப்போது அவர் முறை!
mob 91 97899 87842 / 91 94450 16842
storysankar@gmail.com


2 comments:

  1. அருமை. யேசுதாஸ், தோட்டக்காரன் படத்தைப் போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. என்ன சிக்கல் என்றால்... கதை வெளியான பத்திரிகைகளை நான் பேணி வைத்திருப்பது இல்லை... கதைகளே ஐம்பதுக்கும் மேல் இப்படி தொலைத்திருக்கிறேன்...

      Delete